
ஆஸ்திரேலியாவில் பார்டர்-கவாஸ்கர் ட்ராஃபி (BGT) நடந்துகொண்டிருக்கிறது. இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான, பிரபலமாகிவரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர். உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் முக்கிய பகுதியும்கூட. இந்திய அணியில் மற்றவர்களோடு, ஆஃப் ஸ்பின்னர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர் மற்றும் இடதுகை சுழல்வீரர் ரவீந்திர ஜடேஜா. முதல் மூன்று போட்டிகள் முடிந்த நிலையில், அனுபவ ஸ்பின்னரான அஷ்வினுக்கு ஒரு போட்டியிலேதான் ஆட வாய்ப்பு அமைந்தது. அதுவும் கேப்டன் ரோஹித் ஷர்மா தலையிட்டு கேட்டுக்கொண்டதின்பேரில், பிங்க்-பால்(Pink ball) டெஸ்ட்டில். அஷ்வினுக்கு ஒரு அயர்வு அப்போது உண்டாகியிருக்கவேண்டும். ’அணியில் நான் ஒரு நேரடி ஸ்பின் சாய்ஸ் இல்லையோ? – இனி வரும் இரண்டு போட்டிகளில் எனக்கு வாய்ப்பு தரப்படுமோ, இல்லையோ?’ ஸ்திரமற்ற நிலை. சிந்தித்து உறுதியான முடிவுக்கு வந்திருக்கவேண்டும். கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்குத் தனியாக விளக்கிவிட்டு, அவருடன் வந்து அவசரமாக பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் என் கதை முடிவுக்கு வந்துவிட்டது என நிதானமாக அறிவித்து அதிர்ச்சி அளிக்கிறார் அஷ்வின். மேற்கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்கிறார். இந்தியா திகைக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் ஏனைய கிரிக்கெட் தேசங்களிலும் முன்னாள் வீரர்களிடையே, கிரிக்கெட் பத்தியாளர்களிடையே பரபரப்பு. அஷ்வினா? தொடரின் நடுவிலா? சில யூகங்கள், பார்வைகள், விமர்சனங்கள். ’உங்களிடமிருந்து வினோதமான பந்துவீச்சை மேலும் எதிர்பார்த்துக் காத்திருக்கையில், திடீரென ஒரு கேரம் பாலை (Carrom ball)ப் போட்டு எல்லோரையும் காலி செய்துவிட்டீரே!’ என நகைச்சுவை தெறிக்கக் குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர் மோடி, அஷ்வினின் கிரிக்கெட் ஓய்வுக்குப் பின்னர் அவருக்கு எழுதியுள்ள பாராட்டுக் கடிதத்தில்.

இந்தியா திரும்பி இளைப்பாறியதும், ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் இப்படிச் சொல்கிறார் அஷ்வின். ”இதை ஒரு ரிடையர்மெண்ட் எனச் சொல்ல விரும்பவில்லை. வேறு பொருத்தமான வார்த்தை கிடைக்காததால் சர்வதேச ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று சொல்லும்படி ஆயிற்று” என்கிறார். ’கிரிக்கெட் எனும் மாபெரும் விளையாட்டில் சம்பந்தம் வைத்துக்கொள்ளாமல், அதிலிருந்து நான் ரிடையர் ஆகவே முடியாது. ஏதோ ஒரு வகையில் கிரிக்கெட்டிலேயேதான் நானிருப்பேன்’ எனவும் உறுதி செய்கிறார். ’இத்தனை ஆண்டுகள் நாட்டிற்காக தொடர்ந்து ஆடி, பல சாதனைகளை நிகழ்த்திய நிலையில் மனதில் ஒரு நிறைவு உண்டு. யார் மீதும் கோபமோ, வருத்தமோ இல்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரராக என் பங்களிப்பு முடிவுக்கு வந்துள்ளது. என் கிரிக்கெட். என் வாழ்க்கை. என் முடிவு.. அவ்வளவுதான். அதற்காக என்னில் கிரிக்கெட் தீர்ந்துபோய்விட்டது என்று அர்த்தமில்லை. ஐ.பி.எல் போன்று வெவ்வேறு உள்நாட்டு லீக் போட்டிகளில் என் தொடர் பங்களிப்பை நீங்கள் காணமுடியும்’ என்றார் ஸ்பின் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஷ்வின்.
