சூஃபி ஷாஹ் இனாயத் ஷஹீத்

சிந்து சமவெளியின் சோஷலிச சூஃபியின் தியாகம்

(பாகிஸ்தானிய சமூகவியலாளரும், முற்போக்கு எழுத்தாளருமான ரஸா நயீம் Thewire.in இணையத்தில் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு வடிவம்)

தமிழாக்கம் : ஜிஃப்ரி ஹாசன்

இந்தியத் துணைக்கண்டத்தில் முகலாயப் பேரரசு சகிப்புணர்வு, சமூகநீதி, சிவில் சுதந்திரம், தீவிர ஜனநாயகம் போன்ற சமூகப் பெறுமானங்கள் இல்லாது சிதைந்துகொண்டிருந்த ஒரு முக்கியமான காலகட்டத்தில் ஷாஹ் இனாயத் ஷஹீத் அவற்றின் குறியீடாகத் திகழ்ந்தார். 

சிந்துப் பகுதியின் பெரும்பாலான சூஃபிகள் சமூக நீதியை பிரச்சாரம் செய்வதிலிருந்தும், அதனைப் பின்பற்றுவதிலிருந்தும் விலகி முழுக்க முழுக்க உலகியல்சார்ந்த நிலச்சுவாந்தர்களாக மாறினர். ஆனால், ஷாஹ் இனாயத் மாற்றத்தையன்றி பொறுமையையும், மனத்திருப்தியையும் மட்டுமே பிரச்சாரம் செய்துகொண்டிருந்த பாரம்பரிய சூஃபிகளில் ஒருவராகவோ, அல்லது செல்வத்தின் சமமான பங்கீடு என்பதை அடிப்படையாக கொண்டிருந்த Musawat-i-Muhammadi அல்லது ‘முகம்மதிய சமத்துவம்’ என்கிற அமைப்பின் அறிஞர்களுள் ஒருவராகவோ இருக்கவில்லை. 

‘Jeko Khere So Khaye’ (உழவு செய்பவனுக்கே உண்ணும் உரிமை உண்டு) என்பதே அவரது முழக்கமாக இருந்தது. சமத்துவம் என்கிற சிந்தனையையே அவரது இந்த அடிப்படை முழக்கம் வலியுறுத்துகிறது. விவசாயம் கூட்டுக் கொள்கையின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும். அனைவரும் உற்பத்திச் செயன்முறையில் சமமாகப் பங்கெடுப்பதோடு, அவர்களின் தேவை அடிப்படையில் உற்பத்தியை அவர்களுக்கிடையே பங்கிடவும் வேண்டும் என்பதே அவரது உறுதியான நம்பிக்கையாக இருந்தது. 

இவ்வாறு கார்ல் மார்க்ஸ் பிறப்பதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னும், பரிஸ் கம்யூனின் (பாரிஸ் சமுதாயக் கூட்டுக்குழு) வருகைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பும், சிந்து ஹரி தெஹ்ரீக்கின் வருகைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பும், ஷாஹ் இனாயத்தும், அவரது இயக்கமும் தீவிர ஜனநாயகக் கொள்கைகளையும் மற்றும் சமூக நீதியையும் நடைமுறைப்படுத்துவதன் குறியீடாகத் திகழ்ந்ததோடு, ஜொக்கில் ஒரு கூட்டு விவசாயச் சமுதாயத்தினை வெற்றிகரமாக உருவாக்கவும் காரணமாகினர். பின்னர் அது சிந்துவின் தாழ்நில மாவட்டங்களுக்கும் பரவலடையத் தொடங்கியது. இந்நிலைமை, சிந்துவில் ஆளும் கல்ஹோரா (Kalhora) ஆட்சியாளர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியது. நிலப்பிரபுத்துவ காலத்தில் கூட்டு வேளாண்மையை வழக்கமாக ஷாஹ் இனாயத் மாற்ற முயற்சித்த போதிலும், அது அதற்கான உரிய காலத்தை விடவும் மிகவும் முந்திய முயற்சியாக அமைந்திருந்தது. இதனால் அந்தப் பரிசோதனை முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஷாஹ் இனாயத்தின் தியாகத்துக்கு 305 ஆண்டுகள் கடந்துவிட்ட இக்காலப்பகுதியில், சமூக நீதிக்காவும், தீவிர ஜனநாயகத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்த இந்த மண்ணின் மைந்தன் ஷாஹ் இனாயத்தின் மரபுகளை இன்றைய 21 ம் நூற்றாண்டின் இந்திய-பாகிஸ்தானிய புதிய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்வதற்கும், புத்துயிரூட்டுவதற்குமான முயற்சியாக இந்தக் கட்டுரை அமைகிறது. 

சிந்து சமவெளி நமது கடந்த காலத்தின் பாதுகாவலனாக இருக்கும் அதேவேளை நமது எதிர்காலத்திற்கான முக்கியத்துவத்தையும் அது கொண்டுள்ளது. இந்தப் பகுதி துணைக் கண்டத்தின் பழமையான நாகரிகத்தின் பிறப்பிடமாகவும், அதேநேரம், அது புதையுண்ட இடமாகவும் விளங்குகிறது. இது கடந்த மூன்றாயிரம் முதல் நான்காயிரம் ஆண்டுகால வரலாற்றில் பிரமாண்ட எழுச்சியையும், வீழ்ச்சியையும் கண்டது. மேலும், எண்ணற்ற சமூகங்கள் மற்றும் மதங்களுக்கான அரங்காகவும் விளங்கியது. சக்தி வழிபாட்டைக் கொண்ட திராவிடர், வேத நம்பிக்கையைப் பின்பற்றிய ஆரியர்கள், ஜொராஸ்டர் முனிவரைப் பின்தொடர்ந்த ஈரானியர்கள், ஸியஸ் மற்றும் அப்பலோவை வணங்கிய கிரேக்கர்கள், பௌத்தர்கள், குஷான்கள் மற்றும் இஸ்லாத்தைப் பின்பற்றிய அரபு, ஈரானிய, துருக்கியர் மற்றும் ஆப்கானியர் அனைவரும் தங்கள் அடையாளத்தை ஒன்றன் பின் ஒன்றாக இங்கு விட்டுச் சென்றுள்ளனர். உண்மையில், இந்த நாகரிகங்களின் அழகிய கலவையாக சிந்தி நாகரிகம் விவரிக்கப்படுகிறது.

கடந்த காலத்தின் சேற்றில் மூழ்கி சமூகம் முன்னோக்கி நகரும் திறனை இழந்து பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டிருந்த நிலையில், கூட்டுப் பொருளாதார முறையின் முக்கியத்துவத்தை நிறுவுவதன் மூலம் முன்னோக்கிச் செல்லும் பாதையைக் காட்டிய ஒரு உண்மையான மக்கள் தலைவர் தோன்றும் ஒரு காலமும் வந்தது. 

இந்த கரடுமுரடான நிலத்தில் (scarred land) “இன்னும் உருவாக்கப்படாத தோட்டம்” பற்றி அவர் கனவு கண்டார். ஆனால் அவரது இந்த முதிரா பொற்கனவு நிறைவேறுவதற்கு பதிலாக  தியாகத்தையே அடைந்தது. இந்த நல்ல நோக்கமுள்ள சூஃபியின் பெயர் ஷாஹ் இனாயத்துல்லாஹ். தட்டா நகரிலிருந்து 35 மைல் தொலைவில் அமைந்துள்ள ஜொக் (Jhok) நகரில், அவரது கல்லறை இன்றும் ஒரு யாத்திரைத் தலமாக உள்ளது. மக்கள் பக்தி மலர்களை தூவுவதற்காக மிகத் தொலைவிலிருந்தும் அவரது கல்லறைக்கு வருகை தருகிறார்கள். ஆயினும், அவரது தியாகத்தின் பின்னுள்ள காரணங்களையும் இயக்கவியலையும் மிகச் சிலரே அறிந்துவைத்திருக்கிறார்கள். 

ஷாஹ் இனாயத்தின் பிறந்த ஆண்டு சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவர் 17 ஆம் நூற்றாண்டில் பேரரசர் அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் தட்டாவில் கடவுள் பக்திமிக்க குடும்பத்தில் பிறந்தார் என்று உறுதியாகக் கூறலாம். இவரது தாத்தா மக்தூம் சாதோ லங்காஹ், தட்டா மாவட்டத்தின் பாதோராவின் நஸ்ரியா பர்கானாவில் உள்ள மொசா கிராமத்தில் வசித்தவர். அவர் மற்ற சூஃபிகளைப் போல், ஈரான் அல்லது துரானில் இருந்து இங்கு குடியேறவில்லை. அவர் இந்த மண்ணிலிருந்தே தோன்றி இருந்தார். ஷாஹ் இனாயத்தின் தந்தை மக்தூம் ஃபஸலுல்லாஹ் ஒரு “தன்னடக்கமுள்ள சூஃபி“ ஆவார். ஷாஹ் இனாயத்தின் ஆரம்பக் கல்வி குறித்து மிர் அலி ஷெர் கானே மௌனம் சாதிக்கிறார். ஆனாலும்,

 “அவர் உண்மையை கண்டறிந்த ஒரு புனித ஞானி. அவருடைய அடித்தளம் ஷரியாவாகும். ஆசிரியர்களின் ஆசிரியர், காலத்தின் அவ்லியா (அற்புதங்கள் நிறைந்த புனிதர்). கடவுளின் சபையில் பிரபலமானவர். அவர் ஆரம்பத்தில் சத்தியத்தைத் தேடி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டார். நீண்ட காலத்திற்குப் பிறகு ஷாஹ் அப்துல் மாலிக்கை டெக்கனில் சந்தித்தார்“ என்று எழுதுகிறார்.

