நேரான கம்பியை உச்ச வெப்பத்தில் உருக்கி சில உலோகங்களைக் கலந்து மீண்டும் கம்பியாக இழுத்தால் அதன் குணம் மாறிவிடுகிறது. உருக்கி இழுத்த கம்பியை ஒரு சுருளாக மாற்றினால் அது வேறு இனமாகி விடுகிறது. சுருள் கம்பி, அழுத்தத்தை ஆற்றலாகச் சேமிக்கும் திறன் உடையது. சமுதாயம் ஒரு மனிதனுக்கு கொடுக்கும் அழுத்தத்தை, தனிமனித சுதந்திரத்திற்கு எதிராக தொடுக்கும் அடக்குமுறையைச் சுருள் கம்பியின் குணமுடையவர்கள் சமுதாயத்திற்கே வெடிகுண்டை போல திரும்பிக் கொடுத்துவிடுகிறார்கள். உயர் சித்தாந்தங்களை போற்றும் மேம்பட்ட சமுதாயங்கள் கூட வெகுஜன கருத்திற்கும், ஆதிக்க தர்மத்தின் ஆன்மீக கோட்பாடுகளுக்கு இணங்க சில நீதிகளை குடிமக்களுக்கு விதிக்கின்றன. இத்தகைய விதிகள் மற்றும் அறன்களினால் பாதிக்கப்பட்ட சிலர் சுருள் கம்பிகளை போல அவர்களின் மேல் கொடுக்கப்பட்ட அழுத்தத்தை சமுதாயத்திற்கே திரும்பிக் கொடுத்துவிடுகின்றனர். அத்தகைய மனிதரைப் பற்றியது இந்த கட்டுரை.
ஓவியக்கலை முன்னோட்டம் (1820 – 1920) :
அழகியல் அடிப்படையில் கலையைப் பார்க்கும் போக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சவாலுக்கு உள்ளானது. பார்க்கும் பார்வை சிந்தைக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தின் (impression) அடிப்படையில் வரைய தொடங்கினர் சில ஓவியர்கள். வடிவமைப்பிற்கு, தத்ரூபத்திற்கு, உணர்ச்சிகளுக்கு இரண்டாம் இடத்தை கொடுத்து, நிறங்களுக்கும் , நிறங்களினால் ஏற்படும் உணர்ச்சிகளுக்கும், சாமானிய சூழல்களுக்கும், தூரிகை அசைவுகளும் முதலிடம் கொடுத்தனர் இந்த இயக்கத்தினர். இந்த இயக்கத்திற்கு இம்ப்ரெஷசனிசம் (impressionism) என பெயர் சூட்டினர் கலை விமர்சகர்கள். பால் செசான் (Paul Cézanne) என்ற ஃப்ரேஞ்சு ஓவியர் இந்த இயக்கத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். அவரை பின்தொடர்ந்து இக்ளாட் மோனே (Claude Monet), பியர்-ஆகுஸ்ட் ரெனுவா(Piere – August Renoir) போன்றவர்கள் காட்சிகளின் சிந்தை தாக்கத்தை ஓவியங்களாக வரைய தொடங்கினர். ஃப்ரான்ஸ் நாட்டில் மையம் கொண்டிருந்த இந்த இயக்கம் முதலில் கடும் எதிர்ப்பிற்குள்ளானது. மரபு ஓவியங்களில் காணப்படும் அழகியல், தர்மம் சார்ந்த தலைப்புகள், தத்ரூபம் போன்ற அம்சங்கள் இம்ப்ரெஷசனிசம் சார்ந்த ஓவியங்களில் காணப்படாததை சுட்டி காட்டினார் கலை விமர்சகர்கள். பெரும்பாலும் இளம் நேயர்கள் மத்தியில் ஆதரவு பெற்ற இம்ப்ரெஷசனிசம், மெதுவாக வெகுஜன ஒப்புதலையும் பெற்றது. இம்ப்ரெஷசனிசத்தின் வெற்றியை தொடர்ந்து இக்யூபிசம் (Cubism), பின்பியல் வெளிப்பாட்டியம் (abstract expressionism) போன்ற இயக்கங்கள் துவங்கின. பப்லோ பிக்காசோ (Pablo Picasso), ஹென்றி மடீஸ் (Henri