
“சஷ்டியை நோக்க சரவண பவனார்…” என்று கந்த சஷ்டி கவசம், அரைத் தூக்கத்தில் படுக்கையில் படுத்திருந்த தீரனின் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. அதனுடன் நின்றும் இயங்கியும் மாறி மாறி ஒலி எழுப்பியது மின் அம்மி.
“நிலா எழுந்தியா ?, நிலா பல் தேச்சாச்சா? நிலா குளிச்சியா?” என்று தீரனின் மனைவி சந்தியாவின் குரல் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது.
“சதிமா.., வதேன்மா.., ஆச்சுமா.., அய்யோ ஏம்மா இப்புதிக் கத்துத?” என்று தன் மகள் நிலாவின் மழலை மாறா பதில்களும் சந்தியாவின் ஓசைகளோடு அங்கும் இங்கும் காற்றில் உலாவிக் கொண்டிருந்தன.
தீரனுக்குப் படுக்கையை விட்டு எழ மனம் வரவில்லை. மூடிய விழிகளோடு அவனைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் ஓசைகளை இழக்க மனமின்றிப் படுத்திருந்தான். மூன்று முறை தொடர்ந்து அலறிக் கொண்டிருந்த தனது கைப்பேசியையும் எடுத்து பதிலளிக்கவில்லை.
ஏழு மணி அலாரம் ஒலி மாத்திரமே தீரனைப் படுக்கையிலிருந்து எழச் செய்தது. அவன் கண் விழித்த பொழுது அவனைச் சுற்றித் திரிந்த ஓசைகள் அனைத்தும், தடயங்கள் ஏதுமின்றி அடங்கிவிட்டிருந்தன. நிசப்தமான வீட்டினை எதிர்கொள்ள எழுந்தமர்ந்தான். தன் அன்றாட வாழ்க்கைக்கு ஆயத்தமானான். கட்டிலின் எதிரே இருந்த சுவர், அவனும் சந்தியாவும் அவர்களது மகள் நிலாவைத் தாங்கி நிற்கும் புகைப்படத்தைக் காட்டியது. அப்பொழுது நிலாவிற்கு ஒரு வயது.
அவனது படுக்கை அறையிலிருந்து வெளியே வந்தவன் மூடப்பட்டிருந்த மற்ற இரண்டு படுக்கை அறைகளின் கதவுகளைப் பார்வையால் வருடிவிட்டு பால்கனிக்குச் சென்றான். பத்து மாடிகள் கொண்ட அந்த அப்பார்ட்மென்ட்டில் பத்தாவது மாடியில் இருக்கின்றது தீரனின் வீடு. கீழே எட்டிப் பார்த்தான். பெருமூச்சுடன் திரும்பினான். சந்தியா அமைத்திருந்த சின்ன மாடித் தோட்டத்தின் நடுவிலிருந்த ஊஞ்சலில் அமர்ந்து காப்பி குடித்தான்.
இளம் காலைக் காற்றோடு மின்னிக் கொண்டிருந்த சூரிய ஒளி கண்களைக் கூசியது. நிலா பிறந்த பொழுது அவளது பால் மேனியில் எண்ணெய் தடவி இந்த இளம் வெய்யிலில் ஊற வைத்த நினைவு வந்தது அவனுக்கு. மரம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டு உள்ளே சென்றான். கைப்பேசி அழைப்பு வந்தது. அதைப் புறக்கணித்துவிட்டுக் குளியலறைக்குச் சென்றான். பத்து வருடங்களாக சந்தியா பயன்படுத்தும் வழலைக்கட்டிகளைத் தான் உபயோகிக்கின்றான். சந்தியாவோடு நீராடிய நினைவுகளைத் தேய்த்துக் குளித்துவிட்டு வெளியே வந்தான்.
அதற்குள் அவனது கைப்பேசி ஐந்து அழைப்புகளைக் காட்டியது. அது ஒன்றும் தீரனை அவ்வளவாக பாதித்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் அவனது மகள் நிலா குப்புறக் கவிழ்ந்து, அமர்ந்து, தவழ்ந்து, எட்டெடுத்து நடந்து, பின்பு ஓடி இந்த வீட்டைச் சுற்றி வந்த நிமிடங்கள் என அவனது மனக்கிடங்கில் தேங்கிக் கிடந்த நினைவுகளை எல்லாம் காட்சிகளாகக் கண் முன் நிகழ்த்திக் கொண்டிருந்தான்.
