
இன்று கோகுலாஷ்டமி. அம்மா வெல்லச்சீடையும், முறுக்கும் செய்து கொண்டிருந்தாள். வீடு பூராவும் அதன் வாசம் பரவியது. கண்களை மூடி, மூச்சை உள்ளிழுத்து அனுபவிக்கத் தூண்டும் கை பக்குவம் அம்மாவுக்கு. மொறுமொறுவென்று வாயில் போட்டதும் அப்படியே கரைந்து விடும். சுரேஷிற்கு அம்மாவின் வெல்லச்சீடையும், முறுக்கும் ரொம்பவே பிடிக்கும். அம்மாவுக்கும், பாட்டிக்கும் வீட்டில் அவன்தான் செல்லப் பிள்ளை. அம்மா அவனுக்காகவே ஒருபங்கை எப்போதும் தனியே எடுத்து வைத்திருப்பாள். இன்றோடு அவன் வீட்டை விட்டு ஓடிப் போய் முப்பது வருடங்களாகிறது.
வீட்டில் நாங்கள் நான்கு பிள்ளைகள். என் அண்ணா கணேஷ், இரண்டாவதாக மகேஷ் என்கிற நான், அடுத்து சாந்தி. சுரேஷ்தான் கடைக்குட்டி. அவன் ஒரு ஹைப்பர் ஆக்டிவ் கிட். ‘பூதத்திற்கு தொடர்ந்து ஏதாவது வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும், இல்லை என்றால் அடித்துத் தின்றுவிடும்’ என்று பழைய கதைகளில் சொல்வார்களே, அது போல இவனுக்கும் ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் வீட்டில் ஏதாவது விபரீதம் நடக்கும். கொடுத்த எந்த வேலையையும் அக்கறையுடன் செவ்வனே செய்வான்.
அந்த காலத்தில் குளிக்க பெரிய வெந்நீர் அண்டா வீட்டில் இருந்தது. அதற்கு விறகு வாங்கிவர நாடார் கடைக்கு அவனைத்தான் அம்மாவும், பாட்டியும் அனுப்புவார்கள். காய்ந்த விறகாகப் பார்த்து தேர்ந்தெடுத்து கொடுத்து, விறகு வெட்டி முடிக்கும் வரை அங்கிருக்கும் பெரிய தராசில் விளையாடிக் கொண்டிருப்பான். வெட்டிய விறகை அடுக்கி, ஒரு ஆள் வண்டியில் இழுத்துக் கொண்டு வர, இவன் வண்டி பின்னாலே பிடித்துக் கொண்டு வருவான். புறக்கடை வழியாக வீட்டில் பின்புறமிருந்த லம்பர் ரூமில் போடும் வரை கவனித்துக் கொள்வான்.
வீட்டில் காபியை பொடியாக வாங்கிப் பழக்கமில்லை. காபி போர்டில் காபிக்கொட்டையை வாங்கி வீட்டிலேயே வறுத்து அரைத்து விடுவார் பாட்டி. ஆரம்பத்தில் பாட்டியுடன் போய் வந்த சுரேஷ், பிறகு தனியாகவே போவான். ப்ளாண்ட்டேஷன் A , B விகிதங்களை சரியாக சொல்லி வாங்கி வருவான். வறுத்து அரைக்க வீட்டில் மெஷின் இருந்தது. மெஷின் என்றால் மின்சாரத்தில் இயங்குவதல்ல. காபிக் கொட்டையை வறுக்க ஒரு உருளை இருந்தது. அதில் கொட்டையை போட்டு மூடி, தணலின்மேல் கையினால் உருளையை சுற்றிக்கொண்டிருக்க வேண்டும். ஓரே சீரான வேகத்தில் சுற்றினால் தான் எல்லா கொட்டைகளும் சரியான பதத்தில் வறுபடும். அந்த பக்குவத்தை சரியாக தெரிந்து கொண்டு, வாசத்தை நுகர்ந்து, “பாட்டி, போதும் சரியா