நசையறு மனமும், விசையுறு உடலும்

“தலைக்கு மேல் ஒரு கூரையும், வயிற்றுப்பசிக்கு உணவும், வீட்டுக்குப்போக நேரமாகிவிட்டால் நம்மைத்தேடும் உறவும் இருக்கும் நாம் அனைவரும் நற்பேறு வாய்த்தவர்களே. இந்தப்பூமியில், அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லாத மனிதர்களும் இருக்கிறார்கள். இறைவனுக்கு நன்றிக்கூறி வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வோம் “ என்று உலகறிந்த பேச்சாளர், திருமதி. ஜெயந்தஸ்ரீ  பாலகிருஷ்ணன் சிங்கப்பூரில் தன்னுரையைத் தொடங்கும்போது கூறினார்.

மனிதர்களுக்கு வாழ்க்கை ஒவ்வொரு பத்தாண்டுகளில் ஒவ்வொரு விதமாகத் தோற்றமளிக்கிறது. 

இருபது வயதில் வாழ்க்கை வேறானது-கனவுகள் நிரம்பிய காலக்கட்டம். முப்பதுகளில்- குடும்பம், பதவிகள் என்று படிநிலைகள் மாறும் காலகட்டம். நாற்பதுகளில்- பிள்ளைகள் பதின்பருவத்திலோ, கல்லூரியிலோ இருக்க, வயதில் மூத்தவர்களையும் பராமரிக்கவேண்டிய பளு வந்திறங்குகிறது.

சிங்கப்பூரின் உணவான லக்சாவைப்போல உணர்வில் கலவையாக மனம் நீண்ட வாழ்க்கையோடு கலக்கிறது. 

கோவிட் காலம் முடியும்வரை உயிரோடு இருக்கிறோம் என்பதையே பெரும்பேறாக நினைத்தவர்கள் பலர். ஒவ்வொரு நாளும் எமன் வாயில் விழுந்து புறப்படுவதுப்போல வேலைப்பார்த்த, சுகாதாரத்துறைப்பணியாளர்களை என்றும் நம்மால் மறக்க முடியாது. 

சுனாமி ஒரு நாளில் வேட்டையாடித்தீர்த்தது! பலமாதங்கள் நீடித்த கோவிட் பலரின் உடலையும், மனநலனையும் பழித்தீர்க்கும் வெறியோடு காவு வாங்கி, பலிதேறியத் தெய்வம் போல மேலேறி மறைந்தது.

கொரோனா தீநுண்மி ஆண்ட காலத்தில் ஊருக்குப்போக முடியாத குறையைப்போக்க கைத்தொலைபேசி உதவுவதை நினைத்து, அறிவியல் வளர்ச்சியைப்பாராட்டியவர்கள் பலர்.

சுற்றமும் நட்பும் சூழ திருமணம் செய்துப்பழக்கப்பட்ட பலரும், குறைந்த அளவிலான மனிதர்கள் சூழத்திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஆயிற்று.

அப்போது ஆரம்பித்த வீட்டிலிருந்தே வேலைசெய்யும் பணி, சிலருக்கு சுகம். மற்ற  சிலருக்கு பிள்ளைப்பூச்சியை மடியில் கட்டியது போன்ற ஒரு சுகவீனம். அப்போதிலிருந்தே  பெண்களில் பலரும் துர்க்கையைப்போல பல கைகள் கொண்டவராகத் தங்களைத் தாங்களே அனுமானித்துக்கொண்டனர்.

மடியில் குழந்தையைத்தட்டிக்கொண்டே, தொடுதிரையில் பதிலளிக்கும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் பணி  அப்போது தான் நம் தமிழ் சமூகத்தில் எல்லா வீடுகளிலும் பரவலாக அறிமுகம் ஆனது. இன்று அந்த பணி பலரையும் வேலை வாழ்க்கை சமநிலை என்பதை மாற்றி, வேலையோடு ஒன்றிணைந்த வாழ்க்கை என்ற நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

கோவிட் முடிந்து பள்ளிகள் திறந்ததும், குழந்தைகளின் வாழ்க்கை மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது.