Matisse) போன்றவர்கள் நிறம், நிறம் தரும் உணர்ச்சிகள், நிறங்களின் ஒருங்கிணைப்பு, வடிவம், எளிமை போன்ற அம்சங்களில் புதிய முயற்சிகள் மேற்கொண்டனர். பப்லோ பிக்காசோ வரைந்து 1909 யில் வெளிவந்த “லே டெமோசைல் டே அவினியோன்” (le demoiselles d’avignon – தமிழில் “தேவ கன்னிகள்”) மரபிலிருந்து முழுக்க முழுக்க விலகி பார்த்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த ஓவியத்தில் காணப்படும் ஐந்து பெண்களின் உடல் வடிவமைப்பு, கூர்மையான வெட்டுக்கள், ஆப்ரிக்க முக கவசத்தின் தாக்கத்தினால் வரையப்பட்ட முகங்கள், பாத்திரங்களின் நிர்வாணம், பாலியல் மேற்கோள்கள், நிறங்களின் தேர்வு போன்ற எல்லா விஷங்களிலும் மரபின் முகத்தில் அரையும் விதத்தில் வரையப்பட்டிருந்தது. அக்காலத்திலேயே பிக்காசோவின் நெருங்கிய நண்பர்கள் கூட இந்த ஓவியத்தைப் பார்த்துவிட்டு பிக்காஸோவிடம் பேசுவதையே நிறுத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. சித்தரிக்கும் முறையில் புரட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும், தனி மனிதனின் ஆழ்மனதின் சிந்தனைகளின் வெளிப்பாட்டிற்கு உதாரணங்கள் அந்த காலகட்டத்தில் காண முடியவில்லை. இதன் முதல் வெளிப்பாடு ஃரான்சிஸ் பேகனின் படைப்புகளில்தான் காண முடிகிறது.
பிறப்பு மற்றும் வளர்ப்பு :

ஃப்ரான்சிஸ் பேகன் 1909 ஆம் ஆண்டு அயர்லாந்தின் டப்லின் நகரில் பிறந்தார் (அக்காலத்தில் அயர்லாந்து முழுமையாக இங்கிலாந்தின் ஒரு பகுதியாக இருந்தது). ஃப்ரான்சிஸ் பேகனின் தந்தை ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று ஒரு பந்தயக் குதிரை லாடம் வைத்திருந்தார். அவர் தந்தைக்கு ஃப்ரான்சிஸ் இரண்டாம் குழந்தை. பேகனின் பாலிய காலம் ஈழ நோயிலும், பெற்றோர்களின் புறக்கணிப்பிலும் கழிந்தது. பேகனின் தந்தை ஒரு கடுமையான ஒழுக்கவாதி. தன் மகன்களை மரபு ஆண் பிள்ளைகளாக வளர்க்க வேண்டும் என்பதில் குறிப்பாக இருந்தார். இதனால் தவறுகள், சிறுபிள்ளைத்தனங்கள், விஷமங்களை அடி உதையின் மூலம் திருத்த முயன்றார். கணவனின் கண்டிப்பினால் மனநோய்க்கு உள்ளான பேகனின் தாய், குழந்தை வளர்ப்பை வீட்டுப் பணிப்பெண்ணான ஜெஸ்ஸி லைட்புட் (Jessy Lightfoot) என்பவரிடம் விட்டுவிட்டார். சிறுவயதிலிருந்தே பேகன் மெல்லிய குணங்களையும், பெண் ஆளுமையையும் வெளிப்படுத்தினார் . ஒரு முறை தன் அம்மாவின் ஆடைகளை அணிந்து ஒப்பனை செய்யும்போது பிடிபட்ட பேகனை, குதிரை லாடத்தில் கட்டி வைத்து சவுக்கினால் அடிக்குமாறு உத்தரவிட்டார் பேகனின் தந்தை. ஓரினச்சேர்க்கை உணர்வுகள் அப்போதே லேசாகத் தலையெடுத்தது. பேகனின் பாலியல் சார்பு, தந்தையின் ஒழுங்குமுறை, ஜெஸ்ஸியின் அன்பு மற்றும் அவரது தாயின் புறக்கணிப்பு அவர் பிற்காலத்தில் வரைந்த ஓவியங்களில் தனிமை, குருதி, சதை, அருவருப்பு, இனம் புரியாத பீதி என வெளியாகிறது.