வறுத்தாச்சு” என்று சொல்லி நிறுத்துவான். பாட்டி திறந்து பார்த்தால் எல்லா கொட்டைகளும் சரியாக வறுபட்டிருக்கும். “சமத்துடா” என்று பாட்டி கன்னத்தை தட்டுவார். பிறகு வறுத்த கொட்டைகளை அரைப்பதற்கு கிச்சன் ஷெல்ஃபில் ஒரு இயந்திரம் பொருத்தியிருக்கும். அதில் காபி கொட்டைகளை போட்டு பிடியை கையினால் சுற்ற வேண்டும். ரொம்ப நைஸாக அரைபடாமல் கொஞ்சம் கொற கொறவென்று இருக்க வேண்டும். அந்தப் பதம் பாட்டி, அம்மாவிற்கு பிறகு வீட்டில் இவனுக்கு மட்டுமே தெரிந்த கலை. செக்கில் போய் எண்ணை வாங்கி வருவது, மார்கெட்டிற்கு போய் பிஞ்சாக காய்கறிகளை பேரம் பேசி வாங்கி வருவது என்று எல்லா விஷயங்களும் அத்துப்படி அவனுக்கு
ஆனால் இவன் செய்யும் வீட்டு வேலைகளுக்கான கூலியை வசூலிக்காமல் விட்டதில்லை. தினமும் ஒரு ஆள் பால்பூத்திலிருந்து புட்டி பாலை வாங்கி எல்லார் வீட்டுக்கும் விநியோகம் செய்வார். அந்த காலத்தில் ப்ளாஸ்டிக் பாக்கெட்டெல்லாம் கிடையாது. பசும்பால், எருமைப் பாலுக்கு தனித்தனியாக சிகப்பு நீலக்கலரில் வரி வரியாக கோடு போட்ட மெல்லிய அலுமினிய மூடிபோட்ட புட்டியில் பால் வரும். வாசலில் வைத்திருக்கும் பால்புட்டியை திறந்து மடக்கென்று ஒரு வாய் குடித்துவிட்டு, திறந்த சுவடு தெரியாமல் மீண்டும் மூடியை மூடிவைத்து விடுவான். தினமும் இரண்டு இன்ச் குறைவாகவே புட்டியில் பால் இருப்பதைக் கண்டு, பால்பூத்தில் புகார் கொடுக்க வேண்டும் என்று அம்மா நினைத்தார். ஒருநாள் மூடியைத் திறந்து அவன் குடித்துக் கொண்டிருக்கும் போது கையும் களவுமாக பிடித்து விட்டார். “இந்தப் பூனை தான் தினமும் பால் குடிக்கிறதா?” என்று கேட்டு, முதுகில் பளாரென்று இரண்டு அறை கொடுத்தார். ஆனாலும் தினமும் பால் குறைவது என்னவோ நிற்கவில்லை. நாளடைவில் அம்மா சரி, அது அவனுடைய வீட்டு வேலை செய்வதற்கான கூலி என்று விட்டு விட்டாள். சமையலறையில் முந்திரி, திராட்சை, பிஸ்கட் போன்ற வஸ்துக்கள் அடிக்கடி காணாமல் போய்விடும். இடம் மாற்றி வைத்தாலும் ப்ரயோஜனமில்லை, மோப்பம் பிடித்து விடுவான். அம்மாவும் பாட்டியும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஸ்டாக் வெரிஃபிகேஷன் நடத்துவார்கள். இருப்பு ரொம்ப குறைவாக இருந்தால், “என்ன முந்திரி திராட்சை எல்லாம் ரொம்ப கொறையறது” என்று ஹாலை நோக்கி அம்மா குரல் கொடுப்பார். அது தனக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைதான் என்று புரிந்து கொண்டு அடுத்த சில நாட்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பான்.
