
குலசேகரருக்குப் பத்து நாள்களாகவே மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிலையில் நிற்க இயலவில்லை. எச்செயலையும் மனநிறைவாகச் செய்ய முடியவில்லை. அரசாங்க விவகாரங்களில் சரியான முடிவெடுக்கத் திணறினார் அமைச்சர்களுக்குக் கூட அது தெரிந்துவிட்டது. அவர்களும் வியப்படைந்தனர். அவர் தன் பதற்றத்தைக் கூடியவரையில் யாரும் அறியாவண்ணம் மறைத்துத்தான் வைத்திருந்தார். ஆனாலும் ஒருவரின் இயல்பான சுபாவம் மாறும்போது அது உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் தெரிந்துவிடுமன்றோ?
அதனாலேயே மூன்று நாள்களுக்கு முன்னர் திருவரங்கம் சென்று வந்தார். பள்ளிகொண்ட நாதனிடம் தன் குறையைச் சொல்லி உள்ளுக்குள்ளேயே அழுதார். மூன்றாம் திருச்சுற்றில் திருப்பணி செய்யும் மண்டபத்தைப் பார்த்தபடியே சற்று நேரம் நின்றார். பிறகு எவரிடமும் எதுவும் உரையாடாமல் கிளம்பிச் சென்றார். மன்னரின் அச்செயல் அங்கு இருந்த ஸ்தபதி உட்பட மற்ற பணியாளருக்கும் ஆச்சரியம் அளித்தது.
“என்ன இன்று மன்னர் ஏதும் பேசாமலேயே சென்று விட்டார்?” என்று அருகிலிருந்த பணியாளரிடம் ஸ்தபதி கேட்டார்.
“ஆமாம் ஐயா, ஏனென்றே தெரியவில்லை; அவர் முகமும் வாட்டமாகத்தான் உள்ளது. ஏதோ மனக்குழப்பம் அவரை ஆட்டிப் படைக்கிறது.”
“இராமபிரான் அருள் அவருக்குப் பரிபூரணமாக இருக்கும்போது அவருக்கு எந்தவித மனக்கிலேசமும் வராதே”
“அதென்ன ஐயா? இச்சன்னதியில் இருந்து கொண்டே அரங்கனின் திருநாமம் உச்சரிக்காமல் இராமனின் திருப்பெயரைச் சொல்கிறீர்கள்?”
”அதுதான் நாடறிந்த செய்தியாயிற்றே; அவருக்கு இஷ்ட தெய்வம் தசரத குமாரன்தானே”
திருவரங்கம் சென்றுவிட்டுத் தேரில் திரும்புகையில் காவிரியின் அழகைக் கண்ணுற்று வரும்போது மனம் சிறிது தெளிவடைந்தது போல் இருந்தது. வான்பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி வளைந்து நெளிந்து போகும் அழகினில் மனத்தைப் பறிகொடுத்தார். ஆங்காங்கே களை பறிப்பவர்களும் நாற்று நடுபவர்களும் வண்டி ஓட்டுபவர்களும் பாடும் தெம்மாங்குப் பாடல்கள் அவர் செவிகளுக்கு இனிமையாக இருந்தன. குளுமையான காற்று அவரைத் தாலாட்டி உள்ளத்தில் இருக்கும் கவலைப் பாசியைக் கலைத்துப் போட்டது. அதனால் சற்றுக் கண்ணயர்ந்தார்.
கொல்லிநாட்டின் மணம் வந்தபோது அவர் தாமாகவே விழித்துக் கொண்டார். மன்னர் வருகையைக் குறிக்கும் கொம்பொலிகள், வாழ்த்தொலிகள், பேரிகை முழக்கங்கள் எல்லாம் வானை நிரப்பின. மெதுவாக இறங்கி அரண்மனையின் உள் புகுந்தார். நுழையும்போதே பட்டத்தரசியும் சேடிமார்களும் பூச்சொரிந்து வரவேற்றனர். நீண்ட உயரமான மாடங்களில் கொடிகள் பறந்துகொண்டிருந்தன.
