நதி

அன்புள்ள பேரனுக்கு,

நலமாக இருக்கிறாயா? இன்று நீ கிளம்பியதும் உன் அம்மா ஒப்பாரிதான் வைத்தாள். விளக்கு வைத்தபின்னும் அழுகை. என்ன சொல்லியும் தேற்ற முடியவில்லை. நான் என் அம்மாவை நினைத்துக்கொண்டேன். என் அண்ணன் ஆறு மாதத்திற்கும் மேலாக விடாப்பிடியாய் நின்று ஆனவரை சச்சரவு செய்து சொத்தைப் பிரித்து வாங்கினான். என் அம்மா அன்று அழுதாள் ‘நெலத்த பிரிச்சு என்னடா பண்ணப் போறிங்க… ஒரே நெல்லுதானடா யாரு வெளச்சாலும்… கூடப் பொறந்தவங்க ஒன்னா மண்ணா இருந்தாத்தான் என்னாடா… திட்டியூர் வீரா.. என் கண்ணால இதையெல்லாம் பாக்க வெச்சிட்டியே’ வரி பிசகாமல் நினைவுள்ளது.  இன்று உன் அம்மா அழுதது பிள்ளையை பிரியும் சோகத்தில், ஆனாலும் நடுவில் ‘படிக்க வெச்சது தப்பா.. இப்டி கண்காணா தூரம் போவவா.. நெலம் கெடக்கே இருந்து பாத்துக்கிட்டா போதாதா” இப்படிச் சொல்லியும் அழுதாள். ஆனால் இது பற்றி நீ கவலைப் பட வேண்டாம். காலை பொழுது புலர்ந்தால் மாடு கறக்கக் கிளம்பிடுவாள் என் மருமகள். ஏன், இன்று பாலெல்லாம் கறந்து டிப்போ அனுப்பிவிட்டுத்தான் அழத் துவங்கினாள். ஆக இதை நினைத்து  குழப்பிக்கொள்ளாதே.

நான் என் இருவத்து ஒன்றாம் வயதில் சிங்கப்பூர் போனேன், என் அம்மாவின் அழுகைக்கு நடுவில்தான். நீ அமெரிக்கா சென்றிருக்கும் தூரத்தில் கால்வாசி கூடக் கிடையாது. ஆனால் நாள்கணக்காக சென்றுகொண்டே இருக்கும் கப்பல். கப்பல் என்றால் சொகுசு அறையெல்லாம் நினைக்கவேண்டாம். நான் சென்றது  1939ல், போர் துவங்கவில்லை. எஞ்சின் இயங்கும் அறைக்கு அருகில் படுத்துக்கொள்வோம். ஆடி ஆடி நான் ஒரே வாந்தியாக எடுத்தேன். கடிவாளம் இட்டது போல் எதுவோ முன்செலுத்தியது. பழக்கடை ஒன்றில் வேலை செய்தேன், ஒரு ஹோட்டலில், ஒரு விடுதியில், ஒரு லேத் ஆப்பரேட்டராக இருந்தேன் கொஞ்ச நாள் இப்படி எண்ணற்ற வேலை. ஊரில் இருந்தால் பிழைக்கவே முடியாது எனும் நிலை. எத்தனை நிலமிருந்தென்ன? . அதான் சிங்கப்பூர் சென்றேன். ஆனால் திரும்பி வந்து மண்ணோடு நிற்கிறேன். ஏதோ ஒரு நாள் மண் கொத்திக்கொண்டிருக்கும் போது தோன்றியது ‘இது சரி வராது’ என்று அதனால் சிங்கப்பூர் சென்றேன். ஒரு நாள் லேத் மெஷினை இருக்கி  ஒரு போல்ட்டின் திருகுப் பகுதியை இழைத்துக்கொக்கொண்டிருந்த போது தோன்றியது ‘இது ஆகாது.. அதுதான் சரி’ என்று. திரும்பினேன் ஊருக்கு. 49ல் கல்யாணம். 55ல் உன் அப்பன் பிறந்தான். 82ல் நீ பிறந்தாய்.

