நீலக் குறிஞ்சி

பேருந்திலிருந்து இறங்கியதும் ஒரு மாயம் போல அதுவரை  மலைச்சரிவெங்கும் தொடர்ந்து வந்துகொண்டிருந்த  தேயிலைக் காடுகளின் பசுமை முற்றிலும் மறைந்து மலையெங்கும் அடுக்கடுக்காக உச்சிவரை நீலக்கடலெனக் குறிஞ்சி மலர்ந்திருந்தது.  அந்தக் காட்சியின் பிரமிப்பிலிருந்து மீளச் சிறிது நேரம் பிடித்தது. புறநானூறு சொல்லும் ’’கருங்கோற் குறிஞ்சி அடுக்கத்தை’’ த்தான் அங்கு பார்த்தேன்.

கோத்தகிரி மலை முழுவதும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை நீலக்கம்பளியால் போர்த்தியது போல நெருக்கமாக மலர்ந்திருந்தது  நீலக்குறிஞ்சி. அம்மலைக்கு நீலகிரி எனப்பெயர் வைத்தபோது தேயிலை, காப்பி தோட்டங்கள் இருந்திருக்காது என்பதால் முழு மலையையும் இப்படி நீலம் பூத்திருந்திருப்பதை கற்பனையில் பார்த்துக் கொண்டேன். எத்தனை அரிய காட்சியாக இருந்திருக்கும் அது?

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் நீலக்குறிஞ்சி கோத்தகிரி பகுதியில் மலர்ந்திருப்பதாகத் தகவல் வந்ததும் மாணவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்தேன்.  காடுகளுக்கும் மலைப்பிரதேசங்களுக்கும் தாவரங்களைக் காணவும் அவற்றைக் குறித்து அறிந்து கொள்வதற்கும் இப்படியான துறை சார்ந்த சுற்றுலாக்கள் செல்வது வழக்கம்தான் என்றாலும் மிக அரிய நிகழ்வான குறிஞ்சியின் மிகைமலர்வைக் காட்டிலும் பெரிதாக  வகுப்பறையில்  மாணவர்கள் என்ன தாவரவியல் அற்புதத்தைக் கற்றுக்கொள்ளப் போகிறார்கள்?

தாவரவியல் வரலாற்றின் அரிய பெருநிகழ்வொன்று சிலமணி நேரப் பயணத்தில் இருக்கையில் அங்குத் தாவரவியலாளர்கள் செல்லாமலிருப்பது அநீதியல்லவா? என்னைப் பொருத்தவரையில் தாவரவியல் கல்வி என்பதே இப்படியான நேரடியாகக் கற்றுக்கொள்ளும் field botany தான் என்பேன். எனவே பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தேன். 

கோத்தகிரியில் குறிஞ்சி ஆகஸ்ட் மாத இறுதியில் மலரத்துவங்கி இருந்தபோது சுற்றுலாப்பயணிகள் ஒரு சிலர் அங்கே சென்றார்கள். அப்படித்தான் புதுமணத் தம்பதியினரும் இயற்கை ஆர்வலர்களுமான பவித்ரா பிரபு இணையர் குறிஞ்சி மலர்வைக் காணச் சென்று விட்டு எனக்கு ஏராளமாகப் புகைப்படங்களை அனுப்பினார்கள். மணமான புதிதில் இப்படி அரிய மலரொன்று பல்லாண்டுகளுக்கு பிறகு மலைமுழுதும் மலர்ந்திருப்பதைப் பார்க்கச்செல்வது எத்தனை இனிய அனுபவம் இல்லையா?

ஆனால் தொடர்ந்த நாட்களில் அதிகம் பேர் வரத்தொடங்கியபோது நீலகிரி வன அலுவலகம் கட்டுப்பாடுகளை விதித்தது.  எனவே முறையாக   அனுமதி பெற்று இரண்டு பேருந்துகளில் மாணவர்களை அழைத்துக் கொண்டு சென்றேன்.

கோத்தகிரி செல்லும் வழியில் அன்று வெள்ளிக்கிழமை என்பதால் பெரிதாகப் போக்குவரத்து நெரிசல் இல்லை. பள்ளிகளின் காலாண்டுத் தேர்வு விடுமுறைக் காலமாதலால் வழக்கம்போல ஊட்டி செல்லும் பாதையில்தான் நெரிசல் இருந்தது. கோத்தகிரி வந்திருந்தால்   குறிஞ்சி மலர்வை காண்பதென்பது குழந்தைகளுக்கு மிகப்பெரும் அனுபவமாக இருக்கும். ஆனால் இப்படியான தாவர அறிவியல் அற்புதங்கள் குறித்த அறிதலும் ஆர்வமும் பொதுவாகப் பலருக்கு இல்லை. 

2019-ல் சத்தியமங்கலம் வனப்பகுதியில் மூங்கில் பெருமலர்வு நிகழ்ந்திருந்தபோது அங்கு இருந்த சுற்றுலாப்யணிகளில் என்னைத்தவிர யாருமே   60 நீண்ட வருடங்களுக்குப் பிறகு முழுக் காட்டிலும் பொன்னெனப் பூத்திருந்த மூங்கிலை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் காடுகளின் விளிம்பில் அவ்வபோது தெரிந்த மான் கூட்டங்களையும், யானைகளையும் படமெடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் தலைக்கு மேலே  நிகழ்ந்திருந்தது வாழ்நாளில் மீண்டும் காணவே முடியாத ஒரு பெருநிகழ்வென்பதை  அவர்கள் அறிந்திருக்கவில்லை. அப்படித்தான் இப்போதும் குறிஞ்சிமலர்வைக் காணும் அருமையை பலரும் அறிந்திருக்கவில்லை.

புறப்படும் முன்பாகவே காணவிருப்பது எத்தனை அரிய இயற்கை நிகழ்வு என்பதை மாணவர்களுக்குத் தெரிவித்திருந்தேன். நான் மாணவியாக இருக்கையில் ஒரு முறை தொட்டபெட்டா மலைச்சரிவெங்கும் நீலகுறிஞ்சி மலர்ந்திருந்ததை பார்த்திருக்கிறேன். உண்மையில் தாவரவியல் துறையின் மீது எனக்குப் பெரும் ஆர்வம் உண்டானது அந்தக் கணத்திலிருந்துதான். 

