சிறுகதைகளின் வழியாக அமெரிக்க வரலாறு (1900-1939)

அமெரிக்க வரலாறு விறுவிறுப்பானது. அந்த வரலாற்றினை நெடியக் காலக்கோட்டின் மீது பொருத்தலாம். பின்னர் அந்த காலக்கோட்டில் ஏராளமான சம்பவங்கள் தொட்டு எடுக்கலாம். நம் கவனத்தினை 1900-1939 வரை திருப்புவோம். ஏன் அப்படிச் செய்ய வேண்டும் எனக் கேள்வி முளைக்கும்?

1920-1929களை “செழுமையான இருபதுகள் (Roaring twenties)”  என்பார்கள். இந்தக் காலகட்டத்தினை ஜாஸ் யுகம் (Jazz Age) எனவும் சொல்வார்கள். செழுமைக்குப் பிறகு வந்த காலமாகிய 1929-1939  என்பதைப் பொருளாதார மந்தநிலையைச் சந்தித்த காலம் என்பார்கள். ப்ரெட்டெரிக் லூயிஸ் ஆலன் எழுதிய ​​  “நேற்றே நிகழ்ந்தது:  1920 களின் முறைசாரா வரலாறு ( Only Yesterday: An Informal History of the 1920’s)”  என்ற புத்தகம் செழுமையான இருபதுகள் (Roaring twenties)  எனப் பெயர் சூட்டியதாகச் சொல்வார்கள். இந்த தகவலே ஒரு முறைசாரா தகவல்தான்.

எதையும் தகவலாகத் தெரிந்து கொள்வதை விடக் கதைகளாகத் தெரிந்து கொண்டால் அது மனதில் எளிதில் ஒட்டிக் கொள்ளும். இது ரகசியமா என்ன? நம் எல்லாருக்கும் அனுபவத்தில் தெரிந்த ஒன்றுதான். கதைகள் சொல்வது எளிது, கேட்பது எளிது, ஞாபகம் வைத்துக் கொள்ள எளிது. ஔவையார் நல்லோருக்குச் செய்யும் உபகாரத்தினை சொல்கையில் கல்மேல் எழுத்து, ஈரமில்லாத நெஞ்சம் கொண்டாருக்குச் செய்த உதவி நீர்மேல் எழுத்து என்பாள். ஆகையால் கதாசிரியர்கள் வாசகர்களாகிய நமக்குச் செய்த உபகாரம் காலத்தில் கல்மேல் எழுத்து போல இருக்கின்றது எனலாம்.  கதைகள் காலத்தின் தடங்களைக் கல்மேல் எழுத்தாகப் பாதுகாக்கின்றன. ஆகவே கதைகளைக் கொண்டு காலத்தினை திருப்பிப் படிக்கலாம். 

நாம் இன்று மூன்று அமெரிக்க சிறு கதைகளை எடுத்துக் கொண்டு இந்தக்காலத்தினை அக்கதைகளின் வழியே பார்ப்போம். மூன்றுக் கதைகளின் உள்ளே செல்லும் முன்னர் ஒரு சிறிய தகவல். தகவலைத் தெரிந்து கொள்ளக் கதை எனச் சொல்லி விட்டு, கதையைத் தெரிந்து கொள்ளத் தகவலா எனக் குழப்பம் வரலாம். கோழியிலிருந்து முட்டை வரும் முன், முட்டையிலிருந்து கோழி வர வேண்டும் என்பதால் பொருத்தருளவும். 😀

பெரும் வளத்துடன் இருந்த 1920களில் உடை, நடத்தை, இசை, உறவுகள் என அனைத்திலும் இருந்த விக்டோரியன் ஒழுக்கவியல் மையமான சிந்தனைகள் உடைந்து போயின. புதியவை நடைமுறைக்கு வந்தது. அமெரிக்கா நகரமயமாவதும் அக்காலத்தில் பரவலானது. போன், கார், வீடுகளுக்கு மின்சாரம்  போன்றவை பரவலாக மக்கள் உபயோகத்துக்கு வந்தது. அமெரிக்க அரசின் 1920ம் ஆண்டின் அதிகாரப் பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு முதன்முறையாக அமெரிக்க மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கும் கூடுதலாக நகர்ப்புறங்களில் வசிக்கின்றார்கள் என்பதை அறிவித்தது. 1870 – 1920க்கு இடையில் பதினொரு மில்லியன் மக்கள் கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.  அந்த காலகட்டத்தில் அமெரிக்காவிற்கு மற்ற நாடுகளிலிருந்து இருபத்தைந்து மில்லியன்  மக்கள் புதிதாக வந்தனர். புதிதாக வந்தவர்கள் பெரும்பாலோர் நகர்ப்புற பகுதிகளில் குடிபுகுந்தார்கள்.1920 வாக்கில், அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாகக் கிராமப்புறங்களை விட அதிகமான அமெரிக்கர்கள் நகரங்களில் வாழ்ந்தனர். நகர்ப்புறங்கள் துடிப்புடன் , உற்சாகத்துடன், புதுமையை நோக்கி நகரும் காலம் எனலாம்.

