- ஸ்கின்ஷிப் – பகுதி 2
- ஸ்கின்ஷிப் – பகுதி 1
- ஸ்கின்ஷிப் – பகுதி 3
மூலம் : யூன் சோய்
தமிழாக்கம்: மைத்ரேயன்

கொரியாவில் ஒரு நாள் காலையில், என் சகோதரன் சி-ஓவும் நானும், கருஞ்சிவப்பு நிறத்தில் அழுத்தப்பட்ட கம்பளியால் செய்த எங்கள் மேலங்கியை அணிந்து கொண்டு, பள்ளிக்கூடம் போவதாகப் பாவனை செய்யக் கிளம்பினோம். குலுங்கும் புத்தகப் பைகளுடன் பள்ளிக்கூடத்துக்கு நடந்து செல்லும் மற்ற மாணவர்களோடு சேர்ந்து கொண்டு மெயின் ரோடுக்கு சென்றோம். கதவுகள் மூடியிருந்த ரெஸ்ட்ராண்டுகளின் முகப்பு ஜன்னல்களில் உணவுப் பட்டியல்கள் ஒட்டப்பட்டிருந்தன- கத்தி நூடில்ஸ்! ரத்த சாஸேஜ்! எருது எலும்பு சூப்!- அவற்றைத் தாண்டி, கூண்டுகளுக்குள் அடைபட்ட இரண்டு நாய்கள் இருந்த காலிமனையைத் தாண்டிப் போனோம். அம்மாக்கள் வீட்டு ஜன்னல்களில் தலையை நீட்டி தெருவில் செல்லும் குழந்தைகளிடம் உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருந்தனர். கடைக்காரர்கள் தங்கள் விற்பனைப் பொருட்கள் மீது மூடியிருந்த தார்ப்பாய்களைத் தூக்கி எடுத்து அவற்றைப் பார்வைக்குக் கொண்டு வந்தனர், தங்கள் அடர்த்தியான மூங்கில் துடைப்பங்களால் தூசிகளைத் தள்ளத் தொடங்கினார்கள். ஒரு தள்ளுவண்டி, சக்கரங்களில் முன்னோக்கி நகர்ந்தது. இரு தொனி கொண்ட ஊதல் ஒன்றின் ஒலியை எங்கள் பின்னிருந்து கேட்டோம், திரும்பிப் பார்த்தால் அங்கே எங்கள் அப்பா, தன் மேலங்கியின் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு, கைகளை அங்கிப் பையில் வைத்தபடி நின்றார். நாங்கள் அவரைத் தாண்டிக் கவனமாக காலெட்டி வைத்துப் போகையில், “அப்பறம் பார்க்கலாம்,” என்று தன் கவர்ச்சிகரமான இங்கிலிஷில் சொன்னார். அவர் அத்தனை வசீகரமாகத் தெரிந்தார். கூட்டம் நெரியும் இடங்களில் – பஸ்கள், கடைத் தெருக்கள் இத்தியாதி – பாட்டிமார்கள் அவர் கையைத் தட்டி அதை அவரிடமே சொல்வார்கள்.
நான் சாலையில் சற்று மெதுவாக நடந்தபடி, எங்கள் அப்பா மெயின் ரோடிலிருந்து எந்தத் தெருவில் திரும்புகிறார் என்று கவனித்தேன். வலமா, இடமா. அவர் இடப்பக்கம் திரும்பினார். அப்படியானால் அவர் வேலைக்குப் போகிறார் என்று அர்த்தம், இன்னும் சில மணிகளுக்குத் திரும்பி வர மாட்டார். சி-ஓவின் கையைப் பிடித்துக் கொண்டு, அவனை என்னோடு இழுத்துக் கொண்டு நாங்கள் வந்த வழியே திரும்பிப் போனோம், என் பள்ளித் தோழர்கள் ஆச்சரியத்தோடு எங்களைப் பார்த்துத் திரும்பி, அழைத்தார்கள், “சோ யான் ஆ! சி-ஓ யா! என்ன ஆச்சு? எதை மறந்துட்டீங்க?”
அடுக்ககத்தில், நான் மூச்சு வாங்கிக் கொண்டேன், எங்கள் அம்மாவைக் கூப்பிட்டேன்.
அவள் சமையலறையிலிருந்து வெளியே வந்தாள், “அவர் வேலைக்குப் போயிட்டாரா?”
“போனார்.”
துணியில் கட்டிய சதுரப் பெட்டிகளை அவற்றின் மறைவிடங்களிலிருந்து நாங்கள் வெளியே இழுத்தபோது சி-ஓ வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் கம்பிகளால் ஆன வண்டியில் அவற்றை ஏற்ற உதவினான், நாங்கள் ஒரு பக்கவாட்டுத் தெருவிலும், ரயில் தண்டவாளங்களைத் தாண்டியும், பாதசாரிகளுக்கான காங்க்ரீட் பாலத்தின் அடியிலும் அதைத் தள்ளிக் கொண்டு போன போது அது மேலிருந்து கீழ் வரை ஆடியது, எங்கள் ஊருக்குள் நாங்கள் நடந்து போனது அதுதான் கடைசித் தடவை என்றில்லை, ஆனாலும், அது கடைசித் தடவை என்பது போல நான் அனைத்தையும் உற்றுக் கவனித்துக் கொண்டேன். கருக்கிய ஊசிக் கணவாய் மீன், வேகவைக்கப்பட்ட பட்டுப் புழு ஆகியவற்றின் வாடைகள் அங்கு தள்ளுவண்டிகளிலிருந்து வீசின: மஞ்சள் பூவுடன் காய்க்கும் பறங்கியின் வலுவான கொடிகள் காலி மனையின் உடைந்த செங்கற்சுவற்றூடே நீட்டிப் படர்ந்திருந்தன.
ஊரின் மறுகோடியில் இருந்த அஞ்சல் அலுவலகத்தில், வண்டியிலிருந்து எல்லாவற்றையும் கீழிறக்கினோம். முகப்பு மேஜையின் பின்னிருந்து வந்த கிழவர், எங்கள் பொருட்களைப் பெட்டியிலிட வந்தார். அவரை அவசரப்படுத்தவோ, அவருக்கு உதவி செய்யவோ முடியவில்லை. ஒரு பெட்டியின் எடையை அவர் குறைத்த போது நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம், கத்திரிக் கோலைப் பயன்படுத்தும்போது தாடையைத் திறந்து மூடியபடி இருந்தார், மூதாட்டியான அவருடைய மனைவி, அவரையோ, அவருடைய வேலையையோ திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. வெளியில், மைய அலுவலகத்திலிருந்து ஓர் இளைஞன் புகை விடும் தன் ஸ்கூட்டரில் பெரும் ஓசையோடு வந்து சேர்ந்ததை, அவள் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அன்றைய அஞ்சலுக்கான பொருட்களைச் சேகரிக்க, அலுவலகத்துக்குள் அவசரமாக விரைந்தபோது, அந்த வண்டியைச் சாய்த்து நிறுத்தி விட்டு, அணைக்காமல் விட்டதால் நடைபாதையருகே அது சத்தத்தோடு உதறியபடி நின்றது.
சி-ஓ தனக்கான ஸ்கூட்டருக்கென்று பெரிய திட்டங்கள் வைத்திருந்தான். முதலில் ஒரு மோட்டர் சைக்கிள், பிறகு ஒரு கார். அந்த மாதிரி விஷயங்களை அவன் சர்வ நிச்சயத்தோடு சொல்வான். எங்களிருவரிடையே அது ஒரு பெரிய வித்தியாசம். சி-ஓவின் புத்தி எப்போதும் எதிர்காலத்திலேயே இருந்தது. சிறுவனாக இருந்தபோது கூட, அவன் திட்டம் போட்டு, சேமிப்பதில் ஏதோ இயற்கைக்கு முரணாகத் தெரிந்தது- என்னவாவது செய்து ஒரு காமிக் புத்தகத்தையோ, ஒரு குறிப்பிட்ட பிராண்ட் ஸ்நீக்கர் காலணிகளையோ வாங்கி விடுவான்.
சி-ஓவின் எதிர்காலம். ஒருக்கால் அதுதான் இறுதியில் என் அம்மாவுக்கும் உந்துதலைக் கொடுத்ததோ. அதில்லாமல் நாங்கள் கொரியாவிலேயே என்றென்றைக்குமாய் இருந்திருப்போம், பிறகில் நம்பிக்கை வைத்துக் கொண்டு- அப்படித்தான் சொலவடை போயிற்று- வரப் போகிறவை நல்லபடியாக அமையும் என்ற எதிர்பார்ப்போடு. முன்பொரு காலம் இருந்திருக்க வேண்டும், என் அம்மா அப்பாவை அப்போது நேசித்திருந்திருப்பாள், அது எனக்கு உறுதியாகப் பட்டது. இந்த நிச்சயம் எனக்கு இருக்கக் காரணம் அம்மாவின் இழுப்பறையில் நான் பார்த்திருந்த ஒரு வண்ணப் படம். அந்த ஒளிப்படத்தில், மஞ்சள் ஃபோர்ஸித்தியா புதர் வேலி ஒன்றின் செடுக்கைத் தாண்டி என் அம்மா வருவதற்கு உதவுவதற்கு என் அப்பா தன் கையை நீட்டுகிற காட்சி இருந்தது. அவருடைய முகத்தில் கிளர்வுணர்வும், சுயதிருப்தியும் பரவித் தெரிகின்றன. அவள் தலைமுடி நீண்டுள்ளது.
ஒருக்கால் எங்கள் அம்மா, இந்த முறையும் மற்றவை போன்றதே என்று சொல்லிக் கொண்டாளோ என்னவோ. அந்தத் தடவைகளில், திடீரென்று ஒரு முடிவுக்கு வந்து விட்ட கிளர்வுடன், எங்களுக்கு அவசரமாக வீட்டில் என்ன பொறுக்கிக் கொள்ள முடியுமோ அவற்றை எடுத்துக் கொண்டு, அந்த அடுக்ககத்தை விட்டு பறந்தடித்துக் கொண்டு கிளம்புவோம், மெயின் சாலையில் ஒரு டாக்ஸியைக் கை காட்டி நிறுத்தி ஏறுவோம். எங்கள் வட்டாரத்தில் டாக்ஸிகள் அத்தனை அபூர்வமில்லை என்றாலும், டாக்ஸி சவாரிகள் எங்களுக்கு என்றும் மறக்கவொண்ணாத நினைவுகளாக இருந்தன. ஓட்டுபவர்கள் பெரும்பாலும் வெள்ளைக் கையுறைகள் அணிந்திருப்பார்கள், அனேகமாக ஏதும் பேச மாட்டார்கள். சி-ஓவும் நானும் பின் இருக்கைகளில் அமர்ந்திருப்போம், எதிரெதிர் ஜன்னல்கள் வழியே வெளியே பார்ப்போம், எங்கள் தொடைகளில் இருக்கைகளைப் போர்த்தியிருக்கும் மரமணி விரிப்பு அழுத்திக் கொண்டிருக்கும். எங்கள் பாட்டியின் வீட்டு வாயிலில் அழைப்பு மணியை அழுத்துவோம். கதவு திறக்க நாங்கள் காத்திருக்கையில், சி-ஓ வீட்டிலிருந்து என்ன தூக்கிக் கொண்டு வந்தான் என்று பார்த்து அனேக நேரமும் எனக்கு ஆச்சரியம் எழும். என் அப்பாவின் சிகரெட் லைட்டரை எடுத்து வந்திருப்பான், அதைத் திறந்து திறந்து மூடிக் கொண்டிருப்பான். என் அம்மாவின் அரக்குப் பசை பூசிய சிறு பெட்டியின் சாவியை எடுத்து வந்திருப்பான். அதன் கயிற்றில் குஞ்சம் தொங்கும்.
