கிபி 2099
நான் நேரடியா உன் முன்னாடி பிரசன்னமாகத் தேவை இல்லை.
இல்லையா?
இல்லை. நாம மூணு வருஷம் ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரியாம ஒரே வீட்டில் வாழ்ந்தோம்.
பலூனில்
ஆம். ஆர்விஏ வைரஸ் காலம்.
கல்பகாலம்.
ஓஹோ, இதெல்லாம் எப்ப தெரிஞ்சது?
விஞ்ஞானியோட மனைவிக்கு விஞ்ஞானம் தவிர எல்லாமே தெரியனும். குறிப்பா விஞ்ஞானம் தெரியவே கூடாதுன்னு நீங்க சொன்ன முதல் நாளில்.
அப்படி நான் சொல்றதுக்கு முன்னாடி காதலன் குதிரைல வருவான்னு காத்திருந்தியா?
குதிரையிலா, மரித்த மூணாம் நாள் நிலத்திலா எதில வருவான்னு தெரியாது. ஆனா..
.. டிரோனில் வந்தேன்.
ஆம். வானத்திலிருந்து ஒரு பொன் நிற டிரோனில வந்தீங்க.
டிரோனில் வந்திறங்கி பலூனில் வாழ்க்கை.
அதுவும் சென்னையில்
இதெல்லாம் டூ மச். பறக்கும் டிரோன் செய்ய ஆசை எனச் சொன்னேன். அதுக்கே இப்படி ஒரு கதையா?
இப்ப அதெல்லாம் பழங்கதை தானே?
உன்னை காதலித்ததா?
அதுவும் தான்.
சேஃப் ஹவுஸ், வைரஸிலிருந்து தப்பிக்க பலூன் வாழ்க்கை மட்டுந்தான் பழசு.
காதல் மட்டும் பிரெஷ்ஷா?
இல்லையா பின்ன?
ஆனா சேர்ந்து மட்டும் இருக்க முடியாது! இப்படியே தொலை தூரத் துகள் காதல் போதுமா?
இப்போதைக்கு.
போரடிச்சாச்சு, ரெண்டாவது வருஷமாச்சும் புது காரணத்தை சொல்லு.
சரி, ஊட்டியில் ஒரு காலத்தில் குளிருமாம், தெரியுமா?
நல்லா பேச்சை மாத்து.
சரி, சரி, இன்னும் ரெண்டே மாசம் ஊட்டி தொலைநோக்கி K2-18b க்கு செய்தி அனுப்பியதும் வந்துடுவேன்.
மேக்னா ஐ லவ் யூ அப்படின்னு ஒரு மெசேஜ் அனுப்புவதா சொன்னீங்க!
அனுப்பிட்டேனே!
உங்களைப் பார்த்த முதல் நாள் இதை நம்பியிருப்பேன். அரை நாள் தாங்கியிருக்கும் அந்தப் பொய்! பை!
திரையில் புள்ளிகள் மறைந்ததும் எனக்குள் மீண்டும் பாரம் ஒட்டிக்கொண்டது. கிண்டல்களும் கேலிகளும் ஒருவிதத்தில் ஆழ்மன வலியை அதிகப்படுத்துவன தான். இப்படியாகவும் எங்கள் உரையாடல் இருந்திருக்கலாம் என நான் தேர்ந்தெடுத்த ஸ்டோரிபோர்ட் மீண்டும் கலைந்து வண்ணவடிவ கொப்பளங்கள் வெளிப்பட்டன. ஒரு கணம் தடுமாறினேன். வேண்டாம். இன்றைக்கு இது போதும் இன்னொரு ’மேக்னா’டிக் அனுபவம் எனச் சிரித்தபடி வந்த செந்நிற கொப்பளத்தைக் கலைத்து திரையை மேலே தள்ளிவிட்டு மாற்றினேன். கண்ணைக்கூசும் வெளிச்சம்.
***
அந்த நீளமான அறையைத் தாண்டி அலுவலகத்துக்குள் வந்ததும் இன்று விடுப்பு எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. என்னைத் தாண்டி ஒரு இளம் ஆய்வாளர்கள் கூட்டம் உள்ளே சென்றது. மதியம் ரெண்டு மணிக்கு இவ்வளவு பரபரப்பாக சென்னை டெலிமெட்ரி வளாகம் இருந்ததில்லை. துறைமுகத்தை ஒட்டி புதிதாகக் கட்டப்பட்ட அமைப்பில் ஊட்டி தொலைநோக்கியின் நேரடி கட்டுப்பாட்டு அறையும், தென் தமிழகத்தின் வானவியல் அமைப்பும் இயங்கி வந்தன. இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனின் தரைக்க்கட்டுப்பாடு கூடம் இருந்த கட்டடத்தில் மட்டுமே அத்தனை பரபரப்பு. 2050இல் தொடங்கப்பட்ட இந்த கூடத்துக்கு அடுத்த ரெண்டு வருடங்களில் ஐம்பது வயது.

கூட்டம் இருந்த மைய அறையில் பலத்த கூச்சல். என்னைத் தெரிந்தவர்கள் யாரும் இருந்துவிடக்கூடாதே எனக் கவனமாக நோட்டம் விட்டேன். மேனேஜிங் டைரக்டர் ப்ரித்வி கூட கூட்டத்தில் எங்கோ தென்பட்டார். செய்தி எதையாவது பார்க்காமல் இன்று வந்துவிட்டேனோ?
என் கண்ணாடித் திரை மீது சில வருடங்களுக்கு முன் வீட்டுத் தோட்டத்தில் எடுத்த குடும்பப்படம் பின்புலமாகத் தெரிந்தது. மனைவியின் முகத்தைத் தவிர்க்கப்பார்த்து அவசரமாக லாகின் செய்தேன். நான்கு வாரங்களாக அழுது தீர்த்த கண்கள் மீண்டும் கலங்கின. அறையின் மையத்தில் சத்தம் அதிகமானது. அலுவல் வருவதற்கு இந்த நாளைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடாது என மீண்டும் ஒருமுறை நொந்துகொண்டேன்.