நூற்றாண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் உலகில்தான் இதுவரை எத்தனை எத்தனை சாதனையாளர்கள் இருந்திருக்கிறார்கள்? பேட்ஸ்மன்கள், பௌலர்கள் என நினைத்தாலே மலைக்கவைக்கும் பங்களிப்புகளை நிகழ்த்தியுள்ள இந்திய மற்றும் அயல்நாட்டு வீரர்கள். ஆனாலும், கிரிக்கெட் சாதனை என்றாலே ரசிகனுக்கு முதலில் சிறந்த பேட்ஸ்மன்களின் முகங்கள்தான் நினைவுக்கு வரும். பௌலர்கள் என்னதான் புகழ்பெற்றிருந்தாலும், கொஞ்சம் தாமதமாகத்தான் நினைவில் தட்டுவார்கள்! நூற்றாண்டுகாலமாகப் பழகிப்போன ஒரு சிந்தனையோட்டம் அது.
ரவிச்சந்திரன் அஷ்வின், பெயரே போதுமானது, இந்திய துணைக்கண்ட பிட்ச்சுகளில் ஆடவரும் அயல்நாட்டு பேட்ஸ்மன்களின் வயிற்றைக் கலக்க. சுழல்பந்துவீச்சில், அவரிடமிருந்து அனாயாசமாக வெளிப்பட்ட அசத்தல் வியூகங்கள், ஜாலங்கள்தான் காரணம். அணியின் இடதுகை சுழல்வீரரான ரவீந்திர ஜடேஜாவுடன் சேர்ந்து ஏகப்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை சரித்து இந்தியாவுக்குப் பல டெஸ்ட் வெற்றிகளைத் தந்தவர் அஷ்வின். ஜடேஜா – அஷ்வின் ஸ்பின் ஜோடியைக் கடந்தல்லவா எதிரணிகள் ரன் சேர்க்கவேண்டும்? மேட்ச்சை ஜெயிக்க முற்படவேண்டும்? இந்திய சூழலில் இதெல்லாம் சாத்தியமா, என்ன ஒரு சோதனை.. என நினைத்து நினைத்து மிரண்ட நிலையில் இந்திய மண்ணில் சிக்கித் தவித்த பேட்ஸ்மன்கள் அந்நிய டெஸ்ட் அணிகளில், பலருண்டு.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைப் பட்டியல் எனச் சுருக்கமாகப் பார்த்தால், இந்தியாவில் அதிக பட்ச டெஸ்ட் விக்கெட்களை விழுங்கியவர் என்கிற வரிசையில் 619 விக்கெட்களைக் கைப்பற்றிய அனில் கும்ப்ளேக்கு அடுத்தபடியாக உயர்ந்து நிற்பவர் அஷ்வின். 537 விக்கெட்டுகள் அவரது டெஸ்ட் உலக சாதனை. கபில்தேவிற்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்த தேர்ந்த ஆல்ரவுண்டர் என நிறுவும் வகையில் 6 டெஸ்ட் சதங்களையும் அடித்துக் காட்டியவர். அதில் வெஸ்ட் இண்டீஸில் அவர் விளாசிய இரண்டு சதங்களும் அடங்கும். 50-ஓவர், மற்றும் டி-20 சர்வதேசப் போட்டிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள, இந்தியாவுக்காக மொத்தம் 765 அந்நிய வீரர்களை அஷ்வின் காவு வாங்கிய கணக்கும் கிடைக்கிறது. இந்தியாவின் இன்னொரு சிறந்த சமகால ஆஃப் ஸ்பின்னரான ஹர்பஜன் சிங் சாய்த்த 707 சர்வதேச விக்கெட்டுகளையும் தாண்டிய சாதனை நிலை இது.
