மஞ்சியின் மீது வீதியில் தேங்கி நின்ற மழைநீரை வாரியடித்துச் சென்றது ஒரு கார்.
தண்ணீர் மோதிய வேகத்தில் மஞ்சி சற்று நிலை குலைந்துதான் போனான். அவனது இடது கையில் இருந்த கழிவுச் சீலைகளால் தைக்கப்பட்ட கால் தட்டிகள் முழுக்கவும் நனைந்து போனது. கழுத்தில் தொங்க விட்டிருந்த ‘பாபிசி 200/-’ என்று சிங்களத்தில் எழுதப்பட்ட அட்டையும் நனைந்து எழுத்துக்கள் கரைந்து வழிய ஆரம்பித்தது. தனது வலது கையில் பிடித்திருந்த மெல்லிய வெள்ளைப் பிரம்பின் உதவியால் தன்னைப் நிலைப்படுத்திக் கொண்டான். முகத்தில் விழுந்த நீர் மோவாயில் இருந்து சொட்டு சொட்டாக வடிந்து கொண்டிருந்தது. நீரை நெற்றியிலிந்து மோவாய் வரை வழித்து எறிந்தான். அவனுக்கு அழுகை வந்தது. முகத்தில் இருந்த ஈரத்தில் அவனது கண்ணீர் கரைந்து மறைந்தது. தன்மீது நீரை வாரியடித்துச் சென்ற கார் மீது எரிந்து விழக்கூட அவனுக்கு தோன்றவில்லை. கால்தட்டிகள் நனைந்து போனதே அவனது மனதை அழுத்தியது. இனி அவற்றை யாரும் வாங்கப் போவதில்லை.
‘மனச்சாட்சி இல்லாதவங்க. நிக்காம கூட போறாங்களே!’ என்று நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டியது. அவன் நிலைத்தையே வெறித்துக் கொண்டிருந்தான். அவன் கால்கள் அசைவற்றுப் போனது. சற்றுமுன்னர்தான் தள்ளுவண்டியில் இளனீர் விற்றுச் சென்ற ஒருவன் ‘பின்னால போயிராத கால்வாய் இருக்கு பாத்து நில்லு’ என்று எச்சரித்துச் சென்றிருந்தான். அவன் பின்னால் கால்வாய் நெருங்கிவிட்டது போலவும் வீதி அவனை நெருங்கிவருவது போலவும் வாகனங்கள் அவனை முட்டித்தள்ள வருவது போலவும் இருந்தது. தலை கிறுகிறுத்துக் கொண்டிருந்தது. பத்துப் பன்னிரண்டு கால்தட்டிகளை ஒரு கையில் சுமந்துகொண்டு மறுகையில் வெள்ளைப் பிரம்பையும் வைத்துக் கொண்டு வீதியை வெறித்துப் பார்த்தவாறு நெடு நேரமாக அவ்விடத்தில் நின்றும் அவனருகில் யாரும் தம் வண்டிகளை நிறுத்தி ஒரு கால் தட்டியை கூட விலைக்கு வாங்கிக் கொள்ளவில்லை.
‘இன்டக்கி வராமலே இருந்திருக்கலாம். இந்தக் கோலத்துல எப்படித் திரும்பப் போறது. சொல்லிச் சொல்லி திட்டுவாளே’ என்று அவன் உள்ளுக்குள் பொருமிக்கொண்டிருந்தான். குமாரி அவனைப் போகவேண்டாம் என்று அடித்துக்கொண்டாள். முந்திய நாளில் ஹெவலொக் டவுன் முன்னே பாதை குழம்பி செய்வதறியாது நின்ற போது பெய்த தீடீர் கனமழையில் குமாரியும் மஞ்சியும் நனைந்து போனார்கள். ‘என்னையெல்லாம் இந்த மழை ஒன்டும் செய்யாது’ என்று எப்போதும் இருமாப்புடன் இருப்பவளை நேற்றுப் பெய்த மழை படுக்கையில் போட்டுவிட்டது. இரவெல்லாம் ஒரே குலுக்கலும் அனுங்கலும். உடம்பு அணலாய் கொதித்தது. பாமசியில் கேட்டு ஏதும் மருந்து வாங்கலாம் என்;று சொன்ன போது வேண்டாம் என்று அடியோடு மறுத்துவிட்டாள்.
மஞ்சி அவன் பெயர் கிடையாது. மஞ்சிப் போடி ரஞ்சன் அவனது முழுப் பெயர். அவனது பாட்டி அவனை மஞ்சி என்றழைத்து வந்ததால் அவனும் மஞ்சி என்று அவன் பெயரை சுருக்கிக் கொண்டான். ரஞ்சன் என்ற பெயர் கூப்பிடப்படாமலே மறைந்து போய்விட்டது. மஞ்சிக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவன் பாட்டிதான் உலகம். அவனது அம்மா அப்பா பற்றி அவள் ஒருபோதும் அவனிடம் கதைத்ததே இல்லை. விடிய விடிய ரேடியோவை படிக்கவிட்டு அதன் பக்கத்திலே படுத்துக்கிடப்பான். ‘இந்தப் பாழாப்போன பழக்கம்தான் அவளுக்கும் இருந்திச்சி’ என்று ஒருநாள் அவன் பாட்டி முனுமுனுத்தபோது அது அவனது அம்மாவைக் குறித்தாக இருக்க வேண்டும் என்று அவன் எண்ணிக்கொண்டான். தனக்கும் ஒரு தாயிருக்கிறாள். அவளுக்கும் ரேடியோ கேட்கும் பழக்கமிருந்திருக்கிறது. தன்னை யாரும் வீதியில் பொறுக்கி வளர்க்க வில்லை என்பது மட்டும் அவனுக்கு ஆறுதல் தந்தது.
