ஒழுங்கைக் குலைக்கும் மனிதன் – ஜாக் டாட்டி

Jaques Tati – 1907-1982

இரண்டாம் உலகப் போருக்கு பின் 1950 களில் ஆரம்பித்த நவீன பிரெஞ்சு சினிமா இயக்கம் பல புதிய படப்பிடிப்பு உத்திகளை உலகிற்கு முன் வைத்தது. போரினால் நலிந்த பொருளாதாரத்தினால் குறைந்த செலவில் திரைப்படங்களை தயாரிக்க வேண்டிய அவசியம் நேரிட்டது. 1950இல் பிரெஞ்சு இயக்குனர் ஃப்ரான்ஸ்வா ட்ரூஃபோ(Francois  Truffaut) எழுதிய ஒரு கட்டுரையின் அடிப்படையில் குறைந்த பொருட்செலவில் புதிய பாணி சினிமா எடுப்பதற்கான கோட்பாடுகளின் அடிப்படையில் நவீன ஃப்ரெஞ்ச் சினிமா பாணி ஆரம்பித்தது. இந்நவீன பிரெஞ்சு சினிமா இயக்கம்   அதுவரையிலும் சினிமா உலகம் கையாண்ட உத்திகளை விமர்சித்து புதிய சினிமா உத்திகளை முன் வைத்தது. பழைய பாணி சினிமா தயாரிப்பு நிஜ வாழ்க்கையில் ஒட்டாமலும், நாடகீயத்துடனும்,  படத் தளங்களில் தயாரிக்கப்பட்டும், நிஜத்தில் இருந்து விலகியும் இருந்தது என்று கருதியது.

நவீன பிரெஞ்சு சினிமாவின் கதை சொல்லும் பாணி காட்சிகளை ஒட்டி வெட்டி பார்வையாளனின் கவனத்தை தக்க வைப்பதிலிருந்து ஒரு நேர் கோட்டில் அடுத்தடுத்த காட்சித்தொடராக கதையை நகர்த்தி பார்வையாளனை கதையோட்டத்தில் பங்கு பெறச்செய்யும் புதிய உத்தியை அறிமுகம் செய்தது. இதன் மற்ற அம்சங்கள் கைப்படப்பிடிப்பு பெட்டியில் உள் படப்பிடிப்பு தளங்களை தவிர்த்து நேரடியாக வெளிப்புற காட்சிகளைக் காட்டுவது.  மேலும் நிஜ ஒலி, ஒளியை எவ்வித மாற்றமும் இன்றி படப்பிடிப்பின்போதே பதிவு செய்வது.

நவீன ஃப்ரெஞ்ச் சினிமாவின் மிக முக்கியமான அம்சம் இயக்குனரே ஒரு படத்தின் மொத்த உருவாக்குனர்(Auteur) என்பது. அதுவரையில் ஒரு சினிமா எல்லோரது கூட்டுப் பங்களிப்பாக இருந்தது மாறி ஒரு திரைப்படம் இயக்குனரின் மொத்த கலைப்படைப்பு என்றாகியது.

இந்நவீன ஃப்ரெஞ்ச் சினிமாவின் தாக்கத்தால் உருவான இயக்குனர்கள்  ஃப்ரான்ஸ்வா ட்ருஃபோ(Francois Truffaut), ஜான் -லூக் கோடார்ட்(Jean-Luc Godard), க்ளாட் ஷப்ரோல் (Claude Chabrol), எரிக் ரோமர் ( Eric Rohmer), ஜாக் ரிவெட் (Jacques Rivette) முதலானோர். இவர்களில் மிக முக்கியமானவர் ஜான் – லூக் கோடார்ட். தொடர்ந்து இப் பாணியில் இவர்களின் வரிசையில் படமெடுக்க ஆரம்பித்தவர்கள் வரிசையில் ஒருவர் ஜாக் டாட்டி என்னும்
ஜாக் டாட்டிஷெஃப் ( Jaques Tatischeff).

