மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன?

காடுகளில் வேட்டையாடி, குகைகளில் வாழ்ந்து, பின்னர் இயற்கையை அறிந்து, காடு திருத்தி, மண் வளம் அறிந்து பயிர் வளர்த்த மனிதன், வானையும் அவதானித்துக் கொண்டுதானிருந்தான். கண்களுக்குப் புலப்படும் சூரியன், சந்திரன் போன்றவைகள் முதலில் அவன் கவனத்தைக் கவர்ந்தன. அவைகள் வானில் பயணிப்பதை கவனித்தான். நாள் தோறும் தோன்றி மறையும் ஆதவன், வளர்ந்து தேய்ந்து காணப்படும் சந்திரன், அவற்றின் இயக்கத்தின் நியதிகள் ஆகியவற்றை பதிவு செய்யத் தொடங்கினான். அதிலும், சூர்ய கிரகணமும், சந்திர கிரகணமும் அவனைப் பல கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும், அச்சங்களுக்கும் இட்டுச் சென்றன. விலங்குகள், பறவைகள் போன்றவையும் கிரகண காலங்களில் விசித்திரமாக நடந்து கொள்வதும் அவன் கண்களில் தென்பட்டன.

பயந்த மனிதன், அவை என்று தோன்றும் என்று மயங்கிய காலத்திலிருந்து, வினாடி துல்லியமாக  கிரஹணத்தை அறிந்து கொள்வது வரை  வந்துவிட்டான். ஆனால், அவன் கேள்வியும், பயமும், கணித்தலும் தான் இன்றைய வான் அறிவியல் வளர்ச்சிக்கான வித்து. குறிப்பாக இந்த நிகழ்வுகள் எந்தெந்தக் கால இடைவெளிகளில் தோன்றும் என்பதை அவன் பதிவு செய்ய ஆரம்பித்தான்.

சூர்ய கிரகணம், ஆள்வோருக்கும், நாட்டிற்கும் நன்மை செய்யாது என்று மக்கள் நம்பியதை பல தேசங்களின் வரலாறுகள் சொல்கின்றன. இந்த சகுன நம்பிக்கைகள் தான், கிரஹணங்களைப் பற்றி சீராக அறிய அவனைத் தூண்டின. வரலாற்றுத் தகவல்களிலிருந்து, மெசபடோமியர்கள், கிரஹணங்கள் தோன்றும் கால நிலைகளை, அவற்றிற்கு இடையே உள்ள சீரான இடைவெளிகளை கணிக்க ஆரம்பித்தார்கள். அன்று அண்டப் பெருவெளியில் நிகழும் பதட்டத்தைத் தருவதான ஒன்று, இன்று கிரகங்களின் இயக்கம் ஒன்றையொன்று சார்ந்திருப்பதாய், அது எதிர் வரும் நாட்களில் எப்படி இருக்கும் என்று சரியாகக் கணிக்கக் கூடிய கடிகாரமாய் மாறியுள்ளது.