அவன் குடியிருந்த திண்ணை வீட்டில் எதனுடனும்; அவன் முட்டிக்கொண்டதே கிடையாது. அவ்வளவும் மனக்கணக்கு. அங்குலம் அங்குலமாக வீடு மனதில் பதிந்து கிடந்தது. கதவுக்கு முட்டு வைக்கும் கல்லில் அவன் பாட்டி காலில் முட்டிக் கொண்டு பதறிய ஒரு பொழுதில் ‘கண்ண புறடியிலயா வச்சிட்டுப் போற’ என்று மஞ்சி அவளைக் கடிந்துகொண்டான். அவன் திண்ணை வீட்டில் நடந்து திரிவதைப் பார்த்து அவன் பார்வையில்லாதவன் என்று யாரும் சொல்லவும் மாட்டார்கள்.
பாட்டி இறந்து போன நாளில் ஊரவர்கள் கூடி அவளை அடக்கம் செய்ய சென்றபோது யாரோ அவன் கையைப் பிடித்து சுடுகாடுவரை கூட்டிச்சென்றார்கள். ‘இங்கதான் புதச்சிருக்கு’ என்று அவன் கையைப் பிடித்து அவன் பாட்டியை புதைத்த இடத்தில் கையை வைத்து விட்டார்கள். குவித்துக் கிடந்த மண்ணில் இருகைகளாலும் தட்டித்தட்டி தடவிக் கொண்டிருந்தான். அழுது பிரலாபிக்கக் கூட அவனுக்குத் தோன்றவில்லை. கண்களை அகலத்திறந்து வெறித்தபடியே சவக்காட்டில் நின்று கொண்டிருந்தான். அன்றுதான் அவனுக்கு பார்வையில்லாதது ஒரு குறையாக தெரிந்தது. சித்தம் பேதலித்து ஒருகணத்தில் அவனுக்கு திரும்பிப் போவதற்கான வழிபற்றிய மனக்கணக்கு அவன் மனதில் இருந்தும் மறைந்து போனது. அவனை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்றவர்கள் அவனை அங்கேயே விட்டு விட்டுக் கலைந்துசென்றுவிட்டனர்.
ஆள் அரவம் அற்று அடங்கிப்போன பொழுதில் திரும்பிச் செல்ல அடியெடுத்துவவைத்த போது கல்லில் தடுக்கி மரக்கட்டையொன்றில் மோதி விழுந்தான். நினைவு திரும்பி கண்விழித்துப் பார்த்த போது அவனால் தான் இருக்கும் இடத்தை ஊகிக்க முடியவில்லை. சுடுகாட்டில் விழுந்து கிடந்தவனை யாரோ தூக்கிவந்து தெருவில் ஒரு கடைத்திண்ணையில் கிடத்திச் சென்றிருந்தார்கள். தடுமாறியவனாக தன் கைகளால் காற்றில் தடவித் தடவி பிடிமானம் கிடைத்தவற்றை வைத்து திக்கற்று நடக்க ஆரம்பித்து சந்தடி நிறைந்த ஒரு இடத்துக்கு வந்து வழியில் நின்ற ஒருவரில் முட்டி நின்ற போது ‘எனக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீங்களா’ என்று கேட்டான். சுவரில் பொருத்திய தண்ணீர் பைப் ஒன்றுக்கு அருகில் அவர்கள் அவனை விட்டுச் சென்றார்கள். நெடுதூரம் நடந்த களைப்பில் முடிந்த மட்டும் தண்ணீர் குடிக்க ஆரம்பித்தான். ஒரு கையை வாகாக ஒருக்கழித்து வாயருகே வைத்து தண்ணீர் குடித்தபோது கைகயை நிறைத்து வடிந்த நீர் அவன் நெஞ்சு வரை சென்று நனைத்தது. தாகம் தீர்ந்த களைப்பில் அந்த பைப் அருகிலேயே அவன் உறங்கிப்போயிருந்தான்.
பாட்டி இருந்தவரை எந்தப் பயமும் அவனுக்கு இருந்ததில்லை. வீட்டுத் திண்ணையடிலேயே கதியாய் கிடந்தான். ரேடியோ கேட்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். பாடல்கள் கேட்டுக்கொண்டே பேப்பர் பேக் ஒட்டிக் கொடுப்பான். நூறு பைகள் ஒட்டினால் ஐம்பது ரூபாய் கிடைக்கும். மெயின் ரோடில் பழக்கடை வைத்திருக்கும் கையூம் ஹாஜியார்தான் அவர்களுக்கு இருந்த ஒரே ஆதாரம். பழைய பேப்பர்களை வாங்கி ஒட்டுவதற்கு வாகாக வெட்டிக் கொடுப்பார். மாப்பசை செய்ய மாவும் கொடுத்தனுப்புவார். ஒவ்வொரு பேப்பரையும் எடுத்து ஒட்டுவதற்கு ஏற்றால் போல் தன் விரல்களாலேயே தடவி மடிப்பெடுத்து அடுக்கிவைத்து பாட்டி கரைத்துக் கொடுக்கும் மாப்பசையை ஒட்டி பேப்பர் பேக் செய்வதில் அவன் கைதேர்ந்திருந்தான். அவன் பேப்பர் பேக் ஒட்டும் அழகே தனி. ஒரு நிமிடத்திற்குள் இருபது பேக்குகள் ஒட்டிவிடுவான். அவ்வளவு ஒரு வேகம்.
