நேற்றைய மனிதர்கள் – புராண முறைகளின் மரணம்

Yesterday’s Men – The death of the mythical  methodSource: https://harpers.org/archive/2024/07/yesterdays-men-alan-jacobs/ by Alan Jacobs

[1]

1980 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் ஒரு நாள், என் கல்லூரி படிப்பின் முதல் செமஸ்டரில், ஆங்கிலத் துறைக்குச் செல்லும் வழியில் ஒரு சக மாணவனைச் சந்தித்தேன். கையில் காகிதங்களோடு ஒரு பெஞ்சில் எதையோ பார்த்தபடி அமர்ந்திருந்தான். “என்ன நடந்தது?” என்று நான் கேட்டபோது, அவனது பேராசிரியர்களில் ஒருவர் அவன் எழுதிய கட்டுரையை திருத்தித் திரும்பக் கொடுத்து, அது இலக்கிய விமர்சகர் நார்த்ரப் ஃப்ரை (Northrop Frye) என்றவரின் கருத்துக்களைச் சார்ந்து தவறாக எழுதப்பட்ட கட்டுரை என்று கூறியதாகச் சொன்னான். ஃப்ரை “நேற்றைய மனிதர்” என்று பேராசிரியர் எழுதியிருந்தார். “நேற்றைய மனிதர்” என்று என் சக மாணவர் மீண்டும் சொன்னார். “அதன் அர்த்தம்தான்  என்ன?”

சில வருடங்களுக்கு முன்னர் வரை, ஆங்கிலம் பேசும் உலகில் மிக முக்கியமான இலக்கிய விமர்சகராக கருதப்பட்ட ஃப்ரை இப்போது, பார்த் (Barthes) மற்றும் டெரிடா (Derrida) போன்ற பெயர்களால் மறைக்கப்படுகிறார். எனது கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு சில வாரங்களுக்கு முன்பு, ஒரு பேராசிரியர் என்னை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று அந்தப் பெயர்களை எனது காதுகளில் கிசுகிசுத்தார்; ஏதோ புதிய உள்வட்டத்தில் வரவேற்கப்பட்டதாக உணர்ந்து, பார்ட், டெரிடா என்று குறிப்பு எடுத்துக்கொண்டேன். அந்த நிகழ்வே என் சக மாணவர் அடைந்த குழப்ப நிலையை நான் அடையாமல் தடுத்தது. 

 ஃப்ரை தன் மகத்தான படைப்பான “விமர்சனத்தின் கூறுபாடு”  என்ற நூலில் புராணம், தொன்மை வகை, சடங்கு, குறீயீடு போன்றவை சேர்ந்து உருவாக்கும் உயர்ந்த கோபுர வடிவுக்குள் ஒவ்வொரு இலக்கிய படைப்பும்  உள்ளடங்கும் என்கிறார். விர்ஜில் கவிதையின் ஒரு குறீயீட்டை ஷெல்லியின் கவிதையில் இணைத்து, ஷேஸ்பியர் படைப்பின் ஒரு பழமை சடங்கை ஜார்ஜ் எலியட் யோடு  சேர்த்து – இலக்கிய கற்பனையில் ஒரு வகைமாதிரியை  ஃப்ரை உருவாக்கினார். கலையாத, அடுக்கி வைத்தது போல் இருக்கும் நேர்த்தியான மனங்களுக்கும், ஒரே போன்ற ஆன்மீக தேடல் கொண்டவர்களுக்கும் அந்த வகைமாதிரியே போதுமானதாக இருந்தது. 

பின் வந்த ஜாக் டெரிடா எல்லா கட்டமைப்பும் தானே தன்னை எப்படியோ உடைத்துக்கொள்ளும் என்ற கருத்தை முன்வைத்தார். அது சரியாகப் புரியவில்லை என்றாலும், முன் வந்த கருத்துக்கு எதிரான ஒன்று என்று மட்டும் புரிந்தது. 

சில குறிப்பிடத்தக்க சிந்தனையாளர்கள் “விவாத முறையின் தோற்றுவாய்”  என்று  மிஷெல் ஃபூகோ குறிப்பிடுகிறார். அத்தகைய சிந்தனையாளர்களின் கருத்துக்கள் இன்னும் பல நூல்கள் எழுத காரணியாக இருந்தன என்கிறார். உதாரணத்திற்கு, சிக்மண்ட் பிராய்டின் கருத்துக்கள் பல தசாப்தங்கள் வலிமையாக இருந்தன. W.H .ஆடன் “கருத்துக்களின் காலநிலை” என்று பிராய்ட்டின் நினைவு அஞ்சலிக் கவிதையில் கூறுகிறார். ஆனால் பிராய்டின் கருத்துக்களும் காலப்போக்கில் தங்களது முடிவைச் சந்தித்தன. அதே போல், குறுகிய காலம் மட்டும்  மிகுந்த இலக்கிய கலாச்சார கவனிப்பு பெற்ற ஃப்ரை – நேற்றைய ஒன்றாக மாறிவிட்டார். அவருடைய இலக்கிய கோட்பாடுகள் எதுவும் சமகாலத்தில் பொருந்தாத ஒன்றாகவே இருக்கிறது. 

இத்தகைய சிந்தனையாளர்கள் நம்மை பாதிப்பதை நிறுத்தும் போது, அவர்களின் உழைப்பில் எது நம்மை முதலில் ஈர்த்தது என்பதே இயல்பாக தோன்றக்கூடியது.  தொன்ம விமர்சனங்களின் எது 

இருபதாம் நூற்றாண்டின் மூன்றாவது காலாண்டை முழுதும் ஈர்த்தது? அவை எதை நிறுவ முயற்சி செய்தது? எந்த கேள்விகளுக்கு பதில் அளித்தது? எதனால் மறைந்து போனது? அவை எதிர்காலத்தில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வேறு வடிவத்தில் வரக்கூடுமா?   

[2]

பெருமளவில் பாதித்த கருத்தோ அல்லது கருத்துக்களின் தொகுப்போ – அவற்றின்  மூலத்தை அறிவது என்பது வீண் செயலே, ஏனெனில் அசல் சிந்தனைவாதியும் சற்றேனும் கடனாக சில கருத்துக்களை பெற்றிருக்க கூடும். நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம். 18 ஆம்  நூற்றாண்டில் ஜியாம்பட்டிஸ்டா விக்கோ சட்டத்துறையில் பேராசிரியராக வேண்டி நேபிள்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் சேர்ந்தார். ஆனால் அவரின் நம்பிக்கை பொய்யாக,  உரையாடல்/பேச்சுக்கலையின் பேராசிரியாக பின்னாளில் பணியாற்றினார். பெரிய அங்கீகாரமற்ற, வருமானமும் இல்லாத பணியானாலும், விக்கோ தன் முயற்சிகளை விடாது தொடர்ந்தார். 1725 ல் அவரின் வாழ்நாள் சாதனை படைப்பை உருவாக்கினார். ஆண்டுதோறும் பெயர் மாறிக்கொண்டே இருந்த அந்த மகத்தான படைப்பு, 1744ல்  ஜியாம்பட்டிஸ்டா விக்கோவின் “தேசங்களின் பொது இயல்பை குறித்த புதிய அறிவியலின் கோட்பாடுகள்” என்று பெயரில் வெளியானது. 