ஒரு முக்கியத் திருப்பத்தை நாம் நினைவில் எடுத்துக் கொள்வோம். ஏப்ரல் 22, 1715ல் சூர்ய கிரஹணம் லண்டன் வானில் நிகழ்ந்தது. ஹேலியின் வால் நட்சத்திரம் என்ற பெயரால்  நினைவு கூறப்படும் எட்மண்ட் ஹேலி (Edmond Hally) அதை முன்கூட்டியே சொன்னார். சந்திரனின் நிழல் இங்கிலாந்தில் பயணிக்கக் கூடிய வரைபடத்தை உள்ளடக்கிய பெரிய அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார். அந்த வருடத்தில் தான் ஒரு புது அரசர் இங்கிலாந்தில் முடி சூடினார்; அவருக்கு எதிரான கலகங்கள் நடந்து கொண்டிருந்தன. துர்சகுனம் என்ற எண்ணத்தைப் போக்க, கிரஹணத்தைப் பற்றிய மாயத்தன்மைகளைப் போக்க, தன் விளக்கங்கள் உதவும் என்று ஹேலி நம்பினார்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கிரஹணங்களை அறிவதற்கு உதவும் வண்ணம் இந்த நேரத்தில், தகவல் சேகரிப்பவர்கள் தேவை என்று அவர்களை பணியமர்த்தினார். “ஆர்வமுள்ளவர்கள் இந் நிகழ்வை கண்காணிக்க வேண்டும், அதிலும் குறிப்பாக முழு இருட்டின் போது. இதன் மூலம் நிழலின் சூழல்களும், பரிமாணங்களும் தெளிவாகப் புரியலாம். இன்று குத்து மதிப்பாக நாம் செய்யும் முன்கணிப்புகளைத் தவிர்த்து, இந்தத் தரவுகளைக் கொண்டு நிச்சயத் தன்மையுடன் எதிர்காலத்தில் நிகழக்கூடியவற்றைச் சொல்லமுடியும்” என்று அவர் விளம்பரம் செய்தார்.

சகுனம் தூண்டிய ஆர்வம்

ஹேலி, சில பத்தாண்டுகளுக்கு முன்னரே, பழைய நூல்களை ஆழ்ந்து படித்து, விண் சுழற்சிகளில், கிரஹணங்களும், சந்திரனின் நிலைகளைப் பற்றி அவற்றில் சொல்லப்பட்டிருப்பதையும் மீள் கண்டுபிடிப்பு செய்து, இந்தச் செய்தியை பரவலாக்கினார். ‘சரோஸ்’ (Saros) என்று அவரழைத்த இந்த விண் சுழற்சி 6585 நாட்கள், அல்லது 18 ஆண்டுகளுக்கு சற்று மேலாக. இந்த ‘சரோஸ்’ குறியீடு சுமேரிய நாகரீகத்தில், அகிலம் அல்லது பெரிய எண் என்றே கையாளப்படுவதாகவும், அதன் மொழிபெயர்ப்பு சரியான ஒன்றில்லை என்றும் நவீன வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பொது யுகம் முன் 600 வாக்கில் அசிரியர்களும்,(Assyrian)  பாபிலோனிய மத குருக்களான கணிதவியலாளர்களும், முன்னர் களிமண் பலகைகளில் பதிவு செய்யப்பட்டிருந்த கிரஹண நிகழ்வுகளை மீள மீளப் படித்து எதிர் வரும் கிரஹணங்களை கணிக்க முயன்றார்கள். இந்த நாகரீகத்தைச் சேர்ந்த அரசர்கள் கிரஹணத்தால் தமக்கும், நாட்டிற்கும் கேடு விளையுமோ என அச்சப்பட்டார்கள். ஜாதகங்கள், கிரக நிலைகளைக் கொண்டு கணிக்கப்பட்டன. அனைவருக்கும், முக்கியமாக, தங்கள்  எதிர்கால வாழ்க்கையைப் பற்றி அறிய ஆவல் எழுந்தது.

முதல் கண்டுபிடிப்புகள் கட்டை விரல் விதியாகின. உதாரணத்திற்கு, ஒவ்வொரு ஆறு மாத இடைவெளிகளிலும் சந்திர கிரஹணம் தோன்றும் என்பது. குறிப்பிடத்தக்க சூர்ய மற்றும் சந்திர கிரஹணங்கள், சரோஸ் என்று ஹேலி குறிப்பிட்ட ஒன்றை ஒத்து தனித்தனி முறைகளில் ஏற்படும் என்று பாபிலோனியர்கள் அறிந்திருந்தார்கள்.

இதை இன்றைய வழியில் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், கீழ்க்கண்டவைகளை நினைவில் கொள்ள வேண்டும்.