கற்பனை செய்து பாருங்கள். வாழ்வில் வாய்ப்புக்களை தேடி குவியும் மானுடம். ஓவ்வொருவர் உள்ளத்திலும் எத்தனை வேகம் இருந்திருக்கும், கனவுகள் இருந்திருக்கும். நகரங்கள் விரிகின்றன. அந்த வேகம் அளிக்கும் உருவாக்கும் சக்தி எவ்வளவு வலுவுடையதாக இருக்கும்?

“தி ஹேர் கட்”, “பிரதர்ஸ்”  என்ற இரண்டு சிறுகதைகள் கொண்டு 1920களை காண்போம்.  ரிங் லார்னர் எழுதிய “தி ஹேர்கட்”  அமெரிக்க மத்திய மேற்கின் கிராமச் சூழலில் நடைபெறுகின்றது, அக்காலத்தில் நகரங்களில் நிகழ்ந்து கொண்டிருந்த சக்திகளால் அதிகம் தொடாத ஒரு ஊராகக் கதையில் உள்ளது.  அந்த கிராம வாழ்க்கையில் உள்ள கொடூரம், அற்பத்தனம்  போன்ற தன்மைகளைக்  காட்ட ஜிம் கெண்டலின் பாத்திரத்தைக் கதை பயன்படுத்துகிறது. அதே கிராமத்தில் முழுக்க வாழ்க்கையைக் கழித்து அந்த அற்பத்தனம், கொடூரத்தினை நகைச்சுவை எனப் புரிந்து கொள்ளும் வெகுளித்தனம் கொண்ட நாவிதர் வாசகர்களாகிய கதையைச் சொல்கின்றார். 

அந்த ஊரில் நகரத்தில் பிறந்து வளர்ந்த மருத்துவர் ஸ்டேர் (Stair) வேலைக்கு வருகின்றார்.அந்த ஊரின் அப்பாவித்தனத்தின் அடையாளமாக பால் டிக்சன் இருக்கின்றார். பத்து வயதில் நடந்த நிகழ்வில் அடிப்பட்டு அதனால் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளார். நகரத்தில் வந்த மருத்துவர் அவரிடம் நண்பனாகப் பழக முடிகின்றது. பால் மருத்துவரின் அலுவலகத்தில்தான் இயல்பாக உணர்கின்றார். அங்கே நேரம் செலவிடுகின்றார். ஜுலி க்ரேக் அந்த ஊரில் உள்ள அழகிய பெண். நியூயார்க், சிகாகோ போன்ற நகரங்களுக்குச் சென்று கல்வி பயின்றவர். அப்பா இல்லாத அவர் தனது அம்மாவுக்காக ஊரில் தங்கி விடுகின்றார். ஜிம் கெண்டாலும், ஊரில் உள்ள பிறராலும் அவமானப்படுத்தப்படுகின்றார். அவருக்கு இரக்கப்படும் ஊரில் உள்ளவர்களும் அவருக்கு ஆதரவாக ஜிம் கெண்டலை கண்டிப்பதில்லை. கடையில் பால் டிக்சன் வழியாக இதற்கு முடிவு வருகின்றது. அந்த முடிவுக்கு நகரத்திலிருந்து வந்த மருத்துவரிடம் பால் டிக்சன் பேசியது காரணமாக இருக்கிறது.  கிராமத்தில் பெண்ணுக்கு நடந்த கொடுமைக்கு அந்த கிராமத்துக்கு அன்னியரான மருத்துவரின் வழியே கிராமத்தின் அப்பாவி ஒருவன் விழிப்புணர்வு பெற்று விடிவு வருகின்றது. இந்தக் கதையில் 20களின் நகரமயமாதலைக் கதாசிரியர் நேர்மறையாகக் காட்டுகின்றார். நகரத்தினை பிரதிபலிக்கும் டாக்டர் ஸ்டேர் பாத்திரம். நகரத்தில் ஒளி பெற்று கிராமத்தில் பிரகாசிக்கும் ஜூலி க்ரேக் பாத்திரம். இவர்களை மையமாக வைத்துக் கதைச் சொல்லும் கிராமவாசி எனக் கதை அமைப்பு உள்ளது.

