வேர்கள்

கார்லோ ரொவெல்லி எழுதிய Reality is not what it seems நூலின் மொழியாக்கம்.

துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம் -2

இருபத்தாறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் மிலீதஸ்(Miletus) நகரிலிருந்து இந்நூல் தொடங்குகிறது. துளிம ஈர்ப்பியலைக் குறித்த நூல் ஏன் பழங்கால நிகழ்வுகள், ஆளுமைகள் மற்றும் கருத்துக்களில் தொடங்க வேண்டும்? வெளியின் துளிமம் குறித்த ஆர்வமுள்ள வாசகர் என்மீது பழி போட மாட்டார்கள் என நினைக்கிறேன். ஒரு கருத்தினை நன்றாக அறிந்து கொள்ள அதன் அடிப்படையிலிருந்து தொடங்குவது நல்லது. பிரபஞ்சத்தினைப் புரிந்து கொள்ள உதவும் பல முக்கியமான சிந்தனைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உதித்து விட்டன. அவை மேலும் தெளிவாக துலங்கி வருவதற்கும் அவற்றின் படிநிலையை எளிதாக புரிந்து கொள்வதற்கும் அவற்றின் மூலத்தை சுருக்கமாக ஆராய்வது தேவையான ஓன்று. மேலும் துளிம ஈர்ப்பியல் கருதுகோள்களில் எவை முற்றிலும் புதியவை – எவை பழங்கால சிந்தனைகளை ஆதாரமாகக் கொண்டவை என பிரித்தறிய வேண்டியது அவசியம்‌.

அதற்கும் மேலாக, பழமையின் சில கேள்விகள் நமது பிரபஞ்ச அறிதலுக்கு மிக முக்கியமானவை. பழங்கால சிந்தனைகளையும் அது காட்டுகின்ற சிக்கல்களையும் பயன்படுத்தியே வெளியின் கட்டமைப்பு குறித்த சில சமகால கருதுகோள்கள் உருவாக்கப் பட்டுள்ளன. பழமையின் விஞ்ஞானிகள் எழுப்பிய சிக்கல்களுக்கு ஐன்ஸ்டைனும் துளிம ஈர்ப்பியலும் அளிக்கும் தீர்வுகள் ஆச்சரியமூட்டும் அளவிற்கு நெருக்கமானவை. இந்தத் தொலைதூர சிந்தனைகளைப் பேசுவதன் வழியாக துளிம ஈர்ப்பியலின் மைய வினாக்களை முன்வைக்க விரும்புகிறேன்.

1.பரல்

மிலீதஸிலிருந்து அப்தெராவிற்கு பொ.யு 450ல் ஒருவர் பயணத்தினை துவக்கியதாக ஐதீகம். அறிதலின் வரலாற்றில் இது முக்கியமான பயணமாகும்.

ஆட்சியதிகாரத்தினை கைப்பற்ற உயர்குடிகளின் அதிதீவிர முயற்சிகளினால் உண்டான அரசியல் குழப்பத்திலிருந்து தப்பிக்கவே அந்த மனிதர் மிலீதஸிலிருந்து கிளம்பியிருக்கலாம். ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்ட்டா உண்டாக்கிய பொற்காலத்திற்கு முன்னர் வளமும் வளர்ச்சியும் கொண்டிருந்த மிலீதஸே கிரேக்கத்தின் முதன்மை நகராக இருந்தது. மிக பரபரப்பான வர்த்தக நகரான மிலீதஸ் கருங்கடல் முதல் எகிப்து வரையிலான நூற்றுக்கும் மேற்பட்ட குடியேற்றங்களுக்கும் தொலைவர்த்தக நிலையங்களுக்கும் இடையேயான முக்கிய தொடர்பு மையமாக இருந்தது.  மெசபடோமியாவிலிருந்து வண்டிகளும் முழு மத்திய தரைக்கடலிருந்து கப்பல்களும் வந்து கொண்டிருந்த இந்நகரில் பல்வேறு சிந்தனைகள் பரப்பப்பட்டன.

