மாலையும் மாதவிடாய் நாட்களும்

“கர்ப்பப் பையை அகற்றிவிட்டால் மாதவிடாய் நின்று விடுமாமே ?!!”

     இதைக் கேள்விப் பட்டதிலிருந்து அவளுக்கு அதே சிந்தனை. நாமும் கர்ப்பப்பையை அகற்றிக் கொண்டுவிட்டால் என்ன? யாரிடம் அணுகுவது? மிக எளிதாக ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகினால் போதும்தான்.ஆனால் அவள் இருப்பதோ ஹைதராபாத்திலிருந்து கரீம் நகர் செல்லும் வழியிலுள்ள மிகவும் உள்ளடங்கிய கிராமத்தில் . அவளுக்கு தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் பேச வராது.ஆங்கிலம் புரிந்து கொள்ள முடியும்.ஆனால் பேச அநியாயத்துக்குக் கூச்சம் மற்றும் தாழ்வு மனப்பான்மை. கணவனைக் கேட்கலாம்தான். ஆனால் ஒத்துக்கொள்வானா?. ஏற்கெனவே இரண்டு பெண் பிள்ளைகளைப்  பெற்ற பின்னும் மூன்றாவதாக ஆண் குழந்தை வேண்டும் என நச்சரிக்கத் தொடங்கியிருக்கிறான் அவன்.

          அவளுக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது. அன்று காணும் பொங்கல். அந்த வருடம் நல்ல விளைச்சல். ஆதலால் வீட்டு முற்றத்திலும் பட்டவா சாலையிலும் தானியங்கள் மூட்டைகளாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன .அவளின் தாத்தா இறந்து ஒரு வருடமே ஆகியிருந்தது. அவளுக்கு அவளது தாத்தா என்றால் கொள்ளைப் பிரியம். ஊரெல்லாம் காணும் பொங்கலில் திளைத்திருக்க, இவளும் இவளது தங்கையும் அடுக்கி வைத்திருந்த மூட்டைகளில் ஏறிக்குதித்து  விளையாடிக் கொண்டிருந்தார்கள் . திடீரென்று அடிவயிற்றில் ஒரு வலி. வெதுவெதுப்பாக திரவம் ஏதோ தொடைகளில் வழிந்து கால்களை நனைத்து, தரையையும் நனைத்தது. பொங்கலுக்காக அவளின் சிற்றப்பா அனுப்பி வைத்திருந்த பொன்னிற பாவாடை சட்டையைத்தான் அணிந்திருந்தாள். அந்தப் பாவாடை மொத்தமும் இரத்தமாகிப்போனது. அவளின் தங்கை பயந்துபோய் “ஐயோ! அம்மா….அக்காவுக்கு அடிபட்டு இரத்தம் ஊத்துது” என்று கத்தியவாறே ஓடி கொல்லைப்புறத்தில் ஏதோ வேலையாக இருந்த அம்மாவை அழைத்து வந்தாள்.   

     அவ்வளவுதான்!அதன் பிறகு அனைத்துமே மாறிவிட்டன.’அங்கே போகாதே. இங்கே நிற்காதே. அவனுடன் பேசாதே. அவளுடன் போகாதே.எத்தனை கட்டுப்பாடுகள்?’. மாதவிலக்கு நாட்களில்தான் தேர்வுகள் வந்து தொலைக்கும். தேர் திருவிழாக்கள் வரும். அல்லது நெருங்கிய உறவினர்களின் விசேஷங்கள் வந்து சேரும். அவள் அவளது குடும்பத்தின் முதல் வாரிசு. அவள் வயதிற்கு வந்தபொழுது, அவளது சிற்றப்பன்களுக்கு இன்னும் திருமணம் ஆகியிருக்கவில்லை .ஒரு அத்தைக்கு திருமணம் ஆன கையோடு கருமாதியும் நடந்து முடிந்திருந்தது. மற்றோரு அத்தைக்கு வரன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இவள் அனைவருக்கும் செல்லப்பிள்ளையாதலால், மாதவிடாய் சமயங்களில் இவளை யாரும் எதுவும் சொல்வதுமில்லை .வித்தியாசமாக பார்ப்பதும் இல்லை.ஆனால் இந்த மாத விடாயினால் தேர் திருவிழாக்களையும், நெருங்கிய உறவினர்களின் இல்ல விழாக்களையும் தவற விடுகையில் மனம் வெதும்பும். அதுவும், ஏன் பெண்களுக்கு மட்டுமே இந்த சங்கடம் என்றும், ஏன் பெண்ணாகப்பிறந்து தொலைத்தோம்? என்று கூட தோன்றும்.

             படிப்படியாக அனைவருக்கும் திருமணமாகிவிட, அவளின் குடும்பம் அருகிலுள்ள நகருக்குக் குடிபெயர்ந்தது. அம்மா, அப்பா, அவள் மற்றும்  தங்கை . அவ்வளவுதான். எனவே தனியாக மூலையில் உலக்கையிட்டுக் கொண்டு அமரவேண்டிய அவசியமற்றுப்போனது. அதன்பிறகு அவள் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள். அது பெண்கள் கல்லூரியாதலால் இந்த மாதவிடாய் ஒரு பெரிய தொந்திரவாக தெரியவில்லை.ஆனால் கல்வி சுற்றுலா செல்லும் பொழுதும், எங்கேயாவது தோழிகளுடன் சென்று வரலாம் என்றெண்ணும் போதும், இந்த மாதவிடாய் சரியாக அந்த நாட்களில் வந்து சேரும்.