அவருடனான உறவிலிருந்து பயனடைந்த பிறகு, ஷாஹ் இனாயத் டெல்லிக்கு திரும்பி, ஷாஹ் குலாம் முஹம்மது என்ற ஞானியிடமிருந்து வெளிப்படுத்தப்பட்ட அறிவைப் பெற்றார். ஆனால் ஆசிரியர், மாணவரின் ஆளுமையால் மிகவும் கவரப்பட்டதனால் ஷாஹ் இனாயத்துடன் சேர்ந்து அவரும் தட்டாவுக்கு வந்தார். ஷாஹ் குலாம் முஹம்மது ஷரியத்தை (மதச் சட்டம்) விட தரிக்காத் (சூஃபிகளின் பாதை) வழியையே அதிகம் விரும்பினார் ‘ஆகவே, தட்டாவின் உலமாக்கள் (இஸ்லாமிய மத அறிஞர்கள்) அவரை ஷரியாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அபராதம் செலுத்த வைத்தனர். ஏனெனில் கடவுளின் மக்கள் எப்போதும் உலமாக்களால் துன்புறுத்தப்படுபவர்களாகவே இருந்தார்கள்.’ 

ஷாஹ் இனாயத், ஷாஹ் குலாம் முஹம்மதுவை டெல்லிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தியதனால் அவர் மீண்டும் டெல்லிக்குத் திரும்பினார். ஷாஹ் இனாயத் ஜொக் நகரில் குடியேறினார். ஷாஹ் இனாயத்துக்கு வயது வந்தபோது, முகலாயப் பேரரசின் சூரியன் வேகமாக அஸ்த்தமித்தது. அவுரங்கசீப் 1707 இல் டெக்கானிலுள்ள அவுரங்காபாத்தில் பெரும் ஏமாற்றத்துடன் காலமானார். அவருக்குப் பிறகு, அரச சிம்மாசனத்திற்கான உள்நாட்டுப் போர் தொடங்கி, நாட்டில் குழப்பம் பரவியதை வரலாற்று மாணவர்கள் அறிவர். 1713 ஆம் ஆண்டில், ஃபர்ரூக்சியர் (Farrukshiyar), தனது தந்தை வழி மாமாவின் கொலையை அடுத்து அரியணையில் ஏறினார். இந்த ஆறு வருட குறுகிய காலத்தில், அரியணைக்கு உரிமை கோரிய ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் மட்டுமே இயற்கை மரணம் எய்தினார். இந்த கொந்தளிப்பான காலம்தான் சூஃபி ஷாஹ் இனாயத்தின் காலமாகும். ஃபர்ரூக்சியரின் ஆட்சிக் காலத்திலும் அவர் தியாகியாக இருந்தார்.

சூஃபி ஷாஹ் இனாயத்தின் இயக்கம்

பெரும்பாலான மெய்ஞானிகள், சூஃபிகள் மற்றும் சிந்துவின் சிந்தனையாளர்கள் தாங்கள் பயிற்சியினால் பெற்றிருந்த கட்டுப்பாடுகளையும், கடமைகளையும் மறந்து முற்றிலும் உலகாயத நிலச்சுவாந்தர்களாக மாறிவிட்டிருந்த காலத்தில் சூஃபி ஷாஹ் இனாயத் ஜொக் நகரில் கற்பிக்கவும், பிரச்சாரம் செய்யவும் தொடங்கினார். அவரது அறிவு, ஞானம், பக்தி, பச்சாதாபம் மற்றும் மனிதகுலத்திற்கான தன்னலமற்ற சேவையின் வெளிச்சத்தில் அவரைப் பின்பற்றுபவர்கள் அவரைச் சுற்றி வரத் தொடங்கினர். சூழ்நிலைகளை மாற்றுவதைவிட்டு விட்டு பொறுமையையும், மனநிறைவையும் அறிவுறுத்துவதோடு, உலக வாழ்க்கை மட்டுப்படுத்தப்பட்ட காலம் என்று கூறி மறுமைக்காக மக்களை குவிக்க கற்பிக்கும் பாரம்பரிய சூஃபிகளுள் ஒருவராக சூஃபி ஷாஹ் இனாயத் இருக்கவில்லை. 

உண்மையான சமத்துவத்தின் அடித்தளமாக அமைந்திருப்பது சமமான சொத்துப் பங்கீடு மட்டுமே எனக்கூறுகிற மத அறிஞர்களில் ஒருவராகவும் அவர் இருக்கவில்லை. செல்வத்தை உற்பத்தி செய்வதற்கான வளங்கள் – நிலம், தொழிற்சாலைகள் போன்றவை ஒரு சில நபர்களின் தனிப்பட்ட சொத்தாக இருந்தால், செல்வத்தின் சமமான விநியோகம் எவ்வாறு சாத்தியமாகும்?

விநியோகத்தை விடவும் உற்பத்திச் செயன்முறையே உண்மையான பிரச்சினை அதாவது, உற்பத்திச் செயன்முறையின் போது சமத்துவம் நிறுவப்படுவதே உண்மையான சமத்துவம் என்ற பொருளாதார விதியின் இரகசியத்தை சூஃபி ஷாஹ் இனாயத் கண்டறிந்தார். அவ்வாறில்லாவிட்டால், திருடர்களும், கொள்ளையர்களும் பரஸ்பர பகிர்வு மூலம் நுகர்வார்கள். உண்மை என்னவென்றால், உற்பத்திச் செயல்பாட்டில் சமமான பங்கேற்பு இல்லாமல் செல்வத்தின் நியாயமான விநியோகம் என்பது சாத்தியமே இல்லை என்பதுதான். எனவேதான், சூஃபி ஷாஹ் இனாயத் உற்பத்திச் செயல்பாட்டில் சமமான பங்களிப்பை வலியுறுத்தினார்.

கூட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் விவசாயம் செய்தல், ஒவ்வொருவரும் உற்பத்திச் செயல்பாட்டில் சமமாகப் பங்கேற்றல், உற்பத்திகளை அவர்களின் தேவைக்கேற்ப விநியோகித்தல் என்பதே முகம்மதிய சமத்துவத்தின் அடிப்படைக் கோரிக்கையாகும் என்பதே அவரது உறுதியான நம்பிக்கையாக இருந்தது. சூஃபி ஷாஹ் இனாயத்தின் ஃபக்கீர் (தேவைக்கேற்ற வருமானமற்றவர்கள்) பக்தர்கள் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு கூட்டு விவசாயத்தில் மும்முரமாக ஈடுபட்டனர்.

கூட்டு வேளாண்மை என்பது சூஃபி ஷாஹ் இனாயத்தின் மனித கண்டுபிடிப்பு அல்ல. அவருக்கு முன்பே, பழங்குடிகள் மத்தியிலும் கூட்டு வேளாண்மை எனும் மரபு இருந்தது. சூஃபிக்களின் காலத்திலும் சில கோஹிஸ்தானி சமூகங்களில் குறிப்பாக பலூச் (Baloch) சமூகத்தில் இந்த முறை இருந்திருக்கக்கூடும். அதன் பயனை அவர் உணர்ந்திருக்கலாம். சையத் முஹம்மது ஜஊன்புரியின் மஹ்தவி இயக்கத்தின் (1443-1505) செல்வாக்குக்கும் அவர் உட்பட்டிருக்கலாம் எனவும் ஊகிக்க முடியும். ஏனெனில் சையத் முகம்மது ஜஊன்புரி சம்மா ஆட்சியாளரான ஜாம் நந்தாவின் ஆட்சிக்காலத்தில் ஒன்றரை வருடங்கள் தட்டாவில் வாழ்ந்திருந்தார். அப்போது மியான் ஆடம் ஷாஹ் கல்ஹோரா உள்ளிட்ட பலர் அவரது ஆதரவாளர்களாக மாறினர். வாக்களிக்கப்பட்ட மஹ்தி என்று தன்னைக் கூறிய சையத் முஹம்மது மிகவும் கற்ற ஞானியாக இருந்தார். அவர் தனது மஹ்தவி சகோதரத்துவத்தை ஒரு daiyra (வட்டம்) என்று பெயரிட்டார். அது முழுமையான சமத்துவம் மற்றும் நித்தியத்தின் அடையாளமாக இருந்தது. அவரது வட்டத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் மற்றும் பணக்காரர் ஏழைகள் என எந்த வேறுபாடும் இருக்கவில்லை. பக்தர்கள் வட்டத்தில் கூட்டாக வாழ்ந்து, அடிப்படைத் தேவைகளை சமமாகப் பிரிப்பார்கள்.

