மனக்கணக்கு

குவாண்டம் பிணைப்பு வகுப்புக்கான (Quantum entangled Class) பொத்தானைத் தட்டிவிட்டு இணைப்பு உருவாகத் தன் அறையில் காத்திருந்தான் ஹரி. அப்போது அவ்வழியே கடந்து போய்க்கொண்டிருந்த ஹரியின் அண்ணன் கார்த்திக்,

“என்ன இணைப்புக்குக் காத்திருக்கிறாயா? இத்தனை இடையூறுகளுக்கு மத்தியில் நீ அயல் கிரக மாணவர்களுடன் படித்துத்தான் ஆக வேண்டுமா, ஹரி? இங்கேயே இங்குள்ள மாணவர்களுக்கான கல்வி நிலையங்கள் இருக்கின்றனவே. அதிலேயே நீ படித்திருக்கலாம்” என்றான்.

“எல்லோரும் அவரவர் இடம், அவரவர் சூழல் என்று இருந்துவிட்டால், மனித குலம் இப்போது சனியின் டைடன் வரை பரவியிருக்காது என்று என் ஆசிரியர் சொல்வார் அண்ணா. பிரிவினைவாதம் மனித குலத்துக்கு எதிரானது என்று அம்மா எனக்கு மட்டுமா சொல்லித்தந்தாள்? உனக்கும் தானே” என்றான் ஹரி.

“ஹ!” என்றுவிட்டு கார்த்திக் கடந்து போக, மீண்டும் தன் வகுப்பு இணைப்புக்குத் திரும்பினான் ஹரி. அறையின் வாசலை நோக்கித் திரும்பியிருந்த தன் மடிக்கணினியின் திரையை எதிர்திசையில் திருப்பிவிட்டு அறையின் கதவை மூடினான் ஹரி. ‘யாராவது பார்த்தால் தானே கேள்வி கேட்பார்கள்?’ 

ஜன்னலுக்கு வெளியே கடல் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது. ஹரியின் வீடு ஒரு மலை உச்சியில் அமைந்திருந்தது. அப்படி அமைந்திருந்ததினாலே தானோ என்னவோ அது சுனாமிக்களிலிருந்து பேரிடர்களிலிருந்தும் தப்பி இருந்தது. தென் துருவமாக மாறி இருந்தது. ஜன்னல் வழியே அத்துவானம் வரை வெறும் கடல். இரவில் பார்ப்பதற்கு ஒரு பாரிய கருந்துளை போலிருக்கும். ஹரி இரவில் வீட்டை விட்டு வெளியில் கால் வைப்பதில்லை.

இப்போது அதுவா முக்கியம் ?

எஸ்!. எஸ்!. எஸ்!.

உள்ளுக்குள் ஹரியின் மனம் குதூகலித்தது. எம்பிக் குதித்தான். உள்ளம் பூரித்தான். காரணம், அவன் கையிலிருந்த மதிப்பெண் அட்டவணை. அதில் அவ‌ன் பெய‌ர். கீழே ம‌திப்பெண்க‌ள். அறிவியல்-183, கணிதம்-192, மொழி-196 ….. 

அத‌ன் கீழே சிவ‌ப்பு மையில் 1. முத‌ன் முறையாக‌ வாங்கிய‌ முத‌லாவ‌து இடம். அதுவும் குவாண்டம் பிணைப்பு வகுப்புக் (Quantum entangled Class)காலாண்டுத் தேர்வில். முந்தைய வருடம்  தேர்வுகள் அத்தனையிலும் ஹரியால் அதிகபட்சமாக ஆறாவது  இடம் தான் வாங்க முடிந்தது. வினய் தான் இறுதியாண்டுத் தேர்வில் முதலிடம் பெற்றிருந்தான். வகுப்புத் தோழி ப்ரத்திமா, உஷா, ஷீலா எல்லோரும் சென்ற வருடம் அவன் பக்கம்.

பெண்பிள்ளைகள் மாறி மாறி அவன் புகழ் பாடியது ஹரிக்கு எரிச்சலாக இருந்தது. அவனுக்குப் ப்ரத்திமாவை பிரத்தியேகமாக பிடிக்கும். ஏன் பிடிக்கும்? அது இருபத்தோராம் நூற்றாண்டில் புதிராக இருந்திருக்கலாம். இருபத்து மூன்றாம் நூற்றாண்டில் கிரகச்சார பாலின ஈர்ப்பு அட்டவணையின் பிரகாரம், வரலாற்று ரீதியிலான பொருந்தக்கூடிய தன்மைகளைக்கொண்ட மரபணுக்களின்(Histocompatibility genes)  பிரகாரம் இது புதிரல்ல. 

இருபத்தோராம் நூற்றாண்டில் வகுப்பறை மேஜையில் FLAMES போட்டுப் பார்த்துக்கொள்வது, இருபத்து மூன்றாம் நூற்றாண்டில் மரபணுச்சாளர அட்டவணையாக மாற்றம் கண்டிருந்தது. இந்தப் பின்னணியில், ஹரிக்கும் ப்ரத்திமாவுக்கும் பொருத்தம் அமோகமாக இருந்தது. ஆனால்,  ப்ர‌த்திமாவும் வினயும் அடிக்க‌டி பேசிக்கொள்வ‌தும், குறிப்புகள் பரிமாறிக்கொள்வதும், ஆலோசனைகள் பகிர்ந்துகொள்வதும் ஹரிக்கு ஏக‌த்துக்கு கிள‌றிவிட்ட‌து.

