
பத்து நிமிடத்திற்குள் ஏதேதோ நிகழ்ந்து விட்டது. காலையில் கடை திறந்ததிலிருந்து வாடிக்கையாளர்களோ புதியவர்களோ யாரும் வரவில்லை
மணி பதினொன்னரை ஆகிவிட்டது. கடந்த ஒரு வார காலமாக சரியாக வேலைகள் வரவில்லை. வெளியிலிருந்து வரும் வேலைகள் சிறியதாகவாவது வரும். இன்று அதுவும் இல்லை.
பங்குனி மாதத்து வெய்யிலால் காலை சற்றே வெப்ப பதமான காற்று வீசியது , கடை சந்தினுள் எப்பொழுதும் குளிர்ச்சியான காற்றே வீசும். அவ்விதம் அங்கே நுழைபவரின் நிழல் நான் வேலை செய்யும் மேசை மீது வந்து விழும் .பல நேரங்களில் நிழலின் தன்மை பிரமிக்க வைத்துவிடும்.
உங்களுக்கே தெரியும் என நினைக்கிறேன் வாடிக்கையாளர்கள் பல தரப்பட்ட மனிதர்கள் வருவார்கள். நாம் எவரையும் முன்முடிவுகள் செய்யக்கூடாது என்பது அனுபவம். மனம் கேட்குமா? பேசும் போதே எடை போடத் துவங்கிவிடும். கூலி சரியாக தருவாரா? கேள்விகள் நிறைய கேட்பாரா? என்ன பழுது ? உடனடியாக பழுதை நீக்க முடியுமா?இப்படி பல சிந்தனைகள் மனதில் ஓடியபடி இருக்கும்.
இன்று நடைபெற்றது போல நடைபெறவில்லை என்பதை நினைத்தால் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. நான்தானா இது செய்தது , அந்நிகழ்ச்சி நடந்தது உண்மையா என்று கூட என்னை கிள்ளி பார்த்துக் கொண்டேன். மனிதன் ஒரு சல்லிப்பயல் என எழுதிய எழுத்தாளனுக்கு நிச்சயம் சர்க்கரை பொங்கலே போட வேண்டும் என தோன்றியது.
அந்த படபடப்பு போய்விட்டாலும் அதன் தாக்கம் போகவில்லை என்னை சுற்றி கடைதெருவை சேர்ந்த தெரிந்தவர்கள் பலரிருந்தாலும் அந்நிகழ்வை யாருமே விசாரிக்கவே இல்லை. எங்கள் மூவரின் பேசுக்களை கேட்டுக்கொண்டு மௌனமாக மட்டுமே இருந்தனர். இது எங்கும் நிகழும் என்பதால் எனக்கு வருத்தமோ கோபமோ வரவில்லை. ஒரே ஒருவர் மட்டும் இடையே சமாதானம் பேசினார். அதுவும் அங்கு எடுபடவில்லை. நிகழ்வுக்கு பத்து நிமிடம் முன்புதான் ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. ஒரு பழைய வாடிக்கையாளர் தன் வீட்டில் உள்ள தண்ணீர் குழாயில் தண்ணீர் சரியாக வரவில்லை வந்து சரி செய்து தாருங்கள் என்றார். நானும் வருவதாக சொல்லி புறப்பட தயாராகி டூல்ஸ் பையுடன் அமர்ந்திருந்தேன்.
சரி விஷயத்திற்கு வருகிறேன்
வந்திருந்தவர் புதிய வாடிக்கையாளர் அவருடன் அவர் நண்பரும் வந்திருந்தார். முதலாமவர் குட்டையாக அடர் கருமை நிறத்தில் வழுக்கை விழுந்து இடது புறமுள்ள முடியை நீளமாக வளர்த்து அதை வலதுபுறம் வரை வாரி விட்டு வழுக்கை தலையை மறைக்க முடியற்சித்திருந்தார். மீசை பெரிதாக வளர்த்து கீழ்புறம் கூர்மையாக வைத்திருந்தார். நடுத்தரமாக பெருத்து நாட்டு கட்டையாக இருந்தார் . நண்பர் மெல்லிதாக , மீசை கூட அதிக முளைக்காத இளைஞனாக இருந்தார். இரண்டு மின்விசிறிகளை கொண்டு வந்திருந்தார் ஒன்று டேபிள் பேன், மற்றொன்று டவர் பேன். இரண்டும் ஒடவில்லை. இரண்டில் ஒன்றாவது உடனே சரிபடுத்தி தாருங்கள் என்றார்.
