கொட்பின்றி ஒல்லுதல் நட்பாம்

தன் மகள் மெர்ஸி ஆறு வருடங்களாக அமெரிக்காவில் வசிப்பினும், அந்தோணி வருவது இதுவே முதல் முறை . வந்தடைந்து ஒரு மாத காலம் கழிந்த பிறகே பகல் இரவு நேர மாற்றத்திற்கும், காண்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும் தெருக்களுக்கும், வீடுகளுக்கும் , இதுவரை அவர் மேனி கண்டிராத குளிருக்கும் பரிட்சயம் ஆனார். சியாட்டில் வந்தடைந்த நாளில் இருந்து அவர் தவறாது செய்யும் ஒரு பணி, காலை நேர நடைப்பயிற்ச்சி. நடைப்பயிற்ச்சியின் இடையே, நான்கு அல்லது ஐந்து புது மனிதர்களைக் காண்கிறார் தினமும்.

புன்னகை பூத்த முகத்துடன் அமெரிக்கா்கள் தலையை அசைத்து “குட் மார்னிங்’ என்று சொல்லும் பொழுது “உங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்று கூறுவதைப் போல உணர்கிறார். இன்னும் சிலர் குட் மார்னிங் உடன்  சேர்த்து “ஹவ் ஆர் யு டூயிங்”  என்றும்  கேட்கின்றனர். நமது ஊரில்  நம்மை நன்கு அறிந்தோர் மட்டுமே இப்படிக் கேட்பார்கள் என்று வியந்து கொள்வார்.

அவரது மனைவி உயிரோடு இருந்தவரை வருடத்திற்கு இரு முறை வந்து தலா மூன்று மாதங்கள் தங்களின் மகள் குடும்பத்துடன் நாட்களைக் கழித்து விட்டு வருவார். அவரது மனைவிக்கு சியாட்டிலின் நான்கு கால நிலைகளும் நன்றாகத் தெரியும். நான்கு வெவ்வேறு சீசனில் சியாட்டில் நகரம் ஒவ்வொரு வண்ணத்தில் இருக்குமென கூறியிருக்கிறார். இலையுதிர் காலத்தில் ஒவ்வொரு தெருவிற்கும் பலவகை வண்ணப் பெய்ண்ட்டை தன் மேனியின் மேல்  ஊற்றிக் குளித்தது போல மரங்கள் ஜொளிக்குமாம். வசந்த காலத்தில் பல வகை வண்ணப் பூக்கள் நம்மை வரவேற்று கம்பளம் விரிப்பதைப் போல இருக்குமாம். அவர் ஒரு முறை பனிக் காலமான டிசம்பர் மாதத்தில் வரும் வாய்ப்பினைப் பெற்ற பொழுது சியாட்டிலில் பனிமழை பெய்தது. குறிப்பாக கிறிஸ்துமஸ் அன்று பெய்த பனிப்பொழிவானது பத்து வருடங்கள் கழித்து சியாட்டில் கிறிஸ்துமஸ் அன்று கண்ட பனிப்பொழிவு ஆகும். அதனை வைட்  கிறிஸ்துமஸ் என்று ஊரே சிறப்பாகக் கொண்டாடியது. செய்ன்ட் எஃஸுபெரி “பனிமழை தன் அமைதியையும் சமாதானத்தையும் இந்த பூமிக்குத் தருகிறது” என்று கூறியதைப் போல அந்தோணியின் மனைவி, பனியின் ஆழ்ந்த அமைதி அவருக்குப் பிடிக்குமெனக் கூறியிருக்கிறார்.  தன் மனைவி வந்து ரசித்துப் போன இந்த சியாட்டிலை ஒரு முறையேனும் பார்த்திட வேண்டுமென வந்திருக்கிறார் அந்தோணி. தன் மனைவி கூறிய அனைத்தையும் விட அந்தோணியை ஈர்த்தது, நான்கு காலத்திலும் நிறம் மாறாமல் பச்சைப் பசேல் என்று வானுயற ஊரைச் சுற்றி நிற்கும் பசுமையான எவர்கிரீன் மரங்களும், சுமார் 14,500 அடி உயரமான எரிமலை மவுண்ட் ரெய்னியர் உம் தான்.

கிட்டத்தட்ட சியாட்டில் மத்திய நகரில் இருந்து 95 கி.மீ தொலைவில் உள்ளது மவுண்ட் ரெய்னியர் எரிமலை. தற்காலிகமாக இது உறங்கிக் கொண்டிருக்கிறதாம். அந்தோணிக்கு இம்மலையைப் பார்க்கும் பொழுது ஏதோ ஆழ்ந்து தவம் செய்யும் முனிவரைப் போலத் தோன்றும். இம்மலை வெகுண்டெழும் காட்சியைக் கற்பனை செய்து பார்க்கவே உடல் நடுங்கியது அவருக்கு. சியாட்டிலின் எந்தத் திசையில் இருந்தாலும் மவுண்ட் ரெய்னியரின் உச்சி முகடைப் பார்க்க முடியும் நம்மால். ஆனால் அந்தோணிக்கோ ‘நீ எந்த சந்தில் நின்றாலும் என் பார்வையில் இருந்து நீ தப்பிக்க முடியாது’ என்று மவுண்ட் ரெய்னியர் கூறுவது போல இருக்கும். 