வாலிப வயதில் லண்டனிற்குக் குடியேறிய பேகன், தன் ஓரினச்சேர்க்கை உணர்ச்சியை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு முதல் அனுபவங்களைத் தேடினார், அத்தேடலில் சில கசப்பூட்டும் அனுபவங்களையும் நேர் கொள்ளலாயிற்று. நிலையான வேலையில்லாமல் நண்பர்களுடன் சூதாடுவதிலும், தற்காலிக சிறு வேலைகளைச் செய்தும் காலத்தைக் கழிக்கும் பொது ஜெர்மனியின் தலைநகரமான பெர்லின் செல்ல வாய்ப்பு கிடைத்தது. பெர்லினில் சோவியத் இயக்குனரான செர்கே ஐசென்ஸ்டீன் (Sergei Eisenstein) இயக்கி வெளிவந்த “போட்டோம்ப்கின் போர்க்கப்பல் “ (Battleship Potemkin), ஜெர்மானிய இயக்குனரான ஃரான்ஸ் லாங் (Franz lang) கின் “மெட்ரோபொலிஸ்” (Metropolis) போன்ற திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக “போட்டோம்ப்கின் போர்க்கப்பல்” படத்தில் வரும் ஒரு காட்சியில் போர்க்கப்பல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு அதன் பணியாளர்களில் ஒருவாரண நர்ஸ் ஒருத்தி கண்ணாடி உடைந்து கண்களில் ரத்தம் கசிய அலறும் கட்சி பேகனை மிகவும் பாதித்தது. அக்காட்சி பேகன் பிற்காலத்தில் வரையவிருக்கும் ஒரு ஓவியத்தில் இடம்பெற்றது.
முதல் முயற்சி – 1933 :

சிறுவயதிலிருந்தே ஓவியங்களை வரையும் பழக்கமிருந்தாலும், பேகனின் முதல் தீவிர ஓவியம் 1933 ஆம் ஆண்டு கண்காட்சியில் காட்டப்பட்டது.
“இக்ருசிஃக்ஷன்” (Crucifixion தமிழில் “சிலுவையில் அரைதல்”) என்ற தலைப்பில் தீட்டப்பட்ட இந்த ஓவியம் நேயர்களிடையே அதிர்ச்சியை விடக் குழப்பத்தை உண்டாக்கியது. கர்த்தர் சிலுவை அரை காட்சி க்ருஸ்த்துவ ஓவியர்களால் வெகுவாக வரையப்பட்ட தலைப்பு என்றாலும் பேகன் இந்த தலைப்பைக் கையாண்ட விதம் வித்தியாசமாக இருந்தது. மனித வடிவத்திற்குப் பதிலாக ஒரு சிலந்தியின் வலையைப்போலக் காட்சியளிக்கும் ஒரு உருவம் கொக்கியினால் தொங்குவதைப்போல வரைந்திருந்தார். பிக்காஸோவின் ஒரு ஓவியத்தின் அடிப்படையில் வரையப்பட்டிருந்த இந்த படைப்பு, கருப்பு வெள்ளை நிறங்களை பிரத்தியேகமாகக் கொண்டிருந்தது. எதிர்பார்த்த அளவிற்கு நேயர்களிடம் உணர்ச்சி கொந்தளிப்புகளை ஏற்படுத்தவில்லை என்பதினால் நிராசையடைந்த பேகன், அடுத்த பத்தாண்டுக்காலம் ஓவியங்கள் தீட்டுவதையே நிறுத்திக்கொண்டார்.
