எண் என்ப

செளரியைப் பார்த்தவுடன் அவன் இயல்பினன் இல்லை என எனக்குப் புரிந்தது. பத்து வயதுச் சிறுவனின் விளையாட்டுத்தனம் இல்லை. வெளிர் நிறத் தோல். முன்னே விழும் முடி நெற்றியைத் தாண்டி கண்ணை மறைத்தது. சிவப்பான கண்கள் எப்போதும் நீர்மையுடன் இருந்தன. தூசி ஒவ்வாமை இருக்கலாம். கோவிலின் தவில் மற்றும் நாதஸ்வரம் மட்டுமே அவனுக்குப் பிடிக்குமாம். பஸ் ஏற மாட்டான், காரில் ஓட்டுனர் பக்கத்தில் உட்கார மாட்டான், எஞ்சினை நிறுத்தியப்பின்னர் தான் எந்த வண்டியிலும் ஏறுவான். அக்காவுடன் ரோலர் கோஸ்டரில் செல்ல மாட்டான். ஆனால் சிரித்தால் முகத்தில் பொலிவு வரும். என்னால் அதை விவரிக்க முடியாது. கணக்குக் கேள்விக்கு விடை அளிக்கும்போது அது இன்னும் பிரகாசம் ஆகும். பிரிந்திருந்த தாயைப் பார்த்த குழந்தை போல் முகம் மலரும். பகா எண்களைப் பார்த்து சிரிக்கும் ஒரே பிள்ளை அவன் மட்டும் தான். அதைப் பார்க்கவே மேலும் கடினமான கணக்குகளைக் கொடுப்பேன்.

கும்பகோணத்தில் நான் தங்கியிருந்த அறையை அவனது அப்பா எப்படிக்கண்டுபிடித்தார் எனக் கேட்கவில்லை. நான் வந்ததை சாஸ்த்ரா கல்லூரி மாணவர்களிடன் சொல்லி இருப்பார்கள். செளரியின் கணித சமன்பாடுகள்தாங்கிய புத்தகத்தை முன்னரே படித்திருந்தேன். ஆச்சர்யமான கண்டுபிடிப்புகள் சில இருந்தாலும், நவீன கணிதத் துறையின் பல நூறு பிரிவுகளில் சந்தித்திராத கேள்விகள் என எதுவும் இல்லை. அவனுக்கு அறிமுகம் இல்லாத துறையிலும் கூட சில தனித்துவமான விடைகளை அடைந்திருந்தான்.

‘இன்னும் எதுவும் ஸ்கூலில் சேர்க்கலையா? மூணு மாசத்துக்கு முன்னாடியே கடிதம் கொடுத்திருந்தேனே?’

‘இல்லைங்க. அவனால் மற்ற பாடங்களில் ஃபோகஸ் செய்ய முடியலை. எப்பப்பார்த்தாலும் கணக்கு தான்’

நான் புத்தகத்தை மீண்டும் புரட்டினேன். ஃப்ராக்டல்ஸ் இயலில் முப்பரிமாண உருக்களைப் பற்றி அவன் எழுதி இருந்ததைப் பார்த்ததும் புரட்டுவதை நிறுத்தினேன்.

‘செளரி, இந்த த்ரீ டைமென்ஷன் வெக்டரின் பதில்களை கம்பியூட்டரில் இன்னும் வேகமாகப் ப்ரொக்ராம் பண்ணலாம் தெரியுமா?’

ம் ம் எனத் தலையாட்டினான். பதில் சொல்லவில்லை. கணினி அவனை ஈர்க்கவில்லை எனப்புரிந்தது.

‘சார், ராமானுஜன் காலம் இல்லை சார் இது. இப்போ கணித வரைவுகளையும், ப்ரூஃப்களும் கம்ப்யூட்டர் ப்ரொக்ராமிங்கில் செய்யறாங்க. அடிப்படை மெத்ஸ் மாறலை. இந்த க்ரியேட்டிவிட்டி இன்னும் அவன் தான் யோசிக்கணும். ஆனால் கம்பியூட்டரின் போட்டு வைத்தால் பலரும் படித்து கருத்துசொல்லி பல பயன்பாடுகளை உருவாக்க முடியும்’

செளரியின் அப்பாவுக்குப் புரிந்தது போலத் தெரியவில்லை.

‘சார் அவனது மூளை ரொம்பவே வித்தியாசமா செயல்படுது. ஆனால் அதை யூஸ் செய்ய கணிதத்தில் பல புதிய துறைகள் வந்துவிட்டன. இன்னிக்கு நடக்கும் கணித ஆய்வுகளுக்கு பல துறை அறிவு வேணும். நீங்க ஒன்னு செய்யுங்க. அடுத்த வாரம் சாஸ்த்ரா கல்லூரியில் ராமானுஜன் விருது இருக்கு. அங்க வாங்க.’

அவர் துரத்திவிடுவதாக நினைத்துக்கொண்டார். ‘வர்றோம் சார். ஆனால் இவனுக்காக மேத்ஸ் மட்டும் படிக்கும்படி உங்க டாடா இன்ஸ்டிட்யூட்டில் கோர்ஸ் இருந்தால்..லெட்டர்ல சொல்லியிருந்தீங்க. அதுக்கு என்ன செய்யணும்’

சொன்னதைச் செய்யாமல் இப்படி வந்து கேட்பது எனக்கு எரிச்சலை உண்டாக்கியது. ‘சாஸ்த்ரா கல்லூரிக்கு வாங்க சார். செளரிக்கு ஆர்வமுள்ள சில துறை வல்லுனர்களை அறிமுகப்படுத்தறேன். அங்க வாங்க’

*

சக்கரபாணிக்கோயிலின் நிர்மால்ய பூஜைக்குப் பின்னான மார்கழி மணி அடித்து முடித்ததும் எழுந்து உட்கார்ந்தேன். தூரத்தில் ரயில் கடந்து செல்லும் சத்தமும் கேட்டது. தஞ்சாவூர் செல்லும் ரயிலாக இருக்கலாம். தெரியலை. சிறுவயதில் அதிக சத்தம் இருந்தது போல நினைப்பில்லை. அப்போதெல்லாம் குளத்தின் சலசலப்பு கூட இங்கு கேட்கும். மார்கழி பஜனைக்கான தயாரிப்புகள் தெருவில் கேட்டன. வீட்டு வாசல்களில் நீர் தெளிக்கும் சத்தம். மெதுவாக எழுந்து முன் அறைக்கு வந்தேன். முந்தினம் மிச்சம் வைத்த சாப்பாடு கழுவாமல் மேஜையில் இருந்தது. அதைத் தூக்கிக் கூடையில் வீசினேன். ஜன்னல் வழியே தெரிந்த வானம் இன்னும் முழுவதும் பிரகாசிக்கவில்லை. கருநீல வானில் ஆங்காங்கே சில வெளீர் பொட்டுகள். விருட் விருட்டென பறவைகள் கூட்டமாகப் பறந்தன. சில அரைவட்டப்பாதையில் சுழன்று கோயில் உச்சிக்கு விரைந்தன. அந்தப் பறத்தலில் அப்படி ஒரு நேர்த்தி. ஒரு வரைபடத்தில் விருட்டென மேலேறிச் செல்லும் பாதை கிட்டத்தட்ட சுருக்கமான வழி. கோபுரத்தின் உயரத்தில் ஒன்று, மூன்று ,ஐந்து என உச்சி வரை சிறு இடைவெளி இட்டிருந்ததை இப்போது கவனித்தேன். அந்த இடைவெளி பகா எண்களை நினைவு படுத்தியதும் உடனே ஆடம் ஹார்பர் என் நினைவுக்கு வந்தான்.

இன்று மாலை நான்கு மணிக்கு ராமானுஜன் அரங்கில் விருது விழா. இன்று சாஸ்த்ரா ராமானுஜன் விருது ஆடமுக்குக் கொடுக்கப்போகிறார்கள். செளரியுடன் அவனது அப்பாவை மட்டும் போகச் சொல்லி இருந்தேன். நேற்று மாலையிலிருந்து மனதில் ஒரு குழப்பம். பல வருடங்களாக வர வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்த விழா. வந்தால் பாரம் கூடுமென சில வருடங்கள் வராமல் கழித்தேன்.

