“பேரரசு” என்னும் கருத்தாடல் விற்கப்பட்ட விதமும், பிரிட்டன்/அமெரிக்க உருவாக்கத்தில் இந்தியாவின் இடமும்

புத்தகம் அறிந்து கொள்வோம் : “பேரரசு” என்னும் கருத்தாடல் விற்கப்பட்ட விதமும், பிரிட்டன்/அமெரிக்க உருவாக்கத்தில் இந்தியாவின் இடமும் 1600-1830

ஜேம்ஸ் ஹார்க்ரீவ்ஸ் டிசம்பர் 13, 1720 அன்று இங்கிலாந்தின் லங்காஷயரில் பிறந்தார். அவரது ஆரம்பக்கால வாழ்க்கையைப் பற்றி அதிகம் தகவல் இல்லை. அவர் கைத்தறி  நெசவாளராக வேலை செய்தார் என தெரிகின்றது. ஜேம்ஸ் ஹார்கிரீவ்ஸ் 1764 ஆம் ஆண்டில் ஸ்பின்னிங் ஜென்னி என்னும் நூற்பு இயந்திரத்தினை கண்டுபிடித்தார். ஸ்பின்னிங் ஜென்னி என்பது ஒரு பெரிய சக்கரத்தைப் பயன்படுத்தி, ஒரே நேரத்தில் பல நூல்களைச் சுழற்ற உதவும் இயந்திரம். இந்த கண்டுபிடிப்பு ஜவுளி உற்பத்தியாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தது. பருத்தி ஜவுளி உற்பத்தியில் பெரும் மாற்றத்தினைக் கொண்டு வந்தது. 

படம் உதவி: பிரிட்டானிக்கா

ரிச்சர்ட் ஆர்க்ரைட் டிசம்பர் 23, 1732 இல் இங்கிலாந்தின் லங்காஷயரில் பிறந்தார். அவரது பெற்றோர் கூலித் தொழிலாளர்கள். அவரை படிக்க வைக்கும் அளவுக்குப் பெற்றோருக்கு வசதியில்லை. ஒரு உறவினர் மூலம் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார். இளமையில் ஆர்க்ரைட் ஒரு முடிதிருத்தும் தொழிலாளியாகப் பயிற்சி பெற்றார். மேலும் 1750-களில் தனது சொந்த கடையைத் திறந்தார். அந்நாட்களில் பெரிவிக்குகள்(periwig) பிரபலமாக இருந்தது. இவர் அந்த விக்குகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு சாயத்தைக் கண்டுபிடித்தார்.  அந்த சாயம் அவருக்குக் கணிசமான லாபம் தந்தது. 

அவர்  1769ல் வாட்டர் ப்ரேம்(water frame) என்னும் வலுவான நூலை சுழற்றக்கூடிய ஒரு நூற்பு இயந்திரத்தை உருவாக்கினார். ஓடும் ஆறு/சிற்றோடையில் உள்ள நீரின் விசையை பயன்படுத்தி, ஒரு தண்டைச் சுழற்றுவதன் மூலம் இந்த இயந்திரம் இயங்கியது. இதனால் மனித உழைப்பின்றி, குறைந்த விலையில்  பெருமளவில்  பருத்தியை சுழற்றி,  நூலை உற்பத்தி செய்ய முடிந்தது. ஜேம்ஸ் ஹார்க்ரீவ்ஸ் கட்டிய ஸ்பின்னிங் ஜென்னி போன்ற முந்தைய இயந்திரத்துடன் ஒப்பிடும்போது, “வாட்டர் ஃப்ரேம்” குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் ஏற்படுத்தியது. 

படம் உதவி: விக்கிபீடியா

சாமுவேல் க்ரோம்ப்டன், லங்காஷயரில் பிறந்தவர். அவரது தந்தை அருகில் உள்ள ஒரு மேனார் ஹவுஸில் பராமரிப்பாளராக இருந்தார். அவர், சிறுவயதில் தனது தந்தையை இழந்தார். ஸ்பின்னிங் ஜென்னியில் நூல் நூற்க கற்றுக் கொண்டு குடும்பத்தினை காப்பாற்றினார். மேலும், அருகில் உள்ள போல்டன் தியேட்டரில் வயலின் வாசித்துச் சம்பாதித்தார். இரண்டு வேலைகளுக்கு நடுவே  1779 ஆம் ஆண்டில், தனது ஓய்வு நேரத்தையும் பணத்தையும் கொண்டு அவர் ஸ்பின்னிங் ம்யூல் என்னும் இயந்திரத்தை உருவாக்கினார். இது பருத்தி நூற்பில் பெரும் விசையை அளித்தது. ரிச்சர்ட் ஆர்க்ரைட் மற்றும் ஜேம்ஸ் ஹார்க்ரீவ்ஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்களின் கலவையாக இருந்தது. ஆகவே இந்த இயந்திரம் ம்யூல் என்னும் கழுதைக்கும், குதிரைக்கும் இடைப்பட்ட பெயரில் அழைக்கப்பட்டது.

