- ஸ்கின்ஷிப் – பகுதி 2
- ஸ்கின்ஷிப் – பகுதி 1
- ஸ்கின்ஷிப் – பகுதி 3
மூலம் : யூன் சோய்
தமிழாக்கம்: மைத்ரேயன்
முந்தைய பகுதிகள்
அந்த செமஸ்டர் முடிந்தது. வருடம் ஒரு முடிவுக்கு வரவிருக்கையில், பத்தாம் வகுப்பு இங்க்லிஷ் ஹானர்ஸ் வகுப்பிற்கு எமிலி டிக்கின்ஸனின் கவிதைகள் பாடமாகக் கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு கவிதையிலும் ஒரு விசித்திரமான அற்புதத்தை நான் கண்டேன். “கடிதம் ஏதும் எனக்கெழுதாத/உலகுக்கு நான் எழுதும் கடிதம் இது.” அல்லது “மேலும் வாழ்வு இருப்பது அங்கே/அலமாரிக்குப் பின்னே.”
ஒரு பின்மாலை, பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தேன், என் அம்மா சமையலறை மேஜையில் ஒரு மஞ்சள் துண்டுக் காகிதமும், ஒரு திறந்த உறையுமாக அமர்ந்திருப்பதைப் பார்த்தேன்.
“அது என்ன?” நான் கேட்டேன்.
அவர் காகிதத்தை என்னிடம் திருப்பினார். நீலக் கறைகளுடன், மேல்புறம் கார்பன் காகிதம் கிழிக்கப்பட்டதைக் காட்டும் சிறு துளைகளுடன், இருந்த அலுவலகக் கடிதம் அது. யாரோ, வெற்றிடமாக இருந்த வரிகளில், பதில்களைக் கையால் எழுதி நிரப்பி இருந்தார்கள்.

பெற்றோர்/பராமரிப்பவர்/பொறுப்பாளருக்கு அறிக்கை
இந்தக் கடிதம் உங்களுக்குத் தெரிவிக்க எழுதப்பட்டிருக்கிறது, உங்கள் மகன்/மகள் சி–ஓ பள்ளியிலிருந்து கீழ்க்கண்ட காரணத்துக்காக இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
கல்வி சார் நேர்மையின்மைக்காகவும், பள்ளி மைதானத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்றதற்கும். 18/ 11/2005 அன்று கனம்.லூக் (இங்கிலிஷ்) இதைத் தெரிவித்தார். அது பின்வருமாறு: ஜூலியஸ் ஸீசர் புத்தகம் பற்றிய தற்போதைய மாணவர் ஒருவரின் கட்டுரை ஒரு முன்னாள் மாணவர் சமர்ப்பித்த ஒரு கட்டுரையோடு “குறிப்பிடத்தக்க ஒற்றுமை” இருப்பதைக் கவனித்தார். இதைப் பற்றிய விசாரணையில் தெரிய வந்தது: அந்த மாணவர் (இங்கு அவர் பெயர் கொடுக்கப்படவில்லை) அந்த முன்னாள் கட்டுரையை சி–ஓ லிம்மிடமிருந்து $100க்கு வாங்கியதாகச் சொல்கிறார். மேலும் தெரிய வந்த விவரங்களின்படி, சி–ஓ லிம் இப்படி கல்வி சம்பந்தப்பட்ட பொருட்களை மட்டும் விற்கவில்லை, பள்ளி மைதானத்தில் மேலும் பல பொருட்களை விற்கும் பழக்கம் உள்ளவர் என்று தெரிய வந்தது, அந்தப் பொருட்கள் பின்வருமாறு….
அந்தக் காகிதத்தை என்னிடம் கொடுத்து, “இது என்ன சொல்கிறது?” என்று என் அம்மா கேட்டார்.