விக்கோவின் முதன்மையான வாதங்களில் ஒன்று, நாகரிகங்கள் எழும், விழும், ஆனால் அதன் வீழ்ச்சி அவற்றை ஆரம்ப நிலைக்கே கொண்டு செல்வதில்லை என்பதே. மீண்டும் கட்டமைத்து ஆரம்பிக்கக்கூடிய சில அடித்தளம் எப்போதும் மீதமிருக்கும். அத்தகைய நேரங்களில், அரசியலின் முக்கிய சவால் என்பது தவிர்க்க முடியாத வீழ்ச்சிகளின் பாதிப்பை குறைப்பதும், காட்டுமிராண்டித்தனத்தின் எல்லையை குறுக்குவதும், படிப்படியாக முன்னேற்றத்திற்கான நம்பிக்கையை உண்டாக்குவது தான். இத்தகைய நம்பிக்கை, பிற காரணங்களுக்காக இல்லாவிட்டாலும், சமய காரணங்களுக்காக அவசியமானது என அவர் கருதுகிறார். அந்தப் புத்தகத்தின் இறுதி வாக்கியத்தில் அவர், “ஒருவர் பக்திமானாக இல்லாவிட்டால், உண்மையில் ஞானியாக இருக்க முடியாது,” என கூறுகிறார்.

நம்முடைய சரிவு பல சமயங்களில் பேரிழப்பாகக் காரணம்  முன்னோர்களின் வழி பெற்ற ஞானத்தை புறக்கணித்தலே என்று விக்கோ நம்புகிறார். பன்னிரண்டாம் நூற்றாண்டு காட்டுமிராண்டி காலம் என்று சொல்லும் விக்கோ, பிரான்ஸில் அது கட்டுக்குள் இருக்க முக்கிய காரணங்களாக பீட்டர் லம்பார்ட்டின் “மிகவும் நுட்பமான” இறையியல் நம்பிக்கையும், மறுபுறம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மதகுரு டர்பின் அவர்களின் வரலாற்று எழுத்துக்களுமே என்கிறார். தங்களுடைய மரபார்ந்த கலாச்சார பண்புகளை அவர்களின் படைப்புகளில் பயன்படுத்தியதற்காக அவர்களை பாராட்டுகிறார். இதற்கு எதிராக, விக்கோவின் சமகாலத்திய தத்துவாதிகளான டெஸ்கார்ட்ஸ் மற்றும் அவர் வழி வந்தவர்கள் இந்த தொன்மைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டவில்லை. மாறாக, நுண் வடிவில் இருக்கும் கோட்பாடுகளை ஆராய்வதிலே அவர்கள் முனைந்தனர். மாணவர்களை இறுக்கமான கருத்தியல் சிந்தனை முறைக்கு உட்படுத்துவதை “அறிவுசார் காட்டுமிராண்டித்தனம்” என விக்கோ கண்டிக்கிறார். மேலும், இத்தகைய பார்வையால் மாணவர்கள் “வாழ்க்கை முழுதும் பலவீனமான சிந்தனை முறையே கொள்வர்,” என எச்சரிக்கிறார்.           

டெக்கார்ட் (Descartes)  போன்று பகுத்தறிவு தத்துவார்த்த முறையைக் கொள்ளாதவர்கள், தத்துவம், மெய்யியல்  பார்வை, ஞானம் அற்றவர்கள் என்று சொல்லமுடியாது என்று நம்பும் விக்கோ,  மாறாக அவர்களின் ஞானம் வேறு வகையானது என்றும். அதை “கவித்துவ ஞானம்” என்று அழைக்கிறார். அது பரந்து, கலாச்சார காரணிகளால் திரண்ட ஒன்றே அன்றி தனிமனித திறமையால் அன்று  என்று சுட்டும் விக்கோ, ஹோமர் என்பவர் வரலாற்றில் வாழ்ந்த ஒரு மனிதர் அல்ல, அவர் கிரேக்க மக்களின் கூட்டு கவித்துவ ஞானம்.  கவிதையும், தொன்மமும் பண்பாட்டை உருவாக்கிய வரலாற்று பின்னணியில், நவீன சிந்தனையை இணைத்து ஒரு புதிய பார்வையை கொள்ளுதலே என்றுமான முன்னேற்றத்தை கொடுக்க கூடும் என்கிறார். தொன்மங்கள் என்பவை வெறும் கட்டுக்கதைகள் என்று புறம் தள்ளக்கூடியவை அல்ல, மாறாக ஞானத்தை பாதுகாத்து கைமாற்றி அளிக்கக்கூடிய மெய்யியல் நுண்ணறிவு திறன் கொண்டவை என்கிறார். 

தொன்மைகளின் முக்கியத்துவம் சார்ந்த அவருடைய முயற்சிகள், உலகளாவிய தத்துவத்தை அடையும் பொருட்டே இருந்தது. ஆனால் அத்தகைய ஒரு தத்துவத்தை அடைய, தொன்மை உருவாக்கல் முறையும், அது ஒவ்வொரு பண்பாட்டுக்கும் எப்படி மாறுகிறது என்பதை குறித்த புரிதலும் நமக்கு அவசியம். அத்தகைய புரிதல், தெளிவான ஆழமான மொழியியல் ஆய்வால் மட்டுமே சாத்தியப்படும்.  குறீயீடுகள், படிமங்கள், அதையொட்டி ஒரு மொழியில் கொடுக்கப்பட்ட கருத்துக்கள், விளக்கங்கள் எல்லாம் சேர்ந்து வெவ்வேறு சமூகத்தில் எப்படி அவை புழங்கிருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க நமக்கு உதவுகிறது. இந்த ஒப்பீடு, என்றுமுள்ள உண்மைகளும் மற்றும் யதார்த்த உலகத்தின் நிச்சயமற்றவைகளும் கொண்ட ஒரு  தத்துவப் பார்வைக்கு வழிவகுக்கும். இத்தகைய மொழியியல் தனித்தன்மையே உலக ஞானத்திற்கு அழைத்து செல்லும் ராஜபாட்டை என்று விக்கோ நம்பினார்.

விக்கோ அவருடைய காலத்தில் பரவலாக அறியப்படாதவராக இருந்தாலும், அவருடைய கருத்துக்கள் மெதுவாக ஐரோப்பிய சிந்தனையில் நுழைந்தது. வந்து சேர்ந்த இடத்தில் சற்றே அவை மாற்றமடைந்தாலும், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் உருவான இயக்கத்தில் அவை செல்வாக்கு செலுத்தியது. ஐசையா பெர்லின் அவர்களால் “எதிர்-மெய்யறிவு” என்று அழைக்கப்பட்ட அவ்வியக்கம், வெவ்வேறு சமூகத்தின் தனித்தன்மையையும், நவீன அறிவியலில் தொன்மத்தின் மீதிருந்த ஒத்திசை ஆர்வத்தையும் சார்ந்து கட்டமைக்கப்பட்ட ஒன்று.  தொடக்ககால கற்பனாவாத காலத்தின் பிரபலமான,பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமூக அறிவியல் முன்னோடி ஜஸ்டிஸ் மோசரின் கூற்றுப்படி, “தன்னளவில் ஒரு காலத்தின் பாணி, ஒரு குறிப்பிட்ட குழுவின் மக்களின் பாணி முழுமையான ஒன்றே” என்றும் “அது எந்த ஒரு காரணத்திற்காகவும் எல்லோருக்கும் ஒன்றானதாக இருக்க வேண்டிய தேவையும் இல்லை” என்கிறார். 

