
அது ஒரு முழு நிலவு நாள், ஊரைவிட்டு தள்ளி புதிதாக உருவாக்கப்பட்ட நகரின் அடித்தளத்திற்கு செம்மண் கொட்டி, ஏற்கனவே இருந்த களிமண் தெரியாமல் மூடி இருந்தனர், மனைகள் பிரித்து சாலைகளுக்காக மேடேற்றி ஜல்லிகள் போட்டு, அதன் மேல் செம்மண் பாவி இருந்தனர்.
பொதுவாக மது பிரபலமான எங்கள் ஊரில் வெளியூரில் இருந்து வருபவர்களும், முழுக்குடிகாரர்கள் தவிர்த்து, வீட்டிற்கு தெரியாமல் நண்பர்களுடன் குடிக்கும் குடிகாரர்கள் விளக்குகள் ஏதுமில்லாத இந்த புதிய குடியிருப்பின் பாதைகளில் உட்கார்ந்து குடிப்பார்கள். பொதுவாக இந்த புதிய குடியிருப்பை ஒட்டி வாழும் கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் பையன்கள் தான் வீட்டிற்கு தெரியாமல் குடிக்கும் இவர்களுக்கு கடைக்கு சென்று மது வாங்கி வருவார்கள். இவர்கள் வாங்கி வருவதற்கு 2 ரூபாயும் பின்னர் குடித்து சென்றபின் கிடைக்கும் முக்கால் காலி மது பாட்டில்களை பின்னர் கடையில் போட்டு அதில் ஒரு 2 ரூபாயும் இந்த பையன்களுக்கு கிடைக்கும். 2 ரூபாயுக்கு 4 பஜ்ஜியும், 1 பரோட்டாவும் கிடைக்கும் அந்த காலம் இவை சொர்க்கமாக தெரிந்தன.
பாலு, செல்வம், கண்மணி என்ற மூன்று நண்பர்களும் இங்கு குடிக்க வந்தார்கள்.
“டேய் மணி”
“கடைக்கு போய் 3 பீரும், ஒரு சிக்கன் கறியும் வாங்கி வா என்று 100 ரூபாய் கொடுத்தனர்,
“அண்ண… இது பத்தாது… சிக்கன் கறி ஒயின்ஷாப்புல ரெட்டியார் நல்லா போடுவாரு ஆனா காசு எப்படியும் 15 ரூபா வந்துடும்..
“டேய் ஏன் பிரண்டு போனவாரம்தான் வளவனூர்ல இருந்து வந்து குடிச்சிருக்கான்… நீ சொல்ற மாதிரி இல்ல.. இப்ப போறய இல்ல வேற பசங்ககிட்ட கொடுத்து வாங்கிகிறன்.” என்றான் பாலு…
“அண்ணா… அது வேறநா… இவரு பக்கத்துல புதுசா போட்டிருக்காறு… அவங்க பொண்டாட்டிதான் செய்றாங்க… டேஸ்ட் சூப்பரா இருக்கும்” என்று மீண்டும் தலையை சொரிந்து நின்றான்…
செல்வம் “ பாலு அவங்கிட்ட இன்னும் ஒரு 5 ரூபா குடுத்து உடு” என்றான்
பாலு பெருமூச்சுடன் 5 ரூபாயை எடுத்து மணியின் கையில் வைத்தான். மணி குறுகுறுப்புடன் சிரித்துக்கொண்டு பார்த்து பின்னர் திரும்பி ஒரே ஓட்டமாக அந்த செம்மண் சாலையில் ஓடினான்.
கண்மணி, “மச்சி, எப்ப பாத்தாலும் இந்த சிக்கன் மயிரையே தின்னனுமா…” வேற எதயாவது இங்க தின்னலாமா”
வேறன… தோ போறன மணி அவன சப்படலாமா… அமெரிக்காவுல ஜெப்ரி டாமர்னு ஒரு சைக்கோ ஒரு பேட்டியில மனிதனோட பைசப்தான் ரொம்ப ருசினு சொல்றான்..