உறக்கம் கலைந்து எழுந்த போது அவன் கைகளுக்குள் யாரோ அனுதாப்பட்டு சில்லறைகளை திணித்துவிட்டு சென்றிருந்தனர். அவற்றை அவன் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டான். அவன் இருக்கும் திசை அவனுக்கு பிடிபடவில்லை. வாகனங்களின் இரைச்சலும் சன சந்தடியும் அவனுக்கு அச்சத்தைக் கொடுத்தது. கைகளால் காற்றில் தடவி செல்லும் போது தன் கையில் பட்டவர்களிடம் கையூம் ஹாஜியாரின் கடை எங்கிருக்கிறது என விசாரித்தான். அப்படி ஒருவர் இந்த இடத்தில் இல்லை என்ற பதில் அவனுக்கு கிடைத்தபோது தான் வேறு எங்கோ தொலைதூரம் வந்தடைந்திருப்பதை உணர்ந்தான். எவ்வளவு தூரம் நடந்திருப்போம் என்று அவனால் கணிக்கமுடியவில்லை. அவன் கண்களில் நீர் முட்டி அழுகை வந்தது. அதை துடைக்கக்கூட அவனுக்கு எண்ணம் வரவில்லை. கண்களை அகல விரித்து வெறித்தபடியே நெடு நேரம் நின்றிருந்தான். அவன் நிலை கண்டு மனத்தாங்கல் கொண்டு யாரோ அவனைப் பிடித்து ஒரு சீமெந்துக் கட்டில் அமர வைத்து அவன் கையில் உழுந்துவடை பொதியை தந்துவிட்டுச் சென்றார்கள். அவற்றை அவன் தின்றுமுடித்தபோதும் அவனுக்கு பசி அடங்கியிருக்கவில்லை. பயம் அவனை உலுக்கிக் கொண்டிருந்தது. அடிவயிற்றில் குடல்களும் நடுங்கிக் கொண்டிருந்தது.
அங்குமிங்குமாக அலைந்து திரிந்த அவனை யாரோ புகையிரத்தில் ஏற்றிவிட்டிருந்தார்கள். கம்பாட்மென்டின் நடுக்கம்பியை பிடித்தவாறு வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த புகையிரதம் எங்கு செல்கிறது என்பது கூட அவனுக்கு தெரியவில்லை. புகையிரதம் ஒரு தரிப்பில் நின்றபோது கம்பாட்மென்டில் கூட்டம் முண்டியடித்து வெளியேறியபோது இவனும் இழுத்துச்செல்லப்பட்டான். அப்போதும் ரயிலில் இருந்து விழப்போனவனை யாரோ தாங்கிப்பிடித்து புகையிரத நிலைய இரும்புக் கதிரையொன்றில் அமரச் செய்துவிட்டுச் சென்றார்கள்.
அங்குதான் குமாரி அவனைச் சந்தித்தாள். புகையிரத நிலையத்தில் படுத்துக்கிடந்த அவனுக்கு பார்வை தெரியாது தடுமாறுவதாக கூறி ஒரு பொலிஸ்காரர் அவனை குமாரியிடம் விட்டுச் சென்றார்.
அவள் அவன் முகத்தை தடவிப்பார்த்தாள். அவன் தலைக்குள் விரல்களால் கோதினாள். தோள் புஜங்களை தடவிப்பார்த்தாள். அவன் கையை எடுத்து தன் மணிக்கட்டை பிடிக்குமாறு சொல்லி அவள் நடக்க ஆரம்பித்தாள். அவளது கைத்தடியால் அவள் வழியில் தட்டித் துலாவி நடந்து சென்றாள். மஞ்சி அவள் பின்னால் இழுபட்டுச் சென்று கொண்டிருந்தான். சிறிதுநேர நடைக்குப் பிறகு ஒரு இடத்துக்கு வந்து ‘இங்க இரு சாப்படலாம்’ என்று அவனை அமரச் செய்தாள். நெடுநாளைக்குப் பிறகு அவன் அன்றுதான் சோறு சாப்பிட்டான். அது குளிர்ந்து போயிருந்தது. அவனுக்கு பாட்டியின் ஞாபகம் வந்து நெஞ்சை அடைத்தது. கண்களில் கண்ணீர் முட்டி கண்ணீர் வழிந்தோடியது. அந்த இடத்திலேயே அவன் படுத்துக்கொண்டான். உறக்கம் அவனை மேவிக்கொண்டது.