நான் விளக்கம் கொடுக்க முயன்றேன். நான் பேச ஆரம்பித்தவுடன், என் அம்மா எழுந்து விட்டார். சி-ஓவின் அறையை நோக்கிக் கூடத்தில் நடந்து போனவரிடம் காணப்பட்ட குறிக்கோளை நோக்கிய சக்தியை கொரியாவை விட்டு வந்த பின் அவரிடம் நான் பார்த்ததில்லை.
அம்மா கதவைத் தடாலென்று திறந்து உள்ளே போன போது சி-ஓ தன் படுக்கையில் அவனுடைய வாக்மேனும், ஹெட்ஃபோன்களுமாக அமர்ந்திருந்தான், “என்ன பிடுங்கலிது…” என்றான்.
அவர் நேராக அவனுடைய அலமாரியை நோக்கிச் சென்றார், எங்கள் ஒன்றுவிட்ட சகோதரர்களின் பழைய விளையாட்டுப் பொருட்களையும், அவர்களுடைய சங்கீதக் கருவிகளையும், பொருட்களைப் போட்டு வைக்கவிருக்கும் பெட்டிகளையும் வெளியில் இழுத்தார். அந்தப் பெட்டிகளில் சி-ஓ தன் பொருட்களைச் சேமித்து வைத்திருந்தான். அலமாரியில் வெறும் உடுப்பு மாட்டும் ஹாங்கர்கள் மட்டும் ஆடியபடி ஒலியெழுப்பின. அவர் பெட்டிகளைத் துருவி நோக்கினார். இழுப்பறைகளில் குடைந்து எல்லாவற்றையும்- புத்தக அலமாரிகள், அவனுடைய பள்ளிப் பை, அவனுடைய பணப்பை- கவிழ்த்துக் கொட்டினார்.
சி-ஓ தன் பொருட்களைக் காக்க முரட்டுத் தனத்தைக் காட்டத் தயாராவதைப் பார்த்தேன்.
ஆனால் அப்போது, தன் வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அவன் கீழே உட்கார்ந்தான், தன் ஹெட்ஃபோன்களைச் சீராக்கி அணிந்து கொண்டான், முற்றிலும் சலனமில்லாத நிலைக்குள் ஒதுங்கிக் கொண்டான். அவனுடைய பள்ளிப் பைக் கவிழ்த்துக் கொட்டப்பட்டபோது அவன் எந்த மறுவினையும் காட்டவில்லை. அவனுடைய பணப்பை நோட்டுகளுக்காகவும், காசுகளுக்காகவும் குலுக்கப்பட்டது. துணிகளைத் தொங்கவிடும் ஹாங்கர் ஒன்று கட்டிலுக்கடியில் துழாவிப் பார்த்து கிட்டுவதை வெளியே இழுக்கப் பயன்படுத்தப்பட்டது.
எங்கள் அம்மா சி-ஓவைப் பார்க்கத் திரும்பினார்.
ஹெட்ஃபோன்களை அவன் காதுகளிலிருந்து பிடுங்கினார். “அப்புறம் இது? இது உனக்கு எப்படிக் கிடைச்சது?”
அவன் பதில் சொல்லவில்லை. அவனுடைய திமிர் அவனுடைய தோற்றப் பொலிவின் ஒரு அம்சம்; அவனுடைய எலும்பு வடிவும், சமச்சீரான தோற்றமும் படிப்படியாக அவனை எங்கள் அப்பா மாதிரி தோற்றமளிக்கச் செய்தன.
என் அம்மாதான் முதலில் பார்வையை அகற்றிக் கொண்டார். கைகளை இடுப்பில் வைத்தபடி நின்றார், அந்த அறையில் சிதறியவை எப்படி அங்கே வந்தன என்று அவளுக்குத் தெரியாதது போல அவற்றைச் சுற்றிப் பார்வையிட்டார். கார் கராஜின் உருளல் சத்தம் கேட்டது, தூரத்து வானிலையின் ஒலி போல இருந்தது.
அந்த பாட்மிண்டன் ராக்கெட்.
