தனிமைக்குப் பிரபஞ்சம் என்றும் பொருள்

பின்தொடர்ந்தே ஓடி வந்தேன்
நீங்கள் திரும்பிப் பார்க்கவில்லை
வேகத்தைக் கூட்டினேன் நானும்
எட்ட முடியவில்லை
தென்படாத தொலைவின் பேரமைதிக்குள்
நிரந்தரமாய் நகர்ந்துவிட்டிர்கள்
இரண்டாக
நான்காக
எட்டாகப் பிரிகிறது பாதை
கால்களை இறுகப் பிடிக்கிறது நிலம்
வானம்பாடியின் நிழலாய் கவிழ்கிறது
பிரபஞ்சத்தின் குடை


ஊமைக் கழுதையின் முதுகிலமர்த்திய
அழுக்குப் பொதியாய்
வயோதிகனின் அறுத்து வீச முடியாத
சதைக்குன்று கூனாய்
நீரிழிவுக்காரனின் சீழ் வடியும்
கொப்பளமாய்
அகாலத்தின்
தூக்கில் தொங்குகிறது
இரவு


குடுவைக்கு வெளியே நீந்துபவை
கடல் நட்சத்திரங்களெனக்
காலத்துக்கும் நம்பிடும்
தொட்டி மீன்
கடலையே பார்த்ததில்லை
எவ்வளவு உண்மையோ
எந்த வலைக்கும்
இரையாகப் போவதில்லை
என்பதும்


Discover more from சொல்வனம் | இதழ் 376 | 11 அக் 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.