இப்படிப்பட்ட  ஒரு சிந்தனை ஜெர்மானிய தேசியவாதத்திற்கு ஒரு முக்கிய காரணியாக இருந்தது. கிறிஸ்துவ மிஷினரிகளின் பொற்காலமான பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களும் வெள்ளை நிறத்து வட அமெரிக்கர்களும் தங்களுடைய பிரசங்கங்களை  தாங்கள் கண்டடைந்த புதிய கலாச்சார பண்பாட்டில் பரப்பியப்படி இருந்தனர். அதே சமயம் இத்தகைய செயல்பாடுகளுக்கு எதிரான குரலும் ஐரோப்பிய சிந்தனைவாதிகள் இடையே எழுந்து வந்தது. சமயங்களில் நகைச்சுவையாக இவை வெளிப்படுத்தப்பட்டாலும் (சார்ல்ஸ் டிக்கன்ஸ்இருண்ட வீடு– Bleak house” கதையில் வரும் திருமதி ஜெல்லிபை) சில நேரங்களில் மனிதவியல் அறிஞர்களால் மிக தீவிரமாக வெளிப்பட்டது. உலகத்தின் பன்முக கலாச்சாரமே கிறிஸ்துவ மிஷினரிகளின் செயல்களை எதிர்க்க மனிதவியல் முற்போக்குவாதிகளுக்கு போதுமான காரணமாக இருந்தது. தன்னளவில் முழுமையான தொன்மைகளை கொண்ட பண்பாடுகளின்  மேல் கிறிஸ்துவ தொன்மைகளை வலிந்து திணிக்க வேண்டிய தேவை இல்லை என்றனர்.

பெர்லின், “முதல் வரலாற்று சமூகவியலாளர்” என்று மோஸரை  அழைக்கிறார், ஆனாலும்  பழங்காலம், நாட்டுப்புறம் என்ற கருத்துக்களில் இருந்து நவீன பண்பாட்டு மானுடவியல் வரை ஒரு நேரடி இணைப்பு இருக்கவே செய்கிறது. உதாரணத்திற்கு ரூத் பெனடிக்ட் எழுதிய “பண்பாட்டின் வகைகள்” என்ற நூலில் மானுடவியலின் அடிப்படையான விதியாக “நாம் வேறு, பழங்குடியினர், நாகரிகமற்றவர்கள், பேகன் மதங்களை சேர்ந்தவர்கள் வேறு” என்ற சிந்தனை  நிலையில் இருந்துக்கொண்டு நம்மால் கலாச்சாரத்தை, பண்பாட்டை புரிந்துக் கொள்ள முடியாது. இந்த எளிய கருத்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை மேற்குலகின் அதி மேதாவிகளுக்கு தோன்றவில்லை என்றும் குறிப்பிடுகிறது.  

மானுடவியலின் பொதுவான நியதிகளின்படி, கலாச்சாரத்தை கட்டமைத்த பல  நடைமுறைகளை விளக்கவும், நியாப்படுத்தவதிலும் தொன்மங்கள் பெரும் பங்காற்றின. கலாச்சாரத்தின் பல்வேறு வகைகளை படிக்கும் மானுடவியல், இந்த தொன்மங்களுக்கு இடையே இருந்த வேறுபாடுகளை அறிந்துக் கொள்வதில் மிகுந்த ஈடுபாடுடன் இருந்தது. ஆனால் “மனித பண்பாடு” என்ற ஒரு புள்ளி தவிர பிற யாவிலும் வேறுபட்ட ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜேம்ஸ் ஜார்ஜ் ப்ரேஸர் மற்றும் சுவிஸ்ர்லாந்தை சேர்ந்த கார்ல் யுங் என்ற இருவரால் இந்த ஈடுபாடு கேள்விக்குறியாக்கபட்டது.

[3]

கலாச்சார மானுடவியல் வளர்ந்த போது, சில நடைமுறைகள், கதைகள் பல்வேறு பண்பாட்டில் ஒன்று போல் இருப்பதை அறிய முடிந்தது. அந்த நடைமுறைகளை சடங்குகள் என்றும், கதைகளை புராணங்கள் என்றும் மானுடவியாளர்கள் குறிப்பிட்டனர். ஜெஃப்ரி கிர்க் எழுதிய “தொன்மம்” என்ற புத்தகத்தில், இந்த தலைப்பில் அது வரை வந்த அனைத்து ஆய்வுகளையும் கடினமான விமர்சனப் பார்வையோடு அணுகியது. “புராணம் அல்லது தொன்மம் குறித்து அனைத்தும் தெரிந்தாக பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள்” என்று எழுதுகிறார் கிர்க். ஃப்ரை, குத்ரி, எர்ன்ஸ்ட் சசிரேர் போன்றவர்கள் எண்ணியது போல  தொன்மங்கள் கடவுளர்களை பற்றிய கதைகளோ, மதத்தின் ஒரு பகுதியோ அல்லது மதமாக மாறக்கூடிய ஒன்றோ கிடையாது என்கிறார் கிர்க்.     

“தொன்மங்கள் தலைமுறை தலைமுறையாக கையளிக்கப்பட்டு மரபாக நிலைநிறுத்திக் கொண்ட கதைகள்” என்பது கிர்கின் வலுவான கூற்று. இருப்பினும் பிரெஞ்சு சமூகவியலாளர் எமில் துர்க்ஹெய்மின்  “கலாச்சார நடைமுறைகள், சமூகத்தின் பிணைப்பை வலுப்படுத்துகின்றன” என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளுகிறார். தொன்மங்கள் இதை பலவிதமாக செயல்படுத்துகின்றன – சிலது   விளக்குகின்றன, சிலது எச்சரிக்கின்றன, சிலது ஊக்கமளிக்கின்றன மற்றும் சில சமூக கேளிக்கை அளிக்கின்றன – தன்னளவில் அதுவே ஒரு இணைப்பு சக்தியாக இருக்கின்றன.     

ஆனால் பல்வேறு பண்பாடுகளின் தொன்மங்களுக்கு இடையே காணப்படும் ஒற்றுமைகள் விளக்கம் கோருவது. ஏன் அவை கடவுளர்கள் இறந்து மீண்டும் பிறவி எடுக்கும் கதைகளை பேசுகிறது? ப்ரேஸர் தன்னுடைய “பொற்கிளை” என்னும் புத்தகத்தில் விடையளிக்கிறார். அதன் முன்னுரையில், “இப்புத்தகத்தின் முதன்மையான நோக்கம், அரிசியாவில் இருக்கும் டயானா தெய்வத்திற்கு பூசனை செய்பவர்களின் தகுதியை நிர்மாணிக்கும் தகுதியை விளக்குவதாகும்”. விர்ஜிலின் எனீய்ட்டின் ஆறாம் புத்தகத்தில் இருக்கும் ஒரு பத்தியை படிக்க ப்ரேஸர் குழம்ப நேரிட்டது. அதில், பாதாள உலகத்தில் உள்ளே செல்ல, டயானாவுக்கு சொந்தமான மரத்தின் ஒரு கிளையை எடுத்து வர சொன்னார்.  இந்த கதையை படிக்கையில் ப்ரேஸர்க்கு இதனோடு தொடர்புடைய மற்றொன்று நினைவுக்கு வருகிறது.  

