கட்டுரை 1 – நோர்டியக் குற்றநாவல்களும் தப்புதல் விருப்பும்
ஹென்னிங் மான்கெல் லின் ‘சைட் ட்ராக்ட்’ நாவலில் ஒரு பாத்திரம் சொல்வது இது, “விடுமுறையில் போகிற ஸ்வீடிய மக்கள், ஏதோ விசித்திரமான காரணத்தால், அப்போது குற்றங்களைப் பற்றிப் படிக்க விரும்புகிறார்கள்.”
நோர்டிய நாடுகளின் குற்றப் புனைவுகள் கடந்த சில பத்தாண்டுகளாக இந்த வகைப் பொழுது போக்கு வாசிப்பாகப் பிரபலமாகியுள்ளன. அவற்றில் சிறந்தவற்றில் மான்கெல்லின் ‘குர்ட் வலாண்டெர்’ தொடர் ஒன்று. மையப் பாத்திரமாக வருகிறவரும், காவல்துறை இன்ஸ்பெக்டருமான வலாண்டெர் ஸ்வீடன் நாட்டில் யூஸ்டா (Ystad) என்கிற சிற்றூரில், குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதும் இல்லாத ஒரு தினசரி வாழ்க்கை நடத்துபவர். அவரது மகளுக்கும் அவருக்கும் இடையே உள்ள உறவு தொல்லைகள் நிறைந்தது என்பது அதில் ஒரு அம்சம், ஆனால் அதுவும் சராசரியான நிகழ்வுதான். யூஸ்டாவின் சிறிய புலனாய்வுக் குழுவில் உள்ள இதர நபர்கள், ஏதும் கவனமீர்க்காத நபர்கள், நாவல் தொடரில் நிலையாக வருபவர்கள், அவர்களில் தடய ஆய்வாளரும், சுருக்கமாகவும், வெளிப்படையாகவும் பேசுபவரான நீபெர்க் ஒருவர்.
முதல் வலாண்டெர் நாவல் 1991 ஆம் வருடம் பிரசுரமாகியது. ஏறக்குறைய சமகாலத்தில் அமெரிக்காவில், காவல் துறையின் வழிமுறைகளை விளக்கமாகச் சித்திரித்த இரு குற்ற நாவல்கள், ஜான் ஸாண்ட்ஃபோர்டின் ‘லூகஸ் டாவென்போர்ட்’ நாவல் தொடரும், மைக்கெல் கானெலியின் ‘ஹாரி பாஷ்’ நாவல் தொடரும், வெளியிடப்பட்டு ஏராளமாக விற்றிருந்தன. டாவென்போர்ட் மற்றும் பாஷ் என்ற கதாபாத்திரங்கள் குறையேதும் இல்லாத, சாங்கமான நாயகர்கள், செயல் வீரர்கள், அழகான பெண்களோடு உறவுகள் கொள்பவர்கள், தீவினையாளர்களைக் கொல்பவர்கள், நிறைய நிதி வசதியும், பல துறை வல்லுநர்களும் கொண்ட குற்றம் துலக்கும் அணிகளில் வேலை செய்பவர்கள். தாமும் இப்படி இருக்க வேண்டும் என்று வாசகரை ஆசை கொள்ள வைக்கும் பாத்திரங்கள். சாண்ட்ஃபோர்டும், கானெலியும் உத்வேகம் கொள்ள வைக்கும் புத்தகங்களை எழுதுபவர்கள். டாவென்போர்ட் அல்லது பாஷ்ஷின் இடத்தில் நாம் இருந்து, அந்தச் செயல் வீரர்களின் வாழ்வை நாம் வாழ வேண்டுமென்று நினைப்போம்.
குர்ட் வலாண்டெரின் இடத்தில் தாம் இருக்க வேண்டும் என்று யாருக்குமே ஆசை எழாது. தேவையான உதவி அவருக்கு ஒருபோதும் கிட்டுவதில்லை, ஒரு கொலைகாரனைச் சுட்டுக் கொல்ல நேர்ந்ததால் அவர் மன அழுத்தத்தில் வீழ்கிறார், பிரியப்படுபவர்களோடு நல்லுறவு என்பது அவருக்குக் கிட்டுவது மிக அரிது. வலாண்டெர் பற்றிய விவரணைகள் ஒவ்வொன்றும் அப்படித் தத்ரூபமாக இருப்பதாக நமக்குத் தெரிவதால், இவற்றில் பெரும்பங்கு மான்கெல்லின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
மான்கெல்லைப் படிக்கையிலும் நாம் நம் சராசரி வாழ்விலிருந்து தப்பித்து விடுதலை பெறுகிறோம், ஆனால் அந்த விடுவிப்பு வளர்ச்சிக்கான ஊக்கம் தரும் விடுவிப்பு இல்லை; நம்மையே கண்ணாடியில் வேறு வழியில் பார்த்துக் கொள்ளச் செய்வது. நெருப்புச் சுவர் (Firewall) நாவலில், வலாண்டெருக்குத் தெரிய வருகிறது, தான் முன்பொரு முறை கைப்பற்றிய கொலைகாரன், மனநோய் சிகிச்சை நிலையக் கட்டத்திலிருந்து கீழே குதித்துச் செத்துப் போனான் என்பது. அவர் அப்போது மீள் நினைவில் அசை போடுகிறார், “கடந்த சில வருடங்களில் ஸ்டெஃபான் முழு மௌனத்தில் இருந்தான், வெளியுலகு முற்றிலும் அவனுக்கு அடைக்கப்பட்டிருந்தது. ஆனால் மருத்துவ மனையின் கான்க்ரீட் தரையில் வீழ்ந்து நொறுங்கிப் போன பையன், போருக்குப் போகும் வீரன் போல உடலெங்கும் சாயங்கள் பூசியிருந்தான். சாயங்களும் ரத்தமும், அவற்றின் பூச்சால் உருவாகிய ஒரு முகமூடியை அணிந்து கீழே கிடந்த பையன், நிஜத்தில் யாராக இருந்தான் என்பதற்கு எந்தத் தடயமும் கொடுக்கவில்லை, ஆனால் அவனை உருவாக்கிய சமூகத்தின் வன்முறை கொண்ட தன்மை பற்றி ஏராளமானதைச் சொல்கின்றன.”