ஏதோ கைவைக்கவும் இதெல்லாம் தன்னால் வந்து விழுகிறது. நீ நல்லபடியாக இரு. வேறு தேசம் அது. வேறு விதை வேறு மரம். ஆனால் எல்லா மரத்துக்கும் சூரியன் ஒன்றுதான் பாத்துக்க. உடலை பேணிக்கொள். திரேகப் பயிற்சி முக்கியம். கல்லு மாதிரி இறுகி இருக்கணும் நாணல் மாதிரி வளையணும். பூமி பெரிசு வாழ்க்க பெரிசுன்னோ சிறிசுன்னோ தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு. சுகமாய் இரு. கடிதம் எழுது. வீரன் துணையிருப்பான்.

அன்புடன்

தாத்தா

08.06.2002

இது நான் அமெரிக்கா வந்த பின் தாத்தா எழுதிய முதல் கடிதம். இன்று அமெரிக்காவிலேயே சொந்தமாக ஒரு வீடு வாங்கி குடிபெயர்கிறேன். ஒரு இருவது கார்டன் பாக்ஸ் இருக்கும். அதில் ஒன்றில் புக்ஸ் எனும் அட்டைப்பெட்டியில் ஒரு தனி ஃபைலில் இருந்தது இக்கடிதம். அம்மா அழுதது அப்பா தழுதழுத்தது எல்லாம் அன்று விநோதமாய் இருந்தது. நான் எப்போது எப்போது என்று அமெரிக்கா வந்தேன். வேலை செய்த நிறுவனமே என்னை அனுப்பி வைத்தது. பின் நான்கு நிறுவனம் மாறிவிட்டேன். அமெரிக்கா வந்து  பதினெட்டு வருடம் ஆகிறது. மாதத்திற்கு ஒரு கடிதம் வந்து விடும். கோயில் திருவிழா பற்றி, மாடு கன்று ஈந்தது பற்றி, பால் விலை உயர்ந்தது, கோயில் பூசாரி காலமானது, ஆட்சி மாற்றம் அவ்வளவும் கடிதமாய் வரும். நான் வாரம் ஒரு முறை ஃபோன் செய்துவிடுவேன். என் குழப்பங்களை ஃபோனில் அவரிடம் சொல்வதுண்டு. வெறும் ம் மட்டும் வரும். பின் பதில் ஒரு கடிதமாய் வரும். அவர் கடிதங்களைப் பல நேரங்களில் வந்ததும் படிக்க நேரம் கூடாது. ட்ராவல் பையில் வைத்திருப்பேன். நியூ யார்க்கில், டல்லாஸில், சிக்காகோவில், டென்வரில், ஸால்ட் லேக் சிட்டியில் என அமெரிக்கா முழுவதுக்கும் உடன் எடுத்துச் சென்று வாசித்திருக்கிறேன். இந்தக் கடிதத்தை வாசித்தபோது நான் ஸான்டியாகோவில் இருந்தேன். பாட்டி இறந்திருந்தாள். என்னால் செல்ல இயலவில்லை. புது ப்ராஜக்ட் ஒன்று அஸைன் ஆகி இருந்தது. என் ப்ரமோஷனுக்கு வழிவகுக்கும் ஒன்று. அதே நேரம் என் மனைவி கர்ப்பமாக இருந்தாள். நான் வராதது குறித்து அப்பா திட்டித் தீர்த்தார். ‘டேய் நீ வந்து நெய் பந்தம் புடிச்சிருக்கனும்டா.. மட்டிப் பயலே… ‘ தழுதழுத்து அழுதபடி சொன்னார்.

