
புத்தக ஆசிரியர் லோகமாதேவியின் முன்னுரை:
தாவரங்கள் கலாச்சாரங்களில் பல விதங்களில் பயன்படுத்தப்படுகின்றன. சடங்கு சம்பிரதாயங்களில் மிக முக்கியமானவைகளாக, தொன்மங்களில் குறியீடுகளாக ,விழாக்களில், கொண்டாட்டங்களில் முதன்மையானவைகளாக என அவற்றின் கலாச்சார தொடர்பு மனிதகுலம் உருவான காலத்திலிருந்தெ இருந்துவருகிறது.
அனைத்து தொன்மங்களும் தாவரங்களை மிக விரிவாக குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு நாகரீகத்துடனும் பிரத்யேக தாவரங்கள் நெருங்கிய தொடர்பிலிருக்கின்றன பாப்பிரஸும் லினனும் தாமரையும் எகிப்திய நாகரீகத்துடன் தொல்காலத்திலிருந்தே இணைந்திருப்பவை. சோம சுர பானங்கள் இந்திய தொன்மங்களில் குறிப்பிடப்பட்டிருப்பவை. போதைக்கள்ளிகள் அமெரிக்க பழங்குடியினரின் சடங்குகளில் முக்கிய இடம்கொண்டிருப்பவை. சந்தனம் இந்திய இஸ்லமிய மதங்களுடன் இணைந்திருக்கும் ஒரு நறுமணப் பொருள்.
பழங்காலத்தில் அரச வாழ்வை அல்லது இல்லற வாழ்வை துறந்து காடேகுபவர்கள் மரவுரியாடை அணிவது இனி அவர்கள் மேற்கொள்ளப்போகும் இயற்கையோடு இணைந்த எளிய வாழ்விற்கான் குறியீடாக கருதப்பட்டது. இன்றும் பல பழங்குடியினரின் உடையாக மரவுரியாடையே இருக்கின்றது. அழகிற்காகவும், மருந்துக்காகவும் விறகுக்காகவும் அறிமுகமான சீமைக்கருவேலமும் தைலமரங்களும் லண்டானாவும் பெரும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகி விட்டிருக்கின்றன
இன்றைய இளைஞர்களின் அடையாளமாகி விட்டிருக்கும் நீல ஜீன்ஸிற்கு நிறம் அளிக்கிறது இந்திய அவுரியின் நீலச்சாயம். ஜப்பானியர்களின் வாழ்க்கையோடு இணைந்து விட்டிருக்கிறது போன்ஸாய் மரங்கள், இந்திய கலாச்சாரத்தில் மங்கல நிகழ்வுகளின் முக்கிய அங்கமாகியிருக்கிறது மருதாணி,
கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது அன்பை தெரிவிக்கும் விதமாக மிஸல்டோ சிறுகிளையினடியில் முத்தமிட்டுக்கொள்ளும் வழக்கம் உலகநாடுகள் பலவற்றில் இருக்கிறது. கிருஸ்துமஸ் மரங்கள் பயன்பாட்டிற்கு வந்ததின் பின்னால் நீண்ட வரலாறு இருக்கிறது
உணவு மருந்து ஆகியவற்றை அளிக்கும் தாவரங்களுடன், கலாச்சார முக்கியத்துவம் கொண்டிருக்கும் பல தாவரங்களின் வரலாறு மிக சுவாரஸ்யமானது. வரலாறு மட்டுமல்ல இந்த நவீன யுகத்திலும் தாவரங்கள் மொழி கலை இலக்கியம் பண்பாடு என அனைத்திலும் பெரும் தாக்கத்தை உண்டாக்குகின்றன. அவற்றை குறித்து இணைய இதழ்களில் வெளியான எனது நெடுங்கட்டுரைகளின் தொகுப்பு இந்த முத்தச்சிறுகிளை நூல்.
இதை வெளியிடும் அகநி பதிப்பகத்தாருக்கும் திருத்தங்களை சொல்லி செப்பனிட உதவி, அணிந்துரையும் அளித்திருக்கும் திரு தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கும், கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டுவரும் சொல்வனம் இணைய இதழுக்கும் என் நன்றியும் அன்பும்.
