உடைதல்

இன்பத்துப் பாலில் ஊறிய
ஓலை நுனியில்
பாஸ்பரஸை தேய்த்து மூட்டிய
கூடார நெருப்பில்
முளைக்கத் துடிக்கிற விதைகள்
நம் உடல்கள்

கற்பிளவுத் தேரையின் தனிமையை
தடவிக் கடக்கிற நீர் நாகத்தின் வாலாய்
வழுவழுப்பாய் இணங்கி தடவுகிறது இரவு

கோலிகுண்டு நடுவிலிருக்கிற
இளஞ்சிவப்பு இழுவைக் கோட்டை
தொட முடியாமல் தவிக்கிற சிறுவன் போல
ஒளிர்கிற இதழ்களை தொடாது
முத்தமிடுதலை நிகழ்த்த முடியாதென்கிறாய்

இறகில் மைதொட்டு முதன்முதலில் எழுதப்பட்டது ஒரு கவிதையாகத்தான்
இருந்திருக்கும்
எழுதினவன் உன்போல
காதலில் விழுந்தவனாகத்தான்
இருந்திருப்பான்

எதையும்
பார்க்க முடியாதபடியான இருட்டில்
பொசுக்கென்று
இமைகளை
மூடிக் கொள்ளும்படியான மின்னல் அடுத்தடுத்து நிகழ்வது மழையை அறிவிக்கிறது

மெல் மழைக்கு கூடார நெருப்பு
அணைந்தபாடில்லை

இருட்டு தைரியத்தில்
நெருங்கினோம்
மின்னலுக்கு திடுக்கிட்டு விலகினோம்
கை நழுவிய தேநீர் கோப்பை
டிட்டினாங்…கென்று
விழுந்து உடைகிறது
இனி
கோப்பை உதவாது
தேநீரும் உதவாது
மைனஸ் இண்ட் மைனஸ் ப்ளஸ் ஆவதைப் போல
கோப்பையும் தேநீருமாய் இதழ்களே
உருமாறிக்கொள்ளுமென
இருவருக்கும் தெரியும்

நெருங்குதலை விட விலகுதல்
அணைதலை விட எரிதல்
மிக முக்கியமாய்
தேநீர் கோப்பையோ
மதுக்குப்பியோ உடைதல்….
இவையெலாம் தேவை
ஒரு நல்ல காமம் நிகழ
என்கிறாய்

நல்ல காமமா?
காமமே நல்லதுதானே.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “உடைதல்”

Leave a Reply to கலியபெருமாள் வீராசாமிCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.