உள்ளுணர்வும், துரித இயக்கமும் கொண்டு அவர் அந்த ராக்கெட்டைப் பாய்ந்து எடுத்தார். சி-ஓவின் மீது பாய்ந்தார், அந்த மட்டையின் மெல்லிய கைப்பிடியையும், இறுகக் கட்டிய இழைகளும் காற்றில் ஊதலொலி எழுப்பின. அவர் இத்தனை வேகமாகச் செயல்படுவார் என்று என் வாழ்வில் கற்பனை கூடச் செய்திருந்ததில்லை.
“வீட்டில யாராவது இருக்கீங்களா?” எங்கள் பெரியம்மா சமையலறையிலிருந்து குரல் கொடுத்தார்.
என் அம்மா அதைக் கேட்ட அறிகுறியே காட்டவில்லை. சி-ஓவின் தலை, தோள்கள், கால்கள்- எங்கே அவரால் அடிக்க முடியுமோ அங்கெல்லாம் அடித்தார். சி-ஓ தன் முழங்கைகளை உயர்த்தி முகத்தைப் பாதுகாத்தான், ஆனால் எதிர்க்க வேறெந்த முயற்சியும் செய்யவில்லை. அந்த அறையில் இருந்த ஒலிகள் எல்லாம் என் அம்மாவின் முயற்சியால் எழுந்த அவலமான ஒலிகள்தாம். அங்கு அப்படி மௌனமே கிட்டத்தட்ட நிலவியதால், என் பெரியம்மாவின் சாவிக் கொத்திலிருந்த பல கூட்டுப் பொருட்களின் இசையொலியைக் கேட்க முடிந்தது, அவர் கழற்றிப் போட்ட குதிகால் உயர்ந்த காலணிகள் ஒவ்வொன்றின் தடங்க் ஒலியையும் கேட்க முடிந்தது. “சாப்பாடு தயாரா? ஸூஸியின் அப்பா பின்னாடிதான் வரார், உடனே வந்துடுவார்.” எங்கள் பெரியம்மா சமையலறையை விட்டு வெளியே வந்ததையும் வீட்டுக்குள் வருவதையும் என்னால் கேட்க முடிந்தது. திறந்திருந்த சி-ஓவின் அறைக்கதவு வழியே அவர் முடுக்கில் திரும்புவதையும், கூடத்தின் மறு கோடியில் வெளி வருவதையும் பார்க்க முடிந்தது. “எங்கே…,” என்று ஆரம்பித்தவர், அறையின் திறந்த வாயிலில் நின்றார், “எல்லாரும்?” அவர் பின்னே ஸூஸி வருவதை நான் பார்த்தேன்.
ராக்கெட்டைப் பிடித்திருந்த கை ஓங்கியது, பிறகு நின்றது.
அந்த இடைவெளியில், சி-ஓ மெள்ள நிமிர்ந்தான். தன் முகத்திலிருந்த முடியைத் தூக்கி விட்டான், என் அம்மா அவன் முகத்தை நன்றாகப் பார்க்கட்டுமென்று. அவனுடைய கன்னங்களிலும், கைகளிலும், கழுத்திலும் மின்னும் இளஞ்சிவப்பு நிறத்தில், நீண்ட தடிப்புகள் எழத் தொடங்கியிருந்தன.
“பிட்ச்,” என்றான் தெளிவான இங்கிலிஷில். “டச் மி எகெய்ன் அண்ட் ஐ ஆம் கோயிங் டு கால் தி பொலீஸ்.”
“எஸ்,” என்று ஒத்துக் கொண்டார் எங்கள் அம்மா. தன் நீண்ட பாவாடைக்குள் சரிந்து உட்கார்ந்தார். “எஸ், எஸ், பொலீஸைக் கூப்பிடு.”
தரையில் உட்கார்ந்து கொண்டு, இலேசாகத் தன்னையே ராக்கெட்டால் அடித்துக் கொள்ளத் துவங்கினார். தன் கால்கள், நெஞ்சு, பின் மறு தோள். “ஒன்றுக்கும் உதவாத உன் அம்மா பற்றிப் பொலீஸைக் கூப்பிடு. உன் பரிதாபமான அம்மா மீது.”
