ஈஸ்வர அனுக்ரஹம்

தெலுங்கில் : பொத்தூரி விஜயலட்சுமி

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

“புராண காலட்சேபமா? நீங்கள் சொல்வது என்ன? இந்தக் காலத்தில் இதையெல்லாம்    யார் கேட்பார்கள்?” ஆச்சர்யமாகக் கேட்டான் ஸ்ரீகாந்த். 

“கேட்பவர்கள் கேட்பார்கள். வருபவர்கள் வருவார்கள். நான் என்ன நவராத்திரியிலோ, பண்டிகை தினங்களிலோ, நியூ இயர் அன்றோ வைத்துக் கொள்ளச் சொன்னேனா?   எல்லோரும் இப்போது சும்மாத்தானே இருக்கிறோம்? அவர் மறுபடியும் வரமாட்டார். அதனால் இங்கேயே இப்போதே ப்ரோக்ராம் வைத்துக் கொள்வோம்” கிஷோரின் குரலில் தொனித்த கண்டிப்பை உணர்ந்தான் ஸ்ரீகாந்த். 

கிஷோர் அமைதியானவன். யாருடைய வேலையிலும் தலையிடமாட்டான். தன் வேலை உண்டு தான் உண்டு என்று இருப்பவன். அதோடு கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த அசோசியேஷனில் டிரஷரராகப் பணி புரிகிறான். அவன் கேட்டால் மாட்டேன் என்று சொல்வதற்கு மனம் சம்மதிக்கவில்லை. அதற்காக சரி என்று சொல்லி விட்டால் பின்னால் பத்து பேருக்குத் தான் பதில் சொல்ல வேண்டி வரும். என்ன செய்வதென்று ஸ்ரீகாந்துக்குக் குழப்பமாக இருந்தது. 

கிஷோர் இத்தனை தூரம் பிடிவாதமாக இருக்கிறான் என்றால் ஏதோ காரணம் இருக்க வேண்டும். அது என்ன என்று தெரிந்து கொண்டால் வேலை எளிதாகி விடும். அதனால் நேரடியாக அவனையே கேட்டான் ஸ்ரீகாந்த். 

“என்ன விஷயம்? திடீரென்று இந்த முடிவெடுத்திருக்கிறீர்கள் என்றால் ஏதோ நல்ல  காரணம் இருக்க வேண்டும். உங்களுக்கு தடையெதுவும் இல்லையென்றால் சொல்லுங்கள்” என்றான் ஆதரவோடு. 

கிஷோர் கொஞ்சம் பதற்றமாகத் தெரிந்தான். தன் யோசனைகளும் தான் செய்யும் வேலைகளும் பலருக்கும் நகைப்புக்குரியதாக இருப்பதை அவன் அறிவான். பழங்காலத்து மனிதன் என்று அவன் மனைவியே அவனைக் கிண்டல் செய்வாள். எப்போதோ கற்காலத்தில் பிறக்க வேண்டிய மனிதர் தவறுதலாக இப்போது பிறந்து விட்டார்  என்பாள். 

குடும்பம் அமைதியாக நடக்க வேண்டுமென்றால் பொறுத்துப் போக வேண்டும் என்பது அவசியம் என்பதால் மனைவிக்கு பிடித்தமான வழியில் நடந்து கொண்டாலும், கொஞ்ச நேரத்தைத் தன் சந்தோஷத்துக்காக ஒதுக்கிக் கொள்வான். தனக்குப் பிடித்த வேலைகளைச் செய்து ஆனந்தமும் திருப்தியும் அடைவான். 

அதில் ஒரு பகுதியாகவே இப்போது அவன் செய்யும் முயற்சி. ஒரு மாதத்திற்கு முன் கிஷோரின் சிறுவயது நண்பன் சொந்த வீடு கட்டி கிருஹபிரவேசம் செய்த போது நீ  வந்தால்தான் நான் புது மனை புகு விழா செய்வேன் என்று பிடிவாதம் பிடித்ததால், குடும்பத்தோடு கல்கத்தாவில் இருந்து விஜயவாடா சென்றான். 

விழா நன்றாக நடந்து முடிந்தது. மறு நாள் மனைவி மங்களகிரிக்குச் சென்று புடவை  வாங்கும் ப்ரோக்ராம் வைத்துக் கொண்டாள். காலையில் சென்று மதியம் வந்து விடலாம் என்றாள். 

“நீ போ. நான் வரவில்லை” என்றான். “உங்களை அழைத்துக் கொண்டு செல்வதை விடத் தனியாகச் செல்வதே மேல்” என்று கூறி அவள் சென்றுவிட்டாள். 

நண்பனிடம் சொல்லி ஒரு டாக்சியை வரவழைத்தான் கிஷோர். 

“எங்கே போக வேண்டும், சார்?” என்று டிரைவர் கேட்டபோது, “கிருஷ்ணா நதிக் கரையோடு எங்கு மக்கள் கூட்டம் இல்லையோ அங்கே அழைத்துச் செல். இரவு வரை சும்மா அப்படிச் சுற்றி வருவோம். நீ விரும்பும் இடத்திற்கு அழைத்துச் செல்” என்றான் கிஷோர். 

டிரைவர் தலையாட்டிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான். வானிலை சுகமாக இருந்தது. பசுமையான வயல்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன. கிஷோரின் மனம் காற்றில் மிதந்தது. நடுவில் ஒரு சிறிய ஊரில் நிறுத்தி சைவ விடுதியில் வெந்தயத் தோசை தின்று காபி குடித்தான். சாலை அருகில் இருந்த குளத்தில் பிள்ளைகள் நீச்சல் அடிப்பதை வண்டியை நிறுத்திப் பார்த்து ரசித்தான். 

அவர்கள் உற்காகமடைந்து, “சார், நீங்கள் காசு கொடுத்தால் நாங்கள் தாமரைப்  பூ பறித்துத் தருவோம்” என்றார்கள். “சரி” என்றான். அவர்கள் நதியில் குப்புறக் குதித்து பறித்து வந்த போது மறுக்காமல் எல்லாப் பூக்களையும் வாங்கினான்.  