ம்ம்… அப்படினாகூட இவன் அதுக்கு சரியா வருவானா… என்றான் பாலு உடல் முழுவதும் சொறி பீடித்து வாடி வதங்கிய உடலுடன் ஓடிக்கொண்டிருக்கும் மணியை பார்த்து.. நண்பர்கள் மூவரும் சிரித்தனர்.
கண்மணி அப்போது ஊரில் புதிதாக உருவாகி கொண்டிருந்த மசாலா பூரி கடை ஒன்றை அப்போதுதான் திறந்திருந்தான். வீட்டிற்கு மூன்று பெண்களுக்குப் பின் பிறந்ததால் கொஞ்சம் செல்லமாக வளர்க்கப்பட்டான். எப்படியோ மீசைக்கார தண்டல்காரரிடம் கடன் வாங்கி இந்த கடைய போட்டு விட்டான். புதிய தின்பண்டங்கள் கிடைத்த மகிழ்ச்சியில், ஊரில் உள்ள அனைத்து பையன்களும், நாக்குக்கு சுவை தேடும் பெரியவர்கள் என்று மாலை வேலையில் பெரும் கூட்டம் இருக்கும். இயந்திரமாக கண்மணியின் கைகள் வேலைபார்த்துக்கொண்டிருக்கும்.
பாலு, பெரும்பாலும் எந்த வேலையும் செய்யாமல், இவனின் அப்பா வெளிநாட்டிற்கு சென்று நான்கு வாடகை வீடுகளும், பெரும் நிதியை பேங்க் வட்டியில் இருந்து வரும்படி கொடுத்து விட்டு மண்ணில் மறைந்தார்.
செல்வம், புதிதாக தொடங்ப்பட்ட தோல் கம்பெனியில் கிளெர்க் வேலையில் சேர்ந்திருந்தான்.
பெரும்பாலும் ஞாயிறு கண்மணி கடைபோடுவதில்லை.. அன்று நண்பர்கள் மூவரும் சேர்ந்து இங்கு குடிக்க வருவார்கள்.
“இல்ல மச்சி”… இந்த சைனாவுலலாம்.. எல்லாத்தையும் திங்கறனுவோனு சொல்றானுங்கல… அந்த மாரி.. என்றான் கண்மணி
“என்ன பூச்சி புழுவெல்லாமா” போடா டேய்.. என்றான் பாலு.
“ஏன் துன்னா என்ன..” என்றான் செல்வம்… பாலு “ஊவ” என்று நடித்து காட்டினான்.
பாலு திரும்பி “ஒரு மரக்கட்டை பொரியல் பார்சல் என்றான் சத்தமாக… இவர்களை தாண்டி உட்கார்ந்திருந்த வெள்ளை சட்டை திரும்பி பார்த்தது..
“டேய் சத்தம் போடத என்றான் கண்மணி..
“நைனாவுக்கு நூஸ் போயிடும்” என்றான்.
பாலு வெள்ளை சட்டைய திரும்பி பார்த்து..
“யாரு அந்த அளப்பனா” டேய் அவன ஒரு நாள் இல்ல ஒரு நாள் பொலக்கப்போறன் பாரு என்று இன்னும் வேகமாக சொன்னான் பாலு…
நண்பர்கள் இருவரும் கிளுக் கிளுக்கென்று சிரித்துகொண்டிருந்தனர்.
பாலு சற்று நிதானத்து பின்னர்… “டேய் அவங்கிடக்கறான் புறம்போக்கு..” நீ சொல்லு என்ன வேணும்னு….
கண்மணி.. “ஏன் இன்னும் ஒரு படி மேலே போக கூடாது”
புரியலையே என்றான் பாலு..
“நாம்ம ஏன் பாம்புகறி சாப்பிடக்கூடாது…”
செல்வமும், பாலுவும் திகைத்து விட்டனர்.
“இன்னாடா சொல்ற… அது சாமிடா” என்றான் பாலு..
“டேய் சாமி பூதம்னு” என்றான் கண்மணி..
செல்வம் எச்சில் முழுங்கினான்.