கூச்சலுக்கான காரணம் தெரிந்தது. மிகச் சரியாகச் சொன்னால் ஒரு மணி அளவில் வெளி மண்டலத்தில் இருந்து பெரிய இரும்புக்கோளம் வானில் சுற்றிக்கொண்டிருந்த உலகலாவிய விண்வெளி நிலையத்தில் இறங்கிய பின்னரே ஆரவாரம் தொடங்கியது. வெளுப்பும் பழுப்பும் கலந்த மணல் துகள்கள் அதன் மேல் படிந்திருந்தன. கிட்டத்தட்ட -180 குளிர். ரஷ்யாவும் இந்தியாவும் ஆய்வுக்கூடம் அமைந்திருந்த பகுதியில் இறங்கியிருந்ததால் சென்னை மையக்கட்டுப்பாட்டு அறையிலிருந்து அக்கோளத்தை ஊடுருவிப்பார்த்திருந்தனர். சின்ன அறைக்குள் கரு நிறத்தில் ஒரு பெட்டி தெரிந்தது. அதற்குள் 2023 ஆம் ஆண்டு வாயேஜர் கடைசி முறையாக நம்முடன் தொடர்பு கொண்ட கோளத்தின் பகுதிகள் இருந்தன. அதன் சிறு மூலையில் பளபளப்பான தங்கத்தகடு வட்ட வடிவில் தெரிந்தது. 1977 ஆம் ஆண்டு நாசா குழுவினர் பதிந்து அனுப்பிய படங்கள், குரல்கள், இசை என சகலமும் இருந்தது முதல் ஆச்சர்யமென்றால் மையமாக அதில் பொறித்திருந்த தகடில் ‘இயர் 4800’ எனக் குறிப்பிட்டிருந்தது தான் பரபரப்புக்குப் பிரதானக் காரணம்.
என் தோளை யாரோ தட்டினார்கள். கணினி வழியாக மட்டுமே சந்தித்திருந்த ஆரோக்கியராஜ் மையமாகச் சிரித்தார்.
‘சாரி ஃபார் யுர் லாஸ்’, எனத் தோளை அழுத்தினார்.
ஆரோக்கியராஜ் இத்தனை இளமையாக இருப்பார் என எதிர்பார்க்கவில்லை.
‘ஓகே ராஜ்’
‘இந்த நேரத்திலும் நேரில் பார்ப்பதில் சந்தோஷம் வினய். ரெண்டு மாசம் முன்னாடி கூட பெட்டாரா ஆனதாக சொன்னீங்கல்ல. ரொம்ப கஷ்டமா இருந்தது. ஊட்டிலேர்ந்து போன மாசம் வந்தீங்களா?’
ஊட்டி எனக்கேட்டதும் என் மனம் லேசாகத்துவண்டது. ‘ஒரு மாசத்துக்கு முன்னாடி வந்தா எல்லாம் சரியாகிடுமா’, மகள் மைனா கேட்ட கேள்வி ரெண்டு வாரமாக என்னுள் சுழன்றுகொண்டே இருந்தது.
‘ஆமாம், இப்ப பர்மெனெண்டா சென்னை வந்துட்டேன். உங்க அனாலிஸிஸ் ரிசல்ட்ஸ் எப்ப வருது’, அவர் கேட்ட கேள்வி கொண்டு சென்ற திசைகளில் நான் திரிந்துகொண்டே இருந்தேன். கடந்த ரெண்டு மாதங்களில் நடந்தவை மின்னல் போலத் தோன்றி மறைந்தன. மைனா மைனா என மகளின் பெயரைச் சொல்லி புலம்பிக்கொண்டிருந்த கடந்த சில நாட்களையும். அவள் வீட்டைவிட்டு விலகிச் சென்ற அதிகாலை சூழலும் புகை மூட்டமாக நினைவை குழப்பியது.
‘வினய் சார் என்ன புதுசா கேக்கறீங்க? இந்த இடத்தில் அனாலிஸிஸ் ஒரு தொடர்சங்கிலி தானே’, எனச் சிரித்தார்.
நான் மையமாகத் தலையாட்டிவைத்தேன். ‘தப்பா நினைக்கலைன்னா ஒண்ணு கேட்கிறேன். இப்பவெல்லாம் கேன்சருக்கு பல சிகிச்சை வந்திடுச்சே? மனைவிக்கு ஸ்டெம் செல் டிரீட்மெண்ட் செஞ்சிருக்கலாமே?’
நான் பதில் சொல்லவில்லை. தொடர்ந்து இறப்பிலும் கைவிடப்பட்ட தருணங்களையும் சாத்தியங்களையுமே யோசித்துக் கொண்டிருந்தால் மனம் என்னவாவது? இப்படி எதிர்படுபவர்களிடமெல்லாம் மாட்டிக்கொள்ள வேண்டுமோ என்பது அதைவிட பெரிய உழைச்சலாக இருந்தது.
‘அவங்களால் முடிந்ததெல்லாம் செஞ்சு பார்த்துட்டோங்க. மேக்னாவின் உடம்பு எல்லா டிரீட்மெண்டுக்கும் ஒத்துப்போகலை’
‘பொண்ணோட எதிர்காலத்தை யோசித்து இதிலிருந்து மீண்டு வர வேண்டியதுதான் வினய். மைனா தான அவங்க பேரு?’
ராஜுக்கு பதில் சொல்லிவிட்டு என் சீட்டில் உட்கார்ந்தேன். இப்படிப்பட்ட கசங்களுக்குள் சிக்கக்கூடாது என்பதால் எனக்குள் ஒரு வேலியைப் போட்டுக்கொண்டு ஊட்டியிலேயே இருந்துவிட்டேன் எனவும் யோசிக்கத் தோன்றியது. ஆனால் உண்மை அப்படியல்ல. ஊட்டி ரேடியோ தொலைநோக்கி கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் என் பிராஜெக்டுக்கு வந்தது. அண்டத்தின் தூரமான கோள்களைப் பற்றிய ஆய்வில் ஊட்டி ஆய்வகம் முன்னணியில் இருந்த காலம் முடிந்துவிட்டிருந்தது. ஈர்ப்பலை தொலைநோக்கிகளைக் கொண்டு அண்டத்தின் ஆழங்களைத் துளைத்துப்பார்ப்பதற்கு மனிதன் பல கோள்களை சூரியனுக்கு அருகே நிறுத்தியிருந்தான். கண்ணுக்குத்தெரியாத தகவல்கள் மூலம் அண்டத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும் என்பது எத்தனை நகைமுரண். முழுவதும் தகவல்களின் குவியமாக உலகெங்கும் ஆய்வுகள் நடந்துவந்த காலகட்டம். ஊட்டியின் ரேடியோ தொலைநோகிக்கியைக் கொண்டு செயற்கை கோள்களின் கோணங்களை ஆய்வு செய்ய முடிவு செய்தது என் ஆய்வுக்கு மிகவும் தேவையானது. செரிவு கூட்டியபடி மேலும் மேலும் என திசையின் ஆழங்களுக்குள் ஆய்வு எங்களை இட்டுச் சென்றது. அப்படி ஒரு ஆழத்துள் மனைவியையும் தொலைத்துவிட்டேன். அதுவே என் மேக்னாவையைப் பிரிந்து செல்லக் காரணமாக அமைந்தது. என் பலகீனத்தை மறைக்க நான் ஆய்வுக்குள் ஒளிந்துகொள்வதாக மைனா சொன்னதும் நினைவுக்கு வந்தது.
