அவம்

காசி மாமா விடியற்காலையில் வீட்டிற்கு வந்தார். எப்போதும் வரும்போதெல்லாம் கடலூர் ஐயங்கார் பேக்கரி ஹனி கேக், இல்லையெந்றால் புதிய ரக ரஸ்குகள் வாங்கிவருவார். இம்முறை அப்படியில்லை.

சோர்வாக இருந்தார். எப்போதும் குறுகுறுப்பக இருக்கும் அவரின் கண்களில் ஒரு மென் சோகம் படிந்து இருந்தது.

அம்மா “வாடா” என்றாள். 

ஊரை விட்டு வெளியில் இருக்கும் நாங்கள் குடியிருக்கும் அந்த இடம் பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை செய்யும் மக்கள் வாழும் இடம். இடத்திற்கு மட்டும் வாடகை என்பதால், மற்ற இடங்களைவிட வாடகை குறைவாக இருக்கும், பெரும்பாலும் தென்னை ஓலை வைத்து கட்டிக்கொள்ளவேண்டும், தளக்கட்டுமானம் கூடாது என்று கட்டளை. எப்போது வேண்டுமானாலும் இடத்தை காலி செய்யவதற்கு வசதியாக இந்த ஏற்பாடு. எங்களுக்கு மட்டும் நாட்டு ஓடு வேய்ந்து கொள்ள அனுமதித்திருந்தனர். மூன்று சிறிய அறைகள் கொண்ட தெற்கு பார்த்த அந்த மிகச்சிறிய வீட்டில் அக்கா, அண்ணன், தம்பியுடன் நாங்கள் 7 பேர் வசித்து வந்தோம். 

மாமா கதைவை ஒட்டிய சேரில் உட்கார்ந்து வெளியே பார்த்துக்கொண்டு இருந்தார். திரும்பி திரும்பி நாங்கள் தூங்குவதை பார்த்துக்கொண்டிருந்தார். நான் பாதி உறக்கத்தில் மாமாவை பார்த்துக்கொண்டிருந்தேன்.

வீட்டுடன் வலதுபுறம் இருக்கும் சிறு இடத்தில் பெரிய சுவர் எழுப்பி, குளிக்கவும், பாத்திரங்கள் கழுவவும் ஒதுக்கி இருந்தனர். எப்போதும்போல் எங்கள் ஊரின் பிரதானமான குயில் ஒன்று எங்கள் வீட்டின் பின்புறத்தில் உள்ள மாமரத்தில் ஒன்று தனிமையில் கூவியது.

அம்மா தோட்டத்தில் இருந்து வந்தாள்.  

“மாமா எங்கக்க”

“வெளிய போயிருக்காருடா…” 

“வந்துடுவாரு…”

பால்காரன் வந்து “போயிங்க்” என்று அழுத்தினான்.

தெருக்குழாயில தண்ணி பிடிக்க, தண்ணி குடங்களை எடுக்க தோட்டத்திற்கு சென்ற அம்மா, பால் கிண்ணத்தை எடுத்துகொண்டு வெளியே சென்றாள்.

“ஏண்டி இன்னும் என்ன தூக்கம் எந்திரிடி” என்று என் அருகில் படுத்திருந்த அக்காவை திட்டினாள். 

” நாலபின்ன கட்டிகினு போற எடத்துல, அம்மாகிட்ட வளந்திருந்தா நல்லா வளத்திருப்பா… சித்திகிட்ட வளர்ந்துதால இப்படி சோம்பேறி ஆயிட்டான்னு என்னதாத்தான் கண்ட நாயிங்க சொல்லும்” என்று திட்டிக்கொண்டே கதவை தாண்டி சென்றாள்.

அக்கா எழுந்து தாவணியை சரிசெய்து கொண்டு எழுந்தாள். மாமா அக்காவை பார்த்துக்கொண்டிருந்தார்.

அம்மா வந்ததும் பார்வையை வெளியே திருப்பி கிளம்ப முயன்றார். 

“இருடா காபி போடறேன்.. குடிசிட்டு  போ”

மீண்டும் சேரில் உட்கார்ந்தார்.

அப்பா அதற்குள் வந்து, தோட்டத்திற்கு சென்றார். 

மாமா காபி குடித்துகொண்டு இருந்தார்.

அப்பா எப்பவும்போல கோமனத்துடன் உள்ளே வந்து குளிக்க துண்டு எடுத்தார்.