அப்போதே கங்கணம் கட்டிக்கொண்டு பதினோராம் வகுப்பு படிக்கையிலேயே பன்னிரண்டாம் வகுப்புக்கான பாடங்களை படிக்கத் துவங்கிவிட்டான். இப்போது பன்னிரண்டாம் வகுப்பு துவங்கி காலாண்டுத்தேர்வுகள் நடந்து முடிவுகள் வெளியாகியிருக்கின்ற‌ன‌. ஹ‌ரிதான் முதலிடம். 

‘இனிமேல் வின‌ய் இல்லை. ஹ‌ரிதான்.’

நினைக்கையிலேயே ச‌ந்தோஷ‌மாக‌ இருந்த‌து ஹரிக்கு. 

எல்லாமே ‘ குவாண்டம் பிணைப்பு வகுப்புகள்’ (Quantum entangled Class) தாம். ஹரி இருப்பது பூமியின் தென் துருவத்தில். வினய் இருப்பது பூமியின் வட துருவத்தில். கால நிலை மாற்றம் பூமிப்பந்தின் பெரும்பாலான பகுதிகளைக் கடல் கொள்ள வைத்திருந்தது; அதில் எஞ்சியது தென் துருவத்திலும், வடதுருவத்திலும் இரண்டே பகுதிகள் தாம். அதனாலேயே ‘தென் துருவம்’, ‘வட துருவம்’ என்றே பெயராகிவிட்டது.

ப்ரத்திமா, உஷா, ஷீலா இருப்பது செவ்வாய்க் கிரகத்தில் அசிடாலியா ப்ளனிஷியா காலனியில். ஒரு சில கைமாற்ற மாணவர்கள் (Exchange students) சனிக்கிரகத்தின் டைடனிலிருந்து இணைவார்கள். எல்லோரும் ஒருங்கே பயில உருவாக்கப்பட்டிருந்தது ‘குவாண்டம் பிணைப்பு வகுப்புகள்’ (Quantum entangled Class). எல்லோரும் ஒரே இடத்தில் இருப்பதான ஒரு பிம்பத்தை உருவாக்க வல்ல தொழில் நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது ‘குவாண்டம் பிணைப்பு வகுப்புகள்’. பட்டனைத்தட்டினால் எல்லோரும் வகுப்பறையில். அணைத்துவிட்டால், அடுத்த நொடியே இணைப்பு துண்டிக்கப்பட்டு அவரவர் கிரகத்திலமைந்த அவரவர் வீட்டில்.

அன்று ப்ரத்திமாவைப் பார்க்கும் ஆவலில் குவாண்டம் பிணைப்பு வகுப்பில்  (Quantum entangled Class) நுழைந்தான் ஹரி. ஆனால் அன்றைக்கென்று ப்ர‌த்திமா ப‌ள்ளிக்கு வ‌ர‌வில்லை. இணைப்பில் ஏதேனும் கோளாறாகியிருக்க வேண்டும். ச்சே. ஹரி தன் அதிர்ஷ்டத்தை திட்டிக்கொண்டான். அதைத்தாண்டி வேறென்ன செய்துவிட முடியும்?

அத‌னால் அவ‌ளுக்கு தெரிந்திருக்க‌ நியாய‌மில்லை. அவ‌ளுக்கு தான் முத‌லிடம் வாங்கிய‌து தெரிய‌வேண்டுமே என்று ஹ‌ரி ம‌ன‌ம் அடித்துக்கொண்ட‌து. அவ‌ள் வீடு இருக்கும் தெரு வ‌ழியே போகிறா மாதிரி போய்விட்டு, த‌ற்செய‌லாக‌ அவ‌ளைப் பார்த்த‌து மாதிரியும், பின் த‌ற்செய‌லாக‌ ராங்க் கார்டு ப‌ற்றி பேசுவ‌தாக‌வும், முத‌ல் ராங்க் வாங்கிய‌து ப‌ற்றி சொல்வ‌தாக‌வும், அவ‌ள் ஹ‌ரியின் முக‌த்தை தாழ்த்தி நெற்றியில் முத்த‌ட்டு முத்த‌ப்ப‌ரிசு த‌ருவ‌தாக‌வும் ஹ‌ரிக்கு க‌ற்ப‌னைக‌ள் தோன்றி இனித்த‌து. அதைச் சாத்தியப்படுத்த பரிமாணத்தை மாற்ற முடியுமா என்று சிரியிடம் வினவ, ‘வாயில் (portal) மட்டுமே ஒரே வழி. ஆனால் அதற்குத் தேவையான வரவுகள் உன்னிடம் இல்லை’ என்றது சிரி.