எனக்கு உடனே என்றாலே கொஞ்சம் அலர்ஜி (ஒவ்வாமை).
கொடுங்கள் என சொல்லி வாங்கிடேபிளில் வைத்து முதலில் டவர் பேனை பார்க்க துவங்கினேன்.
உடனே புதிய வாடிக்கையாளர் எங்கிட்ட ஒரு திருப்புளி கூட இல்ல நானே பிரிச்சி பாத்திருப்பேன் என்றார். எனக்கு மனதிற்குள் திருப்புளியை கொடுத்து பிரித்து பார்க சொல்லலாமா என தோன்றியது.
அதற்கு நான் ஒன்றும் சொல்லாமல் பிரித்து வைத்து பார்த்தேன். நீண்ட நாட்கள் ஓடியதாலும், சர்வீஸ், தேங்காய் எண்ணெய் போடாததால் சூடாகி இறுகி நின்று போயிருந்தது. ஆயில் கேனை எடுத்து சாப்ட் (Shoft) பகுதியில் இருபுறமும் எண்ணெய் போட்டேன்.
சார் ஆயில் நிறைய போடுங்க சரியாய்டும். வேற ஒன்றும் ஆயிருக்காது என்றார்.
அதற்கும் நான் ஒன்றும் சொல்லாமல் சுற்றி பார்த்தேன். சுற்றவில்லை. ஒரு நாள் முழுவதும் எண்ணெய் அடிக்கடி போட்டு வைத்தால்தான் இலகுவாக சுற்ற முடியும். இது கொஞ்சம் கூட அசையவில்லை. மோட்டார் ஓடாது என உறுதிபடுத்திக் கொண்டேன். வேறுதான் மாற்ற வேண்டும்
சார் சுத்த மாட்டேங்குது இத சரி படுத்த முடியாது மோட்டார் மட்டும் மாத்தினா போதும் என்றேன்.
புது மோட்டார் ஆயிரம் ரூபாய் வருமா ?
ஆகும் சார்.
சரிங்க இத அப்படியே மாட்டி குடுத்திருங்க இதே மாறி புது பேன் வாங்கிக்கிறேன் மோட்டார் வாங்குற காசுக்கு புது பேன் வாங்கிடலாம். சரி இன்னொரு டேபிள் பேன எதையாவது பண்ணி ஓடவச்சி குடுங்க.
நான் மனதிற்குள் ஆயிரம் ரூபாய்க்கு புது ஃபேனா ? வாங்க முடியுமா?
பாக்குறேன் சார்
டவர் பேனை சரியாக பொருத்திவிட்டு டேபிள் பேனை பார்த்தால் தனித்தனியாக உட்காரும் பகுதி பிரிந்திருந்தது மின்கம்பிகளும் அறுந்திருந்தது
ஒவ்வொன்றாக சரி பார்த்ததில் வயர் தான் சரியில்லை என உறுதி செய்து கொண்டு , வேறு வயர்கொண்டு பார்த்ததில் பேன் ஓடியது.
இடையே புதிய வாடிக்கையாளரும் அவர் நண்பரும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது போல இத பாருங்க அத பாருங்க சுட்சு சரியில்லாம இருக்கும் அத பாருங்க என அருகிலிருந்து எதையாவது சொல்லிக் கொண்டிருந்தனர்.
வாடிக்கையாளர் மனம் நோகக்கூடாது என்று பொறுமை காத்திருந்தேன்.
சார் டேபிள் பேன்ல வயர்தான் சரியில்லை அத மாத்தனும்.
இல்ல சார் அத நல்லா பாருங்க வயர் நல்லா இருந்திச்சே.
ஒங்க எதிர்க்கதான் வேற ஒயர் போட்டு காமிச்சேன் அதனால ஒயர்தான் மாத்தனும்.
அவர் நண்பர் இடையே புகுந்தார்
சார் நான்தான் பிரிச்சேன் வயர் நல்லாதான இருந்துச்சி சுட்சு மட்டும் அமுக்க முடில ஆயில் போட்டா போதும் ஒடும் என்றார்.
சுட்சு நல்லாருக்கு ஒயர்தான் சரியல்ல இது மோல்டு ஒயர் எங்க அறுத்திருக்கும்னு சொல்ல முடியாது அதில்லாம ரெம்ப பழசாயிருக்கு ஒயர மாத்தனும்.
