ஜொராஸ்ட்ரியனிசம்

மத்தியாசியாவில் ஜொராஸ்ட்ரியனிசமும் இஸ்லாமும்

ஆண்ட்ரூ டி. மேக்னுஸன் உடன் ஓர் உரையாடல்

ஆண்ட்ரூ டி. மேக்னுஸன் Univercity of Central Oklahoma பல்கலைக்கழகத்தில் இஸ்லாம் மற்றும் மத்திய கிழக்கு வரலாறு எனும் துறையில் இணைப் பேராசிரியராக கடமையாற்றுபவர். சாண்டா பார்பராவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றார். அவரது முதல் புத்தகம், Zoroastrians in Early Islamic History: Accommodation and Memory, 2023 இல் Edinburgh University Press மூலம் வெளியிடப்பட்டது. இஸ்லாமிய வரலாறு, ஈரானில் பாரசீக அடையாளத்தின் வளர்ச்சி (945-1055 CE), ஜொராஸ்ட்ரியனிசம் போன்றவை அவரது ஆராய்ச்சிப் புலங்களாக உள்ளன. மேக்னுஸன் மத்திய மேற்குலக வரலாற்று நிறுவனத்தின் (The Midwest World History Association) துணைத் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

voicesoncentralasia.org எனும் இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய நேர்காணலின் தமிழ் வடிவம் இது.  இந்த நேர்காணலில், ஆண்ட்ரூ டி. மேக்னுஸன் ஜொராஸ்ட்ரியனிசத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான தொடர்புகளையும், நெகிழ்வுத்தன்மையையும் விபரிக்கிறார். ஜொராஸ்ட்ரியனிசம் ஏனைய மதங்களில் ஏற்படுத்திய தாக்கங்களையும், அதன் இன்றைய நிலைமையையும் கூட இந்நேர்காணலில் எடுத்துக்கூறுகிறார். 

தமிழாக்கம் : ஜிஃப்ரி ஹாசன்

கே: Zoroastrians in Early Islamic History: Accommodation and Memory எனும் உங்கள் புத்தகத்தில், இஸ்லாமிய சமூகத்தில் ஜொராஸ்ட்ரியர்களின் உள்ளடக்கம் மற்றும் வெளியேற்றம் (inclusion and exclusion) பற்றி நீங்கள் வரலாற்று ரீதியாக ஆய்வு செய்கிறீர்கள். ஜொராஸ்ட்ரியர்களுக்கும் பண்டைய முஸ்லிம்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் அல்லது ஒற்றுமைகள் என்ன? உங்கள் கண்டுபிடிப்புகளின்படி, ஜொராஸ்ட்ரியர்கள் என்போர் உண்மையில் யார், அவர்கள் ஏன் இத்தகைய நீடித்த மரபைக் கொண்டிருந்தனர்? 

ப: ஜொராஸ்ட்ரியனிசம் என்பது, கிரேக்க மொழியில் ‘ஸொராஸ்டர்’ (Ζωροάστηρ) அல்லது பாரசீக மொழியில் ‘ஜராதுஸ்ட்ரா’ என அழைக்கப்படும் ஒரு தீர்க்கதரிசி மீதான ஏற்பை மையமாகக் கொண்ட மத நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்கும் குழுவினரைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் நவீன சொல்லாகும்.

‘ஸொராஸ்டர்’ மத்திய ஆசியாவில் வாழ்ந்த ஒரு தீர்க்கதரிசி. பெரும்பாலும் பால்க் (Balkh) அதாவது- இன்றைய ஆப்கானிஸ்தானில் உள்ள மஸார்-ஏ- ஷெரீஃப் அருகே வாழ்ந்தவர். ஜொராஸ்டரின் காலத்தை தீர்மானிப்பது சற்று கடினம்- கி. மு. 1800 க்கு முற்பட்டதாக அல்லது கி. மு. 1200 க்கு மிக சமீபமாக இருக்கலாம். ஆனால் எப்படியிருந்தாலும், ஜொராஸ்டர் ஒரு இந்தோ-ஐரோப்பிய புரோகிதர் ஆவார். அவர் அஹுரா மஸ்டாவை (Ahura Mazda) வணங்குமாறு மக்களைப் போதித்தார். அந்தக் காலப்பகுதியில் மத்திய ஆசியர்கள் பலவிதமான பெண் தெய்வங்களையும், பேய் உருவங்களையுமே ஒப்புக்கொண்டிருந்தனர். ஆனால் ஜொராஸ்டர் அஹுரா மஸ்டா மீது மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும் என்கிற இந்த செய்தியை கொண்டுவந்தார். அஹுரா மஸ்டா, இருளின் சக்தியாகவும், தீமையின் உருவமாகவும் இருந்த அஹ்ரிமானை (Ahriman) எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார் என்றும் அவர் போதித்தார். அஹுரா மஸ்டாவை வழிபடும் மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்குபெற முடியும். அதாவது அவர்கள் தங்கள் வாழ்க்கையில் தூய்மையைக் கடைப்பிடிப்பதன் மூலம் அஹ்ரிமானைப் பலவீனப்படுத்தலாம். இந்தத் தூய்மை என்பது கழுவித்துப்பரவாக இருத்தல் என்கிற பௌதீக அர்த்தத்தை மட்டுமல்ல, அஹுரா மஸ்டாவின் போதனைகளுக்கு இணங்கக்கூடிய அறம் சார்ந்த நடத்தையைக் கடைப்பிடித்து ஒழுகுதல் என்கிற கருத்தையும் அது குறிக்கிறது. இந்த தூய்மையை சடங்குகள் அல்லது வழிபாடுகளை நடத்துகிற மகி (Magi) என்று அறியப்படுகிற புரோகிதர் வகுப்பினருடன் (ஜொராஸ்டர் இந்த புரோகிதர் வகுப்பில் உறுப்பினராக இருந்தார்) இணைப்பதன் மூலம் பராமரிக்க முடியும். இந்த வழிபாட்டு முறைகள் பாடல்களாக இருந்தன. பின்னர் அவை சேகரிக்கப்பட்டு இன்று அவெஸ்டா (Avesta) என்று அறியப்படுகிற ஒரு புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. அவெஸ்டா என்பது ஜொராஸ்ட்ரியன் சமய நூலின் ஒரு வகையாகும்.

ஜொராஸ்ட்ரியர்கள் இந்த சடங்கு விழாக்களை செய்வதற்காக மகிகளுக்கு வணக்கஸ்தலங்களை நிர்மாணித்துக் கொடுத்தனர். அவை ஆங்கிலத்தில் ‘fire temples’ (தீக் கோயில்கள்) என அழைக்கப்பட்டன. மூன்றாம் நூற்றாண்டில், சசானிய பாரசீகப் பேரரசு ஜொராஸ்ட்ரியனிசத்தை அதன் அதிகாரபூர்வ மதமாக மாற்றியபோதே உண்மையில் அது ஒரு மதமாக நிறுவப்பட்டது என்று சொல்வேன். அதற்கு முன், இது பாரசீக மற்றும் பிற பேரரசர்களின் அதிகாரப்பூர்வ மதமாக இருந்திருக்கலாம். ஆனால் அது உத்தியோகபூர்வ அரச மதமாக மாறிய பின்னர்தான் பரவத் தொடங்கியது. அநேகமாக, அது துருக்கியில் இருந்து சீனா வரை- உறுதியாக மத்திய கிழக்கில், ஆர்மீனியா போன்ற இடங்களிலிருந்து யெமன் வரை பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்தது என்பதை நாங்கள் அறிவோம். எனவே இது சிறந்த உலக மதங்களில் ஒன்றாகவும், உலக வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் உள்ளது. ஆனால் இது இன்று நன்கு அறியப்படவில்லை. காரணம், ஜொராஸ்ட்ரியர்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக கணிசமாகக் குறைந்து வருகிறது. உண்மையில் இந்த சரிவுக்கான காரணமே, இந்த ஆராய்ச்சியில் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்திய மர்மங்களுள் ஒன்றாகும். பண்டைக் காலத்தில் ஜொராஸ்ட்ரியனிசம் மிகவும் செல்வாக்குடன் விளங்கியது என்பதை நாம் அறிவோம். நவீன காலங்களில் ஒப்பீட்டளவில் வெகுசில ஜொராஸ்ட்ரியர்களே இருந்தனர். அதனால், இடைக்காலத்தில் அவர்களுக்கு என்ன நடந்தது? இதைத்தான் என் ஆய்வு கவனங்கொள்கிறது. இந்த இடைக் காலத்தில் ஜொராஸ்ட்ரியர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி பல்வேறு கற்பிதங்களும் அனுமானங்களும் நிலவுகின்றன. இந்நிலையில், மூலாதாரங்களில் இருந்து பெறப்பட்ட உண்மையான தரவுகளைக் கொண்டு அத்தகைய ஓட்டைகள் சிலவற்றை அடைக்கவே எனது ஆய்வில் முயன்றிருக்கிறேன். ஜொராஸ்ட்ரியனிசம் பற்றிய ஆய்வில் வரும் ஒரு சுவாரஸ்யமான விசயம் அது ஒரு கடவுளை நம்பும் ஏகத்துவ மதமா அல்லது இரு கடவுள்களை நம்பும் இருமை மதமா (dualistic religion) என்பதை அறிந்துகொள்வதுதான். ஏனெனில் அஹுரா மஸ்டா மற்றும் அஹ்ரிமான் என இரு சக்திகள் அங்கு இருந்திருக்கின்றன. எனவே ஜொராஸ்ட்ரியனிசத்தைப் படிப்பதில் வேடிக்கையானதும், கடினமானதுமான பகுதிகளில் ஒன்றாக அதனை ஏகத்துவமா, இருமைவாதமா அல்லது பலதெய்வமா? என்று வகைப்படுத்துவதையே நான் பார்க்கிறேன். இன்று பெரும்பாலான ஜொராஸ்ட்ரியர்கள் தங்களை ஏகத்துவவாதிகளாக கருதுகிறார்கள் என்று நான் கூறுவேன். இது கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் என்று நான் நினைக்கிறேன். 

