செயின்ட் மேரி மனநல மருத்துவமனையின் நுழைவாயிலில் டாக்டர் நிகில் குமரன் நின்றிருந்தபோது, மேலே ப்ளூரசென்ட் விளக்குகள் ரீங்காரமிட்டன. ஜன்னல்களில் ஜனவரி பனி மென்மையான வடிவங்களை வரைந்திருந்தது.
“முதல் நாளா?” ரிஷப்ஷனில் அமர்ந்திருந்த பணியாளர் தனது குறுக்கெழுத்து புதிரிலிருந்து பார்வையை உயர்த்தினார். பளீரென்ற வெளிச்சத்தில் அவரது பாதுகாப்பு பேட்ஜ் மின்னியது. “எல்லோரும் ஆர்வத்துடன்தான் தொடங்குவார்கள். செயிண்ட் மேரிக்கு வரவேற்கின்றோம்”
“மவுன்ட் சினாயிலிருந்து மாற்றலாகி வந்திருக்கிறேன்,” என நிகில் சொன்னான்.
ஒரியன்டேஷனில், குறுக்கெழுத்து புதிரினை போன்ற செயிண்ட் மேரியின் சிக்கலான தடங்களில் நிகிலும், டாக்டர் ராபர்ட்ஸும் நடந்தார்கள். ராபர்ட்ஸின் குரல் மருத்துவமனையின் பச்சை நிற சுவர்களில் எதிரொலித்தது போல நிகிலுக்கு இருந்தது.
அவன் முகத்தினை உற்று பார்த்த டாக்டர் ராபர்ட்ஸ் கொஞ்சம் யோசனையாக. “குமரன்… தெரிந்த பெயர். பழைய நினைவுகள் பல வருகின்றது. மவுண்ட் சினாய் நரம்பியல் துறையின் டாக்டர் மீனாட்சி – உங்கள் உறவினரா?”
“ஆமாம்,” நிகில் மெதுவாக பதிலளித்தான். “அவர் என் அப்பாவின் அம்மா.”
ராபர்ட்ஸின் முகத்தில் சின்ன ஒளி வந்தது. “நியூயார்க்கில் நரம்பியல் படிக்கையில் நான் அவருடன் பணி புரிந்தேன். மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர் மறைந்தது..வருத்தமே….” அவர் சிந்தனையுடன் இடைவெளி விட்டார். உடனே அடுத்த சப்ஜக்ட்டுக்கு செல்ல விரும்புவது அவர் முகத்தில் தெரிந்தது.
“உங்களுக்கு முந்தைய டாக்டர் எட்டு மாதங்கள் மட்டுமே நீடித்தார்,” என்றார் ராபர்ட்ஸ், மற்றொரு பாதுகாப்பு கதவில் தனது அடையாள அட்டையை வீசியபடி. “நல்ல டாக்டர். தொடங்கும் பொழுது டாப் கியரில் இருந்தார், பிறகு… சரி. இந்த சுவர்கள் அவரை சோர்வடைய வைத்தது.”
நிகில், மருத்துவமனையின் தேய்ந்த விளிம்புகளை – டைல்கள், கதவு சட்டங்கள், மனங்கள் – கவனித்தான். “ஒவ்வொரு மருத்துவமனைக்கும் அதன் சொந்தமான ரிதம் ஒன்று உண்டு. அதை நான் கண்டுபிடிக்க வேண்டியதுதான். அப்புறம் சமாளிக்கலாம் என நினைக்கின்றேன்”
“ஆ, ஓர் இலட்சியவாதி.” ராபர்ட்ஸ் சிரித்தார். அதில் எந்த நகைச்சுவையும் இல்லை. அவர் சிரிப்பினூடே “லட்சியங்கள் கரையும் —” என எதையோ சொல்லத் துவங்கினார். செயல் முறை மருத்துவச் சிகிச்சை அறையிலிருந்து வந்த சத்தம் அவரை இடைமறித்தது.
தரையில் சிதறிக் கிடந்த கலைப் பொருட்கள். தடுமாறி விழும் நிலையில் உறைந்துபோன ஒரு வயதான நோயாளி. விழும் நோயாளியையும் சிதறும் தூரிகைகளையும் பிடிக்க அழகான பெண். அவள் ஒரு தெரப்பிஸ்ட் என நிகில் கண்டதும் அறிந்தான்.
“மன்னிக்கவும், திருமதி பீட்டர்சன்,” எனச் சொல்லிக் கொண்டே ஒரு கையால் நோயாளியை நிலைப்படுத்தினாள், மற்றொரு கை ஏற்கனவே விழுந்த பொருட்களை மறுசீரமைத்துக் கொண்டிருந்தது. “புவியீர்ப்பை மீறும் பொருள்களை நமது காலை பயிற்சி அட்டவணையில் சேர்ப்போம். கவலைப்படாதீர்கள். அப்புறம் எதுவும் கீழே விழாது”
வயதான நோயாளி சிரித்தார், பதற்றம் கரைந்தது. “சாரா, என் கைகால் மரத்துப்போன நிலையை நீ எப்போதும் அழகாக்கி விடுகிறாய்.”
ராபர்ட்ஸ் கண்ணாடிக் கதவைத் திறந்தார். “இதுதான் எங்கள் செயல் முறை மருத்துவப் பிரிவு. இது சாரா தாம்சன் “ என்று சொல்லி விட்டு பிறகு நிகிலை நோக்கி கைகாட்டி “ டாக்டர் நிகில் குமரன் புதிய வார்டு 6 மேற்பார்வையாளர்.” என அறிமுகப் படுத்தினார்.
சாரா திரும்பினாள். திருமதி பீட்டர்சனையும், சிதறிய கலைப் பொருட்களை ஒழுங்காக்கி இருந்தாள். அவரது லேப் கோட்டில் வண்ணம் படிந்திருந்தது, ஆனால் அவளுடைய கண்கள் கூர்மையாக, இருந்தது. “அறைக்குச் செல்லலாம்” என்றாள்.
தனது அறைக்கு சென்றதும் “மவுண்ட் சினாயில் இருந்து ஆள் சேர்ப்பா? இவர் அவர்களை விட்டு விட்டு நம்மை தேர்ந்தெடுத்தது சுவாரஸ்யமான தேர்வு.”எனச் சொன்னாள்
“உண்மையான சேவைக்கும், நோயாளிகளுக்கு உதவி செய்வதற்கும் சிறந்த வாய்ப்புகள் இங்கே உள்ளன,” என்று நிகில் பதிலளித்தான்.
“பணியாளர் பற்றாக்குறை , அதிகப் பணிச் சுமை என்பதற்கான அலங்காரமான சொற்கள்?” அவளது புன்னகை அவளது கூரிய வார்த்தைகளை மழுங்கடித்தது.
“சாரா,” என்று ராபர்ட்ஸ் எச்சரித்தார்.
“இல்லை, அவர் சரியாகச் சொல்கிறார்,” என்றான் நிகில். “அதுதான் நான் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததற்கான சரியான காரணம்.”
சாரா அவரை இன்னும் சிறிது நேரம் ஆராய்ந்தாள். “சரி, டாக்டர் குமரன். ஒரு எச்சரிக்கை – இந்த இடம் நீங்கள் யார் என்பதை உங்களுக்குக் காட்டும்.”
“அனுபவத்திலிருந்து பேசுகிறீர்களா?”
“கவனித்ததிலிருந்து பேசுகிறேன்.” எனச் சொன்னாள். பின் பல்வேறு செயல்பாடுகளில் மூழ்கியிருந்த நோயாளிகளைச் சுற்றிச் சுட்டிக்காட்டினாள். “பலர் எல்லாவற்றையும் மாற்றுவேன் என்று நினைத்து வருகிறார்கள். இங்கு இருப்பவற்றுடன் பணிபுரியக் கற்றுக்கொள்பவனே புத்திசாலி.”
“மற்றவர்கள்?”
“உங்களுக்கு முன்னால் இருந்தவரை கேளுங்கள்.” அவள் தனது நோயாளிகளிடம் செல்ல எழுந்தாள் “செயிண்ட் மேரிக்கு வரவேற்கிறோம், டாக்டர் குமரன் இங்கிருந்து தலைமறைவு ஆகி விடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.” எனச் சொல்லிச் சிரித்தாள். அழகான பற்கள் என நிகிலுக்கு தோன்றியது.
அதன் பின் சுற்றுப்பயணம் தொடர்ந்தது – கதிர்வீச்சு, மருந்தகம், உணவகம். ஆனால் நிகில் செயல் முறை மருத்துவ அறையைப் பற்றி மட்டும் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
இறுதியாக, அவனது புதிய அலுவலகத்தில், ராபர்ட்ஸ் ஒரு தடித்த கோப்பை ஒப்படைத்தார். “604இல் உள்ள சல்லிவனுடன் தொடங்குங்கள். முன்னாள் தத்துவப் பேராசிரியர். துடிப்பான அறிவான மனிதர், ஆனால் கவனமாக இருங்கள் – அவருக்கு உங்கள் மனதிற்குள் நுழையும் வழி தெரியும்.”
“இங்குள்ள மற்ற எல்லோரைப் போலவே?” என்று நிகில் கேட்டான், சாராவின் விடைபெறும் வார்த்தைகளை நினைத்துக் கொண்டான்.
ராபர்ட்ஸ் கதவில் நின்றார். “சல்லிவன் வித்தியாசமானவர். அவர் உங்களை உடைக்க முயற்சிக்க மாட்டார். நீங்களே உங்களை உடைத்துக்கொள்ள வைப்பார்.” அவர் கோப்பை தட்டினார். “இன்று இரவு இதைப் படியுங்கள். எதுவும் வேண்டுமெனில் சொல்லுங்கள்.”
