1957-2

This entry is part 2 of 4 in the series 1950 களின் கதைகள்

புது ஊருக்கோ புது நாட்டுக்கோ, இல்லை புதிய வேலைக்கோ போனதும் முதல் வாரம் மிக மெதுவாக நகரும். வீடு தேடுவது போன்ற புது அனுபவங்கள் மட்டுமல்ல, தினசரி சாமான்கள் வாங்கும் சாதாரண நிகழ்வுகள் கூட மனதில் பதிந்துவிடும். ரயில் நகரத் தொடங்கும்போது கண்ணில் நிற்கும் காட்சிகள் போல. அந்த வாரம் முடிந்ததும் ஏதோ நீண்ட காலம் கடந்தது போல, ‘அப்பாடா!’ என்று இருக்கும். பிறகு வாரங்கள் வேகம் எடுத்து விரைவாக ஓடி மனதில் இருந்து மறைந்துவிடும். முதல் வாரம் மட்டும் பசுமையாக நிற்கும். நான் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்த முதல் வாரத்தின் நினைவுத் துண்டுகளை ஒன்றுசேர்த்து…

முதல் வாரம்

பள்ளிக்கூடம் திறந்த முதல்நாள். முதல் படிவத்தின் (இன்றைய கணக்கில் ஆறாம் வகுப்பு) முதல் பாடம், ஆங்கிலம். வகுப்பில் பெரும்பாலோர் சுற்றுவட்டாரத்து கிராமங்களில் இருந்து வந்த மாணவர்கள். அதுவரை காதில் விழுந்த ஒன்றிரண்டு ஆங்கில வார்த்தைகளை மட்டுமே அறிந்த அவர்களுக்கு அம்மொழியின் முதல் அறிமுகம். அதனால் ஆசிரியர் கேட்கிறார்.

“யாருக்காவது இங்க்லீஷ் எழுத்துக்கள் ஏற்கனவே தெரியுமா?”

“பெரிய எழுத்து, அச்சின் சிறிய எழுத்து, கையால் எழுதும் எழுத்து எல்லாம் தெரியுமே” என்று முந்திரிக்கொட்டை போல எழுந்து குமரநாதன் சொல்லப் போகிறான்.

“எங்கே போர்டில் வந்து எழுது! பார்க்கலாம்” என்று ஒரு சாக்பீஸை நீட்டுகிறார். அவன் அக்காக்கள் சொல்லிக்கொடுத்தது போல தலையை நிமிர்த்தி, சாக்கட்டியை இலேசாகப்பிடித்து ‘ஐ’க்கும் ‘ஜே’க்கும் தலையில் புள்ளிவைத்து ‘டி’க்கு மார்பில் கோடு இழுத்து…

ஆனால் நடந்தது வேறு.

ஐந்தாம் வகுப்பை முடித்து உயர்நிலைப்பள்ளியில் நுழைவது ஜூன் பின்பாதியில் நடந்திருக்க வேண்டும். ஆசிய ஃப்ளுவினால் அந்த ஆண்டு மூன்றுவாரம் தள்ளிப்போய்விட்டது. தெருக்கோடியில் இருந்த குழந்தைப்பள்ளியை உதறித்தள்ளி பெரிய பையன்களுக்கு சமமாகப் பெரிய பள்ளியில் கால்வைக்க குமரநாதன் காட்டிய அவசரம் அந்த வைரஸுக்கு எட்டவில்லை. தினமும் காலையில் பருப்பு சாதமும் பச்சடியும் சாப்பிட்டு புத்தகப்பையை சுமந்து கடைத்தெரு வரை நடந்துவிட்டு வந்தான். அக்காக்கள் படித்து நிஜமாகவே கிழித்த ஆங்கிலப் புத்தகத்தை மாலையில் சத்தம்போட்டு படித்தான்.

ஒருவழியாக ஜூலை இரண்டாவது திங்கட்கிழமை வந்தது. அப்பாவுடன் உட்கார்ந்து சாப்பிட்டான். அவருக்கு ஊரின் கோடியில் இருந்த ரயில் நிலையத்தில் பார்சல் க்ளார்க் வேலை. சைக்கிளில் போனாலும் அரை மணியாவது ஆகும்.

சௌந்தரம் அவன் முகவாயைப் பிடித்து தலையைப் படிய வாரியதும் காலை ஒன்பது மணிக்கே கிளம்பினான். அம்மாவுக்கு அவனை உயர் வகுப்புப் பையன்களின் துணையில் அனுப்ப ஆசை. அவனுக்குத்தான் அவர்களுக்காகக் காத்திருக்க மனமில்லை.

“நான் வெற்றிவேலுடன் போறேன்.”

“முன்னாடியே ஏன் கிளம்பறே? அங்கே போய் கூரை போடப்போறியா?” என்று சங்கரி கேலிசெய்தாள்.

அவன் சேர்ந்திருந்த பசுபதீஸ்வரர் பள்ளிக்கூடத்தில், தலைமை ஆசிரியர் அறைக்கும் அதை ஒட்டிய அலுவலகத்துக்கும் மட்டுமே செங்கல் மேல்தளம். அவளும் சௌந்தரமும் படித்த உமையம்மாள் இடைநிலைப் பள்ளியில் எல்லாமே செங்கல் கட்டடங்கள் என்பதால் இளக்காரம்.

“உன் பள்ளிக்கூடத்தில மூணாம் ஃபார்ம் வரைக்கும் தானே? அதை முடிச்சதும் நீ வீட்டிலியே குண்டுசட்டியில குதிரை ஓட்டணுமே” என்று மட்டம் தட்டினான்.

அமராவதியில் வெள்ளம் ஓடியதால் நதியைக் கடக்க பாலம். அதில் நுழைவதற்கு முன்னால் ஆரம்பப்பள்ளி நண்பன் வெற்றிவேலின் வீடு. அவனுடன் சேர்ந்து பாலத்தின் கைப்பிடியை ஒட்டி நடந்தான். எதிரில் திண்டுக்கல் எக்ஸ்ப்ரெஸ் பஸ். அதை ஓட்டிய எக்ஸ்-சர்வீஸ்மன்னுக்கு ஒரு சல்யுட். அவர் மறுவணக்கம் செலுத்த, குமரநாதனுக்கு கேரம்போர்டில் சிவப்பையும் அதைத்தொடர்ந்து இன்னொரு காயையும் பைக்குள் தள்ளிய சந்தோஷம்.

நுழைவாயிலில் பள்ளிக்கூடத்தின் பெயரைத் தாங்கிய கான்க்ரீட் வளைவு. அதன் கீழே நடந்தபோது புது உலகத்தில் நுழைந்ததுபோல இருந்தது. எதிரே பெரிய அரசமரம் பள்ளிக்கூடத்தை இரண்டாகப் பிரித்தது. அதன் நிழலில் ஒரு கூரைக் கொட்டகையும், உள்ளே மேஜை நாற்காலிகளும். ஆசிரியர்களுக்கான ஓய்விடம். அதையும் தாண்டி பெரிய திடல், விளையாட்டு மைதானம். இன்னும் ஆறு ஆண்டுகளில் அவன் ஒரு கோடியில் இருந்து இன்னொரு கோடிக்கு உயரப்போகிறான்.

பத்துமணிக்கு ஐந்து நிமிடங்கள் முன்பே முதல்மணி அடித்ததும் திடலில் உயர்வகுப்பு மாணவர்கள் ப வடிவில் அணிவகுத்தார்கள்.

முதலில் தேசிய வாழ்த்து

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரதமணித் திருநாடு!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!! வந்தே மாதரம்!!!

பாடி முடித்ததும் கதர் வேட்டியும் பழுப்பு நிறக் கதர் ஜிப்பாவும் அணிந்த தலைமை ஆசிரியர் மூவர்ணக் கொடியை உயர்த்தி பறக்கவிட்டார். ஆறாம் படிவம் ஏ வகுப்பின் (VI-A) மானிடர் ஒரு தப்படி முன்னால்வைத்து தேசியக்கொடிக்கு சல்யுட் வைத்தான்.