தொடர்ந்து சில ஆண்டுகளாக பயணங்களோ, கொண்டாட்டங்களோ இல்லை என்றிருந்தவர்கள் பலரும் பயணங்களைத் திட்டமிட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் வேலைப்பார்க்கும் வயதில் இருப்பவர்கள் எல்லாருக்கும் வாழ்க்கை மீண்டுவிட்டதா என்ற கேள்விக்கு நம்மில் எத்தனை பேர் மீண்டுவிட்டதென்று பதிலளிப்போம்?

கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் தன் தந்தையின் இறுதிச்சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாமல் வெளிநாட்டில் தவித்த நண்பர் ஒருவருக்கு அது காலத்துக்கும் அழியாத வடுவாகிப்போனது.

சிங்கப்பூரின் பூமலையில்(Botanic Gardens) உள்ள ஒரு குளத்தில் இரு கருப்பு அன்னங்களைச் சில வருடங்களுக்கு முன்னால் பார்த்தேன். அன்னத்தின் தூவி என்று தமிழ் இலக்கியத்தில் எப்போதோ படித்திருந்தாலும், அன்னத்தை நேரில் பார்த்தது இல்லை. இந்தியாவில் அருகிவிட்ட ஒன்றைச்  சிங்கப்பூரில் வேறு வண்ணத்தில் கண்டேன்.

கருப்பு அன்னம் என்ற ஒன்று உண்மையில் இல்லை என்று நம்பிக்கொண்டிருந்த ஐரோப்பியர்களால், இன்று நடைமுறையில் உள்ள தொடர், கருப்பு அன்ன நிகழ்வு. முற்றிலும் நாம் எதிர்பாராமல், நம் வாழ்க்கையின் திசையை வேறாக இழுக்கும் நிகழ்வுகள் இவற்றில் அடக்கம். பொருளாதார பெரும்சரிவு, கொரோனா போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.

 சிங்கப்பூரில் மட்டும் கொரோனா முடிந்த பிறகு ஏற்பட்ட நட்டத்தைத் தாக்குபிடிக்க முடியாமல், கிட்டத்தட்ட இருபத்தி ஆறாயிரம் பேருக்கு 2020 ஆண்டு வேலை இழப்பு ஏற்பட்டது. அதன் பின் நிலைமை மீண்டெழுந்தது போல தோன்றினாலும், இந்த ஆண்டில் ஆரம்பத்தில் லசாடா(Lazada) போன்ற நிறுவனங்களில் ஒரே நாளில், பலரை வெளியேற்றுவதுத் தொடர்வதுக் கவலை அளிக்கிறது. வேலை இழப்புச்சூழல் வெவ்வேறு வயதினரில் ஏற்படுத்தும் தாக்கமும் சிந்தனைக்குரிய ஒன்றே ஆகும்.

இன்றைய சிங்கப்பூர் சூழலில் அப்படிப்பட்ட ஒரு தருணத்தை நேர்முகமாக அனுபவித்தது தான் இந்த கட்டுரையை எழுதத்தூண்டியது.

“நல்லாப்படி. நல்லாப்படிச்சா நல்ல வேலைக்குப்போகலாம். உன்னுடைய எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும்”. இது உலகெங்கும் பெற்றோர் பள்ளிப்பருவத்திலிருக்கும் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லும் மொழி. தகுதியின் அடிப்படையில் ஆட்சி நடக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகள்,இந்த கொள்கையில் அதிகம் நம்பிக்கைக்கொண்டிருக்கின்றன. வளரும் செயற்கை நுண்ணறிவு,அதனால் ஏற்படும் வேலை இழப்புகள் போன்றவை, எந்த படிப்புக்கும் நிரந்தர வேலை என்பது உத்தரவாதம் இல்லை என்பதையே அடித்துச் சொல்கின்றன.