மணி தன் சிறிய கைகளால் எப்படியோ வைத்து வைத்து மூன்று பீர் பாட்டிகளையும் தூக்கி வந்து வைத்தான்..
நண்பர்கள் மூவரும் ஆசையாக எடுத்தனர்.
டேய் எங்கடா சிக்கன்” என்றான் பாலு..
நா… இதுவே வெயிட்டாயிடுச்சு.. தோ போயி எடுத்தாரனு ஒடுனான்..
கண்மணி.. “நினைச்சுப்பாரு இந்த பீரோட வழ வழனு அத சமச்சு சாப்டா..” என்று மீண்டும் ஆரம்பித்தான்
செல்வம் “டேய் எல்லாத்தையும் தின்ன நாம என்ன மிருகமா..” அதுவுமில்லாம… நம்ம ஊருல பல விதங்கள்ளல இவையெல்லாம் தடை பண்ணி இருக்காங்க.. இப்ப பாம்ப சாப்ப்டா யாரு கொள்ளில இருக்கற எலி சாப்பிடறது.. எலிய சாப்டு கொள்ளிய காப்பத்துற அது அவனுக்கு சாமியா தான் தெரியும்”
“நீ அந்த சாமிய சமைச்சு சாப்டா… நம்ம மக்க என்னா நினைக்கும்..”
கண்மணி “ நீ ஏண்டா ஊருல்லாம் இழுத்துகினு வர”
“நான் உனக்கு செய்யறன்.. நீ சாப்பிடறய…“ என்றான் முன்னிலும் வேகமாக.. பீர் ஒரு மிடறு குடித்திருந்தான்.
செல்வம் ஒரு வாய் குடித்து கிழே வைத்தான்.
“இந்த நாயி போயி ரொம்ப நேரமாச்சு.. இன்னுமா எடுத்து வரான்…” என்றான்.
“டேய் விடுடா” வரட்டும் என்றான் கண்மணி..
“இப்ப பாரு.. நீ சொல்ற அந்த சாமி வீட்டுக்கு வந்தா.. கற்பூரம் காட்டி கும்பட வேண்டியதுதானே..” ஏன் செட்டியாரு அத அடிச்சு கொன்னு கொலுத்திப்போட்டாரு என்றான் கண்மணி..
பாலூ.. “ம்ம்ம்… நு “ இழுத்தான்.
செல்வம் இரண்டாவது முறை அன்னாந்து குடித்து விட்டு தலை சிலுப்பிக்கொண்டான்.
“டேய் அவன் கிடக்கறாண்டா” அவனுக்க என்ன கொல்லிலய கிடக்கறான்… நாயி நாலு பேருக்கிட்ட வட்டிக்கு விட்டு திங்கறான்.. வயல்ல உழைக்கறவனுக்குதாண்டா தெரியும் பாம்போட மகிமை”
“அப்பா மகிம மார்த்தாண்டா… போதும்டா ஊன் பொரியலு.. மச்சி நீ சொல்லு எங்க எப்பனு” நான் ரெடி என்றான் பாலு சடாரென்று எழுந்து..
கண்மணி “இப்பவே.. இங்கயே “ என்றான்.
ஆனா அது அவ்ளொ சீக்கரம் கண்ணுக்கு தெரியாதே.. என்றான் செல்வம்.
கண்மணி புன்முருவலுடன்… வழி இருக்கு…
தூரத்தில் மணி ஓடி வந்தான்.. நா சிக்கன் இன்னுங் கொஞ்சம் நேரமாகுமா…” என்று மணி நமட்டுச்சிரிப்புடன்.
மணி இங்க எங்கயாவது உனக்கு தெரிஞ்சு பாம்பு புத்து இருக்கு… என்றான் கண்மணி.