பதினோரு மணியைத் தாண்டிய போது கிருஷ்ணா நதிக்கரையில் ஒரு சிறிய ஊரில் ஒரு கோவில் தென்பட்டது. “அது என்ன கோவில்?” என்று கேட்டான். “நான் சென்றதில்லை, சார். ஒருவேளை சிவன் கோவிலோ ராமர் கோவிலோ இருக்கும். பார்த்ததில்லை” என்றான் டிரைவர். “கோவில் திறந்திருக்கிறதா?” என்று மீண்டும் ஒரு கேள்வி கேட்டான் கிஷோர். 

“என்னமோ தெரியலை, சார். மூடியிருக்கலாம். போய்ப் பார்ப்போமா?” என்று கேட்டான் டிரைவர். 

“வா. போய்ப் பார்ப்போம்” என்றான் கிஷோர். காரை அந்தப் பக்கமாகச் செலுத்தினான் டிரைவர்.

கோவில் வரை சாலை இருந்தது. தார் ரோடு இல்லாவிட்டாலும் சாலை நன்றாகவே இருந்தது. அரை கிமீ தூரத்தில் கிருஷ்ணாநதிக் கரை இருந்தாலும் நதி நீர் கோவில் வரை பரந்திருந்தது. சிறிய கோவில். அண்மையில் வெள்ளைச் சுண்ணாம்பு அடித்திருந்தார்கள். கோவிலின் முன்பு வெள்ளை பெயிண்டால் கோலம் போட்டிருந்தது. எதிரில் சிறிய நந்தி சிலை இது சிவன் கோவில் என்று விளம்பியது.

கோவில் வாசல் திண்ணையில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்த   அர்ச்சகர் இவர்களைப் பார்த்தார். முதலில் வியப்பும் பின்னர் மகிழ்ச்சியும் அவர் முகத்தில் வெளிப்பட்டன. 

“வாங்கய்யா, வாங்க” என்று எழுந்து உத்தரீயத்தை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டார். 

“இது என்ன கோவில், ஐயா?” என்று கேட்டான் கிஷோர்.

“அன்னபூர்ணா சமேத காசி விஸ்வேஸ்வரரின் ஆலயம். மிகவும் மகிமை பொருந்திய சுவாமி. பக்தர்கள் விரும்பும் வரங்களை அருளக் கூடியவர். அர்ச்சனை செய்யலாமா?” என்று கேட்டார் அர்ச்சகர். 

“தேங்காய், பூஜை சாமான்கள் எதுவும் எடுத்து வரவில்லையே” என்றான் கிஷோர்.  

“பரவாயில்லை. செய்யச் சொன்னால் செய்கிறேன்” என்றார் அர்ச்சகர்.   

கிஷோர், தான் வழியில் வாங்கிய தாமரை பூக்களைக் கொடுத்து அர்ச்சனை செய்யச் சொன்னான். தட்டில் ஐம்பது ரூபாய் நோட்டை வைத்தான். அந்த நோட்டை பத்திரமாக எடுத்து அங்கே இருந்த உண்டியலில் போட்டார் அர்ச்சகர். 

“உங்களுக்கு அவசரம் இல்லை என்றால் கோவிலின் தல புராணம் சொல்கிறேன். கேட்கிறீர்களா?” என்று ஆசையோடு கேட்டார். 

மனைவி உடன் இருந்திருந்தால் அவசரப்படுத்தியிருப்பாள். தற்போது அந்தத் தொல்லை இல்லை என்பதால், “சரி” என்றான். அவனுக்கு அதெல்லாம் பிடிக்கும். நிம்மதியாகக் கல் தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டு, “சொல்லுங்கள் ஐயா” என்றான்.

“முன்பு திரேதாயுகத்தில் ஸ்ரீராமச்சந்திரன் சீதையைத் தேடிச் சென்ற போது இந்த இடத்திற்கு வந்தார். துயரத்தில் மூழ்கியிருந்த ராமரைப் பார்த்த சிவபெருமானின் மனம் கரைந்தது. மனித உருவில் வந்த ராமனிடம், “இந்த பவித்திரமான தலத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தால் உன் கஷ்டங்கள் தீரும்” என்றார்” என்று தல புராணம் கூறினார் அர்ச்சகர். 

சிரத்தையாகக் கேட்ட கிஷோர், சட்டைப் பையிலிருந்து ஐம்பது ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தான். அதை வங்கிக் கொண்டு கிஷோரை ஆசீர்வாதம் செய்தார்.  

“நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“கல்கத்தாவில்” என்று கூறிய கிஷோர், “போய் வருகிறோம்” என்றான். 

“கோவிலை மூடிவிட்டு நானும் கிளம்புகிறேன்” என்றார் அர்ச்சகர்.  

“எங்கள் காரில் ஏறுங்கள். உங்களை ஊரில் கொண்டு விடுகிறோம்” என்றான் கிஷோர். அவர் காரில் ஏறினார். 

“சாப்பாடு நேரம் ஆகிறது. உங்கள் சாப்பாட்டு விஷயம் என்ன?” என்று கேட்டார் அர்ச்சகர். 

“எங்காவது வழியில் பார்த்துக் கொள்வோம்” என்றான் கிஷோர்.

“இங்கு எதுவும் சரியாகக் கிடைக்காது. உங்களுக்கு மறுப்பு இல்லாவிட்டால் எங்கள் வீட்டில் சாப்பிடலாம். வாருங்கள்” என்றார் அர்ச்சகர். 

டிரைவரும் அதையே சொன்னான். “அருகில் எங்கும் நல்ல உணவு கிடைக்காது சார். உங்களால் சாப்பிட முடியாது” என்றான். சரி என்று கூற வேண்டியதாயிற்று.  

அர்ச்சகரின் வீட்டை அடைந்தார்கள். குடிக்கத் தண்ணீர் கொடுத்து சமையல் ஏற்பாடுகளில் மூழ்கினாள் அர்ச்சகரின் மனைவி. வராண்டாவில் நாடா கட்டிலை விரித்து அமரச் சொன்னார் அர்ச்சகர். தானும் அருகில் திண்ணையில் அமர்ந்து நிறைய செய்திகளைப் பேசிக் கொண்டிருந்தார். அவர் பெயர் காசீபதி. 