                  கல்லூரி முடிந்தபின் பொறியியல் பட்டயப்படிப்பை வழங்கும் ஒரு கல்லூரியில் தற்காலிக விரிவுரையாளராக சேர்ந்தபின், அவளுக்கு இந்த மாத விடாய் நாட்களை கையாள்வது இயல்பான ஒன்றாகிப்போனது. அதுவும் அதிக நாட்களுக்கு நீடிக்கவில்லை.எப்பொழுதும் இவளுடன் இயல்பாக பேசி  பழகிக்கொண்டிருந்த மாணவனொருவனின் நோட்டுப் புத்தகத்தில் திட்டுத் திட்டாக அழுக்குப் படிந்த, அருவருக்கத் தக்க வாடையுடன், இருந்த ஒரு துண்டு சீட்டில் அனைத்து பெண்விரிவுரையாளர்களின் மாதவிடாய் நாட்களும் மார்பளவுகளும் சரியாக எழுதப் பட்டிருப்பதைப் பார்த்ததும் மனம் சோர்ந்து போனது. மற்றுமொரு தாளில் மாணவிகளின் மாதவிடாய் நாட்களும் மார்பளவுகளும் வகைப்படுத்தப் பட்டிருப்பதைப் பார்த்ததும் அவளுக்கு என்னவோ போலிருந்தது . தன்னுடன் மிகவும் நல்ல முறையில் பழகி வந்த, நன்றாகப் படிக்கும் மாணவனின் மறுபக்கம் இப்படி இருப்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை .அதன் பிறகு அவளுக்கு மிகவும் விருப்பமான விரிவுரையாளர் பணி, அவளுக்கு முள்கிரீடமாக உறுத்த ஆரம்பித்தது . ஓவ்வொரு முறை கரும்பலகையில் எழுதும் போதெல்லாம் ஓராயிரம் கண்கள் அவளின் பிருஷ்டங்களை புணர்வதைப்போல உணர ஆரம்பித்தாள்.

             அவளுக்கு வீட்டில் வரன் பார்க்க ஆரம்பித்தார்கள். கஷ்டம் அதிகமில்லாமல் அவளின் குடும்பத்து உறவுகளின் மூலமாக ஒரு வரன் வந்தது. பையன் எங்கோ ஹைதராபாத் -ல்  வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். வீட்டில் உள்ளவர்கள் ஜாதகம் பார்த்துவிட்டு, பொருத்தம் இருப்பதாகவும் மேற்கொண்டு மற்ற விவரங்களை பேசி முடிப்பதாகவும் சொன்னார்கள்.அப்பாவின் மூலமாக அவனின் தொடர்பு எண்ணும் கிடைத்தது .தொடர்பு கொண்டு பேசுவதா ? வேண்டாமா? என்ற அலைக்கழிப்பில் மேலும் ஒரு வாரம் கடந்தபொழுது அவனிடமிருந்து அழைப்பு வந்தது .அதன் பிறகு தினமும் அழைக்க ஆரம்பித்தான். அவனிடம் பேசியபொழுது பெரிதும் ஆச்சார அனுஷ்டானங்களில் நம்பிக்கையற்றவனாகவே தோன்றினான். முகநூல் கணக்கிலும் பெண்ணுரிமைப் பற்றிய பதிவுகளுக்கு விருப்பக்குறியிட்டு, பகிரவும் செய்திருந்தான். நல்லவேளையாக மாநகரமொன்றில் வேலைசெய்யும் நாகரீகமான ஒருவனுடன் தான் வாழப்போகிறோம் என்றெண்ணி முடிப்பதற்குள் திருமணம் முடிந்து விட்டிருந்தது. திருமணம் முடிந்த மூன்றாம் நாள் அவளுக்கு மாத விடாய் தொடங்கியபொழுது அவளின் கணவனிடம் சொன்னாள் 

 “அப்படியா .போய் அம்மாக்கிட்ட சொல்லு” என்றவாறே அவனின் அண்ணன் பிள்ளைகளுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான் அவன். இவள் சென்று மாமியாரிடம் சொன்னதும், மாமியார் அவளை ஏதோ ஒரு விரும்பத்தகாத ஜந்துவை பார்ப்பதைப்போல் பார்த்தாள். பின்பு, மாமியார் அவளுக்கான கட்டளைகளைப்  பிறப்பிக்க ஆரம்பித்தாள் .

“இங்கப் பாரும்மா .எந்த வீட்டுக்குள்ளேயும் நொழையாத .எதையும் தொடாத .அந்தா அந்த மோட்டார் ரூமு இருக்கு பாரு அங்க ஒரு பாயும் தலகாணியும் இருக்கும். அங்க போய்ப் படுத்துக்க.ஒரு தட்டு,டம்ளர், தண்ணி சொம்பு கொடுத்துவுடறேன் ” என்றவாறே அவள் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள் .