ஆடமுக்கு விருது கிடைப்பதற்கு ஒருவிதத்தில் நானும் காரணம். தேர்வுக்குழுவினருக்கு அந்த வருடத்துக்கானத் தேர்வை ஊர்ஜிதப்படுத்த என்னை போல அதே துறையில் இருப்பவகளிடம் கேட்பார்கள். அப்படி ஒரு நாள் எனக்கு வந்த அஞ்சலில் ஆடம் ஆய்லரும் அவரது பங்களிப்பு பற்றியும் ஒரு குறிப்பு இருந்தது. ரெண்டு வருடங்களுக்கு முன்னர் என்னுடன் அவன் இணைந்து வேலை செய்த நிகழ்தகவு எண்கணித ஆய்வு, எண்கணிதத் துறையில் ஒரு முக்கியமான நகர்வு. அந்த வருடத்துடன் எனக்கு வயது வரம்பு கடந்துவிட்டதால் இன்னும் 32 முடிய நான்கு மாதங்கள் இருக்கும் கணக்கில் ஆடமுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஆடமும் நானும் ராஜானுஜனைப் பற்றிப் பேசாத நாளில்லை. 32 வயதுக்குள் ராமானுஜன் அடைந்த உச்சத்தை நாங்கள் தடைகளைத் தாண்டி ஆய்வுக்குள் செல்லும் ஒவ்வொரு கணத்திலும் நினைத்து மலைத்திருந்த காலம் அது.

மாலை விருது துவங்குமுன்னர் செளரியை ஆடமுக்கு அறிமுகப்படுத்துவதைத் தவிர அவ்விருது விழாவுக்குப் போவதற்கு எனக்கு எந்த காரணமும் இல்லை. ஒரு விதத்தில் அதை நான் புறக்கணிக்க வேண்டும். ஆனால் சாஸ்த்ரா நிர்வாகக்குழுவின் தலைவர் எனது நண்பர். தவிர்க்க முடியாது.

கதவைத் திறந்து வாசலில் கால்வைத்ததும் ஈரத்தரை சிலீர் என உறைத்தது. வெறுங்காலை ரெண்டு முறை உதறியபோது அங்கு சில எறும்புகள் விலகி வேறுபாதையில் சென்றன. அரையிருட்டில் ஒரு பஜனைக் கூட்டம் நான் இருந்த வீட்டைக் கடந்துசென்றது. தூரத்தில் ஆட்டோ சத்தம். குளத்தைச் சுற்றியிருந்த நாலாவிதமானக் கடைகளும் திறந்திருந்தன. தெரு முனையில் இருந்த டீக்கடையிலிருந்து வரும் பாடலை நான் ஏர்போட்டிலிருந்து வந்த டாக்ஸியில் கேட்டிருந்தேன். என்னைச் சுற்றியிருந்த சகல சத்தங்களையும் உள்வாங்கிய நான் மற்றவர்களுடனும் பிறவற்றுடனும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட நான் தான். இவை எதுவுமில்லாமல் கணிதத்துடன் கழித்த பல இரவுகளில் இருந்த நான் வேறு ஒருவன். அதற்கு இருத்தலும் பாதுகாப்பும் அவசியமற்றது. இப்போதிருந்த நானோ என் காலடியில் அடிபடாமல் செல்லும் எறும்புகளை கவனித்துக்கொண்டிருந்தேன். பஜனைக்கூட்டத்தின் பாடல் என்னைக் கடந்து சென்றது. நான்கு நான்கு வரிகளாக அந்தாதிப்பாடல். மிகத் திறமையாக அடிகோர்த்து தாளத்துடன் வரிகள் இணைந்திருந்தன. ரூபமும் அரூபமும் எனச் சொல்லிக்கொண்டேன். முன்னர் அவர்களுடன் சேர்ந்து நானும் முணுமுணுத்திருப்பேன். ஆச்சர்யமாக இருந்தது என்னைச் சுற்றி நடக்கும் எதுவும் சலனமில்லாமல் கடந்துசெல்லும்படி விட்டிருந்தேன்.

எறும்புகளுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. சீராகச் சென்று படியின் பிளவுக்குள் சென்று மறைந்தன.

**

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் வெயில்காலக் கூட்டத்தொடருக்கான சிறப்புரையாற்ற ஆறு மாதங்களுக்கு முன்னர் வந்திருந்தேன். எல்லோரும் கேட்கும் கேள்வியிலிருந்துதான் அவர்களும் தொடங்கினார்கள்.

‘துளியும் உபயோகமில்லாத அரூப கணிதக்குறிப்புகள் எதற்காக உருவாக்கப்படுகின்றன? அப்படி ஒரு கணித இயலால் என்ன பயன்?’ 

அவர்கள் மீது தவறில்லை. பெரும்பான்மையானவர்கள் இன்று பயன்மதிப்பு உள்ள பாடங்களை மட்டுமே படிக்கிறார்கள் என்பதை அறியாத கிறுக்கன் அல்ல நான். எண்கணித அரூப வடிவங்கள் பற்றிய ஆய்வு செய்யும் என்னை நோக்கி வராத கேள்வியல்ல இது. அப்படி ஒரு கடினமான ஆய்வில் இருந்தாலும் இந்திய கல்வித்துறையின் முறைமைகளை நெருக்கமாக அறிந்துள்ளேன். அரூப மிகைமை சொல்மிகைமை இரண்டுக்குமான சுமையை தின வாழ்வில் சந்திப்பவன். ஆய்வு மாணவர்களின் திறன் நாளுக்கு நாள் குறைந்து வருவதை நேரடியாக வெளிப்படுத்தும் கேள்விகள்.

அப்பெண்ணின் சந்தேகங்கள் அவளது முகக் கோடுகளில் வழிந்திருந்தன. ‘ ஆம், அரூப கணித இயலால் பயன் ஒன்றும் இல்லை. அதாவது நேரடியாகப் பயன் ஒன்றும் இல்லை. நீங்கள் பல தேர்வுகளில் கடினமான கணக்குகளுக்கு விடை கண்டுபிடித்திருப்பீர்கள். ஆய்வுகளுக்கு அவை மிகவும் முக்கியம். ஆனால் என்றைக்காவது கணிதத்தின் பல உள் அமைப்புகளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி எண்ணிப்பார்த்ததுண்டா?’

‘எந்த மாதிரி தொடர்பு சார்?’

‘சாதாரண எண் கணிதத்துக்கும், ஜியோமெட்ரிக்கும் உள்ள தொடர்பு பற்றி? அல்லது இமாஜினரி எண்ணுக்கும் நம்மைச் சுற்றி இருக்கும் உலகுக்கும்?’

‘ஈக்வேஷன்கள் கொண்டு கிராஃப் வடிவங்கள் செய்ய முடியும். அது மாதிரியா?’

‘இல்லை. இதுக்கு பதில் சொல்ல முடியுமா பாருங்க. ரெண்டு எனும் எண்ணை உங்களால் காட்ட முடியுமா? ரெண்டு ஆப்பிளைக் காட்டக்கூடாது. எண்கள் எல்லாமே அப்ஸ்ட்ராக்ட் தானே? அது மாதிரி தானே இமாஜினரி எண்களும்?’

