முட்டை போண்டா

நீங்கள் எப்போதாவது முட்டை போண்டா சாப்பிட்டிருக்கிறீர்களா? இதுவரை நீங்கள் முட்டை போண்டா சாப்பிட்டதில்லை என்றால் அதன் சுவையை உங்களுக்கு புரியவைப்பது கடினம். நீங்கள் மதுரை பக்கத்து ஆள் என்றால் சுவையான முட்டை போண்டாக்கள் சாப்பிட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அங்குதான் ரெண்டு கடைக்கு ஒரு கடை என்ற கணக்கில் டீக்கடைகளில் முட்டை போண்டா சுட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போதும் அப்படித்தான் இருக்க வேண்டும். மதுரை ஒன்றும் அவ்வளவு சீக்கிரத்தில் மாறிவிடக் கூடிய ஊர் இல்லை.

பழைய மதுரை மாவட்டத்தைத் தாண்டி வேறெங்கும் முட்டை போண்டா கிடைக்கிறதா என்று தெரியவில்லை. எனது கல்லூரி நாட்களில் சென்னையிலோ அல்லது பெங்களூரிலோ நான் முட்டை போண்டாவை பார்த்ததில்லை. அடிக்கடி வடை பஜ்ஜி சொஜ்ஜி என்று விதவிதமாக பலகாரங்கள் சுடும் வீடுகளில் கூட முட்டை போண்டா சுடுவதில்லை. பெரிய பிராண்டட் ஓட்டல்களில் முட்டை போண்டா கிடைப்பதில்லை. அது எப்போதுமே தெருவோர டீக்கடைகளின் செல்லப்பிள்ளை.

போகட்டும். அப்படியே மற்ற ஊர்களில் முட்டை போண்டா கிடைத்தால் கூட அதை எப்படி சாப்பிட வேண்டும் என்ற கலை அவர்களுக்கு தெரியுமா என்பது சந்தேகம்தான். முட்டை போண்டா சாப்பிடுவது எப்படி கலையாகும் என்று நீங்கள் கேள்வி எழுப்ப மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் சுரணை கெட்டவர்களுக்குத்தான் அது போன்ற சந்தேகங்களெல்லாம் வரும். அவர்கள் எல்லாம் அழகியல் நோக்கில் இலக்கியத்தையோ அல்லது வாழ்வையோ அல்லது முட்டை போண்டா போன்ற ஒரு அற்புதமான பதார்த்தத்தையோ அணுகத் தெரியாதவர்கள். நீங்கள் வேண்டுமானால் கவனித்துப் பாருங்கள், அந்த மாதிரியான ஆட்கள் அப்பளம் இல்லாமல் கொடுக்கப்படும் பாயாஸத்தைக் கூட எந்த ஒரு புகாரும் இல்லாமல் அப்படியே வாங்கி வாயில் ஊற்றிக் கொள்ளுவார்கள். அவர்களுக்கு சொல்லிக் கொள்ள என்னிடம் ஒன்றுமில்லை.

சரி கதைக்கு வருகிறேன். முட்டை போண்டாவை எப்படி சாப்பிட வேண்டும் என்ற கலையை எனக்கு என் பள்ளித் தோழன் விக்னேஷ்வரன்தான் கற்றுக்கொடுத்தான். அன்று நாங்கள் பள்ளியில் நடந்த ஒரு ஸ்போர்ட்ஸ் மீட்டை கட்டடித்து விட்டு மதுரை மாணிக்க விநாயகர் தியேட்டருக்கு படம் பார்க்கப் போயிருந்தோம். அன்றுதான் அந்த தியேட்டர் கேண்டீனில் நான் முதன் முதலாக முட்டை போண்டாவை ருசித்தேன். எனக்கும் என்னுடன் வந்த மற்ற மூன்று நண்பர்களுக்கும் முட்டை போண்டா வாங்கித் தந்தததுடன் நிற்காமல் நல்ல முட்டை போண்டாவை எப்படித் தேர்ந்தெடுப்பது எந்த பக்குவத்தில் தேர்ந்தெடுப்பது போன்ற அரிய தகவல்களை சொல்லிக் கொடுத்து விட்டு, முட்டை போண்டாவை எப்படி சாப்பிட்டால் அதன் முழு ருசியையும் அனுபவிக்க முடியும் என்ற முக்கியமான கலையை விக்னேஷ்வரன் அன்று எங்களுக்கு கற்றுக் கொடுத்தான். 

அதாவது, விக்னேஷ்வரனின் கூற்றுப்படி வெளிர் மஞ்சள் நிற அல்லது கரு மஞ்சள் நிறமுள்ள முட்டை போண்டாக்களை பார்த்த உடனேயே நிராகரித்து விட வேண்டும். ஏனென்றால் துடைத்த பொன் போன்ற வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் போண்டாக்கள் சரியாக வேகாமல் கடலைமாவு வாசத்துடன் இருக்கும். அதை சாப்பிடும் போது, வேகாத கடலைமாவு முட்டையுடன் சேர்ந்து மாவின் பச்சை வாசம் அவித்த முட்டையுடன் கலந்து அதன் சுவையையும் சேர்த்து கெடுத்து விடும். அதே சமயத்தில் வெகு நேரம் சுடு எண்ணைக்குள் கவனமற்றுக் கிடந்த போண்டாக்கள் ஒரு மாதிரியாக கருகளுக்கு உட்பட்டு கடலை மாவு இறுகிப்போய் ரப்பர் தன்மையை அடைந்து முட்டையுடன் ஒட்டிக் கொண்டு கிடக்கும். சில நேரங்களில் காறல் வாடையுடன் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. 

நல்ல முட்டை போண்டா என்பது கடலை மாவு தன் வெளிர் மஞ்சள் நிறத்தை இழந்து அடுத்த நிறத்தை ஏற்பதற்கு முன்பு பக்குவமாக எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். செல்வேந்திரன் வெகு கவனமாக அந்த பக்குவத்தில் முட்டை போண்டாக்களை அரித்து எடுப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். ஒரு முறை, ‘எப்பிடிரா நீயி கரீக்கிட்டா போண்டாவ வேக வச்சு தூக்குற’ என்று கேட்ட ஒரு பெரிசிடம் செல்வேந்திரன், ‘அதெல்லா ஒரு டிரிக்கு மாமா. மொத ராத்திரிக்கு ரூமுக்குள்ள போற பொண்ணு ஒரு கலர்லயயும், மக்கா நா கன்னி கழிஞ்சு வெளிய வர்ரப்ப வேற ஒரு கலர்லயயும் இருப்பா இல்ல. அந்த மாதிரித்தா……. போண்டா தம்ம மாறும். அத கவினிச்சு சரீய்யா பாத்து தூக்கிரனும்’ என்று சொல்லி கண்ணடித்து சிரித்தார். அவரின் பெருமை பொங்கிய முகமும், சிரித்த போது எடுப்பாக தெரியும் உடைந்து போன முன்பக்க காரைப் பற்களும் இப்போதும் அப்படியே நினைவில் இருக்கின்றன. 

