- ஈர்ப்பு அலைகள் – பகுதி 1
- ஈர்ப்பு அலைகள் – பகுதி 2
- ஈர்ப்பு அலைகள் – பகுதி 3
- “Mission impossible போல இருக்கிறதே. யார் சார் அந்த டாம் க்ரூஸ்?”
- பைனரி பல்ஸார் என்னது?
- ஈர்ப்பு அலைகள் – பகுதி 6
- ஈர்ப்பு அலைகள் – பகுதி 7
- ஈர்ப்பு அலைகள் – பகுதி 8
- ஈர்ப்பு அலைகள் – பகுதி 9
- ஈர்ப்பு அலைகள் – பகுதி 10
- ஈர்ப்பு அலைகள் – 11
- ஈர்ப்பு அலைகள் – பகுதி 12
அன்று சனிக்கிழமை. என் வீட்டிற்கு அருண், மற்றும் மஞ்சு ஒரு சின்ன கலந்துரையாடலுக்காக வந்திருந்தார்கள்.
“உள்ளே வாங்க. இன்றைய தேதிக்கு விஞ்ஞானத்தை ஆழமாக கற்றுக் கொள்ள விரும்பும் இளைஞர்/ஞிகள் குறைந்து விட்டனர். உங்களது ஆர்வத்திற்கு என் வாழ்த்துக்கள்”
மஞ்சு: “சார், இந்த Sunrise காப்பி மிகவும் சுவையாக இருக்கு. ரொம்ப நன்றி”
“Sunrise லிருந்து இன்றைய டிஸ்கஷனை ஆரம்பிப்போம். எங்களைப் போன்ற விண்வெளி பெளதிக ஆராய்ச்சியாளர்களுக்கு ‘உதயசூரியன்’, ‘Sunrise’ போன்ற வார்த்தைகள் மிகவும் வினோதமானவை. ஏனென்றால், இதில் எந்தப் பொருளும் இல்லை.”
அருண்: “அதெப்படிச் சொல்லுவீங்க சார்?”
”சூரியன் ஒன்றும் உதிப்பதில்லை. நம் பூமி தன்னைத் தானே சுற்றி வருகிறது. இந்த சுழற்சியில் சூரியனை சில மணி நேரங்கள், நாம் பார்ப்பதில்லை. சுழற்சியின் பொழுது சூரியன் முதலில் தெரிவதை சூரியோதயம் என்று சொல்லுகிறோம். அவ்வளவுதான்.”
அ: ”விஞ்ஞானம் வளர்ந்த ஆங்கிலத்திலும் Sunrise –னுதானே சொல்றோம்? தமிழ் வேண்டுமானால் மிகவும் பழைய மொழி என்று சற்றுத் தள்ளி வைக்கலாம். ஆனால், ஆங்கிலமும், அரபிக்கும் அப்படிதானே சொல்லுகிறது?”
“ஆங்கிலம் இன்றைய விஞ்ஞான மொழி என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால், மனித பழக்க வழக்கங்கள் அவ்வளவு சீக்கிரம் மாறுவதில்லை. மனித மொழிகள் பெரும்பாலும், சூரியன் உதிப்பது மற்றும் மறைவது என்று சொல்வது வழக்கமாகி விட்டது. இது தவறான புரிதல் என்பது கடந்த 300 வருடங்களாக நமக்குத் தெரியும்”
ம:”நிலையான ஒரே விஷயம் பூமி என்று சொல்றீங்களா, சார்?”
“நிலையான என்று நீ சொல்வது, ஒரு விதத்தில் நகராத என்று அர்த்தமாகிறது. வானவியல் பெளதிக ஆசாமிகளான எங்களுக்கு, நகராத என்று எதுவும் இல்லை. நம்முடைய பூமி தன்னைத் தானே சுழலும் வேகம் மணிக்கு 1,600 கிலோ. மீட்டர்!. அத்துடன் விஷயம் நின்று விடுவதில்லை. சூரியனைச் சுற்றி வேறு வர வேண்டும் அல்லவா? அது மணிக்கு 115,200 கிலோ மீட்டர்!”
ம: “கேட்டாலே தலை சுத்துது. அப்படி என்றால், வருடத்தில், பூமி, கிட்ட்த்தட்ட 1 பில்லியன் கிலோ மீட்டரைக் கடக்கிறதா?”
“உண்மைதான். துல்லியமாகச் சொல்வதென்றால், 940 மில்லியன் கிலோ மீட்டர். அத்துடன் இந்த நகர்வு முடிந்து விடவில்லை. நம்முடைய சூரிய குடும்பம் (அதாவது சூரியன், மற்றும் அதைச் சுற்றி வரும் கிரகங்கள்), ஒரு நட்சத்திர குடும்பத்திற்குள் அடங்கும். இந்த குடும்பத்திற்குள் உள்ள நட்சத்திரங்கள் அதன் மையத்தைச் சூற்றி, மணிக்கு 75,000 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகின்றன.”