மரங்களால் சூழப்பட்டு, ஒரு காட்டின் சிறு துண்டென பசுமை நிறைந்திருந்த இந்த கிராமத்து வீட்டிலிருந்து,சில வருடங்களுக்கு முன்பு அதிகார துஷ்பிரயோகத்தால் வெட்டி எடுத்து செல்லப்பட்டு சில ஆயிரம் ரூபாய்களுக்கு விற்கபட்ட மில்லிங்டோனியா, அகேஷியா மற்றும் அல்பீஸியா மரங்களுக்கு இந்த நூலை சமர்ப்பிக்கிறேன். அந்த மூன்று பெருமரங்களிடமும் அவற்றை காப்பாற்ற முடியாமல் போனதன் பொருட்டு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
லோகமாதேவி
தாவரவியல் பற்றிய அறிவியல் அறிமுகம்
சு.தியடோர் பாஸ்கரன்
[இந்தியாவின் வனவிலங்குகள், பறவைகள் மற்றும் சூழலியல் பற்றிப் பல பத்தாண்டுகளாகக் கட்டுரைகளும், புத்தகங்களும் எழுதிப் பிரசுரித்து வந்துள்ள திரு. தியடோர் பாஸ்கரனின் அணிந்துரை]
தாவரபன்மியத்தில் வளம் செறிந்த பூமியாக தமிழகம் இருந்தாலும், செடிகொடிகளைப் பற்றிய தரமான நூல்கள் தமிழில் அரிதாகவே எழுதப்படுகின்றன. பி. எல். சாமியின்சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம் (1967) நூல் அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் ஒன்று. அருட்தந்தை கே.எம். மேத்யூ பல ஆண்டுகள் களப்பணி செய்து, தமிழ்நாட்டுத் தாவரங்களைப் பற்றிய விவரங்களை நான்கு ஆங்கில நூல்களில் பதிவு செய்தார். இந்த நூல்களின் தமிழ் சுருக்கம் ‘மையத்தமிழக களவகைத் தாவரவியல்’ என்ற தலைப்பில் அருட்தந்தை ஜான் பிரிட்டோ அவர்களால் 1993-இல் வெளியிடப்பட்டது. ஆனால் பெரும்பாலும் இவை பட்டியல் வடிவிலேயே உள்ளன.
பறவைகளை, பாலூட்டிகளைப் பற்றி அறிந்து கொள்ள தமிழில் சில நல்ல நூல்கள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால் மரங்களைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வது சிரமம். நம்மைச் சுற்றியுள்ள புறவுலகில் செடிகொடிகள் ஒரு முக்கியமான பரிமாணம். நாம் நித வாழ்வில் காணக்கூடிய மரங்களையாவது அடையாளம் கண்டுகொள்ள முடிந்தால், நமது நாட்கள் சுவையுள்ளவையாகும்.
இந்தப் பின்புலத்தில் தான் பேராசிரியர் லோகமாதேவியின் இந்த நூலை நாம் வரவேற்க வேண்டும். தமிழகத்தில் இன்றுள்ள சில முக்கியமான மரங்கள், தாவரங்கள் பற்றிய அறிவியல் அறிமுகமாக இந்த நூல் அமைகின்றது. இங்கு அவரால் தெரிந்தெடுக்கப்பட்ட இந்தத் தாவரங்கள் மக்களின் வாழ்விலும், வரலாற்றிலும் பொருளாதாரத்திலும் சிறப்பான இடம் பெற்றவை. அது மட்டுமல்ல. சில மரங்களைப் பற்றி, செடிகளைப் பற்றி உருவாகியிருக்கும் விவாதங்களுக்குப் பதிலளிக்கின்றார்.
இப்பூவுலகின் நிலப்பரப்பில் இந்தியா 2.4 விழுக்காடுதான் என்றாலும் உலகின் 11.4 % தாவரங்களுக்கு இது வாழ்விடம். இருந்தாலும், தாவரங்களை நாம் கவனிப்பதில்லை என்று நூலாசிரியர் அங்கலாய்க்கின்றார். செடிகொடிகளைக் கண்டுகொள்ளாதிருக்கும் நிலையை ‘தாவரக்குருடு’ என்று கூறுகின்றார். ஒரு வேளை தாவரங்கள் ஒரே இட த்தில் நிலைத்து இருப்பதால் நாம் அவற்றைக் கவனிப்பதில்லையோ? இங்கு மனதில் கொள்ள வேண்டியது ‘காட்டுயிர்’ என்ற சொல், விலங்குகளையும் தாவரங்களையும் குறிக்கின்றது. (Uncultivated flora and fauna). சத்தியமங்கலத்துக் காடுகளில், மூங்கில் பூத்த போது, அவை சாலை ஓரத்தில் இருந்தாலும் யாரும் அந்த அரிய நிகழ்வைக் கண்டுகொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார். புள்ளினங்களைப் பற்றியும் பாலூட்டிகள் பற்றியும் அறிந்த அளவிற்கு நாம் செடிகொடிகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்று ஆசிரியர் வருத்தத்துடன் பதிவு செய்கின்றார்.