மாபெரும் வெற்றி – 1944 :

1944 யில் வெளிவந்த அவருடைய “த்ரீ ஸ்டடீஸ் போர் ஃபிகர்ஸ் அட் தி பேஸ் ஆப் எ இக்ருஷிபிக்ஷன் “(“three studies for figures at the base of a crucifixion” – தமிழில் “சிலுவை அரைதல் காட்சிக்கு அடிவாரத்தில் மூன்று வடிவங்களின் முன்பட முயற்சி”) அவருடைய பெயரை ஓவிய இதிகாசத்தில் இடம்பெறச் செய்தது. கர்த்தாவின் சிலுவை படலம் ஏற்கனவே 1933யில் “இக்ருசிஃக்ஷன்” என்ற தலைப்பில் பேகன் முயற்சித்ததுதான் என்றாலும் இம்முறை சற்று வித்தியாசமாகக் கர்த்தரைப் பற்றி இல்லாமல் சிலுவை அரை காட்சியியுடன் சேர்ந்த அனுபந்த காட்சியை வரைய முயன்றார். இந்த ஓவியத்தைப் பற்றி விமர்சிக்கும் முன் சில குறிப்புகள். இக்கிறிஸ்துவ மரபின் படி சிலுவை அரை காட்சி பலகையில் வரையப்பட்டு பளிங்கினாலோ அல்லது மர மேஜையின் (Altar) மேலோ வைக்கப்படுவது வழக்கம். ஓவியத்தில் சிலுவை அரை காட்சியும் மேஜையில் மூன்று பாதாள தேவதைகள் கர்த்தாவின் மரணத்தை வருந்துவதுபோலவும் சித்தரிக்கப்படும். ஓவியத்தில் நடப்பவை பூமியெனவும் அடிவாரத்தில் மேஜையில் சித்தரிக்கப்படுபவை பாதாளம் என்பதும் ஐதீகம். பேகன் இம்முறை சிலுவை அரைக் காட்சியை கைவிட்டு பாதாள தேவதைகளின் சித்தரிப்பில் தன் கவனத்தைத் திருப்பினார். பாதாள தேவதைகளின் இதிகாசம் கிறிஸ்துவத்தைவிடவும் பழமையானது. கிரேக்க தர்மத்தில் வேர்கள் கொண்ட இந்த மூன்று தேவதைகளுக்கு, நீதியற்ற முறையில் கொல்லப்பட்ட நபர்களைப் பழிவாங்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. பிற தர்மங்களின் அம்சங்களைத் தன்வசப்படுத்திக்கொள்வது தொண்டர்களைப் பெருக்க நல்ல யுக்தி. கிரேக்க தேவதைகளைக் கர்த்தரின் சிலுவை அரை படலத்தில் சித்தரிப்பது, கர்த்தரின் தண்டனை நீதியற்றது என்பதைக் குறிப்பிட உதவியாக இருந்தது.