அன்று வீட்டில் ஹரியின் அம்மா இருக்கவில்லை. அவள் குடியிருப்பின் மற்றொரு எல்லையில் இருக்கும் தங்கை வீட்டிலிருந்து இரவு தான் வீடு வருவதாக இருந்தது. தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொல்லலாமென்றால் பிரயோஜனமில்லை. எத்தனை முறை அழைத்தாலும் ஒன்று எடுக்க மாட்டாள் அல்லது அலைபேசி  செயலின்மையில் (கோமா) இருக்கும். மின் உயிரூட்டும் எண்ணமே இருக்காது. அம்மா அந்த காலத்திலேயே பிறந்திருக்க வேண்டிய மனுஷி. தொழில் நுட்பம் அவளுக்குப் புரிந்ததே இல்லை. கையில் ஒரு செயற்கைக்கோள் அலைபேசி இருந்தாலும், அதை எப்படி பயன்படுத்துவது என்பது இன்னமும் அவளுக்கு ஒரு சிந்துபாத் புதிர் தான். 

‘வாயில்’ (Portal) ஒன்றின் தேவை குறித்து வீட்டில் அண்ணன் அப்பாவிடம் சொன்னதில், கல்லூரிக்குப் புதிய ரக அதி நவீன வாயில் தொடர்பு (portal connection) வாங்கித் தருவதாக அப்பாவிடமிருந்து வாக்குறுதியும், அண்ணனிடமிருந்து ஒரு முறைப்பும் கிட்டியது. 

எனினும் ப்ரத்திமாவுக்குத் தான் முதலிடம் பெற்றது தெரியுமோ தெரியாதோ என்பதே ஒரே கவலையாக இருந்தது ஹரிக்கு. செயற்கைக்கோள் அலைபேசியில் அழைத்து சொல்லிவிடலாமா என்று யோசித்து, அதில் பதில் வர அரை மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டுமே என்றெண்ணி அந்த நினைப்பைக் கைவிட்டான் ஹரி. அதுமட்டுமில்லாமல், தானே தம்பட்டம் அடித்துக்கொள்வதாக அவள் நினைத்துவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி சிந்தித்து அந்த எண்ணத்தை கைவிட்டான் ஹரி. தானாகத் தெரியட்டும், அதுதான் உசிதம் என்று தோன்றியது ஹரிக்கு.

மறு நாளும் ப்ரத்திமா வகுப்பில் இணையவில்லை. வைரஸ் ஜுரம் என்றார்கள் ஷீலாவும் உஷாவும். இரண்டொருமுறை அலைபேசியில் அழைக்க முயன்றதில்  ப்ரத்திமாவின் அலைபேசியும் (கோமா)  செயலின்மையில் இருந்தது. ஹரி பெரிதும் அலைகழிந்தான். வகுப்பில் கவனம் செல்லவில்லை. வீட்டுக்கு அருகாமையில் உள்ள கோயிலில் ப்ரத்திமாவுக்கென வேண்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே கால்சட்டை பையில் வைத்திருந்த அலைபேசி குறுஞ்செய்தி வந்திருக்கிறதென முத்தாய்ப்பாய் சிணுங்கியது.

VB405….. என்று துவங்கி ஒரு புதிய எண். இது வான்ப்ரான் (Von Braun) எண்ணாயிற்றே! குறுஞ்செய்தி, ஆங்கிலத்தில் “முதல்வனுக்கு வாழ்த்துக்கள்” என்றுவிட்டு கண்ணடித்து சிரித்தது. 

வீட்டில் எல்லோரும் ஸ்டார்லிங்க் இணைப்பு தான் வைத்திருக்கிறார்கள். ஹரியின் நண்பர்களும், ஆசிரியர்கள் கூட. உஷா, ஷீலா இருவரும்  வான்ப்ரான் இணைப்புத்தான். ஹரி குழப்பமுடன் நிமிர்கையில், ஷீலாவும், உஷாவும் ஒருசேர சட்டென திருட்டுத்தனமாய் ஹரியிடமிருந்து முகத்தை திருப்பிக்கொண்டார்கள்.அவர்கள் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை. பின் வெகு தீவிரமாய் கரும்பலகை கவனித்தார்கள். அதில் ஒரு செயற்கைத்தனம் தெரிந்ததை ஹரி குறித்துக்கொள்கையில் அலைபேசி மீண்டும் அவனின் கால்சட்டைப் பையில் அமர்ந்தது.

மீண்டும் பாட‌ம். குப்புசாமி இம்முறை ஸ்பின் குவாண்ட‌ம் எண்க‌ள் ப‌ற்றி பாட‌மெடுத்துக்கொண்டிருந்தார். ‘ஸ்பின் குவாண்ட‌ம் எண் என்ப‌து ஒரு அணுவைச் சுற்றி ஓர் நொதுமின்னி எந்த‌ திசையில்….’

மீண்டும் கால்சட்டை பையில் வைத்திருந்த அலைபேசி குறுஞ்செய்தி வந்திருக்கிறதென முத்தாய்ப்பாய் சிணுங்கியது.

இம்முறையும் அதே VB405….. எண்ணிலிருந்து குறுஞ்செய்தி. ஆங்கிலத்தில் ‘நீ ஸ்மார்டாக இருக்கிறாய்’ என்றது. ஹரி இம்முறை சுதாரித்தவனாய், லேசாகத் தலை நிமிர்த்தி உஷா, ஷீலாவை நோட்டம் விட, அவர்கள் இருவரும் இம்முறையும் ஒருசேர சட்டென திருட்டுத்தனமாய் ஹரியிடமிருந்து முகத்தை திருப்பிக்கொண்டார்கள். முகத்தில் மெல்லிய புன்னகை. கரும்பலகை மீது கவனம். 

