நவீன இந்திய ஓவியக்கலை ராஜா ரவி வர்மாவிலிருந்து ஆரம்பமானது என்பது வாதம். வரைகலை நுட்பத்தில் பெருமாற்றங்கள் கொண்டு வந்தவர் ரவி வர்மா என்பதில் சந்தேகமே இல்லை. நுட்பத்தில் மாறுதல்கள் ஏற்பட்டாலும் அணுகுமுறையில் ரவி வர்மாவின் ஓவியங்கள் மரபு முறையிலிருந்து மாறவில்லை. இருபதாம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்த வங்காள வரைகலைப் பள்ளி ஓவியங்கள் மரபின் மூலம் நேயர்களை லயிக்கச் செய்தபோது சூசாவின் ஓவியங்கள் நேயர்களின் சட்டையைப் பிடித்துக் குலுக்கி கன்னத்தில் அரைந்து எழுப்புவதுபோல அமைந்திருந்தது. இந்திய ஓவியக்கலை அணுகுமுறையைச் சமகால உலகப் போக்கிற்கு மற்ற முயன்ற ஓவியர்களுள் ஃரான்சிஸ் நியூட்டன் சூசா தலை ஸ்தானத்தில் இருப்பவர்.

பிறப்பு, வளர்ப்பு:
விக்டர் நியூட்டனின் (Victor Newton) பிறப்பு 1924 ஆம் ஆண்டு கோவா மாநிலத்தின் சாலிகவ் (Saligao) என்ற கிராமத்தில் தீவிர ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் நிகழ்ந்தது. சிறுவயதிலேயே தன் தந்தையையும் பெரிய சகோதரியையும் இழந்த விக்டர், பெரியம்மைப் பொட்டுப் பிழைப்பதே கடினம் என ஆனது. இந்நிலையில் கோவாவின் புனிதப் புரவரான ஃரான்சிஸ் சேவியருக்குக் குழந்தையைக் காப்பாற்றுமாறு முறையிட்டார் விக்டரின் தாய். பிள்ளை பிழைத்தது, நன்றிக் கடனாகப் பிள்ளையின் முதல் பெயராக “ஃரான்சிஸ்” சேர்க்கப்பட்டு ஃரான்சிஸ் விக்டர் நியூட்டன் என ஆனது. தன்னுடைய குடும்பப் பெயரான சூசா (Souza)என்பதைப் பிற்காலத்தில் தான் சேர்த்துக்கொண்டார். கணவனை இழந்த சூசாவின் தாய் 1929தில் பம்பாய்க்குக் குடியேறினார் மறுமணமும் செய்துகொண்டார். தீவிர கத்தோலிக்க நம்பிக்கையுடைய அவரது தாய், ஃரான்சிஸ்ஸை ஜெசுயிட் பள்ளியில் சேர்த்து எதிர்காலத்தில் ஒரு கிறிஸ்துவ பாதிரியாக்க விரும்பினார்.