சரி நாம் அடுத்த விஷயத்திற்கு வருவோம். அதாவது, நீங்கள் சரியான பக்குவத்தில் இருக்கும் முட்டை போண்டாவை சாப்பிட  தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் அது எவ்வளவு சிறப்பாக சுடப்பட்ட போண்டாவாக இருந்தாலும் வீண்தான். ஆறிப்போன போண்டா சுவை குறைவுடன் இருக்கும் என்பதும் சில வேளைகளில் அது விக்கலை ஏற்படுத்தும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அதற்காக  சில முரடர்களைப் போல தட்டில் ஆவி பறக்க கிடக்கும் முட்டை போண்டாவைத் தூக்கி எடுத்து வாயில் போடுவதும் தவறுதான். சாதாரண போண்டா போல் இல்லாமல் ஆவி பறக்கும் முட்டை போண்டாவில் வெளிப்பக்க கடலைமாவின் சூடு ஒரு பங்கு என்றால் உள்ளேயிருக்கும் முட்டை மூன்று மடங்கு சூட்டில் இருக்கும். அது நாக்கின் சுவை நரம்புகளை பொசுக்கி எடுப்பதுடன் உங்கள் வாயில் அளவிற்கு அதிகமாக உமிழ்நீரை சுரக்க வைத்து கொளகொளவென்று ஆக்கிவிடும். ஆகையால் எப்போதுமே மிதமான சூட்டில் இருக்கும் முட்டை போண்டாவைத்தான் சாப்பிடத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி மிதமான சூட்டை தெரிந்து கொள்ள உள்ளங்கையை பயன்படுத்தாமல் கையின் பின் பக்கத்தை பயன்படுத்தி, அதாவது குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள மெதுவாக தொட்டுப் பார்ப்போமே அது போல தொட்டுப் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதை விக்னேஷ்வரன் எங்களுக்கு செயல்முறையாகவே செய்து காட்டினான்.

சரி. கடைசியாக முட்டை போண்டாவை சாப்பிடும் முறையைப் பார்ப்போம். முட்டை போண்டா சாப்பிடுவது ஒரு கலை என்பதை நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். உண்மையில் அது கலைதான். அது ஒரு கலைச் செயல்பாடு என்பதை அறியாத மூடர்கள் முட்டை போண்டாவை தட்டில் வைத்து பிய்த்து பிய்த்து சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடுவதற்கு பதில் ஒரு சாதாரண போண்டாவையும் ஒரு அவித்த முட்டையையும் தனித்தனியாக வாங்கி மாறி மாறி சாப்பிட்டு தொலைக்கலாம். முட்டை போண்டாவை மெனக்கெட்டு தேடி வாங்கி சாப்பிட வேண்டிய அவசியமில்லை. 

அதாவது, முட்டை போண்டாவை குறுக்குவாக்கில் கடித்து மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். அவ்வாறு கடிக்கும் போது தலையை சற்றே உயர்த்திக் கொண்டு கடித்தால் போண்டாவை சிந்தாமல் சிதறாமல் கடிக்கலாம். வலது கையில் முட்டை போண்டாவை வைத்து கடிக்கும் போது இடது கையை அதற்கு கீழே தாங்கலாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி கையை வைத்துக் கொண்டால் நம் கவனத்தையும் மீறி சிந்தும் முட்டை போண்டாவின் பகுதிகளை அப்படியே பிடித்து வாயில் போட்டுக் கொள்ள வசதியாக இருக்கும்.

ஆக மொத்தத்தில் இளம் சூட்டில் இருக்கும் முட்டை போண்டாவை நன்றாக வெந்த கடலைமாவு முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் மஞ்சள் கரு ஆகியவற்றுடன் கலந்து நன்றாக மென்று சாப்பிடும் போதுதான் முட்டை போண்டாவை அதன் உச்ச பட்ச சுவையுடன் அனுபவிக்க முடியும்.

இதோ பாருங்கள் முட்டை போண்டாவை எப்படி சாப்பிட வேண்டும் என்று உங்களுக்கு நான் இவ்வளவு மெனக்கெட்டு விளக்கிக் கொண்டிருக்கும் வேளையில் விமானப் பணிப் பெண் என் கையில் ஒரு பர்க்கரை திணித்து விட்டு போகிறாள். சூடே இல்லை. சற்று முன்பு உங்களுக்கு முட்டை போண்டாவை சாப்பிடும் முறையை விளக்கிய உத்வேகத்தில் பர்க்கரை உள்ளங்கையிலும் பின்னர் பின்னங்கையிலும் தொட்டுப் பார்க்கிறேன். சுத்தமாக சூடு இல்லை. உட்பக்கம் கொழ கொழவென்று ஊளை போல் வெண்ணெய் ஓடிப் போய் கிடக்கிறது. சாப்பிடுவதற்கு மனம் ஒப்பவில்லை. பர்க்கரை இரண்டு கைகளாலும் ஏந்தி தீபாரதனை காட்டுவது போல் முகத்திற்கு முன்பு வைத்துப் பார்த்தேன். இதையும் முட்டை போண்டாவை சாப்பிடுவது போல் குறுக்காகத்தான் கடித்து சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால்தான் பர்கரின் சுவையை முழுமையாக அனுபவிக்க முடியும். இதையெல்லாம் ஜனங்கள் என்னைப் போல் ஒருவன் விளக்கி விளக்கிச் சொல்லாமலேயே தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அது சரி மீண்டும் நான் அந்த அடிப்படையான கேள்விக்கே வருகிறேன்.

ஏன் எந்த பிராண்டட் ஓட்டலிலும் முட்டை போண்டா கிடைப்பதில்லை?

பர்க்கரை சாப்பிடுவது போல் கடைகளில் அல்லது பிளாட்பாரங்களில் ஏன் முட்டை போண்டாவை கூச்சமின்றி சாப்பிட முடிவதில்லை?

விமானத்தில் சாப்பிட முட்டை போண்டா கொடுத்தால் குறைந்தா போய் விடுவார்கள்?

ஏன் இந்த மனத்தடை?

தின்னும் பண்டத்தில் உயர்வென்றும் தாழ்வென்றும் உள்ளதா? ஒன்று தாழ்ந்தது என்று எப்போது நம் மனது ஏற்றுக் கொள்கிறது?

என்னுள் எழும் கேள்விகள் சற்றே பாமரத்தனமாக, சமூக வலைதள தரத்தில் இருப்பதாக எனக்கே தோன்றியதால், இன்னும் சற்று ஆழமாக, தத்துவ விசாரணைக்குள் இறங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். விமான பணிப்பெண் கிளியரன்ஸிக்கு பையைத் தூக்கிக் கொண்டு வந்து நின்றாள். 

சாப்பிடாத பர்க்கரை அப்படியே தூக்கி அவளிடம் கொடுத்தேன். இழப்பொன்றும் இல்லைதான். ஆனால் வந்த தடங்களில் தத்துவ விசாரணை தடுமாறிப் போனது.

விமானம் மதுரை விமான நிலையத்தை நெருங்கி விட்டதாக விமானி அறிவித்தார். நான் செல்போனை ஒளிரவிட்டு மணி பார்த்தேன். ஒன்பதரை ஆகியிருக்கிறது. எப்படியும் பதினோரு மணிக்குள் செல்வேந்திரனின் கடைக்குப் போய்விட்டால் முட்டை போண்டா கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மிதமான சூட்டில் கிடைத்தால் சந்தோஷம். செல்வேந்திரனுக்கு என்னை நினைவிருக்குமா என்று தெரியவில்லை. நினைவிற்கு வந்தால், அவர் இன்னும் பழைய செல்வேந்திரனாகவே இருந்தால், உடைந்து போன அந்த காரைப் பற்கள் தெரிய வெள்ளந்தியாக சிரித்து, இர்ரா தம்பி செத்த நேரத்துல ரெடி பண்ணீர்ரேன் என்று சொல்லி புதிதாகவே முட்டை போண்டா போட்டுக் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.

திவ்யா என்ன சொல்வாள் என்று தெரியவில்லை. அவள் இது நாள் வரை முட்டை போண்டா சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை. அவள் சம்மதித்தால் வருணுக்கும் ஒன்று வாங்கித் தர வேண்டும். அதற்கான வாய்ப்பு குறைவுதான். அசுத்தம், பாக்டீரியா, லார்வா என்று ஏதேனும் சொல்வாள்.

