ஹெட்மாஸ்டர்

மூலம் : பலகும்மி பத்மராஜு [ 1915—1983 ]

ஆங்கிலம்      : சாரதா 

தமிழாக்கம்   : தி.இரா.மீனா

“ஹெட்மாஸ்டர் இறந்து விட்டார்.”

கேப்டன் ராவ் தந்தியைப் படித்தார். சில கணங்கள் யோசனையில் ஆழ்ந்திருந்தார். அவருடைய மனைவி புருவத்தை உயர்த்தி அவரைப் பார்த்து, அவருடைய கையிலிருக்கிற தந்தியைப் படிக்க குனிந்தாள்.

“யார் இந்த ஹெட்மாஸ்டர்?”

“எங்கள் ஹெட்மாஸ்டர்.”

கையிலிருந்த பர்சையும்,கைக்குட்டையையும் மேசையின் மேல் வைத்து விட்டு ,தோளைக் குலுக்கியபடி அறையை விட்டு வெளியேறினாள். ராவ் இன்னமும் யோசனையிலிருந்தார். பழைய நினைவுகளில் ஆழ்ந்து இருந்ததால் கண்கள் தெளிவற்றிருந்தன.

                 ****

கோதாவரி ஆற்றின் குறுக்கே மணல் குன்றுகள். மணல் குன்றின் உச்சியிலிருந்து பார்க்கும் போது ஆறு வலிமையற்றும், இரக்கத்திற்கு உரியதாகவும், எதிர் முனைக்கு தவழ்ந்து போவது போலவும் தெரிந்தது. 

ஆனால் குன்றின் மறுபக்கத்திற்கு ஒருவர் போய் விட்டால் அவள் சக்தியானவளாகவும், வலிமையானவளாகவும் தெரிவாள்.

தினமும் காலையில் ஆற்றில் நின்று கொண்டு ஹெட்மாஸ்டர் ’சூர்ய நமஸ்காரம்’ செய்வார்.சுப்பாராவாக இருந்த ராவ், நண்பர்கள் கிருஷ்ணய்யா, ராமநாதம்,சாம்பு,ரவி ஆகியோர் ஆற்றில் ஒரு பர்லாங் நீந்தி ஆற்றின் மறுகரைக்குப் போவார்கள். அந்தப் பகுதியில்தான் ஏராளமான வெள்ளரிக் கொடிகள் படர்ந்திருக்கும். கொடிகளினடியில் அவர்கள் உப்பையும்,மிளகாய்த் தூளையும் ஒளித்து வைத்திருப்பார்கள்.

வெள்ளரிப் பிஞ்சுகளை வெறும் கையால் நசுக்கி உப்பு, மிளகாயுடன் சேர்த்துச் சாப்பிடுவார்கள். சாப்பிடும் போது அவர்கள் சிந்திய விதைகள் கரை முழுவதும் பரவி பல கொடிகளாக வளர்ந்து கிடக்கும்.அவர்கள் அங்கிருந்து திரும்பி நீந்தி வரும்போது ஹெட்மாஸ்டர் ’ சூர்ய நமஸ்காரத்தை’ முடித்திருப்பார்.

“பையன்களா! கிஷ்கிந்தைவாசிகள் இன்று என்ன செய்து விட்டு வந்தார்கள்? வெள்ளரி அல்லது முலாம்பழம் இதில் எதில் கை வைத்தார்கள்? ”ஒரு நாள்  காலையில் கேட்டார். பையன்கள் அதிர்ந்தார்கள்; 

தங்கள் சேட்டைகள் அவருக்குத் தெரிந்திருக்கும் என்று அவர்கள் யூகம் செய்ததேயில்லை.

“சார், நாங்கள் நீச்சலடிக்கப் பயிற்சி செய்து கொண்டிருந்தோம்,”ராமநாதம் முணுமுணுத்தான்.

“இங்கே பார் அரிச்சந்திரா ! நீச்சல் பயிற்சி உனக்கு நல்லதென்று எனக்குத் தெரியும். ஆனால் வெள்ளரிக்காய் திருடுவதைத் தோட்ட முதலாளி பார்த்து விட்டால் உன் காலை முறித்து விடுவார். அப்புறம் உன்னால் எப்போதும் நீச்சல் பயிற்சி செய்ய முடியாமல் போய் விடும்.”

அவருடைய நகைச்சுவை கிண்டலாக இருக்கும், காயப்படுத்துவதாக இருக்காது. ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி விளக்கமாக அமைதியாகச் சொல்வார்.

      ****

“ஹலோ கேப்டன் ராவ் !என்ன ஆயிற்று உங்களுக்கு? ஏன் இவ்வளவு மென்மையாகப் பேசுகிறீர்கள்? ” கேப்டன் ரெட்டி தொலைபேசியின் மறுபக்கத்திலிருந்து கேட்டார். ராவ் தனக்குள்ளாகச் சிரித்துக் கொண்டார். 

தன்னையறியாமலே  ஹெட்மாஸ்டரைப் போல நடந்து கொண்டார்.

                         ****    

பள்ளி  நாடகமொன்றில் யுதிஷ்டிரராக நடித்த ராவ் ஹெட்மாஸ்டரின் பேச்சையும், பாவனைகளையும் நடித்துக் காட்டினார்.எல்லா ஆசிரியர்களும், நண்பர்களும் அதற்காக அவரைப் பாராட்டினார்கள். சிரிக்கும் கண்களுடன் அவரைப் பார்த்த ஹெட்மாஸ்டர் “சுப்புலு! கடைசியில் நீ என்னை தர்மராஜனாக்கி விட்டாய்! அவன் மோசமானவன் ” அவர் ஒருவர்தான் அவனை சுப்புலு என்றழைப்பார்.

“ரெட்டி! நீ விமான நிலையத்திற்கு போவதற்கு முன் என்னைப் பார்த்து விட்டுப் போகிறாயா? நான் உன்னுடன் வர விரும்புகிறேன்.”

“என்ன விஷயம்?”

“‘நான் அப்புறம் சொல்கிறேன்.” ராவ் தொலைபேசியை வைத்துவிட்டு, சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்து ஆரஞ்சுச் சாற்றைக் குடித்தார்.பார்வை எதையோ வெறித்தபடி இருந்தது. கமலா சந்தேகமாக அவரை பார்த்தாள். 

கடந்த ஒரு மாத காலமாக அவர்களிருவரும் பேசிக் கொள்வதில்லை. சண்டையோ, விவாதமாகவோ நடக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் தெளிவானதாக எந்தக் குற்றச்சாட்டும் அவர்களிடையே இல்லை.ஆனால்  கமலா ஏன் தன் மீது கோபமாக இருக்கிறாள் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.

                          ****

வழக்கம் போல விமான நிலையத்திலிருந்து அவரை அழைத்துப் போக அவள் வந்திருந்தாள். அவருடைய விமானப் பணிகளுக்குப் பிறகு அவரை அழைத்துக் கொண்டு போவதை அவள் தொடர்ந்து செய்து வந்தாள். அந்த நாளுக்குப் பிறகு அவள் வரவேயில்லை.அவள் வரவே மாட்டாள் என்பதும்அவருக்குத் தெரியும்.

அந்தக் குறிப்பிட்ட நாளில் காற்றும், தூரலும் பலமாக இருந்தன. அந்த கும்மிருட்டில் அவள் தனக்காக காத்திருப்பதை அவரால் பார்க்க முடியவில்லை. அவளை அந்த நாளில் அவர் எதிர்பார்க்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவர் மனதில் அவள் நினைவில்லை. 

அவருடைய தோளில் தொங்கியபடி உஷா ,விமானத்தின் படிக்கட்டுகளில் இறங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். குறுகிய படிகளில் இறங்குவது மிகக் கடினமாக இருந்ததால் அவளுக்கு உதவி செய்ய அவள் இடுப்பை அணைத்தபடி நடந்தார். அவளை வேனில் உட்கார வைத்து விட்டு, அவளுடன் தானும் போவதற்காக வேனில் ஏறினார். அப்போதுதான் விமானத்தின் விரிந்த ஒரு சிறகின் கீழ், சிறிய குடையுடன் கமலா மழையில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.உஷாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு அவர் வீடு திரும்பிய போது நடுநிசி கடந்திருந்தது.