“இருக்கு… ரயிலோரமா… ஈச்சமரம் பக்கமா ஒரு புத்து இருக்கு…” என்றான் குழப்பமாக…
சரி என்றான் கண்மணி
வானத்தின் பளிங்கு திரை செம்மண் எங்கும் பரவி இருக்க… குடித்து கண்கள் சிவந்த அந்த மூவரும் கண்களால் தொலைவில் தெரியும் ரயில் பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். பெரும்பாலும் பெண்கள் இரவு வேலையில் மட்டும் செல்லும் இடங்களையும் தாண்டி நடக்க வேண்டும் என்றதும்… மணியை நோக்கி கண்மணி… நீ இப்போ வீட்டுக்கு போ… எங்கம்மாக்கிட்ட எதுவும் சொல்லாத என்று அவனை அனுப்பி வைத்தான். மணி அவர்கள் குடித்து முடித்த பாட்டில்களை பத்திரமாக அள்ளிக்கொண்டு தூரத்தில் மறைவில் வைத்த சிக்கன் கறியை நோக்கி நடந்தான்.
செம்மண் வரிசைகள் தாண்டியதும். காலில் பச்சை புல்வெளியின் குளுமை செருப்பை தாண்டி பாலுவின் கால்களில் பதிந்தன. கண்கள் ரயில்வே பாதையை நோக்கியும் கால்கள் தன்னைப்போல வழி கண்டுபிடித்து சென்றது… வழியில் ஆற்று வாய்க்கால் கணுக்கால் அளவில் தண்ணீர் தொட்டு சென்றது… மூவரின் கால்களும் நனைந்து மேடேறினார்கள்… வெட்டவெளியான பிரதேசம் வந்ததும்… பாலு தன் நண்பர்களுடன் அந்த இடத்தில் கிரிக்கெட் விளையாடியது நினைவில் வந்து மோதியது… செல்வம் கொஞ்சம் தள்ளாடி தள்ளாடி வந்து கொண்டிருந்தான். கண்மணி ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்து ஆழமாக ஒரு மூச்சு இழுத்தான்… பாலுவுக்கு அடி வயிற்றில் கொஞ்சமாக கலக்கி வந்தது…
“டேய் கொஞ்சம் இருங்கடா” என்று செடியின் மறைவில் போய்விட்டு மீண்டும் ஆற்றுவாய்க்காலில் வந்து காலை கழுவி மேலேறினான்.
செல்வத்தின் கண்கள் முன்னிலும் சிவந்து தலை மயிர் முன்னால் விழுந்து சட்டை மடிப்பெல்லாம் கலைந்து வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டு நடந்தான். கண்மணி தன் புஜங்களை ஒரு முறை முறுக்கிப்பார்த்துக்கொண்டே பீடியை ஆழ இழுத்து நடந்தான்… பாலுவின் பார்வை இப்போது வழியில் கண்பதித்து பின் மண்டையில் என்னமோ யோசித்த வண்ணம் நடந்து கொண்டிருந்தான்.
“மச்சி இத நம்ம செய்யனுமா” என்றான் கண்மணி பீடியை இன்னும் ஆழமாக இழுத்தவாறு… ஒருமுறை ஆழ்ந்து மூச்சு விட்டு.. கடைசியாக ஒரு எச்சிலை காறி தூர துப்பினான்…”
“போடா வெண்ணபுட்டு…” கண்டிப்பா திங்கறம் என்றான் செல்வம் முன்னிலும் வேகமாக நடந்தவாறு…
“பாலு மச்சான் நீ என்ன சொல்ற என்றான்”
“ம்… பூல சொல்ற… சும்மா முடிகினு நட…” என்றான் பாலு.
இப்போது மூவரும் ரயில் செல்லும் பாதையில் நெருங்கி விட்டனர்… பளிரென்று அந்த பிரதேசமே ஒரு வித மையலான இருளால் போர்த்தப்பட்டிருந்தது… செல்வத்தின் வெள்ளை சட்டையின் மேலும்… பாலுவின் முண்டா பனியனும், கால் சட்டையும்.. கண்மணி டைட்டான சட்டையும், நீல நிற கைலியும்… நிலவொளி பட்டு தெளிவாக தெரிந்தன…
“டேய் 11.00 மணி டிரேயின் வரதுக்கு முன்னாடி உடைக்கனும்” என்றான் செல்வம்…
“எத்த வச்சி உடப்ப…” என்றான் கண்மணி…
பாலு வேகமாக ஓடி சில கம்புகளை எடுத்து வந்தான்.