வருடத்தின் பத்து மாதங்கள் சியாட்டில் மழையால் குளித்துக் கொண்டே இருக்கும். இந்நகரின் ஏரிகளைக் காண இரு கண்கள் போதாது என்று நினைத்துக் கொள்வார். அலைகள் அற்றப் பெருங்கடல் போல ஒவ்வொரு ஏரியும் அத்துனை பெரியது. இந்நகரில் உள்ள பல ஆயிரம் ஏரிகளில் ஒற்றை ஏரியின் நீர் போதுமே இரேழு உலகிற்கும் கோக் ஊற்ற என்று நினைத்து அங்கலாய்த்துக் கொள்வார். அணில்களும், காட்டு முயல்களும், பல வண்ணப் பறவைகளும் அழகுக்கே அழகு சேர்ப்பவையாக இருந்தன. நடைபயிற்சியின் இடையே ஆங்காங்கே புள்ளி மான்களும் கண்ணில் படும். இன்றும் மேய்ந்து கொண்டிருந்த ஒரு மானைக் கண்டார். இன்று மாலை இந்தியா திரும்பிச் செல்ல வேண்டும் அந்தோணி. ஆதலால் என்ன ஆனாலும் அந்த மானை அருகில் சென்று பார்த்துவிட வேண்டுமென உறுதி எடுத்துக் கொண்டு மான் நிற்கும் திசையை நோக்கி நடந்தார். மானை மட்டுமே குறி வைத்து நடந்தவர் உணரவில்லை அது ஒரு குடியிருப்புப் பகுதி என்று. பெரிய வீட்டின் முன் விரிக்கப்பட்டப் பச்சைக் கம்பளம் போல் இருந்த புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த அம்மானின் அருகில் சென்றார்.

“அங்கிள்!!” இக்குரலில் கலந்து வந்தது அதிர்ச்சியா ஆனந்தமா என்று விளங்கவில்லை. மீண்டும், “அங்கிள்ள்ள்ள்!!!” அழுத்தம் கூடியக் குரல் வந்த திசையில் தலையைத் திருப்பினார்.

அந்த வீட்டுத் தோட்டத்தில் இருந்து பெரிய வயிரை உலகப் பந்தென தாங்கிப் பிடித்துக் கொண்டு ஒரு பெண் ஓட்டமும் நடையுமாக கிளியைப் போல் அந்தோணியை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள். 

அவருடைய பார்வைத் திறன் எட்டும் எல்லைக்குள் அவள் வந்த பின்னர் தான் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொண்டார்.

“மோளேஏஏஏஏ!!!! ஷாலு!!”

“அங்கிள்!!” என்று விசும்பிக் கொண்டே அருகே வந்தவள் அந்தோணியைக் கட்டி அனைத்துக் கொண்டாள். 

“மோளே! நீ இஞ்ச தான் இருக்குறவளா? மெர்ஸி என்கிட்ட சொல்லவே இல்லயே மக்கா!!. மோளுக்கு இது எத்தர மாசம்?” என்று வாஞ்சையோடு கேட்டார்.

வாய் நிறைய மோளே மோளே என்று அந்தோணி அழைப்பது மேலும் அவளை நெகிழச் செய்ய, வார்த்தைகள் தட்டுத் தடுமாறி வந்தது.

“ஒ… ஒ… ஒம்பது மாசங்க அங்கிள். உள்ள வாங்க இது நம்ம வீடு தான்.” என்று அவரது இரு கரங்களையும் பற்றி இழுத்தாள். வந்த வேலை முடிந்தது என்று மானும் அவ்விடத்தை விட்டு அகன்றது.

“ஆட்டும் மோளே வாரன், வாரன். மோளு மெதுவா வா. எதுக்கு இங்கன கெடந்து அழுவுற!! ” என்று அவளது கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் தன் உள்ளங்கையால் துடைத்துத் தன் சட்டைமேல் தேய்த்துக் கொண்டார்.

“அங்கிள் இப்புடி உக்காருங்க” என்று அந்தோணியை அமர வைத்துவிட்டு சமையலறைக்குள் ஓடி பில்டர் காப்பியோடு திரும்பி வந்தாள். காப்பியை வாங்கிக் கொண்டவர் “மோளே, இஞ்ச இரி” என்று தன் அருகில் அமர வைத்துக் கொண்டார்.

“ஆஹா!  ஒருபாடு குளிருக்கு இதமா இருக்கு மோளே  காப்பி. நீ குடிச்சவளா?”.

“குடிச்சேனுங்க அங்கிள். நீங்க எப்புடி இருக்குறீங்க. ஆண்டியும் வந்திருக்குறாங்களா?”

“மோளே ஆன்ட்டி மரிச்சு ரெண்டு வருஷ காலம் ஆகிட்டுது. நான் போன வருஷம் ரிடயர்டு ஆனன். ஆன்ட்டிக்கு உங்க ஊரு சியாட்டில் மேல அத்தர இஷ்டம். இதுதான் முதல் முறையா அங்கிள் இங்க வாரன்.” இடையே காப்பியை சுவைத்தபடி, “ மாப்பிள்ளை எப்புடி மோளே?. எத்தற மக்க உனக்கு?”

“அவரு நல்லா இருக்காருங்க அங்கிள். ஆபீஸ் போயிருக்குறாங்க. சாய்ங்காலம் ஆகுங்க அங்கிள் அவரு வர்றதுக்கு. இது மொதல் பிரசவம்” என்று வயிற்றின் உருண்டையை சுற்றிக் காண்பித்தாள்.

