நாகேந்திரன் (எ) நாகு எப்போதும் அநியாயத்துக்கு சென்டிமென்டலான ஆள்தான். மிக எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுவான். சொந்த ஊர், உறவினர்கள், பள்ளியில் பாடம் நடத்திய ஆசிரியர்கள், பள்ளியில் உடன் படித்த நண்பர்கள், ஒருதலையாகக் காதலித்த பெண்கள், அவர்களின் பெற்றோர்கள், குறிப்பாக அவர்களின் தங்கைகள் என்று எல்லோரையும் அவ்வப்போது நினைத்து நினைத்து உருகிப் போவான்.
அவன் ஒருதலையாகக் காதலித்த பெண்களும் அவர்களின் தங்கையரும் தோழியரும் வேறு வேறு உடைகளை அணிந்து, கனவுகளில் அடிக்கடி வந்து, அவனுடைய பிரிவுத் துயரை ஏகத்துக்கும் அதிகரிக்க வைத்துச் செல்வார்கள்.
அவனுக்கு எப்போதும் ஊரின் ஞாபகம். இவர்கள் அனைவரின் ஞாபகமும்தான்.
இப்படியாக இருக்கையில் நாகு ஏதோ ஒரு அதிருஷ்டத்தினாலோ அல்லது அவனுடைய சித்தப்பாவின் மூன்று மனைவியரில் தொட்டு சிக்கம்மா என்று அழைக்கப்படும் பெரிய சிக்கம்மாவின் ஆசியினாலோ என்னவோ, டெல்லிக்கு வேலை கிடைத்துப் போனான்.
ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் இருநூறு குமாஸ்தாக்களை புதுடெல்லி ரயில்வே ஸ்டேஷனில் இறக்கிவிட்டுப் போன ஜிடி எக்ஸ்பிரசில் ஏதோ ஒரு நாளில் இருநூறில் ஒன்றாக இவனையும் இறக்கி விட அவன் டெல்லியின் குமாஸ்தா வெள்ளத்தில் செம்புலப்பெயல் நீரென ஒன்றானான்.
இப்படி டெல்லி வந்த நாகு, வீட்டு நினைவும், ஊரின் நினைவும் நண்பர்களின் நினைவும், ஒருதலையாக விட்டு வந்த காதலிகளின் நினைவாகவும் வாடி வதங்கிப் பின் ஆறு மாதங்கள் கழித்து சொந்த ஊருக்குப் பயணப்பட்டான்.
பெல்பாட்டமும் பாபி காலரும் வழக்கு ஒழிந்து டைட் பாண்டும் சிறிய காலருமாக நாகரிகம் உருமாறிய நேரம் கரோல்பாக் மற்றும் சாந்தினி சவுக் சென்று மலிவு விலையில் சட்டை, பேண்ட் மற்றும் டீ-ஷர்ட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டான்.
ஊரில் வீட்டுக்காக வாங்கிய சில சில்லரை சாமான்கள்,மோடா, ரயில் நிற்கும் ஸ்டேஷன்களில் ஓடி ஓடித் தண்ணீர் பிடிக்க சுராய் என்ற கலைவடிவம் மிக்க மண்பாண்டம் ஆகியவற்றையும் ஏறத்தாழ ஒரு டெம்போ நிறைய பாசத்தையும் அன்பையும் சுமந்து சிறுவிடுப்பில் களிப்புடன் ஊருக்குப் போனான்.
வீட்டினரின் அன்பில் நனைந்து, நண்பர்களுடன் குட்டியாக சரக்கடித்து, வாசனை ஒழிய கொய்யாக்காய் இலையை சாப்பிட்டு, அது இன்னும் வாசனையை முன்னிலும் அதிகமாகப் பரப்ப, முன்னாள் ஒருதலைக் காதலிகளின் வீட்டுப்பக்கம் நடையாய் நடந்து சென்று, நண்பர்களுடன் சினிமா பார்த்து சமூகக் கடமை எல்லாம் முடித்து எங்கோ மூலையில் காத்திருந்த விதியின் வசத்தால் தனக்கு மூன்றாம் வகுப்பில் டீச்சராக இருந்த இந்திரா டீச்சரைப் பார்க்க அவருடைய வீட்டுக்குப் போனான் நாகு.
அந்த டீச்சரின் இடதுபுற வீட்டில் முன்னாள் ஒருதலைக் காதலி ஒருத்தி இன்னும் கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருப்பாள் என்ற மிகப்பெரும் நம்பிக்கையுடன் அவளையும் பார்த்த மாதிரி இருக்கும். ரொம்ப வயதான டீச்சரையும் பார்த்த மாதிரி இருக்கட்டுமே என்ற நல்லெண்ணத்தில் தான் அவன் டீச்சரின் வீட்டுக்குப் போனான்.