கண் எதிரே பச்சைப்பசேலென்று வளர்ந்து கொண்டிருக்கும் தாவரங்களில்  12 வருடங்கள்  மிக நீண்ட காலக்காத்திருப்பும், மலர்வதற்கான துல்லியமான கணக்கீடுகளும், ஒன்றுக்கொன்று சொல்லிவைத்துக் கொண்டதுபோல ஒட்டுமொத்தமாக மலர்வதுமான அந்த அதிசயம் நான் அதுவரை நினைத்திருந்ததைப் போலத் தாவரங்கள் மனிதனுக்கு அடுத்தபடியான கீழ்நிலை உயிரினங்கள் அல்ல என்பதை உணர்த்தியது.

இதே கோத்தகிரியில் குறிஞ்சி மீண்டும் 12 வருடங்கள் கழித்து மலர்கையில் இந்த மாணவர்கள் அனைவரும் வாழ்வின் அடுத்த, மிக வேறுபட்ட தளத்திற்கு சென்றிருப்பார்கள். அப்போது இந்தச் சுற்றுலாவின் நினைவு மனதில் ஒரு இனிய மலர்தலாக நிலைத்திருக்கும். 

கோத்தகிரியை தாண்டிப் பல கி மீ சென்ற பின்னர் எனக்களிக்கப் பட்டிருந்த வனச்சரகரின் எண்ணைத் தொடர்பு கொண்டு எங்கள் வருகையைத் தெரிவித்தேன். குறிஞ்சிக்காட்டின் துவக்கத்திலேயே காத்திருந்த மற்றொரு வனஅலுவலர் எங்களை அங்கே அழைத்துச் சென்றார்.

அப்போதுதான் திடீரெனக் கலைடாஸ்கோப்பின் கோணம் மாறியதைப் போல நீலப்பெருக்கில் மூழ்கி இருந்த மலையின் அடியில் நின்றிருந்தோம்.

அடுக்கடுக்கான நீலக்கூம்புகளாக மலர்கள் செறிந்திருக்கும் குறிஞ்சிக்காட்டுக்குள்,  குறிஞ்சிச்செடிகளை கைகளால் விலக்கியபடி மலையேறிச்சென்றது பேரனுபவமாக இருந்தது. முன்பே மாணவர்களுக்கு அறிவுறுத்தி இருந்ததால் யாரும் குறிஞ்சி மலர்களைப் பறிக்கவோ, செடிகளைச் சேதப்படுத்தவோ இல்லை. 

அச்சமயத்தில் நாங்கள் மட்டுமே இருந்தோம் என்பதால் மிகப் பிரத்யேகமான ஒரு இயற்கை அனுபவமாகக் குறிஞ்சி காணச் சென்றது எங்களுக்கு  அமைந்து விட்டிருந்தது.

நாங்கள் மிகச் சரியான சமயத்தில்தான் சென்றிருந்தோம் ஏனெனில் ஆகஸ்ட் இறுதியில் சென்றிருந்தால் குறிஞ்சியின் அரும்புகளையும் அவிழத்துவங்கி இருந்த மலர்களையும்தான் பார்த்திருப்போம். இப்போதோ அரும்புகளையும், மலர்களையும், மகரந்தச்சேர்க்கை நடப்பதையும், மகரந்தச்சேர்க்கை நடந்து கருவுற்ற மலர்கள் வாடி இருப்பதையும், ஒரு சில விதைகள் உருவாகி இருந்ததுமாகக் குறிஞ்சியின் முழு வாழ்க்கைச் சுழற்சியையுமே பார்த்தோம்.

குறிஞ்சியின் எல்லா மலர்களிலும் மகரந்தசேர்க்கை செய்ய வரும் ஈக்கள், அந்துப்பூச்சிகள், பட்டாம்பூச்சிகள், குளவிகள், எறும்புகள், தேனீக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. 

குறிஞ்சி மிக நீண்டகாலம் கழித்து மலர்வதினால் சந்ததிப்பெருக்கத்தில் மிகக் கவனமாக இருக்கும், எனவே மகரந்தச் சேர்க்கையாளர்களைக் கவர ஏராளமான மலரமுதையும்ம் மகரந்தங்களையும் அவை சேர்த்து வைத்திருப்பதால் காத்திருக்கும் பூச்சிகள் மலர்களைச் சுற்றிச்சுற்றிப் பறந்தும், மலரமுதினைச் சுவைத்து மயங்கியும், மலரிலிருந்து மலர் தாவிச் சென்று மகரந்தச்சேர்க்கை  செய்துகொண்டும் இருந்தன.   

கனகாம்பரக் குடும்பமான அகாந்தேசியை சேர்ந்த நீலக்குறிஞ்சி, மிக நீண்ட மலரில்லாப்பருவம் கொண்டு,   காலக்கணக்கு தவறாமல் நிகழும் இனப்பெருக்கக் காலத்தில் மிகையாக மலர்ந்து ஏராளமாக விதைகளை உருவாக்கி மொத்தமாக மடிந்துவிடும் semelparous வகைத் தாவரம். (வாழ்நாளில் பலமுறை இனப்பெருக்கம் செய்து பின்னர் மடிபவை  Iteroparous சிற்றினங்கள்.)  இவ்வகைசெடிகள்   hapaxanthic எனவும் அழைக்கப்படுகின்றன.

இதன் அறிவியல் பெயர்: Strobilanthes kunthiana (Wall. ex Nees) T. Anders. ex Benth.

இணை அறிவியல் பெயர்கள்: 

Strobilanthes nilgirianthsis, 

Phlebophyllum kunthianus, 

Ruellia kunthiana

Phlebophyllum angustifolium

ஸ்ட்ரொபைலாந்தஸ் அகாந்தேசி குடும்பத்தின் இரண்டாவது பெரிய பேரினம். (முதலாவது ஜஸ்டிசியா-Justicia) ஸ்ட்ரொபைலாந்தஸின் 350 சிற்றினங்கள் ஆசிய மலைப்பகுதிகளில் இருக்கின்றன.இவற்றில் 150 சிற்றினங்கள் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவை. 44 சிற்றினங்கள் மேற்கு  மலைத்தொடர்சியில் மட்டுமே வாழ்பவை. (ஓரிடத்தாவரங்கள்- Endemic).