“மோளே, உனக்க அம்மயும் அப்பனும் எங்கே? “

“அங்கிள்” ஒரு கண இடைவெளியில் வெப்பக் காற்றை வெளியேற்றி “ரெண்டு பேருமே ஆறு மாசம் முன்னாடி ஒரு ஆக்ஸிடென்ட்ல எறந்துட்டாங்க. அவரோட அப்பா  அம்மாக்கு வீசா அப்ளை செஞ்சுருக்கோம். ஒண்ணு ரெண்டு மாசத்துல வருவாங்க.”

அந்தோணியைக் கண்ட பொழுது அவள் சிந்தியக் கண்ணீர் தன் தாய் தந்தையின் இறப்பைப் பற்றிக் கூறும் பொழுது வரவில்லை ஷாலுவிற்கு. கடுமையான வலி கூட மனதை உரையச் செய்துவிடும் சில சமயங்களில். உறைந்த பனியை சுமந்து நிற்கும் மவுண்ட் ரெய்னியர் தோன்றி மறைந்தது அந்தோணியின் சிந்தையில். அப்பா அம்மாவைப் பற்றி மேலும் கேள்விகள் கேட்டு ஷாலுவை நோகடிக்க மனம் இல்லை அந்தோணிக்கு.

“ரொம்ப லேட் ஆகும் போலயே மோளே. பிரசவச்சுட்டா அப்பம் மோளு எங்கன எப்புடி சமாளிக்கும் ?”

“சமாளிச்சுக்களாங்க அங்கிள். அவரு என்னய ரொம்ப நல்லாப் பாத்துக்குராரு. இங்க ஒரு தமிழ்காரங்க, வீட்டு சாப்பாடு செஞ்சு விக்குறாங்க. பத்திய சாப்பாடா குடுக்க சொல்லியிருக்குறோம்.”

“ஹீம்ம். ஆண்டவர் உண்ட கூட துணை இருக்கட்டும் மோளே” என்று சிலுவைக் குறியை ஷாலுவின் நெற்றியில் பதித்தார். “மோளே அங்கிள் இன்னைக்கு மூனு மணி ஃப்ளைட்ல இந்தியா திரும்பிப் போறன். பின்ன அடுத்த முறை வரும்போது  மோள நான் வந்து பாக்குறன். நீ தைரியமாட்டு இரி என்னா” என்று கூறி விடைபெற்றார்.

தன் மகள் மெர்ஸி கோவை என்ஜினியரிங் கல்லூரியில் படிக்கச் சென்ற காலத்தில் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்தாள். அதே கல்லூரியில் படித்த ஷாலுவும் மெர்ஸியும் நல்ல சிநேகிதிகள். நித்தம் மெர்ஸிக்கு தன் வீட்டு சாப்பாட்டை எடுத்து வருவாள் ஷாலு. சில விடுமுறைகளைக் கூட மெர்ஸி,  ஷாலு வீட்டில் கழித்த நினைவுகள் உண்டு. காய்ச்சல் வரும் பொழுது ஷாலுவின் வீட்டுக் கஞ்சி தான் மெர்ஸ்ஸிக்கு மருந்து. மெர்ஸியைக் காணச் செல்லும் பொழுதெல்லாம் ஷாலுவையும் பார்த்துவிட்டு வருவார் அந்தோணி. புதிய ஊரில் தன் மகள் இருக்கிறாள் என்ற பயம் இல்லாமல் ஊர் திரும்புவார். ஷாலுவின் நட்பு ஆறுதலாக இருந்தது. அவ்வளவு நல்ல தோழிகளாக இருந்திருக்கிறார்கள், ஆனால் மெர்ஸியோ ஷாலு தன் அருகில் இருப்பதைப் பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லையே என்று வருத்தமாக இருந்தது அந்தோணிக்கு. மெர்ஸியைப் பற்றிப் பேசும் பொழுது ஷாலுவும் கூட பதில் ஏதும் கூறாமல் இருந்தது விந்தையாக இருந்தது. 

மெர்ஸி வசிக்கும் பகுதியானது அமெரிக்கர்களை அதிகம் கொண்டுள்ளது. இந்தியர்கள் இல்லாத வசிப்பிடம். மெர்ஸி மட்டுமே விதி விலக்கு. “இது அமெரிக்கன் கம்யூனிட்டி பா. ரொம்பத் தள்ளிப் போகனும் இந்தியன் கம்யூனிட்டி இருக்குற எடத்துக்கு. ஆனா அங்க வீடு வெல ரொம்ப அதிகம் பா” என்று கூறியிருந்தாள்.