ஏதோ புரிந்தது போலிருந்தது ஹரிக்கு.

இந்தப் பெண்கள் ப்ரத்திமாவின் தோழிகள். ப்ரதிமா இருப்பது செவ்வாய்க்கிரகத்தில். அங்கு வான்ப்ரான் (Von Braun) தான் இணைய தொழில் நுட்பம்.  இப்போது குறுஞ்செய்தி அனுப்பப்படுவதும் வான்ப்ரான் (Von Braun) எண் தான். ஒவ்வொரு செய்தி அனுப்பப்படுகையிலும் இவர்கள் உளவு பார்க்கிறார்கள்.

அப்படியானால் என்ன நடக்கிறது? அப்படியானால், அப்படியானால்…. 

ஒருவேளை இப்படி இருக்கலாமா? இந்தப் பெண்கள் விளையாடுகிறார்கள். இவர்கள் தோழிகள். தன்னை வேவு பார்க்கும் தோழிகள். இளவரசி அங்கிருக்கிறாள். இந்த எண்ணின் மறுமுனையில் இருக்கிறாள். குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தோழிகள் மூலம் என் தவிப்பை உளவு பார்க்கிறாள் என்று இருக்கலாமா?. 

ச்சேசே, அனுப்பப்படுவது  வான்ப்ரான் (Von Braun) எண்ணிலிருந்து என்றால் அது உடனே ப்ரத்திமாவாகத்தான் இருக்க வேண்டுமா? இந்தப் பெண்கள் தற்செயலாகக் கூடத்தான் சிரித்திருக்கலாம். ஆம். அப்படித்தான் இருக்க வேண்டும். தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டான் ஹரி. ஆனாலும் இந்த புதிய எண் இன்னமும் புதிராகத்தான் இருக்கிறது, இதை எப்படியாவது தீர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

மாலை அம்மா வந்திருந்தாள். அவளிடம் மதிப்பெண் பட்டியல் காண்பித்தான் ஹரி. கட்டியணைத்து பாராட்டினாள் தாய் புவனா. இனி உனக்கு எல்லாம் வெற்றிதான் என்று அவள் வாழ்த்துகையில் அவன் நினைவுகளில் ப்ரத்திமா குறுக்கிலும், நெடுக்கிலும் கடந்து போனாள்.

அடுத்த நாள் ப்ரத்திமா வகுப்பறை வந்திருந்தாள். மதியம் உணவு இடைவேளையில் அவள் ஹரியை முதல் மதிப்பெண் வாங்கியதற்கு வாழ்த்தியபோது உஷாவும், ஷீலாவும் கல்மிஷமாய் இவர்களைப் பார்த்தபடி தங்களுக்குள் சிரித்துக்கொண்டார்கள். 

“நான் அனுப்பிய குறுஞ்செய்தி வந்ததா?” என்றாள் ப்ரதிமா. ஹரிக்கு தூக்கிவாரிப்போட்டது. 

“ஆமாம், நேற்று இரண்டு குறுஞ்செய்திகள் வந்தது. அது, VB405 என்று தொடங்கிய எண்களாயிற்றே… அது ..உன்னுடையதா ப்ரதிமா?”

தலையை பெரிதாக மேலும் கீழுமாக ஆட்டினாள் ப்ரதிமா. 

“சரி, ஹரி.. குறித்துக்கொள்.. நான் குறுஞ்செய்தி அனுப்பினால், அந்த எண்ணுக்கு பதில் அனுப்பிவிடாதே .. அது என் சித்திவழி தம்பியின் எண் தான்.. தற்காலிகமாக நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்… என் அலைபேசியில் வரவுகள் இல்லையெனில் அவனிலிருந்து பேசுவேன்.. ” என்றவளின் குவாண்டம் பிணைப்பு இணைப்பு சட்டெனத் துண்டித்து,  காணாமல் போய்விட்டிருந்தாள் ப்ரத்திமா.

அப்படியானால், அவளேதானா? ச்சே.. முதலிலேயே தோன்றியது தான். ப்ரதிமாவாகத்தான் இருக்கவேண்டும் என்று. ஆனால் தற்செயல் நிகழுவுகள் என்று குழப்பிக்கொண்டாயிற்று என்று தோன்றியது ஹரிக்கு. உஷாவும் ஷீலாவும் இன்னமும் தங்களுக்குள் நகைத்துக்கொண்டிருந்தார்கள். என்ன‌ முட்டாள்த‌ன‌ம்! கிட்ட‌த்த‌ட்ட‌ க‌ண்டுபிடித்த‌ விஷ‌ய‌ம் தான். என்ன‌வோ தோன்றி ப்ர‌த்திமாவாக‌ இருக்காதென்று நினைத்த‌து எத்த‌னை த‌வ‌று? க‌டைசியில் அது அவ‌ள்தான். ஒரே வான்ப்ரான் (Von Braun) எண்ணாக  இருந்த‌திலிருந்தே அதை அறுதியிட்டிருக்க‌வேண்டும். த‌ன‌க்குள்ளாக‌வே அலுத்துக்கொண்டான் ஹ‌ரி. முதல் வேளையாக அந்தப் புதிய எண்ணை ப்ரத்திமா பெயரில் பதித்துக்கொண்டான்.