படம் உதவி: ஹவ்ஸ்டப்வொர்க்ஸ்

உலகத்தின் பருத்தி உற்பத்தியைத் திருப்பி போட்ட  மூன்று கண்டுபிடிப்புகளும் சாதாரண நெசவாளரான ஜேம்ஸ் ஹார்க்கீரிவ்ஸ், முடிதிருத்தும் தொழிலாளியாக வேலைபார்த்த ரிச்சர்ட் ஆர்க்ரைட், ஸ்பின்னிங் தொழிலாளியாக வேலைப்பார்த்த சாமுவேல் க்ராம்டன் என்பவர்களால் உருவாக்கப்பட்டது.

இத்துடன்  இந்தியப் பருத்தி ஜவுளிகளின் தனித்தன்மையான வண்ணம், நெய்யும் திறம் ஆகியவற்றையும் முழுக்க கைப்பற்றி அதை அடுத்த கட்டத்துக்குப் பிரிட்டன் இட்டுச் சென்றிருந்தது. ஆகவே ஆங்கில பருத்தி ஜவுளி உற்பத்தி, பல மடங்கு வளர்ச்சி பெற்று,  இந்திய ஜவுளியைத் தாண்டி உலக வணிகத்துக்கு வந்தது. இந்தியா காலனி நாடானது.

இந்தப்படம் 1720-1808 வரைக்குமான காலக்கட்டத்தில் ப்ரிட்டிஷாரால் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட பருத்தி துணிகளைக் காட்டுகின்றது. இது “English Overseas Trade Statistics 1697-1808”  என்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பதிப்பில் இருந்து எடுக்கப்பட்டது. 1720ல் 1000 பருத்தி துணிகளில் துவங்கியது. ஸ்பின்னிங் ஜென்னி கண்டுபிடிப்புக்கு முன் 10,000 வரைக்கும் சென்று இருந்தது. கண்டு பிடிப்புக்குப் பிறகு 1 லட்சம் ஆகி,1 கோடி வரைக்கும் 1800களில் அதிகரித்துள்ளதைக் காணலாம்.

இதற்கு பின் வட அமெரிக்காவின் தென் பகுதி மாநிலங்கள் பிரிட்டிஷ் பருத்தி ஆலைகளுக்குத் தேவையான பருத்தி விவசாய உற்பத்தியாளர்களாக உருவெடுத்தன. இந்தியாவும் பிரிட்டிஷ் ஜவுளித் தொழிலுக்கு, குறிப்பாக அவுரி , பட்டுக்கான உற்பத்தியாளராக மாறியது. அதன் பின்னர் இந்தியப் பருத்தி ஜவுளிகள் பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படவில்லை. மாறாக, ஆங்கிலேயரால் தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கான முக்கிய சந்தையாக இந்தியா மாறியது. பிரிட்டிஷ் உற்பத்திப் பொருட்களின் மூலப்பொருள் வழங்குநர்கள் , நுகர்வோர் என, இந்தியாவும் அமெரிக்காவும்  தொழில்துறை வித்தகனான பிரிட்டனுக்குக் கீழே வந்தன.

மான்செஸ்டர் என்ற ஒரு நகரத்தினை உதாரணமாக எடுத்து பிரிட்டனின் பருத்தி ஜவுளி உற்பத்தி தொழில் அதிகரித்ததை காண்போம்.

இனி இந்த புத்தகத்தினை நான் ஏன் பரிந்துரைக்கின்றேன் என்பதைக் காண்போம்.

அறம்,பொருள், இன்பம் என  மானுட வாழ்வில் இலக்குகள் உண்டு. 

“ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு”

என திருக்குறள் சொல்லும். சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும்‌ இன்பமுமாகிய இரண்டும்‌ ஒருசேரக்‌ கை கூடும்‌ என வள்ளுவர் சொல்லுவார். ஆகவே பொருளியல் பார்வையில் வரலாற்றுச் சம்பவங்களை ஆராயும் இந்நூல் முக்கியம் வாய்ந்தது என்பதால் பரிந்துரைக்கின்றேன். 