மூன்று தனி ஓவியங்களைக் கொண்ட குழுவாக (triptych ) வரையப்பட்ட இந்த ஓவிய தொகுப்பு மரபிற்கு மாறாக இந்த தேவதைகளை ஒரு வித இனம் தெரியாத பறவை-மிருக இப்பிராணிகளாகச் சித்தரித்தது. இடது புற ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டிருந்த வடிவம் தோலுரிக்கப்பட்ட, கண்களே இல்லாத, மயிர் கொத்துடன், தோள் பட்டை எலும்புகள் தெரியும் வண்ணம் ஒரு மேஜையின் மேல் உட்கார்ந்திருந்தது. மத்திய ஓவியத்திலிருந்த வடிவத்தின் கண்கள் கட்டப்பட்டு வாய் பிளந்த கோலத்தில் நேயர்களைப் பார்த்துக் கொண்டிருந்தது, வலது புற ஓவியம் கூர்மையான கண்ணாடி அல்லது புல்லின் மேல் ஒற்றைக் காலில் நின்று வாயைப் பிளந்த வண்ணம் கர்ஜிக்கும் தோற்றத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது. ரத்தச் சிவப்பு பின்னணியில், மேல் சதை நிறத்தில் எலும்புகளுடன் காட்சியளித்த மூன்று சதை பிண்டங்களும் நேயர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின. மரபு ஓவியங்களில் பெண் பாத்திரங்களான இவை முற்றிலும் வடிவ மாற்றமாகிப் பழிவாங்கும் பேய்களைப் போலக் காட்சியளித்தன. குழப்பமும் , மிரட்சியும், அதிர்ச்சியும் கலந்த ஒரு உணர்ச்சியை இந்த ஓவியம் நேயர்களிடையே உண்டாக்கியது. பழிவாங்கும் உணர்ச்சிக்கு முதலிடம் கொடுத்தமையால் உடல் வடிவத்தை உணர்ச்சிக்கு ஏற்றபடி மாற்றி வரைந்திருந்தார் பேகன். பால்யகால புறக்கணிப்பு, ஓரினச்சேர்க்கை வெறுப்பு, பேகனின் ஆழ்மனதில் அடக்கிவைத்திருந்த ஆக்ரோஷம் போன்றவற்றிற்கு இந்த ஓவியம் ஒரு வடிகாலாக அமைந்தது.
தலைகள் 1948 – 1949:

நான்காண்டுகள் கழிந்து “ஹெட்ஸ்” (“Heads” தமிழில் “தலைகள்”) என்ற தலைப்பில் ஆறு ஓவியங்களை வரைந்தார் பேகன். முதல் முறையாக தன் பாத்திரங்களை ஒரு கண்ணாடி கூண்டினுள் வரையத்தொடங்கினார். கண்ணாடி கூண்டு அவர் சிறுவயதில் அனுபவித்த தனிமைக்கு உவமையாக இருக்கலாம் அல்லது பாத்திரங்களைத் தனிமைப்படுத்தி ஆராய ஒரு முயற்சியாகவும் இருக்கலாம். “ஹெட்ஸ்” வரிசையில் வெளிவந்த ஓவியங்கள் பேகனின் உளவியல் ரீதியான உருவப்படத் தேடலின் முதல் அத்தியாயம் என எடுத்துக்கொள்ளலாம். “ஹெட்ஸ்” வரிசை தொடர்ச்சியான சிந்தனையின் ஆறு தருணங்கள் எனக் கருதலாம். முதல் இரண்டு ஓவியங்களில் ஒரு தலை முழுமையடையாமல் கழுத்திற்கு மேல் பற்கள் மற்றும் ஒரு காது வரை உருவாகிறது. மூன்றாவது ஓவியத்தில் தலை ஓரளவுக்கு முழுமை அடைந்து ஒரு முகம் தெரிகிறது. நான்காவது ஓவியத்தில் அந்த தலை அலறுகிறது. ஐந்தாவது மற்றும் ஆறாவது ஓவியங்களில் அந்த தலை மீண்டும் சிதைந்து போகிறது. “ஹெட்ஸ்” வரிசையைப் புரிந்துகொள்ள எளிய விளக்கங்கள் இல்லை. பேகன் ஒரு காட்சி சிந்தனை வாதி. ஒரு பாத்திரத்தை மனித ரூபத்தில் அல்லது மிருக ரூபத்தில் சித்தரிக்க வேண்டுமா என்ற கேள்வியை எதிர்கொண்ட போது நினைவில் வந்த காட்சிகளின் சித்தரிப்புகள் இந்த ஆறு ஓவியங்கள் எனக் கருதலாம். சிதைந்த முகங்கள் ஒரு வித அடையாள அழிப்பின் முயற்சியாக இருக்கலாம் அல்லது மனித குணங்கள் முற்றிலும் நீங்கி மிருக குணங்கள் மட்டும் மீதமிருப்பதைச் சித்தரிக்கலாம். தலை 4 என்ற படம் அவர் அடுத்து வரைந்த போப்பாண்டவரின் உருவப்படத்திற்கு முன்னோடியாக அமைந்தது.