“சிக்ஸ்த் ஃபார்ம் ஏ, பாரதியார்!”

தொடர்ந்து வரிசையாக மற்ற வகுப்புகளின் மாணவத்தலைவர்கள் அவற்றின் பெயர்களை உரக்கச்சொல்லி வணங்கினார்கள்.

வகுப்பு பிரிக்காத முதல்படிவ மாணவர்கள் ஒன்றாக நின்று பிரமிப்புடன் பார்த்தார்கள். வாழ்த்து முடிந்து மேல்வகுப்பினர் ஒற்றை வரிசையில் தங்கள் அறைக்குச் சென்றார்கள். புதுமுகங்களை நான்கு ஆசிரியர்கள் தெற்கு ஓரத்தில் கூட்டினார்கள்.

“வெற்றிவேல்! முருகேசன்!… நீங்க எல்லாம் ஏ செக்ஷன்.”

மீசைவைத்த இளம் ஆசிரியர் பின்னால் ஒரு வரிசை சென்றது.

கும்பல் குறையத் தொடங்கியது. முதல் மூன்று வகுப்புகளுக்கு அழைக்கப்படாத முப்பது பையன்களில் குமரநாதன். அவர்களை தடியான வெள்ளை சட்டை அணிந்த ஆசிரியர் அழைத்துப்போனார். டி வகுப்பு முதல்படிவக் கட்டடத்தை ஒட்டிக்கொண்டு செங்கல் சுவர் கூட இல்லாத கூரைக்கொட்டகை. நல்ல வேளை! சங்கரி அவனைக் கேலிசெய்ய அங்கே இல்லை. உள்ளே எட்டிப்பார்த்தபோது புத்தம்புதிய பெஞ்ச்சுக்கள், மை சொட்டுகளோ எண்ணெய் கறைகளோ இல்லாத எழுதுமேஜைகள். அதைச்சொல்லி அவளிடம் பெருமை அடித்துக்கொள்ளலாம்.

ஆசிரியர் உயரம் பார்த்து உட்கார வைத்தார்.

“என் பெயர் அம்பிகைபாலன். இப்ப நீங்க…”

ஒவ்வொருவரும் எழுந்து பெயர்சொல்லிவிட்டு அமர்ந்தார்கள்.

பெரியசாமி

பாலகிருஷ்ணன்

குமரநாதன்

அனந்தநாராயணன்

தட்சிணாமூர்த்தி

பிச்சைமுத்து, வேலுசாமி, பால்ராஜ், தாந்தோணிமுத்து… பின்வரிசையில். மற்றவர்களை விட அவர்களுக்கு இரண்டுமூன்று வயது அதிகம். அது உயரத்தில் வெளிப்பட்டது.

“யாருக்கு போர்டில் எழுதத் தெரியும்?”

நான்கு முந்திரிக்கொட்டைகள் கைதூக்கின.

குமரநாதனை அழைத்தார்.

“நான் சொல்ற பெயர்களை எழுதணும்!”

“சரி சார்!”

புதுக்கருக்கு அழியாத கரும்பலகையில் உடையாத முழு சாக்-கட்டியால் ஆசிரியர் சொல்லச்சொல்ல இரண்டு வரிசைகளில் பளிச் என்று எழுதினான்.

VI-A பாரதியார் V-A சுபாஷ்சந்திர போஸ்

VI-B மகாத்மா காந்தி V-B ஜவஹர்லால் நேரு

V-C வல்லப்பாய் படேல்

………………..

II-A ராஜேந்திர பிரசாத் I-A ஜான்ஸி ராணி

II-B வ. உ. சி. I-B கட்டபொம்மன்

II-C பகத்சிங் I-C திலகர்

I-D —–

“I-D இந்த வருஷம் தான் புதுசா வந்தது. இனிமேலதான் இதுக்கு பெயர் வைக்கணும். அது நம்ம முதல் வேலை. இதில் இல்லாத பெயரா சொல்லுங்க பார்க்கலாம்!”

“திருவள்ளுவர்.”

“மிக உயர்ந்தவர் ஆனா… இதில இருக்குறவங்க எல்லாருமே சுதந்திரப் போராட்டத்தில ஈடுபட்டவங்க. அதனால…”

“சுபாஷ் சந்திர போஸ்.”

“ஏற்கனவே இருக்கு” என்று அந்தப் பெயரைக் காட்டினார்.

“ஜார்ஜ் வாஷிங்டன்.”

“அவரும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினவர். ஆனா நமக்காக அல்ல.”

இப்படிப்பட்ட கேள்வியை எதிர்பார்க்காத மாணவர்களுக்கு யோசிக்கும் மௌனம். ஆசிரியர் அவன் பக்கம் திரும்பினார்.

“உன் பெயரை இன்னொருவாட்டி சொல்!”

“குமரநாதன்.”

அவன் தாய் வயிற்றில் இருந்தபோது, காமாட்சி அத்தை விதவையானாள். புகுந்த வீட்டின் ஏழ்மையால் அண்ணனுடன் வசிக்க வந்தாள். தன் பெண்களுக்குப் புதுமையாகப் பெயர்வைக்க அவள் மாமியார் ஒத்துக்கொள்ள வில்லை. குடும்பத்துக்கு புதுவளம் கொண்டுவரப் போகும் குழந்தைக்கு, ராமநாதன் ஜெயராமன் மீனாட்சி சுந்தரி என்ற வழக்கமான பெயர்களாக இல்லாமல் புதிதாக இருக்கவேண்டும் என்பது அவள் ஆசை. பெண் என்றால் நித்யகலா, பையனாக இருந்தால்…

“எனக்கு இரண்டு தேசபக்தர்களின் பெயர்களைச் சேர்த்து வச்சாங்க…” என்றான் பெருமையுடன்.

“அப்படியா? யாரெல்லாம்?”

“திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன்.”

“இரண்டுமே நல்ல பெயர்கள். இதில இல்லாத பெயர்கள். அதனால எதை வைக்கலாம்?” என்று யோசிப்பதுபோல கன்னத்தில் கைவைத்தார்.

மாணவர்கள் இரண்டு பெயர்களையும் உரக்கச்சொல்ல…

“சைலன்ஸ்! ஜனநாயக முறையில தேர்ந்தெடுக்கப் போறோம். திருப்பூர் குமரன் சிலையை நீங்க நகரத்தின் பூங்காவில பார்த்திருக்கலாம். கொடிபிடித்துக்கொண்டே நம்ம நாட்டுக்கு உயிர்கொடுத்த தியாகி. யாரெல்லாம் அவருக்கு?”

கைகள் எழுந்தன. கண்களை ஓட்டி,

“ம்ம் மொத்தம் பதினெட்டு. அப்ப மீதி…”

“பன்னிரண்டு.” என்று ஒருவன் கூவ.

“அது வாஞ்சிநாதன் அவர்களுக்கு. அவரும் நாட்டுக்காக உயிர்துறந்த மாவீரர். புதுசா இன்னொரு வகுப்பு திறந்தா அவர் பெயரை நாம் சிபாரிசு செய்யலாம், எப்படி?”

“II-D வாஞ்சிநாதன்” என்றான் ஒருவன்.

“நம்ம வகுப்பின் பெயர் திருப்பூர் குமரன். அவர் மாதிரி நீங்களும் நாட்டுப்பற்றுடன் இருக்கணும். இப்ப அவர் படத்தை வரையப் போறோம். நமக்கு ஒரு சுவர் தான் இருக்கு” என்று கைநீட்டினார். எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். அடுத்த வகுப்பின் வெளிச்சுவர். “அங்கே தான் வரையணும்.”

“குமரநாதன்! எல்லாத்தையும் அழி!” என்றதும் டஸ்டரால் அவன் அதைச் செய்தான்.

அவர் கரும்பலகையின் இடது பாதியில் குல்லா அணிந்து கொடிபிடித்த குமரனின் படத்தை வரைந்தார்.

“இதைவிட சிறப்பா யாராவது வரைய முடியுமா?”

யாரும் பதில்சொல்லவில்லை.