நாங்கள் அவரைப் பார்த்தோம். சீ-ஓ கூட, தனியே நின்றபடி, அவரைப் பார்த்தான். நாங்கள் அவரைத் தடுக்கவில்லை. உண்மையைச் சொன்னால், அவரைக் கவனித்திருப்பதை எங்களால் நிறுத்த முடியும் என்று நாங்கள் நினைக்கவில்லை, முழுதுமே வெட்கமற்றுப் போன நிலையிலிருந்தவர் அத்தனை ஆகிருதி உள்ளவராக, அப்படி அச்சுறுத்துபவராக இருந்தார். “உன் அம்மா ஒரு நாய். உன் அம்மா ஒரு பிட்ச்.”
வார்த்தைகளும், அடிகளும் ஒரு தாளகதியை அடைந்தன, பிறகு, தாமாக ஓய்ந்து, ஒரு முடிவுக்கு வந்தன.
எங்கள் பெரியம்மாவைப் பார்த்தேன். அவருடைய முகம் ஒப்பனை அணிந்திருந்தது: கண் புருவங்கள் எழுதப்பட்டிருந்தன, மாநிறப் பொடி பூசப்பட்டிருந்தது, ஆழ்ந்த ப்ளம் பழச் சிவப்பு நிறத்தில் உதட்டுச் சாயம். அவருடைய சிறு தங்க காது வளையங்கள் ஆடின.
ஸூஸி அவரருகே நின்றாள், நிலைப்படிமீது அழுந்திச் சாய்ந்திருந்தாள். அந்த ஒரு கணத்தில் அவளது முகபாவம் பாதுகாப்பற்று இருந்தது. தெளிவாக என்ன தெரிந்ததென்றால் கிளர்ச்சிதான் அது. திடீரென்று, அவள் தன் சமநிலையை இழந்தாள், அறைக்குள் கொஞ்சம் விழவிருந்தாள். நான் அவள் சமாளித்துக் கொள்வதைப் பார்த்தேன். அவளை நான் வெறுக்கிறேன், என்று அப்போது நான் நினைத்தேன், அப்படி ஒரு அந்தரங்கமான, சிக்கலான உணர்வைச் சொற்களில் வடித்தேன் என்பதில் ஒருவகை ஆறுதலை உணர்ந்தேன்.
ஆலிவ்-சாம்பல் நிற முறையான அலுவலக சூட் உடையும், கழுத்துப் பட்டியும் அணிந்த எங்கள் பெரியப்பா, எங்கள் பெரியம்மாவின் பின்னே வந்தார். என் மனதுக்குள் அவரை கராஜின் வழியே, சமையலறை வழியே, பின் அவருடைய வீட்டின் கூடத்து வழியே நடத்திக் கொண்டு வந்தேன், அவர் வீட்டில் இஞ்சி, பூண்டு ஆகியவற்றோடு கொதிக்கும் பன்றிவயிற்று மாமிசம், மற்றும் ஹேஸல்நட் காஃபி ஆகியவற்றை முகர்வதாக நினைத்தேன், தன் நீண்ட நாளின் உழைப்புக்குப் பிறகு தேடி வரும் இரவுச் சாப்பாட்டில் ஏற்பட்ட தாமதத்தை ஏனென்று அறிய விரும்புவார் என்று நினைத்தேன். பசியை அப்போது இழிவாகக் கருதினேன். நான் நினைத்தேன்: இவரையும் நான் வெறுக்கிறேன்.