………

ஒரு நாள் சிட்னி நகரின் பேக்கன் பார்க்கில் காலை நடைபயிற்சி முடித்து விட்டு அங்கிருந்த ஒரு பெஞ்சில் அயர்ச்சியுடன் அமர்ந்த போது இந்த குளிருக்கு ஒரு முட்டை போண்டா சாப்பிட்டு விட்டு டீ அடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. திடீரென்று ஏன் அப்படி தோன்றியது என்று தெரியவில்லை. இப்போது நினைத்துப் பார்த்தால், தொடர்ந்து செய்யப்படும் உடற்பயிற்சிகள் வெறும் உடல் நலனோடு சேர்த்து மன நலனையும் மேம்படுத்துகிறது என்றுதான் நம்பத் தோன்றுகிறது. நரம்பு மண்டல ஸ்பெக்ட்ரம் என்ற மாய உலகத்திற்கு முன்னால் நிஜ உலகின் ஆச்சர்யங்கள் எல்லாம் ஒன்றுமேயில்லை என்று சொல்லப்படுவது உண்மைதான் போலும்.

பல வருட இடைவெளிக்கு பின் நான் மீண்டும் தொடங்கிய உடற்பயிற்சிகளோ அல்லது வேறு ஒன்றோ அன்று எந்த தந்தியை மீட்டி எந்த நியூரனைத் தூண்டியது என்று தெரியவில்லை. மனம் மயங்கிக் கொண்டு வந்தது. நான் என்னை பெஞ்சில் வசதியாக அமர்த்திக் கொண்டு அந்த மகிழ்ச்சியை கண்மூடி லயித்து என்னுள் பரவ விட்டேன். சற்று நேரத்திலேயே உடம்பு லேசாகி மிதக்கத் தொடங்கியது. தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் மனது நழுவி நழுவி போவதை கால ப்ரக்ஜையின்றி சுகமாக அனுபவித்துக் கொண்டிருந்த போது அக மனம் விழித்துக் கொண்ட ஏதோ ஒரு நொடியில் செல்வேந்திரனின் காலை வெயில் விழுந்து ஊறும் தகரம் வேய்ந்த கடையும் வெந்து கொண்டிருக்கும் எண்ணெய் சட்டியும் மணமும் மனதுள் படிந்து விலகியது. நான் திடுக்கிட்டு கண் விழித்தேன். 

முட்டை போண்டா சாப்பிட்டு பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அன்று ஏன் அந்த நினைப்பு வந்ததென்று தெரியவில்லை. அன்றைய நாள் முழுவதும் அதற்கு பின் வந்த நாட்களிலும் நான் உற்சாகமாக இருந்தேன். மனதிற்குள் காடு திறந்து கொண்டது போல் இருந்தது. நன்றாக பசித்தது. கடினமான விவரணைகள் கொண்ட ஜெல் முடிவுகளை ஒரே வாரத்தில் கட்டுரைகளாக எழுதி முடித்து விட்டு எங்கள் துறை தலைவரான லின்னோயல் ராபர்ட்ஸனை பார்க்கப் போனேன். அவர் கட்டுரைகளை பார்த்து விட்டு, எப்படி சாத்தியம்” என்று ஆச்சர்யமாக கேட்டார். நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன் டாக்டர்” என்று கிண்டலாக பதில் சொன்னேன். அவர் சிரித்துக் கொண்டே ” இருக்கலாம். நானும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இப்போதெல்லாம் நீ உற்சாகமாக இருக்கிறாய். ஏதோ உனக்கு பிடித்த ஒன்றை செய்து கொண்டிருக்கிறாய் என்று மட்டும் தெரிகிறது. தொடர்ந்து செய்” என்று சொல்லி விட்டு அவர் அறையிலிருந்த காபி மேக்கரை நோக்கி நடந்து போய் எனக்கும் அவருக்கும் இரண்டு கோப்பை காபியை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார். நான் ஆவி பறந்து கொண்டிருந்த காபி கோப்பையை என் வாயருகே கொண்டு போன போது, லின்னோயல் ராபர்ட்ஸன் தனது குறுந்தாடி விரியும் புன்னகையுடன் “மெனக்கெடாமல் விடுதலையில்லை, மகனே” என்று சொல்லிவிட்டு அர்த்தத்துடன் சிரித்தார்.

திவ்யா கூட கிண்டலாக, “ஓவர் ஆட்டமா இருக்கு. லேப்ல புதுசா வெள்ளக்காரி எவளும் சேர்ந்திருக்காளா?” என்று கேட்டாள். நான் எந்த ஒரு திட்டமும் இல்லாமல், அவளைப் பார்த்து, “ஊருக்கு போயிட்டு வரலாமா?” என்று நான் கேட்ட போது அவளின் பெரிய கண்கள் நம்ப முடியாமல் விரிந்தன. 

நான் ஊருக்கு போவதற்கான நடைமுறைகளை விரைவு படுத்தத் தொடங்கினேன். 

திவ்யா தினமும் என்னை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தாள். வழக்கமாக அவள் ஊருக்கு போக வேண்டும் என்று என்னை மூன்று நான்கு மாதங்களாக தொடர்ந்து தொணத்திக் கொண்டே இருந்தால்தான் நான் மிக மெதுவாக முதல் அடியை எடுத்து வைப்பது வழக்கம். இப்போது என் உற்சாகத்தையும் பரபரபரப்பையும் பார்த்து ஒரு குழந்தையைப் போல கேள்விகளாய் கேட்டுக் கொண்டும், வருணுடன் சேர்ந்து கிண்டலடித்துக் கொண்டுமிருந்தாள். அவளுக்கான பால்யம் அற்புதமாய் அமைந்திருந்தது குறித்து எனக்கு எப்போதும் மகிழ்ச்சியும் திருப்தியும் இருந்திருக்கிறது. அவள் தன்னுடைய பள்ளி நாட்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் காட்டி அது குறித்த கதைகளை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் விவரிக்கும் நாட்களில் நான் அவளின் விரிந்த கண்களின் அழகில் மனதினை செலுத்த முயன்று கொண்டிருப்பேன்.

……..

மதுரையில் கால் வைத்தவுடனேயே எனக்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது. விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த போது எனது மச்சினன் சிரித்துக் கொண்டே வந்து வருணை கட்டிக் கொண்டான். 

முதலில் இங்கிருந்து நேராக எங்கள் ஊரான தேனி அன்னஞ்சிக்கு போய் அங்கு ஒரு வாரம் அங்கே தங்கிவிட்டு பிறகு திவ்யாவையும் வருணையும் கொண்டு போய் திருச்சியில் அவளுடைய வீட்டில் கொண்டு போய் விட வேண்டும் என்பது திட்டம்.

இவனிடம் காரை வாங்கிக் கொண்டு உடனடியாக புறப்பட வேண்டும். 

திவ்யா நிறுத்தாமல் அவள் தம்பியுடன் பேசிக் கொண்டிருந்தாள். நான் எனது அவசரத்தை மறைக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன்.

செல்வேந்திரனின் டீக்கடை ஊருக்கு போகும் வழியில், தேனி மெயின் ரோட்டில்தான் இருக்கிறது. 

இல்லை. இருந்தது. 

இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. 

கடந்த இரண்டு மாதங்களாக இல்லாத இந்த சந்தேகம் இப்போது மதுரைக்கு வந்த பிறகு ஏன் வந்து தொலைக்கிறது என்று தெரியவில்லை.

காரை எடுத்துக் கொண்டு அவனியாபுரத்தைத் தாண்டி திருமங்கலம் பைபாஸ் ரோட்டை தொட்ட போது, செல்வேந்திரன் இப்போதும் கடை வைத்திருப்பாரா என்ற சந்தேகம் மீண்டும், இப்போது கொஞ்சம் வலுவாகவே எழுந்து மறைந்தது.

ஆஸ்த்ரேலியாவிற்கு போவதற்கு முன்பு இத்தனை ஆண்டுகளில் இதே தேனி ரோட்டில் பல முறை பஸ்ஸிலும் காரிலும் ஊருக்குப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் வண்டியை நிறுத்தி செல்வேந்திரனை பார்க்க வேண்டும் என்று தோன்றியதில்லை. காரணமும் தெரியவில்லை. காலம் ஒரு காற்றைப் போல சுழன்றும் எழும்பியும் வீழ்ந்தும் தவழ்ந்தும் விரும்பம் போல்தான் போகிறது. உதிரும் முடிவை எடுப்பது காற்றா ? இலையா? யாருக்குத் தெரியும்?