சூஃபி ஷாஹ் இனாயத்தின் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்திருந்தது. ஜொக் நகரில் வசிக்கும் ஃபக்கீர்கள் தங்கள் உற்பத்திப் பங்கினைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. கட்டாய உழைப்பில் ஈடுபடவோ அல்லது “கொடுங்கோன்மை ஆட்சியின் பங்குடைமை” (partnership in tyranny) யின் ஒரு பகுதியாக மாவட்ட அதிகாரிக்கு சடங்குரீதியாக பணம் செலுத்த வேண்டிய தேவையோ அவர்களுக்கு இல்லை. இதனால், சூஃபி ஷாஹ் இனாயத்தின் புகழும் அவரது சோதனை பற்றிய செய்திகளும் எல்லா இடங்களிலும் வேகமாகப் பரவியது. இதனையடுத்து, தங்கள் நில உரிமையாளர்களின் பக்தர்களாக இருந்து வந்த சாதாத் புல்ரியின் ஃபக்கீர்களும் ஷாஹ் இனாயத்தின் பக்தி வட்டத்திற்குள் நுழையத் தொடங்கினர். இது தோஃபா-துல்-கிராம் (Tohfa-tul-Kiraam) இல் இப்படி விபரிக்கப்படுகிறது:

 ‘சூஃபி ஷாஹ் இனாயத்தின் இந்த சீரான வளர்ச்சியைக் கண்டு, ஆரம்பத்தில் சாதாத் புல்ரி குடும்பத்துடன் இணைந்திருந்த தர்வீஷ்களும் சாதாத்தைக் கைவிட்டு இந்த புதிய ஒழுங்கின் உறுப்பினராகினர்.’

ஆகவே, ‘சிந்து பரம்பரையான பீர்களின் (pir) கண்களில் ஃபக்கீர்களின் கட்சி முள் போல தைக்கத் தொடங்கியது.’

சூஃபி ஷாஹ் இனாயத்தினுடைய இயக்கத்தின் புகழ் சாதாத் குடும்பத்தின் பக்தர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வழிவகுத்த அதேவேளை, பாபு பலேஜா மற்றும் அதைச் சூழவிருந்த பகுதிகளின் விவசாயக் குடியான்களையும் (Peasnts) கூட பாதித்தது. “சூஃபி இனாயத்தின் ஃபக்கீர்களும் தங்கள் நிலங்களில் குறும்புத்தனமாகச் செயல்பட்டனர். அதாவது அவர்கள் கூட்டு விவசாயத்தை பிரச்சாரமும் செய்தார்கள்.” இதன் விளைவாக, ஏனைய நில உரிமையாளர்களின் விவசாயிகள் சூஃபி ஷாஹ் இனாயத்தின் முறையை தங்கள் நிலங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரத் தொடங்கினர். ஆனால் நில உரிமையாளர்கள் உற்பத்தியில் சமமான பங்களிப்பு என்ற கொள்கையை ஏற்கத் தயாராக இருக்கவில்லை.

இந்த புரட்சிகர குறும்புச் செயல்பாடு உடனடியாக தீர்க்கப்படாவிட்டால், சிந்துவில் நிலப்பிரபுத்துவ மற்றும் நிலமானிய அமைப்பு ஆபத்தில் விழும் என்று அவர்கள் உணர்ந்தார்கள். எனவே ஆபத்தைத் தடுக்கும் பொருட்டு, நில உரிமையாளர்கள் – அவர்களுள் புல்ரியின் ஷாஹ் அப்துல் கரீமின் வாரிசான சையத் அப்துல் வாசே; ஷேக் ஸக்கரியா பஹாவுதீனின் வாரிசான ஷேக் சிராஜுதீன்; பலேஜானியின் நில உரிமையாளர்களான நூர் முஹம்மது பின் மன்பா பலிஜோ மற்றும் ஹமல் பின் லாகா ஜாத் ஆகியோர் முன்னணியில் இருந்தனர். சூஃபி ஷாஹ் இனாயத்தை கூட்டு விவசாயத்திலிருந்து தடுக்குமாறு தட்டாவின் துணைத் தலைவரான (subedar) மிர் லுத் அலி கானிடம் அவர்கள் வினயமாக வேண்டிக்கொண்டனர். ஆனால் சூஃபியின் நிலம் அரசால் கருணை வழங்கப்பட்ட நிலமாகும் – இது ஒரு சிறப்பு வகை நிலமாகும். இது பள்ளிகளுக்கும் மதரஸாக்களுக்கும் அவர்களின் செலவினங்களுக்காக அல்லது உலமா, அறிஞர்கள் மற்றும் சதாத் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது. சுபேதருக்கு அதன் மீது எந்த அதிகாரம் இல்லை. எனவே அரசாங்கத்தின் தரப்பில் இருந்து தலையிடுவது அவருக்கு பொருத்தமானதாகத் தோன்றவில்லை. அதற்கு பதிலாக நில உரிமையாளர்கள் சூஃபியுடனும், அவரது ஃபக்கீர்களுடனும் பேசி அவர்கள் விரும்பியபடி சமாளிக்க அனுமதி வழங்கினார்.

சுபேதரின் குறிப்பில், நில உரிமையாளர்கள் திடீரென ஜொக் நகரத்தைத் தாக்கினர், ஆனால் அவமானகரமாக தோற்கடிக்கப்பட்டனர் – இருப்பினும் பல ஃபக்கீர்கள் கொல்லப்பட்டனர். அத்தோடு மக்கள் பெரும் நிதி இழப்பையும் சந்தித்தனர். நில உரிமையாளர்களின் இந்த சட்டவிரோதத் தாக்குதலுக்கு எதிராக தியாகிகளின் வாரிசுகள் அரச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். நீதிமன்றம் இவ்வாறு கூறியது: “குற்றவாளிகள் மன்னரின் முன்னிலையில் அப்பாவிகளின் இரத்தத்துக்கு ஒரு கணக்கைக் கொடுக்க வேண்டும். அவர்கள் அரச ஆணையை மீறியதால், அரச அரசியலமைப்புச் சட்டத்தின்படி இரத்தப் பணத்திற்குப் பதிலாக, அவர்களின் நிலங்கள் கொல்லப்பட்டவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டன“

ஃபக்கீர்களின் இந்த சட்ட வெற்றியின் மூலம் அனைத்து தரப்பிலும் விவசாயிகளின் புகழ் உயர்ந்தது. உத்தியோகபூர்வ அதிகாரிகள் மற்றும் நில உரிமையாளர்களின் கொடூரமான நடவடிக்கையும் முன்னரைப் போல் இருக்கவில்லை. உண்மையில்:

“நில உரிமையாளர்களின் அடக்குமுறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், இந்த கடவுளின் மனிதனின் (சூஃபி ஷா இனாயத்) பாதுகாப்பு அடைக்கலத்தில் இந்த மாவட்டங்களிலிருந்த பெரும்பாலான ஏழைகள் நிம்மதியாக வாழத் தொடங்கினர்.”

சூஃபி ஷாஹ் இனாயத்தின் விவசாயிகள் இயக்கம் பல தாழ்நில சிந்து மாவட்டங்களுக்கு பரவியிருந்ததையும், சூஃபியின் ஆதரவு காரணமாக, நில உரிமையாளர்கள் தொடத் துணியாதளவுக்கு மக்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக மாறியிருந்தனர் என்ற உண்மைகளையே இது நமக்குச் சொல்கிறது. இதற்கிடையில், “அக்காலத்தில் அடக்குமுறையால் துயரமடைந்த ஃபக்கீர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. அதேநேரம் ஹமா உஸ்ட்டின் எல்லாம் கடவுள் கொள்கைக்கான அழைப்புகளும் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் மற்றும் மாட, மடாலயத்திலிருந்தும் உயரத் தொடங்கின.”

