
தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் ‘தசாவதாரம்’ என்றொரு திரைப்படம் வந்தது. அதில் ‘பட்டாம் பூச்சி விளைவு’ (பட்டாம் பூச்சி விளைவு- சின்னஞ்சிறு விளைவுகள் மாபெரும் நிகழ்வுகளாக வடிவெடுப்பது) என்று பொதுவில் அறியப்படும் ஒரு அறிவியல் கருத்தை முயற்சி செய்திருப்பார்கள். குவாண்ட இயற்பியல், காலப் பயணம், குழப்பக் கோட்பாடு இவைகளின் உள் விளையாட்டுச் சிக்கல்களில், முடிவைத் தவிர, எதுவுமே எளிமையாகவோ, நேரிடையாகவோ இருப்பதில்லை, என்று தொடங்கும் ஒரு அறிவியல் கட்டுரை சில அம்சங்களைச் சொல்லி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
மனித இனத்தை பாடாய்ப்படுத்திய ஒரு கிருமி இந்த உலகத்தின் இயக்கத்தை எப்படிப் பாதித்து என்பதை, 2020ன் இறுதியிலிருந்து நாம் கண்டு வந்த போது, லாஸ் அலமோஸ் (Los Alamos) அறிவியலாளர்கள், கால நேரங்களைக் கடந்தும் கூட, இடையூறுகள் வந்தாலும் கூட, குவாண்ட நிலைகள், கட்டுப்பாட்டை மீறி சுழல்வதில்லை என்று கண்டுபிடித்தனர். ஒரு குறிப்பிட்ட குவாண்ட நிலையில் உள்ள ஒரு துகளை, கடந்த காலத்திற்கு எடுத்துச் சென்று, வேண்டுமென்றே அதன் கடந்த கால நிலையை மட்டும் மாற்றி, அதன் நிகழ்கால நிலையை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றாமல் உருவகப்படுத்திப் பார்க்கையில், குவாண்ட நிலையில் அந்தப் பட்டாம் பூச்சி விளைவு ஏற்படவில்லை என்று அவர்கள் கண்டறிந்தனர்.
லாஸ் அலமோஸ் இயற்பியலாளர் பின் யான் (Bin Yan) சொல்கிறார்: ‘இது அதையும் விட சிக்கலானது. தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு, பட்டாம் பூச்சி விளைவை பொருள் கொள்ள பல வழிகள் உள்ளன,’
அறுபது வருடங்களுக்கு முன்னர் எட்வர்ட் லாரென்ஸ் (Edward Lorenz) என்ற எம் ஐ டி பேராசிரியர், தான் முன்னர் உபயோகித்த ஆறு தசம அளவுருக்களை மூன்று தசம அளவுருக்களாக மாற்றி வானிலை உருவகக் கணக்கீடுகளைச் செய்து பார்த்தார். இரு மாதங்களுக்கான வானிலை உருவகக் கணக்கீடுகள் முழுவதுமாக மாறியுள்ளதைக் கண்டு வியந்தார். தன் உரையில் அவர் சொன்னார் “ப்ரேசிலில் சிறகடிக்கும் வண்ணாத்துப்பூச்சி, டெக்ஸாசில் புயலைக் கொண்டு வருகிறது.” சிக்கலான நடத்தை/ நிகழ்ச்சிகள் பற்றி சொல்ல நேர்கையில், ‘இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் உள்ள தொடர்பு போல’ என்ற பொருளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. வானிலை போன்ற சிக்கலான அமைப்புகளில், ஒரு நேரத்தில் ஏற்படும் மிகச் சிறிய மாற்றங்கள், மிகப் பெரும் அளவில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
இந்தப் பட்டாம்பூச்சி விளைவினை 1955 லேயே தன் ‘இடிசத்தம்; என்ற சிறுகதையில், ரே ப்ரேட்பரி (Ray Bradbury) சொல்லிவிட்டார். அந்தக் கதையில் டைனோசோர் காலத்திற்குப் பின்நோக்கி பயணிக்கும் ஒருவர், ஒரு பட்டாம்பூச்சியை தவறுதலாக மிதித்து விடுவார். அவர் நிகழ் காலத்திற்குத் திரும்பும்போது அனைத்துமே மாறியிருக்கும்- மனித நடவடிக்கைகள் மாறியிருக்கும், வார்த்தைகள் தவறாக எழுதப்பட்டிருக்கும், சமீபத்திய அதிபர் தேர்தலில் யாரோ வெற்றி பெற்றிருப்பார்.