அம்மா அவனுடைய அட்டகாசங்களை சமாளிக்க முடியாமல் திணறுவாள். எதாவது ஒரு காரணத்திற்காக கரண்டியை தூக்கிக் கொண்டு அவன் பின்னால் ஓடாமல் இருந்த நாட்களே இல்லை. அம்மாவுக்கு போக்கு காண்பித்து கிணற்றடியில் சுற்றி சுற்றி வருவான். அம்மாவும் அவன் பின்னால் இரண்டு சுற்று சுற்றி விட்டு, பிடிக்க முடியாமல் களைத்துப்போய் வீட்டுக்குள் வருவாள். இந்த சடுகுடு ஆட்டத்தில், கிணற்று சுவற்றின்மீது தேய்த்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களில் ஒருசில கிணற்றில் விழுந்துவிடும். பிறகு, வீட்டு வேலைக்காரன் ஒரு பாதாள கரண்டியை விட்டு கிணற்றில் விழுந்த பாத்திரங்களை வெளியே எடுப்பான். ரொம்ப நாளாக மறக்கப்பட்ட பாத்திரங்களும் அப்போது வெளியே வரும்.
யாருக்கும் கட்டுப்படாத அவன், பயப்படும் ஒரே ஆள் அப்பா. இத்தனைக்கும் அப்பா அவனை கடுமையாக திட்டியோ, அடித்தோ பார்த்ததில்லை. சும்மா ஒரு பார்வை பார்த்து, “என்னடா?” என்று ஒரு மிரட்டு மிரட்டினால் போதும், என்ன காரணமோ தெரியவில்லை, அப்படியே பெட்டிப் பாம்பாக அடங்கிப் போய்விடுவான். அவனைக் கட்டுப்படுத்த முடியாமல் போனால், அம்மா கடைசியாக பயன்படுத்தும் பிரம்மாஸ்திரம் ‘அப்பா’.
ஒரு நாள், மாலை நேரம். நாங்கள் எல்லாரும் வாசலில் பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தோம். எல்லாரும் அந்த நேரத்தில் தவறாமல் கூடிவிடுவார்கள். காரணம், அந்த நேரம்தான் எதிர்வீட்டு காயத்ரி வாசலைப் பெருக்கி, தண்ணீர் தெளித்து, கோலம் போட வருவாள். ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். தாவணி போட்டு கொண்டு, பார்க்க அழகாக இருப்பாள். எல்லாரும் அவளைப் பார்க்கத்தான் கூடியிருக்கிறார்கள் என்று அவளுக்கும் தெரியும். அவள் வரவை எதிர்பார்த்து எல்லாரும் காத்திருந்தோம். “எங்கடா, இன்னும் காணோம்” என்றான் கண்ணன். அப்போது முரளி “நான் அவள்கூட ரெண்டு தடவை பேசியிருக்கேன் தெரியுமா? முந்தா நாள் நான் கடைக்கு போயிட்டு வந்துண்டிருந்தேனா, அப்போ முன்னாடி பாத்தா காயத்ரி. ‘ஹாய்’ன்னு சொன்னேன். அவளும் ‘ஹாய், எப்படி இருக்கே’ன்னா. என்னாலே நம்பவே முடியலே. வீடு வர வரைக்கும் பேசிக்கிட்டே வந்தோம். நடந்து வரும் போது, அவ கை மேலே என் கை உரசிச்சு. அப்படியே என் சுண்டு விரலாலே அவளோட சுண்டு விரலை பிடிச்சிக்கிட்டே வந்தேன். அவ ஒண்ணும் கண்டுக்கவே இல்லை” என்று தன் கற்பனையையும் சேர்த்து அள்ளி விட்டான். சுந்தர் பொறாமையுடன் “சுண்டு விரலை பிடிச்சுண்டு வந்தா என்ன ப்ரயோஜனம்? அவளை ‘கிஸ்’ பண்ற தைரியம் உனக்கு இருக்கா?” என்று கேட்டான். “அவளை யார் கிஸ் பண்ணறாங்களோ அவங்களுக்கு இந்த புது பம்பரத்தை தரேன்” என்று பம்பர் ப்ரைஸை அறிவித்தான் ரவி. “நான் கிஸ் பண்றேன்” என்று களத்தில் குதித்தான் சுரேஷ். அப்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்தான் அவன்.
