
எண்பதுகளில் ஐஐஎஸ்ஸியில் பிஎச்டி மாணவனாக இருந்த சமயம். ஸ்ரீராமநவமியை முன்னிட்டு பெங்களூரில் பல இடங்களில் சங்கீத கச்சேரிகள் நடைபெறும். எனது இன்ஜினீயர் நண்பன் ஒருவன் மிகவும் கர்நாடக சங்கீதப் பிரியன். அவனும் மல்லேஸ்வரத்தில் ஒரு வித்வானிடம் வாய்ப்பாட்டு பயின்று கொண்டிருந்தான். அவனுடன் அவ்வப்போது கச்சேரிக்குப் போவதுண்டு.
ஒருதடவை, ஏப்ரல் 1980 என்று நினைக்கிறேன், மல்லேஸ்வரம் எட்டாவது கிராஸ் பிள்ளையார் கோவில் அருகில் எம்எஸ் அம்மாவின் கச்சேரி. அக்காலங்களில் மிகவும் பிரபல வித்வானாக இருந்தாலும், எந்த ஒரு பந்தாவுமில்லாமல், தெருக்களில் கட்டிய பந்தல்களுக்கு நடுவே உட்கார்ந்து கொண்டு, இரண்டு, மூன்று மணிநேரம் கச்சேரி செய்வார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் பலரும் நின்று கொண்டுதான் கேட்க வேண்டியிருந்தது.
கச்சேரியின் நடுவில், எம்எஸ் அம்மா “தொல்லுயி…” என்று தொடங்கும் அன்னமாச்சார்யா கீர்த்தனையைப் பாடத் தொடங்கினார். எனது நண்பன் “ஆஹா நீலாம்பரி ராகம், சபாஷ்” என்று உற்சாகமானான். “மாதவ மாமனு” கேட்டிருக்கியோ என்றவன், என்னை ஒருமாதிரியாக பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் தொடங்கிய ராக ஆலோபனையில் தன்னை மறந்து விட்டான். நான் அருகில் நடைபெறும் கிசுகிசுக்களில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.
இரு மாமிகள் சுவாரஸ்யமாக MS நீலசேலையின் நிற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயத்தில் எம்எஸ் ஃப்ளூ என்பது மிகவும் பேசப்பட்ட ப்ரேன்ட் ஆகும். பட்டுப் புடவைகள் பலரும் நம்புவது போல் ‘மயில் கழுத்து’ நீலம் அல்ல, ‘நடுக்கடல்’ நீலம் மற்றும் மதுரை நெசவாளர் முத்து செட்டியார் நீல நிறத்தில் புடவையை பிரத்யேகமாக செய்து கொடுத்ததாகவும் பிரபல கர்நாடக பாடகர் டி.என். சேஷகோபாலன் தெரிவித்ததை பல வருடங்களுக்குப் பிறகு ஹிந்து பத்திரிக்கையில் படித்ததாக ஞாபகம்.1
நீலநிறத்தின் நீள ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. மயில் கழுத்து’ நீலத்தைப்பற்றி பிறகு விவாதிக்கலாம்.
இரண்டாவதாக அவரணிந்திருந்த வைரத் தோடு, வைர மூக்குத்தியைப்பற்றி. அது உயர்ந்த ரக நீலநிறக் கல்லாம் ஃப்ளூ ஜேகராம்! திடநிலை வேதியியல் ஆராய்ச்சி மாணவன் என்பதால், வைரத்தைப் பற்றி சில விஷயங்கள் தெரியும். பெங்களூரில் இருப்பதால் ஃப்ளூ மூன், ஃப்ளூ டைமண்ட் நன்றாகத் தெரியும் – அதாவது பிரபலமான ஆங்கிலப் படங்களாகக்காண திரையரங்கங்கள்! இங்கு தானே Diamonds are forever பார்த்தேன். ப்ளூ ஜேகர் கேள்விப் பட்டதில்லை. மறுநாள் நூலகத்தில் படித்து தெரிந்து கொண்டது – நீல வைரங்கள் உலகின் மிக அரிதான மற்றும் மதிப்புமிக்க ரத்தினங்களில் ஜேகர் ஒன்றாகும். இவற்றின் தனித்துவமான நீல நிறம் போரானின் இருப்பு காரணத்தால் உருவானது. உலகளவில் ஒரு சில இடங்களில், குறிப்பாக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள சுரங்கங்களில் மட்டுமே காணப்படுகிறது. அதுவும், ஒரு சுரங்கத்தில் தோண்டியெடுக்கப்பட்ட வைரங்களில் 0.02% க்கும் குறைவானவை நீல நிறத்தில் உள்ளன.