தட்டாவின் துணைத் தலைவராக இருந்த மிர் லுத் அலி கான் ஒருவேளை ஃபக்கீர்களை மென்மையாக நடத்துகிறாரோ என நிதனத்து ஃபரூக்ஸியர் அவருக்கு பதிலாக 1716 இல் நவாப் அசாம் கானை தட்டாவின் துணைத் தலைவராக நியமித்தார். இந்த மாற்றத்தை நில உரிமையாளர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அசாம் கானிடம் கோள் சொல்ல ஆரம்பித்தனர். ஒருவேளை நவாபிக்கு சூஃபி ஷாஹ் இனாயத்துடன் தனிப்பட்ட கசப்பும் இருந்திருக்கலாம். ஒருமுறை அசாம் கான் சூஃபி ஷாஹ் இனாயத்தை சந்திக்கச் சென்றபோது, ​​ அவர் புனித குர்ஆனின் சில சிறப்பு வசனங்களை ஓதுவதில் மூழ்கி இருப்பதாகக் கூறி ஃபக்கீர்கள் அசாம் கானைத் தடுத்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்ட போது, ​​சூஃபி அசாம் கான், “வீட்டு வாசலில் காவலர்கள் இருப்பது ஒரு சந்நியாசிக்கு பொருத்தமானதல்ல” என்று கூறினார். “உலகாயத நாய் ஒன்று நுழைந்துவிடாதிருப்பதற்கு இது பொருத்தமானதே” என்று சூஃபி இனாயத் தயக்கமின்றி பதிலளித்தார். இந்த விஷயம் அசாம் கானின் தனிப்பட்ட கோபத்திற்கு காரணமாக அமைந்தது.

இந்த பாரம்பரியம் சரியாகவோ அல்லது தவறாகவோ இருக்கலாம். ஆனால் நவாப் அசாம் கான் இந்த கூட்டு விவசாயத்திற்கான இயக்கத்தை நசுக்க முடிவு செய்து தீப்பிழம்புகளைத் தூண்டத் தொடங்கினார். “இறையாண்மையால் தடைசெய்யப்பட்ட” (forbidden by the sovereign) சூஃபி ஷா இனாயத்திடமிருந்து நிலுவைத் தொகையை அவர் கோரினார். அதனை மறுத்த சூஃபி, இந்த நிலம் மன்னரிடமிருந்து கருணையாக கிடைத்திருக்கும் போது இதற்கு நிலுவைத் தொகை கேட்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்றார். இந்த பதிலைக் கேட்டு நவாப் கிளர்ந்தெழுந்தார். 

நவாப் இது குறித்து தனது உதவி அதிகாரிகள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடிய பின்னர், சூஃபி ஷாஹ் இனாயத்தும் அவரது ஃபக்கீர்களும் சிம்மாசனத்திற்கு உரிமை கோருபவர்கள் என்றும், அல்லாஹ்வின் தூதரின் கட்டளைகளை பின்பற்ற மறுத்துவிட்டதாகவும் மன்னர் ஃபாரூக்சியருக்கு ஒரு புகார் எழுதினார். ஃபாரூக்ஸியர், இந்த தற்செயலான விஷயத்தைப் பற்றி எதுவித விசாரணையும் மேற்கொள்ளாது கிளர்ச்சியாளர்களை வாள்முனையால் கீழ்ப்படியும்படி கட்டாயப்படுத்த உத்தரவிட்டார்.

ஜொக் (Jhok) முற்றுகை

மத்திய அரசிடமிருந்து அனுமதி பெற்ற உடனேயே, நவாப் அஸாம் கான் ஜொக் மீது திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தத் தயாரானார். கிட்டத்தட்ட சிந்துவின் அனைத்து பிரபுக்களுக்கும் தங்களது படை வீரர்களைக் கொண்டு தனக்கு உதவுமாறு அவர் உத்தரவுகளை அனுப்பினார்.

“மியான் யர் முஹம்மது கல்ஹோரோவிடமிருந்தும், அனைத்து நில உரிமையாளர்களிடமிருந்தும் மற்றும் ஃபக்கீர்களுடன் பழைய பகைமை கொண்டிருந்த அந்த பிராந்தியத்தின் அனைத்து மக்களிடமிருந்தும் அஸாம் கான் உதவிகளைப் பெற்றிருந்தார். எனவே அவர் சிபி, தாதர் மற்றும் கடல் வரை பரந்திருந்த பகுதி ஆகியவற்றிலிருந்து எறும்புகள் மற்றும் வெட்டுக்கிளிகளை விடவும் பெரியளவிலான எண்ணிக் கணக்கிடமுடியாத படையை திரட்டி ஃபக்கீர்களைத் தாக்கினார்“. 

சூஃபி ஷாஹ் இனாயத் அமைதியை விரும்பும் ஒரு ஞானி. நில உரிமையாளர்களின் எதிர்ப்பு மற்றும் அஸாம் கானின் இராணுவ ஏற்பாடுகள் பற்றி அவர் கேள்விப்பட்ட போது, ​​மிகவும் கவலையடைந்தார், “நான் இந்த வர்த்தகத்தை அன்பின் சந்தையில் இதற்காகக் கொண்டு வரவில்லை. இதுபோன்ற சலசலப்புகளையோ, மோதல்களையோ உருவாக்கவும் நான் விரும்பவில்லை.” என ஷாஹ் இனாயத் கவலையுடன் குறிப்பிட்டார். 

எதிரிகளின் படைகள் ஜொக்கை நோக்கி நகர்ந்தபோது, அரசபடையினருக்கு தங்கள் படையணியினரை ஒழுங்குபடுத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்காது அவர்கள் வழியிலேயே அவர்களை தாக்கி ஜொக்கை முற்றுகையிலிருந்து விடுவிப்போம் என்றொரு திட்டத்தை ​​ஃபக்கீர்கள் முன்வைத்தனர்.

 ஆனால் ‘இறைபக்தி கொண்டவரான’ ஷாஹ் முதல் தாக்குதல் நடத்துவதை அனுமதிக்கவில்லை. 

ஜொக் என்பது ஓர் இராணுவக் குடியிருப்பல்ல. மாறாக, ஃபக்கீர்களின் அமைதியான குடியேற்றமாக இருந்தது, மர கைப்பிடிகள் கொண்ட உறுதியற்ற வாள்களையும் (Paper Swords- என ஆசிரியர் வர்ணிக்கிறார். மொ.பெ) ஒரு சிறிய மரப் பீரங்கியையும் தவிர அவர்களிடம் வேறு எந்த ஆயுதங்களும் இருக்கவில்லை. ஆனால், எதிரியோ “யானைகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் இரும்பு பீரங்கிகள்” கொண்ட ஆயுதங்கள் தரித்திருந்தான். ஆனால் போர்க்களத்திலிருந்து எழுதப்பட்ட மியான் யர் முஹம்மது (புக்கூர் குதாயர் கான் கல்ஹோராவின் ஆட்சியாளர்) மற்றும் மீரான் சிங் காத்ரி முல்தானி ஆகியோரின் கடிதங்களிலிருந்து, பண்டைய பாரம்பரியத்தின் படி, பசுமை பூமியான ஜொக்கில் வலுவான அரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் ஓர் ஆழமான குழியும் தோண்டப்பட்டு அது தண்ணீரால் நிரப்பப்பட்டிருந்தது.

முற்றுகையின்போது மியான் யர் முஹம்மது தனது மகன் மியான் நூர் முஹம்மதுவுக்கு ஃபார்சியில் எழுதிய கடிதம், 1717 அக்டோபர் 12 அன்று அல்லது அதற்கு சில நாட்களுக்கு முன்னர், அரச படைகள் உதல் ஆற்றில் இருந்து புறப்பட்டு ஜொக்கை சென்றடைந்து, குடியேற்றத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் தரித்திருந்ததாக தெரிவிக்கிறது. ஆயினும் இக்கடிதத்தில் படையெடுப்பாளர்களினதும் மற்றும் ஃபக்கீர்களினதும் எண்ணிக்கை சரியாகத் தெரியப்படுத்தப்படவில்லை. 

மீரான் சிங் காத்ரி முல்தானியின் கடிதத்திலிருந்து “நவாப் அஸாம் கானின் அணி சிறியதாக இருந்தது” என்று அறிய முடிகிறது. உண்மையிலேயே, குதா யர் கானின் மிகப்பெரிய இராணுவத்திற்கும் ஃபக்கீர்களுக்கும் இடையில்தான் சண்டை இடம்பெற்றது. மேலும் அவர் எழுதும் போது, இந்தக் “குறும்புக் கோட்டை” யின் ஒரு பக்கத்தை குதா யர் கானின் படைகள் முற்றுகையிட்டு “மின்னல் போன்று தீ வீசும், இடி போன்று குழப்பமான சத்தத்தை ஏற்படுத்தும் பயங்கர துப்பாக்கிகள் மூலம் எதிரிகளைத் தண்டிக்கத் தொடங்கின”. மறுபுறம் நவாப் அஸாம் கான் ஓர் அரணை அமைத்து அம்பு மாரி பொழிந்தார். என எழுதுகிறார். 