குறிஞ்சியின் பேரினமான   Strobilanthes முதன்முதலாக ஜெர்மானிய தாவரவியலாளர் Christian Gottfried Daniel Nees von Esenbeck என்பவரால் 19-ம் நூற்றாண்டில் அறிவியல் ரீதியாக விவரிக்கப்பட்டது.

Strobilanthes என்னும் பேரினப்பெயர் லத்தீன பொழியில் கூம்பு வடிவ மலர்மஞ்சரிகளைக் குறிக்கிறது  (’strobilos’ – cone   ‘anthos’   flower)  குறிஞ்சியின் சிற்றினமான “kunthiana” என்பது ஜெர்மனியை சேர்ந்த தாவரவியலளாரான  Karl (Carl) Sigismund Kunth  (1788–1850). என்பவரைக் கௌரவிக்கும் விதமாக வைக்கப்பட்டிருக்கிறது. (பல இணைய தளங்களில் கேரளாவின் குந்திப்புழையின் பேரில் இந்தச் சிற்றினப்பெயர் வைக்கப்பட்டிருப்பதாகத் தவறான தகவல் அளிக்கப்படுகிறது.)

இந்தப்பேரினத்தில் வருடத்திற்கு ஒரு முறை மலரும் வகையிலிருந்து 16 வருடங்களுக்கு ஒருமுறை மலரும் வகை வரை இருக்கின்றன. தமிழகத்தின் பளியர் பழங்குடியினர் குறிஞ்சி மலர்வை வைத்தே தங்களின் வயதை கணக்கிடுகிறார்கள்.

இமயமலைப் பகுதியில் 12 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் Strobilanthes wallichii  என்னும் காஷ்மீர் குறிஞ்சி மலருகையில் உத்திரகாண்டின் ரங் பழங்குடியினர் மலைச்சரிவெங்கும் ஆகஸ்டிலிருந்து அக்டோபர் வரை மலர்ந்திருக்கும் குறிஞ்சிக்கெனவே கண்டாலி விழாவை மூன்று நாட்களாக விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.

அனைத்துக் குறிஞ்சி வகைகளும் பெரும்பாலும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருந்தாலும் நுட்பமான வேறுபாடுகள் அவற்றுக்கிடையே இருக்கும். Strobilanthes cuspidatus 7 வருடங்களுக்கொரு முறை மலரும். இதன் மிக மெல்லிய மலர் மஞ்சரி, ஒட்டும் தன்மையுடைய புல்லிவட்டம் மற்றும் மலரடிச் செதில்களின் பிசுபிசுப்பிலிருந்து  பிற குறிஞ்சி வகைகளிலிருந்து இதை எளிதில் அடையாளம் காண முடியும்.

Strobilanthes consanguineus  என்னும் சிற்றினமும் 12 வருடங்களுக்கொரு முறை மலரும்.  இதன் மலர்தல்  1845-6, 1881 -2, 1905-6 மற்றும் 1977-8. காலங்களில் ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறது.

Strobilanthes ciliata ஒவ்வொரு வருடமும் மலரும் குறிஞ்சி வகை.S.ciliatus கரிம் குறிஞ்சி / செறு குறிஞ்சி/சிறு குறிஞ்சி,S. aurita  தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகிறது. S. hypericoides மற்றும் S. pentandra ஆகிய குறிஞ்சிச் சிற்றினங்கள் இலங்கையில் காணப்படுகின்றன. 

Strobilanthes homotropus, S. gracilis மற்றும் S. luridus ஆகியவை 8 மீ உயரம் வரை பெரும் புதர்களாக வளரும் இயல்பு கொண்டவை. Strobilanthes homotropus நீலகிரியில் பத்தாண்டு இடைவெளியில் 1934-ல் மலர்ந்தது ஆவணப் படுத்தப்பட்டிருக்கிறது.இதே சிற்றினம் ஆனைமலை இரவிக்குளம் பகுதிகளில் 1988, 1998 மற்றும் 2008-ல் செப்டம்பர்- அக்டோபரில் மலர்ந்தன.  

20 அடி வரை வளரும் இயல்புடைய பெரிய நீல மலர்களைக் கொண்டிருக்கும் Strobilanthes andersonii  என்னும் குறிஞ்சி வகை   1988, 1998 & 2008 வருடங்களில் மலர்ந்தது புகைப்படங்களுடன் ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறது. Gamble இந்தக் குறிஞ்சி ஆனைமலையில் மலர்ந்ததை குறிப்பிட்டிருக்கிறார். Richard Henry என்பவரால் சேகரிக்கப்பட்ட இக்குறிஞ்சியைக் குறித்த தகவல்கள் ஏதும் 1864-க்குப்பிறகு கிடைக்காததால் இந்தச்சிற்றினம் அழிந்து போயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Gamble 1883 -ல் Strobilanthes amabilis  என்னும் இளஞ்சிவப்புக்  குறிஞ்சி மலர்கள் நீலகிரியில் மலர்ந்திருந்ததைக் குறிப்பிட்டிருக்கிறார் கேம்பிள்  நீலகிரியில் மலரும் குறிஞ்சிகளிலேயே மிக அழகியது Strobilanthes violaceous தான் என்கிறார். 2014 -ல் நீலகிரியில்  S. foliosus மற்றும் S. perrottetianus மலர்ந்திருந்தது. இதே வருடம் கேரளாவின் வயநாடு பகுதியில் Strobilanthes amabilis இளஞ்சிவப்பு மலர்கள் மலர்ந்தன.

நீலகிரிமலைச் சரிவெங்கும் 1934-ல்  Strobilanthes wightianus  மிகைமலர்வை ராபின்சன்  என்பவர் ஆவணப்படுத்தியிருக்கிறார். இந்த வகைக் குறிஞ்சி நீலகிரியில் சிறிய அளவில்  வருடா வருடம் மலர்கிறது.

கர்நாடகத்தின் கூர்க் பகுதியில்  2009-ல் Strobilanthes sessilis மற்றும் S. reticulatus இரண்டும் மலர்ந்தன.

Strobilanthes integrifolius என்னும் குறிஞ்சி வகை கோவா, மகாராஷ்டிரம், வடக்குக்கேரளம் மற்றும் கர்நாடகத்தில் 6-7 வருட இடைவெளிகளில்  மலர்கிறது. கேரளத்தின் காசர்கோடு பகுதியில்  2015 பிப்ரவரியில், S.lupulinus, S. heyneanus மற்றும்  S. ciliatus குறிஞ்சி மலர்ந்தன.