அதற்கு முந்தைய நூற்றாண்டில் மனிதகுலத்திற்கு மிக அடிப்படையான ஒரு சிந்தனைப் புரட்சி மிலீதஸில் நிகழ்ந்தது. உலகம் குறித்து கேள்வி கேட்கும் மற்றும் அதற்கான விடையைப் பெறும் முறைகளை ஒரு சிந்தனையாளர் குழு மறுவடிவமைப்பு செய்தது. அவர்களுள் மிகச் சிறந்தவர் அனாக்ஸிமேண்டர்.

இந்த உலகம் எவ்வாறு தோன்றியது, எதனால் செய்யப்பட்டது, எவ்வாறு ஒழுங்குபடுத்தப் படுகிறது மற்றும் இயற்கை நிகழ்வுகளின் காரணம் என்ன? – சிந்தனைக்கும் எட்டாத காலத்திலிருந்து, அல்லது குறைந்தபட்சம் மானுடம் தொல்பிரதிகளை விட்டுச்சென்ற காலத்தில் இருந்து மானுடம் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய விடைகளையே கொடுத்தனர் – பழங்கால சீன பிரதிகள் முதல் ஆப்பெழுத்து(Cuneiform) பலகைகள், பிரமிடுகளின் சித்திர எழுத்துக்கள் முதல் சியு(Sioux) பழங்குடியினரின் மர்மங்கள், விவிலியம் முதல் பழங்கால இந்திய பிரதிகள், ஆப்பிரிக்க கதைகள் முதல் ஆஸ்திரேலிய ஆதிகுடிகள் வரை, பிளவுண்ட சர்ப்பங்கள், பெரும் பசுக்கள்,  ‘ஒளி தோன்றுக’  என அதலத்தில் இருந்து மூச்சுக் காற்றினாலோ அல்லது ஒரு கல் முட்டையிலிருந்தோ உலகைப் படைக்கும் வெறிகொண்ட, வழக்காடுகின்ற மற்றும் கருணையுள்ள தேவர்கள் பற்றிய வண்ணமயமான ஆனால் ஒரே மாதிரியான ஒழுக்குடைய விரிவான கதைகளையே அளித்தனர்.

பிறகு பொ.யு ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் புதிய கோணத்தில் விடைகளைத் தேடும் முறை, மிலீதஸில் தேல்ஸ் (Thales)  மற்றும் அவரது பள்ளியைச் சார்ந்த அனாக்ஸிமேண்டர் (Anaximander) மற்றும் ஹெகதையோஸால் (Hecataeus) கண்டறியப்பட்டது. சிந்தனையின் இப்பெரும் புரட்சி அறிதலுக்கான புதிய முறையைத் தொடங்கி, அறிவியல் சிந்தனையின் முதல் உதயத்திற்கு வழிவகுத்தது.

கற்பனைகள், புராணங்கள் மற்றும் சமயங்களில் விடைகளைத் தேடுவதற்கு பதிலாக, காரணம், கூர்மையான அவதானம் மற்றும்  பகுப்பாய்வு நோக்கில் விமர்சன சிந்தனையை பயன்படுத்துவதால் உலகம் குறித்த நமது பார்வையை தொடர்ச்சியாக மேம்படுத்தவும் நிதர்சனத்தின் மறைந்திருக்கும் புதிய கூறுகளை கண்டறியவும் முற்றிலும் புதியதை கண்டுபிடிக்கவும் முடியும் என மிலீதஸியர்கள் உணர்ந்திருந்தனர்.