தன் வாழ்க்கையைப் பற்றி விவரமாகக் கூறினார். அவருடைய தாத்தாவும் தந்தையும் கூட கோவில் அர்ச்சகர்களாகவே பணி புரிந்தார்கள். காசீபதிக்கு ஒரு மகன். ஒரு மகள். மகனை இதே தொழிலில் அமர்த்தப் பிடிக்காமல் ஹைதராபாத் அனுப்பினார். அங்கு ஒரு சிறிய உத்தியோகத்தில் சேர்ந்தான். இனி வாழ்க்கையில் நிலைபெறுவான் என்று நினைக்கையில் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டான். மகள், மகனை விடப் பெரியவள். திருமணம் செய்து வைத்தார். மாப்பிளை ஒரு ஊர்சுற்றி. தீய சகவாசம், கெட்ட பழக்கங்கள் அதிகம். சிறிது காலம் குடும்பம் நடத்தி, மனைவியையும் நான்கு வயது மகனையும் விட்டு விட்டு எங்கோ சென்று விட்டான். ஒரு ஆண்டுகாலம் தேடித் பார்த்து பலனில்லாமல் போனது. உயிரோடு இருக்கிறானோ இல்லையோ என்பது தெரியவில்லை. மகள் குண்டூரில் சமையல் வேலை செய்து பிழைக்கிறாள். பேரனை அங்கேயே ஒரு வேத பாடசாலையில் சேர்த்து விட்டார். அங்கு கல்வி, இருப்பிடம், உணவு எல்லாமே இலவசம்.  

அவர் கூறியதைக் கேட்டபின்,” உங்களுக்கு வருமானம் எப்படி? சம்பளமோ வேறு பென்ஷனோ கிடைக்குமா?” என்று கேட்டான் கிஷோர்.

“எதுவும் கிடையாது ஐயா.  ஏதோ தருவோம் தருவோம் என்பார்கள் அந்தச் சான்றிதழ் கொண்டு வா, இந்தச் சான்றிதழ் கொண்டு வா என்று அலைக்கழிக்கிறார்களே தவிர எதுவும் வரவில்லை. ஆபீஸ்களைச் சுற்றி அலைந்து அலைந்து அலுத்துபோய் சம்பளம் கேட்பதையே விட்டு விட்டேன். இருப்பது நாங்கள் இருவரும்தான். இங்கு ஆண்டு பூரா எதுவும் இருக்காதே தவிர கார்த்திகை மாதத்தில் பக்தர் கூட்டம் அதிகம் இருக்கும். கிருஷ்ணா நதியில் நீராடி சிவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். அந்த ஒரு மாதத்தில் கிடைக்கும் தட்சிணை, தானியங்களால் அந்த ஆண்டு கடந்து போகும். 

ஆனால் இந்த ஆண்டு எதிரபராமல் தடை ஏற்பட்டு விட்டது. கார்த்திகை மாதம்  தொடங்கியவுடன் எங்கள் தாயாதி ஒருவர் தவறி விட்டார். எங்களுக்கு இறப்புத் தீட்டு. கோவில் வேலைக்கு உதவாது. குண்டூரில் இருந்து வேறு ஒரு பையனை வரவழைத்து  கோவில் வேலையைப் பார்க்கச் சொன்னேன். தீட்டு கழிந்து ஸ்நானம் ஆன இரண்டு நாட்களிலேயே என் தம்பியின் மருமகள் பிரசவித்தாள். அது பிறப்புத் தீட்டு. அதுவும் கோவில் வேலைக்குத் தடை. இவ்வாறு இந்த கார்த்திகை மாதத்தில் பெரிய அடி. 

அந்த சமயத்தில் கோவிலில் பூஜைகளைச் செய்த பையன் மனிதாபிமானத்தோடு எனக்கும் ஏதோ ஒரு சிறு தொகை கொடுத்தான் என்றாலும் அது எந்த மூலைக்கு? வேறு என்ன செய்வது? எல்லாம் ஈஸ்வர அனுகிரகம்.  

ஏதோ காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. என் மகள் எங்களை ஓரளவுக்குப் பார்த்துக் கொள்கிறாள்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “சமையல் ஆயிற்று. கை கால் அலம்பிக் கொண்டு வாருங்கள். பரிமாறுகிறேன்” என்றாள் அவருடைய மனைவி. 

பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தார்கள. வீட்டுக் கொல்லையில் காய்த்த கத்திரிக்காய் பொரியல், புளியங்காய் துவையல், ரசம், மோர் என்று எளிமையான உணவு. திருப்தியாக உண்டார்கள். சிறுவயதில் கிராமத்தில் பாட்டி செய்து போட்ட உணவு நினைவுக்கு வந்தது. டிரைவருக்கும் வராண்டாவில் உணவு பரிமாறினாள். 

சாப்பிட்டவுடன், “இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? சற்று நேரம் படுத்து இளைப்பாருங்கள்” என்று கூறி கட்டிலின்மேல் போர்வையை விரித்தார். அதில் படுத்ததும் உடனே தூங்கி விட்டான் கிஷோர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு டிரைவர் வந்து எழுப்பினான். 

“காபி குடித்து விட்டுச் செல்லுங்கள்” என்றார் காசிபதி. 

“பரவாயில்லை வழியில் எங்காவது குடிக்கிறோம்” என்றான் கிஷோர். 

சாப்பிட்டதற்கு ஏதாவது தொகை கொடுக்கலாமா, வேண்டாமா? கொடுத்தால் ஏதாவது நினைத்துக் கொள்வாரா என்று யோசனை செய்தான் கிஷோர். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பர்சிலிருந்து பணத்தை எடுத்த போது, அவர் கை கூப்பி வணங்கினார். 

“வேண்டாம் ஐயா. வறுமைதான். ஆனால் அதிதிக்கு உணவளித்துப் பணம் வாங்கிக் கொள்ளுமளவுக்கு ஈஸ்வரன் எங்களை கஷ்டத்தில் வைக்கவில்லை” என்றார். உடனே   பர்சை பாக்கெட்டில் வைத்துக் கொண்டான் கிஷோர்.

“உங்கள் நட்பை மறக்க மாட்டோம். நான் கூறியது நினைவிருக்கிறதல்லவா?   தேவையானால் போன் செய்கிறேன்” என்றார் காசிபதி.  

“அப்படியே ஆகட்டும். கட்டாயம் செய்யுங்கள். என் போன் நம்பரை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள்” என்றான் கிஷோர். 

