ஒரு நூல்
I Heard There Was a Secret Chord: Music as Medicine
By Daniel J. Levitin

இசையினால் மூளை இணைப்புகளை மேம்படுத்தலாமா? நம்முடைய கோளாறுகளுக்கெல்லாம் சங்கீதம் உபாயம் செய்யுமா? உடல் உபாதைகள் கொடுக்கும் அறிகுறிகளைக் குறைக்க ”ஒரு ரகசிய யாழ் நரம்பு இருப்பதாக நான் கேள்விப்பட்டேன்” என்கிறார் நரம்பியல் நிபுணர் டேனியல் ஜே லெவிடின்.
மார்ச் 2015 இல், பாடகர்-பாடலாசிரியர் ஜோனி மிட்செல் என்பவர் எழுபதுகளைத் தாண்டி முதுமையும் தள்ளாமையும் கொண்டு இருந்தார். அவரது மூளையில் ரத்தம் வெடித்தபோது, பேசாமலும் பாடலற்றவராகவும் இருந்தார். பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்த பிறகு, சிகிச்சை இல்லங்களில் தங்கிய பிறகு, 24 மணி நேர கவனிப்பின் தேவையுடன் அவர் வீடு திரும்பினார். முழுமையாக குணமடைவதற்கான சாத்தியம் நிச்சயமற்றதாக இருந்தது.
ஆலோசனை கேட்டு, அவரது செவிலியர்கள் திருமதி மிட்செலின் நீண்டகால நண்பர் டேனியல் லெவிடினிடம் திரும்பினர், அவர் ஒரு நரம்பியல் விஞ்ஞானி, அறிவாற்றல் உளவியலாளர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார். “ஐ ஹியர்ட் தேர் வாஸ் எ சீக்ரெட் கார்ட்ஃ மியூசிக் ஆஸ் மெடிசின்” என்ற புத்தகத்தில் திரு. லெவிட்டின் விவரித்தபடி, இசை மட்டுமே திருமதி மிட்செலின் உற்சாகத்தை உயர்த்துவதாகத் தெரிகிறது என்று செவிலியர்கள் அவரிடம் கூறினர். பாடலாசிரியரை குணப்படுத்த உதவிய குறிப்பிட்ட தேர்வுகளை அவரால் பொதுவாக அனைவருக்கும் பரிந்துரைக்க முடியுமா?
உணர்ச்சிகளை பாதிக்கவும், நினைவுகளைத் தூண்டவும், நம் உடலையும் மனதையும் காயமானதைச் சரிசெய்யவும் – இசை — மனித மூளையின் வழியாக எவ்வாறு வளைகிறது என்பதை இவர் ஆராய்ச்சி செய்து தெளிவுபடுத்துகிறார். அவரின் முந்தைய நூல் – “This Is Your Brain on Music” (இசையில் இவ்வாறு உங்கள் மூளை – 2006). அதைப் போலவே இதிலும் அவரது சொந்த இசை வாழ்க்கையிலிருந்து உயிரோட்டமான நிகழ்வுகளையும் அவர் சந்தித்து பணியாற்றிய பல கலைஞர்களின் வாழ்க்கையுடன் கூடிய சிக்கலான அறிவியல் விளக்கங்களையும் கலந்து கொடுக்கிறார்.
செவிலியர்களின் கோரிக்கைக்கு பதிலளித்த புத்தக ஆசிரிய லெவிட்டின், பாதிக்கப்பட்ட மிட்செல் முன்பு ஒன்றாக இணைத்த ஒரு குறுவட்டியை பரிந்துரைத்தார், அதில் அவருக்கு பிடித்த 18 இசைத்துண்டுகள் உள்ளன – கிளாசிக்கல் முதல் ஜாஸ், பாப் மற்றும் ராக் வரை, அதே போல் திருமதி மிட்செலின் சொந்த பாடல்களில் ஒன்றான “ஹார்லெம் இன் ஹவானா”வும் சேர்க்கிறார்.