ம: “நீங்கள் சொல்வது நம்முடைய பால்வெளி மண்டலம் பற்றியா சார்?”
“இல்லை. இது, பால்வெளி மண்டலத்திற்குள், ஒரு சின்ன நட்சத்திர வட்டார அமைப்பு. இந்த வட்டார நட்சத்திர அமைப்பு மணிக்கு 1.15 மில்லியன் கிலோ மீட்டர் வேகத்தில் பால்வெளி மண்டலத்திற்குள் நகருகிறது. பால்வெளி மண்டலம் மணிக்கு 576,000 கிலோ மீட்டர் பயணிக்கிறது. இவை யாவும் ஒரே கோணத்தில் நிகழ்வது அல்ல. பிரபஞ்சத்தில் பால்வெளி மண்டலம் போன்று பல கோடி மண்டலங்கள் இதைச் செய்து கொண்டிருக்கின்றன”

அ: ”ஒரு மணி நேரத்தில் இத்தனை இயக்கங்களா? தெளிந்த இரவு நேரத்தில் வானைப் பார்த்தால், இவ்வளவு இயக்கங்கள் இருப்பது, சற்றும் தோன்றுவதே இல்லை. ஏதோ நட்சத்திரங்கள் சற்று நகருகின்றன என்று மட்டுமே தோன்றுகிறது. அதுவும், மே மாதத்தில் பார்க்கும் நட்சத்திரங்கள், அக்டோபர் மாதத்தில் சற்று இடம் மாறுவது மட்டுமே கவனித்துள்ளேன்”
“இயற்கையின் பல ரகசியங்களில், இதுவும் ஒன்று. நாம் பார்க்கும் நட்சத்திரங்கள் மற்றும் மண்டலங்களின் தூரம் மனிதர்கள் சாதாரணமாய் கடக்கும் தூரத்தை விட, மிக மிகப் பெரியது. இந்தப் பிரபஞ்சத்தில் மிகவும் வேகமாக பயணிக்கும் விஷயம் ஒளி மற்றும் அதைப் போன்ற மின்காந்த கதிரியக்கம். அந்த வேகம் நொடிக்கு 300,000 கிலோ மீட்டர்கள். விண்வெளி பெளதிகத்தில் மிகவும் முக்கியமான தூர அளவீடு ஒளி வேகம். உதாரணத்திற்கு, நம் அருகாமையில் உள்ள நட்சத்திரம் (சூரியனை அடுத்து), Proxima Centauri. இந்த நட்சத்திரம் சூரியனை ஒப்பிடுகையில் 0.12 மடங்குதான். அதாவது, 0.12 solar mass என்று சொல்லப்படும். இதன் தூரம் 20.5 ஓளியாண்டுகள். அதாவது, ஒளி, 20.5 பூமி ஆண்டுகளில் கடக்கும் தூரம். கிலோ மீட்டர் கணக்கில் சொன்னால், 194 டிரில்லியன்! (துல்லிய அளவு – 193,946,400,000,000)”
ம: “Interesting. இந்தத் தலை சுற்றும் இயக்கத்திற்குக் காரணம் பிரபஞ்சத்தில் ஈர்ப்பு சக்தி அல்லவா?”
”உண்மைதான். நியூட்டன் காலத்து ஆப்பிள் சமாச்சரங்களை சற்று மறந்து, ஈர்ப்பு சக்தியை நாம், சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஐன்ஸ்டீன், இதை 1915 –ல் தன்னுடைய பொது ஒப்புமைக் கொள்கையின் மூலம் (General theory of Relativity) அழகாக விளக்கினார். எதிரி நாட்டு விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் சொல்வது உண்மை என்று உணர்ந்த பிரிட்டிஷ் விஞ்ஞானி, எடிங்டன், ஒரு குழுவுடன், முழு சூரிய கிரகத்தின் பொழுது, வட ஆப்பிரிக்காவிற்கு பயணித்து, நட்சத்திர ஒளி சூரியனின் அருகாமையில் சற்று வளைவதைப் படம்பிடித்து உலகிற்கு விளக்கினார். ஒரு பள்ளி ஆசிரியர் அழகாக ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு கொள்கையை இங்கு விளக்குகிறார் பாருங்கள்:
நீ சொல்வதைப் போல இயக்கங்களின் அடிப்படை பிரபஞ்சத்தில் உள்ள விண்வெளியின் வளைவுகளால் உருவாகும் சக்தி ஈர்ப்பு சக்தி”
அ: ”அருமையான விடியோ. ஈர்ப்பு சக்தி எவ்வாறு இயங்குகிறது என்று புரிகிறது. ஆனால், ஈர்ப்பு அலைகள் என்ற ஒன்று உண்டா? அதை விஞ்ஞானிகள் அளவிட்டுள்ளார்கள் என்று கேள்விப்ப்டேன். அதைப் பற்றி சொஞ்சம் விளக்க முடியுமா?”
