கதை பற்றிய குறிப்பு
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அறிவியல் முன்னேற்றங்கள் – ராயல் சொசைட்டி, துப்பாக்கிகள், தொழிற்புரட்சி என்பவை இந்திய வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவை. ஆனால் இந்த கதை அதன் வேர்கள் ஆழமாகவும், அகலவும் வளர்ந்த முக்கியமான ஒரு காலகட்டத்தை பற்றியது.
1600களின் இங்கிலாந்து என்பது சமூக-அரசியல் பரிசோதனைக்கூடம் போன்றது. அங்கே நடந்தது இந்திய மரபின் பாற்கடல் கடைவதை நினைவூட்டும். பல்வேறு சக்திகள் – பழைய பிரபுத்துவம், புதிய வர்த்தக வர்க்கம், மத சக்திகள், அறிவு ஜீவிகள் – ஒரே நேரத்தில் மோதிக்கொண்டும், இணைந்தும், புதிய அமிர்தமாகிய ஒழுங்கை உருவாக்கிக் கொண்டிருந்தன. வாசுகியாக செல்வமும், மந்தர மலையாக புதிய அரசியல் சிந்தனைகளும் பங்கு கொண்டு, ஆலகாலமான உள்நாட்டுப் போரையும், அமிர்தமான புதிய அரசியல்-பொருளாதார கோட்பாடுகளையும் உருவாக்கின.
தாமஸ் ஹாப்ஸின் ‘லெவையாதன்’ இந்த பாற்கடல் கடைவதின் முக்கிய விளைபொருள். அது வெறும் அரசியல் தத்துவ நூல் அல்ல. அதிகாரம், சட்டம், வணிகம், மதம் என அனைத்தையும் புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வைத்த புரட்சிகர நூல். பின்னாளில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகளாவிய சக்தியாக உருவெடுக்க இது போன்ற சிந்தனை மாற்றங்கள் அடித்தளமாக அமைந்தன.
இந்த கதை அத்தகைய பெரும் மாற்றத்தின் ஒரு துளியை – ஒரு ஓவியரின் கண்களின் வழியேயும், அவர் வாழ்வின் வழியேயும் காட்டுகிறது. அவரது தூரிகையில் படியும் வண்ணங்களிலும், அவரது வாழ்வில் ஏற்படும் திருப்பத்திலும், வரும் காலத்தின் நிழல்கள் தெரிகின்றன.
அது 1652, லண்டன் நகரம். தாமஸ் பிளாக்வுட் தன் கைகளில் ஆட்டுத்தோலில் அட்டையிடப்பட்ட செய்யப்பட்ட புத்தகத்தை இறுக்கப் பிடித்திருந்தார். விலங்கு கொழுப்பால் செய்யப்பட்ட மெழுகுவர்த்தி வெளிச்சம் ஃப்ளீட் தெருவில் உள்ள அவரது அறையில் அவருடன் அமர்ந்திருந்தது. அந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் தாமஸ் ஹாப்ஸின் “லெவையாதன்” என்ற புத்தகத்தின் புதிய மை மின்னியது – புதிய காலத்தினை அறிவிக்கும் புதிய புத்தகம். வெளியே, இலையுதிர்கால மழை லண்டனின் கற்பாறைகளில் முழங்கியது, நகரத்தின் சந்து பொந்துகளில் மாற்றத்தின் கிசுகிசுப்புகளைக் கொண்டு சென்றது.

தாமஸ் பிளாக்வுட் லெவையாதன் புத்தகத்தின் முன்பக்க விளக்கப்படத்தை வெறித்து பார்த்தார். அந்த புத்தகத்தை அவரால் மூட முடியவில்லை. அதில் நூற்றுக்கணக்கான சிறு மனிதர்களால் ஆன பேருடல் – அரசின் உருவகம் – வாளும் செங்கோலும் ஏந்தி நின்றது. சிறு வயதில் அவர் தாத்தாவிடம்,தந்தையிடம்,அன்னையிடம் கற்றது நினைவுக்கு வந்தது – “அரசர்களின் அதிகாரம் இறைவனால் வழங்கப்பட்டது. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இறையாணை பெற்றவர்கள்”. ஆனால் இப்போது அவர் கையில் இருந்த புத்தகம் வேறு ஏதோ சொல்கிறது – மனிதர்களால் உருவாக்கப்பட்ட அதிகாரம், செய்விக்கப்பட்ட கட்டுமானம் என்கிறது.

தந்தை சொல் மனதில் ஓடியது – “கலைஞனாக மட்டுமே பிறந்தவன் கலைஞனாகவே இருப்பான். அதுதான் இறைவன் விதித்த ஒழுங்கு”. ஆனால் இப்போது அவர் முன் ஒரு வாய்ப்பு – லேடி ஆன் டெவெரோக்ஸின் விதவையான சகோதரியை மணந்து பிரபுவாகலாம். பழைய ஒழுங்கை மீறி புதிய வாழ்க்கை. பரம்பரை பிரபுக்கள் கூட தங்கள் பழைய வாழ்க்கையை விட்டு வர்த்தகம் செய்கிறார்கள். இறையாணை மாறிவிட்டதா? அல்லது இறையாணையே கற்பனையா?
மெழுகுவர்த்தி ஒளியில் லெவையாதனின் பக்கங்களை மெதுவாக புரட்டினார். சார்லஸ் மன்னர் சட்டரீதியாக கொலைத்தண்டனை அடைந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. இறையாணையால் ஆட்சி செய்த மன்னர் புதிய அதிபர் குரோம்வெல்லால் தூக்கிலிடப்பட்டார். இப்போது புதிய காலம் – வர்த்தக ஒப்பந்தங்களால் இயங்கும் உலகம். ஆனால் அவர் மனதின் ஆழத்தில் பழைய நம்பிக்கைகள் இன்னும் வேரூன்றி இருந்தன. இந்த புத்தகம் அவற்றை அசைத்துப் பார்க்கிறது.
ஜன்னல் வழியாக பார்த்தார். துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த டச்சு வணிகப்பல் அவரின் மனதை போல் கடலில் மெல்ல ஆடிக் கொண்டிருந்தது. அதன் உடல் நிரம்பியிருந்த சரக்குடன் ஓங்கி உயர்ந்து காணப்பட்டது. அத்தனை சரக்கும் டச்சுக்காரர்களின் தங்கமாக நிரம்பும், அந்த தங்கம் உருவாக்கிய டச்சு நகரங்களை எண்ணுகையில் அவருக்கு லண்டன் கிராமபுறமாக தெரிந்தது. டச்சு கலைஞர்கள் ஓவியம், கட்டிடம் ஆகியவற்றில் தன்னை விட கூடுதலானவர்கள் என்பது எரிச்சலை ஊட்டியது. டச்சு கடல்படை அச்சத்தினை தந்தது. அது இனி லண்டனை விட கூட வளருமோ என தனக்குள் கேட்டுக் கொண்டார்.
கப்பல்களின் பாய்மரங்களுக்கு அப்பால், வெஸ்ட்மினிஸ்டர் கோபுரம் தெரிந்தது. அங்கேதான் சார்லஸ் மன்னர் தனது தெய்வீக உரிமையை வாதாடினார். அதே இடத்தில் குரோம்வெல் தன்னை “ கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கருவி “ என சொன்னார். மன்னரின் “தெய்வீக உரிமை”க்கு எதிராக, “தெய்வீக தேர்வு” என்ற புதிய கோட்பாடு சொன்னார். இரண்டு தெய்வீக உரிமைகள் மோதிக்கொண்டன. ஆனால் வென்றது தெய்வீக தேர்வு என சொல்லிக் கொண்ட ராணுவ பலம்தான். இப்போது அதே வெஸ்ட்மினிஸ்டரில் வர்த்தக சட்டங்கள் விவாதிக்கப்படுகின்றன.