தெய்வீகமும், ஒழுக்கமும் சூசாவின் இயல்பில் இல்லை. கிறிஸ்துவப் பள்ளியின் ஒழுங்குமுறையும், கட்டுப்படும் அவருக்கு கசப்பான அனுபவமாக இருந்தது. ஆபாசப் படங்களைக் கழிவறையில் வரைந்ததிற்காகப் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பதினாறாம் வயதில் கலைக்கல்லூரியில் சேர்ந்த சூசா, “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் பங்கெடுத்தற்காக மீண்டும் வெளியேற்றப்பட்டார். அதே தினம் தன் முதல் ஓவியத்தைக் காய்கறி நறுக்கும் பலகையின் மேல் நீல நிறத்தில் வரைகத்தியினால் தீட்டினர். சிலகாலம் மீண்டும் கோவாவிற்குத் திரும்பிய சூசா தன் சொந்தமண்ணின் வாசம் வீசும் ஓவியங்களை வரைந்து தன் முதல் ஒத்தை நபர் கண்காட்சியைப் பம்பாயில் நடத்தினார். பம்பாயின் செல்வம், வறுமை, குடிசைவாழ் மனிதர்களின் நிலைமை, சமூகம் போன்றவை அவரை கம்யூனிசத்தை நோக்கிப் பயணிக்கச் செய்தது. 1945 முதல் 1948 வரை இரண்டு கண்காட்சிகளைப் பம்பையிலும் ஒன்று லண்டனிலும் நடத்தியவர், ஓவியக்கலையில் சமகால ஓவியர்களான ஸ்.ஹச்.ரேசா (S.H.Reza), எம்.ஃப் .ஹுசைன் (M.F.Hussain) போன்றவர்களுடன் சேர்ந்து “முற்போக்கு ஓவியர்கள் குழு” (“Progressive Artist Group “) என்ற அமைப்பை நிறுவினார். ஓவியக்கலையில் உலகளவில் நடக்கும் போக்கை இந்தியாவிற்குக் கொண்டுவருவதும், வங்காள பள்ளியிலிருந்து முற்றிலும் விடுபடுவதும், மீண்டும் பண்டைய காலத் தனித்துவ இந்தியக் கலாச்சாரத்துடன் இணைவதும் இந்த அமைப்பின் முக்கிய கொள்கைகளாக இருந்தது. 1949தில் அதிகம் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினாலும், சிலர் அவருடைய ஓவியங்கள் ஆபாசமானவை என போலீசாருக்கு புகார் கொடுத்ததினாலும் நிராசையடைந்த சூசா இங்கிலாந்திற்குப் பயணமானார். அதன்பிறகு தன் வாழ்நாளின் பெரும்பகுதியை லண்டனிலும், நியூ யார்க்கிலும் கழித்த சூசா, இந்தியாவிற்கு அடிக்கடி வந்துபோனாலும், கடைசிக் காலங்களில்தான் இந்தியா திரும்பினார்.
ஓவியர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவர்களுடைய படைப்பில் பிரதிபலிப்பது இயல்பு. வாழ்க்கையில் எண்ணற்ற ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்த சூசாவின் படைப்புகளில் அதிகம் அவருடைய தனிப்பட்ட வாழ்வின் தாக்கங்கள் காணமுடிவதில்லை. இரண்டு விவாகரத்து, உறவுகள் போன்றவற்றைச் சந்தித்த சூசா, அறுபதுகளில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி அதிலிருந்து வாழ்நாள் முழுவதும் அவதிப்பட்டார்.
முன்னோட்டம்:
சூசாவின் கலைப்பயணம் 1940களில் உருவெடுக்கிறது. ஆரம்பக்கால படங்களில் கோவாவின் நிலப்பரப்பு, குடியானவர்களின் வாழ்க்கை, உருவப்படங்கள் போன்றவை காணப்படுகிறது. தெளிவு, உறவு, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளைப் பார்ப்பவருக்குக் கொடுக்கும் படைப்புகள் வெளிப்பாட்டையம் (Expressionism) பிரிவில் அமைந்திருக்கிறது. ஐரோப்பிய ஓவியர்களின் பாணியை நினைவூட்டும் படங்கள், சூசாவின் பிற்கால அடையாளங்களான கோரம், தீவிரம், அப்பட்ட வெளிப்பாட்டையம் (Raw Expressionism), பாலியல் போன்ற அம்சங்களின்றி எதிர்காலத்தில் நம்பிக்கையையும் உறுதியையும் நிலைநாட்டுகின்றன. குறிப்பாக இக்காலகட்டத்திலேயே படங்களில் “SOUZA” எனக் கையெழுத்திடும் பழக்கம் துவங்கியது. தன் பெயரையும், வரைந்த ஆண்டையும் குறிப்பிடும் பழக்கம் அவர் வாழ்நாள் முழுவதும் நீடித்தது.