“அப்படி ஒருத்தன் செய்தா நான் பெருமைப்படுவேன். ம்ம்.. தோல்விக்கு பயப்பட்டா எந்தப் போட்டியிலும் வெற்றி கிட்டாது. ம்ம்!”

மூன்றால் வரிசையில் ஒருவன் எழுந்து நின்றான்.

“தைரியமா வா!”

குமரநாதனின் பக்கத்தில் வந்து நின்றான்.

“உன் பெயர்?”

“தாந்தோணிமுத்து.”

சாக்கட்டியை நீட்டினார். அவன் அவர் படத்தைப்பார்த்து அதே போல கோடுகள் இழுத்து புள்ளிகள் வைத்தான்.

“எது நல்லா இருக்கு?”

தாந்தோணிமுத்துவின் படத்தில் கலையம்சம் இருந்ததாக குமரநாதன் நினைத்தான். அது எது என்று சொல்லத்தெரியாததால் மற்ற மாணவர்களைப்போல அவனும் மௌனம் மேற்கொண்டான்.

“நானே சொல்றேன். தாந்தோணிமுத்து! நீ நாளை காலை ஒரு மணி முன்னதா வரணும். நான் கறுப்பு பெயின்ட்டும் ப்ரஷும் எடுத்துட்டு வருவேன். நாம வேலையை முடிச்சிரலாம்.”

அவன் ஒப்புதலாகத் தலையசைத்து தன் இடத்திற்குப் போனான்.

“குமரநாதன் நீ தான் மானிடர். நாளைக்கு நாட்டு வாழ்த்து முடிஞ்சதும் நீ முன்னால வந்து நின்னு கொடிக்கு வணக்கம் செலுத்தணும், சரியா?”

குமரநாதனுக்கு ஆசிரியரைப் பிடித்துவிட்டது.

பியுன் ஒரு புத்தகக்கட்டை எடுத்துவந்தான். அதில் பாட வரிசையில் புதுப்புத்தகங்கள். குமரநாதனின் தந்தையைப்போல ஏற்கனவே பணம் செலுத்தியவர்களுக்கு. ஆங்கிலம் மட்டும் மாறியதால் அதில் இருபத்தைந்து பிரதிகள். கட்டைப் பிரித்து அத்துடன் வந்த ரசீதுகளைப் பார்த்து புத்தகங்களை விநியோகித்தார்.

குமரநாதன் புத்தகங்களை ஜாக்கிரதையாகப் பையில் வைத்துக்கொண்டான்.

“தெரிஞ்சவங்க கிட்டேர்ந்து யாரெல்லாம் பழைய புத்தகம் வாங்கிட்டீங்க?”

பத்துப்பன்னிரண்டு கைகள் உயர்ந்தன.

“வேற யாருக்காவது தேவைப்பட்டா சொல்லுங்க! நான் ஏற்பாடு செய்வேன்.”

ஆங்கிலம், கணிதம், ஆங்கில இலக்கணம், சமூகப்பாடம் முடிந்ததும் அப்பாடா! ஆரம்பப்பள்ளியில் அங்குமிங்கும் அலைந்தவர்களுக்கு ஒரே இடத்தில் அமர்வதும் சமூகப்பாடத்திற்கு வேறொரு ஆசிரியர் வகுப்பில் நுழைவதும் புது அனுபவம். பாதிக்கும் அதிகமான பேர் நடக்கும் தொலைவில் வசித்ததால் மதிய உணவுக்கு வீட்டுப்பக்கம் நடைகட்டினார்கள். மீதி பேர் சாப்பாட்டு பாத்திரங்களைத் திறந்தார்கள். பின் பகுதியில் கிராமத்து மாணவர்களின் பெரிய பித்தளை தூக்குகள். முன்னே சின்ன கேரியர்களின் மூடியைத் திறக்கும் ஓசை.

குமரநாதனின் மேஜையில் அவன் மட்டும். அதனால் அடுத்த மேஜையில் தனியாக இருந்தவனுடன் சேர்ந்துகொண்டான்.

“என்ன கொண்டுவந்திருக்கே?” என்றான் மற்றவன்.

“மீன் கறி, தயிர்சாதம்.” இரண்டு டப்பாக்களில் தனித்தனியாக.

“மீன் கறியா?”

குமரநாதன் சிறிய டப்பாவைத் திறந்து காட்டினான்.

“நீளமா வெட்டி வதக்கின கத்திரிக்காய் பொடிக்கறி. பாக்கறதுக்கு மீன் மாதிரி இல்ல?”

“ஆமா.”

செய்தித்தாளில் சுற்றிய வாழை இலையைப் பிரித்ததும் தோசையின் வாசனை.

“உன் பேர்…”

“விஜயகோவிந்த்.”

நீண்ட பெயர் என்பதால், “உன் வீட்டில உன்னை என்னன்னு கூப்பிடுவா?”

“விக்கோ.”

“நானும் அப்படி கூப்பிடலாமா?”

“நம்ம ரெண்டுபேருக்குள்ள அந்த செல்லப்பெயர் இருக்கட்டும்.” மற்றவன் தன்னுடைய அந்தரங்க வட்டத்துக்குள் அவனை வரவிட்டது பெருமையாக இருந்தது.

“நீயும் என்னை குனான்னு கூப்பிடலாம்.”

கறியும் தயிர்சாதமும் மிளகாய்ப்பொடி தடவிய இரண்டு தோசைகளும் வேகமாக மறைந்தன.

விக்கோவின் தலையெங்கும் ஒரு அங்குலத்துக்கும் குறைவாக வெட்டப்பட்ட வாரமுடியாத மயிரும், வட்டமான முகத்தின் தளதளப்பும் குமரநாதனுக்குப் பிடித்திருந்தன. விக்கோ உடலின் பொலிவு அவன் அணிந்திருந்த டிராயர் சட்டையிலும்.

ஒன்பது வயது முடியப்போகும் தகவலைக் குமரநாதன் சொன்னான்.

“எனக்கு பத்தாவது நடக்கறது.”

“நான் உன் பக்கத்தில வந்து உட்காரட்டுமா?”

“முதல்ல தேவராஜைக் கேள்!”

சாப்பிட்டதும் குழாயில் கையையும் பாத்திரத்தையும் அலம்பி வகுப்புக்குத் திரும்பினார்கள். கிராமத்து மாணவர்களின் சாப்பாடு முடியாததை விக்கோ ஆச்சரியமாகப் பார்த்தான்.

“அவங்க காலையில எழுந்து வெறும் வயிற்றில வந்திருப்பாங்க.”

“வெளியே போயிட்டு வரலாம், வா!”

பள்ளிக்கூட வாசலைத் தாண்டியதும் தெருவோரத்தில் சில்லறை வியாபாரிகள். காரப்பொரி, பஞ்சு மிட்டாய், குட்டி பம்பரம்… வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தார்கள். ஊரின் பிரதான கடைத்தெரு ஜவஹர் சாலை. சந்திப்பின் இடப்பக்கம் திரும்பி எதிர் முனையில் ஆர்ய பவன். பிராமணாள் காப்பி சாப்பாடு ஓட்டல். அதற்குள் விக்கோ நுழைந்தான். தோசை போதவில்லையோ? படியேறியதும் பெரிய கண்ணாடி ஜாடியில் பாரி மிட்டாய்கள், அகன்ற தாம்பாளத்தில் இலையில் கட்டிய பொட்டலங்கள். இரண்டு மிட்டாய்களையும் காரசேவ் பொட்டலம் ஒன்றையும் எடுத்துக்கொண்டான். விக்கோ எப்படி பணம் தரப்போகிறான் என்று குமரநாதன் யோசித்தபோதே, அவன் கல்லாவில் அமர்ந்திருந்த முதலாளியிடம் அவற்றைக் காட்டினான்.

“கணக்கில் எழுதிக்கறேன்.”

வெளியே வந்ததும், “நீ ஒண்ணு எடுத்துக்கோ!” என்றான்.