காயத்ரி வெளியே வந்து வாசலைப் பெருக்கி, தண்ணிர் தெளித்தாள். நெற்றியில் விழுந்த முடியை தனது இடது கையால் தள்ளி, எல்லோரும் தன்னை பார்த்துக் கொண்டிருக்கிறார்களா என்று கவனித்தாள். கோலமாவு டப்பாவை எடுத்து கோலம் போட குனிந்தாள். சுரேஷ் அவளை நோக்கி முன்னேறினான். எல்லாரும் திகில் கலந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். அவளை நெருங்கி, “காயத்ரி, கன்னத்தில் என்ன?” என்றான். காயத்ரி நிமிர்ந்து சற்று குழப்பத்துடன் “என்ன?” என்று கேட்டுக் கொண்டு கன்னத்தை தடவிக் கொண்டாள். ‘பசக்’கென்று அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டான். அவ்வளவுதான். அவள் கையிலிருந்த டப்பா கீழே விழுந்து, கோலமாவு தரை முழுதும் கொட்டியது. “ஓ” என்று அழுது கொண்டே வீட்டிற்குள் ஓடினாள். நாங்கள் எல்லாரும் பயந்துபோய் அவரவர் வீட்டிற்கு ஓடிப்போய் ஒளிந்து கொண்டோம்.
விஷயம் அறிந்து காயத்ரியின் தாத்தா, பாட்டி, அம்மா, தம்பி என்று எல்லோரும் கோபத்துடன் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார்கள். அக்கம் பக்கத்தினர்களும் வாசலில் கூடிவிட்டனர். “என்ன பையனை வளர்த்திருக்கீங்க? என்ன காரியம் செய்திருக்கிறான்? இந்த வயசிலேயே இப்படின்னா, இன்னும் பெரியவனான என்னெல்லாம் செய்வான்?“ என்று கொட்டிக் தீர்த்து விட்டார்கள். அடுத்த ஒரு மணி நேரம் ஒரே கூப்பாடும், கூச்சலும், அழுகையுமாக போனது. அண்டை வீட்டார்கள் அவர்களை ஒருவாறு சமாதானப்படுத்தி அனுப்பினார்கள். அம்மாவுக்கும் பாட்டிக்கும் ஒரே அவமானமாகிப் போய்விட்டது. இந்த காலனியில் இவ்வளவு காலம் கௌரவமாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களை, எல்லார் முன்னாலும் தலைகுனிய வைத்துவிட்டானே? அம்மா துடைப்பத்தை எடுத்து அவனை விளாசித் தள்ளிவிட்டாள். “அப்பா வரட்டும். உன்னை இன்னிக்கி தோலுரிக்க சொல்றேன்” என்று சொல்லி அழுதுகொண்டே உட்கார்ந்து கொண்டாள்.
ஆபிசில் ஆடிட்டிங் நடந்து கொண்டிருந்ததால், அப்பா ஒன்பதரை மணிக்கு மேல் களைப்புடன் வீட்டிற்கு வந்தார். வீட்டில் நடந்த விவகாரத்தை கேள்விப்பட்டதும் அப்பாவின் கோபம் தலைக்கேறியது. “எங்கே அவன்?” என்று கோபத்துடன் கேட்டார். அவனை தேடினோம். காணவில்லை. ரூம் ரூமாகப் போய் தேடினோம். மொட்டை மாடி, லம்பர் ரூம், கிணற்றடி என்று ஒரு இடம் விடவில்லை. கிணற்றில் எங்காவது விழுந்துவிட்டானா என்று பயந்து வாளியை கிணற்றில் விட்டு துழாவிப் பார்த்தோம். எங்கேயும் அவனைக் காணோம்.
உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்கு ஆள் அனுப்பி விசாரித்தோம். அடுத்த நாள் ந்யூஸ்பேப்பரில் விளம்பரம் கொடுத்தோம். கடைசியில் வேறு வழியின்றி போலிசிலும் புகார் கொடுத்தோம். எந்த பயனும் இல்லை. புகார் கொடுத்த புதிதில், போலீஸிலிருந்து திடீரென்று அழைப்புவரும் ‘ஒரு சிறுவனின் உடல் கிடைத்திருக்கிறது. வந்து பாருங்கள்’ என்று. அலறி அடித்து கொண்டு ஒடுவோம். அது அவனில்லையென்று தெரிய வரும் போது ஒரு பக்கம் நிம்மதியும், ஒரு பக்கம் வேதனையாகவும் இருக்கும். எங்கே போனான், என்ன ஆனான், உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்றே தெரியவில்லை. பாட்டிக்கு அவன் போனது கை ஒடிந்தது போல ஆகிவிட்டது. அவன் நினைவாகவே இருந்தார். கடைசி மூச்சு அடங்கும் போதுகூட ‘அவன் வந்தானாடா’ என்று அரற்றிக் கொண்டிருந்தார்.