கமலா பெட்ரூமைத் தாளிட்டு விட்டு படுத்திருந்தாள். சோர்வோடும், நடுக்கத்தோடும், சாவின் விளிம்பை உரசிவிட்டு வீடு திரும்பியிருந்த அவருக்கு ஓர் அருமையான வரவேற்பைத்தான் அவர் மனைவி தந்திருக்கிறாள். முழு இரவும் ஹாலிலேயே படுத்திருந்தார். அந்த அமைதியான குற்றச்சாட்டு அவரை வறுத்தியெடுத்தது. அவருடன் பணி புரியும் அந்தப் பெண்ணிற்கு உடல் நலமில்லை. நடுங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணை அவர் அணைத்தபடி அழைத்து வந்தார். அவளை உடன் பிறந்த சகோதரியாக நினைப்பவர் ! (ஓ.. ஆமாம். தேவைக்கு அதிகமானான அழுத்தத்தில் நீ இடுப்பைப் பற்றிக் கொள்வாய். அவள் கை உன் கழுத்தைச் சுற்றியிருக்கும். மார்புகள் உன்னை உரசும். ஒரு பறவை போல அவள் இதயம்  உன் நெஞ்சருகே தடுமாறும். அவள் முடி உன் கழுத்தில் கிகிசுக்கும். உனக்குள் ஒரு வினோதமான களிப்பு ஊடுருவும். அது ஓர் அண்ணனுக்கு சகோதரியின் மேல் எழும் அன்புதான் !! )

ஆம்லெட்டைக் கடித்தபடி மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தார். 

அவருடைய அந்த கவனக் குறைவை அவளும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள். அவர் கண்களில் தெரிந்த அளவற்ற காதலைப் பொறுக்க முடியாமல் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

“நான் விஜயவாடாவைக் கடந்து ஏலூரு போக வேண்டும்”  கேள்வி கேட்பது போலப் பார்த்தாள்.

“என் ஹெட்மாஸ்டர் இறந்து போய் விட்டார். அவருடைய ஒரே மகன் அமெரிக்காவில் இருக்கிறான். நான் அவருக்கு மகன் போன்றவன்.அவர் மனைவி என்னைப்  பார்த்தால் மகிழ்ச்சியடைவார்.” வேடிக்கையான தன் வார்த்தைகளைக் கேட்டு தானே சிரித்துக் கொண்டார். கணவனின் இறப்பில் ஒரு மனைவி எப்படி மகிழ்ச்சியடைவார்? கமலா  சிரிக்கவில்லை. அவர் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டவள் போல அவரைப் பார்த்தாள்.

ராவ் ஒரு நிமிடம் தயங்கி விட்டு காபியைப் பருகினார்.  “அவருக்கு குழந்தைகள், உறவினர்கள் என்று யாரும் கிடையாது. நீ  என்னுடன் வருகிறாயா?”

கீழே காத்துக் கொண்டிருந்த கேப்டன் ரெட்டி கார் ஹாரனை அழுத்தினார்.

ராவ் நாற்காலியை விட்டு எழுந்தார். கிளம்புவதற்குத் தயாரானவள் போல கமலா அறையை விட்டு வெளியே வந்தாள். அவளுடைய மௌனம் தன்னுடன் வரும் விருப்பமின்மையை வெளிப்படுத்துவதாக அவர் நினைத்தார். ஆனால் அவள் கதவைப் பூட்டிவிட்டு அவர் பின்னால் வந்து வேனில் ஏறிக் கொண்டாள். கேள்விக் குறியாக அவளைப் பார்த்தார்.

“ஹெட்மாஸ்டர் இறந்து விட்டார். நாங்கள் ஏலூருக்குப் போக வேண்டும்.”

விமானம் நிரம்பி வழிந்தது. சீட் இல்லை. அவர் முயற்சியால் கமலாவுக்கு விமானப் பணிப்பெண்களறையில் இடம் கிடைத்தது.

ரெட்டி நிதானமான பைலட். விமானத்தை மெதுவாக உயர்த்தி பஞ்சுக் குவியல்களான மேகங்களின் ஊடே செலுத்தினார். ராவ் அவருக்கு பின்னால் நின்று கவனித்துக் கொண்டிருந்தார். விமானம் மேகங்களின் மத்தியிலிருப்பது போல இருந்தது. மேகத் திரைகளை கிழித்துக் கொண்டு விமானம் சென்ற போது வினோதமான ஒரு நடுக்கத்தை முதுகுத் தண்டு உணர்ந்தது. பணிப்பெண் நாயகி தடுமாறி ,பின் தன்னைச் சமாளித்துக் கொண்டாள்.

“மன்னியுங்கள்.தேநீர் உங்கள் மீது சிந்த இருந்தது.” புன்னகையுடன் மன்னிப்பு கேட்டாள்.

“தேநீராக இல்லாமல் நீங்களாக இருந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்” ரெட்டி நகைச்சுவையாகச் சொன்னார்.

ராவ் கமலாவைப் பார்த்தார்.”அவள் எங்களுக்கு சகோதரியைப் போன்றவள்” என்று சொல்வது போல அவர் பார்வை இருந்தது. தனது வினோதமான எண்ணங்களை நினைத்து மீண்டும் தனக்குள் சிரித்துக் கொண்டார்.

மீண்டும் பழைய நினைவுகளுக்குள் மூழ்கினார்.

ஹெட்மாஸ்டர் எங்களுக்கு ஆங்கிலப் பாடம் சொல்லித் தருபவர்.’மனித குலம் அனைத்தும் சகோதரத்துவமானது ’ என்ற தலைப்பில் மகாத்மா காந்தியால் எழுதப்பட்ட கட்டுரை.“ மாணவர்களே,மகாத்மா குறும்புத்தனம் நிரம்பியவராக இருந்திருக்க வேண்டும். அவர் ஆண்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார். பெண்கள் நமது சகோதரிகளாக இருப்பதால் வேண்டுமென்றே அவர் பெண்களைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அவர் சுப்புலுவைப்போல பல மாணவர்களைப் பார்த்திருக்க வேண்டும் —சுப்புலு என்பது நான். பள்ளி நாட்களில் நான் மிக குறும்புத்தனமானவனாக இருந்திருக்கிறேன்.”

ரகசியப் புன்னகையில் கமலாவின் கண்கள் மின்னின. விமானப் பணிப் பெண்ணிடமிருந்து அவளது கவனத்தை திசை திருப்பவே அவர் இந்தக் கதையைச் சொன்னார் என்று அவள் உறுதியாக நம்பினாள்.ஓரளவு அவள் எண்ணம் சரியானது. ராவ் பேசத் தொடங்கியவுடன் விமானப் பணிப்பெண், அதன் தொடர்ச்சியான உரையாடல் எல்லாவற்றையும் மறந்து விட்டார்.

ஹெட்மாஸ்டரைப் பற்றிய ஞாபகங்களே அவர் நெஞ்சில் நிரம்பியிருந்தன.

அந்த நினைவில் அவர் உதடுகள் பிரிந்து சிரித்தன. கமலா ஓரக்கண்ணால் அந்தப் புன்னகையை கவனித்தாள்.

இரண்டாவது பணிப்பெண்ணும் நிலைகுலைந்து சாய்ந்து விஷமமாகச் சிரித்தாள். திடீரென கால் தடுமாறி விழும்போது அடிவயிறு கலங்குவதை ஒருவர் உணர்வது போல அந்தச் சிரிப்பு இருந்தது.ராவ் அந்தப் பெண்ணைப் பார்த்துச் சிரித்தாரா என்பதை அவளால் யூகிக்க முடியவில்லை.

திடீரென ராவ் பேச்சைத் தொடர்ந்தார்.

