ஹலோ, யாரேனும் இருக்கிறீர்களா?

பல காலங்களாக மனிதர் சிந்திக்கும் கேள்வி இது. இத்தனைப் பெரிய அண்டத்தில், நாம் வாழும் பூமியில் மட்டுமே உயிரினங்கள் உள்ளதா? அல்லது பிரபஞ்சத்தில் வேறெங்காவது இருக்கிறதா? அறிவியல் இதை ‘செடி’ (Search for Extraterrestrial Intelligence-SETI) என்று அழைக்கிறது.

நாம் இதுவரை நம்மைப் போன்றவர்களையே வேற்றுக் கிரகங்களிலும் தேடுகிறோம். அல்லது சற்று தீவிரமாகச் சொல்கிறோம்- நம்மிலும் மேம்பட்ட அறிவுஜீவிகள் வேற்றுலக வாசிகள் என்று. பறக்கும் தட்டுக்கள், வளி மண்டலத்தைத் தாண்டி வந்து செல்லும் வான் ஓடங்கள் போன்றவை நம் கற்பனைகளாக இருக்கலாம் அல்லது அந்த யூகத்தைப் பின்பற்றி நாம் செயற்கை அறிவு மற்றும் ஆழ் இயந்திரக் கற்றல் மூலமாக அறிய விரும்பும் வேற்றுலக வாசிகள் பற்றிய சிறு புரிதலைத் தரலாம்.

“பிரபஞ்சத்தில் எங்கேயாவது எப்போதாவது யாராவது தன்னை சந்தித்தால், அவர்களிடம் தெரிவிப்பதற்காகவே, மனிதகுலத்தைப் பற்றிய பல விவரங்களை ஒரு தங்கத்தட்டில் பதித்து ஏந்திக்கொண்டு, நமது சூரியக் குடும்பத்தையே தாண்டி வெளியே செல்லும் நிச்சயமான குறிக்கோளுடன் பயணத்தை துவக்கிய முதல் விண்வெளிப் பயணி.”  “அதற்கப்புறம் சுமார் முப்பது வருடங்கள் தொடர்ந்து பறந்து, 2012இல் நமது சூரிய குடும்பத்தை விட்டு வெளியேறி, இன்னொரு பன்னிரெண்டு வருடங்களுக்கு அப்புறமும் தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.” என்ற அற்புதமான ‘வயதான வாயேஜர்’ (சொல்வனம் இதழ் 314- திரு. சுந்தர் வேதாந்தம்) கட்டுரை சொல்வது நமது தேடலையே.

ஏழு பகுதிகளாக, திரு. கோரா அவர்கள் ‘புவிக் கோளின் அடுக்குகளும், ஆய்வு முறைகளும்’ என்று அருமையாக எழுதியுள்ள கட்டுரைகளில்  ‘இரண்டாவது சூரியன்’  (சொல்வனம் இதழ் 254) என்ற கருதுகோளைப் பற்றி கீழ்க்கண்டவாறு சொல்கிறார். (நம் வேதங்களின் படி 16 ஆதித்தியர்கள் உள்ளனர்)

நம் சூரியனுக்கு வெகு காலத்துக்குமுன் தொலைந்துபோன ஓர் இரட்டை உண்டு. 

இரு சூரியன்களும் சிறு வயதில் விண்மீன்களுக்கு இடையே உள்ள பரவெளியைக் கடந்து செல்லும் சிதைவுக் கூளங்களைச் சேகரித்துச் சூரிய அமைப்பின் எல்லைப்புறத்தில் குவித்துவைத்தன.

இரண்டாவது சூரியன் பல யுகங்களுக்கு முன்பே நம் சூரியனின் சுற்றுப் பாதையைவிட்டு விலகிப் பரவெளியின் வேறு பகுதிக்கு சென்றுவிட்டது.  

விலகிச் செல்வதற்குமுன்பு அது நம் சூரியனுடன் பால்வீதியை சுமார் ஒரு டஜன் தடவை சுற்றி வந்திருக்கக்கூடும்.

தொலைந்துபோன இரண்டாவது சூரியனின் தாக்கங்கள், சூரியன் கைவசமிருக்கும்  வெளி எல்லைப்புறத்தில் வால் விண்மீன்களையும் விண்வெளிப் பாறைகளையும் உள்ளடக்கிய புதிரான ஊர்ட் முகிலாகப் பதிவாகி இருக்கலாம்.”