  • அமாவாசை அன்றுதான் சூர்ய கிரஹணம் ஏற்படும். சந்திரன் நேரடியாக பூமிக்கும், சூர்யனுக்கும் இடையே வரும்.
  • இந்த மூன்றும் ஒரு சரியான நேர்க்கோட்டில் வர வேண்டும்.
  • எந்தப் புலத்தில், பூமி, சூர்யனை, தன் சுழற்சியில் சுற்றுமோ, அந்தப்புலத்தின் ஊடாக, தன் சாய்வு சுழற்சிப் புள்ளியில் சந்திரன் இருக்க வேண்டும்.

இப்போது, இதே நிலை எதிர்காலத்தில் எப்போது தோன்றும் என்பதைக் கணிக்க முடியும். ஆனால், பலவிஷயங்களையும் கணக்கில் கொண்டுதான் இதைச் செய்ய முடியும்.

  • சமமற்ற, ஒன்றின் மீது ஒன்றேறும், சந்திர சுழற்சிகள்.
  • ஒரு அமாவாசையிலிருந்து மறு அமாவாசைக்குச் செல்ல சந்திரனுக்கு 29.5306 நாட்களாகின்றன.(29.5306*223=6585.3238){ 223 அமாவாசைகள் கடப்பது}
  • பூமி சுற்றுகிறது. அதன் பரப்பின் ஒரு பகுதியில் வரும் சந்திரன், மீண்டும் அதே பகுதிக்கு, 27.2122 நாட்களில் வருகிறான்(27.2122*.242=6585.3524){242 நகர்வுகள்}
  • சந்திரனின் நீள் வட்டப் பாதையால், அவன் பூமிக்கு நெருங்கியும் வருகிறான், தொலைவிலும் செல்கிறான். இதற்கு 27.5546 நாட்கள் ஆகின்றன.(27.5546*239=6585.5494) {239 ஊசல்கள்)

6585.37 என்பது நிறமாலை அலைவரிசை.  நிறமாலைக் கோடுகள் என்பவை ஒரு பொருளின் அணுவோ, மூலக்கூறோ வெளிப்படுத்தும் அல்லது உள்வாங்கும் ஒளியின் அலைவரிசை. விண்ணகப் பொருட்களின் வேதிப் பொருட்களைப் பற்றியும், அதன் பௌதீகக் குணங்களைப் பற்றியும் இதன் மூலம் அறிந்து கொள்கிறோம்.

மேற்கூறிய மூன்று முழு நிலை தொடர் வரிசைகளும் முழுமையான எண்களால் அறியப்படுவதை, சரோஸ் என்ற வட்ட இடைவெளியாகச் சொல்கிறோம்.

223 அமாவாசைகள் கடப்பது என்பது, நீள் வட்டப் பாதையில் 242     நகர்வுகளுக்கும், சந்திர உரு வடிவத்தில் ஏறத்தாழ நாம் காணும் 239 ஊசலுக்கும் சமமானது.

நீங்கள் சூர்ய அல்லது சந்திர கிரஹணத்தைப் பார்த்தீர்கள் என்றால், சரோசை அறிந்து கொள்ளுங்கள். உத்தேசமாக இதைப் போலவே விண் கிரகங்களின் அமைப்பு காணப்படும். கணித ஒழுங்கிற்கு உட்பட்டு நிகழ்வதை புரிந்து கொள்ளலாம்.

பொதுயுகம் முன் 609 &447ல் பாபிலோனியர்கள் க்யூனிஃபார்ம்(cyneiform) என்றழைக்கப்பட்ட களிமண் பலகைகளில் சந்திர கிரஹணத்தைப் பதிவு செய்துள்ளதை இடது படம் காட்டுகிறது. வலப்புறம் ஆன்டிகைதீரா (Antikythera) என்றழைக்கப்படும் கிரேக்க Orrery. இதுவும் சூர்யனை மையமாகக் கொண்டு மற்ற கிரகங்களைச் சொல்லும் ஒன்று. முந்தைய கிரேக்கர்கர்கள் ஒரு வான் கடிகாரத்தை இவ்வண்ணம் அமைத்தார்கள். உலகின் முதல் தொடர் முறை கணினி (Analog computer) என்று இதை அழைக்கிறார்கள். பொது யுகம் முன் 2ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இதன் காலம் மதிப்பிடப்பட்டுள்ளது. இது தரை தட்டிய கப்பல் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. சரோஸ் மற்றும் கிரஹணங்கள், மற்ற விண் நிகழ்வுகள் ஆகியவற்றை அறிய பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மேலே நாம் குறிப்பிட்ட மூன்று வகைகளில் மட்டுமே சந்திர சுழற்சி அடங்குவதில்லை. அது மிகவும் சிக்கலான ஒன்று. பூமியில் இதை எங்கு பார்க்கலாம் என்றும் இது தெளிவு படுத்தவில்லை.