இஸ்லாம் வெளிப்படையாக ஏழாம் நூற்றாண்டில் அரேபியாவில் முகம்மது நபியுடன் தொடங்கியது. அவர் கடவுள் ஒருவரே என்ற கருத்தைப் பிரசங்கித்தார். இது ஒரு வகையில், அஹுரா மஸ்டாவே வணங்குவதற்கான ஒரே தெய்வம் என்ற ஜொராஸ்டரின் செய்தியைப் போன்றதுதான். நபிகள் நாயகம் அரேபிய மொழியிலான வெளிப்பாடுகள் (வஹி) அல்லது பாராயணங்களின் வரிசையை வழங்கினார். பின்னர் அவை குர்ஆன் என்ற வேதநூலாக தொகுக்கப்பட்டன. முகம்மது நபி கொண்டு வந்த இந்தச் செய்தி அவர் தனது அரசியல் அதிகாரத்தை முதலில் நிறுவிய மதீனாவில் இருந்து மிக விரைவாகப் பரவியது. தனது செய்தியை அவர் முதலில் பரப்புவதற்கு முயற்சி எடுத்து வெற்றிபெற முடியாமல் போன அவரது சொந்த இடமான மக்காவைக் கைப்பற்றி அவர் தனது அரசியல் அதிகாரத்தை ஆழமாக நிறுவினார். இறுதியில், முகம்மது நபி அரேபியாவின் பெரும் அரசியல் தலைவராக ஆனார். ஆனால் அவரது மரணத்திற்குப் பிறகு, முஸ்லிம்கள் அடுத்து என்ன செய்வது என்று திணறினர். 

முகம்மது நபி பொதுவாக கடைசி தீர்க்கதரிசியாக அங்கீகரிக்கப்பட்டார். எனவே அவரது மரணத்திற்குப் பிறகு அவரது அரசியல் அதிகாரத்தின் நிலை குறித்து சில கேள்விகள் எழுந்தன. அது ஒரு கலீஃபாவை-முகம்மதுவின் வாரிசாக மாற்ற முனைந்தது. பின்னர் அந்த கலீஃபாக்கள் வட ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா முழுவதும் இஸ்லாத்தை பரப்பினர். ஜொராஸ்ட்ரியனிசத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான சில ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளைப் பார்த்தால், தீர்க்கதரிசிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.  முஸ்லிம்கள் முகம்மது நபியை கடைசி தீர்க்கதரிசியாக அங்கீகரிக்கின்றனர். ஆனால் ஜொராஸ்டரை தீர்க்கதரிசியாக அவர்கள் அங்கீகரிக்கவில்லை. வெவ்வேறு வேத மரபுகள் உள்ளன: முஸ்லிம்கள் பொதுவாக யூத மக்களையும் கிறிஸ்தவ மக்களையும் முறையான வேத புத்தகங்களைக் கொண்டிருப்பதாக அங்கீகரிக்கின்றனர். அதேசமயம் ஜொராஸ்ட்ரியர்களிடமும் அவெஸ்டா என்ற புத்தகம் உள்ளது. ஆனால் அதனை ஒரு முறையான வேதப் புத்தகமாக முஸ்லிம்கள் அங்கீகரிப்பதில்லை. 

இஸ்லாத்திற்கும் ஜொராஸ்ட்ரியனிசத்திற்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் ஒற்றுமையாக அங்கீகரிக்கப்படவில்லை. முரண்நகையாக, அவை பெரும்பாலும் வித்தியாசங்களாக வலியுறுத்தப்படுகின்றன.

ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்றைப் பார்த்தால், ஒரு நீண்ட கால அடிப்படையில், மத்திய கிழக்கிலோ அல்லது வேறு எங்கிலுமோ முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கவில்லை. மிகத் தொடக்கத்தில், அவர்கள் மற்ற மதங்களுடனே அதிக தொடர்புகளைக் கொண்டிருந்தனர் என்று நினைக்கிறேன்-உதாரணமாக, யூதர்கள் அதிகம் இருந்த அரேபியாவில் இஸ்லாம் தொடங்கியதனால் அவர்களுடன் சில ஊடாட்டங்கள் இருந்தன. சில குழப்பங்களும், பிரச்சனைகளும் கூட இருந்தன. கிறித்தவத்துடனும் இத்தகைய தொடர்பு இருந்தது. இஸ்லாம் அடிப்படையிலேயே கிறிஸ்த்தவத்திலிருந்து வேறுபட்டது என்று நினைக்கிறேன். உதாரணமாக, இயேசு தெய்வீகமானவர் அல்ல என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் குர்ஆனிலும், முகம்மது நபியின் வாழ்க்கையிலும் கிறிஸ்தவர்களுக்கு நிறைய பாராட்டுகள் இருந்தன. 

எனவே முஸ்லிம்கள் மற்ற எல்லா விசுவாசிகளிலிருந்தும் வேறுபட்டவர்கள் என்கிற கருத்துக்கள் உண்மையில் இஸ்லாம் பற்றிய நவீன புரிதல்களையோ அல்லது பிற்கால புரிதல்களையோ பிரதிபலிக்கிறது என்றே நினைக்கிறேன். ஏனென்றால், ஆரம்ப காலகட்டத்தில் இத்தகைய புரிதல்கள் இருக்கவில்லை. இந்த தொடக்க காலகட்டம், பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட இந்தக் குழுக்களுக்கிடையில் உறவு இருந்தது என்பதையே எடுத்துக்காட்டுகின்றன.

Fire temple in Baku, 1865. Image extracted from page 012 of A journey from London to Persepolis; including wanderings in Daghestan, Georgia, Armenia, by USSHER, John. Original held and digitised by the British Library

கே: சில முஸ்லிம்கள் ஜொராஸ்ட்ரியர்களை தங்கள் மதநம்பிக்கைக்கு அப்பாற்பட்டவர்களாக கருதி அவர்களுடனான தொடர்புகளை வரையறுக்க முயன்றனர் என்றும் வேறு சிலர் இஸ்லாமிய சட்டத்தின்படி இயங்கிய இஸ்லாமியப் பேரரசில் அவர்களை இணைப்பதற்கான வழிகளைக் கண்டறிந்தனர் என்றும் எழுதுகிறீர்கள். இறுதியாக ஜொராஸ்ட்ரியர்கள் எப்படி ஏற்கப்பட்டார்கள்?, அரேபிய வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, ஜொராஸ்ட்ரியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பகிரப்பட்ட வரலாறு ஏன் இல்லை?

