இரண்டொழிந்தது

“வவ்… வவ்…  வவ்….”  என்று விடாமல் குரைத்துக் கொண்டிருந்தான் கருப்பு.

“ஏன்டா இப்புடிக் கத்திட்டே இருக்குற?”  என்று அஞ்சுகம் குரல் எழுப்பிக் கொண்டு வெளியே வர, குரைப்பதை நிறுத்தினான். 

“அம்மா..” என்று தணிந்த குரல் கேட்டில் கேட்டது.

கார் இருளில் மங்கிய மஞ்சள் நிற தெரு விளக்கின் ஒளியின் அடியில் கொளஞ்சி நின்றிருந்தாள்.

“ஓ.. மணி எட்டறை ஆயுடுச்சா அதுக்குள்ள. பின் பக்கமா வா கொளஞ்சி”  என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள் அஞ்சுகம்.

அஞ்சுகம் உள்ளே சென்றதும் கொளஞ்சியைக் கண்டு மீண்டும் உறுமினான் கருப்பு.

“தெனமுந்தேன் என்னயப் பாக்குது. ஆனாலும் புதுசாப் பாக்குற மாதிரி கொரைக்குது.” என்று முனுமுனுத்துக் கொண்டே வீட்டின் பின் பக்கம் சென்றாள்.

கொளஞ்சிக்காகக் காத்திருந்த அஞ்சுகம்,

“சீக்கிரம் வா” என்றாள்.

“தோ வரேனுங்க மா “ என்று பவ்யமாக ஓடிய கொளஞ்சி, முந்தானையால் மறைத்திருந்த அலுமினியப் பாத்திரத்தைக் கீழே வைத்தாள். ஒடுக்குகள் பல கண்டதால் நிலையாக நிற்க முடியாமல் தள்ளாடவே அப்பாத்திரத்தைத் தன் கைகளைக் கொண்டு தாங்கி நிறுத்தினாள். கொதிக்கும் எண்ணெய்யில், தட்டிய வடையை இறக்கும் பொழுது விரல்களை பத்திரப்படுத்திக் கொள்வது போல, கொளஞ்சியின் பாத்திரத்தின் மீது தன் விரல்கள் பட்டு விடாமலும், தன் வீட்டு பாத்திரமும் கொளஞ்சியின் பாத்திரமும் ஒன்றோடொன்று உரசிவிடாமலும் மிகவும் கவனத்துடன் மீந்து போன சாதத்தையும் குழம்பையும் ஊற்றினாள் அஞ்சுகம்.

“ரொம்ப நன்றிங்க மா”

“இரு இரு போகாத. நான் போயி காப்பித்தண்ணி கொண்டு வரேன்.”

“சரிங்கமா” 

‘காப்பி’ என்று சொன்னதும், தனக்கென்று கொடுக்கப் பட்டிருந்த கொட்டாங்குச்சியை எடுத்துக் கொண்டாள் கொளஞ்சி.

மிச்சம் ஆகிப் போன காப்பித்தண்ணியைக் கொண்டு வந்து மீண்டும் அதே கவனத்துடன் கொட்டாங்குச்சியில்  ஊற்றினாள் அஞ்சுகம்.

“அப்புறம் கொளஞ்சி, உம் மூத்த மவன் எப்புடி இருக்கான்?”

“நல்லா இருக்கானுங்க மா. கலியாணங் கெட்டி பொஞ்சாதியோட சந்தோசமா இருக்கறானுங்க”

“ம். நல்லது. உம் பொண்ணோட உத்தியோகம் என்னாச்சு?”

“அது நாளைக்குத்தேன் தெரியுமுன்னு சொல்லுச்சுங்க மா, வேல ஊர்ஜிதமா இல்லியான்னு. அப்புறமும் ஏதோ பரிச்ச எழுதிட்டே இருக்கோனுங்களாமா. படிக்காத முண்டம் எனக்கெங்க தாயீ அதெல்லாம் வெளங்கும். உங்கள மாதிரி படிச்சவங்களுக்குத்தேன் புரியும் அதெல்லாம்.”

கொளஞ்சி காப்பியைக் குடித்துவிட்டு தன் கொட்டாங்குச்சிக்கு என்று கொடுக்கப்பட்ட பிரத்யேக  இடத்தில் அதை வைத்துவிட்டுத் தலையை சொறிந்தபடி நின்றாள்.

“என்ன கொளஞ்சி?”

“அம்மா அது..” என்று தயங்கிக்கொண்டே, “ புள்ள வயசுப் புள்ள இல்லீங்களா. மேல ஒரு துணியுங் கீழ ஒரு துணியுங் கட்டி மறச்சுக்கிட்டுப் போவுதுங்க. ஆம்பலைங்க கண்ணு வேற விதமா படுதுங்க. அதான் சேலை ஏதாவது குடுத்தீங்கன்னா….” என்று இழுத்தாள்.

” ம். இரு வாரேன்” என்று உள்ளே சென்ற அஞ்சுகம், தன்னிடம் இருந்த வேண்டாத சேலைகள் மூட்டையில் இருந்து மிகவும் குறைவாகக் கிழிந்த சேலை ஒன்றைக்  கொண்டு வந்து கொடுத்தாள் கொளஞ்சியிடம்.

சேலையைக் கண்டவுடன் நன்றி கூறி மிகுந்த உற்சாகத்தோடு அதை வாங்கிக் கொண்டு சாப்பாட்டுப் பாத்திரத்தையும்  எடுத்துக் கொண்டு தன் குடிசைக்குச் சென்றாள்.

வெளி வாசலில் கொளஞ்சியின் கணவன் சுடலையும் அவர்களது இளைய மகள் முத்தரசியும் பசியுடன் அமர்ந்திருந்தனர். கொளஞ்சியைக் கண்டதும் பசி மேலும் அதிகரித்தது முத்தரசிக்கு. குடிசைக்குள் ஓடிச் சென்று மூன்று தட்டுகளை எடுத்து வந்தாள்.

“ம்க்கும். மூனு தட்டுக்கு எங்க புள்ள சோறு இருக்கு. ஒரு தட்டு போதும்.” என்று  ஒரு தட்டில் மட்டும் சோறு குழம்புக் களவையைப் பரிமாரி முத்தரசிக்குக் கொடுத்துவிட்டு, மீதியை சுடலையுடன் பங்கிட்டு உண்ண ஆரம்பித்தாள். காலையில் இருந்து பட்டினி கிடந்ததால் அரை நிமிடத்தில் சோறு பறந்தது.

மிகவும் தணிந்த குரலில், “எழிலு என்ன செய்யுறா?” என்று  கொளஞ்சி கேட்டாள்.

“அக்கா, உள்ள படிக்குது.”

“கஞ்சி குடிச்சாளா?”

“இல்ல கஞ்சி வெய்யிலு தாங்காம ஊசிப்போச்சு புள்ள. சாயுங்காலம் நான் ரொட்டி கொண்ணாந்தேன் சந்தையில இருந்து. அதத்தேன் சாப்பிட்டுச்சு.” என்றார் சுடலை.