மாமிகளிடமிருந்து இன்னொரு விஷயமும் கற்றுக் கொண்டேன். மஞ்சள் அல்லது வெளிர் நிறமாக இருந்தால் அது தோஷக்கல்லாம். மாமிகள் ஆலோபனையிலிருந்து நழுவி தோஷ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் திருமணங்கள் கூட நின்றுவிட்டதாம். காலம் காலமாக நிறபேதம் மனிதன் கற்பிக்கும் நீச த்வேஷம். “வெள்ளை நிறத்தோரு பூனை” என்று பாரதியை நினைத்து புலம்பத்தான் முடியும்.
அச்சமயம் திடப்பொருட்களின் கட்டமைப்பு மற்றும் பண்புகள் எவ்வாறு அதிலுள்ள குறைபாட்டினால் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுதான் எனது பிஎச்டி ஆராய்ச்சியாகும். ஒரு திடநிலை வேதியியாளனுக்கு, எல்லா வைரமும் வெறும் கார்பன்தான். நீலம் அல்லது மஞ்சள் நிறமானது மில்லியன் கார்பனில் ஒரு கார்பனை போரான் அல்லது நைட்ரஜனால் மாற்றுவதால் ஏற்படும் விளைவு.
எம்எஸ் மாமி கச்சேரி இறுதியியில் “குறை ஒன்றுமில்லை, மறை மூர்த்தி கண்ணா…” என்று பாடி முடித்தார்.
‘தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், தரத்தினில் குறைவதன்றோ’ என்ற எளிமையான கண்ணதாசன் வரிகளும் ஞாபகத்திற்கு வருந்தது.
கச்சேரி முடிந்து இன்ஸ்டிட்யூட் திரும்புகையில் நீலாம்பரியைப் பற்றி எனது நண்பன் ஒரு பெரிய லெக்சர் கொடுத்தான்.
நீலாம்பரி ராகம், உடல், மன இறுக்கத்தைப் போக்கி, நம்மளை துாக்கத்துல ஆழ்த்தக் கூடியதாம். லாலிகள், தாலாட்டு, ஊஞ்சல் பாடல்கள், இரக்கம் போன்றவற்றில் இந்த ராகத்தைக் காணலாமாம்.
“ஊத்துக்காடு வேங்கடகவி தெரியுமோனோ”?
அதான் சின்ன வயசலேருந்து கேட்டுண்டு இருக்கோமே, ‘அலைபாயுதே கண்ணா’.
கரெக்ட். அவரோட ‘மணி நூபுர தாரி ராஜகோபால’ கேளு (முத்து ஸ்வாமி)தீக்ஷிதரோட ‘அம்ப நீலயதாக்ஷி’ இன்னுமொரு அருமையான க்ருதி இந்த ராகத்துலே.
ஏன்டா உங்கப்பா கர்நாடக சங்கீதம் மட்டும்தான் கேட்பாருன்னு சொன்ன. நீ ஞானசூன்யமா இருக்கே.
‘பல்லவன் பல்லவி பாடட்டுமே’ சினிமா பாட்டு தெரியுமா? அதுவும் இதே ராகம் தான். ஒரு பத்து தடவை இதையும் அதையும் கேளு. கொஞ்சம் ஸ்வரஞானம் வரும்.