தனது அலுவலகத்தில் தனியாக, நிகில் சல்லிவனின் கோப்பைத் திறந்தான். மனநல மதிப்பீடுகள், முன்னர் கொடுத்த சிகிச்சைகளின் அறிக்கைகளின் பக்கங்களுக்கிடையே, அவனால் அந்த மருத்துவமனையின் ரிதத்தினை கேட்க முடிந்தது – கண்காணிப்பு கருவிகளின் ஒலி, தொலைப்பேசிகள் ஒலித்தல், OTயிலிருந்து வரும் சாராவின் சிரிப்பு, நடைபாதைகளில் முடிவில்லாத காலடி ஓசைகள்.
ஒவ்வொரு மருத்துவமனைக்கும் அதன் சொந்தத் தாளம் இருந்தது. அவன் இங்கிருக்கும் தாளத்தினைக் கண்டுபிடிக்க வேண்டியதுதான் என சொல்லிக் கொண்டான்.
நிகில் அறை 604-க்குள் நுழைவதற்கு முன் சல்லிவனின் கோப்பை மீண்டும் புரட்டினான் முந்தைய மருத்துவர்களின் இருபது பக்கக் குறிப்புகள், ஒவ்வொன்றும் ஒரே மாதிரியான குறிப்புடன் முடிவடைந்தன. “நோயாளி மிகவும் புத்திசாலி, சிகிச்சைக்கு ஒத்துழைப்பதில்லை, எதிர்ப்பு காட்டுகிறார், மன அழுத்தத்தில் ஊறிய உலகக்கண்ணோட்டத்தை நுட்பமான காரணங்களுடன் வெளிப்படுத்துகிறார்.”
அந்த அறை நல்ல பிரகாசமாக இருந்தது. காலை வெளிச்சம் மருத்துவமனைத் தோட்டத்தை நோக்கியுள்ள ஜன்னல்கள் வழியாகப் பாய்ந்தது. சல்லிவன் சிறிய மேஜையின் முன்னே நாற்காலியில் அமர்ந்து இருந்தார். ஒரு நோட்டு புத்தகத்தின் மீது குனிந்திருந்தார். அவரது வெள்ளி முடி சூரிய ஒளியில் மின்னியது. சிக்கலான சமன்பாடுகள் நோட்டு புத்தகத்தில் பக்கத்தில் கலந்திருந்தன.
“சரி செய்ய முடியாததைச் சரி செய்ய இன்னொரு டாக்டர்,” என நிமிராமலே சல்லிவன் சொன்னார். அவரது பேனா நகர்வதை நிறுத்தவில்லை.
“நான் சும்மா பேசவே வந்திருக்கிறேன்,” என சொன்ன நிகில், ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தான்.
கொஞ்ச நேரம் கழித்து சல்லிவன் நிமிர்ந்து பார்த்தார். கூர்மையாகக் கண்களில் அசலான கேள்வி ஏதோ இருந்தது. “பேசுவதா? எதைப் பற்றி ? மனிதக்குலம் எல்லாம் சரியாக இருப்பதாக நடித்துக்கொண்டே தன் அழிவை நோக்கி ஓடிக்கொண்டிருப்பது பற்றியா?”
“அதுவும் பேசலாம். அதை உங்கள் தினப்படி காலை வழக்கம் என்னவென பேசி துவங்குவோமே.”
சல்லிவனின் முகத்தில் ஒரு சிறு புன்னகை தோன்றியது. “சுவாரஸ்யமான அணுகுமுறை. மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானது.” அவர் தனது நோட்டு புத்தகத்தை மூடினார். “சொல்லுங்கள் டாக்டர் குமரன், எவ்வளவு காலமாகத் தொழில் செய்கிறீர்கள்?”
” என்னை நீங்கள் நிகில் என்றே அழைக்கலாம். இங்கேயா? ஒரு வாரம்.”
“இல்லை, பொதுவாக மருத்துவம்.”
“ஐந்து வருடங்கள்.”
“ஆ, இன்னும் தேன்நிலவு காலகட்டத்தில் இருக்கிறீர்கள்.” சல்லிவனின் குரலில் கேலி இல்லை. மாறாக உண்மையான ஆர்வம் மட்டுமே தெரிந்தது. “இந்த மருத்துவ அமைப்பின் குணப்படுத்தும் திறன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்.”
“நீங்கள் வைக்கவில்லையா?”
“நான் உலக நடப்புகளில் நம்பிக்கை வைக்கிறேன். டாக்டர். ஒன்றைப் பார்க்க விரும்புகிறீர்களா?” அவர் மீண்டும் தனது நோட்டு புத்தகத்தைத் திறந்தார். “முப்பது ஆண்டுகள் தத்துவம் கற்பித்தேன். ஒவ்வொரு ஆண்டும், என் மாணவர்கள் மேலும் மேலும் இந்த உலகில் இருந்து துண்டிக்கப்பட்டவர்களாக, பதற்றம் மிகுந்தவர்களாக மாறினர். இது வெறும் இளமைக்காலப் பதற்றம் அல்ல , ஏதோ ஆழமானது. அது வருவதை அவர்களால் உணர முடிந்தது.”
“என்ன வருகிறது?”
“சிதைந்து கொண்டிருக்கும் உலகு. இது கணித ரீதியானது. எனது தத்துவம் மெய்மையை நிரூபிக்கத் தரவுகளைப் பயன்படுத்துகின்றது. சமன்பாடுகளைப் பார்க்க விரும்புகிறீர்களா? நான் கணிதத்திலும் டாக்டரேட் வைத்துள்ளேன். அந்த வகுப்புகளையும் ஒரு காலத்தில் எடுத்துள்ளேன்”
சல்லிவன் உரையாடலை எவ்வளவு மென்மையாகத் திசைதிருப்பினார் என்பதை நிகில் கவனித்தான். “அடுத்த முறை பார்க்கலாம். முதலில் உங்கள் காலை வழக்கத்தைப் பற்றிச் சொல்லுங்கள். காலை எப்படி துவங்கும்?”
சல்லிவன் பின்னோக்கிச் சாய்ந்து, நிகிலை ஆராய்ந்தார். “பெரும்பாலான டாக்டர்கள் என் கோட்பாடுகளை விவாதிக்க அவசரப்படுகிறார்கள். என்னைத் தவறு என்று நிரூபிக்க ஆர்வமாக இருக்கிறார்கள்.”
“நான் எதையும் நிரூபிக்க வரவில்லை.”
“இல்லையா?” சல்லிவனின் கண்கள் மின்னின. “பிறகு ஏன் இங்கே வந்திருக்கிறீர்கள்?”
“அந்த எல்லாச் சமன்பாடுகளுக்கும் பின்புலமாக நீங்கள் இருக்கின்றீர்கள். அந்தச் சமன்பாடுகளை உருவாக்கும் சக்தி நீங்கள்தான். நீங்கள் ஒவ்வொரு காலையிலும் எழுந்து கொண்டிருக்கிறீர்கள். அவ்வாறு எழுந்த பின்னர் நாள் முழுதும் பல மணி நேரம் அந்த நோட்டு புத்தகத்தில் எழுதுகிறீர்கள். அது ஏன் என்று அறிய எனக்கு ஆர்வமாக இருக்கிறது.”
ஏதோ ஒன்று , ஆச்சரியமா? மரியாதையா? இரண்டில் ஒன்று சல்லிவனின் முகத்தில் மின்னியது. “காலை ஏழு மணி. நான் படுக்கையிலிருந்து எழுந்திருக்கின்றேன். ஏழு பதினைந்து, முகம் கழுவுகிறேன். ஏழு முப்பது, எழுத ஆரம்பிக்கிறேன்.” அவர் இடைநிறுத்தினார். “சந்தோஷமா?”
“எதைப் பற்றி எழுதுகிறீர்கள்?”
“முறைமைகள். ஆதாரங்கள். மற்றவர்கள் புறக்கணிக்கும் சமூக சிதைவின் நுண்ணிய அறிகுறிகள்.”
“ஒன்றைக் காட்டுங்கள்.”
சல்லிவன் தனது நோட்டு புத்தகத்தைத் திறந்தார். “இந்த சமன்பாட்டைப் பாருங்கள்? இது ஊடகங்கள் ‘தனிப்பட்ட சம்பவங்கள்’ என்று அழைக்கும் நிகழ்வுகள். ஆனால் அவை தனிப்பட்டவை அல்ல. அவை இணைக்கப்பட்டுள்ளன. இவை மானுட வாழ்வில் அதிர்வுகளை உண்டாக்குகின்றன”
நிகில் முன்னோக்கிச் குனிந்தான், உண்மையிலேயே ஆர்வமாக. “எந்த அதிர்வுகளை இது உண்டாக்குகிறது?”
“ஆ,” சல்லிவன் புன்னகைத்தார். “இப்போது நீங்கள் சரியான கேள்விகளைக் கேட்கிறீர்கள். ஆனால் எனக்குக் களைப்பாக உள்ளது. நாளை பேசலாமா? என்று பணிவாகக் கேட்டார்.
நிகில் புன்னகையுடன் அறையை விட்டு வெளியே வந்தான்.
அடுத்த ஒரு வாரம் தொடர்ந்து சல்லிவனுடன் சந்திப்பு நிகழ்ந்தது.
அன்று ஸ்டாப் மீட்டிங் முடிவு அடைந்த பொழுது கதவுக்கு வெளியே சாரா நின்றிருந்தாள்.
“எப்படிப் போகிறது?” எனச் சாரா கேட்டாள்.
“சல்லிவன் கேஸ்” எனச் சொன்னான்.
“அவர் மேதை,”
“ ஆபத்தானவரும் கூட”
“ஆபத்தானவரா?”
“வன்முறையாக அல்ல. ஆனால் அவரது உலகக்கண்ணோட்டம்… அது கவர்ச்சிகரமானது. அவர் கத்தவோ சத்தமிடவோ செய்வதில்லை. அவர் எல்லாவற்றையும் தர்க்க ரீதியான நிரூபணம் போலச் சமர்ப்பிக்கிறார். படிப்படியாக, திடீரென்று உலகின் முடிவைப் பற்றி நீங்கள் தலையாட்டிக்கொண்டிருப்பீர்கள்.”