நெடிய வழியைக் கடந்து அரண்மனை முற்றத்தை அடைந்தார். இருநூறு பேருக்கு மேல் அமரக்கூடிய பரந்த முற்றம் அது. அமைச்சருடனோ அல்லது குடிமக்களோடோ உரையாடும் இடம் அதுவன்று. அங்கே அமர்வதற்கு உரிய எந்த ஆசனமும் இல்லை. அரவம் ஊர்வதற்குச் சங்கடப்படும் வழுவழுப்பான அத்தரையில்தான் அனைவரும் அமர்வர்.
முற்றத்தில் நுழைந்தவுடன் கண்ணெதிரில் சிறு மண்டபத்தில் சீதா சமேதராக இராமபிரான் கொலுவிருக்கப் பக்கத்தில் லட்சுமணனும், கீழே கைகட்டி வாய்பொத்தி மிக பவ்யமாக ஆஞ்சநேயரும் அருள் பாலித்தனர். நாள்தோறும் இடைவிடாமல் நடக்கும் பூஜைகளும் அப்போது ஒலிக்கும் பாடல்களும் கண்ணுக்கும் செவிக்கும் இன்பமளித்துக் கொண்டே இருக்கும்.
அவர் நுழையும்போதும் அவை அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தன. அவர் எதையும் நோக்காமல் சீதா பிராட்டியின் திருமுகத்தையே சற்று உற்றுப் பார்த்துவிட்டுக் கடந்தார். மீண்டும் கவலை மேகங்கள் வந்து அவரைச் சூழ்ந்து விட்டன. தம் அறைக்குச் சென்று மஞ்சத்தில் படுத்தார். கண்களை மூடினார்.
பாண்டிய நாட்டைச் சேர்ந்த பட்டத்தரசியார் வந்ததை அவர் உணரவில்லை. “அரசே! மண்டபத் திருப்பணிகள் செவ்வனே நடக்கின்றனவா?” என்று அவர் கேட்டதும் செவியில் உறைக்கவில்லை. “அரசே!” என்று அரசியார் உரத்த குரலில் எழுப்ப மன்னர் கண்விழித்தார்.
“என்ன கேட்டாய்?”
“மண்டபத் திருப்பணிகள் பற்றி…”
“அவை மிகச் சிறப்பாகவும் விரைவாகவும் நடந்துகொண்டிருக்கின்றன தேவி”
”பின் என்ன அரசே சோர்வு? உடலிலா? உள்ளத்திலா?”
“நீ அறியமட்டாயா தேவி. அதைக் கண்டுபிடிக்காதவரை எனக்கு ஊண் உறக்கமில்லை”
“சக்கரவர்த்தித் திருமகன் தங்கள் சங்கடம் தீர்த்து வைப்பார்; கவலை விடுங்கள் அரசே!” எனக் கூறிவிட்டு அரசியார் நகர்ந்தார்.
மறுநாள் கதிரவன் வழக்கம்போல்தான் கண்விழித்தான். அரண்மனைப் பூங்காவில் மான்களும் கிளிகளும் நாரணவாய்ப் புள்களும் கலகலப்பாக இருந்தன. பரிகளும் கரிகளும் தத்தம் காலை உணவினைக் களிப்புடன் உண்டன.
ஆனால் அமைச்சர்கள் மத்தியில் ஒரு குழப்பம் நிலவத் தொடங்கியது. திடீரென அரசர் அமைச்சர்களையும், படைத்தலைவர்களையும், அரண்மனையில் பணிபுரியும் முக்கியப் பணியாளர்களையும், அரண்மனையையே வாழிடமாகக் கொண்டுத் திருமால் நினைவில் தொண்டு புரியும் அடியார்களையும் ஒருசேர வரச்சொல்லிப் பணித்ததுதான் அதற்குக் காரணம். எல்லாரும் தனித்தனியாகவும், ஒருங்கு சேர்ந்தும் கலந்துரையாடியும் காரணத்தை அறிய முடியவில்லை.
”கடந்த திங்களில் நாம் கூடிக் கலந்துரையாடியது மன்னரின் செவி வரை எட்டியிருக்குமோ” என அமைச்சர்கள்தாம் அதிகம் கலக்கமாக இருந்தனர். அந்த நாளில் இன்றியமையாதத் துறைகளுக்குப் பொறுப்பேற்றிருக்கும் ஆறு அமைச்சர்கள் தலைமை அமைச்சர் இல்லம் நாடிச் சென்றனர்.