ப: உண்மையில் இது ஒரு பெரிய கேள்வி. அந்த கேள்விதான் இந்த வரலாற்றை எழுத உண்மையில் என்னைத் தூண்டியது. புத்தகத்தின் தலைப்பு இந்த கேள்வியை நான் எப்படி அணுகினேன் என்பதைப் பற்றிய ஒரு நுண்ணோக்கை உங்களுக்குத் தருகிறது என்று நினைக்கிறேன். புத்தகத்தின் தலைப்பு Zoroastrians in Early Islamic History: Accommodation and Memory. எனவே இந்த இரண்டு மக்களுக்கும் இடையிலான சந்திப்பை நான் வாழ்விடமளிப்பு (Accommodation), மற்றும் நினைவகம் (memory) எனும் இரண்டு புலங்கள் மூலம் பார்க்கிறேன். 

வாழிட வசதி செய்தல் (accommodation) என்பது சமூகத்தில் உள்ள சக்தி வாய்ந்த குழுக்கள் வேறு சிறு நெறிமுறையைப் பின்பற்றும் குழுக்களுக்கு சிறப்பு சலுகைகள் அல்லது விதிவிலக்குகளை வழங்குவது என்பது பொதுவான கருத்து. ஜொராஸ்ட்ரியனிசமும் இந்த விளக்கத்திற்கு பொருந்துகிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் முன்பு கூறியது போல் முஸ்லிம்கள் ஜொராஸ்ட்ரியனிசத்தை வகைப்படுத்த கடுமையாக முயன்றனர். இவர்கள் யூதர்கள், கிறிஸ்தவர்கள் போன்றவர்களா? அல்லது வித்தியாசமானவர்களா? அவர்கள் எங்கே பொருந்துகிறார்கள்? என்கிற வகைப்படுத்தல் குழப்பத்துக்கு முஸ்லிம்கள் உள்ளாகினர். 

“வேதத்தை உடையோர்/ வேதத்தின் மக்கள்” என்ற கருத்துடன் உங்களுக்கு பரிச்சயம் இருக்கலாம்- இது பொதுவாக பைபிளைப் படிக்கும் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைக் குறிக்கும் ஒரு குர்ஆனிய வசனமாகும். ஜொராஸ்ட்ரியர்கள் “வேதத்தின் மக்கள்” ஆக முடியுமா? அவர்களிடமும் அவெஸ்டா என்ற புத்தகம் இருந்தது. ஆனால் அந்த புத்தகம் பைபிளில் குறிப்பிடப்படவில்லை. எனவே முஸ்லிம்கள் அந்த யோசனையுடனும் முரண்பட்டனர். “வேதத்தின் மக்கள்” என்போர் முஸ்லிம்கள் பழகக்கூடிய, சமூக இடைவினைபுரியக்கூடிய, வரி விதிக்கக்கூடிய மற்றும் திருமணம் செய்யக்கூடிய மக்களே “வேதத்தின் மக்கள்” என்று குர்ஆன் கூறுகிறது. இந்த விடயங்களை அவர்கள் ஜொராஸ்ட்ரியர்களோடு செய்ய முடியுமா? இதுவே ஆரம்பகால முஸ்லிம்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்திய கேள்வியாகும். குர்ஆன் விளக்கவுரைகள், வரிவிதிப்பு கையேடுகள் மற்றும் சட்டவியல் விதிகள் போன்றவற்றைப் படித்ததன் மூலம் இதைத்தான் நான் ஆராய்ந்து கொண்டிருந்தேன்.

இந்தக் கேள்விக்கான பதில்களைத் தேடினேன்: முஸ்லிம்கள் அவர்களுடன் இடைவினைபுரிய முடியுமா? ஜொராஸ்ட்ரியர்களுக்கு வாழ்விடமளிக்க முடியுமா? நான் கண்டறிந்த பதில் “ஆம்” என்பதுதான். முஸ்லிம்கள் பொதுவாக ஜொராஸ்ட்ரியர்களுக்கு வரி விதிக்கலாம் என்றும், அவர்கள் தங்கள் பேரரசில் இருக்க முடியும் என்றும் அவர்களுடன் அருகருகே வாழலாம் என்றும் ஒப்புக்கொண்டனர். ஆனால் அதே நேரத்தில், முஸ்லிம்கள் பொதுவாக ஜொராஸ்ட்ரியர்களை “வேதமுடையோர்” என ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறிவிட்டனர். எனவே இங்குதான் வாழிடம்/தங்குமிடம் (accommodation) பற்றிய யோசனை வருகிறது. முஸ்லிம்கள் இந்த மக்கள் தங்கள் சமூகத்தில் ஒருங்கிணைவதை அனுமதிக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் இறையியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வகுப்பினரில் ஒருவராக அவர்களை அங்கீகரிக்கவில்லை. அது, எனக்கு, வாழ்விடமளிப்பு என்பதை அழகாக விபரிக்க உதவுகிறது. அதாவது வாழ்விடமளிப்பு (accommodation) என்பது ஒரு குழுவின் பயனுள்ள முயற்சிகளில் இருந்து நன்மை அடைவதற்காக அவர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையை அல்லது விலக்களிப்பை நீட்டிப்பது.

எனவே ஜொராஸ்ட்ரியர்கள் பயனுள்ள வகையில் வரிகளை செலுத்த முடியும். இது முஸ்லிம் பேரரசு செழிக்க உதவும். ஆனால் முஸ்லிம்கள் அவர்களை “வேதத்தின் மக்கள்” என்று அங்கீகரிக்க வேண்டியதில்லை. அதனால்தான் நான் ஜொராஸ்ட்ரியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவை ஆராய வாழ்விடமளிப்பு எனும் கருத்தை முதல் வழிமுறையாக தேர்வுசெய்தேன். இந்த மக்களை அனுமதிப்பதில் முஸ்லிம்கள் நெகிழ்வாக இருக்க தயாராக உள்ளனர். ஆனால் அவர்கள் தங்கள் தரத்தை சமரசம் செய்ய தயாராக இல்லை.

இந்த சிக்கலை ஆராய்வதற்கான இரண்டாவது வழிமுறையாக நான் நினைவகத்தை (Memory) தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால், ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்றில் ஜொராஸ்ட்ரியர்களை சிலவழிகளில் அங்கீகரிப்பது எனும் நெகிழ்வுத்தன்மை பற்றிய யோசனை காணப்பட்ட போதிலும்-பிற்பட்ட முஸ்லிம் வரலாற்று ஆதாரங்களில் அது இல்லாமல் போனது. பிற்பட்ட ஆதாரங்கள் விடயங்களை மிகவும் வித்தியாசமாக நினைவூட்டுகின்றன. உள்ளூர் பாரசீக வரலாறுகள் போன்ற ஆதாரங்களை படித்தபோது, அவர்கள் வாழ்விடமளிப்பு, நெகிழ்வுத்தன்மை பற்றி எதுவும் பேசவில்லை. என்ன நடந்தது என்பதை அவை விவரிக்கும் போது, ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் பாரசீகத்திற்கு வந்து அதற்கு முன் வந்த அனைத்து மதங்களையும் அழித்ததாகச் சொல்கின்றன. 

எனவே இந்த ஆதாரங்கள் அனைத்தும் இந்த வரலாறு குறித்து மிகவும் கரடுமுரடான நினைவுகூரலைக் கொண்டுள்ளன. உதாரணமாக, மத்திய ஆசிய சூழலில், நாம் Ta’rikhi Bukhara (“History of Bukhara,” by Abu Bakr Muhammad ibn Ja’far al-Narshaxi) பற்றி பேசுகிறோம். அதில், “குதைபா இப்னு முஸ்லிம் தான் உள்ளே வந்த முதல் வெற்றியாளர். அவர் அனைத்து தீக்கோயில்களையும் அழித்து அவற்றின் மேல் மசூதிகளைக் கட்டினார். பின்னர் அவற்றை முஸ்லிம்கள் பொறுப்பேற்றனர்” என சில வரிகள் வருகின்றன. எனவே இதை நுணுகிப் பார்க்கும் போது, ஆரம்ப கால ஆதாரங்கள் நெகிழ்வுத்தன்மை பற்றியும், வாழ்விடமளிப்பு பற்றியும் பேசுகின்றன. ஆனால், பிற்கால ஆதாரங்கள் நெகிழ்வின்மை, படையெடுப்பு மற்றும் ஆதிக்கம் பற்றியே பேசுகின்றன.