டீச்சரும் நம்ம ஊருக்கே உரிய கலாச்சார பாணியில் அவனுடைய சம்பளம் எவ்வளவு என்பதை முதலில் கேட்டார். தொடர்ந்து எங்கே சாப்பிடுகிறாய், அலுவலகத்தில் என்ன வேலை, அங்கே உனக்குத் தெரிந்து நம்ம ஊர்க்காரர்கள் யாராவது இருக்கிறார்களா, இந்தி கற்றுக் கொண்டாயா? இந்திரா காந்தியை அடிக்கடி பார்ப்பாயா? என்றும் கேட்டு உள்ளே போய் அழகாக நறுக்கி உப்புத்தடவிய பெங்களூரா மாங்காய் பத்தைகளையும் ஒரு கோப்பையில் நீர்மோரையும் கண்ணுக்குத் தெரியாத ஒரு ஆப்பையும் செதுக்கி எடுத்துக் கொண்டு வந்தார்.
“டேய் நாகு… உனக்குத் தெரியுமில்லையாடா டெல்லியில் என் தம்பி சங்கரன் ஜனாதிபதி மாளிகையில் வேலைக்கு இருக்கான். ரஜோரி கார்டனாமே… சொந்த வீடு கட்டிக் கொண்டு அங்கே இருக்கான். ஒரே பொண்ணு… அங்கேயே ஏதோ காலேஜ்லே படிச்சிக்கிட்டு இருக்கா…
பாக்கி எதுவும் நாகுவின் காதில் விழவில்லை டீச்சர் சொன்ன கடைசி வரியை அவனுடைய காதல் மனது கப்பென்று பிடித்துக் கொண்டது. ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சங்கரன் மாமாவைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தான். ரஜோரி கார்டனாக இருக்கட்டும். எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும். தூய காதலைத் தேடிக் கண்டுபிடித்து வளர்க்க தூரம் ஒரு பொருட்டா என்ன என்று அவனையே கேட்டுக் கொண்டான்.
கருணை மிக்க இறைவன் மிகவும் வேகமாக எல்லாவற்றுக்கும் உடனே ஒரு தீர்வைக் கொடுத்து விடுவான். நாகுவுக்கும் அந்த வாய்ப்பை இறைவன் இந்திரா டீச்சர் வடிவில் உடனே ஏற்படுத்திக் கொடுத்தான்.
நாகுக்குட்டி… நீ ஊருக்குப் போறதுக்கு முந்தி நாள் வீட்டுக்குவாடா… சங்கரனுக்குக் கொஞ்சம் காய்வெட்டா கொஞ்சம் கத்தேமார் மாங்காய் குடுத்து அனுப்பறேன். அவன் பொண்டாட்டி நல்லா ஊறுகாய் போடுவா. உனக்கும் கொஞ்சம் தர்றேன். அவனுடைய விலாசத்தையும் தர்றேன். டெல்லியில் இறங்கின உடனே அவன் வீட்டுக்குப் போய் மாங்காய் அவனுக்குக் குடுத்துடு. உனக்குக் கஷ்டமாக இருந்தால் வேண்டாம்… என்றார் டீச்சர்.
கத்தேமார் என்பது அந்த ஊரில் பிரசித்தமான மாங்காய். ஏறத்தாழ யானைத் தலையின் அளவில் இருக்கும். முழு மாங்காயை வீசி எறிந்தால் ஒரு கழுதையைக் கூடக் கொல்லும் அளவு பெரியது என்ற அர்த்தத்தில் அந்த மாங்காய்க்கு அந்த ஊரில் சூட்டப்பட்ட பெயர் அது. அவ்வளவு பெரியது அது. ஆனால் அதை சுமப்பது எப்படிக் கஷ்டமாக இருக்கும்? கல்லூரி செல்லும் சங்கரன் மாமாவின் பெண்ணைப் பார்க்க வேண்டாமா? யார் கண்டது? ஒருவேளை அவளுக்குத் தன்னைப் பிடித்து இருந்து தனக்கும் அவளைப் பிடித்து இருந்தால்? இறைவன் யாருக்கு யாரை எங்கே முடிச்சு போட்டு வைத்திருக்கிறான் என்று யாருக்குத் தெரியும்? ஏன் இந்த இந்திரா டீச்சர் வடிவில் அந்த முடிச்சு விழக்கூடாது? இப்படிப் பல கேள்விகள் அவனுடைய நெஞ்சில் எழுந்தன.
சொந்த ஊரில் தவற விட்ட காதலை டெல்லியில் பிடிக்கலாம் இல்லையா? என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான். எல்லாமே இப்படி ஒருதலையாகவா முடியும்? இந்த ஊரில் வளர்ந்த பெண்களுக்கு ரசனையோ காதல் போன்ற கூருணர்வோ இல்லை. டெல்லியில் வளர்ந்த அந்த நவநாகரிக யுவதிக்குத் தன்னைப் பார்த்துக் காதல் அரும்பாதா என்ன?
அவனுடைய காதல் கனவுகளை டீச்சரின் கரகரப்பான குரல் கலைத்தது.