குமாரி அவனை சாப்பிடுமாறு கூறி எழுப்பிவிட்டாள். அவனுக்கு மூத்திரம் முட்டிக்கொண்டிருந்தது. குமாரி அவனை ஒரு தடுப்புச் சுவரருகில் கூட்டிச் சென்று சுவரில் பேயுமாறு கூறிச் சென்றாள். அவசரத்தில் அவன் சிறு நீர் கழித்து போது அது சுவரில் பட்டு அவன் பாதங்களிலும் தெறிப்பது விளங்கியது. இவனால் அருவருப்பை தாங்க முடியவில்லை. அவனுக்கு அங்கிருந்து சென்றுவிடலாம் என்று தோன்றி அங்கிருந்து செல்ல முனைந்த போது ஒரு சுவரில் முட்டிக்கொண்டு விட்டான்.
‘கிணத்தடி தள்ளியிருக்கு. டெய்லட்டும் அங்க இருக்கு. இப்ப அவசரத்துக்குத்தான் இங்க போகச் சொன்னேன். நானும் உன்ன மாதிரித்தான். ஆனாலும். எனக்கு இந்த ஏரியாவே அத்துப்படி. நீ ஒன்டுக்கும் பயப்படாத, நீ இங்கயே இருந்துக்கலாம். கிடைக்கிறத ரெண்டுபேருமா சேர்ந்து சாப்பிட்டுக்கலாம்’ என்று தைரியம் சொன்னாள் குமாரி.
அவன் பதில் பேசவில்லை. அவன் கண்களை வெட்டி வெட்டி உயர வெறித்தவாறு அமர்ந்திருந்தான். அவன் கண்களில் கண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.
‘இந்த இடமெல்லாம் ரெண்டு மூனு நாள்ல பழகிடும். அதுவரைக்கும் எங்கேயும் போகவானாம். இங்க இருக்கிற பிச்சக்காரனுகள் பொறாமையில ஏதும் செய்தாலும் செய்துபோடுவானுகள். நானே உன்ன வெளிய கூட்டிப் போறன். அதுவரைக்கும் இங்கயே இரு’ என்றாள் குமாரி.
‘இது எந்த இடம்’ என்று கேட்டான் மஞ்சி
‘பாமங்கடை’ என்றாள் குமாரி.
‘உங்க வீடு எங்க இருக்கு’ என்றான் மஞ்சி
குமாரி சிரிக்க ஆரம்பித்தாள். அதில் ஏளனம் நிறையவே இருந்தது.
‘இது வீடில்ல, மாளிகை. பலகை கொட்டா. இது ஒரு தோட்டம். இதுல கடசிலதான் நாம இருக்கம். யாரும் உரிம கோரமாட்டாங்க. என் புருசன்தான் இந்த கொட்டாய அடிச்சு எடுத்தான். படுத்துக்க ஒரு இடம். அவ்வளவுதான். ஒன்னுக்கு ரெண்டுக்கு போறதுன்னா அங்க கொமன் டொய்லட் இருக்கு. கிணறு இருக்கு. போய் குளிச்சிக்கலாம். அதுக்கின்னு நீயா போயிடாத. எதுவா இருந்தாலும் சொல்லு சரியா’ என்றாள் குமாரி.
‘உங்க புருசன் எங்க’ என்றான் மஞ்சி.
*
மஞ்சியின் கேள்வி ஒரு கணம் அவளை கடந்தகால நினைவுகளில் தள்ளிவிட்டது. அவளது கணவனின் சடலத்தில் அடித்து அடித்து அவள் ஓலமிட்டு கதறியது அவள் மனதில் தோன்றி நெஞ்சை அடைத்தது. வார்த்தைகள் வர மறுத்தது.
பருவக்களை துருத்திநின்ற குமாரியிடம் நந்தா கிணற்றடியில் வைத்து அவள் மேல் விருப்பம் கொண்டிருப்பதாக தெரிவித்த நாளில் குமாரி அவனை வைது கொண்டிருந்த போது அவன் அங்கிருந்து மறைந்துபோயிருந்தான். வெற்றுச் சுவருக்குத்தான் குமாரி வைததாக அவள் அறிந்தபோது குமாரி தன்மீதே வெப்பிசாரம் கொண்டாள். மாலையில் நந்தா அதற்காக அவளிடம் மன்னிப்புக் கேட்டான். அப்போது அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. தான் ஒரு விளையாட்டுப் பொருள்போல ஆகிவிட்டாத கூறி அவள் அவன் முன் அழுது கொண்டிருந்தாள். மயூராபதி அம்மன் பிரசாதப் பூவை அவள் கையில் திணித்து அம்மன் அறிய அவன் மனதில் அவள் எப்போதும் குடியிருக்க முடியும் என்று வாக்களித்தான். அவள் கண்களாக அவன் மாறிவிடுதாக அவன் கூறியபோது அவளது கால்கள் வலுவிழந்து சரிந்து விழப்போவது போல தோன்றியது. ஆதரவற்றிருந்த குமாரிக்கு இதைவிட என்ன வேண்டும்.