“நீங்கள் பிரமிப்படைந்ததாகத் தெரிகிறது.”
“ஆம். அவர் ஒரு முழுமையான தத்துவக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளார். அதுதான் அவரை சிக்கலாக்குகிறது.”
“சிக்கலை எப்படிக் கையாளுவீர்கள்?”
“அதைக் காலை வழக்கத்தில் ஒன்றாக மாற்றினால் சிக்கல் தீர வாய்ப்பு உள்ளது.”
சாரா அடுத்த வேலைக்கு நகர்ந்தாள். நிகில் தனது வார்டினை பார்க்கக் கிளம்பினான். மூன்று மாதங்கள் கடந்தன. இருவருக்கும் மருத்துவமனையின் தளத்தில் கடந்து செல்கையில் தொட்டுச் செல்லும் பார்வைகள் மட்டும் எஞ்சின- இரவில் செல்லும் கப்பல்களின் வெளிச்சம் போல. சாரா குழு ஆலோசனைக்குச் செல்லும்போது, நிகில் நோயாளிகளைப் பார்வையிட விரைவான். நிகில் நிதி கூட்டத்தில் இருக்கும்போது சாரா மாலை சிகிச்சை நடத்துவாள். அவர்கள் நடைபாதையில் சந்திக்கையில் வரும் மெல்லிய புன்னகையில் மட்டும் அடையாளம் கண்டு கொண்டனர்.
ஒரு நாள் இரவு பதினொரு மணி. நிகில் வீட்டுக்கு போகையில் காரை சூப்பர் மார்க்கெட்டுக்கு திருப்பினான். அங்கே தனது அலுவலக உடையில் இருந்த சாரா குளிர்பதனப் பெட்டிகளில் உணவு அடுக்கியிருக்கும் பகுதியில் பேக்கெட் உணவுகளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கூடையில் ஒரு புட்டி சூப்பர் மார்க்கெட் தர ஒயினும், இன்ஸ்டெண்ட் காபியும், பேக்கேட் உணவுகளும் அவள் வழக்கமாகப் பரிந்துரைக்கும் ஆரோக்கிய வாழ்க்கை முறைக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாமல் உட்கார்ந்திருந்தது.
“நல்ல தரமான ப்ரெஷான காய்கறியெல்லாம் அங்கே தூரத்தில் இருக்கின்றது,” எனக் கிண்டலாகச் சொன்னான் நிகில்.
சாரா சற்றே திடுக்கிட்டுத் திரும்பினாள். குளிர்பதனப் பெட்டியை உற்றுப் பார்ப்பதிலிருந்து அவளது கவனம் டக்கென கலைந்தது. “டாக்டர் குமரன். நான்…” அவள் தன் கூடையை நோக்கித் தெளிவற்ற சைகை செய்தாள். முகம் சிவந்தது. “நான் நோயாளிகளுக்கும், உங்களுக்கும் பரிந்துரைக்கும் உணவு இது அல்ல. இது எனக்கு. மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குப் போய் நெட்ப்ளிக்ஸிலேயே சென்று விட்டது, இப்பொழுது பசிக்கின்றது “
“நல்ல தரமான டயட். எவ்வளவு நாளாக இப்படிச் செல்கின்றது”
“பல மாதமாக” ஒரு உறைந்த உணவுப் பொட்டலத்தை எடுத்து, மீண்டும் வைத்தாள். அவள் அசைவுகளில் வழக்கமான உறுதி இல்லை. “பராமரிப்பு மையத்திலிருந்து மீண்டும் அழைத்தார்கள். அப்பாவின் நிலையில் இம்ரூவ்மெண்ட் இல்லை. உடற்பயிற்சி சிகிச்சையை மறுத்துவிட்டார். தன் கால்கள் நன்றாக இருப்பதாகவும், முன்பு போல வேலைக்குச் செல்ல முடியும் என்றும் சொன்னார்.” அவளது சிரிப்பு மென்மையாக, இறுக்கமாக இருந்தது. “முப்பது ஆண்டுகள் கட்டிடம் கட்டும் தொழிலை உள்ளூர் கம்யூனிட்டி கல்லூரியில் கற்பித்தவர், இப்போது நடக்கக்கூட முடியவில்லை. அவருடைய நினைவில் அவரது வயதும் இல்லை”
சொல்லி முடிக்கையில் கண்ணில் கண் கலங்கியது போல் இருந்தது. திரும்பி குளிர்பதனப் பெட்டியை உற்றுப் பார்த்து அதைத் திறந்து ஏதோ தேடுவதைப் போல முகத்தினை மறைத்துக் கொண்டாள்.
அருகில் ஒரு கடை ஊழியர் பொருட்களை அடுக்கத் தொடங்கினார். பெட்டிகள் அலமாரியில் மோதும் முறையான ஓசை ஒரு வித்தியாசமான தாளத்தை உருவாக்கியது. சாராவின் விரல்கள் ஒவ்வொரு ஓசைக்கும் சிறிதளவு துடித்தன, சில மணி நேரங்களுக்கு முன் அவள் வழிநடத்திய பயிற்சிகளின் தாளத்தை இன்னும் கணக்கிடுவது போல இருந்தது.
“ஒரு வேடிக்கை நடந்தது. தெரியுமா?” அவள் ஐஸ்க்ரீம் பிரிவுக்கு நகர்ந்தாள், “இன்று நாற்பது நிமிடங்கள் திருமதி லியுவுக்கு தினப்படி நடைமுறைகளைப் எப்படி நிர்வகிப்பது, சரியான உணவு, முறையான தூக்கம் பற்றி கற்பித்தேன்.” ஒரு பிண்ட் சாக்லேட் ஐஸ்க்ரீமை எடுத்து, அலுவலகத்தில் மருத்துவ அறிக்கையைப் போல ஆய்ந்தாள். “அதே நேரம், செவ்வாய்க்கிழமை முதல் காபியும் புரோட்டீன் பார்களும் தவிர வேறு எதுவும் சாப்பிட்டேனா என்று நினைவில்லை.”
ஐஸ்க்ரீமை மிகவும் கவனமாகத் தனது கூடைக்குள் வைத்தாள். “அம்மா அப்பாவை வெஸ்ட்செஸ்டரில் உள்ள அவர்களது வீட்டுக்கு அருகில் மாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டே உள்ளார். அது எல்லாவற்றையும் சரி செய்துவிடும் என நம்புகின்றார். அண்ணனும், நானும் என்ன சொன்னாலும் அவருக்கு நிறைவில்லை” சொல்லி நிறுத்தினாள். பின்னர் திரும்பி நிகிலை பார்த்தி “போர் அடிக்கிறேனா? ஏதேதோ சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் ” என்றாள்.
நிகில் இல்லை என்பது போல் தலையை அசைத்தான். “நானும் ஐஸ்க்ரீம் வாங்கத்தான் வந்தேன்? எனக்கும் ஒரு சாக்லேட் ஐஸ்க்ரீம் எடு” என சொன்னான்.
அவள் சிரித்துக் கொண்டே ஒரு ஐஸ்கீரிம் டப்பா ஓன்றினை எடுத்து அவன் கூடையில் வைத்தாள்.
மேற்கூரை ஒலிபெருக்கிகளில் கடை மூடும் அறிவிப்பு கரகரத்தது. அது சாராவை எங்கிருந்தோ மீண்டும் மீட்டுக் கொண்டு வந்தது, திடீரென்று தான் எங்கிருக்கிறோம் என்பதை நினைவுகூர்ந்தவள் போலத் தன்னை சரி செய்து கொண்டாள். அவளது தொழில்முறை முகமூடி மீண்டும் இடம்பெற்றது, ஆனால் அது முன்பு போல் சரியாகப் பொருந்தவில்லை.
“நான் போக வேண்டும். நாளை காலை அமர்வுகள் உள்ளன.” அவள் தன் கூடையைப் பார்த்தாள்.. “நான் நல்ல முன்மாதிரி இல்லை. இப்பொழுது முழுமையாக இருப்பது எப்படி என்பதை விட, அழகாக உடைவது எப்படி என்பதைக் கற்பிக்கவே அதிகத் தகுதி இருப்பதாக உணர்கிறேன்.”
பில் போடும் இடத்தை அடையும்போது சாரா நின்றாள், கையை கூடையில் சுட்டி “இதைப் பற்றி அலுவலகத்தில் கிண்டல் செய்யாதே. அங்கே எனக்கொரு இமேஜ் காக்க வேண்டியுள்ளது.”
“உன் ரகசியம் பாதுகாப்பாக இருக்கும்,” நிகில் என சிரித்தான் “ஆனால் நாளைக்கு இன்னொரு பிண்ட் ஐஸ்க்ரீம், இன்னொரு பாட்டில் ஓயின் தேவைப்பட்டால் சொல். நான் டோர் டெலிவெரி செய்கின்றேன். ” எனச் சொல்லி கண்ணைச் சிமிட்டினான்.
“தேவைப்பட்டால், நம்மிடையே ஒரு ரகசியச் சங்கேத வார்த்தை உருவாக்கிக் கொள்ளலாம். அதை நான் சொன்னதும் நீ பொருளை டெலிவரி செய்யலாம்” எனச் சொல்லி சிரித்தாள். ஒரு கணம், பகிரப்பட்ட சுமைகளின் புரிதலில், மறுகணம் நிகழ்ந்த எளிமையான உரையாடலில் அவர்களுக்கிடையேயான தொழில்முறை இடைவெளி கரைந்தது. பின் அவள் சென்றுவிட்டாள்.
