மலங்கி மடுவாகலி

இரவுப் பெண் முழுச் சந்திர ஒளியில் அவ்வப்போது நீராடினாள். மேகங்கள் அவனை மறைக்காத போது, அந்த மலைக் குன்றுகளில், மணல் மேடுகளில், பாதைச் சரிவுகளில் முழு மதி மயங்கிக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட நள்ளிரவு நேரம். காற்றில் குளிர் இனிமையாகக் கலந்திருந்தது. சற்றுத் தொலைவில், முந்திரிகள் அடர்ந்துள்ள மரங்களின் செறிவில் காற்று மனம் போல முணுமுணுத்தது, சிணுங்கிச் சீண்டியது, உரத்தும் பேசியது. வாசுவும் என்னுடன் வந்திருக்கலாம். நான்கு சுவற்றினுள் அடைந்து கிடப்பதற்கு பயணங்கள் எதற்கு?

விரவிக் கிடந்த மணற்துகள்களின் பொடிசான கற்கள் வண்ணக் கோலம் காட்டிக் கொண்டிருந்தன. காலடியில் குறுகுறுத்தது மணல். நான் அமர்ந்திருந்த மணல் மேட்டிலும் கூட கடினமும், மென்மையுமான ஒட்டாத துகள்கள். கடற்கரைகளில் இப்படிப் பரந்த மணலைப் பார்த்திருக்கிறேன்; பாலையிலோ கேட்கவே வேண்டாம். ஆனால், கடற்கரை மணலைப் போலவோ, பாலையின் முகவரி போலவோ இல்லையே இந்த மண். அதுவும், சுற்றிலும் ஊர்களால் சூழப்பட்டுள்ள இந்த இடத்தில் எங்கிருந்து இவ்வளவு மண் வந்திருக்கிறது? என் கண்கள் விரிந்து விரிந்து அந்தக் காட்சியை அப்படியே உண்பதைப் போன்றதொரு உன்மத்தம் என்னை ஆட்டுவித்தது. மணல்மேட்டிலிருந்து ஏழடி  தொலைவில் என் பார்வை நிலைகுத்தி நின்றது. இதுவரை காணாத ஒளிர்வு அந்த இடத்தில். முதலில் காட்டிலிருந்து ஏதோ ஒன்று பதுங்கிப் பதுங்கி வந்து தன் கண்களால் என்னைத் துழாவுவதைப் போன்ற பயம் வந்தது. எழுந்து ஒடலாம் என்றால், அது என்னை விட வேகமாகப் பாயுமோ என்ற திகில். இத்தனைக்குமிடையே, என் பிணமாவது எஞ்சுமா, வாசு அதைக் கண்டெடுப்பானா என்ற கற்பனை வேறு! மணல்மேட்டின் உச்சியில் நிற்பது பாறையில் நிற்பதைப் போல அல்ல என்று புதையுண்ட பாதங்கள் அறிவுறுத்தின. ஆனாலும், என் அசைவு ஏன் அந்த ஒளிப் பொருளை சலனப்படுத்தவில்லை? இது என்ன புலியா, பதுங்கிப் பாய்வதற்கு? மண் சரிவில் சறுக்கி இறங்கினேன். சிரிப்பொலி கேட்டது. பெண் குரல்; நள்ளிரவில், மணல் குவியலில், முந்திரிக் காட்டருகில், மனிதர்கள் அற்ற இடத்தில் ஒரு பெண் எங்கிருந்து வந்தாள், ஏன் சிரிக்கிறாள்? அவளும் கிட்டத்தட்ட துணிச்சலானவளோ என்னைப் போல? வாசு இந்த அமானுஷ்யத்தை இழந்து விட்டானே என்று வருத்தமாகக் கூட இருந்தது, என் தொடைகள் நடுங்கிக் கொண்டிருந்தாலும்.