அந்த எட்டு வலாண்டெர் நாவல்கள் ஒரு தெளிவான போக்கைக் கொண்டிருக்கின்றன. முகமற்ற கொலையாளிகள் (Faceless Killers-1991) நாவல் ஒரு உரமிக்க துவக்கம். முதல் பக்கத்திலிருந்தே, வலாண்டெரும் கூட்டாளிகளும் திருட்டை நோக்கமாகக் கொண்டு நடந்த ஒரு கொலையை ஆய்வு செய்கிற பணியில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறார்கள், இந்தப் புத்தகம் ஏன் பன்னாட்டு விற்பனையில் முன்னிலை பெற்றது என்பது சுலபமாகத் தெரிகிறது. பின்னர் வந்த, ரீகாவின் நாய்கள் (The Dogs of Riga-1992) மற்றும் வெண்ணிறப் பெண் சிங்கம் (The White Lioness-1993) ஆகிய இரு நாவல்களும், என்னளவில், இந்தத் தொடர் வரிசையில் சிறிதும் சோபிக்காத நூல்கள்; இவற்றில் பால்டிக் பகுதியிலோ, ஆஃப்ரிக்காவிலோ தேவைக்கதிகமான நேரத்தை மான்கெல் செல்வழிக்கிறார், அரசாங்க ஊழல்களும் (இது எரிக் ஆம்ப்ளர் நாவல்களைப் போன்றது) அல்லது சதிக்கொலையும் (ஃப்ரெடரிக் ஃபோர்ஸைத் நாவல் போல), முடிவில் சற்று அபத்தமாகக் கூட இருக்கும் தடாலடி வீரச் செயல்களும் வருகின்றன. ஊர் சுற்றிப் பயணம் போகத் தனக்கிருந்த ஆசைகளை இப்படி ஓரளவு தீர்த்துக் கொண்ட மான்கெல், அடுத்ததாக, தன் தொடரின் களத்தை மறுபடி உள்ளூருக்கே கொண்டு வருகிறார், இது ‘புன்னகை செய்த மனிதன்’ (The Man Who Smiled- 1994) என்ற நாவல். ஒரு ஸ்வீடிய பன்னாட்டு நிறுவனத்தை கதைப் பொருளாக்கும் இந்த நாவல் ஓரளவு ஸ்டீய்க் லார்ஷொனின் ‘ட்ராகன் உருப் பச்சை குத்திய பெண்’ (The Girl with the Dragon Tattoo) நாவலுக்கு முன்னோடியாக அமைகிறது.
தன் பாணியை நிலை நிறுத்திக் கொண்ட மான்கெல், தன் படைப்புகளில் சிறப்பான மூன்று நாவல்களை அடுத்து எழுதுகிறார்: தடம் மாறுதல் (Sidetracked- 1995), ஐந்தாவது பெண் (The Fifth Woman-1996) மற்றும் ஓரடி பின்னே (One Step Behind-1997) ஆகியன அவை. இவற்றில் ஒவ்வொரு குற்ற நிகழ்ச்சியிலும், இந்தக் காவல் துறைக் குழு, ஒரு தொடர் கொலையாளி மற்றொரு கொலை நடத்துமுன் அவனைக் கைப்பற்ற வேண்டிய கால நெருக்கடியால் தீவிரமாக இயங்க வேண்டிய நிலை. யாருக்கும் போதுமான தூக்கமே கிட்டுவதில்லை: வலாண்டெர் இரவில் ஒன்றிரண்டு மணி நேரத்துக்கு மேல் தூங்க முடியாமல் அவதிப்படுவது முடிவே இல்லாமல் தொடரும் நடப்பாக இந்தப் புத்தகங்களில் வருவது, இவற்றுக்கு ஒரு தனிப்பட்ட இறுக்கத்தையும், இழை நயத்தையும் கொண்டு வருகிறது. இந்த முக்கொத்து நாவல்களில் கடைசியானது, நம்மால் தாங்கமுடியாத எதிர்பார்ப்பு நிலையைக் கொணர்கிறது, அந்தக் குழுவினர் ஒவ்வொருவரும் தவறுகள் செய்யத்தொடங்குகிறார்கள், எளிய காரணம்தான், மிகவும் களைத்திருக்கிறார்கள். கடைசிப் பக்கங்களில், இந்த நாவல்களில் எதிலும் கொலைகாரர்கள் சாகசமாகச் சுட்டுக் கொல்லப்படுவதெல்லாம் நடப்பதில்லை. மாறாக, காவல் நிலையத்துக்குக் குற்றவாளிகளை மிகவும் களைத்துப் போயிருக்கிற வலாண்டெர் இழுத்து வந்து தள்ளுகிறார்.