“நாங்கள் அனைவரும் வளர்ந்து வரும் இசை சிகிச்சையாளர்கள்” என்று நரம்பியல் விஞ்ஞானி லெவிட்டின் எழுதுகிறார். நம் மனநிலையை “பராமரிக்க அல்லது மாற்ற” விரும்பும் போது “எந்த இசையை அடைய வேண்டும்” என்பது நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியும். திருமதி மிட்செல் இந்த பட்டியலை தனிப்பயனாக்கி தன்மயமாக்கியது அவசியம். நாங்கள் விரும்பாத இசையை எங்கள் மீது திணிப்பது ஊடுருவுவதாக உணர்கிறது-அதனால்தான் நூலாசிரியர்லெவிட்டின் செவிலியர்களுக்கு திருமதி மிட்செல் குறுவட்டியைக் கேட்க விரும்பினால் அவரிடம் முன்கூட்டியே அனுமதியைக் கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மனதுக்கும் உடலுக்கும் தாளமும் மெல்லிசையும் தேவை என்று நரம்பியல் விஞ்ஞானியும் இசைக்கலைஞருமான நூலாசிரியர் வாதிடுகின்றார்.
நீங்கள் ஒரு இசையைக் கேட்கிறீர்கள், அது உங்களை உற்சாகமும், சோகமுமாக, ஏக்கமும், நம்பிக்கையுடன் கூடிய கோபமாக உணர வைக்கிறது. காதுகுழாய், மூளைத்தண்டு, பெருமூளை மற்றும் முதன்மை செவிவழி புறணி ஆகியவற்றுக்கு இடையிலான சிக்கலான உறவை நீங்கள் நிச்சயமாக கருத்தில் கொள்ளவில்லை. ஆனால், நூலை வாசித்த பிறகு, உங்களுக்கு பிடித்த பாடல் உங்களுக்கு எப்படி வேலை செய்யும் என்று நீங்கள் சிந்திக்கலாம். அதிர்ச்சி, மனச்சோர்வு, பார்கின்சன் நோய், வலி மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சையளிக்க இசையின் மருத்துவ சக்திகளை இந்த ஆய்வு நூலினால் அறியலாம்.
(போலீஸ் இசைக்குழு) ஸ்டிங் முதல் ரோசான் கேஷ் வரை அனைவருடனும் விளையாடிய அரங்கேறிய இசைக்கலைஞர் – லெவிட்டின். யாராவது இவற்றையெல்லாம் விளக்கத் தகுதி பெற்றிருந்தால், அது ப்ளூ ஓஸ்டர் கல்ட் முதல் பல இசைக்குழுக்களில் வாத்தியக்காரராக பங்கேற்ற நரம்பியல் விஞ்ஞானி (PhD, University of Oregon, 1996) லெவிட்டின் மட்டுமே. வெறுமனே நீங்கள் ஒவ்வொரு நாளும் காணும் இசை மேஸ்ட்ரோவான ஒருங்கிணைந்த திறமைகளின் தொகுப்பு அல்ல அவர், அணுகக்கூடிய, ஆளுமைமிக்க உரைநடை. புத்தகம் போகிற போக்கில் அவர் இசையில் உங்கள் மூளை பற்றிய பரந்த விவாதங்களில் ஈடுபடுகிறார், குறிப்பிடத்தக்க சிக்கலான ஒழுங்கமைக்கப்பட்ட உறுப்பு செயல்முறைகள் எவ்வாறு மெல்லிசையுடன் சம்பந்தம் கொண்டவை, இராகம் – தாளம் – பல்லவி மட்டுமல்ல, பொதுவாக ஒலிக்கும் வழிகளையும் உள்ளடக்கிய சர்வ லோக நிவாரணி என நேரடி உதாரணங்களுடனும், அறிவியல் உபயத்துடனும் விவரிக்கிறார்.