அவர்களை வரவேற்றத் தலைமை அமைச்சர் “என்ன அனைவரும் ஒன்றாக வருகை தந்திருக்கிறீர்கள்” என்று வினவினார். யாரும் விடையிறுக்கவில்லை. எல்லார் சிரங்களும் கீழே கவிழ்ந்துகொண்டிருந்தன. தலைமை அமைச்சரே கேட்டார். “என்ன படைத்தலைவரே! ஏன் மௌனம்? எதுவாக இருப்பினும் சொல்லுங்கள்”
சற்றுத் தயங்கியவாறு எழுந்த படைத்தலைவர் “ஐயா, யானைகளுக்கும் குதிரைகளுக்கும் தீவனம் இன்னும் ஒரு வாரத்திற்குத்தான் இருக்கும் போலிருக்கிறது. போர்வீரர்களுக்குக் கடந்த மாத ஊதியமே இன்னும் வழங்கவில்லை” என்றார்.
“நானும் அறிவேன்; வருவாய் அமைச்சரே! உங்கள் விடை என்னவோ?”
”ஐயா! வரி வசூல் சரியாக நடக்கவில்லை. வசூலிக்க வேண்டிய பணியாளர்கள் தத்தம் பணியைச் சரிவரச்செய்யவில்லை. எனனே வருவாய் மிகவும் குறைந்துவிட்டது” என்றார் வருவாய் அமைச்சர்.
“பல வழக்குகள் இன்னும் விசாரிக்கப் படாமலும், விசாரணை முடிந்தவை இன்னும் நீதி சொல்லப்படாமலும் இருக்கின்றன ஐயா” இது நீதிபரிபாலனத்துறை அமைச்சர்.
இப்பொழுது தலைமை அமைச்சர் தலை குனிந்து யோசித்தார். சற்று நேரம் கழித்துப் பேசினார். “நான் உங்கள் அனைவரிடமும் முன்னரே சொல்லி இருக்கிறேன். முக்கியமான செய்தி எனில் நீங்கள் நேரடியாக மன்னரைச் சந்தித்தே முறையிடலாம் என்று. ஏன் நீங்கள் போகவில்லை?”
”ஐயா, அரசரின் திருமுகம் கண்டு தனியாகச் சந்தித்துப் பேசவே முடியவில்லை. அவரைத் தனியாகக் காண்பதே அரிதாகவல்லவோ இருக்கிறது. எந்நேரமும் வைணவ அடியார்கள் சூழ்ந்திருக்கின்றனர். பெரும்பாலும் மன்னர் திருமாலைச் சேவிக்கத் திருக்கோயில்களுக்குப் பயணமாகச் சென்று விடுகிறார். அரசர் அரண்மனையில் இருந்தாலோ அடியார்களுடன்தான் அளவளாவுகிறார். அரசர் அரசாங்கப் பணிகளை மேற்பார்வையிடுவது அதனால் மிகவும் குறைந்துவிட்டது. நாங்கள் சென்றாலும் ஏறெடுத்துப் பார்ப்பதே இல்லை. இந்நிலை நீடிப்பது கேடாக முடியும் என்பது தாங்கள் அறியாதது அல்ல” என்று அனைத்து அமைச்சரும் ஒரே குரலில் முறையிட்டனர்.
“ஆமாம் அமைச்சர்களே! நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மைதான். நானே அவரைத் தனியாகக் கண்டு பேசச் சந்தர்ப்பம் கிடைப்பது குதிரைக் கொம்பாகத்தான் உள்ளது.”
இறுதியில் இதற்கு ஏதாவது ஒரு தீர்வு கண்டாக வேண்டும் என்று முடிவெடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இக்கூட்டம் பற்றி மன்னரிடம் புகார் ஏதாவது போயிருக்குமோ என்றுதான் அமைச்சர்கள் அச்சப்பட்டனர்.
ஆனால் கொல்லிமலைக் கோமானின் உரையோ வேறு விதமாக இருந்தது. வந்திருந்தவர்களை வரவேற்ற மன்னர், “ அரண்மனையின் முக்கியப்பிரதானிகளே! உங்களிடம் ஒரு அதிர்ச்சியான தகவலைக் கூறுகிறேன். ஏனெனில் என்னால் ஒரு களவிற்கு விடை காணமுடியவில்லை” என்று கூறி நிறுத்தினார். அனைவரின் முகத்திலும் என்னவாக இருக்கும் என்னும் ஆர்வமும் குழப்பமும் ஒருங்கே இருந்தன. மன்னராலேயே இயலவில்லையா என்று ஒவ்வொருவர் மனத்திலும் கேள்விக் கணைகள் தோன்றத் தொடங்கின.