அறையில் அவர் வரைந்துக் கொண்டிருந்த திருமதி ரீட்டின் உருவத்தை உற்று பார்த்தார். “பழைய பிரபுத்துவ குடும்பங்களின் உருவப்படங்களில் தான் பார்த்த தெய்வீக ஒளி, மேன்மை, அதிகாரம் – அவற்றை இந்த வர்த்தக குடும்பத்து பெண்ணின் முகத்தில் எப்படி கொண்டு வருவதால் அது நிஜமாகுமா?” என அவர் உள்ளம் கேட்டது.
ஆனால் அவரது தூரிகை வேறு ஏதோ செய்ய விரும்பியது – புதிய காலத்தின் தன்னம்பிக்கையை, சுய-முனைப்பை வரைய விரும்பியது. அவருக்கு தான் எழுதிய கடிதம் நினைவுக்கு வந்தது – விதவை மார்கரெட்டை மணந்து பிரபுவாக வேண்டும் என்ற தனது விருப்பம். பழைய உலகத்தின் அதிகாரம் புதிய உலகின் கலையுடன் கலக்கும் புள்ளி. தான் வரையும் இந்த ஓவியமும் அப்படித்தானே? பழைய கலை மரபுகளை புதிய வர்த்தக வர்க்கத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றுவது.”
தாமஸ் தனது நெற்றியில் விரல்களை அழுத்தினார், அங்கே வண்ணம் இன்னும் பிடிவாதமாக ஒட்டிக்கொண்டிருந்தது. அவரது சமீபத்திய ஓவியம், அவரது நண்பனும் வணிகனும் ஆன ரீடின் மனைவியின் உருவப்படம். வண்ன வரைபலகை மீது முடிக்கப்படாமல் நின்றது, அவளது கண்கள் சீக்கிரம் வேலையை முடி என விரும்புவது போல அவரைப் பின்தொடர்ந்தன. அவள் தோள் பட்டையை வெளிப்படுத்தும் கழுத்துப்பகுதி, பளபளக்கும் பட்டு துணிகள், லேஸ் காலர்கள், அலங்கார மெட்டாலிக் லேஸ் விளிம்புகள் என அனைத்தையும் தன் படத்தில் சேர்க்க வேண்டினாள். இந்நாட்களில் அனைவரும் இந்த நாகரிகத்தை காட்ட விரும்புகின்றனர் என நினைத்துக் கொண்டார்.அந்த படம் வரைவதால் வரும் பணம் அவரது கடன்களை மட்டுமே சரிகட்டும். அவர் ஆசைப்படும் வட்டாரங்களில் நுழைய போதாது.
“உங்கள் தந்தை சரியாகச் சொன்னார் அல்லவா,” என ஓவியத்தின் உள்ளிருந்து அவள் சொல்வது போல் தோன்றியது.
“கலைஞனின் வாழ்க்கை என்பது என்றைக்கும் கையேந்தும் வாழ்வுதான்.” அப்பா சொன்னதை நினைவுக்குள் வரைந்தார்.
ஆனால் தாமஸ் மற்றவர்கள் பார்க்க முடியாததை ,பார்க்க விரும்பாததை பார்த்தார். இங்கிலாந்தில் பிரபுக்கள் நடத்திய கூட்டாட்சியின் பிடி தளர்ந்து கொண்டிருந்தது. மதுபான விடுதிகளிலும் காபி கடைகளிலும், அவர் அதிருப்தியின் முணுமுணுப்புகளைக் கேட்டார், முன்னாள் ராஜ விசுவாசிகள் நிழல்களில் குறியீட்டு செய்திகளை பரிமாறிக் கொள்வதைக் கவனித்தார். பிரான்சில் நாடு கடத்தப்பட்ட அரசவை நாளுக்கு நாள் வலுவடைந்து வந்தது, அதிலேதான் அவரது மாற்றத்திற்கான வாய்ப்பும் அவருக்கு வண்ணப்படமாக வளர்ந்து கொண்டிருந்தது. அவருக்குத் தெரியும், ஆம்ஸ்டர்டாமுக்கும் லண்டனுக்கும் இடையே கப்பல்கள் சரக்குகளை மட்டுமல்ல, மீட்சியின் கிசுகிசுப்பு செய்திகளையும் கொண்டு செல்கின்றன.
லேடி ஆன் டெவெரோக்ஸின் கடிதம் அவரது மேஜையில் திறக்கப்படாமல் கிடந்தது, முத்திரையில் அவள் குடும்பத்தின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. பாராளுமன்றத்துடனும் சிதறிக்கிடந்த ராஜவிசுவாச வலைப்பின்னலுடனும் தொடர்புகளை பராமரிக்க முடிந்த குடும்பம். முக்கியமாக, அவர்கள் டச்சு கிழக்கிந்திய கம்பெனியில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்திருந்தனர், தேசப்பற்றுக்கும் லாபத்திற்கும் இடையிலான அந்த மெல்லிய ஊசியை நூல் கோத்திருந்தனர். அவளது வார்த்தைகள் எல்லாவற்றையும் மாற்றக்கூடும்: அவளது உருவப்படத்தை வரைய அழைப்பு, ஆனால் முக்கியமாக, அவளது விதவையான சகோதரியின் கையை பெற தகுதியானவர் என்பதை நிரூபிக்க வாய்ப்பு.
தன் கையை தன்னிச்சையாக நோக்கினார். இது அதற்கு தகுதியானதா என யோசனை வந்தது. கையில் தாமஸ் ஹாப்ஸின் லெவையாதன் புத்தக முன்பக்க படம் அவரது கவனத்தை ஈர்த்தது. அந்த பெரிய செயற்கை மனிதன், எண்ணற்ற சிறிய மனிதர்களால் ஆனவன், ஒரு கையில் வாளையும், ஒரு கையில் பாதிரியார் கோலையும் ஏந்தியவன். பெரிய மனிதனை நிரப்பும் சிறிய மனிதனில் தன் முகம் போல ஒரு முகமிருக்குமா என உற்று நோக்கினார். இதுதான் என் உள்ளம் தேடுவதா என மெல்ல சிரித்துக் கொண்டார். ஆள்பவன், அதிகாரத்தின் மனித ரூபம். ஹாப்ஸ் கொடுத்த ரூபம். லண்டன் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பக்கங்களை புரட்டினார்.
அப்பொழுது கதவினை தட்டும் ஓலி எழுந்தது. முதல் தட்டு அவர் காதுக்கே வரவில்லை. இரண்டாம் தட்டு காதில் கேட்டபோது, விரைவாக புத்தகத்தை மூடி வைத்து விட்டு, தன் தூரிகையை எடுத்து, திருமதி ரீட்டின் முடிக்கப்படாத உருவப்படம் காத்திருந்த சித்திரச்சட்டத்தை நோக்கி நகர்ந்தார். ஐந்தாம் தட்டில் கதவைத் திறந்தபோது அவரது விரல்களில் மை கறை படிந்திருந்தது.
ஹாரிசன் ரீட் முதலில் வந்தார். அது அவரது வழக்கம். பிற நண்பர்கள் வந்து கூடும் முன் தன் மனைவியின் படம் எப்படி வந்து கொண்டிருக்கின்றது என்பதை காண ஆர்வம் கொண்டிருந்தார். அவர் கையில் ப்ரெஞ்ச் ஒயின் புட்டி இருந்தது. “எங்கள் கம்பனி விஷயமாக துறைமுக குடோனுக்கு சென்றிருந்தேன். சுங்க அதிகாரி மன் அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க எடுத்துப் போனேன். அவர் இல்லை. ஆகவே இது நமக்குத்தான்” என்று மெல்லிய புன்னகையுடன் சொன்னார். அவரது இன்னோரு கையில் இருந்த தோல் பை கிழக்கிந்திய கம்பெனி ஆவணங்களால் கனத்திருந்தது.