எனவே நான் இந்தப் புத்தகத்தில் செய்ய முயற்சிப்பது என்னவென்றால், இந்த முஸ்லிம்-ஜொராஸ்ட்ரியன் தொடர்பு நீங்கள் எந்த ஆதாரங்களைப் படித்தீர்கள் என்பதைப் பொறுத்து வெவ்வேறு பகுதிகளையும், வெவ்வேறு சாயல்களையும் கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதுதான். நெகிழ்வுத்தன்மையை வலியுறுத்தும் பதிவுகள் உள்ளன – அவை முந்தைய ஆதாரங்கள் என்று நான் நினைக்கிறேன் – ஆதிக்கத்தை வலியுறுத்தும் பதிவுகளும் உள்ளன – அவை கடந்த கால நினைவுகூரல்களை முன்வைக்கும் பிற்கால பதிவுகள்.

Traditional Nowruz celebration in Tajikistan.jpg|Traditional Nowruz celebration in Tajikistan. Wikipedia

கே: சசானிய ஈரானை அரபுக்கள் வெற்றிகொண்டதன் பிறகு, பல ஜொராஸ்ட்ரியர்கள் இறுதியில் இஸ்லாத்திற்கு மாறினார்கள். பண்டைய ஜொராஸ்ட்ரியர்கள் எந்த நிபந்தனைகளின் கீழ் இஸ்லாமிய ஆட்சியில் வாழ்ந்தனர்? ஜொராஸ்ட்ரியர்கள் மீதான கட்டுப்பாடுகள், துன்புறுத்தல்கள் எவ்வளவு கடுமையாக இருந்தன? இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் உறுதியான ஜொராஸ்ட்ரியனிச பாரம்பரியமான நவ்ரூஸ் கொண்டாட்டம் போன்ற தங்களது மரபுகளை அவர்களால் எவ்வாறு பராமரிக்க முடிந்தது?

ப: நான் முன்பே குறிப்பிட்டது போல், பல இஸ்லாமிய ஆதாரங்களில் ஜொராஸ்ட்ரியர்களுக்கு வாழிடமும், உபசரிப்பும் அளிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறேன். ஆனால் வாழிடத்திற்கு வரம்புகள் உள்ளன. முஸ்லிம்கள் ஜொராஸ்ட்ரியர்களுடன் வளைந்துகொடுக்கவோ அல்லது சமரசம் செய்யவோ விரும்பாத பகுதிகள் இருந்தன: முஸ்லிம்கள் ஜொராஸ்ட்ரியர்களை கிலாபத்தில் வாழ அனுமதித்தனர். ஆனால் அவர்களை “வேதத்தின் மக்கள்” என்று ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. ஆக, அவர்களை “வேதத்தின் மக்கள்” என்று அங்கீகரிக்காதனால் ஏற்பட்ட விளைவு என்ன?

முஸ்லிம்கள் ”வேதத்தை உடையவர்களை” திருமணம் செய்து கொள்ளலாம் என்று குர்ஆன் கூறுகிறது. இஸ்லாமியர்களின் உணவைப் பாறுத்தவரை, குறிப்பாக இறைச்சி உணவை, ”வேதத்தை உடையவர்கள்” தயாரித்தால் முஸ்லிம்கள் உண்ணலாம் என்றும் குர்ஆன் கூறுகிறது. ஆனால் ஜொராஸ்ட்ரியர்கள் ஒருபோதும் ”வேதத்தை உடையவர்கள்” என்று அங்கீகரிக்கப்படவில்லை. இதனால், இஸ்லாமிய இறையியல் கோட்பாட்டின்படி, முஸ்லிம்கள் அவர்களை திருமணம் செய்து கொள்ள முடியாது. அவர்களால் தயாரிக்கப்பட்ட உணவை, குறிப்பாக இறைச்சி உணவை சாப்பிடவும் முடியாது. எனவே முஸ்லிம் ஆட்சியின் கீழ் ஜொராஸ்ட்ரியர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்று நீங்கள் கேட்கும்போது, ​​நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. சில சமயங்களில், ஜொராஸ்ட்ரியர்கள் ஏனைய முஸ்லிமல்லாதவர்கள் அனுபவித்து வந்த அதே கட்டுப்பாடுகளை தாங்களும் அனுபவித்தனர்: அவர்கள் ஜிஸ்யா எனப்படும் மேலதிக வரி செலுத்த வேண்டியிருந்தது. பெரும்பாலும் முஸ்லிம்களை விட வித்தியாசமாக உடை அணிய வேண்டியிருந்தது. சில வேளைகளில் அவர்களால் புதிய வழிபாட்டு தலங்களை அல்லது பிற விசயங்களைக் கட்ட முடியவில்லை.  

ஜொராஸ்ட்ரியர்கள், “வேதத்தை உடையோர்” அல்ல என்பதால், அவர்கள் மீது மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் இருந்தன – அதாவது முஸ்லிம்கள் அவர்களை திருமணம் செய்து கொள்ள முடியாது. அவர்கள் சமைத்த இறைச்சி உணவை சாப்பிட முடியாது. இந்தக் கட்டுப்பாடுகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. புத்தகத்தில் நான் கேட்கும் கேள்விகளில் ஒன்று: இந்தக் கட்டுப்பாடுகள் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தன? 

ஏனென்றால் இங்கு சொல்வதற்கு ஒரு விசயமுள்ளது- அதாவது சட்டம் ஒன்றைச் சொன்னது, ஆனால் மக்கள் உண்மையில் என்ன செய்தார்கள்? அதனால் நான் ஜொராஸ்ட்ரியனிசத்தின் சில பொதுவான கட்டுப்பாடுகளைப் பார்க்க ஆரம்பித்தேன். சட்டங்களைப் படிப்பதை விட நீங்கள் கொஞ்சம் ஆழமாகத் தேடினால், ஜொராஸ்ட்ரியர்களோ, முஸ்லிம்களோ அந்த விதிகளைப் பின்பற்றவில்லை என்பதற்கான தடயங்களைக் காணலாம். இது இருசாராரும் தங்களைப் பகிர்ந்துகொண்டு ஒன்றாக வாழ்ந்த வரலாற்றுப் பக்கத்துக்குள் நுழைகிறது. உதாரணமாக, ஜொராஸ்ட்ரியர்கள் தயாரித்த இறைச்சியை முஸ்லிம்கள் சாப்பிட முடியாது என்று நான் குறிப்பிட்டேன். ஆனால், சுவாரஸ்யமாக பல ஹதீஸ்கள் – (இவை முகம்மது நபியால் கூறப்பட்ட கூற்றுகள்) – ஜொராஸ்ட்ரியர்களால் செய்யப்பட்ட பாலாடைக்கட்டியை (சீஸ்) முஸ்லிம்களை சாப்பிட அனுமதிக்கின்றன. இப்போது பாலாடைக்கட்டியும் இறைச்சியும் வேறு வேறு விசயங்கள். ஆனால் கடந்த காலத்தில், மக்கள் பாலாடைக்கட்டியை உருவாக்குவதற்காக முதலில் ஒரு விலங்கை- அதாவது பால் கொண்ட ஒரு மாடு என்று வைத்துக்கொள்வோம்- கொன்றுவிடுவார்கள் – பின்னர் அதற்குள்ளிருக்கும் பால் தயிரை எடுத்து சீஸ் தயாரிக்க பயன்படுத்துவார்கள். எனவே, இஸ்லாமிய உணவுச் சட்டத்தில் இறைச்சியும், சீஸூம் குறித்த கருத்துகள் மிகவும் ஒத்த பொருள் கொண்டவைதான். இதன்படி, ஜொராஸ்ட்ரியர்களின் சீஸ் சாப்பிடுவது சரியில்லை என்ற விதிகள் அல்லது கூற்றுகள் அனைத்தும் இருந்த போதிலும், அவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட சீஸ் முஸ்லிம்களால் உட்கொள்ளப்பட்டன. 