சூசாவின் படைப்புகளில் புதிய அணுகுமுறைகளைப் பார்க்க முடியாது. டா வின்சியின் மோனலிசா, எட்வர்ட் முங்கின் (Edward Munch) “ஸ்க்ரீம்” (Scream), வான் காஹின் “சன்ஃலவ்வர்ஸ்” (Sunflowers) போன்ற உலகப்பிரசித்தி பெற்ற ஓவியங்கள் எதுவும் அவர் படைப்புகளில் இல்லை. அணுகுமுறையில் புதுமையைப் பார்க்கமுடியவில்லை என்றாலும் பாணியில் (Style) தனக்கென்று தனித்துவம் தேடிக்கொண்டார் சூசா. அவர் வரைந்த ஓவியங்கள் பெரும்பாலும் வெளிப்பாட்டையம் பிரிவில் உள்ளடங்கியுள்ளன. நிலப்பரப்புகள் , உருவப்படங்கள், உயிரில்லாப்பொருள் படங்கள் (Still Life), தலைகள், பின்பியல் வெளிப்பாட்டையம்(Abstract Expressionism), தர்மம் சார் காட்சிகள் போன்றவை அவர் படைப்புகளில் அடக்கம். 1940களில் தண்ணீர்ச்சாய நிறங்களை (Water Colours) பலகை அல்லது காகிதத்தின்மேல் வரையத்தொடங்கியவர், பல ஊடகங்களில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். வலைப்பின்னல்(Hatching), அம்புகள், துணிச்சலான பட்டை வரம்புக் கோடுகள் சூசாவின் அனைத்து ஓவியங்களிலும் ஒற்றுமையான அம்சம். எண்ணெய்ச்சாய நிறங்களைக் கித்தான் மேல் தீட்டும் போது நிறத்திட்டுகளை (Impasto) அதிகம் உபயோகித்தார். அறுபதுகளில் ரசாயன திருத்தப் படங்களையும் தன் கலைக்களஞ்சியத்தில் சேர்த்துக்கொண்டார்.
நிலப்பரப்பு ஓவியங்கள் :


நிலப்பரப்புகள் சூசாவின் படைப்புகளில் ஒரு பிரிவு. 1940களிலிருந்து பரவலாக தன் வாழ்நாள் முழுவதும் நிலப்பரப்பு காட்சிகளை வரைந்தார். 40களில் தெளிவோடு, உற்சாகமாக வரைந்த தோற்றம், அவர் வெளிநாட்டிற்குக் குடியேறிய பிறகு வரைந்த ஐரோப்பிய நகரக்காட்சிகளில் காணமுடியவில்லை. நிலப்பரப்பு காட்சிகள் துவக்கத்தில் மென்மையான நிறங்களில் நிஜப்பார்வையுடன் காட்ச்சியளித்தவை பிற்காலத்தில் பின்பியல் பாணியிலும் காணமுடிகிறது . குடியானவர்கள், மீனவர்கள், பாதிரிகள், போன்றவர்கள் கோவாவின் நிலப்பரப்பு காட்சிகளில் மட்டும் காணப்படுகிறார்கள் பிற்கால ஐரோப்பிய நிலப்பரப்புகளில் மனிதர்களை அதிகம் காணமுடியவில்லை. கோவாவின் மனிதர்களுடன் அவருக்கிருந்த இணைப்பை இது பிரதிபலிக்கலாம். தேவாலயங்கள், வரிசை வீடுகள் போன்ற ஐரோப்பிய நிலப்பரப்பு காட்சிகளில் ஒருவித நெரிசலும், தனிமையும், சோகமும் காண முடிகிறது. வண்ணக் கண்ணாடி ஓவியங்களைப் போலக் காட்சியளிக்கும் படங்கள் தட்டையான, ஆழமற்ற வெளிப்பாட்டியங்களாக இருக்கின்றன. கடற்பரப்பு காட்சிகள் பிரத்யேகமாக கோவாவை மட்டும்தான் சித்தரிக்கின்றன.