மீரான் சிங் தனது பயனாளி மியான் குதா யர் கானின் இராணுவ மேன்மையையும், அரச இராணுவத்தின் தாழ்வு மனப்பான்மையையும் மிகுந்த விவேகத்துடன் தெளிவுபடுத்தியுள்ளார். ஃபக்கீர்களின் அணி 10,000 குதிரை வீரர்களைக் (Riders) கொண்டிருந்தது என்று அவர் விவரிக்கிறார் – இது தவறானது. குதிரைகளைப் பற்றி என்ன சொல்வது, அவர்களிடம் நிறைய ஆண்கள் கூட இல்லை. மியான் யர் முஹம்மது தனது கடிதத்தில் ஃபக்கீர்களின் இரவுத் தாக்குதலை விவரிக்கும் போது, அவர்கள் 1,700 பேர் இருந்தனர், “உண்மையில் அனைத்து குறும்புக்காரர்களின் (ஃபக்கீர்கள்) ஆவியும் அங்கு இருந்தது.” என எழுதுகிறார். இதிலிருந்து மொத்த ஃபக்கீர்களின் எண்ணிக்கை 2,000-2,500 ஐ விட அதிகமாக இல்லை என்றும் அவர்களிடம் துப்பாக்கிகள் இருக்கவில்லை என்றும் ஒருவர் ஊகிக்க முடியும்.

இரவுத் தாக்குதல்

இரவுத் தாக்குதல் சம்பவம் அக்டோபர் 12, 1717 அன்று அரச இராணுவம் ஜொக்கை முற்றுகையிட்ட அதே நாளில் இடம்பெற்றது. மியான் யர் முஹம்மது அது பற்றி இவ்வாறு எழுதுகிறார்:

“அது ஞாயிற்றுக்கிழமை இரவு. எங்கள் இராணுவம் முற்றுகையிட்டது. இருள் சூழ்வதற்கு இன்னும் மூன்று மணித்தியாலங்கள் எஞ்சி இருந்தன. 1,700 குறும்புக்காரர்கள் (ஃபக்கீர்களையே அவ்வாறு குறிப்பிடுகிறார்- மொ.பெ.)எப்படியாவது இரவுவேளைத் தாக்குதல் நோக்கத்துடன் கால்நடையாக பல இடங்களில் இராணுவத்தை நோக்கி முன்னேறி பயமோ தயக்கமோ இல்லாமல் தாக்கத் தொடங்கினர். எனவே பல இராணுவத்தினர் போர்க்களத்தில் வீழ்ந்தனர். எனினும் எங்கள் துணிச்சலான வீரர்கள் பின்வாங்கினாலும், பின்னர் தங்களை நிரூபிக்கும் வகையில் தாக்குதல் நடாத்தினர். இதில், ஒரு சில குறும்புக்காரர்களால் மட்டுமே உயிருடன் தப்பிக்க முடிந்தது.”

“இந்த இரவு தாக்குதலில், கோஹ்ராமின் மகன் காசிம், தட்டாவின் வழக்கறிஞர் சையத் போலா மற்றும் அகமது பொப்கானி, ஒடிஜா சமூகத்தினரான எங்கள் சகோதரர்களும் மற்றும் ஏனைய நில உரிமையாளர்களும் கொல்லப்பட்டனர்.”

இந்த தாக்குதல் நடந்தபோது, ​​மியான் யர் முஹம்மதுவின் கூடாரத்திற்கு அருகே காவலுக்காக நியமிக்கப்பட்ட வீரர்கள் ‘அங்கும் இங்கும் சென்றார்கள்’ (ஒருவேளை வேண்டுமென்றே). ஆனால் மியான் யர் முஹம்மதுவின் இரண்டு மகன்களான மியான் தாவூத் மற்றும் மியான் குலாம் உசேன் , மற்றும் அவரது சகோதரர் மிர் முஹம்மது இப்னு மியான் நசீர் முஹம்மது ஆகியோரும் இந்தப் போரில் கலந்து கொண்டனர். அடுத்தடுத்து நிகழ்ந்த போரில், மியான் குலாம் உசேன் காயமடைந்தார்.

முற்றுகையிட்டு இரண்டு மாதங்கள் கடந்துவிட்டிருந்தன. அரச படையினர் பீரங்கி மற்றும் துப்பாக்கிகள் ஏந்தியிருந்த போதிலும் அவர்களால் ஜொக்கை கைப்பற்ற முடியவில்லை. இதற்கிடையில், நவாப் அஸாம் கானின் உத்தரவின்படி சாஹிப்ஸாதா சையத் உசேன் கான் மற்றும் மேலும் பல நில உரிமையாளர்கள் மீள்வலுவூட்டல்களுடன் ஜொக்கை சென்றடைந்தனர். அதே நேரத்தில் ஒரு பெரும் வெள்ளம் ஏற்பட்டிருந்தது, “சூஃபி இனாயத்தின் ​​‘கோட்டையை’ சுற்றி பிரமாண்டமான வெள்ளம் காணப்பட்டது. நான்கு அல்லது ஐந்து மைல்களுக்கு நிலத்தின் எந்த தடயமும் காணப்படவில்லை.” ஆயினும், சாஹிப்ஸாதாவின் இராணுவம் எப்படியோ தண்ணீரைக் கடந்து, ஜொக்கின் கோபுரங்களுக்கு அருகே ஒரு கோட்டையை அமைத்தது. மியான் யர் முஹம்மது, தனது திறமையான மகனின் இந்த இணையற்ற சாதனையைப் பற்றிக் கவிதை பாடும்போது, ருஸ்டோமின் ​​(பண்டைய பாரசீக கதாநாயகன்) ஏழு தொழிலாளர்களில் தோன்றிய வெற்றிகரமான ஹீரோவைப் போல முத்துக்களை சிதற விடுகிறார்.

சூஃபி ஷாஹ் இனாயத்தின் தியாகம்

மியான் யர் முஹம்மது அதை எழுதுகிறார்

‘அரசனின் இராணுவம் வெற்றி பெற்றது
எதிரியின் இதயம் துக்கத்தால் எரிகிறது
அரசனின் இராணுவம் புன்னகைக்கிறது
எதிரி தன் தலையிலிருந்து தலைப்பாகையை
மொட்டுப் போல கழற்றி வீசினான்
ராஜாவின் இராணுவத்தின் இதயம்
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
எதிரி வனாந்தரத்தில் ஆந்தைகள் போல
படுத்துக் கொண்டிருக்கிறான்
ராஜாவின் இராணுவம் மகிழ்ச்சியாகவும்
வெற்றிகரமாகவும் இருக்கிறது
எதிரியும் அவர்களின் படையும்
மகிழ்ச்சியற்றதாகவும், தாக்கப்பட்டதாகவும் இருக்கிறது
ராஜாவின் இராணுவம் மிகவும் திருப்தியுடனிருக்கிறது
எதிரி ஒவ்வொரு நொடியும்
துயரத்தால் சூழப்பட்டிருக்கிறான்
ராஜாவின் படையின் முகம்
மகிழ்ச்சியில் மலர்ந்திருக்கிறது
எதிரி தாழ்வுணர்ச்சியுடனும், நிறைவேறாதவனாகவும் இருக்கிறான்.
ராஜாவின் இராணுவம் கம்பீரமானது மற்றும்
எதிரி தன் சொந்த வாழ்க்கையின் முடிவில் இருக்கிறான்
ராஜாவின் இராணுவம் இதயங்களிலிருந்த
பயங்கரத்தைத் தாக்குகிறது
எதிரியின் உதடுகள் இறந்தவர்களைப் போல
அமைதியாக இருக்கின்றன
ராஜாவின் இராணுவத்தின் சொத்தாக
வெற்றி இருக்கிறது
அது எதிரியின் மார்பைத் துளைக்கும்
அம்பு போல உயர்த்தப்படுகிறது.’

முடிவில், சாஹிப்ஸாதா விரைவில் கொலை செய்யப்படும் அல்லது கைது செய்யப்படும் நிலை வரும். “தொந்தரவு செய்யக்கூடிய தீங்கான மனம் படைத்தவர் அவர்” என்று அவர் எழுதுகிறார்.

இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் ஃபக்கீர்களின் எதிர்ப்பின் சக்தி குறையவோ அல்லது அரச இராணுவத்தால் அவர்களை அடக்கவோ முடியவில்லை. ஒரு நாள் காலையில், “உயரிடத்திலிருக்கும் கௌரவ” சாஹிப் கான் மற்றும் நவாப் ஆகியோர் யானைகளின் மீது சவாரி செய்து, ஜொக் நகரின் கோட்டைகளுக்கு அருகில் “துணிச்சல்மிக்க சிங்கங்களைப்” போல் வந்து உரையாற்றினர். “போர்க்குணமும், தைரியமுமிக்க தீரர்களே! முதலில் பருத்தியை சுத்தப்படுத்துபவர் போல பீரங்கியும், துப்பாக்கியும் கொண்டு இந்த அரண்களை நீங்கள் காற்றில் கலந்துவிடுங்கள், பின்னர் நாங்கள் ஃபக்கீர்களின் உயிர்களை இந்த நெருப்பு வாள்களால் அறுவடையை செய்துவிடுவோம்.” 

