ஆதரவு

மூலம் :  பொத்தூரி விஜயலட்சுமி

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

ஒருக்களித்துச் சாத்தியிருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் ரமணி. அந்த சத்தத்தைக் கேட்டு கட்டிலில் சுருண்டு படுத்திருந்த சாரதா மேலும் இறுகிப் போனாள். 

“சாப்பிடுங்கம்மா. நேரமாயிட்டுது” என்று கெஞ்சினாள் ரமணி. எத்தனை கெஞ்சினாலும் பதிலில்லாமல் போகவே நான் அமர்ந்திருந்த பக்கம் திரும்பினாள். “நீங்களாவது சொல்லுங்கய்யா. காலையும் சரியா சாப்டல. இப்படிச் செய்தால் அம்மாவின் உடம்பு  கெட்டுப் போகாதா?” என்று பரிதாபமாகக் கேட்டாள். 

“பசித்தால் தானாகவே சாப்பிடுவாள். நீ போய் சாப்பிட்டுப் படுத்துக்க” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தேன். கட்டிலின் அருகில் சென்று சாரதாவின் படுக்கையில் உட்கார்ந்தேன். 

“இது என்ன பைத்தியக்காரத்தனம்? சின்னக் குழந்தை போல நடந்து கொள்கிறாயே, சாரதா” என்று கண்டித்தேன். 

“ஆமாம். எனக்குப் பைத்தியம்தான். எல்லோரிடமும் பாசம் வைப்பது பைத்தியக்காரத்தனத்தைத் தவிர வேறு என்ன? அவளுக்கு கொஞ்சமாவது புத்தி இருக்க வேண்டாமா? எத்தனை செய்திருக்கிறோம்? எத்தனை நன்றாகப் பார்த்துக் கொண்டோம்? துளியாவது நன்றி இருக்கா, அவளுக்கு?” கோபத்தோடு எரிந்து விழுந்தாள். 

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. “என்ன வார்த்தை சொல்லிவிட்டாய்? ரமணிக்கு நன்றி இல்லையா? நீ மனமறிஞ்சுதான் இப்படிச் சொல்றியா? அவ என்ன செய்துட்டானு இந்த வார்த்தை சொன்ன? நன்றியறிதலுக்கு மறு உருவம் ரமணின்னு நீயே எத்தனயோ தடவ சொல்லியிருக்க”. 

“அப்போ சொன்னேன். அதற்கேன்ன? அப்போது அவளுக்கும் தேவை இருந்ததால் அப்படி நடந்து கொண்டாள். தேவை முடிந்ததும் உண்மை சொரூபத்தைக் காட்டிவிட்டாள்.  இல்லாவிட்டால் இங்கு அவளுக்கு என்ன குறைச்சல் என்று அவன் கூப்பிட்ட உடனே மூட்டை கட்டிக் கொண்டுக் கிளம்பினாள்? வரமாட்டேன் என்று மறுத்தால் வறுபுறுத்தி அழைத்துச் செல்ல மாட்டான் அல்லவா? அதோடு முதலைக் கண்ணீரும் தேவையற்ற பேச்சும் கூட” என்று ரோஷத்தோடு சொற்களை வாரி இறைத்தாள் சாரதா. 

எனக்கு இரக்கமும் சிரிப்பும் சேர்ந்து வந்தன. “பைத்தியக்காரி. உன் வருத்தம் எனக்குப் புரிகிறது. ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அமைதியாக யோசித்துப் பார். ரமணியின் நடத்தையில் ஏதாவது தவறு தென்பட்டால் அவளைத் தண்டிக்கும் உரிமை உனக்கு உண்டு. ஆனால் தேடினாலும் குறை கண்டுபிடிக்க முடியாத அந்தப் பைத்தியக்காரப் பெண்ணின் மீது அனாவசியமாக நிந்தை சுமத்துவது அழகல்ல, சாரதா” என்று எடுத்துக் கூறினேன். உடனே கைகளில் முகம் புதைத்து ஓவென்று அழ ஆரம்பித்தாள்.  

அன்று என்றோ நடந்தது என் நினைவுக்கு வந்தது. அப்போது நான் எக்சிகியூடிவ் இஞ்சினியராக பணி புரிந்து வந்தேன். எங்கள் பங்களா ஊர்க் கோடியில் இருந்தது.  அன்று புயலும் பெருமழையுமாக இருந்தது. மின்சாரமும் நின்று போயிற்று. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சாப்பாட்டை முடித்தோம். இரவு ஒன்பது மணி இருக்கும். வாட்ச்மேனின் குரல் கூச்சலாகக் கேட்டது. டார்ச்லைட்டோடு வெளியில் வந்து பார்த்தேன். 