நந்தா தெருக்கோடியில் மூத்திரச் சந்தாக இருந்த காலியிடத்தை தனதாக்கி மரப்பலகைகள் கொண்டு ஒரு கொட்டகையை அவன் அவளுக்காக அமைத்து அவளை அதனுள் அழைத்துச் சென்ற போது குழந்தைகள் காற்றில் விரல்களால் ஜாலம் செய்வது போல அந்த கொட்டகை முழுவதையும் தன்விரல்களால் தடவிப்பார்த்தாள். ‘எப்படி இருக்கு’ என்று நந்தா அவளை கேட்டபோது அவளது கையிலிருந்து தடி கீழே விழ அவள் அவனைக் கட்டிக்கொண்டு ஓவென அழுதாள். அவளது நெஞ்சை அவளது கண்ணீர் நனைத்துக்கொண்டிருந்தது.
அன்றிலிருந்து ஐந்தாவது நாளில் ஞாயிறு காலையில் அவர்கள் இருவரும் மயூராபதி அம்மன் சாட்சியாக மாலை மாற்றிக்கொண்டார்கள். கோயில் அருகில் மாலைவிற்று வந்த மகாராணி குமாரிக்கு மாலையிரண்டை இலவசமாக தந்திருந்தாள். வாழைப்பழக்கடை ஜோசப் மரியா வாழைப்பழச் சீப்பொன்றை அவளிடம் தந்து முதலிரவுக்கு அவனது சிறு அன்பளிப்பு என்று கூறிய போது அவள் வெட்கித்து அவன்முன் நின்ற போது அவளது முகம் சிவந்து கிளர்ச்சி தருவதாக இருந்ததாக நந்தா குமாரியிடம் முதலிரவில் கூறினான்.
முதலிரவில் நந்தாவிடம் தன் முகத்தை கண்ணாடியில் பார்க்க ஆசையாக இருப்பதாக குமாரி கூறிய போது நந்தா அவன் விரல்களால் அவள் முகத்தை வருடி வருடி ஒவ்வொன்றாக வர்ணித்தான். அவள் அப்போது வெட்கித்துச் சிவந்து நந்தாவின் நெஞ்சில் முகம் புதைத்தபோது அவர்களது கொட்டகை இருளும் தன் பார்வையை திருப்பிக்கொண்டது.
*
‘உங்க புருசன்… என்ற மஞ்சியின் குரல் அவளை நினைவுகளில் இருந்து மீட்டு வந்தது.
‘சேர்க்க சரியில்ல. பாழாப்போன போதை. ஒரு நாள் இந்த பக்கத்து கால்வாய்ல விழுந்து செத்துப் போச்சு. ஒரு வருசம் கூட தாண்டல. நான் குடுத்துவச்சது அவ்வளவுதான். அவர் ஞாபகமா இந்த கொட்டக மட்டும்தான் இப்ப இருக்கு.’ என்றாள் குமாரி
ஒன்றுக்கு மேல் ஒன்று ஒட்டப்பட்டு கனத்துப்போய் கழன்று விழுந்த ஒரு விளம்பர போஸ்ட்டரை எடுத்து அதில் அவனை படுத்துக்கொள்ளுமாறு சொல்லி அவளும் ஒரு சீமெந்து கற்கள் அடுக்கப்பட்டு அட்டைவிரித்த மேடையில் படுத்துக் கொண்டாள் குமாரி.
‘எதையும் போட்டு குழப்பிக்காம. நல்லா படு. நாளைக்கு வேலைக்கு போகலாம்’ என்றாள் குமாரி. சிறிது நேரத்திலேயே அவள் உறங்கிப்போனாள். கடந்த ஒருசில நாட்களில் வழிநெடுகிலும் வாய்த்த இடங்களில் படுத்துப் பழகியிருந்ததால் மஞ்சியும் களைப்பு மேலிட உறக்கம் கொண்டான்.
மறுநாள் குமாரி மஞ்சியை மயூராபதி பத்ரகாளி அம்மன் கோவில் வாசலுக்கு அழைத்துச் சென்றாள். ஆடிப்பூர விழா லட்சார்ச்சனை நடைபெற்றதால் கோயில் தெருவில் கூட்டம் நிரம்பியிருந்தது. குமாரியின் மணிக்கட்டை பிடித்தவாறு மஞ்சி வீதியை வெறித்து வெறித்து நின்று கொண்டிருந்தான். குமாரி உச்சஸ்தாயியில் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தாள். குமாரி மஞ்சியிடம் ஒரு பிளாஸ்டிக் கோப்பை தந்திருந்தாள். அவளும் ஒன்றை வைத்திருந்தாள். பக்கதர்கள் அவ்வப்போது அவர்கள் இருவரது கோப்பைகளில் சில்லறைகளை வைத்துச் சென்றனர்.
அன்று மாலை மஞ்சியை அழைத்துக்கொண்டு குமாரி பீட்சா ஹட் அருகில் நின்றிருந்தாள். அங்குதான் கொஞ்சம் ‘பெரிய கைகள்’ வருவதாக சொன்னாள். அது என்னவென்று மஞ்சிக்கு அப்போது பிடிபடவில்லை.