செடிகளைப் பற்றி பேசும் போது வரலாற்றில் அவற்றின் இடம் பற்றி குறிப்பிடுகின்றார். நீல (இண்டிகோ) சாயத்தைத் தரும் செடியைப் பற்றி எழுதும்போது, இந்திய விடுதலைப் போராட்டத்தில் இடம் பெற்ற, தீனபந்து மித்ரா எழுதிய நீல் தர்ப்பன் என்ற நாடகத்தைப் பற்றி எழுதுகின்றார். இண்டிகோ செடிகளைப் பயிரிட்ட விவசாயிகளின் அவல நிலையைக் குவிமையமாக கொண்ட இந்தப் படைப்பு 1884-இல் வெளிவந்தது. இதுதான் நம் நாட்டின் முதல் அரசியல் நாடகம். இப்பிரச்னை காந்தியடிகளின் கவனத்தை 1917-இல் ஈர்த்து, சம்பரான் என்ற இட த்தில் இந்தியாவின் முதல் சத்தியாகிரகத்திற்கு இட்டுச் சென்றது. இம்மாதிரியான தாவரங்கள் சார்ந்த பல தகவல்களை ஆங்காங்கே ஆசிரியர் பதிவு செய்கின்றார்.
வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மரங்கள், செடிகள் பற்றியும் பல குறிப்புகளை ஆசிரியர் தருகின்றார். தைலமரம் என்றறியப்படும் யூகலிப்டஸ் இங்கு வந்து மூன்று நூற்றாண்டுகள்தான் ஆயிருந்தாலும் அது நமது காட்டின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. அம்மரம் பற்றி பொதுப்புத்தியில் இருக்கும் சில விவரங்கள் தவறானவை என்று ஆசிரியர் சுட்டிக்காட்டுகின்றார். அதில் பிரச்னை என்னவென்றால் பல மலைகளில் உள்ள புல்வெளியில் இம்மரங்கள் நடப்பட்டன. புல்வெளி ஒரு தனித்த வாழிடமாயிற்றே. வரையாடு போன்ற அரிய உயிரினங்களுக்கு இது உறைவிடம்.
அதே போன்று வெளியிலிருந்து வந்த இன்னொரு மரம் சீமைக்கருவேலம். இது பற்றி அண்மையில் உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த மரத்தைப் பற்றியும் தவறான கருத்துகள் நிலைபெற்றுவிட்டன என்கின்றார் பேராசிரியர். இந்தத் தாவரத்தை எளிதில் அழித்து விட முடியாது. மறுபடியும் மறுபடியும் அது மண்ணிலிருந்து முளைத்துக்கொண்டிருக்கும் என்கின்றார். அதுமட்டுமல்ல. இந்த மரத்தை அழித்து விட்டால், விறகிற்காக காட்டில் இதை விட பயனுள்ள மரங்கள் வெட்டப்படும் வாய்ப்பு அதிகமாகிவிடும் என்கின்றார். லாண்டானா என்றறியப்படும் உண்ணிப்பூச்செடியையும் அழிப்பது சிரமம். இந்த தளத்தில் அறிவியல்பூர்வமான ஆய்வு மேலும் தேவை என்பது தெளிவு.
ஜப்பானின் பாரம்பரிய கலையான போன்சாய் செடிகளைப் பற்றி ஒரு விளக்கமான கட்டுரை நூலின் சிறப்பான ஒரு பகுதி. இந்தக் குட்டை மர வளர்ப்பின் நீண்ட வரலாற்றை ஆசிரியர் சுருக்கமாக சொல்கின்றார். உலகெங்கும் உள்ள போன்சாய் ஆர்வலர்கள் பல வகையான மரங்களையும் செடிகளையும், சிறு உருவத்தில் வளர்க்கின்றனர்.
இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு சிறப்பு அம்சமான சந்தனம் பற்றி ஆழமான ஒரு கட்டுரை இந்நூலில் உள்ளது. அதே போன்றதுதான் மருதாணி, வெட்டிவேர், தர்ப்பை பற்றிய கட்டுரைகளும். அன்றாட வாழ்வில் இவை நமக்கு நெருக்கமாக இருந்தாலும் அறிவியல்பூர்வமாக இந்தத் தாவரங்களைப் பற்றி நாம் அறிந்திருப்பது சொற்பமே.
தாவரயியல் பேராசிரியராக இருப்பதனால் அறிவியல் அடிப்படையில் எழுதுகின்றார். ஆதாரமில்லாமல் எதையும் கூறுவதில்லை. திடமான மேற்கோள்களைக் குறிப்பிடுகின்றார். தமிழ் அறிவியல் எழுத்துலகிற்கு இந்நூல் ஒரு நல்ல வரவு.
சு.தியடோர் பாஸ்கரன்
பெங்களூரு
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