டாட்டி ரஷ்யத் தந்தைக்கும் டச்சுத் தாய்க்கும் 1907 அக்டோபரில் பிறந்தார். இவர் பிறந்த பின் இவருடைய தந்தை ரஷ்யாவுக்கு நிரந்தரமாக குடிபெயர்ந்தபோது டாட்டியின் தாய் தன் குழந்தைகளுடன் பாரீசில் வாழ்ந்து வந்த தன் தந்தை வீட்டிற்குக் குடிபெயர்ந்தார்.  டாட்டி படிப்பில் சாதாரணமாக இருந்த போதிலும்  ஃப்ரெஞ்ச் விளையாட்டுப் பயிற்சிக்கூடமான ஃப்ரெஞ்ச் ரேசிங் கிளப்பின் உறுப்பினராக டென்னிஸ் மற்றும் ரக்பி குழுக்களில் விளையாடினார்.  கூடவே சக விளையாட்டு வீரர்களின் அங்க அசைவுகளை நகலெடுப்பதிலும் தேர்ந்தார். இது பின்னாளில்  இவரது  குறும்படங்களின் கதாபாத்திரங்களாக மாறின.

தன் தாய் வழித்தாத்தாவின் படச்சட்டம் செய்யும் தொழில் பயின்ற போதிலும் ( இவரது தாத்தா பிரபல ஓவியர் வேன் கோவின் ( Van Gogh) ஓவியங்களுக்கு படச்சட்டம் செய்தவர்) மிகச் சம்பிரதாய நடுத்தர ஃப்ரெஞ்ச் வாழ்க்கையில் நாட்டமின்றி   வீடு மற்றும் விளையாட்டு கிளப்பிலிருந்து விலகி ஒரு நடிகராக தன் வாழ்க்கையைத் துவங்குகிறார்.

1935ல் ஃப்ரெஞ்ச் நாளிதழான லெ ஜர்னல் (Le Journal) நடத்திய ஒரு விழாவில் டாட்டியின் அங்க அசை நகைச்சுவையைக் கண்ட அப்போது பிரபலமான ஃப்ரெஞ்ச் சினிமா விமர்சகரும் நடிகையுமான கோலெட்டின்,  ( Sidonie-Gabrielle Colette)  டாட்டி எல்லா பெரும் நட்சத்திரங்களின் திறன்களையும் ஒருங்கே கொண்டவர் என்ற விமர்சனம் இவரைப் பிரபலமாக்கியது.

இரண்டாம் உலகப் போரில் பங்கு பெற்று,  ஃப்ரெஞ்ச் படைகள் 1940ல் ஜெர்மனியிடம் சரணடைந்தபின் ராணுவத்திலிருந்து திரும்பிய  டாட்டி,  வேலை வாய்ப்புகள் அற்ற கடினச் சூழலில் ஒரு காபரே நடனக்காரராகவும் விளையாட்டு வீரர்களின் அங்க அசைவுகளை நடித்துக்காட்டுபவராகவும் மறுபடி வாழ்க்கையைத் துவங்கினார். இரண்டாம் உலகப்போர் முடியும் வரையில் டாட்டி நான்கு குறும்படங்களில் நடித்து முடித்தார்.  இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் அவரது குறும்படத் தயாரிப்பாளருடன் சேர்ந்து கேடி ஃபிலிம்ஸ் (Cady films) என்ற பெயரில் முதல் மூன்று படங்களான,
தபால்காரர்களின் பள்ளி(L’École des facteurs – The School for Postmen),  திருவிழா நாள் (Jour de fête  -The Big Day), திருவாளர் ஹ்யூலோவின் விடுமுறை( Les Vacances de Monsieur Hulot -Monsieur Hulot’s Holiday) போன்றவற்றை தயாரித்து இயக்குகிறார். இதில் முதல் படமான தபால்காரர்களின் பள்ளி,  நகைச்சுவைக்கான மேக்ஸ் லிண்டர் விருதைப் பெற்றது.

அடுத்த படமான திருவிழா நாளில் ( Jour de fête -The Big Day), தபால்காரனான ஃப்ரான்ஸ்வா, வெகு துரித அமெரிக்க தபால் சேவையை  ஒரு குறும்படத்தில் கண்டு, அதைப் போன்றதொரு சேவையை தானும் ஒரு சிறிய ஃப்ரெஞ்ச் கிராமத்திற்கு நல்க யத்தனிக்கும் கதை. 