வந்தவுடன் தெரிந்தது அது கிரிக்கெட் ஸ்டெம்ப் என்று…
சரி ஆரம்பிப்போம் என்றான்.
மூவரும் புற்றை சுற்றி நின்றார்கள்..
மச்சி எது முதல்ல வருதோ அது தலையிலே அடிக்கனும்… சரியா… என்று பாலுவிடம் செல்வம் சொல்லிவிட்டு… கண்மணியும், செல்வமும் பின்னால் இருந்து புற்றில் நடுவில் ஒரு குத்து விட்டனர்.. பின்னர் மீண்டும் அப்படி செய்து கொண்டு இருந்தனர்.
சட்டென்று ஸ் என்று ஓசையுடன் ஒரு நாகம் படமெடுத்து நின்றது… ஒரு கணத்தில் அதன் தலையில் நிலவொளி பட்டு தெளிந்து நின்றது… இமைகள் இல்லா கண்மணியிம், நாவும் வந்து சென்றன. மேலும் உக்கிரமாக ஸ்… என்றது…. பின்னர் ஒரு நொடியில் சடாரென்று தலையை தாழ்த்தி… தரையில் தவழ்ந்து வளைந்து வளைந்து வெளியில் போக ஆரம்பித்தது…
பாலு சரியாக ட்ராக்கில் கிடந்த கல்லால் அதன் தலையில் அடித்தான்.. பின்னர் மேலும் பெரிய பெரிய கற்களை அதன் எறிந்தான். அவன் கண்கள் முன்னெப்போதும் இல்லாத கூர்மை கொண்டிருந்தது… வாயில் கோழை தன்னில் வழிந்தது… தலையில் இருந்து… அந்த குளுமையான இரவிலும் வேர்வை வழிந்து கொண்டிருந்தது… அதன் வால் சுழன்று சுழன்று அடித்துக்கொண்டிருந்தது…. கையில் இருந்த ஸ்டெம்பால் அதன் வாலை அழுத்தி நிறுத்தினான்.
செல்வமும், கண்மணியும், இடித்து பாம்பு வெளிவந்தவுடன் கொஞ்ச தூரம் ஓடி நின்று விட்டனர்.
பாலு ஒரு கட்டத்தில் நாகம் இறந்து விட்டதை தலையில் இருந்த கற்களை தள்ளி உறுதிசெய்து… அந்த ஸ்டெம்பால் அந்த இறந்த உடலை நடுவில் வைத்து தூக்கிக்கொண்டு நண்பர்களிடம் வந்தான்.
“மச்சான்… நீ கொன்னது ஆணா.. பொண்ணா என்றான் சிரித்தபடியே…
“ம்.. போடா புண்ட… வாயில எதாவது வரப்போவுது… நீதான ஆசப்பட்ட போய் என்ன பண்ணனும்னு நினச்சையோ அதை செய்.. என்றான்.
“சும்மா கோச்சிக்காதட” என்றான் கண்மணி.
பாலு முன்னே செல்ல செல்வம் குடி தெளிந்து குழப்பமாக பின்னால் வந்தான்.
கண்மணி வேகமாக எங்கேயோ சென்று சுள்ளிகளை பொறுக்கிவந்தான். நண்பர்கள் மூவரும் டிரக்கை விட்டு விலகி நல்ல திறந்த வெளியில் உட்கார்ந்து சுள்ளிகளை போட்டு எறித்தனர். கண்மணி கீழே பார்த்து வேகமாக மூச்சு இறைக்க எங்கோ ஓடி சில சட்டிகளும்… மிளகாய்த்தூள், மல்லித்தூள், தண்ணீர், கத்தி எடுத்து வந்தான். பின்னர் ஒரு கல்லில் வைத்து.. நாகத்தின் தலையை மட்டும் கவனமாக வெட்டி எறிந்தான்… உடலில் இன்னும் அந்த சூடும், மெல்லிய அதிர்வும் கைகளில் தெரிந்தன…
“நல்லா விளஞ்ச நாகம்டா மச்சி” என்று சிரித்தான்.. பாலு கொஞ்சம் தூரம் தள்ளி ஒரு சிகரெட்டை பற்ற வைத்து தூரத்தில் தெரியும் தென்னந்தோப்பை பார்த்து ஆழ்ந்து சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தான்.