அதற்கு பின்வந்த நாட்கள், இதுவே வாடிக்கையானது. வெள்ளிக்கிழமை கலர் சட்டைகள் அணிந்து வந்தபோது, அதே எண்ணிலிருந்து ‘அற்புதம்’ என்று குறுஞ்செய்தியில் வந்து விழுந்தாள் ப்ரத்திமா. வகுப்பறையில் சீரியஸாக பாடம் கவனிக்கையில் ஒன்றுமே நடக்காதது போல ‘என்ன செய்கிறாய்?’ என்று குறுஞ்செய்தியில் வினவி கண்ணடித்துவிட்டு ஒன்றுமே தெரியாதவள் போல பாடம் கவனித்து சீண்டிவிட்டாள் ப்ரத்திமா.

செவ்வாய்க்கிரகத்திலிருந்து பூமிக்கிரகம் வந்தடைய சுமார் பதினைந்து முதல் இருபத்தி ஐந்து நிமிடங்கள் ஆகும். அதனால் எதுவாக இருந்தாலும், குவாண்டம் பிணைப்பு (Quantum Entangled) இணைப்பிலேயே பகிர்ந்துகொள்வது தான் நடைமுறை. ஏதேனும், கோப்புகள் அனுப்பவேண்டுமானாலோ அல்லது கடிதப்போக்குவரத்து என்றாலோ தான் குறுஞ்செய்திகள் அனுப்புவது வழக்கம். ‘என்ன செய்கிறாய்?’ என்று கேட்பதற்கெல்லாமா குறுஞ்செய்தி என்று யோசித்துவிட்டு, ‘தான் அவளுக்கு எத்தனை முக்கியம்?’ என்பதை உணர்த்தத்தான் அவள் அப்படிச் செய்கிறாள் என்று உணர்ந்து உருகித்தான் போனான் ஹரி.

ஹரி இப்போதெல்லாம் முதுகுத்தண்டில் ரத்தம் பாய்வதை அடிக்கடி உணர்ந்தான். வகுப்பறையிலேயே  ப்ரத்திமாவுடன் ‘ஒல்லி ஒல்லி இடுப்பே.. ஒட்டியானம் எதுக்கு’ என்கிற தாத்தா காலத்து சினிமா பாடலுக்கு நடனம் ஆடினான்.  பகல் கனவுகளில் பழைய திரைப்படங்களில் வருவது போல் குதிரை வண்டியில் முகம் தெரியாத மனிதர்களால் ப்ரத்திமா கடத்தப்படுகையில் எங்கிருந்தோ வந்து குதித்து, காற்றிலே பறந்து பறந்து சண்டை போட்டு ப்ரத்திமாவை காப்பாற்றினான். ப்ரத்திமா அவ்வப்போது அவனை அர்த்தமுடன் ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு சிரித்தாள். ஹரிக்கு எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு ப்ரத்திமாவை அந்த நிமிடமே திருமணம் செய்யவேண்டும் போலிருந்தது.

‘பொறு. பொறு. அவசரப்படாதே. இன்னும் காலம் இருக்கிறது. கல்லூரி இருக்கிறது. அதற்குப்பின்  செவ்வாய் கிரகத்திலோ, டைடனிலோ அல்லது பிறிதேதோவோர் சிறுகோளிலோ வேலை. பின்னர் தான் திருமணம். பொறு. நீண்ட காலம் இருக்கிறது. அதுவரை இப்படியே காதலி. தினம் தினம் காலி வயிற்றில் பட்டாம்பூச்சிகள் விடு. தொடரட்டும் இந்த குறுஞ்செய்திகள். தொடரட்டும் இந்த கல்மிஷ சிரிப்புகள். இது நன்றாகத்தான் இருக்கிறது. வாழ்க காதல்.’ உபதேசித்தது மனம். 

இது எல்லாமும் எதனால் நடக்கிறது என்பதை புரிந்துகொண்டான். அதைத் தக்க வைக்க வெகுவாகப் போராடினான். அரையாண்டுத் தேர்வு முடிவுகளும் ஹரியை முதல்வனாக்கி வேடிக்கை பார்த்தன. அம்மா முத்தம் கொஞ்சினாள். அப்பா கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களை ஆர்வமுடன் இணையத்தில் சேகரித்தார். அண்ணன்  ஹரியை தன் தம்பியென்று பெருமையாகச் சொல்லிக்கொண்டான். ப்ரத்திமா இது அத்தனையையும் விட அதிகம் போதையேற்றினாள்.

ஒரு நாள், சனிக்கிழமை. 

அன்று சிறப்பு வகுப்பு. வேதியியல் சிறப்பு வகுப்புகள் மதியம் மூன்று மணிவரை. விருப்பமில்லை என்றாலும் ப்ரத்திமாவைப் பார்க்க இன்னுமொரு வாய்ப்பென்று தவறாமல் வந்தான் ஹரி. ப்ரத்திமா வகுப்பில் இல்லை. பத்து மணிக்கு துவங்கிய வகுப்பு ஒரு மணிக்கு இடைவேளை விட்டது. ஷீலா, உஷா கூட ப்ரத்திமா பற்றி உதட்டைப் பிதுக்கினார்கள். ஹரிக்கு பாடத்தில் மனம் லயிக்கவில்லை. ப்ரத்திமா பற்றியே சிந்தனை போனது.