எல்லாவற்றிலும் அழகியல் சார்ந்த பார்வை கொண்ட ஐரோப்பா, இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமெரிக்கத் தொழில்நுட்பத்தில் நாட்டமுற்றது. குறிப்பாக இரும்பும் கண்ணாடியும் கொண்டு வார்த்தெடுத்ததைப் போன்ற வானளாவிய கட்டிடங்களும், தானியங்கி வாகனங்களும், வீட்டுபயோகச் சாதனங்களும் ஐரோப்பாவில் மிகுந்த தாக்கத்தை ஏற்பட்டுத்தின.  இதனைக் கண்ட டாட்டி திருவாளர். ஹ்யூலோ கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். R K லஷ்மணின் திருவாளர் பொதுஜனம் (Common Man) போன்ற ஒரு மனிதன்.  வட்டத்தொப்பி, நீள் மேலங்கி, குதிகாலுக்கு மேல்வரை மட்டும் நீண்ட பேண்ட், வாயில் புகைகுழாயுடன் சற்றே முன் சாய்ந்து குதிகாலை உந்தி நடக்கும் ஒரு கனவான். ஹ்யூலோவுக்கு என்ன வேலை எங்கு வசிக்கிறார் என்று ஒருவருக்கும் தெரியாது. ஆனால், எந்த ஒரு காட்சியிலும் அவர் நுழையும்போது ஏற்கனவே அறிமுகமாகியவரென்றே பார்வையாளருக்குத் தோன்றும். கூடவே ஏதோ நடக்கப்போவதை கொளுத்தப்பட்ட வெடியைப் பார்ப்பது போன்ற பரவசமும்.

ஹ்யூலோவை நாயகனாக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் படம், திருவாளர் ஹ்யூலோவின் விடுமுறை (Les Vacances de Monsieur Hulot -Monsieur Hulot’s Holiday). கோடை விடுமுறையில் ஒரு ஃப்ரெஞ்ச் கடற்கரையில் சில நாட்களைக் கழிக்கச் செல்லும் ஹ்யூலோவைப் பற்றியது. முந்தையப் படங்களைப் போலன்றி இப்படம் ஊமைப்படமாக எடுக்கப்பட்டது.  சிறந்த கதை மற்றும் திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் இப்படம் இடம் பெற்றது.

ஹ்யூலோவை நாயகனாக் கொண்ட அடுத்த படம் ‘என் மாமா’ ( Mon Oncle). வேலை ஏதும் இல்லாத ஹ்யூலோ பணக்கார அக்காளின் நவீனத் தானியங்கித் தொழில்நுட்ப வீட்டில் தன் மருமகனுடன் நேரத்தை கழிப்பதான கதை. இப்படம் 1958ல் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது பெற்றது.

கேளிக்கைப் பொழுது (Playtime) படம் இதுவரையிலும் தயாரிக்கப்பட்ட பிரெஞ்சு படங்களையும் விட  மிகச் செலவேறியது. மேலும் டாட்டி நவீன பிரெஞ்சு சினிமா கொள்கைகளில் இருந்தும் சற்றே வழுவி இப்படத்தை டாட்டிவில் என்ற பெயரில் பிரம்மாண்ட தயாரிப்பு அரங்கை அமைத்து அதன் கடைசி காட்சிப் படப்பிடிப்பை நடத்தினார். ஆனாலும் நவீன பிரெஞ்ச் சினிமாவின் கதை சொல்லும் பாணியை வழுவவில்லை. நீள் காட்சிகள், இயற்கை ஒலிகள் மற்றும் இயற்கையான கதை மாந்தர்கள் கொண்ட இப்படத்தை பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டியூட் 2012ல் 50 தரமான உலக சினிமாக்களில் 42வது இடத்தில் வைத்தது.

ப்ளேடைம் படப்பிடிப்பு முடிந்தாலும், வீட்டை விற்றும் கூட வெளியிட நிதியில்லாத நிலைக்கு டாட்டி ஆளானார். ஏற்கனவே பெற்ற கடன்களினால் வங்கிகள் இவரது தயாரிப்பு கம்பெனி படைப்புகளை, ப்ளேடைம் உட்பட, பிணையமாகப் பிடித்து வைத்தன. இதில் தளராத டாட்டி மற்றொரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ட்ராஃபிக் (Trafic) மற்றும் Parade படங்களை இயக்கினார். தற்போது காணக்கிடைக்கும் ப்ளேடைமின் வண்ணப்பதிப்பு  டாட்டி இறந்தபின் அவர் மகள், மகனுக்கு வேறு யாரும் உரிமை கோராததால், அவ்வங்கிகள் அப்படங்களின் உரிமைகளை அவர்களுக்கு அளித்தவை. 