அன்புள்ள பேரனுக்கு,

நான் நலம். நீ நலமா? ஆஷா நலமா? உன் பாட்டி காரியத்துக்கு வந்திருந்திருக்கலாம். ஆனால் சூழ்நிலை… என்ன செய்ய முடியும் உன்னால்? நான் என்னைப் பற்றி எப்பொழுதுமே சுயம்பு என்று நினைத்துக்கொள்வதுண்டு. ஆனால் அப்படி அல்ல. அவள் என் உடலின் ஒரு உறுப்பு போல் இருந்திருக்கிறாள். எங்கள் திருமணம் 05.08.1949ல். அவளுக்கு பத்தொன்பது வயது.  பெரிய கண்களை மிரட்சியுடன் உருட்டிக்கொண்டு உதட்டுக்கு மேல் வேர்வைப் புள்ளிகள் வரிசை கோர்க்க முடியை இழுத்து காதோரம் விட்டுக்கொண்டு ஒட்டியானத்தை சரிசெய்துகொண்டு என் அருகில் நின்றாள். அந்த 05.08.1949ல் இருந்து இன்று வரையிலும் ஒரு நாள் கூட அவளை விட்டுத் தனியாக இருந்ததில்லை. அப்படியாக வாழ்க்கை விதித்திருந்தது எங்களுக்கு.  நேற்று இரவு வரை நன்றாக பேசிக்கொண்டிருந்தாள். ‘சிங்கப்பூர் காரி ஒருத்திய காதிலிச்சீல… அவள கேளு தண்ணி கொண்டாந்து கொடுப்பா’ என்றபடி அடுப்பங்கரை சென்று நீர் சொம்பை டொங்க் என்று என் பக்கத்தில் வைத்துவிட்டுச் சென்றாள். காலையில் மாடு கறக்கப் பிந்தியது. நான் தான் அவளை எழுப்பப் போனேன். குழந்தையைப் போல் தூங்குவாள். ஆனால் அன்று முகம் மேலும் அசந்து ஒளிகொண்டிருந்தது. ‘ப்ரேமா’ என்றபடி நேராக நாடியைப் பிடித்தேன். கோழிக் கழுத்து துடிப்பது போன்ற அந்த மென் அசைவு புலப்படவில்லை. எல்லா காரியங்களும் முடிந்தது. என் அம்மாவுக்கு கொள்ளி போட்டபோது இப்படி அழுதேன் அதன்பின் இவளுக்கு. நீ இல்லையே என்று வருத்தப்படாதே. உன் ஆருயிர் நண்பன் ரங்கராஜ் இருந்தான். அவனை நெய்ப்பந்தம் பிடிக்கச் சொன்னேன்.ரொம்பவும் தனியனாக உணர்கிறேன். அவளுடைய மாடுகளின் அசைபோடும் சப்தம் அவள் கோழிகளின் கொக்கரிப்பு எல்லாம் தனிமையை ஆயிரம் மடங்கு பெரிதாக்குகிறது.

உனக்கும் உன் மனைவிக்கும் விருப்பமெனில் நான் அமெரிக்கா வரவா?

அன்புடன் 

தாத்தா

05.01.2008

நான் இப்படியான ஒரு கேள்வியை தாத்தாவிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. என் அப்பாவோ அம்மாவோ அமெரிக்கா வர வாய்ப்பே இல்லை. ஆனால் தாத்தாவால் வர முடியும் என்பதை நான் யோசித்ததேயில்லை. அப்போது ஆஷா ப்ரெக்னன்ட் வேறு. அவளை பார்த்துக்கொள்ள அவள் வீட்டிலிருந்தும் யாரும் வர இயலாத நிலை. தயங்கியபடி ஆஷாவிடம் கேட்டேன். அவள் அப்போதுதான் அவள் நண்பர்களுடன் வேகாஸ் சென்று திரும்பியிருந்தாள். கடந்த ஒரு மாதமாக பெரும்பாலும் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. ஆனால் கேட்ட போது முதலில் தயங்கினாள்,

“ஹீ ஈஸ் ஓல்ட் ரைட்? ஸீ ஐ ஆம் கேரியிங்க்.. ஐ கான்ட் டேக் கேர் ஆஃப் ஹிம்” என்றாள்.