மூன்று மணிக்கு வகுப்பு முடிந்த போது, ஹரியின் கால்சட்டை பையில் வைத்திருந்த அலைபேசி குறுஞ்செய்தி வந்திருக்கிறதென முத்தாய்ப்பாய் சிணுங்கியது. எடுத்துப்பார்த்த போது, மாலை ஐந்து மணிக்கு பூங்காவுக்கு வரும் படி ப்ரத்திமா எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது சற்று ஆசுவாசம் கொள்ள வைத்தது. அப்பாடா! என்றிருந்தது. இனிமேல் இவளிடம் எங்கு சென்றாலும் சொல்லிவிட்டு செல்லும்படி கேட்டுக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது ஹரிக்கு. 

குவாண்டம் பிணைப்பு இணைப்பில் பூங்காவின் பெயரை உள்ளீடு செய்துவிட்டு, காத்திருந்தான் ஹரி. இணைப்பு சாத்தியப்பட்டு பூங்கா அவன் கண் முன் விரிந்தது.

ப்ரத்திமாவுக்கென காத்திருந்த நிமிடங்கள், உண்மையில் யுகங்கள் தாம் என்பதை உணர்ந்துகொண்டிருந்த வேளையில் அங்கே  பூங்காவின் ஓர் ஓரத்தில் ப்ரத்திமா, அருகிலேயே வினய். இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதைக் கண்ணுற்றான். ஹரிக்கு அடிவயிற்றில் அமிலம் வேகமாய்ச் சுரந்தது. வினய் எங்கே இங்கே வந்தான்? பூஜை வேளையில் கரடி போல். இதில் ப்ரத்திமாவுடன் வாக்குவாதம் வேறு. முதலில் அவனை அவளிடமிருந்து விலக்க வேண்டும் என்று தீர்மானித்தபடியே அவர்களை அவசரமாய் அண்டினான் ஹரி. ஹரியைப் பார்த்துவிட்டு, ஏதோ பார்க்ககூடாதவனை பார்த்துவிட்டதுபோல சலிப்புடன் வினய் தன் கலப்புப் பரிமாண இணைப்பைத் துண்டிக்க, இப்போது அழத்துவங்கியிருந்தாள் ப்ரத்திமா.

“என்னாச்சு ப்ரத்திமா?” என்றான் ஹரி குழப்பத்துடன்.

“ஹரி, எல்லாமே போச்சு ஹரி. வினய் என் மீது கோபமாக இருக்கிறான்.” என்று விசும்பினாள் ப்ரத்திமா.

அவன் ஏன் இவள் மேல் கோபமாகவேண்டும் என்ற கேள்வியுடன் ஹரி ப்ரத்திமாவைப் பார்க்க,

“எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும், ஹரி. நீயும், வினய்யும் எனது நெருங்கிய நண்பர்கள். பன்னிரண்டாவது முடிந்ததும் கல்லூரி சேர பூமிக்கு வந்து, நாம் ஒன்றாகப் படிக்கலாம் என்று நினைத்திருந்தேன். என் பிழை. செவ்வாய்க்கிரகத்தில் பிறழ்வுகள் அதிகம் என்பதால் செவ்வாய் மனிதர்கள் தனி மனித இனமாம். இதனால், செவ்வாய்க்கிரகத்துப் பெண் பூமிக்கிரகத்து ஆணுடன் சேர்ந்து படிப்பதைத் தவிர்க்கிறார்கள். படித்தால் காதலித்து திருமணம் வரை சென்றுவிடலாம் என்று அச்சம் கொள்கிறார்கள் குடியேற்ற அலுவலர்கள். இந்தக் காரணத்தால் எனக்கு விசா கிடைக்காது என்று சொல்லி, என் பெற்றோர்கள் என்னை பூமிக்கு அனுப்ப மறுக்கிறார்கள். செவ்வாய்க்கிரகத்திலேயே கல்லூரி என்றால் தான், அது செவ்வாய்க்கிரகத்தின் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு வழி வகுக்கும்  என்று எண்ணுகிறார்கள். இதனால் நான் இனி எப்போதும் பூமிக்கிரகம் வர முடியாது. எனக்குத் திருமண வயது இல்லை என்று இதுகாறும் என்னிடம் இதைச் சொல்லியிருக்கவில்லை. இதையெல்லாம் குறிப்பிட்டு உனக்கும், வினய்க்கும் குறுஞ்செய்தி அனுப்பினேன். ஆனால், உனக்கு அனுப்பியது மட்டும் வேறு யாருக்கோ அனுப்பித் தொலைத்திருக்கிறேன் போலிருக்கிறது. இது அனைத்தையும் அறிந்து வினய் கோபமாக இருக்கிறான்! வாக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டேனாம். சேர்ந்து படித்தாலே காதலில் விழுந்துவிடுவோம் என்று குடியேற்ற அலுவலர்கள் நினைத்தால் நான் என்னடா செய்வேன்? ” என்றுவிட்டு விம்மினாள் ப்ரத்திமா, ஹ‌ரியின் இத‌ய‌ம் நொருங்குவ‌தை உண‌ராம‌ல்.

