
நூலாசிரியர் லோகமாதேவியின் முன்னுரை:
இன்றைய இளைய தலைமுறைக்கு அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் அனைத்தும் அத்துப்படி, சிறு குழந்தைகள் கூட தகவல்தொழில் நுட்பத்தின் அனைத்து சாத்தியங்களையும் அறிந்திருக்கிறார்கள்.
ஆனால் அடிப்படை அறிவியலில் ஒன்றான தாவர அறிவியல் குறித்த அக்கறையும் ஆர்வமும் பெரும்பாலும் அவர்களுக்கு இல்லை. முந்தைய தலைமுறையினரை போல இயற்கையுடன் தொடர்பிலிருக்கும் வாழ்வும் அவர்களில் பெரும்பாலோனோருக்கு இல்லை என்பதுவும் கல்வித்துறையில் தாவரவியல் கல்வி தேவையான அளவில் அளிக்கப்படுவதில்லை என்பவும் இதற்கு முக்கியமான காரணங்கள்.
காட்டுயிர் பாதுகாப்பு என்பதை அறிந்திருக்கும் ஒரு சிலரும் புலிகள் யானைகள், சிட்டுகுருவிகள் அருகிவருவதை குறித்தே பேசுகிறார்கள் காட்டுயிரென்பது தாவரங்களையும் தான் குறிக்கின்றது. இயற்கையாக உயிரினங்கள் அழியும் வேகத்தை காட்டிலும் கால நிலை மாற்றத்தாலும் தாவரங்கள் குறித்த அறிதலும் கவனமும் இல்லாத்தாலும் தாவரங்கள் மிக வேகமாக அழிந்து கொண்டு வருகின்றன.
எனவே தாவரங்களின் முக்கியத்துவம், அவற்றிலிருந்து நாம் பெற்றுக்கொண்டிருக்கும் எண்ணற்ற பயன்கள், அருகிக்கொண்டே வரும் தாவரங்கள் ஆகியவற்றை குறித்து பள்ளிமாணவர்களுக்கென சிறு சிறு கட்டுரைகளாக இணைய இதழ்களிலும் எனது வலைத்தளத்திலும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.
தாவரங்களை பேணுதலின் முதல்படி அவற்றை அறிந்துகொள்வதுதான். தெரிந்த தாவரங்களை குறித்த தெரியாத தகவல்கள், அதிகம் தெரிந்திருக்கத தாவரங்களை குறித்த புதிய தகவல்கள் என பலவற்றை சுவாரஸ்யமாக சொல்லும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்
பாடநூல்களில் இருப்பது போல நேரடியாக இல்லாமல்சொல்லப்படும் தாவரங்களை குறித்த சுவரஸ்யமான தகவல்களையும் இணைத்துச் சொல்லும் இந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் வடிவம் பெறுவது மிகுந்த நிறைவளிக்கிறது.
பள்ளிக்காலத்தில் அறிவியலை ஆர்வமேற்படும்படி கற்றுக்கொடுத்த, பதின்பருவத்தில் எனக்கு அன்னையுமாக இருந்த ஆசிரியை துஷ்யகுமாரிக்கு இந்த நூலை சமர்பிப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.
இந்நூலுக்கு அணிந்துரை அளித்திருக்கும் திரு ராஜேந்திரன் இஆப அவர்களுக்கும், வெளியிடும் அகநி பதிப்பகத்திற்கும் எனது அன்பும் நன்றிகளும்.
எனது கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டுவரும் (டெக்ஸாஸிலிருந்து) வெளிவரும் ஆனந்த சந்திரிகை இணைய இதழுக்கும் என் நன்றி!
அன்புடன்
லோகமாதேவி
வரம் தரும் தாவரம்
முனைவர் மு. ராஜேந்திரன் இஆப (ஓய்வு)
தாவரங்கள், மலர்கள், மரங்கள் எக்காலத்திலும் மனித மனங்களுக்கு நெருக்கமானவை. அன்றாட உணவு, காதல், திருவிழா, வழிபாடு, மரணம், மருத்துவம் என அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ள பழமையான தாவரவியல் ஏனோ அறிவியல் உலகின் மிகப் புதிய சேர்க்கையாக அறியப் படுகிறது. குறிப்பாக 16, 17-ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய கனவான்களின் பங்களிப்பு தாவரவியல் துறைக்கு அதிகம். ஏற்கனவே காலம் காலமாக இருந்த மரங்கள், செடிகள், கொடிகள், மலர்களுக்குப் பெயர் சூட்டும் நிகழ்வு தான் 16,17-ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்தது என்பதை பேரா. லோகமாதேவி இந்நூலில் சொல்லியுள்ளார்.
12 கிலோ எடையில் சுமத்திரா தீவிலுள்ள காட்டு மலர், கலிபோர்னியாவில் 115 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான மரம், 4 கிலோ எடையுள்ள வாழைப்பழத்தைத் தரும் இந்தோனேசிய வாழை, இன்று பிரபலமாக உள்ள பயிர் சுழற்சி முறையை 19-ஆம் நூற்றாண்டில் முதல் முறையாக அறிமுகப்படுத்திய கருப்பின பேராசிரியர் கார்வர், உலகிலேயே 50-க்கும் குறைவான டிகப்ரியோ மரங்கள் என்று நம்மில் பலருக்குத் தெரியாத செய்திகளை இந்நூல் கொண்டுள்ளது. நெட்டிலிங்கத்தையும் அசோகமரத்தையும் ஒன்றுதான் என நாம் நினைத்துக் கொள்வோம். தாமரையையும், அல்லியையும் ஒன்று என நினைத்துக் கொள்வோம். அது தவறு என்கிறார் லோகமாதேவி. வறுத்த கொண்டைக்கடலை காப்பியாக அருந்தப்படுவதையும் தமிழ்நாட்டின் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள பிச்சாவரம், உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடுகள் என்பதையும் புதிதாகக் கேள்விப்படுகிறேன்.