அங்கிருந்து கிளம்பி வேறு மார்க்கத்தில் விஜயவாடா வந்தடைந்து மறு நாள் கல்கத்தா கிளம்பி விட்டார்கள். அங்கு தன் தினசரி வேலைகளில் மூழ்கினான் கிஷோர். 

திடீரென்று ஒரு நாள் மதியம் போன் வந்தது. “ஐயா நான் காசிபதி” என்றார். சட்டென்று நினைவு வரவில்லை. “யாருங்க?” என்றான் கிஷோர். 

“நீங்க கிஷோர் தானே? அன்று எங்கள் வீட்டுக்கு வந்தீர்களே” என்று கூறியவுடன் அந்தக் குரல் நினைவுக்கு வந்து, “ஓ நீங்களா? சௌக்கியமா?” என்று நலம் விசாரித்தான் கிஷோர். 

“நீங்கள் இங்கு வந்த போது கங்கையில் நீராடுவது பற்றிக் கேட்டேன் அல்லவா? உங்களுக்குத் தொந்தரவு இல்லை என்றால் கிளம்பி வரலாமென்றிருக்கிறேன்” என்றார்  காசிபதி. 

கிஷோருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. “இது உங்கள் நம்பர் தானே?” என்று கேட்டான். 

“என்னுடையது இல்லை. எங்கள் உறவினருடையது” என்றார் காசிபதி.

“உங்களுக்குச் சற்று நேரம் கழித்து போன் செய்கிறேன்” என்று கூறி போனை வைத்து விட்டான் கிஷோர். 

கிருஷ்ணா நதிக் கரையில் அவருடைய வீட்டுக்குச் சென்றபோது காசிபதி ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டார். “கங்கை நதிச் சங்கமம் கல்கத்தாவுக்கு அருகில் இருக்கிறதாமே?” என்று கேட்டார்.

“என்னவோ எனக்குத் தெரியாது. நான் இதுவரை சென்றதில்லை” என்றான் கிஷோர். 

“மிகவும் புனிதமான ஸ்தலம். கங்கைநதி கடலில் கலக்கும் இடம் கங்கா சங்கமம். சகல  தீர்த்தங்களும் ஒரு படி என்றால் கங்கைச் சங்கமம் ஒரு படி என்பார்கள். அத்தனை உயர்வானது. எப்படிச் செல்வது என்று கொஞ்சம் கேட்டுச் சொல்வீர்களா?” என்று கேட்டார் காசிபதி. “அதற்கென்ன, கட்டாயம் சொல்கிறேன். எங்கள் வீட்டுக்கு வாருங்கள்”  என்று சொல்லிவிட்டு வந்தான் கிஷோர். 

அதை நினைவு வைத்துக் கொண்டு இப்போது போன் செய்கிறார் அந்த அர்ச்சகர். அவரை இங்கு வரவழைத்து, கங்காசாகருக்கு அனுப்பது என்பது சாதாரணம் இல்லை. ஏதாவது ஒரு சாக்கு சொல்லி தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான். 

ஆனால் அவ்வாறு செய்வதற்கு அவன் மனம் சம்மதிக்கவில்லை. குறைந்த வசதியிலிருப்பவர்கள் சற்றும் யோசிக்காமல் பெரிய வசதியில் இருப்பவர்களுக்கு உதவுகிறார்கள். கொஞ்சம் செல்வம் சேர்த்தவர்களுக்கே இந்த தயக்கங்கள் எல்லாம். கிஷோர் தெரிந்தவர் ஒருவரிடம் கங்கா சங்கமம் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தான். 

அரை மணி நேரம் கழித்து காசிபதிக்கு போன் செய்தான். “ஐயா, கங்கா சங்கமம் பற்றிய விவரம் கேட்டறிந்தேன். மகர சங்கராந்திக்கு லட்சக்கணக்கில் மக்கள் வருவார்களாம். காலையில் கிளம்பிச் சென்றால் இரவோ அல்லது மறுநாள் காலையோ கல்கத்தா திரும்பி விடலாமாம்” என்று சொன்னான். 

“ஆமாம். ஐயா, பொங்கலன்று கங்கா சங்கமத்தில் நீராடுவது மகா புண்ணியம் தரும் செயல். அன்று அங்கு செல்வதற்கு ஏற்ப வருகிறேன். எந்த ரயியில் வரவேண்டும் என்று கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள், ஐயா” என்று தயங்கியபடி கேட்டார் காசிபதி. 

“சரி. கேட்டுச் சொல்கிறேன். முடிந்தால் பயணத்தின் போது பயன்படுத்துவதற்கு ஒரு செல் போன் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்” என்றான் கிஷோர். 

காசிபதியின் மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. கங்காசங்கமம் செல்ல வேண்டும் என்பது அவருடைய வாழ்வின் லட்சியம். தந்தை முயற்சித்துப் பார்த்தார். நடக்கவில்லை அப்படியிருக்க எதிர்பாராமல் தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று மகிழ்ந்தார். அதனால்தான் தழுதழுத்த குரலில், “சரி ஐயா. அதுவரை இந்த நம்பருக்கே செய்யுங்கள்” என்றார். 

கிஷோரின் மனம் பாரமானது. “பாவம். எத்தனை சந்தோஷப்படுகிறார், மனிதன்” என்று எண்ணி சீரியசாக முயற்சியைத் தொடங்கினான். விஜயவாடாவில் இருக்கும் நண்பனோடு தொடர்பு கொண்டு பேசினான். அவன் கல்கத்தா மெயிலில் ஸ்லீப்பரில் ரிசர்வேஷன் செய்தான். ஜனவரி பத்தாம் தேதி கிளம்பி பதினொன்றாம் தேதி காலையில் கல்கத்தா வருவது போல் ஏற்பாடு. 

காசிபதி கோவில் பொறுப்பை ஒரு பதினான்கு வயது சிறுவனிடம் ஒப்படைத்து பயணத்திற்கு வேண்டியவற்றை அடுக்கிக் கொண்டு, மனைவியை குண்டூரில் இருக்கும் மகளிடம் இறக்கி விட்டு, விஜயவாடா வந்து சேர்ந்தார். அதற்கு முன்பே ஊரில் தெரிந்தவர்களைக் கேட்டபோது அவர்கள் உபயோகிக்காமல் போட்டு வைத்த ஒரு செல் போனைக் கொடுத்தனர். 