இரவில் நாங்கள் மூவரும் உபரியாக இருந்த அறையொன்றில் தரையில் படுத்துத் தூங்குவோம். சில சமயம், அலறும் எந்திரத்தின் ஒலி கேட்டு விழிப்போம், அது எங்கள் அப்பா தன் மொபெட்டில் வந்திருக்கிற ஒலி என்று உடனே எங்களுக்குத் தெரியும். எங்கள் அம்மா உடனே எச்சரிக்கையாகி, எழுந்து விடுவாள், வரவேற்பறைக்கு ஓடிப் போவாள், அதே நேரம் எங்கள் பாட்டியும் அங்கே விரைவார். இருவரும் கண்ணீர் மல்க, அழைப்பு மணிக் கருவியை அச்சத்தோடு பார்த்து நிற்பார்கள். சில சமயம் என் அம்மா உறைந்திருந்தவள் திடீரென்று விடுபட்டு, முன் கதவை நோக்கி ஓடுவாள். மற்ற நாட்களில், அவள் எல்லாச் சக்தியையும் இழந்தவளாய், அப்படியே சரிந்து தரையில் உட்கார்ந்து விடுவாள். அப்போது என் பாட்டி ஸ்பீக்கர்ஃபோனில் சொல்வாள், “வீட்டுக்குப் போ. ராத்திரி ஆகட்டும், வீட்டுக்குப் போ.”
……
“அஞ்சு கிலோ,” தராசோடு சிறிது போராடியபிறகு, அந்தக் கிழவர் ஒரு பெட்டியை நகர்த்தி விட்டு அறிவித்தார். “எட்டு கிலோ,” என்று அடுத்ததை அறிவித்தார். பிறகு தன் உதட்டை ஒரு முறை நக்கி விட்டு, ஒட்டுகிற நாடாச் சுருளை எடுத்தார்.
அந்தப் பெட்டிகளில் என்ன இருக்கின்றன என்று நான் யோசித்தபடி நின்றேன், அவை கப்பல்களில் பல வாரங்களுக்குப் பயணம் போகும்: புத்தகங்கள், துணிமணிகள், சில மனத்துக்குப் பிடித்த பொருட்கள்- மிரி என்றழைக்கப்பட்ட ஒரு பழைய பொம்மையும் அதில் உண்டு. நாடாவை ஒட்டும் கிழவரைப் பார்த்து நின்றபோது, இந்தப் பெட்டிகள் போய்ச் சேர வேண்டிய இடத்தை அடையும் என்பதில் எனக்கு அத்தனை நம்பிக்கை இல்லை என்பதை உணர்ந்தேன். காய்ந்து போன தபால் அலுவலகத்துப் பசை; தூரத்துச் சுவரில் மரச் சட்டத்தில் கண்ணாடிக்குப் பின் இருந்த, மஞ்சளாகிப் போயிருந்த கொரியக் கொடி. இன்னும் சில வாரங்களில், நாங்கள் கிம்போ விமான நிலையத்தில் இருப்போம் என்பது நடக்க முடியாத நிகழ்வு. அதையும் விடச் சாத்தியமே இல்லாதது, நாங்கள் அமெரிக்கா போவோம் என்பது. நாங்கள் இதுவரை சோல் மாநகருக்குக் கூடப் போனதில்லை.
முதியவருக்குக் கொடுக்க என் அம்மா ஒரு முகவரியைப் பிரதி எடுக்கச் சொன்னாள், ட்டோபாக், ட்டோபாக், என்றாள், படிக்கச் சுலபமாக இருக்கும் பெரிய எழுத்துகளாக எழுது என்று பொருள். பள்ளிக் கூடத்தில் இங்கிலிஷில் எழுதுவதை நன்றாகச் செய்வதற்காக எனக்கு முழு மதிப்பெண்கள் கிடைத்து வந்தன. அதே போல இலக்கணம், சொல் திறன், மற்றும் படித்ததைப் புரிந்து கொள்ளும் திறமைக்காகவும் முழு மதிப்பெண்கள் கிட்டும்.
111, ஸ்ப்ரூஸ் லேன்
ஆன்னண்டேல், விஏ, 22003
யு.எஸ்.ஏ
எழுதும்போது நான் யோசித்தேன்: இந்த முகவரி நிஜ முகவரி போலக் கூட இல்லை. நிஜ முகவரிகள் – அதாவது, கொரியாவில் உள்ள நிஜ முகவரிகள் – நிறையத் தகவல்களை உள்ளே பொதித்து வந்தன, நீங்கள் யார், உங்களிடம் எத்தனை பணம் உண்டு போன்றவை: 9-2, பியோமான் – ரோ 195 பியொன் -கே, புச்சான் – சி, க்யான்க்கி-டோ, 14789. இப்படி. ஆனால் ஆன்னண்டேல். ஆன்னண்டேலைப் பற்றி பெயரில் எங்களுக்கு என்ன தெரிந்தது?
ஆன்னண்டேல் வர்ஜினியா மாநிலத்தில், ஃபேர்ஃபாக்ஸ் கௌண்டியில் இருந்த ஒரு சிற்றூர். அந்த மாநிலம் நியூயார்க்கிலிருந்து தெற்கே சில மணி நேரப் பயணத்தில் இருந்தது. என் அம்மாவின் சகோதரியும், அவளுடைய குடும்பமும் அங்கே, பியானோவும், புல் வெளியும் இருந்த ஒரு வீட்டில், வசித்தனர். வீட்டின் இரண்டு பெரிய பையன்களும் கல்லூரிகளுக்குப் போய் விட்டதால், அங்கே இரண்டு உபரி படுக்கை அறைகள் இருந்தன. அந்த இரண்டு கல்லூரிகளைப் பற்றி நாங்கள் முன்னால் கேட்டதே இல்லை: யுவிஏ மேலும் எமொரி. (யுனிவர்சிடி ஆஃப் வர்ஜீனியா, எமொரி பல்கலைகள்) அங்கே மூன்றாவது ஒன்று விட்ட சகோதரி இருந்தாள், ஸூஸி, என் வயதுதான். அமெரிக்க முறைப்படி கணக்கு வைத்தால் அவள் வயதும் பன்னிரெண்டு. (கொரியாவில் நான் பதின்மூன்று வயதானவள்.) என் அம்மாவும், என் பெரியம்மாவும், அவர்களுடைய தொலைதூர ஃபோன் உரையாடல்களில் தீர்மானித்திருந்தனர், என் இங்கிலிஷ் மிக நன்றாக உள்ளதால், வருகிற இலையுதிர்காலத்தில் நானும் ஸூஸியோடு ஏழாம் வகுப்பில் சேர வேண்டும் என்று. என் பெரியம்மா இதன் மூலம் நானும் ஸூஸியும் நண்பர்களாவோம் என்று நினைக்கிறார்போலத் தெரிந்தது.
என் பாட்டி வீட்டுக்குப் போன அந்த இரவுகள். கடைசியில் நாங்கள் எப்போதுமே எங்கள் வீட்டுக்குத் திரும்பிப் போனோம். பல நாட்களுக்கு, எங்கள் அப்பா அபாரமான மனநிலையில் இருப்பார். தெருவோரங்களில் ப்ளாஸ்டிக் கூரைகளடியில் கூடாரமிட்டிருக்கும் வியாபாரிகளிடமிருந்து தின்பண்டங்களை எங்களுக்கு வாங்கித் தருவார்: பளீரென்ற சிவப்புக் குழம்பு ஊற்றிய அரிசி அப்பளங்கள்; சூடான இரும்புத் தவலைகளிலிருந்து தெறித்து வருவனவற்றை இன்னொரு முனையில் வலையில் பிடித்துக் கொடுக்கப்படும் அரிசிப் பொரிகள். தன் சிறப்புத் தயாரிப்பாக – புல்கோகியுடன் (மாட்டு மாமிச வதக்கல்கள்) பொரித்த உருளைக்கிழங்குத் துண்டுகள் அவை, சி-ஓவுக்கும் எனக்கும் அவை மிகப் பிடித்த பண்டங்கள். அவர் நடத்திய சிறு கடை, வீடியோக்களை வாடகைக்குக் கொடுக்கும் கடை, அதில் நாங்கள் திரிய அனுமதிப்பார். மூன்று அமெரிக்கத் திரைப்படங்களை அங்கு நாங்கள் எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தோம்: கோஸ்ட்பஸ்டர்ஸ், இண்டியானா ஜோன்ஸ், மற்றும் பெவர்லி ஹில்ஸ் காப். அந்தப் படத்தின் இறுதியில் எடி மர்ஃபி பேசும் ஒரு வசனத்தை சி-ஓவும் நானும் முழுதுமாக ஒப்பிக்க முடிந்த காலம் அது. அதில் எடி மர்ஃபி சொல்வார்: “லோலா அபூர்வமானவள். புதுசா இருந்தவள். உலகத்தோட கொடுமைகளெல்லாம் இன்னும் அவளைக் காயப்படுத்தி இருக்கல்லை. உயிர்த்துடிப்பும், வருங்காலத்துக்கான வாய்ப்புகளும் நிறைஞ்சவளா இருந்தா. ஆனாலும் எத்தனையோ பேர்களைப் போல, அதெல்லாத்தையும் அவ தூக்கி எறிஞ்சுட்டா. அதுதான் எதுக்காக? மன அமைதிக்காகவா?”
ஒரு தடவை எங்கள் அப்பா, அம்மாவுக்கென்று எதையோ தன் கைகளில் மறைத்து எடுத்துக் கொண்டு வந்தார். ஒரு கருப்பு வெல்வெட் நகைப் பெட்டி. சி-ஓவும் நானும் அதை அவர் தட்டித் திறந்த போது பார்ப்பதற்கு அழைக்கப்பட்டோம், அதில் தங்கத்தில் பதிக்கப்பட்ட சிறிய வைரக்கற்கள் இருந்த காதுக் கம்மல்கள் இருந்தன. அந்தக் கம்மல்கள் அப்பழுக்கற்றிருந்தன என்று நான் நினைத்தேன்; அவருடைய அந்தச் செயலும் கச்சிதமாக இருப்பதாக நினைத்தேன். அவர் முகத்தில் கடந்து போன கூச்ச உணர்வைப் பார்த்தபோது, அவருடைய கையிலிருந்து இந்த சந்தோஷத்தை அவள் ஏற்க வேண்டுமென்று அவர் விரும்பினாரென்பது எனக்குத் தெரிந்தது. நானும் மகிழ்ச்சி பெற்றேன், முடிவாகப் போகிற எதையோ நான் பார்க்கப் போகிறேன் என்று உணர்ந்தேன்.
ஆனால் எங்கள் அம்மா சிரிக்கவில்லை. அவள் ஏன் சிரிக்க மாட்டேனென்கிறாள்? அந்தக் காதுக் கம்மல்களைத் தன் உள்ளங்கையில் ஏந்தவுமில்லை, தன் காதுமடல்களில் இருந்த துளைகளில் நுழைத்துக் கொள்ளவுமில்லை. “இதுக்கு எவ்வளவு ஆச்சு?” என்றாள் அவள்.
என் அப்பாவின் முகத்தில் ஏற்பட்ட மாறுதல்களை என்னால் பார்க்க முடிந்தது: புண்பட்டது, கோபம், மேலும் ஒருவேளை சிறிது தேறுதலும். என் அம்மா அந்தக் கம்மல்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன். நான் சொன்னேன், “பாருங்க, எத்தனை அலங்காரமா இருக்கு!”
அவள் அதை லட்சியம் செய்யவில்லை. “இதுக்கு எவ்வளவு ஆச்சுன்னு கேட்டேன்.”
வாயைப் பொத்துங்க, என்று நினைத்தேன். வாயைப் பொத்துங்க, வாயைப் பொத்துங்க. அந்தக் கணம் என்னிடம் அவளை நேசிக்க எத்தனை சக்தி இருந்ததோ அதே அளவு அவளை வெறுக்கவும் சாத்தியங்கள் இருந்ததாக நான் உணர்ந்தேன். அவள் எப்படி அவரை வேறொரு மனநிலைக்குத் தள்ளினாள், உசுப்பி விட்டாள் என்று கவனித்தேன்.