ஆசியாவையும் மடகாஸ்கரையும் தாயகமாகக் கொண்ட  நீலக்குறிஞ்சி 1300- 2400 மீ கடல்மட்ட குத்துயரம்  இருக்கும் மலைப்பகுதிகளில் மட்டுமே மலரும்,

குறிஞ்சிப் பேரினமான ஸ்ட்ரொபைலாந்தஸின் சிற்றினங்கள் கர்நாடகம் தமிழ்நாடு கேரள மநிலங்களில் பரவிக் காணப்படுகின்றன.  பழனி, ஊட்டி, கோத்தகிரி,  கொடைக்கானல், ஏற்காடு, மூணாறு பகுதிகளில் குறிஞ்சி மலர்வை அதிகமாகக் காண முடியும்.கிழக்கு தொடர்ச்சி மலையின் சேர்வராயன் மலைகளிலும் குறிஞ்சி மலர்கிறது.

குறிஞ்சி மலர்கள் நீலம், இளஞ்சிவப்பு, ஊதா மற்றும் வெள்ளை நிறங்களில் உள்ளன. மலர்களின் அளவும் ஒவ்வொரு சிற்றினத்துக்கும் மாறுபடும். Strabilanthes urceolaris என்பது வெண்குறிஞ்சி, Strobilanthes consanguineus  என்பது  பெருங்குறிஞ்சி. 

இப்படி நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டு மலரும் குறிஞ்சி, மூங்கில் போன்ற தாவரங்கள்  plietesials என வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வகைத் தாவரங்கள்  ஒரே ஒரு முறை பூத்து மடிகையில் ஏராளமாக விதைகளை உருவாக்கும் நிகழ்வு mast seeding  மற்றும் supra-annual synchronized semelparity  எனப்படுகிறது.

அவை மிகச்சரியாக மலரும் காலக்கணக்கை அறிந்திருப்பது  மட்டுமல்லாது ஒரே ஒரு முறை தான்  அவற்றின் சந்ததிகளை உருவாக்கும் வாய்ப்புக் கிடைக்குமென்பதால் அது தோல்வியடையமால் இருக்க அனைத்து முன்னேற்பாடுகளையும்  கொண்டிருக்கும்.ஆய்வுகள் நீலக்குறிஞ்சித் தாவரங்கள் பகல் மற்றும் இரவின் நீளத்தைக் கணக்கிட்டு நாட்களை அறிந்துகொள்ளும் உள்கடியாரத்தைக் கொண்டிருக்கின்றன என்கின்றன.

வரலாற்றில் குறிஞ்சி மலர்வு:

1935-ல் Bombay Natural History Society-யின் சஞ்சிகையில் ராபின்சன் என்பவர் 1934-ல் நீலகிரியில் நிகழ்ந்த குறிஞ்சி மலர்வைக் குறித்து கட்டுரை எழுதியதோடு 1838-லிருந்து 1934 வரையிலுமான 12 வருட இடைவெளியில் குறிஞ்சி மலர்ந்ததையும் ஆவணப்படுத்தி இருந்தார். ராபின்சனின் பாட்டனார் 1826-ல் நீலகிரியில் குடியேறிய ஐரோப்பியர்களில் ஒருவர். ராபின்சனின் அத்தை 9 வயது சிறுமியாக 1838-ல்  இருக்கையில் நீலகிரியில் குறிஞ்சி மலர்வை கண்டிருக்கிறார். பின்னர் அவரே 1850, 1862, 1874, 1886, 1898, 1910  1922 வரை குறிஞ்சி மலர்வை ஆவணப்படுத்தியும் இருக்கிறார். ராபின்சன் 1934-ல் பழனி மற்றும் ஆனைமலைப் பகுதிகளில் குறிஞ்சி மலர்ந்திருந்ததையும் ஆவணப்படுத்தி இருக்கிறார்.

அக்கட்டுரையில் ராபின்சன் பழனி மலையின் நூற்றுக்கணக்கன ஏக்கர் பரப்பளவில் நீலக்குறிஞ்சி ஜூலையிலிருந்து  டிசம்பர் வரை மலர்ந்திருந்ததையும், அதே வருடம் வெல்லிங்டன், பைக்காரா, கோத்தகிரி பகுதிகளிலும் ஆனைமலையின் புல்வெளிகளிலும் அக்டோபரில் நீலக்குறிஞ்சி மலர்ந்திருந்த்தையும் குறிப்பிட்டிருக்கிறார். 

குறிஞ்சி மிகை மலர்வின்போது காடுகளின் தேன்கூடுகளின் எண்ணிக்கை வழக்கத்தைக் காட்டிலும் மிக அதிகமாக இருந்ததையும், குறிஞ்சி மலர்களின் சூலகங்களின் அடிப்புறம் நிறைந்திருந்த மலரமுதை எடுக்க Apis dorsata என்னும் தேனீ கூட்டம் கூட்டமாக வந்ததை குறிப்பிட்டிருக்கும் ராபின்சன் 1922-ல் யூகலிப்டஸ் மரமொன்றில் மட்டும் 32 தேன் கூடுகள் இருந்ததையும், ஒரு கல்லூரி வராண்டாவிலும் பாறைகளிலும் ஏராளமான தேன் கூடுகள் அச்சமயத்தில் இருந்ததையும்  அக்கட்டுரையில் ஆவணப்படுத்தி இருக்கிறார். தாவரங்களுக்கும் அவற்றுடன் தொடர்புடைய சிற்றியிர்களுக்குமான இந்தத் தொடர்பு மிக ஆச்சரியமானது.

12 வருட நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் மலருகையில் மகரந்தச் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகளைச் செய்திருக்கும் குறிஞ்சியிடமிருந்து, தொடர்புடைய பூச்சி இனங்களுக்கும் அந்தத் தகவல் எப்படியோ  கடத்தப்படுகிறது. எனவேதான் தேனீக்கள் அபரிமிதமாகக் கிடைக்கும் தேனைச் சேர்த்து வைக்கக் கூடுகளைத் தயாராக உருவாக்கி வைத்துவிட்டு மலரமுதை எடுக்க வருகின்றன.    