உடைமாற்றித் தயாராகி விட்டு இரண்டு தோசைகள் ஊற்றி இட்லிப் பொடியை வைத்து சாப்பிடும் பொழுது சந்தியாவின் தக்காளிச் சட்னியை நினைவு படுத்தியது நாவின் சுவை அரும்புகள். தோசையை உண்டுவிட்டுத் தனது கைப்பேசியை எடுத்தான். இன்று சனிக்கிழமை. பள்ளி அரைநாள் தான் என்று ஞாபகப் படுத்திக் கொள்ள ரிமெய்ண்டரில் பதிவேற்றிக் கொண்டான்.
பின்பு தனது வீட்டின் மீதி இரண்டு படுக்கை அறைகளையும் ஒவ்வொன்றாக நோட்டம் விட்டான் தீரன். அதில் ஒன்று நிலாவின் அறை. தரை முழுக்க அவள் விளையாடிய பொம்மைகள் சிதறிக் கிடந்தன. தன் கண்களை மேய விட்டான். அதில் ஒரு மான் பொம்மையைக் காணவில்லை. ஆற்று நீர்த் திடலின் இடையில் இருக்கும் பாறைகளின் மேல் கால் வைத்து நடப்பதைப் போல பொம்மைகளின் இடையே இருந்த வெற்றிடத்தில் கால் வைத்து மான் பொம்மையைத் தேடினான். அரை மணி நேரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு நிலாவின் கட்டிலின் அடியிலிருந்து கண்டெடுத்தான். சிதறிக் கிடந்த பொம்மைகளின் நடுவே மான் பொம்மையை அதன் இருப்பிடத்தில் வைத்துவிட்டு, கவனமாக நிலாவின் அறையை விட்டு வெளியேறினான்.
இரண்டாவது படுக்கை அறையின் கதவின் முன் நின்று அதன் தாளைப் பிடிக்கும் பொழுது, அவனது இதயம் மேலும் கீழும் பதட்டத்தால் பதறுவது போல் உணர்ந்தவன், கதவின் மேல் தன் தலையை சிறிது நேரம் சாய்த்துக் கொண்டான். இது சந்தியாவுக்கும் அவனுக்குமான அறை. பத்து வருடங்களாக விருந்தினர் படுக்கை அறையில் தான் தூங்குகிறான். இதயம் சற்று நிலை கொண்டதும், வியர்த்த உள்ளங்கைகளைத் தன் சட்டையின் மேல் துடைத்துவிட்டுக் கதவைத் திறந்தான். அறையின் உள்ளே நுழையும் பொழுது சந்தியாவின் கண்ணீர், கடலாகத் தேங்கி இருப்பது போல் அவனது சுவாசக் குழாய் அடைத்தது. சந்தியாவின் ஏழு வருட வாழ்க்கை உள்ளே இருந்தது. சந்தியாவின் வாழ்க்கை அல்ல. தீரனால் வரையறுக்கப்பட்ட சந்தியாவின் வாழ்க்கை அது. அப்ப்ப்பா!!! எத்தனை வகையாக சந்தியாவின் விழிகள் பேசின என்று எண்ணிப் பார்க்க மலைப்பாக இருந்தது தீரனுக்கு.
“என் கூடப் பேசு தீரா. என்ன வேண்ணாலும் செய் என்னய அடி திட்டு வாங்கிக்குறேன். என் கூட பேசாம மட்டும் இருக்காத ப்ளீஸ்.” என்று அவள் அழும் பொழுது அவளது யாசிக்கும் விழிகளைப் பார்த்தது நினைவில் வந்தது. அதோ அந்தக் கப்போர்டின் அருகில் தான் அவனது காலடியில் விழுந்து அழுதாள். அந்த இடத்தில் அமர்ந்து அவளது கண்ணீர்த்துளிகள் விழுந்த தடத்தைத் தடவிப் பார்த்தான். அப்பொழுதெல்லாம் அவளது உப்பு நீரை எப்படி ருசி பார்த்தான் என்பதை எண்ணி நாணினான்.