எனினும், டஜன் ஜோடி தொடர்புடைய கேள்விகளுடன் கூடிய சவாலையும் சுட்டிக்காட்டுகிறது புத்தகம்:
இசை எந்த அளவிற்கு “குணப்படுத்த முடியும்”? இசை மற்றும் குணப்படுத்துதல் பற்றிய என்ன அனுமானங்கள் உலகின் வெவ்வேறு இடங்களில் காணப்படுகின்றன? வரலாற்று ரீதியாக இசைக்கு என்ன குறிப்பிட்ட மருத்துவ, மறுசீரமைப்பு மற்றும் சிகிச்சை விளைவுகள் கூறப்பட்டுள்ளன? மனித உயிரியல் மற்றும் அறிவாற்றலுக்கு ஒலி மற்றும் கேட்கும் திறனின் என்ன கூறுகளை நாம் கூற முடியும், மேலும் தனித்துவமான குறிப்பிட்ட சித்தாந்தங்களும் மாறுபட்ட சமூக இருப்பிடங்களின் பங்கும் என்ன? இசை நடைமுறைகள் எவ்வாறு மருத்துவமாக அல்லது தனிப்பட்ட அல்லது வகுப்புவாத ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று சட்டப்பூர்வமாக்கப்படுகின்றன? யார் ஒலியைக் கொண்டு குணப்படுத்துகிறார்கள், அவர்கள் அதை எப்படிச் செய்கிறார்கள்?
இசையைப் போல ஆன்மீக ரீதியாக நகரும் ஒன்றை நாம் எவ்வாறு அறிவியல் ரீதியாகப் படிக்க முடியும்?
கலையாக இருக்கும் வழுக்கும் விஷயத்தை நாம் கண்டுபிடிக்க முயற்சித்தால், நாம் அதை எளிமையாக்குவோமா அல்லது அழித்துவிடுவோமா?
எதையும் அலசி ஆராய்ந்தால் கொன்று புதைத்துவிடுவோம். அனுபவிங்க ஐயா!
”ஒவ்வொரு நோயும் ஒவ்வொரு இசைப் பிரச்சினை ஆகும் – அதனை குணப்படுத்த இசையே தீர்வு.” – கவிஞர் ஜார்ஜ் பிலிப் பிரெட்ரிக் பரோன் வான் ஹார்டன்பெர்க் (Novalis (1772-1801))

ஒரு கலை
சோனம் வோரா பரதநாட்டிய வித்தகர். இன்னொருவர் கதக் கலைஞர் – ஈஷானி சாத்தே.
இருவரும் தங்களின் ‘இந்தியன் ராகா’ ஆய்வுதவிக்காக காத்திருக்கிறார்கள். அப்பொழுது ஆசு கவியாக உள்ளுறைந்த கலையை ஆடிக் களிக்கிறார்கள். எந்தவிதமான முன்னேற்பாடுகளும் ஒத்திகைகளும் சால்ஜாப்புகளும் இல்லாத நடனம். மறுபடி, மறுபடி எடுத்து, அதை செயற்கையாக வெட்டி ஒட்டி, கத்தரித்து, சுத்தமாக்கும் ஆவேசம் இன்றி ஆசுவாசமாய், சுயம்புவாய் வெளிப்படும் நிஜ தருணம்.
இருவரும் கமிலா கபெலோ என்பவரின் ‘கிரவுன்’ (முடி மகுடம் – Camilla Cabello’s song ‘Crown’ ft. Grey from Bright: The Album – நகாரி இசைத் தயாரிப்பில், கொன்னக்கோல் ரகுநந்தன் இசையைத் தேர்ந்தெடுத்து சட்டென்று ஆடுகிறார்கள். ஒரே பாடல். ஒரே கலாச்சாரம். பரதத்திலும் கதக்கிலும் எவ்வாறு சிறு மாறுபாடுகளும் ஒற்றுமைகளும் இருக்கின்றன என்பதை காட்சி ரூபமாக கதகளியாடுகிறார்கள். இளையராஜா சிம்பனி; ரஹ்மான் நாட்டுப் பாடல்; கதரி கோபால்நாத் ஜாஸ் கேட்பது இன்பம். அது போல் இது ஆட்டத்தில் இன்பம்:
பரதம் என்றால் வெ.சா. எழுதிய யாமினி க்ருஷ்ணமூர்த்தி தொகுப்பு முக்கியமானது. அதைப் படிக்காமல், ரசிக்காமல், அறியாமல எந்த ஆடலையும் உணர முடியாது. வாசித்து இருப்பீர்கள்தானே?
https://solvanam.com/?s=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF
சங்கமம் – ஃப்யூஷன் : எப்படி வேண்டுமானாலும் இதை அழையுங்கள். கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன எனலாம்… வடக்கும் தெற்கும் இணைகின்றன எனலாம். எல்லாம் கலை; அனைத்தும் அலை; எதிலும் ஒத்திசைவு!