இவ்விரண்டு பட்டாம்பூச்சி விளைவுகள் தொடர்புள்ளவை, ஆனால், குண வேறுபாடு கொண்டவை என்று ‘பின்’ சொல்கிறார். அமைப்பின் சிக்கலான தன்மையால், சிறு காரணங்கள் கூட, பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்ற சிக்கலைப் பற்றிப் பேசுகிறார் லாரென்ஸ். இவைகள் வேகமாக உருவாகிவிடும். இதே காரணத்தால் தான், இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேற்பட்டதான வானிலையைத் துல்லியமாக கணிப்பது இயலாத ஒன்று என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.(1) ப்ரேட்பரி, குழப்பத்தைக் காட்டிலும், சிறு செயற்பாடுகள், துரித கதியிலில்லாமல், காலத்தில் படிப்படியாகப் பயணிப்பதைக் கதையாகச் சொல்கிறார்- இது உயிரியல் பரிணாமத்தை ஒத்தது -காலத்தில் பின் நோக்கிச் செல்வது.
இவை இரண்டிற்குமான குவாண்ட ஒத்திசைவைக் காண ‘பின்’ விருப்பமுற்றார்.
குவாண்ட சிக்கல்
‘முதலில் இப்படி ஒன்று இருக்கிறதா என்பதே கேள்வியாக இருந்தது; குவாண்ட சமன்பாடுகள் இதைப் பற்றிய குறிப்புக்களைத் தரவில்லை’ என்று சொல்கிறார் அவர். தனித்துவமான இடங்களில், தனித்துவமான இயங்கு நிலையில் இருக்கும் புள்ளித் துகள்களின் தொகுப்பே பொருள் என்பது என மரபு அறிவியல் சொல்கிறது. இவ்வளவு அழுத்தந்திருத்தமாக ‘உண்மை நிலை’ என்று வரைமுறை செய்த போதிலும், பெருங்குழப்ப நடவடிக்கைகளும், காத்திருந்ததைப் போல எழுகின்றன. சிறிய எண்ணிக்கையிலான சிறு பொருட்களை ஒரு வகையில் அமைத்து, அவற்றின் முதல் நிலையில் சிறு மாற்றங்களைச் செய்தால். மாறுபட்டவைகள் வரும் அல்லவா? வரிசையில் நிற்கும் ஒரு மாணவர் அணியை சற்றே இடது புறம் நகரச் சொன்னால், எத்தனை வகையான வரிசைகள் கிடைக்கும் என்பதை எத்தனை முறை இரசித்திருப்போம்! சம நீளமுள்ள, உராயாத தடியால் ஆன இரு ஊசல்களை (பென்டுலம்) ஒரு கொக்கியில் இணைத்து ஒரு பரிசோதனை செய்யலாம்; நம் கை, முழங்கை இவற்றை நினைவில் வைத்துக் கொள்ளலாம்; கிடைமட்டத்தில் தொங்கவிடப் படும் ஒற்றை ஊசல், அரைவட்ட சுழற்சியில் முன்னும் பின்னுமாக மீண்டும் மீண்டும் ஆடும்; ஆனால், இரு தடி ஊசலோ, மடிந்தும், விரிந்தும், தன் முழங்கையைச் சுற்றி கீழ்க்கையை காற்றாலைப் போலச் சுழற்றும். சிக்கலான சுழற்சிகள். இந்த பென்டுலங்களை சற்றே மாறுபட்ட உயரங்களிலிருந்து விடுவித்தாலோ, அல்லது அதன் முழங்கையைச் சற்றே மடித்து விட்டாலோ, இயக்கக் கோலம் முழுதும் மாறுபடும்.