“யார் நீ? இங்கு ஏன் வந்தாய்? என்ன தைரியம்? கிளம்பு உடனே” என்று கத்திக் கொண்டிருந்தான். 

வெளி வராண்டாவில் நடுங்கிக் கொண்டு ஒரு பெண்ணின் உருவம் நின்றிருந்தது. காலருகில் ஒரு மூட்டை. எனக்குப் பரிதாபமாக இருந்தது. “பாவம். யரோ ஒரு பெண் மழைக்கு ஒதுங்கியிருக்கிறாள். இந்த மழையில் எங்கே போவாள்? பொழுது விடியட்டும். தானாகப் போய்விடுவாள்” என்றேன். வாட்ச்மேன் முணுமுணுத்துக் கொண்டே சென்று விட்டான். நான் உள்ளே வந்து விட்டேன். 

வழக்கம்போல் எனக்குக் காலை ஐந்து மணிக்கே விழிப்பு வந்து விட்டது. வானிலை சரியாக இல்லை. அதனால் காலை நடைப்பயிற்சிக்குச் செல்லும் வாய்ப்பே இல்லை. நிலைவாசல் கதவைத் திறந்து வாராண்டாவிற்கு வந்தேன். 

வராண்டாவில் தேங்கியிருந்த மழை நீரைக் கைகளால் தபதபவென்று தட்டி ஒரு ஆண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தை பரங்கிப் பழம் போலிருந்தான். இரவு அந்தப் பெண்ணின் காலருகில் மூட்டை போல் தென்பட்டது இவன்தான் போலும். என்னைப் பார்த்ததும் சிரித்தான். எனக்கும் சிரிப்பு வந்தது. நான் சிரித்தவுடன் தவழ்ந்து வந்து என் கால்களைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றான். வாயில் இருந்த இரண்டு பற்களும் வெளியில் தெரியும்படி கலகலவென்று சிரித்தான். 

அவனுடைய கன்னங்களை வருடினேன். சாரதா காபி கலந்து எடுத்து வந்தாள்.  அவள் வந்ததும் அவளைப் பார்த்துச் சிரித்தான் குழந்தை. “இவனுக்கும் கொஞ்சம் பால் இருந்தால் கொடு சாரதா” என்றேன். “சரி” என்றாள். அந்தச் சத்தம் கேட்டு குளிருக்கு முடங்கிக் கொண்டு படுத்திருந்த குழந்தையின் தாய் விழித்துக் கொண்டாள். அச்சத்தோடு எழுந்து வந்து குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டாள். அவன் முரண்டு பிடித்து அவள் கையிலிருந்து நழுவி மீண்டும் நீரில் விளையாடச் சென்றான்.   

சற்றைக்கெல்லாம் எங்கள் பணிப்பெண்ணின் வீடு வெள்ள நீரில் மூழ்கிவிட்டதாகத் தெரிந்தது. “ஐயோ, இன்று வீட்டு வேலைக்கு வருவாளோ மாட்டாளோ?” என்று கவலையுற்றாள் சாரதா. அந்தப் பெண் முன்வந்து, “நான் செய்றேம்மா” என்றாள்.  

அன்று மாலை நான் வந்ததும், சாரதா தான் சேகரித்த செய்திகளை எல்லாம் என்னிடம் கூறினாள். அந்தப் பெண்ணின் பெயர் ரமணி. வயது பதினெட்டு. திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. ஏதோ தகராறு. முதல் இரண்டு ஆண்டுகள் புகுந்த வீட்டில் அழைத்துச் செல்லவில்லை. அதன் பிறகு அழைத்துச் சென்றார்கள். அவள் கணவன் ஒரு ஊர்சுற்றி; வேறொரு பெண் மீது கோகம் கொண்டு இவளைக் கொடுமைப்படுத்தினான். பெற்றோர் அவனைத் திருத்த முயன்றனர். அவர்களை மிரட்டுவதற்காக எதையோ குடித்தான். அது அவன் உயிரைக் குடித்தது. அவன் இறந்து ஒரு மாதம் கழித்து ஆண் குழந்தை பிறந்தது. புகுந்த வீட்டில் அவளை ஒரு புழுவைப் போல் பார்த்தனர். ரமணி எல்லா அவமானங்களையும் பொறுத்துக் கொண்டாள். ஆனால் அவள் மீது பலாத்காரம் நிகழ  இருந்த போது கட்டிய துணியோடு அங்கியிருந்து ஓடி வந்தாள். 