கிஷோரின் நண்பன் விஜயவாடா ஸ்டேஷனுக்கு ஆளனுப்பி டிக்கெட்டைக் கொடுத்தனுப்பினான். அவன் காசிபதியைச் சந்தித்து ரயில் ஏற்றி விட்டான். அவனிடம் டிக்கெட்டுக்கான தொகையைக் கொடுத்து விட்டார் காசிபதி. அந்த விஷயத்தை நண்பன் கிஷோருக்கு போன் செய்து தெரிவித்தான். வேண்டாம் என்றாலும் அவர் கேட்கவில்லையாம். 

கிஷோர் ஹௌரா ஸ்டேஷனுக்கு ஆளனுப்பி காசிபதியை வீட்டுக்கு அழைத்து வரச் செய்தான்.  கிஷோர் பாலிகன்ஞ் ஏரியாவில் ஒரு பெரிய அப்பார்ட்மெண்டில் வசிக்கிறான்.  ஊரோ பேரோ தெரியாத அந்த மனிதருக்கு வெறும் அறிமுகத்தோடு இதெல்லாம் செய்வதைப் பார்த்து கிஷோரின் மனைவி முணுமுணுத்தாள். அவளுக்கு இதெல்லாம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. “நீ அவருக்காக எதுவும் செய்ய வேண்டாம். எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று மனைவியை சமாதானப்படுத்தினான்.  

அந்த பில்டிங்கில் யார் வீட்டுக்காவது விருந்தினர் வந்தால் தங்குவதற்கு என்று விருந்தினர் அறை உண்டு. அதை முன்பாகவே புக் செய்து வைத்திருந்தான். அவர் வந்தவுடன் கொஞ்சம் காபி கொடுத்து அங்கு அழைத்துச் சென்று இருக்க வைக்கலாம் என்று நினைத்தான். 

கிஷோரின் மனைவி லாவண்யா. ஒரு மகளும் ஒரு மகனும். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அனன்யா. பதினொன்றாம் வகுப்பில் படிக்கும் அபிஜித்.  

காசிபதி வீட்டிற்கு வந்தவுடன் முதலில் கை கால் கழுவிக்கொண்டு கிஷோருக்கு நன்றி தெரிவித்தார். பையிலிருந்து ஒரு பாக்கெட்டை எடுத்து, “என் மகள் கொடுக்கச் சொன்னாள்” என்று கூறி லாவண்யாவிடம் கொடுத்தார். அதில் அதிரசம், லட்டு, தேன்குழல் எல்லாம் இருந்தன. “அவளே செய்தது” என்றார். அவர் காட்டிய மரியாதை, நடந்து கொண்ட விதம் எல்லாம் லாவண்யாவுக்குப் பிடித்தன. 

காலையில் டிபன் சாப்பிட்டபின் கிஷோர், காசிபதியோடு ஒரு மனிதரைத் துணைக்கு அனுப்பி ஊரைச் சுற்றிப் பார்த்து வர அனுப்பினான். எல்லாம் பார்த்து விட்டு இரவு ஏழு மணிக்குத் திரும்பி வந்தார் காசிபதி. அவருக்கு வீட்டிலேயே சாப்பாடு ஏற்பாடு செய்தாள்  லாவண்யா 

“உங்கள் ஊரில் நீங்கள் அர்ச்சகராக இருக்கும் கோவில் உங்கள் சொந்தக் கோவிலா? நீங்கள் அங்கேயே வசிப்பீர்களா?” என்று ஏகப்பட்ட கேள்விகள் கேட்டனர் பிள்ளைகள். அவர்கள் என்றுமே அத்தனை அருகாமையில் கோவில் அர்ச்சகரைப் பார்த்ததில்லை. அவர்  பொறுமையாக எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

“உங்களுக்கு சுவாமி கதை தெரியுமா?” என்று கேட்டான் அபிஜித். 

“நிறைய தெரியும்” என்று கூறிச் சொல்ல ஆரம்பித்தார் காசிபதி. குழந்தைகள் கவனமாகக் கேட்டார்கள். இன்னும் ஒரு கதை இன்னும் ஒருகதை என்று விரும்பிக் கேட்ட போது, “போதும். பாவம் அவர் களைத்து விட்டார்” என்று கிஷோர் அவர்களைத் தடுத்தான். குழந்தைகளோடு அவர் கூறியதை எல்லாம் இவர்களும் கேட்டார்கள். 

மறுநாள் பகலில் காசிபதி, தக்ஷினேஸ்வரம் சென்று காளிதேவியை தரிசித்து வந்தார். கங்காசாகர் செல்லும் யாத்திரிகர்களுக்காக கல்கத்தாவில் முகாம்கள் ஏற்பாடு செய்தார்கள். அன்று இரவே காசிபதியை காம்ப்பிற்கு அழைத்துச் சென்றான் கிஷோர். அங்கு தெரிந்தவர்கள் இருந்ததால், காசிபதியை அவர்களிடம் ஒப்படைத்தான். ராஜஸ்தானில் இருந்து வந்த யாத்திரிகர்களின் பஸ்ஸில் அவரை ஏற்றி விட்டார்கள். 

விடியற்காலையில் பஸ் கிளம்பியது. நான்கு மணி நேரம் பிரயாணம். அங்கு பேருந்தை  விட்டிறங்கி படகில் பயணம் செய்ய வேண்டும். கரையில் இறங்கி மீண்டும் பஸ் பிடித்து ஒரு மணி நேரம் பயணம். லட்சக்கணக்கான யாத்திரிகர்கள். ஆனாலும் கங்கை சங்கமத்தில் ஸ்நானம் நன்றாக நடந்தது. மகர சங்கராந்தியன்று அங்கு நீராடினால் மறு பிறவி கிடையாது என்பது நம்பிக்கை. காசிபதி திருப்தியாக முழுகி எழுந்தார். அங்கிருந்து அவர் பதினைந்தாம் தேதி திரும்ப வருவார். பதினேழாம் தேதி இரவு மெயிலில் ஊருக்குத் திரும்புகிறார்.