வானிலும், கீழிலுமாக நாம் உயிரிகளைத் தேடுகிறோம்.

ஆம், உயிர் என்றால் என்ன?

உயிரியம், கரிமம், நீர், சக்தி இவை இருந்தால் உயிர்கள் இருக்குமா? புவி நிலையில் தோன்றியிருக்கும் அதே சூழ்நிலைகளில்தான், புறக் கோள்களிலும் உயிர் இருக்கும் என்பது அறிவியலின் கருத்தா? அங்கிருக்கும் நுண்ணுயிர்கள், தங்களை, நம்மைப் போலவே தகவமைத்துக் கொள்ளுமா? அதை இன்றைய நம் தொழில் நுட்பத்தின் உதவி கொண்டு அறிய முடியுமா? மிக அதிக வெப்பத்திலும், அமிலத்தன்மை மிகுந்திருக்கும் சூழல்களிலும், உப்பு அதிகமாக இருக்கும் இடங்களிலும், ஆழ்கடலில், வெப்ப நீர் துவாரங்களைச் சுற்றி வாழும் படைப்புகளையும், தீவிர கதிரியக்கத்திலும் நிலவும் உயிரிகளையும் பார்க்கும் போது உயிர் என்பதன் வரையறை பூமி சார்ந்த ஓன்று மட்டுமல்ல என்பது தெளிவாகிறதல்லவா?

உயிரா, உணர்வா, ஏதுமற்றதா?

உயிருள்ளவைகளையும், உயிரற்றவகைகளையும் சரியாகச் சொல்வதற்கு பொருத்தமான கோட்பாடுகள் இருக்கிறதா? கனிமவியலாளரும், வான் உயிரியலாளருமான ராபர்ட் ஹேஜென்(Robert Hazen) மற்றும் அவருடன் பணி புரிபவர்கள், 134 உயிருள்ளவை மற்றும் உயிரற்றவைகளைக் கொண்டு ஒரு பரிசோதனை நடத்தினார்கள். உயிரற்றவைகளில், பெட்ரோலியம், கரிபொருள் நிறைந்த விண்கற்கள், மிகப் புராதன படிவங்கள், அவர்கள் ஆய்வகத்தில் இருந்த குளவி போன்றவை அடங்கும். அனைத்துப் பொருட்களையும் ஆவியாக்கி அதன் வேதியில் குணங்களை ஆராய்ந்தனர். ஒவ்வொரு மாதிரியின் மூலக்கூறுகளிடையேயும் 5,00,000 மாறுபட்ட அம்சங்களை இயந்திரக் கற்றலின் துணை கொண்டு அட்டவணைப்படுத்தியுள்ளனர். உயிருள்ளவைக்களுக்கான தனித்த சிறப்புள்ள இயல்புகள் இருப்பது போலவே, உயிரற்றவைகளுக்கும் தனித்த சிறப்புள்ள இயல்புகள் இருப்பதை இந்த வேதியல் கூறுகள் சொல்கின்றன என அவர் சொல்கிறார். 

அவர்கள் பயன்படுத்திய 70% மாதிரிகளைக் கொண்டு, அவர்கள் பயன்படுத்திய மென்பொருள், 90% துல்லியத்தில், எந்தெந்த பொருட்களுக்கு உயிர் மூலம் இருந்திருக்கிறது என்று வேதியல் அலசல்களில் சொல்லியிருக்கிறது. இந்த வேதியல் பொருட்களை அவர்கள் 7 இஞ்ச் நீளமுள்ள ஒரு உபகரணத்தில் வைத்து ஆய்வு செய்துள்ளனர். இத்தனை சிறிய கருவியை வியாழன், சனி போன்ற கடல் உலகத்திற்கு எளிதில் அனுப்பி அங்கே உயிரினங்களைத் தேடலாம். அவை ஒரு காலத்தில் அங்கே வாழ்ந்தவையாகக் கூட இருக்கலாம். இதன் சிறப்பே, இது மூலக்கூறுகளின் உறவை ஆராய்கிறது- டி என் ஏ (DNA) அல்லது அமினோ ஆசிட்(Amino Acid) போன்றவற்றைச் சார்ந்து இது உயிர்களைத் தேடுவதில்லை. முதலில் சொன்னது போல், அனைத்து உயிர்க்கோளங்களும், (அப்படி ஒன்று அல்லது பல இருக்குமானால்,) பூமியின் உயிர்களைப் போலவே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை அல்லவா?