இந்திய தாவரங்களைக் குறித்து ஏராளமான ஆய்வுகளைச் செய்த ஆங்கிலேய தாவரவியலாளர் J.S. Gamble 1888-ல் வெளியான ‘The Nilgiri Strobilanthes  என்னும் அவரது ஆய்வுக்கட்டுரையில் நீலகிரியில் பல குறிஞ்சிச் சிற்றினங்களின் மலர்வையும் அதன் இடைவெளிகளையும் குறிப்பிட்டிருந்தார். 

மேத்யூ  என்பவர் (Matthew)  1958 க்கு பிறகு 1970 ல் நீலகிரியில் மிக அதிகமான மலர்தல் இருந்ததையும் ஆவணப்படுத்தி இருக்கிறார். இவர் 5 குறிஞ்சி மிகை மலர்தலை  1910 லிருந்து 1958 வரை ஆவணப்படுத்தி இருக்கிறார்.1971ல் மேத்யூ பழனி மலைப்பகுதிகளில் 12 வருட இடைவேளைக்குப் பிறகு குறிஞ்சி மலர்ந்ததை ஆவணப்படுதித்திய இவர் குறிஞ்சி மலர்தலின்போது காட்டுக்கோழிகளின் இனப்பெருக்கம் அந்தப் பிரதேசத்தில் அதிகரித்ததை குறிப்பிட்டிருக்கிறார் காட்டுகோழிகள் குறிஞ்சி விதைகளை விரும்பி உண்ணும். 

லாக்வுட் என்பவர் (Lockwood) 1994-லிருந்து 2006 வரையிலான குறிஞ்சி மலர்வை ஆவணப்படுத்தி இருக்கிறார்.

குறிஞ்சியின் தாவரவியல் பண்புகள்:

12 வருடங்களுக்கொரு முறை மலரும் குறிஞ்சியை பிற குறிஞ்சி வகைகளிலிருந்து அவற்றின் வெண்பொடி தூவினாற் போன்ற, நுண் மயிரிழைகள் அடர்ந்திருக்கும் இலைகளின் அடிப்புறத்தைக்கொண்டு அடையாளம் காணலாம்.   

குறிஞ்சி அதிகபட்சமாக 3 மீ வரையிலும் சாதரணமாக 1 மீ உயரமும் வளரும் ஒரு குறும்புதர். தடித்த கிளைகள் நெருக்கமாக அமைந்திருக்கும்.தண்டு பளபளப்பாக, கடினமாக, நேராக, தெளிவான கணுக்களுடன் நாற்கோணம் கொண்டிருக்கும் கணுக்கள் தெளிவாகத் தெரியும்,கணுக்களில் மென்மயிரிழைகள் அடர்ந்திருக்கும் .

இலைகள் நீள் முட்டை வடிவில்  2.5–8 × 1.5–4 செமீ அளவிலும் இருக்கும், இலைகளின் அடிப்பகுதி கூராகவும்  மேற்பகுதி பற்கள் கொண்டும் இருக்கும். குறுகிய இலைநுனி கூரானது, இலைபரப்பு சொரசொரப்பானது.

இலையடிப்பகுதியில் 4-10 ஜோடி இலைநரம்புகள் புடைத்து அமைந்திருக்கும். பளபளப்பான  இலைக்காம்பு 0–5.4 மி மீ நீளமிருக்கும், விரைத்த மயிரிழைகளை ஓரங்களில் கொண்டிருக்கும். 

கிளைத்த அல்லது  கிளைக்காத  ரெசீம் மஞ்சரி இலைக் கோணங்களிலும் உச்சியிலும் உருவாகும். மஞ்சரி சுமார்  3–10 செ மீ நீளம் இருக்கும். மஞ்சரியில் மலர்க்காம்புச் செதிலும் மலரடிச்செதிலும் இருக்கும். மணி வடிவ நீல மலர்கள் இரண்டாகப் பிளவு பட்டிருக்கும் இதழ்களைக் கொண்டிருக்கிறது. 

புல்லி வட்டம் விளிம்பில் பிளவுகளுடன் மென் மயிரிழைகள் அடர்ந்து   10–14 மி மீ நீளத்தில்  பச்சை நிறத்தில்  குழல் போன்றிருக்கும். அல்லி வட்டம்  2–3 செமீ நீளத்தில் மணி வடிவம் கொண்டிருக்கும். இதழ்களின் உட்புறத்தில் தெளிவான அடர்  நீலநிற  நரம்போடியிருக்கும் மலர்க்குழாயின் உட்புறத்தில் மயிரிழைகள் காணப்படும். 

அல்லி ஐந்து மடிப்புக்கள் கொண்டது. இதழ்களின் விளிம்பு அலையலையாக இருக்கும். மலரமுது அடிப்புறம் ஒரு தட்டுப் போன்ற அமைப்பில் நிறைந்திருக்கும்.  மகரந்தம் நீள்முட்டை வடிவிலிருக்கும்  மயிரடர்ந்த சூலகம் 15 மி மீ நீளமுள்ள சூல்தண்டைக் கொண்டிருக்கும். 

நீள் முட்டைவடிவ உலர் வெடிகனி    1–2 செ மீ நீளத்தில் இருக்கும்.பழுப்பு நிறத்தில் தட்டையான 4 விதைகளைக் கொண்டிருக்கும்

ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் குறிஞ்சி மலரத்துவங்கி செப்டம்பரில் மிகுதியாக மலர்ந்து அக்டோபரில் மலர்தல் நின்றுபோகும். சுமார் 2.5 மாதங்கள் குறிஞ்சியின் மலர்தல் இருக்கும்.

ஒரு செடி சுமார் 60-லிருந்து 82 மஞ்சரிகளை உருவாக்கும் ஒவ்வொரு மஞ்சரியிலும் 90லிருந்து 24  இருபால் மலர்கள் உருவாகும்.மிகை மலர்வின்போது ஒவ்வொரு நாளும் புதிதாக 4 மலர்கள் வரை ஒவ்வொரு மஞ்சரியிலும் மலரும். மகரந்தச் சேர்க்கை செய்ய வரும் பூச்சிகளின் தொடுகைக்கு பின்னரே மகரந்தப்பைகள் வெடிக்கும்.  வெடித்த மகரந்த தாள்கள் நீலநீறமாகிவிடும்.