ஏரியின் வடக்கு கரையில், செங்குத்தான மலைகளின் கீழ் இருக்கும் நெமி  என்ற கிராமத்தில், காட்டு தெய்வமான டயானா நேமோரென்சிஸின் புனிதமான காடு அமைந்திருந்து. இந்த காட்டில் ஒரு குறிப்பிட்ட மரத்தை சுற்றி நாள் முழுதும் சமயங்களில் இரவு பொழுதுகளிலும் ஒரு உருவம் அலைந்துக் கொண்டிருப்பதை காணக்கூடும். அவனுடைய கையில் ஏந்திருந்த வாள், எந்நேரமும் சுழன்றபடி இருந்தது, எந்த நேரமும் எதிரியால் தாக்கப்படப்போகிறவன் போல. அவன்தான் அங்கே பூசனை செய்பவன். அவன் தேடப்படுபவனாலே கொலையும் செய்படுவான். கொலை செய்தவன் அடுத்த பூசனை செய்பவனாக மாறுவான். இதுவே அந்த காட்டின் விசித்திர விதி. 

பூசனை செய்பவன் அரசனுக்குரிய பட்டத்தை பெற்றிருப்பதும், மக்களின் நலனுக்காக உயிர் தியாகம் செய்பவனாக இருக்கும் இந்த கதை இயேசு கிறிஸ்து வாழ்க்கையை சுருக்கமாக சொல்வதாக ப்ரேஸருக்கு தோன்றத் தவறவில்லை.    

இந்த பழமையான சடங்குகள் மற்றும் கதைகளுக்கும், கிறிஸ்துவின் அடிப்படை கொள்கைகளுக்கும் உள்ள தொடர்பு உண்மையில் ஆச்சரியமானது. ஆனாலும், இதை பற்றி நான் குறிப்பிடவில்லை,  என் வாசகர்கள் தங்களது சொந்த பார்வைகளை அவர்களே கண்டுக்கொள்ளட்டும்” என்று தன்னுடைய பதிப்பாசிரியர்க்கு எழுதுகிறார்.    

உலகத்தின் பல்வேறு பண்பாட்டிலும் இதை போல் ஒரு கதை இருப்பதை பின் வந்த ஆய்வுகள் உறுதி செய்கின்றன. 

இந்த கதைகள் எல்லாம் வேளாண் வாழக்கையை பிரதிபலிக்கின்றன மற்றும் பிறப்பு இறப்பு என்ற கால மாற்றத்தை காட்டியப்படி இருக்கின்றன. இங்கே குறிப்பிடப்படும் “தானிய தெய்வம்” என்பதே மெசப்பொட்டேமியர்களின்  தம்முஸ், கிரேக்கர்களின் அதோனிஸ், ஸ்காட் மக்களின் ஜான் பார்லேகார்ன் அறியப்படுகிறது என்கிறார் ப்ரேஸர். வேறுபாடுகளின் கீழே, உலகளாவிய பொதுவான தொன்மத்திற்கு நெருக்கமான, ஒரு வலிமையான ஒற்றுமை உண்டாகி வருவதை காண்கிறார் ப்ரேஸர்.

ப்ரேஸரின் வரலாற்றுப் புரிதல் மிகவும் முற்போக்கானது. ஆதியில் இருந்த மாயம்/மந்திரம் மதமாக, மதம் அறிவியலாக, இப்படியாக இந்த தொடர்ச்சி பொய்யில் இருந்து உண்மையை நோக்கி சென்றதாக ப்ரேஸர் நம்புகிறார். இந்த வாதத்தை மானுடவியலார்கள் ஏற்காது  போனாலும்,கவிஞர்களும், எழுத்தாளர்களும் ஏற்றுக்கொண்டார்கள். எலியட் தன்னுடைய “காலி/உபயோகமற்ற  இடம்” என்ற படைப்பை புத்தகமாக கொண்டு  வருகையில், 

நம்முடைய தலைமுறையை மிகவும் பாதித்த மற்றுமொரு  மானுடவியல் புத்தகமான “பொற்கிளை” க்கு    நான் கடமைப்பட்டிருக்கிறேன்.  இந்த புத்தகத்தை படித்தவர்களுக்கு என் கவிதைகள் சிலவற்றில் குறிப்பிடும் வேளாண்  சடங்குகளோடு உள்ள ஒற்றுமையை உடனே அறியலாம்.  

என்று அடிக்குறிப்பில் பதிவு செய்கிறார்.

பல தசாப்தங்களுக்கு பிறகு, எலியட் அந்த குறிப்பை “ஒரு அறிவார்ந்த ஏமாற்று வித்தை” என்று குறிப்பிட்டாலும், அந்த காலத்தில் இருந்த அவரின் மனநிலையை அது காண்பிக்கிறது. “பாழ் நிலம்” புத்தகத்தை முடித்த அதே ஆண்டு (1923), யூலிஸிஸ் நாவல் குறித்து “சமகால வரலாற்றின் ஏமாற்றம் மற்றும் கட்டுப்பாடின்மைக்கு பெரும் வடிவத்தையும், கவனத்தையும் கொண்டு வரும் முயற்சி” என்கிறார். அந்த முயற்சி தொன்மத்தின் வழியாக நவீன உலகத்தை கலையை நோக்கி அழைத்து செல்லும் முதல் படியாக அமைந்தது என்கிறார். 

ப்ரேஸரை எந்தளவிற்கு எலியட் வியந்தாரோ, அதே அளவு யுங்  ப்ரேஸரின் கருத்துக்களை தீவிரமாக மறுக்கிறார். இறந்து, மீண்டும் பிறக்கும் கடவுள் என்ற தொன்மம் உலகளாவிய படிமாக இருந்தாலும் அதற்கு ப்ரேஸர் அளிக்கும் விளக்கத்தை மறுக்கிறார்.

இயல்பாகவே, காலம், தாவர,சூரிய, சந்திர சார்ந்து எழுந்த தொன்மங்கள் அடிப்படையில் ஒற்றுமையோடு இருப்பதாகவே தோன்ற செய்யும். ஆனால், தொன்மம் வெறும் புற நிகழ்வுகளால் நிர்ணயிக்க முடியாது என்றும் , அவை அகம் சார்ந்த ஒன்று. அவை அகத்தின் பல்வேறு நிலைகளின் வெளிப்பாடுகள். தொன்மங்கள் உண்மையில் உளவியல் சார்ந்த ஒன்று , புற நிகழ்வுகளையும், பொருட்களையும் அவை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு ஊடகமாக / வடிவமாக பயன்படுத்திக் கொள்ளுகின்றன. 