ஹேலியும், அவருக்குப் பின்னான முன்னேற்றங்களும்

சரோசைப் பற்றி அறிந்து கொண்ட ஹேலி அதற்கு புத்துயிர் ஊட்டிக் கொண்டிருந்தார். தனது 2011 நூலான ‘சேசிங் ஷேடோஸ்’ல் (Chasing Shadows) கணித வரலாற்றான க்ளெமென்சி மான்டெல் (Clemency Montelle) குறிப்பிடுவதைப் போல, பல நாகரீகங்கள், பல தேசத்தவர்கள், இன்னமும் கிரஹணங்களைப் பற்றிய புரிதல்களை செழுமையாக்கி வந்தனர்.

‘ஒரு சரோஸ் நிகழ்விற்கு காத்திருங்கள்’ என்று நின்று விடாமல், பாபிலோனியர்கள், பல சிக்கலான கணிதங்களைக் கொண்டு, சந்திரனின் ஒருங்கிணைப்புகள் எதிர் காலத்தில் எவ்வாறு இருக்கும் என்பதை கணித்தார்கள். புராதன கிரேக்கர்கள் விண் வெளிப்பரப்பு பற்றிய தங்கள் கருத்துகளுடன், பாபிலோனியர்களின் கணிதங்களை இணைத்து செயல்பட்டார்கள். இந்தக் கூட்டணியின் மேலாக 9ம் நூற்றாண்டின்  வானியலாளரான, al-Khwarizmi திரிகோணவிதிகளையும், தசமங்களையும் இந்தியாவிலிருந்து பெற்று, சீனாவிலிருந்து அப்போதுதான் புதிதாக வரப் பெற்ற காகிதங்களில், இன்னமும் மேம்பட்ட, முன்கூட்டியே கணிக்க உதவும் கணிதங்கள், குறிப்புகள் மூலம் மாதிரிகளை வழங்க, அது யூரோப் முழுவதும் பயணித்தது.

ஆனால். ஹேலிக்கு இன்னமும் விளையாட இடமிருந்தது. சரோசை பழமையிலிருந்து விடுவித்தார்; அப்போது, புவியீர்ப்பு விசையைப் பற்றிய ந்யூட்டனின் நூலை வெளியிட பண உதவி செய்தார். பின்னர் இந்த புவியீர்ப்பைக் கொண்டுதான் ந்யூட்டன், சந்திரனின் சுற்றுப்பாதையை அறிந்து கொண்டார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு லண்டனை நெருங்கும் சூர்ய கிரஹணத்தை பழமையும், புதுமையும் கலந்து, முன் கணித்த வரைபடமாக ஹேலி வெளியிட்டார். எந்த நேரத்தில் சூர்ய கிரஹணம் நிகழும், எந்த இடத்தில் என்பதை அந்த வரைபடத்தில் துல்லியமாகக் கணித்திருந்தார்; வடக்கு எல்லையில் மட்டும் 20 மைல்கள் தவறாக இருந்தது.