பதினாறாம் தேதி ஏதோ லீவு நாளாக இருந்தது. அன்று காலையில் காசிபதி அந்த அப்பார்ட்மென்ட் வாசிகளுக்காக ஒரு புராண சொற்பொழி நிகழ்த்தினால் நன்றாக இருக்கும் என்பது கிஷோரின் யோசனை. அதையே ஸ்ரீகாந்திடம் கூறினான். யார் அவர் என்று கேட்ட ஸ்ரீகாந்திடம் கிஷோர், காசிபதியோடு தனக்கு எவ்வாறு அறிமுகம் ஏற்பட்டது என்று எல்லா விவரங்களையும் எடுத்துக் கூறினான். 

எல்லாம் பொறுமையாகக் கேட்ட ஸ்ரீகாந்த் சிரித்து விட்டான். “அவருக்கு உதவுவதற்கு   கதா காலட்சேப ஏற்பாடு எல்லாம் எதற்கு? ஆளுக்குக் கொஞ்சம் சந்தா வசூல் செய்து அவர் கையில் கொடுத்தால் போயிற்று” என்றான். 

கிஷோரின் முகம் கோபத்தால் சிவந்தது. “அவருக்கு அத்தகைய விதி ஒன்றுமில்லை. உங்களுக்கு அப்படி தோன்றுவதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. ஒருவரைப் பார்த்தால் கொடுக்கத் தோன்றும். இன்னொருவரைப் பார்த்தால் அடிக்கத் தோன்றும் என்று பழமொழி உள்ளது. சிலரை பார்த்தால் நமக்கு ஏளன பாவனை ஏற்படுகிறது. சிறிது காலம் முன்பு ஒரு சினிமா நடிகரை அழைத்து வந்தோம். வர போக செலவு, ஹோட்டலில் தங்குமிடம், அதைத் தவிர பணக் கவர் கொடுத்தோம் அவர் வந்து பெண்கள், பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் சீரழிந்த ஜோக்குகளைப் பேசினார். ஒவ்வொரு ஆண்டும் யார் யாரையோ அழைக்கிறோம். சன்மானம் செய்கிறோம். அவர்கள் எங்களுக்கு இத்தனை தந்தால் வருவோம் என்று முன் கூட்டியே சொல்லிவிட்டுத் தான் வருகிறார்கள். நாமும் அவர்கள் கேட்ட தொகையை சமர்ப்பிகிறோம்” என்றான்  ஆத்திரத்தோடு. 

ஸ்ரீகாந்திற்குக் கோபம் வந்தது. “ரொம்ப நன்றாக இருக்கிறதே. அவர்கள் எல்லோரும் புகழ்  பெற்றவர்கள்” என்றான். 

“இவருக்குப் பேரும் புகழும் இல்லாமலிருக்கலாம். ஆனால் திறமை நிறைய உள்ளது. அவர் பேசியபோது என் பிள்ளைகளும் நாங்களும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தோம். அதனால்தான் அவரை பேச வைக்கலாம் என்று கூறுகிறேன். உங்களுக்கு விருப்பமில்லாவிட்டால் சொல்லுங்கள். வேறே எங்காவது ஏற்பாடு செய்கிறேன். அதை விட்டு விட்டு ஒரு நல்ல அறிஞரை யாசகராக நடத்த நினைக்கும் தவறைச் செய்யாதீர்கள்” என்றான். 

ஸ்ரீகாந்த் யோசனையில் ஆழ்ந்தான். “அடடா. எனக்கு அத்தகைய தவறான எண்ணம் இல்லை கிஷோர்” என்று அவனை சமாதானப்படுத்த முயன்றான்.  

“பரவாயில்லை விடுங்கள். இதில் உங்கள் தவறு எதுவுமில்லை. காலம் அப்படி இருக்கிறது. அப்போது எப்போதோ பண்டைய காலத்தில் அரசர்கள் பண்டிதர்களை கௌரவித்தார்கள். இப்போது அதெல்லாம் போய் விட்டது. பண்டிதர்கள் என்றால் அவர்களைக் கிண்டல் செய்வது வழக்கமாகி விட்டது. அவர்களின் திறமையை அடையாளம் காண்பதற்கு நம்மிடம் திறமை இல்லை. வயதான பண்டிதர்களுக்கு பென்ஷன் கொடுப்பதற்கு அரசாங்கங்கள் அழுகின்றன” என்றான் கிஷோர் ரோஷத்தோடு. 

“போகிறது விடுங்கள். தேசத்தை நாம் சரி செய்ய முடியுமா என்ன? காசிபதியை பேசச் செய்வோம். எத்தனை கொடுக்கலாம்?” என்று விஷயத்திற்கு வந்தான் ஸ்ரீகாந்த். 

“ராஜாராவோடு பேசி நீங்கள் அதை முடிவு செய்யுங்கள்” என்றான் கிஷோர். 

அவர்களின் அசோசியேஷனுக்கு ராஜாராவ் பிரசிடென்ட், ஸ்ரீகாந்த் செக்ரெடரி. மொத்தத்தில் காசிபதியின் சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பில்டிங்கில்   கிரௌண்ட் ப்ளோரில் ஒரு ஹால் இருந்தது. அங்கு இது போன்ற நிகழ்சிகள் நடப்பது வழக்கம். காலை பத்தரை மணிக்கு அனைவரும் அங்கு வந்து கூட வேண்டும் என்று செய்தி அறிவிக்கப்பட்டது. 

காசிபதி பதினைந்தாம் தேதி மதியம் திரும்பி வந்தார். அவர் முகத்தில் சொல்ல முடியாத ஆனந்தம். வந்தவுடனே கிஷோரின் கைகளைப் பிடித்துக் கொண்டார். “ஐயா, உங்கள் நன்றிக்கடனை இந்த ஜென்மத்தில் இல்லை இன்னும் ஆயிரம் பிறவிகள் எடுத்தாலும் தீர்த்துக் கொள்ள முடியாது. எனக்கு கங்காசங்கம யாத்திரை செய்து வைத்துப் புண்ணியம் கட்டிக் கொண்டீர்கள். எத்தனையோ ஆண்டுகளாக நினைத்துக் கொண்டிருந்த கோரிக்கை நிறைவேறும் என்று கனவில் கூட நினைக்கவில்லை” என்றார். 