ஒயர் எவ்வளவு ஆவும்
140 ரூபா
அப்புறம் உங்க கூலி எவ்வளவு
150 ரூபா ஆகும் சார்
இருவரும் தங்களுக்குள் ஒயர் அறுத்திருக்காது இவர் ஏதோ பொய் சொல்ற மாதிரியிருக்கு என்றனர்
சார் ஒயர நல்லா செக் பண்ணி பாருங்க
சார் பாத்துட்டேன் ஒங்க எதிர்க்கவே வேற ஒயர் போட்டு ஒட்டி காட்னேன்
எனக்கு சற்றே கோபம் எட்டி பார்த்தது
சார் ஒயர்ல்லா நல்லாத்தான் இருந்திச்சி சரியா பாருங்க
எனக்கு கோபம் தலைக்கேறி படபடக்க ஆரம்பித்தது
நான் உடனே பிரித்த பாகங்களை பொருத்த ஆரம்பித்தேன்
சார் என்னா பண்றிங்க
இருங்க சார் என்ற வாறே பிரித்தவரையில் பெருத்தி விட்டு
சார் இனி இத பாக்க முடியாது வேற யார்ட்டயாவது குடுத்து பாத்துக்கங்க
அவர் உடனே தாண்டவமாடினார் என்ன நீங்க அவமான படுத்தி விட்ட டீங்க , வாடிக்கையாளரை இப்படி செய்யக்கூடாது என்று கோபத்தில் பேசிக் கொண்டிருந்தார்.
நண்பரும் அதற்கு ஒத்து பாடிக் கொண்டு என்னை நீங்கதான் பாக்கனும் பாத்து குடுத்தே ஆக வேண்டும் என்று சண்டைக்கு வந்துவிட்டார்
எனக்கு படபடப்பும் கோபமும் மேலிட்டது
சார் நீங்கதான் என்ன அவமானப் படுத்துறீங்க ஒரு தடவைக்கு மூனு தடவ செக் பண்னிட்டு தான் சொல்றேன் நம்பாம இத பாருங்க அத பாருங்கன்னு சொல்றீங்க வேணாம் எடுத்திட்டு போங்க என்னால இனி பாக்க முடியாது
சார் நா போலீஸ்க்கு போவேன் கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போவேன் கஸ்டமர அவமான படுத்துறீங்கன்னு கோபத்துல பேசிக் கொண்டிருந்தார்
எனக்கு கோபம் அதிகமாயிருந்தாலும் மூச்சை நன்றாக நான்கைந்து முறை இழுத்து விட்டதில் பதற்றம் தனிந்தது இது போல மூச்சை அமைதியாக மெதுவாக உள்ளளிழுத்து விட்டால் மனமும் அமைதியாக படபடப்பும் குறையும் அவர்களின் பேச்சை கவனித்து
சார் பாக்க முடியாது எங்க வேனா போங்க உங்களால என்ன முடியுமோ பண்ணி பாருங்க நானும் தயார் என்றேன்.
யாருக்கோ போன் செய்தார் உடனே வர முடியுமா என்றார்
எனக்கு சிரிப்புதான் வந்தது
கூட்டம் கூடி விட்டது யாரும் எதுவும் பேசவில்லை வேடிக்கை மட்டுமே பார்த்தனர் ஒரே ஒருவர் மட்டுமே விடுங்க சார் எடுத்திட்டு போய் வேறங்காவது பாத்துக்கங்க என்றார்.
அவர் அதை காதில் வாங்காமல் கொஞ்சம் தவறான வார்த்தைகளை உபயோகித்து திட்டவும் செய்தார்
கடைசியாக நான் பொறுமையாக சார் மேலே கேமரா இருக்கிறது நமது பேச்சையும் பதிவு செய்யும் அதனால நீங்க எது வேனா செஞ்சி பாருங்க என்றபடி ஸ்டூலில் அமர்ந்தேன்.
என்ன நினைத்தாரோ போன் செய்து யாரும் வர வேண்டாம் என்றார் இரண்டு மின்விசிறிகளையும் எடுத்துக் கொண்டு முறைத்தபடி வெளியேறினார்
நிற்க ஒரு ரகசியம். அந்த கேமரா இயக்கத்தில் இல்லை.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