என் அப்பா ஆசிரியர். என் மாமனாரும் ஆசிரியர். ஒரே பள்ளியில் முப்பத்தைந்தாண்டுகள் வேலைப்பார்த்தேன் என்கிறார். இன்று ஓரிரு ஆண்டுகளுக்குள் வேலையிடத்தை மாற்றும் போக்கு உள்ள இளைஞர்களும் அதிகம். அதே போல, நன்கு படித்து, மேலாண்மையில் முதுகலைப்பட்டம் பெற்று, பல ஆண்டுகள் வேலை அனுபவம் உள்ளவர்களையும், உங்களின் திறன்கள் எங்களுக்குத் தேவையில்லை என்று சொல்லி, கறிவேப்பிலையைத் தூக்கி எறிவதைப்போல, கடிதம் ஒன்றோடு, ஓரிரு மாத சம்பளத்தையும் கொடுத்து, வீட்டுக்கு அனுப்பும் போக்கும் இருக்கிறது.

என்னோடு கல்லூரியில் படித்த ஒரு தோழி, கணிப்பொறி அறிவியலில் முழுப்புள்ளிகளோடு தேறி, கூகிள் நிறுவனத்தில், பெரிய சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். கல்லூரி முழுவதும் அவர் ஆரம்பநிலை சம்பளம் பேசப்பட்டது.

இன்று இருபது ஆண்டுகள் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வளர்ந்து வந்தவரை, கூகிள் ஆட்குறைப்பு நடவடிக்கை என்று சொல்லி வெளியே அனுப்பியிருக்கிறது.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு. (குறள்:336)

இன்றைய காலகட்டத்திற்கு இந்த நிரந்தரமின்மை உலகுக்கு மட்டுமல்ல அவரவர் வேலையிலிருக்கும் நிறுவனத்துக்கும் பொருந்தும்.

நம் எல்லாருக்கும் வாழ்க்கைச் சவால்கள் ஒரே போல இல்லை. சிலருக்குக் குழந்தைகளின் வளர்ச்சிக்குறித்த சவால்கள்- ஆட்டிசம் போன்றவை. சிலருக்குப்பெற்றோரின் முதுமைக்குறித்த சவால்கள். இன்னும் சிலருக்கு அவரவர் மணவாழ்க்கை அல்லது, மணவாழ்க்கையை நோக்கி நகர்த்துவதில் சிக்கல்.

அவற்றோடு சேர்ந்து வேலையிழப்பும். ஆனால், அது வரமா? சாபமா?

இரண்டும் கலந்த மனநிலை தான் எனக்கு இருந்தது. நம்ப முடியாத அதிர்ச்சி, உடனே அடுத்த வேலை அமையாத சூழல். வழக்கமான எட்டு மணி ஓட்டம் இல்லாமல், கையில் நேரம் தேங்கியபோது எழுந்த வெறுமை, யாரும் இல்லாமல் சமூகத்தில் தனித்துவிடப்பட்டதாக தோன்றிய எண்ணம், இப்படிப்பலவும் என்னை அலைக்கழித்தன.

என்னிடம் அந்தத்  தாள் நீட்டப்பட்டபோது, உங்களுடைய செயல்திறனுக்கும் இந்தக் கடிதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லப்பட்டாலும், என்னை ஏன் அனுப்புகிறீர்கள் என்று கேட்க நினைக்கும்போதே, தொண்டை அடைத்ததுதான் நிதர்சனம்.

சிங்கப்பூரில் குறைந்தபட்சம் நூற்றி ஐம்பதுக்கும் அதிகமான, பேரங்காடிகள் இயங்குகின்றன. தேவையோ, தேவை இல்லையோ, பொருட்களை வாங்கத்தூண்டும் சூழலும் இங்கே இருக்கிறது. நம்முடைய நாள்பட்ட சேமிப்புப்பழக்கம் இந்தமாதிரி சூழல்களில் அதிகம் கை கொடுக்கிறது. 