ஆனால் சூஃபி இனாயத்தின் சில உளவாளிகள் அங்கு இருந்ததனால் எதிரிகளின் திட்டம் அவருக்குத் தெரியவந்தது. எதிரியின் திட்டம் குறித்து அவர் ஃபக்கீர்களை எச்சரித்தார். அதனால் எதிரிகளின் அந்த திட்டம் வெற்றி பெறவில்லை.

முற்றுகை நான்கு மாதங்கள் தொடர்ந்தது. ஃபக்கீர்களிடம் பீரங்கிகளோ, துப்பாக்கிகளோ இருக்கவில்லை. எனவே அவர்களுக்கு இரவுத் தாக்குதலைத் தவிர வேறு வழியும் இல்லை. மிர் அலி ஷெர் கானின் கூற்றுப்படி, இந்த முறை மிகவும் பயனுடையதாக இருந்தது. 

 “தாக்குதல் நடத்தியவர்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டனர். இரவுத் தாக்குதலை மிகவும் அமைதியாக நடத்துமாறு சூஃபி இனாயத் ஃபக்கீர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால் ஒருநாள் இரவு சில ஃபக்கீர்கள் கவனக்குறைவாக இஸ்ம்-இ-ஸாத் (அல்லாஹ் பெரியவன்) என்று கோஷமிட்டனர். மற்றவர்களும் இதில் இணைந்தனர். இதனால் இராணுவத்தினுள்ளிருந்த நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்ற உண்மை வெளிப்பட்டு விட்டது. இதன்விளைவாக, பெருமளவிலான ஃபக்கீர்கள் வாளுக்கு இரையாகினர்”.

அரச இராணுவத்தில் ஒற்றர்கள் இருந்ததன் காரணமாகவும் மற்றும் மந்திரத்தின் மூலம் இராணுவத்தினுள்ளிருக்கும் ‘நண்பர்களும் எதிரிகளும் வெளிப்படுத்தப்பட்டுவிட்டனர்’ என்ற கதையாடல் காரணமாகவும் ஒரு சில ஃபக்கீர்கள் இரகசியமாக எதிரியின் இராணுவத்தில் சேர்ந்து விட்டார்கள் என்ற எண்ணத்தை ஒருவர் பெறும் அதேவேளை சாதாரண வீரர்களை தங்களின் அனுதாபிகளாகவும் ஆக்குகிறார். அரச படையினர் வாடகைக்கு வந்த படையினர் என்பதால், அவர்களுக்கு ஜொக் மீது தனிப்பட்ட எதிர்ப்போ அல்லது அதனுடன் தனிப்பட்ட அக்கறையோ இருக்கவில்லை. இதனால் நவாப் மற்றும் நில உரிமையாளர்களிடமிருந்து அவர்களின் விசுவாசத்தைத் திருப்புவது அவ்வளவு கடினமானதாக இருக்கவில்லை. இந்த ஊகம் முற்றுகையின் தோல்வியினாலும், அதற்கெடுத்துக் கொண்ட கால நீட்சியினாலும் மேலும் உறுதிப்படுகிறது.

இரவுத் தாக்குதலின் தோல்வி ஃபக்கீர்களை சேதப்படுத்தியது. ஆனாலும் அவர்களின் ஆத்மீக பலம் குறையவில்லை. அவர்கள் முன்பு போலவே எதிரியுடன் திடமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இறுதியில், ஃபக்கீர்களுடன் சண்டையிட்டு வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை அறிந்துகொண்ட ​​எதிரிகள் வஞ்சம், சூழ்ச்சி மற்றும் மோசடி போன்ற வழிமுறையைக் கைக்கொள்ள முடிவெடுத்தனர். 

ஜனவரி 1, 1718 அன்று, சூஃபி ஷாஹ் இனாயத்திடம் சமாதான முன்மொழிவு ஒன்று முன்வைக்கப்பட்டது. “மியான் குதா யர் கான் கல்ஹோராவின் மகன் முஹம்மது கான் மற்றும் இராணுவ கட்டளைத் தளபதிகள் ஷஹ்தாத் பலூச் உட்பட மேலும் பலர் அல்-குர்ஆனை முன் நிறுத்தி, ஃபக்கீர்களின் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்தனர்.” 

சூஃபி ஷாஹ் இனாயத்தின் சில தோழர்கள் இந்த சத்தியப்பிரமாணங்களும் நிபந்தனை வாசகங்களும் எதிரியின் தந்திரங்கள் என்றும் அவர்கள் நம்மை ஏமாற்றப் போகிறார்கள் என்றும் நாம் சண்டையைத் தொடர வேண்டும் என்றும் அவரிடம் கூறினர். ஆனால் பக்தியுள்ள சூஃபி அவர்கள் குர்ஆன் மீது சத்தியம் செய்திருப்பதால் அதை மறுப்பது எப்படி? எனவே அவர் சமாதான முன்மொழிவை ஏற்றுக்கொண்டார். 

ஜொக்கின் நுழைவாயில் திறக்கப்பட்டது. அரச இராணுவம் எந்த எதிர்ப்பும் அல்லது இரத்தக்களரியும் இல்லாமல் நகரத்தை கைப்பற்றியது. பின்னர், அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திடும் சாக்கில் நவாப் அஸாம் கானின் கூடாரத்துக்கு சூஃபி ஷாஹ் இனாயத் மிகுந்த மரியாதையுடன் அழைத்து வரப்பட்டார், ஆனால் அவர் அங்கு சென்ற உடனேயே கைது செய்யப்பட்டார். கைவிலங்கிடப்பட்டு சங்கிலிகளால் கட்டப்பட்டார்.

பின்னர், அரச பழிவாங்கலின் தீ ஜொக்கை அடைந்தது. ஃபக்கீர்கள் மீதான படுகொலை தொடங்கியது. அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன, சொத்துக்கள் சூறையாடப்பட்டன, நகரத்தின் அரண்கள் இடிக்கப்பட்டன. ஜொக் கூட்டு விவசாயம் இரத்தத்தில் மூழ்கியது. விதை விதைப்பவர்களோ, பயிர் அறுவடை செய்பவர்களோ யாரும் உயிர் பிழைக்கவில்லை. மியான் யர் முஹம்மது கல்ஹோராவின் துரோகம் குறித்து, ஷாஹ் இனாயத் பின்வரும் வசனத்தை கூறினார்: “அடக்குமுறையாளர் வாக்குறுதியளித்தார் (அவரது தாடியைத் தடவிக்கொண்டு), அது [தாடி] ஒரு நாயின் வால் போன்றது.”

நவாப் அஸாம் கான் ஜொக் அழிக்கப்பட்ட பின் தட்டா திரும்பினான். சூஃபி ஷாஹ் இனாயத் நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டார். சுபேதருக்கும் சூஃபிக்கும் இடையிலான கேள்வி- பதில்கள் ஒரு “நீண்ட கதை” என மிர் அலி ஷெர் கானி விவரிக்கிறார். சுருக்கமாகச் சொல்வதானால், நவாப் எழுப்பிய கேள்விகள் எதுவாக இருந்தாலும், குவாஜா ஹபீஸ் ஷீராசியின் மொழியில் சூஃபி ஷாஹ் இனாயத் அவற்றுக்கு பதிலளித்தார்.

நவாப் அஸாம் கான்: ‘சொல்லுங்கள், இந்தக் குழப்பத்தை ஏன் உருவாக்கினீர்கள்?’

சூஃபி ஷாஹ் இனாயத்:

‘கடவுள் ஆகாயத்தை சுற்றும்படி கட்டளையிட்ட அன்று
மேலும் ஏழு சிறிய நட்சத்திரக் கூட்டத்துடன்
புதன் கிரகத்தை அழகுபடுத்திய நாளன்று
கடவுளின் நீதிமன்றத்தில் என் விதி விதிக்கப்பட்டது
நான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும், இது என் தலைவிதியில் எழுதப்பட்டது.’

அஸாம் கானுக்கு அருகில் அமர்ந்திருந்த கவிஞர் ஷேக் முஹம்மது ரஸா கூறினார்:

‘நண்பரே, கனவு காணும் நிலையிலிருந்து எழுந்திருங்கள்

அசட்டையான பேச்சைத் தவிர்ந்து கொள்ளுங்கள், இது உங்கள் கணக்கீட்டு நேரம்.’

சூஃபி இனாயத்: ‘கீர்த்திமிக்க சந்துக்குள் நுழைய எனக்கு அனுமதி இல்லை

      உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால், கடவுளின் ஒழுங்கை மாற்றுங்கள்.’

நவாப்: ‘அப்படியென்றால், ஒரு பேரழிவுக்குத் தயாராகுங்கள்.’