“சரிடா நாகு… எனக்குக் கொஞ்சநேரம் கால்நீட்டிப் படுக்கணும். நீ கிளம்பு. ஞாபகமா ஊருக்குப் போறதுக்கு மிந்தின நாள் மறக்காம வந்துட்டுப்போ… வராமல் இருந்துடாதே. அப்புறம் அடுத்தமுறை வர்றப்போ தம்பி கிட்டே சொல்றேன். கொஞ்சம் மோடா வாங்கி வச்சிருப்பான். எடுத்துக்கிட்டு வந்துடு” என்றார்.
தன்னைச் சூழ்ந்துள்ள பேராபத்தை உணராத நாகு நண்பர்களுடன் மீண்டும் இணைந்ததிலும் பை பாஸ் ரோடு கல்வர்ட்டு மேல் உட்கார்ந்து பழைய கதைகளைப் பேசியதிலும் நாளுக்கு ஒரு கும்பலுடன் உட்கார்ந்து சரக்கு அடித்ததிலும் இந்திரா பாய் டீச்சர், சங்கரன் மாமா, அவருடைய கல்லூரிக்குப் போகும் பெண் என்று அனைவரையும் மறந்து விட்டான்.
ஆனால் விதி அவனை மறக்கவில்லை.
ஊருக்குக் கிளம்புவதற்கு முந்தினநாள் விடிகாலை காப்பி முடித்து விட்டு வழக்கப்படி சிகரெட் பிடிக்க தெருவில் இறங்க முற்பட்ட போது முன் வராந்தாவில் அவனுக்காகக் காத்திருந்த ஒரு கணிசமான அளவு மூட்டை கவனத்தை ஈர்த்தது.
அதில்தான் தனக்கான பேராபத்து ஒளிந்துள்ளது என்பதை அறியாமல் அப்பாவியாக அந்த மூட்டையை மூச்சைப் பிடித்து இழுத்து சுவற்றின் ஓரமாக வைக்கலாம் என்று முயற்சித்த போது அம்மா வந்தாள்.
“இந்திரா டீச்சர் குடுக்க சொன்னதாக யாரோ கொண்டு வந்து வச்சிட்டுப் போனான். அதிலேயே அட்ரஸ் எழுதி வச்சிருக்காம். வீட்டுக்கு இப்படி எதையும் செய்யாதே. ஊருக்கெல்லாம் வண்ணான் கழுதை மாதிரி பொதியை சொமந்துக்கிட்டு இரு”…
“எங்கே மாட்டிக் கொண்டோம்? என்ன இது கண்றாவி… என்று நாகு யோசித்து மருகினான்.
மூட்டையை லேசாகப் பிரித்துப் பார்த்த போது அவனுடைய கிலி மேலும் அதிகரித்தது.
நான்கைந்து பெங்களூரா மாங்காய்கள், காய்வெட்டில் செந்தூரா, இமாம் பசந்த், நீலம் உள்ளிட்ட மாங்கனிகளின் அனைத்து ஜாதி வகைகள், அவற்றில் அதிகமாக யானையின் மண்டையளவில் இருந்த கத்தேமார் மாங்காய்கள். ஐந்தாறு தேங்காய், பொட்டுக்கடலை, கொஞ்சம் கருவேப்பிலை, பழைய குமுதம், விகடன், கல்கி இதழ்கள்…. கலைமகள், கல்கி, விகடன் தீபாவளி மலர்கள், ஒரு தோசைக்கரண்டி, இரும்பு வாணலி, இரண்டு பெரிய எல்.ஜி.பெருங்காய டப்பா என்று பலதரப்பட்ட வஸ்துக்கள் மூட்டையில் ஆரோகணித்து இருந்தன.
இதை இங்கேயே விட்டுச் செல்லவும் முடியாது. அந்த சங்கரன் மாபாவி ஏதோ ஜனாதிபதி மாளிகையில் பெரிய பதவியில் இருப்பான் போலிருக்கிறது. டெல்லியில் பணக்கார பஞ்சாபிகள் வசிக்கும் ரஜோரி கார்டனில் சொந்த வீடு வைத்திருக்கிறான். எல்லாவற்றுக்கும் மேலாக கல்லூரிக்குச் செல்லும் கட்டழகு நங்கையின் தகப்பன். அதையும் கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் அணுகவேண்டும்.
நாகு பணிபுரியும் அலுவலகம் ஒருவகையில் ஜனாதிபதி மாளிகை நிர்வாகத்தின் மறைமுகக் கட்டுப்பாட்டில் வருகிறது. ஏறத்தாழ தங்களின் தலைமை அலுவலகம் போன்ற ஜனாதிபதி மாளிகையில் இவன் என்ன எளவாக இருக்கப்போகிறானோ யாருக்குத் தெரியும்?
உனக்காக நான் கொஞ்சம் சாமான்கள் கொடுத்து அனுப்பினேன். இந்த பாவி நாகு என்ற பையன் எடுத்துப் போகாமல் வேண்டுமென்றே ஊரில் வைத்து விட்டுப் போய்விட்டான். அவன் டெல்லியில்தான் சென்ட்ரல் செக்ரடேரியட்டில் எங்கோ வேலை பார்க்கிறான் என்று டீச்சர் போட்டுக் கொடுத்தாள் என்றால் தன்னால் டெல்லியில் நிம்மதியாக வேலை பார்க்க முடியாது.