ஒரு ஏப்ரல் மாதம். ஊட்டியில் ஒரு பின் மாலை மழை நேரத்தில் மேக்னாவிடமிருந்து அழைப்பு.
‘எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு. ப்ளட் டெஸ்டில் சிக்கல் இருக்கலாம் என்கிறார்கள்’ என அவளுக்கே உரிய மெலிதான குரலில் கூறினாள். லேப்டாப்பில் எதையோ தட்டச்சு செய்தபடி நான் கேட்டேன். மழை சத்தத்தில் சரியாகவும் கேட்கவில்லை. எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு என்பதை எல்லாமே சரியாயிருக்கு எனப் புரிந்துகொண்டு மேற்கொண்டு கேட்பதை நிறுத்தியிருந்தேன். கவனச்சிதறலை அங்கிருந்தே உணர்ந்திருந்தவள் மீண்டும் அதைக் கூறவில்லை. இரவு தூங்கப்போகும்போது ஒரு விடுபட்ட விசை போல மீண்டும் ஒலித்தது. அவளுக்குச் செய்தி அனுப்பி நான் கேட்டதாக நினைத்தது சரிதானா என ஊர்ஜிதம் செய்துகொண்டேன். எவ்விதமான குற்றச்சாட்டும் அவளது குரலில் இல்லை. அவளது வழக்கமான குரலில் ஆம் என்றாள். காதலைச் சொன்ன நாளில் கூட அவளிடம் படபடப்பு இருக்கவில்லை. அவள் இறக்கப்போகும் நேரத்தில் கூட இசையை நிறுத்தச் சொல்லி மெல்லமாகத்தான் சொன்னாள். மைனா என்னைக் கத்தும்போது மட்டுமே மேக்னா சற்று படபடப்பானாள்.
‘யு ஆர் எ ஹார்ட்லெஸ் க்ரீச்சர்’ – காலையில் மைனாவிடமிருந்து வந்திருந்த செய்தியில் விழித்தேன்.
எங்கள் மணவாழ்க்கையின் தொடக்கத்திலேயே பிறக்கப்போகும் குழந்தைக்கு மைனா எனப் பெயர் வைக்க வேண்டும் என மேக்னா முடிவு எடுத்திருந்தாள். அவள் வீட்டுத் தோட்டத்தில் நிறைந்திருக்கும் எனப் பாட்டி சொன்னதிலிருந்து அரிதான மைனாக்கள் மீது அவளுக்கு மோகம். அதை எங்கள் முதல் சந்திப்பிலேயே சொல்லிவிட்டாள்.
பல சந்திப்புக்களுக்குப் பின் காலம் கடத்த வேண்டாம் என இருவரும் வெகு நாட்கள் யோசித்தோம். எவ்விதமான முடிவுக்கும் வரமுடியவில்லை. சேர்ந்து வாழ்வது எனப்பிடி கிடைக்கவே எனக்கு சில மாதங்கள் ஆயின. மேக்னா என்னைப் பார்த்ததும் முடிவு செய்துவிட்டதாகப் பின்னர் கூறினாள். மைனாவுக்கு என்னை விட நல்ல அப்பா கிடைக்கமாட்டாள் என முதலிலேயே முடிவு செய்துவிட்டாளாம். காரணத்தை நானும் கேட்கவிலை.
எங்கள் சந்திப்புக்கு முன் அவளது வாழ்வு விசித்திரமானது. சுவாரஸ்யமாகத் தொடங்கிய பலபால் ஈர்ப்பின் கொடும் பிடிப்பிலிருந்து அவள் விலகியிருந்து சில வருடங்கள் கூட ஆகியிருக்கவில்லை. நான் எவ்வித செக்ஸையும் அனுபவிக்காதவன். வெர்சுவல் டூரிசம் சென்ற நண்பர்களுடன் கூட இணைந்ததில்லை. வியட்னாமின் பெயர் தெரியாத குகைகளில் வாழ்ந்திருந்த சில இனக்குழுக்களோடு மேக்னா பயணம் செய்திருக்கிறாள். அவர்களது சமூகத்தில் பழக்கமாயிருந்த பலபால் உறவுகளோடு தன்னைப் பிணைத்திருந்திருக்கிறாள்.
அவள் அருகில் வந்தபோது வெயிலில் அலைந்திருந்த கரும் சுருக்கங்கள் கழுத்திலும் காது மடிப்புகளிலும் தெரிந்தன. கடந்த சில நாட்களாகத் தூங்கியிராத கண்கள். தூரக்கிரகணக் கற்களின கார்பன் கலந்த அமில வாசம் அவள் மீது வீசியது. இப்படியாக என் ஆய்வுக்கழகத்தின் தீவிர கணங்களில் கூட அவள் நுழைந்துகொண்டாள். கரிமங்களை காணும்போது அவள் முகம் முன்னின்று நிற்கும்.
எங்கள் சென்னை வாழ்வு வைரஸ் காலகட்டத்தின் புதிய அலையோடு வளர்ந்தது. தென்கிழக்கு காடுகளிலிருந்து பரவிய காய்ச்சல் காலத்தில் சேர்ந்து வாழத் தொடங்கினோம். பரிட்சார்த்த முறைகளைக் கைவிட்டு மனிதனின் ஆதிவழியில் முயன்று மைனா பிறந்த போது ஓசியானிக் டெட்லி வேவ் எனப்படும் மூளைக்காய்ச்சல் காலம். மைனாவுக்குத் தொடங்கிய வீட்டுப் பள்ளிக்கூடம் மீண்டும் பழைய கொரோனா காலம். பின்னர் அவர்களை விட்டு நான் ஊட்டி சென்றது சீனாவும் கொரியாவும் இணைந்து ரஷ்யா மீது அணு ஆயுதம் உபயோகித்த அணுக்கதிர் அழிவுக்காலம். இவை எங்கள் நெருக்கத்தை அதிகரித்து மட்டுமே இருந்தது. மேக்னாவின் பதின்ம வயது அனுபவங்களிலிருந்து அவள் மீண்டு வருவதற்கு எங்கள் காதல் தேவையாயிருந்தது என நினைத்திருந்த காலம் போய் அவள் இந்தக் காதலுக்காகத்தான் அத்தனை சிக்கல்களுக்குள்ளும் நுழைந்து திரும்பி உள்ளாள் எனத் தோன்றுமளவு உறவு இறுக்கமானது. எனது நாற்பதாவது பிறந்த நாளுக்கு கதையில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த ஜோடிப்பறவை சிற்பம் ஒன்றை எனக்கு அளித்தபோது அது ஊர்ஜிதனமானது. அதைக் கொடுத்தபோது அவள் பத்து வயது குறைந்தவள் போலிருந்தாள். அந்த எல்லைக்குள் நான் இருக்கிறேனா எனச் சந்தேகம் வந்து எனக்குப் பத்து வயது கூடியிருந்தது.