மாணவர் தனது ஆசிரியரின் சிந்தனைகளை போற்றி வணங்கி பரப்ப மட்டுமே  வேண்டும் என்றில்லாமல் அவற்றின் மீது புதிய சிந்தனைகளை கட்டமைக்கவும், அதன் மேம்படுத்த வேண்டிய பகுதிகள் மீது விமர்சனங்களை வைக்கவும் விலக்கவும் இயலுகின்ற சுதந்திரமே அன்றைய மிக முக்கியமான மாற்றம்.  வெறுமனே தமது  சிந்தனைப் பள்ளிகளுக்குத் தம்மை  ஒப்புக் கொடுத்து விடுவதற்கும் பொதுவாக கருத்துக்களை அள்ளி வீசுவதற்கும் இடையே ஒரு புதிய மைய வழியான  இது, தத்துவ மற்றும் அறிவியல் சிந்தனைகளின் தொடர்  வளர்ச்சியில் ஒரு முக்கியமான திருப்பத்தினை ஏற்படுத்தியது. இந்த முனையிலிருந்து ,  முந்தைய சிந்தனைகளினால் புரக்கப்பட்டும், அதே சமயம்  விமர்சனத்திற்கான – அதன் வழியான  முன் செல்லலுக்கான வாய்ப்புடன்  அறிவுப்பரப்பும் அறிதலும் தலை சுற்ற வைக்கும் வேகத்தில் பாயத்  தொடங்கியது. ” கிரேக்கர்களின் பல பதிவுகள் அபத்தமான முரண்படும் விஷயங்களுடன் இருப்பதால், எனக்கு உண்மை என தெரிந்தவற்றை எழுதியுள்ளேன்” – நமது சுய எல்லைகளையும் காட்டியபடி திறனாய்வு சிந்தனையின் மையத்தினைத் தொடும்  கூரிய பிரகாசத்துடன் துவங்குகிறது    ஹெகதையோஸின்  வரலாற்று நூல்.

தொன்மங்களின்படி ஹெர்கிளிஸ்  (Heracles) டெனாரோ முனையிலிருந்து (Cape Tenaro) ஹெடீஸிற்குள் (Hades) இறங்கினார்.  ஆனால் டெனாரோ முனைக்குச் சென்ற ஹெகதையோஸ், ஹெடிஸிற்கு அடிநிலப் பாதையோ வேறு பாதைகளோ அங்கிருந்து இல்லை – எனவே அந்த தொன்மம் பொய்யானது என மதிப்பிட்டார். ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் இது.

அறிதலுக்கான இந்த புதிய முறை ஆச்சரியப்படுமளவிற்கு பெரு வசீகரத்துடன் விரைவாக செயலாக்கத்தில் இறங்கியது. சில ஆண்டுகளிலேயே அனாக்ஸிமேண்டர் புவி வானத்தில் மிதந்து கொண்டிருக்கிறது எனவும் வானம் புவியைத் தாண்டியும் பரவியுள்ளது; பூமியிலிருக்கும் நீர் ஆவியாவதில் இருந்தே மழைநீர் வருகிறது; அபிரான்  ( Aperion ) என்னும் எவ்வகையிலும் பிரிக்க முடியாத ஒற்றை அலகு மூலக்கூறினாலேயே புவியிலுள்ள பல்வேறு பொருட்களை அறிய முடியும்; தாவரங்களும் விலங்குகளும் தமது சுற்றுச்சூழலைப் பொறுத்து தகவமைத்துக் கொள்கின்றன; மனிதன் பிற விலங்குகளிலிருந்தே பரிணமித்து வந்திருக்க வேண்டும் என்பதையெல்லாம் கண்டுபிடித்தார்.  இன்றளவும் பயன்பாட்டில் இருக்கும் அறிதலின் அடிப்படை இலக்கண முறைமைகள் இவ்வாறாக மெதுவாக வளரத் தொடங்கியது.