“அதுக்கு அவசியமே இல்ல… ஹீ ஈஸ் வெரி ஹெல்த்தி.. இன் ஃபாக்ட் ஹீ வில் பி ய க்ரேட் ஹெல்ப்”

“தென் ஓக்கே வித் மீ” என்றபடி மீண்டும் லாப்டாப்பில் ஆழ்ந்தாள்.

பாஸ்போர்ட் தாத்தாவிடம் இருந்தது. வீஸா இன்டர்வியூ எல்லாம் அவரே பார்த்துக்கொண்டார். அந்தக் கடிதம் வந்ததிலிருந்து மூன்றாவது மாதம் லாஸ் ஏஞ்சலஸ் ஏர்ப்போர்ட்டில் அவருக்காகக் காத்திருந்தேன். வேஷ்டியுடன் தான் வந்திருந்தார். மேலே வெளிர் கருப்பில் போன முறை சென்றபோது அவருக்கு நான் கொடுத்திருந்த சட்டை. அன்றிரவு ஆஷா சொன்னாள் ‘ஸீம்ஸ் லைக் அ ஜென்டில்மேன்” என்றாள். ஆஷா நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை என இருப்பவள். ஆனால் இருப்பது வெறும் செருக்கு. சக மனிதரை ஆணவத்துடன் திமிருடன் எதிர்கொள்ள வாழ்க்கை அவளுக்குக் கற்றுக்கொடுத்திருந்தது. ஒரு வாரத்தில் அவள் சொன்னாள் “ஐ லைக் யுவர் தாத்தா”.

அவர் அமெரிக்காவில் இருந்த நாட்கள் எதுவும் மறக்கவில்லை. வீட்டில் பணிக்கு வரும் மெக்ஸிக்க பெண்ணிடம் உடைந்த ஆங்கிலத்தில் பேசிவிடுவார். அவளை உதவிக்கு வைத்துக்கொண்டே இட்லி மாவு அரைத்தார். மெல்ல சமையல் முழுவதையும் அவரே பார்த்துக்கொள்ளத் துவங்கினார். எத்தனை சொல்லியும் கேட்கவில்லை.

‘அந்த பொண்ணுக்கு சமைக்கிறதுக்கும் சேத்துதான சம்பளம்… நீ பாட்டுக்க சம்பளத்த கொறச்சுடாத’ என்றார்.

மாலையில் அப்பார்ட்மென்ட் பார்க்கில் இருப்பார். மெல்ல குளிருக்கு இணங்கி பேன்ட் சட்டை அணியத் துவங்கினார். ஒரு ஜெர்க்கின் வாங்கினோம் அவருக்காக. அதை அணிந்தபடி கால் மேல் கால் வைத்துக்கொண்டு கையில் கொண்டு வந்திருந்த திருவாசகத்தை படித்துக்கொண்டிருப்பார். அவரை ஒரு முறை க்ரேன்ட் கேன்யானுக்கு அழைத்துச்சென்றேன். ஹாலிவுட் பார்த்தார். நாங்கள் காலையில் அலுவலகம் நீங்கவும் பொடி நடையாகக் எங்களுடனேயே கிளம்பிவிடுவார். ஆஷா வற்புறுத்திக் கொடுக்கவும் ஒரு செல்ஃபோனை வைத்துக்கொண்டார் கையில். நடந்தே லாஸ் ஏஞ்சலஸ் வீதிகளை அளந்தார். ஒரு முறை அவரை ஸ்டார் பக்ஸில் பார்த்தேன். ஒரு மெக்ஸிகனிடம் பேசிக்கொண்டிருந்தார். ஒரு முறை ஆஷா அவரை வால் மார்ட் பக்கம் ஒரு அமெரிக்கனுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டதாகச் சொன்னாள். அவர் பாட்டுக்கு அவர் இருந்தார். 