குமரநாதனின் குடும்ப நிதிநிலைமை சாதாரணம் என்றாலும் மற்றவர்கள் சாப்பிடும்போது கேட்டுவாங்கித் தின்பது பக்கித்தனம் என்ற எண்ணத்தில் வளர்ந்தவன். புதிய நண்பன் கொடுக்கும்போது மறுப்பது நட்புக்கு அழகல்ல என்று ஒரு மிட்டாய், காராசேவில் ஒரு துண்டு.

வகுப்புக்குத் திரும்பியதும் தேவராஜின் இடத்துக்கு மாற்றிக்கொண்டான்.

வெற்றிவேலுடன் வீடு நோக்கி நடந்தபோது பேசுவதற்கு நிறைய விஷயங்கள். புத்தம்புதிய கரும்பலகையில் முதல்முறையாக எழுதியது, வகுப்புக்கு பெயர்வைத்தது, வகுப்புத்தலைவன் என்ற பதவி, ஓட்டலில் கணக்கு வைத்து இருக்கும் ஒரு புது நண்பன்.

வீட்டில் அவனுக்குப் பிடித்த வாழைக்காய் பஜ்ஜி, அத்துடன் பள்ளிக்கூடம் திறந்ததைக் கொண்டாட லட்டு.

“அம்மா! நாளைக்கு இரண்டு லட்டு டிஃபன் கேரியரில் வச்சுக்கொடு!”

வெற்றிவேலிடம் சொன்ன பிரதாபம் இன்னொரு தடவை அக்காக்களுக்கு.

“விக்கோ அப்பாவுக்கு எங்கிருந்து அவ்வளவு பணம்?” என்று சங்கரிக்கு ஆச்சரியம்.

“டாக்டரா இருப்பார்.”

“டாக்டர் ராமசர்மா ஒண்ணும் பணக்காரர் இல்லையே. கடை வச்சிருக்கணும்.”

அமராவதி மணலுக்குப் போகமுடியாததால் வீட்டு வாசலிலே கோலி விளையாட்டு. முதலில் மூன்று குழி. சிகரெட் அட்டைப் பணத்தில் ஐநூறு ரூபாய் ஜெயித்தான். அதைப் பெருங்காய டப்பியில் பத்திரமாக வைத்ததும், அப்பா வேலையில் இருந்து வந்தார். கரூரை ஒட்டிய அந்த அக்கிரஹாரத்தில் பான்ட் அணிந்து சைக்கிளில் வேலைக்குப் போகும் இருவரில் அவர் ஒருவர் என்று குமரநாதனுக்குப் பெருமை. வீட்டில் இருக்கும்போது வேஷ்டியும் மேல் துண்டும்.

சமையலுள்ளுக்கும் முன்னறைக்கும் நடுவில் நடைவழி. அதில் இருந்து இரண்டு படிகள் இறங்கினால் கிணற்றடி. மேல் படியில் சௌந்தரம் ஆசாரமாக எடுத்துவைத்த தாமிர பஞ்ச பாத்திரமும் உத்தரணியும். பத்து நிமிட சந்தியாவந்தனம் அப்பாவுக்கு அரைமணி.

“கோவிந்தாய நம: ஏண்டா குனா! முதல் நாள் ஸ்கூல் எப்படிடா போச்சு?”

“நான் க்ளாஸ் மானிடர்.”

“பலே!”

“புத்தகம் எல்லாம் வந்துதா?”

“தமிழ் இலக்கணம் மட்டும் பாக்கி.”

“எப்ப வருமாம்?”

“தெரியல.”

“சௌந்தரம்! இன்னிக்கே எல்லாத்துக்கும் அட்டை போட்டுடு!”

“இன்னும் இரண்டு தான் பாக்கி, மாமா!”

“நீங்கள்ளல்லாம்.”

“புதன்கிழமை தான் திறக்கறா.”

“அப்ப அம்மாக்கு உதவி பண்ண வேண்டிது தானே.”

“அவளா பண்ணுவாளா? நான் தார்க்குச்சி போடணும்” என்று தண்ணீர்க் குடத்தை இடுப்பில் வைத்து நடந்த அத்தை குறுக்கிட்டாள்.

“கரூர்ல நாளுக்கு நாள் வியாபாரம் பெருகிண்டே போறது. தினம் முப்பது பார்சலாவது வர்றது. மெட்ராஸ் காஞ்சிபுரம் அஹமதாபாத் இங்கிருந்தெல்லாம்.”

“யாருக்கு?” என்று அம்மா சமையலறையில் இருந்தே குரல் கொடுத்தாள்.

“ஹாஜியார் கடைகளுக்கு. அப்பறம் புதுசா ஒரு துணிக்கடை.”

ஒருவழியாக அப்பா தன்னைப் பலதடவை சுற்றி, தண்ணீரைக் கொட்டி தரையில் விழுந்து எழுந்ததும் சாப்பாடு. நடைவழிக்கும் சமையலறைக்கும் நடுவில் நீண்டா வெராந்தா. அப்பாவுக்கும் குழந்தைகளுக்கும் தட்டுகள் தயாராக இருந்தன. கத்தரிக்காய் கூட்டு, தேங்காய்த் துவையல், சுட்ட அப்பளம். கடைந்த மோர் சாதத்திற்கு வறுத்த மோர் மிளகாய்.

“இனிமே தினம் ஒரு மணியாவது பாடம் படிக்கணும்!”

அதற்காக முன்னறையில் தொங்கும் விளக்குக்குக் கீழே ஒரு மேஜையும் மூன்று நாற்காலிகளும் போட்டிருந்தார்.

வீட்டுப்பாடம் இல்லாததால் புத்தகங்களை அழகுபார்த்து நோட்டுகளுக்கு அட்டைகளில் பெயர் எழுதினான். பச்சை அரைநிஜாரும் சிவப்பு சட்டையும் தேடியெடுத்து அவற்றை மடித்தான். ஒரு தப்படி முன்னால் வைத்து விறைப்பாக சல்யுட் வைப்பதை ஒத்திகை பார்த்தான். முன்னறையின் ஒரு மூலையில் அப்பாவுக்கும் குமரநாதனுக்கும் ஜமக்காளம். இன்னொரு மூலையில் பெண்களுக்குப் பாய்.

அன்றைய இரவு பாட்டி துணி உலர்த்தும் கொம்பை துக்கிப் பிடித்திருப்பதுபோல குமரநாதனின் தூக்கத்தைத் துண்டுகளாக்கிய கனவுகள்.

மறுநாளும் ஒன்பது மணிக்கே குமரநாதன் கிளம்பினான். வெற்றிவேலிடம் அதிகம் பேசவில்லை. வகுப்பில் நுழைந்தபோது ஆசிரியரும் தாந்தோணியும் சுவருக்கு முன் தங்கள் கலைப்படைப்பை ரசித்து நின்றார்கள்.

“குமரநாதன்! எப்படி?”

“பிரமாதம் சார்!”

கோடுகள் என்றாலும் உயிர் ததும்பும் வடிவம்.

“உன் கையெழுத்து அழகா இருக்கு. பெயரை எழுது!” என்று ப்ரஷை நீட்டினார்.

“நானா?”

“நீதான்.”

குமரநாதன் ஒவ்வொரு எழுத்துக்கும் ப்ரஷை வர்ணத்தில் தோய்த்து எழுதினான்.

தி ரு ப் பூ ர் கு ம ர ன்

பள்ளிக்கூட முதல் மணி.

கொடிவணக்கம். ஆறாம் படிவம், ஐந்து, நான்கு… முதல் படிவம், குமரநாதனின் இதயத்துடிப்பு அதிகரித்தது. கடைசியில்…

“ஃபர்ஸ்ட் ஃபாரம் டி திருப்பூர் குமரன்” என்று குமரநாதன் விறைப்பாகச் சொல்லி வணக்கம் செலுத்தினான். கடமையை நிறைவேற்றிய பெருமிதம்.