வருடங்கள் உருண்டோடியது. அப்பா அவன் போனதிலிருந்து மிகவும் நொடிந்து போய்விட்டிருந்தார். யாருடனும் பேசுவதைக் குறைத்துக் கொண்டார். எப்போதும் ஏதோ நினைவாகவே இருந்தார். ஒரு நாள், வீட்டு வாத்தியாரை கூப்பிட்டு அவருடன் பேசிக்கொண்டிருந்தார். வாத்தியார் ‘யாராவது காணாமல் போய் பன்னிரண்டு வருடங்களுக்கு மேலானால் அந்திம காரியங்களை செய்யலாம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அம்மா விருட்டென்று எழுந்தார். கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு அவர்கள் முன் போய், “என்ன பேசிக்கிட்டிருக்கீங்க இங்கே? எம்புள்ளைக்கு காரியம் பண்றதைப்பத்தி பேசிண்டிருக்கேளா? அந்த சாஸ்திர சம்பிரதாயம் எல்லாம் வயசானவங்களுக்குத்தான். இன்னைக்கு மிஞ்சிப்போனா அவனுக்கு இருபத்தி ஏழு வயசு கூட கிடையாது. அவனுக்குப் போய் காரியம் செய்யறேளா? அவனுக்கு செய்யறதான அப்படியே எனக்கும் சேர்த்து செஞ்சுடுங்கோ. நானும் போய் சேர்ந்துடறேன். அவன் எங்கேயோ உயிரோடத்தான் இருக்கான்னு நம்பிக்கிட்டிருக்கேன். என்னிக்காவது ஒரு நாள் நிச்சயம் திரும்பி வருவான். நீங்க இங்கிருந்து போங்கோ முதல்லே” என்று கோபமாக கத்தினார். வாத்தியார் அங்கிருந்து தப்பினால் போதும் என்று ஓடிப்போய் விட்டார். அம்மா, அப்பாவிடம் அவ்வளவு கடுமையாக பேசி நான் பார்த்ததில்லை.
காலச்சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. அப்பா ஒருநாள் மாரடைப்பில் போய்விட்டார். அண்ணா கணேஷ் வெளிநாட்டில் போய் செட்டிலாகி விட்டான். சாந்தி ஹைதராபாதில் குடும்பத்துடன் தங்கி இருந்தாள். நான் என் குடும்பத்துடன் இந்த பழைய வீட்டிலிருந்தேன். அம்மாவுக்கு உடம்பு இப்போது ரொம்பவும் தளர்ந்து விட்டது. ஆனால் பண்டிகை என்று வரும்போது எங்கிருந்தோ ஒரு அசுர பலம் வந்துவிடும். ஒவ்வொரு வருடமும் பண்டிகைக்கு பட்சணங்களை செய்யும் போது அவள் கண்களில் கண்ணீர் வழியும். ஒரு பங்கை மட்டும் எடுத்து தனியே வைத்திருப்பாள். சில வாரங்கள் கழித்து, பட்சணங்கள் நமுத்துப் போகும் நிலை வரும்போது அதனை மற்றவர்களுக்கு விநியோகம் செய்வாள்.
இன்று கோகுலாஷ்டமி. இன்றோடு சுரேஷ் வீட்டை விட்டு ஓடிப் போய் முப்பது வருடங்களாகிறது. அம்மா வெல்லச்சீடையும், முறுக்கும் செய்து கொண்டிருந்தாள். வீடு பூராவும் அதன் வாசம் பரவியது. கண்களை மூடிக்கொண்டு மூச்சை உள்ளிழுத்தேன். அப்படியே என் நினைவுகள் ஆறு மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு அழைத்து சென்றது. ஆபிஸில் கம்ப்யூட்டரில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கும் போது, போனில் அழைப்பு வந்தது. ஏதோ புதிய நம்பர். எடுத்து பேசினேன்.