செல்வம் குத்துக்கால் போட்டு சுள்ளிகள் எறிவதைப்பார்த்துக்கொண்டிருந்தான்.
கண்மணி… வெகு சீக்கிரமாக மசாலா செய்து ,தோலை உரித்து.. சதைப்பகுதியை துண்டுகளாக நறுக்கி.. மசாலா தடவி… நெருப்பில் வாட்ட ஆரம்பித்தான்…
பாலு சென்று சில தேக்கு இலைகளை கொண்டு வந்தான்…
கண்மணி முதலில் ஒரு பகுதியை எடுத்து பார்த்தான்… கறி சற்றே சரிய.. சரியான பதமாக எடுத்து இலைகளை கழுவி அதில் பரப்ப ஆரம்பித்தான்.
பின்னர் நண்பர்கள் மூவரும் சுற்றி அமர்ந்து, அந்த நிலவொளி பரவிய வெற்றுப்பிரதேசத்தின் புல்வெளியில்… சுள்ளிகளின் தழலொளியில் மூவரின் முகமும் பணிக்க, பல வருடம், பல உயிரினங்களை, தின்று வளர்த்த அந்த அன்னத்தை அவர்கள் கடித்து மென்று தின்றார்கள்…
கண்மணி.. ஆள்காட்டி விரலையும், சுட்டு விரலையும் மடக்கி வாயில் வைத்து வேகமாக ஊதினான்…
“நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி” என்று கத்தினான்.
பாலுவும் சற்று தளர்ந்து அந்த களியில் கலந்து கொண்டு வேகமாக விசில் அடித்தான்.
யாருமில்லா அந்த பிரதேசத்தில் அந்த விசில் நாற்புரமும் பரவிச்சென்றது…
செல்வம் முன்னிலும் இறுகிப்போனவனாக ஒரு பகுதியை தின்று முடித்து… கால்களை குத்துக்கால் இட்டு கையை அண்ட குடுத்து உட்கார்ந்திருந்தான்..
பின்னர் மூவரும் தண்ணீரை நெருப்பில் ஊற்றி அணைத்தனர்… அவர்கள் மூவரும் தூரத்தில் தெரியும் பிள்ளையார் கோவிலை பார்த்தபடி நடக்க ஆரம்பித்தனர்… பின்னால் அவர்கள் ஊற்றிய நீர் மூழுமையாக தீயை அணைக்காமல் புகைந்து கொண்டிருந்தது…
பிள்ளையார் கோவிலை ஒட்டிய ஒரு பெரும் குப்பை மேட்டில் ஏறி மூவரும் பெரிதாக கையை மேலே உயர்த்தி கொட்டாவி விட்டனர்..
தூரத்தில் ரயில் சத்தமாக ஊளையிட்டு வேகமாக சென்று கொண்டிருந்தது…
சரிடா… மணி ஆயிடுத்து நான் இப்படியே வீட்டுக்கு போறேன் என்று செல்வம் இடது பக்கம் திரும்பி ரயில்வே டிராக்கை ஒட்டிய அவன் வீட்டுக்கு சென்றான். செல்வத்தின் வீடு ரயில்வே ஸ்டெஷன் செல்லும் பாதையில் ஒரு புறம்போக்கு நிலத்தில் இருந்தது… பெரிதாக இல்லாமல் ஒரு நடுத்தரமான கரும்பு ஓலை வேய்ந்த கூரை வீடு… நடுவில் ஒரு பெரும் மரத்தின் தடியும்… ஒரு எட்டு அடிக்கு மேலே நான்கு பெரும் கழிகளும் கட்டி மேலே கூம்பு வடிவில் சென்று இரு புறமும் சாய்ந்த கூறை வீடு… வீட்டின் ஒரு மூலையில் சமையல் அடுப்பை மண்ணில் மொத்தமாக மெழுகி சாணி இட்டு மெழுகி இருக்கும்.