“என்னயப் புருஞ்சுக்கவே மாட்டியா?. இதுக்கு மேல, நான் என்ன செய்யனும்னு எதிர்பாக்குற?” என்று அவளிடம் இருந்த சுயமரியாதை அனைத்தையும் இழந்த பிறகு அவள் காட்டிய அந்த அயர்ச்சியான விழிகள் தீரனை வட்டம் அடித்தன. சுழன்ற தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலின் மேல் அமர்ந்தான்.
“நிலாவுக்காக மட்டும் தான் உன்னய நான் பொறுத்துக்குறேன்.” என்று எச்சரித்த விழிகளில் இருந்து வழிந்த அனல் நீர் அவனது உடலை நெருப்பாய் சுட்டது.
நீண்ட நாள் போராட்டத்திற்குப் பிறகு, வார்த்தைகள் எல்லாம் தீர்ந்து போய் மௌனத்தைத் தின்ன வேண்டும் என்ற நிலைக்கு அவளைத் தள்ளும் பொழுது, “உங்கூட வாழ்றது எனக்கு சஃப்பகேட்டிங்கா இருக்கு.” என்று பற்களைக் கடித்துக்கொண்டு சந்தியா சொன்ன பொழுது, நீரின்றி வெடித்த ஆற்றின் தடம் போல வறண்டிருந்தன அவளது விழிகள். சிறிதும் யோசிக்காமல் சந்தியாவை நிலாவோடு இந்த வீட்டை விட்டு வெளியேற்றியது அவன் சிந்தைக்கு எட்டும் பொழுது படுக்கை அறையை விட்டு வெளியேறினான்.
இதயத்தை ஒரு கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டு கப்போர்டைத் திறந்து மாத்திரை டப்பாவைத் தேடினான். நண்பர்கள் என்று சிலர் இருந்தார்கள் தீரனுக்கு. சமாதான வார்த்தைகளையும் உபதேச சொற்பொழிவுகளையும் ஏற்க இயலாத மனநிலையில் இருந்ததனால் அவர்களிடம் இருந்து விலக ஆரம்பித்து, ஒருவர் கூட மிஞ்சி இல்லாத அளவிற்கு வந்துவிட்டிருந்தான். பிறகு அவனது உணர்வுகளை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழும் பொழுது தயக்கம் வந்து கவ்விக் கொண்டது. வேறுவழியின்றி அவனாகவே ஒரு மனநல மருத்துவரை நாடிச் சென்றான்.
கண்டெடுத்த மாத்திரை டப்பாவை எடுத்துக் கொண்டு டைனிங் டேபிள் அருகில் வந்தமர்ந்தான். மன அழுத்தத்திற்கான மாத்திரையை எடுத்துக் கொண்டான். அப்பொழுது கைப்பேசி அழைப்பு வந்தது. எடுத்துப் பார்த்தான். ஆனால் பதில் அளிக்கவில்லை. அழைத்தது அவனது அம்மா. எத்தனை வண்ணமயமான வலைகளை அம்மா வார்த்தைகளால் நேர்த்தியாகப் பின்னினாள் அவனைச் சுற்றி என்று எண்ணிப் பார்த்தான். நீ ஆம்பளடா உனக்கு ஆயிரம் பொண்ணு கெடைக்கும். பொட்டச்சிக்கிட்ட அடங்கிப் போகாதன்னு சொன்ன அம்மாகிட்ட, அப்பா அடங்கித் தான இருக்காருனு நான் யோசிக்கவே இல்லையே என்று நொந்து கொண்டு முதல் மாத்திரையை வாயில் போட்டுத் தண்ணீர் குடித்தான்.
அடுத்த அழைப்பிற்காகக் காத்திருந்தான். அம்மாவின் அழைப்புகள் அடங்கிய அடுத்த அரை நிமிடத்தில் அக்காவின் அழைப்பு வரும். இது வழக்கம் மாறா மரபு… வந்தது. அம்மா பின்னும் வலைகளுக்கு உறுதியான தரமான நைலான் கயிறுகளாகப் பார்த்துப் பார்த்து எடுத்துக் கொடுப்பவள் அக்கா. நீ இல்லாம பொண்ண எப்புடி வளர்த்துருவான்னு பாத்துரலாம் என்று சொன்ன அவனது அக்கா, அவளது குடும்பத்தோடு சந்தோஷமாகத்தானே இருக்கிறாள். இவங்க பேச்சக் கேட்டு நான் தான் தனியா நிக்குறேன். வெறும் ஏழு வருச நினைவுகளோட. நிலா தொட்டு வெளையாடின பொம்மைகளோட.. அந்தரத்துல.. இந்தப் பத்தாவது மாடியில..” என்று எண்ணிக்கொண்டே அடுத்த மாத்திரையை விழுங்கினான்.