அலறும் போப்பாண்டவர் வரிசை – 1956 :

1944 யில் வெளிவந்து பிரபலமான “தி த்ரீ .. “ ஓவியத்திற்கு பின், “ஹெட்ஸ்” வரிசையின் தொடர்ச்சியாக 1956 யில் வெளியான “ஸ்டடீஸ் அபிடேர் வேளாஸ்க்ஸ் போர்ட்ரைட் ஆப் போப் இன்னோசென்ட் “ (“Studies after Velazquez ‘s portrait of pope innocent x” தமிழில் “வேலஸ்க்குவின் போப் இன்னோசென்ட் உருவப்படத்தின் நினைவுகள் “) எனும் சித்திர வரிசை பேகனின் புகழை மேலும் வளர்த்தது. வேளாஸ்க்ஸ் (Velazquez) ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த ஓவியர். அவர் காலத்தில் கிறிஸ்துவ தேவச்சபை அவரை மிகவும் ஊக்குவித்தது. தத்ரூபமாக வரைவதில் வல்லவர் என்பதால் பேகன் அவரை மிகவும் ரசித்தார். வேளாஸ்க்ஸ் வாழ்ந்த காலத்தில் பத்தாம் போப் இன்னொசென்ட் கிறிஸ்துவ திருச்சபையின் தலைவராக இருந்தார். வேளாஸ்க்ஸ் 1650 யில் வரைந்த போப்பாண்டவரின் உருவப்படம் ஒன்றின் அடிப்படையில் தன் ஓவியத்தைப் படைத்தார் பேகன். ஒரு சித்திரத்தைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சிகள் மனிதருக்கு மனிதர் மாறுபடும். வேளாஸ்க்ஸ் ஓவியத்தைப் பார்த்த பேகன், போபேபாண்டவர் ஒரு கண்ணாடி கூண்டிற்குள் உட்கார்ந்து அலறுவதை போல வரைந்திருந்தார். மேலும் போப்பாண்டவரின் உருவம் அலறியவண்ணம் கரைந்து போவதை போலத் தோற்றமளித்தது. வேளாஸ்க்ஸ் வரைந்த அசலில் இருந்த போப்பின் முகத்தை மாற்றி, “போட்டோம்ப்கின் போர்க்கப்பல்” திரைப்படத்தில் அலறும் பெண் நர்ஸின் முகத்தை வரைந்திருந்தார். போப்பாண்டவர் வரிசையில் சுமார் முப்பது ஓவியங்கள் வரைந்தார் பேகன். போபேபாண்டவர் வரிசைக்குப் பல விளக்கங்கள் கூறப்பட்டாலும், இகிருஸ்துவம் ஓரினச்சேர்க்கையை எதிர்க்கும் கட்சி எனக் கருதலாம். வெவ்வேறு கோணங்களில் பல வருமாற்றங்களுடன் வரையப்பட்ட இந்த வரிசை பேகனின் மிக முக்கியமான படைப்புகளாகக் கருதப்படுகிறது.
உருவப்படங்கள், சுயவுருவப்படங்கள் :
ஓவியங்களில் மிகக் கடினமான பிரிவு சுயவுருவப்படங்கள். உருவப்படங்கள் வரைவதில் வல்லவராக இருப்பவர்களில் பலர் சுயவுருவப்படங்கள் வரையும்போது குழப்பத்திற்கு ஆளாவது இயற்கை. சுயவுருவப்படங்களில் பல்வேறு யுக்திகளை ஓவியர்கள் கையாளலாம். தன்னை ஒரு ராஜனாகக் காண்பிக்லாம் அல்லது உவமைகளால் தங்களது ஆளுமைகளின் முக்கிய பகுதிகளை வெளிப்படுத்தலாம்.