கார்த்திக் ஐயரின் வயலினை அறியாதோர் இருக்கமாட்டார். அவரும் அனர்த்தனா குழுவும் இணைந்து ‘மயிலாப்பூருக்கு வரவேற்கிறோம்’ என்னும் ஆடலை அரங்கேற்றுகிறார்கள். சற்றே உடல்பயிற்சி; கொஞ்சம் குட்டிக்கரணம்; நிறைய பாலே; பரதநாட்டிய ஆடைகள்; சென்னைக்காரிகள். டிசம்பர் சீஸன் இப்பொழுதே களைகட்டிய ஜோர் ஆட்டம்
கிழக்கும் மேற்கும் சந்தித்து ரொம்ப காலாமாகிவிட்டாலும், அதை புதிய தலைமுறையும் செவ்வனே கை கோர்த்து அரங்கில் நிகழ்த்துவது புலன் இன்பம்.
ஒரு ஆய் (AI)
”லிங்கானந்தா… இதெல்லாம் நம் ஆதீனத்திற்கு சரிப்படுமா?”
“டேய்… எல்லாம் வொர்க் அவுட் ஆகும்டா!”
“நம்ம பக்தர்கள் எல்லாரையும் நாலு நாள் கடலில் வைத்துக் கொண்டு தியானம், சொற்பொழிவு, என்றெல்லாம் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது சாத்தியமா ஆசானே?”
“எல்லாம் முடியும்டா மக்கா”, அருள்வாக்கு தந்தார் லிங்கானந்தா. அவருக்கு அத்துவான தீவில் இருந்து கொண்டு அருள்பாலிப்பது அலுத்து விட்டது. அதற்கு பதில் கப்பல் பயணம். தனியார் தீவுகள். புதுப்புது பக்தைகள். எங்கேயும், எப்போதும் சங்கீதம். சல்லாபம். சந்தோஷம்.
”ஒரு நாள் மொரீஷஸ்! அடுத்த நாள் பஹாமாஸ்!! அதற்கடுத்த நாள் மடகாஸ்கர்!!!”
“ஏஞ்சாமீ! அந்த அலகாட்ரஸ் தீவையும் அண்டார்க்டிகா கண்டத்தையும் விட்டுட்டீங்க?”
“அதுவும் நல்ல ஐடியா தாண்டா தங்கவேலு. அதையும் சேர்த்துக்கலாம். இது வரைக்கும் இங்கே வரும் பணக்காரி எல்லாம் எல்லா விதமான கப்பல் பயணமும் போயிருப்பா. இது மாதிரி ஒண்ண அவளோட வாழ்க்கையில அவ பார்த்திருக்கக் கூடாது.”
“செஞ்சிரலாம். ஆனா, இதுக்கெல்லாம் நிறைய செல்வாகும். அமைப்பு பலம் வேண்டும். ஆள் பின்புலம் வேண்டும். நிறைய கப்பல்… கடல் உலா நிறுவனங்களோட டீல் போட வேண்டும். மலைப்பா இருக்கு லிங்கானந்தா!”
“எல்லாம் கண்ணில் இருக்கிறதடா பதரே! மெட்டா குவெஸ்ட் போல் ஆப்பிள் விஷன் ப்ரோ போல் நாம் லிங்கா தர்ஷன் வெளியிடுவோம்.”
“புரிகிறது. எங்கிருந்தாலும் மோட்சம். எப்படிப்பட்டவருக்கும் பாவவிமோசனம்.”
“கண்ணொடுடைய கருமமே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!”
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.



இனிமை, இளமை, புதுமை- தொகுப்பு அருமை