பூமி 2.0

தொலைவில் இருக்கும் உலகத்தைப் பற்றிய ஊகங்கள் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. 1990 முற்பகுதியில் புறக் கோள்கள் கண்டறியப்பட்டன. 2009ல் நாசாவின் கெப்லர்  (Kepler) தொலை நோக்கி பற்பல புறக்கோள்கள் இருப்பதைக் காட்டியது. ஆயிரக்கணக்கில், கண்கொத்திப் பாம்பாய் விண்மீன்களைப் பார்த்துப் பார்த்து, அவைகளின் பிரகாச ஒளி குறைவு படும் இடங்களில், ஏதேனும் கோள்கள் பயணிக்கின்றனவா என்பதை அறியத் தந்தது அது. கையளவு எண்ணிக்கையில் நாம் அறிந்திருந்த புறக்கோள்கள், 5500 மேலாக இருப்பதும் தெரிய வந்தது.

கெப்லர், நம் பூமியைப் போல, சூர்யனைப் போல, மற்றுமொரு நீர் சார்ந்த புவி இருக்கிறதா என்பதை ஆராய அமைக்கப்பட்டது. நம் இரட்டையரை நாம் இன்னமும் காணவில்லை! (அப்படி ஒருவர் இருந்தால்) ஆனால், 10% முதல் 50%க்குள் நம் சூரியனைப் போன்ற நட்சத்திரமும், நம் கிரகங்களைப் போன்ற கோள்களும் இருக்கக்கூடும் என்பதே வானியலாளர்களை தலை சுற்ற வைக்கிறது. ‘அண்ட வெளியில் கோடானுகோடி சூரியனைப் போன்ற விண்மீன்கள் உள்ளன. அதில் உச்ச பட்சமாக 50% பூமியைப் போன்ற கிரகங்கள் என்றால், வாழத் தகுதியுள்ள கிரகங்கள் கோடிக்கணக்கில் உள்ளன எனப் பொருள் படுகிறது.; என்று சொல்கிறார் வானியற்பியலாளரான ஜெஸ்ஸி க்ரிஸ்டியன்சென். (JessieChristiansen)

புறக்கோள்களில் (Exo planets) உயிர்கள் உள்ளனவா எனக் கண்டுபிடிப்பது எளிதல்ல. புறக்கோளின் மெல்லிய ஒளி தீற்றலை படமெடுத்து, அதன் அலைவரிசைகளில், வேதியல் கூறுகள் உள்ளனவா, இருந்தால் எந்த அளவில் உள்ளன, என்ன வகை வேதிப் பொருள் அது என்றெல்லாம் ஆராய வேண்டும். நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி (JWST) மிகப் பெரும் பயனுள்ள தரவுகளைத் தந்து வருகிறது. 40 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள எம் த்வார்ப் (M Dwarf) என்ற ட்ரேபிஸ்ட்1 (Trappist 1) என்ற புறக் கோளில் 7 சிறிய பாறைகள் உள்ள உலகமிருக்கிறது. இதில் நான்கு கிரகங்கள், தங்களின் விண்மீனிடமிருந்து சரியான தொலைவில் (அதாவது, நீர் இருக்கும் என்பதற்கான ஆதாரம்) இருக்கின்றன. இந்த நான்கில் அருகிலுள்ள இரு புறக்கோள்களில் வளி மண்டலம் இல்லை; மீதமுள்ள இரண்டின் நிலை அறிய அறிவியலாளர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். உயிர் இருக்க இயலாத இடங்களிலும் வளிமண்டலங்கள் உள்ளனவா என்பதை அறிந்து கொள்வதும் உதவிகரமானதே.