யுங்கைப் பொறுத்தவரை, புராணங்களை உருவாக்குவது வெளிப்புற சூழ்நிலைகள் அல்ல, மாறாக உள்ளார்ந்த நிலைமைகளே. பருவகால மற்றும் தாவர உலகில் ஒப்புமைகளை அகச் சுழல்களை விவரிப்பதற்கான ஊடகங்களாக மனம் பயன்படுத்திக்கொள்கிறது. எனவே, இத்தகைய புராணங்களுக்கான வேளாண் விளக்கங்கள் ஒருபோதும் உலகளாவியதாக இருக்க முடியாது – ஏனெனில் வேளாண்மையே எல்லா மனித சமூகங்களிலும் பொதுவானதல்ல. “ஒரு தொன்மைப் படிமம் தோன்றுவதற்கு சில குறிப்பிட்ட நிலைமைகள் தேவைப்பட்டாலும்”, அவற்றின் தூண்டுதல் சூழ்நிலையை அவற்றின் அடிப்படைத் தோற்றத்துடன் குழப்பிக்கொள்ளக்கூடாது என்று யுங் வலியுறுத்தினார். உண்மையான “தொன்மைப் படிமங்கள்” “யுகங்களாக மனித மூளையில் பதிந்துள்ளன”, அதனால்தான் அவை “ஒவ்வொரு மனிதனின் நனவிலியிலும் எப்போதும் கிடைக்கக்கூடியதாக” உள்ளன.

[4]

யூலிஸிஸ், பாழ் நிலம் போன்ற படைப்புகள் வந்த அதே காலத்தில் தான் அடால்ப் ஹிட்லர் ஜெர்மன் மக்களிடையே, அரசியலில் மகத்தான சக்தியாக உருவெடுத்தார். ஹிட்லர், சொல்லப்போனால் முழு நாசி திட்டமும் வேறொரு தொன்மத்தை கையெடுத்தது. உலகப் பொதுவான முடிவுகளை கொள்ளாது உள்ளூர் குழுவின் கலாச்சாரம், சடங்குகளை முன்னெடுத்த ஜஸ்டிஸ் மோசரின் கருத்துக்கு நேர் எதிராக நாசிசம், ஒரு குறிப்பிட்ட மக்கள் இனம் மரபால் பிற எல்லோரையும் விட மேலானது என்ற கருத்தை முன் வைத்தது. இந்த மேலான ஒன்று என்பது தொன்மை வழியாக கொள்ளப்பட்டு (நிறுவிக்கொண்டு), உலகத்தையே ஆள வேண்டும் என்று கூறுகிறது.   

இரண்டாம் உலக போருக்கு பிறகு, அடையாள அரசியல் என்று இன்று சொல்லப்படும் பிரித்தாளும் கதைகளை கண்டு மேற்குலக ஜனநாயகங்கள் அச்சம் அடைந்தன. ஒரு பண்பாட்டை பிறவற்றை விட உயர்த்தி பிடிக்கும் இந்த புராண போக்கினால் வரும் பிரச்னைகளை கண்ட மேற்குலக கலைஞர்கள், அறிவாளுமைகள், மனித இனத்தை எப்போதும் இணைத்து வைத்திருக்கும் மாபெரும் மனிதநேயத்தின் அவசியத்தை வலியுறுத்துகின்றனர். உண்மையில், நாசிகளுக்கு எதிரான போராட்டத்தை வெற்றி பெற வைத்தது மனிதநேயம் தான். ரூத் பெனடிக்ட் மற்றும் ஜீனே வெல்டபிஷ் இருவரும் 1943 ல்  கொண்டுவந்த மனித இனங்கள் என்ற சிறு நூலில்  “எந்த இனமும் இன்னொன்றை விட உயர்ந்தது கிடையாது. மனிதர்கள் அனைவரும் பொதுவான ஆற்றலும், குறைகளும் உள்ளவர்களே, ஆதலால் 

பூமியில் இருக்கும் அனைத்து மக்களும் ஒரே குடும்பத்தை, ஒரே தொடக்கப்புள்ளியில் இருந்தே வந்தவர்கள் – என்று வழிமொழிகிறது         

இந்த புதிய மனிதநேயத்திற்கான தேடல், உலகப்போருக்கு பின் பல வடிவங்களில் தொடர்ந்தது. 1948ல் உலகளாவிய மனித உரிமைக்கான பிரகடனம் முதல் “மனித குடும்பம்”  (1955 – 1963 வரை உலகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்த ஐநூறுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் கொண்ட கண்காட்சி) வரை. இந்த புகைப்பட கண்காட்சி, பொது மக்கள் இடையே பரவலான வரவேற்பு பெற்றிருந்தாலும், அறிவாளுமைகளிடம் இருந்து கடும் எதிர்ப்பும் சந்தித்தது. உதாரணத்திற்கு, ரோலண்ட் பார்த், “இந்த புகைமூட்டமான தொன்மங்கள் மனித சமூகத்தின் பெரும் பகுதிக்கு ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தப்படுகிறது” என்கிறார். பார்த்ஸ் போல் அல்லாதவர்களுக்கு, அதிகம் பகுத்தறிவுபடுத்தப்பட்ட தற்கால சமூகத்தில் தொன்ம கதைகளே மிகுந்த தேவை என தோன்றுகிறது. ஏனெனில், ஒருங்கிணைந்த இந்த கதைகளே, வெறும் சொல்லளவில் இல்லாது, மனிதநேயத்தை நம் கண் முன் நிறுத்துகின்றன.      

[5]

தொன்மத்திற்கான ஆதரவு அல்லது ஏற்பு மேலெழுந்து வருவதை பின்னாட்களில் காண முடிந்தது. 1925 ல் ஜெர்மனியில் வெளியிடப்பட்டு பின்னர் 1946ல் எர்ன்ஸ்ட் கேஸீரெரால் ஆங்கிலத்தில் “மொழியும் புராணமும்” என்று வெளியானது. நாற்பதுகளின் பிற்பகுதியில், “புராண எழுத்துக்களின்” தனித்தன்மையை ஆடன் சோதனையாகச் செய்து பார்த்தார். 1949 ல் பிரான்ஸில் நாடு கடத்தப்பட்டு இருந்த ரோமானிய அறிஞர் மிர்ச்சா எலியாட் “நித்திய மீட்சி புராணம்: பிரபஞ்சமும் வரலாறும்” (பிரெஞ்சில் நித்திய மீட்சியின் புராணம்: முன்மாதிரிகளும் மீண்டும் நிகழ்தலும்) என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னாளில் 1957 சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இந்த புத்தகம் வழி அமைக்க, அங்கே புராணங்கள் குறித்து அவர் மேலும் பல படைப்புகளை எழுதினார் . இதற்கு எல்லாம் மேலாக ஜோஸஃப் காம்பெல்லின் வருகை.        