சுடலை மூங்கில் கூடைகள் பின்னி விற்கும் தொழிலாளி. சந்தையில் வரும் மக்கள் கூட்டத்தைப் பொருத்தே வியாபாரம் நடக்கும். பல சமயங்களில் கூடை விற்ற காசு மறுபடியும் மூங்கில் வாங்குவதற்கே போதாமல் இருக்கும். மூங்கில் வாங்கியது போக மீதம் இருப்பின் ஒரு நாளைக்கு ஒரு வேலை உணவு நிச்சயம். இல்லாத நாட்களில் இரவல் சாப்பாடு தான். அதுவும் கிடைக்கவில்லையெனில் ஈரத் துணியை வயிற்றில் கட்டிக் கொண்டு உறங்குவதும் வழக்கம்.

கொளஞ்சிக்கு சின்னமனூரில் யாரேனும் பாத்திரம் கழுவும் வேலையோ, கழிவறை கழுவும் வேலையோ கொடுத்து, சம்பலமாக அன்று மீதமான உணவுப் பண்டங்களைத் தருவார்கள். அதுவும் இரவுச் சோறு மட்டும் தான்.

சின்னப் பிள்ளையாக இருக்கும் பொழுது இரவு உணவை வீடு வீடாகச் சென்று இரந்து வாங்கி வருவது மிகவும் உற்சாகமாக இருந்தது கொளஞ்சியின் மூத்த மகளுக்கு. மேல்சட்டையும் கட்டைப் பாவடையும் அதில் ஆங்காங்கே கிழிசல்களும் தொங்க, பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வீடு வீடாக ஓடுவாள்.. பருவம் வந்த பின்னும் அது தொடர்ந்தது. மாதவிடாய் நாட்களில் தொடைகளுக்கு இடையில் துணிமூட்டையை சொறுகிக்கொண்டு ஓடினாள். பல சமயங்களில் மாதவிடாய் குருதி துணிச் சுருளைத் தாண்டி பாவாடைக்குப் பிரவேசிக்கும். அதில் மாதவிடாயின் குருதியோடு தொடை இடுக்கில் இருந்த துணி உராய்ந்து வந்த இரத்தமும் கலந்திருக்கும்.

“என்னப் பெத்த ஆத்தாவே எம் மவளா எனக்குப் பொறந்திருக்கு” என்று தன் அம்மாவின் பெயரைத் தன் மூத்த மகளுக்குச் சூட்டினார் சுடலை. சுடலையின் வம்சாவழியில் பிறக்காததொரு பேரழகி இந்த எழில்விழியாள். நல்ல உயரம். இரு கை கொண்டு அடக்கிப் பின்ன இயலாத கட்டை மயிர் கொண்ட தலை அவளுக்கு. அதில் மேடுகள் உயரமாகவும் பள்ளங்கள் ஆழமாகவும் இருக்கும். சின்னமனூரின் மேல்சாதிப் பெண்களே பொறாமைப்படும் அளவிற்கு செவத்த மேனி உடையவள். நீண்ட முகம். அதிலே அடர்ந்த புருவங்களுக்கு இடையே நேர்த்தியான மூக்கும், மெல்லிய இதழ்களும், பெயருக்கேற்றார் போல பெரிய விழிகளும் அழகுக்கே அழகு சேர்ப்பவையாக இருந்தன. அவளோடு உரையாடும் பொழுது அவளது விழிகளின் மேல் படர்ந்திருக்கும் முடிகளை கவனிக்காமல் இருக்க முடியாது. மயில் தோகை விரித்து ஆடுவது போல மூடித்திறக்கும் அவளது இமைகள்.

நித்தமும் இரந்துண்பது தான் அன்றாடம்  என நம்பியிருந்தாள் எழில்விழியாள். பன்னிரண்டு வயதில் பருவம் வந்த பின், மாறும் ஆண்களின் பார்வையைக் கூட உணர்ந்திருக்கவில்லை. ஐந்தாம் தெருவில் வசிக்கும் இசக்கிமுத்து தான் அதை அவளுக்குக் காட்டினான். ஏழையாக இருப்பது வரம் அல்ல என்றும், இரந்து உண்பது கவுரவம் அல்ல என்றும், பருவம் வந்த பின் கிழிசல்கள் போதுமான பாதுகாப்பு இல்லை என்பதனையும் இசக்கிமுத்து தான் உணர வைத்தான். வயது ஐம்பதிற்கு மேல் இருக்கும் இசக்கிமுத்துவிற்கு.

அவனது மனைவி அன்று வீட்டில் இல்லை என்பது அறியாமல் அலுமினியப் பாத்திரத்தோடு இசக்கிமுத்துவின் வீட்டு வாசலில் நின்று “அம்மா” என்று குரல் கொடுத்தாள், எழில். கறிக்குழம்பு மணம் கேட்டுவரை வீசியது. எழிலின் குரலிற்கு பதில் ஏதும் வரவில்லை.

வீட்டின் பின்னாலிருந்து ஒரு அலறல் ஓசை கேட்டது. மிகவும் பரிச்சயமான குரல் போல தோன்றிற்று எழிலிற்கு. சுற்றும் முற்றும் பார்த்தாள். தெருவில் யாரும் இல்லை. பயத்தில் ஓடிவிட முற்பட்டாள். “என்ன விடு என்ன விடு” என்று அழும் ஓசை அவளை நிறுத்தியது. இனம்புரியாத விசை ஒன்று அவளை இயக்க கேட்டைத் திறந்து பின்பக்கம் சென்றாள். சோறும் ஆட்டுக்கறியுமாக சிதறிக் கிடந்தது கண்டாள். இசக்கிமுத்துவின் உடல் அடியில், கடும் வெய்யிலில் நெளியும் புழுவைப் போல உடல் முழுவதும் துடித்துத் திமிறிக் கொண்டிருந்தாள் எழிலின் சித்தப்பாவின் மகள் பொன்னி. “அக்கா, என்னக் காப்பாத்து” என்று கரம் நீட்டினாள். கண்கள் சிவக்க ஆவேசமாகப் பாய்ந்த எழில், அவளது கையில் இருந்த அலுமினியச் சட்டியால் ஓங்கி இசக்கிமுத்துவின் தலையில் தட்டினாள். திரும்பிப் பார்த்தவன் எதிரில் எழில் நிற்க , அவளது அழகு அவனது மூச்சை அடைத்தது. பொன்னியை விட்டுவிட்டு எழிலின் கையை எட்டிப் பிடித்துக் கீழே தள்ளினான். சிதறிக் கிடந்த கறிக்குழம்பி்ல் இருந்த பெரிய நல்லி எழும்பு ஒன்று சிக்கியது எழிலின் கையில். அதன் கூரிய பகுதியைக் கொண்டு அவனது கையில் ஓங்கிக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடினாள் பொன்னியைக் கூட்டிக் கொண்டு. பொன்னியை அவளது குடிசைக்குச் செல்லும் பாதையில் அனுப்பிவிட்டு, எங்கும் நிற்காமல் மூச்சிரைக்கத் தன் குடிசை வாசலில் ஒடுங்கிய சட்டியோடு வந்து நின்றாள் எழில்.