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் குக், இந்த நெகிழ்வுக் கூற்றுகள் பெரும்பாலும் ஈராக், குஃபா போன்ற இடங்களில் உள்ள முஸ்லிம் சட்டவியலாளர்களால் ஊக்குவிக்கப்பட்டதாகக் கண்டறிந்தார். பழங்காலத்தில் ஜொராஸ்ட்ரிய மக்கள் அதிகமாக இருந்த இடங்களில் ஈராக்கும் ஒன்றாகும். எனவே மைக்கேல் குக் கண்டறிந்ததை மேலும் நான் நீட்டிக்கிறேன்- அதாவது ஜொராஸ்ட்ரியர்களும் முஸ்லிம்களும் சந்தைகளில் தொடர்பு கொண்டனர்: அவர்கள் ஒருவருக்கொருவர் உணவு மற்றும் பொருட்களை வாங்கினார்கள். அதனால் இஸ்லாமிய சட்டம் சீஸ் போன்ற பொருட்களை அனுமதிக்கும் அளவுக்கு நெகிழ்வானதாக மாறியது.

இஸ்லாமிய ஆட்சியின் கீழ் ஜொராஸ்ட்ரியர்களின் வாழ்க்கை வெற்றிகரமாக இருந்தது என்ற கருத்தை நான் கொடுக்க விரும்பவில்லை என்பதால் புத்தகத்தில் நான் கையாளும் மற்றொரு உதாரணமும் உள்ளது. வெளிப்படையாக, ஜொராஸ்ட்ரியர்களுக்கு கட்டுப்பாடுகள் இருந்தன. அவற்றில் சில கட்டுப்பாடுகள் கடுமையாக செயல்படுத்தப்பட்டன – மேலும் அவை சில நேரங்களில் பாரதூரமானவையாகவும் இருந்தன. 

இந்த ஆய்வுத் தேடலில் நான் அஹ்த்னாமே (Ahdnameh) என்றொரு முக்கிய ஆவணத்தைக் கண்டுபிடித்தேன். இது முகம்மது நபி சல்மான் அல்-ஃபாரிஸிக்கு வழங்கியதாகக் கூறப்படும் ஆவணம். சல்மான் அல்-ஃபாரிஸி நபியின் ஆரம்பகால தோழர்களில் ஒருவர். அவர் பாரசீகராக இருந்தார். அவருடைய பெயரே அதை அடையாளப்படுத்துகிறது. சில ஆதாரங்கள் அவர் ஜொராஸ்ட்ரியனிசத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறியதாகச் சொல்கின்றன. முகமது நபி, சல்மான் அல்-ஃபாரிஸிக்கு கொடுத்ததாகக் கூறப்படும் இந்த ஆவணம் எங்களிடம் உள்ளது. ஆனாலும் இந்த ஆவணம் உண்மையானது அல்ல, எனவே அதைப் பற்றி தெளிவாகச் சொல்கிறேன். 

அது முஸ்லிம்களும் ஜொராஸ்ட்ரியர்களும் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொண்டிருந்தனர் என்று சில வழிகளை கற்பனை செய்து சொல்கிறது என்றவகையில் ஒரு வரலாற்றுப் பதிவாக அது முக்கியமானது. முகம்மது நபி வழங்கியதாகக் கூறப்படும் இந்த ஆவணம், இஸ்லாமிய சட்டத்தில் உள்ள பல நிபந்தனைகளில் இருந்து ஜொராஸ்ட்ரியர்களுக்கு சுதந்திரம் உள்ளது என்று கூறுகிறது. உதாரணமாக, ஜொராஸ்ட்ரியர்கள் ஜிஸ்யா (மேலதிக வரி) செலுத்த வேண்டியதில்லை என்று அஹ்த்னமே என்கிற இந்த ஆவணம் கூறுகிறது. உதாரணமாக, சல்மானின் குடும்பத்தினர் தங்கள் தீக் கோவில்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்றும், முஸ்லிம்கள் அந்தத் தீ கோவில்களுக்கு அருகில் செல்லக்கூடாது என்றும் இந்த ஆவணம் கூறுகிறது. சல்மானின் குடும்பத்தினர் முஸ்லிம்களிலிருந்து வித்தியாசமாக உடை அணிய வேண்டியதில்லை என்றும் அது கூறுகிறது.

எனவே, இந்த ஆவணத்தில், முஸ்லிம்களையும் ஜொராஸ்ட்ரியர்களையும் பிரிக்கக்கூடிய இஸ்லாமிய சட்டத்தில் உள்ள பல விதிகள் மீறப்பட்டுள்ளன. ஆனால் மீண்டும் சொல்கிறேன், இந்த ஆவணம் எங்களுக்கு கிடைக்கிறது என்பதால் அது பின்பற்றப்பட்டது என்று அர்த்தமல்ல. எனவே இந்த ஆவணத்தின் வரலாற்றையும் அது எவ்வாறு தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டது என்பதையும், இந்த ஆவணத்தில் முஸ்லிம்கள் மிகவும் ஆர்வமாக இருப்பதையும் எனது ஆய்வு மூலம் கண்டறிந்தேன்.

அவர்கள் தொடர்ந்து இந்த ஆவணத்தை பிரதிசெய்து எல்லா வழிகளிலும் நவீன காலத்திற்கு பரிமாற்றம் (transmit) செய்கின்றனர். உண்மையில், முஸ்லிம்கள் இந்த ஆவணத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். அங்கு பார்சிகள் என்று அழைக்கப்படும் ஒரு சிறிய குழுவாக ஜொராஸ்ட்ரியர்கள் வாழ்ந்து வந்தனர். பார்சிகள் இந்த ஆவணத்தை நகலெடுத்தனர். அப்போதிருந்து இந்த ஆவணம் ஜொராஸ்ட்ரியர்களிடையே மிகவும் பிரபலமானது.

எனவே மீண்டும், ஜொராஸ்ட்ரியர்கள் இஸ்லாமிய சட்டத்தின் கீழ் எத்தகைய கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தார்கள் என்ற கேள்விக்கு வருவோம். நம்மிடம் நிறைய விதிகள், நிறைய சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை எந்த அளவிற்கு பின்பற்றப்பட்டன என்பதை நாம் எப்போதும் கேட்க வேண்டும். ஏனெனில் சில ஜொராஸ்ட்ரியர்கள் விதிவிலக்குகளைப் பெறுகிறார்கள் என்று கூறும் அஹ்த்னமே போன்ற ஆவணங்கள் நம்மிடம் உள்ளன. தவிர, ஜொராஸ்ட்ரியன் சீஸ் போன்ற பிற விஷயங்களில் முஸ்லிம்கள் தங்கள் சொந்த கட்டுப்பாடுகளை மீறுவதற்கு ஆர்வமாக இருந்தனர் என்பதையும் இந்த ஆவணம் சுட்டிக் காட்டுகிறது. எனவே இந்த விதிகள் எந்த அளவிற்கு அமல்படுத்தப்பட்டன என்பதை நாம் எப்போதும் கேட்க வேண்டும்.  

An 8th-century Tang dynasty Chinese clay figurine of a Sogdian man (an Eastern Iranian person) wearing a distinctive cap and face veil, possibly a camel rider or even a Zoroastrian priest engaging in a ritual at a fire temple, since face veils were used to avoid contaminating the holy fire with breath or saliva; Museum of Oriental Art (Turin), Italy. Wikipedia

கே: நவ்ரூஸ் போன்ற தங்களது மரபுகளை ஜொராஸ்ட்ரியர்களால் எவ்வாறு பராமரிக்க முடிந்தது?