அது நடந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து ஒரு மாலை 7 மணி அளவில், சாரா அன்றைய அமர்வுகளின் குறிப்புகளை முடித்துக் கொண்ட போது, நிகிலின் அறையில் விளக்கு எரிவதைக் கண்டாள்.அவளது சிகிச்சை அமர்வுகள் மாலை 4 மணிக்கே முடிந்துவிட்டன. பின்னர் முடிக்க வேண்டிய பேப்பர் வேலைகளில் செலவிட்டாள். நிகிலை பார்க்கலாம் என முடிவு எடுத்த பின் அவன் அறைக்கு வந்தாள்.
“இன்னும் இங்கேயா?” என்று அவன் கதவருகே நின்று கேட்டாள். நிகில் கசக்கப்பட்ட காகிதங்களால் சூழப்பட்டு, கழுத்துப்பட்டை தளர்த்தப்பட்டு, சட்டைக் கைகள் மடக்கப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தான். மூன்று மாதத்தில் அந்த மருத்துவமனை வாழ்க்கை அவன் மேல் தடம் பதித்திருந்தது. கண்களைச் சுற்றி புதிய சுருக்கங்கள். முகத்தில் வழக்கமாகத் தெரியும் நம்பிக்கையில் சிறு தேய்வு. ஆனால் அடிப்படையான ஏதோ ஒன்று மாறாமல் இருந்தது.
“ஓரிகாமி பறவைகளை இப்படி மடிக்க மாட்டார்கள்,” என்றாள் சாரா. கதவருகே சாய்ந்தபடி நின்றிருந்தாள். நியான் விளக்குகள் எல்லாவற்றையும் கொஞ்சம் கனவு போலக் காட்டின, அந்தி வேளை ஒரு மாய நேரம் – உண்மைகள் எளிதாக வெளிப்படும் நேரம்.
“நாளை கலை சிகிச்சை கற்பிக்க வேண்டும்.” நிகில் தனது சிதைந்த காகிதப் பறவையிலிருந்து பார்வையை உயர்த்தவில்லை. . “பயிற்சி செய்யலாம் என்று நினைத்தேன்.” என சொன்னான்.
அவளைக் கண்டதும் உண்டான படபடப்பை அடக்கக் கண்ணால் அவளைக் காண்பதைத் தவிர்த்தான்.
“காகிதக் குவியலில் என்றென்றும் ஒளிந்திருக்கலாம் என்று நினைத்தீர்களா?”
அது அவனைப் பார்க்க வைத்தது. சாராவின் கண்களில் என்னைக் கவனி என்ற கட்டளை இருந்ததாக நிகில் நினைத்தான்.
“வேலை அதிகமாக இருந்தது,”
“ஆமாம் கவனித்தேன். சல்லிவனின் அமர்வுகள். ராபர்ட்சின் குழுக்கள். ஓவர் டைம் வேலை என எந்நேரமும் பறந்து கொண்டே இருக்கின்றீர்கள்” என சொல்லி அவன் மேஜையை நோக்கி நடந்தாள்.
“இதோ.” அவர் ஒரு நாற்காலியை இழுத்து, புதிய தாளை எடுத்தாள். “கவனி.”
ஓய்வறை தன் மூச்சை அடக்கியது என நிகில் நினைத்தான். அவள் அவனது கைகளை மடிப்புகளின் வழியாக வழிநடத்தினாள். அவளுடைய விரல்கள் அவனுடையதில் வெதுவெதுப்பாக இருந்தன.
“இந்தப் பகுதியில் மென்மையாக,” என்று அவள் மெதுவாகக் கூறினாள். காகிதம் அவர்களின் கூட்டு தொடுதலில் அழகாக மடிந்தது. “இதை வலிந்து செய்ய முடியாது.”
“நோயாளிகளைப் போல?”
“சரியாகச் செய்ய வேண்டிய எந்த விஷயத்தைப் போலவும்.”
“இந்த தருணங்களுக்கு நான் காத்துக் கொண்டிருந்தேன்,” பேப்பரில் மற்றொரு மடிப்பு உருவாவதைப் பார்த்தபடியே அவன் மெதுவாகச் சொன்னான்.
“இதையா?”
“அமைதியை. பரபரப்பின் நடுவேயான இடைவெளியை.” பறவை இப்போது உருவாகிக் கொண்டிருந்தது, அவர்களின் கூட்டு முயற்சியில் நேர்த்தியாக. “மற்ற நேரங்களில் எல்லாமே மிகவும்…”
“ஒய்வில்லா கடிகார முள் போல்?”
“சத்தமாக. அமைதி கூட சத்தமாக இருக்கிறது. சல்லிவனின் கோட்பாடுகள். ராபர்ட்சின் எச்சரிக்கைகள். நோயாளிகளின் வரலாறுகள்.” காகிதப் பறவை வெளிப்பட்டது, கிட்டத்தட்ட முழுமையாக. “சில நேரங்களில் மூச்சு விடுவதைக் கூட மறந்துவிடுகிறேன்.”
“அதனால்தான் உனக்கு கலை சிகிச்சை தேவைப்படுகிறதா?” அவளுடைய விரல்கள் கடைசி மடிப்பில் சிறிது நேரம் தங்கின.
“அதனால்தான் எனக்குத் தேவை…” அவர் நிறுத்தினான், ‘நீ’’ என்ற வார்த்தை எண்ணத்திற்கும் பேச்சிற்கும் இடையே சிக்கியது.
பறவை அவர்களுக்கிடையே அமர்ந்திருந்தது, அதில் ஒரு பரிபூரண அமைதி இருந்தது. வெளியே, மருத்துவமனை அதன் வழக்கம் போல இசைத்துக் கொண்டிருந்தது. எங்கோ, கண்காணிப்புக் கருவிகள் சிறு ஒலி எழுப்பின. மின்தூக்கி மணியொலித்தது. இரவுப் பணி செவிலியர்கள் தங்கள் நிலையத்தில் சிரித்தனர்.
“நீ இதில் மேம்பட்டு வருகிறாய்,” என்று சாரா மென்மையாகச் சொன்னாள்.
“ஓரிகாமியிலா?”
“இல்லை.” அவள் புன்னகைத்தபடி எழுந்தாள். “நிகழ்காலத்தில் வாழ்வதில்.”
அவள் செல்ல நகர்ந்தாள், பின் திரும்பினாள். “மாடியில் காபி? நாளை காலை?”
“எனக்கு அதிகாலை ரவுண்ட்ஸ் இருக்கிறது…”
“எனக்கு உன் ஸ்கேட்யூல் தெரியும், நிகில். ரவுண்ட்ஸுக்கும், ராபர்ட்சின் பணியாளர் கூட்டத்திற்கும் இடையே இருபது நிமிடங்கள் இருக்கிறது. காபிக்கும் ஒருவேளை…” அவள் அவர்களின் காகிதப் பறவையைச் சுட்டிக்காட்டினாள், “மற்றொரு பாடத்திற்கும் போதுமான நேரம். நீ இருக்க வேண்டிய இடம்”
நியான் விளக்குகள் மின்னி மறைந்தன, அவன் அறையைக் கடப்பவர்களின் நிழல்கள் மருத்துவமனைச் சுவர்களில் நடனமாடின. ஆனால் செயற்கை ஒளியை விட வெதுவெதுப்பான ஏதோ ஒன்று அவர்களுக்கிடையேயான வெற்றிடத்தை நிரப்பியது.
“இருபது நிமிடங்கள், சரி பார்க்கலாம் ”
அவள் அவனைக் காகிதப் பறவையுடனும், வெதுவெதுப்பான அவள் விரல் தொடுகை வழிநடத்திய நினைவுடனும் விட்டுச் சென்றாள். காகிதப் பறவை ஒளியில் மின்னியது, அவன் தனக்குள் ஒரு பாடலை முணுமுணுக்க ஆசைப்பட்டான், மெல்ல மேஜையில் தாளமிட்டான்.
“எட்டுப் பதினைந்து ஆகிவிட்டது – உடற்பயிற்சி நேரம்,” நிகில் சல்லிவனிடன் சொன்னான்.
அவன் கையில் சல்லிவனின் அன்றைய கால நிரல் இருந்தது “ஆனால் நீங்கள் அதைத் தவிர்க்கிறீர்கள்.”
சல்லிவனின் பேனா அவரது நோட்டுப் புத்தகத்தில் எழுதுவதை நிறுத்தியது. காலை வெளிச்சம் அதன் பக்கங்களில் நெளிந்துகொண்டிருந்த வார்த்தைகளில் பட்டது.
“மன உண்மைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப உடல் சார்ந்த வழக்கங்கள். இந்தச் சிகிச்சை முறை வெற்று திசைதிருப்பல்.”
“இவை எளிய உடற்பயிற்சிகளாக இருக்க வாய்ப்புள்ளதே. தசைகளை, எலும்புகளைச் சுறுசுறுப்பாக்கப் பயன்படலாம் அல்லவா.”
சல்லிவன் தனது நோட்டுப் புத்தகத்தினை நோக்கி தன் கவனத்தினை திருப்பினார், அதில் அவர் எழுதிக் கொண்டிருந்ததை ஹைலைட்டர் கொண்டு அடிக் கோடிட்டார். திரும்பி, “இந்த உடற்பயிற்சிகள் உண்மையிலேயே உதவும் என்று நம்புகிறீர்களா, அல்லது இது வெறும் நம்பிக்கையா?”
“நாம் இருக்கும் இடத்திலிருந்து தொடங்குவதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.”
“ஆஹா. நாம் எங்கே இருக்கிறோம்?” சல்லிவன் தலையை உயர்த்திப் பார்த்தார், அவரது கண்களில் நுண்ணறிவு மின்னியது. “உடைந்த மனங்களைக் கலையைக் கொண்டும், கைவினைப் பொருட்களால் ஒட்டவைக்கும் வார்டில்? காலை உடற்பயிற்சிகள் வாழ்வின் அடிப்படை துன்பங்களைக் குணப்படுத்தும் என்று நாம் நம்பும் இடத்தில்?”