மெர்ஸி அமெரிக்கா வரும் பொழுது அவள் இந்தியாவில் வளர்த்த அவளது செல்ல நாய்க் குட்டியையும் உடன் அழைத்து வந்துவிட்டாள். அதன் பெயர் ப்ரூனோ. நெருங்கிப் பழகிய மனிதர்களை நாய் மறப்பதில்லை. நெடு நாட்களுக்குப் பிறகு ப்ரூனோவை சந்திக்கும் பொழுது அந்தோணியை அடையாளம் கண்டு கொண்டு தாவி ஓடி வந்தவனை, “ப்ரூனோ ஸ்டாப்” என்று பலமாக ஒலி எழுப்பி அவனைப் பாதியில் நிற்க வைத்தாள் மெர்ஸி. ப்ரூனோ சற்று ஆர்ப்பரிப்பை நிறுத்தியவுடன் “ நவ் கோ” என்று மெர்ஸி கட்டளையிட்ட பின், “அவங் அவங்” என்று அவன் சினுங்கிக்கொண்டே அந்தோணியின்  தழுவளுக்குள் வந்தான். அந்தோணி மெர்ஸியின் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. ப்ரூனோ குறைக்கும் ஒலியை அந்தோணி கேட்கவே இல்லை.

”அமெரிக்காவுல நாய் அதிகம் குரைக்காதுப்பா”. 

 “இது இந்திய நாய் தானே மோளே!” 

“இஞ்ச இதான்பா கல்ச்சர், அனாவசியமாவோ இல்ல அவசியமாக் கூட இங்க யாரும் யாரயும் தொந்தரவு செய்ய மாட்டாங்க. தொந்தரவ அனுமதிக்கவும் மாட்டாங்க. இன்விடேஷன் இல்லாம யார் வீட்டுக்கும் போக முடியாது”. 

“அப்போ எதாவது திடீர்னு அவசரம், ஒடம்பே சரியில்லன்னா என்ன செய்வ மோளே?!”

 “911 கு கால் செஞ்சா வருவாங்கப்பா . நம்ம ஊருல 108 மாதிரி”.

“அதுசரி மக்கா, ப்ரூனோ பயங்கரமா குறைப்பானே. எப்படி எங்கன அவனுக்க அனக்கத்த நிறுத்தினவ?”

“ஆத்தியமாட்டு கஷ்டமா இருந்துச்சு. அப்பம் டிரெய்னர் வச்சுக் கண்ட்ரோல் செஞ்சது”

“எது மோளே! ட்ரெய்னர், நாயின்ட வாயக் கெட்டவா?”

எல்லாமே வித்தியாசமாக இருந்தது அந்தோணிக்கு. மாறிவிட்ட ப்ரூனோவின் குணங்கள் கூட ஆச்சர்யமாக இருந்தது.

ஷாலு வீட்டில் இருந்து கிளம்பியவர் மெர்ஸி வீட்டுக்கு வந்து சேர அரை மணி நேரம் ஆனது.

“என்னப்பா?, இன்ன ரொம்ப நேரம் நடையா?”

” ஆமா மோளே, வரும்போ ஒரு மான் குட்டியக் கண்டு கிட்டக்க பாக்க ஆசப்பட்டு நெருங்கிப் போனன். பாத்தா அது நம்ம ஷாலு வீடு. மோளு ஓடி வந்து அப்பனக் கெட்டி பிடிச்சுட்டு ஒரே கரச்சல்”

ஷாலுவின் பெயரைக் கேட்டதும் ஒரு வித எரிச்சல் பரவியது அவளுள். அறிவிப்பு ஏதுமின்றி ஆறு மாதங்கள் முன்பு ஷாலு கடைசியாக வந்தாள் மெர்ஸி வீட்டிற்கு. இரு உயிர்கள் போன செய்தியையும், ஓர் உயிர் உண்டான செய்தியையும் சுமந்து கொண்டு வந்தாள் என்பது தெரியவில்லை மெர்ஸிக்கு. 

அமெரிக்கன் கல்ச்சரில் தன்னை ஊற வைக்க முயற்ச்சித்துக் கொண்டிருந்த மெர்ஸி, திடீர் ஷாலுவின் வருகையை துளியும் விரும்பவில்லை. அவள் சரியாக முகம் கொடுத்துப் பேசாமல் போகவே, கொண்டு வந்த வலியையும் இன்பத்தையும் தெரிவிக்காமல் வாசலோடே திரும்பிச் சென்றாள் ஷாலு. பிறகு இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. தான் அவளை வரவேற்காத நிகழ்வைப் பற்றி தன் தந்தையிடம் ஷாலு கூறியிருப்பாளோ என்று உள்ளம் நெருடியது மெர்ஸிக்கு. அந்தோணியோ எதுவும் கேட்கவில்லை. 

“சாப்பாடு விளம்பு மோளே. நான் உடை மாத்தி வாரன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

மெர்ஸிக்குத் தன் அப்பா ஷாலுவை சந்தித்தது ஏனோ பிடிக்கவில்லை. தன் கருத்திற்கு எதிர்வினையாக அப்பா ஏதும் கூறிவிடில் அதை ஏற்கும் மனநிலையும் மனப்பக்குவமும் மெர்ஸிக்கு இல்லை என்பதே நிஜம். உடைமாற்றி வந்தவர் தன் மாப்பிள்ளை தொலைக்காட்சியில் அனிமல் பிளானட் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு நின்றார்.”வாங்க மாமா. உட்கார்ந்து பாருங்க” . “ வாரன் மோனே” என்று அருகில் சென்று அமார்ந்துகொண்டார். “இது என்ன மிருகம் மோனே?”. “ஆஃப்ரிகன் வயல்டு டாக் மாமா. காட்டு நாய் இனம்.”