பிச்சை எடுப்பது அவனுக்கு கூச்சமாக இருந்தது. அவன் பாட்டி அவனை பிச்சை மட்டும் எடுக்கும் நிலைக்கு போய்விடக்கூடாது என்று அடிக்கடி சொல்லுவாள். அதனால்தான் அவளை கையூம் ஹாஜியாரின் பழக்கடைக்கு பேப்பர் பேக்குகள் ஒட்டவைத்து காசு சம்பாதிக்க பழக்கினாள். போக்கிடம் இன்றி வழிதவறி வந்திருக்கும் அவனுக்கு இப்போதிருக்கும் ஒரே ஆதாரம் குமாரிதான். அதனால் அவன் அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவளுடன் செல்லத்தான் வேண்டும்.
மஞ்சி அவளிடம் வந்து சேர்ந்த சில நாட்களிலேயே இந்த புதிய நகர வாழ்வு பழகிவிட்டது. வேளைக்கு சாப்பிட முடிந்தது. குமாரிக்கு நிறைய இடங்கள் தெரிந்திருந்தது. இடங்களின் அமைவிடங்கள் அவனுக்கு பிடிபட ஆரம்பித்தது. குமாரி தனது வெள்ளைப் பிரம்பை அவனிடம் தந்திருந்தாள். அதை வைத்து வழியை தொட்டுணர அவனைப் பழக்கினாள். கோயில் தெருவில் நடமாட்டம் குறைந்திருந்த ஒரு நேரத்தில் மஞ்சி ‘குமாரி எனக்கு பிச்சையெல்லாம் எடுக்க கஸ்டமாயிருக்கு. எனக்கு பேக் ஒட்டத் தெரியும். உனக்கு தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு வேல வாங்கிக் கொடு. நான் வீட்ல இருந்து வேலை செய்றேன்’ என்றான்.
‘ஏன் இதுல என்ன குறைச்சல், கிடைக்கிற வருமானத்துல நல்ல சாப்பிட முடியுதுல்ல. பேக் ஒட்டி நீ என்ன கோடியிலயா சம்பாதிக்க போறாய்’ என்றாள் குமாரி.
‘என்னால முடியல குமாரி’ என்றான் மஞ்சி.
‘நீ எதுவும் பிச்சை கேக்க வேண்டாம். இங்க ரொசலின்னு ஒரு அக்கா இருக்கா. அவ கால் தட்டி செய்றவ. நம்மளமாதிரி இருக்கிறவங்க அவக்கிட்ட இருந்து கால் தட்டி வாங்கி விப்பாங்க. எதையாவது கைல விக்கிறத்துக்கு வச்சிக்கிட்டு நின்டா யாராவது தேவ உள்ளவங்க அத நம்ம கிட்டயே வாங்கிப்பாங்க. அஞ்சோ பத்தோ சேத்து தருவாங்க. சில பேரு காச மட்டும் தந்துட்டு போவாங்க. நான் அவகிட்ட பேசி உனக்கு வாங்கித்தாறன்.’
மஞ்சியும் ஒத்துக்கொண்டான். அன்லிருந்து குமாரியும் மஞ்சியும் வேலைக்கு செல்லுமிடங்களில் தள்ளி நின்றுகொள்வார்கள். மஞ்சி கைகளில் கால் தட்டிகளை வைத்துக்கொள்வான். ரொசலின் அவன் கழுத்தில் தொங்கவிட ஒரு போட் எழுதிக்கொடுத்தாள். இருந்தாலும் அதுவும் ஒருவகை பிச்சை எடுப்பது போலவே இருந்தது. அவனால் மன சமாதானம் கொள்ள முடியாதிருந்தது.
நாளடைவில் கோயிலடியில் இருந்த பிச்சைக்காரர்களுக்கும், பூக்கடைக் காரர்களும், கோயில் பணியாளர்களுக்கும், அவர்கள் வசித்த தோட்டத்திலிருந்த அனைவருக்கும் மஞ்சி பழக்கமாகிப் போயிருந்தான். அவனை குமாரியின் ஆள் என்று பேசவும் ஆரம்பித்திருந்தார்கள். அது குமாரிக்கும் தெரியும். ஒரு நாள் பாமங்கடை சந்தியிலிருக்கும் வாழைப்பழக்கடை ஜோசப் மரியா ‘அவன் உனக்கு ஏத்த சோடி’ என்று குமாரியிடமே சொன்ன போது அவனை நெடுநேரம் வீதியில் நின்று வைதுகொண்டிருந்தாள்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் மாலையில் மயூராபதி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் ஊரவர்கள் அவளையும் மஞ்சியையும் சேர்த்துப் பேசுவதைப் பற்றிய யோசனை மேலிட்டு செல்லும் வழியை தவற விட்டிருந்தாள். அவளுக்கு திசை குழம்பிப்போனது. அந்தநேரத்தில் கனமழை திடீரென பெய்ததில் மஞ்சியும் அவளும் நனைந்து போனார்கள். ஈரலித்த உடையுடன் வீதியில் அவர்களை கடந்து போனவர்களிடம் மயூராபதி அம்மன் கோவிலுக்கு செல்ல வழிகேட்டபோது அவர்கள் பார்வையுள்ளவர்களுக்கு விளக்குவது போல வழிசொன்னார்கள். ஆத்திரம் மேலிட குமாரி ‘குருடனுக்கு எப்பிடி வழி சொல்லனும் என்டு தெரியாத குருட்டு நாய்கள்’ என்று சலித்துக்கொண்டாள்.