“என்ன புள்ள ஆச்சு? சட்டை எல்லாம் சோறா கெடக்கு? சட்டி இப்புடி ஒடுங்கிக் கெடக்கு?” என்று பதறினாள் கொளஞ்சி.

எழில் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றாள். முகம் முழுக்க அதிர்ச்சி பரவியிருந்ததைக் கண்டு பதட்டமான கொளஞ்சி, எழிலின் அருகில் சென்று,

“என்ன எழிலு? நாய் கேது தொரத்தி்ட்டு வந்துச்சா?” என்று கேட்டாள்.

மூச்சிரைத்தபடி, “ம்… ரெண்டு காலு கொண்ட கெழட்டு நாயீ” என்று கூறிவிட்டு அமைதியாக குடிசையின் உள்ளே சென்று கோரைப்பாயில் படுத்துக் கொண்டாள் தன் அப்பத்தாவின் கூரைச்சேலையை அணைத்தபடி.

அகன்று விரிந்த விழிகளோடு பாயில் முடங்கிக் கிடந்தவளின் அருகில் குந்தவைத்து அமா்ந்து கொண்டு அவளது தலையைத் தடவிக் கொடுத்தாள் கொளஞ்சி. சின்ன வயதிலிருந்து காய்ச்சலோ, பயமோ, எதுவாகினும் சுடலையின் அம்மாவின் சேலையை தன் பிள்ளைகள் அணைத்து உறங்கத் தருவது வழக்கம். எந்த தீயதும் மறைந்து தைரியம் பிறக்கும் என்று கொளஞ்சிக்கு ஒரு நம்பிக்கை.

தன் அப்பத்தாவின் சேலையை அணைத்தபடி படுத்திருந்த எழில், “ஏன் ஆத்தா, நாம எத்தன காலமா இப்புடிக் கையேந்தி சோறு திங்கிறோம்?” வரண்ட குரலில் கேட்டாள்.

“ஹூம்ம்” பெருமூச்சுடன் ஆரம்பித்தாள் கொளஞ்சி. “ஒம்பட அப்பத்தா செத்துப் போன நாளுல இருந்துதான் இந்த நெலம. நம்ம செல்வமெல்லாம் கொஞ்ச கொஞ்சமாக் கரஞ்சு, பஞ்சமும் புடிச்சு பேயா ஆட்ட, ஒன்னுமில்லாப் போகவுந்தேன் வயிறு வளக்கக் கை ஏந்த வேண்டியதாப் போயிடுச்சு. இந்த ஊருக்காரங்க வூட்டுப் பாத்திரத்தையும் இவுக கக்கூசயுங் கழுவுன பின்ன தான தாராங்க சோறு. அது கூலி தான்மா. எரந்து சாப்பிடறது ஆவாதுல்ல. ஆனா நமக்கு அந்த நெனப்பு வந்திடக் கூடாதுல்ல தாயீ. அதுனாலத்தேன் பகல் முழுக்க வேலய வாங்கிக்கிட்டு ராத்திரிக்கு பாத்திரத்த எடுத்திக்கிட்டு வர சொல்றது. அவுக தூக்கி வீசனும், நாம கையேந்தனும்.”

“அப்பத்தா எப்புடி இருக்கும்?”

“கே.பி சுந்தராம்பா மாதிரி மொகம். சுண்டினா இரத்தம் வந்திரும். அம்புட்டுச் செவப்பு. நீ அதுல பாதிதேன் செவப்புன்னா அப்பத்தா எம்புட்டு செவப்பா இருந்திருக்கும் பாரு!. ஒன் அண்ணன் பொறந்து ரெண்டு வருஷத்துல, அப்பத்தா செத்துப் போச்சி மாருல புத்து நோய் வந்து. அப்பொறம் நீ பொறந்தப்ப, செத்துப் போன என் ஆத்தா திரும்ப வந்துட்டான்னு உங்கய்யன் உனக்கு அப்பத்தா பேர வச்சது.”

“அப்பத்தா கொணம் எப்புடி?.”

“சிங்கம் மாதிரி. கவுரவம் புடிச்சது. எவனுக்குந் தல வணங்காது. நிமிந்துதேன் நடக்கும் தெருவுல கூட. ஒம்பட அப்புச்சி செத்தப்பக்கூட பெருசா கலங்கவே இல்லன்னா பாத்துக்க. தான் சோந்து நின்னா பெத்த பசங்க ரெண்டுங் கலங்கிப் போவுமுன்னு அப்புச்சி செத்த மூனா நாளே கலப்பைய எடுத்துக்கிட்டு நெலத்துக்குப் போயிடுச்சாம். நெலத்தவிட மாடு கன்னுனா உசுரு. ஒத்த பொம்பலயா அத்தன பசுவையுங் காளையையும் பாத்துக்கிச்சு.  எப்பயும் ஒம்பட அப்பத்தா இடுப்புல ஒரு சின்ன க‌த்‌தி வச்சிருக்கும். அது எதுக்குன்னு ஒன்ற அய்யன்ங்கிட்டக் கேட்டப்ப, ஒரு நாளு ஆல்பலத் தொணை இல்லாதவன்னு நெனச்சு ஊருல ஒருத்தன் உங்கப்பத்தா மேல கைவச்சுட்டானாம். வச்ச கைய வெட்டி சின்னமனூர் ஆத்துல வீசிட்டதா ஒன்ற அய்யன் சொல்லுச்சு.. ஆனா தங்க மனசுக்காரி. ஒதவின்னு கேட்டு வாரவங்களுக்கு இல்லைங்காம கையில இருக்கிறதக் குடுத்தனுப்பும். பொம்பலைங்க ஆல மரம் மாதிரி ஒரு குடும்பத்துக்குன்னு ஒன் அப்பத்தாயாவப் பாத்துத்தேன் நான் தெருஞ்சுக்கிட்டேன். விழுந்தாலும் வேரா தாங்கும் பூமி கணக்கா வாழ்ந்துச்சு. நல்ல மனுசிக்கு நெடுநாள் வாழக் குடுத்து வைக்கல. அதுபோன பின்ன, இருந்த சொத்த ரெண்டாப் பங்கிட்டாச்சு ஒம்பட அய்யனும் சின்னய்யனும். பஞ்சம் வந்த பூமி நம்ம குலத்தயே அழுச்சுடுச்சு. நம்ம போறாத காலம் ஒன்னுமில்லாம இப்புடி வாழ வேண்டியிருக்கு.”