பழங்கால எகிப்திய – மெசபடோமிய பேரரசுகளும் வளர்ந்து வரும் கிரேக்க நாகரிகமும் சந்திக்கும் முனையில் உள்ள மிலீதஸ்,  அவர்களது அறிதல்களால் புரக்கப்பெற்றது. கிரேக்கத்தனமான சுதந்திரம் மற்றும் அரசியல் நிலையின்மையும், அரச மாளிகைகளளோ செல்வாக்குள்ள புரோகித வர்க்கமோ இல்லாத சமூகச் சூழலும், தனிநபர்கள் தங்களது எதிர்காலம் குறித்து திறந்த அகோராக்களில் பேசவும் இயலுகிற இடமாக இருந்ததால் முதன்முறையாக மனிதர்கள் கூட்டாக  சட்டங்களை முடிவெடுக்கவும், ஐயோனியன் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துக் கொள்ளும் இடம், கடவுள்களால் மட்டுமே அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்பதை கேள்விக்குள்ளாக்கும் இடமாகவும் உலகின் முதல் பாராளுமன்றம் – பனினோயியம் (Panionium) அங்கிருந்தது. உரையாடல்கள் வழியாக சமூகத்திற்கான சிறந்த முடிவுகளை எடுக்க முடிந்தது. உரையாடல்கள் வழியாக உலகையும் புரிந்து கொள்ள முடிந்தது.  தத்துவம், இயற்கை அறிவியல், புவியியல் மற்றும் வரலாற்றுத் துறைகளின் தொட்டிலாக திகழ்ந்ததே மிலீதஸின் என்றென்றும் நிற்கும் புகழுக்கு காரணம். பிற்கால மத்திய தரைக்கடல் மற்றும் நவீன அறிவியல்  தத்துவ மரபுகள் இங்கிருந்த பொ.யு.மு ஆறாம் நூற்றாண்டு சிந்தனையாளர்களின் ஊகங்களில் வேரூன்றியது என்று சொல்வது மிகையல்ல.

பொ.யு மு 494ல் பாரசீக பேரரசின் வருகையும் தோல்வியுற்ற எதிர்-பேராதிக்க கிளர்ச்சியும் வெறிகொண்ட பேரழிவிற்கு நகரினைத் தள்ளியது. கணக்கற்றோர் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இவ்வாறாக மிலீதஸின் தன்னொளி துயர்-முடிவுற்றது. ஏதென்ஸ் மக்களிடையே மிகுந்த செல்வாக்கினை செலுத்திய கவி ஃப்ரினிகஸின்(Phrynichus) துன்பியல் எழுத்தான மிலீதஸினை கைப்பற்றுதல் பெரும் அமைதியின்மையை உண்டாக்கியதால் மறு அரங்கமர்விற்கு தடைசெய்யப்பட்டது.  ஆனால் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்கர்கள் பாரசீக கெடுதலை அகற்றினர். மறுபிறப்பெடுத்த மிலீதஸ் தனது ஒளிரும் சிந்தனை மற்றும் ஆன்மாவுடன்   வணிகத்திலும் அறிவுத்தளத்திலும்‌ மீண்டும் முண்ணனிக்கு வந்தது.

இந்த மறுபிறப்பின் காரணமாகவே,  அத்தியாயத்தின் துவக்கத்தில் நாம் பேசிய நபர், தொன்மங்களின் படி பொ.யு.மு 450ல்  மிலீதஸிலிருந்து அப்தெராவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருக்க வேண்டும். அவரது பெயர் லூசிப்பஸ் (Leucippus) .  மகத்தான பிரபஞ்சவியல் என்னும் தலைப்புடைய நூலினை எழுதிய அவரது வாழ்வைப் பற்றி மிகக் குறைவான அளவே தெரியவருகிறது. தனது அப்தெரா வருகைக்குப் பிறகு ஒரு அறிவியல் – தத்துவ பள்ளியினை துவங்கியவர், பிற்கால சிந்தனைகள் அனைத்திலும் மிகுந்த செல்வாக்கினை செலுத்திய டெமாகீரிடஸ் (Democritus)  என்னும் இளம் சீடருடன் அதனை  இணைத்தார்.