நெருப்புச் சுவர் (Firewall- 1998) நாவலில் மான்கெல் பன்னாட்டுக் களத்துக்குத் திரும்புகிறார், இது கணினியால் நடத்தப்படும் சூழலிய பயங்கரவாதம் பற்றியது. புத்தகம் நன்கு துவங்கினாலும், தெளிவு தொலைந்து, நேர்த்தியற்று அமைக்கப்பட்டதாகி விடுகிறது. வலாண்டெர் தொடர்ந்து கணினிகளைத் தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று குறைப்பட்டுக் கொண்டே இருக்கிறார், ஒருக்கால் அவரைப் படைத்த எழுத்தாளருக்கும் அப்படித்தான் இருந்தது போலும்.
ஓர் இடைவெளி தேவையாகி விட்டிருந்தது. ஏழு வருடங்களாக, வருடத்துக்கு ஒரு புத்தகம் எழுதிய பிறகு, மான்கெல் வேறு செயல்திட்டங்களில் ஈடுபட்டிருந்தார், கூடவே இந்தத் தொடரை வேறு எங்கு செலுத்துவது என்றும் யோசித்திருக்கிறார். நடந்ததென்னவென்றால், தொடரின் கடைசி நூலான நொந்திருந்த மனிதன் (The Troubled Man-2009), நன்றாக உருவாக்கப்பட்டு, காத்திரமான இறுதிக்கட்டத்து முடிச்சவிழ்ப்பு கொண்ட உளவுக் கதையாக அமைந்திருந்தது. ஆனால் முந்தைய பத்தாண்டில் வெளியான மூச்சடைக்கும் வேகம் கொண்ட மர்மக் கதைகள் போலன்றி இது சில நேரங்களில் மெதுவாக ஊர்கிற கதையாக இருந்தது.
வெற்றி பெற்ற மர்மக்கதைத் தொடர் ஒன்றை நிர்வகிப்பது கடினமானது, அதுவும் குறிப்பாக அந்தக் கதைகள் பரவலாக ரசிக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர்களாகவும் ஆகிற போது சிக்கல் கூடுகிறது. (வலாண்டெர் பாத்திரத்தைத் திரையில் ஏற்று நடித்தவர்கள் ரோல்ஃப் லாஸ்கார்ட், க்ரிஸ்டர் ஹென்ரிக்ஸொன், கென்னத் ப்ராநா, மேலும் ஆடம் பால்ஷொன்.) ஹென்னிங் மான்கெல், ஜான் சாண்ட்ஃபோர்ட், மேலும் மைக்கெல் கானெலி, அனைவரும் கடைசியில் தம் துப்பறிவாளர்களின் மகள்களை நோக்கி- லிண்டா வலாண்டெர், லெட்டி டாவென்போர்ட், மேலும் மேடி பாஷ்- அவர்களையும் தமக்கான தனி ஆளுமை கொண்ட துப்பறிவாளர்களாக ஆக்குகிறார்கள். மான்கெல்லைப் பொருத்த மட்டில், லிண்டா வலாண்டெரை மையமாகக் கொண்டு உருவாகவிருந்த ஒரு புதுத் தொடர், ஸ்வீடிஷ் தொலைக்காட்சிக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தொடரில் லிண்டா வலாண்டெராக நடித்திருந்த யொஹான்னா ஸேய்ல்ஸ்ட்ரம் என்ற நடிகை, தன் முப்பத்தி இரண்டாவது வயதில் தற்கொலை செய்து கொண்டதால், திடீரென்று முடிக்கப்பட்டு விட்டது. த கார்டியன் செய்தித்தாள், “அந்த நடிகரின் சாவிற்குப் பிறகு, மான்கெல்லால் லிண்டாவை வைத்து இன்னொரு நாவல் எழுத முடியவில்லை, தன் துக்கமும், குற்ற உணர்வும் மிகவும் அதிகமாக இருந்தன என்கிறார்.” என்று தெரிவித்தது.
***
இங்கிலிஷ் மூலம்: ஈதன் ஐவர்ஸன் எழுதிய இந்தக் கடிதக் குறிப்பு, த த்ரீபென்னி ரிவ்யூ என்கிற காலாண்டிதழில் 2024 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்து இதழில் (இதழ் 179) பிரசுரமானது.