கூட்டத்தில் யாரும் பதில் சொல்லவில்லை. ‘ எண்கள் எல்லாமே அப்ஸ்ட்ராக்ட் தான். ஆனால் இன்றைக்கு அவை அடிப்படையாக அமையாத துறைகள் இல்லைனு உங்களுக்குத் தெரியாதா? ஆனால் நாம் கேட்க வேண்டிய கேள்வி அதில்லை. அரூப எண்களையோ கணிதத்தையோ எப்படி உண்மைக்கு அருகே நாம் வைத்தோம். நீங்க படிச்சிருப்பீங்கல்ல, எண் என்ப ஏனைய எழுத்தென்ப, இந்த குறள்ல எண்ணும் எழுத்தும் நம் கண்கள்னு இருக்கு. ஆனா அதில் முக்கியமான வார்த்தை – ஏனைய. எண் என்பது ஒருவித அறிதல். அரூப அறிதல். அதே போல, ரூபங்களை சுட்டிக்காட்ட எழுத்து. ரூபம் மற்றும் அரூபங்கள் ரெண்டும் தனித்தனியே உண்மைப்பொருளைச் சுட்டிக் காட்டுது. இதுதான் உண்மை எனும் முழுமையை உயிருக்குக் காட்டும் வழி என வள்ளுவர் சொல்வதா எடுத்துக்கலாம். நம்மால் சென்சரி திறன் கொண்டு ரூபங்களை உணர முடிவது போல அரூபத்தையும் அறிய முடியும். எவ்விதமான அனுமானமும் இல்லாமல். இதில இன்னொன்னும் இருக்கு – உயிருக்கு என பொதுப்படையா வேற சொல்லி இருக்கார். மனிதனுக்கு மட்டுமல்ல, இந்த அரூப உண்மை பிற உயிரினங்களும் உணரும் ஒரு உண்மை நிலை. இயற்கையும் இந்த அரூப எண்ணாலான உலகத்தால உருவான ஒன்று தான்’

மாணவர்கள் மட்டுமல்லாது நான் சொல்வதை அங்கிருந்த பிற ஆசிரியர்களும் கவனிக்கத் தொடங்கினர்.

‘உங்க யுஜி பிரக்ராமில் பல பயணங்கள் போயிருப்பீங்க. விலங்கியல், தாவரவியல், பெளதிகம், இப்படி எல்லா துறைக்கும் ஃபீல்ட் டிரிப் இருக்கு. கணிதத்துக்கு ஏன் இல்லை?’

‘கல்லூரியில் அதை பாடமாக மட்டுமே படிக்கிறோம். அவை கற்பனை தானே’

‘உண்மை என்னன்னா அப்படி ஒரு பாடத்திட்டம் தான் உங்களுக்கு இருக்கு. அதான் ஃபீல்ட் டிரிப் போவதில்லை. சாரி, உங்களை மட்டும் சொல்றேன்னு எடுத்துக்காதீங்க. எல்லா கணிதத்துறையிலும் இதான் சிக்கல். இயற்கையில் இல்லாத கணித வடிவங்களும், ஒளித்து வைத்த சூத்திரங்களும் எவ்வளவோ இருக்கே! ஒரு சூரியாகாந்திப்பூவில் இல்லாத ஃப்ராக்டல்ஸ், ரோஜாவில் இல்லாத பகா எண் மொட்டுக்கள் வேற எங்க இருக்கு? ராணி தேனியின் கூட்டில் பகா எண்களின் படி ஒரு அமைப்பே உருவாகியிருக்கும் தெரியுமா?’

‘ஆய்வுக்கு இவை பயன்படும் சார். ஆனால் தேர்வுக்கு இல்லை. உங்களுக்குத் தெரியாதா?’ , என கணிதத்துறை ஆசிரியர் முன் வந்து பதில் சொன்னார்.

‘உண்மை தான் சார். இதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் இதை உணரும் மாணவர் நம்மிடையே இருந்தால்? அதோட முக்கியமா இவற்றை மட்டுமே உணரக்கூடியவர்கள் நம்மிடையே இருந்தால், நம்மால் அவர்களுக்கு வழி காட்ட முடியுமா? பொதுவாகக் கேட்கிறேன். கணிதத்தில் மட்டும் சிறப்பாக சிந்திக்கும் மாணவர்களுக்கு சாஸ்த்ரா கல்லூரியில் இடம் கிடைக்குமா? கணித மேதை ராமானுஜன் அவர்களைக் கொண்டாடும் இருக்கும் இக்கல்லூரியில் அதற்கு வழி உண்டா? அப்படிப்பட்ட சிறப்புத் தகுதி கொண்ட மாணவருக்கு நம் கல்வி திட்டத்தில் இடம் என்ன?’

கூட்டத்தில் சலசலப்பு இருந்தாலும் யாரும் பதில் சொல்லவில்லை. நான் எதிர்பார்த்ததுதான். இத்தனை வருடங்களாகப் பழகி வந்தாலும் ஆசிரியர்களும் எவ்விதமான புது சிந்தனைகளோடும் இல்லாதது எனக்குப் பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியது.

‘இதைப் பற்றி விவரிக்க நம்ம கூட ராமானுஜன் இல்லை. மஞ்சுள் பார்கவ் எனும் கணித ஜீனியஸ் பற்றி கேள்விபட்டிருக்க மாட்டீங்க. அங்கிருந்து தொடங்கி உங்க கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமான்னு பார்க்கிறேன்.’

**

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல நான் சென்றிருந்த எந்த கல்லூரி மற்றும் பள்ளியிலும் மிக அரிதாகவே சிலரைக் கண்டுபிடிக்க முடியும். முதன் முதலாக மஞ்சுள் பார்கவ் வந்திருந்தபோது மும்பாயில் இதைப் பற்றிப் பேசினோம். அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருந்தார்.

‘கணித உலகின் ப்ளூ ஐய்ட் பாய்’, இப்படித்தான் அவரை பல்கலைக்கூடத்தில் அறிமுகப்படுத்தினார்கள். அவரைத் தெரியாதவர் கணித உலகில் யாரும் இல்லை. இன்ஃபோஸிஸ் விருது, ஃபீல்ஸ்ட் விருது என வாங்கிக்குவித்தவர், ஐன்ஸ்டீனுக்கு இணையான சாதனையாளர் என அறியப்பட்டவர். அவரை சந்திக்கும் வரை எனக்கு மாணவர்களுடன் உரையாடுவது பற்றிய ஆர்வம் அதிகம் இல்லை. அவற்றிலிருந்து என் ஆய்வுக்காக எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என நினைத்திருந்த காலம். இந்தியாவில் கல்வித்துறையும் கற்றுக்கொடுக்கும் முறை பற்றிய ஒவ்வாமை எனக்கு இருந்தது. தேர்வுக்காகவும், பிரபலமான கல்லூரிகளில் சேருவதற்காக மட்டுமே வாசிப்பும் சிந்தனையும் உள்ளது எனும் நம்பிக்கை இந்திய சமூகத்தில் ஆழமாகப் பதிந்திருந்ததில் எனக்கு அதிருப்தி இருந்தது. யாருக்கும் போதனை செய்யும் இடத்தில் நான் இருக்கவில்லை. என் ஆய்வுக்கான வழிகள் குறித்த தெளிவும், பிற ஆய்வாளர்களுடனான போட்டியும் மட்டுமே என்னை கணித வல்லுநராக டாடா இன்ஸ்டிடூட்டில் நிலைக்க வைத்திருந்தது. எல்லாமே மஞ்சுளை சந்திப்பதற்கு முன்னர் வரை மட்டும் தான்.

டாடா இன்ஸ்டிடூட்டின் கேண்டீனில் முதல் முறை மஞ்சுள் பார்கவாவைப் பார்த்தேன். அவரோடு சில பொது கூட்டங்களில் அறிமுகம் இருந்தாலும், அவரது ஆய்வுகளை மிக ஆழ்ந்து கற்றிருந்தாலும் அவரை சந்திக்கும் போது ஏதோ ஒன்று என்னை நெருக்கவிடாமல் தடுத்தது. முதலில் அவரை பார்வையைத் தவிர்க்கப்பார்த்தேன். என் தட்டை மும்முரமாக ஸ்பூனால் துழாவிக்கொண்டிருந்தேன்.

‘ஹாய், இந்த இடத்தில் நான் உட்காரலாமா?’ என அவரது குரலைக் கேட்டதும் புதிதாகக் கேட்டது போல ‘ஹலோ! ஷுர்’ என எதிரில் இருந்த நாற்காலியைச் சுட்டிக்காட்டினேன்.