பெருமூச்சுடன் சொல்லி முடித்துவிட்டு அசதியில் உறங்கிப் போனாள் கொளஞ்சி. தன் அப்பத்தாவைப் பற்றிக் கேட்டவுடன் தான் அவள் இன்று இசக்கிமுத்துவைத் தாக்கியது வீரச் செயல் என உணர்ந்தாள் எழில். அப்பத்தாவின் சேலையை அணைத்துக் கொண்டு உறங்கினாள்.

அன்றிலிருந்து அவள் இரவு இரவல் உணவிற்குச் செல்வதை நிறுத்திக் கொண்டது மட்டுமின்றி முத்தரசியையும் இரவலுக்குப் போகாமல் பார்த்துக் கொண்டாள்.

அவள் தந்தை கொண்டு வரும் காசில் கிடைக்கும் ஒரு வேளை உணவு மட்டுமே அவளது உடலை இயக்கப் போதுமானதாகப் பழக்கிக் கொண்டாள்.

வாழ்வின் தரம் உயரப் படிப்பே துணை என்று கண்டு கொண்டவள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்திப் படித்தாள்.

FN SOUZA

2.

அரிக்கேன் விளக்கின் ஒளி வீசிக் கொண்டிருந்தது குடிசையில். மெதுவாகத் தட்டியைத் திறந்து உள்ளே  சென்ற கொளஞ்சி படித்துக் கொண்டிருந்த எழிலிடம் தயங்கிக் கொண்டே,

“எழிலு, இந்தா அஞ்சுகம்மா பொடவ குடுத்திச்சி. நாளைக்கு  ஆபீசுக்குக் கட்டிக்கிட்டுப் போ.”என்று நீட்டினாள்.

“எனக்கு வேண்டாம் ஆத்தா. ரெண்டாக் கிழிச்சு முத்தரசிக்கு தாவணியாக் குடுத்திடு.”

“நாளைக்கு எதக் கட்டுவ?”

“சேல இருக்குது எனக்கு. நீ போய் பேசாம படு ஆத்தா” என்று விழிகளைப் பெரிதாக்கி அதட்டினாள்.

“அப்புடி முழிக்காத கண்ண விருச்சு. ஒங்கொப்பத்தாயவப் பாக்குற மாதிரியே இருக்குது.”

லேசாக உடல் குலுங்க சிரித்துவிட்டு, “ என்னயப் படிக்க வுடுறியா இல்லியா?” என்றாள் எழில்.

வாயை அடைத்துக் கொள்வது போல நடித்துக் கொண்டு வெளியேறினாள் கொளஞ்சி.

அரிக்கேன் விளக்கில் மண்ணெண்ணெய் தீரும் வரைப்  படித்தாள். பின்பு முத்தரசியை அணைத்துக் கொண்டு உறங்கினாள்.

மறுநாள் விடிந்ததும் சைக்கிள் பெல்லை அடித்துக் கொண்டே அவளது அண்ணன் ராசப்பன் குடிசை வாசலில் வந்து நின்றான். குடிசையின்  உள்ளிருந்து, “வரேன் அண்ணே” என்று குரல் கொடுத்தாள் எழில்.

வீட்டில் எல்லோருக்குள்ளும் ஒரு விதப் பதட்டம் நிலை கொண்டது. இன்று மிக முக்கியமான நாள். எழில் ஒரு மாத காலமாக செய்து வரும் தற்காலிக அரசுப் பணி, நிரந்தரம் ஆகுமா ஆகாதா என்று தீர்மானிக்கப்படவிருக்கும் நாள் இன்று. எழிலிற்கு மழைத்துளிகளைத் தாங்கி நிற்கும் கார்மேகம் போல இதயம் கனத்தது.

குடிசையை விட்டு வெளியே வந்தாள். வந்தவளைப் பார்த்து ஒரு கணம் அதிர்ந்து நின்றனர் கொளஞ்சியும் சுடலையும். எழில் கட்டியிருந்தது அவளது அப்பத்தாவின் நினைவாக இருந்த ஒரே புடவையை.

ஏதோ சொல்ல வந்தக் கொளஞ்சியைத் தடுத்த சுடலை,

“வா தாயீ” என்று எழிலை அழைத்து அவரது இடுப்பு வேட்டியில் இருந்த கருப்பண்ணன் கோவில் திருநீறை எடுத்து அவளது நெற்றியில் பூசி, “நல்லதே நடக்கும் உனக்கு. என் ஆத்தா எழில்விழியா ஒங்கூட எப்பியும் இருக்கா தொணையா.” என்று ஆசிர்வதித்தார்.

“அய்யா எனக்குந்தேன் இன்னிக்கிப் பரிட்ச்ச” என்று முத்தரசி நெற்றியைக் காட்டினாள். சிரித்துக்கொண்டே அவளுக்கும் திருநீறு பூசினார் சுடலை.

“சின்னப்புள்ளையில பயம் போக்க பொடவய அணச்சுக்கக் குடுத்தா அத இன்னைக்குக் கட்டிக்கிட்டே போறியா? செவப்புச் சேலையில ஒங்கப்பத்தாவ பாத்த மாதிரியே இருக்கு போ” என்று திருஷ்ட்டி எடுத்துக் கொண்டே “இந்தா இந்தக் கூழக் குடி ” என்று இருவருக்கும் கொளஞ்சி ராகிக் கூழைக் கொடுத்தாள்.

கூழைக் குடித்துவிட்டு தன் அண்ணனின் சைக்கிள் கேரியரில் பின்னாடி அமர்ந்து கொண்டாள் எழில். முன் கம்பியில் முத்தரசி ஏறிக்கொண்டாள். ராசப்பன் சைக்கிளை மிதிக்கத் துவங்கினான். மேடேறி அவர்களது பிம்பம் மறையும் வரைப் பார்த்து நின்றனர் கொளஞ்சியும் சுடலையும்.

3.

அவர்களது குடிசையில் இருந்து மெயின் ரோட்டிற்கு சென்றடைவதற்குள் நிறைய ஓட்டு வீடுகளும், தார்ஸ் வீடுகளும் சில மாடி வீடுகளும் காணலாம். ஒவ்வொரு வீட்டு மனிதர்களும் எழிலின் மனதில் பதித்தத் தடங்கள் ஏராளம். சில நினைவுகள் கடற்கரை மணலில் பதிந்தத் தடங்கள், சில புதைக்குழியில் சிக்கிய நினைவுகள் மடியும் வரை உடன் பயணிப்பவை.

குடிசையில் இருந்து பேருந்து நிறுத்தம் வரை ஒரு மைல் தூரப் பயணம். ஆனால் அந்த இடைவெளியில் இருக்கும் நினைவுகளோ எழிலிற்கு ஓராயிரம் மைல்கள் பயணம்.

எழிலின் குடிசை பள்ளத்தில் இருந்தது. மேடேறி வந்து முதல் வீட்டைக் கடக்கும் பொழுது, “மாஆஆஆஆஆஆ” என்று லட்சுமியின் குரல் கேட்டது.