அங்குமிங்குமாக அலைந்து தமது கொட்டகைக்கு அவர்கள் வந்து சேர்ந்த போது இருட்டிவிட்டிருந்தது. தெருக்கோடி பெட்டிக்கடையில் அன்று மஞ்சிதான் சாப்பாடு வாங்கி வந்தான். இருவரும் சாப்பிடும் போது குமாரி கேட்டாள்.
‘உன் வயசென்ன’
‘தெரியாதே’ என்றான் மஞ்சி. ‘உன் வயசென்ன’ என்று பதிலுக்கு குமாரியிடம் கேட்டான்.
‘என் புருசன் என்ன கட்டிக்கிறதா சொன்னப்ப எனக்கு இருவத்தஞ்சிருக்கும். அது நடந்தே இப்ப பத்து வருசமாச்சி. ஒரு முப்பத்தேழிருக்கும்.’
குமாரி மஞ்சியின் முகத்தை தடவிப்பார்த்தாள். நந்தாவின் முகத்தை அவள் தடவியிருக்கிறாள். நந்தாவின் முகத்திலிருக்கும் மேடு பள்ளங்கள் கூட அவளுக்கு நினைவிருந்தது. நெடுநாளைக்குப்பின்னர் அவள் மற்றொரு ஆணை தொடுவது அவளுக்கு நந்தாவை நினைவு படுத்தியது. அவசரப்பட்டு விட்டோமோ என்ற மனவிசாரம் அவளில் தோன்றியது.
‘உனக்கும் ஒரு முப்பதிருக்கும்’ என்றாள் குமாரி.
‘எப்பிடிச் சொல்றாய்?’ என்று கேட்டான் மஞ்சி.
அதற்கு அவளிடம் இருந்த பதிலை சொல்ல அவளுக்கு தைரியம் வரவில்லை. ‘அதுதான் இப்ப உன்ன தொட்டு பாத்தனே. ஒரு ஊகம்தான்’ என்றாள் குமாரி.
‘நான் உன் முகத்த தொட்டுப் பார்க்கவா’ என்றான் மஞ்சி.
மிகுந்த தயக்கத்துடன் குமாரியும் அதற்கு அனுமதித்தாள்.
வாழ்க்கையில் முதல் தடவையாக மஞ்சி ஒரு பெண்ணின் முகத்தை தடவிப்பார்க்கிறான். விரல்களால் அவள் தலையை தொட்ட போது குமாரி அவன் கையைப் பிடித்து அவள் நெற்றியில் வைத்துவிட்டாள். அவனது விரல்கள் அவளது நெற்றியை வருட ஆரம்பித்தது. இமைகளின் வளைவில் அவன் விரல்கள் ஏறி இறங்கியது. கண் இடுக்குகளை சுட்டு விரலால் தொட்டான். கன்னக்குழியை கட்டை விரல்கள் வருடியது. கன்னங்களை வருடி முடித்து அவளது உதடுகளை அவன் வருடிய போது குமாரி அவன் கைகளை தட்டிவிட்டாள்.
‘போதும்’ என்ற குமாரிக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது. நெடுநாள் கழித்த ஒரு ஆணின் ஸ்பரிசம் அவளில் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அவள் எழுந்து சென்று அவளிடத்தில் படுத்துக்கொண்டாள். அவள் மனது குழம்பிப் போயிருந்தது. பகல் முழுவதும் ஈர உடையுடன் அலைந்ததால் அவளில் காய்ச்சலும் தொற்றிக்கொண்டது. நள்ளிரவில் உக்கிரம் கொண்ட காய்ச்சலால் அவள் புலம்பிக்கொண்டிருந்தாள்.
மஞ்சி அவளருகில் வந்து அவளைத் தொட்டுப் பார்த்தான். உடல் அனலாய் தகித்துக்கொண்டிருந்தது. குமாரி அவனது கரங்களை பற்றிக்கொண்டிருந்தாள். அது அவளுக்கு ஆறுதலாய் இருந்தது. இருளை வெறித்தவாறு அவளருகிலே உறக்கம் அற்று குந்தியிருந்தான் மஞ்சி. பின்னரவில் அவள் உறங்கிவிட்டிருந்தாள். மஞ்சி அவளருகிலேயே உறங்கிப்போனான்.
விடியலில் வாகனங்களின் இரைச்சலில் உறக்கம் கலைந்த குமாரி, மஞ்சி தன்னை நெருங்கி ஒட்டியவாறு படுத்துக்கிடப்பதை உணர்ந்தாள். குமாரிக்குள் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. அவள் தன்னையறியாமலே சிரித்துக்கொண்டாள். அவள் தன்னை அவனிடம் இழந்துகொண்டிருப்பது போல அவளுக்கு தோன்றியது. அந்த நிமிடங்களை தொலைக்க விரும்பாத குமாரி அப்படியே படுத்துக்கிடந்தாள். அவளுக்கு ஏதேதோ மனதுக்குள் தோன்றிக்கொண்டிருந்தது.