மன்னர் தொடர்ந்தார், “நீங்களும் கண்டிருக்கலாம் அல்லது உங்கள் பார்வையில் படாமலும் போயிருக்கலாம். கடந்த பத்து நாள்களுக்கு முன்னர் நான் பார்த்தேன். எம்பெருமானின் பிராட்டி சீதா தேவியின் கழுத்தில் இருந்த வைரமாலையைக் காணவில்லை. இப்பொழுது தாயாரின் திருக்கழுத்து ஆபரணமின்றித்தான் இருக்கிறது.” தம் பேச்சை நிறுத்திய மன்னரின் கண்களிலிருந்து நீர் வரத் தொடங்கியது.
“நாராயணா! நாராயணா!” என்று வைணவ அடியார் பக்கத்திலிருந்து குரல்கள் எழும்பின. மற்றவர்கள் முகங்களில் எல்லாம் சோக மேகங்கள் குடியேறத் தொடங்கின. ஒருவாறாகத் தன்னைத் தேற்றிக் கொண்ட அரசர் தொடங்கினார்.
“நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதை எடுத்தவர் யாருக்கும் தெரியாது எனறு எண்ணியிருக்கலாம். எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் உயர்வற உயர்நலம் உடையவன் எல்லா ஆத்மாக்களையும் நோக்கிக் கொண்டே இருக்கிறான் என்பதை அவர் உணரவேண்டும். நீங்கள் அனைவரும் இல்லம் சென்று இரவு முழுதும் சிந்தனை செய்து நாளை ஒரு நல்ல விடையைக் கூற வேண்டும் என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இத்துடன் அவை கலையலாம்.”
கலைந்து செல்லும்போது அமைச்சர்கள் “பழம் தானாகவே நழுவிப் பாலில் விழுந்துவிட்டது” என உரையாடிக்கொண்டு சென்றனர்.
மறுநாள் காலை ஆதவனும் மேகக்கூட்டங்களிலிருந்து அச்சத்துடனேயே எட்டிப் பார்த்தான். மெல்லிய தூறல்கள் விழுந்துகொண்டிருந்தன. ஏதோ நடக்கப்போகிறது என்பதை முன்னமே அறிந்து கொண்ட வானம் அழுவது போலிருந்தது. பூக்குடலையில் மலர்கள் ஒன்றோடு ஒன்று கட்டிப்பிடித்துக் கொண்டு பிரிய மனம் இல்லாமல் கிடந்தன. தம் தனி வழிபாட்டறையில் குலசேகரர் ஒவ்வொரு பூவாய் எடுத்து பெருமாளுக்கு அருச்சனை செய்து கொண்டிருந்தார்.
மனமோ ”எல்லாம் அவனது திருவுள்ளம்; இப்படியெல்லாம் துயர் தந்தால் தன்னை இவன் விட்டுவிடுவான் என்று அயர்வறும் அமரர்கள் அதிபதி நினைக்கிறானோ” என்று எண்ணியது, அவரது வாய், “மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! ஆளாஉனதருளே பார்ப்பன் அடியேனே”என்றே முணுமுணுத்தது.
அவைக்கு மன்னர் எழுந்தருளும்போது அங்கே முழு அமைதி நிலவியது. “அவரவரும் அவரவர் மனத்தில் உதிக்கும் எண்னங்களை ஒளிவு மறைவின்றி உரைக்கலாம். எவருக்கும் எவ்வித ஊறும் ஏற்படாது என் நான் உறுதி அளிக்கிறேன்” என்று அரசர் அறைகூவல் விடுத்தார்.