தமிழாக்கம்: மைத்ரேயன் (செப்டம்பர் 2024)
கட்டுரை – 2 ஃப்ராய்டியத்தின் நோக்கில் தப்பி ஓடுதல் பற்றி…

ஏதோ ஒன்றிலிருந்து விலகி ஓடும் மனிதர்கள், வேறு ஏதோ ஒன்றை நோக்கியே ஓடுகிறார்கள் என்று எழுபதுகளில் உளநிலை பகுப்பாய்வாளர் மைக்கெல் பாலிண்ட் எழுதிய போது, இன்றைப் போல அப்படி ஒரு தேய்வழக்காக அது ஆகி இருக்கவில்லை. ஃப்ராய்டியத் தற்காப்புகளைப் பற்றி இன்று பரவலாக இருக்கும் சில புரிதல்களுக்கு எதிராக, தப்பித்துப் போதலின் அவசியத்துக்கு மாறாக, அதன் நற்பயன்களை பாலிண்ட் முன்னிறுத்தினார்- அதாவது தப்பித்தல் என்பதில் உள்ள உணர்வு பூர்வமான அறிவுத் திறத்தை எடுத்துக் காட்டினார். எதார்த்தமாகப் பார்த்தால், மரபு வழி ஃப்ராய்டிய ஆய்வாளர்கள், எது தவிர்க்கப்பட்டது என்பதில்தான் பெருமளவு கவனத்தைக் குவித்தனர், அப்படித் தப்பும்போது மொத்த முயற்சியில், எது கிட்டியது, எது கண்டு பிடிக்கப்பட்டது என்பதில் அல்ல. தப்பி ஓடுதல் என்பது ஒரு வித உத்வேகத்தைக் கொணரக் கூடும் என்று பாலிண்ட் சுட்ட முனைந்திருக்கிறார். நமது தப்பும் முனைப்பு, நமது சாதுரியமான கண்டுபிடிப்புத் திறனின் ஒரு பாகம்தான், உயிர் பிழைத்து வாழவோ அல்லது நம் விருப்ப வாழ்வை நாம் அடையவோ நாம் கைக்கொள்ளும் பல வழிகளில் ஒன்றே. ஏதோ ஒன்றிலிருந்து விடுபடுவது நமக்கு அவசியமாக இருக்கையில், சுய-சிகிச்சை முறையாகத் தப்பித்துப் போவதையே முனைப்பாகக் கொள்வது எல்லா நேரமும் நல்ல முடிவைக் கொணராது; தப்பித்துக் கொள்பவர் செய்வது ஏதும் சாகசமல்ல. அது ஒருவருடைய மாற்று இயல்பு, நம் இரண்டாம் குணம். (ஃப்ராய்டியக் கேள்வி ஒன்று உண்டு, ஆனால் இது அதிகம் கேட்கப்படும் கேள்வி இல்லை, இது ஆடெனின் பிரசித்தி பெற்ற கேள்வி, “கேடயம் ஓர் ஆயுதமா?”)
நம் அச்சங்களோடு போராடுவதில்தான் எல்லாவற்றையும் நாம் கற்றுக் கொள்கிறோம் என்பதே நாயகராக வாழும் விதம் என்று நாம் கற்றுக் கொள்கிறோம். மாறாக, அபத்தமாக, எதிர்பார்ப்புக்கு மாறாகவே நிறைய நடக்கிற வாழ்வில் நம் அச்சங்களிலிருந்து- நம் ஆசைகளிலிருந்தும்தான் – தப்பிக்க நாம் முயல்கிறபோது, நாம் என்ன கற்றுக் கொள்வோம் என்பது நமக்கு ஒருபோதும் தெரிவதில்லை. உளப்பகுப்பாய்வில், மக்கள் தமது தப்பித்தல் முயற்சிகளில் சாமர்த்தியசாலிகளாகவும், சற்றேறக் குறைய தைரியமுள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் அவர்களே தம்முடைய நிஜமான இயல்புகளிலிருந்து தப்பித்து ஓடுபவர்களாக இருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது. (மனிதன் தன்னுடைய சொந்த ஆசைகளிலிருந்தே தப்பிக்க விரும்பும் மிருகம் என்று லகான் சொல்லியிருக்கிறார்.) மற்ற மிருகங்களைப் போலன்றி, இடைவிடாத ஆசைகளாலும், அவர்கள் வாழும் வெளி உலகாலும் போஷிக்கப்படுவதை விட, துன்புறுத்தப்படுவதே அதிகம் என்று மனிதர்கள் விவரிக்கப்பட்டார்கள். தவிர்க்கமுடியாதவையும், தாங்க முடியாதவையுமான பலவகைப் பசிகளிடமிருந்தும், அவற்றிலிருந்து எழுகிற தாங்க முடியாதவையும், தவிர்க்க முடியாதவையுமான மோதல்களிலிருந்தும் அவர்கள் தப்பி ஓடுகிறார்கள். இது ஆதிப் பாவத்தையும் விட மோசமானது, ஏனெனில் இது வெறும் அடிபணிய மறுப்பிலிருந்து வருவதல்ல, அல்லது வேறெந்தத் தேர்வு அல்லது விருப்பத்திலிருந்தும் வருவதும் அல்ல, மாறாக மனிதர்களின் தன்னியல்பிலிருந்து வருவது, அதாவது ஃப்ராய்டும், அவருடைய சீடர்களும் மனித இயல்பு என்று நினைப்பதிலிருந்து வருவது. உளப்பகுப்பாய்வியலில் தப்பிப்பது என்பது பலவிதமாக அழைக்கப்பட்டிருக்கிறது- ஒடுக்குதல், உன்னதம் நாடுதல், இடம் மாற்றுதல், அச்சம், உடைத்தல், வக்கிரமாதல், குற்ற உணர்வு கொள்ளல், அவமானப்படுதல் இத்தியாதி அவை – ஆனால் பிழைத்து வாழ அது அவசியமாயிருந்தது. அது ஒன்றுதான் கிட்டக் கூடிய நடப்பாக இருந்தது. சூழலுக்குத் தக்கபடி மாறுவது என்பதற்கு மாற்றுச் சொல்தான் தப்பித்தல்.