வரலாற்றுச் சம்பவங்களை ஆராய்ந்து என்ன பலன்? வரலாற்றுச் சம்பவங்களை ஞானம் அன்னம் என்னும் மரபான பார்வையில் வாசிக்கையில், நமக்குப் பலன் தரும். பழைய காலத்துக்குத் திரும்பச் செல்லும் வழியென வரலாற்றுச் சம்பவங்கள் இருக்க இயலாது. காலம் உயிரின் எல்லை. உயிர் எல்லைத் தாண்டி சென்று அங்கு வாழ இயலாது. ஆனால் பழைய காலத்திலிருந்து கற்றுக் கொள்ளலாம். நம் பாடங்களில் ஒன்றாக, நமது உடல், உணர்வு இரண்டிலும் ஒரு அங்கமாக மாற்றிக் கொள்ளலாம். அறிவிக்க அறிவது மானுட உயிர். நமக்கு வேண்டியதை நூல் வடிவில் நூலாசிரியன் அறிவிக்கப் பெற்று சக்தியாக்கிக் கொள்ளலாம். 

எப்படி சக்தியாக்கி கொள்வது என்பதற்கு உதாரணம் காண்போம். இந்நூல் இந்தியாவின் உற்பத்தித் திறன் எப்படி எரிபொருளாகி இரு பெரும் பேரரசுகளின் துவக்கத்தில் உதவியது என்பதைச் சொல்கின்றது. அப்பொழுது இந்தியர்களின் மதிப்பு உலகளவில் என்னவாக இருந்தது?  இந்த கேள்விக்குப் பதிலைத் தேட இந்த புத்தகத்தில் சொல்லப்படும் ஒரு சம்பவத்தினை நம் மனதில் காட்சியாக்குவோம். 

1600 களின் முற்பகுதியில், “லார்ட் மேயர்ஸ் ஆப் லண்டன்” (Lord Mayors of London)  என்ற சொல், லண்டன் மேயர் என்ற  பதவியை வகித்தவரைக் குறிக்கிறது.  இந்த  காலகட்டத்தில், தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்கும் முடியாட்சியின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கும்  பல குரல்கள் எழுந்திருந்தன. முக்கியமாக லார்ட் மேயரின் வேலை என்பது குடிமை விசுவாசத்தை வளர்ப்பதற்கும் முடியாட்சியின் புகழைப் பரப்புவதற்கும் பங்களித்தது. இந்த காலகட்டத்தில், லண்டன் வணிகத்தில் கணிசமான வளர்ச்சியைக் கொண்டிருந்தது, இதனால் பொருளாதாரப் பிரச்சினைகளைக் கையாள்வதிலும் நகரத்தின் செழுமையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் லார்ட் மேயருக்கு அதிகப் பொறுப்பு உருவானது. “லார்ட் மேயர் நிகழ்ச்சிகள்” ( Lord Mayor’s Shows)  என அழைக்கப்படும் ஆடம்பரமான ஊர்வலங்கள் பதவியேற்பினை ஓட்டி நிகழும் முக்கியமான நிகழ்வுகளாயின. இவை அரசியல் செய்தியாகவும், குடிமைப் பெருமைக்கு ஒரு தளமாகவும் அமைந்தன. இங்கிலாந்தின் முக்கியமான எழுத்தாளர்கள் இந்நிகழ்வுகளுக்காக எழுத்துப் பணி செய்தார்கள்.

நூலாசிரியர் இது போன்ற ஊர்வலங்களில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் விளம்பரப்படுத்தப்பட்டன எனச் சொல்கின்றார். Triumph of Reunited Britannia, Triumphs of Truth, Triumphs of Honor and Industry, Triumphs of Honor and Virtue, Monuments of Honor போலப் பல “நிகழ்த்துக் கலைகளுக்கான எழுத்து” (pieces written for shows)  வடிவங்களில் இருந்து நூலாசிரியர் ஆதாரங்களை அளிக்கின்றார்.

படம் உதவி: விக்கிமீடியா

அப்படிப்பட்ட ஊர்வலங்களில் பெரிய கப்பலையே மாதிரியாகச் செய்து லண்டன் தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர். ஒரு ஊர்வலத்துக்கு உருவாக்கப்பட்ட பாடலை கீழே காணலாம். இப்பாடலில்  உணவுப் பொருள்களும், பட்டும், அவுரியும் கப்பல்களில் வருவதைக் கொண்டாட்டமாகக் காண்பதைக் காணலாம் (Triumph of Reunited Britannia). இதில் இருந்து ஒரு பாடலை காண்போம்.

“All hayle faire London, to behold thy Towers,
After our voyage long and dangerous:
Is Seamens comfort, thankes vnto thoſe powers,
That in all perils haue preſerued vs.
Our Royall Exchange hath made a rich returne,
Laden with Spices, Silkes, and Indico,
Our wines that for our abſence long did mourne,
Now find releaſe from all their former woe.”