நம்மைப் போல் ஒருவனைக் கண்டுபிடித்தோம் என்றால், அதன் மேற்பரப்பில் உயிருக்கானத் தகுதியான வேதியல் எச்சங்கள், தரவுகள் தென்படுகிறதா என ஆராய்தல் முதல் நிலை. ஜேம்ஸ் வெப்பால் இதைச் செய்ய முடியாது. நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 மீட்டர் தொலை நோக்கி, மாபெரும் மெகெல்லன் தொலை நோக்கி, மற்றும் மிகப் ப்ரும்மாண்டமான தொலை நோக்கி ஆகியவை 2030 வாக்கில் சிறப்புத் தகவல்களைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாசாவின், வெளி சார்ந்த அமைப்பான ‘வாழத் தகுதியுள்ள உலகங்களைக் கண்டறிதல்’ (Space based Habitable Worlds Observatory) என்பது 2030களின் இறுதியில் அல்லது 2040 தொடக்கத்தில் செயல்பாட்டிற்கு வரும் எனவும், சில புதிர்களுக்கான விடைகள் தெளிவாகும் எனவும் நம்பப்படுகிறது. 

பயன் என்ன?

இதிலிருந்து எதை அவர்கள் கண்டுபிடிக்க விழைவார்கள்? உயிர்களின் கையெழுத்து (Biosignatures) எனப்படும் தண்ணீரைப் போன்ற மூலக்கூறுகளையா, மீதேன், கரிம வாயுக்களையா, உயிர் குறிப்பான்களையா,(Bio Markers) தொழில் நுட்ப மேம்பாடு கொண்ட உயிரினத்தையா, கடினச் சூழல்களிலும் வாழும் உயிரிகளையா, எதை? இந்தக் கேள்வி முக்கியமானது. ஏனென்றால், நம் பூமியில், உயிர்கள் இருந்த பல கால கட்டத்தில், வேதிப் பொருட்களின் எண்ணிக்கை பயங்கர மாறுபாடுகளுடன் இருந்தது என்பதை நாம் அறிவோம் அல்லவா?

நாசாவின் கோடார்ட் மையத்தில் (Goddard Space Flight Center) பணியாற்றும் ரவி கொப்பாரப்பு (Ravi Kopparapu) ‘நாம், மற்ற கோள்களில் உயிர்கள் இருக்கின்றனவா என்பதை நம் வாழ் நாளுக்குள் கண்டறிவோம். 

  • 2, 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரான பூமியைப் போன்ற ஒன்றை, 
  • பனிப்பந்தான ஒன்றை, 
  • பிராண வாயுவும், ஒசோனும், கரிம வாயுவும், நீரும் உள்ள தற்கால பூமியை, 

இவற்றுள் எதைக் கண்டறிய விழைகிறோம்?’ எனக் கேட்கிறார்.

ஆய்வுகள் எதை நோக்கி?

வானுயிரியல் (Astrobiology) இதைப் போன்ற பல்வேறு கேள்விகளை ஆராய்கிறது. வானியற்பியல்(Astrophysics) தன் கோட்பாடுகளைக் கொண்டு இதை அணுகுகிறது.

பூமியில் உள்ள 99 % நுண்ணுயிரிகளை நம்மால் இன்னமும் ஆய்வகங்களில் உண்டாக்க முடியவில்லை. அக்டோபஸ் (Octopus) என்ற கடல் வாழ் இனத்திற்கு ஒன்பது மூளைகளும், மூன்று இருதயங்களும் இருக்கிறது. உயிர் வேதியியல் இதை வித்தியாசமான உயிரினம் என்று சொல்கிறது; முன்னரே வந்து பூமியின் கடலில் வாழும் ‘வேற்றுலகவாசி’ என்றும் நகைச்சுவையாக வானியற்பியல் சொல்கிறது. மனிதனுக்கு ஆறறிவு என்பதையும் நினைக்க வேண்டும்!

வேற்றுலக வாசிகளிடமிருந்து, வானொலி சமிக்ஞைகளைப் பெறும் முயற்சியில் சில இயற்பியலாளர்கள், 1977ல் ‘அண்டத் தனிமைக்கு முடிவு காணல்’ (Seeking an end to cosmic loneliness) என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டார்கள். அந்தக் காலத்தில் நம் சூர்ய குடும்பத்திற்கு அப்பால் நாம் ஒரு கிரகத்தையேனும் கண்டுபிடிக்கவில்லை. இப்போதோ பல்வேறு உலகங்களைப் பற்றி பேசுகிறோம். நம் பூமியின் கடல்கள் நமது தனிச்சிறப்பு என்று சொன்ன நாம், சூர்ய குடும்பத்திற்கு அப்பால் உள்ள நிலவுகளின் நிலத்தடி நீரை அறிந்துள்ளோம். ஏன், செவ்வாய் கிரகத்திலுமே, நீர் இருந்தது ‘ரோவரால்’ கண்டுபிடிக்கப்பட்டது.