“கேன் ஐ ஸ்பீக் டூ மகேஷ்”
“ஸ்பீக்கிங். மே ஐ நோ ஹு ஈஸ் ஆன் த லைன்”
“சுரேஷ்”
“சாரி. விச் சுரேஷ்?”
“உன் தம்பி சுரேஷ் பேசறேன். எப்படி இருக்கே அண்ணா?அம்மா, அப்பா, பாட்டி எல்லாம் எப்படி இருக்காங்க?” .
அதிர்ந்து போனேன். அந்த அறையே தட்டாமாலையாக சுழல்வது போலிருந்தது. என்னுடைய குரல் குளறியது. “என்னடா உயிரோட தான் இருக்கியா? எங்களை எல்லாம் தவிக்க விட்டு எங்கேடா போனே? எங்கிருந்து பேசறே? ஏன் இவ்வளோ நாள் பேசவேயில்லே?” கேள்விகள் அடுக்கடுக்காக வந்து விழுந்தன.
“மகேஷ் நான் நல்லா இருக்கேன். என்ன நடந்ததுன்னு சொல்றேன். நான் அன்னைக்கு அப்பாவுக்கு பயந்து வீட்டைவிட்டு ஓடிப்போய் ஏதோ ரயிலில் ஏறி படுத்துக்கிட்டேன். ரெண்டு நாளைக்கு பிறகு ஒரு ஸ்டேஷன்ல வண்டி நின்னதும் இறங்கி, எங்கே போறது, என்ன பண்றதுன்னு தெரியாம அப்படியே ப்ளாட்பாரத்துலே உட்கார்ந்திருந்தேன். ஒரு ஆர்மி ஆபிசர் என்னை பார்த்து, விசாரிச்சு அவரோட கூட்டிக்கிட்டு போனாரு. அவரோட ஆதரவுல நான் காலேஜ் படிப்பை முடிச்சேன். அவர்தான் என்னை ஆர்மிலே சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்யின்னு வழிகாட்டினார். அப்புறம் ராணுவ பயிற்சிலே சேர்ந்தேன். இப்போ இண்டியன் ஆர்மிலே ப்ரிகேடியரா இருக்கேன். ஜம்முவில் போஸ்டிங்” என்று சுருக்கமாக சொல்லி முடித்தான்.
“உனக்கு என்ன ஆச்சோ, ஏது ஆச்சோன்னு ரொம்ப கவலைப் பட்டுண்டு இருந்தோம். இவ்வளவு வருஷம் ஏன்டா காண்டாக்ட் பண்ணலை? எங்களையெல்லாம் வந்து பார்க்கணும்கிற நினைப்பே வரலியா உனக்கு?”
“அப்படி இல்லை மகேஷ். உங்களையெல்லாம் வந்து பார்க்க எனக்கு ரொம்ப பயமாவும், அவமானமாவும் இருந்தது. எவ்வளவு கவுரவமாக வாழ்ந்த குடும்பத்துக்கு என்னாலே இப்படி ஒரு அவமானம் வந்துடுத்தேன்னு வருத்தமா இருந்தது. ஏதோ விளையாட்டுதனமா செய்யப் போய், இப்படி விபரீதமா முடிஞ்சு போச்சேன்னு அப்படியே கூனிக்குறுகி போயிட்டேன். அம்மா அப்பாவை வந்து பார்க்கற தைரியம் எனக்கு இல்லை. தற்செயலா நம்ம ஏரியாவிலே இருந்தவரோட ரிலேட்டிவ் மூலமா உன் நம்பர் கிடைச்சது. உன்னோடு பேசாம இருக்க முடியலை” என்றான் குரல் கம்ம.