ரீட் ஜன்னலருகே உள்ள தேய்ந்த தோல் நாற்காலியில் அமர்ந்தார். கீழே தெருவையும் துறைமுகத்தில் கப்பல் விளக்குகளையும் கவனிக்க சரியாக அமைந்திருந்தது. சமீபத்தில் வணிகரான ரீடின் புதிய மோதிரங்கள் ஒளியில் பிரகாசித்ததை தாமஸ் கவனித்தார். அந்த வருட நவநாகரீக டிசைனில் இருந்தது, புதிய செல்வத்தின் சூட்சுமமான அறிவிப்பாக ஓவியத்தில் வரையக் கூடியது என தாமஸ் நினைத்துக் கொண்டார்.
வில்லியம் பிளாக்ஸ்டோன் அடுத்த அரை மணி அளவில் தோன்றினார். அவரது சட்ட எழுத்தர். அவரது அங்கி மழையில் நனைந்து சிறிது ஈரமாக இருந்தது. “இந்த வழியாக வேலைக்கு போனேன், சரி உன்னை காணலாம் என வந்தேன்” என்றார்.
பிளாக்ஸ்டோன் ஓக் மேஜையில் அருகே நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு அமர்ந்தார். கண்களால் மேஜையை துலாவி லேடி ஆன் டெவெரோக்ஸின் கடிதம் திறக்கப்படாமல் கிடந்ததை கண்டதும் பிளோக்ஸ்டோன் முகம் மலர்ந்ததை தாமஸ் பார்த்தார்.
கடைசியாக வந்தவர் ஜேம்ஸ் ஆஷ்வர்த். அவர் வருகையில் மணி இரவு துவங்கி இருந்தது. அவரது நேரம் தேம்ஸ் நதியில் படகை கொண்டு வரும் இரவு அலையை சார்ந்திருந்தது. அவரது கோட்டின் நெசவில் இன்னும் கடல் உப்பும் கிழக்கத்திய மசாலாப் பொருட்களும் படிந்திருந்தன. அறையின் கணப்பின் அருகே நாற்காலியை போட்டு அமர்ந்தார்.
“நீங்கள் எல்லோரும் இங்கே இருப்பீர்கள் என நினைத்தேன்,” என்றார். வழக்கம் போல மூன்று காபி கடைகள், இரண்டு மதுபானக் கடைகளில் முணுமுணுத்த உரையாடல்களில் திட்டமிடப்பட்ட அவர்களின் சந்திப்பு திட்டமிடப்படாதது போல துவங்கியது.
“இன்று நான் ஜோனாதனை பார்த்தேன். பழைய நினைவுகள் வந்தன. என்னுடன் எட்ஜ்ஹில் போரில் இருந்தார். யுத்தத்தில் எங்களுக்கு ஒரே இடத்தில் வேலை, அவன் சமையலை செய்தான், நான் அதற்கு கணக்கு எழுதினேன். நடந்ததை மறக்க முடியாது,” என ப்ளாக்ஸ்டோன் தொடங்கினார். “அக்டோபர் மாதம் 42ம் வருடம். ரப்பர்ட் இளவரசரின் குதிரைப்படை எதிரிகளை நோக்கி பாய்ந்தது. அவர் வெறும் 23 வயது இளைஞர். ஆனால் அவரது குதிரைப்படையினரின் வேகமும், துணிச்சலும் தெய்வீக தேர்வு சொன்ன படையினரை திகைக்க வைத்தது. ஆனால் நான் கவனித்தது வேறொன்று – இரு படைகளிலும் இருந்தவர்கள் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். வார்விக்ஷயர், ஆக்ஸ்ஃபோர்ட்ஷயர் கிராமங்களில் இருந்து வந்த இளைஞர்கள். ஒரே சந்தையில் வியாபாரம் செய்த குடும்பங்கள்.”
“என்னாலும் அந்த இலையுதிகாலத்தை மறக்க இயலாது,” என ரீட் குறுக்கிட்டார், கையில் இருந்த மதுக்கோப்பையை இறுக்கிப் பிடித்தபடி. “என் கம்பளித் துணிக் கிடங்கு எட்ஜ்ஹில் சமவெளிக்கு அருகே இருந்தது. அதே கிடங்கில்தான் அப்போது கிழக்கிந்தியக் கம்பெனியின் பருத்தித் துணிகளையும் சேமிக்கத் துவங்கியிருந்தேன். கம்பளி வியாபாரம் மட்டும் போதாது என்று புரிந்து கொண்ட காலம்.”

“போர் நடக்கும் போது நான் லண்டனில் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் புதிய ஒப்பந்தம் பேசிக்கொண்டிருந்தேன். எனது கிடங்கு காப்பாளர் ஜேக்கப் அங்கிருந்தான். அவன் கண்ட காட்சிகளை இன்றும் சொல்வான்.”
“போர் முடிந்த மறுவாரம் காலை நான் கிடங்குக்கு சென்றேன். ஊர் தெருக்களில் குதிரைகளின் குளம்படிகள் பதிந்திருந்தன – நிலத்தின் மீது வலி தடம் பதித்தது போல. எங்கும் இரத்தக்கறைகள். நான் வியாபாரம் செய்த குடும்பங்களின் மகன்கள் போர்க்களத்தில் இறந்தனர். ஒரு பக்கம் வில்லியம் ஹேவர்ஷாம் – கிழக்கிந்திய கம்பெனியின் துணிகளை வாங்கும் இளம் வியாபாரியின் மகன்.நன்கு பேரம் பேசுவான். மறுபக்கம் தாமஸ் ஷெப்பர்ட் – தலைமுறை தலைமுறையாக எனக்கு கம்பளி விற்றவர்”
“என் துணிகளை சண்டையில் யாரும் திருடாமல் பாதுகாக்க பெரிய செலவானது.” ரீட்டின் குரல் மெல்ல நடுங்கியது. “நல்ல திறமையான ஆட்கள் பலர் போர் போட்டியில் கை கால் இழந்தனர், உயிர் இழந்தனர். நட்டம்…” – அவர் வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினார். மதுக்கோப்பையை மேஜையில் வைத்தார். கோப்பையின் தங்க விளிம்பில் மெழுகுவர்த்தி ஒளி தெறித்தது, அவர் கண்களில் ஈரம் மின்னியது.
தாமஸ் லெவையாதனை உயர்த்திக் காட்டினார். “ஹாப்ஸ் இதையே சொல்கிறார் – ‘மனிதர்கள் அதிகாரத்தின் மீதான முடிவற்ற, ஓயாத ஆசையால் இயக்கப்படுகிறார்கள். இந்த ஆசை மரணத்தில் மட்டுமே முடிவடைகிறது.’ ஒரு பக்கம் தெய்வீக உரிமைக்காக போராடுகிறது, மறுபக்கம் தெய்வீக தேர்வுக்காக உரிமைகளுக்காக போராடுகிறது. ஆனால் இறுதியில் என்ன மிஞ்சுகிறது? மரணமும், அழிவும் தான்.”