ஆனால் எங்கள் அப்பா தன் கையை உயர்த்தவில்லை, தன்னுடைய உடலின் ஆகிருதியையும் காட்டவில்லை. அவர் நடப்பதை நம்ப முடியாதவர் போல ஓர் அரைச் சிரிப்புச் சிரித்தார்- “நான், நிசம்மா”- பிறகு அந்தப் பெட்டியின் மூடியை அடித்து மூடினார்.
அன்று இரவு, நானும் சி-ஓவும் எங்கள் அறைகளில் படுத்திருந்தாலும் விழிப்புடன் இருந்தோம், எங்கள் அப்பா சில நண்பர்களோடு வீட்டுக்கு வந்த ஒலிகள் கேட்டன. தன் சாவியைப் பயன்படுத்தாமல் முன் கதவை அறைந்தார். எங்கள் அம்மா வீட்டுக்குள் நடப்பதை, அந்த ஆண்களை வீட்டுக்குள் அனுமதிப்பதை, உயரம் குறைந்த மேஜை ஒன்றை முன்னறைக்குக் கொண்டு வந்ததை, அச்சில் இருந்த பனிக்கட்டிகளை உடைத்து எடுப்பதை எல்லாம் எங்களால் கேட்க முடிந்தது. எங்கள் அப்பா ‘அஞ்சு’ பானத்தைக் கொண்டு வரச் சொல்லி ஆணையிட்டார், எங்களுக்குத் தெரிந்திருந்தது, கருகிய ரப்பர் போல வாடை வீசியதிலிருந்து எங்கள் அம்மா அடுப்படியில் நின்று, உலர்ந்த முழுக் கணவாய் மீன்களை, முக்கோணத் தலையிலிருந்து பின்னலாக இருந்த ஸ்பரிசக் கொம்புகள் வரை எரிகிற நெருப்பில் வாட்டுவதை அறிந்தோம்.
சி-ஓவும் நானும் ஒரு கதவைச் சிறு இடைவெளி தெரியும்படி திறந்து பார்த்தோம். அதற்குப் பின்னே குனிந்து ஒளிந்தபடி, எங்கள் அப்பாவும் அவர் நண்பர்களும் தரையில் அமர்ந்திருப்பதை எங்களால் பார்க்க முடிந்தது. அவ்வப்போது கதவைக் கடந்து போகும் எங்கள் அம்மாவின் பாவாடை ஒளியை மறைக்கும். எனக்கு, உரக்க இன்னும் ஐஸ் அல்லது ஜானி வாக்கர் அல்லது பாட்டு வேண்டுமெனக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த ஆண்கள் அதிபர்கள் போலத் தெரிந்தார்கள். அவர்கள் சும்மா பேசவில்லை; தீர்ப்புகளை வழங்கினார்கள். வெறுமனே சிரிக்கவில்லை; கர்ஜித்தார்கள். இரவு நீண்டு சென்ற போது, சில அடிகளே தள்ளி இருந்த கழிப்பறைக்குப் போகாமல், அங்கே இருந்த குடைச் செடி மீது நீண்டு வளைந்து விழுந்த தங்க நிறத் தாரைகளாக சிறுநீர் கழித்தார்கள். அந்தச் செடி என் அம்மா வளர்த்த செடி.
ஒரு கட்டத்தில் எங்கள் அப்பா, சிரமப்பட்டு எழுந்து நின்றார். எல்லாருடைய கவனத்தையும் தன் மீது திருப்பச் சொல்லிக் கேட்டார். பழக்கமான ஒரு பாவம் அவர் முகத்தில் வந்தது: முகம் ஈரமாக இருந்தத், கண்கள் பாதி மூடியிருந்தன, கனவில் இருப்பவராகத் தெரிந்தார். எங்களுக்கு அந்தப் பாவம் என்னவென்று தெரியும். இந்த மாதிரி அவர் ஆனால், அப்போது தன்னுடைய சுய-மதிப்பில் ஓரிடத்தில் அவர் போய்ச் சேர்ந்து விட்டார், அதிலிருந்து எதுவும் – சீ-ஹோ இல்லை, நானும் இல்லை, நாளைக்கு வரப்போகும் வருத்தப்படுதல்களும் இல்லை – அவரை மீட்க முடியாது என்று எங்களுக்குத் தெரிந்திருந்தது.
“இப்ப இஞ்ச பாருங்க எல்லாரும்!” அவர் ஆணையிட்டார்.
சீ-ஹோவும், நானும் ஒரு பார்வையைப் பரிமாறிக் கொண்டோம். இந்தக் கட்டத்தில், எங்கள் அப்பா எதையும் செய்யக் கூடியவராகி விட்டார் என்று எங்களுக்குத் தெரியும். எந்தப் பொருளையாவது பறித்தெடுத்துக் கொண்டு அதை ஒரு மைக்ரொஃபோன் போலப் பாவித்து, அதற்குள் “யெஸ்டர்டே” பாட்டைப் பாடுவார். “ஐ ஆம் எ குட் மேன், எ குட் மேன்,” என்று இங்கிலிஷில் சொல்வார், முகத்தின் மீது கண்ணீர் வழிந்தோடும். படுக்கவிருக்கும் தடித்த மெத்தை விரிப்புகளை சமையலறைக் கத்தியால் கிழித்து அதில் ரகசியங்களைத் தேடுவார்.
“மக்கா நீங்க!” என்றார் எங்கள் அப்பா, பார்வையாளர்களை நோட்டம் விட்டபடி. “உங்க கிட்டே ஒண்ணு கேக்கறேன். ஒண்ணே ஒண்ணு. ஒரு ஆள் தான் காதலிக்கிற பெண்ணுக்கு ஒரு பரிசு வாங்கறான். அதனாலென்ன? அவ அந்தப் பரிசை வாங்கிக்கிறாளா? அவளுக்கு அதோட அர்த்தம் புரியுதா?”
அவர் எங்கள் அம்மாவைப் பார்க்கத் திரும்பினார், என் அம்மா (எங்கள் பார்வையில்) அசைவில்லாத பாவாடையின் கரை மட்டுமே.
“நான் உங்களுக்குச் சொல்றேன், இல்லை, அவ அதைத் தள்ளி விடறா. மறுக்கிறா! பணம், பணம், பணம். அவளால யோசிக்க முடியறதெல்லாம் பணத்தைப் பத்தித்தான்.”
அவர் தன் தலையை சோகமாக ஆட்டினார். திடீரென்று அவருக்கு ஏதோ புது யோசனை தோன்றி விட்டாற்போலத் தெரிந்தது. எழுந்து ஓடினார். எங்கள் அம்மா ஒரு எட்டு முன்னோக்கி எடுத்து வைத்தார். வார்த்தைகளில்லாது இருவர் தள்ளுப்புள்ளுப்பட்ட ஒலிகள் கேட்டன, இருவர் எங்கள் அறைக்கு அடுத்து இருந்த படுக்கையறையில் நுழைந்தனர். இழுப்பறைகள் இழுக்கப்பட்டு மூடப்பட்டன. செருப்பு அணிந்த பாதங்கள் வழுக்கிய தரையில் திண்டாடியது கேட்டது. மூச்சு வாங்கிய சப்தம். எங்கள் அப்பா முன்னறையில் நுழைந்தார், கையில் ஏதோ இருந்தது. அந்தக் கருப்பு வெல்வெட் பெட்டி. எங்கள் அம்மா அறையை விட்டு அவர் பின்னே வந்தது தெரிந்தது, ஆனால் அவள் சிறிது தூரத்தில் நின்றாள். எங்கள் அப்பா அந்தப் பெட்டியிலிருந்து ஒரு வைரக் கம்மலை எடுத்ததை அந்த மனிதர்கள் பார்த்தார்கள்.
“தேவிடியாப் பசங்களா!” அவர் அறிவித்தார். “பணத்தைப் பத்தி நான் என்ன நினைக்கிறேன்னு உங்களுக்குத் தெரிஞ்சுக்கணுமா?”
அருகிலிருந்த ஒரு கண்ணாடிக் கோப்பையை எடுத்துக் கொண்டார், அதில் திரவம் இருந்தது. தன் வாயை விரியத் திறந்தார். காதுக் கம்மலை விழுங்குவது போல பாவித்தார்.
அவர் அப்படியும் செய்யக் கூடியவர்தான். அவர் செய்வார் என்று எங்களுக்குத் தெரியும். முன்பொருதடவை நானும் சி-ஓவும் சிகரெட்டின் நெருப்புப் பற்றிய முனையை தன் வாய்க்குள் நுழைத்து, அதைக் கடித்து விழுங்கியதைப் பார்த்திருக்கிறோம்.
…….
ஸ்ப்ரூஸ் லேன் முகவரியில் இருந்த மஞ்சள் வீட்டை நாங்கள் படத்தில் பார்த்ததிலிருந்து அறிந்திருந்தோம்.
முகப்பில் காரை நிறுத்திக் கொண்ட எங்கள் பெரியம்மா, ஒரு ரிமோட் கருவியைக் கொண்டு கார் கராஜ் கதவை மேலே எழுந்து போகச் செய்தார். சி-ஓவும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். இருவருக்குமே அதிசயமாக இருந்த ஒன்றைப் பகிர்ந்து கொண்டதாக நாங்கள் ஒத்துக் கொண்டது அதுதான் அனேகமாகக் கடைசித்தடவையாக இருக்கும்.
காரை பார்க் கியரில் போட்டு விட்டு, பெரியம்மா எங்களை நோக்கித் திரும்பி, இங்கிலிஷில் சொன்னார், “வெல்கம் ஹோம்!”
“உங்களைச் சந்திக்க ஸூஸி ரொம்பவே ஆசையா இருக்கா!” என்றார், காரின் ஹார்னை ஒரு முறை அழுத்தி ஒலிக்கச் செய்தார். எங்களைப் பார்த்து -குறிப்பாக என்னை நோக்கி – சிரித்தார். எனக்கும் ஸூஸிக்குமான நட்பைப் பற்றிய வாக்குறுதியை நினைத்தேன், ஆனால் அதைப் பற்றி எனக்கு எச்சரிக்கையுணர்வு இருந்தது. என் பெரியம்மாவிடம் ஏதோ எனக்கு எச்சரிக்கையுணர்வை எழுப்பியது. அவர் என் அம்மாவை விட அழகு குறைவானவராக இருந்தாலும், அம்மாவை விடக் கூடுதலாகக் கவர்ச்சியானவராகத் தெரிந்தார். அந்த உதட்டுச் சாயம், கருப்புக் கண்ணாடி, அன்னிய உச்சரிப்பு இருந்தாலும் சுலபமாக வாயில் புரண்ட இங்கிலிஷ். எல்லாமாக அவரைக் காட்டிய விதத்தில் அவருடைய நல்ல நோக்கங்கள் அத்தனை நம்பத் தக்கவை இல்லை என்பதாக உணர்த்தின.
கராஜுக்கும் வீட்டுக்கும் இடையில் இருந்த வாயிலின் சட்டகத்தில் ஸூஸி தோன்றினாள். அவள் அணிந்த டெனிம் ஓவராலின் ஒரு தோள்பட்டை அவிழ்ந்திருந்தது. அது வேண்டுமென்று செய்ததா? அவள் கையில் சுமந்திருந்த பெரிய சாம்பல் நிறப் பிராணி ஒன்று வாயைத் திறந்து பற்களைக் காட்டியது. என் அம்மாவின் அச்சத்தை என்னால் உணர முடிந்தது. பூனை.
“ஸூஸி-யா, வா, வா!” என் பெரியம்மா கூவினாள். “ஸோ-யானுக்கும் சி-ஓவுக்கும் ஹாய் சொல்லு! இது யாருன்னு உன் சொந்தக்காரங்களுக்குச் சொல்லு!”