குவாண்ட சாம்ராஜ்யத்தில், குழப்ப நிலையை அறிவதற்கு கொஞ்சம் ஏமாற்றத் தெரிந்திருக்க வேண்டும். அசலான குவாண்ட அமைப்பு, நாம் முன் பத்தியில் பார்த்ததைப் போல, சிறு மாறுதல்களுக்கு உட்படுத்தினாலும், அது குழப்ப விளைவுகளைக் கொண்டு வருவதில்லை- சங்கு சுட்டாலும் வெண்மை தரும். அதாவது தன்னளவில் அது குழப்பமல்ல. ஆனால், அசலற்ற ஒன்றை நாம் கணக்கில் கொண்டால் அது, குழப்பங்களை உண்டாக்கும். உதாரணத்திற்கு சத்தம், தூசி, வானொலி அலைகள், காந்த அலைகள், இப்படி என்னென்னவோ பாதிப்புகள் அணுக முடியா தரக்கட்டுப்பாடுகள் உள்ள சோதனைச் சாலைகளில் கூட, அணுவைச் சோதிக்கும் போது சூழலால் ஏற்படும் சில பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு, சில உண்மையான மாற்றுக்களை சூத்திரத்தில் இணைத்தால், நமக்கு சிக்கலான விடைகள் கிடைக்கும். ‘லாஷ்மிட் எகோ’ (Loschmidt Echo) என்ற ஒரு அளவீட்டை சில 20 ஆண்டுகளுக்கு முன்னர், அறிவியலாளர்கள் அறிமுகப்படுத்தினர். இது, ஒரு அமைப்பின் சூழல்களால், அது எத்தனை டிகிரி (பாகை) பாதிக்கப்பட்டு. சிக்கலுக்கு இட்டுச் செல்கிறது என்ற அளவையாகும்.
ஆனால், இதுதான் பெருங்குழப்பம் எனப்படுவதா? இதுதான் லாரென்ஸ் சொன்ன பட்டாம் பூச்சி விளைவா? பெருங்குழப்பம் என்பதை ஒழுங்கின்மை என்று நினைத்தோம் என்றால், நம்மால் இதைப் புரிந்து கொள்ள முடியாது.
முந்தைய ஆய்வுகளில் சூழலால் ஏற்படும் பாதிப்பும், அதை அளக்கும் ‘லாஷ்மிட் எகோ’வும், உண்மையான குழப்பத்திற்கு தேவையான மாற்றீடுகள் எனக் கருதப்பட்டன. ஆனால், பட்டாம் பூச்சி விளைவு உண்மையில் செயல்படுகிறதா என்ற சிந்தனை எழுந்தது. நாம் ஒன்றும் மிகவும் இறுக்கமாக கட்டுப்பாடு செய்யப்பட்ட அமைப்பை எடுத்து, அதில் இடையூறுகளைச் செய்யவில்லை; அது வெளி உலகில் எதிர் கொள்ள நேரிடும் பாதிப்புகளைத் தான் செலுத்திப் பார்க்கிறோம். சீராக முன்னும் பின்னும் அசையும் பென்டுலம் கூட காற்றில், புயலில் நிலை குலைந்து ஆடும். அமைதியான நதியிலே ஓடும் ஓடம், அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.
