ஆதித்ய ஸ்ரீநிவாஸ் கவிதைகள்

மாயச்சொல்

சொல்லை மாயச்சொல்லாக்கும்
திரவியத்தை
வீட்டிலேயே வைத்துவிட்டேன்
வெகுதூரம் வந்தாயிற்று
வானம் என்ற சொல்
வெறும் வானமாக இருந்தது
வனம் வெறும்
காடாக இருந்தது
மழைக்கோ
நட்சட்த்திரங்களுக்கோ
நீர், ஒரு‌ மினுப்பு
என்பது தாண்டி
வேறு அர்த்தம் ஏதுமில்லை
கண்ணில் பட்ட
ஒவ்வொரு பொருளுக்கும்
ஒரு சொல்லிருந்தது
ஒரு சொல்லுக்கு
ஒரே பொருளிருந்தது
சொல் வெறும் சொல்லாக
இருந்தது
பறவை
மரம் இலை
மண்
வெயில்
இசை
உழைப்பு
கண்ணீர்
ஒரு கிலோ
இரண்டு கிலோ
எல்லாம் அப்படிஅப்படியே
ஒரு கிலோவுக்குத்
தேவையான சொல்லைக்
குடுத்து
ஒருகிலோ சொல்வாங்கி
எங்கும் வழிதொலையாமல்
வந்தது அவ்வளவு
ஆசுவாசம்
என் வீட்டை நெறுங்குகையிலேயே
அதன் நறுமணம் தெரிந்தது
ஆம் திரவியக்குப்பி உடைந்து
வீடே சிதறியிருந்தது
கதவைப்போலிருந்த ஒன்றைத் திறந்தபோது
புகைமூட்டத்தினூடே
சொல் எனும் அர்த்தம் கொண்ட
சொல் சொல் எனும் பொருளிழந்து
நின்றது
என்னைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றது
ஒளியாண்டு தூரம்‌ கடந்து
சொல் பிறந்தழியும்
கருந்துளைக்குள்


அசையும்‌ மலர்கள்

தராசின் ஒரு பக்கம்
மட்டும் எடை வைத்தால்
பார்க்க சகிக்காமல்
தொங்கிப்போகுமல்லவா?
கொடுத்துப் பெறவும்
பெற்றபின் கொடுத்தாலும்
பாதகமில்லை எனக்கு
பணம்
மதிப்பு
மரியாதை
வெற்றுப்‌புகழ்ச்சி
கொடுத்ததற்கு இணையான அன்பு
சால்பின் வரைத்தெல்லாம் வேண்டாம்
உதவிக்கிணையான உதவி போதும்
கொடுத்து வாங்கி உயிர்த்திருப்போம்
இப்படியாக
நானின்றி என் அணுக்கள்
எதுவும் அசையா
யாருக்காகவும்
உங்கள் அணுக்கள்
உங்கள்‌ பாடு

மலர்மட்டும் மலர்கிறது
ஏதுக்கு எதற்கென்றில்லாமல்


பைத்தியப்பாதைகள்

உன்னை நினைத்துத்தான்
எழுதினேன்
ஆனால் எப்படியோ
உன்னைப்பற்றியல்லாததாய்
ஆகிவிட்டது

சொற்களின்
பைத்தியப்பாதைகளுக்கு
அத்தன்மையுண்டு
தனிமையான காடொன்றின்
தன்மை


புன்சிரிப்பு

ஒரு அந்தியில்
அந்திக்கு
விடைகொடுப்பதைத்தவிர
செய்வதற்கொன்றுமில்லை
ஒரு இரவில்
இத்தனை இருளும்
வானத்தினதா நிலத்தினதா என
சிலாகிப்பதைக்காட்டிலும்
செய்வதற்கொன்றுமில்லை
இப்படியே
புலரி
பகல்
பொழுதுகள்
பொழுதுகள்.
தொடுவான் நோக்கி
சிறகடிக்கும் புள்
பொழுதினை காலத்தினுள்
காலத்தை அகாலங்களுக்குள்
இழுத்துச்செல்கிறது


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ஆதித்ய ஸ்ரீநிவாஸ் கவிதைகள்”

Leave a Reply to கலியபெருமாள் வீராசாமிCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.