ரீட் மேஜையில் இருந்த லெவையாதனில் ஒரு பத்தியைச் சுட்டிக் காட்டினார். “கவனியுங்கள் நண்பர்களே – ஹாப்ஸ் ஒரு இதுவரை இல்லாத ஒரு கருத்தைச் சொல்கிறார். அரசு என்பது இயற்கையாக தோன்றியதல்ல, கடவுளால் உருவாக்கப்பட்டதும் அல்ல. மனிதர்களால் உருவாக்கப்பட்ட, கட்டமைக்கப்பட்ட அமைப்பு. மனிதர்கள் இயற்கையாக தங்கள் மனநிலை உருவாக்கும் போட்டி, பொறாமை போன்ற ஆபத்துகளில் இருந்து தப்பிக்க, தங்களை காத்துக்கொள்ள ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதன்படி தங்கள் அதிகாரங்களை ஒரு மைய ஆட்சிக்கு வழங்கினார்கள். இதுதான் அரசு – பல மனிதர்கள் இணைந்து உருவாக்கிய ஒரு பெரிய இயந்திரம். முற்றதிகாரம் கொண்ட இயந்திரம்”
“கடவுள் மட்டுமே ஆள்பவர்களை உருவாக்க முடியும் என்று நம்பி வாழ்ந்தோமே,” என்றார் ஆஷ்வர்த், தன் மதுக்கோப்பையை சுழற்றியபடி புன்னகைத்து. “ஆனால் இதோ நம் தாமஸுக்கு ஒரு திருமணம் மூலம் பிரபு ஆகும் வாய்ப்பு வந்திருக்கிறது.”
“இல்லை,” என்றார் தாமஸ், கையில் இருக்கும் துரிகையால் வண்ணங்களை கலந்து கொண்டே “ஆழமாகப் பாருங்கள். எது அதிக கட்டமைக்கப்பட்டது? நான் பிரபுத்துவம் வேண்டி ஆசைப்படுவதா, பழைய பிரபுக்கள் தங்கள் அதிகாரம் கடவுளிடமிருந்து வந்த தெய்வீக உரிமை என்று நடிப்பதா? இரண்டையும் ஒப்பிட்டால் என்ன தெரிகின்றது?”
ரீட் முன்னோக்கிச் சாய்ந்தார், மெழுகுவர்த்தி ஒளி அவரது புதிய முத்திரை மோதிரத்தில் பட்டது. “அரசு ஒப்புதலால் இருக்கிறது என்கிறார் ஹாப்ஸ். ஆனால் யாருடைய ஒப்புதல் இப்போது முக்கியம்? காலனி தங்கம் கப்பல்களைக் கட்டும்போது, மிளகு படைகளுக்குப் பணம் தரும்போது…”
“வணிகர்களின் மகள்கள் பிரபுக்களின் மகன்களை மணக்கும்போது,” என்று பிளாக்ஸ்டோன் சேர்த்தார்.
“அரசு மாறுகிறது,” என்று தாமஸ் சொன்னார். சபை மௌனமானது.
பின்னர் . “வண்ணம் சித்திரமாவது போல. ஒவ்வொரு தூரிகைத் தடமும் அர்த்தமற்றது, ஆனால் இறுதி உருவம் தனிப்பட்ட துரிகை தடம் குறிக்கும் பொருளை விட மெய்யானது.” என மௌனத்தினை நிரப்பினார்.
ரீட் கப்பலின் விளக்குகள் ஆடுவதைப் பார்த்தபடி. “மெட்ராஸில், நான் அதைத் தெளிவாகப் பார்த்தேன். அரசு என்பது நாம் உருவாக்கியது எதுவோ அதுதான். கம்பெனிகள், ஒப்பந்தங்கள், மசாலாப் பொருட்கள் நிறைந்த கப்பல்கள். தெய்வீக உரிமை இல்லை, வணிகமும் ஒப்புதலும் மட்டுமே.”
“அதிகாரமும்,” என்று ரீட் முணுமுணுத்தார், “நீரைப் போல பாய்கிறது, புதிய பாதைகளைக் கண்டுபிடிக்கிறது.”
நால்வரும் கொஞ்ச நேரம் அமைதியானார்கள். வெளியே லண்டன் தேய்பிறை நிலவின் கீழ் தனது பழைய கனவுகளைக் கண்டது.
மெழுகுவர்த்திகள் மங்கலாக எரிந்து கொண்டிருந்தபோது, ரீட் லெவையாதனை எடுத்து, மதுவால் நடுங்கும் கையுடன் அதன் பக்கங்களைப் புரட்டினார். “வித்தியாசமாக இருக்கிறது, இல்லையா? ஹாப்ஸ் மனிதர்கள் தங்கள் இயற்கையாக உள்ள உரிமைகளை உடன்படிக்கைகள் வழியாக இறையாண்மையிடம் ஒப்படைப்பதைப் பற்றி பேசுகிறார், இன்றைக்கு வர்த்தகம் மட்டுமே நமது இறையாண்மையா?”
“வெறும் வர்த்தகம் மட்டுமல்ல.” இருளில் பிளாக்ஸ்டோனின் குரல் மெதுவாக ஒலித்தது. “நாம் நமது பழைய தன்மைகளை எப்படி கைவிடுகிறோம் என்று பாருங்கள் – தாமஸ் பிறப்பால் பிரபு ஆகாமல் திருமணத்தால் பிரபு ஆகி தனது ஓவிய மரபில் இருந்து விடுபடுகின்றார், உங்கள் தந்தையின் துறைமுகத்தில் சரக்கு இறக்கி வைக்கும் தொழில், என் தாத்தாவின் அரச மாளிகை விதிகளை பிரதி எடுக்கும் செய்யும் தொழில். நாம் விலக்கியவை உண்டு. நாம் அவற்றை ஏதோ பெரிய விஷயத்திற்காக விட்டுக்கொடுக்கிறோம்.”
“மிளகாலும், பருத்தி சாயங்களாலும், கரும்பாலும் எழுதப்பட்ட உடன்படிக்கை,” தாமஸ் மெதுவாக கூறினார், திருமதி ரீடின் உருவப்படத்தில் நிழலைச் சேர்த்து, அவளை மேன்மையாகவும் அதே நேரத்தில் உக்கிரமாகவும் ஆக்கி காட்டினார்.
“ஆனால் நமக்கு பதிலாக என்ன கிடைக்கிறது?” ரீட் புத்தகத்தை மூடியபடி கேட்டார். “ஹாப்ஸ் பாதுகாப்பையும், அமைதியையும் வாக்களிக்கிறார்…”
“நமக்கு வாழ்வின் சாத்தியக்கூறுகள் கிடைக்கின்றன.” ஆஷ்வர்த் ஜன்னலிலிருந்து திரும்பினார், அவரது முகத்தில் பாதி வெளிச்சம் விழுந்தது. “அமெரிக்க காலனியில் நம் வர்ஜீனியா விவசாயிகள் தேடுவதும் அதுதான், ஒவ்வொரு வணிகரும் தனது கப்பல் கிழக்கே பயணிக்கும்போது கனவு காண்பதும் அதுதான். பிறப்பு விதியாக இல்லாத உலகம்.”
“நாம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டிக்கொண்டிருக்கும் உலகம்,” தாமஸ் கூறினார், “ஒரு கேன்வாஸ், ஒரு வணிக ஒப்பந்தம், ஒரு சரக்கு என ஒவ்வொரு சிறிய செயலின் வழியாக நாம் கட்டிக் கொண்டிருக்கும் உலகம்.”
அந்த மனிதர்கள் அமைதியானார்கள், ஒவ்வொருவரும் தங்களிடம் இருந்து பறிபோன கடந்த காலத்தையும், தங்களால் வாங்கப்பட்ட எதிர்காலத்தையும் சிந்தித்தபடி இருந்தனர்.