சூஃபி இனாயத்: ‘விசுவாசத்தின் துன்பம் தங்கத்தின் சுடர் போன்றது.’

நவாப்: ‘நீங்கள் ஏன் உங்களை இழிவுபடுத்தி துரதிர்ஷ்டத்திற்கு பலியானீர்கள்?’

சூஃபி இனாயத்: ‘ஓர் இறை காதலன் நிந்தையின் சுமையை சுமக்கவில்லை என்றால், அவன் வேறு என்ன செய்ய முடியும்.

மரணத்தின் அம்புக்கு எந்தவொரு வீரனிடமும் கவசம் இல்லை.’

நவாப்: ‘இப்போது நீங்கள் கொல்லப்படப் போகிறீர்கள், இப்படி சுற்றி வளைத்துப் பேசுவதனால் உண்டாகும் பயன் என்ன?’

சூஃபி இனாயத்: ‘அன்பு கொண்ட இதயம் இருப்பவர் ஒருபோதும் இறக்கமாட்டார்.

 எனது நித்தியத்தின் முத்திரை பிரபஞ்சத்தின் பதிவேட்டில் ஒட்டப்பட்டுள்ளது’.

நவாப்: ‘அன்று ஆட்சியாளருக்கு ஏன் கீழ்ப்படிய மறுத்தீர்கள்?’

சூஃபி இனாயத்: ‘எங்கள் ஞானியின் முகம் சாராயத் தவறணையை நோக்கி திரும்பும் போது

சீடர்கள் எப்படி தம் முகங்களை கஃபாவை நோக்கித் திருப்ப முடியும்?’

நவாப்: ‘இப்போது உங்கள் ஆசைகளின் தோல்விக்கு ஏன் துக்கப்படுகிறீர்கள்?’

சூஃபி: ‘நான் அன்பின் வசந்த காலத்தில் கைவிடப்பட்டபோது

         இருப்புக்கான ஒவ்வொரு பொருளுக்கும் ஏழு முறை பணிவைச் செலுத்தினேன்.’

இந்த நபர் தனக்கு பயப்படவோ, அவரது செயல்களுக்கு மனம் வருந்தவோ மாட்டார் என்பதையும், அவரது வாழ்க்கையில் மன்னிப்புக் கோரவே மாட்டார் என்பதையும் அஸாம் கான் அறிந்து கொண்ட போது, அகந்தை கொண்ட சூஃபியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அங்கிருந்து விலகிச் செல்லும்போது, ​​ஷாஹ் இனாயத் இந்த வசனத்தை ஓதினார்:

‘ஓ கோப்பை சுமப்பவர்களே எழுந்திருங்கள்! எனக்காக ஒரு கோப்பையை நிரப்புங்கள். சோகமான நாட்களின் மீது படிந்துள்ள தூசியைக் கொண்டு வாருங்கள்.’

ஜனவரி 7, 1718 அன்று, (ஹிஜ்ரி 1130, ஸஃபர் 15) சுபேதர் அஸாம் கானின் உத்தரவுப்படி, சூஃபி ஷாஹ் இனாயத்தின் தலை துண்டிக்கப்பட்டது. தனது கடைசித் தருணங்களில், ஷாஹ் இனாயத் பின்வரும் வசனத்தை ஓதிக் கொண்டிருந்தார்:

 ‘நீங்கள் இருப்பின் கட்டுக்களிலிருந்து என்னை விடுவித்து விட்டீர்கள்

 அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உங்களை ஆசீர்வதிப்பானாக.’

சூஃபி ஷாஹ் இனாயத் இவ்வாறு தியாகியானார். எண்ணற்ற ஃபக்கீர்கள் வாளுக்கு இரையாக்கப்பட்டனர். ஜொக் நகரம் அழிக்கப்பட்டது. ஆனால் ஃபக்கீர்களின் பெயரைக் கேட்டால் நடுங்குமளவுக்கு ஆளும் உயர் குழாமினர் அச்சமும் வெறுமையும் கொண்டிருந்தனர்.

 ஆகவே, “ஃபக்கீர்களின் இஸ்ம்-இ-தக்பீரான அல்லாஹ் பெரியவன் (God is Great) என்ற வார்த்தையை யாராவது சத்தமாகச் சொன்னால், அவரது தலை துண்டிக்கப்படும் என்று அஸாம் கான் ஒரு பிரகடனம் செய்தான். இந்த உத்தரவை ஆராய்ந்து, மிர் அலி ஷெர் கானி எழுதுகிறார், “அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், என்னவொரு தெய்வீகம்! அந்தத் தலைகள் சுழன்று அதனது சொந்த பெயரை எடுத்துக் கொள்ளும், இதுதான் இறைநேசர்களின் பாதையாகும்”

நவாப் அஸாம் கானுக்கும் சூஃபி ஷாஹ் இனாயத்துக்குமிடையிலான உரையாடலின் கதை நம்பகமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டதா அல்லது சூஃபி இனாயத்தின் நகைச்சுவையான அபிமானியின் கற்பனையில் உருவாகியதா என்பதை நாம் உறுதியாகக் கூற முடியாது. இருப்பினும், சூஃபி ஷாஹ் இனாயத் அவரது வாழ்க்கைத் தத்துவத்தில் உறுதியாக இருந்தார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அவர் ஒரு கணம் கூட தடுமாறவில்லை.

துஃபாத்-உல்-கிராமின் விளக்கத்தின்படி, மியான் யர் முஹம்மது கல்ஹோரோவுக்கு ஷமாததி மற்றும் சச்கான் பிரதேசத்திலிருந்த லக்ரி, தண்டா, ஹஜாம், டோர்னக், ரஜாப், பசார், பசாட்டா, தோரே மற்றும் தயா சைன் டானா ஆகிய கிராமங்கள் பரிசாக வழங்கப்பட்டன. சிந்து சமவெளியில் கூட்டு வேளாண்மைக்கும், செல்வத்தின் சமமான பங்கீட்டுக்குமான முதல் சோதனை இவ்வாறுதான் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

நிலப்பிரபுத்துவ யுகத்தில், உற்பத்தி மற்றும் விநியோகம் என்பவற்றில் ஒரு சோஷலிச முறைமையை குறிக்கும் கூட்டு விவசாயத்தை சூஃபி ஷாஹ் இனாயத் கொண்டு வர முயன்றார். அவரது இந்த நடவடிக்கை காரணமாக அவர் போற்றவும், பாராட்டப்படவும் மிகவும் தகுதியானவர். மேலும் அவரது தோழர்களின் தியாகங்கள் எவ்வளவு மதிக்கத்தக்கவை- சமூக பரிணாம விதியின் மீது யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. ஒருவர் எவ்வளவு பெரிய புரட்சியாளராக இருக்கலாம், சமூக சேவையில் மிகவும் மூழ்கித் திளைத்தவராக இருக்கலாம். ஆனால் இந்த விதியை மீறி அவரால் முன்னுரிமை பெற முடியாது.

சூஃபி ஷாஹ் இனாயத்தின் ஆசை உன்னதமானது. ஆனால் விதிகள் வெறும் விருப்பங்களால் மாறுவதில்லை. அவரது கனவு அதிர்ஷ்டமானதுதான் ஆனாலும் அவர் அந்த கனவு நிறைவேறுவதற்கான தகுதியைப் பெறுவதற்கு  குறைந்தபட்சம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுவிட்டார். அவரது கனவு நிஜமாவதற்கான இயலுலகுசார்ந்த நிலைமைகளோ அல்லது குறிக்கோள் சார்ந்த நிலைமைகளோ பொருத்தமானவையாக அப்போது இருக்கவில்லை. நிலப்பிரபுத்துவத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் உற்பத்தி சக்திகள் அவ்வளவு தூரம் முன்னேறி இருக்கவில்லை. சோசலிசப் புரட்சியைக் கொண்டு வருவதே தொழிலாளர்களின் பணி என்ற அவர்களது வரலாற்றுப் பாத்திரம் குறித்து எந்த உணர்வும் தொழிலாளர் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. (இப்போதும் கூட இந்த உணர்வு இல்லை).

சிந்தில் 18 ஆம் நூற்றாண்டின் தொழிலாள வர்க்கம் தங்களுக்கான அதிகாரத்தை அடைந்துகொள்ள வேண்டுமானால் முதலில் நவாப்களிடமிருந்தும், நில உரிமையாளர்களிடமிருந்தும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை (ஜொக் மக்கள் தட்டாவை கைப்பற்றுவதைக் கூட சிந்திக்கவில்லை. அப்படியிருக்க சிந்து பற்றி என்ன சொல்ல வேண்டி இருக்கிறது). இந்த சூழ்நிலையில், சூஃபி ஷாஹ் இனாயத்தின் சோதனை தவிர்க்க முடியாமல் தோல்வியடைய வேண்டியிருந்தது. ஆகவே, அந்த தோல்வி உள்ளக பலவீனங்களைக் காட்டிலும், வெளிப்புற சக்திகளின் ஏமாற்றங்களால் நிகழ்ந்தது.