ரவிச்சந்திரன் அஷ்வின் எனும் பெரும் சாதனைக் கதை எங்கே, எப்படி ஆரம்பமானது? சின்ன வயதிலிருந்தே கிரிக்கெட் எனும் விளையாட்டு தன்னை மயக்கிவிட்டிருந்ததாக உணர்கிறார், நினைவுகூர்கிறார். ஆட்டத்தை ஆசையாகப் பார்ப்பதுமட்டுமா? அதுபற்றிப் பேசுவது, கேட்பது எல்லாமே நிறைய சந்தோஷத்தைத் தந்திருக்கிறது என்கிறார். கிரிக்கெட் பக்தரான, வேகப்பந்து வீச்சாளராக லீக் கிரிக்கெட்டில் ஆடிய அவரது தந்தை என்.ரவிச்சந்திரனுக்கு, தான் ஒரு கிரிக்கெட் வீரனாக உச்சம்பெற வேண்டும், நாட்டுக்காக ஆடவேண்டும் என்கிற ஆசை இருந்திருக்கிறது. அது நிறைவேறாது போனதில் மனதில் ஏற்பட்ட சோர்வும், நிலைத்த ஏக்கமும், தன் ஒரே பிள்ளையையாவது எப்படியும் ஒரு கிரிக்கெட் வீரனாக ஆக்கிப் பார்த்துவிடவேண்டும் என்கிற உத்வேகத்தில், ஆசையில் கொண்டுபோய் விட்டிருக்கிறது. ஆரம்பத்தில் கிரிக்கெட்பற்றி தெரிந்திராத, ஆர்வம் காட்டாத அஷ்வினின் அம்மாவும் ஒருவழியாக நிலமையைப் புரிந்துகொண்டு, தன் கணவரோடு சேர்ந்து மகனை அவனின் ஆசை, இலக்கை நோக்கி நகர்த்த முற்பட்டார். பெற்றோரின் இடைவிடாத ஊக்குவிப்பு, ஒத்துழைப்பு சிறுவன் அஷ்வினுக்கு உற்சாகம் தந்தது. கிரிக்கெட் எனும் மாய விளையாட்டு, ஒன்பது வயதிலிருந்தே அப்பாவோடு சேர்ந்து வீட்டில், -அப்போதைய அபூர்வமான- கேபிள் டிவியில் பிடித்தமான வீரர்களின் ஆட்டத்தைப் பார்த்து ஆனந்திக்கவைத்தது. பள்ளிப் பருவத்தில் தினம் தினம் மைதானத்துக்குப் போய் பேட்டிங், பௌலிங் எனப் பயிற்சி எடுக்கவைத்தது. 10 வயதுக்குட்பட்டோரின் அணியில் நன்றாக ஆடவைத்து பயிற்சியாளர்களின் கவனத்தையும் ஈர்க்கவைத்தது. இப்படிப் பல ஆரம்பப் படிநிலைகளை, அஷ்வின் மெல்ல, மெல்லக் கடந்து தன் கனவு காட்டிய வழியில் உயர்ந்துவந்திருக்கிறார். அவ்வப்போது சோதனைகளும் குறுக்கிட்டு அயரவைக்கப் பார்த்திருக்கிறது. சிறுபிராயத்தில் ஏற்பட்ட உடல் ஆரோக்யப் பிரச்னை, ஒருகட்டத்தில் பேட்ஸ்மனாக ஆடிக்கொண்டிருந்த அஷ்வின், அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் பூஜ்யத்தில் அவுட் ஆனதால் அணியில் தேர்வு செய்யப்படாத அதிர்ச்சி என்பதுபோன்ற பல நெருக்கடிகளைத் தாண்டவேண்டிவந்தது. இவ்வளவு நடந்தும், அக்கம்பக்கத்தின் விமர்சனம் தொடர்ந்தும், அஷ்வினுக்கு பெற்றோரின் தீவிர ஆதரவு தொடர்ந்தது. கிரிக்கெட்டின் மீது ஏற்பட்டிருந்த மோகம், அதிலேயே மனதை நிலைக்கவைத்து, மீண்டும் மீண்டும் போராடி வாழ்க்கை எனும் விளையாட்டைத் தொடரவைத்தது. ’கிரிக்கெட் எனக்குத் தீராத சந்தோஷத்தைத் தந்தவாறே இருந்தது’ என்று நினைவுகூர்கிறார் அஷ்வின். தன் மகனுக்கு சிறுவயதில் மூச்சுத் திணறல் இருந்ததை மனதில் கொண்டிருந்த அம்மா ஒரு நாள், “ஃபாஸ்ட் பௌலிங் வேண்டாண்டா. நீ ஸ்பின் போடு!” என்றாராம். அம்மா காட்டிய வழியில் பையன் முன்னேற, நாட்டிற்குக் கிடைத்தான் அஷ்வின் எனும் ஸ்பின் வீரன்!