மஞ்சி கண்விழித்த போது அவளுக்கு காய்ச்சல் வற்றியிருந்தது. இருவருமாக கிணற்றடிக்கு சென்று காலைக்கடன்களை முடித்து வந்தார்கள். வழமைக்கு மாறாக அவன் வரும் வரைகாத்திருந்து அவனுடன் கூடவே வந்தாள் குமாரி. அன்றயபொழுதில் அவனின் அருகாமை அவளுக்கு பூரிப்பைக் கொடுத்தது. என்றுமில்லாத புன்னகை அவள் உதடுகளில் ததும்பிக் கொண்டிருந்தது.
காலையில் அவளுக்கு மீண்டும் காய்ச்சல் பீடீத்து தலையிடியும் வாட்டியது. அவள் வாய்குழறிப் பிதற்றிக்கொண்டிருந்தாள். வைத்தியசாலைக்கு சென்றுவரலாம் என்று அவன் அழைத்தபோது முடியாது என்று அடம்பிடித்தாள் குமாரி. தூங்கி எழும்பினால் எல்லாம் பறந்துவிடும் என்று சாதித்தாள்.
அன்றய தினம் தான் மட்டும் வேலைக்கு சென்றுவருவதாக சொல்லி வெளியில் செல்ல மஞ்சி ஆயத்தமானான். தனியே போகவேண்டாம் என்று சொல்லி மறுநாள் சேர்ந்தே போகலாம் என்று கெஞ்சினாள். தன்னால் முடியும் என்று வாதிட்டு அன்று தனித்து வேலைக்குச் சென்றான் மஞ்சி.
கோயில் பக்கம் செல்லாது எதிர்த்திசையில் சென்று முயற்சிக்க அவன் எண்ணினான். சிறிது தூரம் சென்றதும் அவனுக்குள் பயம் தொற்றிக் கொண்டது. வாகன இரைச்சல்கள் அருகாமையில் கேட்க ஆரம்பித்ததும் பதற்றம் மேலிட்டு ஒரு இடத்தில் அவன் நின்று கொண்டான்.
யாராவது தமது வண்டியை நிறுத்தி தனக்கு எதாவது தந்துவிட்டுச் செல்வார்கள் என்று காத்திருந்தான். நெடு நேரமாகியும் யாரும் அவனைக் கண்டு தம் வாகனத்தை நிறுத்தவில்லை. அப்போதுதான் அவனைக் கடந்து சென்ற கார் ஒன்று வீதியில் தேங்கிநின்ற மழைநீரை வாரியடித்துச் சென்றது.
குமாரிக்கு இருப்புக்கொள்ளவில்லை. ஏனோ மஞ்சியை பிரிந்திருப்பது அவளது மனதை அழுத்த ஆரம்பித்தது. காய்ச்சல் வேறு அவளை பாடாய்ப்படுத்தியது. மஞ்சியை தனியே அனுப்பியிருக்க கூடாது என்று மனது பதைபதைத்தது. சிரமத்துடன் எழுந்து மெது மெதுவாக வீதிக்கு வந்தபோது சந்திக்கடை ஜோசப் மரியா மஞ்சி எதிர்த்திசையில் போனதாக கூறினான்.
‘தெரியாத பாதையில் போய் எத்துன கோடி சம்பாதிக்க போகுதோ’ என்று மஞ்சியை கடிந்தவாறு தன் குச்சியால் தட்டிச் துலாவி அவன் போன திசையில் நடக்க ஆரம்பித்தாள். இளநீர் விற்பவன் அவன் கால்வாய் அருகில் நிற்பதை கண்டதாக கூறினான். நந்தா இறந்த நாளில் இருந்து அவள் கால்வாய் பக்கம் செல்வதை தவிர்த்து வந்தாள். கால்வாய் எப்போதும் தன் வாயைத்திறந்து வைத்துக்கொண்டு இரைக்காக காத்திருப்பதாக நம்பிவந்தாள். பதற்றம் கூடி உடல்வலி மறந்து அவள் நடையில் வேகம்கூட்டினாள். மஞ்சி கால்வாயில் விழுந்துவிடுவான் என்று அவள் மனது பதைபதைத்துக்கொண்டது.
‘மஞ்சி..மஞ்சி.. என்று உரக்க கூவிக்கொண்டு செல்ல ஆரம்பித்தாள். குமாரியின் குரல் தன்னை நெருங்கி வருவதை மஞ்சி உணர்ந்தான். அவன் ஆறுதல் பெரு மூச்சு விட்டான். கண்கள் அகல விரிய உதடுகள் தளதளத்து ‘குமாரி’ என்று கத்தினான் மஞ்சி.
குமாரி மஞ்சியை நெருங்கிவிட்டாள். வந்த வேகத்தில் ஆற்றாமை மேலிட்டு அவன் முகத்தை தொட்டு தடவித்தடவிக் கொடுக்க ஆரம்பித்தான். நான் வந்துட்டன்…நான் வந்துட்டன் என்று அவள் சொல்லிக்கொண்டிருந்தாள். அந்த தடவில் ஒரு உரிமையிருந்தது. குமாரியின் கண்களில் கண்ணீர் முட்டி வழிந்தோடியது.
குமாரி மஞ்சியின் நெஞ்சில் அடித்துக்கொண்டு புலம்ப ஆரம்பித்தாள்.
‘ஏன்டா…ஏன்.’
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

really, fantastic & heart touching . keep up !!!!!!!!!!!
சிறப்பான கதை !