என்ன செய்து தொலைப்பது? இப்படி எக்குதப்பாக மாட்டிக்கொண்டாகி விட்டது. இந்த கத்தேமார் பொதியை சுமந்துதான் தீரவேண்டும் என்று திடசங்கல்பம் செய்து கொண்டு திருவள்ளுவர் போக்குவத்துக் கழகப் பேருந்தில் சென்னைக்கு ஏறினான். அந்த மூட்டைக்கு பயணக் கட்டணத்தை விட மூன்று மடங்கு அபராதக் கட்டணம் அழுது கூலிக்கு ஆள் பிடித்து வண்டி மேல் ஏற்றி வழியில் எங்காவது விழுந்து விடுமோ என்ற பயத்தில் இரவெல்லாம் கண்விழித்து ஒரு வழியாக சென்னை வந்தடைந்தான்.
அதே போல சென்னை சென்ட்ரலில் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரசில் வண்டியேறி உட்கார்ந்தபோது சக பயணிகள் நட்பைத் துறந்த பார்வையுடன் சந்தேகாஸ்பதமாக அவனை வெறித்துக் கொண்டே இருந்தார்கள். எத்தனை வலிமையை வன்முறையை பிரயோகித்தும் திடசித்தத்துடன் அந்த மூட்டை இருக்கைக்கு உள்ளே போகாமல் மானத்தை வாங்கி வெளியில் துருத்தி நின்றது.
எதிர் இருக்கையில் தங்களுக்குள் வேண்டுமென்றே இந்தி பேசிக் கொண்டு வந்த இரண்டு மாமாக்களும் ஒரு மாமியும் சௌஜன்யமாக அந்த மூட்டையின் மீது கால்வைத்துக் கொண்டு கண்ணயர்ந்த போது இவனால் ஆட்சேபிக்க முடியவில்லை. விதியை நொந்து கொண்டு மேல் பர்த்தில் ஏறித் தூங்கப் போனான்.
வழியில் டிக்கெட் பரிசோதகர் இந்த மூட்டைக்கு விதித்த அபராதத்தைக் குறைக்க அவருக்குத் தனியாக லஞ்சம் பேசி அபராதம் குறைத்து அதற்கான ரசீதைப் பெற்று விக்கிரமாதித்தனின் வேதாளம் போல மீண்டும் மேல் பர்த்தில் ஏறிக் கண்ணயர்ந்தபோது நீளமான துப்பாக்கியை ஏந்தி வந்த இரு ரயில்வே போலீசார் வந்து கீழே படத்திருந்த மாமாக்களில் ஒருவரை துப்பாக்கியால் குத்தி எழுப்பி அந்த மூட்டை யாருடையது என்று கேட்க கீழ் பர்த்களில் மூட்டை மீது கால்கைளை வைத்துப் படுத்திருந்த மாமாவும் மாமியும் விரலை மட்டும் மேலே தூக்கிக் காண்பித்தார்கள்.
போலீஸ்கார்கள் இவனைத் தொடையில் தட்டி எழுப்பி உட்கார வைத்தார்கள். ஏதோ விசித்திரமான கனவு ஒன்று கலைந்த களேபரத்தில் நாகு எழுந்து உட்கார்ந்து பிறகு மெல்லக் கீழிறங்கினான். கடமையில் தவறாத போலீஸ்கார்கள் இருவரும் அவனை அந்த மூட்டையைப் பிரித்துக் காட்டச் சொன்னார்கள்.
இவன் டிடியிடம் அபராதம் கட்டி வாங்கி வைத்த ரசீதைக் காட்டியதை அவர்கள் ஏற்கவில்லை. பிடிவாதமாகப் பிரித்துக் காட்டச் சொன்னார்கள். இல்லையென்றால் மூட்டையோடு நடுவழியில் இறக்கி விடுவதாகவும் மிரட்டினார்கள்.
நாகுவும் தயக்கத்துடன் மூட்டையைப் பிரித்துக் காட்டினான். மூட்டையை நன்கு ஆராய்ந்து பார்த்த பிறகு, நல்ல காய்வெட்டாக இருந்த கத்தேமார் மாங்காயை ஆளுக்கு இரண்டு எடுத்துக் கொண்டு மூட்டையை மூடச் சொன்னார்கள் இரு போலீஸ்கார்களும்.
ஜனாதிபதி மாளிகையில் பெரிய பதவியில் இருக்கும் ஒருவருக்கு தான் இதை எடுத்துச் செல்வதாகவும், அவருடைய சகோதரி கொடுத்தனுப்பிய மாங்காய்களில் ஓரிரண்டு குறைந்ததை அவர் கண்டுபிடித்தால் ஜனாதிபதி மாளிகையில் உயரதிகாரியான அவர் தன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் அப்படித் தன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால் இவர்கள் பெயர்களை ஏற்கனவே அவன் மனப்பாடம் செய்து விட்டதாகவும் அவர்களின் தோள்பட்டையில் உள்ள எண்களுடன் அவர்களின் பெயர்களையும் தான் அலுவலகத்தில் எழுதிக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் பணிவுடன் தெரிவித்தான்.