உள்புறத்தில் உள்ள அச்சங்களை எதிரில் உள்ள பொருட்கள் மீது செலுத்துவதன் மூலம் அவற்றிலிருந்து நாம் தப்பிக்க வழி கிட்டும் என்ற கருத்து, உதாரணமாக, புற வீச்சு என்று கருதப்பட்டது. என்னுள்ளே இருக்கும் ஆக்ரோஷத்தை, புறாக்கள் மீதான அச்சமாக என்னால் மாற்ற முடிந்தால், நான் செய்ய வேண்டியது எல்லாம் எளிதாகிறது, ஒன்று புறாக்களைத் தவிர்ப்பது அல்லது அவற்றை எல்லாம் கொல்வது. வெளி உலகை எத்தனை குழப்பமுள்ளதாக ஆக்க முடியுமோ அத்தனையாக ஆக்குவது- அதாவது நம் உள்ளே இருக்கும் பேரச்சங்களை வெளி உலகுக்குள் துரத்துவது – பின் அதைக் கட்டுக்குள் கொண்டு வர முயல்வது (அதாவது உலகை அழிக்க முயல்வது இல்லையென்றால் அதிலிருந்து தப்ப முயல்வது.) ஃப்ராய்டிய மனிதன் (நல்ல காரணங்களாலும், மோசமான காரணங்களாலும் மனிதரை இப்படி ஒரு பெயரால் அழைப்பது அன்று வழக்கத்தில் இருந்தது) தான் தொடர்ந்து செயல்பட முடிபவனாக இருக்கப் பயன்படுத்திய பல சாதுரியமான உத்திகளில் ஒன்றுதான் புற வீச்சு. தப்புதல் என்பதை அனேகரும் அறிவர், அதுதான் மனிதருக்குக் கற்றுக் கொடுக்கப் பட்டது, ஏனெனில் அப்படித் தப்ப வேண்டியன பல சூழலில் இருந்தன, இதுவேதான் மனித வாழ்வைப் பற்றிய ஃப்ராய்டியக் கதையாக இருந்தது. மனப்பிரமை சார்ந்த இந்த சித்திரிப்பில், மனிதர் தம் வாழ்விலுள்ள மிக நிஜமான அபத்தத்தை மறைத்து விடப் பன்னெடுங்காலமாக முயன்று கொண்டிருந்திருக்கிறார்கள்: அனைத்து மிருகங்களிலிருந்தும் விலகிய தனியொரு மிருகமாய், தான் என்னவாக இருக்கிறோமோ அதிலிருந்து தப்பிக்கவே முயலும் பிராணியாக மனிதர் ஆன அபத்தம் அது, உயிர் பிழைத்திருந்து, நம் சந்ததிகளை உருவாக்கிக் கொண்டு வாழ்ந்து இருப்பது என்ற முக்கியமான செயலைச் செய்வதற்கு வேண்டிய சௌகரியங்கள் இல்லாமல் வாழும்படி ஆக்கிக் கொண்ட அபத்தம் அது. அர்த்தமற்ற அச்சத்தோடு வாழ்தலின் அபத்தமும், பயங்கரமும் பற்றி ஏற்றுக் கொண்ட ஒரு மனப்பிரமை சூழ்ந்த வாழ்வு அது.