செவ்வாய்க்கிழமை ஆங்கிலத்துக்கு அடுத்துவந்த வகுப்புகள்… பொதுத்தமிழ், சிறப்புத்தமிழ். இரண்டுக்கும் ஆசிரியர் ஒருவரே. பழுப்பு வேட்டியும் அதைவிடப் பழுப்பு ஏறிய சட்டையும். தோளைச்சுற்றி அணிந்த அங்கவஸ்திரம், கறுப்பு முகத்தில் சாம்பல்நிறக் கண்ணாடி, நரைகலந்த தலைமுடி. நுழைந்ததும் வகுப்பைச்சுற்றி பார்வையை ஓடவிட்டார். பல ரக மாணவர்களின் ஆர்வம் கொண்ட முகங்களைப் பார்த்து அவருக்குத் திருப்தி.

“என் பெயர் கணபதி ஐயா! கேள்வி கேட்க ஐயா என்று அழைத்தால் போதும். பொதுவாக நான்கு ஐந்து படிவங்களுக்கு நான் பாடம் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு உங்களைப்போல் பள்ளிக்கூடத்தில் நுழைந்த புதுமுகங்களுக்குத் தமிழ் கற்றுத்தர எனக்கு ஆசை.”

உட்காராமல் புத்தகத்தைப் பார்க்காமல் நடந்துகொண்டே பேசினார்.

சங்கரியிடம் பெருமை அடித்துக்கொள்ளலாம். ‘எனக்கு கணபதி ஐயாவே…’

“பொது, சிறப்பு இரண்டும் அடுத்தடுத்து இருப்பதில் ஒரு சௌகரியம். சிறப்புத்தமிழின் முதல் செய்யுளையும் பொதுத்தமிழின் முதல் உரைநடைப் பாடத்தையும் ஒன்றாகக் கவனிக்கப்போகிறோம்.”

புத்தகங்களைப் பிரிக்கும் ஓசை

“செய்யுள் பகுதியில் இடம்பெற்றாலும் இது மிக எளிதான பாரதியாரின் கவிதை…”

குமரநாதனுக்கு இடப்புறம் பழனிசாமி. முந்தைய தினம் அணிந்திருந்த அதே சாயம்போன சட்டையும் பல இடங்களில் நைந்த அரைடிராயரும். அவனுடைய கனமில்லாத புத்தகப்பையைக் கவனித்திருந்த குமரநாதன் தன் புத்தகத்தை அவனும் பார்க்கும்படி இருவருக்கும் நடுவில் வைத்தான்.

“‘ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!’ என்ற பாடலை நீங்கள் கேட்டு இருக்கலாம். சென்ற ஆண்டு வெளிவந்த ‘ரங்கூன் ராதா’ திரைப்படத்தில் ஒலித்த பாடல். அதனால் அதைப் பாடியும் இருக்கலாம். அந்த அளவுக்குப் பிரபலம் அடையாத பாடல் இது. ஆனால் அதற்கு எவ்விதத்திலும் தாழ்ந்தது இல்லை. அதன் முதல் இரண்டு பாக்களைப் பாடப்புத்தகத்தில் சேர்த்தது நல்ல ரசனை. புத்தகத்தின் ஆசிரியருக்கு நன்றி!

“புதிய பாரதத்தை வா! வா! என்று வரவழைப்பதற்கு முன், பழைய இந்தியாவிற்கு விடைகொடுக்க வேண்டும், இல்லையா? இது போய்வா! என்கிற சுமுகமான விடை இல்லை. ‘தொலைந்துபோ! திரும்பிவராதே!’ என்று பாரதியார் அதன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். அச்சம் என்பதே இல்லாத கவிஞர் அல்லவா அவர்? அதனால் சுற்றிவளைத்துப் பேசவில்லை. ‘தப்பு தான், இருந்தாலும் திருத்தமுடியாது’ என்று அலட்சியம் காட்டவில்லை. ‘பழைய இந்தியா இருந்துவிட்டுப் போகட்டுமே, என்ன குறைந்துவிடும்?’ என்று கையைப் பிசையவில்லை. நம்முடைய ஒவ்வொரு இழிவான குணத்தையும் ஒளிவுமறைவு இல்லாமல் சொல்லி நம்மைத் தலைகுனிய வைக்கிறார். அவமானம் பொறுக்கமுடியாமல் நாம் திருந்தவேண்டும் என்பது அவர் விருப்பம்.

வலிமையற்ற தோளினாய் போ போ போ 
மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ 
பொலிவிலா முகத்தினாய் போ போ போ 
பொறி யிழந்த விழியினாய் போ போ போ 
ஒலியிழந்த குரலினாய் போ போ போ 
ஒளியிழந்த மேனியாய் போ போ போ 
கிலிபிடித்த நெஞ்சினாய் போ போ போ 
கீழ்மையென்றும் வேண்டுவாய் போ போ போ 

இன்றுபார தத்திடை நாய்போலே 
ஏற்றமின்றி வாழுவாய் போ போ போ 
நன்றுகூறில் அஞ்சுவாய் போ போ போ 
நாணிலாது கெஞ்சுவாய் போ போ போ 
சென்றுபோன பொய்யெலாம் மெய்யாகச் 
சிந்தைகொண்டு போற்றுவாய் போ போ போ 
வென்றுநிற்கும் மெய்யெலாம் பொய்யாக 
விழிமயங்கி நோக்குவாய் போ போ போ 

“முழுக்கவிதையையும் அடுத்த வகுப்பில் விரிவாகப் படிப்போம். இப்போது கடைசி இரண்டு அடிகளை மட்டும் கவனிப்போம். நேரடியாகச் சொல்வது என்றால்… மேற்கு நாட்டினர் எழுதிய பொய்யான வரலாற்றை உண்மையாக நினைத்து அதைப் போற்றுகிறோம், கண்ணுக்கு எதிரே தெளிவாகத் தெரிகிற உண்மைகளை ஏற்காமல் அவை பொய்யாக இருக்குமோ என்று மயங்குகிறோம். இந்த இரண்டு கருத்துக்களையும் நிரூபிப்பது போல பொதுத்தமிழின் உரைநடையில் முதல் பாடம், கொலம்பஸ்.”

அவர் சொல்லி முடிப்பதற்குள் விக்கோ புத்தகத்தில் அந்தப் பக்கத்தைத் திறந்துவிட்டான். அதில் ஒரு மேற்கத்தியர் கொடியை நாட்டும் படம்.

“நீங்கள் அந்தப் புத்தகத்தைப் பிரிக்கவேண்டிய அவசியம் இல்லை. காரணம் சொல்கிறேன்.

“அப்பாடத்தில் சொல்லப்படும் விவரங்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தாராம். அவருக்கு பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதிக்குடிகள் அந்நிலப்பரப்பில் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது வரலாற்று உண்மை. உலகம் தட்டை இல்லை என்று முதன்முதலில் கூறி அதை நிரூபித்தாராம். கிறித்துவுக்கு முன்பே இந்தியர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் உலகம் உருண்டையானது என்பது நன்றாகத் தெரியும். அவர் மனிதவளர்ச்சிக்குக் கடல் பயணம் மேற்கொண்டார் என்பதும் பொய். அட்லான்டிக் பெருங்கடலின் மேற்குத் தீவுகளில் தங்கம் திருடவும், அங்கே சுதந்திரமாக வாழ்ந்த மனிதர்களை அடிமைப்படுத்தவும் தான் அங்கே சென்றார். எண்ணற்ற மக்களின் கண்ணீருக்கும் அவலத்திற்கும் அவமானத்திற்கும் காரணமாக இருந்த ஒருவரைப் பெருமைப்படுத்தும் பாடத்தை நாம் ஒதுக்கப் போகிறோம். ஏனென்றால் பாரதியார் சொன்னதுபோல நம் அனைவருக்கும் உறுதிகொண்ட நெஞ்சம். நாம் பொய்ம்மை கூறல் அஞ்சுவோம்.”

கடைசி வாக்கியம் இடிபோல மாணவர்கள் தலையில் விழுந்தது.