பேகன் 1969 தில் தொடங்கி தன் சுயவுருவப்படங்களை வரைய ஆரம்பித்தார். முதல் முயற்சியில் அவருடைய முகம் இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, முழுமையடையாத முகத்தோடு, பாதிக்கப்பட்ட ஆன்மாவாகத் தன்னையே காட்ட முயன்றார். கன்னத்து எலும்புகளுக்குள் புதைக்கப்பட்ட கண்கள் கனிவுடனும், ஏக்கத்துடனும், சாந்தத்துடனும் நேயர்களைப் பார்க்கின்றன. கர்த்தரின் முள்முடி சூடிய முகத்தை நினைவூட்டும் வண்ணம் வரையப்பட்டிருக்கும் ஓவியத்தில் இக்யூபிஸ்ட் தாக்கங்கள் காணப்படுகிறது. கோரமான, முழுமையடையாத வாய் பகுதி அவருடைய புறக்கணிப்பிற்கும், ஓரினச்சேர்க்கையினால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புகளுக்கும் உவமையாக இருக்கலாம். வெள்ளை நிறத்தின் உபயோகம், உள்சதையை நினைவூட்டுகிறது. பேகன் முக சிதைவுகளைப் பற்றிய பல புகைப்படங்களையும் மருத்துவ புத்தகங்களையும் சேகரித்தார். உடல் சிதைவுகள் அழகியலுக்கும், நிறைவுக்கும், தத்ரூபத்திற்கும் எதிர்பதமான விஷயம். ஓரினச்சேர்க்கையினால் அவர் அனுபவித்த புறக்கணிப்பு, உடல் சிதைவுகள் உடையவர்களும் எதிர்கொள்வதால், உடல்சிதைவுகள் உடையவர்களும் தானும் ஒரே இனமாகத் தோன்றியிருக்கலாம் அல்லது சமுதாயம் விதிக்கும் அழகியல் நிபந்தனைகளுக்கு எதிர்ப்பாகவும் இருக்கலாம்.
நெருங்கிய நண்பர்கள், காதலர்கள், சகா ஓவியர்களின் உருவப்படங்களை பேகன் பல்வேறு காலங்களில் வரைந்திருக்கிறார். பேகனின் தனித்துவ அம்சங்களான கண்ணாடி கூண்டு, சிதைவு போன்ற அம்சங்கள் உருவப்படங்களிலும் வெளிவருகிறது.

நெருங்கிய நண்பரும் , சக ஓவியருமான லூசியன் ஃராய்டுயின் (Lucian Freud – உளவியல் தந்தை Sigmund Freud யின் மகன்) உருவப்படத்தை 1969 ஆம் ஆண்டு பேகன் வரைந்தார். தூரப்பார்வையிடத்திலிருந்து, முக்கோண கூண்டிற்குள், சிதைந்த முகத்துடன் லூசியன் ப்ரீயட் காணப்படுகிறார். ஒரு புகைப்படத்தை ஆதாரமாகக் கொண்டு வரையப்பட்ட ஓவியம் ஃராய்டுயின் முகத்தை அஷ்டகோணலாக வளைத்து, எரிமலை குழம்பைப் போல வழிந்தோடும் உணரிச்சிகளாய் வரைந்திருக்கிறார்.
பேகனின் உருவப்படங்களை அவருடைய பாலியல் சார்பு மற்றும் வன்முறை உணர்ச்சியின் அடிப்படையில் பார்ப்பது அவசியம். தோற்றங்கள் முழுமையின்மை தன்னுடைய பலியால் முழுமையின்மையை குறிக்கலாம். குறிப்பாக ஆண்களைப் போலவே பெண்களையும் சிதைந்த வடிவத்துடன் வரைவதன்மூலம் ஆழ்மனதின் சிந்தனையில் நபர்களையும் கூட வன்முறைக்கு உள்ளாகும் உணர்ச்சி வெளியாகிறது. வெளித்தோற்றத்தில் பேகனின் உருவப்படங்கள் மாறுதல்களின்றி காணப்பட்டாலும் படைப்பிற்கு படைப்புத் தன்மை வேறுபடுகிறது.