துன்பப்படுவதைத் தவிர்ப்பது புத்தியுள்ள செயல்தான் என்றாலும், தப்பித்தல் பற்றிய இந்த உரையாடலில் உளப்பகுப்பாய்வியல் சேர்த்தது என்னவென்றால்- வரலாற்றில் பதிவான மிக நீளமான உரையாடல்களில் இதுவும் ஒன்று- நாம் இதேபோலவோ அல்லது இதை விட அதிகமாகவோ நம்முடைய மகிழ்ச்சிகளிலிருந்தும் தப்ப விரும்புகிறோம் என்பதுதான். ஏன் அப்படி என்றால், ஏதாவது அல்லது யாரோ நமக்கு மகிழ்ச்சியூட்டினால், நாம் அந்த ‘மகிழ்ச்சியால்’ திக்குமுக்காடிப் போகலாம், அல்லது மகிழ்ச்சிக்கு ஆதாரணக் காரணமாக உள்ளதை மிகவும் வேண்டுகிறவர்களாகி விடலாம், அல்லது அந்தக் காரணத்துக்கு முழு அடிமையாகிவிடலாம். (மே வெஸ்ட்டைப் போல ’நல்ல பொருள் ஒன்று ஏராளமாகக் கிடைப்பது நல்லதுதான்’ என்று ஃப்ராய்ட் கருதவில்லை.) மிருகங்கள் எல்லாம் தம்மைப் பாதுகாத்துக் கொள்வது உயிர் பிழைத்திருக்கத்தான்; மனிதப் பிராணிகள் மட்டும்தான் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதை முதலாகக் கொண்டு மற்றெல்லாவற்றையும் -உயிர் பிழைத்தலையும், பாலின்பத்தையும் கூட விட்டு வைக்காமல் சேர்த்து- திரஸ்கரிக்கத் தயாராக இருக்கிறார்கள். அச்சத்தோடே நிரந்தரமாக வாழும் பிராணிகளாக மனிதர்களைக் காட்டும் உளப் பகுப்பாய்வின் இந்தச் சித்திரிப்பு, இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு நமக்குக் கிட்டிய கருத்துப் பாரம்பரியம் என்பதில் வியப்பு ஏதும் இருக்கவியலாது. (அதன் பிறகு அன்றாட வாழ்வும் முடிவேதும் இன்றி, கத்தி விளிம்புத் தத்தளிப்பாகவே இருப்பதையும் நினைவில் கொள்வோமாக.) அப்படி ஓர் அழிப்புக்குப் பிறகு பாதுகாப்பு என்று எதை நாம் கருத? தற்காப்பு என்பது ஏன் மிக விரும்பப்படும் ஒன்றாக ஆகாது?
நம்முடைய மாற்று இயல்பாக தப்பித்து ஓடுதல் ஆவதில் என்ன பிரச்சனை என்றால், ஏதொன்றையும் நன்கு கவனிப்பது நமக்கு இயலாததாக, ஏற்காததாக ஆகி விடுவதுதான். எப்போதும் வெளியேறும் வழி எது, எங்கே உள்ளது என்று கவனிப்பதும், அதன் மீதே விழி வைத்திருப்பதும் நமக்குப் படிந்து விட்டால், அறையில் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க நமக்கு நேரம் போதாமல் போய்விடும். எச்சரிக்கையாக இருப்பதில் உச்ச நிலையிலேயே எப்போதும் இருந்தால், எதையும் ஆழ்ந்து உள்வாங்குவது சாத்தியப்படாது; அதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய கருத்து. ‘இன்ப நாட்டத் தேட்டைக்கு அப்பால்’ என்ற புத்தகத்தை எழுதுகையில் ஃப்ராய்ட் சொல்கிறார், “தூண்டுதலிலிருந்து காத்துக் கொள்ளுதல் என்பது எப்போதுமே தூண்டுதலைக் கவனிப்பதை விடக் கூடுதலான முக்கியத்துவம் பெறுகிறது.” நம் வாழ்வில் ஏராளமானவற்றிலிருந்து விலகிப் போவதற்கு நாம் அரும்பாடு பட வேண்டியிருக்கிறது என்று சுட்டுகிறார் அவர். எவற்றிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதை ஒட்டியே நம் வாழ்வை நாம் அமைத்துக் கொண்டிருக்கிறோமென்றால், அவை நிஜத்தில் எப்படிப் பட்டவை என்று அறிவது நமக்கு அவசியமாகிறது – ஏனெனில், நாம் எவற்றை மிகவும் வேண்டுகிறோமோ, எவை நமக்கு மிகுந்த சந்தோஷம் தருகின்றனவோ, அவற்றிலிருந்து தப்பிக்கத்தான் நாம் மிகவும் விரும்புகிறோம் என்பதையே ஃப்ராய்ட் தொடர்ந்து சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார்.
நம்மைத் துன்புறுத்தும் எதையும் தவிர்க்க நாம் முயலத்தான் வேண்டும், ஆனால் அவைதான் நிஜமாகவே நம்மைத் துன்பத்திலாழ்த்தும் பொருட்களா/ விஷயங்களா என்பதைச் சரியாக அறிவதில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் நாம் ஆக வேண்டி இருக்கிறது. ( அதாவது, தப்புதல் என்ற பெயரில் (வீண்) பழி சுமத்தலைச் செய்ய நமக்கு எழும் ஈர்ப்பில், அதன் கிளர்ச்சியில், சிக்காமல் இருப்பது அவசியம்.) அத்துடன், நம் மகிழ்வுகளிலிருந்து விலகவே நாம் விரும்புகிறோமா என்பதும், எங்கே அதைச் செய்வது என்பதை நாம் மறுபரிசீலனை செய்வதும், நமக்கு சாத்தியமாக இருக்க வேண்டும். தப்பித்தல் என்பது மோசமான அனிச்சை மறுவினை, கெட்ட பழக்கம். ஆனால், உளப்பகுப்பாய்வு நமக்குத் தொடர்ந்து சுட்டுவதன்படி, நாம் அதிகமாக விரும்புவது அதைப் பற்றிப் பேசுவதைத்தான். அதற்கு ஓரளவு காரணம், எதிர்பாராத விதமாக அது பயன் தருவதாக ஆகக் கூடும் என்பதுதான்.