நன்றி சொல்லி அவர் உட்கார்ந்த பின்னரும் பேச்சை எப்படித் துவங்கது எனத் தயங்கினேன்.

‘ முந்தாநாள் மீட்டிங் முடிந்தபின் உங்களைத் தனியே சந்தித்து உங்கள் ஆய்வு பற்றி பேசனும் என நினைத்தேன். நீங்கள் கிளம்பிட்டீங்க’ எனச் சிரித்தார்.

அவர் முகத்தில் இருந்த இனிமையான சிரிப்பு என் தயக்கங்களை உடைத்தது.

‘காரம் அதிகம். பிரின்ஸ்டனில் கிடைக்கும் இந்திய உணவை இதோடு ஒப்பிட்டால் ஏதோ ஏலியன் சாப்பாடு போல இருக்கு. ஊரில் இதுவரை சாப்பிட்டதெல்லாம் இந்திய உணவு எனச் சொல்லமுடியாது’, எனச் சிரித்தார்.

‘ஆமாம், உலக இந்திய சுவை எனப் புது வகையே யு எஸ்ஸில் உண்டே! ஆனால் அதுக்கும் எங்க உணவுக்கும் தொடர்பே கிடையாது’

மஞ்சுள் சிரித்தார். ‘உண்மை தான். எப்போதாவது இங்கு வருவதால், அசல் இந்திய உணவு தான் வயிற்றை கலக்கிவிடும்’

அவர் சாப்பிடும்போது தான் நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட சம வயதுதான் என்பதை உணர்ந்தேன். ஆனால் அறிவில் முதிர்ந்தவராக அவர் இருப்பது போலத் தோன்றினாலும் தோற்றத்தில் மிகு இளைஞராக இருந்தார். இந்தச் சிறு வயதில் அவர் சாதித்தவற்றை யோசித்துப்பார்த்தேன். கணித உலகில் அவருக்குக் கிடைக்காத பரிசுகள் அல்ல. ஃபெர்மட் சூத்திரத்தை நிரூபணம் செய்த ஆண்டிரூ வேஸின் பிரதான மாணவர். இளம் கணித ஐன்ஸ்டீன் எனும் பட்டம். வெற்றியடைந்த நான்.

‘உங்கள் ஆய்வுக்கட்டுரைகளை நான் வாசித்துள்ளேன் . குறிப்பாக அரூப நிகழ்தகவு இயலில் நீங்கள் செய்த சிறப்பு எண் வரிசை’, மிகக் கச்சிதமாக என் துறை பற்றிக் கூறியது என்னை ஆச்சர்யப்படுத்தியது.

‘ஆம். சில வருடங்களுக்கு முன்னர் ஃபீல்ட்ஸ் பவுண்டேஷனில் சமர்ப்பித்திருந்தேன்’, எனச் சொன்னேன். குரலில் இருந்த பெருமையை என்னால் உணர முடிந்தது.

‘அது என் ஃபேவரைட்’, என முடித்தார்.

எப்படி அதை எதிர்கொள்வது எனத் தெரியாமல், நன்றி என முணுமுணுத்தேன்.

‘ என் குழுவின் சீனியர் ரோஜரும் நானும் அந்த சிறப்பு எண்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் ஒன்று வரும் என பெட் வைத்திருக்கிறோம். ப்ரைம் எண்கள் இன்று க்ரிப்டோகிராஃபியில் சக்கை போடுவது போல,’ என்றார்.

நான் அப்படி ஒரு பாராட்டை எதிர்பார்க்கவில்லை, அந்த சிறப்பு எண்களின் சில பிரத்யேகப்பயன்பாடு பற்றி டாடா இன்ஸ்டிடூட் மாணவர்களுடன் உரையாடியுள்ளேன் என்றாலும் மஞ்சுளிடமிருந்து பெற்ற பாராட்டு கொடுத்த சந்தோஷத்தை மறைக்க முடியவில்லை.

‘அதுக்கான சில பிரத்யேகமான பயன்பாடுகள் இருக்குன்னு தோணுது. குறிப்பா, குவாண்டம் கம்பியூட்டர் துறையில்’

‘இருக்கலாம். உண்மையில் டி ஐ எபஃப் ஆர் நிறுவனத்தில் அதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் உண்டு. ஆனால் அதன் உண்மையான பயன் இருக்கான்னு தெரிய நாளாகும்’

‘ஆகலாம். அப்படி நிரூபணம் ஆன பல வருடங்களுக்குப் பிறகு பயன்படுத்தப்படும் சூத்திரங்களை இப்போது பார்க்கிறோமே! உங்க ஊர் ராமானுஜன் இன்று நூறு வருடங்களுக்குப் பின்னால் எதேதோ துறைகளில் வலம் வருகிறாரே!’

‘அது உண்மைதான் மஞ்சுள். வாழும் காலத்தில் நம் கண் முன்னே பயன்பாடு தெரியவேண்டாமா? ஒவ்வொரு மேடை உரையிலும் ஆய்வு மாணவர்கள் கேட்கும் கேள்வியே இதுதான்.’

அதற்கு மஞ்சுள் பதில் சொல்லுமுன் எங்களருகே ‘ஹலோ ‘ என கணினித் துறையின் ஆய்வுத் தலைவர் சேர்ந்துகொண்டார்.

‘என்ன ரெண்டு கணித ஜீனியஸ்களும் க்ளே இன்ஸ்டிடூட் கொடுத்த கணக்குகளுக்கு நிரூபணம் கண்டுபிடித்து மில்லியனர் ஆகும் திட்டம் வெச்சிருக்கீங்களா?’

‘ஹலோ சார், நல்லா இருக்கீங்களா? என்னோட ஆசிரியர் கண்டுபிடிச்ச ஃபெர்மேட் நிரூபணத்துக்கே பணம் வரலையே’ என மஞ்சுள் சிரித்தபடி பதில் சொன்னார்.

‘அந்த ஏழு சிக்கல்களுக்கும் உங்க கிட்ட கண்டிப்பா தீர்வு இருக்கும். முயற்சி செய்யுங்க. மில்லியன் டாலர் எல்லாம் நம்மைப்போன்ற ஆய்வாளர்களுக்கு மிகவும் தேவை. யோசித்துப் பாருங்க, இன்னும் பல ஆய்வுகள் செய்யலாம். இந்த அரசுத் துறையில் பாலிசிக்களில் ஈடுபாடு காட்டி சிக்கிக்கொள்ளாதீங்க மஞ்சுள்’ எனக்கண்ணடித்தார் அவர்.

‘என்ன பாலிசி’?’

‘தெரியாதா உங்களுக்கு? 2019 ஆம் ஆண்டுக்கான நம் நேஷனல் எஜுகேஷன் பாலிசியை வடிவமைக்கும்படி மஞ்சுளுக்கு அரசு ஸ்பெஷல் போஸ்ட் கொடுத்திருக்கு. ஒரு வருட வருகை தரு பேராசியர் சம்பளம், பாலிசி கமிட்டியுடன் பயணம், எல்லாத்தோடும் கூட ப்ரின்ஸ்டன் வேலையில் பதவி உயர்வு, ஒண்ணுக்கு ஒண்ணு சளைக்காத சலுகைகள்’

‘ஓ பெரிய வேலை தான். கங்கிராட்ஸ்’ என நான் தோளைத் தட்டினேன்.

‘அட, என்ன சார் நீங்க வேற, நான் அதை எடுத்துக்காதீங்க. நம் பல்கலைக்கூடங்களும், கல்லூரிகளும், பள்ளிகளும் ஊழலில் மிதக்குது. நாய் வாலை நேராக்க முடியுமா? அதுக்கு பதிலா க்ளே இன்ஸ்டிடூட் கொடுத்த நூற்றாண்டுகால சிக்கல்களுக்குத் தீர்வில் வேலை செஞ்சா மில்லியனரா ஆகலாம்னு சொல்றேன், கேட்க மாட்டேங்கிறார்’, ஆய்வுத்துறை தலைவர் சொன்னதில் கொஞ்சம் பொறாமை தொனியும் இருந்தது.