இன்னொரு ஊர்வலத்தில் (The Triumphs of Honor and Industry ) ஆசிய இந்தியர்களாக வேடம் பூண்டவர்கள் அரைகுறை உடையுடன் விவசாயப் பொருட்களை வளர்ப்பது, பழங்கள் சேகரிப்பது , மிளகைப் பொதி கட்டுவது போன்றவற்றுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்தியர்கள் “தங்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நிறைவை வழங்க” நடனமாடினர். அடுத்து இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  பணக்காரர் வேடம் பூண்டு ஒருவர் நுழைந்தார். அவர் வணிகத்தின் இருக்கையில் அமர்ந்திருந்தார். அந்த நாடகத்தில் இந்தியா தங்கத்தை எடுத்துச் சென்றது, அதே சமயம் இந்தியாவின் கூட்டாளியான “வணிக பொருள்களின் நகர்வு (Traffic)” புதிய உலக உருண்டையைக் கொண்டு வந்தது, அங்கே ” தொழில் (Industry)” அன்பைக் கொண்டு வந்தது. இந்தியாவினை பற்றிய இங்கிலாந்தின் பார்வை இந்நிகழ்வுகளில் காணலாம்.

1621ம் ஆண்டு, கிழக்கிந்திய கம்பனியின் இயக்குநர்களில் ஒருவரான தாமஸ் மன், ‘ஒரு லட்சம்(1,00,000)  பவுண்டு ஆங்கிலேயப் பணத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் 5 லட்சம்(5,00,000)  பவுண்டு மதிப்புள்ள இந்தியப் பொருள்களை வாங்கிக் கொண்டு வர முடிந்தது’ எனப் பதிவு செய்கிறார். அந்த பொருட்களில் மூன்று லட்சத்து எண்பதினாயிரம்(3,80,000)  பவுண்டு மதிப்புள்ள பொருட்களை வேறு தேசங்களுக்கு விலைக்கூட்டி பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விற்று விட்டது என்கின்றார். அதிலிருந்தும் வருமானம் வந்தது.  இந்தியாவுடனான வர்த்தகத்தில் கிடைத்த பணத்தைக் கொண்டு பெரிய கப்பல்களைக் கட்டவும், கப்பலோட்டும் ஆட்களை வேலைக்கு வைக்கவும், பணத்தினை இன்னமும் பெருக்கவும் முடியும் எனக் குறிப்பிடுகின்றார். 1621ம் ஆண்டு கணக்குப்படி ஒரு லட்சத்து இருபத்தி மூன்றாயிரம்(1,23,000)  பருத்தி ஜவுளிகளை ஆங்கிலேயர்கள் வாங்கினார்கள். 1625ம் ஆண்டு இதை இரண்டு லட்சத்து இருபத்தி ஓராயிரத்து ஐந்நூறாக(2,21,500) அதிகரித்தனர். இந்தியாவிற்கு, இவ்வளவு உற்பத்தி செய்யவும், இவ்வளவு பேர் விரும்பி நுகரும் பொருட்கள் செய்யவும் வல்லமை இருந்தது.

வணிகத்தின் இருக்கையில், லண்டன் தெரு ஊர்வலங்களில் இந்தியாவினை இருத்தி வைத்தது எது?  இந்தியாவின் உற்பத்தி திறமை. 

19ம் நூற்றாண்டில், 20 நூற்றாண்டு துவக்கத்தில் எல்லாமே தலைகீழாகி விட்டது. அதே லண்டன் சூழலில் இந்தியா ஏழ்மைக்கும், குப்பைக்கும், பஞ்சத்துக்கும், கிளார்க் வேலைக்கும் அடையாளமாக சொல்லப்பட்டது. உற்பத்தி திறம் காலத்தோடு வளரவில்லை என்பது பெரும் வீழ்ச்சியை தந்தது. 

“இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு”

என்னும் குறள் வழியே இந்த வீழ்ச்சியை பொருள் கொள்ளலாம். திறம், செல்வம் தந்தது,அறம் காத்தது. அது இல்லையேல் தரித்திரம் வந்து மூடியது. இல்லாமை சேர எல்லாரும் எள்ளும் இடமே வாய்த்தது.

அடுத்து இன்னொரு காட்சியைக் காண்போம். பருத்தி ஜவுளி உற்பத்தி, விவசாய திறன், வெடியுப்பு உற்பத்தி மட்டுமா இந்திய உற்பத்தித் திறனிற்கு அத்தாட்சி? அவற்றைத் தாண்டி வேறு எதுவும் இருந்ததா என ஐயம் கொள்ளலாம்.  இன்றைய சூழலைப் பார்ப்போம். ப்ரெஞ்ச் ஒயின்கள் இன்றைக்கு உயர்குடி ரசனைக்குச் சான்று. ஸ்காட்லாண்டின் விஸ்கிகள் உயர்குடி ரசனைக்குச் சான்று. மது உற்பத்தியில் உலக ரசனையை வென்று, உயர்தர ரசனைக்கு உகந்ததாக இந்திய உற்பத்தித் திறன் இருந்தது என்றால் நம்ப முடிகின்றதா?