இங்கிலிஷ் மூலம்: ஆடம் ஃபிலிப்ஸ்
தமிழாக்கம்: மைத்ரேயன்
மொழி பெயர்ப்பாளரின் குறிப்பு: இந்த இரு குறிப்புகளின் மூலக் கட்டுரைகள், தப்புதல் பற்றிய ஒரு கருத்தரங்கிற்குப் பலர் அளித்த கட்டுரைக் குறிப்புகளில் கிட்டியவை. இந்தக் கருத்தரங்கிலிருந்து சில கட்டுரைகள் ஒரு தொகுப்பாக ‘த த்ரீபென்னி ரிவ்யூ’ என்ற காலாண்டுப் பத்திரிகையில் 2024 ஆம் ஆண்டின் இலையுதிர்கால இதழில் பிரசுரமாயின. அந்தத் தொகுப்பிலிருந்து இரு கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து மொழி பெயர்த்திருக்கிறேன். த த்ரீபென்னி ரிவ்யூ பத்திரிகைக்கும், இரு கட்டுரையாளர்களுக்கும் என் நன்றி.
- ஹென்னிங் மான்கெல் ஒரு குற்றப் புனைவெழுத்தாளர். வேறு வகை நாவல்களையும் எழுதி இருக்கிறார். அவற்றை விட குற்றப் புனைவுகள்தாம் இவருக்கு அதிகப் பிரக்கியாதியைக் கொணர்ந்திருக்கின்றன. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். 1980-2010 கால இடைவெளியில் இவர் நாவல்கள் மேற்கு யூரோப்பிலும், இங்கிலிஷ் பேசும் நாடுகளிலும் துரிதமாகப் பரவி நிறைய விற்றன. வாலாண்டெர் என்ற ஒரு துப்பறிவாளரை (காவல் துறையைச் சேர்ந்தவரும் கூட) மையப் பாத்திரமாகக் கொண்ட தொடர் நாவல்கள் குறிப்பாக நிறைய படிக்கப்பட்டன. அந்தப் பாத்திரத்தை வைத்து சில தொலைக் காட்சித் தொடர்களும் உருவாக்கப்பட்டன. ஓரிரு திரைப்படங்கள் கூட வெளியாகின. (https://en.wikipedia.org/wiki/Wallander_(film_series)
2. நோர்டிக் க்ரைம் ஃபிக்ஷன் – என்பது மூலத்தில் உள்ள வர்ணனை. இந்த நோர்டிக் என்ற சொல்லுக்குப் பொருளை கூகிள் தேடல் கொடுத்து விடும். இருந்தாலும் இங்கு ஒரு சுருக்கக் குறிப்பு தருகிறேன். நோர்டிக் என்பது வடக்கு யூரோப்பிய என்ற பொருள் தரும். அதில் குறிப்பாக ஐஸ்லண்ட், நார்வே, ஸ்வீடன், ஃபின்லண்ட், டென்மார்க் மற்றும் ஃபாரோ தீவுகள் கொண்ட நிலப்பகுதியை நோர்டிக் நாடுகள் என்று சொல்கிறார்கள். ஸ்காண்டிநேவிய என்ற ஒரு சொல் இதோடு தொடர்பு கொண்டது. ஸ்காண்டிநேவிய நாடுகள்- நோர்வே, ஸ்வீடன், டென்மார்க் ஆகியன. இதர மூன்று நிலங்கள்- ஐஸ்லண்ட், ஃபின்லண்ட், ஃபாரோ தீவுகள் சேர்க்கப்பட்டால் மொத்தமாக அவை நோர்டிய நாடுகள் என்றாகின்றன.
3. உளவியல் என்பதை இங்கிலிஷில் சைகாலஜி என்று நாம் அறிகிறோம். உளநிலைச் சிகிச்சை முறைகள் (ஆய்வு முறைகள்) பல வகைத்தானவை இருக்கின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் சமமான தமிழ்ச் சொற்கள் இருக்கலாம், எனக்குத் தெரிந்தவை குறைவு. சைகோ அனாலிஸிஸ் என்ற சொல்லுக்கு நேரான பொருள் தரும் தமிழ்ச்சொல் ஏதும் இருப்பதாகத் தெரியாததால் உளநிலை பகுப்பாய்வாளர் என்று கொடுத்தேன். தக்க சொல் கிட்டும்போது இதை மாற்ற உத்தேசம். இப்போது அமெரிக்காவில் பயன்படும் சில சிகிச்சை முறைகள் பற்றிய தகவலை இங்கே காணலாம்- https://www.apa.org/topics/psychotherapy/approaches இவற்றில் சிலவற்றுக்கு வெவ்வேறு அகராதிகளில் சொற்கள் கிட்டுகின்றன. ஆனால் எல்லாவற்றுக்கும் கிட்டவில்லை.