“இதேபோல நான்காம் படிவத்தின் உரைநடையில் ஒரு பாடம். பொருள்வளம் மிகுந்த தமிழர் ஒருவர். அமெரிக்க நாட்டிற்குச் சென்று, அங்கே சுற்றிப்பார்த்து அந்நாட்டைப் புகழ்ந்து எழுதிய கட்டுரை. அந்நிலப்பரப்பின் முதன்மைக் குடிகளில் பெரும்பான்மையினரைக் கொன்று அவர்களிடம் இருந்து நிலத்தை ஐரோப்பியர்கள் அபகரித்ததையோ, புதுநாட்டைப் பண்படுத்தி வளமாக்கிய ஆப்பிரிக்க அடிமைகளைப் பற்றியோ அதில் ஒரு வார்த்தை கூட இல்லை. அங்கே ‘என்ன பொருள் வளம்! என்ன இயந்திர வளர்ச்சி! என்ன சுதந்திரம்! தொழிலாளிகளுக்கு மணிக்கூலி குறைந்த பட்சம் பத்து ரூபாய்’ என்று ஒரே புகழ்ச்சி. அப்பாடத்தையும் நான் புறக்கணிக்கப் போகிறேன். அதன் இடத்தில், நம் தமிழ்நாட்டிலேயே சைக்கிளில் சுற்றியலைந்து மலைவாழ் மக்களைப்பற்றி திரு பிலோ இருதயநாத் எழுதிய ஒரு கட்டுரை.

“இப்போது, கொலம்பஸுக்கு பதில் நாம் படிக்கப்போவது ‘முதல் சுதந்திரப்போர்’ என்கிற பாடம். இது வேறொரு தமிழ்ப் புத்தகத்தில் இருந்து நான் எடுத்தது. விவரங்களை நான் சொல்லச்சொல்ல நீங்கள் எழுதிக்கொண்டால் நல்லது.”

எல்லாரையும் போல குமரநாதனும் பொதுத்தமிழுக்கான நோட்டை பிரித்தான். முதல் பக்கத்தின் உச்சியில் பிள்ளையார் சுழி.

“நீங்கள் படிக்கும் சரித்திரம் மேனாட்டினர் எழுதிய கதை. பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான முதல் புரட்சிப்போர் 1857-இல் நடந்த சிப்பாய் கலகம் என்று அது குறிப்பிடும். அப்போரில் உயிர்துறந்த வீரமங்கை ராணி லஷ்மிபாய் முதலான அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன். அவர்கள் துணிவை மெச்சுகிறேன், தியாகத்தைப் போற்றுகிறேன். ஆனால், அதற்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியவன் கட்டபொம்மன். வாணிகம் என்ற போர்வையில் நம் நாட்டை அடிமைப்படுத்துவது தான் கும்பெனியின் குறிக்கோள் என்பதை உணர்ந்த அரசியல் அறிவாளி. பீரங்கிகளுக்கும் துப்பாக்கிகளுக்கும் அஞ்சாத வீரன். அவன் கதை தான் நமக்கு முதல் பாடம். அவன் வாழ்க்கை தான் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய கடைசிப்பாடம்.

“கட்டபொம்மன் என்றால் பாஞ்சாலங்குறிச்சி. அதை உச்சரிக்கும்போதே ஏறுபோல நடைபோட உள்ளம் துடிக்கும். இரத்தம் துரிதமாகப் பாயும். எங்கே எல்லோரும் சொல்லுங்கள், பார்க்கலாம்!”

“பாஞ்சாலங்குறிச்சி! பாஞ்சாலங்குறிச்சி!! பாஞ்சாலங்குறிச்சி!!!”

“போதும். பாடத்துக்கு வருவோம்!

ஆண்டு ஆயிரத்தி எழுநூற்று எழுபது…”

அன்று வீட்டிற்கு வந்த பிறகும் குமரநாதன், “பாஞ்சாலங்குறிச்சி!” என்று பலமுறை முழங்கினான். கணபதி ஐயா சொன்னது சரி. அவன் மார்பு விரிந்தது, நடை துரிதமானது.

மதிய உணவு நேரம். சாம்பார் சாதம், மிளகாய்ப்பொடி தடவிய ஆறு இட்டிலிகள். கடைசியில் ஆளுக்கொரு லட்டு.

ஒரு துண்டு கடித்ததுமே, “ரொம்ப நன்னா இருக்கு. யார் பண்ணினது?”

“என் அத்தை.”

“உன் ஆத்திலேயே இருக்காளா?”

“எங்களோட தான். அத்திம்பேர் நான் பிறக்கறதுக்கு முன்னாடியே போயிட்டார்.”

விக்கோ முகத்தில் அனுதாப வருத்தம்.

“அத்தைக்கு குழந்தைகள்?”

“ரெண்டு பெண்கள். சங்கரி என்னைவிட ஆறு மாசம் பெரியவ. சௌந்தரத்துக்கு ரெண்டு வயசு அதிகம்.”

லட்டு தீர்ந்தபிறகும் விக்கோ முகத்தில் சிந்தனையின் ஆழம்.

புதன்கிழமை குமரநாதன் கிளம்பியபோது ஒன்பதரை. தெருவில் வாசுவும் தியாகுவும். அவர்களிடம் இருந்து தப்பிக்க வழியில்லை. இருவரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள். முகத்திலும் பேச்சிலும் அலட்சியம். மிராசுதார் சூரியநாராயண ஐயரின் கடைசிப் பையன் வாசு; ஐந்தாம் படிவம். பின்னவனின் அப்பா நகர கௌன்சிலர். வாசுவுக்கு ஒரு வகுப்பு குறைவு.

“அப்பாடா! இனிமே கைத்தொழில் கிடையாது” என்று ஆரம்பித்தான் தியாகு.

“இன்னிக்கி மூணாவது பீரியட்” என்று சொல்வதைத்தவிர வேறு வழியில்லை.

“‘தக்களியால் நூற்பது எப்படி?’ புத்தகத்தை வாங்கச் சொல்வாரே ஜெபநேசன்.”

“வாங்கியாச்சு.”

அதன் அட்டையில் நிமிர்ந்து உட்கார்ந்து ஒருவன் நூற்பது போல் படம். நூல் தரையில் இருந்து செங்குத்தாக அவன் உயர்த்திய கையின் பஞ்சுப்பட்டை முனை வரையில். அந்த வித்தையை விளக்க எண்பது பக்கங்கள். பக்கத்து வீட்டுப் புரோகிதர் நூல் வாங்கி அதில் முறுக்கு ஏற்ற முழம்நீளத் தக்களியைத் துடையில் தேய்த்து சுழற்றுவார். இது அதற்கும் முந்தைய காரியம்.

“வருஷம் முடியறதுக்குள்ள ஒரு பட்டை பஞ்சை தக்களியில நூற்கணும்.”

“நீ ஒண்ணு. குமரநாதனுக்கு பம்பரமே சுத்த வராது.”

“அதுக்காக ஃபெயில் பண்ணமாட்டாங்களே?”

“இதுவரைக்கும் பண்ணினது இல்ல…”

“க்ராஃப் நோட்டில விதவிதமான டிசைன் போடணும்.”

“அழகா இரண்டு அக்காக்கள் இருக்கும்போது என்ன கவலை?” என்று கண்களைச் சிமிட்டினான் வாசு.

பகவான் க்ருபையில் வெற்றிவேல் கண்ணில்பட்டான்.

கைத்தொழிலுக்கு என்றே பள்ளியின் ஓரத்தில் நீண்ட அறை. ஒரு பக்கத்து மரச்சட்டத்தின் வழியாக வரும் பகல் வெளிச்சத்தில் படிக்கலாம், எழுதுவது சிரமம். I-D மாணவர்கள் நீண்ட வரிசையில் பள்ளியின் குறுக்கே நடந்து சுவரை ஒட்டிய பெஞ்ச்சுக்களில் அமர்ந்தார்கள். கரும்பலகையின் உச்சியில் எப்போதோ எழுதி கிட்டத்தட்ட அழிந்துவிட்ட வரிகள்.

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்!

கவலை உனக்கு இல்லை ஒத்துக்கொள்!