ஒரு பத்துப் பதினைந்து ஆஃப்ரிகன் காட்டு நாய்கள் கூட்டமாகச் சென்று காட்டெருமைகளின் கூட்டத்தில் இருக்கும் இரு கன்றைக் குறிவைத்து  வேட்டை ஆட. அக்கூட்டத்தைத் துரத்திக் கொண்டிருந்தது. மிகவும் தந்திரமாக எருமைக் கூட்டத்தை ஓட விட்டு, மெதுவாக ஓடும் கன்றினை ஓரங்கட்டி சரியான நேரம் பார்த்து அடித்துக் கொன்றது. கொன்ற கன்றினை காட்டு நாய்க் கூட்டம் ஒன்றாகப் பகிர்ந்து உண்டு கொண்டிருக்க, ஹையினாக்கள் கூட்டம் வந்தது. காட்டு நாய்களை விரட்டி அடித்துவிட்டு அவைகளின் இறையை ஹையினாக்கள் உண்டன. இதில் நடந்த தகராறில் காட்டு நாய் ஒன்றிற்கு பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது. காட்டு நாய் கூட்டத்தில் இருந்த மற்றொரு நாய் அந்தக் காயத்தை தனது நாக்கினால் சுத்தம் செய்து கொடுத்தது. இவ்வாறு தான் அந்தக் காட்டு நாய் கூட்டம் ஒன்றை ஒன்று குணமாகும் வரை பார்த்துக் கொள்ளுமாம் என்று விளக்கிக் கொண்டிருந்தான் வர்ணணையாளன்.

இதைக் காதில் வாங்கிக்கொண்டே சாப்பாடு பரிமாரிய மெர்ஸி எரிச்சலுடன் “அப்பா சாப்பிட வாங்க இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல கெளம்பனும்”  என்று அழைத்தாள். 

அமைதியாக சிந்தனையில் ஆழ்ந்தபடி உணவருந்தினார். பின்பு தன் அறைக்குச் சென்று பெட்டியில் தன் துணிகளை  எடுத்து வைக்கலானார். மூன்று மணி நேரம் முன்னதாக விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டும். மதிய உணவை ஒரு யூஸ் அண்ட் த்ரோ டப்பாவில் கட்டித் தந்தாள் மெர்ஸி. இரண்டு பெட்டிகளையும் மெர்ஸியின் கணவர் காரில் ஏற்றி வைத்தார். காரில் ஏறி அமர்ந்தவரின் கண்ணில் மவுண்ட் ரெய்னியர் காட்சி அருள தன் மகளோடு தனியாக உரையாட வேண்டுமென நினைத்தார். 

மெர்ஸியின் கணவர் , “ மாமா எனக்கு அவசர வேல வந்துடுச்சு என்னால உங்களோட ஏர்போர்ட்டுக்கு வர முடியாது. தப்பா எடுத்துக்காதீங்க.” “பரவாயில்ல மோனே” என்று உற்சாகமாகக் கூறினார். 

மெர்ஸி காரை ஓட்ட அருகில் இருந்த முன் இருக்கையில் அமர்ந்துகொண்டார் அந்தோணி. செல்லுகின்ற வழியில் மவுண்ட் ரெய்னியர் பனியை சுமந்து கொண்டு கம்பீரமாகக் காட்சியளித்தது. அந்த மலையின் ஆழ்ந்த மௌனம் அந்தோணியை மிகவும் தொந்தரவு செய்தது. அவருக்குள் நிலவும் வலியின் பிம்பமாக மவுண்ட் ரெய்னியர் அமர்ந்திருப்பதாகத் தோன்றியது. சட்டென அந்த மலை நிறைமாத கர்ப்பிணியின் உருவமாக மாற, ஷாலுவைப் பார்ப்பது போல் தோன்றியது. ‘அங்கிள்’ என்ற விம்மல் குரல் ஒலித்தது. 

“மோளே மெர்ஸி.. பைபிள் வாசிக்குறியா தெனமும்?”

“ஆமா அப்பா. டெய்லியும் ரெண்டு அத்தியாயம் முடிக்கனும்னு டார்கெட் வச்சுப் படிக்கறன்”

“மோளே, யேசு மரிச்சது எதுக்காகனு நீ புரிஞ்சிக்கிட்ட?”

“உலக மக்களுக்காக. நம் பாவத்துக்காக ஏசு மரிச்சார்.”

“மக்கா.. நமக்குள்ள எல்லா தீய எண்ணங்களும் எழும் கேட்டியா.  கோவம், பொறாமை, பேராசை, சபலம் என்டு அத்தற எண்ணத்தயும் கொல்லனம் மோளே. அதுக்கு மொதல்ல செய்யுற காரியம் தப்புன்னு உணரனும். தப்புன்னு உணர்ந்த மாத்திரம் அந்தக் கணமே அதக் கொல்லனம் மோளே. கொன்ன பின்ன ஒரு புது மனுஷனா நாம ஒவ்வொரு முறையும் உயிர்த்து எழனும். அது தன்னே உயிர்த்தெழுதல். பேதுரு மீன் படிக்கப் போகும் போல் யேசு சொன்னது என்ன மோளே?”

அந்தோணி இதை எங்கே கொண்டு செல்கிறார் என்பது நன்றாகவே விளங்கியது மெர்ஸிக்கு.