துணிவை வரவழைத்துக் கொண்டு அந்தத் தனி பிரகாசத்தை நோக்கி நடந்தேன். சிரிப்பு நின்றுவிட்டது. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, அதை நோக்கிக் குனிந்தேன். அழகான பெரிய கல் வைர மூக்குத்தி, அதனுடன் இணைந்த நல்முத்துச் சரம்.  மதி ஒளியில் இன்னமும் டாலடித்தது வைரம்.  ஊதி, தூசிகளைப் போக்கி, கைகுட்டையால் அழுத்தித் துடைத்தேன். பட்டுக் கரு நீலப் புடவை பதித்த நல் வைரம் என்று பாரதி மனதினுள் பாடினார்.

இந்த தலக்காடு, தொல்லிலாகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறதே, அவர்கள் எத்தனை அகழ்வாராய்ச்சி செய்திருப்பார்கள், அவர்கள் கண்களில் தென்படாத இந்த மூக்குத்தி, அதுவும் இத்தனை மதிப்புமிக்க ஒன்று எனக்குத் தென்பட்டிருக்கிறதென்றால்… இதன் அர்த்தம் தானென்ன? பொழுது விடிந்ததும் அவர்களிடம் ஒப்படைத்து விடலாம், அதுதான் நல்லது. எனக்கென்னவோ, இது அரச வம்சத்து நகையாகத்தான் தோன்றுகிறது. பயணிகள் இத்தகைய ஒன்றை அணிந்து வந்திருக்கவோ, தவறவிட்டிருக்கவோ வாய்ப்பில்லை.

என் எண்ண ஓட்டத்தைப் படித்தது போல அந்தப் பெண்குரல் மீண்டும் கேட்டது. நான் தைர்யம் உள்ளவன் போல் நடித்தேன்.

“சீனு, அது என்னுடையதுதான். உன்னிடம் பேசுவதற்காக நான் அதை இங்கே வைத்தேன்.”

‘நீ… நீங்கள் யார்? என் பெயர் எப்படித் தெரியும்? எங்கே ஒளிந்திருக்கிறீர்கள்? நேரில் வாருங்கள்.’

“அரசிகள் அவ்வளவு எளிதாக தரிசனம் தரமாட்டார்கள். அதுவும் நான் ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவள். உன்னால் என்னைக் காண முடியாது. நான் பேசி முடிக்கும் வரை, அந்த மூக்குத்தி உன் கையில் இருக்கும். பின் மறைந்து விடும், சம்மதமா?”

என் ஆவல் என்னையும் மீறி ஒப்புக்கொள்ளச் செய்தது.

“நான் அலர்மேலு அம்மா. என் கணவரும், அரசருமான திருமலைராஜா என்ற ரெங்கராஜருக்கு ‘அம்முலு’”

இதைச் சொல்லும்போதே அந்த மங்கையின் குரல் உணர்ச்சியில் நெகிழ்ந்தது.

“நான் அவரது இரண்டாம் மனைவி. நாங்கள் விஜய நகர அரசின் பிரதிநிதியாக ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஆண்டு வந்தவர்கள். நீ பார்த்திருக்கிறாயா, கோயிலில் இருக்கும் ரங்க நாயகியை? அவளைப் போல நானும் இருப்பதாக என் கணவர் சொல்வார், அரண்மனையிலும் சொல்வார்கள். விஜய நகரத்திலிருந்து எங்களுக்கு பலமான சேனைகளைக் கொடுக்கவில்லை. ஆனால், நாங்கள் மக்களை நலமாக வைத்திருந்தோம், பாதுகாத்தோம்.”