“திரும்பாத சாமி. நம்மளக் கண்டா பின்னாடியே வந்துருவா” என்றான் ராசப்பன்.

லட்சுமி, எழிலின் வீட்டில் பிறந்து வளர்ந்த கன்று. வளர்ந்து பெரிய பசுவாகி விட்டது. கொளஞ்சியின் பராமரிப்பில் வளர்ந்த பசுவான கஸ்தூரி ஈன்ற இரண்டு கன்றுக்குட்டிகளில் ஒன்று.

காடு கரை என்று ஒரு ஐந்தரை ஏக்கர் நிலம் இருந்த பொழுது, கஸ்தூரியும் அது ஈன்ற முதல் காளையும் சேர்ந்து ஏர் உழுவ உதவியாக இருந்தது. கஸ்தூரிக்கு வயதான பின் அதைப் பராமரிக்கப் போதிய வசதி இல்லாததால் குன்னத்தூர் சந்தையில் ஐம்பது ரூபாய்க்கு விற்கப்பட்டது. கஸ்தூரியை விற்று விட்டு வந்த கொளஞ்சி, வீட்டில் இழவு விழுந்ததைப் போல் மார்பில் அடித்துக் கொண்டு அழுதாள். பசுவை விற்ற காசு தான் எழிலின் தட்டச்சுப் பயிற்சிக்கு உதவியாக இருந்தது.

வறுமை மேலும் அழுத்தக் கஸ்தூரி ஈன்ற இரு கன்றுகளில் முதல் கன்றும் சந்தையில் விற்கப்பட்டது. இரண்டாம் கன்றான லட்சுமி மேட்டு வீட்டில் விற்கப்பட்டது. அதை விற்ற நாளன்று விடிய விடிய, “மா, மா, மா” என்று அழைத்துக் கொண்டே இருந்தது லட்சுமி. பத்து தப்படி தூரம் தான் மேட்டுவீடு ஆகையால் லட்சுமியின் குரல் கொளஞ்சியின் நெஞ்சைப் பிளந்தது.

“இந்தப் பாவி வளத்த கன்ன, என் வூட்டு மகாலட்சுமிய வித்துப்போட்டனே. என்ன பாவஞ் செஞ்சேனோ வறுமை எங் குடும்பத்தப் பேயா புடுச்சு ஆட்டுதே” என்று கொளஞ்சி அழுதது எழிலிற்கு நினைவு வந்தது.

கன்றுக்குட்டி-லட்சுமியை விற்ற அன்று முத்தரசி சாப்பிடவே இல்லை. அவளை சமாதானம் செய்வது தான் பெரும்பாடாக இருந்தது. கொளஞ்சியோடு மல்லுக்கு நின்றாள்.“வரும்புடி இல்லன்னா பெத்த புள்ள என்னயும் வித்துப் போடுவியா?” என்று கத்த, கொளஞ்சியடம் இருந்து பலத்த ஒரு அடியை வாங்கிக் கொண்டு தான் அமைதியானாள். ஒரு வருடம் கழித்து முத்தரசி மேட்டுவீட்டுக்காரரிடம் சென்று தன் லட்சுமியைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லி மன்றாடினாள். “நீ வித்தக் கன்னுல்ல இப்போ இது. பசு மாடு. நாளு மடங்கா வளத்தி வச்சுருக்கேன். நாளு மடங்கு பணங் கொண்டு வா, பசுவத் தாரேன்” என்று விரட்டிவிடப்பட்டாள்.

மேட்டுவீட்டைத் தாண்டி எட்டடியில் உப்பிலியப்பனின் கடலைக்காய் காடு வந்தது. கடலைக் காடு செழித்தோங்கி காற்றில் நடனமாடிக் கொண்டிருந்தது. தன் அம்மா கொளஞ்சியோடு இந்தக் காட்டிற்கு வந்து வேலை செய்த நினைவுகள் என்றுமே எழிலின் சிந்தையில் செழித்திருக்கும். வார இறுதியில் கிடைக்கும் இரண்டு நாள் பள்ளி விடுமுறையை இக்காட்டில் கடலை உரித்துச் சம்பாதித்தாள். ஒரு வள்ளம் உரித்தால் இரண்டு பைசா கிடைக்கும். அந்தச் சின்ன வயதில் ஒரே நாளில் இருபது வள்ளம் உரிப்பாள் எழில்.

கடலைக்காடு தாண்டி முன்னேறிய போது சிறிது தூரத்தில் கோதை கண்ணில் பட்டாள். அவளது உருவம் அருகில் தென்படுவதற்குள் அவளோடு பயணித்த நாட்கள் ரயில் வேகத்தில் வந்து போனது எழிலிற்கு.

கருப்பண்ண நாடார் உயர்நிலைப் பள்ளியில் கோதையோடு ஒரே வகுப்பில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எழிலின் அருகில் வந்து அமரத் தயங்கிய பிள்ளைகளில் முதலில் கட்டவிழ்த்து வந்து அமர்ந்தவள் கோதை தான். எல்லோரும் உணவு அருந்தும் பொழுது எழிலின் வீட்டு உணவைத் தவிர மற்றவர்கள் உணவை ருசி பார்த்தார்கள். தைரியமாக எழிலின் டிபன் பாக்ஸ்ஸில் இருந்து உணவை எடுத்துப் புரட்சி செய்தது கோதை தான். ஏனோ எழிலை மிகவும் பிடித்தது கோதைக்கு. எழிலின் நிமிர்ந்த நடையும் அஞ்சாத விழிகளும் காரணமாக இருந்திருக்கலாம். “உனக்குப் பேரு சரியாத்தான்டி வச்சிருக்காங்க உன் அம்மா அப்பா, எழில்விழாயாளுன்னு. அந்தக் காளியாத்தா மாதிரி தான் இருக்கு ஒன் கண்ணு.”என்று கூறுவாள்.

பள்ளி முடிந்து வீடு வந்து சேர ஐந்து கி.மீ தூரம் நடக்க வேண்டும். எழிலும் கோதையும் பேசிக் கொண்டே நடந்து வருவார்கள். அவர்களுக்கு முன் அதே பள்ளியில் படித்த கோதையின் இருவயது மூத்த அண்ணன் கோவிந்தன், அவனது நண்பர்களோடு பேசிக் கொண்டே செல்வான். ஒருமுறை கூட அவனது முகத்தை ஏறிட்டுப் பார்த்ததில்லை எழில். அவனது குரல் மட்டுமே பதிந்திருந்தது அவளது மனதில்.

கோதையின் வீட்டைக் கடந்துதான் எழிலின் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.”எழிலு, வா எங்க வீட்டுக்கு” என்று பலமுறை அழைத்திருக்கிறாள் கோதை. எழிலுக்கோ கோதையின் வீட்டிற்குச் செல்ல மனம் ஒத்துழைத்ததே இல்லை. காரணம் கோதையின் அம்மா வீட்டு வாசலில் நின்றபடி, எழிலை நெட்டித் தள்ளுவதைப் போலப் பார்வையை வைத்திருப்பாள். ஏதாவது சாக்கு சொல்லித் தப்பித்துக் கொள்வாள் எழில்.