“என்னோடு வா நான் உனக்கு.., நான் உனக்கு மனிதர்களைப் பிடிக்கக் கற்றுத் தருகிறேன்னு சொன்னாரு பா”

“வெறுமனே ஆண்டவரே ஆண்டவரே என்னு கூப்பிட்டா மாத்திரம் கடவுள் ஏற்பாரா மக்கா?. மோளே, சொந்த நாட்ட விட்டு வேறு எந்த நாட்டில வசிச்சாலும் அந்த நாட்டில நாம அகதிகள் தான். அப்பனயும் அம்மயும் எழந்து நிறைமாத கா்ப்பிணியா ஷாலு இருக்குறா மோளே. பெட்டுக் கொண்ட  நன்னிய திருப்பிச் செய்ய இத விட ஒரு வாய்ப்புக் கிட்டும்முன்னு மோளு நெனைக்குறியா?.  உனக்க அப்பனும் அம்மயும் உனக்க பேர சும்மாவா தந்தது?. நீ மாத்தியது ப்ரூனோவ மாத்திரம் அல்லான்னு எனக்க மனசுக்குப் படுது மக்கா.”

விமான நிலையத்தை அடைந்தனர். பெட்டிகளை தள்ளுவண்டியில் ஏற்றி உள்ளே செல்லும் கேட்டின் அருகில் வந்தனர். வழியனுப்பும் தருணம் வந்த பின்,

“அப்பா” என்று அழைத்தாள் மெர்ஸி.

தன் மகளை அனைத்துத் தாங்கிக் கொண்டவர்,

“உனக்க இயல்ப மாத்தி தான் இங்க நீ வாழனும்னா இந்த ஊரு உனக்கு வேணாம் மோளே. உன்ன வேண்டான்னு நெனைக்குறவங்கள விட்டுத் தள்ளு. ஆனா உன்ன வேணும்னு நெனைக்குற மனுஷங்களக் காயப்படுத்தாத மோளே. உன்னால அவங்க வாழ்க்கைல ஒரு நல்ல மாத்தம் வரும்னா தட்டிக் கழிக்காத மக்கா. நீ அமெரிக்கன் கல்ச்சர் பத்திப் பேசுற. அத அமெரிக்க மக்கள்ட்ட காட்டு. நம்ம மனுஷங்க கிட்ட காட்ட அவசியம் இல்லயே. அமெரிக்கக்காரன் கூட யாருன்னே அறியாதவன எங்கன இருக்கன்னு கேக்குறான்னே. வீட்டுக்கு வந்தது விரோதி ஆனாலும் உள்ள வாங்கன்னு  உபசரிக்கிறது தன்னே நம்ம கல்ச்சர் மோளே”.

விமானம் வந்துவிட்டதாக அறிவிப்பு வந்தது. “கொள்ளாம், மோளே அப்பன் போயிட்டுவாரன். சமாதானமாயிட்டு இருக்கனும் கேட்டியா.” என்று அந்தோணி தன் மகளின் நெற்றியில் முத்தங்களைப் பதித்துவிட்டுக் கிளம்பினார்.

விமானத்தில் ஏறி தன் இருக்கையில் அமர்ந்தவர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். பனிமழை லேசாகப் பெய்து கொண்டிருந்தது. தன் மனைவியை நெஞ்சில் நிறுத்தி, “அமைதி உண்டாகட்டும்” என்று கூறிக்கொண்டார்.

தந்தையை வழியனுப்பிவிட்டு தன் காரில் மௌனத்தை மென்று கொண்டு அமர்ந்திருந்தாள் மெர்ஸி. கண் முன் தென்பட்ட மவுண்ட் ரெய்னியரின் மலைமுகடு ஈட்டியாய் மாறி தன்னைக் குத்துவது போல் உணா்ந்தாள். காலம் பின்னே சுழன்றாள் தான் செய்த தவறை சரி செய்துவிட விரும்பினாள். தன் இயல்பை எப்படி இவ்வளவு தூரம் மாற்றிக் கொண்டாள் என்று மனம் நொந்தாள். ஐ அம் சாரி என்று கூறி அழுதாள். யாரிடம் கேட்டாள் என்று அவள் மனதிற்கு மட்டுமே வெளிச்சம்.

சீயாட்டில் நகரின் புனர்வாழ்வு மையத்தின் முகவரியை கூகுள் வழிகாட்டியில் ஏற்றி தன் காரை செலுத்தினாள். செல்லும் வழியில் ஒரு ரோஜாப் பூங்கொத்தை வாங்கிக் கொண்டாள். புனர்வாழ்வு மையத்தை அடைந்தவள் ரிசப்ஷனில் “கல்பனா ” என்ற பேஷண்ட்டைப் பார்க்க வேண்டும் என்று கூறினாள். மெர்ஸியின் அடையாள அட்டை மற்றும் முகவரி விபரங்களை பரிசோதித்த பின்னர், மெர்ஸியை தொடர்பு கொள்ள பலமுறை முயன்று தோற்றதைக் கூறி ரிசப்ஷனிஸ்ட் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். 

“ஐ அம் சாரி” என்றாள். அதைத் தவிர அவளால் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.