காற்று அவ்வளவு கடுமையாக இல்லை. நாங்கள் கடினமான நிலத்தில் நடக்க பழக்கப் பட்டவர்கள்.ஆனால் பறப்பதென்பது எப்போதும் உறுதி இல்லாதது. புதுமையான ஒன்று. பயிற்சியான ஒன்று. பெரும்பாலான நேரங்களில் காற்றே விமானத்தை ஓட்டிச் சென்று விடும். ஆனால் சில சமயங்களில்,அதுவே போகும், இளைஞன் குழந்தையை விளையாட்டாய் காற்றில் தூக்கிப் போட்டு பிடிப்பதைப் போல . அந்த மாதிரி சமயங்களில் காற்றை நம்புபவர்கள் கலக்கமடைய மாட்டார்கள். பல ஆண்டுகள்  அனுபவம் இருந்தாலும் சில விமானிகள் காற்றின் மீது அந்த விதமான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு பயணத்தின் போதும் அவர்கள் காற்றை அழித்து விட வேண்டிய ஓர் எதிரியாகவே பார்ப்பார்கள்.

கேப்டன் ருங்தா அனுபவம்  நிறைந்த தைரியமான விமானியும் கூட. ஆனால் குறிப்பிட்ட அந்த நாளில் புத்தியை இழந்தவர் போலானார்.

அந்தச் சூறாவளி இரவில் கமலா அவரை அழைத்துப் போக வந்த நாள்! அனைவரும் அந்த இரவில் இறந்து போயிருக்க வேண்டியவர்கள்.

அன்று ருங்தா தலைமை விமானி, ராவ் துணை விமானி. வலதுபுற இன்ஜின் முழுவதுமாக பழுதாகியிருந்தது. காற்றும்,சூறாவளியும் விமானத்தை ஒரு சிறிய பொம்மை போலப் பந்தாடின. நினைக்கவே முடியாத ஒன்றை ருங்தா செய்தார். சூறாவளியை எதிர்க்கின்ற அகங்காரம் அவருக்குள் ஏற்பட்டது. இயற்கையின் வேகத்தை எதிர்கொள்ள முடியாத, சக்தியில்லாத சிறிய வடிவமாக விமானம் இருந்தது. பேப்பர் படகைப்போல விமானம் சுழன்றது. ராவ் கேப்டன் ருங்தாவை எச்சரித்தார். ருங்தா கோபத்தோடு ’வாயை மூடு’ என்று கத்தினார். ராவுக்கு கடுமையான கோபம் வந்தது. விமானத்திலிருக்கும் எண்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் ருங்தாவின் முட்டாள்தனத்தால் இறந்து போகலாம். விமான நிலையம் இன்னும் அரை மைல் தொலைவிலிருந்தது. விமானம் நிலையாகத் தன் உயரத்தை இழந்து கொண்டிருந்தது. விமான நிலையத்தின் அருகிலிருந்த சிறிய குன்றின் உச்சியில் எறிந்து கொண்டிருந்த சிறிய சிவப்பு விளக்கு பகுதியை விமானம் நெருங்கிக் கொண்டிருந்தது.

’மேலே போ,மேலே போ’ ராவ் பீதியில் கத்தினார். பணிப்பெண் உஷா பயத்தில் அலறினாள்.

இன்னும் இரண்டே நிமிடத்தில் அவர்கள் குன்றில் மோதி, சிதைந்து போய் விடுவார்கள். ராவ் தன் கையை உயர்த்தி ருங்தாவின் கழுத்தில் ஓங்கி அறைந்தார். ருங்தா தன் இருக்கையில் ஒடுங்கினார். ராவ் அவரை ஒருபுறம் தள்ளிவிட்டு, கட்டுப்பாட்டைத் தன் வசம் கொண்டு வந்தார். முழுபலம் காட்டி விமானத்தை மேலே உயர்த்தினார். மயிரிழையில் அவர்கள் அந்த சிவப்பு விளக்கை கடந்தார்கள். பிறகு அவர் நிதானமாக விமானத்தைச் செலுத்தினார்.அவர்கள் அந்த கடுமையான நேரத்தைக் கடந்து விட்டார்கள். 

காற்றில் வட்டமடித்து அவர் விமானத்தை தரையிறக்கினார். கடைசியாக விமானம் வந்து தரையில் நின்றபோது பயத்தில் தான் தொப்பலாகி இருந்ததை அவர் உணர்ந்தார். பணிப்பெண் உஷா பயந்து  ஒருவித அலறலோடு அவரைக் கட்டிக் கொண்டிருந்தாள். அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய் மருந்து கொடுத்த பிறகுதான் அவரை  தன் கட்டிலிருந்து விடுவித்தாள். ராவ் கதையை முடித்தார்.

“தரையிலிருக்கும் போது இருக்கும் சட்டதிட்டங்கள் எல்லாவற்றையும் வானிலிருக்கும் போது சில சமயங்களில் அப்படியே பின்பற்ற முடியாது. நான் விதிகளுக்கு எதிராக ருங்தாவை தள்ளி விட்டுக் காயப்படுத்தினேன்.நான் விதிமுறைகளைப் பின்பற்றியிருந்தால், எல்லாப் பயணிகளின் சாவுக்கும் காரணமாகப் போகும் முட்டாள்தனத்தை நான் பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். பயணிகளைக் காப்பாற்ற வேண்டிய நிலையிலிருந்ததால் விதிகளை மீறினேன்.என்னுடைய உள்ளுணர்வுக்குப் பணிவதுதான் என் குணங்களில் தலையானது. சிறு வயதிலிருந்தே என்னைச் சுற்றியிருந்தவர்களுக்கு தொந்தரவுகள் தருவதுதான் என் குணமாக இருந்திருக்கிறது. விமானத்தில்.. அது ஒரு முழுமையான வேறு உலகம். நான்தான் அங்கே ராஜா. நான் அங்கு தவறுகள் செய்ததேயில்லை. தரையில் நான் செய்வதெல்லாம் தவறாகவே ஆகிவிடுகிறது”.

அந்த நாளில் அவளைப் புறக்கணித்து விட்டு அவர் உஷாவோடு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்; இன்று தன் செயல்களை அவர் நியாயப்படுத்த முயற்சி செய்கிறார் என்று கமலா நினைத்தாள். அவர் மன்னிப்புக் கேட்கவில்லை, ஆனால் அதைச் சொல்வதன் மூலமாக அந்த இரவில் பல உயிர்களைக் காப்பாற்றியதைச் சொல்கிறார். தான் விரும்பியதைச் செய்ய அவருக்கு உரிமையிருக்கிறது என்று அவள் முட்டாள்தனமாக நினைத்தாள். ராவ் அவளைப் புரிந்து கொண்டவர் போல சிரித்தார்.

திடீரென அவருக்கு ஒரு முறை ஹெட்மாஸ்டர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

“ஒரு பெண் இன்னொரு பெண்ணை எப்போதும் நம்ப மாட்டாள், இன்னும் சொல்லப் போனால் அவள் தன் கணவனுக்கு நெருக்கமானவள் என்றால் அவள் கணவனின் மீதான நம்பிக்கைதான் அவளுக்குக் குறையும்”. ராவ் மீதிக்கதையை முடித்தார்.

ஆஸ்பத்திரியில் உஷா தூங்கிய பிறகு ராவ் ஓட்டலுக்குப் போய் விட்டார். விதிமுறைகளை தான் மீறியதற்கான காரணம் குறித்து உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். கேப்டன் ருங்தாவை அடித்து விட்டு, விமானத்தின் கட்டுப்பாட்டைத் தான் எடுத்துக் கொண்டதை குறிப்பிட்டார். தனக்கு எந்த தண்டனை தந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் குறிப்பிட்டிருந்தார். தன் செயலுக்காக் கேப்டன் ருங்தாவிடம் மன்னிப்பும் கேட்டார்.

கேப்டன் ருங்தா அந்த ஓட்டலிலேயே நான்கைந்து அறைகள் தள்ளி தங்கியிருந்தார். ராவ் அங்கு சென்று கதவைத் தட்டினார். பதிலில்லை. கடிகாரத்தைப் பார்த்தார்.மணி இரண்டு. மனதை மாற்றிக் கொண்டு திரும்பிப் போக நினைத்த போது ’உள்ளே வரலாம்’ என்று ஓர் உறுமலாக குரல் கேட்டது. குரலில் மது வாசனை வெளிப்பட்டது.ராவ் அறைக்குள் போனார்.