ப: நீங்கள் நவ்ரூஸை ஜொராஸ்ட்ரியனிசத்துடன் அடையாளம் காண்பது சரிதான் என்று நினைக்கிறேன். இது நிச்சயமாக சசானியப் பேரரசில் ஒரு நடைமுறையாக இருந்தது-அநேகமாக மிகவும் பண்டைய காலத்தில். அநேகமாக, நாம் பாரசீக வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே என்று வைத்துக்கொள்ளலாம். நவ்ரூஸ் என்பது வசந்த காலத்தின் கொண்டாட்டமாகும். இது விவசாய சுழற்சிகளுடனும் இந்த சுழற்சிகளைப் பாதிக்கிற சூரியனின் நிலையுடனும் மிகவும் பிணைக்கப்பட்டுள்ளது. எனவே இஸ்லாமிய வரலாற்றுக்கு முன்பே நவ்ரூஸ் ஆவணப்படுத்தப்பட்டஒரு கொண்டாட்டமாக இருக்கிறது. இன்று ஈரானிலும், மத்திய ஆசியாவிலும் உண்மையில், பாரசீக கலாச்சாரத்தின் செல்வாக்குக்கு உட்பட்ட எந்த இடத்திலும் இது மிகவும் பிரபலமான கொண்டாட்டம் என்று நீங்கள் குறிப்பிடுவது சரிதான். இது முஸ்லிம்களும் ஜொராஸ்ட்ரியர்களும் இணைந்து கொண்ட ஒரு வழியையும் அவர்கள் தங்கள் மரபுகளை பரஸ்பரம் பகிர்ந்திருந்தார்கள் என்பதை அது எடுத்துக்காட்டுவதாகவும் உள்ளது. 

நவ்ரூஸை இன்று ஜொராஸ்ட்ரியர்கள், முஸ்லிம்கள் இரு சாராரரும் கொண்டாடினாலும் கூட அதனை நாம் ஜொராஸ்ட்ரியன் விடுமுறை என்றோ அல்லது முஸ்லிம் விடுமுறை என்றோ அழைக்காமல் பாரசீக விடுமுறை என்றுதான் அழைப்போம் என்று நினைக்கிறேன். இதில் என்ன ஒற்றுமை என்றால், அவர்கள் அனைவரும் பாரசீக கலாச்சாரத்தை கொண்டாடுகிறார்கள். இது மத்திய ஆசியாவிற்கும் பொருந்தும். மத்திய ஆசியா ஒரு பாரசீக சாம்ராஜ்யமாகும்-அதாவது, பாரசீக கலாச்சாரம் அங்கு செல்வாக்கு செலுத்தியது-அதனால் அங்கும் நவ்ரூஸ் மிகவும் செல்வாக்கு மிக்கதாக இருக்கிறது. எனவே முஸ்லிம்களும் ஜொராஸ்ட்ரியர்களும் இணைந்து பழகுவதற்கான சந்தர்ப்பங்களை இது உருவாக்கிக் கொடுக்கிறது. ஜொராஸ்ட்ரியர்களிடமிருந்து முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்ட பழக்கவழக்கங்கள் நன்கு அறியப்பட்டவையும், அங்கீகரிக்கப்பட்டவையாகவும் உள்ளன. அதேநேரம், ஜொராஸ்ட்ரியர்கள் முஸ்லிம்களிடமிருந்து ஏற்றுக்கொண்ட பழக்கவழக்கங்களும் உள்ளன.

கே: ஈரானில் இஸ்லாமிய குடியரசு நிறுவப்பட்டதை அடுத்து ஜொராஸ்ட்ரியர்களின் நிலைமை அங்கு எப்படி மாறியது என்று அறிய நீங்கள் எப்போதாவது ஆர்வம் கொண்டீர்களா?

ப: முதலில் நான் பண்டைய உலகு பற்றிய வரலாற்றாசிரியனே அன்றி நவீன உலகு பற்றிய வரலாற்றாசிரியன் இல்லை என்பதை இங்கு ஒப்புக்கொள்ள வேண்டும். அதனால் எனக்கு அது பற்றி போதிய பரிச்சயம் இல்லாததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் பெரும்பாலும் மத்திய கிழக்கு ஆய்வுகளில் பயிற்சி பெற்றிருப்பதால், நவீன மத்திய ஆசியா பற்றிய எனது அறிவு எப்போதும் ஆழமாக இருக்காது என்பதையும் ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். நான் அதிகம் ஆய்வுசெய்த பகுதியான ஈரானைப் பற்றிச் சொல்கிறேன்.

1979 இல் ஷாவை வீழ்த்திய புரட்சியுடன் ஈரானில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. 20 ஆம் நூற்றாண்டில், ஈரான் ஜொராஸ்ட்ரியனிசத்திற்கு மிகவும் இணக்கமாக இருந்தது. ஷா பெரும்பாலும் பண்டைய பாரசீக வரலாற்றை ஈரானிய அடையாளத்தின் அடிப்படையாக ஊக்குவித்தார். அதில் ஜொராஸ்ட்ரிய சின்னங்கள் மற்றும் பாரம்பரியங்கள் என்பனவும் அடங்கி இருந்தன. ஈரானியப் புரட்சியை அடுத்து ஷீயா இஸ்லாம் புதிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மதமாக மாறியபோது பல மாற்றங்கள் அங்கு ஏற்பட்டன. ஆனால் இந்த புதிய இஸ்லாமியக் குடியரசிலும் ஜொராஸ்ட்ரியர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. உதாரணமாக, இஸ்லாமிய குடியரசு ஒரு ஜொராஸ்ட்ரிய பிரதிநிதிக்கு மஜ்லிஸில் (பாராளுமன்றத்தில்) ஒரு இடத்தை உத்தரவாதம் செய்கிறது. மேலும் அவர்களுக்கு சிறப்பான வகையில் குடியிருப்புகள் வழங்கப்படுகின்றன. தங்கள் வீடுகளிலும், அவர்களின் தீக் கோயில்களிலும் வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் கலப்பு-பாலின குழுக்களில் (ஆண்-பெண்) ஒருவருக்கொருவர் கலக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இது ஈரானில் உள்ள முஸ்லிம்களுக்கு சாத்தியமில்லை. அங்கு ஜொராஸ்ட்ரியர்கள் மது அருந்தவும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஜொராஸ்ட்ரியர்கள் முஸ்லிம்கள் அல்ல என்பதால்தான் இந்த விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இத்தகைய விதிவிலக்குகள் சில வழிகளில் முஸ்லிம் பண்பாட்டுக்கு பின்னடைவை ஏற்படுத்துகின்றன. அதேநேரம், ஜொராஸ்ட்ரியர்கள் இன்று ஈரானில் அதிக சிரமத்தை எதிர்கொள்வதில்லை என்று கருத முடியாது.

சிலவற்றை மட்டும் இங்கு சொல்கிறேன். ஈரானில், குறிப்பாக வேலைவாய்ப்பு மற்றும் கல்வித் துறைகளில் நிறைய பாகுபாடுகள் உள்ளன. ஜொராஸ்ட்ரியர்கள், முஸ்லிம்கள் அல்லாததனால் பெரும்பாலும் பதவி உயர்வு அல்லது தலைமைப் பதவிகள் வழங்கும் போது கவனத்திற் கொள்ளப்படுவதில்லை. ஜொராஸ்ட்ரியர்கள் ஈரானில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தேர்வாவது கடினம். காரணம், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் இஸ்லாம் பற்றிய அறிவையே சோதிக்கின்றன. ஆனால் ஜொராஸ்ட்ரியர்களுக்கு இஸ்லாமிய இறையியலில் பயிற்சி இல்லை. உண்மையில், உயர்நிலைப் பள்ளிப் பாடத்திட்டங்கள் முஸ்லிம்கள் இஸ்லாமைப் படிக்கும் அதேநேரத்தில் ஜொராஸ்ட்ரியர்கள் தங்கள் சொந்த மத வரலாற்றைப் படிக்க அனுமதிக்கின்றன. ஆனால், நுழைவுத் தேர்வுகள் என்று வரும்போது, பொதுவில் இஸ்லாம் பற்றிய அறிவே சோதிக்கப்படுகிறது. இது இயல்பாகவே நியாயமற்றது. ஜொராஸ்ட்ரியர்களுக்கு அவை சிரமங்களை ஏற்படுத்துகின்றன. இவை தவிர வேறு சிரமங்களும் உள்ளன. ஜொராஸ்ட்ரியரின் இடங்கள் இஸ்லாமியக் குடியரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. தெஹ்ரானில் ஒரு பெரிய கல்லறை உள்ளது. அது நூறு ஆண்டுகளாக ஜொராஸ்ட்ரியன் சமூகத்திற்கு சொந்தமானது. ஆனால் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதை கையகப்படுத்தி தங்களது பயிற்சி மைதானமாக பயன்படுத்துகிறது. இதனால், ஜொராஸ்ட்ரியர்கள் தங்கள் இறந்தவர்களை அடக்கம் செய்வதில் சிரமப்படுகிறார்கள். இதனால், தவிர்க்க முடியாமல் இடம்பெயர வேண்டி நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர். நிறைய ஜொராஸ்ட்ரியர்கள் ஈரானிலிருந்து வெளியேறியுள்ளனர். அவர்களில் பலர் அமெரிக்காவிற்கு வருகிறார்கள். அவர்கள் மத துன்புறுத்தல் தொடர்பான சிறப்பு விசாக்களைப் பெற முடியும். அந்த புலப்பெயர்வை இலகுவாக சாத்தியமாக்கும் வகையில் சிறப்பு ஏஜென்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே நிறைய ஜொராஸ்ட்ரியர்கள் ஈரானில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனால், ஈரானில் ஜொராஸ்ட்ரியர்களின் சனத்தொகை மெதுவாகக் குறைந்து வருகிறது. இஸ்லாமிய குடியரசில் இந்த புதிய சூழ்நிலையை ஜொராஸ்ட்ரியர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்பதன் ஒரு பக்கத்தைதான் இது பிரதிபலிக்கிறது. 