17-18ம் நூற்றாண்டில் இந்திய மது,  அன்று காலனியாக இருந்த அமெரிக்காவுக்கு ஐரோப்பா வழியாகக் கடத்தப்பட்டது. அன்றைய கடத்தல்காரர்களின் விருப்ப பொருளாக இருந்தது. இந்திய மதுஉற்பத்தியாளர்களின் திறமை சர்வதேச ப்ராண்டாக இருந்தது.

ஐரோப்பிய நுகர்வோர்களிடம் பெரும் செல்வாக்கு பெற்று இருந்தது.

பன்ச் என இன்று நாம் பருகும் திரவம், இந்தியாவின் உற்பத்தித் திறனுக்கு ஒரு சான்று. இந்தியில் ஐந்து என்பதை பான்ச் என்பார்கள். அதிலிருந்து பன்ச் வந்ததாகச் சொல்வார்கள். புளிப்பு, இனிப்பு, மது, தண்ணீர், மசாலா ஐந்தும் கலந்தது பன்ச் எனப்பட்டது.

ஐரோப்பியப் பயண எழுத்தாளரான தாமஸ் ஹெர்பர்ட் இந்திய மது விற்பனையை வியந்து சொல்லியுள்ளார்.1670களில், லண்டனில் பிரத்தியேக “பன்ச் ஹவுஸ்கள்” தோன்றின. ஆடம்பரமான கூட்டங்களில் தொடங்கி,  கப்பல்துறைகளின் மாலுமி கொண்டாட்டங்கள் வரை, பன்ச் கிண்ணங்கள் ஒரு அங்கமாக மாறின. தனிப்பட்ட காக்டெய்ல்களை விடக் குறைந்த ஆல்கஹால் உள்ளடக்கம் கொண்ட பானத்தை நுகர்வது அக்காலத்தில் தனி சமூக அந்தஸ்தினை வழங்கியது.

1722ல் சுங்கத்துறையால் ஜமைக்காவில் கைப்பற்ற “சந்டோஷ்( Chandos)” என்ற கப்பலில் 400 காலன் இந்திய மது இருந்தது. 1724ல் பிலடெல்பியாவில் சுங்கத்துறை கைப்பற்றிய  “பேம்  (Fame)” என்ற ஐரோப்பியக் கப்பலில் ஒரு ஆயிரம் காலன் இந்திய மது இருந்தது. அது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட் வரைக்கும் வழக்கு சென்றிருக்கின்றது.

பின்னாளில் ஜமைக்காவின் ரம் இந்திய மதுவின் இடத்தினை கைப்பற்றி பன்ச் என்பதில் ஒரு அங்கமாக மாறிவிட்டது.

இந்தியாவின் உற்பத்திகள் சர்வதேச ப்ராண்ட் மதிப்புடன் இருந்துள்ளன. அவை இந்தியர்களால் சந்தைப்படுத்தபடாவிட்டாலும் , அவற்றின் தரம், சுவை காரணமாக அவை ரசிக்கப்பட்டுள்ளன. 

இயந்திரமயமாக்கம் , சந்தையாக்கம்,  விநியோக சங்கிலி மேலாண்மை , ப்ராண்ட் மதிப்பு , முறையான நிதி உதவி, இவையெல்லாம் அமையப் பெற்றிருந்தால் இது எத்தனை பெரிய உற்பத்தியாக இருந்திருக்கும்?

இது மட்டுமல்ல இந்திய கப்பல் கட்டும் திறனைp பற்றியும்  நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கிழக்கிந்திய கம்பனி டைரக்டர்களில் விளைந்த உள் மோதலை குறிப்பிடுகின்றார். கிழக்கிந்திய கம்பனியில் ஒரு தரப்பு இந்தியாவின் கப்பல் கட்டும் திறனை தொழில் படுத்தி ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக்கும் கப்பல் கட்ட வேண்டுமென்கின்றது. அதே நேரம் இங்கிலாந்தின் கப்பல் கட்டும் தரப்பு இதை வளர விடக்கூடாது என்றது. 

இந்த புத்தகத்தில் அந்த நேரத்தில் இருந்த அமெரிக்க கப்பல் கட்டும் தொழில், இந்திய கப்பல் கட்டும் தொழில், இங்கிலாந்தின் கப்பல் கட்டும் தொழில் மூன்றையும் ஓப்பிட்டு நூலாசிரியர் குறிப்புரைக்கின்றார்.

“இந்தியாவில் தயாரிக்கப்படும் கப்பல்கள் குறைந்த செலவு பிடிப்பவை, நீண்ட காலம் உழைக்க கூடியவை, மேலும் மக்கி போகாத தேக்குக் கட்டுமானத்துடன் குறைவான பழுதுபார்த்தலைக் கோருபவை (India-build ships are cheaper, lasted longer, and required fewer repairs with their rot resistant teak construction)”

என இந்திய கப்பல் கட்டும் தொழில் பற்றி குறிப்பு சொல்கின்றது.