        அவளுக்கு என்னவோ போலிருந்தது.இன்னும் யாரிடமும் அவ்வளவாகப்  பழக்கமாகவில்லை.இடமும் புதிது. இது ஏன் பெண்களுக்கு மட்டும் நேர்கிறது ? அவளின் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டில் முற்றிலும் புதிய மனிதர்களுடன் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம். இதில் இந்த மாதவிடாய் வேறு. அதிலும் பெண்களே பெண்களை தீண்டத்தகாதவர்களாக பார்ப்பதைத்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவளின் கணவன் வருவதாக இல்லை. உடல் வலியினாலும் மனச்சோர்வினாலும் அவளால் நிற்கக் கூட முடியாமல் மாமியார் சொன்ன அறைக்குள் சென்று அமர்ந்தாள். அது ஒரு ஒற்றைச் சாளர அறை. அந்த அறையில் தான் மண்வெட்டி போன்ற விவசாய கருவிகளும், தட்டு முட்டுச் சாமான்களும் கிடந்தன. ஓரமாக ஒரு பழம்பாய் சுருட்டி வைக்கப்பட்டிருக்க, அதனருகில் ஒரு அழுக்கடைந்த தலையணை.அவளுக்கு கிறக்கமாக இருக்க, அப்படியே வெறுந்தரையில் சுருண்டு படுத்தாள்.எப்பொழுது உறங்கினாள் என்று தெரியவில்லை .அவளின் கணவன் வந்து எழுப்பினான் 

“ஏய் .ஏன் இங்க வந்து படுத்திருக்க ?”

“ம்.சும்மாதான்.”

“போ .போயி நம்ம ரூம்ல படு “

அவளுக்கு எரிச்சலாக வந்தது.எழுந்து ஒரு ஓரமாக நிற்க முயன்றாள். 

“நாந்தான் அப்பவே சொன்னேன்ல?! “

“என்ன சொன்ன?” என்றவாறே அவளின் கையைப்பிடித்து அருகில் இழுத்தவன், தனது கையை அவளின் இடுப்புக்கு கீழே நைட்டியின் மேலாக வைத்துத் தடவியவன், அவளின் மாதவிடாய் அட்டையை உணர்ந்தவுடன், தீப்பட்டதைப்போல் வெடுக்கென கையை எடுத்தான்.முகம் அஷ்டக்கோணலாக மாற, உடனடியாக வெளிக்கிளம்பினான்.அதற்கு முன்பாகவே அவளின் மாமியார் அங்கே சத்தம் போடுவது கேட்டது 

“சின்னவனே அங்க என்ன பண்ற? .அவ தல குளிச்சிட்டா. நாந்தான் அங்கப்போய் இருக்க சொன்னேன். இன்னும் மூணு நாளைக்கு அவளத் தொந்தரவு பண்ணாத”

“சரிம்மா ” என்றவாறே அவன் கடுப்பு முகத்தில் தெறிக்க, ஒரு முழுக்குடத்தை தூக்கி அப்படியே தலையில் ஊற்றித் தலை முழுகுவதைக்கண்டபொழுது அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. மூன்றாம் நாள் தலைக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டபிறகுதான், அவளால் வீட்டிற்கு உள்ளே செல்ல முடிந்தது .நல்ல வேளையாக அடுத்த வாரமே அவளின் கணவன் அவளை அழைத்துக்கொண்டு ஹைதராபாத்திற்கு வந்து விட்டான் . அப்பொழுது அவன் அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தான். அடுத்தமாதம் நாள் தள்ளிப் போயிற்று .அடுத்த சில நாட்களில் அவள் கர்ப்பமடைந்திருப்பது உறுதியானது . அவள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

“அப்பாடா இன்னும் பத்து மாதத்திற்கு மாதவிடாய் தொந்தரவு இல்லை ” 

ஆனால் மாத விடாய் தொந்தரவு இல்லையானதால் அவனின் தொந்தரவு தினமும் இருந்தது விடுப்பே இல்லாமல்.

   அவளின் கணவன் குடும்பத்தில் அனைவரும் வருடம் தவறாமல் சபரி மலைக்கு செல்லும் வழக்கமிருந்தது. அதிலும் கார்த்திகை முதல் வாரமே மாலையணிந்து விரதத்தை தொடங்கிவிடுவர். ஒரு மண்டல விரதம் இருந்து மகர ஜோதிக்கோ அல்லது அதற்கு முன்பாகவோ அவரவர்களின் தோது போல சபரி யாத்திரை மேற்கொள்வர் 

       இவளின் கணவனும் முதல் மகள் புரட்டாசியில் பிறந்து  நாற்பத்தைந்து நாட்களுக்குப் பிறகு மாலையிட்டான்.ஆனால் அந்தவருடம் அவள் அவளின் பிறந்த வீட்டிலேயே ஆறு மாதங்களுக்குத் தங்க நேரிட்டதால் இதில் இல்லத்தரசிகள் படும் பாடுகள் இவளுக்குத் தெரிந்திருக்கவில்லை .