இதில் அடுத்த பாய்ச்சல், 1824ல், ஜெர்மானிய வானியலளாரனானஃப்ரைட்ரிக் பெஸல் (Friedrich Bessel) என்பவர், புவியீர்ப்பு விதிகளைக் கொண்டு கிரஹணங்களைப் பற்றி சிந்தித்த ந்யூட்டனின் வழிமுறையைப் பின்பற்றிய ஆய்வில் நிகழ்த்திய ஒன்று. பூமியின் நடுவில் கற்பனை செய்யப்பட்ட பரப்பில் சந்திர நிழலை அமைத்தார்.. புவியின் மேற்பரப்பில் இந்த நிழலை பாய்ச்சிய போது அது எங்கே எந்த இடத்தில் துல்லியமாக விழும் என்று அறிந்தார். அதுவரை கோளம் என்றே அறியப்பட்ட பூமி, கட்டியான சமதளமுள்ள சுழலும் பொருள் என்று உணரப்பட்டது.  செயின்ட் ஆன்ட்ரூஸ் பல்கலையில், கணித வரலாற்று ஆசிரியரான டெபோர் கென்ட் (Deborah Kent) சொல்கிறார்: பெஸல்லைத் தொடர்ந்து பல நாடுகளிலும், பல அரசுகளிலும் நிழலைத் துரத்தி பல அறிஞர்கள் இந்த கணிக்கும் விதங்களை மென்மேலும் மெருகேற்றி வந்தனர். அறிவியலின் மென்சக்தியில் தங்கள் மேன்மைகளை நிலை நிறுத்தும் போட்டியாக அவை இருந்தன.

கிரஹணங்களைப் பற்றிய கணிப்புடன் அவை நிகழும் இடங்களை நோக்கிச் செல்லவும் அடுத்த நூற்றாண்டின் மனிதன் முனைந்தான். இது அறிவியலில் மர்மமாக இருந்த ஒன்றின் புதிரை விடுவித்தது. கண்டுபிடிக்கப்படாத ஒரு கிரகம் சூர்யனைத் தழுவுவதால் புதனின் ஒரு வித புதுமைப் பாதை ஏற்படுகிறதா? (அதை சூர்ய கிரஹணத்தின் போது கண்டு பிடிக்கக்கூடும் என்ற அனுமானம் இருந்தது) அல்லது இப்போது சொல்லப்படுவது போல் ந்யூட்டனின் ஈர்ப்புக் கொள்கையில் ஏதேனும் தவறு இருந்ததா? இந்தக் கேள்விகள் கிரஹணங்களின் மீது மேலும் ஆர்வத்தைத் தூண்டின. உலகின் அனைத்து மூலைகளுக்கும் விஞ்ஞானிகள் அனுப்பப்பட்டனர்- என்னசெய்ய வேண்டும், எங்கே இருக்க வேண்டும், எதைப் பதிவு செய்ய வேண்டும் என்றெல்லாம் அவர்களுக்குச் சொல்லப்பட்டன. உலர்ந்த அறிக்கைகளை அவர்கள் அளித்தார்கள்- எப்போதாவது ‘ஆஹா’ என்று வியந்ததும் பதிவாகியிருக்கிறது. அவை அனைத்திலும், விக்டோரிய, மிகை உணர்ச்சிக் கொந்தளிப்புள்ள, அதிக வர்ணனைகளுடன் கூடிய இரு பத்திகளைக் காணலாம்.

20ம் நூற்றாண்டில் இந்த ஆர்வம் வேறொரு வடிவெடுத்தது. ஒரு கிரஹணத்தை முன் கூட்டியே சரியாகக் கணிப்பதில், சந்திரனும், இன்ன பிற வான் பொருட்களும், ஒன்றையொன்று இழுத்துக் கொள்ளும் தன்மையையும் கணக்கில் கொள்ள வேண்டும். இது பிரபலமான முப்பொருட்கள் சிக்கல் (Three body Problem) மட்டுமில்லை- எண்ணிக்கையற்ற ஒன்று. மூன்று உடல் சிக்கல் என்பது 3 பொருட்களின் முதல் நிலைகளையும், அவற்றின் வேகங்களையும், அவற்றின் நிறைகளையும் எடுத்துக் கொண்டு, அவைகளின் அடுத்த நகர்வுகளை, ந்யூட்டனின் இயக்க விதிகளின் படியும், ஈர்ப்புவிசை கோட்பாட்டின் படியும் கணிப்பது. இதற்கான சரியான தீர்வு அப்போது இல்லை.