நிகில் அமைதியாக இருந்தான். சல்லிவன் உரையாடல் நகரும் விதத்தினை எப்படி மாற்றினார் என்பதை கவனித்ரான். சதுரங்க வீரர் போல, மூன்று நகர்வுகள் முன்னதாகவே அதை உணர்ந்து இருந்தான்.
“ஆனால் நீங்கள் என் ஆர்வத்தைத் தூண்டுகிறீர்கள்,” சல்லிவன் தொடர்ந்தார். “நீங்கள் உண்மையிலேயே ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் வருகிறீர்கள். அதே நாற்காலியில் அமர்கிறீர்கள். தினசரி பழக்க, வழக்கங்களைப் பற்றி உண்மையான ஆர்வத்துடன் கேட்கிறீர்கள். ஏன்?”
“ஏனெனில் பழக்கங்கள் நம்மை நங்கூரமிட முடியும்.”
“எதற்கு? அதிகரித்து வரும் குழப்பத்தின் உலகிலா?” சல்லிவன் மற்றொரு குறிப்பேட்டைத் திறந்தார். “இந்த புள்ளிவிவரங்களைப் பாருங்கள். சமூக தனிமைப்படுத்தல் கணிதவியல் ரீதியாக அதிகரித்து வருகிறது. நிறுவனங்கள் மீதான நம்பிக்கை கணிக்கக்கூடிய சதவீதங்களில் குறைந்து வருகிறது. மனித இணைப்பு டிஜிட்டல் தோராயங்களாக குறைக்கப்பட்டுள்ளது. நாம் எதற்கு நங்கூரமிடுகிறோம், டாக்டர்?”
“நிகழ் தருணத்திற்கு.”
“நிகழ் தருணமா?” சல்லிவன் மெதுவாகச் சிரித்தார். “நிகழ் தருணம் என்பது திரண்ட காயங்களுக்கும் எதிர்பார்க்கப்படும் பேரழிவுக்கும் இடையேயான கத்திமுனை மட்டுமே. இது உங்களுக்கு தெரியும்.. உங்கள் கவனமான வார்த்தை, இங்குச் சிகிச்சை பெறுபவரிடம் இருந்து நீங்கள் எடுத்துக் கொள்ளும் தொழில்முறை உளவியல் தூரம் போன்றவை எனக்கு தெரிகின்றது”
உரையாடலின் உள்ளோட்டத்தை நிகில் உணர்ந்தான். “செயல் வழி சிகிச்சைக் குழு—”
“—ஒரு புதிய இயக்க அமர்வு திட்டத்தைத் தொடங்குகிறது. ஆம், சாரா அதைப் பற்றிக் குறிப்பிட்டார். சுவாரஸ்யமான பெண். அவர் மனதின் தெளிவை விட உடலின் உறுதி செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளார். மற்றொரு வகை தப்பிப்பு, ஆனால்…” சல்லிவன் தனது குறிப்பேட்டில் ஏதோ எழுதினார். “நான் பங்கேற்பேன்.”
நிகில் வியப்புடன் . “நீங்கள் பங்கேற்பீர்களா?” எனக் கேட்டான்.
“ஒரே ஒரு நிபந்தனையில்.” சல்லிவனின் பேனா தொடர்ந்து நகர்ந்தது. “நீங்கள் என்னுடன் உண்மையான உரையாடலில் ஈடுபட வேண்டும். பழக்கங்கள் , நங்கூரங்கள் பற்றிய இந்த சிகிச்சை சொற்பொழிவுகள் அல்ல. அது பலனற்றது. உண்மையைப் பேசுவோம். மனிதத் துன்பத்தைப் பற்றி நீங்கள் உண்மையில் என்ன நம்புகிறீர்கள்?”
“அது மனிதனாக இருப்பதன் ஒரு பகுதி என்று நான் நம்புகிறேன்.”
“எளிதான பதில். ஆழமாக இதைப் பாருங்கள். மனிதர்கள் ஏன் துன்பப்படுகிறார்கள்? தனிப்பட்ட முறையில் அல்ல – கூட்டாக. இந்த வார்டைச் சுற்றிப் பாருங்கள். உங்கள் சொந்த வாழ்க்கையைப் பாருங்கள். தொழிலுக்கும், தம்வாழ்வுக்கும் இடையே கவனமாகக் கட்டமைக்கப்பட்ட சுவர்கள். நோயாளிகளுக்குத் தளர்வைப் பற்றிப் போதிக்கும்போது உங்கள் தோள்களில் நீங்கள் சுமக்கும் இறுக்கம் கூடுகின்றது.”
ஏதோ மாறியதை நிகில் உணர்ந்தான் – மருத்துவர் ,நோயாளியின் பாத்திரங்கள் மங்கலாகின. “நீங்கள் மிகவும் கூர்மையாக கவனிக்கிறீர்கள்.”
“நான் முழுக்க நிகழ்காலத்தில் இருக்கிறேன். இது தானே நீங்கள் ஆதரிப்பது?” சல்லிவனின் புன்னகையில் ஒளி இல்லை. “எனவே, நமக்கிடையே ஓர் ஒப்பந்தம். நான் உங்கள் குழு அமர்வுகளில் கலந்து கொள்வேன். இந்த முதிர்ந்த உடலைப் பரிந்துரைக்கப்பட்ட அசைவுகளில் நகர்த்துவேன். உடற்பயிற்சி வாழ்வியல் அச்சத்தைக் குறைக்கிறது என்று மற்றவர்களுடன் சேர்ந்து நடிப்பேன். பதிலுக்கு, நீங்கள் சிந்தியுங்கள். உண்மையாகவே சிந்தியுங்கள். நாம் எல்லோரும் ஏன் உண்மையில் இங்கே இருக்கிறோம் என்பதைப் பற்றி.”
நீண்ட நேரம் கடந்தது. வெளியே, மேகங்கள் சூரியனைக் கடந்து சென்றன, நிழல்கள் சல்லிவனின் எழுத்துக்களில் நடனமாடின.
“சரி,” என்றான் நிகில்.
“நல்லது.” சல்லிவன் தனது எழுத்துப் பணிக்குத் திரும்பினார். “நாளை காலை ஏழு மணி. நான் குழு அமர்வில் இருப்பேன். நீங்கள் இன்று நான் சொன்னதை யோசித்து உங்களைத் தயார் செய்து கொண்டு என்னுடன் உரையாட வாருங்கள். நீங்கள் அப்படிச் செய்யவில்லை என்றால் எனக்கு உடனே தெரிந்து விடும்.”
மாலையில் வேலை முடித்து கிளம்பும் முன் ஓய்வு அறையில், குளிர்ந்துபோன காபியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நிகிலை சாரா கண்டெடுத்தாள்.
அவர் அவள் கேட்பதற்கு முன்,”சல்லிவன் ஒழுங்காக உடற்பயிற்சிக்கு வருகின்றாரா,” என்றான்.
“இத்துடன் 8 வாரம் முடிந்து விட்டது ..ஒரு வகுப்பினையும் அவர் தவறவிடவில்லை. எப்படி அதை சாதித்தாய்?”
நிகில் காபியின் கருமையான மேற்பரப்பை கவனித்தான் அதன் சுழல்களில் ஒழுங்கினை, ஒழுங்கு சிதைவதைக் கண்டான். “அவர்தான் என்னைக் கட்டுப்படுத்துகின்றார் என்று நினைக்கிறேன்.”
சாரா அவனது தோளை மெதுவாகத் தொட்டாள். “கவனமாக இரு. சல்லிவனின் விளையாட்டுகளுக்குள் செல்லக் கூடாத ஆழம் உண்டு.”
ஆனால் நிகில் ஏற்கனவே எல்லா இடங்களிலும் ஒழுங்கு சிதைவதைக் காண ஆரம்பித்துவிட்டான் – காபி சுழல்களில், ஃப்ளோரசென்ட் விளக்கு மின்னல்களில், தொலைவில் கேட்கும் மானிட்டர்களின் நிலையான பீப் ஒலிகளில். ஒவ்வொரு முறையும் சல்லிவனின் சொற்களின் பரு வடிவம் உள்ளதென உணர்ந்தான். அதை சாராவிடம் சொல்லவில்லை.
“சில நேரங்களில்,” என்று அவன் மெல்லிய குரலில் கூறினான், “அகசிக்கல்களுக்கு உள்ள யாரையாவது வழி நடத்தி வெளியே கொண்டு வர வேண்டுமெனில், நாமும் அந்தச் சிக்கலறை முன்வைக்கும் பாதையினுள் நுழைய வேண்டியிருக்கும்.”
சாராவின் கை அவனது தோளில் சிறிது நேரம் தங்கியது. “ஆனால் திரும்பி வர வழி விட்டுச் செல்ல மறந்துவிடாதே.”
ஓய்வு அறையின் ஜன்னலுக்கு வெளியே, காலை மாலையாக நீண்டது, வார்டின் தாளங்கள் ஒழுங்கும் குழப்பமும், குணமளித்தலும் , தீங்கும், நங்கூரங்களும் நீரோட்டங்களுமாக தங்களின் நித்திய நடனத்தைத் தொடர்ந்தன.
மார்ச் 2020 பெரும் மாற்றங்களுடன் வந்தது. ஒருகாலத்தில் பார்வையாளர்களின் குரல்களால் உயிர்ப்புடன் இருந்த மருத்துவமனையின் நடைபாதைகள், இப்போது மருத்துவ காலணிகளின் கீச்சொலியும் கிருமிநாசினி தெளிப்பான்களின் சீறல் ஒலியும் தவிர வேறொன்றும் இல்லாமல் அமைதியாகிவிட்டது.