தலைகள்:


தலைகள் சூசாவின் தனிச்சிறப்பு. 50களில் தொடங்கி தன் வாழ்நாள் முழுவதும் தலைகளை வரைந்தார் . சூசாவின் தலைகள் நீளமான, நெற்றியில்லாத, கோர வரிசை பற்களுடன், நேர் மூக்குடன், மீன்களை நினைவூட்டும் கண்களுடன், உணர்ச்சிகளின்றி காணப்படுகின்றன. சில சுயவுரவப்படங்களில் அவருடைய பெரியம்மை பொட்டுகள் தெரிகின்றன. சூசாவின் தலைகள் பல்வேறு உலகக் கலாச்சாரங்களின் தாக்கங்களின் பிரதிபலிப்பு. குறிப்பாக மோஹென்ஜோதாரொ (Mohenjodaro) வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பமான “ப்ரிஸ்ட்” (Priest) என்பதன் தாக்கம் அவருடைய தலைகளில் காணப்படுகிறது.

சூசாவின் வரைபட உருவவியல் (Figuration) முயற்சிகளில், பாத்திரங்களின் சாயல்களை எளிமையான முறையில் சித்தரிக்க முயன்றிருக்கிறார். உருவப்படங்களில் சிலவை உருவவியலுக்கும், பின்பியல் வெளிப்பாட்டியத்திற்கும் கலவைபோலக் காட்சியளிக்கின்றன. வரம்புக் கோட்டினால் உருவமெனத் தெரிந்தாலும் முகவுறுப்புகள் பின்பியல் பாணியில் தோற்றமளிக்கின்றன. சில ஓவியங்களில் தலைகள் மிகக் கோரமான, நெளியும் முகவுறுப்புகளுடன் காணப்படுகின்றன. இத்தகைய வெளிப்பாட்டையத்திற்கு எளிய விளக்கங்கள் இல்லை. சிந்தைக்கு வசப்படாத காட்சி, அடையாள அழிப்பு, முகப்பரப்பின் முதல் பார்வை தாக்கம் போன்றவை இப்படிப்பட்ட வெளிப்பட்டியத்திற்கு அடிப்படையாக இருக்கலாம். வலைப்பின்னல்கள் அவருடைய தலைகளின் கோரத்தை அதிகரிக்கின்றன.
நிர்வாணங்கள்
பெண் நிர்வாணப்படங்கள் சூசாவின் மிக முக்கிய படைப்புகள். இளமைக் காலங்களிலிருந்து பெண் நிர்வாணங்களை வரைந்திருக்கிறார். இந்திய நவீன ஓவியங்களில் நிர்வாணப்படங்களை அப்பட்ட, நிஜரூப, பாலுணர்ச்சி பொங்க வரைந்த முதல் ஓவியர் என சூசவைக் கருதலாம்.
“தேவாலயங்களில் மேடையின்மீது நின்றுகொண்டு, காமம் சாத்தானின் தூண்டுதலுக்கு அறிகுறி எனப் பாதிரிகள் போதித்தபோது பெண்கள் குற்றவுணர்ச்சியினால் தலைகுனிவதையும், கோட் – சூட் அணிந்த ஆண்கள், பெண்களை நிர்வாணமாக்கி தங்கள் காமக் களியாட்டங்களுக்கு ஆளாக்க நினைத்ததையும் பார்த்திருக்கிறேன்” என தன் சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.