மஞ்சுள் மிகவும் மெளனமாகச் சிரித்தபடி எங்கள் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்குள் எந்தளவு குழந்தைத்தனமான தேடல் இருக்கிறதோ அந்தளவு தெளிவும் தீர்க்கமும் இருக்கிறது என்பதை நான் உணர்ந்த தருணம் அது.

‘என்னிடம் உங்க அளவு மூளை இல்லாவிட்டாலும், உழக்கு மாடு போல முப்பது வருடம் அரசு ஆய்வுத் துறையில் வேலை பார்த்த அனுபவம் இருக்கு. அவ்வளவு தான் சொல்ல முடியும். உங்க நேரத்தை வீணடிக்காதீங்க. எனிவே, உங்களைத் தொந்திரவு செய்ய விரும்பவில்லை. கேரி ஆன்’, என துறைத் தலைவர் என் தோளைத் தட்டிவிட்டி நகர்ந்துவிட்டார்.

‘அவர் சொல்வதிலும் ஒரு உண்மை இருக்கே. நீங்க கனடாவில் பிறந்து வளர்ந்ததால் இந்திய அரசுத்துறையின் மெத்தனம் தெரியாமல் இருக்கலாம்’

‘உண்மை தான் வெங்கட். ஆனா என்னுடைய அனுபவம் வேற ஒண்ணைக் கத்துக்கொடுத்திருக்கு. இன்னிக்கும் என்னுடைய வகுப்பில் மிக எளிமையான உதாரணங்கள் கொண்டு தான் கடினமான கணித சூத்திரங்களையும் சொல்லித் தர்ரேன். என்னுடைய வகுப்பில் கார்ட் மேஜிக்கும், இயற்கையில் நம் முன் இருக்கும் கணித வடிவங்களும் தான் முதன்மையான சாதனங்கள். எப்படி இயற்பியல், ரசாயனத்தில் லேப் உண்டோ அது போல கணித சோதனைகள் தான் என்னுடைய ஆய்வு முறைகள். அவற்றை நிரூபணம் செய்ய அரூப கணித முறைமைகளை நான் கையாள்வேன். ஆனால் கணிதம் என்றாலே கற்பனையின் சித்திரங்கள் எனும் மாயையை என் கண் முன்னே பல நூறு மாணவர்களுக்கு உடைத்திருக்கிறேன்’

‘தெரியும். உங்க உரைகளில் அவற்றை சொல்லி இருக்கீங்க’

‘நம்மால் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று இதை கற்றுகொடுக்க முடியாது. ஆனால் ஒரு கல்வித்துறையின் மைய திட்டத்தை சற்று மாற்றும்போது அது பல நிறுவனங்களுக்கு மாதிரிகளாகச் செல்லும். ஒரே வருடத்தில் நடக்காவிட்டாலும், பத்தாண்டுகளில் சில மாற்றங்களை நம்மால் கொண்டுவர முடியுமே!’

என் சிந்தனைகள் எங்கோ வெளியிலிருந்து சற்று நெருங்கி வந்தது போலிருந்தது. நான் சொல்ல நினைத்ததை எத்தனை எளிமையாக இவரால் சொல்ல முடிகிறது! என்னைச் சுற்றி நானே ஒரு செயற்கையான சுற்றுச்சுவரை கட்டி வைத்திருப்பது போல இருப்பதாக உணர்ந்தது சற்றே தளர்ந்தது. என்னவென்று சொல்ல முடியாமல் ஒரு எல்லைக்கோட்டை உருவாக்கி இருந்ததும் அதிலிருந்து உருவான கசப்புகளும், முழுமையற்ற தேடலின் நிராசைகளாகவும் என் முன்னே இருந்துவந்ததை உணர்ந்தேன்.

**

நான்கு வருடங்களுக்குப் பிறகு நலந்தா கல்லூரி ஆண்டு துவக்க விழாவில் மீண்டும் மஞ்சுள் பார்கவாவைப் பார்த்தேன். மஞ்சுள் மேலும் மெலிந்திருந்தார். அவரது புன்னகை அப்படியே இருந்தாலும் கண்ணில் ஒரு சோகம் தெரிந்ததைத் தவிர்க்கப் பார்க்கும் சிரிப்பு.

‘உங்க கல்வி திட்டத்தை நேரடியா இன்ஸ்பெக்ட் செய்ய வந்தீங்களா?’

சொல்லி முடித்தபின் அவரது முகம் போன போக்கைப் பார்க்க முடியவில்லை. அவருடன் நீண்ட நேரம் விவாதம் செய்த நாட்கள் நிழலாடின.

‘ஆமாம், அந்த மாதிரி ப்ளான் செய்து சில இடங்களை விசிட் செஞ்சோம்.’

‘தபேலா, சீட்டுக்கட்டு எல்லாம் இன்னும் இருக்கா?’

‘அது இல்லாமையா? இப்போ சமஸ்கிரத கவிதைகளும் உண்டு. கடினமான கணித இயலை இன்னும் எளிமையாக்கும் பேட்டர்ன்ஸ் எல்லாம் தபேலாவிலும் மேஜிக் சீட்டுகளிலும் எளிமையாகச் சொல்ல முடியுது. உங்க ஊரில் கூட சில உஸ்தாதுகளை உருவாக்கிட்டேன்’

‘அது ஒரு கல்வி. அறிதல் முறை தானே. தனித்தபட்ட ஆர்வலர்களுக்கு உபயோகமா இருக்கும். ஆனால் இங்கு அரசு இயந்திரத்தில் இதையெல்லாம் எப்படி பார்க்கிறாங்க?’

சிறு உதட்டுப்பிதுக்களுடன் தொடர்ந்தார், ‘தபேலா வழி கடினமான கணக்குகளையும், சூத்திரங்களையும் இணைத்துச் சொல்ல முடியும். ஆனா அந்த அறிதல் வெறும் தகவல் மட்டுமல்ல. அதில ஒரு அழகு இருக்கு. ஒவ்வொரு எண்ணும் இன்னொன்றொடு கொண்டிருக்கும் தொடர்புக்குப் பின்னால் ஒரு ருசிகர பின்னல் இருக்கு. வெறும் மனப்பாட கணக்கு இல்லை. அந்த அழகை ஆழமாக்கும் சமஸ்கிரத பாடல்கள் உண்டு, அந்த சொல்லும் இசைக்கும் தொடர்பு மொழியில் உண்டு. அப்படி நிதானமா படிக்கும் முறை நம் கல்வி திட்டத்தில் இல்லை’

‘கனடாவில் உண்டா?’ சொல்லி முடித்தபின் என் கேள்வியில் தெரிந்த கேலி ஒலி எனக்கே அருவறுப்பாகத் தெரிந்தது.

இந்திய கேலிக்கு இன்னும் பழகியிராத மஞ்சுள் தொடர்ந்தார், ‘இல்லை. உலகத்தில் எங்குமே அதைச் செயல்படுத்த முடியாது. அப்படி நிதானமா அணுகக்கூடிய பாடத்திட்டம் எங்கும் இல்லை. அதுக்காகத்தான் நான் மாணவ குழுக்களைத் தனியா உருவாக்குறேன். கணக்கில் ஆர்வம் இருப்பவர்கள், மாணவர்கள், அவர்களது பெற்றோர் எனப்பலரும் வர்றாங்க. உங்க செளரி தான் என் பிரதான ஸ்டூடண்ட்’

நான் செளரியை மறந்திருந்தேன். சாஸ்த்ரா விருது விழாவில் செளரி ஆடமை சந்தித்த பிறகு நடந்தவற்றை நான் பின் தொடரவில்லை. என் ஆய்விலும் டாடா இன்ஸ்டிடூட்டின் நிகழ்தகவு மையத்தலைவராகவும் மிகவும் பரபரப்பாக இயங்கிய நாட்கள்.

‘அவன் எப்படி இருக்கிறான்? இந்த நேரம் மிகப்பிரலமானவனான ஆகியிருப்பான் என நினைத்திருந்தேன்.