இதுதான் சில சினிமா பாட்டுகளைக் கேட்டுக் கொண்டு ராகங்களை அறிய முயன்றதில் கிடைத்த முதல் பாடம். பிறகு இன்னொரு இஞ்சினீயரிங் நண்பன் பல கிளாஸ்கள் எடுத்தான் என்பது வேறு கதை.
ஐஐடி தில்லியில் ஆசிரியர் பணியில் இருந்தபோது ஹிந்துவில் சாருலதா மணி எழுதிய திரையிசையில் ராகங்கள் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும் போது நீலாம்பரி மறுபடியும் நினைவில் ஆடினாள்.2
சமீபத்தில் எனது தம்பி (அருணாசலம்)ராமன் ‘கர்நாடிக் மியூசிக் வால்ட்’ என்ற ஆப்பில் (ஐஃபோன் மற்றும் ஆண்டிராய்டு) யூ ட்யூபில் கிடைக்கப் பெறும் அத்தனை கர்நாடக பாட்டுக்களையும் வரிசைப்படுத்தியுள்ளான். பல வருடங்களுக்குப் பிறகு இந்த ஆப்பிள் மூலம் எம்எஸ்ஸின் ‘ tolliyunu maarAku’ கேட்பது ‘அந்த நாளும் வந்திடாதோ’ என்று மனதைக் கிளறரச் செய்கிறது.
நீலாம்பரி ட்யூனுக்கு உண்மையிலேயே தூக்கத்தைத் தூண்டும் பண்புகள் உண்டா என்ற ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. பாண்டிச்சேரி ஜிப்மர் நிறுவனத்தில், கருதுகோள் ஸ்லீப் பாலிசோம்னோகிராபியைப் பயன்படுத்தி சில அறிவியல் ஆய்வுகள் செய்து, நீலாம்பரியில் நித்திரையை உறுதிப்படுத்த முடியாது என்று கூறுயிருக்கிறார்கள்.3,4
அதனால் என்ன. இளையராஜா இசையில் மு.மேத்தாவின் வரிகளில் ‘சிப்பிக்குள் முத்து’ படத்தில் வரும் “வரம் தந்த சாமிக்கு” என்ற தாலாட்டு பாடலைக் கேட்டால் தூக்கம் தானாக வரும்!!
ரஹ்மானின் “என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்” நீலாம்பரியை தழுவியதாம். சாருலதா அவர்கள் செஞ்சுருட்டியை ஆதாரமாகக் கொண்டது என்கிறார். எதுவாக இருந்தாலென்ன! ட்யூனிலுள்ள துள்ளல் நம்மை ஈர்க்கத்தான் செய்கிறது.
இந்த பிரீயாடிக் டேபிளில் நூறுக்கும் மேற்பட்ட தனிமங்கள் இருந்தாலும், அது ஒன்றுக்கொன்று எவ்வாறு சேரும் என்பதில் சற்று புரிதல் உள்ளது. நாற்பது வருடங்களாகியும் இந்த ராகங்கள் ஏனோ புரியவில்லை.
‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம், இதயச் சுரங்களுக்குள் எத்தனை கேள்வி”.
- The untold ‘MS blue’ sari story, The Hindu 2016:: https://www.thehindu.com/news/national/tamil-nadu/The-untold-%E2%80%98MS-blue%E2%80%99-sari-story/article15425115.ece
- M. Charulatha, “Soothing the senses,” The Hindu 2021: https://www.thehindu.com/features/metroplus/soothing-thesenses/article5843142.ece
- Neelambari: Does the Tune Really Own Sleep-Inducing Properties?: https://www.outlookindia.com/art-entertainment/neelambari-does-the-tune-really-own-sleep-inducing-properties-news-309605
B. Gitanjali, Effect of the Karnatic music raga “Neelambari” on sleep architecture, Indian J Physiol. Pharmacol. 1998: https://pubmed.ncbi.nlm.nih.gov/9513803/
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