உடனே இருவரில் ஒரு போலீஸ்காரன் தானே மூட்டையை மீண்டும் பிரித்து, தாங்கள் எடுத்துக்கொண்ட தலா இரு கத்தேமார் மாங்காய்களை மீண்டும் மூட்டைக்குள் பத்திரமாக வைத்து தானே அதன் வாயை கெட்டியாக கயிற்றால் கட்டி, “அப் டீக் ஹை?… தூ குஷ் ஹை பாய்?” என்று அவனை அன்பாகவும் கொஞ்சம் வலிக்கிற மாதிரியும் தட்டிக் கொடுத்து இடத்தை விட்டு நகர்ந்தார்கள்.
அதற்குப் பிறகு எதிரில் உட்கார்ந்திருந்த இரண்டு மாமாக்களும் ஒரு மாமியும் அந்த மூட்டை மீது எந்தக் காரணத்தினாலோ டெல்லி செல்லும் வரை கால் வைக்கவில்லை.

டெல்லியில் இறங்கி கூலிக்காரனுடன் மாரடித்து எக்கச்சக்கமாகக் கூலி கொடுத்து ஆட்டோ வரை அதை மார் வலிக்க சுமந்து வந்து ஏறத்தாழ அரை மாத சம்பளத்தை பேரம் செய்து பேசி ஆட்டோவைப் பிடித்து வீடு சேர்ந்தான் நாகு.
மூட்டைக்கு உள்ளே இருப்பது நான்கைந்து மாம்பழ வகையறாக்கள் என்பதாலும் அவை விரைவில் அழுகிப் போகும் ஆபத்து இருந்ததாலும், கத்தேமார் காய் வெம்பிப் போய் ஊறுகாய் போடத் தகுதியற்றதாகப் போய்விடும் ஆபத்து உள்ளதாலும், எல்லாவற்றுக்கும் மேலாக அந்த சங்கரன் மாமாவின் அழகிய பெண்ணை உடனே பார்க்கும் வேட்கை அதிகரித்ததாலும், அடுத்த நாள் யதேச்சையாக ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததாலும் ஆட்டோக்காரன் ஒருவனைப் பிடித்து அவன் கேட்ட அநியாயமான கட்டணத்துக்கு வேறுவழியின்றி ஒப்புக் கொண்டு இந்திரா டீச்சரின் அருமைத்தம்பி சங்கரன் மற்றும் அவருடைய அழகாக இருக்க சகலவாய்ப்புகளும் கொண்ட அவருடைய மகளும் வசித்து வரும் ரஜோரி கார்டன் நோக்கிப் புறப்பட்டான் நாகு. (கத்தேமார் மாங்காய் மூட்டையை ஆட்டோவில் ஒண்டி ஆளாக ஏற்றி வைத்த நாகுவுடன் சேர்ந்து வாசகர்களும் மூச்சை வாங்கிக் கொள்ளத்தான் இந்த நீளமான வார்த்தை. வேறு வழியில்லை.)
நல்ல வெய்யில் காலம். விவஸ்தையே இன்றி சுட்டெரிக்கும் பகலில் ரஜோரி கார்டன் சென்றடைந்தான். சங்கரன் மாமாவின் வீடு மூன்றாம் தளத்தில் அமைந்திருந்தது.
ஆட்டோவை விட்டு இறங்கியதும் அந்த ஆளவந்தார் மூட்டையை இழுக்க முடியாமல் நெஞ்சைப் பிடித்து ஒண்டி ஆளாக படிப்படியாக இழுத்து நகர்த்திச் செல்லத் தொடங்கினான்.
அந்த அடுக்கு மாடி வீட்டில் படிகள் ஏறிக் கொண்டிருந்தவர்களும் இறங்கிக் கொண்டிருந்தவர்களும் அவனைக் கிலியுடன் பார்த்தவாறு சற்று ஒதுங்கியவாறு படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
சர்தார்ஜிகளின் வழக்கத்துக்கு மாறாக சற்றுக் கெச்சலாக இருந்த சர்தார்ஜி ஒருவர் மட்டும் சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனிடம், பெண்மை கலந்த குரலில், “துஸி கித்தே ஜானா ஸி”? என்று கேள்வி எழுப்பினார்.
“சங்கரன் சாஹிப் கா கர்”
மறுகேள்வி எதையும் கேட்காமல் அந்த ஒல்லி சர்தார்ஜி கிடுகிடுவென்று படியிறங்கிப் போனார். நிறுத்திக் கேள்வி கேட்ட இந்த நாசமாகப் போனவன், மனமிரங்கித் தனக்கு சற்று ஒத்தாசையும் செய்திருக்கலாம் என்று சபித்துக் கொண்டே மூச்சைப் பிடித்துக் கொண்டு மீண்டும் மூட்டையை ஒவ்வொரு படியாக இழுக்க ஆரம்பித்தான்.