இன்று, ஈரானின் அசல் மதமாக ஜொராஸ்ட்ரியனிசத்தை அடையாளம் காணும் ஓர் இயக்கம் ஈரானில் மெதுவாக வளர்ந்து வருகிறது. ஈரானின் தற்போதைய அரசாங்கத்தின் இஸ்லாமிய அடித்தளத்தை எதிர்க்கும் மக்கள், “இஸ்லாம் உண்மையில் பாரசீக (பெர்சியன்) அடையாளத்திற்கு அசலானதல்ல. பெர்சியர்கள் முதலில் ஜொராஸ்ட்ரியர்கள். எனவே, நாம் நமது மத நம்பிக்கைக்கு உண்மையாக இருக்க விரும்பினால், நாம் ஜோராஸ்ட்ரியனிசத்திற்கு திரும்ப வேண்டும்” என்று கோஷம் எழுப்புகின்றனர். ஜொராஸ்ட்ரியனிசத்தின் அடையாளமான ஃபராவஹர் அணிய வேண்டும் என்கிற இயக்கங்கள் இன்று இளைஞர்களிடையே உள்ளன.

Ahura Mazda (on the right, with high crown) presents Ardashir I (left) with the ring of kingship (Naqsh-e Rustam, 3rd century AD). Wikipedia

கே: மத்திய ஆசியாவில் ஜொராஸ்ட்ரியர்களைப் பற்றிய சுவாரஸ்யமான பார்வை ஏதாவது உள்ளதா? சோக்டியன்களுடன் (Sogdians) ஜொராஸ்ட்ரியர்கள் வைத்திருந்த வர்த்தக உறவுகள் மூலம் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான வர்த்தகப் பாதைகளில் மதத்தை பரப்ப முடிந்தது என்றும் அறியப்படுகிறது. அவர்களின் மதம் சீனா வரை சென்றடைந்ததா? அந்தக் காலத்தில் மதப் பிரச்சாரம் எப்படி வேலை செய்தது?

ப: நான் இந்தக் கேள்வியை பெரிதும் விரும்புகிறேன். ஏனென்றால், இது மத்திய ஆசிய அம்சத்தைப் பற்றி அதிகம் பேச அனுமதிக்கிறது. நாங்கள் ஈரான் மற்றும் பிற இடங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தியதாக உணர்கிறேன். ஆனால் மத்திய ஆசியா பற்றி பேசுவது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.

மத்திய ஆசியாவும் ஜொராஸ்ட்ரியனிசமும் எனும் போது மிக முக்கியமான ஒரு விசயம் என்னவென்றால், ஜொராஸ்ட்ரியனிசம் தோன்றியதே மத்திய ஆசியாவில்தான் என்பது. இது முதலில் புல்வெளியில், கிமு 1200 இல் இன்றைய வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மஸார்-இ ஷெரீப்பில் ஜொராஸ்டரினால் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர், இது உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க மதங்களில் ஒன்றாக மாறியது. தவிர, இது மிகவும் சுறுசுறுப்பான மதமும்கூட. ஏனென்றால் மத்திய ஆசியாவிற்கு இது பெரும்பாலும் அதுவரை கிடைத்திராத அங்கீகாரத்தைக் கொண்டுவருகிறது என்று நான் நினைக்கிறேன். இதுவும்கூட பெரிதும் கவனிக்கப்படுவதில்லை. ஆனால் இந்த மதத்தை எங்களிடம் கொண்டு வந்த களம் அதுதான். 

சோக்டியன்கள் மற்றும் ஏனையவர்கள் உடனான வர்த்தக தொடர்புகள் மூலம் ஜொராஸ்ட்ரியனிசம் அதன் அசல் வரம்புகளுக்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டது என்று நீங்கள் குறிப்பிடுவது சரியென்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால், ஜொராஸ்ட்ரியனிசம் மத்திய ஆசியாவில் ஜொராஸ்டரினால் நிறுவப்பட்டு, பின்னர் அது பாரசிகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அதிகாரப்பூர்வ பாரசீக மதமாக மாறியது. பின்னர் அங்கிருந்து இன்னும் பரந்த அளவில் பரவுகிறது. அது சீனா வரை செல்லும் என்று நினைக்கிறேன். எனவே நீங்கள் கவனப்படுத்திய ஒரு முக்கியமான விசயம் இது என்று நான் சொல்வேன்.  

சசானியப் பேரரசுதான் முஸ்லிம்கள் கைப்பற்றிய கடைசிப் பாரசீகப் பேரரசு. அதன் கடைசிப் பேரரசராக யாஸ்டெகேர்ட் III (Yazdegerd III) இருந்தார். ஈரான் முழுவதும் அவரைத் துரத்திய முஸ்லிம் படைகளிடமிருந்து அவர் தப்பி ஓடினார். அவர் இறுதியில் துர்க்மெனிஸ்தானில் Merv எனுமிடத்தில் கொல்லப்பட்டார். ஆனால் அவரது குடும்பம் தொடர்ந்து ஓடியது. அவர்கள் சீனா வரை ஓடினார்கள். அங்குள்ள தாங் அரச வம்சம் (Tang dynasty) அவர்களை வரவேற்றது. சீனாவில் வாழும் இந்த பாரசீகர்களை விவரிக்கும் சில ஆவணங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சீன மொழியிலேயே உள்ளன. இறுதியில் தாங் வம்சம் யாஸ்டெகெர்டின் மகனை மீண்டும் பெர்சியாவிற்கு (பாரசீகத்துக்கு) அனுப்பியது. அவர் பெர்சியாவின் எல்லைகளில்- இன்று சிஸ்தான் (சீஸ்தான் என்றும் உச்சரிக்கப்படுகிறது) என அழைக்கப்படும் ஆப்கானிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையிலான எல்லை – வாழ்ந்தார். அவர் முஸ்லிம் படைகளைத் தோற்கடித்து பாரசீக சாம்ராஜ்யத்தை மீட்டெடுப்பார் எனும் நம்பிக்கை சிறிது காலம் நிலவியது.  உண்மையில், அது நடக்கவில்லை. ஆனால் ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகள் வரை மத்திய ஆசியாவின் மீது சீனா கொண்டிருந்த ஆர்வத்தையும், செல்வாக்கையும் அது காட்டுகிறது.