மனநல பிரிவில் இருந்த நோயாளிகள், ஏற்கனவே தங்கள் நிலைமையால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், இப்போது கட்டாய முகக்கவசங்களுக்கும் கண்ணாடித் தடுப்புகளுக்கும் பின்னால் ஆழ்ந்த தனிமையை எதிர்கொண்டனர்.
நிகிலின் நாட்கள் முடிவில்லா சுழற்சிகளாக மங்கிப்போயின. பாதுகாப்பு உபகரணங்களை அணிதல், களைதல், கிருமிநாசினி தெளித்தல், மீண்டும் மீண்டும். ஒவ்வொரு முகக்கவசமும் அவன் முகத்தில் மறைய நீண்ட நேரம் எடுக்கும் தடயங்களை விட்டுச்சென்றன. குடும்பத்தினருடனான காணொளி அழைப்புகள் வெற்றிடமாக இருந்தன. யதார்த்தத்துடனே போராடிக்கொண்டிருக்கும் ஒருவரின் அன்புக்குரியவர்களைத் திரை வழியாக எப்படி ஆறுதல்படுத்துவது?
நோயாளிகளின் மருத்துவக் குறிப்புகளை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த நிகிலைக் கண்டபோது. அவனது மருத்துவ உடை சுருக்கங்களுடன் இருந்தது, பாதி குடித்த மூன்று காப்பி கோப்பைகள் அவனது ஷிப்டின் காலவரிசையை உருவாக்கிக்கொண்டிருந்தன. அவனைக் கண்ட “நிகில் சோர்வாக இருக்கிறாய்,” என்றாள் சாரா.
“வேலை அதிகமாக இருக்கிறது. உனக்குத்தான் தெரியுமே. மூன்று ஊழியர்கள் கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராபர்ட்ஸ் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த தினசரி அறிக்கைகளைக் கேட்கிறார். தனிமையால் நோயாளிகளின் நிலை மோசமடைகிறது.” குரல் சோர்வாக ஒலித்தது.
“கடைசியாக எப்போது ஓய்வெடுத்தாய்?”
“ஓய்வா?” அவன் சிரித்தான், ஆனால் அதில் கலகலப்பு இல்லை. “உலகமே சிதறிக் கொண்டிருக்கும்போதா?”
“இதைத்தான் அவர்கள் எல்லோரும் சொல்கிறார்கள்.” சாரா, அவன் இன்னொரு காப்பிக்காகக் கையை நீட்டியபோது அது சிறிது நடுங்குவதைக் கவனித்தாள்.
“நான் நன்றாகவே இருக்கிறேன். கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஆகிவிட்டதே.”
“வேலையிலா? சல்லிவனுடனான நிறைய நேரம் தத்துவ விவாதம் பேசுகிறாய் எனச் சொல்கின்றார்களே? அதுவும் வேலையா?”
நிகில் பதில் சொல்லாமல் அறையை விட்டு வெளியே போனான்.
மாற்றங்கள் ஆரம்பத்தில் சிறியதா இருந்தன. சீராக அடுக்கி, தூய்மையாக இருக்கும் நிகிலின் அலுவலகம் படிப்படியாகக் காப்பி கோப்பைகள், சிதறிக்கிடந்த நோயாளிகளின் கோப்புகள், தூக்கி எறியப்பட்ட முகக்கவசங்கள் ஆகியவற்றால் நிறைந்தது. ஒருகாலத்தில் முறையான முறையில் ஈடுபாட்டுடன் இருந்த அவனது காலை சுற்றுகள், இப்போது அவசரமாக மாறின. ஒவ்வொரு நோயாளியின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் நினைவில் வைத்திருந்த மருத்துவர், இப்போது அடிப்படை விவரங்களை நினைவுகூரக் கோப்புகளை இருமுறை சரிபார்க்க வேண்டியிருந்தது.
மணி நேரங்கள் சல்லிவனுடனான உரையாடல்களில் மறைந்தன. கட்டாய ஊழியர் ஓய்வு நேரங்களில் கூட, நிகில் 604-ஆம் அறையில், சல்லிவனின் கோட்பாடுகள், நம்பிக்கையின்மை வலையில் ஈர்க்கப்பட்டு அங்கேயே இருந்தான்.
சல்லிவன் ஒரு நள்ளிரவு விவாதத்தின்போது “சமூகத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாக இருந்தது,” என்றார். முகக்கவசத்தின் வழியாக, அவரது குரல் ஒரு பேராசிரியரின் அதிகாரத்துடன் ஒலித்தது. “ஒரே ஒரு வைரஸால் எவ்வளவு விரைவாக எல்லாம் சிதைந்துபோனது என்பதைப் பாருங்கள்.”
நிகில் தலையசைத்தான், நகர மருத்துவமனைகளுக்கு வெளியே நின்ற பிணக்குளிர் லாரிகள், நோய்வாய்ப்பட்ட சகாக்கள், ஐபேட்கள் வழியாக விடைபெற்ற குடும்பங்கள் பற்றி நினைத்துக்கொண்டே. “அமைப்பு எப்போதுமே எளிதில் உடையக்கூடியதாக இருந்தது.”
“நீங்களும் இப்போது பார்க்கத் தொடங்கிவிட்டீர்கள், இல்லையா?” சல்லிவனின் கண்கள் முகக்கவசத்திற்கு மேலே மின்னின. “இதெல்லாம் வீண் என உணர்கின்றீர்கள் அல்லவா?”
சாரா தூரத்திலிருந்து இந்த மாற்றத்தைக் கவனித்தாள். ஒருகாலத்தில் நோயாளிகளுடன் விளையாட்டாகப் பேசி அன்புடன் இருந்த இளம் மருத்துவன், இப்போது வார்டில் ஒரு இறந்த பிணம் போல நடமாடினான். ஒருகாலத்தில் நோக்கத்துடன் நேராக இருந்த அவனது தோள்கள், இப்போது கண்ணுக்குத் தெரியாத பாரத்தைச் சுமப்பதுபோல உள்நோக்கி வளைந்திருந்தன.
அவள் தன்னால் முடிந்த சிறிய தலையீடுகளை முயன்றாள். அவனுடன் காபி குடிக்க, லஞ்ச் சாப்பிட முயற்சி எடுத்தாள். ஊழியர் நல நெறிமுறைகள் பற்றிய மென்மையான நினைவூட்டல்கள் செய்தாள். நிகில் எரிச்சலுடன் ஒவ்வொரு முயற்சியையும் தவிர்த்தான்.
“எனக்கு நல சோதனைகள் தேவையில்லை,” என்று ஒருநாள் அவள் ஓய்வு எடுக்கப் பரிந்துரைத்தபோது அவர் எரிச்சலுடன் கூறினான். ” இருக்கும் வேலை செய்யவே எனக்குக் கூடுதல் மணிநேரங்கள் தேவை.”
“எதற்காக? சல்லிவனின் கோட்பாடுகளில் மேலும் மூழ்கவா?”
” இதெல்லாவற்றிற்கும் அவர் மட்டுமே அர்த்தம் கொடுக்கிறார்!”
“அவர் நம்பிக்கையின்மைக்கு வடிவம் கொடுக்கிறாரா? அது சரியா?”
நிகில் திரும்பிக்கொண்டான்.
2021 வசந்த காலம் வந்தது. மருத்துவமனை மெல்ல மெல்லத் தனது போர்க்களத் தோற்றத்தை உதறித் தள்ளிக் கொண்டிருந்தது. பார்வையாளர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. தடுப்பூசிகள் எச்சரிக்கையான நம்பிக்கையைக் கொண்டு வந்திருந்தன.
சாரா மாலை நேரத்தில் சாரா நிகிலின் அலுவலகம் சென்றாள். சல்லிவனின் குறிப்பேடுகளால் சூழப்பட்டு, தனியாக இருந்தபோதும் முகக்கவசம் அணிந்திருந்தான். பழைய பழக்கங்கள் எளிதில் மறைவதில்லை.
“இப்போது நாம் இதை கழற்றலாம் என்று தெரியுமா,” என்றாள் சாரா, தனது முகக்கவசத்தைத் தொட்டுக்காட்டி.
நிகில் தலையை உயர்த்தவில்லை. சமூக சரிவு அட்டவணைகள், தொற்றுப் பரவல் கோட்பாடுகள் பற்றி ஏதோ குறித்துக் கொண்டிருந்தான்.
“வாழ்க்கை மீண்டும் சுவாசிக்கத் தொடங்கியுள்ளது.” அவள் குரல் கனத்து ஒலித்தது. அவன் தொடர்ந்து எழுதுவதைக் கவனித்தாள். “இந்த அறையில் உள்ள சிலர் இன்னும் சுதந்திரத்தினைச் சுவாசிப்பதில்லை.”
“நான் நன்றாகவே சுவாசிக்கிறேன்.”
“உண்மையிலேயா? நீ கடைசியாக என்றைக்குச் சரிவு கோட்பாடுகள் அல்லாத உரையாடல் ஒன்றில் ஈடுபட்டாய் ?”
அவனது அலுவலகத்துக்கு அப்பால் உள்ள வார்டு இப்போது வேறுவிதமாக இருந்தது. நோயாளிகள் மீண்டும் ஒன்றாக உணவருந்த முடிந்தது, இடைவெளி விட்டு அமர்ந்த மேஜைகளில் என்றாலும். குடும்ப உறுப்பினர்களின் வருகைகள் மீண்டும் தொடங்கியிருந்தன. காற்றுகூட இலேசாக இருந்தது.
ஆனால் நிகில் தொற்றுநோய் உச்சக்கட்ட நிலையிலேயே சிக்கியிருந்தான், மாறிவரும் அலைகளை ஏற்றுக்கொள்ளப் பயந்து கொண்டிருந்தான்.