             அடுத்த வருடம் அவளது கணவன் கேரளத்திற்கு மாற்றலானான்.அந்த வருடமும் அவன் மாலையிட்டான். பழக்கமில்லாத ஊர்.வேற்றிடம். இருந்த இரு படுக்கையறை கொண்ட வீட்டில் அவளை எங்குத் தங்க வைப்பது?.கேரளத்தில் மாலையிட்டு ஓரிரு வாரங்களிலேயே சபரி யாத்திரை மேற்கொள்வதை அவன் கண்ணுற்றான். அதனால் அவள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவளின் மாதவிடாய் நாட்களைக் கணக்கில் வைத்து, வெறும் இருபத்தியொரு நாட்கள் விரதத்தோடு முடித்துக்கொண்டான்.அவர்கள் இருந்த இடத்திலிருந்து வெறும் நூற்றி ஐம்பது கிலோமீட்டர்கள் மட்டுமே சபரி பீடத்திற்கு. அவன் அவனது மகிழ்வுந்திலேயே சபரி யாத்திரை சென்று வந்தான். அதிலும் இரவு கிளம்பியவன் , அடுத்தநாள் மதியமே வீட்டிற்கு “சாமி”யாக வந்து மாலையைக்கழட்டி “ஆசாமி”யாகவும் ஆகிவிட்டான்.அவளுக்கும் ‘அப்பாடா’ என்றிருந்தது .

        அதற்கடுத்த வருடமும் அவ்வாறே கழிய,அதற்கடுத்த வருடம் அவனுக்கு மீண்டும் தெலுங்கானாவிற்கு மாற்றலானது.அந்த வருடம் அவன் மாலையிட தயாரானபொழுது, அவளுக்கு எல்லா வழிமுறைகளும் அத்துப்படியாகியிருந்தன. மேலும் அவளுக்கு ஒருவாறு இந்த சபரி யாத்திரை காலம் பிடிக்கவே செய்திருந்தது. காரணம் எப்பொழுதும் “சனியனே” “பீடை ” தரித்திரமே ” என்றெல்லாம் அன்பொழுக(!) அழைக்கும் அவளின் கணவன், இந்த சபரிமலை யாத்திரைக்காலத்தில் மட்டும் “சாமீ ” “சாமியே ” என்று மரியாதையாக அழைப்பதும், மூன்று வேளைகளில் ஒரு வேளை சமைக்க வேண்டியதில்லை என்பதும்தான். அதுவுமில்லாமல் எப்பொழுதும் தண்ணீர்கூடத் தானாக எடுத்துக் குடிக்காதவன்,இந்த சமயத்தில் மட்டும் தினமும் வீட்டைத் துடைத்து சுத்தம் செய்வதுடன்,அவனுக்கான எல்லாத் தேவைகளையும் அவனே செய்து கொள்வான்.கோபம் கொள்வதில்லை.அடிக்கக் கை ஓங்குவதில்லை.முக்கியமாக பகலெல்லாம் வேலை செய்த அவளின் உடல் இரவில் விருப்பமேயில்லாமல் எந்தத் தொந்திரவையும் அனுபவிக்க வேண்டியதில்லை

       இருப்பினும் அவர்கள் இருந்தது ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு தனித்த வீடு. அவன் மாலையணிந்தவுடன் மாதவிடாய் நாட்களில் அவள் அந்த வீட்டில் தனித்து இருக்க வேண்டிவரும். சொந்த ஊரிலிருந்து ஏறத்தாழ ஆயிரம் கி மீ க்கு அப்பால் உள்ள நிலையில் அவளைத் தனியாக விட அவளின் கணவனுக்கு விருப்பமில்லை.ஆதலால் அவன் அவளின் மாதவிடாய் நாட்கள் முடிய காத்திருந்தான்.ஆனால் வழக்கத்தைவிட அதிசயமாக அவளுக்கு மேலும் பத்து நாட்கள் தள்ளிப்போனது. அவன் தினமும் வீட்டிற்கு வந்தவுடன் “வந்துச்சா ?”  என்று கேட்க ஆரம்பித்தபொழுது அவளுக்கு சிரிப்பாகவே இருந்தது ஆரம்பத்தில் . ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவளுக்கு கோபம் வந்தது.பின் அது பயமாக மாறியது. கடைசியாக எட்டாவது நாள் “வந்துத் தொலஞ்சிச்சா இல்லையா ?” என்று கேட்டவாறே அவன் கர்ப்பப் பரிசோதனை உபகரணத்தை அவளின் கையில் திணித்தான். அவளுக்கு அன்றைக்கு அழுகையாக வந்தது. கர்ப்பம் இல்லையென்று தெரிந்ததும் அவள் ஆழாக்கு எள்ளெடுத்து மிக்ஸியில் அரைத்து அப்படியே உருட்டி உருட்டி விழுங்கினாள் .கண்களில் கண்ணீர் முட்டிக்கொள்ள, முதல் முறையாக மாதவிடாய் சீக்கிரமே வரவேண்டும் என்று இறைவனை வேண்டினாள் .நல்ல வேளையாகப் பத்தாம் நாள் அவளுக்கு மாதவிடாய் ஆரம்பித்தது .அவள் அவளின் கணவனை அழைத்து சொன்னதற்கு “ஆமா .போன் போட்டு சொல்றளவுக்கு முக்கியம் பாரு ” என்று கடுப்படித்தான். அவள் அவன் ஏதோ வேலை நெருக்கடியில் அவ்வாறு பேசிவிட்டதாக எண்ணிக்கொண்டாள் . வேறு வழி ?!          