எல்லாம் சொல்லி விட்டு, சாரதா, “சின்னப் பெண். தனியாக இந்த உலகத்தில் எப்படி வாழ்வாள்? நாம் அவளுக்கு ஏதாவது ஒரு வழி செய்வோம்” என்றாள்.

“சரி நல்லது” என்றேன். இது போன்ற ஆதரவற்றவர்களுக்கு புகலிடம் அளிக்கும் அமைப்புகளோடு கடிதத் தொடர்பு கொண்டேன். “மனப்பூர்வமாக உழைக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்று எண்ணம் இருந்தால் அதற்கான வழிகள் இல்லாமல் இல்லை. கட்டாயம் இந்தப் பெண்ணுக்கு ஒரு வழி காட்டுகிறோம். எதாவது ஒரு தொழில் கற்றுத் தருகிறோம் அனுப்புங்கள்” என்று ஒரு அமைப்பிடமிருந்து கடிதம் வந்தது.  

எங்கள் பணிப்பெண் பத்து நாட்களுக்குப் பிறகு வேலைக்கு வந்தாள். அதுவரை ரமணியே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டாள்.  இனி ரமணியை அனுப்பிவிடலாம் என்று எண்ணியபோது, பாம்பேயில் வசிக்கும் என் மாமனாரிடமிருந்து ஒரு வேண்டுகோள் வந்தது. என் கடைசி மச்சினி பிரசவத்திற்கு வருகிறாளாம். மாமியாரின் உடல்நலம் அத்தனை சுகமாக இல்லை. அங்கு யாராவது நல்ல பணிப்பெண் கிடைத்தால்   அனுப்பி உதவுங்கள் என்று எழுதி இருந்தார். சாரதா ரமணியிடம் கேட்டாளாம். 

“உங்கள் விருப்பம் அம்மா. நீங்கள் சொல்றபடி செய்றேன்” என்றாளாம். 

பச்சைக் குழந்தையை வைத்துக் கொண்டு இவள் என்ன உதவி செய்ய முடியும்?” என்று என் ஐயத்தை வெளிபடுத்தினேன். 

“அதெல்லாம் பரவாயில்லை. இங்கே ரொம்ப சுத்தமா வேலை செய்றாள். நம்பிக்கைக்குரிய பெண். எங்கம்மாவுக்கு உதவ இப்போதைக்கிப்போது யார் கிடைப்பார்கள்?” என்றாள்  சாரதா.

ஒரு துணையோடு ரமணியை பாம்பே அனுப்பினோம். ஒரு வருட காலம் அங்கேயே இருந்தாள். வீட்டுப் பெண் போல் அவர்களோடு கலந்து விட்டாள். “அவசரத்திற்கு ஒரு நல்ல பெண்ணை அனுப்பி எங்களுக்கு உதவினீர்கள்” என்று மாமனார் ஒவ்வொரு கடிதத்திலும் குறிப்பிட்டார்.   

அதன் பிறகு நாங்கள் வேறு ஊருக்குக் குடிபெயர்ந்தோம். அங்கு சாரதா மாதர் சங்கத்தில் சேர்ந்து சுறுசுறுப்பாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றாள். அவளுக்கு ஒரு பணிப்பெண் தேவையாக இருந்தது. ரமணியை திரும்ப அழைத்துக் கொண்டோம். விருப்பமில்லாமலே அவளை அனுப்பினார் என் மாமியார். 

அதன் பிறகு ரமணி எங்கள் வீட்டு மனிதர்களில் ஒருத்தியானாள். ரமணியின் மகனுக்கு ஐந்து வயது ஆனது. மரம் ஏறுவதும், சுவர் ஏறுவதும், பட்டம் விடையாடுவதுமாக ரொம்ப துறுதுறுப்பாக விளங்கினான். சாரதா அவனை கிருஷ்ணா என்றழைத்தாள். 