ஆஷா ஒன்பதாவது  மாதத்தில் மெட்டர்னிட்டி லீவ் எடுத்துக்கொண்டாள். அவருடைய முதல் வருகையில் அவருடன் அதிகமாக நேரம் செலவிட்டது அவள்தான். அவளுக்கு குறித்த நாளுக்கு முன்னே வலி வந்தது. நான் அப்போது ஸான்டியேகோ சென்றிருந்தேன் ஒரு க்ளையன்ட்டை சந்திக்க. தாத்தாதான் உடனிருந்தார்.  அவர்தான் என் குழந்தையை முதலில் கையில் வாங்கியது. 

வீட்டிற்கு வந்து “அந்த நர்ஸம்மா, கொழந்தகிட்ட தன் பேரு ஊரெல்லாம் சொல்லிட்டுல்ல வைத்தியம் பாக்குது…” என அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது அவரிடம் சொன்னோம்

‘கொழந்தைக்கி பேர் முடிவு பண்ணியாச்சு தாத்தா”

“அதுக்குள்ளவா.. என்ன பேரு”

“ப்ரேமா”

கண்கள் நீர் திரள எங்களை மாறி மாறிப் பார்த்தார். பின் கண்ணீர் வழிய சிரித்தபடி “நல்லதுடா நல்லது” என்றார்.

அவர் முதல்முறை இந்தியா திரும்பிய போது ஆஷா அழுதது பெரிய ஆச்சர்யம். பின் ஆறு மாதம் இந்தியா ஆறுமாதம் அமெரிக்கா என்பது வழக்கமானது. அவராக வருவார் போவார். குழந்தையை அவர்தான் பார்த்துக்கொண்டார். பார்க்கிற்கு குழந்தையை தூக்கிச் சென்றுவிடுவார். ப்ரேமா பள்ளி சென்று மெல்ல இவரை அழைத்துச் செல்லத் துவங்கியது. அப்பார்ட்மென்டில் எல்லோருக்கும் தெரியும் தாத்தாவை. அவரை அங்கு பார்த்ததாய் இங்கு பார்த்ததாய் பலர் சொல்வதுண்டு. எனக்கு அவர் இருப்பது ஏதோ இந்தியாவே உடன் இருப்பது போன்ற  ஒரு உணர்வு.

அவர் கடைசியாக அமெரிக்கா வந்து போன தினம் 04.07.2016. அது என் குழந்தை ப்ரேமாவின் பிறந்தநாள். குழந்தை அழுது தீர்த்தாள்.  தாத்தா போகக்கூடாது என்று. ஆறு மாதம்தான் டூரிஸ்ட் விஸா.

பின்னும் கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்.  அவர் உடல் நிலை மோசமாகிக் கொண்டிருப்பதை அப்பா ஃபோனில் தெரிவித்தார். ஆனால் அவர் கை நடுங்கி கடிதத்தின் எழுத்துக்குள் அலை நெளிவு கொள்வதிலிருந்த என்னுள் ஏதோ ஒன்று முன்னரே உணர்ந்திருந்தது. அலைநெளிவு மேலும் மேலும் பெருகி வெறும் நெளிவுகளால் மட்டுமான எழுத்துக்களுடன் கடைசிக் கடிதம் வந்தது

அன்புள்ள பேரனுக்கு,

நலம். நீ ஆஷா நலமா? ப்ரேமாவுக்கு ஒரு கோடி முத்தங்கள். அடுத்த முறை வரும்போது ஒரு மலையளவு ஐஸ்க்ரீம் வாங்கித் தருவதாகச் சொல். அவள் சின்னக் கைகள் தினம் முகத்தில் விழவும்தான் கண் விழிக்கிறேன்.