டெமாகீரிடஸ்

ஆதிகால அணுத்துவத்தின் பெரும் தேவாலயத்தினை இந்த இருவரும் கட்டியெழுப்பினர். கிட்டத்தட்ட அனைத்து அறிவுத்துறைகளைப் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ள டெமாகீரிடஸ் , அவரது எழுத்துக்களை அறிந்தவர்களால்  ‘பழமை’யின் மிக மரியாதைக்குரியவர்களுள் ஒருவராக மதிக்கப்படுகிறார். ‘மூதாதையருள் நுண்மான் நுழைபுலம் மிக்கவர்‘ என செனக(Seneca) அவரைப் பாராட்டுகிறார் .  ‘வெறும் அறிவுத்திறனுக்காக மட்டுமில்லாது ஆளுமைக்காகவும் அவருடன் ஒப்பிடக்கூடியவர் வேறு யார் இருக்கிறார்கள் ?’ என்கிறார் சிசரோ(Cicero).

லூசிப்பஸும் டெமாகீரிடஸும் கண்டறிந்தது என்ன? செயற்காரணம் மூலமாக உலகினை அறிந்துகொள்ள முடியும் என இந்த இரு மிலீத்தீயர்களும் கண்டறிந்தனர். பலவகையான இயற்கை நிகழ்வுகள் மிக எளிய ஏதோ ஒன்றினைச்  சார்ந்திருக்கும் என நம்பியவர்கள், அந்த ‘ஒன்றினை’ அறிய முயன்றனர்.  காணும் அனைத்தையும் கட்டியிருக்கும்  அடிப்படை வஸ்து  ஒன்றுண்டு எனவும் நம்பினர். இந்த வஸ்துவை செறிவாக்கவோ  நீர்க்கவோ செய்து, காணும் பொருள் ஒன்றினை இன்னொன்றாக மாற்ற இயலும் என்று சக மிலீத்தீயர்களுடன் சேர்ந்து அனாக்சிமீயர்கள் கற்பனை செய்தனர். மிக எளிய  கரடுமுரடான ஒன்றாக இருந்தாலும் ,  இயற்பியலின்  சரியான திசை தேரும் முதல் விதை இது. உலகின் மறைந்திருந்த ஒழுங்கினை வெளிக்கொணர வேண்டிய ஒரு கருத்து – ஒரு சிறந்த கருத்தினையும்  பெரும் கூர்நோக்கினையும் இந்த இருவருமே அளித்தனர்.

டெமாகீரிடஸ் உருவகித்த அமைப்பின் அடிப்படை சிந்தனை மிக எளியது. மொத்த பிரபஞ்சமும் கட்டற்ற வெளியில் எல்லையற்ற அணுக்கள் ஓடும் ஒன்றே.  வெளி என்பது  மேல் – கீழ் – மையம் என எந்த எல்லையுமற்றது. அணுக்கள்  வடிவத்தைத் தவிர எடை , நிறம், சுவை என  எந்த பண்புகளும் இல்லாதவை.   ‘மரபின்படி இனிப்பு , மரபின்படி கசப்பு , மரபின்படி சூடு , மரபின்படி நிறம் ஆனால் உண்மையின்படி அணுக்களும் வெற்றிடமும்’

அணுக்கள் பிளக்கமுடியாதவை; மேலும் வகுக்க முடியாததும் அனைத்தையும் ஆக்கியிருப்பதுமான அவை நிதர்சனத்தின் அடிப்படைதுகள்கள். ஒன்றை  ஒன்று  விலக்கியும் ஈர்த்தும் கவ்வியும்  மோதியபடி வெளியில் சுதந்திரமாக நகர்பவை. ஒரேமாதிரியான அணுக்கள் ஒன்றையொன்று ஈர்த்து இணைந்து கொள்ளும்.

இதுவே பிரபஞ்சத்தின் அடிப்படை நெசவு . இதுவே நிதர்சனம். காணும் அனைத்தும் அணுக்களின் நகர்வு மற்றும் இணைவுகளால் உண்டாகும் எதிர்பாரா தற்செயல் பின்விளைவுகளே. பொருட்களின் கணக்கற்ற வகைமைகள் அனைத்தும் அணுக்களின் இணைவினை மட்டுமே சார்ந்திருப்பவை.