         ஐந்தாம் நாள் கழிந்து, ஆறாம் நாள் வீட்டை எல்லாம் சுத்தம் செய்து ஏழாம் நாள் மாலை இடுவதற்காக இங்கேயே ஒரு குரு சுவாமியை பார்க்க சென்றான். சில மணிநேரம் கழித்து சோர்ந்து போய் திரும்பிவந்தான்.மகர ஜோதிக்கு இன்னும் ஒரு மண்டலத்திற்கும் குறைவாகவே இருப்பதால், எந்த குரு சுவாமியும் அவனுக்கு மாலையணிவித்து விடத் தயாரில்லை என்றான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. மாலையணிந்து ஒரே ஒரு நாள் மட்டுமே விரதமிருந்து சபரி யாத்திரை மேற்கொள்வதைக்கூட அவள் ஏற்கெனவே பார்த்திருக்கிறாள். முறைப்படி ஒரு மண்டலம் விரதம் இருந்தே சபரி யாத்திரை மேற்கொள்ளவேண்டும் என்றாலும் அவனது ஊரில் பலர் அதனைப் பின்பற்றுவதில்லை. குருசுவாமிகளும் தட்சிணைகளை வாங்கிக்கொண்டு மாலையணிவித்து விடுவார்கள்.ஆனால் தவறாமல் பின்வருமாறு எச்சரித்தும் விடுவார்கள் “சாமீ .முறைப்படி ஒரு மண்டலம் விரதம் இருக்கணும் .ஆனா அதுக்குக் கம்மியா போறவங்களுக்கு அதுக்குத் தகுந்த பலன்கள் தான் கிடைக்கும்.விரதம் சரியாய் இல்லனா ஐயப்பன் ரொம்பவே சோதிப்பான்.பாத்து பத்திரமா விரதம் இருங்க .தீட்டுத் தொடக்கு அண்டாம பாத்துக்குங்க”

  சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு

 “ஏங்க.பேசாம ஊருக்குப் போய் மாலைப்போட்டுக்கிட்டு வந்துர்றீங்களா?” என்றாள்.

அவன் மிகக்கோபமாக, “மூடுடி. மூணு கோயிலில போயி கேட்டு அவமானப்பட்டது போதாதா ? ஊர்ல போயி வேற அவமானப்படணுமா ? சனியன்! எல்லாமே உன்னாலதான்.சரியான நாள்ல நீ மட்டும் மூலையில ஒக்காந்துருந்தா நான் இப்படி அவமானப் படுவனா ? விடியா மூஞ்சி.போடி ஒன்னால ஒரு வருஷம் என்னால சபரியாத்திரை கூட போவ முடியல,” என்றவாறே அவளை பிடித்துத் தள்ளிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றான். அவளுக்கு அவளின் தவறு இதில் என்ன இருக்கிறது என்றெண்ணியவாறே, இயலாமையினால் அழ ஆரம்பித்தாள்.

             அந்த வருடத்திலிருந்து மாதவிடாய் நாட்களில் அவனின் கெடுபிடிகள் அதிகமாயின .அந்த சமயத்தில் அவன் தனியாகப் படுக்க ஆரம்பித்தான். வீட்டில் தண்ணீர் கூட குடிக்காமல் வெளியில் சாப்பிட்டுக்கொள்ள ஆரம்பித்தான். இதெல்லாம் அவளுக்கு பரவாயில்லைதான். ஆனால் முகம் கொடுத்துக்கூட பேசாமல் அவளை ஒரு தீண்டத்தகாதவள் போல் நடத்தினான். முதல் இரண்டு மாதங்கள் ஏழு நாட்கள் வரை இந்த நடை முறைகளை பின்பற்றியவன் அடுத்த இரு மாதங்களுக்கு ஐந்து நாட்களாக குறைத்தான். பின்பு அது மூன்று நாட்களாக குறைந்தது. 

   மீண்டும் அவன் இந்த வருடம் அவன் மாலையிடத்  தயாரான பொழுது அவள் எல்லாவற்றுக்கும் முன்கூட்டியே தயாரானாள். கடந்த இரண்டு வருடங்களில் அவளுக்கு இங்கே ஒரு தோழி உருவாகியிருந்தாள். இவளுக்கு தெலுங்கு  வராது ஹிந்தி சுட்டுப்போட்டாலும் வராது. அவளது தோழிக்கு தமிழ் வராது.அவளும் ,அவளின் தோழியும் அரைகுறையாக கொஞ்சம்போல் ஆங்கிலத்திலேயே உரையாடிக்கொள்வார்கள். இதில் அவளது கணவனுக்கு இவளைக்  கண்டால் கொஞ்சம் இளக்காரம்.