மத்திய ஆசியாவில் இருந்து உருவான ஜொராஸ்ட்ரியனிசம், உலகில் உள்ள மற்ற எல்லா மதங்களிலும், குறிப்பாக யூத மதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று பெரிய ஏகத்துவ மதங்கள் மீதும் செல்வாக்குச் செலுத்துகிறது. ஜொராஸ்ட்ரியனிசம்தான் விசுவாசிகளுக்கு வெகுமதியாக சொர்க்கம், நரகம் பற்றிய யோசனையை முதன் முதல் முன்வைத்த மதம். ஒளியின் (நன்மையின்) கடவுள் அஹுரா மஸ்டா இருப்பதாகவும், இருளின் (தீமையின்) கடவுளாக அஹ்ரிமான் இருப்பதாகவும் ஜொராஸ்டர் வலியுறுத்தினார். பூமியில் உள்ள விசுவாசிகளுக்கான வெகுமதிகளை இரு தனித்தனி மண்டலங்களாக பிரித்து அவர் முன்வைக்கிறார். தீமை செய்யத் தூண்டும் ஒரு மோசமான பிசாசு (சைத்தான்) உண்டு என்கிற சிந்தனையை முதலில் முன்வைத்ததும் ஜொராஸ்ட்ரியன் மதம் தான். மனிதகுலம் ஓர் இறுதித் தீர்ப்பை எதிர்கொள்ளும் என்ற கருத்தும் ஜொராஸ்ட்ரியனிசத்தில் வெளிப்படையாக இருக்கிறது. உதாரணமாக, யூத மக்கள் பாரசீகப் பேரரசு அவர்களை விடுவிப்பதற்கு முன்பு பல தலைமுறைகளாக பாபிலோனிய சிறையிருப்பில் வாழ்ந்தனர். இந்தத் தொடர்புகளால் யூத வேதத்தில் ஜொராஸ்ட்ரிய செல்வாக்கு அதிகம் ஏற்பட்டது என்பதை நாம் இப்போது அறிவோம். யூதர்கள் மட்டுமல்ல, ரோமானியப் பேரரசும் பாரசீகப் பேரரசுடன் தொடர்பு கொண்டிருந்ததால், கிறிஸ்தவர்களும் அதன் செல்வாக்குக்கு உட்பட்டனர். ரோமானியப் பேரரசும், பாரசீகப் பேரரசும் இரு மாபெரும் போட்டியாளர்களாக இருந்தனர். ரோமானியப் பேரரசின் மதமாக கிறிஸ்த்தவம் இருந்தது. பாரசீகப் பேரரசின் மதமாக ஜொராஸ்ட்ரியனிசம் இருந்தது. இதனால் ஈராக், ஆர்மேனியா போன்ற இடங்கள் மதரீதியாக கலந்தன. இதனால் ஜொராஸ்ட்ரியனிசம் ரோமானிய மதத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உதாரணமாக, ரோமானிய மதத்தில் மித்ரஸ் (Mithras) ஓர் அதிகாரப்பூர்வ வழிபாட்டு முறையாக இருந்தது. மித்ரஸ் என்பது ஒரு ஜொராஸ்ட்ரியக் கடவுள் ஆகும். எனவே ஜொராஸ்ட்ரியனிசத்தைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்வது மிகவும் உற்சாகமான விசயம் என்று நான் நினைக்கிறேன்.

கே: உங்கள் புத்தகத்தில், பண்டைய ஜொராஸ்ட்ரியர்களின் பிரச்சனைகளுக்கும் 2014 இல் ISIS இன் (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) தோற்றத்திற்கும் இடையே ஒரு ஒப்புமையை வரைந்துள்ளீர்கள். இந்த வரலாற்று நிகழ்வுகளுக்கு இடையே உள்ள தொடர்பு என்ன?

ப: இந்த கேள்வியை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால், இக் கேள்வி இந்தப் பணியின் சமகால முக்கியத்துவத்தை நிரூபிக்க உதவுகிறது. சில சந்தர்ப்பங்களில், சிலர் “நீங்கள் பண்டைய வரலாற்றை ஆய்வு செய்கிறீர்கள், இவை அனைத்தும் கடந்த காலத்தில் உள்ளவை. அதற்கு இனி ஒரு முக்கியத்துவமும் இல்லை”, என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த வரலாறு இன்றளவிலும் மிக அவசியமானது என்பதைக் காட்ட இது மிகவும் உறுதியான வழியாக உள்ளது. 

எனது புத்தகத்தின் முடிவில் ISIS இன் தோற்றம் பற்றி பேசுகிறேன். 2014 இல், ISIS சிரியாவிலிருந்து புறப்பட்டு வடக்கு ஈராக்கை ஆக்கிரமித்தபோது, வடக்கு ஈராக்கில் வசிக்கும் பழங்குடி இன மக்களை அவர்கள் படுகொலை செய்யத் தொடங்கினர். ஈராக்கின் சின்ஜார் பகுதியில் யஸிதி (Yazidi) இன மக்கள் வாழ்கின்றனர். யஸிதி என்பது பல்வேறு மத தாக்கங்களைக் கொண்ட ஒரு குர்திஷ் மதமாகும். கிறிஸ்தவமோ, சிலவேளை இஸ்லாமோ அல்லது ஜொராஸ்ட்ரியனிசமோ எதுவாகவும் இருக்கலாம். அதன் தாக்கங்களை இந்த மதம் கொண்டுள்ளது என்பது உண்மை.  ஆனால் யஸிதி மதம்தான் அந்த பிராந்தியத்தின் பூர்வீக மதம் என்று விவரிப்பது சிறந்தது என்று நினைக்கிறேன். ISIS வடக்கு ஈராக்கிற்குள் வந்தபோது, அவர்கள் யஸிதி மதத்தை சட்டபூர்வமானதாக அங்கீகரிக்கவில்லை. அவர்கள், “யஸிதிகள் “வேதத்தை உடையோர்” அல்ல, எனவே அவர்களைக் கொல்லலாம்” என்றனர். எனவே ISIS யஸிதி ஆண்களை கொன்று யஸிதி பெண்களை அடிமைப்படுத்தியது. அது ஒரு பயங்கரமான காட்சி. இந்த மக்கள் மத ரீதியாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் அல்ல என்ற கருத்தைக் குறிப்பிடுவதன் மூலம் ISIS இதை நியாயப்படுத்தியது.

ஆனால், யஸிதிகள் மத ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் அல்ல என்ற ISIS இன் இந்தக் கருத்தை இஸ்லாமிய அறிஞர்கள் சவாலுக்குட்படுத்தினர். ISIS இன் கலீஃபாவாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட அபுபக்கர் அல்-பக்தாதிக்கு எகிப்து, மலேசியா, உஸ்பெகிஸ்தான் போன்ற இடங்களைச் சேர்ந்த இஸ்லாமிய சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய அறிஞர்கள் ஒரு திறந்த கடிதத்தை எழுதி, அவரிடம் விளக்கம் கேட்டனர். இந்த அறிஞர் குழு ISIS இன் நிலைப்பாட்டை மறுத்து எழுதியது, “இல்லை, இஸ்லாமிய சட்டம் யஸிதிகளை ஜொராஸ்ட்ரியர்களாக கருதுகிறது. கடந்த காலங்களில் ஜொராஸ்ட்ரியர்கள் சிறந்த முறையில் வாழிடமளிக்கப்பட்டு உபசரிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, ISIS அவர்களைக் கொன்று அடிமைப்படுத்துவது இஸ்லாமிய அடிப்படையில் முற்றிலும் சட்டவிரோதமானது. ஜொராஸ்ட்ரியர்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும்” என்று இந்த அறிஞர்கள் பயன்படுத்தும் வாதங்கள் எனது புத்தகத்தில் உள்ள அதே வாதங்கள்தான்.

எனவே இது எனக்கு ஒரு உற்சாகமான கண்டுபிடிப்பாக இருந்தது: ஒரு உண்மையான இஸ்லாமிய கடந்த காலத்தை இன்றைய மக்கள் அறிந்துகொள்வதற்கான வழியை எனது ஆய்வு திறந்திருப்பது உண்மையில் எனக்கு உற்சாகமாக இருக்கிறது. மேலும் அது இன்றைய காலத்தின் சில தீவிரமான செயல்பாடுகளைத் தவிர்ப்பதற்கு பயன்படக்கூடிய கடந்த காலமாகும். நீங்கள் உண்மையில் கடந்த காலத்தை ஆய்வுக்குட்படுத்தினால், முஸ்லிம்கள் மற்றவர்களுக்கு வாழ்விடமளித்திருக்கும் சந்தர்ப்பங்களையும், நெகிழ்வுடன் நடந்துகொண்ட சந்தர்ப்பங்களையும் காண்பீர்கள். மேலும் அவர்களுடைய சமூக நெறிமுறைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் புறம்பான குழுக்களை இணைத்துப் பயணிக்க முடிந்திருப்பதை அறியலாம். நிகழ்காலத்திற்கு இது ஒரு மதிப்புமிக்க பாடம் என்று நான் நினைக்கிறேன். 


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.