எங்கள் பெரியப்பாவின் பின்னால் என் அப்பா தெரிந்தார், அவரது தலை தனியே உயர்ந்து தெரிந்தது. அவர் ஒரு சட்டையையும், கால்சராயையும் போட்டுக் கொண்டிருந்தார், ஆனால் விழித்துக் கொண்டதன் அதிர்ச்சி அவர் முகத்தில் இன்னும் தெரிந்தது. என்ன நடந்திருக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்கிறார் என்பதை நான் கவனித்தேன். ஒருக்கால் முழு விவரங்களை அல்ல, ஆனால் அவற்றின் சாரத்தை. அது மட்டிலுமாவது தெளிவாக இருந்தது. அடிபட்டு ஸ்தம்பிதத்தில் இருந்த அறை. மண்டியிட்டு அமர்ந்திருந்த எங்கள் அம்மா. விலகி நின்ற சி-ஓ.
என் அம்மா, என் அப்பாவைப் பார்த்து விட்டாரா என்று தெரிந்து கொள்ள அவரை நோக்கினேன்.
ஒருக்கால் அவர் பார்த்திருக்கலாம்.
அவருடைய நிலையில் ஒரு மாற்றம் வந்தது. அவர் சிரமப்பட்டு பாதி எழுந்தார், அப்போது, இன்னும் முழந்தாளில் இருந்தவர், தன் பாவாடையின் நீளத்தால் இடறப்பட்டபடி, கதவை நோக்கிச் சிறிது நகர்ந்தார். பிறகு நின்றார். அந்த ராக்கெட் இன்னும் அவர் கையில் இருந்தது, வினோதமான வகையில் பாதி நீட்டியபடி அதை அவர் பிடித்திருந்தது, எடுத்துக் கொள்பவர் யாரிடமாவது கொடுக்கத் தயாராக இருப்பது போலத் தெரிந்தது.
யாரும் நகரவில்லை.
மௌஸ்காதான் என் அப்பாவின் கால்களுக்கும், பெரியப்பாவின் கால்களுக்கும் இடையே இருந்த இடைவெளியில் நுழைந்து, அந்த அறைக்குள் புகுந்தது, ஒரு பூனைக்கே உரித்தான இறுமாப்புடன், அறையில் சிதறிக்கிடந்தவற்றினூடே கவனமாக எட்டு வைத்து நடந்தது.
அடுத்து என்ன ஆகும்?
நான் சி-ஓவின் பக்கம் பார்த்தேன், எனக்கு வியப்பு தரும் வகையில், அவனும் என்னைப் பார்த்தான்.
எங்கள் பெரியப்பாதான் முன் வந்தார். அறைக்குள் வந்தவர், ஸூஸியின் தோள் மீது அழுத்தமான கையை வைத்து அவளை அறைக்கு வெளியே இழுத்துக் கொண்டார். இந்தச் செயல் என் பெரியம்மாவுக்கு விழிப்பைக் கொணர்ந்தாற்போலத் தெரிந்தது, அவர், ஒரு திடீர்க் கூவலுடன், அறைக்குள் விரைந்து நுழைந்து என் அம்மாவை நோக்கிச் சென்றார். அம்மாவினருகில் குனிந்தார், தோள்பட்டையை இலேசாகப் பிசைந்தார், ராக்கெட்டைக் கீழே போடும்படி செய்தார், தன் சகோதரியின் முகத்துக்கு அருகில், தன்னுடைய உணர்ச்சி பூர்வமான, கவலையும் அச்சமும் கலந்த தன் முகத்தைக் கொணர்ந்தார்.
ஆனால் எங்கள் பெரியப்பா அவரைப் பெயர் சொல்லி அழைத்தார், ஒரெ ஒரு தடவை.
பெரியம்மா தயங்கினார், பிறகு எழுந்திருந்தார். அறையைக் கடந்தார். எங்கள் பெரியப்பா அவரைக் கதவருகே சந்தித்து, அவரைக் கூடத்து வழியே அழைத்துப் போனார், தன் கையை அவருடைய நடு முதுகில் வைத்தபடி.
அவர்கள் போவதைப் பார்த்தபடி இருந்தோம், அப்புறம் என் அப்பா கதவைச் சாத்தினார்.