சாலைகளில் காணப்படும் தீக்கொன்றை மரத்தின் விதை இயற்கையாக முளைக்க வருடக்கணக்கில் ஆகுமாம். ஆனால் கொதிநீரில் மூழ்க வைத்து, ஈர காகிதத்தில் பொதித்து வைத்தால் ஒரு வாரத்தில் முளைக்குமாம். மிளகாயின் காரத் தன்மையை வைத்துத் தரம் பிரிக்கையில் இந்திய மிளகு முதல் இடத்தைப் பிடிக்கிறதாம். காரம் இருக்கும் மிளகாய்ப் பழங்களை மனிதனால் ஓரளவிற்குமேல் சாப்பிட முடியாது. மனிதனும், மிருகங்களும் மிளகாயின் காரத்தைப் பார்த்துத் தவிர்ப்பார்கள். ஆனால் பறவைகள் குறிப்பாக கிளிகள் எப்படி இவற்றை விருப்ப உணவாகக் கொண்டுள்ளன என்பதற்கான விவரத்தை இந்நூலில் காணலாம். மிளகாய் கடித்து, காரம் தலைக்கேறியதென்றால் நாம் தேடுவது தண்ணீர். அது பெரிய பலன் தராதாம். மிளகாய்க் காரத்துக்கு முறி மருந்து பால் தானாம். ஐஸ்கிரீம், சோடா, எலுமிச்சைச் சாறு, பாலாடைக்கட்டியும் மிளகாயின் காரத்தை மட்டுப்படுத்துமாம். மிளகாய் சாஸ்களைக் கடைகளில் வாங்கும் போது கார அளவு எத்தனை SHU என்று பார்த்து வாங்குதல் நலம்.
ஒவ்வொரு தாவரத்தின் படத்தையும், மரங்கள், மலர்கள், மிருகங்களின் படத்தையும் நூலில் தக்க இடங்களில் சேர்த்திருப்பது புரிதலைக் கூட்டுகிறது. இந்தத் தாவரங்கள் எந்தெந்த பழமையான நூல்களில் சொல்லப் பட்டிருக்கின்றன, அதன் மருத்துவக் குணம் என்ன என்று சொல்லியிருப்பதும் நூலின் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றது. கிராம்பு, கடுகு, கொண்டைக்கடலை, கரையோர நாணல்கள், விதைகளற்ற கனிகள், ருத்ராட்சங்கள், அரசாணி (பூசணி), மக்காச்சோளம், அலையாத்தித் தாவரங்கள், அந்தரத் தாமரை பற்றிய செய்திகளில் பல எனக்குப் புதியவை. ரசனைக்குரியவை.
தாவரவியல் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவோருக்கு இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டி. தாவரவியல் குறிப்பிட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் போன்ற செய்திகள் பயனுள்ளவை. அறிவியல் செய்திகளை அதன் வரலாறு, பூகோள அடிப்படையில் நல்ல மொழிநடையில் கொடுத்துள்ள முனைவர் லோகமாதேவியின் முயற்சி பாராட்டத்தக்கது.
தீவிர வாசகியாக லோகமாதேவி எனக்கு அறிமுகம். பிறகு அவ்வப்போது புத்தக விமர்சனங்கள் எழுதுகிறவராக தெரிந்தார். எங்களுடனான இரண்டு, மூன்று பயணங்களில் தாவரவியல் குறித்து அவரின் ஆர்வமான, சுவாரசியமான பேச்சுகளை நான் கேட்டிருக்கிறேன். வழியில் தென்படும் சின்னஞ்சிறு பூக்களையும் இலைகளையும் செடி கொடிகளையும் பார்த்து, ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கிச் சொல்லுவார். அவருக்குத் தெரியாத ஒரு தாவர வகை கண்ணில் பட்டுவிட்டால் போதும், அந்தத் தாவரம் என்னதென்று இணையத்திலோ, நண்பர்களிடத்தோ கேட்டுத் தெரிந்துகொள்வது வரை அவரின் படபடப்பு குறையாது. அவர் கல்லூரி மாணவர்களுடன் செல்லும் களப்பயணங்களும் சுவாரசியமானவை. பெரும்பாலும் பேராசிரியர்கள் மறந்துவிட்ட செயல்பாடு. லோகமாதேவி மிக அர்ப்பணிப்பான பேராசிரியர். துறைத் தலைவர்.
அவர் வீட்டையே தாவரவியல் ஆய்வுக்கு உகந்த இடமாக வைத்திருப்பவர். ஒரு தோட்டத்தில் இருக்கும் உணர்விருக்கும் அவர் வீட்டு வராந்தாவில் உட்கார்ந்திருக்கும்போது. வெற்றிலை கொடிகளும் மருதாணி செடியும் பல்விதமான மரங்களும் பழ மரங்களும் இருக்கும் இடத்தில் இயல்பாகவே பறவைகளும் அடைந்துவிடுகின்றன. மாலைப் பொழுது ரம்மியமாய் இருக்கும் அங்கிருக்கும்போது. மாலையில் அவர் ஏற்றும் கல்விளக்குகளும் எங்கும் காணக்கிடைக்காதவை.
இப்போது தீவிர ஆய்வுகளுடன் கூடிய தாவரவியல் கட்டுரைகளையும், சமூகத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமான தாவரவியல் சார்ந்த விழிப்புணர்வு கட்டுரைகளையும் எழுதும் லோகமாதேவியின் வளர்ச்சி மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகள்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