சூசாவின் நிர்வாணங்களில் தாய்- செய் படங்கள், இப்ரஸவ காட்சிகள், நிற்கும், படுத்திருக்கும், உட்கார்ந்திருக்கும் நிர்வாணங்கள் அடக்கம். தாய் – செய் நிர்வாணங்களில் பெண்கள் குழந்தைகளுடன் நிறைவோடு காணப்படுகின்றனர். பருமனான பெண்கள், பெரிய மார்பகங்களுடன் சிற்றின்பப் பார்வையுடன் நேயர்களைப் பார்க்கின்றனர். தனி வாழ்வில் தன் காம உணர்ச்சியையும், உறவுகளையும் தயக்கமின்றி ஒப்புக்கொண்ட சூசா, பல காமக் காட்சிகளையும் சித்திரங்களாகப் படைத்துள்ளார். காமத்தை இயற்கையாகப் பார்த்த ஓவியர்களுள் சுசாவும் ஒருவர். பல காட்சிகளில் பெண்கள் நகைகளுடனும், சிகை அலங்காரத்துடனும் காணப்படுகின்றனர். இந்தியச் சிற்பக்கலையில் மிகுந்த ஆர்வமுடைய சூசா, பாரம்பரிய சிற்பங்களில் காணப்படும் பெண்களின் வடிவத்தைப் புதுப்பிக்க நினைத்ததின் விளைவுகள் அவருடைய நிர்வாணப் படைப்புகள். உலகப்பிரசித்தி பெற்ற “பிறப்பு” (Birth) என்ற ஓவியத்தில், முழுமாத கர்ப்பிணி, நிர்வாணமாய் அமைதியாகப் படுத்திருக்கும் போது பாதிரியால் ஆசீர்வதிக்கப்படுகிறார். பின்னணியில் தேவாலயமும், சடங்குப் பொருட்களும் காணப்படுகின்றன. பிறப்பை ஒரு புனிதமான செயலாகவும், உயிர்கொடுக்கும் பெண்ணை தெய்வத்திற்குச் சமமாகவும் இப்படத்தில் சித்தரித்துள்ளார்.
பெண் நிர்வாணங்களில் தோன்றும் பாத்திரங்கள் குறும்புப் பார்வையுடன் அச்சமின்றி, தங்கள் நிர்வாணத்தைக் கொண்டாடும் வண்ணம் காணப்படுகின்றனர். ஆண்களைப் போலப் பெண்களுக்கும் தங்கள் காம உணர்ச்சிக்கு வடிகால் தேட உரிமை இருக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடாக இப்படைப்புகள் அமைகின்றன. அழகியல் ரீதியாக தன் பாத்திரங்களுக்கு எவ்விதத்திலும் பொலிவு சேர்க்காமல் நிஜவடிவிற்க்கு ஒத்த வரைந்த சூசா, தாய் உறவைச் சிலவற்றிலும் , துணை உறவைச் சிலவற்றிலும் தேடுகிறார். பெண்களை எப்பொழுதும் நிர்வாணங்களாக மட்டும் படைக்கவில்லை சூசா. மென்மையான இதமான நிறங்களுடன், மரபு பெண்மை சித்திரங்களையும் படைத்துள்ளார்.
உயிரில்லாப்பொருள் படங்கள்:



உயிரில்லாப்பொருள் படங்களில் கோவாவின் உணவு, கிறிஸ்துவத்தின் சடங்கு பொருட்கள், பூச்செடிகள், மது போன்றவை அடக்கம். தெளிவுடன், வெப்ப நிறங்களான நீலம், சிவப்பு, மஞ்சள் அதிகம் காணப்படுகின்றன. உயிரில்லாப்பொருள் படங்களின் ஒரு பாணியான மண்டை ஓடு பல படங்களில் தெம்படுகிறது. உயிரில்லாப்பொருள் படங்களில் பொருட்களுக்கு மத்தியில் மண்டை ஓட்டை வைப்பது மிகப் பழமையான மரபு. மரணம் நிச்சயம் என்பதன் பிரதிபலிப்பு. பூச்செடியின் மத்தியில் மண்டை ஓடு, வாழ்வும் சாவும் ஒன்றுக்கொன்று உறவானது என்பதைக் காட்டுகிறது.