சாரா லாரன்ஸ் கல்லூரியில் இலக்கியம் கற்பித்த காம்ப்பெல், 1949ல் “ஆயிரம் முகத்தோன்” என்ற நூலை வெளியிட்டார். எதிர்காலத்தில் எண்ணற்ற அறிவியல் புனைவு கதைகளின் தொடக்கமாக   தன்னுடைய நூல் இருக்க போகிறது என அன்று அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த “ஆயிரம் முகத்தோன்” நூலின் விதை ஜாய்ஸ் குறித்த ஆய்வினால் உண்டானது. விக்கோவினால் உந்தப்பட்டு தனக்கென்று ஒரு புராண முறையை ஜாய்ஸ் கொண்டிருப்பதை காம்பெல் அறிந்தார்.  ஜாய்ஸ் 1939ல் எழுதிய “ஃபினெகன்ஸ் வேக்” (Finnegans Wake) என்ற புத்தகத்தை புரிந்துக் கொள்ளும் முயற்சியில்   1944 ல் காம்பெல் மற்றும் நாவலாசிரியர் ஹென்றி மோர்டன் ராபின்சன் “சுழற்சி உலகத்தின் திறவுக்கோல்” என்ற புத்தகத்தை வெளியிட்டனர். “சுழற்சி உலகம்” புத்தகத்தின் வரும் முதல் வரி (இறுதி வரியின் தொடர்ச்சியாகவும் வருவது)  – a commodius vicus of recirculation (மறுசுழற்சியின் இனிய பாதை) – விக்கோ வின் பெயரும் மறுசுழற்சியும் இணைந்தே வருவதை காம்பெல் மற்றும் ஹென்றி மோர்டன் சுட்டிக்காட்டுகிறார்கள். இவ்விருவரின் கூற்றுப்படி, ஒரு இடத்தில் வெவ்வேறு காலங்களில் ஒரே மாதிரி நிகழ்வுகள் சாத்தியம் என்றால், வெவ்வேறு இடங்களில், ஒரே நேரத்தில் அவை நிகழ்வும் வாய்ப்பிருக்கிறது – குறிப்பாக யுங்கின் “கூட்டு நனவிலி” என்ற கருதுகோள் சரியாக இருக்குமானால் – என குறிப்பிடுகிறார்கள்.இந்த சிந்தனையில் இருந்தே காம்பெல்லின் முக்கிய கருத்தான -”தொன்ம ஒருமை” – எந்த வேளையிலும், எந்த இடத்திலும் நிகழும் ஒரு தொன்மம் – உதித்தது. அதில்,

ஒரு நாயகன் யதார்த்த உலகத்தில் இருந்து மாயாவாத உலகத்தில் நுழைய. அங்கே பிரமாண்டமான பல சக்திகளோடு போராடி, இறுதியில் வெற்றியும் அடைகிறான். பின்னர் அந்த சாகசத்தில் இருந்து பெரும் சக்தியோடு மீண்டு வரும் நாயகன் சக மனிதர்களுக்கு வரம் வழங்குகிறான்.

பல ஆண்டுகள் காம்பெல் இந்த கருவை வளர்த்து எடுத்து எழுதினார். அறிஞர்கள் பலர் இதை குறித்து தங்கள் எதிர்ப்புகள் தெரிவித்தனர். வேறுபடும் அமசத்தை மட்டும் நீக்கிவிட்டால், எல்லாம் தொன்மங்களும் ஒன்றை போலவே தோன்றும் என்பது அவர்களின் வாதம். ஆனால் காம்பெல்லையோ அல்லது அவரின் பல்லாயிரம் வாசக பரப்பையோ அவை தீண்டக்கூட இல்லை. ஐம்பதுகளில் தொன்மங்களின் தேவையை உணர்ந்த பலரின் மத்தியில் அறியப்பட்டவராக இருந்தாலும், அவர் ஃப்ரை அளவு மிக பெரிய சக்திவாய்ந்த ஆளுமையாக இருந்ததில்லை. 

டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராகவும், கனடா ஐக்கிய புனித சபையில் முக்கிய உறுப்பினராகவும் இருந்த ஃப்ரை தன்னுடைய “தொன்மத்தின் சக்தி” குறித்த புரிதல்களை ப்ளேக்கின் படைப்பின் வழியே அறிந்தார். அவரைப் பற்றி எழுதிய “அதிசய ஒற்றுமை” என்ற புத்தகத்தில் ஃப்ரை தனது முடிவான கருத்தாக, 

ரிம்பாட்டின் நரகத்தை, ரில்க்கே போன்ற தேவதூதர்களை, காஃப்காவின் கோட்டையை, ஜேம்ஸ் ஐவரி  கோபுரத்தை, யேட்ஸ் சுருள்களை, ப்ரௌஸ்ட்டின் இருபால் உயிரிகளை, எலியட்டின் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்ட இறக்கும் கடவுளின் அடையாளங்களை, பழைய ஏற்பாட்டின் புராணங்களை விளக்கும் மாமன்னன் ஜோசப்பின் ஆய்வுகள் என புராண படைப்புகளின் பொற்காலமாக இருந்திருக்கிறது. சுழற்சிகளின் உலகம் (ஃபினேகன்ஸ் வேக்கில்) கூறியபடி, யதார்த்தத்தின் வடிவம் என்பது பிரம்மாண்டமான மனித உடலாகவோ அல்லது முடிவில்லாத சுழற்சிகளின் தொடராகவோ இருக்கிறது என்றும், கலைஞனின் பணி என்பது வரலாற்றில் இருந்தும், இயற்கையில் இருந்தும் இதை பிரித்தறிவதே ஆகும். இந்த கலையில் ஒவ்வொரு எழுத்தும், ஒவ்வொரு வார்த்தையும்(சொல்லும்) கவனமாக படிக்கப்பட்டு, அதற்குரிய இடத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த அசாத்தியமான திறன் மனித அறிவுப்புரிதலின் எல்லைக்கு அப்பாற்பட்டு இருக்கிறது.   

பத்தாண்டுகள் கழித்து, தன்னுடைய “விமர்சனத்தின் கூறுபாடு” புத்தகத்தில், கற்பனாவாத மற்றும் பின் கற்பனாவாத கலைஞர்களின் படைப்புகளில் இத்தகைய நுண்மையான தகவல்கள் எப்படி ஊடுபாவாய் அமைந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார். தொன்மங்கள் குறித்த யுங்கியன் கோட்பாடுகள் மேல் எழுப்பப்பட்ட “நவீன அறிவியல் விமர்சனம்” என்று இலக்கிய விமர்சனத்தை குறிப்பிடும் ஃப்ரை, மனித ஆழ் மனதில், தொன்ம வடிவங்கள் உறைந்திருப்பதாக சொல்லுகிறார். 

ஒரு படைப்பில்/ கதையில் இருந்து விலகி நின்று, அவற்றில் இருக்கும் நுண்மையான தொடர்புகளை பார்க்கும் அணுகுமுறை பல அவதானிப்புகளை அவருக்கு திறந்துவைத்திருக்கிறது, அதில் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. 

தாவர உலகம் ஒரு அச்சுறுத்தும் காடு – “கோமஸ்” அல்லது “இன்ஃபெர்னோ”வின் தொடக்கத்தில் நாம் சந்திக்கும் காடுகளைப் போன்றது. அல்லது ஷேக்ஸ்பியரிலிருந்து ஹார்டி வரை சோகமான விதியுடன் தொடர்புபடுத்தப்பட்ட தரிசு நிலம். அல்லது ப்ரௌனிங்கின் “சைல்டு ரோலண்ட்” அல்லது எலியட்டின் “வேஸ்ட் லாண்டைப்” போன்ற பாலைவனம். அல்லது டாஸோ மற்றும் ஸ்பென்சரின் மறுமலர்ச்சி காலப் படைப்புகளில் காணப்படுவது போல சிர்சியின் “மாயத் தோட்டம்” போன்ற அச்சுறுத்தும் சூனியத் தோட்டமாக இருக்கலாம்.