“இது மௌஸ்கா,” என்றாள் ஸூஸி, நின்ற இடத்திலேயிருந்தபடி.
அவள் பூனையைப் பிடித்துக் கொண்டிருந்த விதம்- நாங்கள் எங்கள் பெட்டிகளோடு மல்லுக் கட்டி காரின் பின்னாலிருந்து இறக்கிக் கொண்டிருந்ததையும், ஒவ்வொரு பையையும் தரையில் இழுத்துக் கொண்டு வந்ததையும் பார்த்து நின்ற விதம்- அதெல்லாம் எங்களுக்குத் தெரிவித்தது எங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்த ஒன்றுதான். இது அவர்களுடைய வீடு, எங்களுடையதில்லை.
பெரியம்மாவின் பின்னே போய் உள்ளே சென்றோம், ஸூஸியின் சமையலறை காட்டப்பட்டது. ஸூஸியின் பியானோ முன்னறையில். ஸூஸியின் அறை, அதற்கு மேற்கு நாட்டின் வளம் இருந்தது. தரையில் தகடு பதித்த தரைக்குப் பதில் தரை விரிப்பு பதிக்கப்பட்டிருந்தது, பட்டுப் பாய்க்குப் பதில் மெத்தை இருந்தது. அலமாரித் தட்டுகளில் இருந்த ஏகப்பட்ட பொருட்களை நான் ஒவ்வொன்றாக எடுத்து நோக்கி, பரிசீலித்துக் கையாண்டு பார்க்க விரும்பினேன். மெஜை இழுப்பறைகளைத் திறந்து பார்க்க விரும்பினேன். அறைக்கு என்று ஒரு மணமும் இருந்தது: ஸ்ட்ராபெர்ரி மிட்டாயும், ப்ளாஸ்டிக் பொம்மைகளின் தலைகளின் மணமும் கலந்த வாசனை.
ஒரு விரிந்த அறைக்குள் மேலும் போனோம், எங்களுக்கு மூத்த சகோதரர்களுடைய அறைகள் காட்டப்பட்டன: அவற்றில் நாங்கள் தங்குவதாக இருந்தது. இவை எனக்கு அத்தனை சுவாரஸ்யமாகப் படவில்லை. அந்தப் பையன்கள் கல்லூரிக்கு எடுத்துப் போகாத பல பொருட்கள் அங்கு நிறைந்திருந்தன- அவர்கள் அவற்றை வேண்டுமென்று எடுத்துப் போகத் திரும்பி வரப் போவதில்லை. புத்தக அலமாரிகளில் வருடாந்தர நிகழ்ச்சிப் புத்தகங்களும், கால்வினும் ஹாப்ஸும் புத்தகங்களின் தொகுப்புகளும் இருந்தன. அங்கு ஒரு இசைக்கருவியின் கருப்புப் பெட்டியும், பாட்மிண்டன் ராக்கெட்டும் ஒரு துணியலமாரியின் பின்புறம் இருந்தன.
எங்கள் பெரியம்மா அம்மாவிடம் கொஞ்சம் சிறியதான அறையை எடுத்துக் கொள்ளும்படியும், சற்றுப் பெரிய அறையை எங்கள் இருவருக்கும் கொடுக்கும்படியும் யோசனை சொன்னார். ஆனால் சி-ஓ தனக்குத் தனியாக ஒரு அறை வேண்டுமென்று உடனே சொன்னான். அவன் அதைச் சொன்னபோது அவனுடைய கையில் நன்றாகக் கிள்ளி விட்டேன், ஆனால் அவன் சிறிதும் அசரவில்லை. அவனுக்குத் தனக்கு ஒரு அறை கிட்டுமென்று தெரியும். எங்கள் அம்மா அவனுக்கு அதைக் கொடுத்து விடுவார். அதை அவர் கொடுத்தாலும், அவன் கேட்கிற எல்லாவற்றையும் அவர் கொடுத்தபோதும், அதை மன்னிப்புக் கோரிக் கொண்டு தருவார். இன்னமும் கூடுதலாகக் கொடுக்க முடியாததற்கு அந்த வருத்தம். அது எல்லாமாக இல்லை என்று. அவர் அவனிடம் அன்பு காட்டியது அந்த மாதிரிதான்.
அந்தத் தினத்தின் முடிவுக்குள், சி-ஓ எல்லாப் பொருட்களையும் இடம் மாற்றி விட்டான், ஓர் ஓக் துணிஅலமாரியைத் தனியாகவே நகர்த்தி வேறிடத்தில் வைத்து விட்டான், ஆனால் நானும் அம்மாவும், அந்த நடு அறையில் இருந்த அத்தனை வருடங்களிலும், என் ஒன்றுவிட்ட சகோதரரின் ஸ்டார் வார்ஸ் சுவரொட்டியையோ, அவனது கார்னெகி மெல்லன் பல்கலையின் அடையாளக் கொடியையோ அகற்றத் தயாராக இல்லை. அவ்வப்போது, நானும் அவரும் அதே சர்ச்சையைத் தொடங்குவோம், யார் தரையில் படுத்துத் தூங்குவது, யார் கட்டிலில் படுக்கையில் தூங்குவது என்ற சர்ச்சை அது. இருவரும் மற்றவரை சௌகரியமாகத் தூங்கச் சொல்லி வற்புறுத்துவோம். இருவருக்கும் சுயநலத்தோடு நடந்து கொள்ளத் தெரியாமல் இருந்தது.
மாலைச் சாப்பாட்டு நேரத்தின்போது, எங்கள் பெரியப்பா வீடு சேர்ந்தார். நான் சமையலறையில் உதவி செய்து கொண்டிருந்தேன், கராஜின் கதவு உருண்டெழுந்த சத்தம் கேட்டது. என் அம்மாவின் பாவனையில் உடனே ஒரு மாறுதலை என்னால் காண முடிந்தது.
அதுவரை அவரும், பெரியம்மாவும் சுலபமான ஒத்துழைப்போடு வேலை செய்து கொண்டிருந்தனர்: வெட்டுவது, அடுப்பில் உள்ளதைக் கலக்குவது, ஊற வைப்பது போன்றவற்றோடு மற்றவர் விட்டதை எடுத்து முடிப்பதையும் – வெட்டும் பலகையிலோ அல்லது பழைய நினைவுகளை எடுத்து விவரிப்பதிலோ, எதாகட்டும்- செய்து கொண்டிருந்தனர். எனக்கு வியப்பூட்டும் வகையில், சாப்பாடு மரபு வழி கொரிய உணவாகவே இருந்தது. கடல் பாசியையும், ஷிடாகி காளானையும் சேர்த்து அவிக்கும் நீர் அடுப்பின் மீது மெல்லக் கொதித்தது. வெட்டி, எலும்புகளெல்லாம் நீக்கப்பட்ட முழு மட்டிவாய் மீன் காகிதத் துண்டால் ஒற்றி உலர்த்தி வைக்கப்பட்டிருந்தது. சாமந்தி இலைகளுக்குப் பதிலாக நீர்க்கீரை இருந்தது. அந்தச் சாப்பாட்டு வகையிலும் — கந்தவர்க்கம் சேர்த்த மட்டிவாய் மீன் துவட்டல்- அதன் தயாரிப்பு முறையிலும் ஏதோ சாதாரணமாகவும் நிம்மதியூட்டுவதாகவும் இருந்தது. எங்கள் பெரியம்மா ஒரு கட்டி டோஃபுவைக் கையாலேயே வில்லைகளாக்கியதிலோ, அல்லது சர்க்கரையைப் போடுவதில் காட்டிய கட்டுப்பாடோ, எங்கள் பாட்டியின் சாயலைக் காட்டின. எங்கள் பாட்டி சர்க்கரையைத் துச்சமாகப் பார்த்தவர். அதிகமாக இனிப்புச் சேர்க்கப்பட்ட பண்டங்களின் சுவையில் ஏமாற்றுவேலைதான் தெரிகிறது என்பார் அவர்.
ஆனால் கராஜின் ஒலியில், எங்கள் அம்மா அப்படியே நிறுத்தினார். கத்தியைக் கீழே வைத்தார், தன் ஆடையில் கைகளைத் துடைத்தார். “சி-ஓவை அழைச்சுகிட்டு வா,” என்று ரகசியக் குரலில் சொன்னார்.
அவன் முன்னறையில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். “சீக்கிரம் வா,” என்றேன்.
எங்கள் பெரியப்பா கதவைத் திறந்தபோது, நாங்கள் அதனருகே வரிசையிலிருந்தோம். அவரைக் கண்டதும், நாங்கள் இடுப்புவரை குனிந்து வணக்கம் சொன்னோம். “நல்லா இருக்கீங்களா?” இந்த முறையான முகமனை எப்படி சுஸ்வரமாகவும் விரும்பக் கூடியதாகவும் தெரிவிப்பது என்பது, எல்லா கொரியக் குழந்தைகளுக்கும் தெரிந்திருக்கிற வேண்டியது, எங்களுக்கும் தெரிந்திருந்தது.
“ஆ, வந்துட்டீங்களா?” என்றார் பெரியப்பா, அவரும் கொரிய மொழியில்தான் கேட்டார், ஆனால் அவர் சொன்னவிதம் சாதாரண முறையில் இருந்தது. சரியாகச் சொன்னால் அது கேள்வியில்லை; ஆனால் அது வரவேற்பும் இல்லை.
தன் அலுவலக மேலங்கியைக் கழட்டி அதை நாற்காலியின் முதுகில் அவர் தொங்கவிட்ட பெரியப்பாவை நான் உற்றுக் கவனித்தேன். அவர் உயரமாக இல்லை; ஒல்லியாகவும் இல்லை. அவர் அலுவலக மேலங்கி சாம்பல் கலந்த பழுப்போ அல்லது பழுப்பான சாம்பல் நிறமோ. எங்கள் பெரியம்மா அவருக்கு முறையான வரவேற்பைக் கொடுக்கவில்லை என்பதிலோ- வேகமான ‘ஹை, வாங்க!’ என்று அடுப்படியிலிருந்து குரல் கொடுத்ததோடு சரி- ஸூஸியை எங்கேயுமே காணோம் என்பதிலோ, அவர் எந்த வியப்பையும் அல்லது குறையையும் காட்டவில்லை. சமையலறை கழுவும் தொட்டியிலேயே, பாத்திரம் கழுவும் சோப்பை வைத்துக் கைகளைக் கழுவிக் கொண்டார். தன் பையில் வைத்திருந்த பழுப்புத் துவாலையில் துடைத்துக் கொண்டார். அதை அவர் மதிய உணவிலிருந்து சேமித்து வைத்திருக்க வேண்டும்.
கழுவும் தொட்டிப் பக்கத்திலிருந்து திரும்பியவரின் முகத்தை நான் நன்றாகப் பார்க்க முடிந்தது. எங்களுக்கு ஒரு சலுகையை அளிப்பவரின் முகம் அது. ஓர் உருளைக்கிழங்கு மாதிரி இருக்கிறது அது, என்று எனக்குச் சொல்லிக் கொண்டேன். ஒரு உருளைக்கிழங்கு இன்னும் பெரியதோர் உருளைக்கிழங்கு போன்ற உடலின் மீது அமர்ந்திருந்தது. ஓர் உருளைக்கிழங்கு மேல் இன்னோர் உருளைக்கிழங்கு. மூக்குக் கண்ணாடியணியும் ஓர் உருளைக்கிழங்கு. அந்தப் பிம்பத்தைப் பிடித்து வைத்துக் கொண்டேன், அதில் எனக்கு ஆறுதல் தேடிக் கொண்டேன்.