செல்வம் வாசல் தடலை தள்ளிக்கொண்டு வந்தான்…
“ம்ம்மா… மாமா வந்திடுச்சும்மா” என்று ஓடிவந்தனர்… செல்வம் அப்படியே விமலை கட்டித்தூக்கிக்கொண்டான். கமலும் தன்னையும் தூக்க சொல்லி கையை மேலே தூக்கி ஆட்டிக்கொண்டு சுற்றி வந்தான்… செல்வம்.. விமலை விடாமல் கீழே தாழ்ந்து கமலையும் தூக்கிகொண்டான்”
“மாமா… கேக் வாங்கி குடு மாமா” என்று கமல் மழலையாக கேட்டான்.
செல்வி அக்கா வீட்டு வாசல் படிக்கு வந்து “டேய் மாமாவ விடுங்கடா” போய் குளிக்கட்டும் என்றாள்… துண்டை அவனிடம் நீட்டியபடி…
“எப்பக்கா வந்த” என்று வாங்கியபடி வெளியில் உள்ள தென்னை ஓலை கொண்டு சுற்றி மறைத்த ஒரு இடத்தில்… தென்னஓலையால் சார்த்திய கதவை திறந்து குளிக்கப்போனான். அங்கே இருந்த கொடியில் சட்டை… வேட்டி, பனியன் கழற்றி போற்று விட்டு… சிமெண்ட்டால் செய்த தேக்சாவில் இருக்கும் குளிர்ந்த நீரை அள்ளி தலையில் ஊற்றிக்கொண்டே இருந்தான்… ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டு நன்றாக காறி துப்பிக்கொண்டே இருந்தான். பின்னர் லைப்பாய் சோப்பு இரண்டு முறை போட்டுக்குளித்தான்.
பின்னர் கதவை திறந்து தலையை துவட்டிக்கொண்டே ஈர வேட்டியுடன் வெளியில் வந்தான்… செல்வத்தின் அம்மா ஒரு தண்ணீர் குடத்தை இடுப்பிலும் இன்னொன்றை தலையிலும் வைத்து சாய்ந்து சாய்ந்து வந்தாள்… தண்ணீயை கொட்டிவிட்டு… எந்த கம்மனாட்டி தொட்டியில இருந்த தண்ணீ எல்லாத்தையும் ஊத்தி குளிச்சது… ஒரு அறிவு வேணாம்… வயசான காலத்துல தண்ணீ எடுத்து வரள ஒரு இது வேணா நாயிக்கு.. என்று பொறிந்து தள்ளினாள். செல்வம் புது வேட்டி கட்டி மண் தரையில் குத்துக்கால் போட்டு அம்மாவை பார்த்துக்கொண்டிருந்தான். இந்த பார்வைக்கு பயப்படற ஆள் நான் இல்ல… என்று உறுமினாள்…. பின்னர் உள்ளே சென்று சாதத்தை அள்ளி வைத்து… மீன் கொழம்பை ஊற்றி.. இரண்டு சென்னாவர மீன் துண்டுகளைப்போட்டு எடுத்து வந்து மகன் முன்னால் வைத்தாள்… செல்வம் அவற்றை பார்த்துக்கொண்டிருந்தான்… பின்னர் சட்டென்று… சட்டையை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றான்… டேய் எங்கடா போற சோத்த போட்டதுக்கு அப்புறம்… சோத்த காக்க வைக்கதடா… அது சாமி… என்றாள்… கமலும், விமலும்… “அது சாமி… ச்சாமி… சா சா ச்சாமி” என்று வேறு உச்சரிப்பில் பேசி சிரித்தனர்…
செல்வம் வெளியில் சென்று எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் நின்று வரும் போகும் வாகனங்களை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் செல்வி அக்கா வந்து நின்றாள்… யாருடா… அம்மாதான… பாவம் நான் கட்டிக்கினு போனதுக்கு அப்புறம் அது தனியா எவ்வோல வேல செய்யும் சொல்லு… இப்ப இப்பதான் நீ வேலைக்கு போற… சீக்கிரமா வீட்டுக்குள்ளே தண்ணீ வர்ர மாரி ஒரு வீட பாரு… சீக்கரம் இந்த புறம்போக்கு இடத்த காலி செய்யற வேலைய பாரு” என்றாள்… செல்வம் அவளை பாந்தமாக பார்த்தான்… சரி வா… சாப்பிட போலாம்… அம்மா அழுவுது… என்றாள் செல்வி அக்கா.