உதாரணத்திற்கு தன் நெருங்கிய காதலரான ஜார்ஜ் டையாரின் தற்கொலைக்குப் பிறகு, டையாரின் நினைவாக வரையப்பட்ட டையாரின் முக்குழு உருவப்படம் (In memory of George Dyer, 1971), பேகன் வரைந்த உருவப்படங்களில் மிகச் சோகமானதாகவும் ஒருவித ஏக்கத்தைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்திருக்கிறது.
பிற்காலம், கலையுலக தாக்கம், தனிவாழ்க்கை :
பிரிட்டனின் பிரதமர் மார்கரெட் தச்சர் “திகிலூட்டும் படங்களை வரையும் அந்த நபர்” என வர்ணிக்கப்பட்ட பேகன், சமகால ஓவியர்களான ஃரங்க் ஔவர்பாக் (Frank Auerbach), பிரான்சிஸ் நியூட்டன் சூசா (Francis Newton Souza), டேமியன் ஹிர்ஸ்ட் (Damien Hirst) போன்றவர்களுக்கு முன்னோடியாக விளங்கினார். பேகனின் படைப்புகள் எந்த இயக்கத்திலும் சார்ந்தவை அல்ல. உளவியல் வெளிப்பாட்டையம் (Psychological expressionism ) என்ற ஒரு பிரிவு இருந்தால் அது அவருடையப் படைப்புகளுக்கு பொருத்தமான பிரிவாக இருக்கலாம். அவருக்குப் பின் அவருடை தீவிரத்திலும் பாணியிலும் வரைந்தவர்கள் மிகக் குறைவானவர்கள். கோவாவில் பிறந்து உலக பிரசித்திபெற்ற ஓவியரான ஃரான்சிஸ் நியூட்டன் சூசாவின் ரசாயன திருத்தப்படங்களில் பேகனின் தாக்கங்கள் தெரிகின்றன. பேகனின் ஓவியங்களைப் புரிந்துகொள்ள அவரது வாழ்க்கையின் முக்கிய கட்டங்களின் தாக்கங்களை மதிப்பிடுவது அவசியம். பெரும் புகழும் சம்பாதித்த போதிலும் வாழ்க்கையை கத்திமுனையில் வாழ நினைத்தார் பேகன். ஆடம்பர வாழ்க்கையை அதிகம் நாடாத பேகன், தன் நண்பர்களுக்குப் பேருதவிகளை கைமாறின்றி செய்தார். அவருடைய மிக நெருங்கிய காதலர் ஜார்ஜ் டையர் (Geroge Dyer) தற்கொலைக்குப் பிறகு மனமுடைந்து போன பேகன் அதிகம் வரைவதை நிறுத்திக்கொண்டாரெனக் கூறப்படுகிறது.
முடிவுரை:
அன்பையும் , ஒப்புதலையும் தேடும் ஒரு ஆன்மாவிற்கு கிடைத்த நிராசைகள், தோல்விகள், எதிர்ப்புகள், புறக்கணிப்புகளின் உருவம் அவருடைய படைப்புகள் எனக் கூறலாம். தன் வாழ்நாளில் சுமார் ஐநூற்றி ஐம்பது படைப்புக்களை படைத்த பேகன் வரைந்ததைவிட அழித்த ஓவியங்கள் அதிகம்.ஏலத்தில் பல கோடிக்கணக்கில் விற்பனையாகும் அவரது படைப்புகள் நிரந்தர கண்காட்சியிலும், தனியார் கைகளிலும் இருக்கின்றன.
Photograph copyrights belong to the respective websites.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