எங்கள் பெரியப்பா சாப்பாட்டு நேரம் வரை காத்திருக்க முன்னறைக்குப் போனார். சி-ஓ பார்த்துக் கொண்டிருந்த சிறுவர் நிகழ்ச்சிகளிலிருந்து மாலைச் செய்திகளுக்கு தொலைக்காட்சியின் சானல் மாறிய ஒலி எங்களுக்குக் கேட்டது. சாப்பாட்டு மேஜையில் ஏற்பாடு ஆனதும், பெரியம்மா ஸூஸியையும் பெரியப்பாவையும் அழைத்தார். அங்கு இன்னமும் சூடு குறையாமல் கொதி வந்து கொண்டிருந்த மட்டிவாய் மீன் துவட்டல் மண்பானையில் இருந்தது. தாமரைக் கிழங்கு ஊறுகாய். ஆவியில் வேகவைக்கப்பட்ட முட்டைப் பொரியல். தேனிலும், அரிசி ஒயினிலும் பூசப்பட்ட உலர்ந்த நெத்திலி மீன் குஞ்சுகள், அவை நாங்கள் கொரியாவிலிருந்து அனுப்பியவை. ஸூஸிக்காக ஒரு நீல நிறப் பெட்டியிலிருந்து நூடில்களை எடுத்து பெரியம்மா சமைத்திருந்தார், அவை வெண்ணையில் கலக்கிய மஞ்சள் நிறப் பொடி ஒன்றாலான கூட்டோடு சேர்க்கப்பட்டிருந்தன.
என் அம்மா மற்றவர்களெல்லாம் சாப்பிடுவதைப் பார்த்திருந்தாரே தவிர தான் அதிகம் சாப்பிடவில்லை. ஸூஸியின் சாப்பாட்டை அவ்வப்போது கவலையோடு பார்த்தார், ஒரு முறை ஸூஸிக்கு அந்த நெத்திலி மீன்களைச் சுவைத்துப் பார்க்க வேண்டாமா என்று கேட்டும் பார்த்தார். முதல் தடவையாக, ஸூஸியிடம் நேராக அவர் சொன்னது அதாகத்தான் இருக்கும். ஸூஸி தன் முகத்தில் அருவருப்பைக் காட்டினாள், என்னால் உடனே அவளுடைய நிலைக்கு ஆதரவாக உணர முடிந்தது, அந்த மீன்கள் வெட்டப்பட்ட நகத் துண்டுகள் போல இருந்தன, அவற்றின் கண்கள் மட்டும் உருக்குலையாமல் அப்படியே இருந்தன.
நான் என் அம்மாவைப் பார்த்தேன். சாப்பிடப் பயன்படும் குச்சிகளை, அம்மா கையிலெடுத்தபோது, அவர் முகத்தில் ஒரு பய உணர்வு பரவிப் போயிற்று. ஒரு கணம் கழித்து, நானும் அதை உணர்ந்தேன். என் கால்களிடையே கதகதப்பான தசைத் திரள் உரசிக் கொண்டு போயிற்று, அதைத் தொடர்ந்து அசையும் வாலின் தொடுகை. அது மௌஸ்கா, சாப்பாட்டு மேஜையின் கீழே புகுந்து போய்க் கொண்டிருந்தது.
எங்கள் பெரியப்பா இரவுச் சாப்பாட்டின்போது எதுவும் அதிகம் பேசவில்லை. நிறுத்தாமல் சாப்பிட்டபடி இருந்தார், மீன் எலும்புகளைத் தட்டின் பக்கத்தில் குவித்தபடி, அவ்வப்போது நெற்றியைத் தன் கைக்குட்டையால் ஒற்றியபடி இருந்தார். காரமா இருக்கா? என்று கேட்டார் பெரியம்மா. காரம் அதிகமாயிடுத்தா? என்று அவர் பதில் சொல்லுமுன்னரே இன்னொரு கேள்வியைப் போட்டார்.
அவர் முடித்ததும், கைக்குட்டையைப் பாதியாக மடித்தார், பிறகு இங்கிலிஷில் எங்களிடம் பேசினார்.
“யுனிவர்சிடி ஆஃப் மேரிலண்டில் எஞ்சினியரிங் மாணவனாக நான் இருந்தபோது….” என்று துவங்கினார், “அந்தக் காலத்தில, இங்கே அத்தனை கொரியர்கள் இருக்கல்லை. என் நிலமை அத்தனை நல்லா இல்லை. அதனாலெ நான் ஒரு இலக்கைத் தீர்மானம் பண்ணினேன். இங்கிலிஷ் கத்துக்கறத்தை ரொம்ப முக்கியமான வேலையா வச்சுக்கிட்டேன். தினம் எனக்கு ஒரு புதுப் பயிற்சியை நானே கொடுத்துப்பேன். பாங்குக்குப் போய் ஒரு கணக்குத் திறக்கணும்னு கேளு. 1-800 எண்ணைக் கூப்பிட்டு ஒரு புகார் கொடு. பால்டிமோர் சன் பேப்பரை தலையிலேருந்து வால் வரை படி. ஹாப்பி டேஸ் மாதிரி அமெரிக்க டிவி ஷோக்களைப் பார்த்தேன். தினம் காலைல கண்ணாடியைப் பார்த்து, உச்சரிப்புக் கவிதை ஒண்ணை ஒப்பிப்பேன்: டுவொர்ட், ஃபொர்வொர்ட், டு ரிவொர்ட்.”
அவர் பேசும்போது, அல்லது அவர் பேசியதின் பொருளினால், அவர் எப்படி ”மேரிலண்ட்” என்பதற்குப் பதிலாக “மெர்ரி-லெண்ட்” என்றும், “இங்க்லிஷ்” என்ற வார்த்தைக்கு மூன்று ஒலிப்புகளைக் கொடுத்தார் என்றும் கவனித்தேன். எங்கள் பெரியப்பாவின் இங்க்லிஷ் எடி மர்ஃபியின் இங்க்லிஷ் இல்லை என்று எனக்குத் தெரிந்தது.
பிறகு பெரியப்பா சி-ஓவையும் என்னையும் முறை போட்டுக் கொண்டு ஏதாவது சொல்லச் சொன்னார். உரக்கச் சொல்ல வேண்டும். சி-ஓவும் நானும் எங்கள் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு மேஜையை உற்றுப் பார்த்தோம். இது தாங்க முடியாததாக இருந்தது, ஸூஸி பார்த்துக் கொண்டிருந்தாள் என்பது அதை மேலும் தாங்க முடியாததாக ஆக்கியது.
“ஹெல்லோ, மை நேம் ஈஸ்,” அவர் சொல்லிக் கொடுத்தார்.
“சொல்லிப் பாருங்க,” என்றார் பெரியம்ம.
“கிடுகிடுன்னு சொல்லுங்க,” என்றார் அம்மா.
மேஜையடியில், சி-ஓவின் காலை என் காலால் மிதித்தேன், அவன் சிரிக்கக் கூடாது என்று வலுவான எச்சரிக்கை அது.
“ஹெல்லோ, மை நேம் ஈஸ் சோ-யன்.”
“ஹெல்லோ, மை நேம் ஈஸ் சி-ஓ.”
“மோர் லௌடர்,” என்றார் பெரியப்பா. “வித் கான்ஃபிடென்ஸ்.”
ரௌ-டெர். கான் – பி- டென்ஷ்.
திடீரென்று, எங்கள் அப்பா பற்றிய நினைவு நான் எதிர்பார்க்காதபோது எழுந்து என்னைப் பீடித்தது. அவரால் எப்படி எல்லாவிதமான உச்சரிப்புப் பாணிகளையும் காட்ட முடிந்தது, “ஷிட்”, “காஷ்” மற்றும் “ஐ ஷுட் பி ஸோ லக்கி” என்பது போன்ற எல்லா கொச்சைகளையும் பயன்படுத்த முடிந்தது, அதையும் அலட்சியமாகவும் செய்ய முடிந்தது. அவரை எங்கள் பெரியப்பாவோடு ஒப்பிட்டு மேலாகக் கருத முடிந்ததும் அவருடைய நினைவுக்கு நன்றியோடு இருக்க முடிந்ததும் ஆறுதல் தந்தன. ஆனால் உடனடியாகவே, இவற்றைப் பின் தொடர்ந்து, அந்தக் காலி அடுக்ககத்தில், என்ன ஆயிற்றென்பது புரிந்தவுடன், என் அப்பாவின் முகம் எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் தெளிவாகக் காண முடிந்தது. எங்கள் பாட்டியின் வாயில் கதவை அடித்து அதை உலுக்குவதையும், வீட்டுக்குள் நுழைய இண்டர்காமை அழுத்திக் கொண்டிருப்பதையும் என்னால் பார்க்க முடிந்தது. அது அந்த நன்றியோடு இருக்கும் உந்துதலைச் சிக்கலாக்கியது, என்னால் அதையெல்லாம் சரியாகப் பிரித்து முடிவேதும் எடுக்க முடியவில்லை.
வாரநாள் இரவுகளில், எங்கள் பெரியப்பா ஆறுமணி தாண்டிச் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்தார். இது ஒருபோதும் மாறியதில்லை. எங்கள் பெரியம்மா எத்தனைக்குத் தோன்றியதை எல்லாம் செய்தாரோ, அத்தனைக்கு அவருடைய கால அட்டவணை மாறாதிருந்தது.
எங்கள் பெரியம்மா நேரத்தில் வந்து இரவுணவைத் தயார் செய்யத் துவங்கவில்லை என்றால், எங்கள் அம்மா சமையலறைக்கு மெல்லப் போவார். உறைந்த அரிசி கேக்குகள் ஊறவைக்கப்பட்டிருக்கும், அவற்றுக்காக மாட்டு மாமிசக் குழம்பைக் கொதிக்க வைக்கத் தொடங்குவார், அல்லது நல்லெண்ணெயையும் தேனையும் கலந்து சோய் காடியோடு மணமாக்கும் பொருட்கள் சேர்த்து உப்புக் கண்டம் தயாரிப்பார். சலவைத் துணிகள் எந்திரத்திலேயே விடப்பட்டிருந்தால், எங்கள் அம்மா அவற்றை உலர்த்தும் எந்திரத்துக்கு மாற்றுவார். ஏற்கனவே உலர்த்தும் எந்திரம் துணிகளால் நிரம்பி இருந்தால், அவற்றை வெளியிலெடுத்துக் கொண்டு, அங்கேயே தரையில் அமர்ந்து மடித்து அடுக்குவார். சிலசமயம் நானும் உதவுவேன். அவர் முகத்தை அதிகம் பார்க்காமல் இருக்க முயல்வேன் – அவர் சந்தோஷமாக இருந்தாரா? இல்லை மகிழ்ச்சியற்று இருந்தாரா?- அப்படிப் பார்த்தால் அவருக்குச் சங்கடமாக இருக்கும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. மாறாக, அவருடைய கைகளைப் பார்ப்பேன், அவையும் மனநிலைகளைத் தெரிவித்தன. ஒரு உணர்ச்சியும் வெளிப்படுத்தாத வேலைத்திறனை மட்டும். எதிர்பார்ப்புகள் இல்லாத நிலையை. மடி அடுக்கு, மடி அடுக்கு. ஸூஸியின் பளீரென்ற நிறத்திலிருந்த குட்டையான மேலுடைகள். எங்கள் பெரியப்பாவின் பருத்தி உள்ளாடைகள்.
இரவுணவு நேரத்தில், பெரியம்மா அனேக நாட்களில் வீட்டுக்கு வந்திருப்பார். சில நாட்களில் நாங்கள் உண்ண அமரும்போது அவசரமாக வீட்டுக்குள் நுழைவார். அவர் பலரைச் சந்திப்பதிலோ, கடை கண்ணிகளுக்குப் போவதிலோ, சர்ச்சுக்காக நல்ல காரியங்கள் செய்வதிலோ ஈடுபட்டதால் அவருக்கு நிறைய வேலைகள் இருந்தன. அவர் தாமதமாக வந்த ஒவ்வொரு தடவையும், மேஜையில் முழுச் சாப்பாடு இருந்ததைப் பற்றி வியப்படைவதாகவோ, கடமைப்பட்டவராக ஆனதாகவோ காட்டிக் கொள்வார். எங்கள் அம்மா ஸூஸிக்காகத் தனியாக ஏதும் சமைத்திருந்தால், ஸூஸியை இலேசாகக் கண்டிப்பார். பெரியப்பாவிடம் எல்லாமே மிகவும் சுவையாக இருந்ததில்லையா என்று கேட்பார்.