ஹரி அதிர்ச்சியில் ஆழ்ந்து செய்வதறியாமல் திகைத்திருக்கையில் ஹ‌ரியின் அலைபேசிக்கு ஓர் குறுஞ்செய்தி அதே VB405….. எண்ணிலிருந்து  வ‌ர‌, அதிர்ந்தான் ஹ‌ரி. க‌ண்முன்னே ப்ர‌த்திமா விசும்பி அழுது கொண்டிருக்க‌, இத்த‌னை நாளும் அவ‌ள் தான் என்று நினைத்திருந்த‌ எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வ‌ந்து ஹ‌ரியை ஏக‌த்துக்கும் குழ‌ப்பிய‌து.

தடதடக்கும் இதயத்துடன் அவசரமாய் ஹரி அலைபேசியை எடுத்துப் பார்க்க, அது ஒரு ஒலிச்செய்தி (Audio Message).

“ஹேய் ஹ‌ரி” என்ற‌து எதிர்முனையில் ஒரு  பெண்குர‌ல். அந்த‌க் குர‌ல்! அந்த‌க் குர‌ல்! அப்ப‌டியே அச்சு அச‌லாய், ஹ‌ரியின் அம்மாவின் குர‌லை ஒத்து இருக்க‌, ஹ‌ரி அதிர்ச்சியில் உரைய‌, 

“என்ன‌ ஹ‌ரி, சீக்கிர‌மே வ‌ந்துவிட்டாய்? ஐந்து ம‌ணிக்குத்தானே வ‌ர‌ச் சொல்லியிருந்தேன்” அந்த‌க் குர‌ல் வெகு அருகாமையில் கேட்க‌ திரும்பினான் ஹ‌ரி. ஹ‌ரியின் அம்மா புவனா புன்ன‌கைத்த‌ப‌டி நின்றிருந்தாள். 

‘அம்மா! இவள் எப்படி பூங்காவில்!’ என்று ஹரி குழம்ப, 

“எனக்கா தொழில் நுட்பம் தெரியாது? பார்த்தாயா உன் கண் முன்னே வந்து நின்றுவிட்டேன். குவாண்டம் பிணைப்பு இணைப்பை (Quantum Entangled Connection) எனக்கும் பயன்படுத்தத் தெரியுமாக்கும். அதுமட்டுமல்ல, எனக்கும் அறிவியல் புரியும் கண்ணா. அதை நிரூபிக்கத்தான் இப்படி வந்தேன்.. ஹா ..ஹா” என்று இடித்துச் சிரித்தாள் புவனா.

குழப்பத்துடன் ப்ரத்திமாவின் குவாண்டம் பிணைப்புப் பயனர் கணக்கைத் (Quantum Entangled User Account) துழாவியதில் ப்ரத்திமாவின் எண் அகப்பட்டது. அதுவும் VB405 என்று துவங்கி வேறொரு எண்ணாக இருந்தது கண்டு அதிர்ந்தான் ஹரி.

“அம்மா, நீ… நீங்க‌…”

“என்ன‌டா ஹ‌ரி..ஐந்து ம‌ணிக்குத்தானே வ‌ர‌ச்சொன்ன‌து? ஏன் இத்த‌னை முன்கூட்டியே வ‌ந்துவிட்டு காத்திருக்கிறாய் ஹரி. பரவாயில்லையே! என் பிள்ளை  சொன்ன  நேரத்துக்குக் கச்சிதமாக வந்திருக்கிறானே. சமத்து!” என்று திருஷ்டி சுற்றி சிலாகித்தாள் புவனா

“அம்மா, இது உங்கள் எண்ணா?”

“ஆமாம்டா, உன் சித்தி வாங்கிக்கொடுத்தாள். ஏதோ அலுவலக எண்ணாம். ப்ராக்ஸியாம். சுருக்கமாகச் சொன்னால், பயனர் செவ்வாய்க்கிரகத்திலும், பூமியிலும் ஒரே நேரத்தில் இருப்பதாகக் காட்டுவது. இதில் குறுஞ்செய்திகள் செலவு இல்லையாம். நீதான் என்னை எப்போதும் திட்டுவாயே! அதுதான், உன் சித்தியிட‌ம் இந்த‌ குறுஞ்செய்திகள் அனுப்புவ‌து எப்படி என்று க‌ற்றுக்கொண்டேன். ச‌ரியாக வ‌ந்த‌தா?”

“அம்மா, நீங்கள் தானென்று சொல்லக்கூடாதா?”

“அதையும்தான் குறுஞ்செய்தியென அனுப்பினேனே ஹ‌ரி”

“அப்ப‌டியா? எப்போது அம்மா அனுப்பினீர்கள்? எனக்கு வரவில்லையே” என்ற மகனிடம் புவனா தன் அலைபேசியைக் காட்ட, 

‘ஹாய் ஹ‌ரி -‍ உன் அம்மா’ என்ற‌ குறுஞ்செய்தி அனுப்ப‌ப்ப‌டாம‌ல் காத்திருப்பிலேயே வைக்கப்பட்டதென அந்த அலைபேசி எந்த விதமான உணர்ச்சிகளும் இன்றி சிவனேயென்று சொன்னது.

‘அடச்சே! ப்ரத்திமா எண்ணுக்கு அழைத்தபோது அவளது எண் (கோமா)  செயலின்மையில் இருந்தது அதனால் தானா? அது, உண்மையில் செயலின்மையில்  இருக்கவில்லை. அம்மாவிடம் இருந்திருக்கிறது. அவள் வழமை போல எடுக்காமல் விட்டிருக்கிறாள்’ ஹரியின் உள்மனம் புலம்பியது..