திவ்யா நான் அவளின் தம்பியுடன் முகம் கொடுத்து பேசாமல் வண்டியைக் கிளப்புவதில் அவசரம் காட்டியதற்காக கோபமாக இருந்தாள்.

……

நான் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை விடுதியில் தங்கிப் படித்தேன். விடுதியும் பள்ளியும் ஒரே வளாகத்தில் இருந்தன. செல்வேந்திரன் எங்கள் பள்ளிக்கு எதிரில் டீக்கடை வைத்திருந்தார். முதல் இரண்டு ஆண்டுகளில் அந்தக் கடையில் நான் வடையோ அல்லது முட்டை போண்டாவோ சாப்பிட்டதாக நினைவு இல்லை. அப்போதெல்லாம், செல்வேந்திரனின் டீக்கடையை ஒட்டியிருந்த ஜெனிபர் ஸ்டோர்ஸில் பிக்பன் பபுல்கம் வாங்கி மெல்லுவதில்தான் பெரும் விருப்பம் இருந்தது. 

கிடைக்கும் காசிற்கெல்லாம் பபுல்கம் வாங்கி, அதற்குள் சுற்றப்பட்டிருக்கும் ஸ்டிக்கரைப் பிரித்து அதிலிருந்த கிரிக்கெட் வீரர்களின் படங்களையும் பக்கத்தில் அச்சிடப்பட்டிற்கும் ரன்களையும் உச்ச கட்ட ஆர்வத்தில் பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. இருநூறு ரன்கள் மற்றும் பத்து விக்கெட்டுகளுக்கு ஸ்டிக்கர்களை சேர்த்து ஒட்டிக் கொண்டு போய் ஜெனிபர் ஸ்டோரில் கொடுத்தால் ஒரு போஸ்டர் தருவார்கள். எப்படியாவது அதைச் சேர்த்து கபில் தேவின் ஒரு போஸ்டரை வாங்கி விட வேண்டும் என்ற முனைப்பில், கிடைக்கின்ற காசிற்கெல்லாம் பபுல்கம் வாங்கிக் கொண்டும், பபுல்கம் வாங்க காசில்லாத நாட்களில் யாரேனும் தெருவில் தெரிந்தோ தெரியாமலோ ஸ்டிக்கர்களை போட்டு விட்டு போயிருக்கிறார்களா என்றும் தேடிக் கொண்டிருந்தேன்.

நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதுதான். விக்னேஷ்வரன் எனக்கு மாணிக்க விநாயகர் தியேட்டர் கேண்டீனில் முட்டை போண்டா வாங்கிக் கொடுத்தான். அதன் வாசமும் சுவையும் மனதிற்குள் புகுந்து கொண்டது.

அதன் பிறகு நான் பபுல்கம் சாப்பிடுவதை விட்டுவிட்டு காசு கிடைக்கும் போதெல்லாம் செல்வேந்திரனின் கடைக்கு ஓடினேன். ஒன்னரை ரூபாய்க்கு ஒரு முட்டை போண்டா என்று கிடைத்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. அப்பா கொடுத்து விட்டு போகும் பணம் வாரத்திற்கு எப்படியும் நான்கு ஐந்து முறை செல்வேந்திரனின் கடையை முட்டும் அளவிற்கு செழிப்பாக இருந்தது. ஒரு முறை கூட முட்டை போண்டாவைத் தவிர்த்து வேறு பஜ்ஜியோ, போண்டாவோ வாங்காத என்னை செல்வேந்திரன் முதலில் கிண்டல் செய்தார். பிறகு சிறிது நாட்களிலேயே அவர் வாய்க் கிண்டலை தவிர்த்து விட்டு நான் வருவதை பார்த்த உடனேயே வெகு அனிச்சையாக செய்தித் தாளின் துண்டில் முட்டை போண்டாவை மடித்து எடுத்து ஒரு நக்கலான உடல் மொழியில் என்னை நோக்கி நீட்டிக் கொண்டு நிற்பார். நான் வெட்கமும் கூச்சமும் மகிழ்ச்சியுமாய் அவற்றை வாங்கிக் கொள்வேன்.

……..

பத்தாம் வகுப்பிற்குள் நுழையும் வரை எனது பள்ளி வாழ்க்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அப்பா எப்படியும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என்னை வந்து பார்த்துக் கொண்டிருந்தார். மதுரை சென்ட்ரல் மார்க்கெட் கமிஷன் கடைக்கு ரெகுலராக தக்காளி அனுப்பிக் கொண்டிருந்த சமயங்களில் அவர் வாரம் ஒருமுறை கூட வந்ததுண்டு. தக்காளி நன்றாக விலை போகும் நாட்களில் அப்பா டவுன்ஹால் ரோட்டிலிருந்த சிலோன் ஓட்டலிலிருந்து பிரியாணி பொட்டலம் வாங்கி வருவதுண்டு. நான் சாப்பிட்டு முடிந்தவுடன் அவர் என்னை ஜெனிபர் ஸ்டோருக்கு அழைத்துப் போய் தேவைக்கும் கூடுதலாக சோப்பு, பவுடர், எண்ணெய் பிஸ்கட்டுகள் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பார். அந்த சமயங்களிலெல்லாம் சரியாக பஸ் ஏறுவதற்கு முன்பு ‘சில்லறை இல்லை’ என்று லேசான முனங்களோடு, வழக்கமாகக் கொடுக்கும் முப்பது ரூபாய்க்கு பதிலாக ஐம்பது ரூபாய் கொடுப்பார்.

நான் பத்தாம் வகுப்பிற்கு போன பிறகுதான் அப்பாவின் வருகை குறைந்தது. ஆரம்பத்தில் மாதம் ஒரு முறை பார்க்க வந்தவர் அதன் பிறகு இரண்டு மூன்று மாதங்களுக்கு வரவே இல்லை. நான் போஸ்ட் கார்டில் பணம் கேட்டு எழுதிப் போட்டேன். சனிக் கிழமைகளிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஸ்டடி ஹாலில் ஜன்னல் ஓர இருக்கையில் இடம்பிடித்து அப்பாவை எதிர்நோக்கி கூழாங்கற்களில் விழுந்து ஒழுகும் வெயிலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

விளையாட்டு வேடிக்கை என்று எதிலேனும் மனதை செலுத்தியிருக்கலாம், கையில் காசில்லாத அந்த நாட்களில் உள்ளே வெறுமைகள் சூழத் தொடங்கின. எவ்வளவுதான் பார்த்துப் பார்த்து செலவு செய்தாலும் எண்ணையும் சோப்பும் தீர்ந்து போவதை தவிர்க்க இயலவில்லை. விடுதியின் கேட்டைத் தாண்டி மெயின் ரோட்டிற்கு போக இயலாத நிலை என்னை குலைத்துப் போட தொடங்கியிருந்தது. நான் கவனம் இழக்கத் தொடங்கினேன். வகுப்புத் தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைந்து கொண்டே வருவதை கவனித்த சிதம்பரம் சார் கோபமடைந்தார். “டிஸ்ட்ரிக்ட் லெவல்ல ரேங்க் எடுப்பன்னு பாத்தா நீ என்னடா வௌக்கெண்ண போகப் போக கீழ போய்க்கிட்டு இருக்க” என்று அவர் திட்டிய போது எனக்கு கண்ணீர் முட்டியது.

இந்த சமயத்தில்தான் விடுதியில் சாப்பாட்டின் தரம் குறைந்து விட்டதாக மாணவர்கள் பரவலாக பேசிக் கொண்டார்கள். செவ்வாய்க் கிழமை காலையிலும், வியாழக்கிழமை காலையிலும் போடப்படும் தோசையில் எண்ணெய்க்காறல் தூக்கலாக அடித்தது. எனக்கு சாப்பிட்ட தோசை உள்ளே போன பத்து நிமிடங்களில் வாந்தி வருவது போல குமட்டிக் கொண்டு வந்தது. நிலைமை இன்னும் மோசமாவது போல் திங்கள் கிழமை காலையில் நான் விரும்பி சாப்பிடும் பொங்கலிலிருந்தும் விரும்பத்தகாத நாற்றம் வந்தது. 