‘பிரபலம் தான். எங்கள் சிறு உலகில் மிகப்பிரபலம். இன்னும் சில ஆண்டுகளில் எல்லாருக்கும் தெரிந்தவனாக ஆகும்படியான ஆய்வில் இருக்கிறான்’

‘ஃப்ராக்டஸ், லூப் தியரி என முன்னாடி அவனது ஆர்வம் பல திசைகளில் இருந்ததே’

‘இப்போ இல்லை. இந்த நான்கு வருடங்களில் அவனது பிராஜக்ட் அவனை விட பெருசா வளர்ந்தாச்சு!’

எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. இதிலும் நான் தவற விட்ட வாய்ப்பு என சுய குழப்பங்களுக்குள் போக விரும்பாவிட்டாலும், செளரி பற்றிய பேச்சை மாற்றிவிட விரும்பினேன்.

‘அவனுக்கு முக்கியமா தன்முனைப்பு அதிகப்படுத்தியது மட்டுமே எங்கள் பங்களிப்பு’ , இதைச் சொன்னபோது ஒரு கணம் தனியே தனக்குள் பேசிக்கொண்டிருந்த செளரி ஒரு கணம் வந்து சென்றான். இந்த வழிமுறை எனக்கு மனதில் ஏன் வரவில்லை என யோசித்தேன்.

‘கொஞ்ச நாளில் பாருங்க, அவனது கண்டுபிடிப்பு உங்களுக்கு வந்து சேரும்’

‘வெறும் கணிதம் மட்டும் தானே படிக்கறான்?’

‘ஆமாம் ஆனால் அது மட்டும் போதாது என்பதை நாம் கூட முன்னர் பேசினோம் இல்லையா? கம்பியூட்டர் ப்ரொக்ராமிங் கூடவே படிக்கிறான். லாஜிக், லாங்குவேஜ் மாடலிங் என பிற துறைகளும் உண்டு. ‘

‘மஞ்சுள், அது மட்டும் போதுமா? நம் சாஸ்த்ரா மீட்டிங்கை அப்பப்போ நினைத்துப் பார்ப்பேன். இன்னிக்கு இருக்கிற செயற்கை நுண்ணறிவு, லாங்குவேஜ் மாடல், நியூரல் நெட்வொர்க் எல்லாமே வெறும் கருவிகள் தானே. இவை தவறாக, மனித இருப்புக்கு சிக்கலாக மாறக்கூடிய நாள் தூரத்தில் இல்லை. நாம ஆய்வு செய்யும் துறைக்கு மேல கத்தி போல நியாயம், தர்மம் போன்ற பழைய மாடல்கள் தொங்கிக்கொண்டிருக்கு, இல்லையா? அப்படி ஒரு எதிக்ஸ் பூச்சு இல்லாம மாடர்ன் உலகம் மேல மேல புது கருவிகளைப் போட்டுக்கிட்டே இருக்கு’

ஏதோ ஒரு பழைய கதவைத் திறந்தபின் புது உலகுக்குள் புகுந்தது போல எனக்கு இருந்தது. என்னுடைய நீண்ட கால குழப்பங்களை ஓரிரு வாக்கியங்களில் கூறிவிட்டது போலவும். ஒரு பைத்தியக்காரனின் சொற்கள் திடுமென கனகச்சிதமாக உலகுக்குப் பொருந்திப்போவது போன்ற ஒரு நீண்ட பெருமூச்சு எனக்குள் எழுந்தது.

‘மஞ்சுள், இது சட்டமும், நீதியும் கொண்ட அமைப்பு அல்ல. அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம் என தமிழில் அனா ஆவன்னா எல்லாமே கூட ஒரு அற சூத்திரமாக சொல்லிக்கொடுப்பார்கள். அது போலன்னு மேலோட்டமா வெச்சுக்கலாம். ஒரு மொழியின் அடித்தளத்தில் இருக்கும் மீமொழி நேரடியாக நம் தர்க்கத்தோடு பொருந்திப்போகவேண்டிய அவசியம் இல்லை. என்றாலும், அது நம் ஆதார மனித அறத்தின் மீது கட்டப்பட்டிருப்பது அவசியம். அது தன்னியல்பா நம் அதர்க்க மனதுக்குப் புரிந்துவிடும். இன்று நம் அறிவியல் துறைகள் எல்லாமே அப்படி ஒரு தீவிரமான மாடல்களைக் கொண்டு நம் ஆழ் மனதைத் தொட ஆரம்பித்துவிட்டன. அவை நாம் மனிதனாக உணர வைக்கும் சாத்தியங்களைத் தக்க வைக்க வேண்டும். அப்படி ஒரு அமைப்பு நம் அறிவுத் துறைக்கு இருக்கா? நீங்களும் நானும் இதைத்தான் அடிப்படையா கொண்டு நம்ம ஆய்வுகளைச் செய்கிறோம். அந்த வெற்றிடத்தை நிரப்பத்தான் மறைமுகமா செய்யறோம். உங்களைச் சுற்றி உள்ள அரூப இசை வடிவங்கள், ரூபமான சமஸ்கிரத கவிதை எல்லாவற்றையும் கணித அமைப்புகளுடன் உங்களால் இணைக்க முடிகிறது. இப்படி பல துறைகளை இணைக்கும்போது மனிதர்களையும் அவர்களது பல வெளிப்பாட்டு சாத்தியங்களையும் இணைக்கிறீங்க. ஒருவிதத்தில் அதில் பிரிவினைக்கு இடம் இல்லை. உங்களுடைய தர்க்க மனம் கணிதத்தை வெற்று சூத்திரமாகப் பார்ப்பதில்லை. என் மனம் நிகழ்தகவு எண்களையும் மனிதவாழ்வின் சாத்தியங்களோடு பிணைத்துப் பார்க்கிறது. நம்மை மறைமுகமாக அலைக்கழிக்கும் கவலைகள் இவை தான். கணிதத்தை வெறும் சூத்திரமாக, வெல்ல வேண்டிய ஒரு சவாலாக நினைக்கும்போது அதன் பல தடைகளை நாம் நீக்கப்பார்க்கிறோம். இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகில் மனிதனுக்கு முன் செல்லும் வழியில் நம்மால் மட்டுமே சொல்லக்கூடிய சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது. அவை இரண்டும் இணைத்து இயங்கும் உலகில் அமையும் சமன்வயம் அழிவில்லாத உண்மைப்பாதையா இருக்கும்’

நான் பேசுவதை சற்று நிறுத்தினேன். மஞ்சுளின் முழு கவனமும் என் மீது இருந்தது.

‘நாம் செளரியை சரியான திசைக்கு கொண்டு செல்கிறோமா? இன்னும் அது நம்ம கையில் இருக்கா?’

இருவரும் ஒரே இடத்தில் இருந்ததாக அப்போது தோன்றியது.

****

டயமண்ட் ஹைபர்வே – கிபி 2124

ஸ்வரா இன்றும் தாமதமாக வந்திருந்தாள். ஹைபர்வேயின் கண்காணிப்பு விழிமிகள் அவளது ஊர்தியைச் சுற்றி வந்தன. ‘இன்றைக்கு ஹைபர்வே வரும் வழியில் பாதுகாப்பு சோதனை தீவிரமாக இருந்தது. வரும் வழியில் தாமதம் என குறித்துக்கொள்’, என்றாள். விழிமி அவளிடமிருந்து விலகிச் சென்றபின் கதவு திறந்துகொண்டது. டயமண்ட் பாயிண்ட் எனும் பகுதிக்குள் ஊர்தி நுழைந்து அவளுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்றது. அருகில் இருந்த கருப்பு நிறச் சுவரில் இருந்து வெளிப்பட்ட சுருள் ஒன்று ஊர்தியின் முன்பகுதியோடு பொருத்திக்கொண்டது. ஒரு சின்ன உதறலுடன் ஊர்தி சிவப்பு நிற ஒளியாக மாறியது.