“மாலை வணக்கம் தலைவனே ”

அந்தக் குரலில் எந்த அச்சுறுத்தலுமில்லை. ருங்தா சிவந்த கண்களினூடே அவரை உற்றுப் பார்த்தார். அவர் குடித்திருந்த போதும் கட்டுப்பாட்டில் இருந்தார் .ராவ் சிரித்துக் கொண்டே மன்னிப்புக் கடிதத்தை அவரிடம் கொடுத்தார். ருங்தா அதைப் படித்து விட்டு அருகிலிருந்த விளக்கை சில கணம் பார்த்தார். பின்பு திடீரென அந்தக் கடிதத்தைச் சுக்குநூறாகக் கிழித்து குப்பைக் கூடையில் எறிந்தார். ராவை வெறுமையாகப் பார்த்தார். கடைசியில் வருத்தமாகச் சிரித்தார்.

“ராவ் ,உங்களுக்கு குடிக்க ஏதாவது தரட்டுமா? அல்லது நீங்கள் மிக களைப்பாக இருக்கிறீர்களா?”

ராவ் சேரில் உட்கார்ந்தார். பாட்டிலை எடுக்க எழுந்தார்.

“இல்லை,இல்லை. நீங்கள் என்னுடைய விருந்தாளி.” ருங்தா விஸ்கியை இரண்டு தம்ளர்களில் ஊற்றினார். “சியர்ஸ்” ருங்தா தன் டம்ளரைக் காலி செய்தார்.

ராவ் அமைதியாக உட்கார்ந்தார். ஒருவித  சங்கடம் அவருக்குள்.

திடீரென கண்களில் ஒரு மின்னல் தெரிய ருங்தா அவரிடம் “ராவ்,எப்படி உங்களால் அவ்வளவு சுலபமாகச் செயல் படமுடிந்தது? எண்பது லட்சம் பெறுமானமுள்ள விமானத்தைப் பாதுகாத்தீர்கள். அதற்கும் மேலாக மதிப்பிட முடியாத எண்பது மனிதர்களின் உயிரைக் காப்பாற்றினீர்கள்.எல்லாவற்றிற்கும் மேலாக கட்டுப்பாடுகளை மீறியதற்கு மன்னிப்புக் கேட்டு இப்போது கடிதம் எழுதுகிறீர்கள். ஓ, ஆமாம்,கழுத்தில் நீங்கள் கொடுத்த குத்து! என் கழுத்து முழுவதும் வீங்கிவிட்டது. நாளை அது இன்னும் அதிகமாகலாம். எனக்கு இது வேண்டும். எனக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை. மூளை குழம்பிவிட்டது போலும். என்னுடைய பார்வையில் அந்தச் சிவப்பு விளக்கு படவேயில்லை.நாம் எல்லோரும் இறப்பதற்கான தருணம்தான் அது என்று நினைத்து விட்டேன். எங்கிருந்தோ அகங்காரம் எனக்குள் தலை தூக்கியது! மிகக் குழம்பிப் போய் விட்டேன். பிறகு நீங்கள் பொறுப்பெடுத்துக் கொண்டீர்கள். நீங்கள் என்னைத் தாக்கியதும் விழுந்து விட்டேன்.  உங்களைத் தள்ளி விடுவதற்காக கோபத்துடன் எழுந்தேன். உயரத்தை இழந்து கொண்டிருந்த விமானம் திடீரென மேலே போய் அபாயமான சிவப்பு விளக்கைக் கடந்தது. 

ஓர் என்ஜினில் ஓடிக்  கொண்டிருந்த விமானத்தை நீங்கள் எப்படிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தீர்கள்! உங்களுடைய ஆழமான நம்பிக்கை!அது ஒரு சின்னப் பறவை என்ற ரீதியில் விமானத்தை வட்டமடிக்கச் செய்து மெதுவாகத் தரையிறக்கி விட்டீர்கள். நான் உங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன். உங்கள் கண்களில் வெளிப்பட்ட கவனம்! பிறகு எனக்குப் புரிந்தது, நீங்கள் என்னை அடித்தது பொறாமையாலோ, வெறுப்பாலோ அல்ல. அந்த நேரத்தில் என்னைத் தாக்குவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. நம்பிக்கை  இழந்த ஒரு சூழ்நிலையை மிகச் சுலபமாக உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களைப் பற்றித்  தரக்குறைவான அபிப்ராயம் தான்  எனக்கிருந்தது. கேலி பேசிக் கொண்டு அலையும் ஒரு பொறுப்பற்ற மனிதர் என்றுதான் நினைத்திருந்தேன். வெளிப்பார்வைக்கு உல்லாச மனிதராகத் தெரியும் நீங்கள் வேலை வி்ஷயத்தில் எவ்வளவு உறுதியும், நம்பிக்கையும் உடையவர் என்பது எனக்கு இன்று தெரிந்தது.

நேரடியான பாராட்டு ராவை வெட்கத்திற்குள்ளாக்கியது. அவரால் ருங்தாவை பார்க்க முடியவில்லை .டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தை திடீரென கவனித்தார். அது வினோதமாகத் தெரிந்தது! அது திடீரென ஹெட்மாஸ்டரின் முகமாக மாறியது.அறிவுக் கூர்மையை மறைக்கும் அப்பாவித்தனமான அதே கண்கள், அதே புன்சிரிப்பு. திடீரென ஹெட்மாஸ்டர் தன்னுள் ஓர் அங்கமானது போல உணர்ந்தார். ஹெட்மாஸ்டரைப் போல அவரால் ஒரு நாளும் ஆக முடியாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.ஒரு நாளிலும் அவரைப் போல ஹெட்மாஸ்டர் எந்தச் சிக்கலிலும் சிக்கிக் கொண்டதில்லை. அவர் மனிதர்களை சிக்கலிலிருந்து விடுவிப்பார்.ராவ்  பல விஷயங்களில் சிக்கிக் கொண்டபோது அவரை வெளிக் கொண்டு வந்தவர் ஹெட்மாஸ்டர்தான். 

அந்த இரவிலும் கூட, ஹெட்மாஸ்டர்தான் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக ராவ் நினைத்தார்.

“ராவ், நான் ராஜினாமா செய்கிறேன். நான் இனி எந்தக் காலத்திலும் ஒரு விமானியாக இருக்க முடியாது.”

“முட்டாள்தனமாகப் பேசாதீர்கள்”  ராவ் எதிர்த்தார்.

“ராவ் ,பல முறை போர்களின் போது, நான் சண்டை விமானங்களின் விமானியாக இருந்திருக்கிறேன்.பல மோசமான அபாய கட்டங்களிலிருந்து தப்பித்திருக்கிறேன். எப்படி ஒரு விமானி அமைதியாகவும்,தைரியமாகவும் இருக்க வேண்டும், அபாயமான கட்டங்களில் எவ்வளவு அமைதியாக இருக்க வேண்டுமென்று எனக்கு நன்றாகத் தெரியும். நான் அந்த இயல்புகளை இழந்து விட்டேன். விமானம் கட்டுப்பாட்டை இழந்த போது நான் குழம்பினேன் என்றால் நான் இனி ஒரு விமானியாக இருக்க முடியாது. நாளை இயக்குனரைச் சந்தித்து என்னை  நிர்வாகத் துறைக்கு மாற்றும்படி வேண்டுவேன். அவர் மறுத்து விட்டால் ராஜினாமா செய்துவிடுவேன்.” ருங்தா உண்மையைப் பேசுகிறாரென்று ராவுக்குத் தெரியும்.

ருங்தா எழுந்து தன் படுக்கையில் படுத்துக் கொண்டார்.

“நான் மிகக் களைப்பாக இருக்கிறேன் ராவ். விரும்பினால் நீங்கள் பானத்தை முடித்து விட்டு இங்கேயே தங்கலாம். நீங்கள் விரும்பினால் இன்னொரு பாட்டில் பிரிட்ஜில் இருக்கிறது. இன்றிரவு உங்களைப் பார்ப்பேன் என்று நினைக்கவேயில்லை.எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.” ராவ் ’குட்நைட்’ சொல்வதற்கு முன்பே ருங்தா தூங்கிவிட்டார்.

கமலா அவரைப் பார்த்தாள். அவர் கை அவள் இடுப்பைச் சுற்றியது.

அவள் கவனமாக சுற்றிலும் பார்த்துக் கொண்டாள். ஆனால் பணிப் பெண்ணை அங்கு காணவில்லை.