                     அவன் மாலையிட்டு வந்தபின் அவள் வழக்கம் போல் தினமும் வீட்டை சுத்தம் செய்து அவனுக்கு விரதத்திற்கு சமைக்க ஆரம்பித்தாள்.ஆயினும் உள்ளுக்குள் நாட்களை எண்ணிப்பார்த்து, அவளது தோழியுடன் சேர்ந்து, அன்று மாலையே அந்த கிராமத்தில் ஒரு வாரத்திற்கு மட்டும் அறை ஏதேனும் வாடகைக்கு கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தாள். ஓரிரண்டு நாட்களுக்குப் பிறகு அவளது கணவனுக்கு இது தெரியவர, அவன் அருகிலுள்ள கோயிலில் பேசியிருப்பதாகவும், அங்கே சென்று அவளின் மாதவிடாய் நாட்களில் மட்டும் தங்கிக்கொள்வதாகவும் சொன்னான். ஆனால் அவளுக்கு அதில் உடன்பாடில்லை.ஏனென்றால் மாதவிடாய் நாட்கள் முடிந்தபின் அவன் மீண்டும் வீட்டிற்கு வருகையில், வீட்டை அவள் ஒருவளாக சுத்தம் செய்ய வேண்டும் . படுக்கைகள் ,போர்வைகள் தலையணை உறைகள் என ஒவ்வொன்றையும் மீண்டுமொருமுறை துவைத்தாக வேண்டும். ஒரு வாரம் முன்புதான் இவை அனைத்தையும் துவைத்துவிட்டு  நான்குநாட்கள் உடல்வலியில் அவதிப்பட்டிருந்தாள். மேலும் அவனின் வற்புறுத்தலால் இந்தவருடம் மூத்தவள்  மாலையணிந்திருந்தாள். அவனும் குழந்தைகளும் வீட்டிலிருந்தால்தான் பள்ளிக்குச் சென்றுவர என அனைத்து தேவைகளுக்கும் சரிப்பட்டுவரும்.  

                  கடைசியாக ஒரு சிறிய அடுக்கு மாடிகுடியிருப்பில் ஒரு காலியான அறைகிடைத்தது. ஒரு சிறிய ,இன்னமும் பயன்பாட்டுக்கு வராத கடை அது.கதவு கிடையாது. முன்புறம் ஷட்டரை இழுத்து மூட வேண்டும்.கழிவறை தனியாக எதுவும் கிடையாது. இருக்கின்ற இரண்டு தளங்களுக்கும் பொதுவாக வெளியில் வரிசையாக இரண்டு கழிவறைகளும் அதனை அடுத்து இரு குளியலறைகளும் இருந்தன. ஆனால்,ஒரு வார வாடகை ரூ 2500  என்றார்கள்.வேறு வழியின்றி அவள் ஒப்புக்கொண்டாள்.

            இந்த முறை எந்த தாமதமுமின்றி மாதவிடாய் வந்தது . மாதவிடாய் தொடங்கிய நாளன்று கணவனுக்கு செல்பேசியில் தெரிவித்துவிட்டு, ஏற்கெனவே கட்டிவைத்திருந்த மூட்டையை எடுத்துக்கொண்டு, அந்த அறையில் குடியேறிவிட்டாள். அந்த மூட்டையில் ஒரு சிறிய இரக மண்ணெண்ணெய் ஸ்டவ்வும், கஞ்சி வைத்துக்குடிக்க கொஞ்சம் போல் மளிகை சாமான்களும் பாத்திரங்களும் இருந்தன. பிள்ளைகளை அவளது கணவன் கவனித்துக்கொள்வதாக சொன்னாலும் அவளது தோழியின் அம்மாவிடம் கொஞ்சம் போல் அவளது பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு வந்திருந்தாள்.

          அன்றிரவு அவள் தனித்து இருந்த பொழுது அவளுக்கு பிள்ளைகளின் ஞாபகங்கள் வந்து அவளை உறங்கவிடாமல் செய்தது. எதற்காக இந்த பாடு? தனது உடம்பில் இயல்பாக வரும் ஒரு சுழற்சியை யார் தீட்டென்று முடிவு செய்தது? அது தீட்டென்று முடிவு செய்யப்பட்டாலும் அதற்காக ஏன் இத்தனை கட்டுப்பாடுகள் ? அவளுக்கு ஆயாசமாக இருந்தது. ஐயப்பனின் சந்நிதி குறித்தான விமரிசனங்கள் எழும்போதெல்லாம், அவளின் கணவனிடம் இதைப்பற்றி கேட்பாள். அவன் சபரி பீடத்திற்கு மட்டுமே இத்தகைய கட்டுப்பாடுகள் எனவும்,அச்சன்கோயில், ஆரியங்காவு ,குளத்துப்புழை மற்றும் பந்தளம் ஆகிய பிற சந்நிதிகளில், இத்தகையான கட்டுப்பாடுகள் இல்லையென்றே சொன்னான். மகளிர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இத்தகைய கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக சொன்னான் . மேலும் ஒரு மண்டலத்துக்கும் மேலாக  பிரம்மச்சரிய விரதமிருந்து வருபவர்களின் விரதம் கெடக்கூடாதென்பது ஒருபுறமிருந்தாலும் “காஞ்சமாட்டிடமிருந்து கம்பங்கொல்லைகளை பாதுகாப்பது எப்படி ?” என்று சொல்லி  “கெக்கே பிக்கே” என்று சிரித்தான்.அவன் எப்பொழுதும் இப்படித்தான். அவனுக்கு ஏதோ பெண்களெல்லாம் இவன் கண்ணசைத்தவுடன் கவிழ்ந்து விடுவதாக நினைப்பு.