ஒருவழியாக மூன்றாம் மாடியை அடைந்து சங்கரன் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான்.
சற்று நேரம் கழித்து சிடுசிடுவென்று முகத்துடன் மிகவும் அகலமான ஒரு பெண்மணி, பிரம்மாண்டமான நைட்டி ஒன்றை அணிந்து கொண்டு பாதிக் கதவைத் திறந்து குரல் உயர்த்தினாள். “கோன் ஹ பாய்… க்யா சாஹியே” என்று கர்ண கடூரமான குரலில் கேட்டாள்.
“இந்திரா டீச்சர் அனுப்பிச்சாங்க. சங்கரன் சாரைப் பார்க்கணும்” என்றான்.
“அவர் சாப்பிட்டுண்டிருக்கார். ஒரு நாப்பது நிமிஷம் கழிச்சி வாங்கோ” என்றாள்.
வியர்வையில் தொப்பலாக நனைந்திருந்த நாகு என்ன செய்வது என்று புரியாமல் நின்றான். “இது என்ன? என்று அந்த அகல மாமி கேட்க, ஊரிலிருந்து நேற்று வந்தேன். டீச்சர் சங்கரன் சாருக்குக் கொடுத்தனுப்பியிருக்காங்க” என்றான்.
மாமி மூட்டையின் மீது உரிமையுடன் கையை வைத்தவாறு, “ஓஹோ… சரி. நாற்பது நிமிஷம் கழித்து வாங்கோ. அவர் சாப்பிட்டுண்டிருக்கார்” என்று சொல்லி முழுக்கதவைத் திறக்காமல் நின்றாள்.
“சரி. கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன். இது இங்கேயே இருக்கட்டும்” என்று கூறி, தயக்கத்துடன் மூட்டையை அங்கேயே விட்டு விட்டு மிகுந்த களைப்புடன் படியிறங்கத் தொடங்கினான் நாகு.
நாற முண்டை. இப்படித் துரத்துகிறாளே. இந்த வெய்யிலில் எங்கே போய் காத்திருப்பது? தீ வைத்தது போன்ற வெக்கை. தாகம். வியர்வை… இம்சை… குடிக்க ஒரு தம்ளர் தண்ணீர் கூடக் கொடுக்கவில்லை.
அந்தத் தளத்தின் கடைசிப் படியை விட்டு இறங்குமுன்பு திரும்பிப் பார்த்தான். மாமி அந்த மூட்டையை கதவுக்கு உள்ளே இழுக்கத் தொடங்கியிருந்தாள். துணைக்கு ஒரு பெண். அரை டவுசர் அணிந்து அத்தனை அழகாக இல்லாமல் ஆண்மை கலந்த முகத்துடன் மாமியுடன் சேர்ந்து மூட்டையை உள்ளே இழுத்தது.
அந்த அரை டவுசர் பெண் அவளுடைய அப்பாவின் ஜாடையாக இருக்க வேண்டும். பரவாயில்லை. இருக்கட்டும். அதிருஷ்டம்தான்.
அந்தக் குடியிருப்பு வளாகத்துக்கு வெளியில் சற்றுத்தள்ளி நின்றிருந்த ஒரு பம்பு தண்ணீர் வண்டியில் எட்டணா கொடுத்து ஜில் தண்ணீர் வாங்கிக் குடித்தான். கிடைத்த நிழலில் நின்று ஓரிரண்டு சிகரெட்டு புகைத்த பிறகு 40 நிமிடங்கள் ஆனதை உறுதி செய்து சங்கரன் வீட்டை நோக்கி மீண்டும் படையெடுத்தான்.
ஒருவேளை தூரத்தில் இருந்து ஆண் ஜாடையாகத் தெரிந்தாலும் அந்தப் பெண் கிட்டப்பார்வையில் சுமாரான அழகாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நம்புவதற்கு முயற்சித்தான். சரி போய்த்தான் பார்ப்போம். யார் கண்டது? எது எப்படிப் போனாலும் சங்கரன் மாமா ஜனாதிபதி மாளிகையில் நல்ல செல்வாக்கோடு திகழ்ந்து அதனால் தனக்கு அலுவலக ரீதியாக ஏதேனும் நல்ல வாய்ப்பும் சவுகரியங்களும் கிடைக்கலாமே என்றும் நினைத்தான்.
மீண்டும் அதே அகல மாமி சற்றே அன்பான பார்வை வீசிக் கதவைத் திறந்து அவனை உள்ளே அனுமதித்தாள். வரவேற்பறையில் அமரச் சொன்னாள்.