நாசா, ரோபோக்களையும், மனிதர்களையும் விண்வெளிப் பயணத்தில் ஈடுபடுத்துகையில், இந்த வான்வெளி பொருட்கள் எங்கிருக்கின்றன, அவை எதிர் வரும் காலங்களில் எங்கேயிருக்கும் என்ற கேள்விகளுக்குத் துல்லியமான விடைகள் தேவையாக இருந்தன. அதை எளிதாகவும் அறிந்தார்கள். நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வுக்கூடத்தைச் (Jet Propulsion Lab) சேர்ந்தவரும், அதன் சூர்ய அமைப்பு இயங்கியல் துறைத் தலைவருமான ரயன் பார்க் (Ryan Park) சொல்கிறார்: இக்கணிப்பிற்கு மிகவும் உதவியது அப்போலிவின் விண்வெளி வீரர்கள் சந்திரனில் வைத்து விட்டு வந்த கண்ணாடிகள். பூமியைப் பொறுத்த வரையில் நிலவு எங்கிருக்கிறது, என்பதை சில மீட்டர் தொலைவில் நம்மால் இங்கிருந்தே அறிய முடிகிறது. சூர்ய அமைப்பைச் சுற்றி வரும் எண்ணற்ற வானூர்திகள் அளிக்கும் அதிகத் தகவல்களால், சூரியன் குறிப்பிட்ட நேரத்தில் எங்கிருக்கிறார் என்பதைக் கூட துல்லியமாக அறிய முடிகிறது. ரயன் பார்க்கும், அவரது குழுவும், சூர்ய, சந்திர நிலைகள், அதைப் போல மற்ற கிரகங்கள், நூற்றுக்கணக்கான விண் கற்களின் நிலைகள், சூர்யக் காற்று ஏற்படுத்தும் அழுத்தம் போன்றவைகளை, ந்யூட்டனின் ஈர்ப்பு விதிகள், மற்றும் மென் மாற்றம் செய்யப்பட்ட சார்பு நிலை விதிகளைக் கொண்டு, கணினியில் மாதிரி அமைத்திருக்கிறார்கள். இந்தக் கணினி மாதிரியானது, எதிர் வரும் காலத்தில், சந்திரன் உட்பட அனைத்தும் எந்த நிலையில், எவ்விடத்தில் இருக்கும் என்று அறிக்கைகளை தந்து கொண்டேயிருக்கும். இந்தக் குழு தங்கள் கணினி மாதிரியை செம்மைப்படுத்திக்கொண்டே வரும்- புது பட்டியல் வெளியாகும்.

கிரஹணங்களைக் கணிப்பதும் இதில் அடங்குவதால், விண்வெளிப் பயணங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. விண்வெளிப் பயண திட்டங்களில் இருப்பவர்கள் ‘சந்திரன் திட்டவட்டமாக எங்கிருக்கும், அதன் இயக்கத்தை நாங்கள் கவனிக்க வேண்டுமா?’ என்று கேட்கையில் ரயன் பார்க்கிற்கு விந்தையாக இருக்குமாம். “இல்லை, இல்லை, பல்லாண்டுகளுக்கு முன்னரே நாங்கள் அதைக் கணித்தாகி விட்டது.” என அவர் பதில் சொல்வாராம்.