இத்தனை தொழில் இருந்தும் என்ன ஆனது என்பதை பற்றி ஆராய்வோம்.

“வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை”

என வள்ளுவர் சொல்லுவார்.பொருள் வரும் வழிகள், அது உருவாக்கும் வளம், இடையூறுகள் ஆகியவற்றினை பற்றி ஆராய்ந்து இருக்க வேண்டுமென வள்ளுவர் சொல்கின்றார். அது வழியே வல்லமை கொண்டு செயலாற்ற வேண்டுமென்பது அவரது பார்வை.

உற்பத்தி தொழில் வல்லமை குறித்து ஆராய்ச்சி செய்ய ஜெர்மானிய தத்துவமேதை ஹைடேகரின் உதவியை பயன்படுத்தலாம். 16,17,18 நூற்றாண்டில் ஆங்கிலேய, இந்திய உற்பத்தி வல்லமை செயல்பட்ட வழிகளையும் ,அவை சந்தித்த இடையூறுகளையும்  இவரின் உதவியுடன் பார்க்கலாம்.

முதலில் உற்பத்தி என்பதை வரையறுத்துக் கொள்ளலாம். உற்பத்தி என்பது  இயந்திரங்கள், துணைக்கருவிகளைப் பயன்படுத்தி மூலப்பொருட்களிலிருந்து தயாரிப்புகளை உருவாக்கும் செயல்முறையாக உள்ளது. இந்த  உற்பத்திக்கு மனித உழைப்பு, கருவிகள், தொழில்நுட்பம் தேவைப்படுகின்றன. இதில் தொழில் நுட்பத்தின் பங்கு பிரமாண்டம். தொழில் நுட்பம், கருவிகள் உருவாக்கத்தில், மனித உழைப்பினை மேம்படுத்தும் விதத்தில் செயலாற்றும்.

ஹைடேகர் தொழில்நுட்பம் என்பதை வரையறுக்கையில், “மானுடம் உலகைக் காணும்  வழிகளை உருவாக்கும் பயன்முறை”, எனச் சொன்னார். இதை என்பிரேமிங்(Enframing)  கோட்பாட்டினை வடிவமைக்கையில் சொல்கின்றார். இதன்படி தொழில்நுட்பம் நம் கண் முன்னே இருந்து நமக்குப் புலப்படாமல் இருப்பதை அறிவிக்கவும், நமக்கு கண்ணுக்கே சாத்தியமில்லாத விஷயங்களைக் கூட ஒன்றுடன் ஒன்று கோர்த்து அறிவிக்கவும் செய்கின்றது. 

சில உதாரணங்கள் காண்போம்.

தொழில் நுட்பம் வழியே விசைத்தறி ஓன்றில் நூல் துணியாக வெளிப்படுகின்றது.

தொழில் நுட்பம் வழியே அவுரி செடியின் சாயம் துணியின் வண்ணமாகின்றது.

ஹைடேகர் தொழில் நுட்பம் மூன்று குணங்களைக் கொண்டது எனச் சொல்கின்றார். அதிக செயல் திறன் (Efficiency) கொண்டு வருதல், உகந்ததாக்குதல் (Optimization) , கட்டுப்பாட்டு  உருவாக்குதல் (Control)  என்பவை தொழில்நுட்பத்தின் இயல்பான குணங்களாகும்.

புதிய வழிகளை உருவாக்கும் தொழில்நுட்பம் என்னும் பயன்முறையானது, உலகில் உள்ள அனைத்தினையும் பயன்பாட்டுக்கு தக்கவகையில் ஒழுங்குபடுத்துகின்றது. ஒழுங்குப் படுத்துவதை ஒரு சவாலாக எடுத்து, போட்டி மனப்பான்மையுடன் இம்முயற்சியில் ஈடுபடுகின்றது.  அத்தகைய போக்கில், இயற்கை (nature) என்பது இயற்கை வளம் (natural resource)  என ஆகின்றது. மானுடம் (Human) என்பது மனித வளம் (Human Resource)  என ஆகின்றது. அதிக செயல் திறனுடன், உகந்த முறையில் வளங்களைக் கையாளும் வழிகளைத் தேடும் முயற்சி, உலக இருப்புகளின் மீது குடையெனக் கவிழ்ந்துள்ளது. இருப்புகள் வளமாக இருப்பதை “standing-reserve”  என ஹைடேகர் குறிப்பிடுகின்றார். 

உதாரணத்துக்கு, காட்டினை காளிதாசன் காண்பதற்கும், லம்பர் இண்டஸ்ட்ரியல் ஆள் காண்பதற்கும் ஆன வித்தியாசம். மலையை குவாரிக்காரன் காண்பதற்கும் , மலையைத் தெய்வமாக வழிப்படுபவர் காண்பதற்கும் ஆன வித்தியாசம் எனலாம்.