மாமாவை ஒரு நிமிடம் விழி கருத்து பார்த்தார். 

மாமா எழுந்து நின்று பார்த்தார்.

காபி குடித்த டம்ப்ளரை வைத்து விட்டு மாமா வெளியே சென்றார்.

“என்னவாம் இவனுக்கு காலைலே வந்திருக்கான்….”

“அவனே நொந்துபோய் வந்திருக்கான்…” “ ஊ..ன்.. வாயால எதுவும் சொல்லாத…”

“பாவம்…”

“ம்ம்…” 

“என்ன பாவம்…”

“எம்பொண்ண வச்சி வாழ அந்தஸ்து இல்ல நாயீக்கு…“

“இங்க எதுக்கு வந்தான்….”

“அப்பிடி சொல்லாத…” 

“அவன் பாவம்…”

“அவன் இடத்தில வேற ஒரு ஆம்பள இருந்திருந்தா… இன்னேரம் செத்திருப்பான்…”

“ம்ம்… சாவா வேண்டியதுதானே….” “எம் பொண்ண வீணாக்கிட்டான்… நாயீ” 

அம்மா மவுனமடைந்தாள் .

பிரஷை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றார்.

மாமா வீட்டை ஒட்டிய முருங்கை மரத்தின் ஓரத்தில் நின்றுவிட்டு  நடக்கும் காலடி சத்தம் கேட்டது.

அப்பா குளித்துவிட்டு அறையில் போய்… 

“ஏண்டி இங்க இருந்த நிக்கர் எங்கடி”

“கண்ணு முன்னாடியே இருந்தாலும் உனக்கு ஒன்னும் தெரியாது ….”

அம்மா எங்களை கடந்து அறைக்கு சென்றாள். 

கொஞ்ச நேரத்தில் மாமா திரும்பி வந்து தோட்டத்திற்கு சென்றார். 

அப்பா உள்ளே உட்கார்ந்து டைரியில் நேற்றைய செலவு கணக்கை எழுதி கொண்டிருந்தார்.

மாமா உள்ளே சென்றார்.

“மாமா நான் கொஞ்ச நாள் இங்க இருக்கட்டா…”

“இது என்னாடா பேச்சு…”

“இல்ல மாமா அங்கன வீடு காலி பண்ணியாச்சு… அதான்…”

“ஏண்டா…”

“நான் அங்க போல…”

“ஒரு மனுசனுக்கு தன்னம்பிக்க வேனுண்டா..”

“சும்மா… பொலம்பரது வுடு..”

“போய் வேலைய பாரு…”

“இல்ல மாமா நான் வேலூர்ல வேலை கேட்டிருக்கேன். அதுவரைக்கும் தான்…”

“நீ இருக்குறதுக்கு சொல்லல… இப்படி ஊருரா போய்தான் இப்படி நிக்கற….”

“நல்லதோ கெட்டதோ ஒரு ஊருல நிலச்சி  இருந்திருந்தா இப்படி ஆகிகூட இருக்காது…”

மாமா தேம்ப ஆரம்பித்தார்.

அப்பா ஒரு நிமிடம் தான் சொன்னது தவறோ என்று நினைத்தார்.  

மாமா விசும்பி அப்படியே ஓரமாக உட்கார்ந்துவிட்டார்.

அம்மா தோட்டத்தில் இருந்து வந்தாள். 

“அவன ஒன்னு சொல்லனா உனக்கு தூக்கம் வராதே…”

“நீ அழாதட…”

“அவ கிடக்கிறா ஓடுகாலி நாயி..”

அம்மாவின் குரல் சிறிய அழுகை விசும்பலில் இடறியது.

முந்தானையால் மாமாவின் கண்களை துடைத்து விட்டாள். 

மாமா அதை உதறிவிட்டு எழுந்தார்.

அப்பா “சரிடா…” “தொழுதூர்ல… செட்டியார் கடையில வேல நடக்குது…” 

“நம்மாளு ஒருத்தன் கூடமாட இருந்தா நல்லா இருக்கும்… சாப்ட்டு கிளம்பு… நான் சங்கருக்கு போன் பண்ணி சொல்றான்… அவனும் ஊருக்கு வரணும்னு சொன்னான்.

மாமா ஜன்னலின் வெளியே பார்த்துக்கொண்டு நின்று இருந்தார்.

அக்கா தோட்டத்தில் இருந்து மாமாவை பார்த்துக்கொண்டிருந்தாள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.