ஒருநாள் சாரதா அவசரமாக என் அலுவலகத்திற்கு போன் செய்தாள். அழுகுரலில் பாதி விழுங்கி அவசர அவசரமாக அவள் சொன்ன செய்தி என்னவென்றால், ரமணியின் மாமனார் குடித்து விட்டு வந்திருக்கிறான். “என் பேரனை நான் அழைத்துச் செல்வேன்” என்று தகராறு செய்கிறான். ரமணி மகனை அனைத்துக் கொண்டு பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறாள். 

உடனே நான் என்னிடம் பணி புரியும் கத்தி போன்ற மனிதனான சாஸ்திரியை அழைத்து, “அங்கு போய்ப் பார்” என்று அனுப்பி வைத்தேன். 

அங்கிருந்த விவகாரத்தை சரி செய்து விட்டு சாஸ்திரி மறுநாள்தான் திரும்பி வந்தான். “அவன் ஒரு குடிகாரன். இவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு பணம் பறிப்பதற்காக வந்திருக்கிறான். குழந்தையை எடுத்துச் செல்வேன் என்று அவன் முரண்டு பிடிக்கவே ரமணி பயந்து விட்டாள். நான் அவனை தனியாக அழைத்துச் சென்று கொஞ்சம் ஊற்றிக் கொடுக்கவே உண்மையைக் கக்கி விட்டான், சார். பணத்தாசை காட்டியவுடன் நாய்க்குட்டி போல பின்னாலயே வழிக்கு வந்தான். வேலையோடு வேலையாக அவனையும் அழைத்துக் கொண்டு அவனுடைய ஊருக்குச் சென்றேன். அவனிடமிருந்து இந்தக் காகிதங்களை எடுத்து வந்தேன், சார்” என்று சொல்லி அவற்றை என்னிடம் காண்பித்தான். 

ஒன்று இனிமேல் பேரனின் வழிக்கு வரமாட்டேன் என்று அவன் கையெழுத்திட்டு கொடுத்த பிரமாண பத்திரம். இரண்டாவது கிருஷ்ணாவின் பிறப்புச் சான்றிதழ். எனக்கு வியப்பாக இருந்தது. 

“பிறப்புச் சான்றிதழ் யார் கொடுத்தார்கள்? அவர்களின் வீடுகளில் இதெல்லாம் யார் வாங்கி வைத்திருப்பார்கள்?” என்று கேட்டேன்.

“ரமணிக்குப் பிரசவம் கஷ்டமாகி விட்டதால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு பிரசவம் பார்த்த நர்ஸ் இதை கொடுத்திருக்கிறார். நேற்று ரமணியின் மாமனாரிடம் இந்த காகிதத்தில் கையெழுத்து வாங்குவதற்கு இருநூறு ரூபாய் கொடுத்தேன். அதனால் மேலும் ஆசை பிறந்து பேரனின் பிறப்பு சான்றிதழையும் அவனாகவே கொண்டு வந்து காட்டி, “இதுவும் வேண்டுமா? எத்தனை தருவீர்கள்?” என்று கேட்டான். நூறு ரூபாய் கொடுத்து அதை வாங்கி வந்தேன். இனிமேல் அவனுடைய தொல்லை இருக்காது, சார். இனி அங்கு வந்தால், சார் உன்னை ஜெயிலில் தள்ளுவார்” என்று மிரட்டி விட்டு வந்தேன்” என்றான் சாஸ்திரி.   

“நல்ல காரியம் செய்தாய், சாஸ்திரி” என்று அவனைப் பாராட்டி அவன் செலவு செய்த பணத்தை அவனிடம் கொடுத்தேன். அந்தச் சான்றிதழ் கிருஷ்ணாவின் வாழ்க்கைக்கு பொற்பாதை அமைக்கக் கூடியது. அவனுடைய குலத்திற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்த இடஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி அவனை முன்னேற்ற இது ஒரு ராஜமார்க்கம். 

விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த என் மகன் வாசு, குறும்புக்கார கிருஷ்ணாவை அழைத்துச் சென்று பள்ளியில் சேர்த்தான். கிருஷ்ணா மின்னல் போன்றவன். படிப்பு,  விளையாட்டு என்று எல்லாவற்றிலும் முதன்மை வகித்தான். பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரியில் சேர்ந்தான். 