பைபிளில், பாலைவனம் அதன் உருவகமான வடிவத்தில் தோன்றுகிறது: ஆதியாகமத்தில் மரணத்தின் மரம், தடைசெய்யப்பட்ட அறிவின் மரம்; சுவிசேஷங்களில் பலனற்ற அத்தி மரம்; மற்றும் சிலுவை. நெருப்பில் எரியும் மரமும் உடலும் நரக உலகின் குறியீடுகள் – முக்காடிட்ட மதக்கொள்கை எதிர்ப்பாளர், கறுப்பு மனிதர் அல்லது மந்திரவாதி கட்டப்பட்ட கழுமரம். தூக்குமேடை, கழுமரம், விலங்கு, அவமான மேடை, சாட்டைகள், மற்றும் பிர்ச் கம்புகள் ஆகியவை இதன் மாற்று வடிவங்களாக இருக்கலாம்.

வாழ்வின் மரம் மற்றும் மரணத்தின் மரம் ஆகியவற்றின் இடையே உள்ள ஒப்பீட்டை யேட்ஸின் ‘இரு மரங்கள்’ கவிதையில் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய பல உறுதியான கருத்துக்கள் வாசகர்கள் இடையே ஃப்ரைக்கு ஒரு தீவிரமான ஆதரவு போக்கை, அதிகாரத்தை உண்டாக்கியது. மனிதநேயர்களால் மிகவும் விரும்பப்பட்ட இந்த ஆதரவு அதிகாரம் சமகாலத்தில் அறிவியலார்களால் தொடர்ந்து தகர்க்கப்பட்டு/ தாக்கப்பட்டு வருகிறது.

[6]

அறுபதுகளில் எழுந்த அரசியல் புரட்சிகள், புதிய, பழைய மனிதநேயங்களை கேள்விக்குள்ளக்கியது. ஆதிக்க வர்க்கத்தின்  விருப்பங்களை ஒன்றாக்கி, பொதுவான ஒன்றாக மாற்ற முயற்சித்தது மனிதநேயம் என்ற கருத்து. லெனினின் முதன்மையான கேள்வியான, “யார்? அவர், இவருக்கு என்ன செய்ய முயல்கிறார்? மனிதநேயத்தை புராணங்கள் தொன்மங்கள் வழியாக அடைவதால் யாருக்கு லாபம்? அது எவருடைய இழப்பால் அடையப் பெறுகிறது?, மேல்நிலை கல்வி, கல்லூரி, நிர்வாகம் என்று விரிந்துக் கொண்டே இருந்த புரட்சியாளர்கள், இதை போன்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்தார்கள். அவர்களுடைய முன்னோர்கள் தங்களை ஒரு பண்டமாக விற்றுவிட்டார்கள் என்று கடுமையாக சாடினர்.    

டெர்ரி ஈகிள்டனின் “இலக்கிய கோட்பாடு – ஒரு அறிமுகம்” என்ற புத்தகத்தில், ஃப்ரையின் ஆக்கங்கள் “நிதர்சமான/யதார்த்தமான சமூக உலகத்தை கண்டு அஞ்சிய நிலையில் இருந்து படைக்கப்பட்ட மற்றும் வரலாற்றின் மீதான வெறுப்பு எனவும், பழைய நினைவுலகில் திளைப்பது என்கிறார்.      

ஃப்ரையின் புராணக் கதைகளின் கோட்பாடுகள், குறிப்பிடத்தக்க வகையில், நகரமயமாக்கலுக்கு முந்தைய இயற்கை சுழற்சிகளின் படிமங்களாகும் – தொழில்மயமாக்கலுக்கு முந்தைய வரலாற்றின் ஏக்கம் நிறைந்த நினைவுகள். ஃப்ரையைப் பொறுத்தவரை, உண்மையான வரலாறு என்பது அடிமைத்தனமும் விதிவாதமும் ஆகும். ஆனால் இலக்கியம் மட்டுமே நாம் சுதந்திரமாக இருக்கக்கூடிய ஒரே இடம் .

ஃப்ரையின் விமர்சன அறிவியல், “தீவிர அழகியலுடன் திறம்பட வகைப்படுத்தும் ‘அறிவியல் தன்மையை’” இணைத்து, “நவீன சமுதாயத்துக்கான ஒரு கற்பனை மாற்றாக இலக்கியத்தை நிலைநாட்டுவதோடு, அந்த சமுதாயத்தின் கண்ணோட்டத்தில் விமர்சனத்தை மதிப்புமிக்கதாக ஆக்குகிறது.” ஈகிள்டனின் விமர்சனம், அதை எதிரொலித்த (அல்லது எதிர்பார்த்த) அரசியல் சார்ந்த விமர்சனங்களின் கூட்டத்துடன் சேர்ந்து, புராணக் கதை விமர்சனத்திற்கு எதிராக பலத்த தாக்கத்தை ஏற்படுத்த, அதிலிருந்து அந்த நடைமுறை ஒருபோதும் மீளவில்லை. பொதுவாக, புராணக் கதைகளின் ஆய்வு அரசியல் யதார்த்தங்களைத் தவிர்ப்பதாகத் தோன்றியது. 

கல்வி நிலையத்தில் இருந்து பொது சமூகத்திற்கு சென்றாலும், புராணங்கள் மேல் இருந்த  ஈர்ப்பு நீர்த்துப்போகவில்லை. ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த – கவித்துவ ஞானமாக இல்லாமல், அழகியலுக்கான ஊடகமாக அவை மாறின. 

உதாரணத்திற்கு, நாவலாசிரியர் புக்னெர் பரிசளித்த ஒயிஜா போர்டு  வைத்து கவிஞர் ஜேம்ஸ் மெர்ரில் மற்றும் அவர் நண்பர் டேவிட் ஜாக்சன், ஒரு புராணக் கதையை உருவாக்கினர். அக்கதையில், வழிகாட்டும் ஆவிகள், சமீபத்தில் இறந்த நண்பர்கள், நீலக் கண் வௌவால்களாக வானத்தில் இருந்து கீழே வரும் தேவதூதர்கள் என பல அடங்கும்.  இந்த உருவங்களோடு நிகழும் சந்திப்புகள்  விவரிக்கும் சந்தர்ப்பங்களில், மிகவும் சுருக்கமாக, கவித்துவம் இல்லாமல், உள்நோக்கத்தோடு ஒரு  அமைப்பை உருவாக்கும் ஒரு முயற்சியாக மாறிவிட்டது.  அவருடைய உரைநடை கவிதையான “ஒளி மாறும் உலகில்”

என்னை சுற்றி நோக்க,
நான் கண்டேன்
மனிதர்களும் மற்றவைகளும்,
என் வழி தெரிந்தது
ஒரு கதைக்கு, அல்லது
வியப்பும் இன்பமும் சேர்ந்தளிக்கும் நிகழ்வுக்கு
என் சூழலை அறிவேன்
தொடக்கத்திலிருந்தே
ஒவ்வொரு சிறு விவரத்திலும்
ஒளியை பிரதிபலித்தப்படி இருக்கும்
ஒரு கருப்பொருள்
நான் கண்டது
அதன் உயரமும் ஆழமும்
ஒரு கடவுளின் தோற்றமும்
மறைதலும்.