”நீ பார்த்த இந்த வீடியோவில் மிக கனமான ஒரு பொருளை தூக்கிப் போடுகையில், அந்த எலாஸ்டிக் துணி சற்று குதிப்பதைக் கண்டிருக்கலாம். இதை ஒரு மிகப் பெரிய அளவில் ஒரு கால்பந்து மைதானம் அளவில் எண்ணிப் பாருங்கள். ஒரு ஹெலிகாப்டரிலிருந்து மைதானத்தின் மத்தியில் ஒரு மிக எடையான பொருளை மேலிருந்து எறிகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மைதானத்தின் ஸ்டேடியத்திலிருந்து பார்க்கும் உனக்கு ராட்சச எலாஸ்டிக் துணியில் என்ன நடப்பதாகத் தெரியும்?”
அ: “மிகப் பெரிதாக அந்த எலாஸ்டிக் துணி ஆடும்”
“அது சரிதான். ஆனால், அந்த கனமான பொருள் நடுவில் விழுந்தவுடன், துணியில் மேலும் கீழுமாக, ஒரு சின்ன அலையை உண்டாக்கும். இந்த அலையின் வீச்சு, நடுப்பகுதியில் அதிகமாக இருக்கும். விளிம்பை நெருங்குகையில், அந்த வீச்சு படிப்படியாகக் குறையும். இது ஒரு தாற்காலிக நிலை. பழைய நிலைக்கு அந்த எலாஸ்டிக் துணி சில நொடிகளில் வந்துவிடும்”
அ: “இப்படிதான் திடீரென்று ஈர்ப்பு அலைகள் உருவாகின்றனவா சார்?”
“பிரபஞ்சம் என்னும் மாபொரும் மைதானத்தில், இப்படி அவ்வப்பொழுது சில ராட்சச நிகழ்வுகளால், விண்வெளி என்ற எலாஸ்டிக் துணியில் அதிர்வு அலைகள் உருவாகும். நிகழ்வின் தூரத்தைப் பொருத்து, உருவாகும் அலைகளின் வீச்சு இருக்கும். சரி, உன்னுடைய ஈர்ப்பு அலை ஆராய்ச்சி என்ன சொல்லுகிறது”
ம: “சார், நான், Perplexity என்னும் இணையதளத்திலிருந்து பல விஷயங்கள் பார்த்தேன். 2015 –ல் ஈர்ப்பு அலைகள் LIGO என்கின்ற கருவி மூலம் முதலில் அளவெடுத்தார்கள். 2020 –ல் அதற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதை முதலில் உலகிற்கு அறிவித்தவர் ஐன்ஸ்டீன். சுமார் 100 வருடங்கள் கழித்து அவருடைய கோட்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது”
“நீ சொல்வதெல்லாம் சரிதான். இதை ஒரு மூன்று நிமிட வீடியோவிற்கு சரிப்படும். இதைச் சொல்லாத செய்தி நிறுவனமில்லை. ஆனால், நூறு ஆண்டுகளில் என்ன நடந்தது? ஏன் இவ்வளவு நேரமாகியது? இதில் உள்ள சிக்கல்கள் என்ன? ஏன் இதற்காக 100 வருடங்கள் மெனக்கிட வேண்டும்? இந்த முயற்சிக்கு உதவியவர்கள் யார் யார்? இத்துடன் கதை முடிந்ததா? எதற்காக இந்த ஆராய்ச்சி தொடர வேண்டும்? எதற்காக இந்தியாவில் இதற்காக ஒரு விஞ்ஞான அமைப்பை உருவாக்குகிறார்கள்? JWST போன்ற விண்வெளி தொலைநோக்கி இருக்கையில், இது தேவையா? இப்படி அடுக்கடுக்காக கேள்விகள் பொதுவெளியில் யாரும் கேட்பதில்லை. இவற்றை புரிந்து கொள்ளுதல், மிகவும் அவசியம். அப்பொழுதுதான் விஞ்ஞானத்தின் முழு வீச்சையும் புரிந்து கொள்ள முடியும். அடுத்த வாரம், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மிகப் பெரிய பெளதிக விஞ்ஞானிகளின் விநோத பயணம் பற்றி தொடங்குவோம். அது மிகவும் சுவாரசியமான கதை!”
தொடரும்
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

Good one. My wishes. Keep up tempo.👌🏻🙏
மிக எளிமையான மொழி நடையில்…இனிமையாய் ஆரம்பித்திருக்கிறது…’அறிவியல் ஈர்ப்பு அலைகள்…’ இன்னும் பலரை இவை போன்ற கட்டுரைகள் ஈர்ப்பது அவசியம்…கட்டுரை ஆசிரியருக்கு நன்றியும்…வாழ்த்தும்… தொடருங்கள் ..காத்திருக்கிறோம்…
‘சர்வசித்தன்’