வைணவ அடியார் பக்கலிலிருந்து ஒருவர் எழுந்தார். “கொல்லிமலைக் கோமான் எம்பெருமான் அருளால் நீடூழி வாழ்க! மன்னுபுகழ் கோசலைதன் மனிவயிறு வாய்த்த இராகவ சிம்மத்தைச் சேவிக்கப் பல பாகவதர்கள் அங்கே வருகின்றோம். எல்லாருமே ஸ்ரீவைஷ்ணவ அடியார்கள். வெள்ளை விளிசங்கின் ஒளி போல மனம் கொண்டவர்கள். யாரும் மனத்தாலும் தீங்கு எண்ணாதவர்கள். யாரை மன்னா குற்றம் சொல்வது? எல்லாம் பள்ளிகொண்ட பரந்தாமனின் திருவிளையாடலே ஆகும்; இதுவே எம் உள்ளக் கருத்து” என்றுரைத்தார்.
மன்னர் கையசைத்து அவரை அமரச் செய்தார். அடுத்துக் குலசேகரர் தலைமை அமைச்சரை நோக்கினார். ஏதோ நினைவில் தள்ளாடிக் கொண்டிருந்த தலைமை அமைச்சர் அரசரின் குறிப்பை உணரவில்லை. எனவே அரசர், “தலைமை அமைச்சரே!” என்று விளித்தார்.
திடுக்கிட்டு எழுந்த தலைமை அமைச்சர், “அரசே வாழ்க! வாழ்க! கட்டுக்காவல் நிறைந்த அரண்மனையின் உள்ளிருக்கும் வழிபாட்டுக்கூடத்தில் பிராட்டியின் வைரமாலை காணாமல் போயிருப்பது வேதனை அளிக்கிறது. தங்கள் மனத் துயர் என்க்குப் புரிகிறது ……..”என்று தொடரும்போது அரசர் குறுக்கிட்டு, “விடைக்கு வாருங்கள் அமைச்சரே!” என்று நினைவூட்டினார்.
“அரசே! கள்வர் வெளியிலிருந்து வந்திருக்க முடியாது. உள்ளேயே தான் இருக்க வேண்டும். அதுவும் நம் வழிபடுமுறைகள், அக்கூடத்தில் யாரும் இல்லா நேரம் எல்லாவற்றையும் அறிந்தவர்தாம் மாலையைக் கரந்திருக்கவேண்டும். அங்கே அடிக்கடி வருபவர்கள் யாரென்று தங்களுக்குத் தெரியும்”
உடனே அரசர், “ அமைச்சரே! வெளிப்படையாகக் கூறும்” என்றார் சற்றுக் கட்டளையிடும் குரலில்.
தலைமை அமைச்சர் எல்லா அமைச்சர்களையும் ஒருமுறை பார்த்தார். “அரசே! நான் கூறுவதைத் தாங்கள் தவறாக எடுத்துக் கொள்ல வேண்டாம். எல்லாரையும் விட இங்கு அடிக்கடி எப்பொழுதும் கூட்டமாக வருபவர்கள் அரங்கன் மீது அன்பு வைத்திருக்கும் அடியவர்கள்தாம். எனக்கு அவர்கள் மீதுதான் ஐயம்” என்று நிறுத்தினர்.
அடியவர்கள் ஒரே குரலில் ”நாராயணா! நாராயணா!” என்று ஒலித்தனர். உடனேயே அரசர் எழுந்து அவர்களை நோக்கிக் கையால் அமைதியாகும்படிக் காட்டினார். “தலைமை அமைச்சரே! என்னடியார் அது செய்யார்” என்றார்.
வருவாய்த்துறை அமைச்சர் எழுந்திருந்து, “மன்னா! தலைமை அமைச்சர் கூறியதிலும் பிழையில்லை. வழக்கு என வரும்போது எல்லாக் கூறுகளையும் நோக்க வேண்டும் அல்லவா?” என்றார்.
குலசேகரர் மனத்துள் ”இராமா! என்ன இந்தச் சோகம் வளருகிறதே! முடிவில்லையா?” என்று அரற்றினார். சற்று நேரம் சிந்தித்தார். தலைமை அமைச்சரைப் பார்த்து, “சரி, மேற்கொண்டு என்ன செய்யலாம்?” என்று கேட்டார்.
அவர், “அரசே! நாம் வழக்கமாகச் செய்யும் குடப்பாம்பு முறைதான்” என்றார்;
”இன்றே ஏற்பாடு செய்யுங்கள்” என்று மன்னர் ஆணையிட தலைமை அமைச்சர் கைதட்டிக் காவலனை அழைத்தார். அவனிடம், “வெளியில் ஒரு பாம்புப் பிடாரன் காத்திருப்பான்; அவனை உள்ளே அழைத்து வா” என்றார்.