கிஷோருக்கு சங்கோஜமாக இருந்தது. “நான் என்ன பெரிதாகச் செய்து விட்டேன்?” என்றான். அதன் பிறகு மறுநாள் ப்ரோக்ராம் ஏற்பாடு பற்றி காசிபதியிடம் கூறினான். அவர் மிகவும் பரபரப்படைந்தார். ”இதென்ன ஐயா, பெரியவர்களின் எதிரில் நான் என்ன பேச முடியும்? எனக்கென்ன தெரியும்?” என்றார்.

“எல்லாம் பரவாயில்லை. அன்று உங்கள் கோவிலில் எனக்குச் சொன்ன தல புராணத்தை இங்கும் சொல்லுங்கள். உங்கள் அனுபவங்களைக் கூறுங்கள்” என்றான். 

கிஷோரின் குழந்தைகள் தங்கள் வீட்டுக்கு வந்த பெரியவர் கதைகள் நன்றாகச் சொல்வார் என்று தம் தோழர்களிடம் சொல்லவே, அவர்கள், “நாங்களும் நாளை நிகழ்ச்சிக்கு வருவோம்” என்று சொனனர்களாம். 

மறுநாள் காலை பத்து மணிக்கே காசிபதியை ஹாலுக்கு அழைத்துச் சென்றான் கிஷோர். சற்று நேரத்தில் ராஜாராவும் ஸ்ரீகாந்தும் வந்தார்கள். பத்தரைக்கு மக்கள் வரத் தொடங்கினார்கள். இருபது பேர் வந்தார்கள். அத்தனை பேரைப் பார்த்ததும் காசிபதிக்கு வாய் உலர்ந்து விட்டது. கடவுளை நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். 

நிகழ்ச்சி தொடங்கியது. ஸ்ரீகாந்த் அனைவருக்கும் வரவேற்பு கூறினான். கிஷோர் காசிபதியை சபைக்கு அறிமுகம் செய்தான். மேலும் சிலர் வந்து அமர்ந்தார்கள். காசிபதி பேசத் தொடங்கினர். 

அவர் மேடை மேல் தரையில் அமர்ந்து கொண்டார். “வந்தே சம்புமுமாபதிம்” என்ற ஸ்லோகத்தைச் சொல்லி பேச ஆரம்பித்தார். என்ன பேசுவது என்று அவர் தயங்கினாலும் மைக்கைப் பிடித்ததும் அவருக்கு எங்கும் தடை ஏற்படவில்லை. 

“மூன்று தலைமுறைகளாக ஈஸ்வரனுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்ற வம்சம் எங்களுடையது. என் தாத்தா மகா பக்தர். அவர் பெயரும் காசிபதியே. மூன்று முறை சிவநாம கோடி எழுதியுள்ளார். அவர் மகான்யாச பூர்வ ஏகாதச ருத்ராபிஷேகம் செய்தால் பார்ப்பவர் தம்மை மறந்து பவரசத்தில் ஆழ்ந்து போவர்”  என்று பழைய செய்திகளைச் சொன்னார்.  

அதன் பிறகு சிவபிரானின் மகிமைகளைக் கூறினார். அவர் மார்கண்டேயனின் கதையைக் கூறியபோது மக்கள் தம்மை மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். நடுநடுவில் ஸ்தோத்திரங்களையும் செய்யுட்களையும் மந்திரங்களையும் அற்புதமாகக் கூறிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரம் ஒரு கண நேரமாகக் கடந்து போனது. காசிபதி கைக்  கடியாரத்தைப் பார்த்துக் கொண்டார். 

“சபையினர் எனக்கு ஒன்றரை மணி நேரம் கொடுத்தார்கள். ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. இனி இங்கிருக்கும் பக்தர்கள் ஏதாவது கேள்வி கேட்டால் அல்லது ஏதாவது கதை கேட்க வேண்டும் என்று விரும்பினால் கேட்கலாம். சொல்வதற்கு சித்தமாக உள்ளேன்” என்றார். 

பார்வையாளர்களில் இருந்து சோமேஸ்வர ராவ் எழுந்தார். அவர் வயது எழுபதுக்கு மேல். மகனோடு இருக்கிறார். “ஐயா, என் சிறு வயதில் எங்கள் ஊர் சிவாலயத்தில் அர்ச்சகர் ஈஸ்வரனின் சுவர்ண மாலை ஸ்தோத்திரம் பாடுவது வழக்கம். உங்களுக்கு அது தெரியுமா?” என்று கேட்டார்.  

“தெரியும். பெரியவரே. ஆதிசங்கர பகவத்பாதாள் இயற்றிய அற்புதமான ஸ்தோத்திரம் அது” என்றார் காசிபதி. “இப்போது சொல்வீர்களா?” என்று கேட்டார் சோமேஸ்வர ராவ். 

“அது என் பாக்கியம்” என்று கூறிய காசிபதி, கைகளைக் குவித்து, “இதிலுள்ள ஒவ்வொரு சுலோகமும் அக்ஷர மாலையில் இருக்கும் அட்சரங்களோடு தொடங்கும்” என்று விவரித்து விட்டு ஆரம்பித்தார். 

“அத கதமபி மத்ரஸனாம் த்வத்குண லேசைர்விஸோதயாமி விபோ 

சாம்ப சதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம்” 

என்று தொடங்கி கால் மணி நேரம் தடையின்றி ஸ்தோத்திரத்தை முழங்கினார். கேட்டவர்கள் தம்மை மறந்தனர். 

சோமேஸ்வர ராவின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அவர் பாடி முடித்ததும் எழுந்து சென்று பர்சைத் திறந்து காசிபதியின் கைகளில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை வைத்தார். காசிபதி அவரைப் பணிவோடு வணங்கினார். அவருடைய பெயரைக் கேட்டு அறிந்து கொண்டார். 

“சிவ பக்தர் ஸ்ரீ சோமேஸ்வர ராவ் அவர்கள் என்னை ஆசீர்வதித்து ஐநூறு ரூபாய் வழங்கியுள்ளார். அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யங்களை அருளும்படி பரமேஸ்வரனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார் காசிபதி.  