ஏப்ரல் 8 2024 அன்று நிகழ்ந்த முழு சூர்ய கிரஹணத்தின் போது சில விலங்குகள் எவ்வாறு நடந்து கொண்டன என்பதை ஃபோர்ட் வொர்த் அறிக்கை பதிவு செய்து வெளியிட்டிருக்கிறது. டெக்சஸ் உயிரியல் பூங்காவில், கிரஹண இருள் சூழ்ந்ததும், ஆமைகள் தங்கள் வசிப்பிடங்களுக்குள் பதுங்கி, இரவில் செய்யும் வேலைகளைத் தொடங்கின; பல விலங்குகளும், பறவைகளும் தங்கள் வியப்பையும், எச்சரிக்கை உணர்வையும் காட்டின; தங்களைச் சுற்றியிருந்த தடுப்பானின் திறப்பின் அருகே ஒட்டகச் சிவிங்கிகள் ஒன்று கூடின; தங்களுக்குப் பிடித்தமாக இல்லை, கோபம் வருகிறது என ‘எல்மோ’ கொரில்லாக்கள் வழக்கத்தை விட அதிகமாக கொட்டாவிகள் விட்டன. (Texas Zoo Researchers Record ‘Unusual’ Animal Behaviour During Solar Eclipse – News18) மரங்களின் இலைகளில் உள்ள சிறிய இடைவெளிகள் சிறு சிறு புகைப்பட கருவிகளாகி, சூர்ய கிரஹணத்தை, பிறை நிலவு போன்ற வெவ்வேறு வடிவங்களில் தரைகளில், சுவற்றில் காட்டின.

இந்தியா

மிகத் தொன்மையான ரிக் வேதத்தில் அத்ரி மகரிஷி, கிரஹணங்களை தேவ, அசுரர்களை உவமையாக்கிச் சொல்கிறார். ஐந்தாவது பகுதியில் 40வது சூக்தத்தில் இவ்வாறு சொல்கிறார்.

 ‘यततवासूर्यसवर्भानुसतमसाविध्यदआसुरः
yattvāsūryasvarbhānustamasāvidhyadāsuraḥ

அசுரர்களின் வழித் தோன்றலான ஸ்வர்பானு உன்னை இருளில் மூழ்கடிக்கிறான், சூர்யனே! அனைத்து உயிரினமும் எங்கிருக்கிறோம் என அறியாமல் திகைக்கின்றன.

இந்திரனே, இந்த ஸ்வர்பானு, வானின் கீழ் விரித்திருக்கும் இந்த வலையை எப்போது அகற்றுவாய்?’

ஸ்வர்பானு என்றால் வானிலிருக்கும் ஒளியைத் தொடர்பவர் என்று பொருள். இந்த ஸ்வர்பானு ஸ்வர்க்கத்தைச் சேர்ந்தவர் இல்லை. அவர் பூமியிலிருந்து வருபவர். நிலவு, பூமிக்கு இயற்கையாக அமைந்த  செயற்கைக் கோள் என்பது இதன் பொருள்.

சந்திரனின் நிழல் சூர்யனின் பரப்பில் பெரும்பாலும் விழும் போது, சூர்ய நிற மண்டலம் சிவப்பாகக் காட்சி அளிப்பதை, சிவப்பு ஆடு என்றும், முழு கிரஹணத்தின் போது தெரியும் சூரியனைச் சுற்றியுள்ள ஒளி வட்டத்தை வெள்ளாடு என்றும் அத்ரி வர்ணிக்கிறார். இரவின் இருளுக்கும், கிரஹண இருளுக்கும் மாறுபாடு உண்டெனவும் அவர் சொல்கிறார்.

யாஸ்கர் தனது நிருக்தத்திலும் (2-6) கௌதம மஹரிஷி தனது பாடலிலும் (ரிக் 1-84-15) கிரகணம் பற்றிப் பேசுகின்றனர்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் நிறைய இடங்களில் சந்திரனை ராகு என்னும் பாம்பு விழுங்கும் (அகம் 114,313: புறம் 260, சிறுபாண் 185,, பரி 10-76, குறு 395, நற் 128,377: பெரு.383, கலி. 4 இடங்கள்) கருத்து வருகிறது.