‘உம்’

“ராஜ உடையார் என்றொரு மைசூரு மன்னன்; நாடு பிடிக்கும் ஆசையில் அவன் எங்களைச் சுற்றி வளைத்தான். என் திருமலையை, என் அன்பான கணவனை வஞ்சகத்தால் சிறை பிடித்தார்கள். நான் அரசு நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டு, இரவில் பயணித்து, தலக்காட்டிற்கு வந்தேன். என் கணவர் குணப்படுத்த முடியாத நோயால் இறந்து விட்டார் என்ற செய்தி இடி போல என்னைத் தாக்கியது. நானோ தலைமறைவாக இருக்கிறேன். எங்கள் அரசு, எங்கள் மக்கள் என்ன செய்கிறார்கள் என்ற தகவல்கள் ஒற்றர்கள் மூலமாக எனக்கு வரும், நான் செயல்திட்டங்களை குறிப்புணர்த்தி அனுப்புவேன். இந்த நிலையில் ராஜ உடையாரின் சேனை என்னை நெருங்கி விட்டது. என் உடலும், என் நகைகளும் அவர்களின் குறி. ‘ராஜ உடையார் முன் என்னைக் கைதியாக நிறுத்துங்கள், ஆனால், என் பெண்மை உங்களுக்கானதல்ல, என் நகைகளும் உங்களுக்கில்லை’ என்றேன்.

‘ஐயோ’

“ஆம், மாளிகையிலிருந்து மண்ணிற்கு வரும் பெண்களும் இதை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது; பாஞ்சாலிக்கு நடக்காததா? ஆமாம், இந்த பஞ்சலிங்கத் தலக்காட்டில் நீ பாதாளேஸ்வரர் சன்னதியைப் பார்த்தாயா? அதை முன்னர் இங்கே கட்டியவர்கள் பாண்டவர்கள். அவர்களது வனவாசத்தில், நிழலுக்காகவும், மறைந்து வாழ்வதற்காகவும், அவர்கள் கட்டிய புராதனக் கோயில் அது. பின்னர் மேலைக் கங்கர்கள் அதைப் பெரிதுபடுத்தினார்கள். அந்த லிங்கத்திற்கு ஒரு விசேஷம் உண்டு தெரியுமா?”

‘ஆம், சொன்னார்கள். இரண்டிரண்டு மணி நேரத்தில் லிங்கத் திருமேனியின் நிறம் மாறுமாம். நாங்கள் பார்க்கையில், இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது.

Beach sand talakadu

(பாதாளேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வழியின் மணற் பாதை)

“அற்புத லிங்கம் அது. செம்பு நிறம், இளஞ்சிவப்பு, உருக்கின தங்கம், அறியாத நிறம், மரகதப் பச்சை என்று இரண்டு மணிக்கு ஒரு முறை மாறும். அந்த லிங்கத் திருமேனிக்கு மாசி சிவராத்ரியன்று பிரும்ம தேவன் விரதமிருந்து பூஜை செய்வார் என்று என் முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். மணல் மூடியுள்ள இந்தக் காட்டுப் பகுதியில் முப்பது கோயில்களுக்கும் மேலாக இருந்தது ஒரு காலத்தில். ஆனால், இன்றோ, வைத்யனாதர், பாதாளேஸ்வரர், மருலேஷ்வரர், அரகேஷ்வர், மல்லிகார்ஜுனா என்ற ஐந்து லிங்கங்களும், சௌடேஸ்வரியின் கோயிலும், ஹொய்சாள விஷ்ணு வர்த்தன் கட்டிய கீர்த்தி நாராயணன் கோயிலும் தான் உங்களுக்குத் தெரிகிறது. 

Talakadu temples

கீர்த்தி நாராயணா கோயில்

‘ஆம், தொல் இலாகாவினர் சொன்னார்கள். அதிலும் வைத்யனாத ஸ்வாமி கோயில் தாளா, காடா என்ற இரு வேட்டுவர்களால் அடையாளப்படுத்தப்பட்டது என்றார்கள்.’