குழந்தை பட்டாம்பூச்சிகள்
அறிவியலாளர்கள், ‘லாஷ்மிட் எகோ’ மற்றும் அதைப் போன்ற அளவீடுகளில் குழப்பங்களை பதிந்து வந்தனர். இதில் உண்மையாகவே, குழப்பம் என்பது இருக்கிறது, இல்லாமலும் இருக்கிறது. இருளன்று, ஒளியன்று! லாரென்ஸ் சொன்ன பட்டாம் பூச்சி விளைவிற்கும் இதற்கும் உள்ள தொடர்பும் தெளிவாக இல்லை. 2015 வாக்கில் புது அளத்தல் முறை ஆய்வாளர்களால் கொண்டாடப்பட்டது. அதற்கு ஓடிஓசி (OTOC-Out of Time Order Correlator) என்று பெயர். அளவீடு செய்யும் விதத்தில் உள்ள இரு குணங்களை- ஆற்றல், மற்றும் சுழற்சி என வைத்துக் கொள்வோம்- அதை அளக்கும் செயல் முறை. ஆனால், இரண்டும் ஒரே நேரத்தில், அளவிடப்படுவதில்லை. அதாவது, ஆற்றலை இந்த வினாடியில் அளக்கிறோம் என்றால், சுழற்சியை காலத்தில் பின் நோக்கிச் செலுத்தி அளவிடுதல். காலக் கட்டுப்பாட்டில் ஒரு குணத்தை வைத்துப் பார்ப்பது. ஒரு குணத்தை இந்த நேரத்திலும், மற்றொன்றை கணித ரீதியாக, காலத்தில் பின் நோக்கிச் செலுத்தி, அதை அங்கே கவனித்து, மீண்டும் நிகழ் காலத்திற்குக் கொண்டு வரும் போது, இந்த நேரத்தில் முன் இருந்த குணம் இதற்கு என்ன எதிர்வினை செய்கிறது எனப் பார்ப்பது. (கொஞ்சமாகவா, அதிகமாகவே தலை சுற்றுகிறதல்லவா?) இதில் இன்னமும் வினோதமான ஒன்றும் உண்டு- அது குவாண்ட நிலையில் ‘இதையும் அதையும்’ அளந்து, மீண்டும் ‘இதை’ அளக்கும் போது, காலப் பயணம் செய்யாமலும் கூட, மாறுபட்ட முடிவு, பொதுவாக, குவாண்டத்தின் இயல்பாலேயே ஏற்பட்டுவிடும்! இந்த விளைவைத்தான், இந்த மாறுபாட்டைத்தான், முன்னோக்கிப் பயணித்தும், பின்னோக்கிப் பயணித்தும் ஓடிஓசி கணக்கிட உதவுகிறது. அதாவது, இது ப்ரேட்பரி சொன்ன பட்டாம்பூச்சி விளைவை விளக்குகிறது.
குவாண்டத் துறையில் பெருங்குழப்ப அளவீடுகளான, ஓடிஓசிக்கும், லாஷ்மிட் எகோவிற்கும் இடையில் ஒரு பாலம் கொண்டு வர முடியுமா என்று ‘பின்’ சிந்தித்தார். Lukasz Cincio (லுகாஸ் சின்சியோ) மற்றும் Wojciech Zurek என்ற இருவர் அவருடன் இணைந்தனர். Cincio சமீபத்தில் ஐ பி எம் குவாண்ட சவாலில் வென்றவர்; Zurek, (2)குவாண்டம் டி கோ ஹெரன்ஸ்- இயற்பியல் மற்றும் குவாண்ட இயற்பியல் இடையே பாலம் அமைத்தவர் என்று புகழப்படுபவர். அவர்கள் மூவரும் இணைந்து செய்த கணினி கணிதங்கள், பகுத்தாய்வுகள், எகோவும், ஓடிஓசியும் நெருக்கமானத் தொடர்புடையவை எனக் காட்டியது. எகோவிலிருந்து ஓடிஓசியை அனுமானிக்க முடியும் என்று அறிந்தார்கள். சிக்கலான குவாண்ட அமைப்புகளில், இரு பட்டாம் பூச்சிகளும் இடம் பெறுவதை அறிந்தார்கள்.