அவர் அதைச் சொல்லவே தேவை இருக்கவில்லை. எங்கள் அம்மாவின் சமையலைச் சாப்பிடும்போது அவருடைய உருளைக்கிழங்கு முகம் இலேசாக வியர்த்ததை நாங்கள் பார்த்தோம். எப்போதும் ஒரு முக்கியமான பண்டம், ஒரு குழம்பு அல்லது கூட்டு, மேலும் வியஞ்சனங்களின் படையெடுப்பு. பூண்டையும், சிவப்பு மிளகாயையும் மேலும் நிறைய ஊறிப் புளிக்க வைக்கப்பட்டிருக்கும் ஜங்குகளையும் அம்மா அச்சமின்றி நிறையப் பயன்படுத்தி இருப்பார்.
சாப்பாட்டுக்குப் பிறகு பெரியம்மா பாத்திரங்களைக் கழுவுவதைத் தான் செய்ய வேண்டுமென்று வற்புறுத்துவார். ஆனால் என் அம்மா சமையலறையில் இருந்து மேஜையைத் துடைத்து, பண்டங்களை கலன்களில் எடுத்து வைக்கும் வேலையைச் செய்தபடி இருப்பார். பெரியப்பாவுக்குப் பிடித்தமான கோப்பையையும் ஒரு ஸ்பூனையும் நினைவாக எடுத்து வைத்தது அம்மாதான், பெரியம்மா இல்லை. ஒவ்வொரு காலையும் பெரியப்பா குளியலறையில் இருப்பதை நாங்கள் கேட்போம், அவர் ஒவ்வொரு மூக்குத் துவாரத்தையும் பலமாகச் சிந்தும் ஒலி கேட்கும்; பிறகு சமையலறையிலிருந்து ஒரு கண்ணாடிக் கோப்பை தண்ணீரில் கிணுகிணுக்கும் கரண்டி ஒலி கேட்கும், அவர் மெடம்யூசில் என்ற ஒரு ஆரஞ்சுப் பொடியைக் கலந்து அருந்துவார். “உடல்” என்ற சொல்லை அருவருப்போடும், ஈர்ப்போடும் நான் நினைப்பேன்.
இன்னொரு புது நாள்.
செப்டம்பரில், நாங்கள் பள்ளிக்கூடத்துக்குப் போகத் துவங்கினோம். கானெஸ்டோகா வாலி ஜூனியர் ஹைஸ்கூல். கோடைக் காலம் பூராவும், நான் அறியும் ஆர்வமும், கவலையும் கொண்டிருந்தேன். சி-ஓ தனக்கு இரண்டுமில்லை என்று சொல்லிக் கொண்டான். எங்கள் பெரியம்மா ஒரு முறை காரோட்டிக் கொண்டு போய் அதைக் காட்டினார். ஒரு சிவப்புச் செங்கல் கட்டடம்; உயர்ந்த கம்பத்தில் பெரிய அமெரிக்கக் கொடி; வேலியேதும் இல்லாது, அண்மையிலிருந்த சோளக் கொல்லைகள் வரை நீண்ட பல ஏக்கர்களான புல்வெளி; நம் காலணிகளினடியில் ஒட்டிக் கொள்ளும் கனடா வாத்துகளின் கழிவுகள். இதுதான் அமெரிக்கப் பள்ளிக் கூடமா, என்று நான் நினைத்தேன். எங்களுக்கு வழக்கத்தில் தெரிந்திருந்தது, பள்ளியில் தூசி படிந்த முன்புற வெளியில் சீருடை சோதனைக்காக வரிசைகளில் நின்று விட்டு, மெகஃபோனில் கத்தலாக கொடுக்கப்படும் கட்டளைகளுக்காகக் காத்திருப்போம்: அதிலிருந்து இது எத்தனை வித்தியாசமாக இருந்தது.
இதற்குள், எங்களின் ஒன்று விட்ட சகோதரியோடு எங்கள் உறவு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி எனக்கு அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் போயிருந்தது, அவள் கோடை காலத்தின் பெரும்பகுதியில் கண்ணிலேயே படாமல் கழித்திருந்தாள். அவளுடைய தோழிகளின் அம்மாக்கள் ஓட்டி வந்த கார்களுக்குள் நுழைவாள். மௌஸ்காவை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் போய், கதவைச் சாத்திக் கொள்வாள். பள்ளிக் கூடத்தில் நாங்கள் கூடங்களில் கடக்கும்போது ஒரு சிறு கையசைப்போடு கடப்போம், மற்றபடி அவள் தன் தோழிகளுடன் இருந்தாள், நான் தனியாக இருந்து கொண்டேன். எனக்கு இது ஒத்து வந்தது. நான் இதை விரும்பினேன் என்று எனக்கே சொல்லிக் கொண்டேன். இதுதான் என் ரகசியம்: நாம் கவனித்துப் பார்க்கிறவர்களாக இருந்தால், தனித்திருப்பதாக உணர மாட்டோம். நம் கவனிப்புகளில் நமக்கென்று ஒரு சிறு கூட்டைக் கட்டிக் கொள்ளலாம். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொள்ளலாம். அவர்கள் கவனிக்காதவற்றை நாம் கவனிக்கலாம்.
அந்த வருடம் பூராவும், ஸூஸியும் அவளுடைய தோழிகளும், தவிர்க்க முடியாமல் தார்பூசப்பட்ட சாலையைக் கடந்து தூரத்தில் மறுபுறத்தில் இருந்த பையன்களை நோக்கிச் செல்லது துவங்குவதைப் பார்த்திருந்தேன். என் புத்தகவாசிப்பிலிருந்து இது எதற்காக என்பதை நான் அறிந்திருந்தேன். ஸூஸி எதையும் இகழ்ச்சியின் சக்தியோடோ அல்லது சுயநம்பிக்கையின் சக்தியோடோ செய்கிறாள் என்று கவனித்திருந்தேன். அவளும் என் பெரியம்மாவும் எப்போதும் சண்டை போட்டார்கள். சில சமயங்களில், உரத்து விட்ட குரல்களுக்கு அடுத்து எழும் ஆழ்ந்த மௌனமும், அறைந்து சாத்தப்படும் அறைக்கதவுகளும் கொணரும் எல்லாம் ஸ்தம்பித்த நிலையிலிருக்கும் வீட்டுக்குள்ளே நடந்து போவேன். நடுநிலையில், குளிர்ச்சியாக இருக்கும் என் கையால் பல பொருட்களைத் தொடுவேன்: ஒரு படத்தின் சட்டம், பியானோ, மாடிப்படிகளின் கைப்பிடிகள். நீண்ட இருண்ட நடைவழியே நடந்து போவேன், அப்போது எனக்குச் சொல்லிக் கொள்வேன், எனக்கு எந்த ஆசைகளும் இல்லை, ஆசைகள் இல்லை, ஆசைகள் இல்லை – அதை நம்பவும் செய்தேன்.
அந்த வருடம் நான் கவனித்த இன்னொன்று, ஸூஸியின் உடலை, அது எப்படி மாறிக் கொண்டு வந்தது என்பதை. என் அம்மாவுக்குத் துவைத்த துணிகளை மடிக்க நான் உதவி செய்தபோது, நாங்கள் என் பெரியம்மாவின் மார்க்கச்சைகளையும் – சாட்டின் துணியில் பதிக்கப்பட்ட நுரைப்பஞ்சுத் திண்டுகளால் கம்பீரமாக இருப்பன அவை- மேலும் ஸூஸியின் மார்க்கச்சைகளையும் மடிப்போம். அவளுடையன வெள்ளைப் பருத்தித் துணியில் மையத்தில் ஒரு இளஞ்சிவப்பு ரோஜாமொட்டு உருவோடு காணப்படும். என் அம்மாவின் மார்க்கச்சைகள் அவலமாகவும், உருச் சிதைந்தும் காணப்படும். அவர் அவற்றை வெகு வேகமாக மடித்து, ஒரு சுமைச் சட்டைகளடியில் கண்ணுக்குத் தெரியாமல் புதைப்பார். என்னைப் பொறுத்த வரை, எனக்கு இன்னும் பல வருடங்களுக்கு அவை தேவைப்படும் சாத்தியப்பாடே இருக்கவில்லை. இரு வருடங்கள் கழித்து, பள்ளி இறுதிவருடத்துக்கு முந்தைய வருடம் முடியவிருக்கையில், நான் திடீரென்று வெகு வேகமாக வளர்ந்தேன் – ஆறு மாதங்களில் ஆறு அங்குலம் உயர்ந்தேன் – என் கண் பார்வை மோசமாகியது, என் கணுக்கால்கள் நொடிக்கத் தொடங்கின, சில சமயம், பள்ளிவகுப்பு நேரங்களில் என் மார்பகங்களில் குத்தும் வலியைத் தாங்க முடியாமல் பாடப்புத்தகத்தை இறுக அணைத்துப் பிடிப்பேன். ஆனால் அப்போது, நாங்கள் ஸூஸியின் வீட்டில் வசிக்கவில்லை.
சி-ஓவைப் பொறுத்த வரை, அவன் இன்னும் துவக்கப் பள்ளியில்தான் படித்தான் என்ற போதும், அவன் என்ன செய்வான் என்று எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. கொரியாவில் அவன் செய்ததைப் போலவே, பள்ளியின் மைதானத்தில் அவனுக்கென்று ஒரு மூலையைப் பிடித்துக் கொண்டிருப்பான், மற்றப் பையன்கள் அவனை நோக்கி வருவார்கள். அவனைச் சுற்றி நின்று, அவன் என்ன வாங்குகிறான், விற்கிறான் என்று பார்க்க வந்திருக்கும் அவர்கள் வியாபார வட்டம் ஒன்றை உருவாக்குவார்கள். மற்றப் பையன்கள் இடித்துத் தள்ளி, உற்சாகக் கிளரியில் இருக்கக் கூடும், ஆனால் சி-ஓ எந்த உணர்ச்சியையும் காட்ட மாட்டான்.
அவன் அறையில் கள்ளத்தனமாக நோட்டம் விட்டதில் அவனுடைய துணி அலமாரியில் அவன் என்ன வைத்திருந்தான் என்று எனக்குத் தெரிந்திருந்தது. அடித்து ஒட்டும் கைவளைகள், மிட்டாய் சிகரெட்டுகள், நிண்டெண்டோ விளையாட்டு கார்ட்ரிட்ஜ்கள், விற்று வாங்கப்படும் விளையாட்டுக்காரர்களின் உருவப்படங்கள் கொண்ட அட்டைகள். அவன் சேகரித்த பொருட்களை வைத்து அவன் விளையாடி நான் பார்த்ததே இல்லை. அவை புதிதாக இருந்தால், அவற்றின் அசல் பாக்கேஜிலேயே அப்படியே வைத்திருப்பான்.
……
நாங்கள் கொரியாவிலிருந்து வந்து சில மாதங்கள் ஆன பிறகு, ஓர் இரவில் என் அம்மாவும் நானும் தரையில் விரிப்புகளை விரித்துக் கொண்டிருந்தபோது, என் பெரியம்மா எங்கள் அறைக்குள் வந்தார். “டொக், டொக்,” என்றார், ஆனால் அவர் ஏற்கனவே அறைக்குள் வந்திருந்தார். தலையில் முடியைக் கட்ட துண்டு ஒன்றைப் பட்டியாகக் கட்டி இருந்தார், தோலில் பூசப்பட்ட குழைவால் முகம் வழுவழுப்பாகவும் பளபளப்பதாகவும் இருந்தது.