மேஜையில் முழங்கைகளை ஊன்றி நாற்காலியில் அமர்ந்திருந்தார் ஆசிரியர். அவர் கண்ணில் படும்படி, ‘தக்களியில் நூற்பது எப்படி?’யைக் குமரநாதன் எடுத்து மடியில் வைத்துக்கொண்டான். எழுந்து வந்த அதை எடுத்து வகுப்புக்குக் காட்டினார்.

“எத்தினி பேர் இதை வாங்கியிருக்கீங்க?”

விக்கோவையும் சேர்த்து மூன்று நான்கு கைகள் உயர்ந்தன.

“வாங்காதீங்க!”

நிறைய நிம்மதிப் பெருமூச்சுகள் ஜன்னல் வழியாக வெளியேறின.

“தாந்தேணி மலைக்குப் போற சாலையில ஒரு நூற்பு ஆலை. தெரியும் இல்ல?”

கையை உயர்த்தி, “நான் அதைப் பார்த்து இருக்கேன் சார்!” என்றான் குமரநாதன். “ஏ செக்ஷன்ல இருக்கற வெற்றிவேலின் அப்பா அங்கே வேலை செய்யறார்.”

“உள்ளே போயிருக்கியா?”

அவன் உதட்டைப் பிதுக்க,

“சுத்தமான பஞ்சு தினம் காலையில மூட்டை மூட்டையா வந்து இறங்கும். முப்பது நாற்பது மெஷின் கிர்கிர்னு வேகமாக சுத்தும். சாயந்தரம் நூல் கண்டுகளை அள்ளிப்போக ஒரு லாரி. அப்படி இருக்கும்போது இது என்ன வேலையத்த வேலை. காந்தி மாதிரி நாம என்ன கதர்த்துணியா போட்டுக்கறோம்?”

கேள்விக்கு பதில் பையன்களின் அரட்டை.

“‘மல்லிகா’ ‘யார் பையன்?’ இரண்டுல எதைப் பாக்கறதுன்னு தெரியலடா.”

“ரெண்டுமே நல்லா இருக்குன்னு பேசிக்கிறாங்க.”

“மெதுவா.. மெதுவா.. ஹெட்மாஸ்டர் காதில எட்டாம பேசுங்க பார்க்கலாம்!”

அதை அவர் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை நினைவூட்ட வேண்டி வந்தது. நடுநடுவே

“யாருக்காவது புக் பைன்டிங் செய்யணும்னா எடுத்துட்டு வாங்க!”

முதல் தினம் போல ஜவஹர் சாலையை நோக்கி ஒரு நடை. விக்கோ வலப்பக்கம் திரும்பி நடந்தான். முதலில் ஒரு ஷாப்கடை. அவர்கள் குடும்பத்தின் தேவைக்கு அதில் ஒன்றும் இராது என்ற எண்ணத்தை குமரநாதனின் அப்பா கொடுத்திருந்தார். அப்படி அங்கே என்ன இருக்கும்?

“புதுசா என்ன வந்திருக்குன்னு பார்க்கலாம், வா!”

தெருவில் இருந்து சின்ன திண்ணை. அதைத் தாண்டி இரண்டு படிகள் ஏறி நின்றார்கள்.

மளிகைக்கடைகளையும் துணிக்கடைகளையும் மட்டுமே பார்த்திருந்த குமரநாதனுக்கு எல்லாமே புதிது.

கண்ணாடி அலமாரிகளில் கடிகாரங்கள், பொம்மைகள், ஹேர் ஆயில், வாசனை பௌடர்கள்..

அக்காக்களுக்கு வாங்கிக்கொண்டு போகலாம், கையில் காசு இருந்தால்.

மேஜை மேல் ஒரு கடிகாரம். அதில் ஒவ்வொரு நொடிக்கும் ஒரு கோழி தான்யத்தைக் கொத்தியது. பக்கத்தில் ஒரு சேவல்.

“ஒவ்வொரு மணிக்கும் சேவல் கூவும். வேணுமா?”

“எவ்வளவு?”

“இருபது ரூபா. நேத்து தான் வந்தது.”

குமரநாதன் வீட்டில் ஒரு அலார கடிகாரம். கூடத்தில் அதற்கென்றே ஒரு சின்ன அலமாரி. அப்பாவைத் தவிர யாரும் அதைத் தொட்டது இல்லை.

விக்கோ ஒரு பேனாவை எடுத்துப் பார்த்தான்.

“இங்க் போட வேணாம்.”

ஒரு காகிதத்தில் எழுதிப்பார்த்தான்.

“எடுத்துக்க நான் அப்பா கிட்ட சொல்லிக்கறேன்.”

“இதே மாதிரி ஒண்ணு என்கிட்ட இருக்கு.”

“அப்ப, இதைப் பார்! சந்தன மரத்தில் செய்த பென்சில்.”

அதை வாங்கி விக்கோ முகர்ந்து பார்த்தான். அவனைத் தொடர்ந்து குமரநாதன்.

“நிஜமான சந்தனக்கட்டை.”

“எவ்வளவு?”

“இரண்டணா.”

விக்கோ பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.

இங்கேயும் அவனுக்குக் கணக்கு

அடுத்ததாக பனியன் விற்கும் கடை.

அதையும் தாண்டி ‘ஒயிட் பேலஸ்’ ஜவுளிக்கடை. உள்ளே நுழைந்தால் நீளப்போகும். ஆண்டுக்கு ஒரு முறை அப்பா அவனை அழைத்துப்போவார். மூன்று சட்டைக்கும் மூன்று அரை டிராயருக்கும் துணி.

அந்தக்கடைகளிலும் விக்கோவுக்கு கணக்கு இருக்குமோ?

வியாழக்கிழமை மதிய சாப்பாட்டிற்குப் பிறகு மறுபடி ஆர்யபவன்.

விக்கோவின் கவனத்தை ஈர்த்தது கண்ணாடி கூண்டிற்குள் வைத்திருந்த கேக். மஞ்சள் மேல் வெள்ளைப்பாகு. அதன் மேல் சேவலின் கொண்டை போல சிவப்பு.

“எவ்வளவு?”

“நாலணா.”

“சரி எடு!”

பூக்கள் வரைந்த பீங்கான் தட்டு, ஒரு அலங்காகக் காகிதம், அதன் மேல் கேக் என்று ராஜ உபசாரம். மேஜையில் அமர்ந்ததும் நண்பனுக்கு ஒரு சிறிய துண்டு.

“ஒரு நாளைக்கு என்னோட லிமிட் நாலணா.”

இனிப்பு உலகில் சஞ்சரித்த குமரநாதனின் மனம் நாலணா நாணயத்தைச் சுண்டிப் போட்டது.

ஒரு சட்டம் நூலுக்கு நாலணா. இடது கையால் ராட்டித்தைச் சுற்றிக்கொண்டே வலது கையால் சீராகப் பஞ்சுப்பட்டையை இழுத்து… முறுக்கிய நூலை கண்டில் சுற்றி மறுபடி… நூறு தடவையாவது.

யார் வீட்டிலாவது கல்யாணம் என்றால் அத்தைக்கு அழைப்பு வரும். இடது காலை நீட்டிவைத்து ஐம்பது அப்பளம் இடுவதற்கு அந்த கேக் துண்டின் விலை.

சனிக்கிழமை என்றால் சௌந்தரம் சூரியநாராயண ஐயர் வீட்டில் இட்டிலிக்கு அரைப்பாள். இரண்டு பெரிய படி அரிசி, ஒரு பெரிய படி உளுந்து. இரண்டு மணி வேலைக்கு அதே நாலணா.

விக்கோ தின்று முடிக்கும்வரை காத்திருந்து,

“நீ ‘கண்ணன்’ படிப்பியா?”

“அது வாரப் பத்திரிகையா?”

“இல்ல. மாசத்துக்கு இரண்டு.”

“ஊகும். நிறைய கதைகள் இருக்குமா?”

“ம்ம். இப்ப ‘சைனாசூசு’ன்னு ஒரு தொடர்கதை வர்றது. ரொம்ப நன்னா இருக்கு.”

எழுந்து நடந்தார்கள்.