“இந்தத் தொடர்புகள் பற்றிய புரிதல்கள் எதையோ சுட்டுவதைப் போலிருந்தது. நாங்கள் அறிய முற்பட்டதை விடவும், வேறொன்று இருக்கும், அல்லது அரிய விளக்கம் கிடைக்கும் என்ற எண்ணம் ஒரு மூலையில் எழுந்து கொண்டே இருந்தது. மரபான குழப்ப அமைப்பில், நாம் முன்னர் பார்த்த இரட்டைத் தடி பென்டுலம் போல, எந்த நேரத்திலும் நிலையுமிருக்கும், நிலையான இயக்கமுமிருக்கும். ஆனால்,பொதுவாக, குவாண்ட அலை குணத்திற்கு இவை இருக்காதே? குவாண்டக் குழப்பத்தைப் புரிந்து கொள்ள அலைத்தன்மை உதவுமா என்பதில் எப்போதுமே தெளிவிருந்ததில்லை.”
எனவே, ‘பின்’ தன் கால்டெக் சகாவுடன் சேர்ந்து இக்கேள்வியை ஆராயப் புகுந்தார். முக்கியக் குறிக்கோள், அலைத்தன்மையும், பெருங்குழப்பங்களும். குவாண்டக் கணினித் துறையில் ‘சுற்றுச் சிக்கல்’ (Circuit Complexity) என்பது பயனாகிறது அந்தக் கருத்தை இவர்கள் எடுத்துக் கொண்டனர். முதலில் ஒன்றாக அல்லது இணையாக இருந்த அலைத் தன்மை, காலப் போக்கில், எந்த அளவில் ஒன்றுடன் ஒன்று வேறுபடுகிறது என்பதை அளவிட்டனர். குவாண்டத்தின் இயல்பே இதுதான்- சிறிய மாறுதல்கள் மிகப் பெரிய விளைவை உண்டாக்குவது- இதில் காலத்தின் பங்கு துலங்குகிறது. காலப் போக்கிலும் நிலைத் தன்மையைக் கொண்ட குவாண்ட இயக்க அறிவியலைக் காட்டிலும், இந்த ‘சுற்றுச் சிக்கல்’ கருதுகோள், அலைத்தன்மை/ குணத்தை அறிய உதவுகிறது. ஒத்த அலைக்குணத்தை பிரிக்கும் சிக்கலான இந்த நிலையை ஓடிஓசி மூலமும் கணக்கிடலாம்.
இந்த சுற்றுச் சிக்கல் முறை சிறப்பான ஒன்றாகவும், ஓடிஓசிவுடனான தொடர்பு உற்சாகமளிப்பதாகவும் இருந்தாலும், இது சரிதானா என்ற கேள்வியும் இருந்தது. இது சரி என்று நம்புவதற்காக, ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட சோதனைகளை இந்த வழியில் செய்து விடைகள் ஒன்றாக வரவே, தாங்கள் தெரிந்து கொண்டது சரியே என்று அவர்கள் உணர்ந்தார்கள். உதாரணத்திற்கு, கருந்துளை, பெரு வெடிப்பு போன்ற அதீத ஈர்ப்புகளைச் சொல்லும் ஐன்ஷ்டைனின் ஈர்ப்பு விதிகள், அத்தகைய அதீத நிலைகளில்லாதவற்றிற்கும் அதாவது, மரபு இயற்பியலாளரான ந்யூட்டன் சொன்னவற்றிற்கும் பொருந்துகிறது அல்லவா? நாம் பெரிதும், சிறிதும் எனப் பகுத்து அனைத்தையும் புகுத்தி விடுகிறோம். சரியான விதங்களில் வந்தைடையும் ‘மரபு சார் விளக்கமான பெருங்குழப்பத்தை’ இந்த சுற்றுச் சிக்கல் முறையினால், ‘குவாண்ட பெருங்குழப்பத்துடன் ஒப்பீடு செய்து அவை இணங்கிப் போவதைப் பார்க்கலாம்.