அவர் விரிப்புகளைத் தாண்டி எட்டு வைத்து, மெத்தையின் ஓரத்தில் அமர்ந்தார். “ஓகே!” என்று இங்கிலிஷில் சொன்னவர், கொரிய மொழிக்கு மாறிக் கொண்டார். “ஒரு வேலை தேடிக்கணும்னு நீ சொன்னது உனக்கு நினைவிருக்கா?” என்றார்.
“நான் அப்படிச் சொன்னேனா?” படுக்கையை ஒழுங்காக விரிப்பதைத் தொடர்ந்து செய்தபடி என் அம்மா கேட்டார். அது பெரியம்மாவிடம் அவர் வழக்கமாகக் காட்டுகிற பாவனையாகியிருந்தது. மிகச் சரியாகப் பார்த்தால், மரியாதைக் குறைவென்று இல்லை, ஆனால் ஒத்துப் போவதாகவும் இல்லை. இது என் பெரியம்மாவை உரையாடலை இலேசான போக்கும், போலித்தனமான உற்சாகமும் கொண்டதாக வைத்திருக்கும்படி ஆக்கியது.
“ஆமாம், நீ சொன்னே, அதனாலெ, சரியா, ஸூஸியோட அப்பா ஒரு யோசனை செய்திருக்கார்.”
“ஸூஸியோட அப்பாவா, அவர் யாரு?” என்றார் என் அம்மா, கொஞ்சம் வக்கிரமாக. அந்த மாதிரி ஒரு துடிப்பு என் அம்மாவிடமிருந்து வந்தது எனக்குப் பிடித்திருந்தது. “ஸூஸியோட அப்பா”ங்கறது எனக்குமே வினோதமாகத்தான் இருந்தது. அந்த மாதிரி தோழிகள்தான் தங்கள் கணவர்களைச் சுட்டுவார்கள்- சகோதரிகள் செய்வதில்லை.
“ஓ, நான் யாரைச் சொல்றேன்னு உனக்குத் தெரியும்,” எங்கள் பெரியம்மா சிரித்தார். அக்காவின் கணவரைக் குறிக்கும் சரியான சொல்லுக்கு மாறினார், “ஹங் பு,” என்றார்.
என் அம்மா சிரிக்கவில்லை. “அந்த நபர் என்ன வேலையை யோசித்திருக்கிறார்?”
“இப்ப நான் சொல்றதைக் கேளு,” என்றார் என் பெரியம்மா. “அவர் நினைச்சார்- நாங்க நினைச்சோம்- ஒரு ஆஃபிஸ் வேலை உனக்கு ரொம்ப பாரமா இருக்குமுன்னு. ஃபோன் அழைப்புகளுக்குப் பதில் சொல்றது, செய்திகளை எழுதி வைக்கறது….”
“என்னோட இங்கிலிஷ் மோசமா இருக்கறதாலெயா.”
“ஓ, என்னோடதும் அப்படித்தான்!” என்றார் பெரியம்மா ஆர்வத்தோடு. “நான் எதை ரொம்ப வெறுக்கறேன்னு உனக்குத் தெரியுமா- அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு கூட? ஃபோன்ல அழைப்பு வர்றதை எடுக்கறதைத்தான். கூப்பிடறவர் அத்தனை இங்கிலிஷ் வார்த்தைகளையும் பேச ஆரம்பிக்கறபோது, அதுக்கெல்லாம் முன்பக்கமோ, பின்பக்கமோ எதுவும் இல்லைன்னு தோணும்.”
“எனக்கு என்ன மாதிரி வேலை ரொம்பக் கஷ்டமா இருக்காது?” என்றார் என் அம்மா.
என் பெரியம்மா தீவிரமானார். “உனக்குத் தெரியுமில்லையா, ஹங்-பு ஒரு ஆஃபிஸ்ல மானேஜர். இந்த ஆஃபீஸ்கள், அதுகள்லெ நிறைய இடங்களுக்கு ஒப்பந்தத்துலயே இருக்கு, நிர்வாகம்தான் சுத்தம் பண்ற வேலையைச் செய்யணும்னு.”
ஒப்பந்தத்துலயே இருக்கு. அவர் பேசியது வேறு யாரோ போல இருந்தது. எங்கள் பெரியப்பாவைப் போலப் பேசினார்.
“பாத்ரூம், அப்புறம் எல்லாரும் புழங்கற இடம் இப்படி நிஜத்துல அழுக்கு ரொம்பவே இருக்கிற வேலையை, சுத்தம் செய்யற ஒரு கம்பெனிக்காரங்கதான் செய்வாங்க. நீ வந்து வாக்குவம் பண்றது, தூசி தட்றது, குப்பைக் கூடையைக் காலி செய்யறது இந்த மாதிரி சுலபமான வேலைக்குத்தான் பொறுப்பா இருக்கணும்.”
அவர் என் அம்மாவைப் பார்த்தார்.
“எப்படியும், அதுக்கெல்லாம் கூட அவருக்கு வழக்கமாச் செய்யற ஒரு ஆள் உண்டு. ஒரு வியத்நாம்காரப் பொண்ணு. ஆனா, நீ வேலை தேடணும்னு சொன்னே… அதனாலெ…ஆனா, என்ன செய்யறதுங்கறது முழுக்க உன் கையிலதான் இருக்கு.”
அதற்குப் பிறகு, என் அம்மா ஒரு விரிப்பை மடேலென்று உதறி விரித்தார், அது சரியாக இடத்தில் படருவதை நாங்கள் எல்லாரும் பார்த்திருந்தோம். தலையணையை இடத்தில் வைத்து, அதைச் சமன் செய்தார்- இதை அவள் ஒருபோதும் செய்ததில்லை. அவருடைய கைகளின் மென்மையான அசைவுகளை நாங்களெல்லாரும் கவனித்தபடி இருந்தோம். பிறகு ஒரு போர்வையை அவர் பிரித்தார், அதை மறுபடி பாதியாக மடித்தார்.
“என்ன தெரியுமா?” என்றார் பெரியம்மா, கொஞ்ச நேரம் கழிந்தபின். “இதை நாம விட்டுடலாம்.”
“நான் இதை நிச்சயமாச் செஞ்சுதான் ஆகணும்,” என்றார் என் அம்மா.
“என்னது? நீ ஏன் இப்படிப் பேசறே? ப்ளீஸ். அப்படியே. இதை மறந்துடு.”
“நான் இதை நிச்சயமாச் செஞ்சுதான் ஆகணும்.”
எங்கள் பெரியம்மா குழம்பினாற்போலவோ அல்லது புண்பட்ட மாதிரியோ தென்பட்டார். திடீரென்று அவர் அழத் தொடங்கினார், “நீ என்ன செய்தே ஆகணும்னு யோசிக்காதே! நீ என்ன செய்ய விரும்பறேங்கறதைப் பத்தி யோசி! நான் உனக்கு உதவத்தான் முயற்சி பண்றேன்!”
“எனக்கு என்ன வேணுமோவா?” கேட்ட என் அம்மா, கடைசியில் பெரியம்மாவைப் பார்த்தார்.
அப்போது அவர் நான் எதிர்பார்க்காத ஒன்றைச் செய்தார். கொஞ்சம் சிரித்தார். “அவர் கிட்டே சொல்லு, நான் அதைச் செய்யறேன்னு. மேலெ, நான் வேலை செய்ய ஆரம்பிச்சதும், உனக்குக் கொஞ்சம் வாடகை கொடுக்க ஆரம்பிக்கறோம்.”
“ஏதாவது பைத்தியம் மாதிரி சொல்லாதே!” என்று திட்டினார் என் பெரியம்மா. “நாங்க அதை ஒருநாளும் வாங்கிக்க மாட்டோம்.” ஆனாலும், அவர் ஆறுதலாக உணர்ந்தார் என்று தோன்றியது. “இன்னொரு நாள் இதைப் பத்தி இன்னும் கொஞ்சம் பேசலாம். ஓ, இன்னொண்ணு. அவர் உனக்குப் பணமாக் கொடுக்கறதாச் சொன்னார், அதனாலே இது கையில பணமா இருக்கும்.”
படுக்கையிலிருந்து விசுக்கென்று எழுந்த அவர், அப்போதுதான் முதல் தடவையாக என்னைக் கவனித்தார். “சோ-யன் – ஆ, நைட் நைட்,” என்று இங்கிலிஷில் சொன்னபடி என் முன் நெற்றியைத் தொட்டார்.
அப்போது என் பெரியம்மாவைப் பற்றி எனக்கு ஏதோ புரிந்தது போல நான் உணர்ந்தேன். இயற்கையாக அவர் தாராள குணமுடையவர். எல்லாரையும் சந்தோஷப்படுத்தவே அவர் விரும்புகிறார். சுற்றத்தாருக்குப் பொருட்களைக் கொடுக்க அவர் விரும்புகிறார். அதே நேரம் அவர் கவனமில்லாமல் செயல்படுகிறவரும் கூட, பிறர் உணர்வுகளைப் பற்றிப் பொருட்படுத்தத் தெரியாதவர், மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் திறனற்றவர். உண்மையாகச் சொன்னால், இவரிடம் பணம் இருக்கிறது, என் அப்பாவிடம் பணம் இல்லை என்ற வேறுபாட்டைத் தவிர, பெரியம்மாவுக்கும் அப்பாவுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.
புதன்கிழமைகள், வியாழக்கிழமைகள், மற்றும் வெள்ளிக்கிழமைகள்தாம் என் அம்மா வெளியே புறப்பட்டுப் போக வேண்டிய நாட்கள். சில சமயம் என் பெரியம்மா அவரை ஓட்டிச் செல்வார். அல்லது சில சமயங்களில், ஸூஸிக்கு ஏதாவது பாட நேரமோ அல்லது நிகழ்ச்சியோ இருந்தால், என் பெரியப்பா அவரைக் காரில் ஏற்றிச் செல்வார். இதுதான் அடிக்கடி நேர்ந்தது என்பதால் இதுவே ஒரு வழக்கமான பாணியாகி விட்டிருந்தது.
சுத்திகரிப்பு நாட்களில், என் பெரியப்பா வேலையிலிருந்து மாலை வீடு திரும்புவார், தன் இரவுணவை வேகமாகச் சாப்பிடுவார், பின் என் அம்மாவோடு அலுவலகத்துக்குத் திரும்புவார். அங்கே அம்மா தன் வேலைகளை முடிக்கும் வரை காத்திருப்பார், இது எனக்கு விசித்திரமாக இருந்தது, அவரோ எதிலும் நட்டணைக்காரர், அனேகமாக எதையும், குறிப்பாக அவரது அன்றாட வழக்கங்களில், முறைப்படி செய்ய வேண்டுபவர். அந்தக் குறுகிய தூரக் கார்ப்பயணத்தில் அவர் ஏன் உடனே திரும்பி வந்து விட்டு, பிறகு திரும்பப் போய் அம்மாவை அழைத்து வரவில்லை? அல்லது எங்கள் பெரியம்மா, பெரும்பாலும் அவ்வளவு நேரம் கழிந்த பிறகு திரும்பி வந்து வீட்டில்தான் இருப்பார், அவர் ஏன் போய் அழைத்து வரவில்லை? இந்த ஏற்பாட்டில் ஏதும் விசித்திரமாக இருப்பதாகப் பெரியம்மாவுக்குத் தெரியவில்லை போலிருந்தது. அவர் தன் முகத்தில் பனிக்குழைவைப் பூசிய முகம் மின்ன, இங்குமங்கும் அலைந்து கொண்டிருப்பார், தூங்கப் போக விரும்பினால் சமையல் அடுப்பின் விளக்கை மட்டும் எரிய விட்டுப் போவார்.