நான் பதவி ஓய்வு பெற்றேன். சொந்தமாக வீடு கட்டினேன். பென்ஷன் வந்தது. பொருளாதார ரீதியாகக் குறை ஒன்றுமில்லை. அந்தச் சூழ்நிலையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தவள் ரமணி. வீட்டுக்கு வருபவர்களுக்கு பதில் சொல்வது, பணியாளர்களை வேலை வாங்குவது, வீட்டைச் சுத்தம் செய்து அடுக்கி வைப்பது, கடையிலிருந்து சாமான்கள் வாங்கி வருவது, மின்சார பில் கட்டுவது என்று வீட்டுப் பொறுப்புகள் எல்லாம் அவளே பார்த்துக் கொண்டாள். ஒருவிதத்தில் நாங்கள் ரமணியைச் சார்ந்து வாழ்ந்து வந்தோம் என்றே சொல்ல வேண்டும். பெற்ற குழந்தைகள் தொலைவாக இருந்தாலும் அந்தக் குறை தெரியாமல் எங்களைப் பார்த்துக் கொண்டாள் ரமணி.  

கிருஷ்ணா பட்ட மேல்படிப்பு முடித்து அரசுக் கல்லூரியில் பேராசியராகப் பணியில் சேர்ந்தான். “நான் சிவில் சர்வீஸ் பரிட்சைக்கு ப்ரிப்பேர் ஆகப் போகிறேன், ஐயா” என்றான். சொன்னது போலவே அதில் வெற்றியும் பெற்றான். பாரெஸ்ட் சர்வீஸ் கிடைத்தது. 

“உன் மகன் பெரிய ஆபிசர் ஆகி விட்டான் ரமணி” என்று தெரிவித்த போது, தலை குனிந்து கொண்டு சிரித்துவிட்டு தப்பித்து கொண்டாள். ரமணியின் இயல்பே அதுதான். என்றுமே தலை நிமிர்ந்து அவர்களோடு பேச மாட்டாள். எல்லாவற்றையும் எங்களுடைய முடிவுக்கு விட்டு விடுவாள். 

ஆனால் இந்த முறை முடிவெடுப்பது எனக்குக் கடினமாக இருந்தது. கிருஷ்ணாவுக்கு டிரைனிங் முடிந்தது. போஸ்டிங் வந்தது. அதுவரையில் மகிழ்ச்சியே. நேற்று இரவு பத்து  மணிக்கு கிருஷ்ணாவிடமிருந்து போன் வந்தது. சாதாரண விஷயங்களெல்லாம் பேசி முடித்தபின், “முடிந்தால் வருகிறேன், ஐயா. அம்மாவை என்னோடு அழைத்துச் செல்லலாம் என்று இருக்கிறேன்” என்றான். 

அவன் கூறியதை ஜீரணித்துக் கொள்வதற்குள் என் இதயம் நழுவிவிடும் போலிருந்தது.  அவன் கூறியதில் இயற்கைக்கு மீறி எதுவும் இல்லை. ஒரு நல்ல நிலைமைக்கு வந்த மகன் தாயைத் தன்னோடு அழைத்துச் சென்று சுகமாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவதில் தவறு ஒன்றுமில்லை.  

ஆனால் ரமணி எங்களை விட்டுச் சென்று விடுவாள் என்பதை எங்களால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. சாரதா அதிர்ந்து போனாள். “இதென்னங்க? ரமணியை அழைத்துப் போவானாமே?” என்று கேட்டாள் பைத்தியம் போல.  

“இதில் தவறென்ன சாரதா? நம் மகன் அமரிக்காவில் இருக்கிறான். அங்கு சென்று நிரந்தரமாகத் தாங்குவதில் நமக்கு விருப்பம் இல்லை. அதனால் இங்கேயே இருக்கிறோம். இல்லாவிட்டால் நாமும் போயிருப்போம் இல்லையா?” என்றேன். 

“அவள் என்ன சொல்றாள்னு கேளுங்க” என்றாள் சாரதா. 

ரமணியை அழைத்துக் கேட்டேன். “கிருஷ்ணா வந்து உன்னை அழைச்சுட்டு போறானாம். போறியா ரமணி?” என்று கேட்டேன். 

வழக்கம் போல, “உங்கள் இஷ்டம் ஐயா” என்று கூறிவ முடிவை எங்களுக்கே விட்டு விட்டாள். என் மீது பாரம் விழுந்தது. ஆனால் முடிவெடுப்பதற்கு நான் அதிகம் யோசிக்கவில்லை. 

“அடுத்த வாரம் கிருஷ்ணா வருவான். உன் சாமானெல்லாம் எடுத்து வைத்துகொள்” என்று சொல்லிவிட்டேன்.  