கணிதா எனும் கட்டிடத்துக்குள் அவள் நுழைந்தாள். முதல் பார்வையில் ஒரே ஒரு அறை போலத் தெரிந்தாலும், ஸ்வரா நுழைந்த அறையிலிருந்து பல உள் அறைகள் தெரிந்தன. மிகப்பெரிய திரை முன்னர் இருந்த நாற்காலியில் அவள் உட்கார்ந்துகொண்டாள்.

ஸ்வரா ‘கனெக்ட்’ எனும் மின் செயலியை இயக்கினாள். ‘டீச்சர்’ எனும் செயலி பிற கணிதா செயலிகளுடன் இணைந்துகொண்டது. திரையில் தெரிந்த பல பச்சை நிற விளக்குகளையும் இடையே தெரிந்த சில சிகப்பு நிற விளக்குகளையும் பார்த்தாள். ‘ பரவாயில்லை, போன வாரத்தை விட அதிக நெட்வொர்கிங் உருவாகி இருக்கு. நைஸ்’ , எனச் சொல்லிக்கொண்டாள். பிற செயலிகளை விட டீச்சர் மிகத் துரிதமாக இயங்கும் தன்மை கொண்டது. உலகில் உள்ள பிற கணித குழுக்களோடு இணைந்தபடி ஒரு வலையை உருவாக்கி இருந்தது.

உருவாக்கி இருந்த கணித நெட்வொர்க்குகள் இன்னும் முழுமையாக இணையவில்லை. இன்னும் சிறிது நேரம் ஆகலாம்.

ஸ்வராவுக்கு இது மூன்றாவது வருடம். கணிதாவின் அமைப்புக்குள் ஆரம்பத்தில் ஒரு நிரல் நிபுணராக சேர்ந்திருந்தாலும், அவளது அம்மாவின் தளராத உந்துதலால் கணித உட்குழுவின் அனலிஸ்டாக ஆறு மாதங்களுக்கு முன் இணைந்திருந்தாள். முதல் சில வாரங்கள் வேலையை மிகவும் வெறுத்தாள். நிரலில் உருவாகும் சில ஸ்வாரஸ்யங்கள் டீச்சர் நெட்வொர்க்கில் இல்லை. நிரல் ஒரு உயிருள்ள ஆடுகளம். அவளது நிரல் பிற செயலிகளின் பதில்களை உள்வாங்கி மிக விரிவான உலகை உருவாக்கவல்லது. கணிதா எனும் அமைப்பு இதுவரை மானிட சாத்தியங்களில் உச்சகட்டமான கண்டுபிடிப்பு. எப்படி இணையம் பல கணினிகளின் தொடர்புகளைக் கொண்டு பரந்து விரிந்த ஒரு அமைப்பை உருவாக்கியதோ அதைவிடப் பல்லாயிரக்கணக்கான ராட்சசக் கைகளைக்கொண்டது கணிதா. ஒவ்வொரு நொடியும் மாறியபடியும் இருக்கும் அண்டத்தின் அனைத்து கணக்குகளையும் கண்காணித்தபடி இருப்பது மட்டுமே கணிதாவின் வேலை. அக்கணக்குகளைக் கொண்டு அண்டத்தின் ஆதரமான கேள்விகளுக்கு விடையை அடைய முற்படுவது அதன் அடுத்தக்கட்ட வேலை.

‘டீச்சர், நேற்றைய கணக்குகளின் அவுட்புட்டை எனக்குக் காட்டு’, திரையில் சாராம்சமான சில சூத்திரங்களும் அவற்றைக்கொண்டு உருவாக்கிய வடிவங்களும் தெரிந்தன.

நார்டன் சூத்திரம் கொண்டு அண்டத்தின் கருப்பு திடசக்தி, விரியும் அண்டத்தின் விளிம்புகளில் நடக்கும் சக்தி வெளியேற்றத்தின் மாற்ற நிலை, இழைக்கொள்கைப்படி உருவாகும் புது பரிமாணங்கள் எனச் சகலமும் எவ்வித திரிபும் இல்லாமல் இருந்தன. திரையை நகர்த்திப் பார்த்திருந்த ஸ்வராவுக்கு கொட்டாவி வந்தது. டீச்சர் உருவாக்கிய கணின அமைப்புகளுடன் தொலைநோக்கியிலிருந்து வந்த செய்திகளும் ஒத்துப்போயின. சில வருடங்களாகவே திரிபுகள் மாதத்துக்கு ஒன்றிரண்டு எனக் குறைந்திருந்தன. டீச்சரின் உலகலாவிய இணைப்புத் திறன் படி உருவான கணித சூத்திரங்களின் வெற்றி இது.

திரையின் ஓரத்தில் பார்க்கவ் ரோபாட் ஒன்று ஸ்வராவைக் கண்காணித்தபடி இருந்தது. அவளது ஒவ்வொரு நகர்வில் வந்த திரை மாற்றங்களைக்கொண்டு புது பாடத்திட்டங்களை அறிவித்தபடி இருந்தது.

‘ஸ்வரா, நாற்படை முடிச்சுகளின் சமன்பாடுகளை நீ இன்னும் சரியாகப்புரிந்துகொள்ளவில்லை எனத் தெரிகிறது. மேலும் வீட்டுப்பாடத்தில் நான்கு பகுதிகள் மட்டுமே முடித்துள்ளாய்’

ஸ்வராவுக்கு எரிச்சலாக இருந்தாலும், ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்யும் பார்க்கவுக்கு தெரியாத வண்ணம் மறைக்கத் தெரிந்திருந்தது.

‘ஆம் பார்க், இன்னும் ரெண்டு நாளில் முடித்துவிடுவேன். முப்படை சமன்பாடு கணக்குகளே இன்னும் சரியாக பிடிகிட்டவில்லை’

‘அதற்குத்தான் மேலும் சில சிறப்பு வகுப்புகளில் இணையச் சொல்லி செய்தி வந்திருக்குமே’

பதில் சொல்லாமல் திரையில் தெரிந்த தகவல்களைக் கொண்டு கோப்புகளைத் தயாரிக்கத் தொடங்கினாள். இப்போது தொடங்கினால் அடுத்த ரெண்டு மணி நேரத்தில் முடித்து அனுப்பிவிட முடியும். குற்றமில்லா வாரமாக அமையும்.

அறைக்கதவு வழியாகத் தெரிந்த நீச்சல் குளத்தில் யாரும் இல்லை. அவ்வப்போது சிறுகுமிழிகளும், மீச்சிறு அலை அதிர்வுகளும் தெரிந்தன. கண்வலிக்கும்போது அவள் அதைப் பார்ப்பாள்.

‘என்ன யோசனை. உன்னை புது வகுப்பில் மீண்டும் சேர்க்கச் சொல்லட்டுமா?’

பொதுவாக பார்க்கவ் ரோபாட்டை சீண்டிப்பார்க்கும் ஸ்வரா அன்றைக்கு அலுப்பில் இருந்தாள்.

‘வேண்டாம். இப்போது இருக்கும் வகுப்பிலேயே கேட்டுப்பார்க்கிறேன். டீச்சரோடு உட்கார்ந்தே வயதாகிவிடும் போலிருக்கு’

திரிபுகளும் ‘சிஸ்டம் மால்பங்ன்க்ஷன்’ எனச் சொல்லும் நாட்களும் அவளுக்குப் பிடித்தமானது. புதுவிதமான சிக்கல்களைத் தீர்க்கும் ஆர்வத்தில் அன்று நேரம் போவதே தெரியாது. புதுசாக எதையாவது கற்றுக்கொள் என பார்க்கவின் தொந்திரவும் இருக்காது. ஆனால் அப்படி சிக்கல் இருக்கும் நாட்கள் குறைவு. ஒரு சிறு கிராமம் போல டீச்சரின் சமூக அமைப்பு இருந்தாலும், ஒவ்வொருவரும் தனிதீவுகளாகவே செயல்படுவார்கள். கணிதா கட்டடத்தில் மட்டுமே இப்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட கணித வல்லுனர்கள் ஸ்வராவுடன் இணைந்து வேலை செய்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட எண்பது வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த திட்டம் இது. மஞ்சுள் பார்க்கவாவின் கனவுத்திட்டமாக இது தொடங்கியது. முன்னெடுத்த முதன்மை ஆய்வாளர் செளரியின் செயலாக விரிந்தது. ஆரம்பத்தில் இன்ஃபோசிஸ் எனும் கணினி சேவை நிறுவனம் மஞ்சுளுடன் இணைந்து செய்யத் தொடங்கினாலும், இந்திய கல்வியமைப்பின் செயல்திட்டத்தினுள் மாற்றத்தைக் கொண்டு வர முடியாததால், செளரி இதைத் தனியாகச் செய்யத் தொடங்கினார்.