4. Original Sin என்ற இங்கிலிஷ் சொல்லுக்கு நிகர் இந்தச் சொல். ஒரிஜினல் ஸின் என்பது கிருஸ்தவ நம்பிக்கையில் ஒரு மூலாதாரக் கூற்று. திரு. ஆகஸ்டீன் (ஒகஸ்டீன் என்றும் உச்சரிப்பு உண்டு) இந்தச் சொல்லை உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. ஆதம் (மற்றும் ஏவாள்) பரமபிதாவின் ஆணையை மீறியதிலிருந்து எல்லா மனிதருக்கும் தொடர்வதாகக் கருதப்படும் பாவம் இது.
5. இந்தச் சொல் எளிதானாலும், சிறிதாவது தடுமாறச் செய்யும் மொழிபெயர்ப்பு. உளவியல் துறையில், இதர பல ஆய்வுத் துறைகளைப் போலவே, நிறைய துறை சார்ந்த சிறப்புச் சொற்கள் உண்டு. மனிதச் சமூக வாழ்வோடு ஒட்டிய உறவு கொண்ட ஆய்வுத் துறை என்பதால் இதில் வாழ்வில் நாம் பயன்படுத்தும் பல சொற்கள் சிறப்புச் சொற்களாகவும் ஆகின்றன. Projection என்பது எளிய சொல்தான். இங்கு அது ஒரு குறிப்ப்ட்ட அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதை ஆய்வாளர்கள் பயன்படுத்தும்போது அக உலகில் உள்ள சில உணர்வுகளை மனிதர் புற உலகப் பொருட்கள் மீதான உணர்வாக மாற்றிக் கொண்டு விடுகிறார்கள் என்ற பொருளில் பயன்படுத்துகிறார்கள். எனவே புற வீச்சு என்று சுருக்கியிருக்கிறேன். (மொழி பெயர்ப்பாளர்) சில அகராதிகள் புறவீச்சம் என்று கொடுக்கின்றன. வீச்சம் என்ற சொல்லுக்கு ‘வாடை’ என்றும் பொருள் உண்டு. அதனால் அதைத் தவிர்த்து வீச்சு என்றாக்கியுள்ளேன். வீசல் என்பதையும் கருதலாம்.
6. மே வெஸ்ட் என்பவர் ஒரு அமெரிக்க நடிகை. இவர் துவக்க கால ஹாலிவுட் படங்களில் புகழ் பெற்றவராக இருந்தார். தானே கதை எழுதி, இயக்கி, தயாரித்து படங்கள் வெளியிட்டிருக்கிறார். இவர் அன்றைய கட்டுப்பெட்டித்தனங்களை உடைத்த நாயகிகளாக, இதர பெண் பாத்திரங்களாகவும் நடித்தவர். இவர் பேசிய சில வசனங்கள் அல்லது பொதுவில் உதிர்த்த சில குறிப்புகள் இன்றும் மேற்கோள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. (https://www.goodreads.com/author/quotes/259666.Mae_West) இங்கு சுட்டப்படுவதும் அப்படிப்பட்ட ஒரு குறிப்புதான். ‘Too much of a good thing is wonderful’ என்று அவர் சொன்னது மேலைப் பண்பாட்டுச் சரிதத்தில் வழக்காக இருந்த ஒரு கருத்தை நகைப்புடன் உடைத்தது. வழமையான அந்தக் கருத்து, ‘Too much of a good thing can be bad’ என்பது. இதன் மூலமாக ஈசாப்பின் நீதிக்கதை ஒன்று கருதப்படுகிறது. அதை இங்கே பெறலாம்: https://fablesofaesop.com/the-flies-and-the-honey-pot.html இதன் இன்னொரு வடிவை ஷேக்ஸ்பியரும் சொன்னதாகக் கருதப்படுகிறது. மிக அதிகமாக எது இருந்தாலும் அது நல்ல விளைவை விட துன்பத்தையே கொணரும் என்ற கருத்து பல பண்பாடுகளிலும் உள்ளதுதான். தமிழிலும் ‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்’ என்ற குறள் நினைவுக்கு வரலாம்.
7. Beyond the Pleasure Principle – Sigmund Freud என்பது இந்தப் புத்தகம்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

வணக்கம், உங்கள் கட்டுரைக்கு நன்றி. இக்கட்டுரையை வாசித்த பின் “தி த்ரீபென்னி ரிவ்யூ” இதழ்களின் மற்றைய பழைய இதழ்கள் அவர்களின் வலைபக்கத்தின் ” ரீடிங் ரூம்” பகுதியில் இலவசமாக வாசிக்க கிடைக்கிறது என்பதை கண்டு உற்சாகமாகிவிட்டேன்.உங்கள் கட்டுரை ஓரு புதிய திறப்பை காட்டியுள்ளது, மிக்க நன்றி.