நேத்தன் லயன் போன்ற சமகால பிரபல ஸ்பின்னர் இருந்தும், அஷ்வின் என்பவர் மட்டும் ஏன் அப்படி ஒரு தனித்துவமாககத் தோன்றுகிறார் ரசிகர்களுக்கும், வல்லுனர்களுக்கும்? காரணம் இருக்கிறது என்பது ஆழ்ந்து நோக்கினால்தான் தெரியும். டெஸ்ட் ஆட்டமொன்றில், எதிரணியின் ஒரு பார்ட்னர்ஷிப் அமைந்து பயமுறுத்திவரும் நிலையில், இந்திய கேப்டன் ஒரு பக்கத்தில் இதுவரை வீசிய பௌலரை மெல்லத் தூக்கிவிட்டு, அஷ்வினிடம் பந்தைக் கொடுக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? பேருக்கு வழக்கமான ஆஃப் ஸ்பின்னைப் போட்டுவிட்டு நகர்ந்துவிடமாட்டார் அவர் என்பது தெரியும். ஓவரின் ஒவ்வொரு பந்திலும் எதிராளிக்கு ஒவ்வொரு ‘விளையாட்டு’ காட்ட முயல்வார். வழக்கமான ’ஆஃப் ப்ரேக்’ பந்துகளைத் தாண்டி, இடையிடையே ஒரு லெக் ப்ரேக், ஒரு கேரம் பால் (Carrom ball) எனப் போடுவார். பந்து போட பேட்ஸ்மனை நெருங்குகையில் பந்தைப் பற்றியிருப்பதில், சுழற்றுவதில் அவர் காட்டும் மாற்றம், வேகத்தில் ஏற்ற, இறக்கம், பந்தை ஒருவழியாக விடுவிக்கையில் காட்டும் லாவகம் என ஏதேதோ மாயாஜாலங்கள் செய்து, பேட்ஸ்மனைக் குழப்பி விக்கெட்டைத் தூக்கிவிடும் சாமர்த்தியம் அஷ்வினிடம் பிரகாசிக்கும். அப்படி அடிக்கடி நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். முக்கியமான விக்கெட்டை அப்படி அவர் தூக்கிவிட்டாரென்றால், அடுத்த முனையில் மற்றொரு பௌலரின் முயற்சியும் எளிதாகிவிடுகிறது. அல்லது அஷ்வினே தொடர்ந்து மூன்று, நான்கு, ஐந்து என விக்கெட்களைக் கொத்தாக சாய்த்துவிடுவதும் உண்டு. ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் என 37 முறை அவர் முழங்கியது இப்படித்தானே! மேட்ச்சில் பத்து விக்கெட்டுகள் என இரண்டு முறை சாதித்தவரும் ஆயிற்றே. அஷ்வினின் அதீத சுழல் திறன் என்பது, எதிரணிகளின் இடதுகை மற்றும் வலதுகை பேட்ஸ்மன்களைப் பாரபட்சமின்றி நொறுக்கித் தள்ளியதில் நன்றாக வெளிப்படுகிறது: வீழ்த்திய 537 டெஸ்ட் விக்கெட்களில் – 268 இடதுகை ஆட்டக்காரர்கள், 269 வலதுகை வீரர்கள். தராசில் நிறுத்தித் தாக்கித் தாக்கிக் காலிசெய்தாரா அஷ்வின்?
இந்திய பிட்ச்சுகளில் அஷ்வினின் அபார வெற்றிக்கு, அவரோடு அடுத்த முனையில் துணை நின்று சாதித்த இடதுகை சுழல் வீரர் ரவீந்திர ஜடேஜாவும் முக்கிய காரணம். இதைப்பற்றி தெளிவாக இருந்த அஷ்வின், அவரைப் பாராட்ட ஒருபோதும் தவறியதில்லை. “ஜடேஜாவின் திறன்கண்டு நான் வியக்கிறேன். பொறாமைப்படுகிறேன். அவரின் திறனை என்னால் விஞ்சமுடியாது. எனினும், அவரால் நான் உந்தப்படுகிறேன்..” என மனம் திறந்து சக சாதனையாளரைப் பாராட்டிய நேர்மையாளர் அஷ்வின்.