மாதத்தில் ஒரு நாலணா மட்டும் சௌந்தரத்திற்கு சொந்தம். ‘கண்ணன்’ வாங்குவதற்கு. தேர்முட்டி மருதை செட்டியார் கடையில் தான் அது கிடைக்கும். அப்பா வேலையில் இருந்து வரும்போது வாங்கிவருவார். மாதத்தின் முதல் அல்லது பதினைந்தாம் தேதி வாரக்கடைசியில் வந்தால் அதை வாங்க குமரநாதன் நடந்துபோய் இருக்கிறான்.

மறுநாள்.

“நான் உனக்கு என்ன கொண்டு வந்திருக்கேன், சொல்!”

“லட்டு.”

“இதுவும் இனிக்கும், ஆனால் நாக்கில் அல்ல.”

“ம்ம்…”

“நேத்திக்கி இதைப்பத்தி பேசினோம்.”

“‘கண்ணன்’ பத்திரிகை.”

“கரெக்ட். முன்ன ‘லீடர் மணி’ன்னு ஒரு தொடர்கதை வந்தது. அக்கா அதைச் சேர்த்து வீட்டிலேயே பைண்டு பண்ணினா. அதுவும்.”

அன்று மதிய சாப்பாட்டிற்குப் பின் விக்கோ ‘கண்ணனை’ப் பிரித்து வேடிக்கைத் துணுக்குகளுக்கு சிரித்தான்.

கடைசி வகுப்பு குடிமைப் பயிற்சி. அதற்கும் அம்பிகைபாலன். பல நாட்டு கொடிகளை வரைந்தார்கள். என்ன இருந்தாலும் பாரதக்கொடியின் அழகு வராது. மணி அடிப்பதற்கு முன்,

“பொதுவா சனிக்கிழமை பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை. இந்த வருஷம் பள்ளிக்கூடம் திறக்கறதுக்கு மூணு வாரம் தள்ளிப்போயிரிச்சு இல்ல. அதனால தீபாவளி வரைக்கும் சனிக்கிழமையும் வகுப்பு இருக்கும்.”

“அன்னிக்கி என்ன டைம்டேபிள்?”

அனந்தசுப்பிரமணியன் பெயர் தான் நீளம். அவன் வகுப்பிலேயே குள்ளம். குமரநாதனின் தோளைக் கூட எட்டமாட்டான். அதனால் முதல் பெஞ்ச்சில் முதல் இடம். ஆசிரியர் கேள்விகேட்டால் முதலில் அவன் கை உயரும். அதுபோல மற்ற மாணவர்கள் கேள்வியை யோசிக்கும்போதே அவன் அதைக் கேட்டுவிடுவான்.

“இந்த வாட்டி திங்கள். அடுத்த வாரம் செவ்வாய். இப்படி வரிசையா வரும். நாளைக்கு கடைசி ரெண்டு பீரியட் முன்னாடியே உங்களை அனுப்பிடறேன். எப்படி?”

சனிக்கிழமை. ஆறாவது நாளும் பள்ளிக்கூடம். ம்ம்ம்!

“நானே வருஷ சந்தா கட்டிட்டேன். வீட்டுக்கே வந்துடும் என்று விக்கோ ‘கண்ணனை’த் திருப்பிக்கொடுத்தான். அதன் பின் அட்டையில் அந்நிறுவனம் பிரசுரித்த புத்தகங்களின் விவரங்கள் – மஞ்சள் பங்களா, சந்திரகிரிக்கோட்டை, பவளவல்லி, புலிக்குட்டி. “இதெல்லாம் கூட வாங்கிட்டேன். நான் படிச்சதும் உனக்குக் கொண்டுவந்து தரேன்.”

மாலை. விளையாட நிறைய நேரம். குமரநாதன் சாப்பாட்டிற்கு முன் பையைத்திறந்து நோட்டுகளை எடுத்துவைத்தான்.

“எல்லா பாடத்திலியும் எனக்கு ஹோம்வொர்க்.”

“எனக்குக் கிடையாதே!” என்றாள் சங்கரி.

“உங்க டீச்சர் பாடம் நடத்தற லட்சணம் அவ்வளவு தான்.”

“என்னை என்ன வேணும்னாலும் சொல்லு! என் டீச்சரை இழுக்காதே!”

வலது கையால் பின்னலை முன்னால் இழுத்துவிட்டுக்கொண்டாள். இடது கை மடங்கி..

“சரி சரி, முதுகுக்குப் பின்னாடி என்ன?”

“முதுகு.”

“ஏதோ ஒளிச்சு வச்சிருக்கே.”

“ஆமா.”

“காட்டு!”

“நீலா கிட்டேர்ந்து கடன்வாங்கிண்டு வந்திருக்கேன். திங்கள் திருப்பிக்கொடுக்கணும்.”

அப்படி யென்றால் கதைப்புத்தகம்.

“காட்டுடி!”

அவளிடம் இருந்து வாங்கிப் பிரித்தான். கதிரில் தொடர்கதையாக வந்ததைச் சேர்த்துத் தைத்தது.

சிவப்பு மாளிகை

“நான் படிச்சப்பறம் தான் தருவேன்.” வாங்கிவந்தவளுக்குத் தான் முதல் உரிமை.

“நீ எழுத்துக்கூட்டிப் படிக்கறதுக்குள்ள நாளை சாயந்தரம் ஆயிடும். நான் ரெண்டே மணியில முடிச்சிட்டு தந்துடறேன்.”

“ஊகும்! முதல்ல ஹோம்வொர்க். நீ முடிக்காட்டா அம்மா என் முதுகைப் பின்னிடுவா.”

அவள் சொன்னபடி சாப்பாடு முடிந்ததும் மேஜையில் அமர்ந்து எழுத ஆரம்பித்தான். அவனுக்கு வேலை முடிய மறுநாள் நான்கு மணிக்கு மேல் ஆகிவிட்டது. விளையாடிவிட்டு வந்தபிறகுதான் வாசிக்க நேரம்.

அடுத்தடுத்து இரண்டு மாளிகைகள். ஒன்று சிவப்பு. இன்னொன்று நீலம். நீலத்தில் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும். சிவப்பில் மர்மமான நிகழ்வுகள். அதில் வசிக்கும் இளவரசன் காணாமல் போய்விடுகிறான். இருவரும் ரகசியமாக அதில் உள்ளே நுழைந்து சதியைத் தெரிந்துகொள்கிறார்கள்.

மறுநாள் அம்பலப்படுத்த வேண்டும். ஆனால் காலையில் எழுந்து பார்த்தால் சிவப்பு மாளிகையைக் காணோம்! அதென்ன சந்தனப் பென்சிலா இல்லை மிட்டாய் பொட்டலாமா? எப்படிக் காணாமல் போக முடியும்?

மின்சாரம் தடைபட இருட்டு.

“எடுத்து வச்சுட்டு படுத்துக்கோங்கோ. காலையில பார்த்துக்கலாம்” என்றார் அப்பா.

சங்கரியைக் கேட்டால் கதையின் முடிவைச் சொல்கிறாள்.

திங்கள் காலை. குமரநாதன் வகுப்பில் நுழைந்தபோது விக்கோவின் தோற்றத்தில் ஒரு மாறுதல். அது என்னவாக இருக்கும்?

விக்கோ ‘லீடர் மணி’யைத் திருப்பிக்கொடுத்தான்.

“இரண்டு நாள் கண் முழிச்சு படிச்சு முடிச்சேன். அவ்வளவு நன்னா இருந்தது.”

புத்தகத்தை குமரநாதன் பைக்குள் வைத்தபோது அவன் மறுபடியும்,

“நான் மே மாசம் பட்டணத்தி(சென்னையி)ல என் அத்தை ஆத்துக்குப் போனேன். இப்ப மணியோட இன்னொரு தடவை. இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம்!” என்ற போது அவன் குரல் வருத்தத்தில் தோய்ந்து வித்தியாசமாக ஒலித்தது.

அன்று பிற்பகல் விக்கோ ஆர்யபவன் போகவில்லை.

Series Navigation<< 1957 – 1 செம்பருத்திஏகபோகம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.