தொழில் நுட்பம் அதன் அதிக செயல் திறன், உகந்ததாக்குதல், கட்டுப்பாடு உருவாக்குதல் என்ற மும்முனைகள் வழியாக, உலகின் இருப்பை வளமாகக் கண்டு அதனுடன் சவால் விட்டு இயங்குவதால் தன்னை தானே இயக்கிக் கொள்ளும் கருவியாகின்றது. புதிய தொழில் நுட்பம் , புதிய சவால்களை உருவாக்குகின்றது. புதிய சவால்கள், புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குகின்றன. இப்படி தன்னை தானே இயக்கிக் கொள்ளும் இயங்கு தன்மையைப் பார்க்கமுடிகிறது.

ஹைடேகரின் தொழில்நுட்ப பார்வையை கொண்டு மேலை மரபின் தொழில்நுட்ப வளர்ச்சி வழிகளை புரிந்துக் கொள்ளலாம். அந்த தொழில் நுட்பத்தால் அவர்கள் அடைந்த உற்பத்தி லாபங்களை, தொழிலில் அடைந்த சாதனைகளை புரிந்துக் கொள்ள முடிகின்றது. 

16-19ம் நூற்றாண்டு இந்திய உற்பத்தி தொழில்கள், தங்களை எவ்வாறு கண்டன? உற்பத்தி தொழிலில் தொழில்நுட்பம் குறித்த அவர்கள் பார்வை என்ன? என்ற கேள்விகள் இன்றைய இந்திய வம்சாவளியினருக்கு உதிக்கலாம். அக்கால இந்திய அணுகுமுறையை, ஹைடேகரின் சொல்லில் இருந்து ஊகித்து பார்க்கலாம். அக்காலத்திய இந்தியர்கள், தொழிலில் அதிக செயல் திறன் (efficiency) கொண்டு வருதல், உகந்ததாக்குதல் (Optimization) , கட்டுப்பாடு  உருவாக்குதல்  (Control)  என்பவை வழியே காணவில்லை என்பது தெளிவாகின்றது.  இவ்வாறு காணவிடாமல் என்னென்ன இடையூறுகள் இருந்திருக்கலாம் என பட்டியலிடுவோம்.

  1. தொழிலைப் பயன்பாட்டு பொருளாக, வணிக பெருக்கமாக, வளரும் நுகர்வோர் தேவை வழியே காணவில்லை. 
  2. தன்னுடன் தொழில் புரியும் சக உலக  நாகரீகம் ஒன்று தொழில் என்பதை  நுகர்வு சார் வணிகத்தின் அங்கமாகவும்  பார்க்கின்றது என்பதை அங்கீகரிக்கவில்லை. 
  3. தன்னுடன் தொழில் புரியும் சக உலக நாகரீகம் ஒன்று நுகர்வினை அதிகரிக்கத் தொழிலில் எந்திரமயம் செய்து கொண்டு இருந்ததை அறியவில்லை.
  4. குடும்ப அளவில், அன்றாடத் தன்மையுடன் ஒன்று சேர்ந்து தொழில் நடத்துவதையே பெரிதும் நம்பினர். தொழிலை குடும்ப வாழ்வியல் முறையாகக் கண்டார்கள்
  5. தங்களைச் சர்வதேச தொழில்-வணிக வலை ஒன்றின் அங்கமாகக் கருதாமல் உள்ளூர் சூழலை மட்டும் கருத்தில் கொண்டார்கள்
  6. உற்பத்தித் தொழிலின் தெய்வம் படைப்பாற்றல். ஆகவே தொழிலில் பிராண பிரதிஷ்டை செய்யப்படும் தெய்வமாக படைப்பாற்றல் வெளிப்படும் தரமும், நேர்த்தியும், அழகும், வேகமும் இருந்திருக்க வேண்டும். படைப்பாற்றலின் வளர்ச்சியைத் தேக்கும் பார்வை அல்ல. எதிர்நிலை மனநிலையை தெய்வமாக்கினால் எதிர்நிலை நிகழ்வே நிகழும் என்பது இந்திய உற்பத்தி பற்றிய பார்வையைக் காண்கையில் புலனாகும். உதாரணத்துக்கு மரச்சாமான் செய்பவன் தெய்வம் மரச்சாமானின் அழகில் , நேர்த்தியில், அது தரும் வசதியில் இருக்கின்றது, ,மரச்சாமான் செய்யும் வேகத்தில் இருக்கின்றது என எண்ணாமல் அதை மரச்சாமானை செய்யும் முறையில் மட்டும் இருக்கின்றது எனப் பிழைப் பார்வை கொள்வது.  செய்யும் முறையை வளர்க்காமல் தேக்கிப் பிடிப்பது. 