ஒரு கணம், எங்கள் புறம் முகத்தைத் திருப்பாமல், நின்ற இடத்திலேயே இருந்தார். பிறகு, மெதுவாக, அவர் திரும்பினார். அந்தக் கணத்தில், அவருடைய முகம் தொல்லைக்குள்ளான ஒரு விதக் கண்ணியத்தைக் காட்டியது போலத் தெரிந்தது, ஆனால் அப்படி அதைப் பார்க்காமல் இருக்க நான் முயன்றேன். எங்கள் அப்பா, தொடர்ந்து ஒரு மௌனமாக, ஓர் இல்லாமையாக, அல்லது ஒரு எதிர்காலத்துக்கான நம்பகமில்லாத வாக்குறுதியாகக் கூட இருந்து விடட்டும் என்று விரக்தியாக ஆசைப்பட்டேன். ஆனால் அவர் அங்கேதான் இருந்தார்.
அவர் என்ன செய்வார்? என்ன சொல்வார்?
சி-ஓ கூட இதைத்தான் யோசித்தான். வேகமான, இலேசான, ஆனால் கேட்கக்கூடிய ஒலியோடு அவன் மூச்சு விட்டதில் என்னால் அதை உணர முடிந்தது.
எங்கள் அப்பா ஒரு எட்டு எடுத்து முன்னால் வைத்தார். எங்கள் அம்மாவை நோக்கினார்.
“ஜா-கி-யா,” என்று அவளிடம் சொன்னார்.
கொரிய ஆண்கள் இப்படித் தம் மனைவிகளை அழைப்பதுண்டு. சில சமயம் இது “தேனே” என்றோ “இனியவளே” என்றோ மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால் நேராக இதன் பொருள், “நீ-உன்னைத்தான்,” மேலும் இதன் பின்னே இன்னொரு பொருளும் உண்டு: “நான் – என்னைத்தான்.”
பிறகு அவளை அங்கிருந்து நகரச் சொன்னார்.
எங்கள் அம்மா அதற்கு ஏதும் செய்யவில்லை. அவருடைய பாதையிலிருந்து நகரவில்லை, ஆனால் அவர் அறைக்குள் நுழைவதை அவள் தடுக்கவும் இல்லை.
எங்கள் அப்பா அறையைச் சுற்றிப் பார்வையிட்டதில் இருந்த மனோபாவத்தை அறியும் நோக்கம் என்று வருணிக்கலாம். அப்போ இதுதான் சி-ஓவின் படுக்கையா. சி-ஓவுடைய மேஜை. திறந்திருந்த சி-ஓவுடைய துணி அலமாரி. அங்கே, முழங்கால்களை நெஞ்சோடு சேர்த்துக் கட்டிக் கொண்டு தரையில் அமர்ந்திருப்பவள், சி-ஓவின் அக்கா. கீழே விழுந்திருந்த விளக்கை அப்போது கவனித்ததாகத் தெரிந்தது. அதை, அவர் நிமிர்த்தி வைத்தார். அவர் நிமிர்ந்தபோது, அந்த அறியும் ஆர்வத்திற்குக் கனம் சேர்ந்து, புரிதல் வந்ததாக என்னால் உணர முடிந்தது.
அப்போது அவர் சி-ஓவைப் பார்த்தார், சி-ஓ அவரைத் திருப்பிப் பார்த்ததை நான் கவனித்தேன்.