அறை மத்தியிலிருந்து வந்த சத்தம் என்னைச் சட்டென மீட்டது. என்னுடைய வேலை நேரம் தொடங்கும்போது ஆரம்பித்த இந்த ஆரவாரத்தை என் இருபது வருடப் பணியில் எப்போதும் பார்த்ததில்லை. மையக்கட்டுப்பாட்டு அறையின் தின சிக்கல்களைக் கண்காணிப்பது மட்டுமே என் வேலை. அதனால் தங்கத்தகடின் முதல் பார்வையாளனாகவும் நான் இருந்தேன். அருங்காட்சியகத்தின் பழங்கால சிற்பங்களைப் பார்ப்பது போல நாங்கள் அந்த இரும்புக் கோளத்தைப் பார்த்தோம். கடைசியாக வாயேஜர் நம்மைத் தொடர்பு கொண்டது 2023 இல் – கிட்டத்தட்ட 76 வருடங்களுக்கு முன்னர். இன்னும் இரு ஆண்டுகளில் புதிய நூற்றாண்டுக்குள் நுழைய இருந்த சூடு இப்போது பன்மடங்கானது.
கிட்டத்தட்ட ரெண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகான சமூகத்திலிருந்து வந்திருக்கும் ஒரு செய்தி திடுமென எங்கள் தினச் செயல்பாடுகளை அர்த்தமற்றவை ஆக்கியது. காலப்பயணம் பற்றிய சந்தேகங்கள் எல்லாம் நொடியில் காணாமல் ஆனது. வேறு ஒரு உயிர் நம்மைத் தேடி வாசல் வரைக்கும் வந்துவிட்ட சந்தோஷம் இருந்தாலும், பலரும் பயந்தது போல நம்மைவிட அறிவார்ந்த சமூகம் நம்மை வந்து அழிக்கும் சாத்தியங்களும் எங்கள் ஆய்வகத்தில் இடையே பயத்தை உண்டாக்கியிருந்தது. நாம் அறியாத ஒன்று கதவைத் தட்டுகிறது. தங்கத் தகடைப் பார்க்கும்போது எனக்கு இப்படி ஒரு மந்திரக்கரம் நம்மை கைநீட்டி அழைப்பது போலத் தோன்றியது. இதோ உன் வீட்டருகே வந்துவிட்டேன், என்னைத் திறந்துபார். உன்னைத் தூங்காமல் செய்திருந்தத் ஆகப்பெரிய பிராஜெக்ட் இப்போது அர்த்தம் ஏதும் இல்லை.
நான் மிகவும் நரகமான நாட்களிலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்தேன். மேக்னாவின் இழப்பு வாழ்வின் இருண்ட பகுதிகளை எனக்கு காட்டியிருந்தது. கிட்டத்தட்ட என் வாழ்வின் அனைத்து சந்தோஷங்களும் முடிந்தன. பெரிய பிடிப்பாக இருக்க வேண்டிய மைனாவும் விட்டுப்போயிருந்தாள். யாருக்கும் எவ்விதமான பதில்களையும் கொடுக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கவில்லை. படு பாதாளத்தில் இருந்ததால் என் இயல்பு எல்லாவற்றிலிருந்து தூர ஓட வைத்திருந்தது. என்னுடைய போக்கு நண்பர்களையும் சொந்தங்களையும் தள்ளி வைத்தது. எல்லாரையும் தவிர்த்தேன். போக இடமில்லாமல் தினமும் அலுவலகத்துக்கு வந்துகொண்டிருந்தேன். வேலையும் மிக இயந்திரத்தனமானது. இந்த நொடி வரை.
‘இந்த கோல்டன் ரெகார்ட் பத்தி கேள்விபட்டிருக்கேன். நூற்றி இருபத்து ஐந்து வருஷம் முன்னாடி அனுப்பியது ஆனால் இப்படி நம் வாழ்நாளில் டீல் செய்ய வரும்னு நினைக்கல’
ஆய்வகத் தலைவர் எங்கள் குழுவிடம் இணையவழி பேசிக்கொண்டிருந்தார்.
‘முதலில், இந்த ரெக்கார்ட் நாசாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும். இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனின் இந்திய விங்குக்குள் வந்திருப்பதால் அவர்களால் உடனடியாக உரிமை கொள்ள முடியாது. 2050இல் போட்டுக்கொண்ட ஸ்பேஸ் அலாட்மெண்ட் ஆக்ட் படி நமக்கு முன்னுரிமை உண்டு. ஆனால், நீண்ட நாட்களுக்கு நாம் உரிமை கொள்ள முடியாது. 2050க்கு முன்னர் நடந்தவற்றின் மீது இந்த ஆக்ட் செல்லுபடியாகாது என நம்மிடமிருந்து பறித்துவிடுவார்கள். அதற்குள் முடிந்தளவு டேட்டாவை நாம் எடுத்தாக வேண்டும்’
’115 படங்கள், நம் குரல்கள், பல மியூசிக் ஆல்பம் தவிர வேற என்ன அதில் இருக்கு?’ , ஆய்வக தினசேவை அலுவலர் கேட்டார்.