மேலே உள்ள மனநிலை உடைய இந்தியத் தொழிலானது,  சர்வதேச அளவில் ஆங்கில வணிகர்கள் வழியே, இணைந்து செயல்படும் பொழுது எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றில் பங்கு பெற்றது எனக் கற்பனை செய்யலாம். ஒரு பெரிய விராட உருவம் இந்தியராகவும், இன்னொரு பெரிய விராட உருவம் ஆங்கிலேயத் தரப்பிலும் சர்வதேச வணிக ஒப்பந்தம் செய்வதாக கற்பனை செய்யலாம். இந்த ஒப்பந்தத்தில் இந்தியரின் கோரிக்கைகள் என்னவாக இருந்திருக்கும்? இந்த ஒப்பந்தத்தில் ஆங்கிலேயரின் கோரிக்கை என்னவாக இருந்திருக்கும்?  இதுதான் நம்மை போன்ற இந்திய வம்சாவளியினர் கற்பனையில் யோசித்து பார்க்க வேண்டிய விஷயம்.

படம் உதவி: வால்ஸ்ட்ரீட்மோஜோ

இந்த புத்தகம் பேசும்  1600-1830 காலகட்டத்தில் இந்தியர்களுக்கு பெரும் செல்வம் திரட்டி தரும் வல்லமையுடன் இருந்த உற்பத்தி தொழில் திறமைக்கு அன்றைய அறிவு , வீரம், வணிகம் மூன்றும் என்ன செய்தன என நமக்குக் கேள்வி வரலாம். உற்பத்தி தொழில் என்னும் சக்தியின் மதிப்பினை பற்றிய அறியாமை இருந்ததாகவே தெரிகின்றது. அறியாமையால்  உள்ளூர் வீரமும், அறிவும், வணிகமும் தன்னை தாங்கும் கால்கள் தொழில்கள் என உணராமல் நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டுபவன் போலச் செயல்பட்டன. அதனால் கால்களை முடமாக்கும் இடத்துக்கே கொண்டு சென்றதாகவே எனக்கு எண்ணம் உள்ளது.

இந்த எண்ணம் வந்த பின்பு, இனி என்ன செய்யலாம் என கேள்வி வருகிறதல்லவா?  இனி உற்பத்தி, சக்திக்கு, காலத்துக்கு தக்க வடிவம் உருவாக்கிக் கொள்ளுதல் அவசியம் என்பதை கருத்தியலாக வளர்த்தெடுப்பது அவசியம். ஏனென்றால் உற்பத்தி சக்தியை உடைய நாகரீகங்களுக்கு,  அந்த நாகரீகங்கள் சென்ற இடமெல்லாம் அந்த சக்தி சிறப்பினை தரும். உண்மையான மரியாதையைப் பெற்றுத் தரும்.

இன்றைக்கு உண்மை என்பதை அறிய உலகத்தின் உற்பத்தி வல்லமை உடைய நாடுகளின் பட்டியலை ஒரு தரம் பார்ப்போம். ப்ரூங்கிங்ஸ் அறிவாய்வு நிறுவனம் வெளியிட்ட  பட்டியல் கீழே உள்ளது.  உலக உற்பத்தியில் எத்தனை சதம் ஒரு நாகரீகம் பங்களிக்கின்றது என்பது பொறுத்து நாகரீகத்தின் மதிப்பு உலகில் கூடும் என்பதற்கு  கூடுதல் சான்றாகவே இது உள்ளது.

பரிந்துரையின் துவக்கத்தில்  “சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமாகிய இரண்டும் ஒரு சேரக் கைகூடும்” என வள்ளுவன் சொன்னதில் துவங்கினோம்.

இந்த நூல் வழியாக நாம் அறிந்து கொள்வதைச் சுருக்கமாக இவ்வாறு சொல்லலாம்.

  • உற்பத்தி தொழில் மதிப்பினையும், செல்வத்தினையும் உலக நாகரீகங்களுக்கு வழங்க வல்லது.  
  • உற்பத்தி தொழில் திறமையை இழப்பதென்பது வறுமையையும், எள்ளலையும் உலக நாகரீகங்களுக்கு அளிக்கும். 

உற்பத்தி தொழில் குறித்து சிந்தையிலும், செயலிலும் ஊக்கம் கொண்டு அதன் சக்தியை வளர்த்துக் கொள்வதன் வழியேதான் அறமும், இன்பமும் 21ம் நூற்றாண்டில் இந்திய நாகரீகத்துக்குப் பெருகும் வழிகள் அமைய வாய்ப்பு உள்ளது. ஆகவே உலக தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்.

முந்தைய பகுதி


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to ““பேரரசு” என்னும் கருத்தாடல் விற்கப்பட்ட விதமும், பிரிட்டன்/அமெரிக்க உருவாக்கத்தில் இந்தியாவின் இடமும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.