என் தம்பி சி-ஓ இத்தனை வருடங்களாக மடக்கி வைத்திருந்த தன் பார்வையை முழுதுமாக என் அப்பாவை நோக்கித் திருப்பியதைப் பார்த்தேன். அது அவனுடைய அறையின் அந்தரங்கத்தில், அவனுடைய தன்னிறைவினுள் இருந்த வெற்றிடங்களில், கடினமான போராட்டத்தால் வெல்லப்பட்ட, ஒளிக்கப்பட்டிருந்த, இப்போது வெளிச்சத்துக்குள் இழுத்து வரப்பட்டு விட்ட ஒவ்வொரு சிறு பொருளையும் சேகரிக்க அவன் காட்டிய கட்டுப்பாட்டிலும் பொதிந்து இருந்து வெளியில் தெரியாமல் இருந்தது. எங்கள் அப்பா மீது முழு உணர்ச்சி வேகமும், குற்றச்சாட்டும், பழிசுமத்தும் நோக்கமும் கொண்ட ஒரு பார்வையை, முழுதுமாக அவன் திருப்பியதை நான் பார்த்தேன். ஆனால் அதில் ஏதோ நம்பிக்கையும், பதில் கொடுக்கப்படாத கேள்விகள் பற்றிய அச்சமும் இருந்தன, அந்தக் கேள்விகளை அவன் எங்கள் எல்லாருக்குமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். அடுத்தது என்ன? இந்த அறையில் இருக்கும் நால்வருக்கும் அடுத்தது என்ன? எங்கள் அம்மா இன்னும் அமர்ந்தபடி எளியவளாகிப் போன பாவத்துடன் இருந்தவள், தன் தலையைச் சிறிதே உயர்த்தினாள்.
இத்தனை வருடங்கள் கழித்து, இப்போது கூட, அந்தக் கணத்தை என்னால் மறுபடி பார்க்க முடிகிறது. இப்போது நடந்தேறி விட்ட அன்றைய எதிர்காலத்தைப் பற்றி என்னால் வியப்பு கொள்ள முடிகிறது. இப்போது கூட, அன்று இரவை நாங்கள் தாண்டுவோம் என்பதோ, எங்கள் பொருட்களை நாங்கள் சேகரித்துக் கொள்வோம் என்பதோ, ஸ்ப்ரூஸ் லேனில் இருந்த அந்த மஞ்சள் வீட்டை விட்டு நாங்கள் வெளியேறுவோம் என்பதோ, எங்கள் அப்பா ஒருவேலையைத் தேடிக் கொள்வார் என்பதோ, கடைசியில் ஒரு வழியாக ஃபேர்ஃபாக்ஸ் கௌண்டியிலிருந்து சில நூறு மைல்கள் தள்ளி ஒரு புறநகர்ப்பகுதியில் அச்சில் வார்த்தாற்போலிருந்த பல பத்து வீடுகளில் ஒரு சிறு வீட்டை வாங்குவார் என்பதோ, எங்கள் அம்மா முன் வாசல் கதவில் புன்னை இலைகளாலான ஒரு ஆரத்தைத் தொங்க விடுவார் என்பதோ, அந்த இடத்தை நாங்கள் வீடு என்று அழைப்போம் என்பதோ இப்போது நினைத்தாலும், உறுதி கொடுக்கப்பட்ட நிகழ்வுகளாகத் தெரியவில்லை. இப்போது கூட, இவை எல்லாம் நடக்கச் சாத்தியமில்லாதவையாகவே எனக்குத் தெரிகின்றன.