“சல்லிவன் இது வெறும் இடைவேளைதான் என்கின்றார்,” என முணுமுணுத்தான். “அடுத்த அலை வரும் முன்—”
“நிச்சயமாக அவர் அப்படித்தான் சொல்வார்.” அவர் எழுதிக்கொண்டிருந்த குறிப்பேட்டைச் சாரா மூடினாள். “எனக்கு ஓர் உதவி செய்வாயா?”
“என்ன செய்ய வேண்டும்?” அவனது குரல் சோர்வாக இருந்தது.
“என்னுடன் ஒரு பயணம் வா. இந்தச் சுவர்களிலிருந்து விலகி. இந்தக் கோட்பாடுகளிலிருந்து. இந்த…” அவள் சல்லிவனின் குறிப்பேடுகளைச் சுட்டிக்காட்டினாள், “நீ கடன் வாங்கிய இந்த பேரழிவுகளிலிருந்து.”
“எனக்கு வெளியே செல்ல முடியாதே. வேலை—”
“உண்மையில், உன்னால் முடியும். ஊழியர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட பழைய நிலைக்குத் திரும்பிவிட்டது. ராபர்ட்ஸ் ஏற்கெனவே விடுமுறைக்கு ஒப்புதல் அளித்துவிட்டார். உனக்கான விடுமுறையும் கேட்டேன். ஒப்புதல் தர இசைந்துள்ளார். நீ முறையாக விண்ணப்பித்தால் அவர் அனுமதிப்பார்”
“எங்கே?”
“என்னுடன் வா. எனக்குத் துணைக்கு ஆள் வேண்டும். நியுயார்க் மாநிலம் போகின்றோம். கேட்ஸ்கில் மலைக்கு அருகே எங்கள் கேபின் உள்ளது. அங்கே தங்கி விட்டு பிறகு நியுயார்க் போவோம். என் அப்பா, அம்மாவைப் பார்த்து ஒரு வருடத்துக்கு மேலாகின்றது”
நிகில் குழப்பத்துடன் தலையசைத்தான்.அடுத்த நாள் அவன் தனது முறையான விடுப்புக் கோரிக்கையை அனுப்பினான். ராபர்ட்ஸ் அதை ஏற்றுக் கொண்ட பொழுது, அவர் தனது மனநிறைவை மறைக்க முயலவில்லை. அவனை நேரில் அழைத்து ஒரு காபி வாங்கிக் கொடுத்துப் பேசி விடை கொடுத்தார்.
ஒருவழியாக கேட்ஸ்கில் மலைத் தொடரில் சாராவின் கேபினை அந்தி வேளையில் சென்றடைந்தனர். கேபினை அணைத்து மலைகள் அவர்களைச் சூழ்ந்திருந்தன. வசந்த கால முன் பனிப்படலம் பள்ளத்தாக்குகளில் படர்ந்திருந்தது. ஸ்லைடு மலையின் வட முகப்பிலும் ஹன்டர் சிகரத்திலும் பனி சிதறிக் கிடந்தது.
மலை ஓடையை ஒட்டிச் செல்லும் சரளைப் பாதையினைத் தொட்டுக் கொண்டால் போல கேபின் இருந்தது. மாலை நேர ஒளி சர்க்கரை மேப்பிள் , மஞ்சள் பர்ச் மரங்களின் இலையற்ற கிளைகளின் வழியே ஊடுருவியது.
காலப்போக்கில் வெளிறிய செடார் மர கூரைகளுடன், உள்ளூர் ப்ளூ ஸ்டோன் அடித்தளமும் கொண்ட இரண்டு மாடிக் கட்டிடம். கையால் வடிவமைக்கப்பட்ட ஹெம்லாக் மரத்தூண்களால் தாங்கப்பட்ட சுற்று வராந்தா. கனத்த மலைப்பனியைத் தள்ளும் வகையில் கூர்மையான கூரை, இருண்டு வரும் வானத்தின் பின்னணியில் கேபின் நிமிர்ந்து நின்றது.
“என் தாத்தா தச்சுத்தொழில் செய்தவர், டச்சு பாணி தச்சுத் தொழில் நிபுணர்” என்று சாரா சிவப்பு டச்சு கதவைத் திறந்தபடி விளக்கினாள். “60களில் இந்த இடத்தைக் கட்டினார், ஒவ்வொரு பலகையையும் தானே உருவாக்கினார்.”
உள்ளே, கேபின் வரலாற்றையும் கைவினைத் திறனையும் காட்டி நின்றது. பத்தாண்டுகளின் பாதச்சுவடுகளால் மென்மையாக்கப்பட்ட அகலமான பைன் மரத்தளம் விரிந்து நின்றது. ஓடையிலிருந்து சேகரிக்கப்பட்ட பாறைகளால் கட்டப்பட்ட பெரிய கல் அடுப்பு ஒரு பக்க சுவரை ஆக்கிரமித்தது. செர்ரி மரத்தால் செதுக்கப்பட்ட ஒற்றைத் துண்டான அதன் மேல்சட்டம், குடும்பப் புகைப்படங்களைத் தாங்கி நின்றது.
மேல்தளத்தில் இரண்டு படுக்கையறைகள் இருந்தன. பெரிய படுக்கை அறையில் பள்ளத்தாக்கைப் பார்க்கும் வகையில் கட்டப்பட்ட ஜன்னல் இருக்கை இருந்தது. அதில் ஆந்தோன் செகாவின் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. “தாத்தா இதை கனவுகள் நோக்கி விரியும் இடமென என்று சொல்லுவார்,” என்றாள் சாரா. “உலகைத் தெளிவாகப் பார்க்கச் சில நேரங்களில் இங்கு உட்கார வேண்டும் என்பார்.”
கேபினைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் வராந்தா சூழ்ந்திருந்தது, நாளின் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு காட்சிகளை வழங்கியது. கிழக்குப் பக்கம் பள்ளத்தாக்கின் மேல் உதயமாகும் சூரியனை எதிர்கொண்டது, அங்கே காலை மூடுபனி முதல் ஒளியில் பொன்னிறமாக மாறியது. தென்புற மான்கள் ,காட்டு வான்கோழிகளை ஈர்க்கும் சிறிய வெளியை நோக்கியிருந்தது. மேற்கு வராந்தா மலை ஓடையை நோக்கியிருந்தது, அதன் ஓசை தொடர்ந்து மென்மையான பின்னணியாக இருந்தது.
“அந்த ஓடையில் நல்ல மீன்பிடி வாய்ப்பு இருக்கிறது,” எனச் சாரா சொன்னாள். “பருவம் சரியாக இருக்கும்போது ட்ரவுட் மீன்கள் கிடைக்கும்.”
கேபினைச் சுற்றி, கவனமாகப் பராமரிக்கப்பட்ட பாதை லாரல் செடிகளின் வழியே வளைந்து சென்றது, அவற்றின் இலை மொட்டுகள் வரவிருக்கும் இளஞ்சிவப்பினை,வெள்ளை நிற மலர்களினை சூடிக் கொண்டிருந்தன.
நிகில் மேற்கு வராந்தாவில் நின்றபடி, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பாறைகளுடன் உரையாடிக்கொண்டிருக்கும் நீரோடையின் சப்தத்தை ரசித்துக் கேட்டான். இங்கே நின்றபோது, சல்லிவனின் கணக்கீடுகளும் சமூக வீழ்ச்சி பற்றிய கோட்பாடுகளும் எவ்வளவோ தொலைவில் இருப்பதுபோல் தோன்றியது. மலைகள் எத்தனையோ மானுட வாழ்வின் எழுச்சி வீழ்ச்சிகளையும், பெருந்தொற்றுகளின் வருகை போக்குகளையும் கண்டிருக்கின்றன. இருந்தும் ஒவ்வொரு வசந்தகாலமும் பட்ரவுட் மீன்கள் திரும்பி வருகின்றன, மேப்பிள் மரச்சாறு மேலெழுகிறது, மலை லாரல் மலர்கிறது.
அவன் அமைதியாக நிற்பதைக் கண்டு சாரா பெரு மூச்சு விட்டாள். காரில் இருந்து பெட்டியை எடுக்க அவனை அழைக்கலாம் என நினைத்ததைக் கைவிட்டாள். தானே சென்று பெட்டியை எடுத்துக் கொள்ள முடிவு செய்து அகன்றாள்.
நிகிலுக்கு அவரது மருத்துவமனை வாழ்க்கையால் கட்டுப்படுத்தப்பட்ட மூச்சில் மாற்றம் நிகழத் தொடங்கியிருந்தது. உள்ளிழுக்கும் ஒவ்வொரு மூச்சும் மலைக்காற்றை நுரையீரல்களின் ஆழம் வரை கொண்டு சென்றது. வெளியிடும் ஒவ்வொரு மூச்சும் நெடுநாளாய் உடலில் ஊறிப்போயிருந்த மருத்துவமனை வாசனையைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றியது.
அவர்களுக்கு மேலே இரண்டு காகங்கள் சோம்பலாக வட்டமிட்டன. அவற்றின் கரைச்சல்கள் பள்ளத்தாக்குச் சுவர்களில் எதிரொலித்தன. புராதன, விடுதலை உணர்வுள்ள சப்தம். ஒரு தாளமாக உணர்ந்தான். மூன்று இரவுகள் கழிந்தன. பகலில் மலைகளில் நடைபாதைகளில் நடந்து களித்தனர். இரவில் விரிந்த வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களுடன் சென்றது. நிகிலுக்கு விடாத எண்ணங்களின் ஓட்டம் மட்டுப்பட ஆரம்பித்தது. மரங்களை, செடிகளை, மலர்களை, ஓடும் நீரினை, உணவின் சுவையை அவன் மனம் தொட்டது. அவனால் சமையலறையில் சமைக்க முடிந்தது. காலையில் எழுந்து தனியாக உடற்பயிற்சிக்கு ஓட முடிந்தது. ஆந்தோன் செகாவின் வார்ட் நம்பர் 6 ஒரே அமர்வில் படித்து முடிக்க முடிந்தது.