‘இப்போ வந்திருக்கும் களத்தில் ரெண்டு பகுதிகள் இருக்கு. நாம் அனுப்பிய பழைய ரெக்கார்ட் ஒரு இடத்திலும், 4800 எனக் குறிப்பிட்டிருக்கும் பெட்டி இன்னொரு அறைக்குள்ளும் இருக்கு. முதல் கட்ட சோதனை செய்வதற்கு முன் கெமிக்கல் டெஸ்டிங் செய்யணும். நம் இண்டர்னேஷனல் ஸ்டேஷனில் இறங்கியிருக்கு என்றால் அவர்களுக்கு உலக மக்களின் நன்மைக்கு ஸ்கேன் செய்ய வேண்டும் எனும் நம்முடைய பாலிசி தெரிந்திருக்கு என்று அர்த்தம். இல்லாவிட்டால் நேரடியாக பூமிக்கு அனுப்பியிருப்பார்கள். ஆனால் கெமிக்கல் டெஸ்டிங்க் செய்வது நம் கடமை. டெலிமெட்ரி டீம் ஊட்டியில் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்கிறார்கள்.’
‘நம் பூமிக்கு இதனால் பாதிப்பு ஏற்படலாம் என நாசா சுற்றறிக்கை விட்டிருக்கே?’,
‘ஏன்னா, பால்வெளியில் பூமி இருக்கும் இடம் குறித்து தெளிவா கோல்டன் ரெக்கார்டில் சொல்லி இருக்கு. அது மட்டுமில்லாம, நம் கெமிக்கல் காம்போஷிசன், காற்றின் அளவு, மண்ணிலும் நீரிலும் காற்றிலும் கலந்திருக்கும் ரசாயனங்கள், நம் உடலில் ரசாயனத்தின் அளவு என எல்லாமும் இருக்கு. இதுவே ஒரு பெரிய ஈர்ப்பா இருக்கலாம்..ஃபேடல் அட்ராக்ஷன்..’
‘அழிக்க வேண்டும் எனும் நோக்கம் இருந்தால் இந்நேரம் முடித்திருப்பார்கள். நாம் இருக்குமிடம் தெரிந்து திரும்ப வந்திருக்கிறது என்றால் நம்மால் புரிந்துகொள்ள முடியாத ஒரு சேதி இருக்கு. அதாவது, இப்போ புரியாதது’.
4800 எனக்குறிப்பிட்டிருந்த பெட்டிக்குள் லேசர் முறைப்படி முதல் கட்ட நோட்டம் நடந்தது. அதன் மூலக்கட்டுப்பாட்டு செய்திகளை படிக்கத் துவங்கும் முன்பே ஏதோ ஒரு விதத்தில் என்னுடன் இது தொடர்புடையது என்பதை உணர்ந்துகொண்டேன். மீண்டும் மீண்டும் ஒரே கூட்டு எண்களும் எழுத்துகளும் வந்தபடி இருந்தது. அதன் அர்த்தம் விளங்காவிட்டாலும் எனக்கு மட்டும் புரியக்கூடிய செய்தியாக அது இருக்கும் எனத் தோன்றியது.
கிபி 4800 – கே2-18b கோள்
வானை நோக்கி கொப்பளங்களாக அமைந்திருந்த கூடாரங்கள் அக்கோளத்தின் பல புண்கள் போலத் தெரிந்தன. இரவு ரோந்துப்பணிக்கு வந்திருந்த ஃப்ளோட்ஸ்கள் கூடாரங்கள் மேல் பறந்துகொண்டிருந்தது அவளது திரையில் மின்மினிப்பூச்சிகளாகத் தெரிந்தன. ஒவ்வொரு கூடாரத்திலிருந்தும் சிறு வெளிச்சத் தீற்றுகள் மினுங்கியபடி இருந்தன. காற்று குறைவான அக்கோளின் தரைதளத்தில் நரம்பு மண்டலங்கள் போல அமில ஆறு ஓடிக்கொண்டிருந்தது.
புது குழுவில் இருந்த முதல்கட்ட ஆய்வாளர்கள் மேக்னா வேகமாக விசைப்பலகையை இயக்குவதை ஆச்சர்யமாகப் பார்த்தனர். மேக்னா தான் அவர்களது முதன்மை ஆய்வாளர் என்பதை அவர்களால் நம்ப இயலவில்லை. கே82 ஆய்வுக்கூடத்திலும் வெளியிலும் அவளது கால வெளிப்பயணிக்கு சில கடிதங்கள் எனும் மெய்வெளிக்கோப்பு மிகவும் பிரபலம். கே82 கோளின் பிரதான மையக்கட்டுப்பாட்டு அறையில் பிற கிரகங்களிலிருந்து வரும் செய்திகளைப் பிரித்தாய்வதில் அவளுக்கு நிகரில்லை.
அப்படித்தான் நீலக்கோளின் தங்கத்தகடு வந்தடைந்தது. அதிலிருந்த செய்திகளை பிரிப்பது அவளது முதல்கட்ட வேலையாக இருந்தது.
‘தங்கத்தகடிலிருந்து முதலில் பாடல்களையும் இசையையும் கண்டுபிடித்தது நீங்க தானா?’
கேள்வி கேட்ட பதின் வயதுப்பெண்ணை மேக்னா கவனிக்கவில்லை.
‘அது இசை என்பதெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. உன் வயது தான் இருக்கும். நமக்கு வரும் பல தகடுகளும் செய்திகளும் கணித சமன்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு இருக்கும். முதல் முறையாக மிகச் சிக்கலான கணக்குகள் கொண்ட ஒலிக்குறிப்புகளை நான் தங்கத்தகடில் தான் படித்தேன். துல்லியம் எனச் சொல்ல முடியாது. ஆனால் அக்கடினமான கணக்கு கொண்ட ஒலிக்குறிப்புகளுக்குப் பின்னால் ஒரு அழகு இருந்தது, பல பிசிறுகள் இருந்தன. அவற்றைச் செய்த உயிர்களின் வாழ்வுச்சக்கரம் எப்படி இருக்கும் என்பதில் எனக்கு முதல் ஆர்வம் வந்தது’
‘அங்கிருந்துதான் நாம் அப்படிப்பட்ட புது சமூகங்களை நகல் செய்தோமா?’
‘செய்தோம். அதனால் நாமும் மனித உயிர் போல. போல தான். பல வித்தியாசங்கள் இருக்கு. மொதல்ல அங்கே கவனி’
மேக்னா காட்டிய திசையில் விண்ணிலிருந்து பல ஒளிக்கற்றைகள் கீழிறங்கின. சம தூரத்தில் இருந்த இரண்டு பெரிய நட்சத்திரங்களிலிருந்து பல வண்ணங்களில் நிறப்பிரிகை நடந்துகொண்டிருந்தது.
‘இங்கிருந்து தான் அவை தெரியும். எனக்கு இன்றைக்கான கண்காணிப்பு வேலை இருக்கு. கேள்விகள் அப்புறம்’, என்றாள்.