அடுத்து ஷேர்வுட் ஆண்டர்சன் எழுதிய பிரதர்ஸ் கதையைப் பார்ப்போம். இந்தக் கதை கர்ஜனை யுகம் மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் இருக்கையில் வாசகரை அதனை சிகோகாவுக்கு அருகே உள்ள கிராமியச் சூழல் உள்ள ஊருக்குக் கூட்டிச் செல்கின்றது. இக்கதையில் கதை சொல்லியாக ஒரு பாத்திரம் உண்டு. அந்த கதை சொல்லி, அருகே கிராமப்புறத்தில் மரங்களுக்கு நடுவே வாழும் முதியவர் ஒருவரைச் சந்திக்கின்றான். முதியவருடன் கதை சொல்லியின் உரையாடல்கள் கதையினை நகர்த்துகின்றது. முதியவர் நகரமயமாக்குதலில் இணைய இயலாத கிராமப்புறத்தின் பின்வாங்கலில் சிக்கியவர். அருகிலுள்ள நகரத்தில் நிகழும் ஆடம்பரமான, கொண்டாட்டமான மிகை உணர்வான நிகழ்ச்சிகளைக் கவர்ச்சியுடன் விமர்சனம் செய்கின்றார். விமர்சனமோ எதிர்மறைத் தன்மை உடையது. கதைசொல்லிக்குச் சொந்த ஊரைப் பற்றி நல்லது சொல்ல எதுவும் இல்லை, ஆனால் அவனது முழு கவனமும் நகரத்தினை மூடுபனி போன்ற திரைக்குப் பின்னால் இருந்து காணும் தன்மை உள்ளது. எல்லா நகர நிகழ்வுகளையும் அறிந்துள்ளான். கதைக்குள் கதையாக பெரும் தொழில்களில் ஊழியனாக 9-5 வேலைக்குள் சிக்கிய ஒருவன் அதில் முழுமையில்லாத வெற்றிடம் சந்திப்பதைப் பற்றி வருகின்றது. அந்த ஊழியன் அலுவலகத்துக்குள் புதிதாக வேலைக்கு வரும் பெண்ணிடம் நகரமயமான ஊரில் குடும்பத்திடம் காணாத, அவன் வாழும் ஊரில் காணாத கவர்ச்சியைக் காண்கின்றான். அதன் முடிவில் அவன் மனத்தில் அவன் உருவாக்கிய பகற்கனவில் வலையாக்கித் தானே சிலந்தியாகவும், தானே அதன் இரையாகவும் ஆகி முடிந்து போகின்றது. இக்கதை நகரமயமாதலை இலையுதிர்கால இலைகளை உலுக்கி எடுக்கும் மழையாகவும், கண்ணை மறைக்கும் மூடுபனியாகவும் காண்கின்றது. அதில் முழுமை இல்லாது தவிக்கும் உள்ளம், நகரத்தின் இழுவிசையில் தவிக்கும் உள்ளம் போன்றவை உள்ளன.

அடுத்த கதைக்கு முன்னால் நகரமயமாதல்,அதன் கொண்டாட்டங்கள் முடியும் பொழுது என்ன ஆனது எனக் காண்போம். 1929ல் சவாலை கர்ஜனை யுகம் சந்தித்தது. அமெரிக்க வரலாற்றில் 1929 ஆம் ஆண்டு ஏற்பட்ட பங்குச் சந்தை வீழ்ச்சி திருப்புமுனையாக அமைந்தது. இது பெரும் பொருளாதார மந்தநிலையின் தொடக்கமாக அமைந்தது. தொடக்கத்தில் பெரும் பொருளாதார மந்தநிலை என்னும் பெயர் 1929ல் வரவில்லை. அதன் பெயர் வந்த குட்டிக் கதையைப் பார்ப்போம்.

வரலாற்றாசிரியர் வில்லியம் மான்செஸ்டர்  “The Glory and the Dream: A Narrative History of America, 1932-1972”  என்னும் புத்தகத்தில் 1929க்கு முந்தைய பொருளாதார வீழ்ச்சிகள் பொதுவாக “பீதி (Panic)” என்று குறிப்பிடப்பட்டது என்கின்றார். ஆனால் 1931ம் ஆண்டு இலையுதிர் காலத்தில் பேசுகையில் அமெரிக்க அதிபர் ஹூவர் கவனத்துடன் பீதிக்குப்  பதிலாகப் முதன் முதலாக பொருளாதார மந்தநிலை என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுத்துக் குறிப்பிட்டார். ஹுவரை பொறுத்தவரைப் பீதியை விட மந்தநிலை என்னும் வார்த்தை மிக குறைவான அச்சத்தினை மக்களிடம் கொடுக்கும் என நினைத்தார்.  1934 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பொருளாதார நிபுணரான லியோனல் ராபின்ஸ், பெரும் பொருளாதார மந்தநிலை (The great depression) என தெளிவாகப் பெயர் சூட்டினார். 