உயிர்கையெழுத்து, உயிர் குறிப்பான்கள் இவைகளுடன் தொழில் நுட்ப குறிப்புகளையும் ‘செடி’ தற்சமயம், இயந்திர மொழியின் மூலம் அறியத் தொடங்கியுள்ளது. ரேடியோ சிக்னல், ஒளிச் சீரொளி துடிப்புகள்,(Optical Laser Pulses) மாபெரும் வெளி சார் பொறியியல் திட்டங்கள், மண்டல மாசுக்கள், போன்றவையும் கணக்கில் கொள்ளப்பட வேண்டியவையே என்று ‘செடியைச்’  சோஃபியா ஷெய்க் (Sofia Sheikh) சொல்கிறார்.

செயற்கை நுண்ணறிவு, ஆழ் இயந்திர அறிவு

இயற்கை நிகழ்வினைச் சாராத, அறியாத இடங்களிலிருந்து நொடியில் வெளிச்சம் காட்டி மறைந்து விடும் ஒளிகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவிற்கு,(AI) Zuicky Transcient நிறுவனப் பொறியாளர்கள் பயிற்சி அளித்து வருகிறார்கள். கேள்வி கேட்க தகுந்த இடம் இதுவே என்று சொல்கிறார் கால்டெக்கைச் சேர்ந்த தரவு விஞ்ஞானியும், வானியலாளருமான அஷீஷ் மஹாபால்.(Asish Mahabal) புதுமைகள் நிறைந்த வான் வெளி அறியக்கிடைக்கலாம் அல்லது அளவிறந்த எண்ணிக்கையிலான சூர்யத் தகடுகள் ஒரு விண்மீனைச் சூழ்ந்து கொண்டு மிகு சக்தி கோரும் வேற்றுலக வாசியைக் காட்டலாம்.

இது தொடர்பாக நாம் ஒரு அட்டவணையைப் பார்ப்போமா?

புவிதான் மையம்2500 பி சி
சூர்ய மையம்1500 ஏ டி
மற்ற விண்மீன்1840
மற்ற விண்மீன் மண்டலம்1920
பொருட்களின் மற்றைய தோற்றங்கள்1950
வேற்று உயிரினம்2000
புறக் கோள்கள் மற்றும் அதில் உயிரினங்கள்  ????

இது நம் பூமியைப் பற்றி, நம் பால் வீதியைப் பற்றி, மற்ற விண்மீன் மண்டலங்களைப் பற்றி நம்முடைய புரிதல் எவ்வகையில் மாறி வந்திருக்கிறது என்பதைச் சொல்கிறது. இது க்ரிஸ் இம்பி(Chris Impey,) Royal Institutionல் நிகழ்த்திய உரையில் இருந்து அமைக்கப்பட்டது. (Exoplanets and the search for life in the universe – with Chris Impey (youtube.com) அந்த உரையில் சில சுவையான செய்திகள் உள்ளன. கிரகங்கள் மோதலினால்  வளர்கின்றன. சில கிரகங்கள் இதில் அழிந்தும் போகின்றன. சில தமக்கென ஒரு விண்மீன் இல்லாது வான் வெளியில் சஞ்சரிக்கின்றன. அவற்றை நாடோடி அல்லது அனாதை கோள்கள் (Nomad, Orphan) என்று குறிப்பிடும் இம்பி, அவைகள் இருப்பதையும், மேலும் அவை வலுவான வளி மண்டலத்துடன் இருப்பதையும் கணினி உருவகப்படுத்துதல் மூலமாக வானவியலாளர்கள் கண்டறிந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். அவற்றில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா என ஆராய்வதும் தேவையே. அதன் சூழல் அமைப்பு உயிர் வாழ்வதற்கான சாதகங்களைச் சொல்வதாக அவர் சொல்கிறார். அவைகளுக்கென நட்சத்திரம் இல்லை என்று சொல்வதால் இந்தக் கூற்று சற்று குழப்பத்தைத் தருகிறது.