சூரிய கிரகணம் பற்றி புறநானூறு பாடல் எண்

174 ல் மாறோக்கத்து நப்பசலையார் பாடுகிறார்:

அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,
இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
இரும்பைகொள் பருவரல் தீரக், கடுந்திறல்
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு,
அரசிழந்து இருந்த அல்லற் காலை

இந்தப் பாடல் கிரகணம் பற்றிச் சொல்கிறது என்றும், இது மகாபாரதப் போரில் சூர்யனை கண்ணபிரான் தன் சக்கரத்தால் சிறிது நேரம் மறைத்து, ஜயத்ரதன் கௌரவ சேனையின் முன் பகுதிக்கு வந்த போது சக்கரத்தை விலக்கி சூர்யனைக் காட்டினார் என்றும் இரு வகைகளில் சொல்கிறார்கள். (புறநானூற்றில் சூரியகிரஹணம் | SuriyaGrahanam in Purananooru (sisnambalava.org.uk))

ஏன், எதற்கு, எப்படி எனக் கேள்விகள் கேட்காவிடில் புரிதல்கள் இல்லை. இராமாயணம், மஹாபாரதம், அகநானூறு, புறநானூறு, வேதங்கள், இந்திய திரிகோண விதிகள் மற்றும் விளக்கங்களில் தென்படும் கிரகணச் செய்திகளை நாம் வெளிக் கொணர வேண்டும். இதற்கெல்லாம் மொழி எல்லைகளை வகுக்கக் கூடாது.

பாரதியின் கவிதை  (கிரகணம் பற்றியதல்ல. ஆனால் இங்கு சொல்லத்தக்கது.)

“சாதாரண வருஷத்திய தூம கேது “

திணையின் மீது பனைநின் றாங்கு
மணிச்சிறு மீன்மிசை வளர்வாள் ஒளிதர
கீழ்த்திசை வெள்ளியைக் கேண்மைக்கொண் டிலங்கும் தூம கேது சுடரே வாராய் !

என்னில் பலகோடி யோசனை எல்லை
எண்ணிலா மேன்மை இயன் றதோர் வாயுவால்
புனைந்த நின்னொடு வால்போவ தென்கின் றார்

மண்ணகத் தினையும் வால்கொடு தீண்டி
ஏழையோர் கேதும் இடர்செயா தேநீ
போதி என்கின்றார் புதுமைகள் ஆயிரம்
நினைக் குறித்த றிஞர் நிகழ்த்துகின் றனரால்

பாரத நாட்டில் பரவிய எம்மனோர்
நூற்கணம் மறந்துபல் நூற்றா ண்டயின
உனதியல் அன்னியர் உரைத்திடக் கேட்டே
தெரிந்தனம் எம்முளே தெரிந்தவர் ஈங்கில்லை

வாராய் சுடரே வார்த்தைகள் சிலகேட்பேன்
தீயோர்க் கெல்லாம் தீவினை விளைத்துத்
தொல்புவி அதனை துயர்கெட வாழ்திநீ
போவை என்கின்றார் பொய்யோ மெய்யோ ?

ஆதித் தலைவி ஆணை யின்படி
சலித்திடும் தன்மையால் தண்டம் நீ செய்வது
புவியினைப் புனிதமாய்ப் புனைந்தற்கே என
விளம்புகின்றனர் அது மெய்யோ பொய்யோ ?

ஆண்டோர் எழுபத்தைந்தினில் ஒருமுறை
மண்ணினைநீ அணுகும் வழக்கினை ஆயினும்
இம்முறை வரவினில் எண்ணிலாப் புதுமைகள்
விலையும் என்கின்றார் பொய்யோ மெய்யோ ?

சித்திகள் பலவும் சிறந்திடு ஞானமும்
மீட்டும் எம்மிடைநீ வரவினால் விளைவதாய்ப்
புகலுகின்றனர் அது பொய்யோ மெய்யோ ?

உசாவித் துணை:

How the Ancient Art of Eclipse Prediction Became an Exact Science | Quanta Magazine by Joshua Sokal

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.