பிற நேரங்களில், இதெல்லாம் மிகச் சாதாரணமானவையாகத் தெரிகின்றன. கல்லூரியில் ஒவ்வொரு அரையாண்டு முடிந்ததும் நானும் சி-ஓவும் வீட்டுக்குத் திரும்பி வருகிறோம். எங்கள் புத்தகங்களையும், ஹாலோஜென் விளக்குகளையும் கொண்டு வந்து அவற்றை கராஜில் பெட்டிகளில் விட்டு வைக்கிறோம். சமையலறை மேஜையடியில் அமர்கிறோம், எங்கள் அம்மா நாங்கள் என்ன சாப்பிட வேண்டுமென்று ஏங்குகிறோம் என்று கேட்பார். எங்கள் அப்பா எங்களுக்கு இருபது டாலர் நோட்டுகளாக நூறு டாலர்கள் கொடுக்கிறார், இது பெட்ரோல் செலவுக்கு என்று சொல்கிறார். படிப்பு முடிந்து பட்டம் வாங்கியதும், நாடெங்கும் எங்கள் வேலைகளின் நிமித்தம் நாங்கள் இடங்கள் மாறுகிறோம், மேல் படிப்பு முடித்து இன்னும் பட்டங்கள் வாங்குகிறோம், கராஜில் மேன்மேலும் பெட்டிகளைக் கொண்டு சேர்க்கிறோம். எங்கள் பொருட்களை எடுத்துக் கொள்ள பிற்பாடு வருகிறோம் என்று சொல்வோம், ஆனால் அவற்றை ஒருபோதும் எடுத்துக் கொள்வதில்லை, ஆனால் நாங்கள் எப்போதும் திரும்பி வருகிறோம். எங்கள் அம்மா ஒரு ப்ளாஸ்டிக் தொட்டி வைத்திருக்கிறார், அதில் எங்களுக்கு வரும் அஞ்சல்களை எல்லாம் மாதக்கணக்கில் சேமித்து வைக்கிறார். வீட்டுக்குத் திரும்பியதும், நான் செய்கிற முதல் வேலை, அந்த உறைகளை அடுக்கி வைத்து ஒவ்வொன்றாகத் திறந்து பார்ப்பதுதான்: அவை எல்லாம் நிரந்தர முகவரியைக் கோரும் அஞ்சல்கள். படிப்புக் கடன்கள், கடனட்டைக் கணக்கு அறிக்கைகள். சில சமயங்களில் எனக்கு உறைக்கும், நான் ஒரு வளர்ந்த மனுஷி, ஆனால் என் செல் ஃபோன் கட்டணக் கோரிக்கை இன்னும் குடும்பத்தின் கணக்கின் பகுதியாகவே உள்ளது, என் காருக்கான காப்பீடு இன்னும் குடும்பத்தின் காப்பீட்டில் இருக்கிறது. சில சமயம் எனக்குத் தோன்றும், பாப விமோசனம் என்பது ஒருவேளை நிஜமாகவே சகஜமாகக் கிட்டும் விஷயம்தான் என்று. குடும்பங்களில் அது எல்லா நேரமும் நடந்து கொண்டிருக்கிறது போல.
எங்கள் அப்பா சி-ஓவின் பார்வையை அங்கீகரிப்பதை நான் பார்க்கிறேன். அவர் கை இடுப்பை நோக்கிப் போகையில், அந்தப் பார்வையைத் தாங்கிக் கொள்வதையும் பார்க்கிறேன். அந்தக் கை அவரது கால்சராயின் இடுப்பு வாருக்கான வளையங்களில் ஒவ்வொரு வளையமாக அந்த வாரை விடுவித்து முழுதும் உருவி வெளியே எடுக்கிறது. நான் அம்மாவை நோக்கித் திரும்புகிறேன், அவள் உறைந்து போய் நிற்கிறாள். இருவரும் சேர்ந்து பார்க்கிறோம், அந்த வாரின் கனமான பித்தளை பக்கிள் இடிக்காமல், தோல் பட்டையின் தாக்கத்தை மட்டும் உணரும்படிச் செய்வதற்காக, அவர் தோல் பட்டையை தன் உள்ளங்கையைச் சுற்றிச் சுருட்டுகிறார்.
- Skinship: Stories
- by Yoon Choi (Author)
- Publisher : Knopf;
- First Edition : August 17, 2021
- Language : English
- Hardcover : 304 pages
- ISBN-10 : 0593318218
- ISBN-13 : 978-0593318218
- Category: Short Stories
- Paperback
- $19.00
- Apr 26, 2022
- ISBN 9780593311455
- WINNER OF THE PEN/ROBERT W. BINGHAM PRIZE for Debut Fiction in 2022
- LONGLISTED FOR THE STORY PRIZE
- Maureen Corrigan/Fresh Air Top 10 Book of the Year
- An NPR Book Best Book of the Year
- A Kirkus Best Book of the Year
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ஸ்கின்ஷிப் – பகுதி 3”