விமானம் தரையிறங்கியது.”இங்கு சீட்—பெல்ட் எதுவுமில்லை”. அவள் இடையை கெட்டியாகப் பற்றிக் கொண்டார்.

“பாவம் அந்தப் பெண்கள் என்னால் வாய்ப்பை இழக்கிறார்கள்.” வம்பாக அதைச் சொன்னாள். ஆனால் அவளுடைய பேச்சில் கடுமையில்லை.

சக்கரங்கள் பூமியைத் தொட்டபோது அவளுக்கு திணறல் ஏற்பட்டது.

அவருடைய கை தன்னைச் சுற்றியிருந்ததால் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்ந்தாள்.

அவர்கள் டாக்சியில் ஏலூரு போகும் போது ராவ் தன் டைரியைத் திறந்து அவளிடம் காட்டினார். பிளாஸ்டிக் கவரினுள்ளே ஒரு புகைப்படமிருந்தது.

அது அவள் இதுவரை பார்த்திராதது.

“யார் இது?”

“எங்கள் ஹெட்மாஸ்டர்.”

அந்தப் புகைப்படத்தையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். ஹாலில் உடலை வைத்திருந்தார்கள். ஹெட்மாஸ்டரின் மனைவி அவர் காலடியில் உட்கார்ந்திருந்தாள். ஜனார்தன ராவும், மகள் நாகமணியும் சிறிது தூரத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.

“ஹலோ சுப்பா ராவ்” ஜனார்தன ராவ் அவரை அடையாளம் கண்டு கொண்டார். நாகமணி அவரைப் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாள்.ஹெட்மாஸ்டரின் மனைவி அவரை வெறுமையாகப் பார்த்தாள்.

“சூர்யா ராவ் ( ஹெட்மாஸ்டரின் மகன்) வருவதற்கு குறைந்தது மூன்று நாட்கள் ஆகும் சுப்பாராவ். நேரம் தாழ்த்தாமல் உடலை அடக்கம் செய்யவேண்டும். என்ன செய்யலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?” ஜனார்தன ராவ் கேட்டார்.

ராவ் ஹெட்மாஸ்டரின் மனைவியிடம் போனார்.

“அம்மா! நான் இறுதிச் சடங்குகளைச் செய்யலாமா? நான் உங்கள் மகன் போலத்தான்,” அவர் குரல் அடைத்தது.

அவள் அவரை வெறுமையாகப் பார்த்தாள். பின்பு “சரி அப்பா! “என்றாள்.

ஜனார்தன ராவ் மற்ற ஏற்பாடுகளில் இறங்கினார்.

ஹெட்மாஸ்டரின் அந்த முகத்தை ராவ் பார்க்க மறுத்து விட்டார். வாழ்ந்த, மனதில் நிலைத்திருக்கிற தனது ஆசிரியரின் அந்த முகத்தையே மனதில் நிறுத்திக் கொண்டார்.

இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக தெருக்களில் நடந்த போது தெருக்கள் அவரை மௌனமாக அழைத்ததாக உணர்ந்தார். கால்வாய், கரை, படகுகள், விடியற்காலைகளில் படகுகளிலிருந்து நான் திருடிய வெல்லம்,வாழைப்பழங்கள் என ஞாபகங்கள் சூழ்ந்தன.கோவூரில் இருக்கும் உயர்நிலைப் பள்ளிக்கு,ஹெட்மாஸ்டரிடம் அம்மா அனுப்பினாள்.

அவரும் ,அப்பாவும் பால்யகால நண்பர்கள். அம்மா என்னுடைய போக்கிரித்தனமான செயல்களுக்காக மிகவும் கவலைப்பட்டாள். நான் ஹெட்மாஸ்டரின் வீட்டிற்கு பக்கதிலேயே மூன்று நண்பர்களுடன் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தேன்.என் வயதிற்கான முரட்டுத்தனம் என்னிடம் இயல்பாகவேயிருந்தது. முதல் சில நாட்களுக்கு ஹெட் மாஸ்டரின் ஆழத்தை என்னால் இனம் காண முடியவில்லை. மீசை, நரைமுடி, தங்க பிரேம் போட்ட கண்ணாடி அவர் ஒரு படிப்பாளியாகவே தெரிந்தார். வராந்தா நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு பின்னிரவு வரை புத்தகம் படித்துக் கொண்டிருப்பார்.

ஒரு நாள் நண்பர்களை அழைத்துக் கொண்டு நான் சர்க்கஸ் இரவுக் காட்சிக்குப் போனேன்.மற்ற பையன்கள் அவர்களாக இருக்கும் போது மிக நல்லவர்கள்; சர்க்கஸ் இரவு நேரக் காட்சிக்கெல்லாம் போக மாட்டார்கள். என்னைப் பற்றிய கதைகளையும் ஹெட்மாஸ்டரிடம் சொல்ல மாட்டார்கள்.

அடுத்த நாள் கோதாவரியில் நீச்சலடித்துக் கொண்டிருக்கும் போது “பையன்களே! நேற்று ராத்திரி சர்க்கஸ் எப்படியிருந்தது?” ஹெட்மாஸ்டர் கேட்டார்.

எனக்குள் ஒரு கதையை நான் ஜோடித்துக் கொண்டிருந்த போதே அவர் போய்விட்டார். அவரிடம் பொய் சொல்ல முடியாது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

உடல் எரிந்து கொண்டிருந்தது. கால்வாய் கரையில் ஜனார்தன ராவும், நானும் உட்கார்ந்தோம்.

“தெளிவாகவும்,மிக நல்ல மனம் உடையவராகவும் இருக்கும் இவரைப் போல ஒருவரை நான் பார்த்ததில்லை. நாகமணியின் படிப்பிற்காகத் தான் நான் ஏலூரு வந்தேன். அவரும் ஓய்வு பெற்று இங்கேயே தங்கி விட்டார். அவர் மகன் வெளிநாடு போய் விட்டான். எப்போதும் அவர் என்னிடம் கேட்பது ” நானும்,மனைவியும் தங்குவதற்கு ஒரு சிறிய வீடு பார்த்துக் கொடுங்கள். பெரிய அளவு வாடகை என்னால் தர முடியாது.”

அவருக்கு இந்த வீட்டை நான் பிடித்துத் தந்தேன். தினமும் நாங்கள் சந்தித்துக் கொள்வோம். இருவருக்கும் நாகமணியை மிகவும் பிடிக்கும்.”

“நாகமணிக்கு கல்யாணம் ஆகிவிட்டதா சார்?” ராவ் தயக்கதோடு கேட்டார்.

ஜனார்தன் சிரித்தார்.

“ஆமாம். அவளுக்கு உன் வயதுதான். அந்தப் பெரிய கலவரத்திலிருந்து உன்னையும், அவளையும் அவர்தான் காப்பாற்றினார். உன் எதிர்காலத்தை அழித்து விடவேண்டுமென்றுதான் நான் அந்த நாட்களில் நினைத்தேன்.அந்தப் பெரிய சூழ்நிலையின் தாக்கத்தை தணித்து விட்டார் அவர்.

என் மகளுக்கும் அது நல்லதாகத்தானிருந்தது….

              ****

ஜனார்தன ராவ் பிரம்ம சமாஜத்தின் உறுப்பினர். அவர் முன்னோர்கள்
தாசி பரம்பரையிலிருந்து வந்தவர்கள். ஒரு வக்கீலாக இருந்த அவர்
தன் சகோதரிகள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டார்.
நாகமணி அவருடைய மூத்த மகள். என் வகுப்புத் தோழி. அவள் தன்
தந்தையைப் பற்றி எப்போதும் பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பாள்.
அவர் எப்போதும் உபநிடதங்களிலிருந்து மேற்கோள் காட்டுவார் .உயர்ஜாதி
பிராமணர்கள் அவரைக் கேலி செய்வார்கள்.எங்கள் தெலுங்கு ஆசிரியர்
எப்போதும் அவரைக் கேலி செய்வார். பள்ளி முடிந்த பிறகு ராமநாதம்,
சாம்பு இருவரும் எப்போதும் மாணவிகளின் பின்னால் சென்று அவர்களை
வம்பிற்கு இழுப்பார்கள்.

“வக்கீலின் அப்பா யார்?”

“சொல்வது கஷ்டம். பலரிடமிருந்து தேர்வு செய்யவேண்டும்!”