மெர்ஸியும் கல்பனாவும் பள்ளித் தோழிகள். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் இரு வேறு திசைகளில் வாழ்க்கை அழைத்துச்செல்ல ஏறத்தாழ இருவரும் ஒருவரையொருவர் மறந்தேவிட்டனர். ஒரு வருடத்திற்கு முன்பு முகநூலில் மெர்ஸியைக் கண்டுபிடித்த கல்பனா அவளைத் தொடர்பு கொள்ள முயற்சித்தாள். ஆனால் மெர்ஸி அவளைப் பொருட் படுத்தவில்லை.  நான்கு மாதங்களுக்கு முன்பு லோக்கல் சேனல் ஒன்றில் “கணவனைக் கொல்ல  முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கல்பனா” என்ற அவசரச் செய்தி வெளியானது., மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டதால் சியேட்டில் புனர்வாழ்வு மையத்தில் அனுமதிக்ககப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிட்டனர்.  நமக்கு ஏன் வீண் வம்பு என்று கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாள் மெர்ஸி. கல்பனா அவளோடு பேச ஆசைப்படுவதாக அழைப்பு வந்த போதிலும் அதை உதறிவிட்டாள்.

நர்ஸ் ஒருவர் வந்து கல்பனா இருந்த அறைக்குக் கூட்டிச் சென்றார் மெர்ஸியை. உள்ளே செல்லும் முன்னர் பல்லாயிரம் வழிகாட்டுதலைக் கூறினார். வெளி உணவு நீர் ஆகாரமோ பேஷண்ட்டுக்குக் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றார். பூங்கொத்து மட்டும் அனுமதிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு பார்க்கப் போகும் கல்பனாவின் முகத்தையும் உருவத்தையும் தன் நினைவில் நிறுத்த முயர்ச்சித்தாள். தன் வகுப்பறையிலேயே உயரமான, தடிமன் ஆன பெண் கல்பனா. மிகவும் கலகலப்பானவள். கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவள் ஆதலால் எப்போதும் நிறைய தோழிகளுடனேயே காணப்படுவாள். அவளுக்கு மஞ்சள் நிறம் மிகவும் பிடிக்கும். பேசிக்கொண்டே இருப்பாள், ஆதலால் கரும்பலகையில், பேசியோர் பட்டியலில் கல்பனாவின் பெயரே முதலிடம் பிடித்திருக்கும். ஒரு நாளில் பல வண்ண சாக்பீஸ் அடிகளை வாங்கிவிடுவாள். அப்படியான அவளது உருவம் மட்டுமே கடைசியாக ஒட்டிக் கொண்டிருந்தது மெர்ஸியின் நினைவில். கல்பனா இருந்த அறைக்குள் சென்றாள். பெரிய வெள்ளைப் படுக்கையில் முறுக்கிய கம்பலமாக சுருங்கிப் படுத்திருந்தவளைக் கண்டாள் மெர்ஸி.

“கல்பனா” என்று அழைத்து ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டருந்த கையைத் தொட்டாள். உயிரற்ற கண்களின் வழியே மெர்ஸியைக் கண்ட உடனேயே விம்மி அழத் தொடங்கினாள் கல்பனா. அவள் படுத்திருந்த படுக்கையில் அமர்ந்து அவளை அனைத்துக் கொண்டாள் மெர்ஸி. 

“என்ன கல்பனா இதெல்லாம். என்ன நடந்துச்சு?”

“மெர்ஸி… உனக்குத் தெரியும் இல்ல என் ஃபேமிலி எவ்வளவு பெருசுன்னு. கூட்டமா வாழ்ந்துட்டேன். எல்லாரும் சொன்னாங்கன்னு அமெரிக்கால வேல செய்யுற பையன், நல்லா வச்சுப்பான்னு என்னய இங்க அனுப்பி வச்சாங்க. நான் அவர தப்பு சொல்ல முடியாது. என்னய நல்லாத்தான் பாத்துக்கிட்டாரு. எனக்கு தான் இந்த ஊர் புடிக்கல. அவரு ஆபீஸ் போன பின்ன தனியா இருந்தேன் காலைல இருந்து நைட் வர. ரொட்டீனா ஒரே வேலை. மூனு வேல சமைக்கனும், பாத்திரம் கழுவனும், வீட்டப் பராமரிக்கனும். அந்த நாலு சுவரும் உள்ள அழுத்திட்டே இருந்துச்சு. வெளிய இந்தக் குளிர் அழுத்துது. கடைக்கு எங்கயாவது போகும் போது யாராவது ஒரு ஆள் தழிழ்ல பேசினாக் கூட ஓடிப் போயி கட்டிப் பிடுச்சுக்களாம்னு தோனும்” வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே மேலும் தொடர்ந்தாள், “அவரு அன்பாத் தான் இருந்தாரு. கேக்குறதுக்கு மேலயே வாங்கிக் கொடுத்தாரு. எனக்கு என்ன வேணும், நான் ஏன் இப்புடி இருக்கேன்னு எனக்கே புரியல. அவர் வாங்கிக் குடுத்த ஆப்பிள் ஃபோனுக்கும் தெரியல ஆப்பிள் வாட்ச்சுக்கும் தெரியல. ஆஸ்பத்திரி போய் டிப்பெரெஷன் மாத்திரை எல்லாம் சாப்பிட்டேன். ஆனாலும் எனக்கு அமைதியே இல்ல. உடல் உறவு கொள்ளும் போதும் அவ்வளோ மனக் கசப்பு. அவருக்காக நடிச்சும் பாத்தேன். கருமொ எனக்கு அதுக்கும் துப்பில்ல மெர்ஸி.” வழிந்த கண்ணீரை மெர்ஸி துடைத்துவிட்டுப் பொருமையாக செவி மடுத்தாள் கல்பனாவிற்கு. 