இப்படியே இரண்டு வருடங்கள் ஓடியது. கோதையின் அண்ணன் கோவிந்தனும் பி.யூ.சி படிக்கக் கல்லூரியில் சேர்ந்தான். தினமும் கண் முன்னே நடப்பவன் இல்லாமல் போனது வருத்தமாக இருந்தது எழிலுக்கு. ஏதோ இழந்துவிட்டதைப் போல உணர்வு கொண்டாள். நாளுக்கு நாள் அவ்வுணர்வு மெருகேற ஏனோ எழிலுக்கு அவனைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. முதன்முதல் தன் இளமையின் அடையாளத்தைக் காட்டத் துளிர் விட்ட அந்த ஈர்ப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை எழிலினால்.

பள்ளி முடிந்து ஒருநாள் வீடு செல்லும் பொழுது கோதை அழைத்தாள், “இன்னைக்காவது வந்து தொலையேன்” என்று. திண்ணையில் கோவிந்தன் படித்துக் கொண்டிருந்தான். அவனது முகத்தை இன்று முழுதாகப் பார்த்திட வேண்டும் என்ற ஆசையில் சம்மதித்தாள். கேட்டைத் தாண்டி வாசலில் நடக்கும் பொழுது அவளது இதயத் துடிப்பு அவளது செவி வரைக் கேட்டது. கோவிந்தனோ புத்தகத்துக்குள் முகத்தை வைத்திருந்தான். அவன் கையில் இருந்த புத்தகத்தையே பார்த்துக் கொண்டு வந்தாள் எழில்.

“யாரு அது?” என்று ஓர் கனீர் குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினாள்.

“என் ப்ரெண்டு மா, எழில்.” என்றாள் கோதை.

யாரென்று கண்டு கொண்ட கோதையின் அம்மா,

“ஓ..  வா எழிலு” என்று வரவேற்றுவிட்டு, “பின் பக்கம் கூட்டிட்டுப் போ” என்று கோதையைப் பணித்தாள்.

இதை சற்றும் எதிர்பாராத கோதை, செய்வதறியாது தயங்கி நின்றாள்.

“பரவாயில்ல கோத, எல்லா வீட்டுலயும் பின் பக்கம் தான் எங்களுக்கு வாசல்” என்றாள் எழில்.

இருவரும் சிறிது நேரம் வீட்டுப் பாடம் செய்துவிட்டு விளையாடினார்கள். பின்பு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

“டே கோவிந்தா, இந்தக் காப்பியக் கொண்டு போயி தோதைக்கும், எழிலுக்கும் குடு” என்று கோதையின் அம்மாவின் குரல் கேட்டது.

சில மணித்துளிகளில் கோவிந்தன் அவள் முன் வரப்போவதை எண்ணி எழிலின் மனம் இனம் புரியாத இன்பத்தால் கனத்தது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி காப்பியை வாங்கும் பொழுது அவனது முகத்தை நன்றாகப் பார்த்திட வேண்டும் என்று உறுதி பூண்டாள்.

முதலில் அவனது பாதங்கள் அவளை நோக்கி வருவது கண்டாள். மாநிறமாக இருக்க வேண்டும் அவன் மேனி என்று நினைத்தாள். கருப்பு நிறக் கால்சட்டை. அவனுக்கே தைத்தது போல் கச்சிதமாக இருக்கிறது என்று ரசித்தாள். மேல் சட்டையில் பாதி தென்படும் பொழுது கருப்புக்கேற்ற நீலம் எனப் பொருத்திப் பார்த்தாள். இடுப்பின் அருகில் அவனது கரங்கள் ஆவி பறக்க இரு எவர்சில்வர் டம்பளர்களைத் தாங்கி இருந்தன.

“இந்தா கோத” என்று அதில் ஒரு டம்ளர் கோதையிடம் செல்வது கண்டாள்.

பின்பு அனிச்சையாக எழிலின் கைகள் மற்றொரு டம்ளரை வாங்க நீண்டது.

விழிகளைச் சற்று உயர்த்த முற்படும் பொழுது,

“நீ் அந்தத் தேங்காத் தொட்டிய எடு. அதுல ஊத்துறேன்” என்றான் கோவிந்தன்.

எது எதையோ பொருத்தம் பார்த்த எழிலின் மனம் எப்படி சாதியை மறந்தது எனத் தெரியவில்லையே என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். தான் இருப்பது கொல்லப் பக்கம் என்ற தெளிவு வரவே, துளிர் விட்ட மொட்டு காற்றின் விசையால் மண்ணில் விழுந்தது போல் ஆனாள் எழில். காப்பியை வாங்காமலேயே கோதையின் வீட்டை விட்டு புத்தகப் பையோடு வெளியேறினாள். கோவிந்தனின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதற்குப் பிறகு எழிலுக்கு எழவேயில்லை. கோதையும் அந்நிகழ்விற்குப் பிறகு தன் வீட்டிற்குக் எழிலை அழைப்பதுமில்லை.

பல வருடங்கள் கழித்துக் கண்ட கோதையின் உருவம் எழிலின் பார்வைக்குள் வந்தது. புன்னகையை மட்டும் பரிமாறிக் கொண்டு விடைபெற்றார்கள்.

கோதையின் வீட்டைக் கடந்த சில நிமிடங்களில்,

“அய்யோ! சாமி!” என்று சைக்கிளை நிறுத்தினான் ராசப்பன்.

“என்ன அண்ணே?” என்று கேட்டாள் முத்தரசி.

“சாமிகளா, எறங்குங்க ரெண்டு பேரும். கவுண்டன்மாருங்க ஒரு கூட்டமா வாராங்க.” என்றான் பதட்டத்தோடு.

அந்தக் கூட்டத்தில் இசக்கிமுத்துவும் இருந்தான். அவனைக் கண்ட பொழுது, எழிலின் மஞ்சள் மேனி சிவப்பாக மாறியது. சைக்கிளில் இருந்து இறங்கிய ராசப்பன், தன் பட்டாப்பட்டி ட்ரவுசர் தெரியக் கட்டியிருந்த வேட்டியை இறக்கினான். தலையில் இருந்த துண்டு இடுப்பிற்கு இடம் மாறியது.. கால் செருப்பைக் கழற்றி சைக்கிள் கேரியரில் வைத்துவிட்டு தலையைக் கவிழ்த்தி நடந்தான்.