அணுக்கள்  ஒன்றிணையும்போது அதன் வடிவம், அமைப்பு மற்றும் இணைவொழுங்கு – இவை மட்டுமே கருத்தில் கொள்ளப்பட வேண்டியது. எவ்வாறு எழுத்துக்களை பல்வேறு வகைகளில் சேர்த்து பெரும் காவியங்கள் , இன்பியல் – துன்பியல் படைப்புகள்  முதல் இளிவரல் பாடல்கள் வரை உருவாக்குகின்றோமோ, அடிப்படை அணுக்கள் கலந்து முடிவற்ற வகைமைகளை உண்டாக்குகின்றன.  டெமாகீரிடஸின் சொந்த உருவகம் இது.

அணுக்களின் இந்த எல்லையற்ற நடனத்திற்கு இறுதி காரணமோ செயல்நோக்கமோ – எதுவும் இல்லை. உலகின் மற்ற உறுப்புகளைப் போல நாமும் இந்த எல்லையற்ற நடனத்தின் தற்செயலான, எதிர்பாராத இணைப்பின்  பின்விளைவே.  ஊழியூழி காலங்களாய் வடிவம் மற்றும் கட்டமைப்புகளை  வைத்து தொடர் ஆய்வில் உள்ள இயற்கை, எதிர்பாரா தற்செயல் மூலமாக தேர்ந்தெடுத்த படைப்புகளே  பிற விலங்குகளும் நாமும். அணுக்களின் இணைவே நமது வாழ்வு. மெல்லிய அணுக்களால் ஆனதே சிந்தனை. கனவுகள் அதன் விளைபயன்களே.   அணுக்களின் இணைவு உண்டாக்கும் மொழியிலேயே  நமது  நம்பிக்கைகளும் உணர்வுகளும் உள்ளன. ஒளி, காட்சியைக் கொண்டு வரும் அணுக்களால் ஆனது. நமது நகரங்கள், கடல்கள் மற்றும் விண்மீன்களும் அணுக்களாலேயே ஆனவை.  மிக எளியதும் வலியதும்  கட்டற்றதுமான, பிற்கால நாகரீகம் ஒன்றின் அறிவு வளர்ச்சிக்கு  அடித்தளமாகப் போகின்ற  பரந்துபட்ட தரிசனமே இது.

இயற்பியல், தத்துவம், அறவியல், அரசியல் மற்றும் பிரபஞ்சவியல்களின் கேள்விகளை எதிர்கொள்ள மிக விரிவான அமைப்பினை மேற்சொன்ன கட்டுமானத்தின் மீது நிறுவி பல நூல்களை டெமாகிரீடஸ் எழுதினார்.  மொழி , சமயம் , சமூகத்தின் தொடக்கம் மற்றும் இன்ன பிறவற்றைக் குறித்தும் எழுதியுள்ளார். (“அனைத்து விஷயங்களைப் பற்றியும் இங்கு பேசியுள்ளேன் ”  – சிறு பிரபஞ்சவியல் நூலின் மனம்கவரும் தொடக்கம் இது ). இந்நூல்கள் அனைத்தும் தொலைந்து விட்டன. இவரது  அதிதீவிர பொருள்முதல்வாத, அறிவாய்ந்த மனிதத்துவ சிந்தனையை,  பிற பழங்கால சிந்தனையாளர்களின் மேற்கோள்கள், குறிப்புரைகள் மற்றும் சுருக்கங்கள் வழியாகவே அறிய முடிகிறது. டெமாகிரீடஸ்  மிகக் கூரிய நோக்கினை இயற்கையுடன் இணைத்ததால் கிடைத்த இயற்கைவாத தெளிவுடனும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு  பதினெட்டாம் நூற்றாண்டு அறிவொளிக்காலம் எதிர்நோக்கியிருந்த மானுட மற்றும் வாழ்வின் மைய அறம் குறித்த அக்கறையுடனும்  ஒவ்வொரு பௌராணிக சிந்தனையையும்  விலக்கினார். சீர்மனம் என்பதை மிதமான சமநிலையுடனும் அறிவார்ந்த தன்மையுடனும்   உணர்ச்சி வேகங்களுக்கு இடம்கொடாமலேயே அடைய முடியும் என்பதே டெமாகிரீடஸின் அறவியல் சிந்தனை.