மகரந்தச்சேர்க்கை:

குறிஞ்சி மலரின் பிரதானமான மகரந்தச் சேர்க்கையாளர்   Apis cerana indica,  என்னும் இந்தியத் தேனிவகை . இது ஆசியத் தேனீயின் ஒரு துணையினம்.இந்தத் தேனியுடன் மேலும் பல வகை எறும்புகள், அந்துபூச்சிகள் பட்டாம்பூச்சிகள், ஈக்கள், குளவி மற்றும் வண்டினங்களும் மகரந்தசேர்க்கையில் ஈடுபடுகின்றன

குறிஞ்சியின் மகரந்தச் சேர்க்கையாளர்களின் பட்டியல்:

 A. florea, Amegilla sp, Junonia iphita, Ypthima ceylonica, Y. huebneri, Cepora nerissa,Psuedozizeeria maha, Junonia lemonias,Neptis hylas, Pachliopta hector, Hebo-moia glaucippe, Ixias pyrene, Graphiumsarpedon, Euploea core, Pantoporiahordonia, Hypolimnas bolina, Colotiseucharis & Danaus genutia

காலை 6-லிருந்து 9 மணிக்குள் அவிழும் மலர்கள் இரண்டு நாட்களுக்கு விரிந்து இருக்கும். இரண்டாம் நாள் மகரந்தச்சேர்க்கை நடந்து, மூன்றாவது நாளில் மலர்கள் வாடிவிடும்.  

மிகமெல்லிய தொடுகைக்கே விழித்துக்கொள்ளும் குறிஞ்சி மலரின் சூல்நுனி மகரந்தங்களால் தொடப்பட்ட உடனே பூச்சி வெளியேறும் வழிக்கு எதிர்ப்புறமாகத் திரும்பிக்கொண்டு கருவுருதலை மிகக் கவனமாகப் பாதுகாப்பதும் ஒரு இயற்கை அதிசயம்தான். 

100% மகரந்தச்சேர்க்கையும் கருவுருதலும் நிகழ்ந்த பின்னர் மிக அதிக எண்ணிக்கையில் விதைகள் உருவாகின்றன.   

மகரந்தப்பைகள் மகரந்தச் சேர்க்கை செய்யவரும் பூச்சிகளின் தொடுகையின்றி வெடிக்காது.  ஒவ்வொரு பூச்சியின் வருகையின் போதும் சூல்நுனியில் 6 லிருந்து 8 மகரந்தங்கள் வீழ்ந்திருப்பதும் ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறது. மலருக்குள் கருவுறக் காத்திருக்கும் சூலகங்களுக்குத் தேவையானதை விட இருமடங்கு அதிகமான மகரந்தங்கள் சூல்நுனியில் விழுந்திருப்பதும் ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறது. மலர்ந்த மூன்றாவது நாளில் ஆய்வு செய்யப்பட்ட குறிஞ்சி மலரின் சூல்நுனி 100 சதவீதம் மகரந்தச்சேர்க்கை நிகழ்ந்துவிட்டிருப்பதை உறுதி செய்கிறது.

மலர்ந்து மகரந்தச்சேர்க்கை நடந்து கருவுற்ற பின் விதைகள் முதிர்ந்து வெடிக்க சுமார் 2 மாதங்களாகின்றது அதன் பின்னர் முழுப் புதரும் வாடி அழிந்துவிடுகிறது.

குறிஞ்சி மலர்களை மகரந்தச் சேர்க்கை செய்யப் பூச்சிகளும் தேனிக்களும் காத்திருப்பதைப் போலவே குறிஞ்சியின் விதைகளை உண்ணும் பறவைகளும் விலங்குகளும் கூடக் காத்திருக்கின்றன. அவைகளும் ஏராளமான விதைகளை உண்கின்றன என்றாலும் மிகை மலர்விற்குப் பிறகு மிக அதிகளவில் விதைகளைக் குறிஞ்சி உருவாக்குவதால் எந்தச் சேதமும் இல்லாமல் குறிஞ்சியின் அடுத்த சந்ததி முளைத்து வாழ்வைத் தொடருகிறது.குறிஞ்சிச் செடியின் இலைகளைத் தின்னும் புழுக்களும் ஏராளமாக இருக்கின்றன.நாங்கள் சென்றிருக்கையில் கூடக் குறிஞ்சிச்செடியை புழுக்கள் தின்று கொண்டிருந்தன. பெரும்பாலான செடிகளின் இலைகள் பூச்சிகளால் தின்னப்பட்ட காயங்களுடன் இருந்தது.   

ஒரு மலர்த்தேனான (Unifloral honey) குறிஞ்சித்தேன் மிக அரியதும் மிகச் சிறப்பானதுமாகும் இந்தப் பருவத்தில் மட்டுமே இந்தத் தேன்  பல வருட இடைவெளியில் கிடைப்பதென்பதால் இது மிக அரியதாக, விலை அதிகமானதாக இருக்கிறது. இந்தத்தேனுக்கு மருத்துவ குணங்கள் அதிகமென்று சொல்லப்படுகிறது.  

இந்தியாவில்  குறிஞ்சி மலர்வு:

குறிஞ்சி மலர்தல் நிகழ்வு 19-ம் நூற்றாண்டிலிருந்து தான் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது

1838, 1850, 1862, 1874, 1886, 1898, 1910, 1922, 1934, 1946, 1958, 1970, 1982, 1994, 2006, 2012, 2017, 2018. 2021,2022 & 2024

இந்தக் காலகட்டங்களில் 12, 9 மற்றும் 16 ஆண்டுகளில் மலரும் வகைகள் ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன.

முன்பு குறிஞ்சி மலர்தல் ஆனைமலை, ஏலகிரி, நீலகிரி, பழனி, குதிரேமுக், பாபா புதன் கிரி மலைகள் முழுக்க இருந்தது. பிற்பாடு தேயிலை காப்பி தோட்டங்களும் சுற்றுலா விடுதிகளும் ஆக்ரமித்த இடங்களில் அவை முற்றாக அழிந்துபோயின

கேரளாவில் குறிஞ்சி பாதுகாப்பிற்கென்றே குறிஞ்சிமலை சரணாலயம் (Kurinjimala Sanctuary) உருவாக்கப்பட்டிருக்கிறது. இடுக்கி மாவட்டத்தின் கிரமங்களில் குறிஞ்சி மலரும் பிரதேசங்களை ஒன்றிணைத்து சுமார் 32 கிமீ2 பரப்பளவில் இந்தச் சரணாலயம்  அமைந்திருக்கிறது. 2006-ல் மூணாறு மலைப்பகுதியில் ஏராளமான குறிஞ்சி மலர்ந்து குறிஞ்சி விழா கொண்டாடப்பட்டது. அச்சமயத்தில் அங்கு  குறிஞ்சியை காண சுமார் பத்து லட்சம் சுற்றுலாப்பயணியர் வருகை தந்திருந்தார்கள் அச்சமயத்தில்தான் குறிஞ்சியை பாதுகாக்கும் இந்தச் சரணாலயம் குறித்த அறிவிப்பைக் கேரள அரசு வெளியிட்டது. அவ்வருடம் குறிஞ்சி வருடமாக அறிவிக்கப்பட்டு சிறப்புத் தபால் தலையும் வெளியிடப்பட்டது.