நேற்று லட்சுமி கன்று ஈந்தது. செவப்பியை வாங்கிச் சென்றனர். மாடுகள் இறப்பது வரை நம்முடன் இருக்கட்டுமே என எனக்கு சிறு வயதிலிருந்தே தோன்றுவதுண்டு. ஆனால் விற்றுவிடுவார்கள். பாவமாய் அம்மாஞ்சியாய் கருணையுடன் நோக்கும் செவப்பியை நேற்று ஓட்டிச் சென்றார்கள். நடைமுறை அல்லவா? நம் கருணையின் அன்பின் கணக்குகளை சமன் செய்யும் ஒரு நடைமுறைக் கணக்கு தராசின் மறு தட்டில் வைக்கப்படுகிறது அல்லவா. அந்த எடைதான் நம் மனம் உணரும் பாரம் போலும். நாம் எல்லைக்கு உட்பட்டபவர்கள் இல்லையா?

2013ல் அமெரிக்கா வந்திருந்த போது ஒரு நிகழ்வு. உன்னிடம் சொல்லவேயில்லை. எனக்கு ஸ்டார் பக்ஸில் பழக்கமானவர் டேவிட் மிட்ச். நான் அவர் பாலோ எனும் இத்தாலியர் ஸ்டார் பக்ஸிலேயே வேலை பார்க்கும் ரெபேக்கா –  நாங்கள் எல்லாம் ஸ்டார் பக்ஸில் தினம் ஒரு மணி நேரம் செலவிடுவதுண்டு. டேவிட் மிட்ச் ராணுவ வீரர். சாகசமான வாழ்க்கை அவருடையது. மனைவி மக்கள் பற்றி தெரியவில்லை. குடும்பம் பற்றி விசாரிப்பது வழக்கமில்லையாமே, அங்கு நானும் கேட்பதில்லை. எங்கள் ஸ்டார் பக்ஸ் நட்பு மூன்று வருட நட்பு. 2013ல் வந்த போது டேவிட் மிட்ச் மட்டும் வரவேயில்லை. நான் மற்றவர்களை உசுப்பினேன் விசாரிக்கச் செல்லி. அவர் ஸெயிட்ன்ட் ஜான் காப்பகத்தில் இருப்பதாய் தகவல் வந்தது. சென்று பார்க்க முடிவு செய்தோம். நான் அந்த இத்தாலியன், ஆஃப்ரிக்கப் பெண் ரெபெக்கா மெக்ஸிக நாட்டுக்காரர் ரஃபேல் எல்லோரும் சென்றோம். தேடிப் பிடித்து பார்த்தபோது ஜன்னலோரம் ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார்.. கண்டதும் ஓஓஓவென அழுகை. நான் சாகப்போறேன். நான் சாகப்போறேன்னு சொல்லிட்டாங்க மிஸ்டர் சுந்தர் என்று. நான் வேகமெழுத்து தெரிந்த ஆங்கிலத்தில் ‘யூ டை ஐ டை ஹீ டை எவெரி படி டை… சாம்பல்… ஆஷஸ் வீ… ஒன்லி ஆஷஸ்.. நோ ஒன் நோ வென் வீ பிகம் ஆஷ் மிஸ்டர் டேவிட் ஒன்லி காட் நோ’ என்றேன். இப்போது நினைத்துக்கொள்கிறேன். நாம் வெறும் சாம்பலாகப் போகிறவர்கள். ஆண்டவனுக்குத்தான் தெரியும் என்றாலு என் முடிவு அருகில்தான் எனத் தோன்றுகிறது. 2015ல் உன் கருப்பு கோர்ட்டை கடன் வாங்கினேன் நினைவுள்ளதா? அது மிட்சின் இறுதிச் சடங்குக்கு செல்வதற்குத்தான். யாருமில்லை. நாங்கள் ஸ்டார் பக்ஸ் நண்பர்கள் மட்டும்தான் இருந்தோம். இவ்வளவு தனியாக மனிதனை விடக்கூடாது இல்லையா?