எஃப். ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்டின் “பாபிலோன் ரீவிசிட்டட்”  சிறுகதை 1929 ஆம் ஆண்டின் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு முன்னும் பின்னும் அமெரிக்காவின் ஏற்ற இறக்கமான அதிர்ஷ்டத்தை நமக்குச் சொல்கிறது. கதையின் கதாநாயகன் பெயர் சார்லி வேல்ஸ். அவன் பார்வையில், உணர்வில் கதை நகர்கின்றது.  1920களில் புதிதாக உருவான மில்லியனர்கள் மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தினையும் தேடிக் கண்மூடி நகரும் தன்மையை சார்லி பிரதிபலிக்கிறார். 1920கள் உச்சத்தில் இருக்கையில் தனது செல்வத்தை வீணடித்த சார்லி, தன்னை மீட்டுக் கொள்ளும் நம்பிக்கையுடன் திரும்பி வருகிறார். அவரது மீட்பின் மையம் அவரது குழந்தை.  இந்த சூழலில் பழைய 1920களின் கொண்டாட்ட மனநிலையில் சிக்கிக் கொண்ட லோரெய்ன் மற்றும் டங்கன் போன்ற நபர்களுடனான தொடர்புகளால் மீண்டும் இறுக்க வருகின்றது. அவை அவரது மகளின் காப்பாளராக உள்ள உறவினர்கள் முன் அவரது நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. வளம் மிக்க 20களின் கொண்டாட்டங்கள் தீர்ந்து போன பின்னர் எஞ்சியிருந்த கசப்பினை காட்டுகின்றது.

இந்த கதைகள் வழியாக அமெரிக்காவின் துண்டிக்கப்பட்ட கிராமப்புற  வாழ்விலிருந்து  வலைகளாகப் பின்னப்பட்ட நகர்ப்புறமுமாகி வருவதைக் காண்கின்றோம். இக்கதைகள் வளர்ந்து வரும் செல்வம், செல்வம் கொடுத்த சமூக பழக்கவழக்கங்களால் புதிய பாதைகள் கொந்தளிப்புடன் வருவதைப் படம் பிடிக்கிறது. இருபதுகளில் குறைந்த காலத்தில் குவிந்த செழிப்பால் எதையும் மிகையாக நுகரும் பழக்கம் பரவியது. மனிதனின் தனிப்பட்ட தேடல், சுய அழிவும், சுய உருவாக்கமும் புதிய வடிவங்கள் கொண்டன.  பாரம்பரிய குடும்ப கட்டமைப்புகள், நெறிமுறை அடித்தளங்களை உடைத்தும், உதிர்த்தும், புதியதாக்கியும் நின்றன. இந்தக் கதைகள் எளிமையான கடந்த காலத்திற்கான ஏக்கம் கொண்டதாகத் தோன்ற வாய்ப்பு உள்ளது. ஆனாலும் இறுதியில் செல்வமும், வளமும் கொணர்ந்த இருபதுகளை ஒரு முக்கியமான சமூக அசைவாகவே இந்தக் கதைகள் காட்டுகின்றன.

கதைஒலி வடிவம்எழுத்து வடிவம்
“Brothers(சகோதரர்கள்)” – ஷெர்வுட் ஆண்டர்சன்https://youtu.be/PKVvmsgJ9kk?si=IS0Oze47dCYJmIu-https://americanliterature.com/author/sherwood-anderson/short-story/brothers
BABYLON REVISITED (பாபிலோனுக்கு திரும்ப செல்வோமா)https://youtu.be/3AUTTaFx29A?si=5CU3a8H9_aEAEXDGhttps://gutenberg.net.au/fsf/BABYLON-REVISITED.html
Haircut (முடித்திருத்துதல்) – Ring Lardnerhttps://www.classicshorts.com/stories/haircut.htmlhttps://youtu.be/nn9ZWEC17g0?si=tupOH1yehtGOPssh

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “சிறுகதைகளின் வழியாக அமெரிக்க வரலாறு (1900-1939)”

Leave a Reply to vsrwordCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.