“துரதிர்ஷ்டவசமாக, அவர் மிக மரியாதைக்குரிய மனிதராக இருக்க
விரும்புகிறார்.”

“எலியின் தோல் கருப்பானது. என்ன கழுவினாலும் மாறாது.”பாடுவார்கள்.

நாகமணி கோபமடைந்து எங்கள் எல்லோரையும் புழுவாகப் பார்ப்பாள்

ஒருநாள் தெலுங்கு ஆசிரியர் ஓய்வறையில் சொன்னார்,” மகாபாரதத்தில்
இடம் பெறும் மிகச் சிறந்த மனிதர்கள் எல்லோரும் ஐயத்திற்குரிய
பெற்றோர்கள்! நம் நகரத்திலுள்ள மதிப்பிற்குரிய சிலரைப் போல.”

அப்போதுதான் அறைக்குள் நுழைந்த ஹெட்மாஸ்டர் மெதுவாகச்
சொன்னார்.” சார், ஒருவருடைய தந்தை இவர்தான் என்று ஒருவருக்கு
மிக நிச்சயமாகத் தெரியுமென்று நினைக்கிறீர்களா? நம் தாய் சொல்வதை
ஏற்றுக் கொண்டு போகிறோம், இல்லையா? எப்படியிருந்தாலும், நம் அப்பா
யார் என்பது நம்மைப் பாதிப்பதில்லை, நாம் யார் என்பதுதான் முக்கியம்
இல்லையா?”

ஒரு நாள் மாலை பள்ளியில் ஜனார்தன ராவை சொற்பொழிவு நிகழ்த்த
.ஹெட்மாஸ்டர் அழைத்து வந்திருந்தார். அவர்களிருவர் மீதும் எங்கள்
எல்லோருக்கும் கோபம். அவர் பேச எழுந்ததும் நாங்கள் ராக்கெட்
எறிந்தோம். அவர் லேசாக எரிச்சல்பட்டதாகத் தெரிந்தாலும்
ஹெட்மாஸ்டர் அமைதியாக இருந்தார்.ஜனார்தன ராவ் தன் பேச்சை மிக
வேகமாக முடித்துக் கொண்டார். ஹெட்மாஸ்டர் பேச எழுந்தார்.நாங்கள்
எல்லோரும் பதட்டத்தோடு உட்கார்ந்திருந்தோம். “நம் அனைவரின் சார்பாக
நான் ஜனார்தன ராவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நன்றி அவருடைய
பேச்சுக்காக அல்ல. நம்மிடம் அவர் காட்டிய பொறுமைக்காக.என்
மாணவர்களுக்கு அடிப்படை மரியாதையை கற்றுத் தராததற்காக நான்
மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” எவ்வித உணர்வையும் வெளிப்படுத்திக்
கொள்ளாமல் சொன்னார்.

முன்னால் உட்கார்ந்திருந்த ஆசிரியர்கள் சங்கடத்தில் நெளிந்தார்கள்.
ஒவ்வொரு வார்த்தையை உச்சரிக்கும் போதும், ஹெட்மாஸ்டருக்குள்
எவ்வளவு வலியிருந்தது என்பதை நாங்கள் எல்லோரும் உணர்ந்தோம்.
அந்த மாலையில் நடந்தவற்றிற்கு ஜனார்தன ராவ் தான் காரணம் என்று
அன்று சிறுபிள்ளைத்தனமாக நினைத்தோம். இது போதாதென்று நாகமணி
வேறு எங்களை கடுமையாகத் திட்டினாள். எனக்குள் இன்னும் வெறி
ஏறியது. நான் அவளைத் தனியாகப் பார்த்த போது அவள் சாதியைச்
சொல்லி இழிவு படுத்தினேன்.முகம் சிவக்க அவள் ஓடி விட்டாள். ஆனால்
எந்த ஆசிரியரிடமும் புகார் சொல்லவில்லை.எந்த ஆசிரியரும் அவளுக்கு
சாதகமாகப் பேச மாட்டார்கள் என்று அவளுக்கு தெரிந்திருக்கலாம். ஒரு
நாள் கேலியான சிரிப்போடு அவள் சொன்னாள் “குரைக்கும் நாய்களை
ஒரு போதும் யானைகள் சட்டை செய்யாது.” அன்று சரித்திரப் பாடம்
கடைசி வகுப்பு. ஆசிரியர் வயதானவர் ; பயந்த சுபாவம். நாங்கள்
கிறுக்குத்தனமான கேள்விகளால் அவரைச் சங்கடப் படுத்துவோம். அவர்
படும்பாட்டைப் பார்த்துச் சிரிப்போம். “கிருஷ்ண தேவராயருக்கு எத்தனை
வைப்பாட்டிகள் “ என்று அவரிடம் கேட்கும்படி சாம்புவிடம் சொன்னேன்.
ராயரைப் பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டவன் என்பதால் அவன் முகம்
சிவந்தது. அதிர்ஷ்டவசமாக மணி அடிக்க அவன் தப்பினான். வகுப்பை
விட்டு வேகமாக வெளியேறினான். அது கடைசி வகுப்பென்பதால்
மாணவிகள் போன பின்புதான் ஆசிரியர் போவார் என்பது அவனுக்கு
ஞாபகம் வந்தது. அவன் நுழைவாயிலுக்கு வெளியே நிற்பதை நான்
கவனிக்கவில்லை. வாயிலருகே எல்லா மாணவர்களும் தள்ளிக் கொண்டு
நடந்தார்கள் .மாணவர்கள் போகட்டும் என்று மாணவிகள் காத்திருந்தனர்.
வரிசையின் கடைசியில் நாகமணி நின்று கொண்டிருந்தாள். வழக்கம்போல
என்னைப் பார்த்து நையாண்டித்தனமாகச் சிரித்தாள். நான் பொறுமையை
இழந்தேன். எல்லா மாணவிகளும் போய் விட்டனர். கடைசியாக
நாகமணியும்,அவள் பின்னால் நானும். திடீரென ஓர் உந்துதலில் அவள்
பின்னலை கையால் பிடித்து என்னருகே இழுத்தேன். அவள் பயத்தில்
அலறி என்மேல் விழுந்தாள்.அவள் இடுப்பைப் பற்றி என்னோடு
அணைத்துக் கொண்டேன். நான் ஏன் அப்படி செய்தேன் என்று எனக்குத்
தெரியவில்லை. மற்ற மாணவிகள் எல்லோரும் பயத்தில் அலறினார்கள்.
ஆசிரியர் உள்ளே வர,”முட்டாளே! என்ன செய்கிறாய்?”என்று வகுப்பே
கத்தியது. நான் அந்த இடத்தை விட்டே ஓடி விட்டேன்.

எந்த நோக்கும், பாதையுமில்லாமல் ஆற்றோடு ஓடினேன்.ரயில்வே
பாலத்திலேறி ராஜமுந்திரியை நோக்கி ஓடினேன். ஒரு ரயில் பாலத்தின்
மேலேறி என்னைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தது. அடுத்த ரயில்
நிலையம் வரை ஓடினேன். மூச்சிரைத்தது. தண்டவாளத்தை தாண்டி
ராத்திரி பத்து மணிக்கு வீட்டிற்குப் போய் விட்டேன். சுவற்றினருகில்
இருட்டில் நின்றேன்.ஜனார்தன ராவ் ஹெட்மாஸ்டரிடம் பேசுவதைக்
கேட்டேன்.

“இந்த மாதிரி ரௌடிகளுக்கு கடுமையான பாடம் புகட்ட வேண்டும்.
இனிமேல் பள்ளிக்கு வராதபடி செய்து வி்டுகிறேன்.”

“நிச்சயம் சார். உயர்அதிகாரியிடம் நான் புகார் கொடுக்கிறேன்.
கடுமையான புகாராக இருக்கப் போவதால் அவனால் வேறு எந்தப்
பள்ளியிலும் சேர முடியாது. முதலில் அந்த சரித்திர ஆசிரியர் புகாரோடு
வரட்டும்.” ஹெட்மாஸ்டர் சொன்னார்.