அதைப் பார்த்து மேலும் சிலர் எழுந்தார்கள். நூறு, இருநூறு என்று அவரவருக்குத்  தோன்றியதைக் கொடுத்தார்கள். மொத்தத்தில் அங்கு வந்த அனைவரும் ஏதோ கொஞ்சம் கொடுத்தார்கள். எல்லோருக்கும் பிரார்த்தனை செய்த பின் மேலும் பத்து நிமிடங்கள் பேசி மங்களம் பாடி நிறைவு செய்தார் காசிபதி. அசோசியேஷனின் தரப்பில் சால்வை போர்த்தி  கவரைக் கொடுத்தார் ராஜாராவ். நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் அனைவரும் காசிபதியைப் பாராட்டினார்கள் உரை மிக நன்றாக இருந்ததாகப் புகழ்ந்தார்கள். கிஷோருக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. 

வீட்டுக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கிஷோருக்கு போன் வந்தது. மற்றொரு அசோசியேஷன் செக்ரெடரி போன் செய்தார். “ஏதோ நல்ல ப்ரோக்ராம் செய்தீர்களாமே. அவர் யார்? இன்னும் எத்தனை நாட்கள் இருப்பார்?” என்று கேட்டார். 

“நாளை கிளம்பி விடுவார்” என்று கூறியபோது, “இன்று மாலை எங்கள் அசோசியேஷனின் மாதாந்திர மீட்டிங் உள்ளது. அதில் பேசுவாரா என்று கேட்டுச் சொல்லுங்கள்” என்றார்.

காசிபதியைக் கேட்டுவிட்டு, “சரி. அழைத்து வருகிறேன்” என்றான் கிஷோர். 

அங்கும் காசிபதியின் சொற்பொழிவு மிகப் பெரும் வெற்றியாக அமைந்தது. அங்கும் பார்வையாளர்கள் உபன்யாசம் செய்தவரின் கையில் பக்தியோடு பணத்தை வைத்து வணங்கி ஆசி பெற்றார்கள். சபையின் தலைவரும் ஒரு தொகையை கவரில் வைத்துக் கொடுத்தார். அன்று இரவு சாப்பாட்டு நேரத்தில் கிஷோரின் பிள்ளைகள் காசிபதியோடு பேசிக் கொண்டிருந்தார்கள். 

“நீங்கள் கூறிய கதைகளில் பக்தர்கள் கஷ்டத்தில் இருக்கும் போது பிரார்த்தனை செய்தால் கடவுள் வருவார் என்று கூறினீர்கள் அல்லவா? அந்த நாட்களில் கடவுள் நிஜமாகவே வந்தாரா?” என்று கேட்டான் அபிஜித். 

“அந்த நாட்களில் மட்டுமல்ல. இந்த நாட்களிலும் வருவார்” என்றார் காசிபதி. 

“நீங்கள் சொல்வது உண்மையா? இப்போது கூட வருவாரா?” என்று ஆச்சர்யமாகக் கேட்டாள் அனன்யா.

“ஏன் வரமாட்டார்? கட்டாயம் வருவார்” என்றார் காசிபதி. 

“அப்படிப்பட்ட இன்சிடென்ட்ஸ் உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்டான் அபிஜித். 

“வேறு ஏதோ எதற்கு? உதாரணத்திற்கு நான் உங்கள் முன்னால் இருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரும் பணம் இந்த ஆண்டு எனக்கு வரவில்லை. உங்கள் தந்தையார் எங்கள் ஊருக்கு வந்தார். எங்கள் இருவருக்கும் அறிமுகம் ஆனது. கங்காசங்கமம் பற்றிக் கூறினேன். என் மகள் என்னை உற்சாகப்படுத்தி செலவுக்கு நான் தருகிறேன். போய் வாருங்கள் என்றாள். இந்த ஆண்டு வேண்டாம். மற்றொரு முறை போகிறேன் என்று சொன்னாலும் நம் கஷ்டங்கள் எப்போதும் இருப்பவையே. அடுத்த ஆண்டு கிஷோர் சார் அங்கிருந்து ஊர் மாறினாலும் மாறிவிடுவார். போய் வாருங்கள் என்று பிடிவாதமாக அனுப்பி வைத்தாள். சரி. வாய்ப்பு வந்த போது மறுப்பது சரியல்ல என்று கிளம்பினேன். 

நான் எத்தனையோ வருடங்களாக ஆசைப்பட்ட கங்காசங்கமத்தில் புனித நீராடியதை,  அதிலும் மகர சங்கராந்தியன்று நீராடியதை நினைத்து என் பிறவி உய்வடைந்தது என்று மகிழ்ந்திருக்கையில், எதிர்பாராமல் உங்கள் தந்தையார் இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். இந்தப் பணத்தை சிக்கனமாகச் செலவழித்தால் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் கூட கடந்து விடும். இந்த வருடம் கிருஷ்ணா புஷ்கரம் வருகிறது. மீண்டும் எனக்கு தட்சிணையும் தானங்களும் கிடைக்கும். தெய்வத்தின் அருள் எப்போதும் பக்தர்கள் மீது இருக்கும் என்பதற்கு இதை விட வேறு என்ன நிதரிசனம் வேண்டும் சொல்லுங்கள்?” என்றார் தழுதழுத்த குரலில். 

பிள்ளைகள் வியந்தனர். கிஷோரும் லாவண்யாவும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். மறுநாள் அவரை ரயில் ஏற்றி விடுவதற்கு குடும்பத்தில் அனைவரும் ஸ்டேஷனுக்குச் சென்றனர். மீண்டுமொரு முறை நன்றி கூறி, “புஷ்கரத்திற்கு எங்கள் ஊருக்கு வாருங்கள் அத்தனை கூட்டம் இருக்காது. நிம்மதியாக ஸ்நானமும் தெய்வ தரிசனமும் செய்து கொள்ளலாம்” என்று வரவேற்று விட்டு ரயில் ஏறினார் காசிபதி. 


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ஈஸ்வர அனுக்ரஹம்”

  1. இக்கதையை ப் படிப்பதே ஓர் ஆன்மீக அனுபவமாகப் படுகிறது. இது போன்ற கதைகள் தெலுங்கிலும் கன்னடத்திலும் தான் சாத்தியம். தமிழில் எழுதினால் பத்திரிகைகள் வெளியிடுவதில்லை. அருமையான மொழிபெயர்ப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.