மேக்னாவின் கண்காணிப்பு அதிக நேரம் எடுத்துக்கொள்ளாது. கூடாரப்பகுதி கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. அவை தொடர் சங்கிலி போலச் சென்று முடிவடையும் இடத்தில் பச்சையும் பழுப்புமாக மலைத்தொடர் உண்டு. அதைத் தாண்டி இக்கோளின் ஆதிக்குடிகள் வாழ்ந்திருப்பதும் அவற்றைச் சுற்றி மின்கடத்தி வலைகள் கொண்டு தடுத்திருப்பதும் கே82யின் நீண்ட வரலாற்றுக்கதை. எல்லா வரலாற்றுக்கதையைப் போலவே அவற்றுக்கு சொல்பவர்க்கு ஏற்ப சாயப்பூச்சு உண்டு. ஆனால் பூர்வ குடி உயிர்களுக்குச் சொந்தமானது இக்கோள் என்பதற்கு சான்று தேவையில்லை. மையக்கட்டுப்பாடு அமைப்பான பொன்கலம் தினமும் படித்து வரும் பொந்தகடுகளுக்கு முடிவில்லை. அவை கே82வில் உருவானதல்ல.
மேக்னா மின்குமிழைத்திருப்பி ஒரு ஒலிக்கோப்பை இணைத்துவிட்டாள். பாய்க்கப்பல் காற்றை உள்வாங்கி குப்பென வீசியது போல காற்றில் ஒரு சத்தம், சந்தோஷத்தை மட்டுமே தரக்கூடிய சிறு குழந்தையின் சிரிப்பு, இரு எதிர்பாலினங்கள் கூடிடும் முயங்கோசை, இதற்கு நடுவே அறிவித்தல் போல உடுக்கை ஒலி, கூடவே ஒரு தேவாலையத்தின் எதிரொலியில் வாசிக்கப்படும் பாரடைஸ் லாஸ்ட் வரிகள் – குறைந்தபட்சம் நூறு முறையேனும் மேக்னா கேட்டிருக்கும் ஒலித்தொடர்.
Good by it self, and Evil not at all.
He sorrows now, repents, and prayes contrite,
My motions in him, longer then they move,
His heart I know, how variable and vain
Self-left. Least therefore his now bolder hand
Reach also of the Tree of Life, and eat,
And live for ever, dream at least to live
அவள் உணரக்கூடிய ஒன்று இவ்வொலி அமைப்பில் இருந்தது. சில வருடங்களாகக் கேட்டு வருகிறாள். அதை பிரித்து பொருள் கொண்டு அறியக்கூடிய உபாயம் அவளிடம் இல்லை. அர்த்தம் விளங்குவதற்கு முன்னரே கடத்தப்படும உணர்வு போல அவ்வொலியியல்பு இருந்தது. பல ஒலி நூற்றாண்டுகளைக் கடந்து நீல நிறத்திலிருந்து இன்று செந்நிறமாக மாறிவரும் கோளின் திசைமாணியைக் காட்டி நிற்கும் இந்த பொன் தகடு அவளது மனதுக்கு நெருக்கமானது. தனக்கான செய்தி ஒன்று அதில் இருக்கிறது என்பதை அவள் பல வருடங்களாக உணர்ந்து வந்திருந்தாலும் அதை அறியக்கூடிய இணைப்புகள் அவளிடம் உருவாகவில்லை.
பல கோள்களிலிருந்தும் திசைவாங்கி கொண்டுவரும் தகவல்களை பிரித்து சேர்த்து கோர்த்து புது உயிர்களையும், அறிதலியக்கிகளையும் உருவாக்கும் குழுவில் மேக்னாவைத் தெரியாதவர்கள் கிடையாது. முதல் பொன் தகடிலிருந்து உருவான முதல்கட்ட சமூகத்தின் உயர் நிலைப்பிரதிகளின் கச்சிதமானக் கலவையிலிருந்து அவளது நிரை உருவானது.
சிறு கையசைவில் அன்றைய மாணவர்களை அடுத்த அறைக்குப் போகச் சொன்னாள். ‘ என்னைத் தவிர இங்க இன்னும் நிறைய இருக்கு. அதையும் கத்துக்கொள்ளுங்க’, என அவர்களுக்குப் பின்னால் கதவை மூடினாள்.
His heart I know
எனச் சுற்றி வந்த ஒலியை அவள் நீட்டியும் குறைத்தும் மீண்டும் மீண்டும் கேட்டாள். அதைத் தடை செய்யும் விதமாக திரை உயிர் கொண்டு மையத்திலிருந்து செய்தி வந்திருந்தது.
இன்னும் உன் தேடல் நிற்கவில்லையா?
இல்லை நிற்காது என்று தான் நினைக்கிறேன்.
உன்னிடம் வந்து சேரும் செய்திகளில் இல்லாத புதுமை அந்தப் பொன் தகடில் என்ன இருக்கு?
..
மேக்னா!
..
உன் தேடல்களைக் கொண்டு மையக்கட்டுப்பாட்டில் சிறுசுகள் புது கேலிகளை உருவாக்கி வருகின்றனர்.
தெரியும்.
உன் நிரையில் ஒவ்வொரு வெர்ஷனுக்கும் ஒரு உயிரி இப்படி விநோதமாக உருவாகும்.
நீ நேரடியாகவே சொல்லலாம். ஆம், கிறுக்கி போல, தொலைந்தவர்கள் போல, ஒரு பிழை.
ஆம் பிழையே தான்.
மேக்னா உடனடியாகத் துண்டித்தாள்.