முன்னாள் பயிற்சியாளரும் இந்தியாவின் உச்ச சாதனை ஸ்பின்னருமான அனில் கும்ப்ளே, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற ஆடுகளங்களில் அஷ்வினை எல்லா போட்டிகளிலும் சேர்த்திருக்கவேண்டும். களம், சூழலுக்கு ஏற்றபடி மாற்றி சிந்திப்பவர் அஷ்வின். தன் சுழல்பந்துவீச்சை அதற்கேற்ப மாற்றி அமைத்துக்கொண்டு செயல்படும் லாவகம் அறிந்த அபூர்வமான பௌலர். ஏனோ அவரை அயல்நாட்டு பிட்ச்சுகளில் நமது அணி சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை எனக் கவலைகொள்கிறார்.

கிரிக்கெட் ஆட்ட நிகழ்வுகளைப் பொறுத்தவரை, தன் மனதில் பட்ட கருத்துக்களை உடனே சொல்லிவிட என்றும் அஷ்வின் தயங்கியதில்லை. அதனால் கிரிக்கெட் போர்டில் சிலரின் மனத்தாங்கலுக்கு உள்ளாக நேருமா, கிரிக்கெட் பத்தியாளர்கள், முன்னாள் ஜாம்பவான்கள் எல்லாம் என்ன சொல்வார்களோ என்றெல்லாம் நேரத்தை வீணடிப்பதில் நம்பிக்கையில்லை. ’ரூல் என்றால் ரூல்தான்!’ என நேர்கோட்டில் அவர் பயணித்ததை, அந்த 2019 ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸிற்காக ஆடியபோது அவர் செய்த காரியம் வெளிச்சம்போட்டுக் காண்பித்ததே! பௌலிங் முனையில், அஷ்வின் பந்து போடும் முன்பே, க்ரீஸிலிருந்து அநியாயமாக ஜோஸ் பட்லர் முன்னேறியதைத் தவறென தண்டிக்கும் விதமாக பட்லரை ரன் அவுட் செய்ததால் நிகழ்ந்த சர்ச்சை, கிரிக்கெட் ரசிகர்களோடு, பத்தியாளர்களையும் ஒரு சேர சீண்டிவைத்தது அன்று. கோபப்பட்டு சீறிய பட்லரோடு சில முன்னாள் சர்வதேச வீரர்களும் சேர்ந்துகொண்டு, ’ இது தகுமா, இது முறையா? இது தர்மந்தானா! கிரிக்கெட்டின் புனிதத்தையே இப்படி சிதைத்துவிட்டாரே அஷ்வின்..’ என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்தார்கள். ’இப்படியும் அவுட்டாக்கலாம் என ஆட்ட விதி இருக்கையில், ஏன் செய்யக்கூடாது? பந்துபோடும் முன்பே, அதர்மமான முறையில் எதிர்முனையை நோக்கி முன்னேறும் பேட்ஸ்மனுக்கு ஏன் உபரி சலுகை கிடைக்கவேண்டும்? ரூல்படி அவுட் செய்ததில், கிரிக்கெட்டின் புனிதம் எங்கே கெட்டுப்போயிற்று !’ என விமரிசனம் செய்தவர்களைத் திருப்பி விளாசியவர் அஷ்வின். 2022-ல் இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடந்த ஒரு-நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில், இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா பந்து வீசப்படும் முன்பே பௌலிங் க்ரீஸை விட்டுப் பாய்ந்ததற்காக, சார்லீ டீனை (Charlie Dean) ரன் –அவுட்டாக்கியதன் பின்னணியில், ”நான் மட்டும் அல்ல. இதோ அப்படிச் செய்த இன்னொருவரும் இருக்கிறார். பெயர் தீப்தி ஷர்மா!” என்று விமர்சகர்களை கவனிக்கச்சொல்லி, சீண்டி, ’பௌலிங்-எண்ட் ரன்-அவுட் சர்ச்சை’யை மங்காது பார்த்துக்கொண்டார் அஷ்வின். அவர் களத்தில் ஆடுகையிலோ, கிரிக்கெட்பற்றிப் பேசுகையிலோ, சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் இருந்ததில்லை!