அப்பா போன விஷயத்தை நான் சொன்னதும், “ஐயோ, அப்பாகிட்ட இந்த ஜென்மத்தில மன்னிப்பு கேட்க முடியாம போயிடுத்தே” என்று சொல்லி அப்படியே உடைந்து போய் அழுதான்.
சில நிமிடங்கள் அவன் அழுது முடித்ததும், “அம்மா எப்பவும் உன் நினைப்பாத்தான் இருக்கா. நீ நிச்சயம் திரும்ப வருவேன்னு நம்பிண்டிருக்கா. நீ உயிரோட இருக்கிறது தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவா. எனக்கும் உன்னைப் பார்க்கணும். சீக்கிரம் வாடா” என்றேன்.
“லீவ் கிடைச்சதும் சீக்கிரம் வரேன் மகேஷ். நான் உன்கிட்டே பேசினதா அம்மாகிட்டே சொல்லாதே. நான் நேர்லே வந்து அம்மா கால்லே விழுந்து மன்னிப்பு கேட்கணும்” என்றான்.
தனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்றும் சொன்னான். பிறகு என்னுடைய குடும்பத்தைச் பற்றியும், சாந்தியின் குடும்பத்தையும் பற்றியும் சொல்லிவிட்டு போனை வைத்தேன்.
எனக்கு அப்போது தெரியாது அவனுடன் பேசுவது அதுவே கடைசி முறை என்று. அவனுடன் பேசிய அடுத்த பத்தாவது நாள் ஆர்மி ஹெட் க்வார்ட்டர்சிலிருந்து எனக்கு போன் வந்தது. ‘தீவிரவாதிகளுடன் நடந்த போராட்டத்தில் வீரமரணம் அடைந்து விட்டான் உங்களுடைய சகோதரன். அவனுடன் உயிர் நீத்த எல்லாருடைய உடல்களையும் நாளை டெல்லிக்கு கொண்டு வருகிறோம். ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு உடலை ஒப்படைக்கிறோம். தயவு செய்து வாருங்கள்’ என்று தகவல் சொன்னார்கள்.
என்ன கொடுமை இது? முப்பது வருடங்களாக காணாமல் போனவன் திடீரென்று ஏன் தொடர்பு கொள்ள வேண்டும்? அடுத்த சில நாட்களில் ஏன் இந்த உலகைவிட்டே போக வேண்டும்? விதியின் கோர விளையாட்டை எண்ணி நொந்து போனேன்.
ஆபிசில் ஒருவாரம் லீவு போட்டேன். ஆபிஸ் வேலையாக ஒரு வாரம் டெல்லி போகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு கிளம்பினேன். ராணுவ மரியாதை முடிந்தவுடன் அங்கேயே உடலை தகனம் செய்ய விரும்புவதாக சொன்னேன். அதற்குண்டான எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்தார்கள். ஈமக்கிரியைகளை எல்லாம் முடித்துக் கொண்டு ஊர் திரும்பினேன். யாரிடமும் நடந்ததைப் பற்றி சொல்லவில்லை. காணாமல் போனவன், காணாமல் போனவனாகவே இருக்கட்டும்.
அம்மா பட்சணங்களை செய்து முடித்து, விநியோகம் செய்ய ஆரம்பித்தாள். என் பிள்ளை “பாட்டி எனக்கு இன்னும் கொஞ்சம் வேணும்” என்றான். அம்மா “போடா, அவ்வளோதான். தீர்ந்து போச்சு” என்றாள். “பாட்டி, பொய் சொல்றீங்க. அந்த டப்பாலே தனியா எடுத்து வச்சீங்க. நான் பார்த்தேன்” என்றான். “போடா, அது உனக்கில்லை” என்று சொல்லி விரட்டிவிட்டாள். அவன் ஏமாற்றத்துடன் வெளியே போனான்.
பாவம் அவனுக்குத் தெரியாது அது யாருடைய பங்கு என்று. நான் நினைத்துக் கொண்டேன் ‘இறந்தவர்களுக்கு பிண்டம் தான் கொடுக்க வேண்டுமா என்ன? வெல்லச்சீடையும், முறுக்கும் கூட கொடுக்கலாம்’.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

Soulful writing. Thought provoking last line.