**
இது எதற்குமே அர்த்தம் இல்லை ஜான். நம் சமூகத்தின் நிரை வரிசை பல கோள்களிலிருந்தும் கொண்டு வரப்படும் புதுப் புது தகவல்கள் கொண்டு உருவாக்கப்பட்டாலும் அவற்றில் எல்லாம் ஏதோ ஒரு குறை உள்ளது. நம் தொழில் நுட்பத்தில் தவறு இல்லை. கிடைக்கும் மூலத்தகவல்கள் ஒரு மாபெறும் சோப்பு குமிழியைப் போல இருக்கின்றன. பார்க்கப் பார்க்க பரவசம், ஆனால் நிழல் சமூகமாக உருவானது மொத்தமும் உள்ளீடற்ற காலி வடிவங்கள் மட்டுமே. நம்மிடம் செய்தி கொண்டு வந்து சேர்க்கும் ஒரு சமூகம் எப்படி ஒரு முதிர்ந்த சமூகமாக உருவாகி இருக்க முடியும் எனும் கேள்வி எப்போதும் என்னை அலைக்கழிய வைத்தது. பல தகடுகளை எவ்விதமான ஆராய்ச்சி செய்தாலும் அதிகாரமும், அழித்தலும், சேதாரமும் மட்டுமே மூலப்பொருளாகக் கொண்டு அண்டம் முழுவதுமாக பல உயிரிக்கள் சமூகங்களாக உருவாகி உள்ளன. ஒரு கட்டத்தில் என் ஆய்வுகள் எல்லாமே என்னை மரத்துப்போனவளாக மாற்றியது ஜான். நீலக்கோளில் இருந்து வந்த செய்திகளில் கல்பகாலம் குறித்து சில பாடல்கள் இருந்தன. காலம் என்பது எப்படி ஒரு சுழற்சி எனக்கட்டமைக்கும் விதமாக யுகம் யுகமாக அமைத்து அவற்றுக்கு ஓர் சுழற்சி முறையில் முதிர்த்த சமூகமாக மாற்ற முடியும் எனக் காட்டியிருந்தனர். அவர்களது சமூகம் அப்படி உருவானது என்பதற்கு நேரடி ஆதாரம் அவர்களது தகடுகளில் இல்லாதபோதும் கூட இச்சாத்தியம் என் முன் பேருண்மையாக நின்றது. எதற்கும் அர்த்தமில்லை. மேக்னா, நீ செய்வது எல்லாமே வியர்த்தம் எனச் சொல்லாதவர்களே இல்லை. எனக்கு முன்னால் இருந்த மேக்னாக்கள் பின்னால் வந்த மேக்னாக்கள் என எல்லாருமே பிழைகளாக மட்டுமே பார்க்கப்பட்டனர். ஒரு சிறு பிழை. கோடிக்கணக்கான மின்கடத்திகளும் குவாண்டம் துகள்களும் கொண்டு பிகோ நொடி தோறும் பேரண்டம் முழுவதுமாக தகவல்களைக் கொண்டு புது அர்த்தங்களை உருவாக்கி வரும் மையக்கட்டுப்பாட்டு அமைப்பின் ஆழத்தில் எதோ ஒரு பிழை உள்ளது. அதுதான் ஒவ்வொரு சமூகத்தில் உள்ளும் ஒரு புதிர்பாதையை உருவாக்குகிறது. அப்புதிர் பாதை அறியக்கூடியதல்ல, உணரக்கூடியது. அதை உணரும் ஒருத்தி மேக்னாவாகிறாள். இது எனக்கே நான் சொல்லிக்கொண்ட சமாதானம். அச்சுழற்சியில் என்றோ ஒரு நாள் தோன்றும் மேக்னாவால் சமூகத்தின் ஆதி உண்மையை தொட்டுவிட முடியும். அதுவரை இத்தேடல் நிற்காது. ஆனால் உண்மை என நம்பும்படியான அர்த்த மடிப்புகளை என் நிரை உயிரிகளுக்குத் தந்துவிட்டேன். அது கூட தற்செயலாக நடந்தது தான். ஏதோ ஒன்று எங்கோ இருக்கிறது – அது நம் ஆடிப்பிம்பம். அதில்லாமல் நம் இப்போதைய நிலை இல்லை என உணரத் துவங்கும் ஒவ்வொரு மேக்னாவும் அந்த மூலத்தைத் தேடிக்கொண்டிருக்கிறாள். இப்போதைய நிலை அதற்கு முந்தைய நொடியின் நீட்சி எனும்போது இந்த தேடலே கூட ஒரு சங்கிலி தான் எனத் தோன்றுகிறது. புதிர்பாதையின் ஓட்டத்தில் ஒரு கணம் நின்று திரும்பிப்பார்க்கும் அவ்வுருவம் என் கனவில் வராத நாளில் இல்லை ஜான். நான் சொல்லும் ஒவ்வொன்றும் உனக்கு எந்தளவு அர்த்தமாகிறது என எனக்கு விளங்கவில்லை. ஆனால் அண்டத்தை துழாவும் நம் திசைவாங்கியின் கரங்கள் என்னைத் தான் எங்கோ தேடிக்கொண்டிருக்கின்றன. அதை நானும் எங்கோ உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரு திசை நோக்கி ஓடும் நிரைக்கு எதிர் திசையில் திரும்பி நின்றபடி.
*
மெல்ல இந்த மேக்னாவின் வெளி உலகம் சுருங்கி உள் உலகம் அவள் ஆய்வு செய்த அண்டமளவு விரிந்தது. அப்படி ஆகவேண்டும் என்று தான் அவளும் விரும்பினாள். பல மேக்னாக்களின் பிழைகளில் இந்த மேக்னாவின் பிழை வித்தியாசமானது. தங்கத் தகடிலிருந்து நகல் செய்து உருவாகும் சமூகம் ஒரு நிழல் பொம்மை சமுகமாக மட்டுமே இருக்க முடியும் என்பதை அவள் உணர்ந்த போது, நரை கூடி கிழப்பருவம் எய்தி விட்டாள். அச்சமூகத்தின் உயிர் ஏதோ ஒரு சிறு சூச்சுமமாக உள்ளது.
தனக்கு முன்னால் தெரிந்த திரையில் நிரைகளின் தகவல்களை அவள் பார்த்தாள். சிலர் மிகவும் ரசனையோடு உருவாகி இருந்தனர். சத்தமிடாத சிலர். கையில் குழந்தைகள், வாகனங்களில் வயதானவர்கள் என மையக்கட்டுப்பாட்டுக் கழகத்தில் புது வரிசைகள் உருவாகி இருந்தது. தங்கத்தகடு காட்டிய உலகின் பல மாதிரிகள் அங்கே அணிவகுத்திருந்தனர். அந்த அறையில் பல மொழிகளில் ஒலிகளும், விசித்திரமான சிரிப்பொலிகளும், பலூன்களை மட்டும் கையிலேந்தி ஓடும் குழந்தைகளும், நீண்ட கடல்களும், கடல் அடியில் சீறிப்பாயும் விலங்குகளும், வட்டமாக உட்கார்ந்த கூட்டத்தின் மத்தியில் ஒரே ஓலியை இழுத்துப்பாடும் ஒருவரும், அவ்வொலியை நீட்டியும் குறைத்தும் இசைக்கும் வாத்தியங்களும், வண்ணக்குடுவைக்குள் பெரும் காடு, வரிசையாக அணிவகுத்த வண்டிகள், தேர், கார், பறக்கும் தகடுகள். மேக்னா இதுவரை பார்த்திராத எதுவும் அங்கு இல்லை.