ஹரிக்கு அழுகை முட்டிக்கொண்டு வர, குலுங்கிக் குலுங்கி அழத்துவங்க, ப்ரத்திமா அதிர்ந்தாள். நிலைமையின் தீவிரம் உணர்ந்து, ஹரியின் தாய், தன் குவாண்டம் பிணைப்பு இணைப்பைத் துண்டித்து விட்டு, படியேறி வீட்டின் முதல் மாடியில் இருந்த ஹரியின் அறைக்கு வந்து அவனது குவாண்டம் பிணைப்பு இணைப்பையும் துண்டித்தாள். 

“என்னப்பா? ஏன் அழுகிறாய்?” என்று பரிவுடன் தாய் விசாரிக்க, நடந்தது அத்தனையையும் ஒன்று விடாமல் விவரித்தான் பதினைந்து வயது ஹரி.

“இதற்காடா அழுகிறாய்? மடையா? யாரோடு யார் சேர வேண்டும் என்று இயற்கைக்கு ஒரு புதிர்க்கணக்கு இருக்கிறது, ஹரி. அறிவியலிடம் மட்டுமே அந்தப் புதிரை அவிழ்க்கும் சாவி இருக்கிறது. பண்டைக்காலத்தில் இது புரியாமல் பேதலித்திருந்தார்கள். ஜாதி, மதம், சாங்கியம், சம்பிரதாயம் என்று தங்களைத் தாங்களே வருத்தி பிரிவினை வாதம் வளர்த்தார்கள். இப்போது அதற்கு என்ன அவசியம் இருக்கிறது?” என்றாள் புவனா.

இருப்பினும் மனம் கேளாதவனாய்,

“சரியாகச் சொன்னாய் அம்மா. யாரையும் இகழ்வாக நடத்தக்கூடாது, பிரித்துப் பேசக்கூடாது, பிரிவினை வாதம் தேவையற்றது என்று நீதானே சொல்வாய்?. அதனால் தான் குவாண்டம் பிணைப்பு இணைப்பைத் தெரிவு செய்தேன். பிரித்துப் பாராமல் எல்லோருடனும் அன்பாகப் பழக வேண்டும் அல்லவா? அதுமட்டுமல்லாமல், வரலாற்று ரீதியிலான பொருந்தக்கூடிய தன்மைகளைக்கொண்ட மரபணுக்கள் (Histocompatibility Genes) எனக்கும் ப்ரத்திமாவுக்கு இடையில் பொருந்திப்போகின்றன அம்மா. எங்களிடையே இருப்பது அன்பு மட்டும் தான். சக மாணவர்களிடம் அன்பு செய்ய வேண்டும் என்று நீதானே வலியுறுத்துவாய்? அன்பு செய்பவர்களுடன் இருக்க நினைப்பது தவறா? ப்ரத்திமாவுக்கு என்னை மிகவும் பிடிக்குமாம்.” என்றான் ஹரி அப்பாவியாக.

“நீ முழுக்க புரிந்துகொள்ளவில்லை, ஹரி. பண்டைக்காலத்தில் வழக்கில் இருந்த பிரிவினைவாதம் தான் அவசியம் அற்றது என்றேன். செவ்வாய்க்கிரக மனித இனத்துடன், பூமிக்கிரக மனித இனம் சேர முடியாது என்கிற அறிவியல் உண்மையை வைத்து பிரிவினைவாதம் முழுக்கவும், மனித குலத்துக்கு எதிரானது அல்ல என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது, ஹரி. பிரிவினைவாதத்தின் இந்தப் பகுதி ஆதரவானது என்று இயற்கையே உணர்த்துவதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. அறிவியல் இயற்கையின் சரியான, ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரிவினைவாதம் எது என்பதைக் காட்டும் கருவியாகச் செயல்படுவதை கவனிக்கிறாயா? அப்படி அது காட்டும்போது, அதை நாம் ஏற்கத்தான் வேண்டும், இல்லையா?. பளிங்கு வெள்ளையில் அழகான சிற்பமொன்றைச் செய்கிறாய். அதனோரத்தில் ஒரு கருப்பு மை திருஷ்டிப்பொட்டாக வைப்பதில்லையா? அது போலத்தான். சிற்பத்தின் அழகை அது மென்மேலும் கூட்டவே செய்யும் ஹரி.” என்றாள் புவனா.

ஹரியின் கண்களில் கண்ணீர் முட்டியது. புறங்கையால் கண்களிலிருந்து பெருகும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்.

“அவளுக்கும் என்னை பிடிக்கும்மா” என்றான் இறுதியில் ஜுரத்தின் உச்சத்தின் அணத்தும் பிள்ளையைப் போல.

“என்னை விடவாடா அவளுக்கு உன்னைப் பிடித்துவிடப்போகிறது?” என்ற புவனாவின் எதிர்கேள்வியில் அதிர்ந்தான் ஹரி. 

அது சரி. ஹரியின் மரபணுக்களுக்கே காரணமான அவன் தாயிடம் இல்லாத மரபணுக்களா (Histocompatibility Genes) ப்ரத்திமாவிடம் இருந்துவிடப்போகிறது? 


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.