ப்ளாக்ஸ்டோன் மேஜையில் கடிதத்தை தூக்கி நண்பர்களிடம் காட்டியபடி தாமஸிடம் கேட்டார். “இன்னமும் லேடி ஆன்னின் அழைப்பை யோசிக்கிறீர்களா? பாராளுமன்றம் புதிய சொத்து சட்டங்களைப் பற்றி பேசுகிறது. இறந்த சார்லஸ் மன்னரின் விசுவாசிகளின் சொத்துக்களை மறுபகிர்வு செய்யப்போகிறார்கள். அதற்குள் லேடி ஆனின் தங்கை மார்கெரட்டை திருமணம் செய்து, அவள் சொத்து உரிமையை நிலைநாட்டுவது நல்லது.”
” வேறு யாராவது விதவை மார்கரெட்டை மணம் முடிப்பதற்கு முன் முந்த வேண்டியதும் உள்ளது,” ஆஷ்வர்த் கூறினார், கணப்பில் தன் கைகளை சூடாக்கிக்கொண்டே. “அவளுடைய மறைந்த கணவரின் பார்படோஸ் கரும்பு தோட்டங்கள் இங்குள்ள விவசாய, மேய்ச்சல் நிலங்களின் குத்தகை வருமானத்தை விட அதிக வருவாய் தந்தது என்கிறார்கள்.”
தாமஸ் தன் தூரிகை வேலையைத் தொடர்ந்தார், அலட்சியமாக . “நீங்கள் இப்போது டச்சு வணிகர்களைப் போல பேசுகிறீர்கள், பிரபுத்துவத்தை கரும்பு பீப்பாய்களால் அளக்கிறீர்கள்.”
“இரத்தத்தை விட கரும்பு மேல்,” பிளாக்ஸ்டோன் குறுக்கிட்டார்.”உங்களுக்கும், மார்கெரட்டுக்கும் என் நிறுவனம் சட்ட உதவி செய்யும், ஏற்கனவே பல பிரபுக்கள் எங்களிடம் வருகின்றார்கள்”
“இயற்கை ஒழுங்கு தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது,” ரீட் ஆரம்பித்தார், ஹாப்ஸின் புத்தகத்தை உயர்த்தியவாறே. “உங்கள் தத்துவவாதி கூறுவது போல – அதிகாரம் எங்கு வேண்டுமானாலும் பாய்கிறது. விதவையின் காலனிய கரும்பு தோட்டங்களில் இருந்து, கலைஞனின் காதலுக்கும் அது நகருகின்றது.”
தாமஸ் தான் வரைந்துக் கொண்டிருந்த திருமதி ரீடின் முழுமையடையாத உருவப்படத்தினை நோக்கி விரல் நீட்டினார். “இங்கே பாருங்கள் – பண்டைய பரம்பரை பெருமையை கொண்டு வர நான் ஒளியை வர்ணங்களில் தூக்கி நிறுத்தியுள்ளேன். அதே சமயம் புதிய கிழக்கு ஆடம்பரங்களின் நுட்பமான சேர்க்கை வழியாக அதிநவீனத்தை சுட்டிக்காட்டுகிறேன். இது சரியான உருவகம் அல்லவா. புதிய செல்வத்துடன் பழைய சக்தியை மணப்பதால் புதிய வர்க்கம் உருவாகி வருகிறது”
பிளாக்ஸ்டோன் தீவிர யோசனை வழியாக சொன்னார். “காலனிகளின் செல்வம் என்பது யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை மட்டும் மாற்றுவதில்லை.. அது அதிகாரத்தின் அர்த்தத்தை மாற்றுகிறது. ஒரு வணிகர் ஒரு பிரபுவை விட அதிகமாக செலவு செய்யும்போது, ஒரு வியாபாரியின் மகள் பிரபுவின் மகளை விஞ்சும் போது…”
“ஒரு கலைஞன் சமூகம் தன்னை எப்படிப் பார்க்கிறது என்பதை வடிவமைக்கும்போது,” தாமஸ் லேசான புன்னகையுடன் கூறினார்.
ஆஷ்வர்த் முன்னோக்கி சாய்ந்தார், அவரது குரல் தாழ்ந்தது. “புதிய கடல் வழிசெலுத்தல் சட்டங்கள் விவாதிக்கப்படுவதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆங்கிலக் கப்பல்கள், ஆங்கில துறைமுகங்கள், ஆங்கில வர்த்தகம். டச்சுக்காரர்கள் அதை விரும்ப மாட்டார்கள். இது இன்னும் அதிக அதிகாரத்தை இங்கு உருவாக்கும். எங்களைப் போன்ற மனிதர்களின் கைகளுக்கு அதிகாரத்தினை கொண்டு வரும்.”
“ஆனால் இது மனிதனின் முயற்சியால், அறிவால் உண்டாக்கப்பட்ட அதிகாரம், பிறப்பால் வருவதில்லை” என்றார் ரீட். “இயற்கையில் கிடைக்கும் தங்கத்தின் மூலம் புதிய பிரபுத்துவத்தை உருவாக்குகிறார்கள், தெய்வீக ஆணைகள் தேவைப்படுவதில்லை..”
கீழே கப்பலைப் பார்த்துக் கொண்டே ஜன்னலுக்குச் சென்றார் தாமஸ். “சமுதாயத்தில் இது எவ்வாறு அலைபாய்கிறது என்பதைக் கவனியுங்கள். பழைய பிரபுக்களுக்கு நமது காலனித்துவ செல்வம் தேவைப்படுகிறது, எனவே அவர்கள் வணிகர்களை ஏற்றுக்கொள்கிறார்கள் – முதலில் வெறுப்புடனும், பின்னர் ஆர்வத்துடனும். அவர்களின் குழந்தைகள் வர்த்தகத்தை மரியாதைக்குரியதாகவும், நாகரீகமாகவும் பார்க்கிறார்கள். இதற்கிடையில், நம் குழந்தைகள் அவர்களின் நடத்தை, சைகைகளைக் கற்றுக்கொள்கிறார்கள்.”
“என் சிறு வயதை நினைத்துப் பார்க்கின்றேன்,” ஆஷ்வர்த் பெருமையுடன் கூறினார். “நான் கப்பல்துறைகளில் மிளகு சாக்குகளை எண்ணிக் கொண்டிருந்தேன் என்று யார் யூகிப்பார்கள்?”
“இது வெறும் அரசியலை விட பெரிய மாற்றம்,” என தாமஸ் சொன்னார்.
“மறுசீரமைப்பு வரலாம். மீண்டும் அரசர் வரலாம். ஆனால் அது இந்த மாற்றத்தை தவிர்க்க முடியாது. ராஜாவுக்கு நமது காலனித்துவ செல்வம், நமது வர்த்தக தொடர்புகள், அதிகாரத்தை காப்பதற்கான புதிய வழி தேவைப்படும்.” என ஆஷ்வர்த் சொன்னார்.
“மார்கெரட் காலனி முதலீடுகளைப் பற்றிக் கேட்பதாக நான் கேள்விப்படுகிறேன். ஒருவேளை இங்குள்ள நமது புத்திசாலி கலைஞர் என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைக்க முடியுமா?” என ப்ளாக்ஸ்டோன் கேட்டார்.
தாமஸ் சிரித்தார், திருமதி ரீடின் உருவப்படத்தில் கவனமாக ஒரு திருத்தம் சேர்த்தார். நுட்பமான சரிசெய்தல் திருமதி ரீடின் கண்ணியத்தை மிகவும் இயல்பானதாகவும்,அவரது உழைப்பின் பெருமையை கூட்டியதாகவும் தோன்றியது. “நாம் கட்டமைக்கும் இந்தப் புதிய உலகில் எல்லாமே சாத்தியம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஹாப்ஸ் நமக்குக் கற்பிப்பது அது அல்லவா? அதிகாரம் மனிதனால் செய்விக்கப்படும் தன்மை உடையது, ஆக்க கூடியது, பிறப்பில் வரும் இயற்கை இல்லை, இதைப் புரிந்துகொள்பவர்கள் சமூகத்தையே மறுவடிவமைக்க முடியும்.”