அறிவு வளர்ச்சிக்கு பிற்காலத்தில்  பெரும் தடையாக இருக்கக்கூடிய சிந்தனைகளுக்காக,  டெமாகிரீடஸின் சிந்தனைகளை நன்கு  அறிந்திருந்த அரிஸ்டாட்டிலும் பிளேட்டோவும் அதனை எதிர்த்தனர். நிகழும் ஒவ்வொன்றிற்கும் நோக்கம் என ஒன்று உண்டென நம்பிய இருவரும், இயற்கையை அறிந்து கொள்வதில் வருங்காலத்தில் பெரும் வழிதவறலுக்கு அடிப்படையாகக்கூடிய – மனிதனின் சிக்கல்களை நம்முடன் தொடர்பற்ற  பொருட்களுடன் இணைத்தும்,  நன்மை – தீமை என்னும் இருமை நோக்கிலும் –    அறுதியான விளக்கங்களை வேண்டி , உலகினைப் பற்றிய டெமாகிரீடஸின்  இயற்கைவாத விளக்கங்களை நிராகரித்தனர்.

டெமாகிரீடஸின் சிந்தனைகளைக் குறித்து பெரும் மதிப்புடன் விரிவாகவே அரிஸ்டாடில் பேசினாலும்  பிளேட்டோவின் புறக்கணிப்பு அவரை அறியாததால் அல்ல என்பதே அறிஞர்களின் முடிவு.  டெமாகிரீடஸின் சிந்தனை மீதான உள்ளார்ந்த விலகல் அவரது எழுத்துக்களில் பரவலாக – எடுத்துக்காட்டிற்கு  ‘இயற்பியலாளர்’கள் மீதான கண்டனம் என – காணக்கிடைக்கிறது. பிற்காலத்தில் பெரும் நீடிக்கும்  அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய வசை, பிளேட்டோவின் சாக்ரடீஸால்  phaedo வில் ஒரு பத்தியில் கூறப்படுகிறது. பூமி உருண்டையானது என்னும் ‘இயற்பியலாளர்’களின் விளக்கத்தினை குறைகூறுபவர், பூமியின் வளைவு  அதற்கு  அளிக்கும் ‘நன்மை’ என்ன ?  அதனால் அதற்கு என்ன பயன் விளைந்து விடப்போகிறது என தன் எதிர்ப்பை தெரிவிக்கிறார். தொடக்கத்தில் இயற்பியல் குறித்து ஆர்வம் கொண்டிருந்தாலும் பிறகு பின்வருமாறு  ‘விழிப்புற்றதாக’வும் பிளாட்டோவின் சாக்ரடீஸ் நினைவுகூருகிறார்.  

பூமி தட்டையானதாகவோ உருண்டையாகவோ எனக்கு  சொல்லப்படுவதாக முதலில் 

 எதிர்பார்க்கப்பட்டாலும் , உன்னதம் தேரும் கொள்கையில் துவங்கி  வடிவத்தின் முக்கியத்துவம் குறித்தும், பூமிக்கு இந்த வடிவமே  ஏன் சிறந்தது எனவும் பின்னர் விளக்கப்பட்டது. பிறகு அவர்  பிரபஞ்சத்தின் மையமாக பூமி விளங்குகிறது எனக் கூறினால், அதனால் பூமிக்கு என்ன நன்மை என்பதையும் எனக்கு விளக்க வேண்டும்

மஹா பிளேட்டோவின் பெரும் வழிதவறல் இது.

Grains ; Is there a limit to divisibility? ; The nature of things

துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்

துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம் வகுத்துச் செல்வதன் எல்லை ?

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.