விடுதிக்கு தேவையான மளிகை ஜாமன்கள் இப்போதெல்லாம் பள்ளியின் செக்ரட்டரி ஒருவரின் கடையிலிருந்து வருவதாகவும் அவர் காலாவதியான எண்ணெய் பருப்பு டால்டா போன்றவற்றையெல்லாம் விடுதிக்கு தள்ளி விடுவதாகவும் தமிழரசன் கொளுத்திப் போட்டான். பன்னிரண்டாம் வகுப்பு அண்ணன்மார்கள் தலைமை வார்டன் கண்ணன் சாரிடம் புகார் சொல்லியும் ஒன்றும் எடுபடவில்லை அவர், ‘அதே காசுக்கு அதே சாப்பாட போடுன்னா எப்பிடிரா முடியும்? மெஸ் பில்ல ஒரு நூறு ரூவாய கூட்டுன்னா அய்யய்யோ ஆத்தப்பான்னு கத்துறீங்க’ என்று அவர்களின் மேல் பாய்ந்தார்.

எனக்கு காலை பத்தரை பதினொரு மணிக்கெல்லாம் கடுமையாக பசிக்கத் தொடங்கியது. குழாய் தண்ணீரை விழுங்க கசப்பாக இருந்தது. பின் வந்த காலங்களின் பலமுறை நினைத்துப் பார்த்திருக்கிறேன், அந்த சமயங்களில் ஒரே ஒரு பிஸ்கெட் கிடைத்திருந்தால் கூட அதை சாப்பிட்டு விட்டு வயிறு நிறைய தண்ணீர் குடித்திருந்திருக்கலாம். 

நான் மெலியத் தொடங்கியிருந்தேன். செல்வேந்திரனின் கடைப்பக்கம் போய் மாதங்கள் ஆகியிருந்தன.

……..

தூக்கம் கெட்டு விழித்த ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், சென்ட்ரல் மார்க்கெட்டில் கமிஷன் கடை வைத்திருக்கும் தங்கம் மாமாவைப் பார்த்து செலவுக்கு கொஞ்சம் பணம் வாங்கி வந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றவே, பூபாதிராஜாவிடம் ஐந்து ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு பெரியார் நிலையத்திற்கு பஸ் ஏறினேன். 

நான் கடைக்கு போன போது தங்கம் மாமா அங்கே இல்லை. அவருடைய பார்ட்னர் தொந்தி கிருஷ்ணன் பாயில் அமர்ந்து கணக்கு எழுதிக் கொண்டிருந்தார். எப்போதும் போலவே அவரின் கனத்த தொப்பை அவர் கணக்கு எழுதிக் கொண்டிருந்த டேபிளின் பாதி பகுதியை அடைத்துக் கொண்டு வீழ்ந்து கிடந்தது.

நான் கடைக்கு முன்பு கொட்டப் பட்டிருந்த தக்காளி கூடைகளுக்கு மத்தியில் நின்று கொண்டு அவர் திரும்பி தெருவைப் பார்ப்பார் என்று காத்திருந்தேன். இயல்பாகவே கொஞ்சம் மந்தமான தொந்தி கிருஷ்ணன் பேரேட்டைப் பார்க்கிறாரா அல்லது தூங்குகிறாரா என்று அனுமானிக்க முடியாத வகையில் தலையைக் குனிந்து அசையாமல் அமர்ந்திருந்தார். பாயக் காத்திருந்த அவமானத்தை உணர்ந்த நான் முதலில் மெதுவாகவும் பின்பு சத்தத்தை அசாதரணமாக கூட்டியும்  கிட்டத்தட்ட கத்துவது போல் அழைத்த பிறகு தொந்தி கிருஷ்ணன் எந்த ஒரு திடுக்கிடலும் இல்லாமல் சதைகளுக்குள் கிடந்த அவரின் கண்களை சிரமத்துடன் உயர்த்தி, ‘வாப்பா.. ஒங்க மாமா வசூலுக்கு போயிருக்காப்பல. வர்ர நேரம்தான். வந்து ஒக்காரு’ என்று இடது கையை வீசி உள்ளே அழைத்தார். அவரின் கை வீசலில் இருந்த அலட்சியம் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியாததாக இருந்தது. நான் மெதுவாக படியேறி கடைக்குள் சென்று பாயில் அமர்ந்தேன்.

அப்பாவுடன் பல முறை வந்த கடைதான். அப்போதெல்லாம் அப்பாவை பார்த்தவுடனேயே கடை பரபரப்படையும். சிட்டையை எழுதி முடிக்கும் முன்பு இரண்டு மூன்று முறை டீ கொண்டு வந்து உபசரிப்பார்கள். ஒரு முறை நான் சாப்பிட ஒரு சிறிய மில்க் பிக்கிஸ் பிஸ்கெட்டை வாங்கிக் கொண்டு வந்ததற்காக கடைப் பையனை தங்கம் மாமாவும் தொந்தி கிருஷ்ணனும் மாறி மாறி கெட்ட வார்த்தைகளில் திட்டி கிட்டத்தட்ட அடிப்பது போல் போய்விட்டார்கள். அவன் திரும்பவும் கடைக்கு ஓடிப் போய் எனக்கு பெரிய க்ரீம் பிஸ்கெட் பாக்கெட் ஒன்றை வாங்கி வந்து கொடுத்த பிறகும் திட்டுக்களின் வீரியம் குறைந்தபடில்லை. 

எல்லா காட்சிகளும் மாறிக் கொண்டு வருவதை அந்த சின்ன வயதிலும் என்னால் அவதானிக்க முடிந்தது. மலைராமன் ரெகுலர் சர்வீஸ் லாரியில் தக்காளி கூடை சுமந்து கொண்டிருந்த தங்கம் மாமாவை, அப்பாதான் திட்டி, பத்தாவது படிச்ச பைய ஏண்டா கூட தூக்கிட்டு அலையுற என்று சொல்லி பாண்டி நாடார் கமிஷன் கடையில் கணக்கு எழுத சேர்த்து விட்டதாக ஊருக்குள் சொல்லிக் கொள்வார்கள். பின்னர் தங்கம் மாமா கமிஷன் கடையின் சுளிவுகளை கற்றுக் கொண்டு வந்து, ஒரு வெக்கை நிறைந்த பங்குனி மாத மாலையில் அப்பாவிடம் தனியாக கடை வைக்க உதவி கோரி நின்ற போது நான் அப்பாவின் அருகில்தான் அமர்ந்திருந்தேன். அப்பா மறுநாள் காலையில் தங்கம் மாமாவை தேனி எல்எஸ் காட்டன் மில்லுக்கு அழைத்துப் போய் பர்ஸ்ஸிலிருந்த பணம் முழுவதையும் எடுத்து கடை அட்வான்ஸிற்கு கொடுத்தார்.

அன்று நான் தொந்தி கிருஷ்ணனுக்கு முன்னால் பசியோடு அமர்ந்திருந்தது என் வாழ்நாள் முழுமைக்கும் ஆழ் உறக்க கனவுகளில் வேறு வேறு படிமங்களில் வந்து போயிருக்கிறது. அவர் என்னிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. கணக்கு நோட்டில் மும்முரமாக இருப்பது போல் இருந்தார். கடைப் பையன் அவருக்கு டீ கொண்டு வந்து கொடுத்தபோது எனக்கும் ஒன்று கொடுக்கச் சொன்னார். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.