“ஓ! நம் அமைச்சர் எல்லாவற்றையும் முன்னேற்பாடாகத்தான் செய்துள்ளார்” என மனத்துள் நினைத்தாலும் அடியவரைச் சோதிப்பது அவருக்குக் கலக்கத்தையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. “சரி, இதற்கும் சக்கரவர்த்தித் திருமகன் ஒரு வழி காண்பிப்பார் என்று வாளாவிருந்தார்,
உள்ளே வந்த பாம்புப்பிடாரன், ஒரு சிறிய பானைய வைத்தான். தனது கூடையைத் திறந்து அதற்குள் இருந்த இரு நாகங்களைப் பட்டென்று அப்பானையில் கொட்டி உடனே அதை மூடினான். இப்பொழுது தலைமை அமைச்சர் எழுந்தார்.
“அரசே! அடியவர்கள் மீது விழுந்துவிட்ட ஐயத்தைப் போக்க வேண்டியது அவர்களின் கடமை. ஒவ்வொருவராய் இக்குடத்தில் கைவிடட்டும். பிராட்டியின் வைரமாலையை எடுத்தவரை நாகங்கள் தீண்டும். மற்றவரை ஒன்றும் செய்யாது” என்று கூறி முடித்தார்.
அவர் கூறி அமர்ந்ததும் அடியவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு பானையில் கைவிட எழுந்தனர். குலசேகரர் அவர்களை நோக்கி உரத்த குரலில், ”எல்லாரும் அவரவர் இடத்தில் அமருங்கள்” எனக் கட்டளையிட்டார். “என் உள்ளே இருக்கின்ற நடையில் நின்றுயர் நாயகானான இராமச்சந்திர மூர்த்தி எனக்குச் சிலவற்றை உணர்த்தி விட்டார்” என்று கூறிக் கொண்டே அப்பானையின் அருகில் சென்றார்.
அரசர் என்ன செய்யப் போகிறார் என அனைவரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர், “நான் என்னடியார் அது செய்யார் என்று உத்தரவாதம் தந்தேன். நான் வேறு அடியவர்கள் வேறு அல்ல. அவர்கள் பிழை செய்திருப்பின் என்னை நாகம் தீண்டட்டும்” எனக் கூறி பட்டென்று யாரும் எதிர்பாராவண்ணம் மூடியைத்திறந்து பானையினுள் கைவிட்டார்.
அமைச்சர் கூட்டத்திலிருந்து, “அரசே! அரசே!” என்றும், அடியவர் பக்கத்திலிருந்து “கோவிந்தா! கோவிந்தா!” என்றும் கூக்குரல்கள் எழுந்தன. எல்லார் கண்களும் பானையிலிருந்து வெளிவரும் அரசரின் திருக்கரங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.
குலசேகரர் கையை எடுத்தார். அவரின் கரத்தில் இரு நாகங்களும் படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தன. அப்படியே இரு கைகளையும் ஒன்று சேரத் தலைக்கு மேல் குவித்து, “கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, வைகுந்தா” என்று எம்பெருமானின் பல்வேறு திருநாமங்களை உரக்க மொழிந்து வழிபட்டார். முதலில் அடியவர்களும் பின்னர் மற்றவர்களும் அவர் காலடியில் விழுந்தனர்.
சற்று நேரம் கழித்துப் பாம்புகளைக் குடத்திலிட்டார். அவையில் பூரண அமைதி நிலவியது. பலரின் கண்களிலிருந்து கண்ணீர் அருவிபோல் கொட்டியது. சிலர் தேம்பிக்கொண்டிருந்தனர்.
மன்னர் தம் சிம்மாசனத்தின் அருகில் வந்தார். இடுப்பில் இருந்த வாளையும், பக்கத்தில் இருந்த செங்கோலையும் அதில் வைத்தார். மணிமுடியையும் தலையிலிருந்து கழற்றி வைத்தார்.
“ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்” என்று தம் மனத்துள் கூறிக்கொண்டே நடந்து சென்று அரண்மனையை விட்டு வெளியேறினார்.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