“உண்டான கொழந்தையும் தங்கல. எப்புடித் தங்கும் எரிமலையாப் பொகஞ்சுட்டே இருக்கு மனசும் வயிரும். எப்புடித் தங்கும். என்னய விட்டுப் போயிட்டியான்னு என் கொழந்த மேலயும் எருச்சல். ஊருல இருக்குற ப்ரெண்ட்ஸ் கிட்ட பேசலாம்னா, டே அண்ட் நைட் டிஃபெரென்ஸ் வேற. இங்க யாராவது இருக்குறாங்களான்னு ஃபேஸ்புக்குல தேடும் போது தான் உன்னக் கண்டுபுடுச்சேன்.” சற்று இடைவெளி விட்டாள். மெர்ஸி எதுவும் சொல்லவில்லை. வந்தவளைக் காயப் படுத்த வேண்டாமென எண்ணி அவள் கதையை மேலும் தொடர்ந்தாள். “கொஞ்ச நாள் நம்ம ஊருக்குப் போயி இருந்துட்டு வந்தேன். அங்க நல்லாத்தான் இருந்தேன் மெர்ஸி. இங்க வந்து மறுபடியும் இந்த வெறும் வாழ்க்கைய என்னால வாழ முடியல. வேக்கம் ஸ்பேஸ் னா இந்தக் கருமாந்தரம் தான் போல. பைத்தியத்தோட உச்சத்துல இருந்தப்ப அவர் என்கிட்ட நெருங்கி வரும்போது கத்திய எடுத்துக் குத்தப் போயிட்டேன். நெறய இடத்துல கிழுச்சும் விட்டுட்டேன். பயந்து போய் 911 கு கால் பண்ணிட்டாரு. கொஞ்சம் மைண்டு சரி ஆனதும் ஜெயில்ல போட்றுவாங்கன்னு நெனைக்கிறேன். ஒருவிதத்துல சந்தோஷம் தான் எனக்கு, ஏன்னு சொல்லு” மெர்ஸியின் பதிலுக்குக் காத்திராமல் “அங்க நெறைய மனுஷங்க என்கூட பேச இருப்பாங்க இல்ல அதான்.” 

மெர்ஸிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கல்பனா ஒவ்வொரு வரியை முடிக்கும் பொழுதும், ஒருவேளை நான் கல்பனாவை தொடர்பு கொண்டிருந்தாளோ, பேசி இருந்தாளோ, அவளது கவலைகளுக்கு செவி மடுத்திருந்தாளோ, இதுவரை அவள் வந்திருக்க மாட்டாளோ என்ற எண்ணம் தான் வந்து கொண்டே இருந்தது.

கல்பனாவின் கையைப் பிடித்தபடி அவள் அருகில் சிறிது நேரம் அமர்ந்திருந்தாள். இருவருக்கும் பொதுவாக இருந்த பள்ளி நினைவுகளை நினைவு படுத்தி எண்ணற்ற நிகழ்வுகளைப் பற்றிப் பேசிக் கொண்டனர். கல்பனாவின் முகம் ஓரளவு தெளிந்தது போல் உணர்ந்தாள். பார்வையாளர் நேரம் முடிந்தது என நர்ஸ் வந்து கூறினார். 

உடனே  மெர்ஸியின்  கையை அழுத்திய கல்பனா,

“புளி சாதம் சாப்படனும் போல இருக்கு, அடுத்து என்னயப் பாக்க வரும் போது கொண்டு வரியா மெர்ஸி?” என்று கேட்டாள்.

“கண்டிப்பா கொண்டு வரேன்” என்று கூறி ஒரு கணம் கட்டி அனைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.

மெர்ஸி தந்துவிட்டுப் போன மஞ்சள் நிற ரோஜாவை அனைத்துக் கொண்ட கல்பனா, ஜன்னல் வழியாக சற்றே லேசாகப் பொழிந்து கொண்டிருந்த பனியைப் பார்த்தாள். 

அன்றிரவு பல்வேறு எண்ணங்களையும் அன்றைய நினைவுகளையும் தாங்கிக் கொண்டு சிறமப்பட்டுத் தூங்கினாள். அடுத்த நாள் விடிந்தவுடன்  குளிர்சாதனப் பெட்டியில் இருந்த அனைத்துக் காய்கறிகளையும் எடுத்துத் தோன்றிய உணவு வகைகளை எல்லாம் சமைத்து எடுத்து டிபன் கேரியரில் அடைத்தாள். பின்பு அனைத்தையும் தனது காரில் ஏற்றினாள். பத்து நிமிடப் பயணத்திற்குப் பின் காரை நிறுத்தினாள்.

மான் மேய்ந்து கொண்டிருந்த பச்சைக் கம்பளப் புல்தரை கொண்ட வீட்டின் முன் வந்து நின்று காலிங் பெல்லை அழுத்தினாள். 

கதவு திறக்கப்பட்டதும் மான் கிளம்பியது.

One Reply to “கொட்பின்றி ஒல்லுதல் நட்பாம்”

  1. அருமையான கதை சொல்லும் உத்தி மனிதநேயத்தை மிகவும் நேர்த்தியான முறையில் சிறப்பாக சொல்லியிருக்கின்றார் வாழ்த்துகளும் பாராட்டுகளும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.