    அடுத்த நாள் விடிந்ததும், அந்த அடுக்ககத்தில் இருந்தவர்களின் பார்வையில் இருந்த இளக்காரத்தை அவள் உணர்ந்ததும், அவள் முள்படுக்கையில் இருப்பதைப்போல் உணர்ந்தாள். தினமும் ஷட்டரை அரை அடி மட்டுமே உயர்த்திவிட்டு உள்ளேயே இருக்க ஆரம்பித்தாள். அதிகாலையில், பொழுது விடிவதற்கு முன்பே,  சேர்த்து வைத்த  மாதவிடாய் அட்டைகளை ப் பொட்டலம் கட்டி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, காலைக்கடன்களையும் முடித்துவிட்டு உள்ளே வந்து அமர்வதோடு சரி. பிறகு மாலைவரை சகலத்தையும் அடக்கிக்கொண்டு உள்ளேயே இருந்தாள். கொண்டு வந்திருந்த அடுப்பில் கொஞ்சம் போல் கஞ்சி மட்டும் காய்ச்சிக்கொண்டாள். ஆனால் அதுவும் தொண்டையில் இறங்க மாட்டேனென்றது, மூன்றாம் நாள் பள்ளி முடிந்ததும் சிறியவள் மட்டும்  அவளிடம் வந்து சேர்ந்தாள்.பெரியவள் மாலையணிந்திருந்ததால் வரவில்லை. அவள் பிள்ளையை வாரியணைத்துக்கொண்டாள்.சிறிது நேரத்திற்குப்பின்னால் அவள் ஒவ்வொன்றாக பிள்ளையிடம் கேட்டறிந்தாள். தனது கணவன் ஒருவாறாக பிள்ளைகளை அதிகச் சிரமமின்றி கவனித்திருப்பதில் திருப்தியுற்றவள் அவளைக்காணாமல் பெரியவள் முதல் நாள் அழுததைக் கேட்டபொழுது அப்படியே விக்கித்து உட்கார்ந்திருந்தாள்.

       அதன் பிறகு சிறியவள் அவளுடனே இரவில் உறங்க அவளின் கணவன் அனுமதித்த பொழுது அவளுக்குக் கொஞ்சம் ஆசுவாசமாகயிருந்தது. நான்காம் நாள் அவன் ஸ்விக்கியில் சைவ பிரியாணி ஆர்டர் செய்து அனுப்பிய அன்றுதான் அவளுக்கு தொண்டையில் கொஞ்சம் போல் சோறு இறங்கியது. ஐந்தாம் நாள் மாலையில் பெரியவள் வந்து தொலைவிலிருந்து அவளைப் பார்த்து அழுதுவிட்டுப் போனாள். அன்றிரவு அவனுக்கு அவள் வீடியோ கால் செய்தாள். அவன் அவனின் முகம் காட்டாமல் தொடு திரையை மகளின் முன்பாக வைத்துவிட்டான். சிறிது நேரம் “ஏம்மா ? ஏம்மா ” என்றவாறே அழுது கொண்டிருந்தவள் பின்பு “நீயும் மாலை போட்டிருக்கலாமுல்லம்மா ?மாலை போட்ருந்தா எங்கக்கூடயே இருக்கலாம்ல? ” என்றாள். பாவம். அவளுக்கு என்ன புரியும் ? அம்மா தனித்து இருப்பதற்கு மாலையணியாததுதான் என்று நினைத்துவிட்டாள் போலும். அவள் பிள்ளையை சமாதானப்படுத்திவிட்டு, உறங்க முடியாமல் சிறியவளை இறுக்கிக் கட்டிப்பிடித்து படுத்திருந்தாள். பின்னாளில் தான் தற்பொழுது அனுபவிப்பவைகள் அனைத்தும் தனது பிள்ளைகளுக்கும் நேரலாம் என்பதால் செய்வதறியாது குழம்பியவள் ,அப்படியே உறங்கியும் போனாள். ஏழாம் நாள் அந்த அறையை சுத்தம் செய்து, சாவியை ஒப்படைத்து விட்டு வந்தபொழுது, அவன் வேலைக்குக் கிளம்பிப் போயிருந்தான். ஒருவழியாக இந்தவருடம் அவளின் சபரி யாத்திரை சமயத்திற்கான மாத விடாய் கஷ்டங்கள் கடந்து போய்விட்டதை அவள் உணர்ந்தபொழுது அவளுக்கு தற்காலிக நிம்மதி ஒன்று உருவானது.