இறுதியில் லாரென்ஸ் சொன்ன குவாண்ட பட்டாம் பூச்சி விளைவையும் வந்தடைந்து விட்டோம். பிரேசிலில் சிறகடித்த பட்டாம் பூச்சி டெக்சாசில் புயலைக் கொண்டு வந்தே விட்டது! ஆனால், ‘பின்’ இந்த வெற்றியோடு நிறுத்திக் கொள்ளவில்லை. ப்ரேட்பரி சொன்ன அந்த விளைவுடன் ஓடிஓசி ஒத்துப் போவதைப் போல, அது லாரென்ஸ் சொன்ன விளைவுடன் இயல்பாக எப்படிப் பொருந்திப் போகிறது என்று கவனித்தார். இவை இரண்டிற்குமான தொடர்பு, ஒருவேளை, நாம் அறியாத, ஏதோ உண்மையைக் காட்டுகிறதோ?
எதிர் பட்டாம் பூச்சி விளைவு
‘பின்’னும் அவரது லாஸ் அலமோஸ் சகாவான நிகோலாய் சினிட்சின் (Nikolai Sinitsyn) இருவரும், ஐ பி எம் குவாண்டக் செயிலியில், (IBM Quantum Processor) ப்ரேட்பரி சொன்ன குவாண்டக் குழப்பங்களை ஆய்வு செய்தனர். பொதுவாக, நாம் பயன்படுத்தும் பல கணினிகள் ‘பூலியன் (Boolean Circuits) சுற்று’க்களாலானவை. அவை குவாண்டக் கணினிகள் இல்லை; தகவல்களை பூஜ்யம், ஒன்று என்ற ‘பிட்’களாக (Bits) எடுத்துக் கொண்டு, சிக்கலான ‘தர்க்கக் கதவுகளின்’ (Logical Gates) வழியே செல்கையில் தமக்குள் உள் உரையாடலை நிகழ்த்தி, விடைகளை அளிக்கின்றன. உதாரணமாக, ‘மேலும்’ (AND) என்ற கதவு, இரு ‘பிட்’களும் ஒன்று என இருந்தால், அதை ஒப்பிட்டு ஒன்று என்ற விடையையும், பூஜ்யமாக இருந்தால் அதற்குண்டானதையும் தருகிறது. குவாண்டக் கணினியும், இவ்விதமாகத் தான் செயல்படுகிறது- அதில் ‘குவாண்டம் பிட்ஸ்’ என்ற ‘க்யூபிட்ஸ்’ (Qubits) பயன்படுத்தப் படுகிறது. சில கதவுகளும் இதில் அதிகமாக இருக்கும்; இந்தக் கதவுகள் ‘க்யூபிட்ஸ்’ செயலிற்கானவை.
‘க்யூபிட்ஸ்’ நம் இரட்டை பிட்ஸ்களான பூஜ்யம், ஒன்று என்பதை எடுத்துக் கொள்கிறது. ஆனால், சிக்கலான செய்திகளைக் கையாளும் திறம் பெற்றது. இந்த பூஜ்யமும், ஒன்றும், தர்க்கக் கதவுகளின் வழி செல்கையில், தமக்குள் பிணைகின்றன; விளைவு அவை, தனிப்பட்ட க்யூபிட்ஸ்களாக இருப்பதில்லை; மாறாக தங்கள் நிலையைப் பகிர்ந்து கொள்கின்றன. இப்படிப் பிணைந்துள்ள க்யூபிட்ஸ் குழுவின் மதிப்பை நாம் அளவிடுகையில், ஏதோ ஒரு வகையில் மற்றவற்றின் நிலையும் பாதிக்கப்படுகிறது.