தங்கம் மாமா மணி பன்னிரெண்டைத் தாண்டிய பிறகு கடைக்கு வந்தார். ஒழுகும் வெயிலில் பிண்ணனியில் அவர் தன் கறுத்த முகமெல்லாம் வியர்த்து எண்ணெய் வடிய படியேறி பாயில் அமர்ந்திருந்த என்னைக் கடந்து நகர்ந்த போது அவரின் பின்பக்க வெள்ளைச் சட்டை தண்ணீரை மோந்து ஊற்றியது போல் உடம்போடு ஒட்டிக் கிடந்ததை கவனித்தேன்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. தங்கம் மாமா தொந்தி கிருஷ்ணனின் அருகே போய் அமர்ந்த போது, களைப்புடன் உஸ் என்றோ அப்பாடா என்றோ ஒரு வார்த்தை சொல்லவில்லை. உட்கார்ந்த வேகத்தில் ‘ஒரு கூதி மகனும் போனா போன நேரத்துக்கு காச எடுத்து வக்க மாட்டேன்றாய்ங்க. நாய் பொலப்பு’ என்று தன்னிடம் காய்கறிகள் வாங்கிக் கொண்டு போன சில்லரை வியாபாரிகளை திட்டிவிட்டு, பிறகு திடீரென்று, கடைக்கு வெளியே சாக்கு தைத்துக் கொண்டிருந்த கடைப் பையனைப் பார்த்து ‘ங்கோத்தா பேன கூட்டி வைடா. செத்தவங் கையில வெத்தல பாக்கு கொடுத்தது மாதிரி சுத்திக்கிட்டு இருக்கு’ என்று கத்தினார்.

நான் எதற்காக வந்திருக்கிறேன் என்பது அவருக்கும் புரிந்திருக்க வேண்டும். என்னைப் பார்ப்பதை தவிர்த்து விட்டு, ஒரு பேரேட்டை எடுத்து வைத்துக் கொண்டு கிருஷ்ணனிடம் வரவு செலவுகளைக் கேட்டு குறித்துக் கொள்ள தொடங்கினார்.

நான் உயிரைக் கொள்ளும் அமைதியுடன் அவர்களுக்கு எதிரில் அமர்ந்திருந்தேன்.

காலம் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி கரைவதில்லை என்ற உண்மை புரியத்தொடங்கியது. வெகு கவனமாக சிந்தனையை மாற்ற முயன்றபோதும், தங்கம் மாமாவிற்கு டீ சாப்பிடும் பழக்கமில்லை என்ற உண்மை திரும்ப திரும்ப மனதுக்குள் சுழன்று கொண்டேயிருக்க, ஆயாசமாக வந்தது.

…….

மதியம் இரண்டு மணி தாண்டி அவர்கள் உணவிற்காக வீட்டிற்கு கிளம்பும் முன் தங்கம் மாமா வேண்டா வெறுப்பாக எனக்கு ஐம்பது ரூபாய் கொடுத்தார்.

அப்பா கடந்த ஆறு மாதங்களாக அவர் கடைக்கு தக்காளி அனுப்பவில்லையாம். கோபமாகப் பேசினார். ‘லாரி வாடகயப் பாத்த ஆச்சா. வெல வித்தாலும் விக்காட்டாலும் ஒரே எடத்துக்கு அனுப்புனத்தான எல்லாரும் பொழைக்க முடியும். மயிரே போச்சுன்னு தேனிக்காரங்கிட்ட வித்தா, நாங்க எங்க போயி புடுங்குறது’ என்றார். எனக்கு அவமானமாக இருந்தது. 

விருந்திற்கு பின் விழும் எச்சில் இலைகளின் மேல் விழுந்து உருளும் நாய்களின் கொக்கரிப்புகள். அப்பாவைப் பார்த்தால் கூனிக் குறுகி வாலை மடித்து குண்டிக்குள் வைத்துக் கொண்டு கூழைக் கும்பிடு போடும் நாய்கள்.

முன்பெல்லாம் “மாமா சொன்னா சரித்தா” என்பதைத் தாண்டி இவர்கள் ஒரு வார்த்தை பேசியதில்லை.

அன்று உணர்ந்த எல்லா அவமானங்களுக்கு மேலாக, கடந்த எட்டு மாதங்களாகவே தக்காளிக்கு விலையில்லை என்ற உண்மைதான் என்  முகத்தை பலமாக தாக்கியது. அப்பாவின் நிலையை நினைத்து கண்களில் நீர் முட்ட அமர்ந்திருந்தேன்.

……..

சென்ட்ரல் மார்க்கெட்டை விட்டு சிம்மக்கல் நோக்கி பஸ்ஸை பிடிக்க நடந்த போது கடுமையாக பசித்தது. சாப்பிடாமல் விடுதிக்குப் போய் சேர முடியாது என்பதும் விடுதியிலும் இந்நேரத்திற்கு மதிய உணவு முடிந்து போயிருக்கும் என்பதும் உறைக்க, நான் சிம்மக்கல் மெயின் ரோட்டில் இடது புறமாக திரும்பி ஒர்க் ஷாப் ரோட்டிற்கு போய் இரண்டு குஸ்காவும் ஒரு அவித்த முட்டையும் வாங்கி சாப்பிட்டேன். வைத்திருந்த ஐம்பது ரூபாயில் இருபத்தி ஐந்து ரூபாய் காலியாகிப் போனது.

………

நான் முதன் முதலாக சண்முகராஜனின் பெட்டியைத் திறந்து பத்து ரூபாயைத் திருடிய போது என் கைகள் பலமாக நடுங்கின. லேசாக தலை சுற்றுவது போல் இருந்தது. அவன் தன் பெட்டிக்கு நம்பர் பூட்டு போட்டிருந்தான். ஒரு முறை அவன் பூட்டைத் திறக்கும் போது எந்த ஒரு திட்டமும் இல்லாமல்தான் அந்த நான்கு இலக்க எண்ணை மனதில் குறித்துக் கொண்டேன்.

எங்கள் விடுதியில் ஒவ்வொரு அறையிலும் முப்பதிற்கும் மேற்பட்ட மாணவர்களைப் போட்டு அடைத்து வைத்திருந்தார்கள். எப்போதும் பரபரப்புடன் இருக்கும் எங்கள் அறை, மாணவர்கள் காலை ஸ்டடி டைம் முடித்து உணவகத்திற்கு போகும் அந்த சிறிய இடைவெளியில் இளைப்பாறத் தொடங்கும். இளைப்பாறும் பெருமூச்சில் எங்கெங்கோ ஒளிந்திருக்கும் பவுடர் வாசங்களும் எண்ணெய் வாசங்களும் எழுந்து வந்து அறையை நிரப்பத் தொடங்கும். நான் அந்த வாசங்கள் என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க சண்முகராஜனின் பெட்டியைத் திறந்து பணத்தைத் திருடினேன். 

பணத்தை எடுத்துக் கொண்டு கொஞ்சம் தாமதமாக மெஸ்ஸிற்கு போய் பேருக்கு சாப்பிடுவது போல் பாவலா காட்டிவிட்டு வேக வேகமாக செல்வேந்திரன் கடைக்கு ஓடிப் போய் முட்டை போண்டா வாங்கி சாப்பிட்டேன்.

நான் முதன் முதலாக சண்முகராஜனின் பெட்டியைத் திறந்த போதே அதனுள் ஒரு பத்து ரூபாய் கட்டு கிடந்ததைக் கண்டு கொண்டேன். பெரிய தொகையை எடுத்தால் அவன் கண்டுபிடித்து வார்டனிடம் புகார் சொல்லக் கூடும் என்பதால் வெறும் பத்து ரூபாயை மட்டும் எடுத்தேன். ஏற்கெனவே விடுதியில் பணம் திருடு போன புகார்கள் நிறைய இருந்தன. நான் எதிர்பார்த்தது போலவே அவன் பெட்டியிலிருந்து ரூபாய் நோட்டுக்கள் களவு போயிருப்பதை சண்முகராஜன் அறிந்திருக்கவில்லை.

அதன் பிறகு எப்போதெல்லாம் எனக்கு செல்வேந்திரன் கடையில் சாப்பிட ஆசையாக இருந்ததோ அப்போதெல்லாம் சண்முகராஜனின் பெட்டியிலிருந்து பத்து ரூபாயைத் திருடினேன்.