அஷ்வினுக்கு சதுரங்க ஆட்டத்திலும் ஆர்வம் அதிகம். அதில் தென்படுகிற, அதன் அங்கமே ஆகிற லாவகங்களை, சாதுர்யக் காய்நகர்த்தல்களை கிரிக்கெட்டிலும் புகுத்தப் பார்த்தாரோ ! கிரிக்கெட் எனும் மாபெரும் ஆட்டத்தின், குறிப்பாக அவரது கலையான ஸ்பின் பௌலிங்கில் மரபுவழி நுணுக்கங்களை அங்கீகரித்ததோடு, நவீன விளையாட்டின் விளிம்புகளில் மேலும் மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள்பற்றி சிந்தித்தவண்ணமே இருந்தவர். புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டவர். ’மேலும் மேலும் ஏதாவது செய்ய முயற்சித்துக்கொண்டே இருந்த, கிரிக்கெட்டின் என்றென்றைக்குமான மாணாக்கன் அஷ்வின்’ என அவதானிப்போர் உண்டு. இதனாலேயே, ‘ப்ரொஃபஸர் ஆஃப் ஸ்பின்’ – என்றொரு பட்டமும் சிலரிடமிருந்து அவரை வந்தடைந்திருக்கிறது.
”எனக்குள் ஒரு சிருஷ்டிப் பக்கம் உண்டு. ஆழ்ந்து சிந்திக்கும் இன்னொரு பக்கமும் உண்டு. அதனை சிலசமயங்களில் மற்றவரோடு பகிர்ந்துகொள்ள முயற்சிக்கையில், அதற்கான ஒத்திசைவை நான் பெறுவதில்லை. அது என் கிரிக்கெட் பாதையில் ஒரு வகையான தடைதான்..” என்று அங்கலாய்க்கிறார் அஷ்வின். ஆனால் அது, அவரது கலையின் மேல்நோக்கிய விரிவை, அது காலப்போக்கில் அவருக்கு உவந்தளித்த அரும் வாய்ப்புகளை நிறுத்துவதில் போய் முடியவில்லை என்பது கண்கூடு.

எப்போதும் எதையும் கற்றுக்கொள்ள ஆர்வம்காட்டி வாழ்பவர். சோதனைக் காலங்களிலிருந்தும் எதையாவது கற்றுக்கொள்ள முனைபவர் அஷ்வின். தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவுக்கு தேர்வு ஆகையில் ஹிந்தி தெரியாததால், ஏனைய அணிவீரர்களோடு தமிழர்கள் அளவளாவுதலில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுப்பேசுகிறார் ஒரு இடத்தில். இந்தியாவுக்காகத் தேர்வான முன்னாள் தமிழ்நாட்டு வீரர்கள் பலர் இப்படிச் சிக்கித் தவித்திருக்கிறார்கள். தொழில்ரீதியான அவர்களது முன்னேற்றத்தையும் இது பாதித்திருக்கலாம் என்கிறார். தமிழ்நாட்டு வீரர்களின் இத்தகைய சங்கடங்களுக்கு, வட இந்திய வீரர்கள் பலருக்கு சரியான படிப்புப் பின்புலம் இல்லாததும், ஆங்கிலம் தெரியாததும் ஒரு காரணம் எனக் கவனித்திருக்கிறார்! இவ்வாறான பிரச்னைகளைத் தவிர்க்கவே தான் ஹிந்தி ’ப்ராத்மிக்’ வகுப்பில் சேர்ந்து படித்ததாகவும், உறவினர்களில் ஹிந்தி தெரிந்த சிலரோடு அவ்வப்போது கொஞ்சம் பேசிப் பழகிக்கொண்டதாகவும் சொல்கிறார். இந்தியாவுக்காக ஆடுதல், அதில் உச்சநிலை அடைதல் எனும் தன் ஒரே இலட்சியத்திற்காக பலவாறாக சிந்தித்து, செயல்பட்ட வீரர். தீவிர முனைப்பு, கடுமையான உழைப்பு கைவிடவில்லை. கை மேல் பலன் தந்திருக்கிறது.
500 விக்கெட் எனும் சாதனைக்கோட்டைத் தாண்டியதற்காக அவருக்கு சென்னையில் அளிக்கப்பட்ட பாராட்டுவிழாவில் பேசுகையில், 2008-10 வாக்கில் ஆரம்ப ஐ.பி.எல் தொடரில் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளையும், அதை அளித்தோரையும் நினைவுபடுத்திக்கொண்டார் அஷ்வின். இந்திய கிரிக்கெட் போர்டின் மற்றும் ஐ.சி.சி.யின் முன்னாள் தலைவரான என்.ஸ்ரீனிவாசன், முன்னாள் இந்திய வீரர் கே.ஸ்ரீகாந்த், சி.எஸ்.கே. கேப்டன் எம்.எஸ்.தோனி, சி.எஸ்.கே.யின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் ஆகியோரைக் குறிப்பிட்டு நன்றிசொல்லத் தவறவில்லை. ”இப்படி எத்தனையோ பேர்களின் முயற்சிகள், உதவிகளினால்தான், இப்படி ஒரு உயரத்தைக் கிரிக்கெட்டில் அடையமுடிந்தது” என்றார்.