மதுபானத்தின் தாக்கத்தால் நாவுகள் இலகுவான வேளையில், பிளாக்ஸ்டோன் சாளரத்தை நோக்கி சைகை செய்தார். தொலைவில் தீவட்டி ஒளியில் ஓர் இரவுப் பிரசங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. “மற்றுமொரு போதகர் தெய்வீக வழிகாட்டுதல் பெற்றதாகக் கூறுகிறார். இவ்வாரத்தில் இவர் மூன்றாவது நபர்.”
“ஒவ்வொருவரும் இறைவனின் விருப்பம் தமக்குத் தெரியும் என உறுதியாகக் கூறுகின்றனர்,” என ரீட் மெல்லிய குரலில் கூறினார். “ஒவ்வொருவரும் பைபிளைத் தங்களுக்கு ஏற்ப விளக்கமளிக்கின்றனர்.”
தாமஸ் தனது தூரிகையைக் கீழே வைத்தார், அவரது குரலில் நினைவுகளின் கனம் நிறைந்திருந்தது. “நாற்பத்தைந்தாம் ஆண்டில், பைபிள் கோட்பாட்டு வேறுபாடுகளுக்காக நம்மவர்கள் பல தரப்புகளாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் கொன்றதைக் கண்டேன். ஒவ்வொரு தரப்பினரும் தெய்வீக ஆணை தங்களுக்கே உள்ளதெனக் கூறினர்.”
“இங்குதான் ஹாப்ஸ் தேவைப்படுகின்றார்,” என்றார் ஜேம்ஸ், லெவையாதன் நூலின் தேய்ந்த விளிம்புகளைத் தடவியவாறே. “மனிதர்கள் தங்கள் நம்பிக்கைக்காக உயிர்விடத் துணிகின்றனர், ஆயினும் அந்நம்பிக்கை எதனைக் கோருகிறது என்பதில் ஒருமித்த கருத்தினராக இல்லை.”
“யார் தீர்மானிப்பது?” என ரீட் வினவினார். அவரது தொனியில் விடை தெரிந்ததென்பது புலப்பட்டது. “பிரெஸ்பிடீரியன் ஒரு சத்தியத்தையும், சுயேச்சையானவர் மற்றொன்றையும், ஆங்கிலிகன் மூன்றாவதையும் கூறும்போது…”
பிளாக்ஸ்டோனின் மேஜையை ஒங்கி தட்டினார். “குடும்பங்கள் சிதறுண்டதைக் கண்டுள்ளேன். ஒரே குடும்பத்தில் ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுக்கு எதிராக நின்றார்கள். தெய்வீக அதிகாரங்களின் பெயரால் அனைத்தும் நிகழ்ந்தது.”
“அதே வேளையில் டச்சுக் கப்பல்கள் அட்லாண்டிக்கில் ஆங்கிலக் கப்பல்களைக் கடந்து செல்கின்றன,” என ஜேம்ஸ் வறட்சியாகக் கூட்டினார், “தீர்க்கதரிசனத்தைவிட இலாபத்தில் அதிக ஈடுபாடு கொண்டவை.”
தாமஸ் சாளரத்தை நோக்கி நகர்ந்து, தீவட்டி ஒளியில் கூடியிருந்த சபையினரை நோக்கினார். “அமைதிக்கு ஒற்றை வாள் தேவை என ஹாப்ஸ் வாதிடுகிறார்.”
“பிளவில்லாத ஒற்றை இறையாண்மை,” என ரீட் தலையசைத்தார். “அனைத்திற்கும் இறுதி சொல் உள்ளவர் – நம்பிக்கை சார்ந்த விஷயங்களிலும் கூட.”
“குறிப்பாக நம்பிக்கை சார்ந்த விடயங்களில்,” என பிளாக்ஸ்டோன் திருத்தினார். “மண்ணுலக விஷயங்களில் அதிகாரம் கொண்டிருப்பதால் என்ன பயன், மனிதர்கள் விண்ணுலக அதிகாரத்தை அதற்கு மேலாக வைத்திருக்கும்போது?”
இரவுப் பிரசங்கத்தின் தொலைவான கீதம் சாளரத்தின் வழியே மிதந்து வந்தது. அருகில் சரக்குகள் இறக்கப்படும் சீரான ஒலி கேட்டது – நம்பிக்கைகளைக் கடந்து வணிகம் தொடர்ந்து கொண்டிருந்தது.
“ஆகவே ஒற்றை இறையாண்மை அனைத்தையும் ஆள வேண்டும்,” என பிளாக்ஸ்டோன் சிந்தித்தார். “குடிமை , புனிதம், காலம், ஆன்மீகம் அனைத்தையும்.”
“இல்லையேல் மீண்டும் அனைத்தும் சிதறுண்டு போகும்,” என தாமஸ் கூறினார்., லண்டன் மீது படர்ந்த புகை, ஈட்டியேந்திய சபையினர், நம்பிக்கையால் பிளவுண்ட குடும்பங்கள் ஆகியவற்றை நினைவுகூர்ந்தவாறே தூரிகையை மீண்டும் கையில் எடுத்தார்.
பிரசங்கம் முடிவுற்று தீவட்டிகள் அகன்றபின், நட்சத்திர ஒளியும், கப்பல் விளக்குகளும், கோட்பாடுகளைக் கடந்து தொடரும் வணிகத்தின் சீரான ஒலியும் மட்டுமே எஞ்சின. ஹாப்ஸின் நூல் அவர்களிடையே திறந்து கிடந்தது, மெழுகுவர்த்தி ஒளியில் அதன் பக்கங்கள் திறந்து கிடந்தன.
பொன்னெழுத்துகளில் எச்சரிக்கை: கட்டுப்படுத்தும் உயர் அதிகாரமில்லை எனில் மனித இயல்பு போருக்கு இட்டுச் செல்லும். ஒருங்கிணைந்த வல்லமை மட்டுமே குழப்பத்திலிருந்து அமைதியை உருவாக்க இயலும்.
இரவு நெடுநேரமாகியிருந்தது, ரீட் லெவையாதனின் முகப்புப் படத்தை சிந்தனையுடன் விரலால் தடவினார். “இதில் ஏதோ குறைபாடு இருக்கிறது,” என்று அவர் மெதுவாகக் கூறினார். “இந்த பிரமாண்டமான ஒற்றை இறையாண்மை பருவடிவில் பேரூருவமாக நம்மிடம் நிற்கின்றான்… நம்மிடம் அதிகம் கேட்கிறான்,, குறைவாகவே நமக்கு திரும்ப தருகின்றான்.”
“ஜாக்கிரதை,” ஆஷ்வர்த் புன்னகைத்தார். “அமைதியும், பாதுகாப்பும் முக்கியமல்லவா”
“நமது காலனிகளைப் பாருங்கள்,” என தாமஸ் சிந்தித்தபடி சொன்னார். “வர்ஜினியாவில் இந்த ஆண்டு வசந்த காலத்தில் நடந்ததை கேள்விப்பட்டீர்களா? பாராளுமன்றத்தின் கப்பற்படை வந்தபோது, அவர்கள் சண்டையிடவில்லை. மாறாக ஒரு புதுவிதமாக செய்தார்கள். முதலில் சரணடைந்தார்கள். பிறகு வேண்டியதை ஒப்பந்தம் செய்து பெற்றார்கள்…”
“ஆம்,” என ரீட் ஆர்வத்துடன் முன்னோக்கி சாய்ந்தார். “அவர்கள் எத்தனை சலுகைகளை பெற்றார்கள் தெரியுமா? முந்தைய செயல்களுக்கு மன்னிப்பு, நிலங்களின் மீதான உரிமை, எல்லைகள் அங்கீகரிப்பு. முக்கியமாக – பாராளுமன்றத்தின் புதிய கப்பல் வழி சட்டத்தை மீறி சுதந்திர வர்த்தக உரிமை. கடைசியாக தடை செய்யப்பட்ட பொது பிரார்த்தனை புத்தகத்தை ஓராண்டுக்கு பயன்படுத்த அனுமதி.”