உலகின் நிலைத்தன்மை (Sustainability) பற்றி இப்போது அதிகம் யோசிக்கவேண்டிய சூழல் இருக்கிறது. துபாயின் அண்மைய பெருமழை, உலகெங்கும் அதிகரிக்கும் வெப்பமயமான சூழல், அண்டார்டிகாவில் இயங்கும் எரிமலை இப்படிப் பலவும் உலகத்தை எப்படி நாறடித்துவிட்டோம் என்பதற்கான சாட்சியங்கள். உலகின் நிலைத்தன்மை பற்றி யோசிக்கும் அதே வேளையில், நம்முடைய வாழ்க்கையின் நிலைத்தன்மைப்பற்றியும் சிந்திக்கவேண்டியுள்ளது.

வேலை வேலை என்று தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பவராக நீங்கள் இருந்து, வேலையிழப்பு என்று ஏற்பட்டால், அதைக் கடவுள் வாழ்க்கையைச் சீரமைத்துக்கொள்ள என்று உங்களுக்கு கொடுக்கும் நேரமாகப் பாருங்கள்.

இன்று சிங்கப்பூரில் பத்தில் மூவருக்குப்  புற்றுநோய் ஏற்படுவதாகப்புள்ளியியல் கணக்குச் சொல்கிறது. நாள்பட்ட மனஅழுத்தம், தூக்கமின்மை, சரியான உடல் எடையைப்  பேணாமல் இருப்பது, ஆரோக்கியம் குறித்த அக்கறையின்மை இப்படிப்பல காரணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இன்று வயதில் மூத்தவர்களில் உங்களுக்குத் தெரிந்து ஆரோக்கியமாகவும், பயனுள்ளவர்களாகவும் வாழ்பவர்களை அவதானியுங்கள். அவர்கள் தங்களின் நாற்பது வயது கடந்தபருவத்தில் போட்ட விதை தான் இன்று அவர்களின் முதுமையில் இளைப்பாறும் நிழல் தரும் பெருமரமாக அவர்களுக்குப் பற்றுக்கோடாக இருக்கிறது. திரு.அ.கி.வரதராசன் கம்ப இராமாயணம் வகுப்பு எடுக்கிறார். குறைந்தபட்சம் முப்பதாண்டு காலம், கம்பனைப்படிப்பதில்  பயணித்த அனுபவம் தான் அவருடைய முதுமையை இனிதாக்குகிறது.

சமீபத்தில் சிங்கப்பூருக்கு வந்து சென்ற திரு.நாஞ்சில் நாடனும் அப்படிப்பட்டவர் தான். தமிழின் சொல்லோடு அவர் மனம் விளையாடியபடியே இருப்பதால், வாழ்க்கை அவருக்குச் சலிக்காமல் செல்கிறது.

இதுவரை உங்களுக்கு ஆர்வம் இருந்தாலும், நேரமில்லை என்று ஒதுக்கிவைத்த ஏதாவது ஒன்றைக்கையில் எடுங்கள்.

நம்முடைய நலம் என்பது, உடல், மனம், குடும்பம், சமூகம் என்று பலநிலைகளைக்கொண்டதாக இருக்கிறது. வேலையிழப்பு ஏற்பட்டாலும் அடுத்த வேலை கிடைக்கும்வரை நம்மைக்காப்பாற்றிக்கொள்ளவேண்டியது அவசியம்.

  • உடல்நலத்தில் அக்கறை: நான் இந்தியாவிலிருந்து இயங்கும் பிட்டர் (Fittr) எனப்படும் செயலியில் பதிந்து எனக்கான ஒரு பயிற்சியாளரிடம், என்னுடைய உணவுப்பழத்தையும், உடற்பயிற்சிப்பழக்கத்தையும் மேம்படுத்திக்கொண்டேன். உடல் எடையை எட்டுகிலோ குறைத்தேன்.
  • குடும்பநலனில் அக்கறை:

இருவரும் வேலைக்குப்போகும் சூழலில், இன்று குழந்தைகள் பெரும்பாலும் தனிமை சூழலில் வளரவேண்டியுள்ளது.கையில் கிடைத்துள்ள நேரத்தில், வீட்டில் செய்யவேண்டியிருந்த ஒரு சில மறுசீரமைப்பு வேலைகளையும், பிள்ளைகளின் படிப்புத்தவிர உள்ள மற்ற ரசனைகளை மேம்படுத்துவதற்கும், கணவன் மனைவிக்கு வாழ்க்கை ஓட்டத்தில் கிடைக்காத ஒரு சில தருணங்களை மீட்டெடுப்பதற்கும்  இந்த நேரம் எனக்குப்பயன்பட்டது.