தன் சிறுபிராயத்தில், இந்திய துவக்க ஆட்டக்காரராக தமிழ்நாட்டு வீரர் சடகோபன் ரமேஷை டிவி- யில் பார்த்துப் பரவசப்பட்டதாகச் சொல்கிறார். ’வஸீம் அக்ரம், ஷோயப் அக்தர் போன்ற பௌலர்களையும் அவர் அலட்சியமாக ஆடியது மகிழ்ச்சியாய் இருந்தது. அவர்தான் என் சிறுவயது ஆதர்சம், ரோல் மாடல்! இது அவருக்குத் தெரியுமோ என்னவோ, தெரியவில்லை!’ எனச் சொல்லி சிரித்த அஷ்வின், ”வாழ்க்கையில், இந்திய ஜெர்சியை ஒரே ஒரு நாளாவது அணிந்து மைதானத்தினுள் இறங்கி ஆட வாய்ப்பு கிடைத்தால்போதும்” என அப்போது மனதில் ஏக்கம் ஏற்பட்டது என நெகிழ்கிறார்.
இங்கிலாந்தின் கௌண்ட்டி கிரிக்கெட் சேம்பியன்ஷிப்பில், ஸ்ர்ரே, வொர்சஸ்டர்ஷைர், நாட்டிங்காம்ஷைர் ஆகிய அணிகளுக்காக ஆடிய அனுபவமும் அஷ்வினுக்கு உண்டு. 2008-ல் சென்னை சூப்பர் கிங்ஸில் ஆரம்பித்து இதுவரை ஐந்து ஐ.பி.எல் அணிகளில் பங்களித்திருக்கிறார். சி.எஸ்.கே, ரைஸிங் பூனே சூப்பர் ஜயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை. 2025 சீஸனில் மீண்டும் சி.எஸ்.கே அணிக்குத் திரும்பியிருக்கிறார். தூள்கிளப்புவார் என ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
இந்தியாவுக்காக டெஸ்ட் அணியில் ஆடிக்கொண்டிருக்கையிலும், தொடர்களுக்குப் பின், தமிழ்நாடு ப்ரிமியர் லீக் (TNPL) ஆட்டங்களிலும் கலந்துகொண்டு ஆட அவர் தவறியதில்லை. தமிழ்நாட்டின் முன்னேறிவரும் இளம் வீரர்களோடு அவ்வப்போது கலந்துபேசி, ஆட்ட நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்து ஊக்குவித்தவாறிருக்கிறார் அஷ்வின்.
அவரது அப்பா என்.ரவிச்சந்திரனால் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படும் ’ஜென் நெக்ஸ்ட் கிரிக்கெட் இன்ஸ்ட்டிடியூட்’ -இல் கற்றுக்கொள்ளும் சிறுவர்களுக்கு மெண்ட்டர்(mentor) அஷ்வின்தான் என்று தெரியவருகிறது. ஆர்வமாகக் கிளம்பி வரும் அடுத்த தலைமுறை இளசுகளை சிறுவயதிலேயே இனங்கண்டு ஊக்குவிப்பதில் அவருக்கு எப்போதும் ஒரு ஆர்வம்.
தன் சர்வதேச கிரிக்கெட் ஓய்வுபற்றிய அறிவிப்போடு, தன்னோடு ஆடிய இந்திய வீரர்களில் ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி, புஜாரா, ரஹானேபற்றி நன்றியறிதலோடு குறிப்பிட்டார் அஷ்வின். பிறிதொரு சமயத்தில் புதுப்புயலான யஷஸ்வி ஜெய்ஸ்வாலோடு தன் நெருக்கம்பற்றிக் குறிப்பிட்டதும் உண்டு. கூடவே, தன் கிரிக்கெட் வாழ்வின் ஒரு வருத்தம்பற்றியும் சொல்ல மறக்கவில்லை. என்னவாம்? ’பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஆட வாய்ப்பில்லாமல்போய்விட்டதே!’
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

இப்படிப்பட்ட ஒரு ஆளுமையை நம் தமிழ் நாடு அரசு சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!
கருத்துக்கு நன்றி