கொடைக்கானலின் குறிஞ்சியாண்டவர் கோயிலும் குறிஞ்சி மலர்ச்செடிகளின் பாதுகாப்பில் இணைந்திருக்கிறது. பழனி மலையில் மலரும் குறிஞ்சியின் தாவரவியல் பெயர் Strobilanthes pulneyensis. இது டிசம்பரிலிருந்து பிப்ரவரி வரை மலர்ந்திருக்கும்.

இந்தியாவின் பல பகுதிகளில் குறிஞ்சி மலர்வு பலரால் ஆவணப் படுத்தப்பட்டிருக்கிறது. 

2012-ல் ஊட்டியின் சில பகுதிகளில் குறிஞ்சி மலர்வு காணப்பட்டது

மூணாறில் 1990, 2002 & 2014 வருடங்களில் குறிஞ்சி மலர்வு ஆவணப்படுத்தப்பட்டது. 1990-ன் மலர்வு தாவரவியலாளர்கள் மத்தியில் காலக்கணக்கு பிசகிவிட்டிருப்பதாகக் குழப்பத்தை உண்டாக்கியது எனினும் பல தாவரவியல் வல்லுநர்கள்  அப்படி 12 வருட காலஇடைவெளிக்கு முன்னரே மலர்ந்தவை வேறு சிற்றினமாக இருக்கலாமெனக் கருத்துத் தெரிவித்தார்கள். 

பிற்பாடு அது ஸ்டொரொபைலாந்தஸ்  குந்தியானஸ் என்னும் 12 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் அதே சிற்றினம் தான் ஆனால் அவை தனித்தனி நிலப்பரப்புகளில் வேறு வேறு ஆண்டுகளில் 12 வருட இடைவெளியில்தான் மலர்ந்தன என்பதை தாவரவியல் வல்லுநர்கள் உறுதிப்படுத்தினார்கள், அவர்களின் கணிப்புபடி மூணாறில் 2026-ல் மீண்டும் நீலக்குறிஞ்சி மலரும்.

12 வருடங்களுக்கு இடையிலும்  சிறிய நிலப்பரப்புகளில் குறிஞ்சி மலர்தல் அவ்வப்போது நிகழ்கின்றன.  2022-ல் வால்பாறையில் ஓரிரு இடங்களில் சில குறிஞ்சி செடிகள் மலர்ந்திருந்தன. நீலகிரி மலைப்பகுதியில் இப்படி நிகழ்கின்றது. அவை ஒருவேளை பறவை அல்லது விலங்குகளால் அங்குக் கொண்டு வரப்பட்ட விதைகளிலிருந்து முளைத்தவையாக இருக்கலாம். இப்படி மிகச்சிறிய எண்ணிக்கையில் ஆங்காங்கே  குறிஞ்சி மலரும் நிகழ்வுக்கான அறிவியல் ரீதியான விளக்கமேதும் இதுவரை இல்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலரும் நிகழ்வுகளே ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன.  

2017-ல்  Strobilanthes callosa கர்நாடகத்தின் பெல்லாரியில் சந்தூர் மலைப்பகுதியில்,

2006 & 2018-ல்  Strobilanthes kunthiana கேரளாவின் மூணாறு இரவிக்குளம் தேசியப்பூங்காவில், 

2012-ல் Strobilanthes kunthiana நீலகிரியில்,, 

2021 -ல் Strobilanthes kunthiana உத்தரகாண்டில் கார்வால் பிரதேசத்தில்

2022-ல் Strobilanthes sessilis var. sessiloides கர்நாடகத்தின் கொடகு மண்டல்பட்டி மலைப்பகுதியில்,   

இந்தக் குறிஞ்சி மலர்வைக் காண மட்டும் அங்கே 4,5 லட்சம் இந்திய சுற்றுலா பயணிகளும் 1லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டினரும் அப்போது வந்திருந்தனர். 

குறிஞ்சியின் சிற்றினங்களான  S. ciliates, S.  kunthiana, S. cusia, S. callosus, S. crispus, S. discolour  ஆகியவை பாரம்பரிய மருத்துவ முறைகளில் கிருமித் தொற்று மற்றும்  சர்க்கரை நோய்க்கெதிரான சிகிச்சைகளில் முக்கியப் பங்காற்றுகின்றன.சமீபத்தில் குறிஞ்சியிலிருந்து வைரஸுகு எதிராகச் செயல்புரியும் வேதிப்பொருளான tryptanthrin கண்டறியப்பட்டிருக்கிறது. 

சூழல் மாசு, வாழிட அழிப்பு, தேயிலை, காப்பித்தோட்டங்கள், இயற்கைப் பேரழிவுகள், அயல் ஆக்கிரமிப்புத் தாவரங்கள் ஆகிய பல காரணங்களால் நீலக்குறிஞ்சியின் பாதுகாப்பு அவசியமாகி இருக்கிறது. 