‘பின்னும்’ அவரது சகாவும் சிக்கலான சுற்றை உருவாக்கி அதில் க்யூபிட்ஸ்களை அனுப்பினார்கள். அதுவும் எப்படி? முதல் கதவில் இறுதியிலும், இறுதிக் கதவில் முதலிலுமாக. ஏன் அப்படி? கால நேரத்தில் க்யூபிட்ஸ் பின் நோக்கிப் பயணிப்பதை உருவகப் படுத்துவதற்காக. சுற்றில் பின் நோக்கிப் பயணிக்கையிலும், க்யூபிட்ஸ்கள் பிணைந்து கொண்டன. ஒரு க்யூபிட்டை அளந்தார்கள்; குவாண்ட நிலையை நாம் அளக்க முயல்கையில், அந்தப் பொருள் நிலையாக நம் அளவீடுகளுக்கு நிற்காது- அதுதான் அதன் சிறப்பு! க்யூபிட்ஸ் கொண்டு செல்லும் செய்திகளை பாதிப்பதோடல்லாமல், அதனுடன் பிணைப்பிலுள்ள மற்ற க்யூபிட்ஸ்களிலும் குறைந்த அளவிலாவது மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.
எனவே, இவர்கள் இருவரும் ஒரு தந்திரம் செய்தார்கள். பாதிக்கப்பட்ட க்யூபிட்ஸ்களையும் சேர்த்து தர்க்கக் கதவுகளில் இம்முறை நேராக, அதாவது காலம் பயணிப்பதைப் போல செலுத்தினார்கள். என்ன ஒரு ஆச்சர்யம்- பாதிக்கப்பட்ட அந்த க்யூபிட், தன் முந்தைய நிலைக்குத் திரும்பி வந்தவுடன், தான் முன்பிருந்த (அதாவது, பரிசோதனைக்கு முன்பிருந்த) நிலையையே காட்டியது- பின்னணியாக சிறிது சத்தம் மட்டும். இது அனைத்து க்யூபிட்ஸ்களுக்கும் பொருந்திப் போனது. சுற்று எந்தளவிற்குச் சிக்கலாக உள்ளதோ, அந்த அளவிற்குக் குறிப்பிடத்தக்க பிணைப்புகள் க்யூபிட்ஸில் உண்டாகிறது- பாதிப்புகள் குறைவடைகின்றன. முன்னர் பாதிப்படைந்த தகவல்கள், இப்போது மீட்டெடுக்கப்படுகின்றன.
“இது ப்ரேட்பரியின் பட்டாம் பூச்சி விளைவை ஏற்கவில்லை. குவாண்டத்தின் படி உண்மை தன்னைத் தானே மீட்டுக் கொள்கிறது. பிணைப்புகள், ‘இன்றை’ பாதுகாக்கின்றன, காப்பாற்றுகின்றன” என்று சொல்கிறார் ‘பின்’
ஓ பட்டர்ஃப்ளை, நீயில்லாமல் கவிஞர் இல்லை, ஆனால்…?
லாரென்ஸ், ப்ரேட்பரியின் பட்டாம்பூச்சி விளைவுகளை, தொடர்பை வெற்றிகரமாக வெளிக்கொணர்ந்த இவர்களால் மற்றொரு புரிதலும் ஏற்பட்டது. அது, இயற்கையான பிணைப்பு, பாதிப்புக்களைச் சரி செய்துவிடும் என்பதே. இந்த எதிர் பட்டாம்பூச்சி விளைவு இருப்பது இப்போது தெரிந்து விட்டதால், அதைப் பயன்பாட்டில் கொண்டு வர முடியும். நேரடியான ஒரு கேள்வி இதை விளக்குகிறது- ‘குவாண்டக் கணக்கீட்டில்’, ‘குவாண்டம்’ எவ்வளவு உள்ளது? மரபைச் சாராமல், தன் குவாண்ட மூலங்களைக் கொண்டு, குவாண்ட கணினி செயலாற்றுகிறதா? ‘பின்’ சொல்கிறார் “முன்னும், பின்னுமான தர்க்கச் சுற்றுக்களை அமையுங்கள்; தகவல்கள் பேணப்பட்டுள்ளனவா என்று பரிசோதியுங்கள். ‘எதிர் பட்டாம் பூச்சி விளைவு முழுக்க முழுக்க குவாண்ட நிகழ்வென்பதால், எந்த அளவிற்குத் தகவல்கள் பேணப்பட்டுள்ளதோ, அந்த அளவிற்கு குவாண்டத் தன்மையை உறுதி படுத்திக் கொள்ளலாம்.