அந்த இறுதி வரி நோர்த்ரப் ஃப்ரையினுடையது.  

மெரிலுக்கு பலவிதமான உருவங்களை உருவாக்கும் ஒரு விளையாட்டுத்தனமான அழகியலாகவே இந்த ஒயிஜா பலகை இருப்பதாக நம்புகிறார். வாலஸ் ஸ்டீவன்ஸால் உன்னதமான புனைவு என சுட்டப்படும் இந்த அழகியல் தன்னை வெளிப்படுத்தவே உருவாக்கப்பட்டது. மாறாக ஆறுதல் அளிக்கவோ, புனிதப்படுத்த தேவை எதுவும் இதற்கு கிடையாது என்பது மெரிலின் கருத்து.   

தொன்மங்கள் நம்மை இணைக்கும் பாலமாய் இருக்கும் என்கிற அடிப்படை யதார்த்தை காம்பெல்லும் ஏற்றுக்கொள்ளுகிறார். ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் ஜார்ஜ் லூகஸ் தனது படத்திற்கான தூண்டுதலாக “நாயக பயணம்” என்கிற கருதுகோளே காரணம் என்கிறார். இந்த வகை கதைகளே ஹாலிவுட் படங்களில் மிகுந்த தாக்கத்தைத் பின்னாளில் ஏற்படுத்திருப்பதை அறியலாம். 1992 ல் வெளியான கிறிஸ்டோபர் ஓக்லேரின்  “எழுத்தாளனின் பயணம்: கதை சொல்லிகளுக்கும், திரைக்கதை எழுத்தாளர்களுக்கான தொன்ம கட்டமைப்பு” என்ற புத்தகம் ஹாலிவுட்டின் வேதமாக மாறியது.           

ஞானத்தை அறிவதற்கான அவசியமான ஒன்றாக காணப்பட்ட, நவீன உலகத்தின் இரைச்சல்களில் இருந்து அர்த்தம் கொள்ளும் முயற்சியாக இருந்த தொன்மம் தற்போது திரைக்கதை எழுத உதவும் அளவுக்கு சுருங்கிவிட்டது.  

[7]

ஒழுக்க, உணர்வு நிலைகள் வழியாக நம்மை ஒன்றிணைக்கும் கதைகளை உருவாக்கி, பகிர்வதன் வழியாக புராண உருவாக்கம் இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கவே செய்கிறது. புராணம் குறித்த ஆய்வுகள், விமர்சனங்கள் மீதான கவனமின்மை நம்முடைய சொந்த புராணங்கள், புராணங்களாக அறியப்படாமல், அறிவியலாக, அரசியலாக, நிர்வாக நடைமுறையாக பார்க்கப்படுகிறது. 

இன்று புராணங்கள்/தொன்மங்கள் வழியே உருவாகும் மனிதநேய, உலக பொதுத்தன்மை போன்றவை வெறும் விளம்பர பதாகைகள், வாழ்த்து அட்டைகளுக்கான ஒன்றாகவே இருக்கிறது.   

பல்வேறு பண்பாட்டின் பின்னணியில் இருந்து புராணங்கள் பிறந்திருந்தாலும், வெறுப்பால், அச்சத்தால் பிரிந்திருந்த மனிதர்களை இணைக்கும் நம்பிக்கையாக இந்த புராண வழி முன்னெடுக்கப்பட்டது. இனம், கலாச்சாரம், நிறம் என்கிற எல்லைகள் மீறி  பொறுமையும் அன்பையும் உருவாக்க வெறும் உண்மைகளும், விவாதங்களும் மட்டும் போதாது. அதற்கு காட்சிப்படுத்தக்கூடிய, விவரிக்கக்கூடிய, படிமம், நிகழ்வு, கதை என்ற வலுவான ஒன்று தேவைப்படுகிறது. இந்த முயற்சி தோல்வியை தழுவினாலும், அதனுடைய உன்னதத்தை ஏற்றுக்கொள்ள முடியும்.   

இவ்வகையான கதைகளை சொல்லும் திறனை இழந்திருக்கலாம் ஆனால் அது மீண்டும் கைவரக்  கூடிய ஒன்று தான். நம்மிடையே உருவான மிக சிறந்த எழுத்தாளர்கள் அதை நோக்கி ஈர்க்கப்படுவதை நாம் காணமுடிகிறது. 

உதாரணமாக, நைஜீரியாவில் உள்ள ஓசுன்-ஓசோக்போ புனித சோலையில் யோரூபா மக்களின் வளமைக் கடவுளான ஓசுனை நிறுவப்பட்டிருக்கிறது. இந்த அச்சுறுத்தும் ஆனால் அழகான ஆலயத்தில் பல்வேறு ஓரிஷாக்களின் சிலைகள் உள்ளன. அவற்றில் ஒகுன், இரும்பிற்கான (உறுதிக்கான) கடவுள், முதன்முதலில் பூமிக்கு இறங்கியவர். ஒரு இரும்புக் கம்பியை முத்தமிட்டுக்கொண்டே ஒகுனை அழைத்தால் அவர் சொல்லும் சாட்சியம் உண்மையாகும் என்று நம்பப்படுகிறது.

புகழ்பெற்ற நைஜீரிய எழுத்தாளர் வோல் சோயிங்கா, ஒகுனுக்கு “இடன்ரே” என்ற மகத்தான காவியத்தை எழுதினார். அதில் ஒகுனின் வருகையைக் கொண்டாடி, அவரது மரணத்திற்கு துக்கம் அனுசரித்தார். கிறிஸ்தவரான சோயிங்கா, ஒகுனின் மரணத்தை ஒரு “பேர் விழைவு” என்று அழைத்தார். அவரது நாடகமான “வனங்களின் நாட்டியம்” காலனியாதிக்க சக்தியின் ஆபத்துகள் மற்றும் புதிதாக விடுதலை பெற்ற நாட்டின் உயர்மட்டத்தினரால் அது மீண்டும் உருவாக்கப்படுவது குறித்தும் எச்சரித்தது.

யூரிபிடிஸின் “தி பாக்கே” மொழிபெயர்ப்பும், “இடன்ரே” போன்ற அவரது சொந்த படைப்புகளும் புராணக் கதைகளைப் பற்றிய சோயிங்காவின் ஆழ்ந்த புரிதலையும், சிக்கலான கருத்துக்களை வெளிப்படுத்தும் அதன் ஆற்றலையும் காட்டுகின்றன. நாம் புராணக் கதைகளிலிருந்து தப்பிக்க வேண்டாம், மாறாக நம் உலகில் வழிசெலுத்த அவற்றை ஞானமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் நம்பினார். தனது பணியின் மூலம், கலாச்சாரம், சமூகம் மற்றும் மனிதநேயம் பற்றிய நமது புரிதலை வடிவமைப்பதில் புராணக் கதைகளின் நிலையான பொருத்தப்பாட்டை சோயிங்கா நிரூபித்தார்.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.