நான் சொன்னதைக் கேட்டு சாரதாவுக்குக் கோபம் வந்தது. இரவு முழுவதும் அவள் உறங்கவில்லை. ரமணியைத் திட்டிக் கொண்டே இருந்தாள். சாப்பிடக் கூட மறுத்து விட்டாள். சாரதாவின் மனநிலை எனக்குத் தெரியும். ஏதோ அரற்றுகிறாள் என்று சும்மா இருந்து விட்டேன். அவள் மனம் அமைதி அடையும் வரை அழுது விட்டு எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டாள். 

“உண்மைதாங்க. இத்தனை நாள் அவள் நமக்குச் செய்த சேவைக்கு நாம் என்ன கொடுத்தாலும் அந்தக் கடனைத் தீர்க்க முடியாது. ஆனால் பெற்ற பெண்ணைப் போல  நம்மோடு பழகிவிட்டாள். அதனால் அவள் போகிறாள் என்றதும் மனசு பொறுக்கல. ரொம்ப வருத்தமா இருக்கு” என்றாள்.  

“பெற்ற குழந்தைகள் நாம் செய்த கர்ம வினைப்படி நமக்குப் பிறப்பவர்கள். நம் மகளும் மகனும் வெளிநாடுகளுக்குச் சென்ற போது நாம் பாசம் மிகுதியால் வருத்தப்பட்டோம். அவர்கள் தூரமாகப் போகிறார்களே. அடிக்கடி பார்க்க முடியாதே என்ற கவலை. ஆனால் இப்போது ரமணியின் விஷயத்தில் அதுவல்ல. நம் வருத்தம். இவள் போய் விட்டால் நாம் திக்கற்றவர் ஆகிவிடுவோம் என்ற பயம். நாம் மிகவும் சுயநலவாதிகள், சாரதா” என்றேன். 

“நீங்கள் சொல்வது உண்மைதான். நம் மகள் குடித்தனம் சென்ற போது அவளுக்காக எல்லாம் அடுக்கிக் கொடுத்தேன். மகிழ்வாக அவளை மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். இவள் தன் மகனோடு கிளம்புகிறாள் என்றதும் சாப்பிடாமல் இவளைத்  திட்டித் தீர்க்கிறேன். நடப்பது நடக்கட்டும். இனி என் மனதைக் கல்லாக்கிக் கொள்கிறேன். இவள் தன் மகனிடம் செல்வது இவளுக்கும் நல்லதுதான். இங்கு நாம் எத்தனை நன்றாகப் பார்த்துக் கொண்டாலும் இவளுடைய நிலை வேலைக்காரி என்பதுதானே. அங்கு அப்படி இல்லை. அங்கு இவள் எஜமானி. சோபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்காரலாம். கம்பீரமாக டைனிங் டேபிளில் சாப்பிடலாம். போகட்டும். வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டாள். இனியாவது சுகமாக இருக்கட்டும்” என்று துயரத்தோடு தொண்டையடைக்கக் கூறினாள் சாரதா. 

அதன் பிறகு ஒரு வார காலம் பாரமாக ஓடியது. ரமணி இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு மானசீகமாகத் தயாரானோம். ஆனால் இருவரும் ஒரு பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்தோம். திடீரென்று இருவருக்கும் வயதாகிவிட்டடதாகத் தோன்றியது. கிருஷ்ணா வருவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கையில் நாங்கள் இருவரும் டாக்டரிடம் சென்றோம். 

“கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டுக் கொண்டீர்களா? பி.பி. இத்தனை உயர்ந்துள்ளதே?” என்றால் டாக்டர். 

“வயசாகிறதல்லவா, டாக்டர்? எனக்கு அறுபத்தெட்டு. என் மனைவிக்கு அறுபத்திரண்டு. உங்கள் சந்தேகம் சரியில்லை. நங்கள் அன்னியோன்னிய தம்பதிகள்” என்றேன். 

இருவரும் வீடு திரும்பினோம். காரிலிருந்து இறங்கியதும் எனக்கு ஆச்சர்யம். கிருஷ்ணா எதிரில் நின்றிருந்தான். வழக்கம் போல் என்னைத் தூக்கி ஒரு சுற்று சுற்றி இறக்கினான். நான் தலை சுற்றி காரில் சாய்ந்து கொண்டேன். பின் சீட்டிலிருந்து இறங்கிய சாரதா, “போக்கிரிப் பயலே. உன் ஐயாவுக்கு வயசாகலையா? அவருக்குத் தலை சுற்றாதா? உன் விளையாட்டு புத்தி இன்னும் போகலையா?” என்று சத்தம் போட்டாள். 