சூஃபி ஷாஹ் இனாயத்துக்கு தனது பரிசோதனையின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து எந்தக் கருத்தும் இல்லை. கூட்டு விவசாயத்திற்கான இயக்கம் நில உரிமையாளர்களுக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை அவரால் யூகிக்க முடியவில்லை. பார்க்குமிடத்து, இந்த இயக்கம் சிறிய குளத்தில் கூழாங்கற்கள் எழுப்பும் அலைகளைத் தவிர வேறொன்றுமில்லை, ஆயினும் இந்த அலைகளுக்குள் மறைந்திருக்கும் சக்தியைப் பற்றி சூஃபி அறியாதிருக்கலாம். ஆனால் அது திடீரென விசைகொண்டெழுந்து ஒட்டுமொத்த நிலப்பிரபுத்துவ முறையையும் துடைத்தழிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. 

ஃபக்கீர்களின் தன்னலமற்ற போராட்டத்தை சிந்து விவசாயிகளால் ஏன் தங்களது போராட்டமாக ஆக்கிக்கொள்ள முடியவில்லை

மக்களின் ஆயுதப் போராட்டத்தை வழிநடத்தும் திறனையும் அவர் கொண்டிருக்கவில்லை. உதாரணமாக, ஜொக்கைச் சுற்றி வளைப்பதற்கு எதிரிக்கு வாய்ப்புக் கிடைக்காதபடி, முன்னோக்கிச் சென்று நவாபின் இராணுவத்தை இடைவழியிலேயே தாக்க வேண்டும் என்று ஃபக்கீர்கள் ஆலோசனை கூறிய போது, சூஃபி ஷாஹ் இனாயத் அதனை ஏற்க மறுத்து, வெறும் தற்காப்பு யுத்தத்தில்தான் ஈடுபட்டார். தற்காப்புப் போர் பொதுவாக தோல்வியின் முன்னுரையாக இருப்பதால் சண்டை வெடிப்பதற்கு முன்பே சண்டை முடிவு செய்யப்பட்டு விட்டது. 

தங்களை முற்றுகையிட விட்டுக்கொடுத்ததன் மூலம் அவர்கள் எதிரிக்கு ஒரு இலவசக் கையைக் கொடுத்து, சிந்து மக்களுடனான தொடர்பை முறித்துக் கொண்டனர். சிந்து விவசாயிகளால் ஃபக்கீர்களின் தன்னலமற்ற போராட்டத்தை தங்களது போராட்டமாக ஆக்கிக்கொள்ள முடியாமல் போனதற்கான காரணம் இதுதான். இதன் விளைவாக, ஜொக்கின் ஃபக்கீர்கள் மட்டுமே இந்தப் போரில் போராட வேண்டியிருந்தது. சிந்துவில் தங்களுக்கான எந்தவொரு ஆதரவாளரையோ அல்லது உதவியாளரையோ அவர்களால் உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் ஃபக்கீர்களின் இந்தப் போர் ஒரு சிறிய நிகழ்வு அல்லது ஓர் உள்ளூர் விபத்து என்பதை விட அதிக முக்கியத்துவமுடையதாக எண்ண முடியவில்லை.

ஷாஹ் இனாயத்தின் சோதனை தோல்வியடைந்த போதிலும் அது ஒரு வரலாற்றுச் சாதனையே

இது என்ன மாதிரியான சோதனையாக இருந்தாலும், நில உரிமையாளர்களும், நிலச் சுவாந்தர்களும் தலையிடாவிட்டால், போட்டி, பகை போன்ற பண்புகளை விட உறவு மற்றும் பரஸ்பர உதவி உணர்வுடன் சிறந்த முறையில் விவசாயம் செய்ய முடியும் என்பதை கூட்டு வேளாண்மையின் முதல் வெற்றிகரமான பரிசோதனையை மேற்கொள்வன் மூலம் அவர் நிரூபித்துக் காட்டியமை ஒரு வரலாற்றுச் சாதனையேயன்றி வேறென்ன? இப்போது வரை அரசின் ஒடுக்கும் அதிகாரம் சாமான்ய மக்களுக்கு எதிராகவும், மேல்தட்டு மக்களின் நலனை எப்போதும் ஆதரிப்பதாகவுமே இருந்து வந்துள்ளது என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது. முஹம்மது இப்னு காசிம், மஹ்மூத் கஸ்னவி மற்றும் அஹ்மத் ஷா அப்தாலி ஆகியோரின் படையெடுப்புகள் வரலாற்று பாடப்புத்தகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது இந்திய மற்றும் பாகிஸ்தானின் புதிய தலைமுறையினர் சூஃபி ஷாஹ் இனாயத் ஷஹீத்தின் பெயரைக் கூட அறிந்திருக்கவில்லை என்பது துயரமானது.

ஃபக்கீர்களின் இந்த தியாகப் பாரம்பரியம் ஷஹால் கான் கல்ஹோரா, நசீர் முஹம்மது கான் மற்றும் தீன் முஹம்மது கான் போன்றோரால் மேலும் விளக்கியுரைக்கப்பட்டது. ஆனால் ஃபக்கீர்களின் இயக்கத்தை வரலாற்றுப் பக்கங்களின் ஏதோ அசிங்கமான கறை போல தவிர்க்கும் நமது வரலாற்றாசிரியர்களின் முயற்சிகள் வருத்தமளிப்பதாக இருக்கின்றன. நிலப்பிரபுத்துவத்தின் எல்லைக்குள் இந்த சோசலிச இயக்கம் வெற்றிபெறுவது சாத்தியமில்லாதது என்பது உண்மைதான். ஆனால் கல்ஹோரா ஃபக்கீர்களின் நேர்மையையும், நல்ல நோக்கங்களையும் யார் மறுக்க முடியும்?

மேலும், அவர்களின் தியாகங்களின் காரணமாக, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு சிந்துவில் ஒரு சுதந்திர அரசு உருவானது என்பது ஒரு வரலாற்று சாதனைக்கு எந்தவகையில் குறைவானது? ஆனால் துரதிஸ்டம், இந்த சுதந்திரம் குறுகிய காலமே இருந்தது. முதலில் நாதிர் ஷா கொள்ளையடிக்க வந்தார். பின்னர் அஹ்மத் ஷா அப்தாலி வடக்கு சிந்துவைக் கீழ்ப்படுத்தினார். காபூலில் இருந்து விடுவிக்கப்பட்டபோது, ​​கிழக்கிந்திய கம்பெனியும் வந்தடைந்தது.

சாஜித் சர்ஷாரி, ஷாஹ் இனாயத்துக்கு எழுதிய ‘ஜொக் மனிதர்கள்’ (Jhok Men) எனும் தனது இரங்கல் கவிதையில் கூறுகிறார்:

“சிந்து முழுவதையும் நறுமணமாக்கிய மணம், (சாஜித்)

அந்த பூஞ்செண்டின் புதிய மலர் ஜொக்கில் உள்ளது” 


குறிப்பு: இந்த கட்டுரையின் மேற்கோள்களில் பெரும்பாலானவை மக்காலாத்-உஸ்-ஷுரா (1760) மற்றும் துஃபாத்-உல்-கிராம் (1766) ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை. ஷாஹ் இனாயத்தின் நிலைமைகளை பெரிதும் விவரிக்கும் இரண்டு புத்தகங்கள் இவை. இந்த புத்தகங்களை, 42 புத்தகங்களை எழுதிய சிந்தின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும், கவிஞரும், வாழ்க்கை வரலாற்று எழுத்தாளருமான மிர் அலி ஷெர் கானே எழுதியுள்ளார். ஷாஹ் இனாயத்தின் எதிராளிகளாக பதவியேற்ற கல்ஹோரா நீதிமன்றத்தின் செய்தி எழுத்தாளராக அவர் இருந்தபோதிலும், ஷாஹ் இனாயத்தை மிகுந்த மரியாதையுடனும், கௌரவத்துடனும் குறிப்பிடுகிறார். தவிர, இனாயத்தின் நிலைப்பாடுகளை மிகுந்த பாரபட்சமின்றி விவரிக்கிறார். பாக்கிஸ்தான் அகாடமி ஆஃப் லெட்டர்ஸ் தனது “பாக்கிஸ்தானிய இலக்கியச் சிற்பிகள்” தொடரில் வெளியிட்ட டாக்டர் மன்சூர் அலி வீஸ்ரியோ எழுதிய சூஃபி ஷாஹ் இனாயத் ஷஹீத்: ஆளுமை மற்றும் கலை (2012) என்கிற நூல் உருது மொழியில் மிக அவர் பற்றிய மிக முக்கிய பதிவாக காணப்படுகிறது.



Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.