“அவர்கள் வேட்டையாட வரும் போதெல்லாம், காட்டு யானைகள்  ஓரிடத்தில் மரத்தை உலுக்கி பூமாரி பெய்து அதை வலம் வந்து மீண்டும் காட்டுக்குத் திரும்புவதைப் பார்த்தார்கள். வியப்பினால் உந்தப்பட்டு அந்த மரத்தின் அடியில் கோடாரியால் வெட்ட சிவலிங்கத் திருமேனியிலிருந்து குருதி கொப்பளித்து, அவனது ஐந்து முகம் போலவே ஐந்து திசைகளிலும் சிதறியிருக்கிறது. பின்னர் கங்க அரசர்கள் கோயில் எழுப்பி பரிகாரம் செய்திருக்கிறார்கள். காவேரி மடங்கி மலங்கி என்ற பெயரில் இந்த பூமியைச் செழிக்கச் செய்தாள்.”

‘மலங்கி எங்கே? மணல் ஏன் இங்கே?’

“யாரைக் கேட்கிறாய் கேள்வி? எங்கே  கேட்க வேண்டும் இந்தக் கேள்வியை தெரியுமா உனக்கு?.” 

அலர்மேலு அம்மாவின் குரல் ஓங்கி ஒலித்தது. மூச்சு அதி வேகமாக வந்து கொண்டிருந்த ஒலியும் கேட்டது. நான் செய்வதறியாது திகைத்தேன். ஒருக்கால், அந்த ராஜ உடையாரின் சேனையினரோ, அவரேவோ, இந்த அம்மாவை கொடுமைப் படுத்தினார்களோ?

“நீ நினைப்பதும் சரிதான். நான் சொன்னேனே முன்னர், என் பெண்மையை, என் நகைகளை அவர்கள் கேட்டனர். நான் தற்கொலை செய்து கொண்டேன்.”

நான் நடுங்கி விட்டேன். அமைதியுறாத ஆன்மாவிடமா நான் பேசிக்கொண்டிருக்கிறேன்?

‘அம்மா, தவறாக நினைக்காதீர்கள். நகைகளைக் கொடுத்துவிட்டு தப்பித்திருக்கலாமே நீங்கள்?’

“முட்டாளா நீ? என் நகைகளையும், அரசு கஜானா நகைகளையும் வாங்கிக் கொண்ட பின்னர் என்னை அவன் விட்டு வைப்பானா? அந்த நகைகளின் சரித்திரம் தெரியுமா உனக்கு? அவை வெறும் நகைகளல்ல, என் மானத்தின் அடையாளம். அன்றொரு நாள், என் கணவர் உயிருடன் இருந்த வசந்த காலம். எங்கள் சயன அறையே அரண்மனைப் போல இருக்கும். தந்தக் கட்டிலில், காமரச செதுக்கல்கள், சந்தனம் நிறைந்த வாசனைப் பேழைகள், காற்றில் பரவும் அகில் புகை, வாயிலில் இசைக்கப்படும் யாழொலி, மென்மையான ரோஜா இதழ்கள் தூவப்பட்ட மயிலிறகு மஞ்சம்… அன்றும் இது போல முழு நிலவு நாள். என் அரசர், என் கூந்தலை வாரிப் பின்னி ஜடவில்லை, ராக்கோடி, நெற்றிச் சுட்டி இவற்றை முதலில் அணிவித்தார். அத்தனையும் நவ மணிகளால் ஆனவை. இப்போது பார்க்கிறாயே, இந்த மூக்குத்தி அது, பின்னர் புல்லாக்கு, காதில் வைரக் குண்டலங்கள், கழுத்தில் வைர அட்டிகை, முத்து ஆரம், பவழமும், மரகதமும் பதித்த மாலை, தொப்பூழ் வரை நீளும் பல வண்ண ஆரங்கள், தோள்வளைகள், கைகள் கொள்ளாத வளையல்கள், ஒட்டியாணம், இடுப்புக் கவசம், தொடைகளில் வெள்ளியால் கவசவளைகள், கால்களில் தண்டை, சிலம்பு, கொலுசு…. இப்படி எத்தனையெத்தனையோ? உன்னிடம் சொல்வதற்கென்ன? நீ கவிஞன், எழுத்தாளன், அழகுணர்ச்சி உள்ளவன். ஒவ்வொரு நகையாய் உடலில் ஏற ஏற ஒவ்வொரு துகிலாய்க் கழலக்கழல.. அந்த மென் பட்டு ஒளியில் அவர் நகைகளையும், அவை அமைந்த உடல் பாகங்களையும் தந்தி போல் மீட்டினார். அவர் ஸ்பரிசம், அவர் அன்பு, என் அந்தரங்கம் அந்த நகைகளில்.. அதை எப்படித் தருவேன் சொல்? ஏன் தரவேண்டுமென்று சொல் சீனு?” அரசியார் தேம்பினார்களோ நான் அறியேன். நான் சிலிர்த்துக் கொண்டு நீர் ததும்ப நின்றேன். எத்தனை அழகான காதல் வாழ்க்கை, இப்படிச் சிதைவுண்டதே?