ஆனால் எழிலோ நிமிர்ந்த தலையை ஒரு இம்மி அளவு கூட இறக்காமல் நேராக நடந்தாள். இவர்களைக் கடந்து செல்லும் போது கூட்டத்தில் இருந்த இசக்கிமுத்து அலட்சியமாகப் பார்த்தான். ஏதோ சொல்ல வாய் எடுத்தவன் , வெகுண்டெழக் காத்திருக்கும் வண்ணம் எழிலின் கண்கள் விரிவதைக் கண்டான். உக்கிரம் கொண்ட சூரியனின் கதிர் வீச்சு போல இருந்தது அவளது சிவந்த விழிகள். எழிலின் கைகள் சைக்கிள் கேரியரில் இருந்த அவளது அண்ணனின் செருப்பை எடுக்கச் செல்வது கண்டு, திறந்த வாயை மூடிக் கொண்டு தலையைக் கவிழ்த்துக் கொண்டான். இடது கையில் இருந்த தழும்பைத் தடவியவாறு அவனது வழியில் நடந்தான்.

அவர்கள் கடந்ததும் மீண்டும் சைக்கிள் பயணம் தொடர்ந்தது. பேருந்து நிறுத்தத்திற்கு வரவும், எழில் பயணிக்க வேண்டிய பேருந்தும் வந்து சேர்ந்தது. பதட்டமாக ராசப்பனையும் முத்தரசியையும் பார்த்தாள் எழில்.

“எல்லாம் நல்லபடியா நடக்குஞ் சாமி” என்று தைரியம் கொடுத்தான் ராசப்பன்.

“அப்பத்தா சேல உனக்கு நெம்ப அழகா இருக்குது கா” என்றாள் முத்தரசி.

“பரிட்ச்சை நல்லா எழுதோனும்” என்று கூறி அவளை அணைத்து ஒரு முத்தம் கொடுத்துவிட்டுப் பேருந்தில் ஏறி காலியாக இருந்த ஓர் இருக்கையில் அமர்ந்து  கொண்டாள். பிறந்ததில் இருந்து எழிலையும் முத்தரசியையும், தோள் மீது தூக்கிச் சுமந்தான் ராசப்பன். இருவரையுமே அவர்களது பெயரிட்டு ஒரு நாளும் அழைத்ததாக எழிலுக்கு நினைவே இல்லை. எப்போதும் ‘சாமி’ என்று தான் அழைப்பான் . ராசப்பனுக்குத் திருமணமாகி அவன் தனிக் குடித்தனம் போன பொழுது எழிலிற்கு அந்த இடைவெளியைப் பழக்கப்படுத்திக் கொள்ள நீண்ட நாட்கள் எடுத்தது.

‘எங்கே போக வேண்டும்’ என்று கேட்காமலேயே நடந்துனர் பயணச் சீட்டைக் கொடுத்து காசை வாங்கிக் கொண்டார். ஏனெனில் ஒரு மாத காலமாக எழில் இறங்குவது ஒரே நிறுத்தத்தில் தான். தற்காலிகத் தேர்தல் பணிக்காக தேர்வாகி இன்றோடு ஒரு மாதம் முடிகிறது. தேர்தலும் முடிந்து எம்ஜிஆர் அவர்களும் ஆட்சி பீடம் ஏறியும் ஆகிவிட்டது. இன்று வேலை நிரந்தரம் ஆக்கப்படுமா இல்லையா என்பது முடிவாகும் நாள் எழிலிற்கு.

தட்டச்சுப் பயிற்ச்சியில் முதலாம் தரத்தில் தேர்ச்சி பெற்றதன் விளைவாக தற்காலிகத் தேர்தல் வேலை கிடைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து அரசாங்க வேலைக்கான தேர்விலும் தரம் ஒன்றில் வென்றதால் தற்காலிகமாக தட்டச்சர் வேலையும் கிடைத்தது. வேலை நிரந்தரம் ஆக வேண்டுமெனில் ஒரு மாதம் பணிபுரிந்த பின் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும். இந்த ஒரு மாத காலமும் ஏதோ போர்க்களத்தில் இருப்பதைப் போல இருந்தது எழிலிற்கு. தனக்கு மேலதிகாரியான சிவப்பிரகாசம் எழிலின் சாதிப் பெயரைச் சொல்லி அவளைக் காயப் படுத்திக் கொண்டே இருந்தான். தினமும் உணவை விடவும் அதிகமாக அவமானங்களைத் தின்றவளுக்கு அது பெரிதாகத் தெரியவில்லை. மன திடம் குறையாமல் அயராது உழைத்தாள். ஐந்து பேர் செய்யும் வேலையை ஒரே ஆளாக செய்ய வேண்டுமென எழிலிற்கு கோப்புகளைக் கொடுத்தான் சிவப்பிரகாசம். ஒரே நாளில் இருபது வள்ளம் கடலைக்காய் உரித்தவளுக்கு இது ஒன்றும் பெரிதல்ல என்று காட்டினாள். எல்லா பலப் பரிட்சையையும் வெற்றிகரமாக கடந்துவிட்டவளுக்கு இன்று முடிவு என்ன என்று தெரியப்போகும் நாள்.

தன் அப்பத்தாவின் சேலையைக் கவசமென உடுத்திக் கொண்டவள் வந்திறங்கினாள் தனது அலுவலகத்தின் முன். உள்ளே நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தவளுக்கு வியர்த்துக் கொட்டியது. முந்தானையில் துடைத்துக் கொண்டு தண்ணீர் குடிக்கச் சென்றவளைப் பார்த்து சிவபிரகாசம், “ சாக்கடையில பொறள்ற நாய்ங்க எல்லாம் சரி சமமா நடமாடுதுங்க. ச்சை” என்றான்.

ஒரு மாத காலம் பொறுத்தவளால் இக்கணத்தைத் தாங்க முடியவில்லை. தண்ணீர் கேன் பக்கத்தில் இருந்த மேஜை மேல் இருந்த ரூலர் அவள் கண்ணில் பட்டது. ரூலர் என்றால் லெட்ஜர்களில் கோடு போடப் பயன்படுத்தப் படும் உருட்டுக் கட்டை அது. ஒரு கிலோ எடையாவது இருக்கும். சிவப்பிரகாசத்தின் வசை வார்த்தைகள் எல்லையற்று வந்து கொண்டிருந்தன. ரூலரை கையில் எடுத்துக் கொண்டாள். ஆவேசமாக விழிகளை விரித்துக் கொண்டு சிவபிரகாசத்தை நோக்கிச் சென்று ரூலரை ஓங்கும் பொழுது, ஆபீஸ் ப்யூன் வந்து அழைத்தான். “டைபிஸ்ட் மேடம். உங்கள மேனேஜர் கூப்பிடுறாங்க” என்று. அங்ஙனம் எழில்விழியாளின் விரிந்த சிவந்த கண்களைக் கண்டு பயந்து போனார் ப்யூன். ஓங்கிய ரூலரை தரையில் வீசிவிட்டு அமைதியாக மேனேஜர் அறைக்குச் சென்றாள். பயத்தில் நெஞ்சைப் பிடித்து அமர்ந்திருந்த சிவப்பிரகாசம் “யாரும் என்னன்னு கேக்க மாட்டீங்களா? நான் போலீஸ் கம்பளயன்ட் தரப் போறேன்.” என்று கத்தினான்.