ட்ராஃபிக்கில் நாயகன் ஹ்யூலோ ஒரு கார் நிறுவனத்தின் வடிவமைப்பு இயக்குனராக பணிபுரிகிறார்.    கார்கள், நெரிசல்களுக்கு வினையாற்றும் சராசரி மனிதர்கள் பற்றியும் ஹ்யூலோ வடிவமைத்த சொகுசு வாகனம் பாரீஸில் இருந்து ஆம்ஸ்டர்டாம் கார் விழாவில் கலந்துகொள்ள செல்வதுமான களேபரங்களை விவரிக்கும் கதை. திருவாளர் ஹ்யூலோவைச் சலித்துப்போன டாட்டி மறுபடி திரையில் கொண்டுவரவில்லை.


ஊர்வலம் (Parade), டாட்டி ஸ்வீடன் டெலிவிஷனுக்காக இயக்கி கடைசியாக வெளிவந்த படம். இதில் அவர் ஒரு சர்க்கஸில் அறிவிப்பாளராக நடித்த படம் . விமர்சன ரீதியாக பெரிதும் பேசப்படாத படமும் கூட. டாட்டியின் திரைக்கதையில் 2010ல் வரை கலை வடிவில் வெளிவந்த படம் மாயக்காரன் (The Illusionist). இப்படம் ஆஸ்கார் விருதுப் போட்டியில் இடம்பெற்றது.

இது தவிர பத்துக்கும் மேற்பட்ட குறும்படங்களில் இயக்கம், நடிப்பு, கதை, திரைக்கதையில் பங்கேற்றுள்ளார்.

“நகைச்சுவை என்பது தர்க்கத்தின் உச்சம்” – டாட்டி

தர்க்கப்பூர்வமான தினசரி ஒழுங்கு டாட்டியின் எல்லா படைப்புகளிலும் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டது.  மறக்கப்பட்ட எளிய உணர்வுகள், கட்டற்ற நுகர்வு பற்றிய விமர்சிப்பை டாட்டியின் எல்லாப் படங்களிலும் காணலாம் . எந்த ஒரு தர்க்கமும் அற்ற, ஒழுங்கை விளையாட்டாகவே அணுகும் ஒரு சிறுவனாகவே டாட்டியின் நாயகர்கள் ஃப்ரான்ஸ்வாவும் ஹ்யூலோவும் வெளிப்பட்டனர்.

திருவிழா நாளில் ( Jour de fête -The Big Day), அந்த கிராமத்திற்கு லாரியின் பின்புறம் தொங்கிக்கொண்டு வரும் குடை ராட்டின மரக்குதிரைகளை, ஆடிக்கொண்டே தொடரும் சிறுமி, ஆவலுடன் நோக்கும் நிஜக் குதிரைகள், தன் ஆட்டுக்குட்டிக்கு விளக்கும் பாட்டி போன்ற காட்சிகள் அனைத்திலும் டாட்டி என்னும் சிறுவனைக் காணலாம்.

என் மாமா (Mon Oncle) படத்தில் ஹ்யூலோவின் நண்பன் சிறுவனான அவரது அக்காள் மகன்.  ஹ்யூலோ அவனது குறும்புகளை மிக ஆர்வமாக கவனித்து எப்போதும் வம்பில் சிக்கும் மற்றொரு சிறுவன். மருமகனின் நண்பர்கள் சீட்டியடுத்து சாலையோரம் நடப்பவர்களை கம்பத்தில் முட்டவைக்கும்போது ஆவலுடன் தலையை தூக்கிப்பார்த்து அடிபட்டவரிடம் ஏச்சு வாங்குவதும், மருமகன் அஜாக்கிரதையாக ஒடித்த செடியின் கிளையை சரி செய்ய இரவில் முயற்சிப்பதும் டாட்டி சிறுவனாய் வெளிப்படும் தருணங்கள். 