“மாமா வந்துடுவாரு. வெயிட் பண்ணுங்கோ” என்று சொல்லியபடி டீபாய் மேல் சில பத்திரிகைகளை வீசிவிட்டுப் போனாள். வழவழவென்ற தாள்களில் அச்சிடப்பட்ட அந்த விலையுயர்ந்த வெளிநாட்டுப் பத்திரிகைகளில் “Presidents Estate Library, Rashtrapathi Bhavan” என்று ஒவ்வொரு பக்கமாக விட்டு சீல் அடிக்கப்பட்டிருந்தது. சுட்டுக் கொண்டு வந்திருக்கிறார். மாமா அங்கு நல்ல செல்வாக்கோடு தான் இருக்கிறார் போலிருக்கிறது.
பத்திரிகைகளின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது சுமார் இரண்டு வயதுக் குழந்தை ஒன்று இவனிடமிருந்து சற்றே பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு கையாட்டியது…
“வாடா செல்லம்… என்ன பேரு கண்ணு” என்று கைநீட்டி அழைத்ததும் பேயைக் கண்டது போல வீல் என்று அலறிக் கொண்டு உள்ளே ஓடியது அந்த அகாலத்தில் வந்து எட்டிப்பார்த்த குழந்தை.
உடனே மாமியும் அந்தப் பெண்ணும் வேகமாக ஓடி வந்தார்கள்.
இந்திரா டீச்சர் சொன்ன அந்தக் கணமே எந்த நங்கையை எப்படியாவது கண்டே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, அத்திட்டத்துக்காக பெருமூட்டையை சுமந்து வேர்வையில் குளித்து, சிறுமை கண்டு சீறாது பொறுமை காத்த நாகு மீண்டும் டெல்லி அப்பளம்போல நொறுங்கிப் போனான்.
கிட்டத்தில் பார்த்ததிலும் இறுக்கமான அரைக்கால் சட்டையும் தொளதொளவென்ற டீசர்ட்டும் போட்டு தாராள பங்கஜமாக தரிசனம் தந்த அந்த நளின நங்கை, இந்திரா டீச்சரின் மற்றொரு தம்பி தியாகராஜனுக்கு ஜடை வளர்த்து விட்டது போல இருந்தது கண்டு மற்றொருமுறை நொறுங்கி சிதறிப் போனான்.
கையில் தண்ணீர் டம்ளருடனும் சற்றுப் பதற்றத்துடனும் வந்த மாமி, “குழந்தை கிட்டே தமிழ்லே பேசினேளா? அதுக்குப் பழக்கம் இல்லை பாருங்கோ… யாராவது இப்படி புதுசா வந்து தமிழ்லே பேசினா குழந்தை பாவம் மிரண்டு போயிடறது”
“இல்லை மாமி… பேரு என்னன்னுதான் கேட்டேன்…
“பரவாயில்லை. இங்கே தமிழ் பேசறவாளே இல்லை பாருங்கோ… அதான்… மாமி சொல்லிக் கொண்டிருக்கும்போதே சங்கரன் மாமா வரவேற்பரையில் பிரவேசித்தார். நீயெல்லாம் என் வீட்டு வரவேற்பரையில் எப்படி உட்காரலாம் என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு, “என்னப்பா, அக்காவோட ஸ்டூடண்டா நீ? எங்கே வேலை பார்க்கிறே?”
சொன்னான்.
“அங்கே எந்த டிவிஷன்?”
சொன்னான்.
உங்க ஆபீசர் அஹுஜா எனக்குக் கீழேதான் வேலை பார்த்தான். என் பேரு சொல்லு. நின்ன இடத்தில் ஒண்ணுக்கு அடிச்சுடுவான். திருட்டுப் பயல்”
“சொல்றேன் சார்…”
அப்புறம் என்ன எல்.டி.சி.யா சேர்ந்திருக்கியா? ஒண்ணு தெரிஞ்சிக்கோ. ரீகல் சினிமா, சாணக்கியான்னு அங்கங்கே சினிமா டிராமான்னு சுத்தாதே. உட்கார்ந்து அடுத்த ப்ரமோஷனுக்கான பரீட்சைக்குப் படி. இப்போ கண்ட நாயெல்லாம் பேங்க் பரீட்சை எழுதி பேங்க்லே ஆபீசர் ஆயிடறது. தம் கட்டிப் படி. நீயும் ஆயிடுவே… இப்படி அட்வைஸ் மழையாக பொழிந்து கொண்டிருந்தார்.
அந்த அரைக்கால் டவுசர் நங்கை குறுக்கும் நெடுக்கும் கையில் ஏதோ புத்தகத்தை வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருந்தது.
“என் தம்பி பொண்ணுதான். ஊரிலிருந்து அழைச்சுண்டு வந்திருக்கேன். ஐஏஎஸ் பரிட்சைக்கு படிச்சுண்டிருக்கா. இந்தக் காலத்துலே பொண்கொழந்தைகளே நிறைய படிக்கறதுகள். ஊர் சுத்தாம படி. நீ கிளம்பு. அக்கா கிட்டே எல்லாம் வந்ததுன்னு சொல்லிடறேன்…”
“சார்… உங்க போன் நம்பர் குறிச்சுக்கட்டுமா? இல்லை விசிட்டிங் கார்டு இருந்தா குடுக்கறீங்களா?”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ராஜா. ஊரறிஞ்ச பாப்பானுக்கு பூணல் எதுக்குய்யா? எங்க ஆபீஸ் டெலிபோன் எக்சேஞ்சுக்கு போன் செய்து என் பேரைச் சொல்லு. அலறி அடிச்சுண்டு குடுப்பான்”
“வீட்டு போன் நம்பர்….