புத்தம் புது பூமி வேண்டும்

இரண்டாவது பூமியை தேடுகிறோம். வில்லியம் ப்ளேக்(William Blake) என்ற கவிஞர் எழுதுகிறார் ‘ சிறு மணல் துகளில் உலகைக் காண்பதும், காட்டுப் பூவில் சொர்க்கத்தைத் தேடுவதும்’ என்று.

இந்தியா பல்வேறு உலகங்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறது?

பதினான்கு உலகங்கள் உள்ளன. மேலே ஆறு, நடுவில் பூமி, கீழே ஏழு. அந்த உலகங்களில் யாரார் வசிக்கிறார்கள் என்பதும் சொல்லப்பட்டுள்ளது

உலகின் பெயர் (மேலே உள்ளவை)வசிப்பவர்
புவர்கிரகங்கள், நட்சத்திரங்களுக்கு உரிய தேவதைகள்
சுவர்முனிவர்கள்
மஹர்இந்திரன் உள்ளிட்ட தேவர்கள்
ஜனோபித்ருக்கள்
தபோமற்ற தேவதைகள்
சத்யப்ரும்மா
பூமிமனிதர்கள், விலங்குகள், பறவைகள் 

கீழுலகங்கள்

உலகின் பெயர்வசிப்பவர்கள்
அதலஅசுரர்கள்
விதலதவம் செய்த அரக்கர்கள்
சுதலமஹாபலி போல தான, தர்மங்கள் செய்தவர்கள்
தலாதலமாயாவிகள்
மகாதலஅரும் செயல்கள் செய்து புகழ் பெற்ற அசுரர்கள்
பாதாளவாசுகி உள்ளிட்ட பாம்புகள்
ரஸாதலஅசுர குருமார்கள்

இவற்றைத் தவிர ‘கந்த வெற்பில்’ குமரனுடன் முருகனடியார்களும், அவன் படை வீரர்களும், வைகுந்தத்தில் மஹாவிஷ்ணுவும், அவர் பரிவாரங்களும், கைலாசத்தில், சிவனும், அவன் குடும்பமும், மூல முதலான கணபதியும், சிவ கணங்களும், அனைத்துலகிலும் சஞ்சரிக்கும் நாரதரும், யட்சரும், கந்தர்வர்களும், பர ஆகாசத்தில் சிவமும், சக்தியுமாய் நம் முன்னோர்கள் வகைப்படுத்தியுள்ளனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் நாம் அண்டங்களை எவ்வாறு அறிந்துள்ளோம் என்பதன் மாதிரியாகும் (https://www.iskcon-truth.com/bhu-mandala/fourteen-worlds.html)

The 14 planetary systems

பதினெண் சித்தர்கள் பற்றிய ஒரு கட்டுரையில் விண் வெளியின் பல பெயர்கள் வருகின்றன.

‘வானாகி விண்ணாகி ஆகாயமாகிக் ககனமாய் விசும்பாய், பரவெளியாய், பால்வெளியாய் நிறைந்து பிண்டமாய் அண்டமாய் பேரண்டமாய் அண்ட பேரண்டமாகி, அருவாய், அருவுருவாய். உருவ அருவாய் திசைகள் நான்காய், எட்டாய், பதினாறாகி, முப்பதிரண்டாய்,அறுபத்து நான்காய் விளங்கிடும் தத்துவமே.’

நாம் வாழும் பூமியை நாம் நேசிக்கிறோமா, ஒழுங்காகப் பாதுகாக்கிறோமா, இயற்கையைச் சிதைக்காமல் விட்டு வைத்திருக்கிறோமா, அதன் வளங்களை கொள்ளையிடாமல் தக்கப் பயனிற்கு மட்டும் எடுத்துக் கொள்கிறோமா எனவும் சிந்திப்போம். பூமி 2.0 என்பது நல்ல ஒரு தேடல் தான்’ அத்துடன் சுய பரிசீலனையும் தேவையே!

உத்ரா

ஆதாரங்கள்:

https://www.iskcon-truth.com/bhu-mandala/fourteen-worlds.html

The Biggest Questions: are we alone in the universe? By Adam Mann Nov 13,2023

Exoplanets and the search for life in the universe – with Chris Impey (youtube.com)


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.