நகைச்சுவையைக் காட்டிலும், இவ்வுலகில் மேன்மேலும் அருகிக்கொண்டிருக்கும் தனி மனிதனின் இருப்பையே  என் பார்வையில் வெளிக்கொணர முயல்வேன்” – டாட்டி

டாட்டியின் ஆறு முழுநீளப்படைப்புகளை இரண்டாகப்பிரிக்கலாம். சாதாரணமாக காட்சிகளையும், கதை மாந்தரையும் விவரிக்கும் படங்கள் – திருவிழா நாள் (Jour de fête  -The Big Day), என் மாமா (Mon Oncle) , ட்ராஃபிக் (Trafic). இவை கதை, திரைக்கதை என்ற வழக்கமான பாணியிலான படங்கள். இவையிலிருந்து மாறுபட்ட மற்ற மூன்று படங்களான திருவாளர் ஹ்யூலோவின் விடுமுறை (Les Vacances de Monsieur Hulot -Monsieur Hulot’s Holiday), கேளிக்கைப் பொழுது (Playtime), ஊர்வலம் (Parade), வித்தியாசமான படமொழியை அறிமுகப்படுத்துகின்றன. இவற்றின் முக்கிய வித்தியாசம், கதை என்னும் கட்டமைப்பின்றி கதாநாயகன் மற்றும் காட்சிகளால் கட்டமைக்கப்பட்டது எனலாம். 

நாம் வித்தியாசமான சூழலிலிருக்கும்போது, இயற்கையான ஒலி உரக்கவே கேட்கும் – டாட்டி

நவீன ஃப்ரெஞ்ச் சினிமாவில் ஒலி, ஒளியை நேரடியாகப் படப்பிடிப்பிலிருந்தே பெறுவது என்றிருந்தாலும், டாட்டி அதிலிருந்து வழுவி அவர் படங்களை ஓசையற்ற படங்களாக எடுத்து பின் ஒலியைச் சேர்க்கும் பாணியைக் கையாண்டார். டாட்டியின் காட்சிக்கான ஒலிக்கூட்டல் மிகப் பிரத்தியேகமானது. ஒரு காட்சியில் எந்த ஒலி பார்வையாளனின் கவனத்தைக் கோரவேண்டுமோ அதை உரக்க ஒலித்து அக்காட்சியில் தான் சொல்லவருவதை பார்வையாளனுக்கு தெளிவுபடுத்துவது. ப்ளேடைமில் நடந்து செல்லும் பெண்ணின் செருப்பின் குதிகால் ஒலி அல்லது திருவாளர் ஹ்யூலோவின் விடுமுறையில் அவ்விடுதியின் மாலை அமைதியைக் கிழிக்கும் ஹ்யூலோவின் பிங்-பாங் விளையாட்டு போன்றவை. சமயங்களில் அவ்வொலி எந்தப்பொருளற்றும் கூட இருக்கக்கூடும். திருவாளர் ஹ்யூலோவின் விடுமுறையில் வார்த்தைகளின்றி பொருளற்று ஒலிக்கும் ரயில் நிலைய அறிவிப்பு போல.

டாட்டியின் படைப்புகளின் தாக்கம் உலக சினிமாவெங்கும் எதிரொலித்தது. திருவாளர் ஹ்யூலோவின் விடுமுறையைக் (Monsieur Hulot’s Holiday) கண்ட ஆங்கில நகைச்சுவை நடிகர் ரோவான் அட்கின்சன் (Rovan Atkinson) அதிலிருந்து அவரது பிரபலமான Mr.Bean கதாபாத்திரம் பிறந்தது என்கிறார். பிரபல அமெரிக்க இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் The Terminal படப்பிடிப்புத்தளம், ப்ளேடைமைத் தழுவி உருவாக்கப்பட்டது. தமிழில், ஏழாவது மனிதன் இயக்குனர் கே.ஹரிஹரன் குறிப்பிடுவது, 1987ல் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வெளிவந்த பேசும்படக் காட்சிகள் டாட்டியின் படைப்புகளின் தாக்கத்தில் உருவானவையாம். 

டாட்டி கடைசியாக உருவாக்கிக்கொண்டிருந்த படம் குழப்பம் (Confusion). இப்படத்தின் கடைசிக்காட்சி படமாக்கும் முன்னரே 1982 நவம்பர் மாதத்தில் இறந்தார்.

“நான் பழைய பாணி ஆள் போலத் தோன்றலாம். ஆனால், நான் ஒரு கலகக்காரன்” – டாட்டி

படங்கள் உதவி – The Criterion Collection.


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ஒழுங்கைக் குலைக்கும் மனிதன் – ஜாக் டாட்டி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.