“இது புதிய காலத்தின் அறிகுறி,” என பிளாக்ஸ்டோன் குறுக்கிட்டார். “பழைய காலத்தில் என்ன நடக்கும்? ராஜாவின் படை வென்றால் எதிர்ப்பாளர்கள் தூக்கிலிடப்படுவார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது? இரு தரப்பும் பேசுகின்றன. வர்த்தக ஒப்பந்தம் போல பேரம் பேசுகின்றன.”
“ஹாப்ஸ் இதையே சொல்கிறார்,” என தாமஸ் புத்தகத்தை சுட்டிக்காட்டினார். “அரசு என்பது தெய்வீக அமைப்பல்ல. மனிதர்கள் தங்களுக்குள் செய்து கொள்ளும் ஒப்பந்தம். வர்ஜினியாவில் நடந்தது அப்படித்தான் – நம் புதிய அமைப்புக்கும், குடியேற்றவாசிகளுக்கும் இடையேயான ஒப்பந்தம். அதிகாரம் மட்டுமல்ல, வர்த்தகமும் உரிமைகளும் பேசப்பட்டன.”
“அங்கே ஏதோ புதிது உருவாகிறது,” தாமஸ் மெதுவாக சொன்னார். “பழைய முறையை போல அரசரின் தெய்வீக உரிமை அல்ல, குரோம்வெல்லின் ராணுவ அதிகாரமும் அல்ல. மக்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலம் பேசுகிறார்கள், எழுதி வைக்கிறார்கள், உரிமைகளை பாதுகாக்கிறார்கள்…”
“ஆனால் இது சரியாக வேலை செய்யுமா?” ரீட் சந்தேகத்துடன் கேட்டார்.
“தெரியவில்லை,” தாமஸ் புன்னகைத்தார். “இதுவரை யாரும் இப்படி முயற்சி செய்ததில்லை. ஆனால் ஹாப்ஸ் சொல்வது போல, மனிதர்கள் புதிய வழிகளை கண்டுபிடிக்கிறார்கள். லெவையாதனின் உடலை புதிய விதமாக கட்டமைக்கிறார்கள்.”
“வர்ஜினியாவில் அவர்கள் கேட்ட கோரிக்கைகளில் மிக முக்கியமானது,” என ஆஷ்வர்த் சொன்னார், “பொது பிரார்த்தனை புத்தகத்தை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி. இது வெறும் புத்தகமல்ல. இது அவர்களின் வாழ்க்கை முறை.”
“பியூரிட்டன்கள் அந்த புத்தகம் விரும்புவதில்லை” என பிளாக்ஸ்டோன் சொன்னார். “அதில் உள்ள ஒவ்வொரு பக்கமும் ராஜ அதிகாரத்தின் முத்திரை. ஒவ்வொரு பிரார்த்தனையும் தெய்வீக உரிமை உள்ள மன்னரின் தலைமையிலான திருச்சபையை நினைவூட்டுகிறது. ஆனால் வர்ஜினியா மக்களுக்கு அதுதான் அவர்கள் அடையாளம்.”
“இங்கேதான் புதிய அரசியலின் தந்திரம் தெரிகிறது,” என தாமஸ் குறுக்கிட்டார். “தெய்வீக தேர்வு குழு என்ன செய்கிறது? தடை செய்யப்பட்ட புத்தகத்தை ஓராண்டுக்கு அனுமதிக்கிறது. அவர்கள் மதத்தை மட்டுமல்ல, காலத்தையும் வியாபாரம் செய்கிறார்கள். ஓராண்டு காலம் – புதிய ஒழுங்குக்கு மக்கள் பழக போதுமான நேரம்.”
“ஆமாம்,” என ரீட் சிரித்தார். “வர்த்தக ஒப்பந்தங்களில் நாம் செய்வது போலவே. கடன் திருப்பி செலுத்த கால அவகாசம் கொடுப்பது போல. மதமும், அரசியலும் கூட இப்போது வர்த்தக முறைகளை பின்பற்றுகின்றன.”
ஜேம்ஸ்டவுன் குடியேற்றத்தை நினைத்துப் பாருங்கள்,” என ப்ளாக்ஸ்டோன் தொடங்கினார். “அவர்கள் தொடக்கம் முதலே ராஜ விசுவாசிகளாக இருந்தார்கள். வர்ஜீனியா கம்பெனி அரச பட்டயத்தின் கீழ் துவங்கப்பட்டது. அவர்களின் நிலங்கள் அனைத்தும் மன்னரின் கொடையாக வழங்கப்பட்டவை.”
“ஆனால் அதைவிட முக்கியமானது,” என ரீட் குறுக்கிட்டார், “புகையிலை வர்த்தகம். வர்ஜீனியாவின் புகையிலை ஸ்பெயின் காலனிகளுடன் போட்டி போட வேண்டும். அதற்கு கப்பற்படையின் பாதுகாப்பு தேவை. ராஜாவின் கப்பற்படை மட்டுமே அந்த பாதுகாப்பை தர முடியும்.”
“இன்னோன்று,” என ஆஷ்வர்த் சேர்த்தார், “லண்டனில் உள்ள வர்த்தக நிறுவனங்களுடன் அவர்களுக்கு நெருக்கமான தொடர்பு. அந்த நிறுவனங்கள் பெரும்பாலும் ராஜ விசுவாசிகள். புகையிலைக்கு கடன் கொடுப்பவர்கள், கப்பல் உரிமையாளர்கள், வர்த்தகர்கள் – இவர்கள் அனைவரும் மன்னரின் ஆதரவாளர்கள்.”
“நியூ இங்கிலாந்து காலனிகளை பாருங்கள்,” என தாமஸ் ஒப்பிட்டார். “அங்கே பியூரிட்டன்கள் குடியேறினர். அவர்கள் தங்கள் மதத்துக்காக போனவர்கள். ஆனால் வர்ஜீனியா குடியேற்றவாசிகள் பணத்துக்காக வந்தவர்கள். அவர்களுக்கு மன்னரின் வர்த்தக அமைப்பு தேவை.”
ரீட் சிறிது நேரம் யோசித்தார். “ஆகவேதான் அவர்கள் சரணடைதலில் வர்த்தக உரிமைகளை முதன்மைப்படுத்தினர். அவர்களுக்கு தெரியும் – வர்த்தகம் தொடர்ந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று. ராஜ விசுவாசம் என்பது உணர்ச்சி மட்டுமல்ல, பொருளாதார தேவையும் கூட.”
“ஹாப்ஸ் சொல்வது போல,” தாமஸ் புத்தகத்தை காட்டினார். “மனிதர்கள் தங்கள் நலனுக்காக ஒப்பந்தங்களை செய்து கொள்கிறார்கள். காலனி மக்களின் ராஜ விசுவாசமும் அப்படித்தான் – ஒரு வகை பரஸ்பர நலன் சார்ந்த ஒப்பந்தம்.”
“நியூ இங்கிலாந்து காலனிகள் எப்படி நடந்து கொண்டன தெரியுமா?” என ஆஷ்வர்த் கேட்டார். “மிக சாமர்த்தியமாக விளையாடினர். வெளிப்படையாக யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால் தெய்வீக தேர்வு குழுவுக்கு படைக்கு ஆயுதங்களும், உணவும் விற்றனர்.”