கால்களில் சோர்வு ஏற்பட நான் சரிந்து விழுந்தேன். சிறிதுநேரத்தில்
ஜனார்தன ராவ் கிளம்பி விட ,அவரை கேட் வரை வழியனுப்ப வந்த
ஹெட்மாஸ்டர் என்னைப் பார்த்தார். நான் எழுந்து அவரைப் பார்த்தேன்.

உள்ளே போவதற்கு முன்பு “நீ ஏதாவது சாப்பிட்டாயா?” என்று கேட்டார்.
நான் எதுவும் பேசவில்லை. உள்ளே அழைத்துப் போனார். மனைவியை
அழைத்து “இந்த முட்டாள் எதுவும் சாப்பிடவில்லை.சாதம் போடு”என்றார்.
நான் என்ன செய்தேன் என்று அவர்களுக்குத் தெரியுமா என்று
நினைத்தேன். எனக்கு எதுவும் வேண்டாமென்றேன். ”வாயை மூடிக்
கொண்டு சாப்பிடு” என்றார். சாப்பிட்டு முடித்து விட்டு அவரைப்
பார்த்தேன். எல்லாப் பாவங்களையும் மன்னிக்கும் கடவுளாகத்
தெரிந்தார். நான் வெளியே வந்தபோது புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.
ஏதோ சொல்ல வேண்டும் போல இருந்தது, ஆனால் தைரியமில்லை.

“போய்ப் படு” நான் அறைக்குள் போய் விட்டேன்.அறைத் தோழர்களும்
என்னிடம் பேசாமல் தூங்கப் போய் விட்டனர். எனக்குத் தூக்கம்
வரவில்லை. மனம் எதையெல்லாமோ யோசித்துக் கொண்டிருந்தது.
நான் நாகமணியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; நான் பள்ளியிலிருந்து
விலக்கப் படுவேன். திரும்பவும் அவளை நான் அவமானப் படுத்துவேன்.
நான் ஏன் அப்படிச் செய்தேன்? எனக்கு இனி என்ன ஆகும்?அம்மா என்ன
சொல்வாள்? நான் தற்கொலை செய்து கொள்வேன். இரவு முழுவதும்
கனவுகள் என்னை வதைத்தன.

அடுத்த நாள் காலை நான் கோதாவரியில் நீந்தப் போகவில்லை.அறையை
விட்டு வெளியே வரவில்லை. அறைத் தோழர்கள் என்னை ஒரு விலங்கு
போலப் பார்த்து என்னைத் தவிர்த்தனர். வெளியே சரித்திர ஆசிரியர்
ஹெட்மாஸ்டரிடம் பேசுவது கேட்டது.” இந்த மாணவர்கள் எல்லோரும்
முட்டாள்கள்! இவனை நாம் தண்டிக்க வேண்டும். எவ்வளவு தைரியம்
அவனுக்கு ,வகுப்பில் அத்தனை மாணவர்கள் இருக்கும் போது! சார், அவன்
கண்டிப்பாக…”

கதவில் தெரிந்த சிறிய ஓட்டை வழியாக உள்ளே என்ன நடக்கிறது
என்று பார்த்தேன். சரித்திர ஆசிரியர் எழுதியிருந்த மூன்று பக்க
புகாரை ஹெட்மாஸ்டர் படித்துக் கொண்டிருந்தார். முதல் பக்கத்தை
படித்து விட்டு அடுத்த இரண்டு பக்கங்களை அப்படியே புரட்டினார்.

“சரி சார். நான் உயர் அதிகாரிகளிடம் இது குறித்துப் புகார் செய்கிறேன்.”
என்று விடை கொடுத்தார். ஒரு வாரம் கடந்தது. ஒவ்வொரு நாள்
மாலையும் ஜனார்தன ராவ் வந்து புகாருக்கான நடவடிக்கை நிலவரம்
குறித்து விசாரிப்பார்.

“மாணவர்களை தண்டிக்காமல் எப்படி சார் ஒழுக்கத்தைக் கற்பிக்க
முடியும்? உங்கள் புகாருக்கு ஏன் எந்த பதிலும் வரவில்லை?”

“சோம்பேறித்தனம் தான் சார் .நம் நாட்டில் எந்த அலுவலகமாவது
ஒழுங்காக வேலை செய்கிறதா? பெரும்பாலான நேரங்களில் கடிதங்களை
குப்பை பெட்டியில் தூக்கி எறிந்து விடுவார்கள்.” ஹெட்மாஸ்டர்
சொல்லுவார்.

“இன்னொரு முறை அனுப்புங்கள் சார்.”

“நிச்சயமாக .இப்பொழுதே செய்கிறேன்.டி.இ ஓ வுக்கும் ஒரு காப்பி
அனுப்பி விடுகிறேன்.”

சரித்திர ஆசிரியர் தினமும் காலையில் வந்து இது போன்ற
விசாரணைகளை நடத்துவார். திரும்பவும் அதே உரையாடல் நடக்கும்.
அடுத்து என்ன நடக்குமோ என்று நான் கற்பனை செய்து கொண்டிருப்பேன்.

ஹெட்மாஸ்டர் நினைவூட்டல் கடிதம் எழுதுவார். மாலை ரயிலில் அது
ஏலூருக்குப் போகும். டி இ ஓ அந்தக் கடிதத்தைப் படித்து விட்டு
அம்மாவை அழைத்துப் பேசுவார். அம்மா எவ்வளவு கவலைப் படுவாள்!
கடிதம் ஏலூரைப் போய்ச் சேரா விட்டால் ! நிடாடாவுலுவில் ரயில்
விபத்துக்கு உள்ளானால்! எல்லாக் கடிதங்களும் தீக்கிரையாகினால்!
அல்லது கடிதம் டி இ ஓ அலுவலகத்திலுள்ள ஒரு இளமையான
கிளார்க்கி்டம் கிடைத்தால்! அவர் என் மீது இரக்கப்பட்டு அந்த புகாரை
குப்பையில் போட்டு விடுவார்.

நாகமணி கடந்த நான்கு நாட்களாக பள்ளிக்கு வரவில்லை என்று
கேள்விப் பட்டேன். மனவுளைச்சலாக உணர்ந்தேன். பத்து நாட்களுக்குப்
பிறகு சரித்திர ஆசிரியர் மிக மோசமான மனநிலையில் வந்தார்.

“நான் கேள்விப்படுவது என்ன சார்? புகாரை நீங்கள் உயர் அதிகாரிகளுக்கு
அனுப்பவேயில்லையாமே?” ஹெட்மாஸ்டர் ஒரு நிமிடம் மௌனமாக
இருந்தார்.

“ஹூம். உண்மையில் சொல்லப் போனால் புகாரை அனுப்புவது குறித்து
எனக்கு இரண்டாவது அபிப்பிராயமிருக்கிறது.”

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஒழுக்கமற்ற பதர்களை எப்படி விட
முடியும்? நீங்கள் எப்படி அவனை மன்னிக்க முடியும்?”

“அவ்வளவு வெறுப்பதற்கு அவன் என்ன பகை நாட்டு எதிரியா சார்?அவன்
இன்னமும் சிறுவன்தான்.”

“என்ன சொல்கிறீர்கள் சார்?அவனை இப்படியே விட்டு விட்டால் மற்ற
மாணவர்களுக்கு எப்படி நாம் பயிற்றுவிக்க முடியும்?”