அப்போது, என் அம்மா அலுவலகத்தில் நாற்காலிகளைச் சுற்றி வாக்குவம் க்ளீனரால் சுத்தம் செய்த போதும், ஜன்னல் திரைகளைத் தூசி தட்டிய போதும் என் பெரியப்பா என்ன செய்துகொண்டிருப்பார் என்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. அவர் கண்காணித்தபடி இருப்பாரா? எங்கெல்லாம் அம்மா சுத்தம் செய்யத் தவறினாளோ அதைச் சுட்டிக் காட்டுவாரா? கனமான மரக்கலன்களை, பொருட்களை நகர்த்த உதவுவாரா? குப்பை கூளங்களை ஓரிடத்தில் சேர்த்து அதையெல்லாம் பின்புறத்தில் இருந்த பெரும் குப்பைக் கங்காளத்தில் கொண்டு போய்ப் போட உதவுவாரா?
அல்லது… என்ன?
ஏதோ காரணத்தால் ஸூஸியையும், கிளுகிளுத்துச் சிரிக்கும் அவளது தோழிகளையும் பற்றி நினைத்தேன். தார்ச் சாலையை மெதுவாக நடந்து கடக்கும் அவர்கள்- மோதலைக் குறிக்கும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு கோட்டின் விளிம்பை நெருங்கும் அவர்களை. ஆனால் என் அம்மாவிடமோ, பெரியப்பாவிடமோ அப்படி எதிரெதிராக நிற்கும் வாய்ப்பை நான் காணவில்லை. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, மற்றவரின் இருப்பைக் கண்டு கொள்வது கூட நடக்க வாய்ப்பில்லை என்று என் நினைப்பு. எங்கள் பெரியப்பா சாப்பாட்டு மேஜையில் அமரும்போது, எப்போதோ ஒரு தடவை ஏதாவது இல்லாத ஒன்றைக் கேட்டுக் குரலெழுப்புவார், ஒரு தேக்கரண்டியோ அல்லது சிவப்பு மிளகாய்த் துவையலோ. சாப்பிடும்போது அவர் நிறுத்துவதே அபூர்வம், எனவே யார் அவர் கேட்டதைக் கொணர்ந்தார் – எங்கள் பெரியம்மாவா, என் அம்மாவா இல்லை நானா – என்று தலை நிமிர்ந்து கூட அவர் பார்த்ததில்லை.
இரவில் எங்கள் படுக்கையறைக் கதவைச் சிறிது திறந்து வைத்திருப்பேன், அம்மா திரும்பி வருவதை நான் கேட்பதற்காக. கராஜின் கதவு உருண்டு மேலே போகும் சப்தம் கேட்பதற்காக. சமையலறை மேடையில் சாவிகள் வைக்கப்படும் ஒலிக்காக. முன்னறையில் எங்கள் பெரியப்பா தொலைக்காட்சியை முடுக்கி விடுவார்- -பார்வையாளர் சிரிப்பொலிகளின் சத்தம் உள்ள ஏதோ காட்சி. அப்போது என் அம்மா சமையலறையில் இருக்கிறார், தன் இரவுணவைக் குனிந்து சாப்பிடுகிறார் என்று எனக்குத் தெரியும்- அனேகமாக ஒரு கிண்ணத்தில் இனிப்பான தானியவறுவல்களைச் சாப்பிடுவார். ஒரு நாற்காலியின் முனையில் அமர்ந்திருப்பார், சமைப்பதற்கான அடுப்பின் மேலே உள்ள விளக்கின் ஒளியின், முன்னறையின் ஒளியின் ஓரங்களில் இருந்து உண்பார். தனக்கென்று விளக்கைப் போட்டுக் கொள்ள மாட்டார். முடித்தபிறகு, கிண்ணத்தையும், தேக்கரண்டிகளையும் கழுவுதொட்டியில் அலம்பி விட்டு, அவற்றை உலர வைக்க இருக்கும் கூடையில் வைப்பார்.
பிறகு, அவர் எங்கள் அறைக்குள் நுழையும்போது, மங்கிய ஒளியில் சத்தமில்லாமல் நடந்து வருகையில், நான் கண்களைத் திறக்க மாட்டேன். தன் உடுப்புகளைக் கழற்றி விட்டு, இரவு ஆடையில் அவர் நுழையும்போது அவரைப் பார்த்திருக்க மாட்டேன். என் கட்டிலில் இருந்த இருவருக்கான படுக்கைக்கு அருகே தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில் அவர் படுக்கும்போது, திரும்பி கீழே படுத்திருக்கும் அவரைப் பார்க்க மாட்டேன். அல்லது, அப்படித் திரும்பி இருட்டில், கீழே விரிப்புக்குள் அவர் உருவாக்கிய வடிவத்தைப் பார்த்தாலும், அதை சப்தமின்றி மௌனமாகச் செய்வேன். அவர் அழுவதைக் கவனமாகக் கேட்பேன், அந்த அழுகைக்கு மென்மையான, தன்னில் ஊறிய, கிட்டத்தட்ட மன நிறைவளிக்கும் ஒலி இருக்கும் – ஏதோ அவர் ரகசியமாகச் சாப்பிடுகிறார் என்பது போல.
அப்போது, எங்கள் பெரியப்பா தன்னுடைய சாப்பாட்டுத் தட்டின் மீது தன்னுடைய உருட்டப்பட்ட கைத் துவாலையைப் போட்டு விட்டு, மேஜையிலிருந்து எழுந்து, என் அம்மாவிடம் சொல்வதை, “நாம போலாமா?” அந்தக் கணத்தை மனத்தில் உருவாக்குவேன். அந்த கராஜின் ஒரு மூலையில் அவள் வைத்திருந்த சுத்திகரிப்புக்கான பொருட்கள் இருந்த அந்த வாளியை. கவனிக்கத் தக்கதாக இல்லாத அவருடைய தலையின், உருளைக்கிழங்கு போன்ற வடிவை. அவள் முழங்காலிட்டுத் தரையில் கை ஊன்றி மேஜைகளின் அடியில் மின்சாரத்தைப் பெற உதவும் ப்ளக்பாயிண்டைத் தேடுவதைச் சித்திரித்துப் பார்ப்பேன். ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் என் பெரியம்மா, எப்படித் தன் சொந்தக் கணக்கிலிருந்து மோனே இல்லை ரெனுவாவின் ஓவியங்கள் பின்னணியாக இருக்கும் காசோலையில் $585 என்று ஒரு தொகையை எழுதுவார் என்பதை யோசிப்பேன். எனக்கு அது தெரிந்திருந்தது, ஏனெனில் என் அம்மா தன் வங்கிக் கணக்கில் அந்தக் காசோலைகளைச் செலுத்த நான் உதவினேன். அப்போது என்னால் விளக்க முடியாத எதையோ நான் புரிந்து கொள்ள ஆரம்பித்திருந்தேன். சொந்தக் கணக்கிற்கு எழுதப்பட்ட காசோலையின் நுட்பம் பற்றி. என் அம்மா ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தார் என்ற போதும், அது எங்கள் பெரியம்மா என் அம்மாவிற்குச் செய்த உபகாரம் போலத் தோற்றம் தரும்.
அடுத்த பகுதி
தொடரும்
பின்குறிப்புகள்:
- கதையில் பின்பகுதியில் ஸ்கின்ஷிப் என்பது ஏன் தலைப்பாகியது என்று சுட்டப்படும். இதற்குக் கிட்டத்தட்ட அர்த்தம் = தொட்டுறவு (பசைதல் என்பது அகராதிச் சொல்) ஆனால் ஸ்கின்ஷிப் என்பது ஒரு கட்டப்பட்ட சொல். கின்ஷிப் என்ற சொல்லிலிருந்து பிறப்பது என்று நாம் நினைப்போம். இது அனேகமாக கிழக்கு ஆசிய நாடுகளில் புழங்கும் சொல். இங்கிலிஷ் சொல்லைச் சற்று உருமாற்றி அப்படியே புழங்குகிறார்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்க: https://www.urbandictionary.com/define.php?term=Skinship
- மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ’யெஸ்டர்டே’ என்பது இங்கிலிஷ் பாப் இசைப் பாடகர்களான பீட்டில்ஸ் 1965 ஆம் வருடம் பாடிய சற்றே சோகமான ஒரு பாட்டு. மேலும் தகவல்களுக்கு: https://www.thebeatles.com/yesterday பாட்டை இங்கே கேட்கலாம். https://www.youtube.com/watch?v=wXTJBr9tt8Q
- த குட் எர்த் என்ற நாவலை பெர்ல் எஸ். பக் என்ற அமெரிக்க எழுத்தாளர் 1932 இல் சீனக் கிராம வாழ்க்கையைப் பற்றிய ஒரு நாவலை எழுதி வெளியிட்டார். அது பெரும் பிராபல்யம் பெற்று உலகம் பூராவும் விற்பனையானது. தமிழில் கூட 50களிலேயே இந்த நாவல் மென் அட்டைப் புத்தகமாகக் கிட்டியது. தமிழக அரசின் மாவட்ட நூலகங்களிலும், கிளைகளிலும் இது கிட்டி நான் பார்த்திருக்கிறேன். பெர்ல் பக் சிறு வயதிலேயே கிருஸ்தவப் பிரச்சாரகர்களான தன் பெற்றோருடன் சீனாவுக்குப் போனவர். வளர்ந்தவராகும் வரை சீனாவில் இருந்தவர் கல்லூரிப் படிப்புக்கு தாய்நாடான அமெரிக்காவுக்கு வந்து விட்டு, பட்டம் பெற்றபின் சீனாவுக்கே திரும்பினார். சுமார் 40 ஆண்டுகள் போலச் சீனாவில் கழித்திருக்கிறார். அந்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல் த குட் எர்த். இது முக்கோவை நாவல்களில் முதல் நாவல். இந்த நாவல் பெர்ல் பக்குக்கு புலிட்ஸர் பரிசையும், பிற்பாடு நோபெல் பரிசையும் பெற உதவியது. பெர்ல் பக்கின் வாழ்க்கைக் குறிப்பை விக்கிபீடியாவில் பெறச் சுட்டி இது: https://en.wikipedia.org/wiki/Pearl_S._Buck
- Third person limited = மட்டுப்பட்ட படர்க்கை நிலை என்று மாற்றி இருக்கிறேன். கதை, ஆசிரியர், நூல் பற்றி மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள்:கதாசிரியர் யூன் சோய் பற்றிய சில தகவல்கள் மற்றும் இந்தக் கதை பிரசுரமான புத்தகம் ‘ஸ்கின்ஷிப்’ பற்றிய ஒரு உரையாடலை இங்கே காணலாம்: https://koreasociety.org/arts-culture/item/1556-a-conversation-with-yoon-choi
- டச்-பே= Dutch-pay இந்தச் சொல் நேரடியாக இங்கிலிஷ் சொல்தான். கொரிய மொழியும், இங்கிலிஷும் கலந்த கொங்க்லிஷில் இது சொல்லாகி விட்டிருக்கிறது. பொருள்=அவரவர் கட்டணத்தை அவரவரே கொடுப்பது, குறிப்பாக உணவகங்களில், மற்றும் பயணங்களில். இது பற்றி விக்கிபீடியா சொல்வது இது: In South Korea, “going Dutch” is called “Dutch pay” (더치페이), a Konglish loan phrase. For romantic dates, men usually pay. (பார்க்க: Going Dutch – விக்கிபீடியா பதிவு)
- இந்த வரிகளின் இங்கிலிஷ் வடிவு இங்கே: ‘This is my letter to the world,/ That never wrote to me.” “And life is over there/ Behind the shelf.”
- ஜாகியா= 자기야 = அன்பே அல்லது அன்பானவளே என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். என் கண்ணே அல்லது செல்லமே என்றும் பயன்படுத்தலாம்.
Discover more from சொல்வனம் | இதழ் 361 | 22 பிப் 2026
Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “ஸ்கின்ஷிப் – பகுதி 1”