“தபக்” என்ற ஒலி கேட்டது. ஒலி் வந்த திசையில் திரும்பினான். தீரன் வளர்க்கும் மீன், நீர்க் குமிழியால் அவனை அழைப்பது போல் இருந்தது தீரனுக்கு. பெரிய தொட்டியில் அலைபாய்ந்து கொண்டிருந்தது அந்தப் பெரிய ஒற்றை மீன். மனநல மருத்துவருக்குப் பிறகு தீரன் வெளிப்படையாகப் பேசுவது அந்த மீனிடம் தான். அதன் பெயர் செல்லா. தீரனின் மகள் நிலா அந்த மீனை அப்படித்தான் அழைப்பாள். தண்ணீரில் சலசலத்தது. அதற்கு உணவிடும் நேரம். அதன் உணவு இருந்த குப்பியை கையில் எடுத்துக் கொண்டு மீனோடு பேசலானான்.
“பாத்தியா செல்லா, நீ இந்தத் தொட்டிக்குள்ள தனியா உலாத்துற மாதிரியே நானும் தனியா இந்த வீட்டுக்குள்ள அலயுறேன்” என்று முதல் உருண்டையைப் போட்டான். அதை விழுங்கிய செல்லா பெரிய நீர்க்குமிழியை “தபக்” என்று வெளியேற்றியது. அது தீரனைப் பொறுத்த வரையில் செல்லா கேட்கும் கேள்வி.
“விவாகரத்து முடிஞ்சு பத்து வருசத்துக்கு மேல ஆகிடுச்சுல்ல. நிலா இப்போ பாப்பா இல்லடா. என் கொழந்த இவ்வளோ வளந்துட்டா!” என்று காற்றில் கைகளை உயர்த்தி அளவு காட்டிவிட்டு அடுத்த உருண்டையைப் போட்டான்.
“தபக்”
“எது ஹேப்பினஸ்?. ஒரு வீட்டுல இருக்கிறதுக்கும் வாழ்றதுக்கும் நெறைய வித்தியாசம் இருக்குதுல்ல?. இப்போ நிம்மதியா இருக்கா. அதவிட முக்கியம் சுதந்திரமா இருக்கா. இந்த ரெண்டும் தான சந்தோசத்தோட அர்த்தம் இல்லயா. அவ வீட்டு மனுசங்களப் பாக்க என்னோட அனுமதி தேவையில்ல. நான் மூவாயிரம் ரூபா குடுத்துட்டு முப்பதாயிரம் கேள்வி கேப்பேன். ஒரு பொண்ணுக்கு வாழ்றது குடிசையா இருந்தாலும் அது அவளோடதுங்குற உணர்வு வரனும். அந்த உரிமைய நான் தரவேயில்லயே.” என்று அடுத்த உருண்டையைப் போட்டான்.
“தபக்”
“ம்.. கேக்கலாம் அப்பா எங்கன்னு. தெரியல. ஆனா சந்தியா அருமையா வளத்தி இருக்கா என் பொண்ண. கராத்தே க்ளாஸ் எல்லாம் போறா. வாலிபால் வெளையாடுறா. பன்னண்டாவது படிக்குறா. தள்ளி நின்னு பாத்துக்குறேன்.” என்று அடுத்த உருண்டையைப் போட்டான்.
“தபக்” என்ற ஓசையோடு சேர்த்து தன் வாலைக் கொண்டு தண்ணீரில் அடிக்க, இரு சொட்டுத் தண்ணீர் வந்து தீரனின் முகத்தில் அடித்தது.