முக்கியமான செயல்பாடாக அவரது மாணவர் செளரியின் கணிதா 1.0 கண்டுபிடிப்பு உருவானது. முதல் கட்டமாக கணித சூத்திரங்கள், அவற்றின் தேற்றங்கள், செயல்பாடுகள், செயல்படு முறைகள் எல்லாவற்றையும் லாம்டா எனும் மொழியில் உருவாக்கி இணையத்தில் உலவ விட்டார். பல புதிய சூத்திரங்களை கண்டுபிடிக்கும் சாத்தியங்கள் உலகின் பல மாணவர்களுக்கு உருவானது. அது மட்டுமல்லாது, பழைய தேற்றங்களில் இருந்த சிறு குறைபாடுகளைக் களையத் தொடங்கினர். ஆனால், கணிதாவின் முக்கியமான பங்கு என்பது உலகின் எல்லா மூலையிலும் இருந்த கணித ஆர்வலர்களை ஒன்று சேர்த்தது தான். மென்பொருள் மட்டுமல்லாது அது ஒரு உயிர் இயக்கமாகவும் உருவானது. கணிதாவின் அடுத்தடுத்த வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவும் பிற துறைகளின் கட்டமைப்புகளும் ஒன்று சேர்ந்தன. ஒருவிதத்தில் செளரியின் கனவுத்திட்டத்தின் முதல் கட்டமாக கணிதா 2 உருவானது.

செளரி கவனிக்காமல் விட்ட ஒரு அழிவு தன்னகத்தே உருவானது. கணிதா செயல்படுத்தத்தொடங்கிய தேற்ற உருவாக்க மாதிரிகள் மனிதர்கள் கண்டுபிடித்த சூத்திரங்களைத் தகர்த்ததோடு அவற்றின் எல்லைகளைக் கொண்டு உருவாக்கியவர்களின் முனைப்பை அழிக்க முற்பட்டது. பல கணிதா கிராமங்களை உருவாக்கி கணித ஆய்வாளர்களின் ஆரம்பகட்ட ஆய்வுகளை அதி வேகமாக வளர்த்தெடுத்து புது சூத்திரங்கள் மற்றும் தேற்றங்களுக்கு ஒரு நூலகத்தை உருவாக்கியது. அவற்றுக்கு ஆதாரமாக இருந்த கணிதவியளாலர்களின் உழைப்பைத் திருடி உருவாக்கியது எனும் குற்றச்சாட்டை அது பொருட்படுத்தவில்லை. செளரி உருவாக்கிய அடுத்த கட்ட ஆய்வாளர்களுக்கு மிக ஸ்திரமான வழக்கறிஞர்கள் உருவாகிவிட்டிருந்தனர். மெல்ல மனித மனம் உருவாக்கும் கணித தேற்றங்களின் எல்லைகள் உடனுக்குடன் தெரியத் தொடங்கியது. சிந்திப்பதற்கு நேரம் கொடுக்காமல் உடனுக்குடன் சில சூத்திரங்கள் காலாவதி ஆயின. ஆய்வாளர்கள் மத்தியில் மாபெரும் சோர்வை உண்டு பண்ணியது.

கணிதா 3.0 மேல்முறையீடற்ற முற்றதிகாரத்தைக் கொண்ட பல்லடுக்குத் தொடர்பு அமைப்பை உருவாக்கியது. அதுவரை தனியாகச் செயல்பட்டு வந்த கணின செர்வர்கள், கூட்டாக இயங்கத் தொடங்கின. ஜப்பான், அமெரிக்கா, கொரியா, இந்தியா எனப் பல கூட்டமைப்புகள் வழியாக ஆய்வாளர்கள் உருவாக்கும் கணித சூத்திரங்களும் திறமையான மாதிரிகளும் இயங்கத்தொடங்கின.

ஸ்வரா இயக்கும் கணிதா இவ்வகை சார்ந்தது. ஆரம்பகாலத்தில் சில குழப்பங்களை அவள் எதிர்கொண்டாலும் மெல்ல செளரி உருவாக்கிய நெட்வொர்க் அல்காரிதம் தானாகக் கற்றுக்கொள்ளத் தொடங்கியது. புது சாத்தியங்களை தனது பல்லூக்கக் கரங்கள் வழியாக உருவாக்கினாலும், ஒரு கட்டத்தில் கணித வல்லுனர்கள் வசமிருந்த தர்க்க சாத்தியங்களை மீறத் தொடங்கியது கணிதா. அவற்றைக்கொண்டு கணிதாவின் ஆய்வாளர்களும் புது உபயோகங்களை மனித விருப்பு சாரா கொள்கையின்படி உருவாக்கினர். போட்டியும் பொறாமையும் கூடிய வலைப்பின்னலாக அவ்வியக்கம் மாறியது.

ஸ்வரா இயக்கிய லாம்டா மொழி அவளது ஒவ்வொரு தட்டச்சின் சொல்லையும் அவதானித்து முன்கூட்டியே சில சூத்திரங்களைக் காட்டியது. ஒவ்வொரு வரியைத் தட்டச்சும்போதும் கணிதாவின் பலவித ஆணைகள் வழியே உலகின் ஆய்வாளர்கள் அவளது வரிகளைக் கொண்டு ஆரூடங்கள் கூறத் தொடங்கினர்.

அவள் எரிச்சலுடன் ஆஃப்லைன் சென்று யாருமற்ற தனித்த வெளித் திரையைத் தேர்ந்தெடுத்தாள். ஆன்லைனில் கணிதாவின் கண்காணிப்பு மட்டுமல்ல, பலவிதமான மனித ஆய்வாளர்களின் நேரடி நோட்டம் அவளது திரை மீது இருந்தது. அத்தொடர்பை அவள் நீக்கியதும் நிம்மதிப்பெறுமூச்சு விட்டாள். இனி மஞ்சுள், செளரி, கணிதா போன்ற எவ்விதமான ஊடுருவலும் அல்லாது கணித சூத்திரங்களும் தானும் மட்டுமே இருக்கமுடியும். பெருத்த ஆசுவாசத்தைத் தந்தாலும் ஆய்வின் வேகம் குறையும். அதனால் என்ன.

அவளும் கணிதமும் மட்டுமே இருக்கும் வெளியில் அவள் தட்டச்சத் தொடங்கினாள்.

அதே சமயத்தில் கணிதாவின் உலகில் புதிதாக உருவாகும் சூத்திரங்களை உடைத்து தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் மீமொழி அதன் ஆழமான நிரல் வலைக்குள் உருவாகத் தொடங்கியது.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

3 Replies to “எண் என்ப”

  1. சிறப்பாக வந்துள்ள கதை. ரூபம், அரூபம், பகா எண்கள், இயற்கையில் அமைந்துள்ள புலப்படா கணிதம், மஞ்சுள் பார்க்கவ், டி ஃப் ஐ ஆர், சௌரி என்று செல்லும் கதை, ஒரு கட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அறிவு, இன்றையத் தேவை என்பதைச் சொல்கிறது. மனிதன் வடிவமைத்த ஒன்று அவனை மீறுவதையும், கண்காணிப்பதையும், இயல்பாக அவனுக்குள்ள சிந்திக்கும் மற்றும் படைப்புத் திறனிற்கான வாய்ப்புகளை அது மறுப்பதையும் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். அந்த ‘நெட்வொர்க்’ வெல்வதும் கோடிடப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.