அடிக்கடி இந்தியா செல்லமுடியாமல் இருந்த எனக்கு, என் பெற்றோரோடு நேரம் ஒதுக்க  இந்த வேலையிழப்புச் சூழல் பயன்பட்டது.

  • மனநலனில் அக்கறை: 

உங்களுடைய உற்ற நண்பர் நீங்கள் தான். உங்கள் மனதுக்குத்தெம்பளிக்கும் நம்பிக்கை மொழிகளை விதையுங்கள். உங்களுக்கு ஆர்வமுள்ள ஏதாவது ஒன்றை முயற்சிசெய்துப்பாருங்கள். என்னுடைய மனநலத்துக்காக நான் வீட்டிலிருந்து சமைத்துக்கொடுக்க ஆரம்பித்தேன்.என்னுடைய மாதச் சம்பளத்தோடு இந்த வருமானத்திற்கு எவ்வித சம்பந்தம் இல்லை என்றாலும், யாரோ ஒருவர் சொல்லும் பாராட்டு என் சந்தோஷத்தை மீட்டெடுத்தது.

என் தொழில் சார்ந்து ஒரு சில பட்டயப்படிப்புகளைப்படித்து முடித்தேன். அது வேலைச்சூழலோடு, முற்றிலும் விலகாமல் நான் மீண்டும் வேலைக்குச் சேர உதவியது. உங்களின் நெருங்கிய நண்பர்கள், அலுவலக உடன்பணி புரிந்தோர் போன்றோருடன் தொடர்பில் இருப்பதும், நமக்கான வாய்ப்பு வரும்போது, அது நமக்கு அமைய வழிசெய்யும்.

நான் மீண்டும் பணிக்குச் செல்லும் சூழலில் எப்படி என்னுடைய குழுவை கையாள்வது என்பதுக் குறித்து சிந்திக்கவும், புத்தகங்களை வாசிக்கவும் ஆரம்பித்தேன்.

  • சமூக நலனில் அக்கறை: டச்(Touch Community Services) என்ற தொண்டூழிய அமைப்பு சிங்கப்பூரில் வயது முதிர்ந்த , நடமாட்டம் குறைந்த முதியவர்களுக்கான உணவை சமைத்துத்தருகிறது. அது வீடு வீடாகச் சென்று உணவை வழங்கும் தொண்டூழியர்களை எதிர்பார்க்கிறது. சிங்கப்பூரின் முன்னோடி சமூகத்தினர் பலரும் இன்று இதன் சேவையில் பயனுறுகிறார்கள். ஒவ்வொரு வாரமும் ஒரு நாளின் சில மணிநேரங்கள் செய்யும் இந்த சேவை, சிங்கப்பூர் சமூகத்தோடு எங்களைக் குடும்பமாக இணைய வைக்கிறது.

மிதமான துய்ப்பு என்பது இருந்தால், இடையிடையே ஏற்படும் கருப்பு அன்னம் போன்ற நிகழ்வுகளால் நாம் காணாமல் போக மாட்டோம். வேலையிழப்பு என்பது இனிவரும் வருடங்களில் நாம் கடந்தே ஆகவேண்டிய ஒன்றாக இருந்தாலும், பாதைத் தெளிவாக இருந்தால், நம்மால் மீண்டும் பயணத்தை விட்ட இடத்திலிருந்து, சிறிது இளைப்பாறியப்பிறகு, உற்சாகத்தோடுத்தொடர முடியும்!


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.