சுமார் ஒன்றரை மாதங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் எல்லாம் சுமுகமாக போய்க் கொண்டிருந்தது. 

அன்றொரு நாள் காலையில் நான் செல்வேந்திரன் கடையில் முட்டை போண்டா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சண்முகராஜன் தன் கூட்டாளிகளான ஸ்டாலின், ரங்கராஜன் ஆகியோர்களை அழைத்துக் கொண்டு வந்து என்னைக் கையும் களவுமாகப் பிடித்தான். 

நேராக கடைக்கு வந்த அவர்கள், செல்வேந்திரனிடம் கல்லாப் பெட்டியை திறக்கச் சொல்லி அதில் இருந்த பத்து ரூபாய் நோட்டுக்களை எல்லாம் வெளியே எடுத்து காட்டச் சொன்னார்கள். 

நோட்டுகளைப் பார்த்துக் கொண்டே வந்த சண்முகராஜன், ஒரு நோட்டைக் கையில் எடுத்து சத்தமாக “மாட்டுனாண்டா மாப்ள” என்று கத்திய போது, ஸ்டாலின் என் பின்னந்தலையில் ஓங்கி அடித்தான்.

அவர்கள் நோட்டின் வெள்ளைப் பகுதியில் சிவப்பு மையில் எஸ்ஆர் என்று சிறியதாக குறித்திருந்தார்கள். 

சண்முகராஜன் செல்வேந்திரனிடம், ‘ஒரு மாசமா காசு காணாம போய்கிட்டு இருந்திச்சுண்ணே. எனக்கு இவம் மேலதான் சந்தேகம். இன்னிக்கு பொறிவச்சு பிடிச்சுட்டோம்ல’ என்றான். அவன் கண்களில் பெருமையும் ஆங்காரமும் கலந்து கிடந்தது.

எனக்கு அடி விழுந்தவுடன் கடையில் ஆட்கள் கூடிவிட்டார்கள். செல்வேந்திரன் என்னை பரிதாபமாகப் பார்த்தார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சண்முகராஜன் என்னை கன்னத்தில் அறைந்து, “ங்கோத்தா, வாடா வார்டன்கிட்ட போகலாம்” என்று சட்டையைப் பிடித்து தூக்கினான்.

செல்வேந்திரன் இடமறித்தார். “ஒங்களுக்குள்ள தகராறு வேணாம். அவம் எம்புட்டு எடுத்தான்னு சொல்லு நான் மொத்தமா, கொடுத்துக்ரேன்” என்று கெஞ்சிக் கேட்டார்.

சண்முகராஜனிடம் எப்போதுமே வயதிற்கு மீறிய பெரியாள் தோரணை உண்டு. அவன் அவரைக் கண்டுகொள்ளவில்லை. கல்லாவிலிருந்த எடுத்த பத்து ரூபாய்க்கு பதிலாக மற்றொரு பத்து ரூபாய் நோட்டைப் போட்டுவிட்டு, இடது கை ஆட்காட்டி விரலை நீட்டி “ஒங்க வேல மயித்த மட்டும் பாருங்க, என்ன” என்று செல்வேந்திரனை எச்சரித்து விட்டு என்னை இழுத்துச் சென்றான்.

…………..

தலைமை வார்டன் கண்ணன் சார் என்னை செவிட்டில் அறைந்து முழங்கால் போடச் சொன்னார். நான் விடுதியிலிருந்து உணவகத்திற்கு போகும் வழியில் வராண்டாவில் முழங்கால் போட்டிருந்தேன். தலையை நிமிர்த்தவே இல்லை. ஆயிரம் கண்கள் என் மேல் மொய்த்துக் கிடப்பதை உணர முடிந்தது. மற்ற வார்டன்கள் அந்தப் பக்கம் போகும் போதும் வரும்போதும் என்னை அடித்தார்கள். வார்டன் பெரியசாமி சார், “நல்லா படிச்சா மட்டும் போதுமா? கேரக்டர் வேணுமில்ல” என்று சொல்லி பிரம்பால் அடித்தார்.

யார் போய் சொன்னார்கள் என்று தெரியவில்லை. மறுநாள் காலையில் அப்பா என்னைப் பார்க்க வந்தார். 

அவர் ஒன்றும் சொல்லவில்லை. முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது.

தலைமை வார்டன் கண்ணன் சார் அப்பாவிடம் தன்மையாகப் பேசினார். “நல்லா படிக்கிற பையன். ஏதோ ஒரு சபலத்துல இப்பிடி பண்ணிட்டான். விசயம் எச்எம் வரைக்கும் போயிருச்சு. நீங்க அவரப் பாத்து பேசிடுங்க” என்றார்.

தலைமை ஆசிரியர் என் தந்தையின் முன்னால் என்னை கன்னத்தில் அறைந்தார்.

அவரின் வயதான, நடுங்கும் கைகளிலிருந்து அவ்வளவு பலமான அடியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவர் அப்பாவைப் பார்த்து கோபமாக, “நல்லா படிக்கிறானேன்னு பாக்குறேன். இல்லன்னா இப்பவே டீசிய கிழிச்சு கொடுத்துருவேன்” என்று ஆரம்பித்து கிட்டத்தட்ட கத்துவது போல் ஏதேதோ சொல்லிக் கொண்டு போனார். அதிகாரம் அறை முழுவதையும் நிரப்பி மூச்சு முட்ட வைத்தது. பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த அப்பா திடீரென்று அவரின் பேச்சை இடமறித்து, “இல்லைங்க சார். நீங்க டீசிய குடுத்துருங்க. இனிமே இவனால இந்த ஸ்கூல்ல படிக்க முடியும்ன்னு எனக்கு தோணல” என்றார்.

எனக்கு ஒரு வருடப் படிப்பு பாழாய் போனது.

அதன் பிறகு வேறு பள்ளி, வேறு சூழல். படிப்பிற்கும் முனைப்பிற்கும் குறைவில்லைதான். ஆனாலும், அவமானத்தின் வெற்றிடத்தை நிரப்பிய நஞ்சு எப்போதும் அரித்துக் கொண்டுதான் இருந்தது. மதுரையிலிருந்து தேனிக்கோ, தேனியிலிருந்து மதுரைக்கோ பேருந்தில் போக நேர்ந்த போதெல்லாம் பெரும் தவிப்புக்கு உள்ளாகி, தலையைக் குனிந்து கொண்டு நான் படித்த பள்ளியைப் பார்ப்பதை தவிர்த்து வந்தேன்.

………..

வலதுபுறம் பள்ளியின் வளாகம் தென்பட்ட உடனேயே வண்டியின் வேகத்தைக் குறைத்து இடது பக்கமாக செல்வேந்திரனின் கடையை தேடத் தொடங்கினேன். செல்வேந்திரன் கடை இருந்த இடத்தில் ஒரு பேக்கரி கடை இருந்தது. பக்கத்தில் இருந்த ஜெனிபர் ஸ்டோரையும் காணவில்லை. எல்லாவற்றையும் இடித்து ஒரு ஷாப்பிங் காம்பளக்ஸ் கட்டியிருந்தார்கள்.

நான் காரை விட்டிறங்கி திவ்யாவிடம் ஒன்றும் சொல்லாமல் பேக்கரி கடையை நோக்கி போனேன்.  ஏற்கெனவே கோபத்திலிருந்த அவள் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பது என் முதுகிற்கு பின்னால் உணர முடிந்தது.

பேக்கரியில் செல் போனை நோண்டிக் கொண்டிருந்த இளைஞனிடம் ஒரு தண்ணீர் பாட்டில் வேண்டுமென்று கேட்டு விட்டு, “செல்வேந்திரன்னு ஒருத்தர் இங்க கட வச்சிருந்தார். அவர தெரியுமா?” என்று கேட்டேன். 

அவன் இல்லை என்று மட்டும் தலையாட்டினான். 