  ஆனால் அவன் எப்படியும் வருடா வருடம் மாலையிடத்தான் செய்வான்.தனக்கு எப்படியும் இன்னும் பத்து பதினைந்து வருடங்களுக்கு மாதவிடாய் வரவே செய்யும். உண்மையில் அவளுக்கு அவன் மாலையணிவதில் அவளுக்கு சந்தோசமே .காரணம் காலையில் அவனுக்காக சமைக்க வேண்டியதில்லை . பிள்ளைகளுக்கு மட்டும்தான் அதுவம் சிறிய அளவில். மதியம் கொஞ்சம் கூடுதலாக அப்பளமோ பொரியலோ செய்வதில் அவளுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. மேலும் அவன் காலையில் வீடு துடைத்து கொடுத்து விடுகிறான். இரவில் கொஞ்சம் போலவே சாப்பிடுவான்.இந்த சமயத்தில் தட்டுகளில் சாப்பிடுவதில்லை. இலைகளில்தான். எனவே தட்டுகளைக் கழுவ வேண்டியதில்லை.

        முக்கியமாக மாலையணிந்திருக்கையில் அவன் கோபம் கொள்வதில்லை. அதிமுக்கியமாக அவளை இரவு நேரங்களில் தொந்திரவு செய்வதில்லை . மாதவிடாய் நாட்களிலும் “வாய் சும்மாதானடி இருக்கு ?”என்று ஏதோ உலக மகா நகைச்சுவையை சொன்னதைப் போல் ‘கெக்கே பிக்கே’ என்று சிரித்து அவளைக் குமட்ட செய்வதில்லை. அதைவிட முக்கியமாக எப்பொழுதும் “சனியனே! பீட!,தரித்திரம்!,விடியாமூஞ்சி!” என்ற அவனின் அன்பான அழைப்புகள்இல்லை . வார்த்தைக்கு வார்த்தை சாமிதான்.”வாங்க சாமி .என்ன சாமி என்ன வேணும்? போதும் சாமி.என்ன முடியுதோ அதப்பண்ணுங்க. நம்மக்கிட்ட என்ன இருக்குதோ, அத ,அந்த அய்யப்பன் ஏத்துக்குவார் “

           மாலையைக் கழட்டிவிட்டு ஆசாமியாக திரும்பியவுடன் பழைய கதைகள் மீண்டும் தொடரும்தான்.இருந்தாலும் அவளுக்கு அவன் இப்படியே இருந்துவிடமாட்டானா ? என்றிருக்கும் . அது முடியாதுதான் .குறைந்தபட்சம் இந்த ஒரு மண்டலமேனும் அந்த சுகத்தை அனுபவிக்கலாமென்றால், இந்த மாதவிடாய் வேறு ஏழெட்டு நாட்களை அபகரித்துவிடுகிறது. அதனால் அவள் முடிவெடுத்தாள் . அடுத்த வருடம் எப்படியாவது இந்த மாதவிடாயிலிருந்து விலக்கு பெற்றுவிடவேண்டும் .ஆனால் எப்படியென்று அவள் இரண்டு மூன்று நாட்கள் சிந்தித்தபடியேயிருந்தாள் .இன்றைக்குக் காலை செய்தித் தொலைக்காட்சியில் ஒரு செய்தியைப்பார்த்தாள் .மராட்டிய மாநிலத்தின் ஒருபகுதியில் கரும்பு காட்டுக்கு வேலைக்குப் போகும் ஏழைப் பெண்கள் ,மூன்று நாட்கள் சம்பளமில்லா விடுப்பைத் தவிர்ப்பதற்காக தங்களது கர்ப்பப்பையை எடுத்து விடுவதாக!.அவ்வாறு எடுத்து விட்டால் மாதவிடாய் நின்றுவிடுமா என்ன ? யாரிடம் கேட்பது ? ஆண்வாரிசு வேண்டும் என்று வேண்டுதலுடன் மாலையிட்டு, யாத்திரையை முடித்து வந்து, தொல்லை தரப்போகிறவனுக்கு என்ன பதில் சொல்வது? என்றெல்லாம்  சிந்தித்திருந்தவள், குக்கர் விசிலடிக்கும் சத்தத்தில் இது எத்தனையாவது விசில் என்பது மறந்து போய் ,எழுந்து மணியைப்பர்த்தவள் அவசர அவசரமாக சமையல் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். இருப்பினும் மனதின் ஓரத்தில் அந்தக் கேள்வி, பதிலைத் தேடிக் கொண்டுதான் இருந்தது .

“கர்ப்பப்பையை எடுத்துவிட்டால் மாதவிடாய் நின்று விடுமாமே ?”


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “மாலையும் மாதவிடாய் நாட்களும்”

  1. இந்த காலத்துல இப்படி நடப்பது அதிசயம்.கணவன் அறிவற்றவனாக இருக்கவேண்டும்.இப்படி வேலையில் இருந்த பெண் கணவனின் திட்டுக்கள் கேட்டுக்கிட்டு வாளா இருக்க chance இல்லை.இருந்தால் அது பெண்ணின் தவறு தான்.இது போல் மாதவிடாய் சமயத்தில் தனியாக இருப்பது 90சதவீத குடும்பத்தில் இல்லை.

Leave a Reply to Radhakrishnan GCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.