தகவல் பாதுகாப்பு சார்ந்த துறைகளில் இதன் பங்களிப்பு நல்ல பலன் தரும்- வங்கிக் கணக்கு, அரசாங்க இரகசியங்கள், உங்கள் அடிப்படை விவரம் அடங்கிய ஆதார் போன்றவை. இடர்கள் பலவகைகளில் வருகின்றன அல்லவா? அவை, எப்போதுமே நிலவும் பௌதீகச் சுற்றுக்களில் உள்ள கதிரியக்கத்தால், கணினி சற்று முரண்டுவதால் (?), மின் சக்தியோட்டம் நிலை அளவில் இல்லாததால் என்று ஆயிரம் காரணங்கள் ‘தடங்கலுக்கு வருந்த வைக்கும்.’ அவற்றிலிருந்து தகவல்களைக் காக்க, சிக்கலான சுற்றுக்களில் பயணிக்கும், அதிக எண்ணிக்கையில் பிணையும், கால முன்னோட்டம், பின்னோட்டம் எதில் புகுந்து புறப்பட்டாலும், தன் நிலைக்கு சேதமில்லாமல் மீளும் இந்த ‘எதிர் பட்டாம் பூச்சியும்’ வரவேற்கத்தக்கதே. அனைத்தையும் விட காலப் பயணத்தில் நாம் எதிர்காலத்தில் பயணிகளை அனுப்பினால், அவர்களால் சேதம் ஏற்படாத வகையில், சரியான, மேம்பாடடைந்த குவாண்ட எதிர் பட்டாம்பூச்சிகளைக் கொண்டு அதைச் செய்ய வேண்டும்.
ஒன்றை நிறுவி, அதை மறுத்து அல்லது மாற்றங்களோடு ஒப்புக் கொண்டு, அந்தக் கருத்தை மேலெடுத்துச் சென்று, உட்புகுந்து பார்த்து செயல்படும் அறிவியல், வழிமுறைகளையும், நிரூபணங்களையும் தருகிறது. இதையே தம் உள் அனுபவமாக தத்துவம் தருகிறது. காலத்தில் பயணித்து பல உலகங்களுக்குச் சென்று வந்த போகர் முதலான சித்தர்களைப் பற்றி சொல்வனம் இதழில் கட்டுரைகள் வந்திருக்கின்றன.
“முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பரம் பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!”- மாணிக்க வாசகர்.
குறிப்புகள்
i) இந்தியா ‘மௌசம் இயற்றறிவு’ என்ற ஒரு திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. வானிலைத் துல்லிய கணக்கீடுகள், வெள்ளம், மற்றும் வறட்சி பற்றிய முன்னறிவிப்புத் தரவுகள். மேகங்களை விதைத்தல், அவற்றை நகர்த்துதல் போன்ற அம்சங்களை உள்ளடக்கி செயல்படும் திட்டம்.
ii) மின் அணுக்களைக் கொண்டு அலைத்தன்மையைச் சொல்வார்கள். அவை பல ‘மேவிய; நிலைகளில் இருக்கும். ஒரு குறிப்பிட்ட, வரைமுறையான கட்டத் தொடர்பில் அவை இருப்பது ‘ஒத்திசைவு ‘ எனப்படுகிறது. அது சூழலில் வினையாற்றும் போது, ஒத்திசைவு மாறுபடுகிறது, இதை டி கோஹரன்ஸ் என்று சொல்கிறோம்.
உசாவி:
https://discover.lanl.gov/publications/1663/2021-august/the-quantum-butterfly-effect/Craig Tyler
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