“போகிறது விடு. நாளைக்கு வருவதாகச் சொன்னாயே, கிருஷ்ணா” என்று கேட்டேன். 

ஒருநாள் முன்பாகவே லீவு கிடைத்ததால் வந்ததாகச் சொன்னான். பகல் முழுவதும், “ஐயா, ஐயா” என்று கூப்பிட்டு பேசிக் கொண்டே இருந்தான். 

பழக்கப்படி சற்றுநேரம் நான் ஹால் சோபாவில் படுத்துக் கொண்டேன். என் காலருகில் தரையில் அமர்ந்து காலைப் பிடித்து விட்டான்.  வேண்டாம் என்றாலும் கேட்க மாட்டான். அவன் தன் வேலையில் எதிர்கொள்ளும் நன்மை தீமைகளைப் பற்றிக் கூறினான். எப்படி நாசூக்காக அவைகளைக் கையாள வேண்டும் என்று நான் கூறினேன். கவனமாகக் கேட்டுக் கொண்டான்.  

“நாளை இரவு ரயிலுக்கு ரிசர்வேஷன் செய்து விட்டேன், ஐயா, நானும் அம்மாவும் கிளம்புகிறோம்” என்றான். 

அதைச் சாதாரணமாக ஏற்பது போல் நடிப்பதற்கு நான் மிகவும் சிரமப்படவேண்டி வந்தது. “சரிப்பா. போய் வாருங்கள். வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்துவிட்டாய். பாவம் உன் அம்மா. இனிமேலாவது உன்னிடம் சுகமாக இருக்கட்டும். நல்ல பெண்ணைப் பார்த்து  கல்யாணம் செய்து கொள். உனக்கு நேரம் கிடைக்கும் போது வந்து போய்க்கொண்டிரு” என்று கூறுகையில் என் தொண்டை கரகரத்தது. 

சட்டென்று  தலைதூக்கிப் பார்த்தான் கிருஷ்ணா. “இதென்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள், ஐயா? நீங்கள் எங்களோடு வரப் போவதில்லையா?” ஆச்சர்யமாகக் கேட்டான். 

“நாங்களா? உன்னோடா? இந்த முறை நான் ஆச்சர்யப்பட்டேன். 

“ஆமாம் ஐயா. நீங்களும் எங்களோடு இருக்க வேண்டும் என்றும் நீங்கள் சர்வீசில் இருந்த போது நடந்தது போலவே உங்களுக்கு எல்லா சௌகர்யங்களும் கிடைக்க வேண்டும் என்றும் விரும்பித்தான் நான் சிவில் சர்வீஸ் பரீட்சை எழுதினேன். எனக்கும் என் அம்மாவுக்கும் மட்டும் என்றால் ஒரு கிளார்க் உத்தியோகமே போதுமானது. உங்களையும் அம்மாவையும் விட்டுவிட்டு நானும் என் அம்மாவும் எப்படி வாழ்வோம், ஐயா? சின்னய்யா ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்ற சந்தேகம் உங்களுக்கு வேண்டாம், ஐயா. அவரிடம் நான் கெஞ்சிக் கேட்டுச் சம்மதிக்கச் செய்வேன். சின்னம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க. அவர்களிடம் அவ்வப்போது நீங்கள் சென்று வந்து கொண்டிருக்கலாம். ஆனால் நீங்கள் இருவரும் என்னிடம்தான் இருக்கவேண்டும். அம்மாவை அழைத்துச் சென்று அங்கே எல்லாம் ரெடி செயத பின் வந்து உங்களை அழைத்துச் செல்வேன். நீங்கள் மறுக்கக் கூடாது” என்று கூறி என் மடியில் தலைசாய்த்துக் கொண்டான். 

கடவுள் வந்து வரம் கேள் தருகிறேன் என்று கெஞ்சும் போது பக்தன் என்ன சொல்வான்? என் மனம் பஞ்சு போல் இலேசானது. 

அவன் தலையை வருடினேன். “வருகிறோம்டா. சந்தோஷமா வருகிறோம்” என்றேன். 


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

4 Replies to “ஆதரவு”

Leave a Reply to Raji RagunathanCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.