“பக்கத்துல ஜெனிபர் ஸ்டோர்னு ஒன்று இருந்திச்சு”

அவன் “தெரியல்ல சார்” என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு மீண்டும் செல்போனை நோண்டத் தொடங்கினான். 

நான் அவனின் கடை விட்டிறங்கி பக்கத்தில் இருந்த ஜெராக்ஸ் கடையில் விசாரித்தேன். அவர்கள் இந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டி முடிக்கப்பட்டே ஏழெட்டு ஆண்டுகள் முடிந்து விட்டது என்றும், இந்த வரிசையில் இருந்த எல்லாக் கடைகளையும் ஒரு முன்னாள் எம்மெல்ஏ விலைக்கு வாங்கி இடித்து விட்டு ஷாப்பிங் காம்பளக்ஸ் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார் என்றும் சொன்னார்கள்.

மதுரைக்கு வந்தவுடனேயே வந்த சந்தேகம்தான். ஆனாலும் எனக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது.

இதோ இந்த இடத்தில்தான் நான் டீஸியை வாங்கிக் கொண்டு அப்பாவுடன் திரும்பி வந்த போது செல்வேந்திரன் என்னை பிடித்துக் கொண்டார்.

“அட முட்டாப் பயலே, வட வேணும் போண்டா வேணும்ன்னா எங்கிட்ட நேரா கேட்டுருக்கலாமில்ல. நாம் பாட்டுக்க கொடுத்துட்டு கணக்கெளுதி வச்சுட்டு ஒங்கப்பா வர்ரன்னிக்கி காச வாங்கிட்டு போறேன். இதுக்குப் போயி இப்பிடி பண்ணிக்கிட்டு” என்று சிரித்தார். 

அவர் சிரித்த போது உடைந்து போன காரை பற்கள் தனித்தனியாக தெரிந்தன.

நான் டீஸி வாங்கிக் கொண்டு பள்ளியை விட்டு போவதாய் என் அப்பா சொன்னதும் மிகவும் வருத்தப்பட்டார்.

அப்பாவை வம்படியாக பிடித்து இழுத்துக் கொண்டு போய் கடைக்குள் அமர வைத்து டீ போட்டுக் கொடுத்தார்.

“இதுக்கு போயி யாராவது டீஸி வாங்கிட்டு போவங்களா?. இவன் நல்லா படிக்கிற பையன்னே” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார்.

ஏமாற்றத்துடனும் கலக்கத்துடனும் நான் நின்று கொண்டிருந்த இடம் இதுதான். இந்த இடத்திலிருந்துதான் நான் எனக்கான இந்த சிறிய உயரத்தை தொட்டிருக்கிறேன்.

அன்று மட்டுமல்ல, அதன் பின்பும் இன்று வரையிலும் அந்த நிகழ்வைப் பற்றி அப்பா என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. செல்வேந்திரன் அன்று அதை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. கம்புடேஷனல் பயாலஜி உலகின் முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவன் என்று பீற்றிக் கொள்ளும் நான், இது வரை என் பள்ளி வாழ்க்கையைப் பற்றி மனைவியிடம் ஒரு தடவை கூட வாய் திறந்ததில்லை. அவமானமாக இருந்தது.

ஏனோ அந்த தருணத்திலும் ‘மெனக்கெடாமல் விடுதலையில்லை’ என்று லியோனல் ராபர்ட்ஸன் சொன்ன வாக்கியம் நினைவிற்கு வந்தது.

நான் திரும்பி வந்து காரில் அமர்ந்த போது இருளடைந்து போய்க் கிடந்த என் முகத்தைப் பார்த்த திவ்யா ‘என்னாச்சு’ என்று கவலையாகக் கேட்டாள்.

எத்தனை காலத்திற்குத்தான் பாரங்களை சுமப்பது.

நான் மீண்டும் காரை விட்டிறங்கி, பாட்டிலிலிருந்த தண்ணீரை ஊற்றி முகத்தை அழுத்தி கழுவினேன். என்னுள்ளிருந்து பெருமூச்சொன்று வெகு இயல்பாக வெளிவந்து மறைந்தோடியது. ‘யாரையும் பார்க்காமல் திரும்புவதற்கா இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்?’

திவ்யா விடாமல் என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். நான் காரில் மீண்டும் ஏறியவுடன் அவளின் கண்களைப் பார்த்து புன்னகையுடன் ‘திவ்யா, அன்னஞ்சிக்கு போறதுக்கு முன்னாடி ரெண்டு வேல செய்றோம்” என்று சொல்லி விட்டு, எதிரே இருந்த பள்ளியைக் காட்டி, “இதோ இதுதான் நான் பத்தாவது வரை படிச்ச ஸ்கூல். உள்ள ஒரு ரைடு போய் ஸ்கூலையும் ஹாஸ்டலையும் பாக்குறோம். அப்புறம், போற வழியில யுனிவர்சிட்டிக்கு பக்கத்துல தென்பழஞ்சின்னு ஒரு ஊர் இருக்கு. அங்க செல்வேந்திரன்னு ஒருத்தர பார்க்கப் போறோம். தென்பழஞ்சிதான் செல்வேந்திரனுக்கு சொந்த ஊர். ஆனாலும் அவர் அங்கதான் இருப்பாரான்னு உறுதியா தெரியல. இருந்தாலும் போறோம். அவர் எனக்கு ரொம்ப முக்கியமானவர். இதுக்கு இடையில, ஏதாவது ஒரு கடையில வண்டிய நிறுத்தி முட்ட போண்டா வாங்கி சாப்பிடுறோம். அதுக்கு முன்னாடி முட்ட போண்டாவை எப்பிடி செலக்ட் பண்ணனும் அத எப்பிடி சாப்பிடணும்றத உனக்கு வௌக்கமா சொல்லுறேன்’ என்று மூச்சு விடாமல் பேசி முடித்தேன்.

திவ்யா என்னை கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருந்தாள்.


Discover more from சொல்வனம் | இதழ் 361 | 22 பிப் 2026

Subscribe to get the latest posts sent to your email.

6 Replies to “முட்டை போண்டா”

  1. செல்வேந்திரன் நினைவில் நிற்கிறார். முட்டை போண்டாவின் சுவையைவிட செல்வேந்திரன் என்ற பாத்திரத்தின் சுவை அலாதியாக வந்திருக்கிறது. அருண் தங்கராஜ் கதையை அழகாக செதுக்கியிருக்கிறார்.

  2. நல்ல சிறுகதை. இன்றைய நாளை மிகவும் நிறைவுள்ளதாக மாற்றிவிட்டது. நினைவுச் சித்தரிப்புகளை ஒரு கிரியா ஊக்கியாக அவன் கண்டடைவது ஒரு முக்கியமான புள்ளி. நிறமாற்றத்தை வைத்து சுவையான போண்டாவைக் கண்டறிவதை ஒரு கலையாக அறிந்து வைத்திருப்பது போலவே, நினைவுத்தொகையிலிருந்து தனக்குத் தேவையான விசையைக் கண்டறிந்து எடுத்துக்கொள்வதும் ஒரு கலை. கறைபடிந்த பல்வரிசையைக் காட்டுச் சிரிக்கும் போண்டாக் கடைக்காரரும் சில்லறை இல்லப்பா என சொன்னபடி ஐம்பது ரூபாய் நோட்டு அளித்துவிட்டுச் செல்லும் அப்பா பாத்திரமும் என் நெஞ்இல் பதிந்துவிட்டார்கள். தங்கராஜுவுக்கு வாழ்த்துகள்.

    அன்புடன்
    பாவண்ணன்

  3. அழகான கதை. அகவிடுதலை அடையும் கதாநாயகன், அவனுக்கு பின்புலமான அப்பா, போண்டா கடைக்காரர், அலுவலக மேலாளர், அப்பாவின் நண்பர்கள் என எல்லா பாத்திரங்களும் சிறப்பாக வந்துள்ளன.

Leave a Reply to Radha BalaCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.