“கடவுளின் திருவடிகளையே நினைத்து கடுமையான தவம் செய்த
முனிவர்களும் கூட அழகான பெண்ணைக் கண்டால் ஆசையில்
முறை தடுமாறும் போது அனுபவமற்ற சிறுவன் எம்மாத்திரம்! எனக்கு
உங்களைப் பற்றித் தெரியாது, ஆனால் என்னைக் கடந்து ஓர் அழகான
பெண் போனால் எனக்கு அவளை இரண்டாவது முறையாகப் பார்க்கத்
தோன்றும். இது சத்தியமான பேச்சு! சமூகத்தின் மீதான பயம், என்
குடும்பம், நல்லது ,கெட்டது பற்றியான என் அபிப்பிராயம் ஆகிய
எல்லாம் என்னைப் பின்னுக்கு இழுத்து விடும். இல்லையெனில் என்
வயதில் நானும் ஒரு பெண்ணை அணைத்திருப்பேன். நான் அதைச்
செய்ய மாட்டேன், ஏனெனில் அந்தச் செய்கையில் அந்தப் பெண்ணை
விட நான் சூப் ஆகி விடுவேன். அவன் சிறுவன் ; பகுத்தறியும் திறன்
அவனுக்கில்லை. அவன் ஒரு சிறிய தவறு செய்து விட்டான். அவன்
அதற்காக இப்போது எவ்வளவு வருத்தப்படுவான் என்பது பற்றி யாருக்குத்
தெரியும். இப்போது அவனை நாம் இதிலிருந்து விடுவித்து விட்டால்,தன்
வாழ்நாள் முழுக்க இதுமாதிரியான ஒரு செயலை அவன் செய்ய
மாட்டான். நாம் அவனை பள்ளியிலிருந்து வெளியேற்றி அவன்
வாழ்க்கையைப் பாழாக்கினால் தன்னை திருத்திக் கொள்ள அவனுக்கு
வாய்ப்பே இல்லாமல் போகும். தன் தவறை உணர்தலே அவனுக்கான
தண்டனை என்று நான் நினைக்கிறேன்.”

திடீரென அவர்களிருவரும் என் அறையில் இருந்தார்கள். நான் தரையில்
விழுந்தேன். குற்றவுணர்வின் கனத்தால் என்னால் தலையைத் தூக்க
முடியவில்லை.இரண்டு பேரும் வெளியே போய் விட்டனர்.

அன்று மாலை வழக்கம் போல வக்கீல் வந்தார். தன் வழக்கமான
விவாதங்கள் முடிந்ததும் புறப்பட்டார். “சார், நான் உங்களிடம் ஒன்று
சொல்ல வேண்டும். ஒரு சிறிய விஷயத்தில் நானே முடிவெடுத்து
விட்டேன். உயர் அதிகாரிகளுக்கு நான் அந்த புகாரை அனுப்பவில்லை.”
ஹெட்மாஸ்டர் சொன்னார்.

“ஆனால் ஏன் அப்படியான முடிவு?” வக்கீல் கேட்டார்.

என் காதில் இடிச்சத்தம் கேட்பதை உணர்ந்தேன்; அழுத்தமும், பதட்டமும்
பொறுக்க முடியாததாக இருந்தன.

அவர் தொடர்ந்து கொண்டிருந்தார். ’நீங்கள் என்னைப் பற்றி புகார்
செய்தால் நான் வேலையை ராஜிநாமா செய்ய வேண்டும். கொள்கை
ரீதியாக நான் அந்தப் புகாரைப் பதிவு செய்து அந்தச் சிறுவனை
தண்டித்திருக்க வேண்டும். ஆனால் அந்த செயல் அறிவுபூர்வமானது
என்று எனக்குத் தோன்றவில்லை ; என் மனம் ஒப்பவில்லை.. நான் ஓர்
ஆசிரியர்.என் மாணவன் வழி தவறினால் அவனுக்கு சரியான பாதை
காட்ட வேண்டுமே தவிர அவன் வாழ்க்கையைச் சிதைத்து விடக்கூடாது.
நான் அவனது தவறான செயலுக்கான புகாரை அனுப்பியிருந்தால் அவன்
பள்ளியிலிருந்து நீக்கம் செய்யப்படுவான். அவன் செயலுக்கு அது
சரியானதுதான் என்றாலும், பிறகு அவன் கட்டுப்பாட்டிற்குள் வராமலே
போய் விடுவான். தான் என்ன செய்தாலும் தப்பித்து விடலாமென அவன்
நினைக்கலாம். இன்னும் அதிகம் உங்கள் மகளை அவமானப்படுத்த
நினைக்கலாம். நீங்கள் அவனைக் கைது செய்ய வைக்கலாம், ஆனால்
உங்கள் மகளைப் பற்றி தேவையற்ற வம்புகள் பரவத் தொடங்கும் அது
சரியாயிருகாதென்று நான் நினைக்கிறேன். நீங்கள் விரும்பினால் அந்தப்
புகாரை நான் அனுப்பி வைக்கிறேன்.”

“அது சரிதான்.ஆனால் இத்தனை நாளாக இதை நீங்கள் ஏன் என்னிடம்
சொல்லவில்லை?”

“அமைதியாக யோசிக்க முடியாத அளவுக்கு நீங்கள் கடுமையான
கோபத்தில் இருந்தீர்கள்.”

அதற்குப் பின்னால் அவர்களது உரையாடலை என்னால் கேட்க
முடியவில்லை.நான் வீட்டை விட்டு மிக வேகமாக ஓடி சுருக்கு
வழியில் அவர் வருவதற்கு முன்னால் அவர் வீட்டிற்குப் போய்
விட்டேன். மூச்சிரைத்தது. கதவைத் தட்டினேன்.

கதவைத் திறந்த அவர் மனைவி கேட்டாள் “யாரது?”

“நான்தான் சுப்பா ராவ்.”

அதிர்ச்சியானாள். ஒரு கொலைகாரனையோ அல்லது குடிகாரனையோ
பார்த்தது போலானாள். நாகமணி வெளியே வந்தாள்.

“நீயா?”

“என்னை மன்னித்து விடு நாகமணி. நான் பெரிய தவறு செய்து விட்டேன்.
என்னை மன்னித்து விடு என்று உன்னிடம் நான் கேட்கவில்லை.எப்படி
அவ்வளவு மோசமாக நடந்து கொண்டேன் என்று தெரியவில்லை.”

என் பின்னால் வக்கீல் நின்று கொண்டிருப்பதை நான் பார்க்கவில்லை.
வீட்டிற்குப் போகலாம் என்று திரும்பிய போது அவரைப் பார்த்தேன்.

“சார், நீங்களும் ஹெட்மாஸ்டரும் பேசியதை நான் கேட்டேன். நான்
செய்த காரியத்திற்காக வருத்தப்படுகிறேன். என்னைப் பள்ளியிலிருந்து
நீக்கினாலும் நான் நாகமணியை துன்புறுத்த மாட்டேன். எது உங்களுக்கு
சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள் சார்.”

அன்றிரவு நான் வீட்டிற்குப் போகவில்லை. பள்ளி வளாகத்திலேயே
படுத்துத் தூங்கினேன்.

அடுத்த நாள் முதல் நான் பள்ளிக்கு .வழக்கம் போல போனேன்.
எல்லாரும் அந்த சம்பவத்தை மறந்து போனது போலத் தோன்றியது.
அந்த வருடம் பள்ளியிறுதி தேர்வில் நான் நன்றாக மதிப்பெண்கள்
வாங்கி இருந்தேன். ஹெட்மாஸ்டருக்கு நன்றி சொல்ல அதுதான்
சிறந்த வழி என்று நினைத்தேன். சி்தைவுகளிலிருந்து ஒருவனைக்
காப்பாறிய திருப்தி அவருக்கு இருக்க வேண்டுமென்று விரும்பினேன்.

அதற்குப் பிறகு எப்போது சிக்கல் வந்தாலும் நான் என்ன செய்வதை
ஹெட்மாஸ்டர் விரும்பியிருப்பாரென்று யோசிப்பேன்.அவர் எனக்குள்
ஒரு பகுதியானார். நான் எந்தவித முட்டாள்தனமான தவறுகள்
செய்தாலும் என் மாற்று ஈகோ என்னை மன்னித்து மாற்றிவிடும்.

        ****

கட்டிலில் உட்கார்ந்து கொண்டு அவர் முழுக் கதையையும் கமலாவுக்குச்
சொன்னார். நாகமணி தன் அம்மாவுடன் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தாள்.
விடியற்காலை வெளிச்சத்தில் பறவைகள் முழு உலகையும் எழுப்பிக்
கொண்டிருந்தன. கமலா நிம்மதியாக தூங்குவதைப் பார்த்தார். அவருடைய
தொடையில் அவள் தலையிருந்தது. ஒரு புன்னகை அவள் இதழ்களில்
தவழ்ந்தது, அந்தச் சிரிப்பு அவருடைய எல்லா தவறுகளையும்
அறிந்திருப்பது.. மன்னிப்பது .. ஹெட்மாஸ்டரின் புன்னகையைப் போல..

தமிழில் இந்திய இலக்கியம்

கருப்பு எஜமானி ஏழாவது மலர்

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.