அந்தத் தண்ணீரோடு அவன் கண்களில் வழிந்த கண்ணீரையும் துடைத்துக் கொண்டு, “போகனுமுன்னு தோனும். அவ இல்லாத இந்த இடைவெளியில பனி வெளகின மாதிரி நான் செஞ்ச தப்பெல்லாம் எனக்குப் புருஞ்சுடுச்சு. எங்கூட வாழ வான்னு கூப்பிட வெக்கமா இருக்கு. சந்தியா உருவாக்கி இருக்குற உலகத்துக்குள்ள எனக்கு தகுதி இல்ல. நான் இல்லன்னாலும் அவங்க ரெண்டு பேரோட உலகம் இயங்கும் செல்லா.” என்று கடைசி உருண்டையைப் போட்டுவிட்டு மீன் தொட்டியை விட்டு நகர்ந்தான். அருகில், மேஜை மேல் இருந்த சந்தியாவின் புகைப்படம் கண்ணில் பட்டது. புத்தன் தோற்றுப் போக வேண்டும் இப்புகைப்படத்தின் முன்னால் என்று நினைத்துக் கொண்டான்.
அப்புகைப்படத்தில் சந்தியாவின் பார்வை அவளது கையில் இருந்த விவாகரத்துப் பத்திரத்தில் பதித்திருந்தது. மனம் உவந்து இருவரும் கையெழுத்து இட்டு சட்டப்பூர்வமாக பிரிந்த நாள் அன்று. சந்தியா தீரனை நேருக்கு நேர் பார்க்கவே இல்லை. தீரன் மட்டுமே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். அவளது மனதில் பரவியிருந்த அமைதியினை இக்கணமும் தீரனால் உணர முடிந்தது. ஒரு விதமான ஆழ்ந்த அமைதி அது. அவளது முகத்தில் அது முழுவதுமாகப் பரவியிருந்தது. சட்டென தன் கைப்பேசியில் அவளைப் படம்பிடித்தான். அவனது உள்ளங்கைகளுக்குள் அவளது அமைதியின் பிம்பம் தீச்சட்டி போலச் சுட்டது அவனை. சந்தியா தீரனோடு இருந்த அந்த ஏழு வருடத்தில் அப்படி ஒரு ஒளியை அவளது முகத்தில் அவன் பார்த்ததில்லை என்று தோன்றியது அவனுக்கு. அக்கணமே, ‘இல்லை… அவளை, நான் அப்படிப் பார்த்துக் கொண்டதில்லை’ என்று எண்ணத்தைத் திருத்திக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான். அவள் வெகுதூரம் சென்றுவிட்டிருந்தாள்.
கைப்பேசியில் ரிமெய்ண்டர் ஒலி அடித்தது. சாவியை எடுத்துக் கொண்டு வீட்டின் வெளியே வந்தான். எத்தனை முறை இந்தப் பத்து மாடியைக் காற்றில் பறந்து பயணித்து கீழே தரையைத் தொட வேண்டும் என்று முயன்று தோற்றிருப்பான். கதவைப் பூட்டிவிட்டு லிஃப்ட்டில் ஏறி பத்து மாடியைக் கடந்து பூமிக்கு வந்தான். தனது இருசக்கர வாகனத்தில் பயணத்தை ஆரம்பித்தான்.
பைக்கில் அவனுக்கு முன் நிலாவை அமர்த்தி பள்ளிக்கு அழைத்துச் செல்வதை நினைவில் ஏற்றிக் கொண்டே சென்றான்.
நிலாவிற்கு மூன்று வயதானது முழுமையாகப் பேச்சு வருவதற்கு. யாரிடமாவது பேச ஆரம்பிக்கும் பொழுது அவர்களை மும்முறை அழைப்பாள். “அப்பா, அப்பா, அப்பா, என் ப்ரெண்டு நேத்து புது பென்சில் கொந்து வந்தா”, “ அப்பா அப்பா அப்பா, நேத்து தாப்பிடலன்னு அம்மா என்னயக் கிள்ளிட்டா.”அப்பா, அப்பா, அப்பா” என்று அவளது வாக்கியங்களை எண்ணிக் கொண்டே சென்றான். காற்றின் வேகம் அவனது கண்ணீர்த் துளிகளைக் கடத்திச் சென்றது. ஓர் உயர்நிலைப் பள்ளியின் அருகில் இருந்த பேக்கிரியின் முன் வந்து பைக்கை நிறுத்தினான். ஒரு டம்ளர் தேநீரை வாங்கிக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் பின்னால் நின்று கொண்டான்.
“அம்மா,அம்மா,அம்மா…” என்ற குரலும், இரு பிம்பங்களும் அவனது விழிகளைக் கடந்து சென்ற பின் அவன் அருந்திய தேநீர் உப்புக்கறித்தது…
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