கிறிஸ்துவம் சார் படைப்புகள் :


பிறப்பால் கிறிஸ்துவரான சூசாவிற்கும் கிறிஸ்துவத்திற்கும் இருந்த உறவுச் சிக்கலானது. கிறிஸ்துவத்தை பெரும்பாலும் புறக்கணித்த சூசாவின் வரைபடங்களில் கர்த்தர் மட்டும் கனிவுடன், மரபு தோற்றத்துடன் காணப்படுகிறார். கிறிஸ்துவத்தைப் புறக்கணித்தாலும் கிறிஸ்துவ சடங்குகள், அம்சங்கள் அவர் ஓவியங்களில் அதிகம் காணப்படுகின்றன. சிலுவை அரை, நன்றி கொடுத்தல், ஆசீர்வாதம், போன்ற கிறிஸ்துவ சடங்குகளை தன் ஓவியங்களில் சித்தரித்துள்ளார் சூசா. கிறிஸ்துவ தலைப்பில் படைக்கப்பட்ட ஓவியங்களில் ஒரு வித குழந்தை வரை பாணி காணப்படுகிறது. வலுக்கட்டாயமாக இந்த பாணியை தேர்ந்தெடுத்தாரா என்பது கேள்விக்குறி.
ரசாயன திருத்தங்கள், முழு கருப்பு படங்கள் , பிரதிகள் :
அறுபதுகளில் தொடங்கி நாளிதழ்கள், அஞ்சலட்டைகள், புகைப்படங்கள் போன்றவற்றை ரசாயனத்தின் மூலம் உருமாற்றி புதிய படங்களாக மாற்றியுள்ளார். இது ஒரு வகை நிஜ அழிப்பு முயற்சிகளாக இருக்கலாம் அல்லது முதல் சிந்தனைகளின் பிரதிபலிப்பாக இருக்கலாம். சுசாவின் முழு கருப்புப் படங்கள் ஒரு விசேச பிரிவு. படம் முழுவதும் கருப்பு நிறத்தின் சாயல்களுடன் காணப்படும் இவை முதற்பார்வைக்கு முழுவதும் கருப்பாகத் தெரிந்தாலும், ஒரு கோணத்தில் சூர்ய ஒளி படும்போது அதனுள் அடங்கியிருக்கும் வடிவங்கள் கண்களுக்குத் தெரிகின்றன. கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு முதலில் சொல்லிக்கொடுப்பது, கருப்பை நேரடியாக உபயோகிக்கவே கூடாதென்பது. சூசா பிரத்தியேகமாகக் கருப்பில் படைப்புக்களை உருவாக்கியது ஒருவித கல்விசார் போதனையின் எதிர்ப்பு எனக் கருதலாம்.
சூசா லண்டனிலிருந்தபோது தேசிய கலைக்கூடத்திற்குத் தினமும் சென்று அங்குள்ள படைப்புக்களைப் பார்த்துக் குறிப்புக்கள் எடுப்பார். புகழ்பெற்ற ஓவியர்களான டிஷன் (Titan), ரேம்பிரான்ட் (Rembrandt), கரவாஜியோ (Caravaggio) போன்றவர்கள் வரைந்த படங்களின் தன் சொந்த பிரதிகளையும் வரைந்திருக்கிறார்.
முடிவுரை
சில ஓவியர்கள் தங்கள் படைப்புகளால் அவர்களுடைய சிந்தைக்குள் புகுவதற்கு நேயர்களுக்கு நெடுஞ்சாலைகளையே அமைத்துவிடுவர். சூசாவின் படைப்புக்களைத் தேர்ச்சி செய்வது கடினமான விஷயம். ஓவியக்கலையையே ஓவியங்கள் மூலம் உடைத்தெறிந்து புதுப்பிக்க முயன்றவர் சூசா. சொந்த வாழ்வில் தோல்விகளையும் வெற்றிகளையும் மாறி மாறி கண்டவருக்கு ஓவியம் ஒன்றே அடைக்கலமாக அமைந்தது.
Copyrights of all photographs belong to the respective websites.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