சரி நீ போ… நா… பின்னாலே வரேன்… என்றான் செல்வம்…
செல்வி அக்கா திரும்பி நடந்தாள்… அக்காவின் கணவர் முந்தா நாள் அலுவலகம் வந்து அக்காவைப்பற்றி புலம்பி சென்றார்… அக்காவின் நடத்தை பற்றி பெரும் மனக்குறையுடன் சொன்னார்…எப்போதும் மினுக்கிகொண்டு திரிகிறாள் என்று புலம்பினார். பசங்கள பால்வாடிக்கு கூட்டிகினு போற சாக்குல ஊர் சுத்தரானு சொன்னார்…
மிகச்சிறு வயதில் தந்தையை இழந்த அவன் அக்காவுடன்தான் வளர்ந்தான்.. என்ன சொன்னாலும் கொஞ்சம் கூட அசரமா நிப்பா… அழவே மாட்டா… தனியா தையல் கத்துகிட்டா… புக் பைண்டிங் பண்ணூவா… சின்ன பசங்களுக்கு டியுசன் எடுப்பா… எப்பவும் கோகுல் பவுடர் அடித்து… சிரியதாக சாந்து பொட்டு வைத்து தெளிவா இருப்பா… இந்த சந்தேக பிராணி மாமாவுக்கு அவ்ளொதான் அறிவு என்று நொந்துகொண்டான்…
மறு நாள் காலை 6 மணிக்கு… செல்வம் வீட்டின் உத்தரத்தில் வேட்டியை தலையில் மாட்டி தொங்கி கொண்டிருந்தான்… ஏற்கனவே மலஜலம் கழிந்து… கண்கள் பிதுங்கி… வாயில் கோழை தள்ளி தொங்கி கொண்டிருந்தான்…
அம்மா வெளியில் இருந்து நுழைந்த நேரம் பார்த்து வீரிட்டாள்… “ஏஞ் செல்வம், அடப்பாவி…” என்று காலை பிடித்து அலறினாள்… சத்தம் கேட்டு கமல், விமலுடன் தூங்கி கொண்டிருந்த செல்வி வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தாள்…. “தம்பி செல்வம்” என்று அலறினாள்…. பசங்க எழுந்து என்னம்மா என்று எழுந்த பிள்ளைகளை வாரி அணைத்து அழ ஆரம்பித்தாள். அவர்களை அவசரமாக இழுத்துகொண்டு வெளியில் சென்றாள்.
செல்வம் இறந்து ஒரு வாரத்தில் பாலு குடிபோதையில் தள்ளாடி ரயில் தண்டவாளத்தில் ஈச்ச மரத்தின் அடியில் தலை நசுங்கி இறந்து கிடந்தான். அனாதை பிணமாக அவனை ரெயில்வே போலீஸ் பிரேதத்தை கைப்பற்றி எரித்தது.
பாலு இறந்த இரண்டாவது வாரம், கண்மணி மண்ணெண்ணெய் ஸ்டவ் அடித்துக்கொண்டிருந்தபோது தீடிரென்று தீப்பிடித்து, தலைகால் புரியாமல் தெருவெல்லாம் ஓடி சாக்கடையில் விழுந்தான். இரண்டு நாள் பெரியாஸ்பித்திரியில் இருந்து… மூன்றாவது நாள் நன்றாக பேசி… நான்காவது நாள் ஜன்னி கண்டு இறந்தான்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

பாம்புக்கறி சாப்ட்டா, இப்டிலாம் ஆகுமாண்ணா?