“அதெல்லாம் வேணாம். யாருக்கும் குடுக்கறது இல்லை. நீ கௌம்பு”.
அப்போது ஏறத்தாழ பிற்பகல் 3.00 மணியாகி இருந்தது. மாமாவோ மாமியோ சாப்பிடச் சொல்லவில்லை.
யாரைப் பார்ப்பதற்காக பல உபரிப்பொருட்கள் கலந்த பெருமூட்டையை ஊரிலிருந்து பெரும்பாடுபட்டு சுமந்து வந்தானோ அது திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. ஒருவகையில் அப்படிப் பார்க்காமல் இருந்ததேபரவாயில்லை என்று அவனுக்குத் தோன்றியது. சங்கரன் மாமாவின் பெண்ணும் அவனுடைய அம்மாவைப் போல அகலமாக இருந்தாலோ அல்லது அப்பனின் முகஜாடையில் இருந்தால் என்ன செய்வது என்ற புதிய கவலையும் புதிதாக முளைத்த தால் அவளுக்காக க் காத்திருக்கும் திட்டத்தையும் கைவிட்டான்.
உள்ளே குழந்தை இன்னும் கதறிக் கதறி அழுது கொண்டிருந்தது. அதனுடைய அம்மாவாக இருக்க வேண்டும். அவள் குழந்தையை சும்மா இருக்குமாறு சத்தம் போட்டு விரட்டி மேலும் கலவரப்படுத்திக் கொண்டிருந்தாள்.
இனிமேல் முதலில் யாருக்காவது இதுபோல மூட்டை தூக்க நேர்ந்தால் அந்த ஆள் எப்படி என்று எப்படியாவது முன்பே உறுதி செய்து கொள்ள வேண்டும். ரெண்டாவது, ஐஏஎஸ் படிக்கிற பெண்ணாக இல்லாமல் நம்முடைய ஐவேஜூக்கு தகுந்த மாதிரி இருக்கும் பட்சத்திலும் சகல வகையிலும் தோதாகிற பட்சத்திலும் உள்ள பெண்களுக்காக மட்டுமே ஊரிலிருந்து மூட்டை தூக்கினால் பரவாயில்லை என்று மனதுக்குப் பட்டது.
அப்புறம் ஊருக்குப் போனால் இந்திரா டீச்சர் இருக்கும் திசையில் கூட தலைவைத்துப் படுக்கக் கூடாது. எந்த வாத்தியார் அல்லது டீச்சர் வீட்டுக்கோ சொந்தக் காரர்கள் வீட்டுக்கோ செத்தாலும் போகக் கூடாது என்றும் முடிவெடுத்தான் நாகு.
ஒருவழியாக மாலை 5 மணிக்கு கோல் மார்க்கெட்டில் சவுத் இந்தியா கிளப் மெஸ் சென்று ஏதோ பத்து நாட்கள் பசியாக இருந்தது போல அள்ளி அள்ளிச் சாப்பிட்டான். பெருத்த உடல் வலியுடனும் மனச்சோர்வுடனும் அறைக்குச் சென்று வழக்கத்துக்கு மாறாக சீக்கிரமாகவே உறங்கச் சென்றான்.
அடிக்கடி மனக்கண்ணில் நடமாடிய பெயர் தெரியாத அந்த அரை டவுசர் நங்கையின் முகத்தை வலுக்கட்டாயமாக நினைவுகளில் இருந்து அகற்றப் பெரும் பிரயத்தனம் செய்தவாறே உறங்க முயற்சித்தான்.
அடுத்த நாள், அதாவது திங்கட்கிழமை அவனுடைய அலுவலகத்தில் புதிதாக ஒரு பெண் சென்னையிலிருந்து பணியில் சேரப்போகிறது என்பதும் அந்தப் பெண்ணுக்காக 10 லிட்டர் மண்ணெண்ணெய் கேனை அவளுடைய ஹாஸ்டலுக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவன் சுமக்கப்போவதையும் இறைவன் தன்னுடைய தலையில் எழுதியிருப்பதை அறியாமல் பல்வேறு கலவைக் கனவுகளுடன் உறங்கிப் போனான் கத்தேமார் மாங்காய் மூட்டை சுமந்து களைத்துப் போன கர்மவீரன் நாகேந்திரன் (எ) நாகு.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

யதார்த்தமான கதை. அருமை. வாழ்த்துக்கள் (மறுபடி நாகு உங்கள் ஊருக்கு வந்தால் எனது ஆறுதலைச் சொல்லுங்கள் 🤣)