தமிழ்மணி கவிதைகள்

பிள்ளையார் எறும்புகளின் கூட்டத்தில் ஒருவனாக​
மாநகரத்துக்குள் சிக்குண்டு கிடக்கிறேன்​
அப்படியும் முடியாமல் இப்படியும் முடியாமல்​
மன நெரிசல் ஆட்கொண்டுள்ளது​
மின்சார ரயிலோ பேருந்தோ அலுவலக நாற்காலியோ​
எதுவாயினும் புட்டத்தைப் பிடித்துக்கொண்டு விடுவேனா என்கின்றன​
கழிவறை இருக்கையிலிருந்து மட்டும்தான் சடாரென எழுகிறது மனம்​
சாலையில் விழும் பச்சை விளக்கு என் தலையில் விழாதென
தெரிந்துவிட்டது​
வாழ்வோ குண்டும் குழியுமான நாட்களை நீரூற்றி சேறாக்குகிறது​
அடித்துப் பிடித்து ஐநூறு கிலோமீட்டர்கள் தூரமுள்ள வீட்டை அடைந்தால்​
காது மடல்களைத் தாண்டுகிற உன் சிக்கலை ​
வெட்டிவிட்டு உள்ளே வா என்கிறாள் அம்மா​
மகன்களுக்கு துன்பம் விழைவிப்பது மயிர்தான் என்பது​
இந்நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பாய் ஒப்புக்கொண்டு ​
இதோ பாரத்தை இறக்கி வைக்க புறப்பட்டுவிட்டேன் சலூனுக்கு.


வேலைநாட்கள் தோறும் ​
கம்பங்களோடு கம்பமாய் ​
இரயிலிற்காக காத்திருப்பவனிடம்​
யாராவது ஒருவர் கையேந்துகிறார்​
மதுவிடுதிக்கு செல்பவர் தன்னால் முடிந்த பொய்யை​
உண்மையென நம்ப வைக்க முயல்கிறார்​
இஞ்சி மொரப்பாவையும் கடலை பருப்பையும் ​
ஒருவர் விற்க எத்தனிக்கிறார்​
திருநங்கைகள் கைகளை​
ஓங்கித் தட்டியும் சட்டை செய்யாதவன்
இறுதியில் தேர்ந்தெடுத்தது ​
கைக்குட்டைக் கடைக்காரரை​
வெளேரென பளிச்சிட்ட ஒன்றை வாங்கிக்கொண்டு​
தயங்கித் தயங்கி ​
கிழிந்த இருபது ரூபாய்த் தாளை​
காய்த்த அவரின் கைகளுக்குள் திணித்துவிட்டு ஓடினான்​
“தம்பி தம்பி” என்ற குரலுக்கு ​
கால்களோடு சேர்த்து காதுகளும் நடித்தன​
மற்றபடி வானம் எப்போதும் போலவே இருந்தது.​


சோக பீடியை இழுத்திழுத்து வெளியிட்டதில் ​
புகை ஆவியாகி மேகத்திரளானது​
பொழியவே பொழியாத அழுகையின் மீது ​
இரசாயனமாய் என்னைத் தூவினார்கள்​
ஓரளவிற்கு துயர் உடையவனான​
என்னாலேயே இந்த மாநகரம் முங்கிவிட்டதை​
நினைத்தால்தான் இப்போது பகீரென்கிறது.


இதை மட்டும் நீ செய்யாமல் இருந்திருந்தால்
இது நடக்காமல் இருந்திருக்கும்
அதை மட்டும் நீ செய்யாமல்
இருந்திருந்தால்
அது நடக்காமல் இருந்திருக்கும்
ஒவ்வொருமுறையும் எதுவும்
செய்யாமலிருந்திருந்தால்
வைத்தது வைத்த இடத்தில்
அப்படியே இருந்திருக்கும் அல்லவா?

இந்த விஷயத்தைத்தான் நானும் யோசித்து வருகிறேன்
கூடுமானவரை இனிமேலாவது பிறக்காமால் இருக்கலாம்
என்று முடிவுசெய்துள்ளேன்
என்ன சொல்கிறீர்கள்?


உங்களுடன் இருக்கத்தான் நான் விரும்புகிறேன்
ஆனால் எனக்கு நகம் வெட்ட வேண்டியிருக்கிறது
உங்களுடன் இருக்கத்தான் நான் விரும்புகிறேன்
ஆனால் இரண்டு தெருக்கள் நடந்து வரவேண்டும்
உங்களுடன் இருக்கத்தான் நான் விரும்புகிறேன்
ஆனால் வெயில் கொளுத்துகிறது
இப்போது கூட
உங்களை அழைப்பதற்குத்தான் எண்ணினேன்
ஆனால் கைபேசி கையிலில்லாமல்
என் சட்டைப் பையில் இருக்கிறது

உன்னதமிக்க உறவுகளே
தற்சமயம் மரணத்திருப்பதால்
உடனே எழுந்து
வணக்கம் சொல்ல முடியவில்லையேத் தவிர
உங்கள் அன்பை அவன் புரிந்துகொள்ளாமலில்லை.


அப்பா​
உங்களை ஒருமுறையாவது​
தோற்கடித்துக் கொள்ளட்டுமா​
என்றதற்கு​
மூட்டை முடிச்சுக்களுடன்​
ஒரே எட்டில் கண்மாயைத் தாண்டினார்​
இதே கத்தியை என் மகன் இப்போது வீசுகிறான்​
மூட்டையெல்லாம் எடுத்துவிட்டேன்​
முடிச்சுப்போடத்தான் சிரமம்​
கரைக்கு எப்போது திரும்புவீர்கள் அப்பா​
நீங்கள் வந்தால் சுலபமாக இருக்கும்​
மற்றபடி நான் உங்களை வென்றது வென்றதுதான்


சூடான உலகம்

பட்டினியான நாட்களை அடிக்கடி
கடந்து விரைபவன் அவன்
அன்றைக்குத்தான் புதிதாக பசியை உணர்ந்த ஒருவர் கைகளை நீட்டினார்
தற்போதைக்கு பசியாற்றும் தேநீரை
வாங்கிக்கொண்டு வந்தவனைப் பார்த்து
உன்னைப் போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் தம்பி
இந்த உலகம்
அழகாய் இருக்கிறது என்றார்
குவளையில் இருந்த பசி
அவரது முகத்தில்
கொதிக்க கொதிக்க
வழிந்தது.


Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.