அதே சமயம் அந்த நிழல் உலகம் முழுமையான வார்ப்பும் அல்ல. ஆழ ஆழப்புகும்போது எங்கோ ஒரு பிழை. அனுமானிக்க முடியாத சிறு இழை வித்தியாசம் இருக்கத்தான் செய்தது. பலப் பல வருடங்களாகச் செய்துவரும் இந்த புது ஆக்கம் மிகப்பெரிய சலிப்பை உண்டாக்கி உண்டாக்கியிருந்தது. கே82 மைய அதிகாரங்களுக்கு இது வெற்றி தான். மேக்னாவுக்கு அல்ல.
அவள் இதை சொல்லும்போதெல்லாம் தலைமை ஆய்வாளர் ஜான் கூர்ந்து கவனிப்பார். கவனிப்பது போன்ற உணர்வுகொம்புகளை அவர் உருவாக்குவார் எனச் சொல்லலாம். சிரிப்பார். ஆமோதிப்பார். அவரது தீர்க்கமானப் பார்வை மேக்னா சொல்வதைத் தாண்டி எங்கோ போயிருக்கும். கே82 சந்தத்திற்கு ஆடப் போயிருக்கும்.
ஆனால் மேக்னாவுக்குத் தெரியும். கே82 ஆய்வுகளில் சில செய்திகளை விண்ணுக்குத் திரும்ப அனுப்பும் சாத்தியங்கள் இருப்பதை அவள் கவனித்திருந்தாள். இது ஒரு சுழற்சி. கே82 அமைப்பின் மையத்தில் அப்படி ஒரு சுழற்சி இல்லாமல் இன்றிருக்கும் கோளின் மாற்றங்கள் சாத்தியமல்ல.
ஏதோ ஒரு மேக்னா விண்ணோக்கிச் செல்லும் அச்செய்தியின் தன்மையை மாற்றி அமைத்தாள். மாற்றமுடியாத தகவல்களை தங்கத் தகடிலிருந்து பெற்றுக்கொண்டு, மாற்றக்கூடிய புது அமைப்புகளை அதில் சேர்த்தாள். அவளது சந்தேகங்கள், கற்பனைகள் எல்லாமே அதில் பதிவாயின. மின் இயக்க பெட்டகங்களாக உருவான அந்த பேழை புது எழுத்துகளால் உருவாகி இருந்தது. விசேஷ எண்களால் பாதுகாக்கப்பட்ட அந்த எழுத்துகளின் தீர்வும் எண் சமன்பாட்டில் இருந்தது. அவளது கேள்விகளும் குழப்பங்களும் மிகவும் அடிப்படையானவை என்பதை உணர்ந்திருந்தாள். ஆனால் அவற்றைப் பகுப்பதற்கான அறிவு கே82 சிஸ்டத்தில் இல்லை. நீலக்கோளத்தில் இருந்து வந்திருந்த தங்கப்பெட்டகத்தின் மையம் அவளுக்குத் தேவையான பதிலால் உருவானது. அப்புகைப்படங்களில் தெரியும் மனிதர்கள் ஏன் சிரிக்கிறார்கள், குழந்தையின் அழுகை கூட அருகில் இருப்போருக்கு சிரிப்பாக மாறுவது ஏன், புகைப்படங்களில் அழகின் ஆதாரம் என்ன, இரு மனிதர்கள் கையைப் பிடித்து க்கொண்டு ஒருவர் கண்களை மற்றொருவர் பார்த்திருக்கும்போது முகத்தில் ஜொலிக்கும் உணர்வுக்கு என்ன பெயர், ஓடும் குதிரைகளின் கணுக்கால் சக்தியும் தசைகளின் இயங்குமுறையை விதித்தவர் யார், ஒருவர் பேச நூற்றுக்கணக்கானர் கேட்கும்படியான அறிவு பரிமாற்றத்தின் அடிப்படை சட்டகம் என்ன, மண்ணில் முளைக்கும் மரங்களில் காய்க்கும் மரங்கள் காலத்தின் ஆதி ரேகைகளை விதைகளாக எப்படி கொண்டுள்ளன, அதை அழிக்காமல் முதலில் உணர்ந்தவர் யார், முத்தத்தில் உதடுகளின் ஸ்பரிசம் கொடுக்கும் சந்தோஷத்தின் அளவை எது தீர்மானிக்கிறது..
மேக்னா முழு முனைப்போடு சந்தேகங்களைச் சேர்த்துகொண்டே போனாள்..
4800 என அவள் குறிப்பிட்ட பேழையின் முகப்பை அலைச் செய்தியாக மாற்றியமைக்கும் மைய அறைக்குள் இணைப்பதற்கு முன்னர், கடைசியாக, ‘மேக்னா ஐ லவ் யூ’ என நீலக்கோளத்திலிருந்து செய்தி அனுப்பியவர் யார்; அதன் அர்த்தம் என்ன எனக் குறித்துவிட்டு பேழையை மூடினாள்.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

ஆழமான கதை. பல வருடங்கள் இடம்பெறும் கதை.
அத்துடன் பல உலகங்களை காட்சிப்படுத்தும் கதை.
இணை உலகங்களும் அவற்றை கட்டமைக்க முயலும்
மேக்னா க்களும். நீலக் கோளின் புதிர் பாதை புரியாத ஒரு வினாவிற்கு இட்டுச் செல்கிறது
1947,2098,2099,4800 என்ற வருடங்கள் வந்தாலும் 4800 அசத்தல். வானவியலில், கோள் ஆய்வுகளில் முக்கியமான ஒரு எண். அதை திறமையாகpபயன்படுத்தி இருக்கிறீர்கள்.
மௌனியை நினைத்துக் கொண்டேன்.” எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?
குடும்பம் ஒரு எந்திரம். பழுதுபட்டுப் போன ஒரு பாகத்தினால் அது நின்று விடுவதில்லை. அதற்குப் பிரதி பாகம் தானாகவே உருவாகிவிடும். வாழ்க்கை ஒரு உன்னத எழுச்சி.’
4800=2^7*3″5^2 என்றும்
சொல்லலாம்.
நிழல் சமூகம் ,துகள் காதல்
இரண்டும் மௌனியையும் குவாண்டப் பிணைப்பையும் நினைவிற்கு கொண்டு வந்தன.
சிறப்பான புனைவு.