விதை வங்கிகள், சரணாலயங்கள் ஆகியவற்றின் மூலம் குறிஞ்சியின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கின்றன. சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு நிறுவனமான IUCN  நீலக்குறிஞ்சியை செம்பட்டியலில் இணைத்து அது பாதுகாக்கப்பட வேண்டிய  அவசியத்தை அறிவித்திருக்கிறது  

குறிஞ்சியின் பல சிற்றினங்களைப் பலவகையான அச்சுறுத்தல்களால் இழந்திருக்கிறோம், ஸ்ட்ரொபைலாந்தஸின் 22 சிற்றினங்கள் அழிவின் விளிம்பிலிருக்கின்றன என 2012-லிருந்து சிவப்புப் பட்டியலிடப்பட்டிருந்தாலும் மிகச்சமீபத்தில் மேற்கு மலைதொடரில் கண்டறியப்பட்டிருக்கும் குறிஞ்சியின் புதிய பிற சிற்றினங்களான: Strobilanthes kannani, Strobilanthes jomyi, Strobilanthes sainthomiana, Strobilanthes malabarica, Strobilanthes agasthyamalana  ஆகியவை குறிஞ்சியைப் பற்றிய நமது அறிதலின் குறுகிய எல்லையைக் காட்டுகிறது. குறிஞ்சி என்னும் இந்தத் தாவரம் மனிதர்களின் அறிதலின் எல்லைக்கப்பாற்பட்டதாகத்தான்  எப்போதுமே இருந்து வருகிறது.

குறிஞ்சிமலை சரணாலயம் போன்ற முன்னெடுப்புக்களை, குறிஞ்சி மலரும் அனைத்து இடங்களிலும் உருவாக்குவது, சுற்றுலாப்பயணிகளின் வருகையைக் கட்டுப்படுத்தி தொடர்ந்து கண்காணிப்பது, தாவரவியலாளர்களைக் கொண்டு மிகைமலர்தலை ஆவணப்படுத்துவது, குறிஞ்சிக்காட்டை பாதுகாக்கப்பட்ட  பகுதியாக அறிவிப்பது ஆகியவை குறிஞ்சியை பாதுகாக்க உடனடியாகச் செய்யப்படவேண்டியவை.

தனியே ஒரு குறிஞ்சி மலரைப் பார்க்கையில் அது எந்தச் சிறப்புமில்லாத, கனகாம்பரத்தின் கண்கவர்  நிறம் கூட இல்லாத நீலச்சிறுமலராகத்தான் தெரியும். குறிஞ்சியின் சிறப்பு அதன் மிகைமலர்தலிலும், 12 நீண்ட வருடக்காத்திருப்பிலும், கொஞ்சமும் பிசகாத துல்லியமான காலக்கணக்கிலும் தான் இருக்கிறது.

சங்க இலக்கியங்களில் குறிஞ்சி மலர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2018-ல் இந்தியாவில் பல இடங்களில் குறிஞ்சி மலர்ந்திருக்கையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர உரையில் குறிஞ்சி மலரை  குறிப்பிட்டிருந்தார்.

Clare Flynn 2014 ல் எழுதிய  Kurinji flower  என்னும் நாவல் 1940-களில் இந்தியாவில் நடந்த ஒரு காதலை குறிஞ்சி மலர்தலை பின்னணியாகக் கொண்டு விவரிக்கிறது. 

2018,ல் ஜோமி அகஸ்டின்  (Jomy Augustine)  எழுதிய  “Strobilanthes in the Western Ghats, India. The Magnificent Role of Nature in Speciation”. நூலில் இந்திய நிலப்பரப்பில்  குறிஞ்சியின் 64 சிற்றினங்களின் பரவல் மிக விரிவாக  ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறது.   

குறிஞ்சிக்காட்டில் நாங்கள் சில மணிநெரம் செலவழித்த பின்னர் அங்த இடத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து இறங்கினோம். அவ்வப்போது தூறிய சாரல் மழையும், மூடுபனியும் குளிர்காற்றும் நீலகுறிஞ்சி மலர்களுமாக நாங்கள் ஒரு மாயக்கம்பளத்தில் ஏறிச்சென்று கண்ட மாயலோகம்  போலத்தான் அந்த அனுபவம் இருந்தது

மலையிறங்குகையில்   குறிஞ்சித்திணையின் தலைவி கூற்றை நினைத்துக்கொண்டேன்

குறிஞ்சி மலர்ந்து, குறிஞ்சித்தேனடைகளை வண்டுகள் தொகுத்துக் கொடுக்கும் நாட்டையுடைய தலைவனின் மீதான காதல் ஏன்  அவளுக்கு வானைவிடப் உயர்ந்ததாகவும், நீரைவிட ஆழமாகவும், நிலத்தை விடப் பெரியதாகவும்  இருந்ததென்பதை புரிந்து கொள்ளமுடிந்தது. அப்பெருந்தேன் நட்பின் மீது பொறாமையாகவும் இருந்தது. 

மேலதிகத்தகவல்களுக்கு:

https://www.indiatoday.in/magazine/environment/story/19921231-the-kurinji-flowers-of-nilgiri-hills-in-tamil-nadu-767308-2012-12-21

https://timesofindia.indiatimes.com/travel/destinations/neelakurinji-flower-blooms-after-12-years-in-keralas-idukki-all-that-you-need-to-know/photostory/84971148.cms?picid=84971191

https://www.keralatourism.org/neelakurinji/experience/varieties-kurinji-plants/42

Matthew KM (1959) The vegetation of Kodaikanal grassy slopes. J Bombay Nat Hist Soc 56:387–422

https://www.iucnredlist.org/species/239578615/239579829


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

4 Replies to “நீலக் குறிஞ்சி”

  1. நீலகிரியின் பெயருக்கு குறிஞ்சி பூ காரணம் என தெரிந்து கொண்டேன். பூவில் பெயரால் மலை. ஒரு சிறிய பூ மொத்த மலைக்கும் பெயர் சூட்டுகின்றது.

  2. தாவிரவியலுக்கும், நமக்கும் என்ன சம்மந்தம் என்று கடந்து போகும் பலரைச் போல நானும் இருந்தேன். இந்த கட்டுரையை இன்று படித்ததும் என்னைக் கட்டிப் போட்டு விட்டது. பகல் இரவு நீளத்தை கணக்கிட்டு காலக்கணக்கை அறிந்து மலரும் குறிஞ்சி, அதன் வருகையை அறிந்து தனது தேன் கூடுகளை முன்னரே தயார் செய்து கொள்ளும் தேனீக்கள், அதன் விதைகளை உண்ண காத்திருக்கும் பறவைகள், பூச்சிகள் என்று இயற்கையில் ஒன்றுக்கொன்று எப்படி தொடர்புடையவை என்று அற்புதமாக விவரித்திருக்கிறார் கட்டுரையாளர். வாழ்த்துக்கள். பிரசுரம் செய்த சொல்வனம் குழுவினருக்கும் பாராட்டுக்கள்.

Leave a Reply to pnirmalkCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.