நட்சத்திரங்களின் கீழ் அமர்ந்திருக்கும் ஒரு பொழுதில் சாராவின் கைகளை இறுகப்பற்றி அவள் கண்களை உற்றுப் பார்த்தான். அதில் நன்றி இருந்தது. அவன் தோள்களை அணைத்துக் கொண்டு “இது வரை நகரத்தினை மட்டுமே கண்டிருந்த நிகில் மலைகளை பார்த்தாகிவிட்டது. இனி இந்த அனுபவம் உன்னை விடாது” எனச் சொல்லிச் சிரித்தாள். “உன் கனவுகளில் இனி மலைகளுக்கும் இடம் இருக்கும்” என்றாள்.
“மலை மைந்தன் நாளை நியுயார்க் போகனும். காலையில் சீக்கிரம் கிளம்பலாம். பெட்டிகளை எடுத்து அடுக்கி, காலை உணவு தயார் செய்து விட்டு என்னை எழுப்ப வேண்டியது உன் பணி” எனச் சொன்னாள். அவன் புன்னகையுடன் தலை அசைத்தான்.
நியூயார்க் நகரம் புத்துயிர் பெற்றுத் துடித்தது – நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது சுருதியைக் கண்டெடுக்கும் இசையைப் போல ஒலித்துக் கொண்டிருந்தது. தெருக்கள் வசந்தத்தின் ஆற்றலால் அதிர்ந்தன. தெருவில் சிலர் முகக்கவசம் அணிந்திருந்தனர், மற்றவர்கள் இல்லை – இப்போது அது கட்டாயமல்ல, தனிப்பட்ட தேர்வு. நகரம் மீண்டும் சுவாசிக்கக் கற்றுக்கொண்டிருந்தது.
செல்சியில் அவர்களின் உணவகம் ஹை லைனை நோக்கியிருந்தது.ஹை லைனில் விரிசல்களிலிருந்து பூக்கள் புதிய உறுதியுடன் முளைத்திருந்தன. நியுயார்க் நகரத்தின் ஹை லைன் கைவிடப்பட்ட ரயில் பாதையிலிருந்து உருவாக்கப்பட்ட நகர்ப்புறப் புதுமை. அந்த அழகிய பூங்கா கலைப்படைப்பாக, பசுமை இழையாக நகரத் தெருக்களுக்கு மேலே நீண்டிருந்தது. பழைய ரயில் தண்டவாளங்களுக்கிடையே காட்டுப்புல் காற்றில் ஆடியது. கவனமாகப் பராமரிக்கப்பட்ட தோட்டங்கள் பூத்துக் குலுங்கின. எஃகு பெஞ்சுகளும், மர ஓய்வு நாற்காலிகளும் பயணிகளை மான்ஹாட்டனின் மேற்கு விளிம்பில் அஸ்தமனத்தைக் காண அழைப்பது போலிருந்தன. நவீனக் கலைப் படைப்புகள் பாதையில் நின்று கொண்டிருந்தன. இருபது அடி கீழே நகரம் விரைந்து கடந்து சென்றது. ஆனால் இங்கே, நேரம் வேறொரு வேகத்தில் நகர்ந்தது.
வாஷிங்டன் சதுக்கப் பூங்கா பல இசைக் கலைஞர்களால் அதிர்ந்தது – ஜாஸ் நால்வர் குழு, கிளாசிக்கல் வயலின் வாசிப்பாளர், பீட்பாக்சர் – ஒவ்வொருவரும் வெவ்வேறு மூலைகளைத் தனக்குரியதாக மாற்றி இருந்தனர். இந்த ஒலிக்கலவை விடுதலையின் குரலாக ஒலித்தது.
சாராவும், நிகிலும் கால் ஒயும் வரை நடந்தனர். வாழ்வு அங்கே பல்வேறு மனிதர்கள் வழியே காட்சியாகிக் கொண்டிருந்தது. குழந்தைகள், ஆண்கள், பெண்கள் எனப் பல இனத்தில், மொழியில், வேலையில் நகரத்தின் உயிராக இயங்கிக் கொண்டிருந்தனர்.
பெத்தெஸ்டா நீரூற்றருகே, பல பந்துகளை இரு கைகளில் தூக்கிப் போட்டு வித்தைக் காட்டும் கலைஞர் ஒருவர் கூட்டத்தை ஈர்த்தார்.
“அவரைப் பார்!” என்றாள் சாரா. “முழுமையான கவனத்தில் தன் வேலையில் ஈடுபட்டுள்ளார்.”
“இடைவெளியே இல்லாதது போல.”
“ஆனால் இடைவெளி இருக்கிறதல்லவா? அதுதான் இதை இன்னும் அழகாக்குகிறது, இல்லையா?”
பின்னர், அவர்கள் சூரிய அஸ்தமன வேளையில் ஹை லைனில் நின்றிருந்தனர். நகரம் அவர்கள் முன் விரிந்திருந்தது, மறையும் ஒளியில் ஜன்னல்களின் ஒளி பூமியில் முளைத்த விண்மீன் கூட்டம் போல ஜொலித்தது.
“சல்லிவனை சந்தித்த பிறகு, வாழ்வதைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தேன்,” என்று நிகில் மெதுவாகச் சொன்னான். “எப்போதும் சரியான ஒரு எதிர்காலத் தருணத்துக்காகக் காத்திருந்தேன்.”
“நிகழ்காலத்தின் அனைத்துத் தருணங்களையும் இழந்துகொண்டே.”
தூரத்தில் ஒரு தம்பதியினர் உணவகம் ஒன்றின் மாடித் தோட்டத்தில் நடனமாடிக் கொண்டிருந்தனர். இசை மங்கலாகக் கேட்டது. வானம் ஊதா நிறமாக மாறிக்கொண்டிருக்கும்போது இரண்டு உடல்கள் மட்டும் சரியான இணக்கத்துடன் அசைந்து கொண்டிருந்தன.
“சல்லிவன் சொல்வது சரியென்றால்?” நிகில் கேட்டான். “எல்லாமே அர்த்தமில்லாமல் இருக்க முடியுமா?”
சாரா நடனமாடும் தம்பதியினரைப் பார்த்தாள். “அவர்களின் நடனம் உனக்கு அர்த்தமற்றதாகத் தெரிகிறதா?”
“இல்லை,” என்றான். “இல்லை, அப்படித் தெரியவில்லை.”.
“உனக்கு தெரியுமா?” அருகே படர்ந்த கொடியிலிருந்து சுழன்று விழும் இலையைப் பார்த்தபடி நிகில் மெதுவாகச் சொன்னான். “முன்பெல்லாம் எதையும் மாற்ற எல்லாவற்றையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இப்போது புரிகிறது – நான் என் பங்கை மட்டும் செய்தால் போதும், ஒவ்வொரு தருணத்திற்கும் என் முழுமையைக் கொடுத்தால் போதும். நான் பணிபுரியும் அமைப்பு, நான் சிகிச்சையளிக்கும் நோயாளிகள், என் சொந்தப் புரிதல்கூட – எல்லாமே என்னுடன் வளர்கிறது.”
சாரா கைப்பிடிச்சுவரில் சாய்ந்தாள், நிலவொளி அவள் கண்களில் தெரிந்த புன்னகையில் தெறித்தது. “நடனம் கற்றுக்கொள்வதைப் போல.”
சரியான நேரத்தில், அருகில் இருந்த உணவகத்தின் மேல் தோட்டத்திலிருந்து இசை மிதந்து வந்தது – மெதுவான ஜாஸ் போன்ற ஏதோ ஒன்று, மெல்லிசையை விட உணர்வு நிறைந்தது.
“எனக்கு நடனமாட வராது” என நிகில் வெளியில் சப்தம் எழுந்ததா, இல்லை வெறும் மனதின் குரலா என ஐயப்படும் தொனியில் சொன்னான்.
“அப்படியா?” சாரா நிமிர்ந்து, அவனை நோக்கி சற்று நகர்ந்தாள். “வேடிக்கையாக இருக்கிறது. நெருக்கடி நேரங்களில் நீ வார்டில் வேலை செய்வதை நான் பார்த்திருக்கிறேன். அதுவும் ஒருவகை நடனம்தான்.”
நிகில் தொலைவிலிருந்து வரும் இசைக்கு மெதுவாக ஆடிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். “அது வேறுவிதமான தாளம்.”
“ஆனால் என்ன இதுவும் அதே போலத்தான். இருப்பதை வைத்து வேலை செய்கிறோம். முடிந்ததை நம் பங்காகச் சேர்க்கிறோம். அடுத்த அடியை நம்புகிறோம்.”
அவர்களுக்கிடையேயான இடைவெளி குறைந்திருந்தது, யார் நகர்ந்தது என்று இருவருக்கும் நினைவில்லை.
“இவ்வளவு எளிதாக?” என்று அவன் மெதுவாகக் கேட்டான்.
“இவ்வளவு எளிதாக.”
இசை அவர்களை மெதுவான, தயக்கமான ஆட்டத்திற்குள் இழுத்துச் சென்றது. தாங்கள் நடனமாடுகின்றோம் என அவர்கள் நினைக்கவில்லை- அது வெறுமனே அவர்களின் உரையாடலைத் தொடர்வதற்கான மற்றொரு வழி, வார்த்தைகளால் முழுமையாக விளக்க முடியாததை புரிந்துகொள்வதற்கான வழி.
அவர்களுக்கு மேலே, கேட்ஸ்கில் மலையின் தாளங்களைக் கண்காணித்த அதே வானம் இருந்தது, எங்கோ கீழே, நகரம் துடித்துக்கொண்டிருந்தது, ஒவ்வொரு இதயமும் இந்தப் பேரியக்கத்தின் தாளத்துடன் இணைந்து துடிப்பதற்கான தனது சொந்த வழியைக் கண்டுபிடித்துக்கொண்டிருந்தது.

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