அரசியார் பித்தினைப் போலச் சிரித்தார். ஒலி கூடிக்கொண்டே வந்தது.

குரல் சாபம் போல் ஓங்கியது, “தலக்காடு மாரலகலி, மலங்கி மடுவாகலி, மைசூரு தொரகே மக்களிலாத ஹோகலி” 

“சொல் சீனு, என் ரங்கநாயகியை யார் என்னிடமிருந்து பிரித்தார்கள்? என் கணவரின் உடலைக் கூட காட்டாமல் என்னை வதைத்தது யார்?அவர்களிடம் இந்தப் புனிதம் கிடைக்கலாமா சொல்? மடியில் நகைகளைக் கட்டிக் கொண்டு ஆழமான மலங்கியில் விழுந்து இறந்தேன்.”

திரும்பத் திரும்ப இந்த மூன்று சாபங்களைச் சொல்லிய குரலுடன் அந்த மூக்குத்தியும் மறைந்து போனது.

‘தலக்காடு மண் மூடிப் போகட்டும்; மலங்கி நீர்ச்சுழியாக மாறட்டும், மைசூர் ராஜ வம்சத்தினருக்கு பிள்ளை இல்லாமல் போகட்டும்.’ என்ற இந்த சாபங்களை நான் வாசுவிடம் சொன்ன போது அவன் கண்களில் நீர் வர சிரித்தான்.

“டேய், மடையா, 17ம் நூற்றாண்டில, சுற்றுச் சூழல் நசிவினால ஏற்பட்ட ஒண்ணுடா இது. அப்போ தென் இந்தியாவில கடுமையான பஞ்சமும், வறட்சியும். அதுக்கும் முக்கியக் காரணம் இருக்கு. நீரோட்டத்துக்கு எதிரா அணை கட்டி நதியோட போக்க முழுசா மாத்தினாங்க. தென் மேக்கு காத்து வாரியிறச்ச மணல் தான்டா இங்க நீ பாக்கறது. நல்லாத்தான் கத சொல்ற, ஆவி வந்து மூக்குத்தி காட்டி பேசிச்சாம்.”

நான் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தேன். ‘மைசூர் ராஜ வம்சத்தில ஒரு தலைமுறை விட்டு மறு தலை முறையில தான் குழந்தைகள் பிறந்திருக்கு. அதிலும் ஆண் வாரிசுகளைத் தத்தெடுத்துத்தான் அரசராட்சி நடந்திருக்கு. இப்பத்தான் 2017ல டிசம்பர் 6 ம் தேதி யதுவீர் க்ருஷ்ணதத்தா சாம்ராஜ் உடையாருக்கும், அவர் மனைவி த்ரிஷிகா குமாரிக்கும் பையன் பொறந்திருக்கான். மைசூர் அரண்மனல அலமேலு அம்மாவோட சிலய வச்சு, தெனமும் பூஜ பண்ணி, பரிகாரங்களும் செய்யறாங்க. இதுக்கென்னடா சொல்ற? அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீருக்கும் சரித்ரம் உண்டுடா’


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.