இந்த கடிதத்துடன் ஸ்டார் பக்ஸ் நண்பர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன் தெரிந்த ஆங்கிலத்தில். காலை பதினோறு மணிக்கு ஸ்டார் பக்ஸ் சென்றால் அவர்களைப் பார்க்கலாம். யாரும் இல்லாவிட்டாலும் ரெபெக்கா இருப்பாள் அவளுக்கான கடிதத்தை அவளிடன் கொடுத்துவிட்டு மற்றதை அவளிடம் ஒப்படைத்துவிடு.

உனக்கு முதன் முதலில் எழுதிய கடிதத்தை நினைத்துக்கொள்கிறேன். நிலத்தை பாகம் பிரித்த போது என் அம்மா அழுததையும் நீ அமெரிக்கா கிளம்பிய போது உன் அம்மா அழுததையும் பற்றி எழுதியிருந்தேன். காலத்தின் வெவ்வேறு புள்ளிகள் வெவ்வேறு கண்ணீர்.

ஆஷாவை பொழுதுக்கும் காதில் மாட்டிக்கொண்டு இருக்கச் சொல்லாதே. நீ உன் தொப்பையை குறை. பாறையைத் தொட்டதை போலிருக்கவேண்டும் வயிறு. ப்ரேமாவை நான் மிஸ் செய்வதாகச் சொல்.

அன்புடன்

தாத்தா

26.03.2016

தாத்தா இறந்த செய்தி கேட்ட போது ஆஷா கதறி அழுதாள். ப்ரேமாவிற்கு உடல் நலமில்லை.  ஆஷாவுக்கும் ஜூரம். என்னால் செல்ல முடியவில்லை. பத்து வருடத்திற்கும் மேல் தொடர்பில் இல்லாத என் ஆருயிர் நண்பன் ரங்கராஜை தேடி ஃபோனில் பிடித்து எனக்குப் பதிலாக நெய்ப்பந்தம் பிடிக்கச் சொன்னேன். தாத்தா சூழ்நிலையைப் புரிந்துகொள்ளக்கூடியவர்.

வீட்டில் மாட்ட தாத்தாவின் ஃபோட்டோக்கள் தேடிய போது எதுவும் சரியாக இல்லை. கடைசியாக ஃபேஸ்புக்கில் டோனி ஸ்டார்க் எனும் ஐடியில் தாத்தாவின் ஃபோட்டோ ஒன்று பதிவேற்றம் ஆகியிருந்தது. யாரோ ஒருவர் தாத்தா கொலராடோ நதி முன் நிற்பதை பின் பக்கத்திலிருந்து  க்ளிச் செய்திருந்தார். ஓடும் நதியை பார்த்த படி நிற்கும் தாத்தா. அதைதான் ப்ரின்ட் செய்து மாட்டினோம்.

Blossomed : 22.02.1916

Withered : 26.03.2016


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

4 Replies to “நதி”

  1. என்ன ஒரு யதார்த்தமான, சரளமான ஒரு நடை! எங்கள் கிராமத்தில் வடகிழக்காக ஓடிடும் (அந்த நதி இப்போது இல்லையாம்) அநுமநதியைப் போலே!
    சில வரிகள் மனதைத் தொடும், ஒரு சில நெருடும், மற்றும் சில வருடும் நிகழ்ச்சிகள். 45 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வாழும் என்னைப் போலவே நீங்களும் அமெரிக்காவிலேயே இருக்கிறீர்கள் என்பது என் யூகம். நெறைய எழுதுங்க!

  2. நீண்ட நாட்களுக்கு பிறகு கடிதம் மூலம் கதை சொல்லும் முறை
    நேர்த்தியான சிக்கலில்லாத மொழிநடை நிறைய எதிர்பார்க்கலாம். நன்றி.

Leave a Reply to Shanthy MahalingasivamCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.