இதைக் கேட்ட ஆபீஸ் ப்யூன், “ சார் சும்மா கத்தாதீங்க. போலீஸூக்குப் போனா நீங்க தான் கம்பி எண்ணனும், சாதியப் பத்திப் பேசி அவமானப் படுத்தினதுக்கு. சும்மா அமைதியா இருங்க சார்.” என்றான்.

அரைமணி நேரம் கழித்து வெளியே வந்தாள் எழில். வந்தவள் கையில் வேலை உறுதியான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரும், அன்றைய மாத ஊதியமான 250ரூபாய் கொண்ட உறையும் இருந்தது. ப்யூனிடம் ஒரு வேலையை செய்யச் சொல்லி பணித்துவிட்டு, சிவப்பிரகாசத்தைத் தாண்டி ஐந்து இருக்கைகள் கடந்து காலியாக இருந்த ஆறாம் இருக்கையில் அமர்ந்தாள்.

சிவப்பிரகாசத்தின் மேஜை மேல் இருந்த அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரை ப்யூன் கையில் எடுத்தார்.

“யோவ், அத எங்க கொண்டு போற. நான் இன்னும் சைன் போடல” என்றான்.

“சார். எழில் மேடமுக்கு போஸ்டிங் பர்மனென்ட் ஆயுடுச்சு. பர்ஸ்ட் க்லாஸ்ல பாஸ் பண்ணிருக்காங்க. அசிஸ்டன்ட் மேனேஜர் சார் இன்னைல இருந்து. எல்லாரோட வர்க் ரிபோர்ட்ஸூம் டைரக்ட்டா அவங்க டேபிலுக்கு தான் போகனும். அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டர் ஒன்பது மணிக்கு மேல, அவங்க டேபிள்ல இருக்கனும். ஆபீஸூக்கு லேட்டா வரவங்க அவங்க டேபிள்ல போய் சைன் போடனும். மணி பத்து ஆயுடுச்சு, நீங்க அவங்க டேபிள்ல வந்து சைன போடுங்க. எதுக்கு வம்பு” என்றார்.

சிவப்பிரகாசம் கோபமும் அவமானமும் ஒரு சேர தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தான்.

4.

சாயுங்காலம் வேலை முடிந்து தன் ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டாள். தன் அப்பத்தாவின் சேலை முந்தானையைப் பிடித்துக் கொண்டு புன்னகைத்தாள். அப்பொழுது “துர்காதேவி தியேட்டர் எறங்குங்க” என்று நடத்துனர் கத்தினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் படம் “முதல் மரியாதை” திரையிடப் பட்டிருந்தது.

தன் அம்மாவோடு ஒரு தியேட்டருக்கு சென்ற நியாபகம் வந்தது எழிலுக்கு. கொளஞ்சிக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றால் உயிர். சம்பூரண ராமாயணம் படம் பார்த்தாக வேண்டும் என்று எழிலை நச்சரித்தாள். சுடலைக்கோ சினிமா என்றால் ஆகாது. எழிலுக்கோ அடுத்த நாள் தட்டச்சுப் பரிட்சை இருந்தது. சுடலையும் அன்று வியாபாரத்திற்காகப் பக்கத்து ஊருக்குச் சென்றுவிட கொளஞ்சிக்கு இருப்புக் கொள்ளவில்லை. காய்ச்சலோடு கிடந்த முத்தரசியையும் விடாமல் இழுத்துக் கொண்டு இரண்டாம் ஆட்டம் பார்க்க இழுத்துச் சென்றுவிட்டாள். கால் பாகம் தான் படம் தாண்டி இருக்கும். எழிலுக்கோ தூக்கம் விழிகளைக் கவ்வியது. எழில் பொறுக்க முடியாமல் இடைவெளி விட்டதும் தியேட்டரில் இருந்து கொளஞ்சியை இழுத்துக் கொண்டு வந்து விட்டாள். வீடு வந்து சேரும் வரை எழிலோடு வாக்குவாதம் செய்துகொண்டே வந்தாள் கொளஞ்சி. “நீ ஒங்கப்பன விட கொடுமக்காரி. என் ராசா சிவாஜி படத்த பாக்க வுடமா இப்படி இழுத்தக்கிட்டு வாரியே. யெரக்கம் இருக்கா ஒன் நெஞ்சுல துளியாவது. வீம்பு புடுச்சக் கழுத. சரியாத்தான் வெச்சான் உனக்கு ஒம்பட அய்யன் ஒங்கொப்பத்தாயா பேர. அதே வீம்பு அதே வீராப்பு. இன்னைக்குத்தேன் கடைசி நாளு. படம் போயிடும். இனி நான் எப்போ பாப்பேன்” என்று புலம்பிய வார்த்தைகளை எண்ணிப் பார்க்க சிரிப்பாக வந்தது எழிலிற்கு.

என்றாவது கொளஞ்சியை சினாமாவிற்குக் கூட்டி வர வேண்டும் என்று நினைத்தாள். அதற்கு முன்பு செய்ய வேண்டிய வேலை ஒன்று இருக்கிறது என்று தன் ஊதியம் தாங்கிய உறையைத் தொட்டுப்பார்த்துக் கொண்டாள். தன் ஊர் வந்ததும் இறங்கினாள்.

கருப்பு குரைத்துக் கொண்டிருந்தான். மங்களான மஞ்சள் ஒளியில் கொளஞ்சி நின்றிருந்தாள் தெருவைப் பார்த்தபடி.

வெளியே வந்த அஞ்சுகம், “ என்ன கொளஞ்சி இந்நேரத்துல நின்னுட்டு தெருவயே பாத்துட்டு இருக்க?” என்று கேட்டாள்.

“இன்னும் எழிலு வந்து சேரலமா வீட்டுக்கு. இந்நேரம் ஆகாது எப்பியும். இருட்டிப் போயிடுச்சு. அதேன் வெசனமா இருக்குது” என்றாள் தெருவழியைப் பார்த்தபடி.

அஞ்சலை பேச முற்படும் பொழுது,

“மாஆஆஆஆஆஆஆஆ” என்று பரிச்சயமான ஒரு குரல் கேட்டது. தொடர்ந்து, “அம்மாஆஆஆஆஆஆஆ” என்று எழிலின் குரலும் கேட்டது. இரு வேறு குரல்களும் மாறி மாறி அருகில் ஒலித்துக் கொண்டே வெளிச்சத்திற்கு வந்தனர் குரலுக்குச் சொந்தமானவர்கள்.

“என் குல சாமி” என்று ஓடினாள் கொளஞ்சி எழில்விழியாளையும், அவளது கையில் இருந்த கயிற்றின் மறுமுனையில் தன் வீட்டு மாடான லட்சுமியையும் கண்டு…


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.