“அவர்கள் வேறு என்ன செய்வார்கள்?” ரீட் நக்கலாக சிரித்தார். “பியூரிட்டன்களால் நிறுவப்பட்ட காலனிகள். மன்னரின் திருச்சபையிலிருந்து தப்பித்து வந்தவர்கள். இங்கிலாந்தில் அவர்கள் சகோதரர்கள் பாராளுமன்றத்துக்காக போராடும்போது, அவர்கள் மன்னருக்கு ஆதரவு தருவார்களா?”
“ஆனால் அவர்களின் தந்திரம் வேறு இடத்தில் இருந்தது,” என பிளாக்ஸ்டோன் குறுக்கிட்டார். ” வர்ஜீனியா போல தனியாக இருக்கவில்லை. நான்கு காலனிகள் – மாசசூசெட்ஸ், பிளிமத், கனெக்டிகட், நியூ ஹேவன் – ஒன்றிணைந்து ‘நியூ இங்கிலாந்து கூட்டமைப்பு’ உருவாக்கினர். 43ல் தங்களை பலப்படுத்திக் கொண்டனர்.”
“சரியாகச் சொன்னீர்கள்,” தாமஸ் ஹாப்ஸின் புத்தகத்தை காட்டினார். “அவர்கள் ஹாப்ஸின் கோட்பாட்டுக்கு முன்னோடிகள்- பாதுகாப்புக்காக ஒன்றிணைந்து புதிய அதிகார அமைப்பு உருவாக்கினர்.”
“இன்னொரு வித்தியாசத்தை கவனித்தீர்களா?” என ரீட் கேட்டார். “வர்ஜீனியா தனது கச்சா பொருட்களை – புகையிலை – ராஜாவின் வர்த்தக கட்டமைப்பு மூலம் விற்றது. ஆனால் நியூ இங்கிலாந்து? அவர்கள் கப்பல் கட்டினர், மீன் பிடித்தனர், மேற்கு இந்திய தீவுகளுடன் நேரடி வர்த்தகம் செய்தனர். யாரையும் சார்ந்திருக்கவில்லை.”
“ஆக,” என தாமஸ் முடித்தார், “வர்ஜீனியாவுக்கு ராஜாவின் கப்பற்படை பாதுகாப்பு தேவைப்பட்டது. நியூ இங்கிலாந்து தனக்கான கப்பற்படையையே உருவாக்கிக் கொண்டது. அதனால்தான் போர் முடிந்த பிறகு, வர்ஜீனியா சலுகைகளுக்காக பேரம் பேசியது. நியூ இங்கிலாந்தோ தனது சுதந்திரத்தை வலுப்படுத்திக் கொண்டது.”
தாமஸ் திருமதி ரீடின் உருவப்படத்தின் முன் திரும்பினார். பழைய ஓவியங்களில் உள்ளபடி, முதலில் அவரது தூரிகை அந்த முகத்தில் அதிகார பார்வையை வரைந்திருந்தது – பிரபுக்களின் உருவப்படங்களில் காணும் அதே இறையாணைப் பார்வை. ஆனால் இப்போது, காலனிகள் புதிய உரிமைகளை பேசி பெறுவது போல, அவரது மெல்லிய தூரிகை அந்த கண்களில் வேறு ஒளியை ஊட்டியது. வர்ஜீனியாவின் புதிய உடன்படிக்கைகள் போல, அந்த கண்கள் இப்போது பேச்சுவார்த்தை செய்யும் சமநிலைப் பார்வையுடன் அவரை நோக்கின. நியூ இங்கிலாந்து தன் சொந்த பாதையை தேர்ந்தெடுத்தது போல, அந்த ஓவியமும் தன் சொந்த குரலில் பேசத் துவங்கியது.
ஹாப்ஸின் லெவையாதன் புத்தகம் மேசையில் திறந்து கிடந்தது, அதன் முன் அட்டையில் பல சிறிய மனிதர்கள் அடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பெரு மனிதன் உருவம் இருந்தது – ஆனால் இப்போது அது வேறுவிதமாகத் தெரிந்தது. அந்த பெரு உருவத்தினை உருவாக்கிய சிறு உருவங்கள் இப்போது வெறும் கூறுகளாகத் தெரியவில்லை – ஒவ்வொன்றும் தனித்துவமான குரல்களுடன், பேச்சுவார்த்தை செய்யும் திறனுடன் கூடிய தனி மனிதர்களாகத் தெரிந்தன.
ப்ளோக்ஸ்டோன் “இதெல்லாம் நீடிக்குமா?.”
ரீட் தலையசைத்தார். “தெரியவில்லை. ஆனால் நாம் கற்பனையில் யோசிக்க ஹாப்ஸ் ஒரு திறப்பைத் தந்துள்ளார்” சொல்லி அமைதியானர்.
தூரத்தில் கப்பலின் விளக்குகள் ஊசலாடின. அந்த அறை இருந்த சிந்தனைக் காலத்திற்கும் வரவிருக்கும் மற்றொரு காலத்திற்கும் இடையே நேரத்தைக் காட்டும் பெண்டுலம் போல ஆடிக் கொண்டிருந்தன.
ப்ளாக்ஸ்டோன் லேடி ஆன்னின் கடிதத்தை மெல்ல தொட்டுக் காட்டினார். “இதை…”
தாமஸ் தயங்கினார். “ஒரு ஓவியருக்கான அழைப்புதானே…”
“எனக்குத் தெரிந்த லேடி ஆன் அப்படி எளிதாக ஓவியருக்கு கடிதம் எழுத மாட்டார்,” என்றார் ப்ளாக்ஸ்டோன், சட்ட நிபுணருக்கே உரிய நுணுக்கமான புன்னகையுடன்.
தாமஸ் தயங்கினார். கையை நீட்டி கடிதத்தை வாங்கினார். முத்திரையை உடைத்து கடிதத்தை விரித்தார். வரிகளை மௌனமாக படிக்கத் துவங்கினார். அவரது கைகள் மெல்ல நடுங்கின. முதலில் வெளிறிய முகம், படிக்கப் படிக்க புன்னகைத்து சிவந்தது. கடிதத்தின் ஓரத்தில் லேடி ஆன்னின் கையெழுத்து அவர் கண்களை விட்டு நகரவில்லை.
மெதுவாக தலை நிமிர்ந்தார். “பார்படோஸுக்கு… செல்ல வேண்டியிருக்கும்” என்றார், குரலில் நடுக்கமும் மகிழ்ச்சியும் கலந்திருக்க.
ரீட் தன் புதிய மோதிரத்தை சுழற்றினார். “பழைய பிரபுக்களின் மகள்களை வரைந்த தூரிகை, இப்போது அவர்களின் குடும்பமாகும் சாத்தியம்…” அவர் குரலில் பொறாமையும் வியப்பும் கலந்திருந்தது.
“நான் கப்பல் ஏற்பாடு செய்கிறேன்,” என்றார் ஆஷ்வர்த் அமைதியாக. “கரும்பின் மணம் வீசும் காற்றில் புதிய வாழ்வு பிறக்கட்டும்.”
“சட்ட ஆவணங்களுக்கு என்னை மறக்காதீர்கள்,” என்றார் ப்ளாக்ஸ்டோன். அவரது குரலில் தொழில்முறை கம்பீரம் மட்டுமல்ல, ஏதோ ஒரு தனிப்பட்ட பெருமிதமும் இருந்தது.
ரீட் தன் கடைசி மதுக்கோப்பையை உயர்த்தினார். “புதிய காலத்துக்கு!”
வெளியே, கிழக்கு வெளுத்தது. மேற்கிலிருந்து காற்று வீசியது.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “பேருடலாகும் சிற்றுடல்கள் – லெவையாதன்”